உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனிதன் மட்டும் சிரிப்பதேன்?

1

Posted on : Wednesday, September 18, 2013 | By : ஜெயராஜன் | In :

உலகில் உள்ள  உயிர் வாழ் இனங்களில் மனிதன் மட்டுமே சிரிக்கிறான்.எந்த விலங்கோ பறவையோ சிரிப்பதில்லை.அதே போல 'எனக்கு போரடிக்கிறது' என்று சொல்லக் கூடியதும் மனிதன் மட்டுமே.வேறு எந்த இனத்திற்கும் போரடிப்பது என்றால் என்னவென்று தெரியாது.எனவே இந்த இரண்டுக்கும் ஒரு பிணைப்பு உள்ளது.மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளது .எனவே அவனால் சிந்திக்க முடிகிறது.அவன் இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறான்.இதனால் நாகரீகமும் அறிவு வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு சிந்தனைகளினால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இவற்றிற்கிடையே இடைவெளி ஏற்படும்போது மனிதன் வெறுமையை உணர்கிறான்.அதன் பிரதிபலிப்புதான் போரடிப்பது. போரடிப்பதற்கு மருந்துதான் சிரிப்பு.இந்த சிரிப்பு மட்டும் இல்லையென்றால் மனிதனுக்கு எப்போதும் நோய்தான்.விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ இந்த சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் இல்லை.அவை வாழ்வை அப்படியே எதிர் கொள்கின்றன.அதனால் அவற்றிற்கு சிரிப்பிற்கான அவசியம் இல்லை.ஆதிவாசிகள் மற்றும் பூர்வ குடி மக்களிடையே அதிகம் சிரிப்பு கிடையாது.அவர்கள் வசதிக் குறைவுடன் இருக்கலாம்.ஆனால் அவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்புகள் கிடையாது.அதனால் அவர்கள் எப்போதும் திருப்தியுடனும் மன நிறைவுடனும் இருக்கிறார்கள்.உலகிலேயே அதி புத்திசாலிகள் என்று யூத இனத்தை சேர்ந்தவர்களை சொல்வார்கள். நோபல் பரிசு வாங்கியவர்களில்  அதிகம் பேர் யூத இனத்தை சேர்ந்தவர்களே. அவர்களிடையே தான் நகைச்சுவை கதைகளும் துணுக்குகளும் அதிகம் .இருக்கின்றன.அவர்களுக்குத்தான் அதிகம் போரடிக்கவும் செய்யும்.

அம்மா சுட்ட தோசை

0

Posted on : Tuesday, September 17, 2013 | By : ஜெயராஜன் | In :

அம்மா தோசை சுட்டுக் கொடுக்கக் கொடுக்க பையன் ஆவலுடன் சாப்பிட்டான்
வழக்கமாக ஐந்து தோசை சாப்பிடுவான்.அன்று எட்டு தோசை சாப்பிட்ட பின்னும் மீண்டும் தோசை கேட்டான்.அம்மா சொன்னார்,''தம்பி,இன்று போதும்.இதுக்கு மேல் சாப்பிட்டால் உன் வயிறு வெடித்துவிடும்.''பையன் சொன்னான்,''பரவாயில்லை அம்மா,நீ இன்னொரு தோசை சுட்டுக் கொடுத்து விட்டு, என் வயிறு வெடித்துவிடும் என்று பயந்தால் ஒதுங்கி நின்று கொள்.''
******
காதலன் காதலியிடம் சொன்னான்,''இன்று மட்டும் நமது வழக்கத்தை மாற்றிக் கொள்வோமே!''காதலி என்னவென்று கேட்டாள்.காதலன் சொன்னான்,''இன்று நீ என்னை முத்தம் இட முயற்சி செய்.நான் உன்னைக் கன்னத்தில் அறைகிறேன்.''
******
ஒருவன் நண்பனிடம் கேட்டான்,''ஒரு பெண்ணுக்கு எப்படி நீச்சல் சொல்லிக் கொடுப்பது?''நண்பன் சொன்னான்,''அது மிக நல்ல விசயமாயிற்றே!.
தண்ணீரில் இறங்கி முதலில் பெண்ணை இடுப்பை சுற்றிப் பிடித்துக் கொள்.பின் அவளுடைய வலது கையை மெதுவாக எடுத்து...''
''ஏய்,நிறுத்து.நான் என் சகோதரிக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும்.''
நண்பன் சொன்னான் ,''அப்படியானால் நீச்சல் மேடையிலிருந்து அவளை தண்ணீரில் தள்ளிவிட்டுவிடு.''
******

சிரிக்கும் புத்தர்கள்

1

Posted on : Saturday, September 14, 2013 | By : ஜெயராஜன் | In :

சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தார்கள்.அவர்கள் எங்கும் சேர்ந்தே செல்வார்கள்.ஒரு  ஊருக்குச்  சென்றால் அந்த ஊரின் மையப் பகுதியில் நின்று கொண்டு மூவரும் வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பிப்பார்கள்.உடனே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்து விடும்.சிறிது நேரத்தில் அனைவருமே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.அவர்கள் எந்த விதமான புத்திமதிகளோ ஆலோசனைகளோ சொல்வது இல்லை.அது ஏன்?சிரிப்பைத்தவிர அவர்கள் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அவர்கள் வந்த இடம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மக்கள் அவர்களை மிக நேசித்து 'சிரிக்கும் புத்தர்கள்' (LAUGHING BUDHDHAS)என்று அழைத்தார்கள்.ஒரு கிராமத்துக்கு  சென்ற போது அவர்களில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.இப்போது மீதி இரண்டு பேரும் கண்டிப்பாக அழுவார்கள் என்று எண்ணி மக்கள் சென்றபோது அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.அதில் ஒருவர் அதிசயமாய் வாய் திறந்து,''அவன் மரணத்தில் எங்களை  வென்று விட்டான். அவன் வெற்றியைக் கொண்டாட நாங்கள் சிரிக்கிறோம்,''என்றார்.பின் இறந்த புத்தரை அப்படியே சிதைக்குக் கொண்டு போனார்கள்.பிணத்தைக் குளிப்பாட்டவில்லை.புதுத் துணிகள் மாற்றவில்லை.ஏன் என்று மக்கள் கேட்டதற்கு அந்த ஞானி சொன்னார்,''அவன் இறக்கும் முன்னே, தான் தூய்மையாகவே இருப்பதாகவும் அதனால் இறந்தபின் தன்னை எந்த மாற்றமும்  செய்யாது அப்படியே சிதையில் எரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறான்'' என்றார்.சீதை மூட்டப்பட்டது.திடீரென இறந்த உடலிலிருந்து வான வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன.அப்போதுதான் எல்லோருக்கும் தெரிந்தது,அவர் ஏன் ஆடை மாற்ற வேண்டாம் என்று சொன்னார் என்று.தான் இறந்த பின்னும் மக்கள் கவலையின்றி சிரிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது  ஆடையின் உள்ளே வெடிகளை ஒளித்து வைத்திருக்கிறார். அது கடைசி வரை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.சிரிப்பையே போதனையாக தந்த அவர்களை இன்றும் மக்கள் மறவாதிருக்கிறார்கள்.
தற்போது அவர்கள் பொம்மைகளை வீட்டில் வைப்பது வளம் தரும் என்ற நம்பிக்கை உலகெங்கும் உள்ளது.

என் பழக்கம்

2

Posted on : Friday, September 13, 2013 | By : ஜெயராஜன் | In :

காதலி காதலனிடம் கேட்டாள்,''நீ என்னை உயிருக்குயிராய்க் காதலிப்பதாகச் சொல்கிறாயே,நான் உன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லைஎன்றால் தற்கொலை செய்து கொள்வாயா?''
காதலன் சொன்னான்,''உறுதியாக!அது என் பழக்கமாயிற்றே!''
******
காதலன் காதலியிடம் பெருமையாகக் கேட்டான்,''உன்வீட்டில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?நான் கவிதை எழுதுவது,கதை எழுதுவது இதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா?''
காதலி சொன்னாள்,''இப்போதுதான் நீ தண்ணி அடிப்பது,சூதாடுவது பற்றிச் சொல்லியுள்ளேன்.எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்ல முடியாதல்லவா?''
******
இளைஞன் ஒருவன் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடைக்குப் போனான்.ஒரு அட்டையில்,''நான் மிக விரும்பும் ஒரே ஒரு பெண்ணுக்கு என்  வாழ்த்துக்கள்'' என்றுஇருந்தது.கடைக்காரர் சொன்னார்,''இதை நிறையப் பேர் விரும்பி வாங்குகிறார்கள்,''.உடனே இளைஞன் சொன்னான்,''அப்படியானால் அதில்  ஆறு அட்டைகள் கொடுங்கள்.''
******

இராட்டினம்

2

Posted on : Thursday, September 12, 2013 | By : ஜெயராஜன் | In :

முல்லா, ஒரு பொருட்காட்சி சாலையில் ஒரு ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.ராட்டினம் நின்றவுடன் வேகமாக இறங்கிக் கீழே சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வேகமாக வந்து ராட்டினத்தில் ஏறிக்  கொண்டார்.இதுபோல திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தார்.இவரை முழுவதும் கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி கேட்டாள், ''முல்லா, உங்களுக்கு ராட்டினத்தில் சுற்றுவது என்றால் அவ்வளவு ஆசையா?''முல்லா சொன்னார்,''இல்லை,அம்மா,எனக்கு ராட்டினத்தில்  சுற்றுவது பிடிக்கவே செய்யாது.தலை வேறு சுற்றும்,வாந்தி வரும்,''அச்சிறுமி ஆச்சரியத்துடன்,''பின் ஏன் மீண்டும் மீண்டும் சுற்றுகிறீர்கள்?''என்று கேட்க,முல்லா சொன்னார்,''என்னம்மா செய்வது?இந்தப்பயல் எனக்கு கடன் தர வேண்டியுள்ளது.நீண்ட நாட்களாகக் கேட்டும் தரவில்லை.இப்படியாவது ராட்டினத்தில் ஏறிக்  கணக்கை முடிக்கலாமே என்று நினைத்தேன்.''
******
முல்லா ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலித்தார்.அந்தப் பெண் ஒருநாள் சோகமாக வந்து,''முல்லா,என் அப்பா சொத்து முழுவதையும்  தொலைத்து விட்டார்.இப்போது நான் ஒரு ஏழை.என்னை எப்போதும் போலக் காதலிப்பீர்களா?''என்று கேட்டாள்.முல்லாவும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு,''நான் உன்னை ஆயுள் முழுவதும் காதலிப்பேன்.இனி நீ என்னை எப்போதும் பார்க்க முடியாது என்றாலும் தொடர்ந்து நான் உன்னைக் காதலிப்பேன்.''என்றார்.
******

நேரம் பாராது...

0

Posted on : Wednesday, September 11, 2013 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு அலுவகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.தினசரி வேலைக்கு தாமதமாக வருவதைக் கவனித்த முதலாளி,''என்ன முல்லா,கடிகாரம் பார்ப்பது இல்லையா?''என்று கேட்டார்.முல்லா உடனே ,''எனக்கு  கடிகாரம் பார்க்கும் பழக்கம் போய்விட்டது.அதற்குக் காரணம் நீங்கள்தான்.''என்றார்,அதிர்ந்து போய் முல்லாவை முதலாளி பார்க்க,முல்லா தொடர்ந்தார்,''தினசரி அலுவலகத்தில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எல்லோரும் நேரம் பார்க்காது வேலை பார்க்க வேண்டும் என்று தானே அடிக்கடி சொல்கிறீர்கள்!அதை அப்படியே கடைப் பிடித்து வந்ததால் இப்போது கடிகாரம் பார்க்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது.என்ன...வீட்டிற்குப் போனாலும் இதே பழக்கம் தொடர்கிறது.''
******
முல்லா ஒருவரிடம் வேலை கேட்டுப் போனார்.தனக்கு அவர்கள் கேட்பது போல ஐந்து வருட அனுபவம் இருப்பதாகக் கூற அவருக்கு உடனே வேலை கிடைத்து விட்டது.சிறிது நாள் கழித்து அவரை முதலாளி கூப்பிட்டு அனுப்பி,''விசாரித்ததில் உனக்கு எந்த அனுபவமும் இருப்பதாகத் தெரியவில்லையே.ஏன் பொய் சொன்னாய்?''என்று கேட்டார்.முல்லா சொன்னார்,''நீங்கள்தான் இந்த வேலைக்கு  கற்பனைத்திறன் மிக்கவர்கள் வேண்டும் என்று கேட்டீர்கள்!''
******

மனிதர்கள்

3

Posted on : Tuesday, September 10, 2013 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் மகிழ்ச்சியை அது இல்லாத இடத்தில் தேடுகிறார்கள்.அவர்கள் பாலைவனங்களில் தண்ணீரைத் தேடுகிறார்கள்.ஏமாற்றம் வரும் போது, தோல்வி வரும்போது,துயரம் வரும்போது அவர்கள் வாழ்க்கை மீது கோபம் கொள்கிறார்கள்.தங்கள் மீது கோபம் கொள்வதில்லை.வாழ்க்கை என்ன செய்யும்?அது எப்போதும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.நீங்கள்தான் அதைத் தவறான வழியில் தேட முற்பட்டு விடுகிறீர்கள்.
******
மனிதர்கள் எல்லோருமே தனது நல்ல பக்கத்தை மட்டுமே உலகிற்குக் காட்டுகிறார்கள்.இதயம் முழுவதும் கண்ணீரால் நிரம்பி இருக்கலாம்.ஆனால் மனிதர்கள் புன்னகை செய்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறுதான் நாம் ஒரு பொய்யான சமூகத்தால் வளர்க்கப்பட்டு இருக்கிறோம்.நாம் உருவாக்கியுள்ள  இந்த முழு சமுதாயமும் ஒரு நாடகம்தான்.யாரும் தனது சொந்த இதயத்தைத் திறப்பதில்லை.
******
ஒருமுறை வந்தபின் உங்களை ஒருபோதும் நீங்கிச் செல்லாத திருப்திதான் உண்மையான திருப்தி.வந்துகொண்டும்,திரும்பப் போய்க் கொண்டும் இருக்கும் திருப்தி உண்மையான திருப்தி இல்லை.அது இரண்டு துயரங்களின் இடையே உள்ள இடைவெளி.
******

நாகரீகத்தந்திரம்

2

Posted on : Monday, September 09, 2013 | By : ஜெயராஜன் | In :

பிறரிடம் மரியாதையாக இருப்பவர்கள்தான் அதிக தன்  முனைப்புடையவர்களாக (EGOISTS)இருக்கிறார்கள்.அவர்கள் நிற்கின்ற பாங்கு,பேசுகிற விதம்,பார்க்கின்ற பார்வை,நடை எல்லாவற்றையும் மரியாதையாக இருப்பதுபோலக் காட்டிக் கொள்கிறார்கள்.ஆனால் உள்ளே அவர்களின் தன்முனைப்புதான் அவர்களைக் கையாளுகிறது.மிகவும் பணிவாக இருப்பவர்கள் ''தாங்கள் ஒன்றுமே இல்லை,கால்தூசு போன்றவர்கள்''என்று சொல்லிக்கொள்வார்கள்.ஆனால் அப்போது அவர்கள் கண்களைப் பார்த்தால் அங்கு தன்முனைப்பு ஆட்சி செய்வது தெரியும்.இதுமிக தந்திரமான தன்முனைப்பு ஆகும்.
மரியாதையாக இருப்பவர்கள் மிகவும் தந்திரக்காரர்கள்.சிறந்த சாமர்த்தியசாலிகள்.அவர்கள்,'நான் மிகச்சிறந்தவன்,'என்று சொன்னால்  ஒவ்வொருவரும் அவர்களுக்கு எதிரிகள்  ஆகி விடுவார்கள்.பிறகு போராட்டம் எழுகிறது.அவர்கள் தன்முனைப்பளர்கள் என்று முத்திரை குத்தப்படுவர்.அப்புறம் மக்களைத் தங்களுக்கு வசதியாக உபயோகப் படுத்திக் கொள்ள முடியாது.ஆனால் அவர்கள்,'நான் கால் தூசியைப் போன்றவன்'என்று சொன்னால்,மக்கள் எல்லோரும் அவர்களுக்கு தங்கள் கதவைத் திறப்பார்கள்.பிறகு அம்மக்களை அவர்கள் வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.எல்லாவிதமான மரியாதைகளும் பண்பாடுகளும் ஒரு வகையான நாகரீகத்  தந்திரத்தனமாகும்.

பண்பாடு

0

Posted on : Sunday, September 08, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள்.மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்,''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பழி கொடுக்கத் துணிந்தாய்?''என்று.அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னாள்,''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் ராணுவம் வந்தது.பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது.அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்.''அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.
         எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் சொன்ன ஜப்பானியக் கதை. இது. ஜப்பானியர்களின்  பண்பை விளக்கும் கதை.

சம்பிரதாயம்

3

Posted on : Wednesday, September 04, 2013 | By : ஜெயராஜன் | In :

மத போதகர் ஒருவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அவர் கடவுளை வணங்கும் முறை மற்றும் மத சம்பந்தமான சாஸ்திர சம்பிரதாயங்களில் கரை கண்டவர்.திடீரென கடலின் சீற்றம் காரணமாக கப்பல் சேதமடைந்து தெய்வாதீனமாக அவர் தப்பி ஒரு தீவினை அடைந்தார்.இவர் ஒரு மதபோதகர் என்பதனை அறிந்த அவ்வூர் மக்கள் மிகுந்த நட்பு பாராட்டினர்.அவரும் அங்கு மத போதகர் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.மக்களும் அங்கு அவ்வாறு யாரும் இல்லைஎன்றும் அவ்வூரில் மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும் அவர்கள் இறை பக்தி மிக்கவர்கள் என்றும் மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்றும் அவர்கள் சொல்வது படிதான் அங்கு வழிபாடுகள் நடக்கும் என்று கூறினார்.போதகரும் உடனே அவர்களைப் பார்க்க விரும்பியதால் அவர்களிடம் அவர் அழைத்து செல்லப்பட்டார்.மூன்று சகோதரர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர்.பொதுவான விசயங்கள் பேசி முடித்ததும் போதகர் அங்கு இறைவழிபாடு என்ன முறையில் நடக்கிறது என்று கேட்டார்.அந்த சகோதரர்கள் ,''நாங்கள்  எங்கள்  தொழிலில் முழு கவனமுடன் இருப்போம்.எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் ஆண்டவனுக்கு தினமும் சிறிது நேரம் சாதாரணமாக நன்றி சொல்வோம்.''என்றனர்.இவர்கள் அறியாமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய போதகர் அவர்களிடம் இறை வழிபாட்டு முறைகளை விளக்கினார்.அவர்களுக்கு சில பாடல்கள் புரியவில்லை என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டினர்.பல முறை சொல்லிக் கொடுத்தும்  அவர்களால் சரியாக உச்சரித்துப் பாடமுடியவில்லை.அதற்காக அவர்கள் வருத்தப்பட்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்கள்.இதற்கிடையில் ஒருநாள் ஒரு கப்பல் அங்கு வந்ததால் போதகரும் அவர்களிடம் தான் சொல்லிக் கொடுத்தவற்றைக் கடைப்பிடிக்க சொல்லி அறிவுறுத்தி விட்டு கப்பலில் ஏறினார்.கப்பல் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. .மக்கள் அனைவரையும் பார்த்துக் கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தார்,போதகர்.அப்போது அவர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.அந்த மூவரும் கடலில் வேகமாக நடந்தவாறு கப்பலை நோக்கிக் கத்தியபடி வந்து கொண்டிருந்தனர்.கப்பல் உடனே நிறுத்தப்பட்டது. மூச்சிறைக்க வந்த அவர்கள் போதகரிடம்,''ஐயா,நீங்கள் சொல்லிக் கொடுத்தது மறந்துவிட்டது.தயவு செய்து இன்னொரு முறை சொல்லிக் கொடுங்கள்,''என்றனர்.போதகர் சொன்னார்,''என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.உண்மையான பக்தி சம்பிரதாயங்களில் இல்லை என்று நீங்கள் எனக்கு உணர்த்திவிட்டீர்கள்.நீங்கள் உங்கள் வழக்கப்படியே இறைவனை வணங்குங்கள்.கடலிலே நடக்கக் கூடிய அளவுக்கு உங்களிடம் இறைவனின் கருணை உள்ளது .உங்கள் காலில் விழக்கூட நான் தகுதியற்றவன்,'' என்றார்.அவர் சொல்வது புரியாது அம்மூவரும் அவரிடம் விடைபெற்றனர்.