உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மரக்கிளை

0

Posted on : Tuesday, December 27, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் குரு பொகுஜு தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் வேகமாக வந்து ஒரு மரக் கட்டையால் அவரைத் தாக்கினான்.அதே சமயம் அவன் தடுமாறி கீழே விழுந்தான்.கட்டையும் கீழே விழுந்தது.குரு உடனே கட்டையைத் தன கையில் எடுத்தார்.அதைப் பார்த்த உடன் அவன் பயந்து ஓட ஆரம்பித்தான்.குருவும் கட்டையுடன் அவனைப் பின் தொடர்ந்தார்.அவனைப் பிடித்து,''இதோ உன் கட்டை,''என்று கூறி  அவன் கையில் கட்டையைத் திரும்பக் கொடுத்தார்.அவன் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.அங்கிருந்த மக்கள் குருவிடம்,''இவன் ஒரு அயோக்கியன்.இவனைப் பதிலுக்கு அடிக்காமல் கட்டையை அவனிடம் திரும்பக் கொடுக்கிறீர்களே!''என்று கேட்டனர்.குரு கேட்டார் ,''நாம் செல்கிற வழியில் மரத்திலிருந்து ஒரு கிளை முறிந்து நம் மீது விழுந்தால் என்ன செய்வோம்?என்ன செய்ய முடியும்?''மக்கள் அவர் கூற்றை ஏற்காமல்,''கிளை காய்ந்து போனது.அதற்கு உயிர் இல்லை.அதற்கு அறிவுரை கூற முடியாது.அதற்கு தண்டனையும் கொடுக்க முடியாது.அதற்கு மனம் என்று ஒன்று இல்லை.எனவே அதனுடன் ஒப்பிடாமல் இவனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.''என்றனர்.குரு ,''என்னைப் பொறுத்த வரை இவன் ஒரு முறிந்த கிளைதான்.என்னால் ஒரு கிளைக்கு ஆலோசனை வழங்கவோ,தண்டனையோ கொடுக்க முடியாது எனில் இவனுக்கு மட்டும் ஏன் வீணே ஆலோசனை கூறவோ,தண்டனை கொடுக்கவோ வேண்டும்?''என்று கூறிக் கொண்டே தன் வழியில் நடந்து சென்றார்.

சரியா ,தவறா ?

0

Posted on : Monday, December 26, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர்.அவர்கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து,ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் களவுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள்.குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர்.குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார்.கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறி விடுவோம் என்று கூறினர்.குரு அவர்களைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் அனைவரும் வெளியே போவதாக இருந்தாலும் ,நான் அவனை வெளியே அனுப்ப முடியாது.''சீடர்கள், குரு தவறு செய்தவனுக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்புக் கொடுக்கிறார் என்று புரியாமல் விழித்தனர்.குரு மீண்டும் அவர்களிடம் பேசினார்,''உங்கள் அனைவருக்கும் உலகில் நல்லது எது,கெட்டது எது என்பது நன்றாகத் தெரிகிறது எனவே நீங்கள் வெளிய சென்றாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் இவனுக்கு சரியான செயல் எது,தவறான செயல் எது என்பது இன்னும் தெரியவில்லை.இவனுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள்?அவனுக்கு நல்லது  எது,கெட்டது எது என்று நான் தான்  சொல்லித்தர வேண்டும்.எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.''என்றார்.சீடர்கள் கண்களில் கண்ணீர் வழிய குருவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

மனைவியின் பூனை .

0

Posted on : Friday, December 09, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக்  கண்டாலே ஆகவில்லை.அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.ஒரு நாள் அப்பூனையைத்  தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான். அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,''போனை  பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''

சொல்லி விட்டு வா

0

Posted on : Friday, December 09, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் துறவி ஒருவர் தன் வீட்டிற்கு வந்தபோது ஒரு திருடன் இருப்பதைக் கண்டார்.அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லாததால் அவன் திகைத்து நின்றான்.துறவி அவனிடம் சொன்னார்,''ஐயோ பாவம்,என்னை நம்பி நீ எவ்வளவு தூரத்திலிருந்து வந்தாயோ!இங்கு ஒன்றும் இல்லையே?ஆனால் நீ வெறும் கையோடு திரும்பப் போகக் கூடாது.,''அவர் தன்   உடைகளைக் களைந்து அவனிடம் கொடுத்து எடுத்துப் போகச் சொன்னார்.பின்னர் அவர் சொன்னார்,''அடுத்த முறை வரும்போது முன்கூட்டி சொல்லிவிட்டு வா.நானும் உனக்காக ஏதாவது தயார் செய்து வைப்பேன்.நீயும் ஏமாந்து போக மாட்டாய்.''இருந்த உடைகளைக் கொடுத்துவிட்டு குளிரில் நடுங்கும் துறவியைக்  கண்டு என்ன செய்வது என்று அறியாது நின்ற  திருடன் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து  சென்றான்.அவன் சென்றபின் படுத்த துறவி வானத்தைப் பார்த்து,''என்னால் மட்டும் முடிந்தால் இந்த நிலவை எடுத்து அவனுக்குக் கொடுத்திருப்பேனே!''
**********
ஒரு இளம் துறவி  தன் ஊருக்கு செல்கையில் இடையில் இருந்த ஆற்றில் திடீரென வெள்ளம் வந்ததால் அக்கரைக்கு செல்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது எதிர்க் கரையில் ஒரு ஜென் துறவி நிற்பதைப் பார்த்து எதிர்க் கரைக்கு வருவதற்கான வழி என்னவெனக் கேட்டான்.துறவி சொன்னார்,''இப்போது நீ எதிர்க் கரையில்தானே நிற்கிறாய்?''
**********

இறப்பு

1

Posted on : Thursday, December 08, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் மாஸ்டர் இகியு இளம் வயதிலேயே அறிவு முதிர்ச்சியுடன் காணப்பட்டார்.சிறுவனாய் இருக்கும்போது ஒரு நாள் தன குரு வைத்திருந்த ஒரு அருமையான,மிகப் பழமையான ,அபூர்வமான  தேநீர்க் கோப்பையை கை நழுவி உடைத்து விட்டார்.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அப்போது குருவின் குரல் கேட்டது.உடனே வேகமாக அவர் குருவிடம் சென்று,''அய்யா,பிறக்கும் உயிர்கள் ஏன் இறக்க வேண்டும்?''சின்ன வயதிலேயே இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று மகிழ்ந்து குரு சொன்னார்,''அது இயற்கை . தவிர்க்க முடியாதது..பிறந்த ஒவ்வொன்றும் அதற்குரிய காலம் முடிந்தவுடன் இறக்கத்தான் செய்யும்.''இகியு சொன்னார்,''அய்யா,நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டியிருக்கிறது.உங்களின் தேநீர்க் கோப்பைக்கு காலம் முடிந்ததால் இறந்து விட்டது.''

சிரிச்சா போதும்

1

Posted on : Wednesday, December 07, 2011 | By : ஜெயராஜன் | In :

நாட்டுப்பற்று பற்றி பாடம் நடத்திய ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்கள் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவர்கள் என்பதை விளக்க சொன்னார். ஒரு மாணவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுப் பொருட்கள் எதையும் உபயோகிப்பதில்லை.''அடுத்தவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுத் திரைப்படங்கள் எதுவும் பார்ப்பதில்லை.''மூன்றாவது மாணவன் சொன்னான்,''நான் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை ஆங்கிலத்தில் தேறியதில்லை''
**********
''நண்பா,புலித் தோல் பார்த்திருக்கிறாயா?''
'பார்த்திருக்கிறேனே!'
''எங்கே?''
'புலியின் மீதுதான்.''
**********
குறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.ஒருவன் சொன்னான்,''ஐயா,இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே?''இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன் என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.அவன் சொன்னான்,''இல்லை ஐயா,அவன் பெயர் ரவி.என் பெயரோ,வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.''
**********
''நாய் பற்றிய கட்டுரை எழுதி வரச் சொன்னால்,நீயும் உன் அண்ணனும் ஒரே மாதிரி எழுதி வந்திருக்கிறீர்களே?''என்று ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்டார்.அவன் சொன்னான்,''எங்கள் வீட்டில் ஒரு நாய் தானே சார் இருக்குது.''
**********

மாற்றம்

0

Posted on : Wednesday, December 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு துறவி ஒரு மலைப் பகுதிக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார்.சில நாட்களில் அவர் மீது ஏராளமான புகார்கள் அங்கிருந்து அவர் சார்ந்த மடத்துக்கு வந்தன.அவரை அங்கிருந்து திரும்பக் கொண்டு வந்து விடலாமா என்று மடத் தலைவரிடம் கேட்டதற்கு,அவர் சொன்னார்,''எதிர்ப்பு வந்தது என்றால் அவர் அங்கு ஏதோ வேலை செய்ய ஆரம்பித்துள்ளார் என்று பொருள் எனவே அவர் அங்கேயே இருக்கட்டும்.''
நமது வழக்கமானதிலிருந்து ஏதேனும் மாற்றம் வந்தால் நாம் உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.புதுப் பழக்கம் அல்லது செயல் நமக்கு கடினமாகத் தோன்றுகிறது.அதனால் அதை முயற்சித்துப் பார்க்கக்கூட நாம் விரும்புவதில்லை.நம்முடைய எதிர்ப்பை மீறி நாம் மாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டால் நாம் அதைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளை தேட ஆரம்பித்து விடுவோம்.நல்ல வாய்ப்புகளைக் கூடத் தவிர்க்கவே செய்வோம்.அதற்கு எதிரான  வாதங்களை எடுத்துரைக்க ஆரம்பித்து விடுவோம்.முடியாத நிலையில் அதை செயல் படாமல் ஆக்குவதற்கு குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வோம்.ஆனால் தொடர்ந்து எதிர்ப்பை வளர விடும்போது நாமே நமக்கு எதிரி ஆகி விடுவோம்.அதற்கும்பின் வேறு வழி இல்லை என்ற நிலை வரும்போது நாம் மாற்றத்தை ஏற்கிறோம்.
''மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது''என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மாற்றம் இல்லையேல் வளர்ச்சி இல்லை.''ஓடுகின்ற ஆற்றில் ஒரே நீரில் நாம் குளிக்க முடியாது''என்பர்.ஏனெனில் ஓட்டத்தினால் நீர் மாறிக் கொண்டே இருக்கிறது.ஓட்டம் இல்லை என்றால் அந்த நீர் தேங்கி ஒரு குட்டையாகி நாற்றம் எடுக்க  ஆரம்பித்துவிடும்.மாற்றமே  ஏற்றம்.

மன்னிப்பாயா?

0

Posted on : Tuesday, December 06, 2011 | By : ஜெயராஜன் | In :

புத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவரைப் பார்த்தபோது அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான்.அதைத் துடைத்துக் கொண்டே புத்தர் அமைதியாகக் கேட்டார் ,''வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா அப்பா?'' புத்தரின் உறவினரும் அவர் உடனேயே இருந்த சீடருமான ஆனந்தருக்குக் கோபம் வந்து விட்டது.''நீங்கள் அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன்,''என்றார்.புத்தர் அவரிடம் சொன்னார்,''ஆனந்தா,நாம் எல்லாம் சந்நியாசிகள் என்பதை மறந்து விட்டாயா? இதோ, இவரைப்பார் ,ஏற்கனவே, ,இவர் கோபம் என்னும் நோயினால் பீடிக்கப் பட்டிருக்கிறார்.அவருடைய கோபமான முகத்தைப்பார்.அவர் உடல் ஆடுகிறது.கோபப்படும் முன் அவர் மகிழ்வுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறாயா? அவர் தன கோபத்தினால் பைத்தியமாக நிற்கிறார்.இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்க முடியும்?எனக்கு என்ன பெரிய கெடுதல் நேர்ந்து விட்டது.இதைத் துடைப்பதைத் தவிர எனக்கு என்ன சிரமம் உள்ளது?நீ கோபப்படாதே.இல்லையெனில் அவருக்கு நேர்ந்த சிரமங்கள் எல்லாம் உனக்கும் நேரும்.உன்னை நீயே  ஏன் தண்டித்துக் கொள்ள வேண்டும்?இவர் மீது கோபப்படாதே.மாறாக இரக்கப்படு.'' பின்னர் புத்தர் தன் மீது உமிழ்ந்தவரைப் பார்த்து,''அப்பா,நீ மிகவும் களைப்புடன் காணப் படுகிறாய்.உன்னை நீயே தண்டித்துக் கொண்டது போதும்.என்னிடம் நீ நடந்து கொண்டதை மறந்துவிடு.வீட்டிற்குப் போய் ஓய்வெடு,''என்றார்.அவன் மிகுந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவனாக நின்றான்.பின் அவன் புத்தரிடம் மன்னிப்புக் கேட்டான்.புத்தர் சொன்னார்,''முதலாவதாக நான்  கோபப்படவில்லை.பின்   மன்னிக்க வேண்டும் என்ற கேள்வியே எழாதே? ஆனால் இப்போது உன்னைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி.ஏனெனில் நீ உன் துன்ப நிலையிலிருந்து மீண்டு நிம்மதியுடன் காணப்படுகிறாய்.மீண்டும் இத்தவறை யாரிடமும் செய்து உனக்குள்  நீயே நரகத்தை உருவாக்கிக் கொள்ளாதே.''

யாருக்காக?

0

Posted on : Monday, December 05, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லாவும் அவர் நண்பர்களும் ஒரு சாராயக் கடையை விலைக்கு வாங்கினார்கள்.ஒரு மாதமாக ரிப்பேர்  வேலைகள் நடந்து கொண்டிருந்தன. முன்னால் அந்தக் கடையில் வழக்கமாக சாராயம் குடிப்பவர்கள் கடை என்றைக்கு தயாராகும் என்று சுற்றிச் சுற்றி வந்தார்கள்.வேலை முடிவது மாதிரியாய்த் தெரியாதலால் ஒரு குடிமகன் முல்லாவிடம் சென்று,
என்றைக்குத்தான் கடையைத் திறப்பீர்கள்?என்றைக்கு நாங்கள் இங்கே வந்து குடிப்பது?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.இந்தக் கடையை நாங்கள் வாங்கியது  நாங்கள் சாராயம் குடிப்பதற்குத்தான்.மற்றவர்களுக்கு அல்ல.''
*********
நண்பர் கேட்டார்,''முல்லா,நீ தனியாகத்தானே குடிக்கிறாய்?பின் ஏன் தினமும் இரண்டு பாட்டில்களுடன் உன் அறைக்கு செல்கிறாய்?''முல்லா சொன்னார்,''முதலில் நான் ஒரு பாட்டில்தான் குடிக்கிறேன்.அதைக் குடித்ததும் எனக்குள்ளே இன்னொரு ஆள் இருப்பதுபோலத் தோன்றுகிறது.அந்த இன்னொரு ஆள் வருத்தப்படக் கூடாதே என்று அவருக்காகத்தான் இரண்டாவது பாட்டிலைக் குடிக்கிறேன்.''
*********

யார் செய்தால் என்ன?

0

Posted on : Monday, December 05, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம் சொன்னார்,''பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம்  என் மனைவி,நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது.என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.''முல்லா சொன்னார்,'அதனால் என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா?யார் செய்தால் என்ன?''

அவசரம்

0

Posted on : Thursday, December 01, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லா தன் மனைவியுடன் இரவு விருந்துக்கு சென்றார்.ஹாலில் எல்லோரும் கூடியிருந்தனர்.ஒரு ஓரமாகச் சென்ற முல்லா ஏதோ வழுக்கிக் கீழே விழுந்ததில் அவருடைய பேண்ட் முழங்கால் பகுதி கிழிந்து விட்டது.உடனே அவர் மனைவி அருகிலிருந்த பெண்கள் அறையில் எட்டிப் பார்த்துவிட்டு,''இந்த அறையில் இப்போது யாரும் இல்லை.உள்ளே வாருங்கள்.நான் கிழிந்த பகுதியில் ஒரு ஊக்கை மாட்டி கிழிசல் தெரியாமல் இருக்கச் செய்கிறேன்,''என்றதும் முல்லாவும் உள்ளே சென்றார்.ஆனால் கிழிசல் பெரியதாக இருந்ததால் ஊக்கை  மாட்ட முடியவில்லை.உடனே முல்லாவின் மனைவி ,''சரி,பேண்டைக் கழட்டி கொடுங்கள்.நான் ஊசி வைத்திருக்கிறேன்.கிழிசலைத் தைத்து விடுகிறேன்,''என்று சொல்ல,  முல்லாவும்  பேண்டைக் கழட்டிக் கொடுத்தார்.அப்போது ஒரு பெண் அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு வந்ததும் அதிர்ச்சி அடைந்த முல்லாவின் மனைவி,அருகில் இருந்த வேறு  ஒரு கதவைத் திறந்து,''இப்போதைக்கு உள்ளே இருங்கள்.நான் அந்தப் பெண் வெளியே சென்றதும் கூப்பிடுகிறேன் .''என்றார். உள்ளே சென்ற முல்லா அடுத்த நிமிடம் அலறி அடித்துக் கொண்டு கதவைத் தள்ளிக் கொண்டு மீண்டும் பெண்கள் அறைக்குள்ளேயே வந்தார்.என்ன என்று கேட்க,''அவசரத்தில் என்னை ஹாலுக்குள்ளேயே தள்ளி விட்டாயே?''என்றார்.

நம்ப முடியவில்லை

0

Posted on : Thursday, December 01, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லாவின் மனைவி அவரிடம் சொன்னார்,''நேற்று நான் என் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அவள் வீட்டுச் சுவற்றில் ஒரு ஓவியர் அழகாக சிலந்திவலை போன்று  வரைந்திருந்தார்.அதை உண்மையான சிலந்திவலை என்று கருதி அவள் வீட்டு வேலைக்காரி ஒட்டடைக்கம்பு கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.'' முல்லா பளிச்சென்று சொன்னார்,''இதை என்னால் நம்ப முடியவில்லை.''முல்லாவின் மனைவிக்குக் கோபம்.''நான் நேரில் பார்த்தேன் என்று சொல்கிறேன்.நீங்கள் நம்ப முடியவில்லை என்று சொல்கிறீர்களே.இது மாதிரி தத்ரூபமாக வரையக் கூடிய ஓவியர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நான் நம்ப முடியவில்லை என்று சொன்னது ஓவியத்தைப் பற்றி அல்ல.வேலைக்காரி சுத்தம் செய்தாள் என்று சொன்னாயே,அதைத்தான்.''

இந்திய தேசியம்

0

Posted on : Friday, November 25, 2011 | By : ஜெயராஜன் | In :

இன்று சிலர் கூறுவது போல இந்திய தேசியம் என்பது பிரிட்டிஷ்காரர்கள்  உருவாக்கம் அல்ல.பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருந்த பல தனித் தேசங்கள் மீது ஒட்டு மொத்தமான ஒரு மேலாதிக்கமாக இருந்ததேயொழிய நாற்பத்து ஏழில் இந்தியாவை விட்டுச் செல்லும் வரை பிரிட்டிஷார் இந்தியாவை ஒரே அரசியல் அமைப்பாகவோ,ஏன் ஒரே நிர்வாக அமைப்பாகவோ கூட ஆக்கவில்லை என்பது மிகச் சாதாரணமாக எவரும் வாசித்தறியக் கூடிய உண்மை.உதாரணமாக திருவிதாங்கூர் பிரிட்டிஷாருக்குக் கப்பம் கட்டியதே தவிர மற்றபடி ஒரு தனி
அரசியல்,பொருளியல் தேசமாகவே சுதந்திரம் வரை நீடித்தது.அப்படி பற்பல சமஸ் தானங்கள்  இருந்தன.அதைத்தவிர பிரெஞ்சு,போர்ச்சுக்கல் பகுதிகள் தனி அரசியல் தேசமாகவே நீடித்தன.இந்தியாவை கடைசிவரை ஒரு தேசமாக பிரிட்டிஷார் ஒத்துக் கொள்ளவில்லை.இந்தியாவை விட்டுச் செல்லும்போது  கூட இந்தியாவை தனித்தனி தேசங்களாகவே விட்டுச் சென்றார்கள்.இந்தியாவின் எந்த தேசத்துக்கும் தனி நாடாகப் போகும் உரிமை உண்டு என்ற நிபந்தனையை வைத்தே அதிகாரத்தைக் கொடுத்தார்கள்.இந்தியாவின் தனி நாடுகள் ஒருபோதும் ஒற்றைத்தேசியமாக ஒத்துக் கொள்ளாது என்றும் ஆகவே இந்தியா போரிட்டு அழியும் என்றும் நினைத்தார்கள்.ஆனால் பிரிட்டிஷாரை அதிர்ச்சி கொள்ள வைத்தபடி ஓரிரு மாதங்களில் இந்தியா ஒரே தேசமாக ஆகியது.பெரிய படை எடுப்புகளோ போர்களோ தேவையாக இருக்கவில்லை.இந்தியாவெங்கும் பல்வேறு சமஷ்தானங்களில் இருந்த மக்கள் அந்தந்த அரசர்களுக்கு எதிராகத் திரண்டு

போராடி இந்தியாவை ஒரே தேசமாக ஆக்கினார்கள்.
ஆனால் இந்தியா ஒரே தேசமாக ஆனபின் இந்தியா என்ற தேசியத்தை நிகழ்த்தியது தாங்களே என வெள்ளையர்களின்  வரலாற்றாசிரியர்கள்  சொல்ல ஆரம்பித்தார்கள்.இந்தியாவைப் பட்டேல் எப்படி ஒற்றுமைப்படுத்தினார்?ராணுவ வல்லமை மூலம் அல்ல.ஒப்புநோக்க அந்தப் பணிக்கு மிகக் குறைவாகவே படைபலம் பயன்படுத்தப்பட்டிருந்தது.அன்று இந்திய சமஷ்தானங்கள் இந்திய மைய அரசுக்கு எதிராகப் போரைத் தொடுத்திருக்க முடியுமா?முடியும்,அந்த அரசுக்குள் இருந்த மக்கள் அந்த அரசுகளை ஆதரித்திருந்தால்.தேசப் பிரிவினையின் விளைவான மதப்பிரிவினையால் அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவம் பலவீனமாக இருந்தது.மக்களாதரவுடன் சமஷ்தானங்கள் போரிட்டிருந்தால் இந்திய அரசு தாக்குப் பிடித்திருக்காது.பட்டேலுக்கு உதவிய பெரும் சக்தி அந்தந்த சமஷ்தானங்களில் இருந்த மக்கள்தான்.
                          --ஜெயமோகன் எழுதிய 'இன்றைய காந்தி 'என்ற நூலிலிருந்து.

கெட்டது

0

Posted on : Sunday, November 20, 2011 | By : ஜெயராஜன் | In :

இட்டுக் கெட்டது காது.
இடாமல் கெட்டது கண்.
உண்டு கெட்டது வயிறு.
உண்ணாது கெட்டது உறவு.
கேட்டுக் கெட்டது குடும்பம்.
கேளாமல் கெட்டது கடன்.
பார்த்துக் கெட்டது பிள்ளை.
பாராமல் கெட்டது பயிர்.
             --வாரியார் சுவாமிகள்.

அணுகுண்டு

0

Posted on : Sunday, November 20, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு மெகா டன் அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் விளைவுகள்:
**1.6 K.M.அகலத்திற்கு ஒளிக்கதிர் தோன்றும்.
**கடுமையான வெப்ப அலை பரவத் துவங்கும்.
**சில நிமிடங்களில் கடுமையான வெடிப்பு நிகழும்.
**மின் காந்தத் துடிப்பு அலைகளினால் மின்சாரம் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகும்.
**வெடிப்பினால் ஏற்படும் வெப்பம் ஒரு கி.மீ.சுற்றளவிற்கு  சுமார் பத்து மில்லியன் டிகிரி சென்டிகிரேட் இருக்கும்.
**இந்த அதிக வெப்பத்தினால் மனிதன்,மரம்,செடி,கொடிகள்,உயிரினங்கள் அனைத்தும் ஒரு நொடியில் ஆவியாகிப் போகும்.
**2.5 கி.மி.க்கு அப்பால் உள்ள மரம்,பிளாஸ்டிக் மற்றும் துணி வகைகள் தானாகப் பற்றி எரியும்.
**சுமார் எட்டு கி.மி.க்கு அப்பால் உள்ள மனிதர்களின் ஆடைகள் எரியத் துவங்கும்.
**11 கி.மி..க்கு அப்பால் உள்ள மனிதர்களுக்கு  சாவு ஏற்படும் அளவுக்கு தீப்புண்கள் ஏற்படும்.
**மரச்சாமான்கள்,பெட்ரோல் பங்குகள் தீப்பற்றி எரியும்.
**2.5 மில்லியன் மக்கள் சில வாரங்களில் அழிவர்.
**அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காற்றில் கலந்திருக்கும் கதிரியக்கத்தால் மிகப் பல கொடுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

எது இனிது?

0

Posted on : Sunday, November 20, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவனுக்குக் கடன் நெருக்கடி.பலரிடம் சென்று கடன்  கேட்டான் .ஒவ்வொருவர் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள்.நொந்து போன அவன் பாடிய பாடல்:
வாதவர் கோன் பின்னைஎன்றான்.
வத்தவர் கோன் நாளை என்றான்.
யாதவர் கோன் யாதொன்றும்
இல்லை என்றான்.:ஆதலால்
வாதவர் கோன் பின்னையினும்
வத்தவர் கோன் நாளையினும்
யாதவர் கோன் இல்லை இனிது.

செப்பு மொழி

0

Posted on : Saturday, November 19, 2011 | By : ஜெயராஜன் | In :

காமம் என்பது எப்போது ஆரம்பமானது?நிர்வாணமாக இருந்த மனிதர்கள் ஆடை கட்டத் துவங்கியபோது.
***********
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தி ஆகி விடுகிறது.
**********
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறுகின்றன.
**********
வெற்றியில் நிதானம் போகிறது.
அதைத் தொடர்ந்து வெற்றியும் போகிறது.
**********
எப்போதும் ஒரே நிலையில் இருப்பதற்குப் பெயர்தான்  நிம்மதி.
**********
கேட்டால் சிரிப்பு வர வேண்டும்.
சிரித்தால் அழுகை வர வேண்டும்.
அதுதான் நல்ல நகைச்சுவை.
**********
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு
எந்த விமரிசனத்தையும்
தூக்கி எறியும்  தைரியம் வர வேண்டும்.
**********
எந்த வேலை உனக்குப் பழக்கமானதோ,
அந்த வேளையில் புதுமைகள் செய்யத் தவறாதே.
**********
,                                                  --கண்ணதாசன்


ஆசையை முறைப்படுத்த

0

Posted on : Saturday, November 19, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆசையை ஒழிக்க முடியாது.ஒழிக்கவும் வேண்டியதில்லை.ஆசையை ஒழுங்கு படுத்தினால் வாழ்வு வளம் பெரும்.
*உங்களின் எல்லா ஆசைகளையும் வரிசையாக ஒரு தாளில் தனிமையில் உட்கார்ந்து தொகுத்து எழுதிக் கொள்ளுங்கள்.
*ஒவ்வொரு ஆசையையும் முன் வைத்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளை ஆராய்ந்து எழுதுங்கள்.
அ)இது இல்லாமல் என்னால் சமாளிக்க முடியாதா?இது இன்றியமையாததா?
ஆ)இதை அடைய என்னிடம் உடல் நலம்,மன வளம்,பொருள் வளம் இருக்கிறதா?
இ)இதனால் எனக்கு ஏதேனும் தொல்லைகள் பின் விளைவாக உண்டாகுமா?
ஈ )இதைப் பெற்றால் ஏற்படப்போகும் நன்மை என்ன?இதில் எவ்வளவு தேவை.?
*'அவசியம் தான்,வசதியும் போதும்,பின் விளைவும் நன்மை' என்றால் ஆசையை ஏற்றுக் கொள்ளுங்கள்.நேர்மையான வழியில் அதை அடையத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
*அவசியம் இல்லை என்று கருதினால் இன்ன இன்ன காரணத்தினால் இது தேவையில்லை என்று முடிவு காட்டுங்கள்.
       இவ்வாறு முடிவு செய்தால் முறையற்ற ஆசை எழாது.நலம் தரும் பொருட்களைப் பெறத் தேவையான ஆற்றலும் வளர்ச்சி பெரும்.அடுத்தடுத்து வாழ்வில் பல வெற்றிகள் கிட்டும்.மன அமைதியும் பெறலாம்.

கவலை ஏன்?

0

Posted on : Friday, November 18, 2011 | By : ஜெயராஜன் | In :

சேர்த்து வைக்கப்பட்டவை அழிகின்றன.
உயர்வுகள் தாழ்வை அடைகின்றன.
இணைப்புகள் பிளவு படுகின்றன.
வாழ்வு மரணத்தில் முடிகிறது.
பழுத்த பழம் தரையில் வீழ்ந்தே தீரும்.
பிறந்த மனிதன் இறந்தே தீருவான்.
போன இரவு திரும்புவதில்லை.
சமுத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு போகும் யமுனா நதி
அந்தத் தண்ணீரைக் கொண்டு மீண்டும் தரை நோக்கிப் பாய்வதில்லை.
சூரியன் உதயமானவுடன்,உழைத்து சம்பாதிக்கும்
ஆர்வத்தை மனிதன் பெறுகிறான்.
சூரியன் அஸ்தமனமாகும்போது,ஓய்வுக்கும் களிப்புக்கும்
நேரம் வந்து விட்டதாக மனிதன் மகிழ்கிறான்.
மாறிமாறி வரும் சூரிய உதயத்திலும்,அஸ்தமனத்திலும் தனது ஆயுள்
குறைந்து கொண்டு போவதை எந்த மனிதனும்
நினைத்துப் பார்ப்பதில்லை.
நீ  நின்றாலும்,நகர்ந்தாலும் உன்னுடைய நாட்கள்
குறைந்து கொண்டே போகின்றன.
உன்னை நினைத்து அல்லவா நீ கவலையுற வேண்டும்?
மாறாக மற்ற விஷயங்களுக்குக் கவலைப் படுவதேன்?
                              --வால்மீகி ராமாயணம்-ஆரண்ய காண்டம்.

ஏமாற்றியது யார்?

0

Posted on : Friday, November 18, 2011 | By : ஜெயராஜன் | In :

சுபி ஞானி பரீத் தன சீடர்களுடன் ஒரு நீண்ட பயணம் செல்ல நடந்து சென்றார்.அவர்கள் நகர எல்லையைத் தாண்டுமுன்  அந்நகருக்கு பதவி ஏற்பதற்காக புதிய கவர்னர் எதிரில் வந்து கொண்டிருந்தார். கவர்னர் ,தன எதிரே பெரிய கூட்டத்தைப் பார்த்ததும்,தன்னை வரவேற்க வந்த குழு என்று நினைத்துக் கொண்டு,''அடடா,இந்த வெயிலில் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு என்னை வரவேற்க வந்தீர்கள்?இதற்கு அவசியம் இல்லையே!'' என்றார்.பரீதின் சீடர் ஒருவர்,''நாங்கள் தங்களை வரவேற்க வரவில்லை.நாங்கள் நெடிய பயணம் சென்று கொண்டிருக்கிறோம்.''என்றார். கவர்னரின் முகம் வாடி விட்டது எனினும் சமாளித்துக் கொண்டு சென்றார்.பரீத் அப்போது ஒன்றும் சொல்லவில்லை.கவர்னர் சென்ற சிறிது நேரம் கழித்து.தன சீடரிடம்,''நாங்கள் உங்களை வரவேற்க வரவில்லை என்று அப்பட்டமாகச் சொல்லி இருக்க வேண்டாமே!அவர் எவ்வளவு சங்கடத்தில் மாட்டிக் கொண்டார் பார்த்தாயா?''என்று கேட்டார்.சீடர் சொன்னார்,''நான் அவ்விதம் சொல்லவில்லை என்றால் நாம் அவரை ஏமாற்றியவர் ஆகா மாட்டோமா?''பரீத் சொன்னார்,''நம் மீது தவறு ஏதுமில்லை கவர்னர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டார்.நாம் என்ன செய்ய முடியும்?''

நல்லது

0

Posted on : Thursday, November 17, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒளி மங்காமலும் அதே சமயம் கொழுந்து விட்டு எரியாமலும் இருப்பது நல்ல விளக்கு.
நீர்,ஓட வேண்டிய அளவு,ஓட வேண்டிய நேரத்தில் ஓடுவதுதான் நல்ல ஆறு.
மழை காலத்தில் ஒழுகாமலும்,வெயில் காலத்தில் வியர்க்காமலும்  நிதானமான் வெப்பநிலையுடன் இருப்பது நல்ல வீடு.
வீணாக்குவதற்கும்,தீய காரியம் செய்வதற்கு தூண்டும் வண்ணம் மித மிஞ்சி இல்லாமல் ,தேவையான அளவு பிறரை எதிர்பாராது சேர்வது நல்ல செல்வம்.
பிறர் கண்ணை உறுத்தும் அளவு கவர்ச்சியும் மினுமினுப்பும் இன்றி,கணவரையும்,குழந்தைகளையும்  அனுசரிக்கும் அளவு அழகு,நல்ல அழகு.

இந்தியரின் குணம்

0

Posted on : Thursday, November 17, 2011 | By : ஜெயராஜன் | In :

இந்தியர்கள் அடிமைத்தனத்தை சகித்துக் கொண்டார்கள்.ஆனால் யாரையும் அடிமையாக்கியதில்லை.மற்றவரை அடிமைப்படுத்த விரும்பினால் ஒழுங்குக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது.இந்தியர்கள் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபாடு காட்டியதில்லை.ஐயாயிரம் ஆண்டுகள் நிறைந்த வரலாற்றில் ஒரு மிகப் பெரிய இந்த சமுதாயம் ஒரே ஒரு ஜெங்கிஷ்கானைக் கூடத் தோற்றுவித்ததில்லை.அதை நம்மால் செய்ய முடியாது.ஆனால் நம்மால் ஒரு புத்தரை,ஒரு மகாவீரரை,ஒரு பதஞ்சலியை உருவாக முடிந்தது.அவர்கள் வித்தியாசமானவர்கள்.அவர்கள் ஒழுங்குக்  கட்டுப்பாட்டை உருவாக்க மாட்டார்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியா அடிமைப் பட்டுக் கிடந்தது.ஆனால் இந்தியா இன்னொரு நாட்டை வென்றதற்கு ஆதாரம் இல்லை.இந்தியாவின் ஒரு மாவட்ட அளவில் உள்ள இங்கிலாந்து கூட வென்றிருக்கிறது.இந்தியர்கள் போர் புரிவதில் அதிக ஆர்வம் இல்லாதவர்கள்.ஆனால் உண்மையில் இந்தியா எவராலும் எப்போதும் வீழ்த்தப்பட்டதில்லை.இந்தியர்கள் மற்றவர்களை வரவேற்றார்கள்.இந்த நாடு அமைதியானது.தேவையான உணவு இருந்தது.போதிய இடமும் இருந்தது.அமைதியை விரும்பிய மக்கள் ஆதிக்கத்தை விரும்பாமல் அடிமையாகக் கிடந்தார்கள்.

கடவுள் எங்கே?

0

Posted on : Wednesday, November 16, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார்.பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.அவரும் ஒரு பையனை  அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார்.ஒரு பையன் அனுப்பப்பட்டான்.துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார்.பின்னர் கேட்டார்,
''தம்பி,உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.கடவுள் எங்கே?சொல்,கடவுள் எங்கே இருக்கிறார்.?''அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான்.அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.அவன் சொன்னான்,''நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம்.இப்ப கடவுளைக் காணோமாம்.அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான்.ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள்.இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.''

பூவா,தலையா?

0

Posted on : Wednesday, November 16, 2011 | By : ஜெயராஜன் | In :

ஏதாவது முக்கியமான பிரச்சினைக்கு முடிவு காண இயலாத சூழ்நிலையில் ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு பூவா தலையா என்று பார்த்து முடிவெடுக்கும் பழக்கம் அனேகரிடம் உண்டு அல்லவா?இந்தப் பழக்கம் எப்படி வந்தது?இதற்கு காரணகர்த்தா யார்?உளவியலின் தந்தை சிக்மன்ட் பிராய்ட் தான், முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த தன நண்பர்களுக்கு
இந்த வழியை சொல்லிக் கொடுத்தவர்.இதை மூடப் பழக்கம் என்று நிறையப் பேர் நினைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு யோசனையை எப்படி ஒரு பெரிய அறிஞரான பிராய்ட் சொன்னார்.ஒரு நாணயம் ஒரு மனிதனின் பிரச்சினைக்கு முடிவு காண்பதா?இந்தக் கேள்விக்கு  அவரே விடை சொன்னார்.  ''ஒரு மனிதன் முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒரு நாணயத்தை சுண்டிப் பார்க்க வேண்டும்.அவன் பூ என்று நினைத்து பூவே விழுந்து விட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதா ,வருத்தம் ஏற்படுகிறதா என்று அவனே கவனித்துப் பார்க்க வேண்டும்.மகிழ்ச்சி ஏற்பட்டால் அந்தக் காரியத்தை செய்யலாம்.வருத்தம் ஏற்பட்டால் அதை நிறுத்தி விடலாம்.தலை விழுந்தாலும் இதே லாஜிக் தான்.''இப்போது சொல்லுங்கள்,இது மூடப்பழக்கமா?சரியான முடிவை எடுக்க ஒரு சரியான வழிதானே!

நம்மால்தான்..

0

Posted on : Tuesday, November 15, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கணவன் தன மனைவி,குழந்தையுடன் தன மாமனார் ஊருக்கு காரில் செல்லும்போது பாதை தவறி நேரமாகிவிட்டது.சரியான பாதை கண்டு பிடித்து செல்கையில் வழியில் இஞ்சின் நின்று விட்டது.உடனே கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் குறை கூறி ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பித்தார்கள்.குழந்தை இடைமறித்து,''நேரமாகுதே!சண்டை போடுவதற்குப் பதிலாக ஒருவர் தள்ள ஒருவர் ஸ்டார்ட் பண்ணினால் வண்டி ஓடுமே ,''என்று சொல்ல,மனைவி காரைத் தள்ள கணவன் ஸ்டார்ட் செய்தான்.குழந்தையும் காரினுள் உட்கார்ந்தவாறே தன கையினால் முன் இருக்கையை தள்ளுவதுபோல முயற்சி செய்தது.இஞ்சின்  ஓட ஆரம்பித்தது.குழந்தை கைகொட்டிச் சிரித்துக் கொண்டே,''நான் தள்ளியதால்தானே கார் ஓடுகிறது?''என்று கேட்டது.இந்தக் குழந்தை போலத்தான் நாம் ஏதாவது செய்துவிட்டு நம்மால்தான் அந்தக் காரியம் முடிந்தது என்று நினைக்கிறோம்.கூறிக் கொண்டு அலைகிறோம்.

உங்களுக்கே நல்லாயிருக்கா?

0

Posted on : Tuesday, November 15, 2011 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டியில் ஏறிய விருந்தாளி வழியனுப்ப வந்தவரிடம் குறை பட்டுக் கொண்டார்,''நான் ரயிலுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணப்போனேன்.அப்போதே சொல்லியிருக்கலாம்.திரும்பி வந்து என் துணிகளை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன்.அப்போது சொல்லியிருக்கலாம்.அப்புறம் குளித்துவிட்டு புறப்படுவதற்கு ட்ரெஸ் பண்ணினேன்.அப்போதாவது சொல்லியிருக்கலாம் .அப்போதும் கம்முன்னு இருந்தீங்க.அப்புறம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும்,'போய்வருகிறேன்,''என்று சொல்லி விடை பெற்றேன் .அப்போது கூட சொல்லியிருக்கலாம்.ஆனால் நீங்கள் வாயைத் திறக்கவே இல்லை.இப்போது ரயிலில் ஏறி ,வண்டி புறப்படக் கொடி அசைத்தவுடன் ,''இன்னும் இரண்டு நாள் நீங்கள் இருந்துட்டுப் போகலாமே''என்று சொல்கிறீர்களே,இது உங்களுக்கே நல்லாயிருக்கா?''
**********
வக்கீலின் வாதத் திறமையால் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றமற்றவர் என்று தீர்ப்புக் கூறினார்,நீதிபதி.வக்கீலுக்கு மகிழ்ச்சி.குற்றம் சாட்டப்பட்டவர் சற்று தயக்கத்துடன் கூண்டிலேயே நின்று கொண்டிருந்தார்.நீதிபதி ''ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?''என்று கேட்டார்.வக்கீல் சொன்னார்,''அவர் குற்றமற்றவர் என்று நீதிபதியிடம் விளக்கிப் புரிய வைத்த் விட்டேன்.அவர் குற்றமற்றவர் என்பதை இனிமேல்தான் அவரிடம் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.
**********

அறிவீரா?

0

Posted on : Monday, November 14, 2011 | By : ஜெயராஜன் | In :

பகவான் ராமகிருஷ்ண பரம ஹம்சரின் இயற்பெயர் கடாதார் சட்டோபாத்யாயா.விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்.
**********
யானை தன துதிக்கையினால் ஒரு டன் எடையைத் தூக்க முடியும்.இதன் பலத்திற்குக் காரணம் துதிக்கையில் நாற்பதாயிரம் தசைகள் உள்ளன.
**********
சாம்பிராணி தேவதாரு மரத்தின் பாலிலிருந்து செய்யப்படுகிறது.
**********
மராட்டிய வீரர் சிவாஜியை ஆங்கிலேயர்கள் மலை எலி என்று வர்ணித்தனர்.
**********
காணி நிலம் என்பது 1.32 ஏக்கர்.
**********
சிலருக்கு பேருந்தில் செல்லும்போது வாந்தி வரும்.ஏன்?நம் காதுகளுக்குள் லேப்ரிந்த் என்ற பகுதி இருக்கிறது.பேருந்து,விமானம் இவற்றில் செல்லும்போது நம்மைச் சுற்றிக் காற்றழுத்தம் மாறுகிறது.அப்படி மாறும்போது லேப்ரிந்தால் அதைத் தாங்க முடிவதில்லை.அது வாந்தியை வரவழைக்கிறது.
**********
தூங்குபவர்கள் தும்ம முடியாது.
**********
க்ரையோஜெனிக்ஸ் என்றால் என்ன?மிகக் குறைந்த வெப்ப நிலையில் பொருள்கள் என்ன மாறுதல் அடைகின்றன:அந்த மிகக் குறைந்த வெப்ப நிலையை உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றிய விஞ்ஞானம்.இந்த முறைப்படி ஆவிகளை மிகக் குறைந்த வெப்ப நிலையில் திரவமாக்கி அதை ராக்கெட்டுகளில் உபயோகிக்கிறார்கள்.
**********
உடலில்  ஏற்படும் வலியை டால்ஸ் (DOLS)என்ற UNIT ஆல் குறிப்பிடுகிறார்கள்.பிரசவத்தின்போது ஒரு பெண் 9.5 டால்ஸ் வலியை அனுபவிக்கிறார்.ஒரு மனிதன் அதிக பட்சம் 9.5டால்ஸ் அளவு வலியைத்தான் தாங்க முடியும்.
**********

சமயோசிதம்

0

Posted on : Monday, November 14, 2011 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.வெளியே கையை நீட்டியபடி உட்கார்ந்திருந்த ஒருவரின் விலை உயர்ந்த கைக் கடிகாரம் கழன்று விழுந்து விட்டது.அவர் பதறித் துடித்து படாதபாடு பட்டார்.இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் எதிர் சீட்டில் அமர்ந்து  பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்.அவர் எந்த வித சலனமுமின்றி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.அடுத்த ரயில் நிலையம் வந்தது.அவரைப் பார்க்க நிறைய அதிகாரிகள் வந்தனர்.அப்போது அவர் ஒரு அதிகாரியிடம் சொன்னார்,''இந்த இடத்திலிருந்து இருபது தந்திக் கம்பங்களுக்குப் பின்னால் ஒரு இடத்தில் இவரது விலை உயர்ந்த கைக் கடிகாரம் கீழே விழுந்து விட்டது.அதைத் தேடிக் கண்டுபிடித்து இவரிடம் சேர்ப்பித்து விடுங்கள்.''அந்தப் பெரியவர் ராஜாஜி. ஒரு பதட்டமான சூழ்நிலையில் சமயோசிதமாக அவர் செய்த காரியம் அங்கு  இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சிரிக்க முடியுமா?

0

Posted on : Sunday, November 13, 2011 | By : ஜெயராஜன் | In :

பழைய கார் ஒன்றினை விலைக்கு வாங்கிய ஒருவன் நண்பர்களிடம் பெருமையாகச் சொன்னான்,''இந்தக் காரைப் பார்த்தால் பழைய கார் மாதிரியே இல்லை அல்லவா?''நண்பன் சொன்னான்,''ஆமாம்,நீயே செய்தது போல இருக்கிறது.''
**********
கணவனுக்கு ஒரே ஆச்சரியம்!அவன் மனைவி வருகிற பிச்சைக்காரனுக்கு எல்லாம் சுடச்சுட தான் சமைத்த சாப்பாடைப் போட்டுக் கொண்டிருந்தாள்.''ஒரு வேலையும் செய்யாத அவர்களுக்கு ஏன் இப்படி அக்கறையாய் சோறு போடுகிறாய்?''மனைவி சொன்னாள்,''சமைத்த சாப்பாட்டில் குறையே சொல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு போடுவது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது?''
**********
பிச்சைக்காரன்,''அம்மா,வீட்டில் பாயாசம் ஏதாவது இருந்தால் போடுங்களேன் அம்மா,''என்று கத்தினான்.வீட்டிலிருந்த பெண்மணி கேட்டாள், ''அதென்னப்பா,எல்லோரும் சாப்பாடு கேட்பார்கள்,நீ என்னவோ,புதுசாய் பாயாசம் கேட்கிறாய்?''அவன் சொன்னான்,''இன்று எனக்கு பிறந்த நாள்,அம்மா.''
**********
காவல்காரன் வேலைக்கு ஒரு பெரிய வீட்டிற்கு தேர்வுக்கு ஒருவன் வந்தான். வீட்டுக்காரர் சொன்னார்,''நாங்கள் எதிர்பார்ப்பது,நீங்கள் சுறுசுறுப்பாகவும் ,சிறிய சப்தம் கேட்டால் கூட உடனே அங்கு ஓட வேண்டும்:ஒரு கண் மூடியிருந்தாலும் இரு காதும் முழுதும் திறந்திருக்க வேண்டும்.எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்.'' வந்தவன் அங்கிருந்து திரும்ப செல்ல எத்தனித்தான்.விபரம் கேட்க அவன் சொன்னான்,''நீங்கள் கேட்கும் தகுதி என் மனைவிக்குத்தான் இருக்கு.நான் போய் அவளை வரச் சொகிறேன்.''
**********
''போன வாரம் என் அண்ணனுக்கு கால் முறிவு ஆயிற்று.''என்றான் ஒருவன்.எப்படி என்று கேட்க அவன் சொன்னான்,''என் அண்ணன் சுவற்றுக்கு வண்ணம் பூசுபவர்.ஐந்தாம் மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் தான் அடித்த வர்ணம் நன்றாக இருக்கிறதா என்று பார்க்க பின்னால் நகன்று விட்டார்.''
**********
ஜெயில் வார்டன் ,''தவறுதலாக உன்னை ஒரு வாரம் கூடுதலாக ஜெயிலில் வைத்து விட்டோம்,''என்று வருத்தத்துடன் சொன்னார்,கைதி சொன்னான்,''அதனால் என்ன,சார்,அடுத்த தடவை வரும்போது சரி செய்து கொள்ளலாம்.''
***********
விபத்தில் காயம் பட்டவருக்கு நீதி மன்றத்தில் ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க தீர்ப்பு வந்தது.பணத்தைப் பெற்றுக் கொண்ட வக்கீல் அடிபட்டவரிடம் இருபதாயிரம் மட்டும் கொடுத்தார்.அடிபட்டவர் திகைத்துப்போய் அவரைப் பார்க்க,''என்ன சந்தேகம் உங்களுக்கு?''என்று கேட்டார்.அடிபட்டவர் கேட்டார்,''விபத்தில் காயம் அடைந்தது நானா,நீங்களா?''
**********

உழைப்பு தவம்

0

Posted on : Saturday, November 12, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு விவசாயி தன நிலத்தில் கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது ஒருவர் அருகில் இருந்த குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டு கூழாங்கற்களை குளத்துக்குள் வீசிக் கொண்டு சும்மா பொழுதைப் போக்கிக் கொண்டிருந்ததைக்  கண்டார்.அவருக்கு எரிச்சல் உண்டாயிற்று.''நாம் கஷ்டப்படும்போது இவன் மட்டும் சோம்பேறித் தனமாய் பொழுதைப் போக்குகிறானே,''என்று எண்ணினார்.சில நாட்கள் கழித்து விவசாயி பக்கத்து நகரில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சிக்கு சென்றபோது ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை மட்டும் நூற்றுக் கணக்கானோர் ரசித்துச் செல்வதைக் கண்டார்.விவசாயியும் அந்த ஓவியத்தால் கவரப்பட்டு அந்த ஓவியரைக் காண விரும்பினார்.அந்த ஓவியர் வேறு யாருமல்ல. குளத்தங்கரையில் அன்று கல்லை வீசிக் கொண்டிருந்தவர்தான்.அந்த ஓவியம் குளத்தங்கரையின் கவிதை மயமான சூழ்நிலை தோற்றத்தை காட்டியது.அதை வரையத்தான் அந்த ஓவியன் மணிக்கணக்காகக் குளத்தங்கரையில் காத்திருந்திருக்கிறான்.விவசாயி பாராட்டினான், ''அய்யா,நீங்களும் ஒரு உழைப்புத்தவத்தில் தான் இருந்திருக்கிறீர்கள்என்று எனக்கு இப்போது புரிகிறது.நீங்கள் உருவாக்கிய படைப்பு ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்விக்கிறது.என் வாழ்த்துக்கள்.''

எப்படி வந்தது?

0

Posted on : Saturday, November 12, 2011 | By : ஜெயராஜன் | In :

PEN  என்ற ஆங்கிலச்சொல் PENNA என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்தது.இந்தச் சொல்லுக்கு இறகு என்று பொருள்.
***********
சோழ மன்னர்கள் முதன் முதலாக நிக்கோபார் தீவுக்கு சென்றபோது அங்குள்ள மக்கள் ஆடையின்றி இருப்பதைக் கண்டனர்.ஆகவே அவர்கள் வாழும் இடத்தை நக்காவரம் என்று அழைத்தனர்.அதுவே பின்னர் நிக்கோபார் என்று ஆயிற்று.
**********
பெண் சிங்கம் தான் வேட்டையாடிய இரையை உண்ணாமல் ஆண் சிங்கம் வரும் வரை காத்திருக்கும்.ஆண் சிங்கம் தான் வேண்டிய அளவு தின்றபின் மீதியை பெண் சிங்கமும் அதன் குட்டிகளும் உண்ணும்.ஆகவே தான் பல பேர் தேடிய பொருளில் ஒருவர் மட்டும் அதிகப் பங்கு அடைந்தால் அதை ஆங்கிலத்தில் THE LION'S SHARE' என்பர்.
**********
போர்ச்சுக்கலில் பூதத்தை COCO என்பர்.லத்தீனில் COCOக்கு மண்டை ஓடு என்று பொருள்.போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் பசிபிக் தீவுகளில் தென்னை மர வகைகளைக் கண்டனர்.அவற்றின் காய்கள் மனிதத் தலை அளவு இருப்பதையும்,அதில் கண்களும் இருப்பதைப் பார்த்ததும் அது பூதம் போல இருப்பதாகக் கருதி COCONUT என்று பெயரிட்டனர்.
**********
GROOM என்ற ஆங்கில வார்த்தைக்கு குதிரைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டும் சிப்பந்தி என்று பொருள்.பின்னால் ,சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களையும் GROOM என அழைத்தனர்.பழங்காலத்தில் ஐரோப்பிய கிராமங்களில் விருந்துகளின்போது புதிதாய்த் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை,கல்யாணப் பெண்  சாப்பிடும் மேஜைக்கு அருகில் நின்று கொண்டு அவளுக்கு வேண்டியதைக் கொடுத்து உபசரிக்க வேண்டும்.எனவே கணவனுக்கு BRIDE'S GROOM எனப் பெயர் வந்தது.நாளடைவில் அதுவே BRIDEGROOM என்று ஆகிவிட்டது.
**********
முற்காலத்தில் ஐரோப்பாவில் போரிலோ அல்லது தனிப்பட்ட முறையில் மன்னர்களுக்கு சிறப்பான சேவை செய்தவர்களுக்கு நிலம்,வீடு ஆகியவை கொடுக்கப்பட்டன.இப்படி பெறுபவர்களை HUSBAND என அழைத்தனர்.HUS என்றால் வீடு.BANDA என்றால் சொந்தக்காரர்.சமூகத்தில் அவர்களுக்கு தனி மதிப்பு இருந்ததால் அவர்களை மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ளப் போட்டி இருந்தது.இப்படி ஆரம்பித்து பின்னர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவன் வீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் HUSBAND என்று அழைக்கப்பட்டான்.
***********
.

பொன்மொழிகள் --23

0

Posted on : Friday, November 11, 2011 | By : ஜெயராஜன் | In :

11.11.11.இது எனது ஆயிரமாவது இடுகை.இதுவரை எனக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
*********************************************************************
கடைசி  வார்த்தை  தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்.
**********
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.
**********
மனிதனின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர்கள்தான்.அவர்கள்,
*வயதான மனைவி
*வளர்த்த நன்றியுள்ள நாய்
*தயாராய் உள்ள ரொக்கப்பணம்.
**********
இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
**********
என்ன ஆச்சரியம்!எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!
**********
வாழ்க்கையைப் பற்றி பெரிதும் கவலைப் படாதீர்கள்.எப்படியும் நீங்கள் அதிலிருந்து தப்பப் போவதில்லை.
**********
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
**********
வெற்றி பெற்றவனிடம்,அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
**********
விமரிசனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
**********
வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
**********
அதிர்ஷ்டத்தின் வலது கை உழைப்பு:இடது கை சிக்கனம்.
**********
'எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.
***********
இளமை ஒரு தவறு.
வாலிபம்  ஒரு போராட்டம்.
முதுமை ஒரு வருத்தம்.
**********
மிகக் கூர்மையாக இருக்காதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.
**********

நச்சு எண்ணங்கள்

0

Posted on : Friday, November 11, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு சில நச்சு எண்ணங்களை சுலபமாக அடையாளம் காண முடியாது.அவை எங்கும் பரவிக் கிடக்கும்.மிகச்சாவகாசமாகத்தான் வேலை செய்யும்..அவற்றுக்கு இரையாகும் மனிதர்கள் அவற்றின் பாதிப்பை உணரும்போது ஏற்கனவே காலம் கடந்து போயிருக்கும்.அவை:
குமுறல்: நாம் சிறுமைப் படுத்தப் பட்டதாக எண்ணும் போதும்,நமது உறவு,உடமைகளை ஒருவர் அவமானப் படுத்தியதாக எண்ணும் போதும் நமக்குள் ஏற்படும் எரிச்சல்தான் குமுறல்.குமுறல் நமது அடிமனதில் தங்கிப் புற்று நோய் போல வேலை செய்கிறது.அது படிப்படியாக வளர்ந்து மேற்கொண்டு மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்,மென்மையான உள்ளங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும்,தன்னிரக்க வடிவெடுத்து நாளா வட்டத்தில் வாழ்க்கையிலிருந்து நம்மை ஒதுங்கிக் கொள்ளச் செய்யும்.அல்லது படு வேகமாகப் பரவும் குமுறல்,கோபமாகி,கோபம் தாங்க முடியாத வெறுப்பாகி,வெறுப்பு வன்முறையாகி சில சமயங்களில் கொலையில் கூட முடியும்.
நழுவல்:நழுவல் மனோபாவம்,(escapism)  மனதுக்குப் பிடிக்காத யதார்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற உள் மனதில் ஏற்படும் விருப்பத்தால்,குறிக்கோளை அடைய வேண்டும் என்ற நிலையில் முக்கியமான பணி திசை திருப்பச் செய்கிறது.அதன் விளைவாகத் தப்பிப்பதே குறிக்கோள் என்று ஆகி விடுகிறது..

முதுகிற்குப் பின்னால்

0

Posted on : Friday, November 11, 2011 | By : ஜெயராஜன் | In :

முதுகிற்குப்பின் யார்தான் பேசவில்லை?எல்லோரும் நம்மைப் பற்றி சிறிதளவேனும் மனக் குறைவோடு குறிப்பிடவே செய்கிறார்கள்.நம் அன்பிற்குரியவர்கள்,மரியாதைக்குரியவர்கள்,நம்மை நம்பி வாழ்பவர்கள்,நம் தயவை நாடுபவர்கள் கூட இதற்கு விதி  விலக்காக இருக்க முடியாது.
ஒவ்வொருவருக்கும் நம்மைப் பற்றி இரண்டாவது கருத்து இருக்கத்தான் செய்கிறது.சிலர் அதை நம் காதுக்கு எட்டும்படி பேசுகிறார்கள்:சிலர் அதை சாமர்த்தியமாகக் கடைசி வரை மறைத்தே வருகிறார்கள்.
இந்த உண்மையை நெஞ்சில் நிரந்தரமாக நிறுத்திக் கொண்டால் மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக ஏதும் பேசியதாகக் கேள்விப்படும் போது நமக்கு அதிர்ச்சியோ,வருத்தமோ,கோபமோ வராது.நம்மைப்  பற்றி ஒருவர் மனக் குறையுடன் பேசியதாகக் கேள்விப்பட்டால்,அவருடன் சண்டை போடுவதற்குப் பதில் அவர் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் ஏற்கனவே தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல்  ஏன் அப்படி நேர்ந்தது என்று மிக இயல்பாக விளக்கிக் கூறினால் அவர் சரணாகதி அடைய மாட்டாரா?
பல மனிதர்களுக்கு தீர்மானமான தெளிவான கருத்து இருப்பதில்லை. நேரத்திற்கு ஒன்றைப் பேசுவது,தோன்றியதைஎல்லாம் சொல்வது என்று வைத்திருக்கிறார்கள்.எனவே இவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு வருந்தவோ,கவலைப்படுவதோ வேண்டியதில்லை.
முதுகிற்குப் பின்னால் பேசுவது என்பது மனிதனின் தலையாய பலவீனம்.இதற்குக் காரணம் இருக்கிறது.பாராட்டைத் தவிர முகத்திற்கு நேரே சொல்லப்படும் எந்தக் கருத்தையும் நாம் விரும்புவதில்லை.அப்புறம் முதுகிற்குப் பின்னால் பேசாமல் எப்படி இருப்பார்கள்?மனிதர்களால் மற்றவர்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.
இதில் இடைப்பட்டவர்கள் செய்யும் கெடுதலும் உண்டு.வேண்டுமென்றே வார்த்தைகளையும்,தொனியையும்,தோரணையையும் மாற்றி பெரிது படுத்தி விடுவார்கள்.
நம்மைப் பற்றிச் சொல்லப்படும் விசயங்களில் உள்ள உண்மைகளை ஏற்றுக் கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்ளவும் ,உண்மை யற்றவைகளைப் புறக்கணிக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே இதற்கெல்லாம் மன அமைதியை கெடுத்துக் கொள்ளக் கூடாது.
                                                  --லேனா தமிழ்வாணன்.

பொன்மொழிகள்-22

1

Posted on : Friday, October 28, 2011 | By : ஜெயராஜன் | In :

உழைத்துப் பார் ,அதிர்ஷ்டம் வரும்.
உறங்கிப்பார்,கஷ்டம் வரும்.
**********
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
**********
நோயாளிக்கு எப்போதாவது நித்திரை உண்டு.
கடன்காரனுக்கு ஒருபோதும் இல்லை.
**********
அறிவு இருப்பவர்களிடையே கருத்து வேறுபாடு வருவது இயற்கை .
அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கு அதுவே அர்த்தம்.
**********
சொர்க்கம் போவதற்கு நல்லவர்கள் உழைப்பதை விட
நரகம் போக கெட்டவர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.
**********
ஒருவரை கீழே தள்ளுவதற்காகக் குனியாதே.
கீழே விழுந்தவரை மேலே தூக்கிவிடக்குனி.
**********
இனிமையாக வாழ முடியாதவர்கள்,இனிமையாக வாழ்பவரை வெறுக்கிறார்கள்.அல்லது அவர்களை விட்டு விலகுகிறார்கள்.
**********
வறுமை என்பது பயந்தவரை அடிக்க வரும் போக்கிரி.
ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது பயந்த சாது.
**********
தூங்குபவனை எழுப்புவதற்காக பொழுது இருமுறை விடிவதில்லை.
**********
விருதுகளும் பட்டங்களும் சராசரி மனிதனுக்கு சிறப்புச் சேர்க்கின்றன.
உயர்ந்த மனிதனுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகின்றன.
தாழ்ந்த மனிதரால் அவை களங்கப் படுத்தப்படுகின்றன.
**********
வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்.
பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்துவிடும்.
**********

நமக்குள் ஒரு நரகாசுரன்.

0

Posted on : Friday, October 28, 2011 | By : ஜெயராஜன் | In :

நரகாசுரனை வதைத்து தீமைகளை அழித்து,உலகிற்கு நன்மை செய்த இறைவனுக்கு தீபாவளியன்று நன்றி செலுத்துகிறோம்.ஆனால் நமக்குள்ளே ஒரு நரகாசுரன் அழியாமல் உலவி வருகிறானே,அவனோடு வதம் நடத்தினோமா?நம்மை மிருகமாக்கும் அவனை அடையாளம் காண முடிகிறதா?
நம் நண்பன் உயரும்போது மகிழ்ந்து பாராட்டாமல் பொறாமைத் தீயில் உருகி வெடிக்கிறோமே!எல்லாம் நமக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று பேராசைப் படுகிறோமே!தர்மம்,நியாயம்,நீதி எல்லாம் மற்றவர்க்கு மட்டுமே என்று நினைக்கிறோமே!நமக்கு நாம் விரும்பியது கிடைக்க வேண்டும் என்று முறை தவறுகிறோமே!உழைக்காமல் சோம்பேறித்தனம் என்ற போர்வையில் தாமதம் என்னும் கதகதப்பில் முன்னேற முடியாமல் முடங்கிக் கிடக்கிறோமே!என்னைவிட யாருமில்லை என்ற எண்ணப் புழுதியால் அகந்தை திரை அமைத்து நம் அறிவுப் பார்வை மயங்கிக் கிடக்கிறோமே!ஆற்றலை வெளிப்படுத்தாமல், ஆகப்போவது என்ன என்று அதைரியமடைந்து வளர முடியாமல் முடங்கிக் கிடக்கிறோமே!அப்போது எல்லாம் நம்முள் ஒரு நரகாசுரன் ஆட்சி செய்கிறான்.அவனை அழித்து வதம் செய்வோம்!
அகிலம் வளர வேண்டும்,அதில் அனைவரும் உயர வேண்டும் என்ற பூவானத்தை பூக்கச் செய்வோம்!
மனித நேயம் வளர வேண்டும்,மக்கள் எல்லாம் வாழ வேண்டும் என்ற மத்தாப்பை சிரிக்க செய்வோம்!
அகந்தை என்னும் அணுகுண்டை வெடித்து செயல் இழக்க செய்வோம்!
அன்பு என்னும் அகல் விளக்கைத் தூண்டச் செய்வோம்!
உழைத்து உயர வேண்டும்,அந்த உயர்வில் மற்றவர்க்கு உதவ வேண்டும் என்ற மகிழ்ச்சி வெடியை மலரச்செய்வோம்!
அன்றுதான் உண்மையில் நமக்கு தீபாவளி!

வேலைக்காரன்

0

Posted on : Thursday, October 20, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு அரசன் பதவி அகங்காரத்தில் சொன்னான்,''நான் தான் உலகுக்கே அதிபதி.அனைவரும் எனக்கு வேலைக்காரர்கள்.''அப்போது ஒரு வயது  முதிர்ந்த பெரியவர் ஒருவர்,'இல்லை,உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்கள்தான்.யாரும் அதிபதி கிடையாது.''என்று சொன்னார்.அரசன்,''யாரது?''என்று கேட்க முதியவர் முன் வந்தார்.அரசன்,''நீ இப்போது சொன்னது என்னையும் சேர்த்தா?''என்று கேட்க முதியவர் ஆம் என்று சொன்னார்.அரசனுக்குக் கோபம் வ்நதுவிட்டது,''நீ யார்?உனக்கு என்ன வேண்டும்?''என்று கேட்க அந்த முதியவரும்,''எங்கள் ஊரில் குடிக்கத் தண்ணீர்  இல்லை.எங்கள் ஊரில் ஒரு கிணறு தோண்ட நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இங்கு வந்தேன்,''என்றார்.அரசன்,''நீயோ பிச்சைக்காரன் மாதிரி என்னிடம் வேண்டுகோளுடன் வந்துள்ளாய்.இந்த நிலையில் என்னையும் ஒரு வேலைக்காரன் என்று சொல்ல உனக்கு எவ்வளவு ஆணவம்?''என்று கத்தினான்.பெரியாவர்,''அதில் எந்த மாற்றமும் இல்லை.என்னால் அதை நிரூபிக்க முடியும்,''என்றார்.அரசன் சொன்னான்,''நீ மட்டும் அதை நிரூபித்து விட்டால் உங்கள் ஊருக்கு ஒன்றென்ன,மூன்று கிணறுகள் தோண்ட ஏற்பாடு செய்து தருகிறேன், ''என்றான்.முதியவர் ,''எங்கள்  ஊர்  வழக்கப்படி யாராவது ஒருவர் இன்னொருவரின் சவாலை ஏற்றுக் கொண்டால் அவரது பாதம் தொட்டு வணங்க வேண்டும்.உங்கள் சவாலை நான் ஏற்றுக் கொண்டதால் இப்போது நான் உங்கள் பாதத்தை வணங்கப் போகிறேன்.ஒரு நிமிடம் என் கைத்தடியைப் பிடித்துக் கொள்கிறீர்களா?''என்று சொல்ல அரசனும் முதியவரின் கைத்தடியைத் தன கையில் வாங்கிக் கொண்டான். முதியவரும் அரசனைப் பாதம் தொட்டு வணங்கிவிட்டு,''இப்போது என் கைத் தடியைத் திரும்பத் தருகிறீர்களா?''என்று கேட்க அரசனும் திரும்பக் கொடுத்து விட்டான். பெரியவர் ,''இதற்கு மேலும் நான் நிரூபிக்க வேண்டுமா?''என்று கேட்க அரசன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.முதியவர் சொன்னார்,''அரசே,நான் என் கைத்தடியைப் பிடியுங்கள் என்றதும் பிடித்தீர்கள்,திரும்பக் கொடுங்கள் என்றதும் கொடுத்தீர்கள்.நான் இட்ட வேலைகளை இப்போது நீங்கள்செய்யவில்லையா?அதனால்தான் சொல்கிறேன் இவ்வுலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே.''தன தவறை உணர்ந்த மன்னன் முதியவரின் கோரிக்கையை உடனே நிறைவேற்றினான்.

காட்டுச்செடி

0

Posted on : Thursday, October 20, 2011 | By : ஜெயராஜன் | In :

அக்பர் ஒருநாள் ஒரு கிராமத்து வழியே சென்று கொண்டிருக்கையில் ஒரு அபூர்வமான காட்சியைக் கண்டார்.வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் வேலையின் இடையே வெளியே வந்து மரத்தடிக்கு சென்று தன வயிற்றில் இருந்த குழந்தையைத் தானே பிரசவம் பார்த்து வெளியே எடுத்து அங்கிருந்த நீரில் குளிப்பாட்டி,பாலூட்டி பின் ஒரு துணியை மரத்தில் தொட்டிலாகக் கட்டி அதில் படுக்கப் போட்டுவிட்டு மீண்டும் வயலில் இறங்கித் தன வேலையைத் தொடர்ந்தாள்.அக்பர் நினைத்தார்,''இந்தப் பிரசவம் எவ்வளவு எளிதாக முடிந்தது!நம் ராணிகள் இதை சாக்காக வைத்து செய்யும் ஆர்ப்பாட்டங்களுக்கு அளவே இல்லையே!அவர்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.''அரண்மனை திரும்பியதும் கருவுற்ற பெண்களுக்கு எந்த விதமான உதவியோ,செய்முறைகளோ செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டார்.இதைக் கேள்விப்பட்டு கவலையுற்ற மகாராணி,பீர்பாலை அழைத்து மன்னரை எப்படியாவது சமாதானப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அடுத்த நாள் பீர்பால் அக்பர் தினசரி விரும்பி வரும் அவர் தோட்டத்தில் சில செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த மன்னர்,''முட்டாளே,காட்டில் வளரக் கூடிய செடிகளை தோட்டத்தில் நட்டால் எப்படி வளரும்?''என்று கேட்டார்,''அதற்கு  பீர்பால் சொன்னார்,''தினமும் கடுமையாய் உழைக்கும் கிராமத்துப் பெண்களைப் போல அரண்மனைப் பெண்களும் குழந்தை பெற முடியுமானால்,காட்டுச் செடிகள் நம் தோட்டத்தில் ஏன் வளராது?''அக்பர் தன தவறினை உணர்ந்து தன ஆணையைத் திரும்பப் பெற்றார்.



டீன் ஏஜ் பிரச்சினை

0

Posted on : Friday, September 16, 2011 | By : ஜெயராஜன் | In :

டீன் ஏஜ் என்பது கனவுகள் மலரும் பருவம்.பெற்றோருக்கோ சிம்ம சொப்பனமான காலம்.டீன் ஏஜ் சுதந்திரத்தை நாடும் பருவம்.அதே சமயம் எதிர் காலம் பற்றிய உறுதியான நம்பிக்கை தோன்றாத பருவம்.இப்பருவத்தில் எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தும் விதமாகப் பேசினால் அவர்களுக்கு எதிர் மறையான சிந்தனைகள்தான் வளரும்.அவர்களிடம்,'உன் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி,'என்ற ரீதியில் பேச வேண்டும்.குத்தலாகப் பேசாது அன்பை முழுமையாக வெளிப்படுத்துங்கள் .இப்பருவத்தின் உணர்ச்சி ,சிந்தனை , தேவை  மூன்றும் வித்தியாசமானது தான்.இவ்வளவு காலமாக இந்த மூன்றிலும் பெற்றோரின் பிம்பமாக இருந்த குழந்தைகள்,சுதந்திர இளைஞர்களாகவும் ,யுவதிகளாகவும் மலர ஆரம்பிக்கிறார்கள்.செலவுக்குப் பெற்றோரை சார்ந்தும்,முடிவுகள் எடுக்க மட்டும் அவர்களைச் சாராமல் இருக்க நேருகிறது.இந்த முரண்பாடு மன சஞ்சலங்களை தோற்றுவிக்கிறது. பெற்றோர் இக்கட்டத்தில் கட்டுப்பாடுகளை  அதிகரிக்க விரும்புகின்றனர் .''நான் தானே இவ்வளவு துன்பப்பட்டு வளர்த்தேன்,நான் சொல்வதைக் கேட்கக் கூடாதா?''என்று அப்பாவும் அம்மாவும் நினைக்க ஆரம்பிக்கின்றனர்.அன்பு எல்லைகளைக் கடந்து ஆக்கிரமிப்பாக மாறுகிறது. போராட்டங்களும் வாக்குவாதங்களும் வலுவான மனக் காயங்களை ஏற்படுத்தி பல சமயங்களில் நிரந்தரமான வடுக்ககளை விட்டுச் செல்கின்றன.வாக்குவாதங்களை உணர்ச்சி வசப்பட்டு வளர்க்காமல் அறிவு பூர்வமாக அணுகி அணை போடுவது மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு. தனிமையை நாடுவதும் ,மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உடுத்திக் கொள்வதும் இந்தப் பருவத்திற்கே உரிய குணங்கள்.இதைப் பார்க்கும் பெற்றோருக்குக் கவலையும் கோபமும் வந்தாலும் பொறுமை காக்க வேண்டும் .கிண்டல் ,கேலி,குத்தல் வார்த்தைகள் அவர்களுக்கு வேதனையாகி தொடர்ந்து வேறுபட்டே நிற்கச் செய்யும்.மாற்றங்களைக் கவனித்தாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்ற கருத்தை கோபத்தைக் காட்டாது சொல்லுங்கள் .அவர்களுடைய தனிப்பட்ட ரசனைகளை உணர்வுகளைப் புரிந்து மதிப்பதாகக் காட்டிக் கொள்ளுங்கள்.அவர்களுக்கு உங்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.பெற்றோரைப் பொறுத்தவரை தங்கள் பிடிகளைத் தளர்த்த வேண்டிய காலம் இது.உங்கள் குழந்தையை தனி மனிதனாக ஏற்றுக் கொள்ளுங்கள்.அதற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
*அவர்களின் எதிர்காலக் கனவுகளை நீங்கள் நிர்ணயிக்காதீர்கள் ..அவர்களுடைய கனவுகளைப் புரிந்து யோசனைகள்  சொல்லுங்கள்.
*அன்பைப் பொழியுங்கள்.
*உணர்ச்சிகளை மறைக்காமல் மிதமாக வெளிப் படுத்துங்கள்.
*உணர்ச்சி வசப்பட்டுக் கடும் வார்த்தைகளை வீசாதீர்கள்.
*நட்போடு எடுத்துச் சொல்லுங்கள்.
*முடிவுகளைத் திணிக்காதீர்கள்.
*உங்கள் குழந்தைகளை அவர்களின் குறை நிறைகளுடன்  முழுமையாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.

உமக்குள் இல்லையா?

0

Posted on : Thursday, September 15, 2011 | By : ஜெயராஜன் | In :

சிலர் தமது பல்வலி,வயிற்று வலிகளையும்,வியாபார இழப்புகளையும், சண்டை சச்சரவு,பழிவாங்கல்களையும்,உறக்கமற்ற இரவுகளையும் -புதைப்பதற்கான ஒரு குழியாகவே கடவுளைக் கருதியிருக்கிறார்கள். மற்றவர்கள் கடவுளைத் தங்கள் செல்வங்களின் கருவூலமாக கருதுகிறார்கள்.மற்றும் சிலர் கடவுளை ஒரு கணக்குப் பிள்ளையாகக் கருதுகிறார்கள்.கடவுளுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள்.இருந்தாலும்,அவர் அதைத் தனியே செய்து கொள்வார்.யாரும் நினைவு படுத்த வேண்டியதில்லை என்பதை சிலரே அறிவர்.கதிரவனின் உதயம்,மறைவு நேரங்களை நீங்கள் கடவுளுக்கு நினைவூட்டுகிறீர்களா, என்ன? இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் எண்ணற்ற பொருட்களை நிரப்ப அவருக்கு நினைவூட்ட வேண்டுமா,என்ன? உங்களது அற்பத் தேவைகளுக்காக  உங்கள் பலவீனமான சுயத்தை அவர் மீது ஏன் சுமத்துகிறீர்கள்?மண்டியிட்டு,இரு கரங்களை நீட்டி,மற்றவர் மனதில் என்ன இருக்குமோ என்று தவிப்பதைவிட்டு,கிடைத்த பரிசுகளைப் பெற்றுக் கொண்டு ஆரவாரமின்றி நீங்கள் ஏன் உங்கள் காரியங்களை செய்து கொண்டே இருக்கக் கூடாது?உங்கள் ஆணவங்களையும், ஆசைகளையும் புகழ்களையும்,குற்றச்சாட்டுகளையும் ஒன்று திரட்டி அவர் காதில் இரைச்சலுடன் ஓலமிட்டால்,கடவுள் எங்கே இருப்பார்?அவர் உமக்குள் இல்லையா?உங்கள் எண்ணற்ற கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவரிடம் கொண்டு போகாதீர்கள்.உங்களுக்காகக் கதவு திறந்துவிடும்படி அவரிடம் மன்றாடாதீர்கள்.அதன் திறவுகோலை முன்பே அவர் உங்களிடம்தான் கொடுத்துள்ளார்.
                     --'மிகெய்ல் நைமி'எழுதிய ''மிர்தாதின்  புத்தகம்''என்ற நூலிலிருந்து.

அறிவுத்திறன்

0

Posted on : Wednesday, September 14, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு குழந்தை ஆறு வயதிற்குள் அதன் மூளையில் ஏராளமான விசயங்களைப் பதிவு செய்து கொள்ளும் ஆற்றல் கொண்டது.நமது மூளையில் 125 ட்ரில்லியன் விஷயத் துளிகளை பதிவு செய்யக்கூடிய திறன் உள்ளது.ஒரு ஆராய்ச்சி, உண்பதை விட,விளையாட்டைவிடக் கற்பதை குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது.குழந்தைக்கு இள வயதில் உயர்ந்த கல்வி அறிவை,வேகமாகவும் எளிதாகவும் மகிழ்ச்சியான முறையில் அளிக்க முடியும்.படிப்புத் திறன்   ,கணிதத் திறன் ,விஷய ஞானம் ஆகியவற்றை ஒரு வயதுக்  குழந்தையின் மூளையில் பதிய வைப்பது சுலபம்.எப்படி?குழந்தை இந்தத் திறமைகளை நிகழ்ச்சிகள் மூலம் பெறுகிறது.ஆனால் அந்த நிகழ்ச்சிகள் கீழ்க்கண்ட இயல்புடையதாய் இருக்க வேண்டும்.
*அவை உண்மை நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும்.நமது கருத்தாக இருக்கக் கூடாது.(facts not opinions)
*அவை மிகச் சரியானதாக இருக்க வேண்டும்.(precise)
*குறிப்பிட்ட விசயமாக இருக்க வேண்டும்.(specific)
*குறிப்பிட்ட பெயருடையதாக சந்தேகமின்றி இருக்க வேண்டும்.(unambiguous)
*புதிய விசயமாகப் பார்ப்பதற்கு பெரிய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.
*உரத்த குரலில் உச்சரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக குழந்தைக்கு காந்தியின் படத்தை காண்பித்துப் புரிய வைக்க வேண்டும் என்று எடுத்தக் கொள்வோம்.
*காந்தியின் படம் பெரிய அளவில் இருக்க வேண்டும்.
*அவர் பெயரைத் தெளிவாக உரத்த குரலில் படத்தைக் குழந்தை பார்க்கும்போது உச்சரிக்க வேண்டும்.
*படத்தில் காந்தி தவிர யாரும் இருக்கக் கூடாது.
*படம் தெளிவாக இருக்க வேண்டும்.
*பெயருடன் வேறு சொற்கள் சேர்க்கக் கூடாது.காந்தி என்றுதான் சொல்ல வேண்டுமே அல்லாது மகாத்மா காந்தி என்று சொல்லக்கூடாது .

வானர சேனை

0

Posted on : Saturday, September 10, 2011 | By : ஜெயராஜன் | In :

வால்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி;
இராவணன் தன இரு ஒற்றர்களுடன் தன்னுடைய அரண்மனையின் உச்சியிலுள்ள மாடியில் ஏறி பகைவர்களின் சைன்யத்தை பார்வை இட்டார்.அந்த ஒற்றன் வானர சேனையின் முக்கியமானவர்களைப் பற்றி விவரித்துவிட்டு வானர சேனையின் எண்ணிக்கையை கூறுகிறான்.
நூறு ஆயிரம் கொண்டது ஒரு லட்சம்.
நூறு லட்சங்கள் கொண்டது ஒரு கோடி.
லட்சம் கோடிகள் கொண்டது ஒரு சங்கம்.
லட்சம் சங்கங்கள் கொண்டது ஒரு பிருந்தம்.
லட்சம் பிருந்தங்கள் கொண்டது ஒரு பத்மம்.
லட்சம் பத்மங்கள் கொண்டது ஒரு மகாபத்மம்.
லட்சம் மகாபத்மங்கள் கொண்டது ஒரு கர்வம்.
லட்சம் கர்வங்கள் கொண்டது ஒரு மகாகர்வம்.
லட்சம் மகாகர்வங்கள் கொண்டது ஒரு சமுத்திரம்.
லட்சம் சமுத்திரங்கள் கொண்டது ஒரு ஓகம்.
லட்சம் ஓகம் கொண்டது ஒரு மகா ஓகம்.
வானர சேனைகள் நூறு கோடி மகா ஓகம் கொண்டதாக இருப்பதாக ஒற்றன் கூறுகிறான்.அதாவது வானர சேனையில் இருந்தவர்களின் எண்ணிக்கை ஒன்று போட்டு அதன்பின் 61 பூஜ்யங்கள் போட்டால் வரும் எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறுகிறான்.
இவ்வளவு வானரங்கள் நிற்கவாவது பூமியில் இடம் இருக்குமா?இதைக் கற்றறிந்தோர் யாராவது தெளிவு படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

சோம்பல்

0

Posted on : Saturday, September 10, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லா நசிருதீன் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் கூட காலையில் விரைவில் எழுந்தது இல்லை.அவனது தந்தை எவ்வளவோ முயற்சி செய்தும் அவனை விரைவில் படுக்கையிலிருந்து எழ வைக்க முடியவில்லை.ஒருநாள் வழக்கம்போல அவர் அதிகாலை எழுந்து வெளியே சென்றார்.அப்போது ஒரு பறவை தரையில் கிடந்த புழுவைத் தூக்கி சென்றது.பறவை அதிகாலையில் எழுந்ததால்தானே காலை இளம் குளிரில் வெளி வந்த புழுவைப் பிடிக்க முடிந்தது என்று எண்ணினார்.பின்னர் அவர் சாலையில் ஒரு துணிப்பை கிடப்பதைப் பார்த்து அதை எடுத்து அதில்  பொற்காசுகள் இருப்பதைக் கண்டார்.சிறிது நேரம் காத்திருந்தும் ஒருவரும் தேடி வராததால் அதிகாலையில் எழுந்ததற்குக் கிடைத்த பரிசு என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நசிருதீனிடம் சொல்லி விரைந்து எழ வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தலாம் என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.தந்தை எழுப்பியும் நசிருதீன்  எழவில்லை.அவன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து ஊற்றினார்.அப்போதும் அவன் அரைத் தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்தான்.தந்தை தான் கண்ட இரு நிகழ்வுகளையும் சொல்லி மகனின்  பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தார்.நசிருதீன் சொன்னான்,''என்ன அப்பா,உங்களுக்கு விபரமே தெரியவில்லை.அந்தப்புழு அப்பறவை எழுமுன் எழுந்ததால்தானே அது பறவைக்கு இரையாக நேர்ந்தது. அதேபோல் எவனோ ஒருவன் உங்களுக்குமுன் எழுந்து சென்றதால்தானே தன பொற்காசுகளைத் தொலைத்துவிட்டு இப்போது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்?எனவே சீக்கிரம் எழுவது ஆபத்துதான்,''என்று சொல்லிக் கொண்டே மீண்டும் படுக்கையில் படுத்துக் கொண்டான்.தந்தை அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

நம் விருப்பம்.

1

Posted on : Thursday, September 08, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் பொய்யை விரும்புகிறோம்.எதையும் நேரிடையாக உள்ளபடி பேசுவதைவிட கொஞ்சம் நம் சரக்கை  சேர்த்து சொல்கிறோம்.ஏன்?ஜென் ஞானி சொல்கிறார்:
''மற்றவரைவிட அதிகம் தெரிந்திருப்பவன் நான் என்று இலைமறை காய்மறையாகக் காண்பித்துக் கொள்ள நினைக்கும் மனத்துடிப்பே காரணம்.''
ஆழ்ந்து பார்த்தால புரியும்.ஒவ்வொரு முறை பொய் சொல்லும்போதும் நமது அகங்காரம் திருப்தி அடைகிறது மனம் புஷ்டியாகிறது.இது ஆரோக்கியக் கேடு அல்ல;ஆனந்தக்கேடு.மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனிக்கலையாக திரித்துப் பேசுதல் உருவாகியுள்ளது.இதை நாம் மற்றவர்களுக்கும் மற்றவர்கள் நமக்கும் செய்து கொண்டேயிருக்கிறோம்.

பொன்மொழிகள்-21

0

Posted on : Thursday, September 08, 2011 | By : ஜெயராஜன் | In :

எந்தப் பிரச்சினையையும் கடக்கும்போதுதான் வலிக்கும்.பின்னர் நினைக்கும்போது அது ஒரு சுகமான தழும்பு.
**********
வெற்றி,தோல்வி இரண்டுமே விளையாட்டின் முடிவுகள்தான்.நமக்குத் தேவை விளையாட்டின் முடிவுகள் அல்ல.விளையாடும்போது கிடைக்கும் அகமகிழ்வும் பரபரப்பும்தான்.வெற்றி தரும் கரவொலி மைதானத்தில் தங்கி விடுவதில்லை.அது ஒரு நிமிட நேர மகிழ்ச்சி.
**********
தொட்டால் சிணுங்கி இலை கூட நாம் விரலால் தொட்டால்தான் சுருங்கிக் கொள்கிறது.ஆனால் ஒன்றைப் பற்றி மோசமாக நினைத்தாலே போதும்.உடனே மனம் சுருங்கி விடுகிறது.மனிதன் தான் இன்னும் புரிந்து கொள்ள முடியாத தாவரம்.
**********
பயம் என்பது என்ன?  தைரியக் குறைவுதான்.
பயத்திலிருந்து வெளியேறுவது எப்படி?பயத்தை தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள்.
எது புகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட நிறைகள்.
எது இகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட குறைகள்.
யார் வாலிபர்? மாறாத குதூகலத்தோடு இருப்பவர் வயதில் கிழவர் கூட வாலிபர்தான்.
யார் கிழவர்? குதூகலமில்லாதவர் வாலிபராயிருந்தாலும் கிழவர்தான்.
**********
ஒரு ஆப்பிளுக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கலாம்.ஒரு விதைக்குள் எத்தனை ஆப்பிள்கள் இருக்கின்றன என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
**********
உலகம் முழுவதும் மனிதர்கள் பல மொழிகளில் பேசுகிறார்கள்.ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.
**********
பலர் வெற்றியைக் கனவு காண்கிறார்கள்.ஆனால்
சிலர் அதற்காக உழைக்கக் கிளம்பி விடுகிறார்கள்.
**********
எல்லோரிடமும் அழகு இருக்கிறது.ஆனால்
எல்லோராலும் அதைப் பார்க்க முடிவதில்லை.
**********
உங்கள் மனமே நீங்கள் விரும்பியபடி இயங்காதபோது மற்றவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்ப இயங்கவில்லை என்று கோபம் கொள்வது என்ன நியாயம்?
**********
எப்போதும் நம் எதிர்பார்ப்புக்கு ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள்.உங்களையும் இதே காரணத்துக்காக முட்டாளாகப் பார்க்க நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
**********
ஒவ்வொரு பாலைவனத்திலும் ஒரு சிறிய பசுமையான  சோலையாவது இருக்கிறது.ஆனால் எல்லா ஒட்டகத்தாலும் அதைக் கண்டு பிடிக்க முடிவதில்லை.
**********


தடை

0

Posted on : Wednesday, September 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஓவியரான ஒரு ஜென் குரு தன சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும்  சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.ஆர்வத்துடன்  குருவிடம் அது எப்படி சாத்த்யமாயிற்று என்று கேட்க குரு சொன்னார்,''பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது.நீ அருகில் இருக்கிறாய் என்ற உறுத்தல்தான் ஓவியத்தைக் கெடுத்தது.நீ வெளியே சென்றதும் எனக்கு தடை நீங்கியது.ஓவியமும் ஒழுங்காக உருவானது.சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்..குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை  வராது.குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும்.''

நீயே அறிவாய்.

0

Posted on : Wednesday, September 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் குரு ஒருவர் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று கொண்டு ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மூன்று  பிக்குகள் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஜென் வழியைப் பின்பற்றுபவர்கள் அல்ல.எனினும் ஜென் குருவை அடையாளம் கண்டு அவர் அருகில் வந்து நின்றார்கள்.அவர்களில் ஒருவர் ஜென் குருவிடம்,''ஜென் ஆறு எவ்வளவு ஆழம்?''என்று கேலியாகக் கேட்டார்.கண் இமைக்கும் நேரத்திற்குள் குரு கேள்வி கேட்டவரைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டு சொன்னார்,''நீயே அளந்துபார்,''

தாமதம் ஏன்?

0

Posted on : Tuesday, September 06, 2011 | By : ஜெயராஜன் | In :

''தினசரி வேலைக்கு தாமதமாக வருகிறாயே?''என்று முதலாளி கோபமாக முல்லாவைக் கேட்டார்.முல்லா சொன்னார்,''அதற்கு நீங்கள் தான் காரணம்'' முதலாளி ஆச்சரியத்துடன் அவரை நோக்க,முல்லா பணிவுடன் சொன்னார்,    ''நீங்கள் தான் என்னை நேரம் காலம் பார்க்காது வேலை பார்க்கக் கற்றுக் கொடுத்தீர்கள்?அதனால் இப்பொழுதெல்லாம் நான் கையில் கடிகாரம் கட்டுவது இல்லை.''
**********
புதிதாக வேலைக்கு வந்த முல்லாவிடம் முதலாளி கேட்டார்,''உனக்கு ஏற்கனவே ஐந்து வருட அனுபவம் இருக்கிறதாக நேர்முகத் தேர்வில் சொன்னாயே!ஆனால் நீ ஏற்கனவே வேலை பார்த்ததற்கான அறிகுறியே தெரியவில்லையே?''அதற்கு முல்லா சொன்னார்,''நீங்கள் தானே விளம்பரத்தில் கற்பனை வளம் மிக்கஒருவர் வேலைக்கு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்?''
**********

குடை ராட்டினம்

0

Posted on : Tuesday, September 06, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தன இரண்டு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு பொருட்காட்சிக்கு சென்றார்.அங்கு ஒரு குடைராட்டினம் இருந்தது.அவருடைய நண்பர், முல்லா குடை ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.அவருக்கு ஆச்சரியம்.இந்த வயதில் அவர் இப்படி உல்லாசமாக சுற்றுகிறாரே !சிறிது நேரத்தில் அவருக்கு திகைப்பே ஏற்பட்டுவிட்டது.ராட்டினம் நின்றவுடன் முல்லா கீழே இறங்கினார்.வேகமாய்ப்  போய் மறுபடியும் ஒரு டிக்கெட் எடுத்தார் மீண்டும் ராட்டினத்தில் ஏறி உட்கார்ந்தார்.இதுபோல திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தார்.கடைசியில் அவர் இறங்கி வந்தபோது  நண்பர் கேட்டார்,''முல்லா,ராட்டினத்தில் சுற்றுவதென்றால் உங்களுக்கு அவ்வளவு விருப்பமா?''அதற்கு முல்லா சொன்னார்,'ஐயோ.எனக்கு ராட்டினமே சுத்தமாகப் பிடிக்காது.அதில் ஏறினாலே தலை சுற்றும்.'' நண்பர் கேட்டார்,''அப்படியானால் ஏன் மீண்டும் மீண்டும் ராட்டினத்தில் சுற்றினீர்?'' முல்லா சொன்னார்,''அதை ஏன் கேட்கிறீர்கள்?இந்த ராட்டினத்துக்காரன் எனக்கு பணம் கடன் தர வேண்டியிருக்கிறது.பல முறை கேட்டும் தரவில்லை.ராட்டினத்தில் சுற்றியாவது கடனை வசூலித்ததாக இருக்கட்டும் என்று தான் சுற்றினேன்.''

குரு வணக்கம்

0

Posted on : Monday, September 05, 2011 | By : ஜெயராஜன் | In :

அக்பர் அவையில் புகழ் பெற்ற பாடகர் தான்சேன்.அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த பழங்களை சாலையில் செல்பவர்கள் பறித்தது போக அவர்களுக்கு பயன் கிடைக்காத நிலை இருந்தது.தோட்டத்திற்கு காவலாக இருக்கும்படி தான்சேனை அவன் தந்தை அனுப்பினார்.சிறுவனாக இருந்தபோதும் தான்சேன் ஒரு  யுக்தி செய்தான்.அவன் தோட்டத்தில் செடி மறைவில் ஒளிந்து கொண்டு ஆண் புலியைப் போல உறுமினான்.அக்குரல் தத்ரூபமாக இருந்ததால் தோட்டத்தில் புலி இருக்கிறது என்று பயந்து நாளடைவில் யாருமே அந்தப்பக்கம் வருவதே இல்லை.ஒரு நாள் இரண்டு சாதுக்கள் அவ்வழியே வந்தனர்.அவர்களைக் கண்ட தான்சேன் புலியைப் போல உறுமினான்.ஒரு சாது ஓடிவிட்டார்.ஹரிதாஸ் எனும் சாது மட்டும் தைரியமாகத் தோட்டத்திற்குள் நுழைந்து பார்த்தார்.தான்சேன் செடி மறைவில் இருப்பதைக் கண்டார்.அவருக்கு தான்சேன் திறமையில் அபாரப் பற்று ஏற்பட்டது.எனவே தனக்குத் தெரிந்த இசைக்கலையை அவனுக்கு அன்று முதல் புகட்ட ஆரம்பித்தார்.அவன் ஒப்பற்ற இசை மேதை ஆகி விட்டான்.ஒரு கதையாய்ப் போய்விட்ட பிறகும் கூட தான்சேன் பாட ஆரம்பிக்கும்போது புலியைப்போல உறுமாமல் துவங்குவது இல்லை.அந்த உறுமலே தான்சேனின் குரு வணக்கம்.
                       ந.பிச்சமூர்த்தி கதைகள் எனும் நூலிலிருந்து.

சிரஞ்சீவி

0

Posted on : Monday, September 05, 2011 | By : ஜெயராஜன் | In :

சந்தையில் ஒருவன் மருந்து விற்றுக் கொண்டிருந்தான்.முல்லா அவன் உதவியாளராக இருந்தார்.வியாபாரி சப்தம் போட்டுக் கூவினான்,''இந்த மருந்து  சாதாரண மருந்து அல்ல.இது சிரஞ்சீவி மருந்தாகும்.இதை சாப்பிடுபவர்கள் நீண்ட காலம் வாழலாம்.''கூட்டம் கூடியது.அவர்களுக்கு வியாபாரியின் கூற்றில் நம்பிக்கை ஏற்படவில்லை.அதைக் கவனித்த வியாபாரி,''உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?என்னைப் பாருங்கள்.நான் தினமும் இதை சாப்பிட்டு வருகிறேன்.எனக்கு இப்போது வயது முன்னூறு.'' யாருக்கும் இன்னும் நம்பிக்கை வரவில்லை.ஒருவன் அருகிலிருந்த முல்லாவிடம் கேட்டான்,''ஏனப்பா,இவர் சொல்வது உண்மையா?'' முல்லாவின் நிலை தர்ம சங்கடம் ஆனது.இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சொன்னார்,''எனக்கு அவர் வயது சரியாகத் தெரியாது.ஏனென்றால்  நான் அவரிடம் இருநூறு ஆண்டுகளாகத்தான் பணி புரிகிறேன்.''

மனத்தின் குணம்

1

Posted on : Sunday, September 04, 2011 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு புகழ்பெற்ற கவிஞர்.நிறைய கவிதைகள் புனைந்துள்ளார்.நிலாக் கவிதைகள் அவருடைய சிறந்த படைப்பு .நிலவைப் பல வகையில் வர்ணித்து எழுதிய கவிதைகள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன.
அவர் ஒருநாள் தன நண்பர்களுடன் ஒரு காட்டிற்கு பொழுது போக்க சென்றார்.காட்டில் அவருக்கு வழி தவறிவிட்டது.தேடிப்பர்ர்த்தும் நண்பர்களைக் காண முடியவில்லை.காட்டில் மனம் போன  போக்கில் அவர் நடந்தார்.அவருக்கு மிகுந்த களைப்பு ஆகி விட்டது.கடுமையாய் பசியும் எடுக்க ஆரம்பித்தது.சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை.அதற்குள் இரவும் வந்துவிட்டது.அவர் ஒரு மரத்தில்  ஏறி சாய்ந்து கொண்டார்.அப்போது ஆகாயத்தில் பூரண நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது.வழக்கமாக நிலவைப் பார்த்தவுடன் அவருக்கு ஏற்படும் பிரமிப்பு இன்று அவருக்கு ஏற்படவில்லை.வயிறறுப் பசி ஒன்றுதான் அவர் நினைவில் இருந்தது.வேறு வழியில்லாமல் மீண்டும் அவர் நிலவைப் பார்த்தபோது அந்த நிலவு அவருக்கு ஒரு ரொட்டித் துண்டுபோலக் காட்சி அளித்தது.அதை நினைத்தவுடன் அவருக்கு சிரிப்பு வந்தது.நிலவு பற்றி  அழகிய பல கருத்துக்களை எழுதிய தனக்கு இன்று நிலவு ஒரு ரொட்டித் துண்டு போலத் தோன்றுகிறதே என்று நினைத்தார்.ஆம்,பசி வந்தவனுக்குக் காணும் பொருள் யாவும் உணவுப் பொருளாய்க் காட்சி அளிப்பதில் வியப்பேதுமில்லையே!
உண்மையில் எந்தப் பொருளையும் நாம் அதன் உண்மைத் தன்மையில் பார்ப்பதில்லை.நம் மனம் அதை எப்படி உருவகிக்கிறதோ அப்படித்தான் பார்க்கிறோம்.மனதின் விந்தை இது.

இறந்தவன்

0

Posted on : Saturday, September 03, 2011 | By : ஜெயராஜன் | In :

மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து  வரப்பட்டான்.அவன் பிரச்சினை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார்,''அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான்.எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான்.என்ன சொல்லி சமாதானப் படுத்தினாலும்  அதை ஏற்க மறுக்கிறான்.அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம்.''மருத்துவரும்,''இது ஒன்றும் பெரிய விசயமில்லை அவனை எளிதில்  நான் சரி செய்து விடுவேன்,''என்றார்.பின் அவர் அவனிடம்திருபி கேட்டார்,''இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து  இரத்தம் வருமா?''அவன் சொன்னான்,'வராது,'மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது.அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மருத்துவர்,''பார்த்தாயா,உன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது.எனவே நீ இறக்கவில்லை.புரிகிறதா?''என்று கேட்டார்.அவன் மிக அமைதியாக சொன்னான்,''இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன்.இப்போதுதான் தெரிந்து கொண்டேன்,இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்.''மருத்துவர் மயங்கி விட்டார்.

தூதன்

0

Posted on : Saturday, September 03, 2011 | By : ஜெயராஜன் | In :

''கடவுளின் தூதன் நான்''என்று கூறிக் கொண்டிருந்த ஒருவனை கலீப் ஓமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.அவன் ஓமரிடம் சொன்னான்,''நபிகள் நாயகம் தூதராக வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன.அதற்குள் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.எனவே புதிய செய்திகளுடன் என்னைத் தூதராக  இறைவன்  அனுப்பி இருக்கிறார்.''ஓமருக்கு கோபம் வந்துவிட்டது.அவர் தன ஆட்களிடம் அவனை உடைகளின்றி ஒரு தூணில் கட்டி வைத்து உதைக்கச் சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து அவனை வந்து பார்ப்பதாகக் கூறிச் சென்றார்.அதேபோல் அவர் வந்தபோது அவன் உடலெங்கும் ரத்தக் காயங்களுடன் பலமின்றி காணப்பட்டான்.ஓமர் அவனிடம்,''இப்போது என்ன சொல்கிறாய்?''என்று கேட்டார்.அவன் சிரித்துக் கொண்டே,''நான் கடவுளிடமிருந்து வரும்போது அவர்,'என்னுடைய தூதர்கள் அனைவரும் இதுவரை துன்புறுத்தப்  பட்டிருக்கிறார்கள் .அதுபோல நீயும் துன்புறுவாய் அதைக் கண்டு அஞ்சிவிடாதே,'என்று கூறினார்.நீங்கள் அதை உறுதி செய்துள்ளீர்கள்.''என்று கூறினான்.அப்போது பக்கத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த கைதி ஒருவன் கோபத்துடன்,''அவன் சொல்வதை நம்பாதீர்கள்.நபிகளுக்குப் பிறகு நான் எந்த தூதுவரையும் அனுப்பவில்லை.'' என்று கத்தினான்.

சிரித்தால் தப்பில்லை

0

Posted on : Friday, September 02, 2011 | By : ஜெயராஜன் | In :

தந்தை கேட்டார்,''மகனே ,தேர்வில் என்ன மதிப்பெண் பெற்றுள்ளாய்?''மகன் சொன்னான்,''நூறு மார்க் அப்பா,''தந்தைக்கு மகிழ்ச்சி.''எந்தப் பாடத்தில் நூறு மார்க் எடுத்துள்ளாய்?''மகன் சொன்னான்,''ஐந்து பாடத்திலும் சேர்த்து.''
**********
''நேற்று இரவு நான் இல்லாதபோது என் வீட்டிற்கு ஒரு திருடன் வந்துவிட்டான்.என் மனைவி அவனை அடித்து நொறுக்கி விட்டாள். அவன் அலறி அடித்து ஓடி விட்டான்.''என்றான் ஒருவன் தன நண்பனிடம்.நண்பன் சொன்னான்,''பரவாயில்லை..உன் மனைவி தைரியம் மிக்கவர் போலும்,''  அவன் நண்பனின் காதருகே வந்து மெதுவாக சொன்னான்,''அப்படி இல்லை.அவள் பயந்தவள்தான்.ஆனால் இருட்டில் நான்தான் தாமதமாக வந்துள்ளேன் என்று நினைத்து விட்டாள்.''
**********
இரவு நேரத்தில் சற்று மங்கலான வெளிச்சத்தில் ஒருவன் சென்று கொண்டிருந்தபோது எதிரே இரண்டு குண்டர்கள் வருவதைப் பார்த்தவுடன் அவனுக்கு சற்று பயம் ஏற்பட்டது.அதில் ஒருவன் அவனிடம்,'சார்,ஒரு ஒருரூபாய் நாணயம் இருக்குமா?''என்று கேட்டான்.தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகுதே என்று எண்ணி ஆறுதலுடன், அதைக் கொடுத்தபோது அதை அவன்  சுண்டிவிட்டான்.''எதற்காக சுண்டுகிறீர்கள்?"என்று கேட்க அந்த குண்டன் சொன்னான்,''எங்கள் இருவரில் யார் உன் கடிகாரத்தை எடுத்துக் கொள்வது,பர்சை யார் எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்வதற்காகத்தான்.''
**********
''இன்று நடந்த பார்ட்டியில் சோமுவின் மனைவியை ஏன் முத்தம் இட்டீர்கள்?''என்று கணவனிடம் மனைவி கோபமாகக் கேட்டாள்.கணவன் சொன்னான்,''அவள் உன் தோழி உமாவிடம் உன்னைப் பற்றித் தவறாகப் பேசிக் கொண்டிருந்தாள்.அவள் வாயை அடைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை.''
***********
ஒரு புரோகிதர் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்து அதை அப்புறப்படுத்தக் கேட்டுக் கொண்டார்.அதற்கு அந்த ஆள் குறும்பாக,''புரோகிதரே,இறந்த அந்த கழுதைக்கு இறுதிச் சடங்குகளை முதலில் முடியுங்கள்,''என்றார்.புரோகிதரும்,''அதற்கென்ன,பேஷாகச் செய்து விடுகிறேன்.இருந்தாலும் அந்தக் கழுதையோட உறவினர்களுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா?அதுதான் உங்களிடம் சொன்னேன்.''என்றார்.
**********

நண்பன் அல்லவா!

0

Posted on : Friday, September 02, 2011 | By : ஜெயராஜன் | In :

தையல் கடை வைத்திருக்கும் தன நண்பனிடம் ஒருவன் தன சட்டையைத் தைத்துக் கொடுக்கச் சொல்லி வந்தான்.தையல் கடைக்காரன் சொன்னான்,      ''நான் எல்லோரிடமும் ஒரு சட்டை தைக்க இருநூறு ரூபாய் வாங்குகிறேன்.ஆனால் நீ என் நண்பன் அல்லவா?அதனால் நூற்றி ஐம்பது ரூபாய் கொடு போதும்,''.நண்பன் சொன்னான்,''நான் வழக்கமாக என் சட்டையைத் தைப்பதற்கு எழுபது ரூபாய் தான்  கொடுப்பேன்.ஆனால் நீ என் நண்பன் அல்லவா?அதனால் நான் நூறு ரூபாய் தருகிறேன்,''வேறு வழியின்றி தையற்காரனும் சம்மதித்தான்.
**********
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக அவன் மனைவி நீதி மன்றத்தில் சாட்சி கூற வந்தாள்.அந்தப் பெண் விபசாரத்தைத் தொழிலாகக் கொண்டவள்.அவள் சாட்சியத்தில் கொலை நடந்ததாகக் கூறப்படும் அன்று இரவு தன கணவர் தன்னுடன் வீட்டில் இருந்ததாகக் கூறினாள்.கொலை  நடந்த இடமோ விபச்சார விடுதி.அரசுத் தரப்பில் ஆஜரான முன்னணி வக்கீல் அந்தப் பெண்ணிடம்,,''அன்று இரவு தொழில் செய்யும் இடத்துக்கு நீ போகவில்லையோ?''என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு அவள்,''நான் பகலில்தான் என் தொழிலை
செய்வேன்,''என்றாள்.அதற்கு வக்கீல்,''அது எப்படி?உன் வாடிக்கையாளர்கள் இரவில்தானே வருவார்கள்?''என்று சீண்டினார்.அதற்கு அந்தப் பெண் நிதானமாகப் பதில் கூறினாள்,''திருடர்களும் பொறுக்கிகளும்தான் இரவில் போவார்கள்.உங்களைப்போல கௌரவமானவர்கள் பகலில்தான் வருவார்கள்.''
**********

சுயநலம்

0

Posted on : Thursday, September 01, 2011 | By : ஜெயராஜன் | In :

உலகம் மனிதனின் உள்ளத்திலுள்ள இரக்கத்தினால் நடப்பதில்லை.அது அவனுடைய வலிமையினால் நடக்கிறது.மனிதன் வெறும் அன்பினால் வாழ்வதில்லை.அவன் மற்றவர்களைத் தோல்வியுறச் செய்து வாழ்கிறான். மனிதன் இவ்வுலகில் பாடுபடுவதெல்லாம் சுயநலத்துக்காகத்தான்.தியாகம் பற்றிய கதைகள் கோவிலுக்குப் பொருத்தமானவை.ஆனால் வாழ்க்கை என்பது கோவில் அல்ல;போர்க்களம்.
மரம் செடி கொடிகளின் வேர் பக்கத்திலுள்ள ஈரத்தை நாடிச் செல்வதுபோல  மனிதரும் தனது சுய நலத்துக்காகப் பிறரை ஆதாரமாகக் கொள்கின்றனர். இதைத்தான் உலகம் அன்பு,நட்பு,காதல் என்று கூறுகிறது.ஆனால் இது ஒவ்வொருவரும் தம்மிடமே கொள்ளும் அன்புதான்.ஒரு புறம் ஈரம் வற்றிவிட்டால் மரங்களும் வாடி விடுவதில்லை.அவற்றின் வேர்கள் வேறொரு புறத்தில் எங்கே ஈரம் என்று தேடுகிறது.அருகில் இருந்தாலும் சரி,தொலைவில் இருந்தாலும் சரி,அந்த ஈரத்தைத் தேடிக் கண்டு பிடித்து பசுமையாக இருக்கின்றன.
**********
எதுவும் தொலைவிலிருந்து பார்க்கப் பயங்கரமாகத் தோன்றுகிறது. உண்மையில் அது அச்சம் தருவதல்ல.சாவும் அப்படித்தான்.
**********
வாழ்க்கை எப்போதும் குறை உள்ளதாகத்தான் இருக்கிறது.அப்படி அது இருப்பதில்தான் அதன் இனிமை நிரம்பியிருக்கிறது.
**********
   மனிதன் தன்னை அறியாமலேயே தன்னைச் சுற்றியே வளைய  வருகிறான்.பல ஊர்களை நீர்மயமாக்கி நெடுந்தூரம் பிரளயமாகப் பரவும் பெரு வெள்ளத்தைக் காட்டிலும் தன கண்ணில் வடியும் கண்ணீர்தான் அவனுக்கு அதிக முக்கியமாகத் தோன்றுகிறது.
**********
                                            --யயாதி என்ற நூலில் விஷ்ணு சகாராம் காண்டேகர்.

நிந்தனை

1

Posted on : Thursday, September 01, 2011 | By : ஜெயராஜன் | In :

உன்னை நிந்திப்பவர்கள் உன்னைச் சரியாகப் புரிந்து கொலவில்லை என்றுதான் பொருள்.உன்னைப் புரிந்து கொண்டவர்கள் உன்னை நிந்திப்பதில்லை.உன் நண்பர்களும் உன் பகைவர்களும் உன்னைப்பற்றி என்ன எண்ணுவார்களோ,அதுதான் நீ என்று எண்ணினால் உன்னால் உன்னையே அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.ஒவ்வொருவரும் தன வழியைத் தானேதான் காண வேண்டும்.புத்தரின் வழி புத்தருக்கு மட்டுமே. பெரியோர்களைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் அந்த நேரத்தில் தங்கள் மன உளைச்சலுக்கு அதன் மூலம் வடிகால் தேடுவார்களே தவிர அதிலே உண்மையான நாட்டம் இல்லாதவர்கள்தான்.
                                                            --சூபி ஞானி மரூப்

மனப்பக்குவம்

0

Posted on : Wednesday, August 31, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண் ஜென் ஞானி தன பயணத்தில் ஒருநாள் இரவு ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.அந்த ஊர்க்காரர்களுக்கு ஜென கொளகைக்காரகளைக் கண்டாலே பிடிக்காது.அந்த பெண் துறவியும் ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி தங்க இடம் கேட்டார்.ஒருவரும் இடம் தராததுடன் எல்லோரும் கதவை சாத்திவிட்டனர்.வேறு வழியில்லாததால் கிராமத்தின் வெளியே தங்க நேர்ந்தது.அவர் ஒரு பழ மரத்தடியில் தங்கிக் கொண்டார்.கடுமையான குளிர் .காட்டு விலங்குகள் வேறு கத்திக் கொண்டிருந்தன.களைப்பின் மிகுதியால்  சற்றே கண்ணயர்ந்து தூங்கினார்.நள்ளிரவில் குளிர் தாங்க முடியாது விழித்துக் கொண்டார்.வானத்தில் முழுநிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.மரத்திலிருந்து மணமுடைய மலர்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.வயலில் செடிகள் காற்றுக்கு அழகாக ஆடிக் கொண்டிருந்தன.இந்த மனோரம்மியமான காட்சிகளைக் கண்டு மனம் மயங்கினார் அந்தத் துறவி.மறுநாள் காலை அவர் ஒவ்வொருவர் வீடாகச் சென்று அவர்கள் தனக்கு தங்க இடம் கொடுக்காததற்கு நன்றி கூறினார்.கிராமத்து மக்கள் புரியாமல் விழிக்க அவர் சொன்னார்,''உங்களில் யாரேனும் தங்க இடம் கொடுத்திருந்தால் நேற்று இரவு இயற்கையின் அழகினை அள்ளிப் பருகியிருக்க மாட்டேன்.தங்க நிலவினை காணவும் , மலர்களின் மணத்தை அறியவும், மூடுபனியை ரசிக்கவும் வயல்செடிகளின் நாட்டியத்தையும் காண வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி,''எந்த சூழ்நிலையிலும் இன்பம் அடையும் மனப்பக்குவம் தான் ஜென் வழிமுறைகள்.

நேசத்திற்குரியவர்

0

Posted on : Wednesday, August 31, 2011 | By : ஜெயராஜன் | In :

குத்துச் சண்டையில்பிறரை வீழ்த்துபவனைவிட கோபம் வரும்போது தன்னைத் தானே அடக்கிக் கொள்பவனே வலிமை வாய்ந்தவன் ஆவான்.
உங்களில் ஒருவனுக்கு நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும்.அப்போதும் கோபம் குறையாவிடில் படுத்துக் கொள்ளட்டும்.எவர் பழிவாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்து விடுகிறாரோ அவரே இறைவனின் நேசத்திற்கு உரியவர் ஆவார்.
                                                   --அண்ணல் நபிகள் நாயகம்.

பெரிய குற்றம்

2

Posted on : Monday, August 29, 2011 | By : ஜெயராஜன் | In :

'தாவோ 'தத்துவத்தின் தந்தை லா வோ த்சு சீனாவின் பெரிய ஞானி.அவர் வாழ்ந்தபோது இருந்த  அரசர் ஒருநாள் அவரிடம் வந்து ,''நீங்கள் பெரிய ஞானி நீங்கள் என் அரசவையில் நீதிபதியாக இருந்தால் எனக்குப் பெருமையாக இருக்கும்,''என்றார்.ஞானி எவ்வளவோ மறுத்து,பின்னால் வருத்தப்படக்கூடாது என்று சொன்ன போதிலும்  அரசன் மிகவும் வற்புறுத்தவே அவரும் ஒத்துக் கொண்டார்.முதல் நாள் ஒரு வழக்கு வந்தது. பணக்காரன் ஒருவன் வந்து,''இவன் என் வீட்டில் புகுந்து திருடி விட்டான்.இவனுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்,''என்று வேண்டிக் கொண்டார்.ஞானியும் வழக்கை விசாரித்துவிட்டு,''திருடியவனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை.இந்தப் பணக்காரனுக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை,''என்று தீர்ப்புக் கூறினார்.அரசனே இந்தத் தீர்ப்பைக் கேட்டுத் திடுக்கிட்டான்.பணக்காரனோ அலறிக்கொண்டே,''இது என்ன அநியாயமான தீர்ப்பு?''என்று கேட்டான்.ஞானி சொன்னார்,''ஒருவனைத் திருடனாக்கியது நீ செய்த குற்றம்.இவன் வறுமைக்கு நீதான் காரணம்.இவனாவது ஒருவனிடம்தான் திருடியிருக்கிறான்.நீயோ பலருடைய சொத்தைத் திருடியுள்ளாய்.ஏழைகளின் உழைப்பை நீ திருடியுள்ளாய்.நீ செய்த குற்றங்கள் இரண்டு.ஒன்று பிறர் உழைப்பத் திருடியது.மற்றொன்று நல்லவன் ஒருவனைத் திருடத் தூண்டியது.நியாயமாகப் பார்த்தால் உனக்குக் கூடுதல் தண்டனை தந்திருக்க வேண்டும்.நான் இரக்கம் உடையவன்.அதனால் உனக்குக் குறைந்த தண்டனை தான் கொடுத்திருக்கிறேன்,''அவர் அதற்குப்பின்னரும் நீதிபதியாய் இருந்திருப்பார் என்று  எண்ணுகிறீர்களா?

எதிர்த்துப்பேசு

0

Posted on : Monday, August 29, 2011 | By : ஜெயராஜன் | In :

ஊருக்கு வந்த துறவியிடம் ஒருவன் சொன்னான்,''இந்த ஊரில் என்னை எல்லோரும் முட்டாள் என்று சொல்கிறார்கள் நான் என்ன சொன்னாலும் சிரிக்கிறார்கள்.என் பிரச்சினை தீர ஒரு வழிசொல்லுங்கள்.துறவி சொன்னார்,''நீ யார் எது பேசினாலும் அதை மறுத்துப்பேசு.யாரவது ஒருவனை நல்லவன் என்று சொன்னால் நீ தீயவன் என்று சொல்.கடவுள் உண்டு என்றால்  இல்லை என்று சொல்.ஏதாவது ஆணித்தரமாக யாராவது பேசினால் நிரூபிக்க முடியுமா என்று கேள்.''அவன் துறவியிடம் கேட்டான்,''அவர்கள் நிரூபித்து விட்டால் நான் முட்டாளாகிவிடுவேனே?''துறவி சிரித்துக்கொண்டே சொன்னார்,''யாராலும் நிரூபிக்க முடியாது.இந்த பிரபஞ்சம் மர்மமானது.வாழ்க்கை மர்மமானது.இதில் யாரும் எதையும் நிரூபிக்க முடியாது.பயப்படாதே.''அவன் துறவி சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.யார் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசினான்.எதைச்சொன்னாலும் நிரூபிக்கச் சொன்னான்.ஒருவராலும் அவனிடம் பேச முடிய வில்லை.ஊரில் அவனுக்கு மரியாதை கூடத் துவங்கியது.''அவன் இப்போது பெரிய அறிவாளி ஆகி விட்டான்,''என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்
                                       --கோகோல் என்ற இரஷ்ய எழுத்தாளரின் கதை.

இதயமும் மூளையும்

0

Posted on : Saturday, August 27, 2011 | By : ஜெயராஜன் | In :

இந்த உலகம் முழுவதும் அன்பினால் செலுத்தப்படவில்லை.அது தந்திரத்தால் செலுத்தப்படுகிறது.இந்த உலகில் வெற்றி பெற உங்களுக்கு அன்பு தேவையில்லை.உங்களுக்குக் கல்லாகிப் போன ஒரு இதயமும் கூரிய புத்தியும் தான் தேவை.சொல்லப்போனால் உங்களுக்கு இதயமே தேவையில்லை.ஏனெனில் நீங்கள் வளரும் முறை,கலாச்சாரம்,சமுதாயம் ஆகியவை அன்பு செலுத்தும் திறனைக் கொன்று விட்டன.இதயம் உள்ள மனிதர்கள் நசுக்கப்பட்டு சுரண்டப்பட்டு அடக்கியாளப் படுகின்றனர்.இந்த உலகம் தந்திரக்காரர்களால்  இதயமில்லாத கொடூரமானவர்களால் நடத்திச் செல்லப்படுகிறது.எனவே வளரும் பிள்ளையும் தனது இதயத்தை இழக்கும்படி இந்த சமூகம் செய்கிறது.எனவே அவனது சக்தி முழுவதும் மூளையை நோக்கி செலுத்தப்படுகிறது.இதயம் அலட்சியப்படுத்தப் படுகிறது. இதயம் எப்போதாவது ஏதாவது சொன்னாலும்,அது உங்கள் செவியை வந்து அடைவதில்லை.உங்கள் தலையில்,மூளையில் ஒலிஅதிகம் இருப்பதால் இதயத்தின் குரல் எழும்பாது.மெல்ல மெல்ல இதயம்,அது அலட்சியப் படுத்தப் படுவதால் சொல்லுவதை நிறுத்தி மௌனமாகி விடுகிறது.சமூகத்தைப் புத்தி நடத்திச் செல்கிறது.அன்பு நடத்திச் சென்றால் நாம்,முற்றிலும் மாறுபட்ட,அதிக அன்பு கொண்ட,குறைந்த வெறுப்பு கொண்ட,போர்களற்ற  உலகில் வாழ்ந்து கொண்டிருப்போம்.அழிக்கும் முறைகளை உருவாக்குவதை என்றும் இதயம் ஆதரிக்காது.அது வாழ்விற்காக மட்டுமே உயிர்க்கிறது; துடிக்கிறது.

உயிருள்ள புத்தர் .

0

Posted on : Saturday, August 27, 2011 | By : ஜெயராஜன் | In :

கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த  ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது.அன்று இரவு  கடுங்குளிர்..கிழவரால்  குளிரைத் தாங்க முடியவில்லை.மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார்.மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கிழவரிடம்,''நீங்கள் என்ன செய்கிறீர்கள்?உங்களுக்குப் பைத்தியமா?தெய்வத்தையே எரித்து விட்டீர்களே''என்று கோபத்தில் கதறினார்.உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார்.அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது,அக்கிழவர் சொன்னார்,''நான் எலும்புகளைத் தேடுகிறேன்.நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண்டுமே?''கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார்.மறுநாள் காலை அக்கிழவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.அக்கிழவர் அங்குள்ள ஒரு மைல் கல்லின் முன் அமர்ந்து பூக்களைத் தூவி,''புத்தம் சரணம் கச்சாமி,''என்று  பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.குரு அவர் அருகே சென்று,''என்ன செய்கிறீர்கள்?மைல் கல்தான்  புத்தரா?''என்று கேட்டார்.கிழவர் சொன்னார், ''மரம் புத்தராகும்போது மைல் கல் புத்தராகக் கூடாதா?நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது,என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான்.அந்த மரச்சிலைகள் உயிரற்றவை.அந்த மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்களே?'

மனைவிக்கு பயப்படாதவன்

1

Posted on : Friday, August 26, 2011 | By : ஜெயராஜன் | In :

அக்பர் ஒருநாள் பீர்பாலிடம் மனைவிக்கு பயப்படாத கணவன் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.பீர்பாலும் தனக்குத் தெரிந்தவரை யாரும் அப்படியில்லை என்றார்.அக்பர்,''பீர்பால்,இதோ.ஒரு வெள்ளைக்குதிரையும், ஒரு கறுப்புக் குதிரையையும் எடுத்துக் கொள்.யாரேனும் விதிவிலக்கான ஆள் இருந்தால் அவனுக்கு அவன் விரும்பும் ஒரு குதிரையை அரசனின் பரிசு என்று சொல்லிக்கொடு ''என்றார்.பீர்பாலும் குதிரைகளுடன் பல ஊர்களுக்கு சென்று ஒவ்வொருவரை விசாரித்தும் அதுமாதிரியான ஆள் அகப்படவில்லை. ஒரு குதிரைக்காக யாரும் தங்கள் வாழ்வைப் பாழ்படுத்திக்  கொள்ள  விரும்பவில்லை.இறுதியில் சோர்ந்துபோய் ஒரு மல்யுத்த வீரனைக் கண்டு அவனிடம் இக்கேள்வியைக் கேட்டார்.அவன் இவரைக் கை குலுக்கிய விதத்திலிருந்தே அவன் நிச்சயம் மனைவிக்கு பயந்தவன் அல்ல என்று முடிவு செய்து,''எங்கே உன் மனைவி?''என்று கேட்க அவனும் தன மனைவியை நோக்கிக் கையை காட்டினான்.அங்கு மிகவும் சிறிய உருவம் கொண்ட மெலிந்த ஒரு பெண் சமைத்துக் கொண்டிருந்தாள்.பீர்பால் இதை மேற்கொண்டு விசாரிக்க வேண்டியதில்லை என்று கருதி,''இந்த இரண்டு குதிரைகளில் ஒன்றை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மனைவிக்குப் பயப்படாத உனக்கு இது அரசனின் பரிசு,''என்றார்.அவன் கறுப்புக் குதிரையை தேர்ந்தெடுத்தான்.அப்போது அவன் மனைவி உரத்த குரலில் கறுப்புக் குதிரை வேண்டாம்,வெள்ளை வேண்டும் ''என்றாள்.அவன் கருப்பே இருக்கட்டும் என்று சொல்ல அவள் மீண்டும் கத்தினாள்,''நீ கறுப்புக் குதிரையை எடுத்தால் நடப்பதே வேறு.உன் வாழ்வை நரகமாக்கிவிடுவேன்,ஜாக்கிரதை,''வீரனும்,''சரி,சரி,நான் வெள்ளைக் குதிரையையே எடுத்துக்  கொள்கிறேன்.நீ கத்தாமல் இரு,,''என்றான்.பீர்பால் உடனே ,''உனக்கு எதுவும் கிடையாது.நீ தோற்று விட்டாய்.நீயும் மனைவிக்குப் பயந்தவன்தான்.இங்கு விதிவிலக்கானவர் யாருமே இல்லை.''என்றார்.

தனித்தன்மை

0

Posted on : Friday, August 26, 2011 | By : ஜெயராஜன் | In :

இரண்டு விதமான உயர்வு மனப்பான்மைகள் உள்ளன.ஒன்றில் நீங்கள் உங்கள் தாழ்வு மனப்பான்மையை மூடி மறைக்கிறீர்கள்.நீங்கள் ஒரு முகமூடியைப் பயன்படுத்துகிறீர்கள்.முகமூடிக்குப் பின்னே தாழ்வு மனப்பான்மை உள்ளது.இந்த உயர்வு மனப்பான்மை மேலோட்டமானது. ஆழத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதால் இது உண்மையான உயர்வு மனோபாவம் கிடையாது.தாழ்வு மனோபாவம் இல்லாமையே இன்னொரு உயர்வு மனப்பான்மை ஆகும்.நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்காத வரை எப்படித் தாழ்வானவராக இருக்க முடியும்?இவ்வுலகில் நீங்கள் மட்டும் இருந்தால் உங்களை நீங்கள் யாருடன் ஒப்பிட முடியும்?எப்படி நீங்கள் தாழ்ந்தவராக இருக்க முடியும்?தனியே இருக்கும்போது நீங்கள் உயர்ந்தவரும் அல்ல'தாழ்ந்தவரும் அல்ல.இதுதான் ஆன்மாவின் உயர்ந்த தன்மை.அது யாருடனும் ஒப்பிடுவதில்லை.நீங்கள் உங்களை யாருடனும் எதற்கும் ஒப்பிட வேண்டாம்.நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்.நீங்கள்  சிறப்பானவர்.

0

Posted on : Thursday, August 25, 2011 | By : ஜெயராஜன் | In :

மூன்று நண்பர்கள் ஒரு உணவகத்துக்கு சென்று மூன்று காபி கேட்டதும் மூன்று பேர் முன்னரும் காபி வைக்கப்பட்டது.அப்போது கூட்டமாக அங்கு திரிந்து கொண்டிருந்த ஈக்களில் மூன்று மூன்று பேரின் காபியிலும் விழுந்தது.ஒருவன் வெறுத்துப்போய் தன கிளாசைத் தள்ளி வைத்தான்.அடுத்தவன் ஈயை வெளியே எடுத்தான் தூக்கி எறிந்தான் காபியைக் குடித்தான்.மூன்றாமவன் ஈயை வெளியே எடுத்தான்.அந்த ஈயை கிளாசுக்குல்லேயே உதறினான்.அவன் ஈயைப் பார்த்து சொன்னான்,''நீ குடித்ததைத் துப்பிவிடு என் காபியில் உனக்குப் பங்கு தர முடியாது.''

மூன்று கால்கள்

0

Posted on : Thursday, August 25, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தன நண்பரின் வீட்டிற்குச் சென்றார்.அங்கு ஒரு பன்றி வளர்க்கப்படுவதைக் கண்டார்.உடனே நண்பர் அப்பன்றியின் குணாதிசயங்களைப் பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தார்,''ஒரு முறை வீட்டில் ஒரு பகுதியில் தீப்பிடித்து விட்டது உடனே இந்த பன்றி அலாரம் அடித்து எல்லோரும் வந்து பெரும் சேதத்தைத் தவிர்க்க முடிந்தது.இன்னொரு முறை தொட்டியில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த என் பையனைக் காப்பாற்றியது.ஒரு முறை வந்த திருடனைக் கடித்ததில் அவன் ஓடியே விட்டான்.''வந்தவர்,''கேட்கவே மிக மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.அது சரி அது ஏன் மூன்று கால்களுடன் இருக்கிறது?''என்று கேட்டார்.நண்பர் சொன்னார்,''என்னதான் இருந்தாலும் ஒரு பன்றியை முழுதாக ஒரே நாளில் சாப்பிட முடியாதல்லவா?''

நீங்கள் யார்?

0

Posted on : Wednesday, August 24, 2011 | By : ஜெயராஜன் | In :

போரில் இறந்த தனது மகன் அபிமன்யுவை நினைத்து ஏங்கினான் அர்ஜுனன். அவனை சொர்க்கத்திலாவது போய் நேரடியாக சந்தித்தால்தான் மனக் கவலை தீருமெனக் கண்ணனிடம் புலம்ப கண்ணனும் அர்ஜுனனை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றான்.அப்போது அங்கு அபிமன்யு மகிழ்வுடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தான்.மனம் மகிழ்ந்து அர்ஜுனன் அவனிடம் செல்ல,அபிமன்யுவோ,''நீங்கள் யார்/?''என வினவினான். அதிர்ச்சியடைந்தவனாக அர்ஜுனன் கண்ணனை நோக்கினான்.கண்ணன் அமைதியாக சொன்னான்,''அர்ஜுனா,அபிமன்யு பூலோகத்தில் உன்னுடன் வாழ வேண்டிய காலம் வரை வாழ்ந்தான்.அக்கடமை முடிந்ததும் உனக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தம் முடிந்து விடுகிறது.எனவே அவனுக்கு உன்னை இப்போது தெரியாது.''

அச்சம்

0

Posted on : Wednesday, August 24, 2011 | By : ஜெயராஜன் | In :

அந்நிய நாட்டின் மீது இருமுறை போர் தொடுத்து வெற்றி கண்ட ஒரு மன்னன்,தோற்றவன் எந்த நேரமும் பழி வாங்கலாம் என்ற அச்சத்தில் இருந்தான்.ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடப்போனான்.துறவி ஒருவரை சந்தித்தான்.துறவியிடம் தன பிரச்சினை குறித்து சிறிது நேரம் பேசி விட்டு, ''உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?''எனக் கேட்டான்.''என்னுடைய அடிமையின் அடிமை நீ.நீ எனக்கு எப்படி உதவ முடியும்?''என்று கேட்டார் துறவி.வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு,''எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''என்று கேட்டான்.துறவி சொன்னார்,''என்னிடம் ஒரு அடிமை இருக்கிறான்.அவன் உனக்கு எஜமானன்,''மன்னனும்,''உங்களிடம் அடிமையாயிருப்பது யார்?''எனக் கேட்டான்.''அச்சம் ''என்றார் துறவி.தலை குனிந்தான் மன்னன்.பதவியில் இருப்பவர்கள் பயத்துக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.அந்த அச்சத்தின் காரணமாகவே பதவியையும் விடாமல்  பற்றிக் கொள்கிறார்கள்.

தர்மம்

0

Posted on : Tuesday, August 23, 2011 | By : ஜெயராஜன் | In :

பதிமூன்று ஆண்டு காலம் வனவாசம் என்று காட்டில் பொறுமையாக இருந்த தர்மரைப் பார்த்து பாஞ்சாலி துளைத்தெடுத்தாள்,''பதிமூன்று ஆண்டுகள் காத்திராமல் இடையில் நீர் போய் ஏன் துரியோதனனைக் கொல்லக் கூடாது? சத்தியம்,பொறுமை என்று தர்மத்தைக் கட்டி அழுகிறீரே,நீர் காப்பாற்றும் தர்மம் உம்மைக் காப்பாற்றவில்லையே?காட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டதே?''தர்மர் அமைதியாகச் சொன்னார்,''பெண்ணே,தர்மம் என்னைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் நான் தர்மத்தைக் காப்பாற்றவில்லை.  அப்படிச் செய்தால் அது வியாபாரம்.நான் தர்ம வியாபாரி அல்ல.தர்மத்தைக் காப்பது என் பிறவிக்கடன்.தர்மங்கள் என்னைக் காத்தாலும்,காக்காது போனாலும் அவற்றைக் காப்பது என் கடமை.அதிலிருந்து நான் நழுவவே முடியாது.''

குயில்

0

Posted on : Tuesday, August 23, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு குரு தினசரி காலையில் தன சீடர்களுக்கு போதனை செய்வதுண்டு.ஒரு நாள் காலை வழக்கம்போல தன போதனையை ஆரம்பித்தார்.அப்போது அங்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளையில் ஒரு குயில் வந்து அமர்ந்து கூவத் துவங்கியது.அந்த ரம்மியமான காலைப் பொழுதினிலே அந்தக் குயில் பாடியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.அனைவரும் அதன் இனிமையில் லயித்து விட்டனர்.சிறிது நேரம் பாடியபின் குயில் பறந்து சென்று விட்டது.குரு அப்போது சொன்னார்,''இன்றைய போதனை முடிந்துவிட்டது.''

ஊசியும் நூலும்

1

Posted on : Monday, August 22, 2011 | By : ஜெயராஜன் | In :

பார்வதியும் பரமசிவனும் வான வீதியில் சென்று கொண்டிருக்கையில் ஒரு வனத்தில் ஞானி ஒருவர் தன கிழிந்த ஆடையை ஊசி நூல் கொண்டு தைத்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.அவருக்கு ஏதேனும் வரம் கொடுக்க வேண்டும் என்று பார்வதி பரமசிவனை வேண்ட இருவரும் அவர் முன் நின்றனர். ஞானியும் அவர்களை வணங்கி அவர்கள் பசியாற தன்னிடமிருந்த காய்கனிகளைக் கொடுத்து அவர்கள் உன்ன ஆரம்பித்தவுடன் தொடர்ந்து உடைகளைத் தைக்க ஆரம்பித்தார்.உணவு உண்டு சிறிது நேரம் ஆகியும் ஞானி அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.பரமசிவன் உடனே அவரிடம் என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார்.சிவன் பார்வதியைத் தரிசித்ததைவிட பெரிய வரம் ஏதுமில்லை என்று ஞானி சொன்னார்.பார்வதி மீண்டும் வற்புறுத்த ஞானி சொன்னார்,''ஊசியின் பின்னே நூல் தொடர்ந்து செல்ல வரம் தாருங்கள்,''பார்வதி ஏமாற்றத்துடன் ,''அதுதான் ஊசியின் பின்னே நூல் வந்து கொண்டுதானே இருக்கிறது,''என்றார்.ஞானி சொன்னார்,''நியமங்களை சரியாக செய்து வந்தால்,கடவுளின் அருள் பின்னால் தானே வந்து கொண்டு தானே இருக்கும்.''

ஞானம்

0

Posted on : Monday, August 22, 2011 | By : ஜெயராஜன் | In :

ஞானம் பெற விரும்பிய ஒருவன் இறைவனிடம் சென்று ஞானம் பெற வழி  கேட்டான்.இறைவன் சொன்னார்,''அப்பா,இப்போது வெயில் மிக அதிகமாக இருப்பதால் தாகம் எடுக்கிறது எனக்கு முதலில் நீ கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,''அவனும் ஓடிச் சென்று முதலில் தென்பட்ட வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அழகிய இளம்பெண் கதவைத் திறந்தாள்.அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு அந்தப்பெண் மீது காதல் பிறந்தது.அந்தப் பெண்ணும்  சம்மதிக்கவே அவளைத் திருமணம் செய்து கொண்டு நான்கு பிள்ளைகளையும் பெற்றான்.ஒரு நாள் கடுமையான மழை பெய்தது.எங்கு பார்த்தாலும் தண்ணீர்.வீடுகள் அடித்து செல்லப்பட்டன.அவனும் தன மனைவியையும் குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு சென்றான் அப்படியிருந்தும் அவர்களைத் தண்ணீர் இழுத்துச் சென்று விட்டது.அடுத்து அவனையும் தண்ணீர் இழுத்தபோது,''கடவுளே,என்னைக் காப்பாற்று,''என்று கத்தினான்.அப்போது இறைவன் அவனிடம் கேட்டார்,''அப்பா,தாகத்துக்கு தண்ணீர் கேட்டேனே,என்ன ஆயிற்று?''

தேர்வு

0

Posted on : Sunday, August 21, 2011 | By : ஜெயராஜன் | In :

வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது.தந்தை தன நெருங்கிய நண்பரை அழைத்து தன மகனுக்குத் தான் ஒதுக்கிய அறையைக் காட்டி தான் அவன் எந்தத் துறைக்கு ஏற்றவன் என்பதைத் தேர்வு செய்யப்போவதாகக் கூறினார்.மேஜை மீது நான்கு பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டி,''என் பையன் பணத்தை எடுத்துக் கொண்டால் வியாபாரத் துறைக்கு ஏற்றவன்.பைபிளை எடுத்துக் கொண்டால் மத சேவைக்கு ஏற்றவன்.மது புட்டியை எடுத்துக்  கொண்டால் உதவாக்கரையாவான். துப்பாக்கியை எடுத்துக்  கொண்டால் அவன் கொள்ளைக்காரனாவான்.'' என்றார். அந்த அறைக்குள் வந்த மகன் என்ன செய்யப் போகிறான் என்பதை ஆவலுடன் இருவரும் மறைவிலிருந்து கவனித்தார்கள்.பையன் அறைக்குள் நுழைந்து இருக்கும்பொருட்களை நோட்டம் விட்டான்.மதுப் புட்டியைத் திறந்து வாயில் ஊற்றிக் கொண்டான்.பின் பணத்தை எடுத்துப்  பையில் போட்டுக் கொண்டான்.ஒரு கையில்  பைபிளையும் இன்னொரு கையில் துப்பாக்கியையும் எடுத்துக்  கொண்டான்.தந்தை உற்சாகத்தில் கத்தினார்,''என் மகன் மந்திரியாகப் போகிறான்.''
                                                                          ---குஷ்வந்த்சிங்

ஆபத்து இல்லா இடம்

0

Posted on : Sunday, August 21, 2011 | By : ஜெயராஜன் | In :

டெல்லியில் விலங்கு பூங்காவிலிருந்து இரண்டு புலிகள் வெளியே ஓடி விட்டன.ஆறு மாதங்களுக்குப்பின் அவை இரண்டும் பூங்காவிற்கே திரும்ப வந்தன.அப்போது ஒரு புலி இளைத்திருந்தது.ஒரு புலி நன்கு கொழுத்திருந்தது.இளைத்த புலி சொன்னது,''நான் தெரியாமல் ராஜஸ்தான் பக்கம் போய்விட்டேன்.அங்கு சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. தப்பித்தவறி ஏதாவது விலங்குகள் கிடைத்தாலும் அவையும் பஞ்சத்தில் சதை இல்லாமல் இருந்தன.இந்தப் பூங்காவிலாவது வேளா வேளைக்கு உணவு கிடைக்கும்.அதனால் திரும்பி வந்துவிட்டேன்.''கொளுத்த புலி தன கதையை சொன்னது,''முதலில் எனக்கு அதிர்ஷ்டம் தான்.நான் டெல்லி செக்ரடேரியட்டிற்குள் நுழைந்து விட்டேன்.ஒவ்வொரு நாள் மாலையும் வேலை முடிந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியே வரும்போது ஒரு ஆளைப் பிடித்துக் கொண்டு போய்விடுவேன்.ஆறு மாதமும் இவ்வாறு செய்து வந்தேன்.யாரும் என்னைக் கவனிக்க வில்லை.நேற்று ஒரு தவறு செய்து விட்டேன்.எல்லோருக்கும் தேநீர்,காபி கொண்டு வந்து கொடுக்கும் ஆளை அடித்துத் தின்று விட்டேன்.அப்போதுதான் எல்லோருக்கும் தெரிய வந்து என்னை விரட்டத் தொடங்கி விட்டார்கள்.ரத்த வெறி பிடித்த அவர்களிடம் அகப்படுவதை விட இந்த பூங்கா ஆபத்தில்லாத இடம் என்று ஓடி வந்து விட்டேன்.''
                                                                   குஷ்வந்த்சிங் ஜோக்ஸ்

பொருள் விளக்கம்

2

Posted on : Saturday, August 20, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் உபயோகப்படுத்தும் பல வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை.எனவே அதன் பொருள் நமக்குத் தெரியாமலேயே அவற்றை உபயோகிக்கிறோம்.உதாரணமாக சில வார்த்தைகள் அதன் பொருளுடன்;
வேணுகோபாலன்: வேணு என்றால் மூங்கில்.கோ என்றால் பசு.பாலன் என்றால் சிறுவன்.அதாவது மூங்கிலால் ஆன புல்லாங்குழல் ஊதி பசுக்களை கவர்ந்த சிறுவன் என்று பொருள்.
தாமோதரன்: தாம்பு என்றால் கயிறு.உதரன் என்றால் வயிற்றைக் கொண்டவன்.அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன். யசோதா கண்ணனைக் கயிறு கொண்டு கட்டிய கதை தெரியுமே!
நவநீதம்: நவம் என்றால் புதியது;நீதம் என்றால்  எடுக்கப்பட்டது..  காலையில் பசும்பாலில் உறை குற்றி மாலையிலேயே  தயிரைக் கடைந்து எடுக்கிற வெண்ணை தான் நவநீதம்.
நாராயணன்: நாரம் என்றால் தண்ணீர்.அயனம் என்றால் மிதப்பது.தண்ணீரில் மிதப்பவன்.நாராயணன் பாற்கடலில் பள்ளி கொண்டவர் அல்லவா?
அனுமான்: துண்டிக்கப்பட்ட முக வாய் உடையவன்.ஒரு முறை இந்திரன் வஜ்ராயுதத்தால் தாக்கியதால் முகம் துண்டிக்கப்பட்டது.
சரஸ்வதி: சரஸ் என்றால் பொய்கை.வதி என்றால் வசிப்பவள்.மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள்.
பாகுபலி: பாகு என்றால் தோள்கள்:உருக்கு போன்ற தோள்கள் படைத்தவன்.
காஞ்சி: கா என்றால் பிரம்மா:அஞ்சித என்றால் வழிபட்ட.பிரம்மா வழிபட்ட இடம் என்று பொருள்.

கலகல

0

Posted on : Saturday, August 20, 2011 | By : ஜெயராஜன் | In :

வீட்டுக்கு வந்த நண்பன் சொன்னான்,''அடேய் நண்பா!உன் மனைவி ஒரு அழகிய சித்திரம் போல இருக்கிறாள்.''கணவன் சொன்னான்,''நீ சொல்வது சரிதான் நானும் கூட அவளைத் தொங்கவிடலாம் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.''
**********
சர்கஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் அழுது கொண்டிருந்தான்.காரணம் கேட்டபோது அங்கு இருந்த யானை இறந்து விட்டதாகக் கூறினான்.''யானை மீது உனக்கு அவ்வளவு பாசமா?''என்று கேட்டபோது அவன் சொன்னான்,''இல்லை,அதைப் புதைப்பதற்கான குழியை நான்தான்  வெட்ட வேண்டும் என்று முதலாளி சொல்லி விட்டார்.''
**********
''நேற்று உணவு விடுதியில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டது,''என்று ராம் சொல்ல கோபால் என்னவென்று கேட்டான்.ராம் சொன்னான்,''என் காதலியை அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்கு நேற்று மாலை சென்றேன்.சாப்பிடும்போது அவள் உணவில் ஒரு பூச்சி கிடந்தது.உடனே அவள் சர்வரைப் பார்த்து,'இந்தப் பூச்சியைத் தூக்கி வெளியே எறியுங்கள்,' என்றாள்.உடனே சர்வர் என்னைத்தூக்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்துவிட்டான்.''
**********
கலா தன தோழியிடம் சொன்னாள்,''புதிதாக வந்திருக்கும் சேலை ஒன்றை என் கணவரிடம் சொல்லி வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.அவரை  மகிழ்ச்சி கொள்ளச் செய்ய அன்று அவருக்குப் பிடித்த உணவு வகைகளைத் தயாரித்தேன்.அவர் சாப்பிட்டபின்,அவரிடம்,''இம்மாதிரி உணவு சமைத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?'என்று கேட்டேன்.அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?''தோழி ஆர்வமுடன் என்ன சொன்னார் என்று கேட்க கலா சொன்னாள்,''உனக்கு விரைவிலேயே என் பெயரில் போட்டிருக்கும் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்கிறார்.''
***********
அம்மா கேட்டார்,''மகனே,இன்று தேர்வில் எத்தனை மார்க் வாங்கினாய்?'' மகன் சொன்னான்,''அம்மா,இன்று நான் நூறு மார்க் வாங்கியுள்ளேன்.''அம்மாவுக்கு ஆச்சரியம்.மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக் கொடுத்தவாறே அவனுடைய விடைத்தாள்களை  வாங்கிப் பார்த்தார்.அவன் ஐந்து பாடங்களில் மொத்தம் நூறு மார்க் வாங்கியிருந்தான்.
**********

இன்றைய தினம்

0

Posted on : Friday, August 19, 2011 | By : ஜெயராஜன் | In :

இன்றைய தினத்தையே நோக்குங்கள்.
    ஏனென்றால் அதுதான் வாழ்வின் ஜீவன்.
நேற்று என்பது வெறும் கனவாக இருந்தது.
    நாளை என்பதோ ஒரு மனத் தோற்றம்தான்.
இன்றைய தினத்தை நன்றாக வாழ்ந்தால்
    நேற்றைய தினம் ஒரு அற்புதமான கனவு.
நாளைய தினம் நம்பிக்கை நிறைந்த
    மனத்தோற்றமாகவும் மாறும்.ஆதலால்
இன்றைய தினத்தை நன்றாக நோக்குங்கள்.
    அது நம் விடியற்காலை வணக்கமாகட்டும்.
                                    --காளிதாசர்.

முட்டை

0

Posted on : Friday, August 19, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு முட்டையை வெளியிலிருந்து உடைத்தால் ஒரு உயிர் அழிக்கப்படுகிறது அதே சமயம் அந்த முட்டை உள்ளிருந்து உடைக்கப்பட்டால் ஒரு உயிர் வெளி வருகிறது.
******
''இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்றால் இத்தனை கோவில்கள் எதற்கு?''என்று ஒருவன் கேட்டான். ஆன்மீகவாதி  ஒருவர் சொன்னார்,''நம்மைச் சுற்றி முழுமையாகக் காற்று இருக்கிறது ஆனால் அதை உணர்வதற்கு நமக்கு காற்றாடி தேவைப்படுகிறதே!''
******
நாட்டின் தற்கொலை நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றின் பின்னணி,செய்த தவறுகளுக்காக இருக்காது.அவை சம்பந்தப்பட்ட அர்த்தமற்ற அதீத கற்பனைகளும் அவை விளைவிக்கும் துன்பங்களுமாகத்தான் இருக்கும்.
******
ஒரு செயலை செயலுக்காக செயலில் ஒன்றிச் செய்தலே கர்மயோகம்.அந்தச் செயலின் விளைவை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே ஒரு கர்ம யோகியின் வாழ்க்கை முறை.தன்னைவிட செயலே முக்கியம் என்கிற மனோநிலை ஒரு கர்மயோகியின் வாழ்க்கை நெறி.
******

எளிமையே வலிமை

0

Posted on : Friday, August 19, 2011 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் சில எளிய விஷயங்கள் தான் நம் வலிமைக்குக் காரணமாக இருக்கின்றன.அவற்றை அலட்சியப்படுத்துவதாலேயே நமக்குப் பல நோய்கள் வருகின்றன.
நாம் உணவு உண்டபின் செய்யக்கூடாத சில எளிய விஷயங்கள்;
*உணவு உண்ட உடன் சிகரெட் குடிக்கக்கூடாது.உணவு சாப்பிட்டவுடன் குடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிகரெட் குடிப்பதற்கு சமம்.இதனால் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் ஆகும்.
*உணவு உண்டவுடன் பழங்கள் சாப்பிடக்கூடாது.சாப்பிட்டால் வயிறு ஊதும்.எனவே ஓரிரு  மணி நேரம் உணவுக்கு முன்னரோ பின்னரோ சாப்பிடலாம்.
*உடனே தேநீர் அருந்தக்கூடாது.அதில் அமிலம் அதிகம் இருப்பதால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன்  சத்துக்கள் இறுகி ஜீரணம் கடினமாகும்.
*சாப்பிடும்போது பெல்ட் அணிந்திருந்தால் முடித்தவுடன் அதைக் கழட்டக் கூடாது .குடல் பிரச்சினைகள் வரும்.
*சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது.குளிக்கும்போது உடல் முழுவதும் அதிக இரத்தம் பாயும்.எனவே வயிற்றுக்கு வரும் இரத்தத்தின் அளவு குறையும்.எனவே ஜீரணம் பாதிக்கப்படும்.
*சாப்பிட்டவுடன் நடக்கக் கூடாது சிலர் சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடப்பதைப் பழக்கமாக வைத்துள்ளனர்.அது உணவிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதைப் பாதிக்கிறது.
*உணவை உண்டவுடன் தூங்கக்கூடாது.ஜீரணம் ஆவது கடினமாகும் வாயுத் தொல்லைகள் உருவாகும்.

பஞ்ச பாண்டவர்கள்

1

Posted on : Wednesday, August 03, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெரியவருக்கு ஐந்து பிள்ளைகள்.பஞ்ச பாண்டவர்கள்போல அவர்கள் வாழ வேண்டும் என நினைத்து அவர்கள் பெயரையே வைத்தார்.ஆண்டுகள்  பல கழித்து பையன்களைப் பற்றி நண்பர் ஒருவர் கேட்டபோது பெரியவர் சொன்னார்,''பேருக்குத் தகுந்த மாதிரியாவே இருக்காங்க,''என்றார் பெரியவர். நண்பர்,''அப்படியா,மிக்க மகிழ்ச்சி,''என்றார்.பெரியவர்,''மகிழ்ச்சி அடைய என்ன இருக்கு.பஞ்ச பாண்டவர்களைப்போலவே இவர்களும் சொத்து முழுவதையும்  சூதாட்டத்திலே விட்டுட்டாங்க.இவர்களைக் காப்பாற்ற கண்ணன்தான் வரவேண்டும்.''என்றார்.

பொன்மொழிகள்-20

0

Posted on : Wednesday, August 03, 2011 | By : ஜெயராஜன் | In :

தான் கூவுவதைக் கேட்பதற்காகத்தான் சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால் அதுதான் அகந்தை.
**********
அற்பப் பொருளுக்கும் மதிப்பு உண்டு.சிறு ஊசிதான் தையற்காரருக்கு உணவு அளிக்கிறது.
**********
பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்.
தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
**********
ஆண்களின் மனம் பளிங்காக இருக்கிறது.
பெண்களின் மனம் மெழுகாக இருக்கிறது.
**********
எது தேவை?
தீர்மானிக்க மனம்.
வழி வகுக்க அறிவு.
செய்து முடிக்கக் கை.
**********
ஆரோக்கியம் அற்புதமானது என்பதை
நோயுற்றுக் கிடக்கும்போதுதான் உணருகிறோம்.
**********
நாம் நல்ல வசதியுடன் இருக்கும்போது நண்பர்கள் நம்மைப்பற்றித் தெரிந்து கொள்கிறார்கள்.
நம்மிடம் வசதி குறையும்போதுதான் நாம் நம் நண்பர்களைப்பற்றித் தெரிந்து கொள்கிறோம்.
**********
ஒருவன் எப்போதும் வீரனாய் இருக்க முடியாது.ஆனால்
ஒருவன் எப்போதும் மனிதனாய் இருக்க முடியும்.
**********
ஒரு மனிதனின் இயல்பை அறிய வேண்டுமானால் அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப்  பாருங்கள்.
**********
குற்றம் என்னும் புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
**********

உருப்படாதவன்

0

Posted on : Tuesday, August 02, 2011 | By : ஜெயராஜன் | In :

நண்பர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்டனர்.ஒருவர் தான் நன்றாய் இருப்பதாகக் கூறிவிட்டு அடுத்தவரிடம் அவரைப்பற்றிக் கேட்க அவர் சொன்னார்,''எனக்கு நான்கு பையன்கள்.ஒருவன் டாக்டர்,அடுத்தவன் எஞ்சினியர்,இன்னொருவன் வக்கீல்.நான்காவது பையன்தான் உருப்படாமல் போய்விட்டான்.எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை.அவன் இப்போது பார்பராக இருக்கிறான்.''நண்பர் கேட்டார்,''அப்படிப்பட்ட பையனை வீட்டை விட்டுத் துரத்த வேண்டியதுதானே.''அவர் பதில் சொன்னார்,''அவனைத் துரத்திவிட்டு நாங்கள் என்ன செய்வது?அவன் ஒருவன் தானே எங்கள் வீட்டில் சம்பாதிப்பது.''
**********
பேருந்தில் ஒரே கூட்டம்.நிற்கக்கூட இடமில்லை.ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் கண்ணை இறுக மூடிக் கொண்டிருந்தான்.அருகில் இருந்த நண்பன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''எனக்கு இளகிய மனது.வயதானவர்கள் எல்லாம் நின்று கொண்டிருப்பதை கண் கொண்டு பார்க்க எனக்கு சகிக்கவில்லை.''
**********
''பாவம் ரவி,அவன் மிகுந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன்.''
'ஏன்,அவனைத்தான் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருக்கிறார்களே!'
''அதனால்தான் அவர்கள் ஏழைகளாய் ஆகிவிட்டனர்.''
**********
''என்ன உன் மனைவியைக் கடத்தி விட்டார்களா?கொஞ்சம் கூடப் பதட்டம் இல்லாமல் சாதாரணமாக சொல்கிறீர்களே?''
'அவள் அறுவையை யாராலும் ஒரு நாளைக்கு மேல் தாங்க முடியாது.''
**********

கெளரவமானவர்

0

Posted on : Tuesday, August 02, 2011 | By : ஜெயராஜன் | In :

பொது இடத்தில் தன்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதற்காக ஒருவன் மீது ஒரு பெண் வழக்கு தொடர்ந்தாள்.என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தினான் என்று கூறுமாறு வக்கீல் கேட்டார்.அந்தப்பெண் சொன்னாள்,''ரொம்ப அசிங்கமான வார்த்தைகள் அவை.கண்ணியமான எவரும்  அதைக் கேட்க விரும்ப மாட்டார்கள்,''வக்கீல் சொன்னார்,''அப்படியானால் நீதிபதி அருகில் சென்று அவருக்கு மட்டும் கேட்கும்படியாக சொல்லுங்கள்.''
**********
பேருந்தில் ஏறிய  நடுத்தர வயதைக் கடந்த ஒரு பெண் டிக்கெட் வாங்காமல் இருந்ததைக் கண்ட நடத்துனர் கோபத்துடன்,''யே கிழவி,ஏன் டிக்கெட் எடுக்கவில்லை?''என்று கேட்டார்.அந்தப்பெண்  கோபத்துடன்,''முதலில் மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்.கிழவி என்று ஏன் சொன்னாய்? வேண்டுமானால் அக்கா என்று சொல்,''என்று சொல்லியவாறு டிக்கெட்டுக்குரிய பணத்தைக் கொடுத்தாள்.பேருந்தில் இருந்த பயணிகள் அப்பெண்ணின் பேச்சைக் கேட்டு ரசித்தார்கள்..அடுத்த நிறுத்தத்தில் வாட்டசாட்டமான ஒரு சாது ஏறினார்.அவர் உட்கார இடம் கிடைக்குமா என்று தேடினார்.நடத்துனர் சொன்னார்,''மைத்துனரே,அதோ அக்கா பக்கத்தில் இருக்கை காலியாயிருக்கிறதே,அங்கு போய் உட்காருங்கள்''இப்போது பயணிகள் கொல்லென்று சிரித்தனர்.
**********

எதிரி

0

Posted on : Monday, August 01, 2011 | By : ஜெயராஜன் | In :

மூடி வைத்த கண்ணாடி சீசாவுக்குள் அடைக்கப்பட்ட ஆவி கொதிக்கத் தொடங்கினால் சீசா வெடித்து விடும்.உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கும் பகை உணர்வு எதிரியைத் தாக்காது,உன் உடலைத்தான் தாக்கும்.பிறருக்குப் பகைவன் என்று நினைத்துக் கொண்டவன் தனக்குத்தானே எதிரியாகிறான்.
                                                                                --கண்ணதாசன்

என்ன பொருத்தம்!

0

Posted on : Monday, August 01, 2011 | By : ஜெயராஜன் | In :

 கணவன் மனைவி ஜோடியைப் பார்த்து 'என்ன பொருத்தம்!'என்று சொல்ல வேண்டுமா?சில டிப்ஸ்:
*கணவன் மனைவி இருவருக்குள்ளும் இரகசியம் என்பதே இல்லாமல் இருப்பதே உத்தமம்.சின்ன சின்ன விஷயமானாலும் மறைக்க வேண்டாம்.
*எந்தப் பிரச்சினை ஆனாலும் மற்றவரைக் கட்டாயப் படுத்தி சாதிக்க வேண்டாம்.மற்றவருக்கு முடியவில்லையா,விருப்பம் இல்லையா,விட்டு விடுங்கள்.
*எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதைத் தவிருங்கள்.மற்றவர் சொல்வதை மனப் பூர்வமாக  நம்புங்கள்.
*ஒரு தலைவலி ,ஜுரம் என்றால் கூட அலட்சியப்படுத்தாமல் சில நிமிடம் அருகில் அமர்ந்து இதமாகப் பேசுங்கள்.
*மற்றவர்கள்  எதிரில் விட்டுக் கொடுக்காமல் பேசப் பழகுங்கள்.மட்டம் தட்டாதீர்கள்.அப்படித் தப்பித்தவறி ஒரு சிரிப்புக்காகச் சொன்னாலும் முகம் சுளிக்காமல் புன்னகையுடன்,ஸ்போர்டிவாக ஏற்கப் பழகுங்கள்.
*ஒருவொருக்கொருவர் விருப்பு வெறுப்பு அறிந்து நடந்து கொள்ளுங்கள்..மற்றவரின் எண்ணங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு கூடுமானவரை அதன்படி நடக்க முயலுங்கள்.
*ஒருவர் மூடுக்குத் தகுந்தாற்போல அடுத்தவர் நடந்து கொள்ளுங்கள்.ஒருவர் கோபத்துடன் கத்தினால் அடுத்தவர் மௌனம் சாதியுங்கள்.
*'தேங்க்ஸ்','சாரி'போன்ற சொற்களை வீட்டிலும் உபயோகிக்கலாம்.அது அன்பை வளர்த்து வாழ்வின் பல் சுமைகளைக் குறைக்கும்.

அகங்காரம்

0

Posted on : Sunday, July 31, 2011 | By : ஜெயராஜன் | In :

உங்கள் மனைவி அழகாக இருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் மனைவி அழகு என்பதை அந்த நகரத்தில் உள்ள எல்லோரிடமும் காட்டவே விரும்புவீர்கள்.அவள் ஏதோ உங்களுக்கு சொந்தமான 'பொருள்'என்று தான் கருதிக் கொள்வீர்கள்.நீங்கள் எப்படி சிறந்த கார் வைத்திருந்தால் அதைப் பிறர் பார்த்து தன்னை மதிக்க வேண்டும் ,பாராட்ட வேண்டும் என்று கருதுகிறீர்களோ,அதைப்போல உங்கள் மனைவியைப் பார்த்து பிறர் பொறாமைப்பட வேண்டும் என்றுதான் நினைப்பீர்கள்.நீங்கள் வைர நகைகளை அவளுக்கு அளித்தால் அது அன்பினால் அல்ல.உங்களுடைய பணக்கார அகந்தையை வெளிப்படுத்துவதற்கு அவளை ஒரு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்கிறீர்கள்.அவள் எப்போதும் உங்களை சார்ந்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.அதில் அவள் சற்று மாறுபட்டால் அவள் மீது கோபம் அடைகிறீர்கள்.அவளைக் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆகவே நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்?உங்கள் மனைவியையா அல்லது பணம் அந்தஸ்து என்ற உங்களுடைய அகங்காரத்தைக் காதலிக்கிறீர்களா?அகங்காரம் எப்போதும் தன முனைப்புடையது.தீவிர போட்டி மனப்பான்மையுடையது.

வெற்றிடம்

0

Posted on : Sunday, July 31, 2011 | By : ஜெயராஜன் | In :

கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி கிருஷ்ணரின் புல்லாங்குழல் மீது பொறாமை கொண்டாள்.காரணம்?குளிக்கப்போகும் சமயம் தவிர எப்போதும் புல்லாங்குழல்  கிருஷ்ணரிடம்  இருந்தது..ருக்மிணி ஒரு நாள் கிருஷ்ணர் குளிக்கச் சென்ற சமயம் புல்லாங்குழலை எடுத்து பூஜித்து,''நீ எப்போதும் கிருஷ்ணரின் அன்புக்குப் பாத்திரமாய் இருக்கும் ரகசியம் என்ன?''என்று கேட்டாள்.புல்லாங்குழல் சொன்னது,''என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் எனக்குத்  தெரியும்.நான் வெற்றிடமாக இருக்கிறேன்.

வீடு

1

Posted on : Saturday, July 30, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு தமிழ் அறிஞர் உடல் நிலை பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார்.அவரிடம் டாக்டர் ,''நீங்கள் இனி வீட்டுக்குப் போகலாம்,''என்று சொன்னார்.உடனே தமிழ் அறிஞர் சிரித்துக்கொண்டே,'எந்த வீடு?''என்று கேட்டார்.டாக்டருக்கும் தமிழில் புலமை இருந்ததால்,''அந்த வீட்டுக்கு (மோட்சம் )போக இன்னும் நாளிருக்கிறது இப்போது உங்கள் வீட்டுக்குப் போங்கள்.''என்றார்.
**********
புலவர் ஒருவர் தன மாணவனை சோதிக்க எண்ணி சில்லறைக் காசுகள் கொஞ்சம் கொடுத்து,மேகம்,பசு, மணி மூன்றையும் வாங்கிவரப் பணித்தார். அந்த கெட்டிக்கார மாணவனும் புலவர் கேட்டதை வாங்கி வந்து கொடுக்க மகிழ்வுடன் அவனைத் தட்டிக் கொடுத்தார்.மாணவன் என்ன வாங்கி வந்தான்?காராமணிப் பயறு.என்ன புரியவில்லையா?
காராமணி=கார்+ஆ+மணி
கார்=மேகம்:  ஆ=பசு : 
**********

எதிரொலி

0

Posted on : Saturday, July 30, 2011 | By : ஜெயராஜன் | In :

பல் டாக்டர் நோயாளியின் வாயத் திறந்து சோதித்தார்,''அடேயப்பா,எவ்வளவு  பெரிய ஓட்டை!''என்று ஆச்சரியத்துடன் கத்தினார்.அவர் இதுவரை இவ்வளவு பெரிய துவாரத்தை எந்த நோயாளியின் பல்லிலும் பார்த்ததில்லை போலும். நோயாளி வருத்தத்துடன் சொன்னார்,''அதை ஏன் சார் இரண்டு முறை சொல்கிறீர்கள்?''டாக்டர் சொன்னார்,''நான் ஒரு முறைதான் சொன்னேன்.நீங்கள் இரண்டாவது கேட்டது எதிரொலியாய் இருக்கலாம்.''
**********
கதவு தட்டப்பட்டது உடனே வீட்டில் இருந்த வாலிபன் கதவைத் திறந்தான்.வாசலில் நின்று கொண்டிருந்தவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டான்.''நான் உங்கள் வயலினை சரி செய்ய வந்திருக்கிறேன்.''என்றான் வந்தவன்.வாலிபன் ஆச்சரியத்துடன்,''நான் ஒன்றும் வரச்சொல்லவில்லையே?''என்று கேட்டான்.வந்தவன் சொன்னான்,''உங்கள் அடுத்த வீட்டுக்காரர் தான் உங்கள் வயலினை சரி செய்யச்சொல்லி போன் செய்தார்.''
**********
ஒருவன் தன பெண்ணுடன் ஒரு காட்டுப் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தான்.திடீரென ஒரு கொள்ளைக் கூட்டம் குறுக்கே வந்து காரை நிப்பாட்டியது.நான்கு பேர் துப்பாக்கியுடன் வந்தனர்.பெண் உடனே விலை உயர்ந்த நகைகளை தன வாயில் போட்டுக் கொண்டார்.கொள்ளையர் காரை சோதனையிட்டு விலை உயர்ந்த பொருள் எதுவும் கிடைக்காதலால் கோபமுடன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.தந்தை பெண்ணிடம் சொன்னார்,''நல்ல வேளை நகைகளை உன் வாயில் போட்டு கொள்ளை போகாமல் காப்பாற்றி விட்டாய்.என்ன,உன் அம்மா வந்திருந்தால் காரையும் காப்பாற்றியிருக்கலாம்.''
**********
''உனக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் வைத்திருக்கிறேன்,''என்றார் டாக்டர்.கைதியாய் வந்த அவன் முதலில் கெட்டசெய்தியை சொல்லச்சொன்னான்.டாக்டர் சொன்னார்,''கொலை நடந்த இடத்தல் இருந்த இரத்தமும் உன் இரத்தமும் ஒரே குரூப் என்று சோதனையில் தெரிகிறது.''நொந்து போன அவன் நல்ல செய்தி என்னவென்று கேட்க டாக்டர் சொன்னார்,''இரத்தத்தில் கொழுப்பு குறைந்துள்ளது.''
**********
ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்,''உங்கள் பெற்றோர் மீது அன்பு வைத்திருக்கிறீர்களா?''அனைத்து மாணவர்களும் ஆம் என்று பதில் சொல்ல ஆசிரியர் மீண்டும் கேட்டார்,''உங்கள் பெற்றோரை வெறுத்தால் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?''மாணவர்கள் அமைதி காத்தனர்.ஒரு மாணவன் மற்றும் கொஞ்சம் யோசனையுடன் மெதுவாய்க் கேட்டான்,''சார்,என் அண்ணனை வெறுத்தால் எவ்வளவு கொடுப்பீர்கள்?''
**********