உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மரக்கிளை

0

Posted on : Tuesday, December 27, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் குரு பொகுஜு தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் வேகமாக வந்து ஒரு மரக் கட்டையால் அவரைத் தாக்கினான்.அதே சமயம் அவன் தடுமாறி கீழே விழுந்தான்.கட்டையும் கீழே விழுந்தது.குரு உடனே கட்டையைத் தன கையில் எடுத்தார்.அதைப் பார்த்த உடன் அவன் பயந்து ஓட ஆரம்பித்தான்.குருவும் கட்டையுடன் அவனைப் பின் தொடர்ந்தார்.அவனைப் பிடித்து,''இதோ உன் கட்டை,''என்று கூறி  அவன் கையில் கட்டையைத் திரும்பக் கொடுத்தார்.அவன் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.அங்கிருந்த மக்கள் குருவிடம்,''இவன் ஒரு அயோக்கியன்.இவனைப் பதிலுக்கு அடிக்காமல் கட்டையை அவனிடம் திரும்பக் கொடுக்கிறீர்களே!''என்று கேட்டனர்.குரு கேட்டார் ,''நாம் செல்கிற வழியில் மரத்திலிருந்து ஒரு கிளை முறிந்து நம் மீது விழுந்தால் என்ன செய்வோம்?என்ன செய்ய முடியும்?''மக்கள் அவர் கூற்றை ஏற்காமல்,''கிளை காய்ந்து போனது.அதற்கு உயிர் இல்லை.அதற்கு அறிவுரை கூற முடியாது.அதற்கு தண்டனையும் கொடுக்க முடியாது.அதற்கு மனம் என்று ஒன்று இல்லை.எனவே அதனுடன் ஒப்பிடாமல் இவனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.''என்றனர்.குரு ,''என்னைப் பொறுத்த வரை இவன் ஒரு முறிந்த கிளைதான்.என்னால் ஒரு கிளைக்கு ஆலோசனை வழங்கவோ,தண்டனையோ கொடுக்க முடியாது எனில் இவனுக்கு மட்டும் ஏன் வீணே ஆலோசனை கூறவோ,தண்டனை கொடுக்கவோ வேண்டும்?''என்று கூறிக் கொண்டே தன் வழியில் நடந்து சென்றார்.

சரியா ,தவறா ?

0

Posted on : Monday, December 26, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர்.அவர்கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து,ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் களவுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள்.குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர்.குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார்.கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறி விடுவோம் என்று கூறினர்.குரு அவர்களைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் அனைவரும் வெளியே போவதாக இருந்தாலும் ,நான் அவனை வெளியே அனுப்ப முடியாது.''சீடர்கள், குரு தவறு செய்தவனுக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்புக் கொடுக்கிறார் என்று புரியாமல் விழித்தனர்.குரு மீண்டும் அவர்களிடம் பேசினார்,''உங்கள் அனைவருக்கும் உலகில் நல்லது எது,கெட்டது எது என்பது நன்றாகத் தெரிகிறது எனவே நீங்கள் வெளிய சென்றாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் இவனுக்கு சரியான செயல் எது,தவறான செயல் எது என்பது இன்னும் தெரியவில்லை.இவனுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள்?அவனுக்கு நல்லது  எது,கெட்டது எது என்று நான் தான்  சொல்லித்தர வேண்டும்.எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.''என்றார்.சீடர்கள் கண்களில் கண்ணீர் வழிய குருவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

மனைவியின் பூனை .

0

Posted on : Friday, December 09, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக்  கண்டாலே ஆகவில்லை.அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.ஒரு நாள் அப்பூனையைத்  தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான். அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,''போனை  பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.''

சொல்லி விட்டு வா

0

Posted on : Friday, December 09, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் துறவி ஒருவர் தன் வீட்டிற்கு வந்தபோது ஒரு திருடன் இருப்பதைக் கண்டார்.அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லாததால் அவன் திகைத்து நின்றான்.துறவி அவனிடம் சொன்னார்,''ஐயோ பாவம்,என்னை நம்பி நீ எவ்வளவு தூரத்திலிருந்து வந்தாயோ!இங்கு ஒன்றும் இல்லையே?ஆனால் நீ வெறும் கையோடு திரும்பப் போகக் கூடாது.,''அவர் தன்   உடைகளைக் களைந்து அவனிடம் கொடுத்து எடுத்துப் போகச் சொன்னார்.பின்னர் அவர் சொன்னார்,''அடுத்த முறை வரும்போது முன்கூட்டி சொல்லிவிட்டு வா.நானும் உனக்காக ஏதாவது தயார் செய்து வைப்பேன்.நீயும் ஏமாந்து போக மாட்டாய்.''இருந்த உடைகளைக் கொடுத்துவிட்டு குளிரில் நடுங்கும் துறவியைக்  கண்டு என்ன செய்வது என்று அறியாது நின்ற  திருடன் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து  சென்றான்.அவன் சென்றபின் படுத்த துறவி வானத்தைப் பார்த்து,''என்னால் மட்டும் முடிந்தால் இந்த நிலவை எடுத்து அவனுக்குக் கொடுத்திருப்பேனே!''
**********
ஒரு இளம் துறவி  தன் ஊருக்கு செல்கையில் இடையில் இருந்த ஆற்றில் திடீரென வெள்ளம் வந்ததால் அக்கரைக்கு செல்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது எதிர்க் கரையில் ஒரு ஜென் துறவி நிற்பதைப் பார்த்து எதிர்க் கரைக்கு வருவதற்கான வழி என்னவெனக் கேட்டான்.துறவி சொன்னார்,''இப்போது நீ எதிர்க் கரையில்தானே நிற்கிறாய்?''
**********

இறப்பு

1

Posted on : Thursday, December 08, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் மாஸ்டர் இகியு இளம் வயதிலேயே அறிவு முதிர்ச்சியுடன் காணப்பட்டார்.சிறுவனாய் இருக்கும்போது ஒரு நாள் தன குரு வைத்திருந்த ஒரு அருமையான,மிகப் பழமையான ,அபூர்வமான  தேநீர்க் கோப்பையை கை நழுவி உடைத்து விட்டார்.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அப்போது குருவின் குரல் கேட்டது.உடனே வேகமாக அவர் குருவிடம் சென்று,''அய்யா,பிறக்கும் உயிர்கள் ஏன் இறக்க வேண்டும்?''சின்ன வயதிலேயே இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று மகிழ்ந்து குரு சொன்னார்,''அது இயற்கை . தவிர்க்க முடியாதது..பிறந்த ஒவ்வொன்றும் அதற்குரிய காலம் முடிந்தவுடன் இறக்கத்தான் செய்யும்.''இகியு சொன்னார்,''அய்யா,நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டியிருக்கிறது.உங்களின் தேநீர்க் கோப்பைக்கு காலம் முடிந்ததால் இறந்து விட்டது.''

சிரிச்சா போதும்

1

Posted on : Wednesday, December 07, 2011 | By : ஜெயராஜன் | In :

நாட்டுப்பற்று பற்றி பாடம் நடத்திய ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்கள் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவர்கள் என்பதை விளக்க சொன்னார். ஒரு மாணவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுப் பொருட்கள் எதையும் உபயோகிப்பதில்லை.''அடுத்தவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுத் திரைப்படங்கள் எதுவும் பார்ப்பதில்லை.''மூன்றாவது மாணவன் சொன்னான்,''நான் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை ஆங்கிலத்தில் தேறியதில்லை''
**********
''நண்பா,புலித் தோல் பார்த்திருக்கிறாயா?''
'பார்த்திருக்கிறேனே!'
''எங்கே?''
'புலியின் மீதுதான்.''
**********
குறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.ஒருவன் சொன்னான்,''ஐயா,இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே?''இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன் என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.அவன் சொன்னான்,''இல்லை ஐயா,அவன் பெயர் ரவி.என் பெயரோ,வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.''
**********
''நாய் பற்றிய கட்டுரை எழுதி வரச் சொன்னால்,நீயும் உன் அண்ணனும் ஒரே மாதிரி எழுதி வந்திருக்கிறீர்களே?''என்று ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்டார்.அவன் சொன்னான்,''எங்கள் வீட்டில் ஒரு நாய் தானே சார் இருக்குது.''
**********

மாற்றம்

0

Posted on : Wednesday, December 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு துறவி ஒரு மலைப் பகுதிக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார்.சில நாட்களில் அவர் மீது ஏராளமான புகார்கள் அங்கிருந்து அவர் சார்ந்த மடத்துக்கு வந்தன.அவரை அங்கிருந்து திரும்பக் கொண்டு வந்து விடலாமா என்று மடத் தலைவரிடம் கேட்டதற்கு,அவர் சொன்னார்,''எதிர்ப்பு வந்தது என்றால் அவர் அங்கு ஏதோ வேலை செய்ய ஆரம்பித்துள்ளார் என்று பொருள் எனவே அவர் அங்கேயே இருக்கட்டும்.''
நமது வழக்கமானதிலிருந்து ஏதேனும் மாற்றம் வந்தால் நாம் உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.புதுப் பழக்கம் அல்லது செயல் நமக்கு கடினமாகத் தோன்றுகிறது.அதனால் அதை முயற்சித்துப் பார்க்கக்கூட நாம் விரும்புவதில்லை.நம்முடைய எதிர்ப்பை மீறி நாம் மாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டால் நாம் அதைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளை தேட ஆரம்பித்து விடுவோம்.நல்ல வாய்ப்புகளைக் கூடத் தவிர்க்கவே செய்வோம்.அதற்கு எதிரான  வாதங்களை எடுத்துரைக்க ஆரம்பித்து விடுவோம்.முடியாத நிலையில் அதை செயல் படாமல் ஆக்குவதற்கு குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வோம்.ஆனால் தொடர்ந்து எதிர்ப்பை வளர விடும்போது நாமே நமக்கு எதிரி ஆகி விடுவோம்.அதற்கும்பின் வேறு வழி இல்லை என்ற நிலை வரும்போது நாம் மாற்றத்தை ஏற்கிறோம்.
''மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது''என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மாற்றம் இல்லையேல் வளர்ச்சி இல்லை.''ஓடுகின்ற ஆற்றில் ஒரே நீரில் நாம் குளிக்க முடியாது''என்பர்.ஏனெனில் ஓட்டத்தினால் நீர் மாறிக் கொண்டே இருக்கிறது.ஓட்டம் இல்லை என்றால் அந்த நீர் தேங்கி ஒரு குட்டையாகி நாற்றம் எடுக்க  ஆரம்பித்துவிடும்.மாற்றமே  ஏற்றம்.

மன்னிப்பாயா?

0

Posted on : Tuesday, December 06, 2011 | By : ஜெயராஜன் | In :

புத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவரைப் பார்த்தபோது அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான்.அதைத் துடைத்துக் கொண்டே புத்தர் அமைதியாகக் கேட்டார் ,''வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா அப்பா?'' புத்தரின் உறவினரும் அவர் உடனேயே இருந்த சீடருமான ஆனந்தருக்குக் கோபம் வந்து விட்டது.''நீங்கள் அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன்,''என்றார்.புத்தர் அவரிடம் சொன்னார்,''ஆனந்தா,நாம் எல்லாம் சந்நியாசிகள் என்பதை மறந்து விட்டாயா? இதோ, இவரைப்பார் ,ஏற்கனவே, ,இவர் கோபம் என்னும் நோயினால் பீடிக்கப் பட்டிருக்கிறார்.அவருடைய கோபமான முகத்தைப்பார்.அவர் உடல் ஆடுகிறது.கோபப்படும் முன் அவர் மகிழ்வுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறாயா? அவர் தன கோபத்தினால் பைத்தியமாக நிற்கிறார்.இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்க முடியும்?எனக்கு என்ன பெரிய கெடுதல் நேர்ந்து விட்டது.இதைத் துடைப்பதைத் தவிர எனக்கு என்ன சிரமம் உள்ளது?நீ கோபப்படாதே.இல்லையெனில் அவருக்கு நேர்ந்த சிரமங்கள் எல்லாம் உனக்கும் நேரும்.உன்னை நீயே  ஏன் தண்டித்துக் கொள்ள வேண்டும்?இவர் மீது கோபப்படாதே.மாறாக இரக்கப்படு.'' பின்னர் புத்தர் தன் மீது உமிழ்ந்தவரைப் பார்த்து,''அப்பா,நீ மிகவும் களைப்புடன் காணப் படுகிறாய்.உன்னை நீயே தண்டித்துக் கொண்டது போதும்.என்னிடம் நீ நடந்து கொண்டதை மறந்துவிடு.வீட்டிற்குப் போய் ஓய்வெடு,''என்றார்.அவன் மிகுந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவனாக நின்றான்.பின் அவன் புத்தரிடம் மன்னிப்புக் கேட்டான்.புத்தர் சொன்னார்,''முதலாவதாக நான்  கோபப்படவில்லை.பின்   மன்னிக்க வேண்டும் என்ற கேள்வியே எழாதே? ஆனால் இப்போது உன்னைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி.ஏனெனில் நீ உன் துன்ப நிலையிலிருந்து மீண்டு நிம்மதியுடன் காணப்படுகிறாய்.மீண்டும் இத்தவறை யாரிடமும் செய்து உனக்குள்  நீயே நரகத்தை உருவாக்கிக் கொள்ளாதே.''

யாருக்காக?

0

Posted on : Monday, December 05, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லாவும் அவர் நண்பர்களும் ஒரு சாராயக் கடையை விலைக்கு வாங்கினார்கள்.ஒரு மாதமாக ரிப்பேர்  வேலைகள் நடந்து கொண்டிருந்தன. முன்னால் அந்தக் கடையில் வழக்கமாக சாராயம் குடிப்பவர்கள் கடை என்றைக்கு தயாராகும் என்று சுற்றிச் சுற்றி வந்தார்கள்.வேலை முடிவது மாதிரியாய்த் தெரியாதலால் ஒரு குடிமகன் முல்லாவிடம் சென்று,
என்றைக்குத்தான் கடையைத் திறப்பீர்கள்?என்றைக்கு நாங்கள் இங்கே வந்து குடிப்பது?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.இந்தக் கடையை நாங்கள் வாங்கியது  நாங்கள் சாராயம் குடிப்பதற்குத்தான்.மற்றவர்களுக்கு அல்ல.''
*********
நண்பர் கேட்டார்,''முல்லா,நீ தனியாகத்தானே குடிக்கிறாய்?பின் ஏன் தினமும் இரண்டு பாட்டில்களுடன் உன் அறைக்கு செல்கிறாய்?''முல்லா சொன்னார்,''முதலில் நான் ஒரு பாட்டில்தான் குடிக்கிறேன்.அதைக் குடித்ததும் எனக்குள்ளே இன்னொரு ஆள் இருப்பதுபோலத் தோன்றுகிறது.அந்த இன்னொரு ஆள் வருத்தப்படக் கூடாதே என்று அவருக்காகத்தான் இரண்டாவது பாட்டிலைக் குடிக்கிறேன்.''
*********

யார் செய்தால் என்ன?

0

Posted on : Monday, December 05, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம் சொன்னார்,''பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம்  என் மனைவி,நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது.என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.''முல்லா சொன்னார்,'அதனால் என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா?யார் செய்தால் என்ன?''

அவசரம்

0

Posted on : Thursday, December 01, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லா தன் மனைவியுடன் இரவு விருந்துக்கு சென்றார்.ஹாலில் எல்லோரும் கூடியிருந்தனர்.ஒரு ஓரமாகச் சென்ற முல்லா ஏதோ வழுக்கிக் கீழே விழுந்ததில் அவருடைய பேண்ட் முழங்கால் பகுதி கிழிந்து விட்டது.உடனே அவர் மனைவி அருகிலிருந்த பெண்கள் அறையில் எட்டிப் பார்த்துவிட்டு,''இந்த அறையில் இப்போது யாரும் இல்லை.உள்ளே வாருங்கள்.நான் கிழிந்த பகுதியில் ஒரு ஊக்கை மாட்டி கிழிசல் தெரியாமல் இருக்கச் செய்கிறேன்,''என்றதும் முல்லாவும் உள்ளே சென்றார்.ஆனால் கிழிசல் பெரியதாக இருந்ததால் ஊக்கை  மாட்ட முடியவில்லை.உடனே முல்லாவின் மனைவி ,''சரி,பேண்டைக் கழட்டி கொடுங்கள்.நான் ஊசி வைத்திருக்கிறேன்.கிழிசலைத் தைத்து விடுகிறேன்,''என்று சொல்ல,  முல்லாவும்  பேண்டைக் கழட்டிக் கொடுத்தார்.அப்போது ஒரு பெண் அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு வந்ததும் அதிர்ச்சி அடைந்த முல்லாவின் மனைவி,அருகில் இருந்த வேறு  ஒரு கதவைத் திறந்து,''இப்போதைக்கு உள்ளே இருங்கள்.நான் அந்தப் பெண் வெளியே சென்றதும் கூப்பிடுகிறேன் .''என்றார். உள்ளே சென்ற முல்லா அடுத்த நிமிடம் அலறி அடித்துக் கொண்டு கதவைத் தள்ளிக் கொண்டு மீண்டும் பெண்கள் அறைக்குள்ளேயே வந்தார்.என்ன என்று கேட்க,''அவசரத்தில் என்னை ஹாலுக்குள்ளேயே தள்ளி விட்டாயே?''என்றார்.

நம்ப முடியவில்லை

0

Posted on : Thursday, December 01, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லாவின் மனைவி அவரிடம் சொன்னார்,''நேற்று நான் என் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அவள் வீட்டுச் சுவற்றில் ஒரு ஓவியர் அழகாக சிலந்திவலை போன்று  வரைந்திருந்தார்.அதை உண்மையான சிலந்திவலை என்று கருதி அவள் வீட்டு வேலைக்காரி ஒட்டடைக்கம்பு கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.'' முல்லா பளிச்சென்று சொன்னார்,''இதை என்னால் நம்ப முடியவில்லை.''முல்லாவின் மனைவிக்குக் கோபம்.''நான் நேரில் பார்த்தேன் என்று சொல்கிறேன்.நீங்கள் நம்ப முடியவில்லை என்று சொல்கிறீர்களே.இது மாதிரி தத்ரூபமாக வரையக் கூடிய ஓவியர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நான் நம்ப முடியவில்லை என்று சொன்னது ஓவியத்தைப் பற்றி அல்ல.வேலைக்காரி சுத்தம் செய்தாள் என்று சொன்னாயே,அதைத்தான்.''