உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நிம்மதி

1

Posted on : Wednesday, February 26, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு மன்னனுக்கு மன நிம்மதியே இல்லாமல் இருந்தது.ஜென் குரு  ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார்.அவரிடம், தனக்கு வேண்டிய செல்வம் இருந்தும்,ஆட்சி சிறப்பாக நடந்தும்  மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும்,  தனக்கு மனச்சுமை அதிகமாகி நிம்மதியில்லாமல் இருப்பதாகக் கூறினார்.உடனே குரு,''ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு,''என்று சொல்ல,மன்னனும் சிறிது கூட யோசிக்காமல்,'எடுத்தக் கொள்ளுங்கள் குருவே,''என்றார்.குரு,''நாட்டை என்னிடம் கொடுத்து விட்டால்,நீ என்ன செய்வாய்?''என்று கேட்டார்.மன்னனும் எங்கோ ஏதேனும் வேலை கிடைத்தால் அதைப் பார்த்துப் பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.குரு தயங்காது,''எங்கோ ஏன் வேலை பார்க்க வேண்டும்?நீ என்னிடமே வேலை பார்க்கலாமே?என் சார்பில் என் நாட்டை நீ நிர்வகித்து வா.ஆண்டுக்கு ஒருமுறை நான் வந்து கணக்கு வழக்குகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,''என்று சொல்ல மன்னனும் ஒத்துக்கொண்டார்.ஒரு ஆண்டு கழித்து குரு அரண்மனைக்கு வந்து தனது நிர்வாகியான மன்னனைப் பார்த்து,''நாடு எப்படி இருக்கிறது?வரவு செலவு எப்படி இருக்கிறது?நீ எப்படி இருக்கிறாய்?''என்று கேட்டார்.மன்னனும்,''நாடு சுபிட்சமாக இருக்கிறது.நான் மிகுந்த மன நிம்மதியுடன் இருக்கிறேன்.இப்போது கணக்கு வழக்குகளைக் கொண்டு வந்து காட்டுகிறேன்,''என்று சொன்னார்.குரு,''அதற்கு அவசியமில்லை.நீ எப்போதும் செய்த வேலையையே இப்போதும் செய்து வருகிறாய்.ஆனால் முன்னால்  இந்த நாடு,'என்னுடையது'என்று நினைத்து வேலை செய்தாய் அதனால் உனக்கு நிம்மதி இல்லை.இப்போது இன்னொருவரின் நாட்டை நாம் நிர்வாகம் மட்டுமே செய்கிறோம் என்ற நினைப்பு இருப்பதால் நிம்மதியாக இருக்கிறாய்.இதே நினைவுடனேயே தொடர்ந்து நிர்வாகத்தை நடத்து,''என்று சொல்லி அவனை ஆசிர்வதித்து விடை  பெற்றார்.

ஆலயம்

1

Posted on : Tuesday, February 25, 2014 | By : ஜெயராஜன் | In :

எல்லோரும் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளத்தானே கடவுளை கல்லாக்கி கோவிலில் வைத்திருக்கிறது.கோயில் அமைதியின் இருப்பிடம் என்று கொள்பவர் கொள்ளட்டும்.ஆனால் நான் அறிந்த மட்டில் ஆலயம் ஒரு துயரச்சந்தை.
******
நெருப்பு குளிர்ந்து ஜலம் ஆயிற்று என்றால்,குளிர்ந்த கோபம் தான் கண்ணீர்.உறைந்த கண்ணீர் தான் சிரிப்பு.
******
வாழ்க்கை ஒரு பரீட்சைக் கணக்கு மாதிரிதான் இருக்கிறது.எங்கேயோ ஒரு சிறு தப்பு நேர்ந்துவிட வேன்டியதுதான் ;விடை எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடுகிறது.இத்தனைக்கும் தெரிந்த கணக்கு,புரிந்த கணக்கு,முன்னால்  போட்ட கணக்குதான்.
******
சாவதையும்,வாழ்வதையும் விட,எதற்காகச் சாகிறோம்,எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.வாழ்க்கை வீம்பாகி விடும்போது,அதில் சாவுக்கும் உயிருக்கும் பிரமாத இடமில்லை.
******
சமாதானத்தைத் தேடுபவன் சமாதானம் அடைய மாட்டான்.பதில் கிடைத்தவனுக்குத்தான் சமாதானம் கிட்டும்.
******
என் எண்ணங்களை நானே நூற்று,என் மேலேயே பின்னிக்கொண்டு,அவை இன்னதென்று கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.
******
வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை?உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க்கிறதா?பார்க்க முடியுமா?அதேபோல் உயிர் பிரிகையில் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா?
******
                            --'லா.ச.ராமாமிர்தம் கதைகள்' என்னும்  நூலிலிருந்து.

பெருக்கல்

3

Posted on : Monday, February 24, 2014 | By : ஜெயராஜன் | In :

கணவன் மனைவியிடம்,தான் ஒரு அற்புத விளக்கைக் கண்டதாகச் சொன்னான்.மனைவி ஆர்வத்துடன்,''நீங்கள் விளக்கைத்தேய்த்து என்ன வரம் கேட்டீர்கள்?''கணவன் சொன்னான்,''என் மனைவியின் மூளையின் சக்தியை பத்து மடங்கு அதிகம் பண்ணிக்கொடு,என்று கேட்டுக் கொண்டேன்,''மனைவி மிக்க மகிழ்ச்சியுடன்,''அப்படியா,அந்த பூதம் அதை செய்து கொடுப்பது பற்றி ஏதாவது சொன்னதா?''என்று கேட்டாள்.கணவன் வருத்தமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்,''அந்த பூதமென்ன சொல்லிற்று,தெரியுமா?ஜீரோவை எந்த எண்ணால் பெருக்கினாலும் ஜீரோ தானே வரும் என்று கேட்கிறது.''
******
கணவன் மனைவி,இருவரும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட சென்றனர்.உணவு வைக்கப்பட்டதும் கணவன் ஆர்வத்துடன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.மனைவி கணவனிடம்,''வீட்டில் எப்போதும் சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வீர்களே,இன்று மறந்து விட்டீர்களா?''என்று கேட்டாள்.கணவன் சொன்னான்,''கவலைப்படாதே,இங்கு உள்ள சமையற்காரர் நன்றாகவே சமைப்பார்.''
******
ஒருவன் வீட்டு வாசலில் ஒரு பலகை  வைத்திருந்தான்.அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?''ஏற்கனவே தொந்தரவுக்குள்ளான என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.எனக்குத் திருமணம் ஆகி விட்டது.''
******

நிபந்தனை.

0

Posted on : Sunday, February 23, 2014 | By : ஜெயராஜன் | In :

தனது திருமண பத்தாவது ஆண்டு நிறைவு தினத்தில்,கணவன் மனைவிக்கு ஒரு வைர ஒட்டிகை பரிசளித்தார்.அன்றிலிருந்து ஆறு மாதம்மனைவி கணவனிடம்பேசவே இல்லை.ஏன்?ஒட்டிகை போலி  வைரமா?இல்லை.பின் என்ன,அவள் கேட்ட மாடலில் இல்லையா?இல்லவே இல்லை,அவளுக்கு அந்த ஒட்டிகை மிகவும் பிடித்திருந்தது.பின் என்ன பிரச்சினை?பிரச்சினை ஒன்றும் இல்லை.ஒட்டிகை வாங்கித் தருவதற்கு கணவன் போட்ட நிபந்தனையே அதுதான்.
******
அலுவலகத்தில் அதிகாரியிடம் ஒருவர் கேட்டார்,''சார்,நீங்கள் ஆபீசில் சிங்கம் போல இருக்கிறீர்கள்.ஒவ்வொருவரும் உங்களைக் கண்டாலே பயப்படுகிறார்கள்.வீட்டிலே நீங்கள் எப்படி சார்?''
''அட,வீட்டிலேயும் நான் சிங்கம் தான் ஐயா.என்ன,சிங்கத்தின் மீது காளி  தேவி அமர்ந்திருப்பாள்.''
******

இறைவன் எங்கே?

1

Posted on : Saturday, February 22, 2014 | By : ஜெயராஜன் | In :

சந்தோசப்படும்போது சிரித்து,வருத்தப்படும்போது அழுபவனை நான் காண விரும்புகிறேன்.சுகம்,துக்கம் இரண்டையும் அடக்கிக்கொண்டு 'கண்ணீர் பெருக்குவது பலவீனம்,சிரிப்பது லேசானது,'என்று நினைப்பவர்களுடன் எனக்கு எந்தவிதமான கருத்து ஒற்றுமையுமில்லை.வாழ்க்கை என்னைப் பொறுத்தவரையில் ஆனந்தமான விளையாட்டு,தன்னிச்சையானது, எளிமையானது.அதில் போட்டி,பொறாமை,கோபம்,அற்பத்தனத்திற்கு இடமே இல்லை.கடந்த காலத்தைப்பற்றி நினைப்பதில்லை.எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையுமில்லை.எனக்குநிகழ்காலம்தான்யாவும்,எல்லாமும்.எதிர்காலத்தைப் பற்றிய கவலை,நம்மைக் கோழையாக்கி விடுகிறது.கடந்த காலத்தின் சுமை நம் இடுப்பை முறித்து விடுகிறது.நாம் வீணாக சுமையை நம்மீது சுமத்திக் கொண்டு நம்பிக்கைகள்,பழகி விட்ட பழக்கவழக்கங்கள்,வரலாறுகளின் இடிபாடுகளுக்கிடையே அழுந்திக் கிடக்கிறோம்.அதிலிருந்து மீண்டெழும் வலிமையோ,ஆற்றலோ நமக்கில்லை.மீண்டு எழ  வேண்டுமென்ற நினைப்புக்கூட நம்மிடம் இல்லை.எங்கு வாழ்க்கை இருக்கிறதோ,அன்பும்,இனிமையும்,செயல்பாடும் உள்ளதோ,அங்குதான் இறைவன் உள்ளான்.வாழ்க்கையை இன்பமுள்ளதாக,இனிமை கூடியதாக ஆக்கிக் கொள்வதுதான் உபாசனை.அதுதான் மோட்சமும்.உன்னால் அழ முடியாவிட்டால்,சிரிக்க முடியாவிட்டால்,நீ மனிதனே அல்ல,பாறாங்கல் எனச் சொல்லுகிறேன்.
                       --பிரேம்சந்த் எழுதிய 'கோதானம்'என்னும்  நூலிலிருந்து.

அதிகாரம்

1

Posted on : Friday, February 14, 2014 | By : ஜெயராஜன் | In :

அதிகாரம் என்பதுஒவ்வொரு அதிகாரியாலும்,தன்னால் கையாளப் படுவதாக நினைத்தாலும் கூட,அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடு தான். உங்களால் அதிகாரம் செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல் கொண்ட கட்டாயம் இருக்க வேண்டும்.ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல் திட்டத்துடன் சரியாக இணைந்து கொள்வதன் மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கை வருகிறது.தனித்துச் செல்லும் தோறும் அதிகாரம் இல்லாமல் ஆகிறது.
நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்து கொள்கிறான்.கூடவே அது எப்படி  உருவாகிறது என்பதயும் கண்டு கொள்கிறான்.மேலும் மேலும் அதிகாரத்திற்காக அவன் மனம் ஏங்குகிறது.அதற்காகத் தன்னை மாற்றிக் கொண்டே  இருக்கிறான்.சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறி விடுகிறான்.அவன் கொண்டு வந்த கனவுகள் லட்சிய வாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன.மொழி,பாவனைகள்,நம்பிக்கைகள் மட்டுமல்ல,முகமும் கூட பிறரைப்போல ஆகி விடுகிறது.
                                    -- ஜெயமோகன் எழுதிய 'நூறு நாற்காலிகள்'என்ற நூலிலிருந்து.

ஜென் பொன்மொழிகள்.

2

Posted on : Tuesday, February 11, 2014 | By : ஜெயராஜன் | In :

ஞானம் என்பது அடையக் கூடிய ஒன்றல்ல.ஒவ்வொன்றாய் இழந்தபின் மிஞ்சுவது தான் ஞானம்.
******
நாள் என்பது வெறும் பகல் மட்டும் அல்ல.இரவும் சேர்ந்ததுதான் அது.மரணம் வாழ்க்கையின் எதிரி அல்ல.அதுவும் வாழ்வின் ஒரு அங்கமே.அது இன்றி வாழ்க்கை முழுமை அடையாது.
******
தியானம் என்பது எண்ணங்களை வெல்லுவது அல்ல.அவற்றைக்  கடந்து சென்று விடுவதுதான் தியானம்.
******
எந்தச் செயலுமே எண்ணங்களில் புகும்போதுதான்,இது சரி,இது தவறு,இது விருப்பமானது,இது வெறுக்கக் கூடியது,என்பவை புகுந்து விடுகின்றன.
******
மனிதனுக்காகத்தான் மதமே அன்றி,மதத்துக்காக மனிதன் அல்ல.மனிதத்தன்மை மறந்த மதம் யானையின் மதமே.
******
விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு.தேவை கடல் அளவு,ஆனால் கிடைப்பது கை அளவுதானா?கையையே கடலாக
நினைத்துக்கொள்.
******
அறிவுக்கோ,விவாதங்களுக்கோ எட்டாததுதான் ஞானம்.தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்.தெரிந்ததாக வேடம் பூணாதே.
******
ஞானம் என்பது விவாதித்தல் அல்ல.விவாதம் கடைசியில் இலக்கைவிட்டு விலகிச் சென்றுவிடும்.ஞானம் என்பது எதையும் மறுத்தல் அல்ல.அதை அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான்.
******
சகிப்புத்தன்மை தான் ஞானத்தின் திறவுகோல்.சகிப்புத்தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.
******

திருமணம்-2

1

Posted on : Saturday, February 08, 2014 | By : ஜெயராஜன் | In :

மகிழ்ச்சியான தம்பதிகள் எப்படி இருப்பர்?
 மனைவி விரும்புவதை  கணவன் செய்வான்.
மனைவி விரும்புவதை மனைவி செய்வாள்.
******
உன்னுடைய குறைகளைக் கண்டு நீ சிரித்தால் உன் வாழ்க்கை நீண்ட நாள் வரும்.உன் மனைவியின் குறைகளை கண்டு நீ சிரித்தால் உன் வாழ்க்கை சீக்கிரம் முடிந்துவிடும்.
******
மனைவி:நான் எழுதிய ஆணைகளின் படி இந்த கணணி  செயல் பட  மாட்டேன் என்கிறதே!
கணவன்:அது கணணி தானே!கணவன் இல்லையே?
******
திருமணம் என்றால் என்ன?
எப்போது ஒரு மனிதனுக்கு ஏழாவது அறிவு உருவாகி மற்ற ஆறு அறிவுகளையும் சிதைத்து விடுகிறதோ,அப்போது அவனுக்குத் திருமணம் ஆகியுள்ளது என்று பொருள்.
******
திருமண வாழ்வில் நான்கு நிலைகள் உள்ளன;
*ஒருவர் மீது ஒருவருக்குப் பைத்தியம்.
*ஒருவருக்காக ஒருவர்.
*ஒருவரைக் கண்டால் அடுத்தவருக்குப் பைத்தியம்.
*ஒருவரினாலேயே அடுத்தவருக்குப் பைத்தியம்.
******
ஒரு மனிதனின் படுக்கை அறை எத்தகைய மணமுள்ளதாய் இருக்கும்?
திருமணம் ஆன முதல் மூன்று ஆண்டுகள்--
                      பூக்கள் ,பழங்கள்,வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் மணம் இருக்கும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு:
                      குழந்தைக்கான பவுடர்,குழந்தைக்கான எண்ணெய் வகைகள்,குழந்தையின் மலம்,சிறுநீர் ஆகியவற்றின் வாடைகள் இருக்கும்.
ஆண்டுகள் கழித்து:
                    தலைவலி மருந்து,உடல் வலி மருந்து ஆகியவற்றின் மணம் இருக்கும்.
ஆண்டுகளுக்குப் பிறகு:
                   பத்தி,சூடம்,சாம்பிராணி.முதலான மணங்கள்.
******
                                                                  நன்றி:நண்பர் சித.மெய்யப்பன்.

கோரிக்கை

2

Posted on : Thursday, February 06, 2014 | By : ஜெயராஜன் | In :

மூன்று பேர் அவர்கள் செய்து கடுமையான குற்றத்திற்காக முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்பட்டது.முதலாவது ஆள் பெண் வேண்டும் என்று கேட்டான் இரண்டாம் ஆள் செல்போன் வேண்டும் என்று கேட்டான்.மூன்றாவது ஆள் சிகரெட் கேட்டான்.மூவர் கோரிக்கைகளும் அதிகாரிகளால் நிறைவேற்றி வைக்கப்பட்டது.முப்பது ஆண்டுகளுக்குப்பின் மூவரும் விடுதலை பெற்று வெளியே வந்தனர்.அப்போது முதலாவது ஆள் ஒரு பெண்ணோடு பத்து குழந்தைகளோடு வெளியே சென்றான்.இரண்டாவது ஆள் செல்போன் மூலம் நடத்திய கமிசன் வியாபாரத்தினால்பெற்ற பத்து லட்சம் ரூபாயுடன் சென்றான்.மூன்றாமவனோ,வெளியே வந்ததும்,''சிகரெட் பத்த வைக்க நெருப்புப் பெட்டி கிடைக்குமா?''என்று எதிரில் வந்த ஆட்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

சென்ரியு கவிதைகள்-2

1

Posted on : Wednesday, February 05, 2014 | By : ஜெயராஜன் | In :

பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன்.
******
நிழலை விலை பேசி முடிக்கவில்லை
தொண்டர்கள்.தலைவர்
விற்றுவிட்டார் மரத்தை.
******
மாறுதல் உத்தரவு பத்திரிகையில்
இடம் மாறி உறிஞ்சும்
அரசாங்கக் கொசுக்கள்.
******
ஒரே சமயத்தில் வேண்டாம் என்று
பாடகர் முடித்ததும்
வாய்விட்டழுதது குழந்தை.
******
வடை நன்றாயில்லை.
வடை சுடும் கிழவியைக்
கொத்திப் போயின காக்கைகள்.
******
எதெடுத்தாலும் பத்து ரூபாய்
 கடை.
எதெடுத்தாலும் பத்துநாள்.
******
கூரை பிரித்த திருடன் குறிப்பு.
உடைக்க மனம் வரவில்லை.
புதுப்பூட்டு.
******
எதிரியின் முகத்திரை
கிழித்தபோது
தன்முகம்.
******
விலங்குகளில் ஒருவகை
எழுதப் படிக்கத்
தெரிந்தது.
******
பதவியை விட்டவன் பிடித்து விட்டான்.
பேருந்தை விட்டவன்
இன்னும் நிற்கிறான்.
******
மரணம் நிச்சயம்
மருந்தாவது இருக்கக்கூடாதோ
இனிப்பாக.
******
முதலாளி சமாதி மீது
முட்டிக்கொண்டு அழுதான்.
சம்பளப்பாக்கி.
******
                                      -ஈரோடு தமிழன்பன்.

சென்ரியு கவிதைகள்

3

Posted on : Tuesday, February 04, 2014 | By : ஜெயராஜன் | In :

ஹைக்கூ கவிதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன சென்ரியு கவிதைகள்?இது ஒரு நவீன ஹைக்கூ.ஹைக்கூவில் மானுடம் பற்றி ஏதேனும் குறிப்பிருந்தால் அதை சென்ரியு என்று சொல்கிறார்கள்.இதன் இலக்கணம் என்ன தெரியுமா?ஆழமற்றது;வேடிக்கையானது.விடுகதை போன்றது.நகைச்சுவையானது;பொன்மொழி போன்றது.இவ்வகைக் கவிதைகளைத் திரட்டியவர் பெயர் காறை சென்ரியு.அவர் பெயரிலேயே இக்கவிதைகள் வெளி வருகின்றன.தமிழில் சென்ரியு வகைக் கவிதைகளை ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதி ''ஒரு வண்டி சென்ரியு''என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அதிலிருந்து நான் ரசித்த சில கவிதைகள்:

''தொகுதிதான்
முடிவாகவில்லை.
தோல்வி முடிவாகிவிட்டது.''
******
''பணம்
எதையும் செய்யும்.தெரிந்தவர்கள்
பணம் செய்தார்கள்.''
******
''ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்.
ஐம்பது வாக்குகள்.''
******
''சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்.''
******
''குடித்தவன்
குடலுக்குள்ளும்
மயங்கவில்லை மது.''
******
''கிளித்தோப்பில்
கட்சிக்கூட்டம்.
பேசுவதை நிறுத்தி விட்டன கிளிகள்.''
******
''சண்டைக்கோழி
வென்றாலும் தோற்றாலும்
பிரியாணி.''
******
''பூசாரி கையில் கட்சி.
வெளியேற்றப்பட்டார்
கடவுள்.''
******
''விடைகள் கேட்ட வினா
மாணவனே
தேர்ந்து விடுவாயா?''
******
''ஒலிபெருக்கி
சோதனை முடிந்ததும்
பேச்சாளர் சோதனை.''
******
''அதிகாரி பிறந்தநாள்.
வீடு முழுக்க
லஞ்ச அலங்காரம்.''
******

இறந்தபிறகு...

1

Posted on : Monday, February 03, 2014 | By : ஜெயராஜன் | In :

சீடன் ஒருவன் தனது குரு கன்பூசியசிடம் ,''இறந்த பிறகு என்ன நடக்கும்?''என்று கேட்டான்.அதற்கு அவர்,''இதற்குப் போய் நேரத்தை வீணடிக்காதே.நீ கல்லறையில் படுத்திருக்கும்போது அதைப் பற்றி சிந்தனை செய்து கொள்ளலாம்.இப்போது அதைப் பற்றிக்
கவலைப்படாதே.''என்றார்.இந்த மாதிரிதான் அநேகம் பேர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாமும் அப்போது சிந்தனை செய்து கொள்ளலாம்.ஒன்றும் அவசரமில்லை.யாராவது இறக்கும்போது மற்றவர்கள் பயத்தினால் கண்களை மூடிக் கொண்டு,''ஐயோ,மனிதர்களெல்லாம் கடைசியில் கல்லறையைத்தான் சந்திக்க வேண்டுமா?'' என்று நினைத்துக் கவலைப்படுகிறார்கள்.
உண்மையில் இவர்கள் எல்லாம் படித்தவர்கள் தானா?''நான் பிறக்கும்போது நான் எந்தக் கவலையும் சுமந்திருக்கவில்லை.எந்த மாதிரியான துன்பங்களை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.இப்படி எந்த  வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமனே இருந்தேன்.ஏன்,அப்போது,'நான்' என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.அதைப் போல இறக்கும்போதும்,அதே உணர்வுடன் தான் இருப்பேன்,''என்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டால் துன்பம் ஏது?