உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நகைச்சுவை உணர்வு

0

Posted on : Wednesday, June 29, 2011 | By : ஜெயராஜன் | In :

சிரிப்பு என்பது எல்லாக் காலங்களிலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சமுதாயத்தால் அடக்கப்பட்டு வருகிற விசயமாகும்.சமுதாயம் நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போதோ,பெற்றோர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போதோ சிரித்தால்அவமரியாதையாகக் கருதப்படும்.தீவிரமாக இருப்பது மரியாதை என்று எண்ணப்படுகிறது.ஆனால் வாழ்க்கை தீவிரமான ஒன்று அல்ல.மரணம் தான் தீவிரமானது.
வாழ்க்கை என்பது அன்பு ,சிரிப்பு,ஆடல்,பாடல் தான்.கடந்த காலம் வாழ்வை முடமாக்கி உள்ளது.அது சிரிப்பைக் காண முடியாத மனிதர்களாக உங்களை ஆக்கி உள்ளது.நீங்கள் எப்போதும் துயரத்துடன் காணப்படுகிறீர்கள்.ஆனால் உண்மையில் நீங்கள் காட்சி தருகிற அளவுக்கு துயரம் இருப்பதில்லை. துயரமும் தீவிரத்தன்மையும் ஒன்று சேர்ந்து உங்களை மிகவும் துயரத்துடன்  இருப்பதாகக் காட்டுகிறது.துயரத்துடன் சற்றே சிரிப்பை சேருங்கள்.அப்போது நீங்கள் அத்தனை துயரத்துடன் காணப் பட மாட்டீர்கள். வாழ்வை சற்றே கவனித்து நகைப்புக்குரிய விசயங்களைப் பாருங்கள். ஒரு நல்ல மனிதனின் அடிப்படைத் தன்மையாக நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.
தீவிரமாக இருப்பது ஒரு பாவம்.ஒரு வியாதி.சிரிப்பின் மகத்தான அழகு உங்களை லேசாக்கி பறக்க சிறகுகளைத் தரும்.பிறர் சிரிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள்.மனிதர்களின் குணங்களிலேயே சிரிப்பு தான் மிகவும் போற்றப்படும் குணமாக இருக்க வேண்டும்.அதை அடக்குவது மனிதப் பண்பை அழிப்பதாகும்.

கனவும் நனவும்

0

Posted on : Wednesday, June 29, 2011 | By : ஜெயராஜன் | In :

உடல் ஆரோக்கியத்திற்கு கனவு அவசியம்.மனிதன் தூங்கும் எட்டு மணி நேரத்தில் முதல் மூன்று மணி நேரம் ஆழ்ந்த தூக்கம்(deep sleep).அடுத்த இரண்டு மணி நேரம் கனவுத்தூக்கம்(dream sleep).இந்த சமயத்தில் கண் இமை மூடியிருந்தாலும் கண்கள் ஆடத்தொடங்கும்.அந்த சமயத்தில் அந்த மனிதனை எழுப்பிக் கேட்டால்,கனவு கண்டு கொண்டிருந்ததாகச்  சொல்வான்.இந்த நிலைக்கு Rapid eye movement(REM)  என்று பெயர்.மீண்டும் தொண்ணூறு நிமிடம்   ஆழ்ந்த தூக்கம்.அதற்குப் பிறகு தொண்ணூறு நிமிடம் கனவுத்தூக்கம்.இதற்குப் பிறகு மனிதன் விழித்துக் கொள்வான்.இந்த நியதி மாறினால் மனிதனுக்கு ஏதோ வியாதி என்று பொருள். எல்லாக் கனவுகளும் நினைவுக்கு வரும் என்று சொல்ல முடியாது.முதல் கட்ட கனவுத் தூக்கத்தில் வரும் கனவுகள் பெரும்பாலும் ஞாபகத்துக்கு வராது.இரண்டாவது கட்ட கனவுத்தூக்கத்தில் வரும் கனவுகள் சில நினைவுக்கு வரலாம்.மொத்தத்தில் 80% கனவுகள் நினைவில் வருவதே இல்லை.
மன நிலை பாதிக்கப்படும்போது இந்தத் தூக்க முறையும் பாதிக்கப் படுகிறது.ஆழ்ந்த தூக்கம் குறைந்து கனவுத் தூக்க நேரம் அதிகமானாலும்,'தூக்கம் கெட்டுப்போச்சு,ஒரே கனவு,'என்பார்கள்.தூக்கம் வரவில்லைஎன்று தூக்க மாத்திரை சாப்பிட்டால் தூக்கத்தின் இயற்கை நியதி கெட்டுப் போகிறது.இதனால் நாளடைவில் மூளையின் செயல் திறன் குறைகிறது.சோம்பேறித்தனம்,சிடுசிடுப்பு,உழைப்பில் ஆர்வமின்மை உண்டாகின்றன.
கனவுத்தூக்கத்தில் மூளையிலிருந்து சில கழிவுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன.அதனால் மூளை தடையின்றி இயங்குவது சாத்தியமாகிறது.இந்தத் தூக்கத்தில் மூளை தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்கிறது.
மனிதன் அன்றாட வாழ்வில் பல அனுபவங்களைப் பெறுகிறான்.அவை மூளையில் பதிவாகின்றன.கோபம்,பொறாமை,பேராசை போன்ற கெட்ட குணங்கள் அந்த அனுபவங்களின்  மூலம் விளையலாம்.ஆனால் சூழ்நிலை காரணமாக மனதில் இவ்வுணர்வுகள் அமுக்கப்படுகின்றன.இரண்டு நிலை கனவுத் தூக்கத்திலும் இந்த உணர்வுகள் மாறுபட்ட உருவத்தில் கனவாக வெளிவரும் சாத்தியக் கூறுகள் உள்ளன.அதனால் தான் மனிதன் மூளை கலங்காமல்(sane) இருக்கிறான்.உணர்வுகளுக்கு வடிகாலாகக் கனவுகள் விளங்குகின்றன.நாம் உண்ணும் உணவுக்கும் கனவுக்கும் தொடர்பு உண்டு. உண்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாவிட்டால் கனவுத்தூக்கம் கெட்டுவிடும்.
                                    --நரம்பியல் மேதை டாக்டர்.பி.ராமமூர்த்தி.

மூன்று வகை மனிதர்கள்

0

Posted on : Tuesday, June 28, 2011 | By : ஜெயராஜன் | In :

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் பார்வையில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.
முதல் வகையினர் பாடல மரத்தைப் போன்றவர்கள்.இம்மரம் பூக்குமே தவிர காய்க்காது.இந்த மரத்தைப் போன்றவர்கள் பேசுவார்கள்,ஆனால் காரியம் சாதிக்க மாட்டார்கள்.
இரண்டாம் வகையினர் மாமரத்தைப் போன்றவர்கள்.இம்மரம் பூக்கவும் செய்யும்,காய்க்கவும் செய்யும்.இந்த மரத்தைப் போன்றவர்கள் பேசவும் செய்வார்கள்,காரியமும் செய்வார்கள்.
மூன்றாவது வகையினர் பலா மரத்தைப் போன்றவர்கள்.பலா பூக்காமலே காய்க்கும்.இவ்வகையினர் பேசாமலே காரியம் செய்வார்கள்.

கோபம் மறைய

0

Posted on : Tuesday, June 28, 2011 | By : ஜெயராஜன் | In :

கோபம் கொள்ளும் போதெல்லாம் ஐந்து தடவை ஆழ்ந்து சுவாசியுங்கள்.இந்த எளிய பயிற்சி வெளிப்பார்வைக்கு கோபத்துடன் சம்பந்தம் இல்லாதது போலத்தோன்றும்.உணர்வற்றவராக நீங்கள் இருக்கும்போதே கோபம் வரும்.இப்பயிற்சி உணர்வுள்ள ஒரு முயற்சி.இப்பயிற்சி உங்கள் மனதை உன்னிப்புடையதாக ஆக்கும்.மனம் விழிப்படைகிறது.உடலும் விழிப்படைகிறது.இந்த விழிப்பான கணத்தில் கோபம் மறைந்து  விட்டிருக்கும். இரண்டாவதாக,உங்கள் மனது ஒரு பக்கத்தில் மட்டுமே முனைப்பாக  இருக்க முடியும்.ஒரே நேரத்தில் இரண்டு விசயங்களை மனத்தால் சிந்திக்க முடியாது. கோபம் இருந்தால் அது மட்டுமே இருக்கிறது.மூச்சுப் பயிற்சியில் மனம் மூச்சு விடுவதோடு மட்டுமே இருக்கிறது.அதாவது மனதின் கவனம் திரும்பி இருக்கிறது.இப்போது அது வேறு பாதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.மறுபடியும் நீங்கள் கோபிக்கத் திரும்பினாலும் பழைய மாதிரி உங்களால் கோபிக்க முடியாது. தொடர்ந்து கோபம் வரும்போதெல்லாம் இப்பயிற்சியை செய்யுங்கள். அப்போது அது ஒரு பழக்கமாக ஆகி விடுகிறது.இனி நீங்கள் நினைத்துப் பார்க்காமலேயே கோபம் வரும்போதெல்லாம் உடனடியாக உங்கள் உடல் இயந்திரம் தானே வேகமாக ஆழ்ந்து மூச்சு விட தொடங்குகிறது.சில ஆண்டுகளில் கோபம் உங்களிடமிருந்து மறைந்து விடும்.

முல்லாவின் கழுதை

0

Posted on : Monday, June 27, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லாவின் கழுதை காணவில்லை.முல்லாவிற்கோ ஒரே வருத்தம்.நண்பர்கள் கேட்டார்கள்,''என்ன முல்லா,ஒரு கழுதைக்காக  இவ்வளவு கவலைப்படுகிறீர்கள் ? உங்கள்  மனைவி இறந்தபோதுகூட  இவ்வளவு துக்கப்படவில்லையே!''முல்லா சொன்னார்,''நண்பர்களே,என் மனைவி இறந்தபோது,நீங்களெல்லாம்,கவலைப்படாதே,வேறு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கிறோம் என்று சொன்னீர்கள்.ஆனால் இப்போது உங்களில் ஒருவர் கூட,இந்தக் கழுதை போனால் போகிறது,இன்னொரு கழுதை வாங்கித்தருகிறோம்,என்று கூறவில்லையே?''நபர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

பொது இடத்தில்

0

Posted on : Monday, June 27, 2011 | By : ஜெயராஜன் | In :

நம் வீட்டில் இருப்பவர்கள் நமக்குக் கடமைப் பட்டவர்கள்.நம் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்.பொது இடத்தில் நாம் சந்திக்கின்றவர்கள் அப்படியல்ல. இந்த  வித்தியாசத்தைப் பலர் உணர்வதேயில்லை.இதனால் பல தொல்லைகள் வந்து சேர்கின்றன.
பொது இடத்தில் ஒரு தவறு செய்துவிட்டு தன தவறை உணராமல் கத்துபவர்கள் உண்டு.அதாவது,பலர் முன்னிலையில் தாங்கள் அவமானப் பட்டுவிட்டோம்,அதைத் துடைக்க வேண்டும்,சப்தம் போட்டும் குரலை உயர்த்தியும் தம் தவறை நியாயப்படுத்த முடியும் என நம்பும் ரகத்தினர்  இவர்கள்.
பொது இடத்தில் அபமானத்தைத் துடைக்க ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மேலும் அவமானம் அடைகிறார்கள் என்பதுதான் உண்மை.
தனிப்பட்ட விசயங்களைக் காதும் காதும் வைத்த மாதிரி பேச வேண்டுமே தவிர,பொது இடத்தில் போட்டு உடைக்கக் கூடாது.
மொத்தத்தில் சொல்லப்போனால்,நம்மிடம் எவ்வளவு குணக் குறைபாடுகள்  இருந்தாலும் அது பொது இடத்தில் வெளிப்பட்டு விடக்கூடாது.
பொது இடத்தில் கூட முன்பின் தெரியாதவர்களையும் கவர்வதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்ற பாணியில் போய் விட வேண்டாம்.
                                                        --லேனா தமிழ்வாணன்.

தொண்டன்

0

Posted on : Sunday, June 26, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு இடையன் பசுக்களுக்கு சேவகனே தவிர தலைவன் இல்லை.
ஒரு தோட்டக்காரன் மரம் செடி கொடிகளுக்கு தொண்டனே தவிர தலைவன் இல்லை.
பழம்,நறுமணம் என்பவை மரம் செடி கொடிகளின் சொத்தே தவிர,தோட்டக்காரனுடைய உரிமை இல்லை.
வீசுகிற நறுமணம் தோட்டக்காரனுடைய ஆணைய எதிர்பார்த்து இருப்பது இல்லை.
அரசன் என்பவன் தலைவன் அல்ல;தொண்டன்தான்.

யாருக்காக?

0

Posted on : Sunday, June 26, 2011 | By : ஜெயராஜன் | In :

பேரரசர் அக்பரின் அவையிலே தான்சேன் என்ற சிறந்த இசைக்கலைஞர் இருந்தார்.அவருடைய இசையிலே அக்பர் மயங்கி விடுவார்.''இந்த உலகத்தில் உங்களை விட சிறந்த இசைக் கலைஞர் யாரும் கிடையாது என்பது என் அபிப்பிராயம்,''என்று ஒரு நாள் அக்பர் தான்சேனிடம்  சொன்னார்.தான்சேன் அதற்கு தன்னைவிட தனது குரு சிறந்த இசைக் கலைஞர் என்று பணிவுடன் தெரிவித்தார்.அக்பர்,''அப்படியானால் அவருடைய இசையைக் கேட்க வேண்டுமே,அவரை உடனே அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்,''என்று சொன்னார்.அதற்கு தான்சேன்,''அவர் இங்கு வரமாட்டார்.நாம்தான் அவருடைய இருப்பிடம் செல்ல வேண்டும்,''என்றார்.இசையின் மீது இருந்த ஆவலால் அதற்கு ஒப்புக்கொண்ட அரசர் தான்சேன் உடன்  அவருடைய குரு இருந்த இடத்திற்கு சென்றார்.அவருடைய இசையைக் கேட்டார்.என்னதெய்வீகமான இசை!
அந்தப் பாட்டைக் கேட்டு அக்பர் மெய்மறந்தார்அரண்மனை திரும்பியவுடன் அக்பர் தான்சேனி டம்  கேட்டார்,''நீங்கள் ஏன் உங்கள் குரு மாதிரி பாடுவதில்லை?''தான்சேன் சொன்னார்,''நான் உங்கள் திருப்திக்காகப் பாடுகிறேன்.அவர் ஆண்டவன் திருப்திக்காக,தன ஆன்ம திருப்திக்காகப்  பாடுகிறார்.அதுதான் வித்தியாசம்.''

தங்க ஓர் இடம்

0

Posted on : Saturday, June 25, 2011 | By : ஜெயராஜன் | In :

சீக்கிய குரு குருநானக் தன புனிதப் பயணத்தின்போது ஒரு நாள் இரவு ஒரு  புனித ஸ்தலத்துக்கு வந்தார்.அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு  புனித மடம் சென்றடைந்தார்.அந்த மடத்தின் தலைவர்,குருநானக்கைப் பற்றி நன்கு அறிந்தவர் இருந்தும் மடத்தில் எந்த அறையும் காலியாக இல்லாததால்  அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.தன நிலையை நேரடியாக சொல்ல யோசித்த தலைவர் குருநானக்கிடம் பால் ததும்பி வழியக் கூடிய நிலையில் இருந்த ஒரு கிண்ணத்தை நீட்டினார்.அதன் உட்பொருளை,அதாவது மடம் நிரம்பி வழிகிறது,இடம் இல்லை என்று குருநானக்  மறைமுகமாக சொல்ல வருவதைப் புரிந்து கொண்டார்.குருநானக் சிறிது நேரம் பால் கிண்ணத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தார்.பின்னர் தன்னிடமிருந்த மல்லிகைப்பூவிலிருந்து சில இதழ்களைக் கிள்ளி எடுத்து பாலின் மீது போட்டு கிண்ணத்தை மடத்தலைவரிடம் திரும்ப  நீட்டினார்.மடத்  தலைவரும்,வழிய வழிய பால் ஊற்றப்பட்ட கிண்ணத்தில் மல்லிகை இதழ்களைப் போட்டதும் எந்த மாறுதலும் எற்படாததுபோல தன்னை அங்கு அனுமதித்தால் யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்க முடியும் என்று குறிப்பால் உணர்த்தியதைப் புரிந்து கொண்டு அவரை மடத்துக்குள் அனுமதித்தார்.

மேதை பட்ட பாடு

0

Posted on : Saturday, June 25, 2011 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர்.ஒருநாள் பகலில் வீதியில் நின்று கொண்டு தன வீட்டிற்கு செல்ல ஒரு டாக்சியை நிறுத்தினார்.அந்த ஓட்டுநரோ  தனக்கு வேலை நேரம் முடிந்து  விட்டது என்று சொல்லி நிற்காமல் சென்று விட்டான்.அடுத்து சிறிது நேரம்கழித்து வந்த டாக்சியின்  ஓட்டுனர்,அவர் செல்ல வேண்டிய இடம் பற்றி விசாரித்து விட்டு அங்கு தன டாக்சி வராது என்று சொல்லி சென்று விட்டான்.இன்னொருவன் தனக்கு சாப்பாட்டு நேரம் அதனால் வராது என்று கூறினான்.இப்படியே அவர் பல டாக்சிகளை நிறுத்திப் பார்த்தும் ஒருவன் கூட வரவில்லை.நீண்ட நேரம் வயலின் வாசித்தபோது கூட வலிக்காத அவர் கை இப்போது  வலித்ததுதான் மிச்சம்.நொந்துபோய் அவர் நின்று கொண்டிருந்தபோது ஒரு டாக்சி வந்தது.அது அவர் கை காட்டியும் நிற்காமல் சென்றது.சிறிது தூரம் சென்றதும் நின்றது.பின்புறமாக வந்தது அவர் அருகிலே வந்தவுடன் ,அந்த ஓட்டுனர் கேட்டார்,''நீங்கள் வயலின் மேதைதானே!''அவருக்கு அப்போதுதான் நிம்மதி ஏற்பட்டது.தன்னை அடையாளம் கண்டு ஒருவன் டாக்சியை நிறுத்தியதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.அவர் வண்டியினுள் ஏறுமுன் அந்த ஓட்டுனர் சொன்னார்,''புகைப்படத்தில் பார்த்ததைக் காட்டிலும் நேரில் பார்க்கும்போது குள்ளமாகத் தெரிகிறீர்கள்,''என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்து விட்டான்.

பெல்ட்

1

Posted on : Friday, June 24, 2011 | By : ஜெயராஜன் | In :

இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம்.உணவு அவசரத்தேவை.தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை.வருந்துகிறேன்.ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது.ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''

உண்மை எது?

0

Posted on : Friday, June 24, 2011 | By : ஜெயராஜன் | In :

உண்மைகளில் பல வகை உண்டு.
உலகிலேயே மனிதருக்கு ஏற்படும் வலிகளில் மிகவும் வேதனையானது எது என்று கேட்டால் பிரசவ வலிதான் என்று யாரும் பதில் சொல்வார்கள்.ஆனால் ஆண்களுக்கு இவ்வலி வராது என்பதால் அவர்களைப் பொறுத்தவரை இது 'தெரியாத உண்மை'
இவ்வுலகில் ஒரு பாகம் நிலம்,இரண்டு பாகம் நீர் என்கிறார்கள்.ஆனால் நீருக்கடியிலும் நிலம் தானே இருக்கிறது?இதுதான் 'பொய்யான உண்மை'

நல்லவர் ஆவது சுலபம்

1

Posted on : Thursday, June 23, 2011 | By : ஜெயராஜன் | In :

நாலு பேரிடம் நல்லவன் என்று பெயர் வாங்குவது ஒரு அரிய கலை.இதோ சில குறிப்புகள்:
*யாரைப் பற்றியாவது ஒரு பாராட்டு உங்கள் காதில் விழுந்தால் அதை உரியவரிடம் தெரிவிக்கத் தவறாதீர்கள்.முகஸ்துதியாக இல்லாமல் நிஜமான பாராட்டாக இருக்கட்டும்.
*அறிமுகமானவரின்  பெயரையோ முகத்தையோ அப்போதே மறந்து விடாதீர்கள்.அறிமுகமானவரிடம் அப்போதே அவர் பெயரை உச்சரித்துப் பேசுங்கள்.முகம்,பெயர் மறக்காமல் இருக்கும்.
*உரையாடலின்போது ஏதேனும் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனே நாசூக்காகப் பேச்சை மாற்றி அனைவரின் கவனத்தையும் வேறு புறம் திருப்புங்கள்.மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
*யாரையும் நையாண்டி செய்து பேசுவது வேண்டவே வேண்டாம்.சிறிய நிலையில் இருப்பவரும் தம்மைப் பற்றி அவரே உயர்வாக நினைக்கும்படி  செய்யுங்கள்.
*உங்களிடம் கூறப்படும் ரகசியத்தை யாருக்கும் சொல்லாதீர்கள்.
*விவாதங்களின்போது உங்கள் தவறை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுங்கள்.அதனால் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள்.
*நண்பரிடம் அவரைப் பற்றியே அதிகம் பேசுங்கள்.'நான்','எனது'என்று உங்களைப் பற்றிய புராணம் வேண்டாம்.
*நீங்களே பேசிக் கொண்டிருக்காமல் எதிராளியை நிறையப் பேச விடுங்கள். உள்ளுக்குள் மகிழ்ச்சியோ துயரமோ எது இருந்தாலும்  வெளியே பண்புடன் நடந்து கொள்ளுங்கள்.
*அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள்.பிறகு,'மனம் புண் பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறிப் பயனில்லை.
                           How to develop your personility என்ற நூலிலிருந்து.

ஒவ்வொரு நாளும்

0

Posted on : Thursday, June 23, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒவ்வொரு நாளும் நாம் நமக்குள் சொல்லிக் கொள்ள வேண்டியவை:
*நான் இன்று மகிழ்ச்சியாக இருப்பேன்.
*நான் இன்று யாருக்காவது ஒரு நன்மை செய்வேன்.
*நான் இன்று நன்கு உடுத்தி அனைவரிடமும்  இன்முகத்துடன் நடந்து கொள்வேன்.
*நான் இன்று கனிவுடன் பேசுவேன்;கண்டிக்க மாட்டேன்.
*நான் இன்று பாராட்டுவேன்;பழிக்க மாட்டேன்.
*நான் இன்று என்னைத் திருத்திக் கொள்வேனே தவிர,யாரையும் திருத்த முயல மாட்டேன்.
*நான் இன்று செய்ய வேண்டியதை தள்ளிப் போடாமல் செய்வேன்.
*நான் இன்று ஒவ்வொரு மணிக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதி வைத்துக் கொண்டு செயல்படுவேன்.இது பரபரப்பையும் குழப்பத்தையும் குறைக்கும்.
*நான் இன்று அரை மணி நேரம் தியானம் செய்வேன்.
*நான் இன்று எல்லோரிடமும் அன்பாக இருப்பேன்.எல்லோரும் என்னிடம் அன்பாக இருப்பதாக நம்புவேன்.

பெயர் வந்தது எப்படி ?

0

Posted on : Wednesday, June 22, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆங்கிலத்தில் நீர் யானையை 'ஹிப்போபொட்டமஸ்என்கிறோம்.'ஹிப்போஸ்'என்றால் குதிரை; 'பொடேமஸ்'' என்றால் நதி என்று பொருள்.
காண்டாமிருகத்தை,'ரினோசெராஸ்'என்கிறோம்.'ரினோஸ்'என்றால் மூக்கு. 'கெராஸ்'என்றால் கொம்பு.
சிறுத்தைப் புலியை ,''லெபர்ட்'என்கிறோம்.இலத்தீன் மொழியில் லெப்பார்ட்ஸ் என்றால் 'புள்ளியுள்ள சிங்கம்'என்று பொருள்
அரேபியாவில் ஒட்டகத்தை GAMEL'என்று சொல்கிறார்கள்.அதுவே 'CAMEL'ஆகிவிட்டது.
ஒட்டகச்சிவிங்கியை  'ஜிராபி'என்கிறோம்.அரேபிய மொழியில் 'ஜிராபோ' என்றால் 'நீண்ட கழுத்து'என்று பொருள். ' 
ஐஸ் லேண்டில் பசுவை KU என்கிறார்கள்.இதுவே COW ஆகிவிட்டது.
பூனையை 'CAT'என்கிறோம்.அது பிரெஞ்ச் வார்த்தையான CHAT'லிருந்து வந்தது.அந்த வார்த்தையும் GATA'என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.
'DUCK'என்பதற்கு,'தலையை   நீரில் முக்கிஎடு'என்றுபொருள்.வாத்து அதைத்தானே செய்கிறது!

பீரோ

0

Posted on : Wednesday, June 22, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு குடும்பம் ஊருக்குக் கிளம்பியது.மனைவி,பெட்டி,படுக்கை,பாத்திரங்கள் என்று ஏகப்பட்ட பொருட்களை தூக்கி வந்தாள்.அவர்கள் ஒரு  வழியாக புகைவண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.புகைவண்டியில் ஒரே கூட்டம்.சாதாரணமாக ஏறுவதே கடினம் என்ற நிலையில் இவ்வளவு பொருட்களுடன் எப்படி ஏறுவது?கணவன் அப்போது கோபமாக,''வீட்டிலுள்ள இரும்பு பீரோவையும் நீ தூக்கி வந்திருக்கலாம்.அதை எப்படி வீட்டில் விட்டு வந்தாய்?என்றான்.மனைவி அமைதியாக சொன்னாள்,''நீங்க சொல்வதும் சரிதான்.இரும்பு பீரோவையும் தூக்கி வந்திருக்கலாம்.ஏனெனில் அதிதான் இன்றைய பிரயாணத்துக்கான டிக்கெட்டுகளை வைத்துள்ளேன்.''

தந்தை

0

Posted on : Tuesday, June 21, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு ஏழை விறகுவெட்டி.
சாமுவேல் ஜான்சனின் தந்தை ஒரு ஏழை புத்தக வியாபாரி.
ஜோசப் ஸ்டாலினின் தந்தை இரு ஏழை செருப்பு தைப்பவர்.
ஹென்றி போர்டின் தந்தை ஒரு ஏழை பண்ணை வேலையாள்.
ராக்பெல்லரின் தந்தை ஒரு ஏழை கணக்கர்.
தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தை ஒரு ஏழை படகு கட்டுபவர்.
ஜோசப் கரிபால்டியின் தந்தை ஒரு ஏழை செம்படவர்.
சார்லஸ் டிக்கனின் தந்தை ஒரு ஏழை குமாஸ்தா.
சர்தார் வல்லபாய் பட்டேலின் தந்தை ஒரு ஏழை விவசாயி'
பெஞ்சமின் பிரான்க்ளினின் தந்தை ஒரு ஏழை மெழுகுவர்த்தி விற்பவர்.
ஷேக்ஸ்பியரின் தந்தை ஒரு ஏழை குதிரை லாயப் பணியாளர்.
பால கங்காதர திலகரின் தந்தை ஒரு ஏழை தொடக்கப் பள்ளி ஆசிரியர்.
ஏழ்மைக்கும் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை.

சிரிக்க வாங்க

0

Posted on : Tuesday, June 21, 2011 | By : ஜெயராஜன் | In :

தன் காரை சரி செய்ய ஒரு மெக்கானிக்கிடம் ஒப்படைத்தார் ஒருவர்.இரண்டு நாள் கழித்து அவரிடம்,''வண்டியில் என்ன வேலை?''என்று கேட்டார்.மெக்கானிக் சொன்னார்,''உங்கள் பேட்டரிக்கு கார் மாற்ற வேண்டும்.''
**********
தன் நண்பனின்காரைப்பற்றி பெருமையாய் ஒருவன் சொன்னான்,''அந்தக் காரில் ஹாரன் தவிர எல்லா பாகங்களும் சப்தம் போடும்.''
**********
மூன்று நண்பர்கள் ஒரு புகைவண்டியில் பயணம் செய்தார்கள்.இறங்கும் இடம் வந்ததும் ஒருவன்,தன் பொருட்கள் ஏதும் எடுக்காமல் விடுபட்டிருக்கிறதா என்று கூடப் பார்க்காமல் விரைவாக இறங்கினான்.இரண்டாமவனோ,தன் பொருட்கள் எதுவும் விடுபட்டிருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை பார்த்தான்.மூன்றாமவன் வேறு யாராவது ஏதாவது பொருட்களை விட்டுச் சென்றிருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
**********
கணவனும் மனைவியும் சினிமாவுக்கு செல்ல முடிவெடுத்திருந்தனர்.  கணவன் உடனே தயாராகிவிட்டான்.ஆனால் மனைவி அலங்காரத்தில் தாமதம் செய்து கொண்டிருந்தாள்.கணவன் பொறுமையிழந்து,''நான்  கடைசியாகக் கேட்கிறேன்.நீ வருகிறாயா இல்லையா?''மனைவி சொன்னாள்,''நானும் கடைசியாகச் சொல்கிறேன்,'இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவேன்,' ''
**********
பேருந்து நடத்துனர் ஒரு சிறுவனிடம் வயது கேட்க அவன் பதினொன்று என்றான்.நடத்துனர் கேலியாக,''உனக்கு எப்போதுதான் பன்னிரண்டு வயது ஆகும்?''என்று கேட்டார்.பையன் சொன்னான்,''பேருந்தை விட்டு இறங்கியதும்.''
**********
பொது சேவை ஒன்றிற்காக ஒரு கூட்டத்தில் பணம் வசூல் செய்து கொண்டு வந்தார்கள்.எல்லோரும் தங்களால் இயன்றதை கொடுத்தனர்.மூன்று நண்பர்கள் மாத்திரம் எதுவும் கொடுக்க விரும்பவில்லை.ஆனால் எப்படித் தப்பிப்பது என்று யோசித்தார்கள்.வசூல் செய்கிறவர் அருகில் வந்ததும் ஒருவன் மயக்கம் போட்டு விழுந்தான்.அடுத்த இருவரும் அவனைத் தூக்கிக் கொண்டு வெளியேறினர்.
**********
ஒரு பெரிய ஸ்டோரில் ஒருவன் சிகரெட் வாங்கிக்கொண்டு உடனே ஒன்றை எடுத்து பத்த வைத்தான்.அங்கிருந்த மேனேஜர்,''இங்கு புகைக்கக் கூடாது,''என்று வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைக் காட்டினார்.உடனே அவன்,''நீங்கள் தான் சிகரெட் விற்கிறீர்கள்.நீங்களே புகைக்கக் கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம்?''என்று சீறினான்.மேனேஜர் அமைதியாகச் சொன்னார்,''நாங்கள் குளித்தபின் துடைப்பதற்கான துண்டுகளையும் தான் விற்கிறோம்.அதற்காக........''
**********
''தாத்தா,நீங்கள் கடலை சாப்பிடுவீர்களா?'''
'எனக்குப் பல் இல்லையே பேராண்டி,என்னால் சாப்பிட முடியாது.'
''அப்படியானால் இந்தக் கடலையை வைத்திரு.நான் விளையாடி விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்.''
**********
நீதிபதி: நீ அந்த ஆள் துப்பாக்கியால் சுட்டதை நேரில் பார்த்தாயா?''
சாட்சி: இல்லை ஆனால் சுடும் சப்தத்தைக் கேட்டேன்.
நீதிபதி:அது போதுமான சாட்சியம் ஆகாது.
சாட்சி கூண்டிலிருந்து வெளியேறி நீதிபதிக்கு முதுகைக் காட்டிய வண்ணம்  பலமாக சப்தம் போட்டு  சிரித்தான்.நீதிபதி அவனைக் கூப்பிட்டு நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நடவடிக்கை எடுக்கப் போவதாக சொன்னார்.
சாட்சி:நீங்கள் நான் சிரித்ததைப் பார்த்தீர்களா?
நீதிபதி:இல்லை ஆனால் நீ சிரித்த சப்தம் எல்லோருக்கும் கேட்டதே.
சாட்சி:அது குற்றத்தை நிரூபிக்க போதுமான து இல்லையே.
**********
ஒருவன் தன் நண்பனிடம் கேட்டான்,''உன்னைப் பற்றி நாலு பேர் நாலு  விதமாகப் பேசுகிறார்களே,அதற்கு என்ன அர்த்தம்?''
நண்பன் சொன்னான்,''மொத்தத்தில் பதினாறு விதமாகப் பேசுகிறார்கள் என்று அர்த்தம்.''
**********

யாரது?

0

Posted on : Monday, June 20, 2011 | By : ஜெயராஜன் | In :

கண்ணதாசன் நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றார்.அவர் வீட்டுக் கதவு உள்ளே பூட்டப் பட்டிருந்தது.எனவே அவர் கதவைத் தட்டினார்.நண்பர் உள்ளிருந்தவாறே,''யாரது ?''என்று கேட்டார்.கண்ணதாசன் சொன்னார்,''AN OUTSTANDING POET IS STANDING OUT.''

எது?

0

Posted on : Monday, June 20, 2011 | By : ஜெயராஜன் | In :

மிக வேகமானது எது?
எண்ணங்கள்.அவை நொடிப்பொழுதில் இந்தப் படைப்புகளின் எல்லையைத் தாண்டி விடும்.

மிக வலிமையானது எது?
தேவைகள்.அதன் காரணமாகத்தான் மனிதன் அனைத்து ஆபத்துக்களையும் சந்தித்து அவற்றிலிருந்து மீளுகிறான்.

மிகவும் எளிதானது எது?
பிறருக்கு ஆலோசனை கூறுவது.

மிகவும் கடினமானது எது?
தன்னைத்தானே அறிதல்.

கண்ணீர்

0

Posted on : Monday, June 20, 2011 | By : ஜெயராஜன் | In :

அர்ஜுனனுக்கு பகவத் கீதையை முழுக்க உபதேசித்துவிட்டு ரதத்தின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டானாம் கிருஷ்ணன்.யுத்தம் நடந்ததாம். அபிமன்யு இறந்து விட,தன மகனின் சடலத்தை தன ரத்தத்திலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு புலம்பினானாம் அர்ஜுனன்.கப்போது மேற்கூரையிலிருந்து பத்து சொட்டு கண்ணீர் அர்ஜுனனின் தலையில் விழுந்ததாம்.கண்ணனும் அழுது கொண்டிருந்தானாம்.அர்ஜுனன் கேட்டானாம்,''கண்ணா!நான்தான் மகனுக்காக அழுகிறேன்.மரணத்தைப் பற்றிக் கவலைப்படாத நீ ஏன் அழுகிறாய்?''என்று.கண்ணன் சொன்னானாம்,''இல்லை,அர்ஜுனா,மனதைத் திடமாக வைத்துக் கொள்வது பற்றி உனக்கு இவ்வள்ளவு நேரம் கீதை உபதேசித்தேனே.அது எவ்வளவு சீக்கிரம் வீணாகி  விட்டது என்றுதான் கண்ணீர் வடிக்கிறேன்,''என்று.
                                            -கண்ணதாசன் சொன்ன கதை.

ஊமையா?

0

Posted on : Monday, June 20, 2011 | By : ஜெயராஜன் | In :

அந்தப்  பையன் எட்டு வயதாகும் வரை வாய் திறந்து பேசியதில்லை.எந்தெந்த டாக்டர்களிடமோ காட்டியும் எந்தப் பயனுமில்லை.ஒரு நாள் ஒரு இரவு விருந்தில் அந்தப் பையனுடன் அவன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.தன்னுடைய தாயாரின் பக்கம் அமர்ந்திருந்த  அந்தப் பையன் திடீரெனக் கேட்டான்,''அம்மா!அந்த உப்பைக் கொஞ்சம் எடு!''எல்லோருக்கும் ஆச்சரியம்.பையனின் தந்தை கேட்டார்,''இதுவரை நீ ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசினதில்லை.நாங்கள் கூட ஊமை என்றல்லவா நினைத்தோம்!''பையன் சொன்னான்,''இதுவரை எல்லாமே சரியாக இருந்தது.இன்றுதான் உணவில் உப்பு குறைந்திருந்தது.''

தீவிரம்

0

Posted on : Sunday, June 19, 2011 | By : ஜெயராஜன் | In :

பல்லி ஒன்று பெரிய கட்டெறும்பைப் பிடித்து அது நழுவிப் போய் விடாதபடி  ஒரே கவனத்தில் இருந்தது.அப்போது வேறொரு சிற்றெறும்பு பல்லியின் அருகில் மிக நெருக்கமாக வந்தது.பல்லி என்ன செய்கிறது என்று பார்த்தேன். அந்த சிற்றெறும்பைப் பல்லி கவனிக்கவே இல்லை.பிடிபட்ட பெரிய எறும்பு தப்பி விடக் கூடாது என்பதில் கவனம் இருந்ததால் பக்கத்தில் வந்த சிறிய எறும்பு அதன் பார்வையில் படவில்லை.கவனம் ஒன்றில் தீவிரமாக இருக்குமானால் இன்னொன்றில் எண்ணம் ஈடுபாடு கொள்ளாது.சிந்தனையில் மனம் தீவிரமாக இருக்கும்போது நெருக்கத்தில் இருப்பது கூட நேத்திரத்திற்குப் புலப்படாது. 
**********
உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா?
பொறுமை -சோம்பல்
சுறுசுறுப்பு -அவசரம்
நிதானம் -மந்தம்
சிக்கனம் -கஞ்சம்
வள்ளல்தனம் -ஊதாரித்தனம்
உறுதி -பிடிவாதம்
வீரம் -முரட்டுத்தனம்
பணிவு  -கோழைத்தனம்
முன்ஜாக்கிரதை -தயக்கம்
இணக்கம் -ஏமாளித்தனம்
இவற்றிற்கு இடையிலுள்ள வித்தியாசத்தை நீங்கள் சரிவரப் புரிந்து கொண்டால் வாழ்வில் வெற்றிதான்.

நீ நீயாக இரு.

0

Posted on : Sunday, June 19, 2011 | By : ஜெயராஜன் | In :

'இராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரரின் தலை மீது கைவைத்துத் தடவி ஆசிர்வாதம் செய்ததும் அவர் விவேகனந்தர் ஆனார்,'என்பதனைப் படித்துத் தெரிந்த ஒருவர் விநோபாஜியிடம் சென்று ,''அய்யா,தாங்கள் என் தலை மீது கைவைத்து ஆசிர்வாதம் செய்தால் நான் சங்கராச்சாரியார் ஆகிவிடுவேன்.தயை புரியுங்கள்,''என்று சொன்னார்.அதற்கு வினோபாஜி  சொன்னார்,''நான் ஆக்குவதால் நீ ஆகிவிட்டால்,பிறர் அழிப்பதால் நீ அழிந்தும்  போய் விடுவாய்.என்னைக் காட்டிலும் தவ வலிமை மிகுந்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.எனவே நீ நீயாகவே இரு.எவராவது உன்னை எதாகிலும் ஆக்கினால் நீ அப்படி ஆகிவிடாதே.''

குறை

0

Posted on : Saturday, June 18, 2011 | By : ஜெயராஜன் | In :

குறை கூறுங்கள்;மட்டம் தட்ட வேண்டாம்.குறை சொல்பவனுக்கும் திறன் ஆய்வாளனுக்கும் வித்தியாசம் உண்டு.குறை சொல்பவன் தூற்றுவான்; புகழ்பவன் போற்றுவான்;திறனாய்வாளன் எடை போடுவான்.
என்னை எடை போடுங்கள்'தடை போட வேண்டாம்.
மறைவான உண்மைகளை வெளிப்படுத்துவதே திறனாய்வுக்கு அழகு.
கண்பட நடங்கள்.
காதுபடக் கேளுங்கள்.
புண்படப் பேசாதீர்கள்.
அல்ப விஷயத்தை பேசும் அறிவாளி அப்போதே அவன் தரத்திலிருந்து விழுந்து விடுகிறான்.
**********
வெற்றி என்பது 98%வியர்வை சிந்தும் உழைப்பு.2%காரியத்தை முடிக்க வேண்டும் என்ற ஊக்கம்.ஒருவனுக்குக் கிடைக்கும் புகழ்,செல்வம்,மதிப்பு அவனுடைய புத்திசாலித்தனமான  உழைப்பைப் பொறுத்துத்தான் அமையும்.

பயிற்சி

0

Posted on : Saturday, June 18, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு படித்த பெண் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் வேலை தேடி விண்ணப்பித்து வந்தாள்.அவளுடைய தோழிகள் சொன்னார்கள்,''நீ இப்பொழுது தான் படித்து முடித்திருக்கிறாய்.உனக்குப் பெரிய நிறுவனங்களில் வேலை கொடுக்க மாட்டார்கள்.முதலில் சிறிய நிறுவனங்களில் வேலை பார்த்து அனுபவம் பெற்ற பின் பெரிய நிறுவனங்களுக்கு முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்''.ஆனால் அதையெல்லாம் அவள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.அங்கு பேட்டியின்போது ,''முன்  அனுபவம் உனக்கு ஏதுமில்லையே?''என்று கேட்டார்கள்.அதற்கு அவள் சொன்னாள்,''எனக்கு அனுபவம் இல்லை என்பதால்தான் உங்கள் நிறுவனத்திற்கு  வேலை தேடி வந்தேன்.அனுபவம்  பெற உங்கள் நிறுவனமே சிறந்தது.இங்கு கிடைக்கும் அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது.சிறு நிறுவனங்களுக்கெல்லாம் போய்  என் திறமையை வீணடிக்க நான் விரும்பவில்லை.உங்கள் நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் கூட பயிற்சி பெறத்  தயாராக இருக்கிறேன்.''அவள் தன்னம்பிக்கைக்கு அந்த பெரிய நிறுவனத்திலேயே சம்பளத்துடன் வேலை கிடைத்தது.

பிள்ளை

0

Posted on : Saturday, June 18, 2011 | By : ஜெயராஜன் | In :

பிள்ளை  பிள்ளையைப் பிடித்து  பிள்ளைமேல் வைத்துத் தின்ன
பிள்ளையை விரட்டியது.

இதன் விளக்கம்;கீரிப்பிள்ளை,அணில் பிள்ளையைப் பிடித்து,தென்னம்பிள்ளை மேல் வைத்துத் தின்ன,கிளிப் பிள்ளையை விரட்டியது.

சேலை வியாபாரம்

2

Posted on : Friday, June 17, 2011 | By : ஜெயராஜன் | In :

அத்தினத்துக்கும் ஓட்டகைக்கும்  ஆயிரம் காதம்.
ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்.

இக்கவிதையில் அத்தினம் என்பது பாண்டவர்கள்  ஆண்ட ஹஷ்தினாபுரத்தையும் ஓட்டகை என்பது கண்ணன் ஆண்ட துவாரகாபுரியையும் குறிக்கிறது.(ஓட்டை=துவாரம்)
அதாவது இரு நகரங்களுக்கிடையே ஆயிரம் காதம் தூரம்.இருந்தபோதும் திரௌபதி ஹஷ்தினாபுரத்தில் மானபங்கப் படுத்தப்பட்டபோது துவாரகாபுரியிலிருந்த கண்ணன் சேலை கொடுத்தாரே.அதைத்தான் இக்கவிதை விளக்குகிறது.

இரவல்

1

Posted on : Friday, June 17, 2011 | By : ஜெயராஜன் | In :

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன்ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார்.அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார்.மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார்.சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார்.மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''
**********
ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை.ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''
**********
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம்.அவ்வளவு பெரிய திருடர்கள்.''
**********

தபால் தலை

0

Posted on : Friday, June 17, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு சர்வாதிகாரி தன பிறந்த நாளில் தன் படத்தைக் கொண்ட தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார்.ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை.தன செயலரை அழைத்து காரணம் கேட்டார்.செயலர் சொன்னார்,''அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை.அதனால்தான் சரியான விற்பனை இல்லை,''சர்வாதிகாரிக்குக்  கோபம் வந்தது.தபால் நிர்வாகியை அழைத்து,''ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே?ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?''என்று கேட்டார்.நிர்வாகி சொன்னார்,''கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.''

'நொந்த'ஜோக்ஸ்

0

Posted on : Thursday, June 16, 2011 | By : ஜெயராஜன் | In :

''திருமணம் ஆனதும் கணவன் மனைவிக்கு எல்லா விஷயங்களிலும் 50-50 என்ற அடிப்படையில் தான்   இருக்க வேண்டும்''என்று தாத்தா கூறினார்.''இதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா,தாத்தா?''என்று பேரன் கேட்டான்.''நீ அவளுக்கு  ஐம்பது ரூபாய்க்கு  ஒரு பொருள் வாங்கிக் கொடுத்தால் நீ உனக்கு ஐம்பது பைசாவுக்கு ஏதேனும் வாங்கிக் கொள்ளலாம்.''என்றார் தாத்தா.
**********
''என் மனைவிக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ,அப்போது மட்டும் தான் எனக்கு  முத்தம் கொடுப்பாள்,''
''அப்போ  உனக்கு அடிக்கடி முத்தம் கிடைக்கும் என்று சொல்!''
**********
''அவன் மனைவி மிக நல்லவள்.அவன் எவ்வளவு தாமதமாக வீட்டுக்கு சென்றாலும் அவள் அவனுக்கு கைலி.செருப்பு,சாப்பாடு,போர்வை எல்லாம் எடுத்துக் கொடுப்பாள்.''
''பின் ஏன் அவன் அவளைப் பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான்?''
''என்ன,கொடுப்பதையெல்லாம் அவள் தூக்கி அவன் மீது  எறிவாள்.''
**********
''என் மனைவி என்கிட்டேயிருந்த எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்.''
'உன் பாடு தேவலை.என் மனைவியும்தான் எல்லாவற்றையும் எடுத்துக்  கொள்கிறாள்.ஆனால் எங்கேயும் போக மாட்டேன் என்கிறாளே?'
**********
''பெண்கள் திருமணமானவர்கள் என்பது தெரிய தாலி அணிகிறோம்.  அதுபோல திருமணமான ஆண்களும் ஏதாவது அடையாளத்துக்கு  அணியலாமே?''
'அதுதான் நைந்துபோன பழைய உடைகளை அணிகிறோமே!'
**********'
''அப்பா,அம்மாவுக்கு பட்டுப் புடவை,அக்காவுக்கு சுடிதார்,அண்ணனுக்கு ஜீன்ஸ்,எனக்கு பைஜாமா எல்லாம் வாங்கப் போகிறோம்.உங்களுக்கு என்ன வாங்கிவர?''
'ஒரு காவி வேஷ்டி இருந்தால் வாங்கிவா.'
**********
ஆசிரியர் கேட்டார்,''உலகிலேயே பெரிய சர்வாதிகாரி யார் என்று தெரியுமா?''
மாணவன் சொன்னான்,'எங்க அப்பாவுக்குத் தெரியும்,'''அதெப்படி?''என்று ஆசிரியர் கேட்க,மாணவன் சொன்னான்,''அவரைத்தான் எங்க அப்பா திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.'
**********
''என்ன இருந்தாலும் என்னைப்போல ஒரு  மனைவி உங்களுக்குக் கிடைக்கமாட்டாள்.''
'உன்னைப்போல ஒரு மனைவி வேண்டும் என்று எப்போது ஆசைப்பட்டேன்?''
**********

மகாராணி

0

Posted on : Thursday, June 16, 2011 | By : ஜெயராஜன் | In :

மகாராணி எலிசபெத் ஒரு நாள் அலுவலக வேலையினை நீண்ட நேரம் பார்த்துவிட்டு இரவு இரண்டு மணிக்கு தன படுக்கை அறைக்கு வந்தபோது அறையின் கதவு உள்ளே பூட்டியிருந்தது தெரிந்தது. தன கணவர் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த ராணி மெதுவாகக் கதவைத் தட்டினார்.முதலில் பதில் ஏதுமில்லை.மறுபடியும் மெதுவாகத் தட்டினார்.  அப்போது உள்ளிருந்து,''யாரது?''என்று குரல் கேட்டது.ராணியோ,''நான்தான்,''  என்று  பதிலுரைத்தார்.''நான்தான் என்றால்யார்?பெயர் எதுவும் கிடையாதா?''என்று கதவைத் திறக்காமலேயே கணவர் கேட்டார்.''நான்தான்,மகாராணி வந்திருக்கிறேன்,''என்று சொன்னதும்,''இந்த  நடுஇரவில் மகாராணியாருக்கு என் அறையில்  என்ன வேலை?'' என்ற கேள்வி வந்தது.உடனே ராணி சிரித்துக் கொண்டே,''நான்தான் உங்கள் அருமை மனைவி எலிசபெத் வந்திருக்கிறேன் கதவைத் திறங்கள்,''என்று சொன்னதும் அவர் கணவர் புன்னகையுடன் வந்து கதவைத் திறந்தார்.

பெரியாறு அணை

0

Posted on : Wednesday, June 15, 2011 | By : ஜெயராஜன் | In :

1895 ம் ஆண்டு பெரியாறு அணை கட்டப்பட்டது.இது ஒரு 'உலகின் கட்டுமான பொறியியல் அதிசயம்'.இது இரண்டு குன்றுகளை இணைத்துக் கட்டப்பட்ட 1200 அடி நீளம் கொண்ட பிரதான அணை.1906-08 ல் கலிங்குகளும் மதகுகளும் அமைத்து அதிக பச்ச  நீர் மட்டம் 152 அடி ஆனது.136 அடி உயரத்தில் நீர் கலிங்கு வழியாக மேற்கு நோக்கி வழிந்தோடும்.இதன் மேல் அமைக்கப்பட்ட 16 அடி உயரம் கொண்ட இரும்பு ஷட்டர்களினால் நீர் தேங்கும் உயரம் 152 அடி வரை வரும்.கேரளா அரசின் ஆட்சேபனையினால்  மொத்தம் உள்ள 13 ஷட்டர்களும் இறக்கப்படாமல் 136 அடிக்கு மேல் வரும் தண்ணீர் வழிந்தோடுகிறது.
அணையின் 110 அடி வரை தேங்கும் நீரை அணையின் எந்தப் பக்கமும் எடுத்துச் செல்ல முடியாது.எனவே அணையில் வருடத்தில் எல்லா நாட்களும் நீர் தேங்கியிருக்கும்.மலைப்பரப்பில் 1,49,00ஏக்கரில் பெய்யும் மழை நீர் தேக்கத்திற்கு வருகிறது.152 அடி உயரம் நீர் தேங்கும்போது நீர்த்தேக்கத்தின் மொத்தப் பரப்பு  6534 ஏக்கராகும்.அதிக பட்ச நீர் தேங்கும் உயரம் 155அடி.(வெள்ள அளவு அதிகரிக்கும்போது)இது சில மணி நேரங்கள் தான் நீடிக்கும்.அப்போது நீர்த் தேக்கப் பரப்பு 8000ஏக்கராகும்.
136 அடி உயரத்தில் நீர் தேங்கும்போது அணையின் கொள்ளளவு  11210 மில்லியன்   கன  அடி .
142அடி உயரத்தில் நீர் தேங்கும்போது அணையின் கொள்ளளவு  12830 மில்லியன்  கன  அடி .
152 அடி உயரத்தில் நீர் தேங்கும்போது அணையின் கொள்ளளவு 15562 மில்லியன்  கன  அடி .
உபயோகிக்க முடியாத 110 அடி உயரத்தில் அணையின் கொள்ளளவு 5700 மில்லியன்  கன  அடி
ஆக பயனுள்ளது 110 அடிக்கு மேல் உள்ளதே.அதாவது,
136 அடி உயரம்  இருக்கும்போது பயனுள்ள நீரின் அளவு=11210-5700=5510 மி .க  அடிகள் .
142 அடி உயரம் இருக்கும்போது பயனுள்ள நீரின் அளவு=12830-5700-7130 மி .க  அடிகள்
152 அடி உயரம் இருக்கும்போது பயனுள்ள நீரின் அளவு=15562-5700=9862 மி .க .அடிகள் .
தமிழகம் கோருவது  142 அடி.
தற்போது இருப்பது. 136 அடி .
வித்தியாசம்=7130-5510=1620 மி .க  அடிகள்
                      -பொறியாளர் இரா.வெங்கடாசலம் எழுதிய ''முல்லைப் பெரியாறு அணை-வரலாற்று விபரங்களும் இன்றைய விவகாரங்களும் ''என்ற  நூலிலிருந்து.

கோபம் சரியாக

0

Posted on : Wednesday, June 15, 2011 | By : ஜெயராஜன் | In :

'கோபத்தைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்,''என ஒரு ஞானியிடம் ஒருவர் கேட்டார்.ஞானி சொன்னார்,''ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.உங்களின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் கோபப்படுவதில்லை இக்கோபத்தினால் நான் எதையாவது இழந்து விடுவேனோ,எனக்கு இது சாதகமா,பாதகமா என்று ஆராய்ந்து கொண்டே இருக்கிறீர்கள்.நீங்கள் கோபப்படுவது உங்களுக்கு பாதகத்தைத் தரும் என்று கருதினால்,அந்தச் சூழல் அவமானம் தருவதாய் இருந்தால் கூட சிறு தடுமாற்றத்துடன் அமைதியாகி விடுகிறீர்கள்.கோபப்படுவதால் எந்த பாதகமும் வராது என்று தெரிந்தால்,அந்தச் சூழலில் யாராவது சாதாரணமாக நம்மைப் பேசினால் கூட கோபம் பொங்குகிறது.எனவே உங்கள் கோபம் உங்கள் தர்க்கம் சம்பந்தப்பட்டது.உங்கள் தர்க்கத்தை சரி செய்யுங்கள்.உங்கள் கோபம் தன்னால் சரியாகும்.

ஒரு புதிர்

0

Posted on : Tuesday, June 14, 2011 | By : ஜெயராஜன் | In :

உங்கள் முன் 'ஆரஞ்சு ','ஆப்பிள்','ஆரஞ்சும் ஆப்பிளும்' என்று தனித்தனியாக எழுதி ஒட்டப்பட்ட மூன்று பெட்டிகள் இருக்கின்றன.ஆனால் மேலே எழுதியிருப்பதுபோல உள்ளே பழம் இருக்காது அதாவது ஆப்பிள் என்று எழுதியுள்ள பெட்டியில் ஆப்பிள் மட்டும் தனியாக இருக்காது.ஆரஞ்சோ,அப்பிளும் ஆரஞ்சும் கலந்தோதான்  இருக்கும்.நீங்கள் ஏதாவது ஒரு பெட்டியில் கைவிட்டு ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துப் பார்க்கலாம்.அதைக்கொண்டு மூன்று பெட்டிகளிலும் என்ன பழங்கள் இருக்கின்றன என்று சரியாகச் சொல்ல வேண்டும்.எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்?எந்தப் பெட்டிக்குள் இருக்கும் பழத்தை எடுக்க வேண்டும்?

விடை;''ஆரஞ்சும் அப்பிளும்'என்று எழுதப்பட்டுள்ள பெட்டியிலிருந்துதான் ஒரு பழத்தை எடுக்க வேண்டும்.அதில் ஆப்பிளும் ஆரஞ்சும் கலந்து இருக்காது.ஆப்பிளோ ஆரஞ்சோ ஏதோ ஒன்று தனியாகத்தான் இருக்க வேண்டும்.எடுத்த பழம் ஆப்பிளாக இருந்தால் அதில் முழுக்க ஆப்பிள் தான் இருக்க வேண்டும்.'ஆப்பிள் என்று எழுதப்பட்ட பெட்டியில் ஆரஞ்சு இருக்கும்.ஆரஞ்சு என்று எழுதப்பட்ட பெட்டியில் ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்கும்.
நாம் எடுத்த பழம் ஆரஞ்சாக இருந்தால்,ஆரஞ்சு  லேபில் பெட்டியில் ஆப்பிள்;ஆப்பிள் லேபில் பெட்டியில் ஆப்பிளும் ஆரஞ்சும் இருக்கும்.

யாருக்குப் பரிசு?

0

Posted on : Tuesday, June 14, 2011 | By : ஜெயராஜன் | In :

மன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார்.அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,''இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது.இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ,அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,''அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் கொண்டு அடுத்த கையில் ஊசியை வைத்து அடுத்தவர் பலூன்களை உடைக்க முயற்சித்தனர்.சிறுவர்களைப் போல அவர்கள் ஓடியும்,தாவியும்,நாற்காலிகளின் மேல் ஏறியும் இந்தப் போட்டியைத் தொடர்ந்தனர்.இருபது நிமிடம் ஆயிற்று.அப்போது ஒரே ஒருவரின் பலூன் மட்டும் உடையாதிருந்தது.அவர் குழந்தையைப்போல ஆர்ப்பரித்தார்.பேராசிரியர் எல்லோரிடமும் கேட்டார்,''பலூன் உடையாது வைத்திருக்கும் இவரை வெற்றியாளராக அறிவித்துப் பரிசினைக் கொடுத்து விடலாமா?''என்று கேட்டார்.எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர்.அப்போது அவர்,''பரிசு கொடுக்குமுன் ஒரு கேள்வி.நான் முதலில் என்ன சொன்னேன்?பலூன் உடையாமல் வைத்திருப்பவருக்கு பரிசு என்று தானே சொன்னேன்?ஒவ்வொருவரும்  அடுத்தவர் பலூன்களைப் பார்க்காமல்,தன பலூனை மட்டும் உடையாமல் பாதுகாத்திருந்தால் இப்போது அனைவருக்கும் பரிசு கிடைத்திருக்குமே!''என்று சொன்னவுடன் ஒவ்வொருவருக்கும் சிறு குற்றம் செய்த உணர்வு ஏற்பட்டது.பேராசிரியர் தொடர்ந்தார்,''இப்படித்தான் வாழ்விலும்,நாம் நம்மிடம் உள்ளதைக்  கவனித்து முறைப்படி வாழ்ந்தாலே நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கலாம்.ஆனால் நாம் அடுத்தவர்களையே கவனித்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு,அவர்களை அழிக்க,ஒடுக்க முயற்சித்து நம் மகிழ்ச்சியைக் காணாமல் போக்கி விடுகிறோம்.''

துடிப்பு

0

Posted on : Saturday, June 11, 2011 | By : ஜெயராஜன் | In :

புகழ் பெற்ற ஜப்பானியத் தளபதி தனது வீட்டுக்கு ஒரு ஜென் துறவியை அழைத்திருந்தார்.துறவி வந்தவுடன் தனது கலைப் பொருட்களின் சேமிப்பைக் காட்டி அவற்றைப்  பற்றி வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்.துறவி அதை லட்சியம் செய்யவே இல்லை.முடிவில் துறவி,அங்கிருந்த சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட,வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு  கிண்ணத்தைத் தூக்கித் தரையில் போட்டு உடைத்தார்.அதைக் கண்ட தளபதியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.கோபத்தில் துடித்துக் கத்த ஆரம்பித்தார். துறவி அமைதியாகச் சொன்னார்,''உன் கண் முன்னாள் ஒரு பீங்கான் கிண்ணம் உடைந்து நொறுங்கியதை உன் மனத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு உயிர்கள் கை கால் துண்டாகி வேதனையுடன் போர்க்களங்களில் வலியுடன் இறந்து போயின? உன் கண் முன்னே எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?அப்போது ஏன்  உன் மனது துடிக்கவில்லை?''தளபதிக்குத் தன அறியாமையும் இயல்பும் புரிந்து விடவே தானும் துறவியானார்.

பொன்மொழிகள்--18

0

Posted on : Saturday, June 11, 2011 | By : ஜெயராஜன் | In :

தன செயலுக்குத்  தானே சிரிக்காதவன் \
மற்றவர்களிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுகிறான்.
**********
'என் அபிப்பிராயத்தை சொல்லவா?'என்று யாரேனும் ஆரம்பித்தால் நிச்சயம் அவர் உங்கள் கருத்துக்கு மாறான கருத்தை சொல்லப் போகிறார் என்று பொருள்.
**********
தம்மிடம் இல்லாத பணத்தைக் கொண்டு
தமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி அடுக்கி
தமக்குத் தெரியாதவர்களைக் கவர எண்ணுவது
பலருக்கும் வாடிக்கை ஆகி விட்டது.
**********
நமக்கு எது வசதி என்பதில்
எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.
**********
நகைச்சுவை உணர்வு நிரம்பிய மனிதன்,மென்மையான இலவம் பஞ்சு அடைத்த தலையணை போன்றவன்.அவனும் லேசாக இருப்பான்.அடுத்தவருக்கு இதமாகவும் இருப்பான்.
**********
தைரியம் என்பது அச்சம் இன்றி இருப்பது அல்ல.பயந்தபின்,
அந்த நிகழ்வை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பதுதான்.
**********
பயம் கதவைத் தட்டுகிறதா?நம்பிக்கையை எழுந்து போய் கதவைத் திறக்க சொல்லுங்கள்.வெளியே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
**********
வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும்  அனுபவித்து விடுங்கள்.
நாளை,ஒருவேளை,திரும்பிப் பார்க்கையில் அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத் தெரியும்.
**********
நீங்கள் வயதாவதால் சிரிப்பை நிறுத்துவதில்லை.
நீங்கள் சிரிப்பை நிறுத்துவதால்தான் வயதானவராகிறீர்கள்.
**********
கற்பனைதான் மிக உயரத்தில்  பறக்கக்கூடிய பட்டம்.
**********
பொய் சொல்வது என்பது
ஒரு சிறுவனைப் பொறுத்த மட்டிலும் அது தவறு;
ஒரு காதலனைப் பொறுத்த மட்டிலும் அது ஒரு கலை.
ஒரு மணமானவனைப் பொறுத்த மட்டிலும் அது இயற்கை.
**********
ரசித்ததை பொறாமை காரணமாக பாராட்டாத ஒருவன்
கொலைகாரனுக்கு சமமாவான்.
**********

மதிப்பு ,மரியாதை

1

Posted on : Friday, June 10, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு நிறுவனத்தில் முப்பது வயதை ஒட்டிய அதிகாரிகளுக்கு ஒரு பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது.அப்போது வகுப்பு எடுத்தவர் சொன்னார்,''உங்களுக்கு சிலர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கும்.ஆனால் இதை நீங்கள் சரியான முறையில் வெளிப்படுத்தாமல் உங்கள் உறவு இறுக்கமாக இருக்கக் காரணமாகி விடுகிறீர்கள்.இதை நீங்கள் முயற்சி செய்து பார்த்துவிட்டு அதன் பலனை அடுத்த மாத வகுப்பில் சொல்லலாம்,''அடுத்த வகுப்பில் யாருக்காவது இது சம்பந்தமான அனுபவம் ஏதாவது ஏற்பட்டதா என்று விசாரித்தார்.அப்போது ஒருவர் சொன்னார்,''நீங்கள் இந்த விஷயத்தை சென்ற வகுப்பில் சொன்னபோது எனக்கு முட்டாள்தனமாகப் பட்டது.உங்கள் மீது எரிச்சல் கூட ஏற்பட்டது.ஆனாலும் நான் அதை முயற்சி செய்து பார்க்க விரும்பினேன்.எனக்கு என் தந்தையின் மீது மிக்க மதிப்பும் மரியாதையும் உண்டு.ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சிறு மன வருத்தத்தில் நான் அவரைப் பார்ப்பதும் இல்லை பார்த்தால் பேசுவதும் இல்லை.இப்போது அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பை தெரியப்படுத்த விரும்பினேன்.அன்றே அவருக்கு தொலைபேசி மூலம் அவர் வீட்டிற்கு வருவதாகச் சொன்னேன்.அவர் கோபத்துடன் எதற்கு வருகிறாய் என்று கேட்டார்.நானும்,'உங்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும் அலுவல் முடிந்ததும் மாலை ஆறு மணிக்கு வருகிறேன்,'என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டேன்.மாலை ஆறு மணிக்கு மனம் திக் திக் என்று அடிக்க என் தந்தை இருந்த வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினேன்.என் தந்தையே வந்து கதவைத் திறந்தார்.அவர் முகம் இறுக்கமாக இருந்தது.நான் வந்ததை விரும்பாததுபோல அவருடைய தோற்றம் இருந்தது.அப்போது நான் சற்றும் அவர் எதிர்பாராத வண்ணம்,'அப்பா,நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.உங்கள் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.இதை சொல்லத்தான் வந்தேன்' என்றேன்.உடனே அங்கு ஒரு அதிசயம் நடந்தது.என் தந்தையின் முக இறுக்கம் படிப்படியாய்க் குறைந்து முகத்தில் ஒரு புன்முறுவல்  தோன்றியது.உடனே அவர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,'நானும் உன்னை மிக நேசிக்கிறேன்.ஆனால் அதை சொல்லத்தான் எனக்கு இதுவரை தெரியவில்லை,'என்றவர் என்னை நீண்ட  நேரம் விடாமல் அணைத்தபடியே இருந்தார்.இக்காட்சியை என் தாய் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.அதன்பின் இரண்டு நாட்களில் என் தந்தை மாரடைப்பால் காலமாகி விட்டார்.நான் மட்டும் அன்று அவரைப் பார்க்காமல் இருந்திருந்தால் வாழ் நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் இருந்திருப்பேன்.உங்களுக்கு என் நன்றி,''என்றார்.

தகுதி

0

Posted on : Friday, June 10, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆற்று வெள்ளத்தில் ஒரு சிறுவன் அடித்து செல்லப்பட்டான்.அப்போது ஒருவர் தன உயிரைப் பற்றிய அச்சம் இல்லாது ஆற்றினுள் குதித்து அச்சிறுவனைக் காப்பாற்றினார்.சிறுவன் தன நிலைக்கு வந்தவுடன் தன்னைக்  காப்பாற்றியதற்கு அவரிடம் நன்றி சொன்னான்.அப்போது அவர் சொன்னார்,''அது பரவாயில்லை நீ நன்றி சொல்ல வேண்டியதில்லை.நான் உன்னைக் காப்பாற்றியது சரியான செயல் என்பதை நிரூபிக்கும் வகையில் உன் வாழ்வை நீ அமைத்துக் கொண்டால் அதுவே போதும்.

எது வேண்டும் ?

0

Posted on : Thursday, June 09, 2011 | By : ஜெயராஜன் | In :

கணவனும் மனைவியும் கடைவீதி சென்று ஆசைப்பட்ட பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு தங்கள் காரில் வீட்டிற்கு வந்தனர்.இருவரும் களைப்புடன் இருந்ததால் காரிலிருந்து எதையும் இறக்காமல் காரை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு படுக்க சென்று விட்டனர்.காலையில் எழுந்து பார்த்தால் காரைக் காணோம்.சுற்றிமுற்றித் தேடி  பார்த்தும் கிடைக்காதலால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.தனக்கு பிடித்த பொருட்கள் மற்றும் சில ஆவணங்கள் காரில் இருந்ததால் மனைவி மிகவும் சோகத்தில் இருந்தார். கணவன் சொன்னான்,''அன்பே,எப்படியும் காரும் பொருட்களும் காணாமல் போய்விட்டன.இப்போது நம்முன் இரண்டு விஷயங்கள் தான் இருக்கின்றன.ஒன்று கார் போனதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியது அல்லது அதை மறந்து மகிழ்வுடன் அடுத்த வேலையைப் பார்ப்பது நீ என்ன சொல்கிறாய்?''கணவனின் ஆறுதல் மனைவிக்கு இதமாக இருந்தது''மகிழ்வுடனே இருப்போம்,டார்லிங்,''என்றார்.
ஒரு மாதம் கழித்து கார் மட்டும் கிடைத்தது.ஆனால் முன் பகுதி இடித்து சேதம் ஆகி இருந்தது.டயர் ஒன்று வெடித்திருந்தது.கணவன் காரை இந்த நிலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்து,''இதை சரி செய்ய குறைந்தது இருபது ஆயிரம் ஆகுமே.எவ்வளவு அழகான வண்டி!இப்படி ஆகிவிட்டதே,''என்று புலம்பினான்.மனைவி சொன்னார்,''அன்பே,இப்போது நம்முன் இரு விஷயங்கள்தான் உள்ளன.ஒன்று,ஐயோ,கார் இப்படி ஆகி விட்டதே என்று கவலைப்படுவது அல்லது ஆனது ஆகட்டும்,இப்போது மகிழ்வுடன் அடுத்து காரியத்தை ஆரம்பிக்கலாம்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?கணவன் சிரித்துக்கொண்டே,''சந்தோசமாகவே இருப்போமே,''என்றான்.
எந்த சூழ்நிலையிலும் மகிழ்வுடன் இருப்பதோ,கவலையுடன் இருப்பதோ,உங்கள் சாய்ஸ்.

அறிவுரை கூற

0

Posted on : Thursday, June 09, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவருக்கு நீங்கள் அறிவுரை கூற நினைத்தால் அதற்குமுன் அவரது நம்பிக்கையை அல்லது அவர் அனுமதியைப் பெற வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்குள் மோதல்தான் பிறக்கும்.நீங்கள் ஒருவர் மீது அன்பு செலுத்துவதற்குக் கூட அவரின் அனுமதி தேவைப்படுகிறது.எனவே யாருக்காவது அறிவுரை கூற விரும்பினால் முதலில் அவர் அதற்கு விருப்பத்துடன் இருக்கிறாரா என்று கவனியுங்கள். நீங்கள் அவர் மீது உண்மையாகவே பொறுப்புணர்வுடன் இருப்பதாக அவர் அறிந்தால் இயல்பாகவே உங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இருப்பார். ஆனால் அந்தப் பொறுப்புணர்ச்சியை இதுவரை நீங்கள் எந்த விதத்திலும்  காட்டாமல் அறிவுரை சொல்ல மட்டும் ஆர்வம் காட்டுவீர்கள் என்றால் அவர் உங்களிடமிருந்து வரும் எதையும் கேட்க மாட்டார்.எனவே ஒருவர் உங்களுக்கு எதிர்ப்பு காட்டுகிறார் என்றால் நீங்கள் இன்னும் அவர் நம்பிக்கையை சம்பாதிக்கவில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.
                                                             --சத்குரு ஜாக்கி வாசுதேவ்.

ஈர்ப்பு

1

Posted on : Wednesday, June 08, 2011 | By : ஜெயராஜன் | In :

அரசன் ஒருவன் ஒரு வேலைக்காரியைக் காதலித்தான்.ஆனால் அந்த வேலைக்காரியோ ஒரு வேலைக்காரனைக் காதலித்தாள்.இது தெரிந்த அரசன் வேதனைப்பட்டு அவர்களைப் பிரிக்க,வேலைக்காரனை நாடு கடத்தலாம அல்லது சிறையில் அடைகலாமாஎன்று தன அமைச்சரிடம் கேட்டார்.
அமைச்சர் சொன்னார்,''பிரிவு என்றுமே ஆர்வத்தை ஆவேசமாகக் கிளரும்.இருவரும் தூர இருந்து ஒருவரை ஒருவர் இப்போது பார்த்துக் கொண்டிருப்பதனால்தான் இந்த ஈர்ப்பு.அருகருகே வைத்தால் ஈர்ப்பு தானே ஓடி விடும்.இரண்டு போரையும் நிர்வாணமாய் நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்குமாறு கட்டிப் போடுங்கள்,''என்றார்.அவ்வாறே செய்யப்பட்டது.இரண்டு நாட்கள் கழிந்ததும்  கட்டவிழ்க்கப்பட்டது.அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க விரும்பாமல் வெவ்வேறு திசைகளில் ஓட்டம் பிடித்தனர்.
தேடிச்சென்று அடைவதில் உள்ள சுகம் அடைந்த பின்னர் இருப்பதில்லை.இன்றைய அதீத விருப்பம்தான் நாளைய வெறுப்பாகும்.

கடவுள் எங்கே?

0

Posted on : Wednesday, June 08, 2011 | By : ஜெயராஜன் | In :

சூபி ஞானி அல்பயாஜித் தனது தவ பலத்தினால் நேரடியாக சொர்க்கம் போனார்.சொர்க்கத்தின் வாயிலில் எண்ணற்ற தேவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தினர்.அவர் ஆவலுடன் ''இறைவன் எங்கே?''என்று கேட்டார்.அவர்கள் வியப்புடன் கேட்டனர்,''என்ன,அவர் பூமியில் இல்லையா?''
**********
மொகலாய மன்னன் ஹுமாயுனின் உயிரை,தண்ணீர் மொண்டு ஊற்றும் காவலாளி ஒருவன் காப்பாற்றினான்.அதனால் மனம் மகிழ்ந்த மன்னன்,''உனக்கு என்ன வேண்டும் என்றாலும் கேள்,தருகிறேன்,''என்றான்.அதற்கு அந்தக் காவலாளி,''எனக்கு எதுவும் வேண்டாம்,மன்னா,''என்றான்.''உயர்ந்த பதவி ஏதாவது கொடுக்கட்டுமா?''என்று மீண்டும் மன்னன் கேட்டான்.காவலாளி மிகவும் மரியாதையுடன்,''நன்றி மன்னா,ஆனால் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் இந்தப் பணியை விட புனிதமானது உண்டா?''என்று கேட்க மன்னன் மனம் மகிழ்ந்தான்.
இயன்றதை செய்வது,செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்வது,உள்ளதைக் கொண்டு உவப்பது இவை யாவும் சூபிகளின் பண்பாகும்..
**********

தாயன்பு

4

Posted on : Tuesday, June 07, 2011 | By : ஜெயராஜன் | In :

சமுதாயத்தில் உயர் நிலையில் இருந்த ஒருவரிடம் அவர் உயர்வுக்கு கரணம் சொல்ல முடியுமா என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர் தன தாய் தான் காரணம் என்று சொல்லிவிட்டு சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை சொன்னார்.
அவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது ஒரு நாள் பிரிட்ஜிலிருந்து பால் இருந்த ஒரு பாட்டிலை எடுக்க முயற்சித்தபோது பாட்டில் கீழே நழுவி பால் முழுவதும் கொட்டி விட்டது.தாயார் வந்து அதைப் பார்த்தவுடன் குழந்தை பயத்துடன்,''அம்மா,பால் கொட்டி வீணாகி விட்டது''.அதற்கு அந்த அன்னை சொன்னார்,''நான் பாலை விட உன்னை நேசிக்கிறேன்.எனக்கு நீதான் முக்கியம்.''என்று கூறிவிட்டுப் பின் சொன்னார்,,''மிக அழகாகக் கொட்டியிருக்கிறாயே!பரவாயில்லை கீழே கொட்டிவிட்டது இனி ஒன்றும் அதை செய்ய முடியாது.நீ கொஞ்ச நேரம் அதிலே விளையாடு.''என்றார்.குழந்தையும் அதன் மேல் விழுந்து புரண்டு குதூகலத்துடன் விளையாடியது.திரும்ப வந்த  தாய்,''விளையாடி விட்டாயா?இந்த இடம் இப்போது அசிங்கமாக உள்ளது.இப்போது இந்த இடத்தை சரி செய்ய வேண்டும்.நீ எது கொண்டு இதைத் துடைக்கப் போகிறாய் ?துணி தரட்டுமா,ஸ்பான்ச் தரட்டுமா?''அவன் ஸ்பான்ச் கேட்டு வாங்கித் துடைக்க ஆரம்பித்தான்.தாயும் அவனுக்கு கூட உதவி செய்தார்.
பின் அவனிடம் சொன்னார்,''இப்போது பாட்டில் ஏன் கீழே விழுந்தது என்று பார்க்க வேண்டும்?நீ எப்படிபாட்டிலைத் தூக்கினாய்?''என்று கேட்க அவன் செய்து காண்பித்தான்.உடனே அத்தாய் அதே போல ஒரு காலி பாட்டிலை எடுத்துக் கொண்டு அவனுடன் வீட்டின் பின்புறம் சென்று அந்த பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதை எப்படித்தூக்கினால் கீழே விழாமல் செய்ய முடியும் என்பதை விளக்கிக் காட்டினார்.பையனும் ஒரு பாடத்தை அழகாகக் கற்றுக் கொண்டான்.
இப்படி பொறுமையுடன் குழந்தைகளை வளர்த்தால் நிச்சயம் சமுதாயத்தில் அவர்கள் உயர்ந்தவர்களாக வருவார்கள்.

எது?எது?

0

Posted on : Tuesday, June 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ரிபு என்று  ஒரு தத்துவ ஞானி இருந்தார்.நிதாகர் என்பவர் அவருடைய சீடர்.சீடருக்கு எல்லாக் கலைகளையும்  சொல்லிக் கொடுத்தபின்னும் உயர்ந்த சில தத்துவங்களில் அவருக்கு தன்னறிவு  வரவில்லை.ஞானி சீடரை அவ்வப்போது தேடி அவர் தன நிலையில் உயர்ந்திருக்கிறாரா  என்று சோதனை செய்வதுண்டு.ஒரு முறை ஞானி ஒரு ஊருக்கு சென்றிருந்தபோது ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்ததைக் கண்டார்.அரசன் தன பட்டத்து யானை மீதேறி போய்க்கொண்டிருந்தான்.அந்த சாலையில் சீடன் நிதாகர் தர்ப்பைப்புல்லுடன் ஒரு ஓரமாக நின்று கொண்டிருப்பதைக் கவனித்தார்.உடனே அவரிடம் சென்று,''என்ன இங்கு நின்று கொண்டிருக்கிறீர்?''என்று கேட்டார்.சீடருக்கு குருவை அடையாளம் தெரியவில்லை.என்றாலும்''ராஜா ஊர்வலம் போகிறதே,அதனால் நிற்கிறேன்,''என்றார்.''எது ராஜா ஊர்வலம்?''என்று குரு  கேட்டார்.''
''அதுதான் போய்க்கொண்டிருக்கிறதே?''-இது பதில்
''அதில் யார் ராஜா?''-குருவின் கேள்வி.
;;யானை மேல் போகிறவன்,''-சீடரின் பதில்.
 ''யானை எது?''மீண்டும் குரு கேட்டார்.
''கீழே இருப்பது யானை,மேலே இருப்பது ராஜா.''
''கீழ் எது,மேல் எது?என்று குரு கேட்டவுடன் நிதாகருக்குக்  கோபம் வந்து அவரைக் கீழே தள்ளி அவர் மேல் ஏறி உட்கார்ந்து,''நீதான் கீழ்,நான்தான் மேல்.''.என்றார்.அதற்கு குரு சிரித்தபடி நிதானமாக,''அது சரி,நீ எது,நான் எது?''என்றவுடன் சீடருக்கு வந்திருப்பது தன குரு என்பது புரிந்துவிட்டது.சீடருக்கு ஆன்மீக அனுபவம் கிட்டியது.

வைரக்கல்

0

Posted on : Monday, June 06, 2011 | By : ஜெயராஜன் | In :

கபீர் மிகச்சிறந்த ஞானியாக விளங்கியவர்.அவரது மகன் பெயர் கமால்.கபீர் எல்லாவற்றையும் உதறித் தள்ளியவர்.அவருக்கு இந்த உலகில் எதுவும் தேவைப்படவில்லை.யார் காணிக்கை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.ஆனால் அவர் மகன் கமால் ஏற்றுக் கொள்வார்.இது கபீருக்குப் பிடிக்கவில்லை.எனவே காணிக்கைகளை ஏற்க வேண்டாம் என்று மகனுக்கு அறிவுரை கூறினார்.கமால் கேட்டார்,''செல்வம் அர்த்தமற்றது என்றால் அதை வேண்டாம் என்று சொல்ல என்ன அவசியம் வந்தது?நாம் தேடிச் செல்ல வேண்டாம்.வந்தால் அதை வேண்டாம் என்று சொல்வதும் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றதுதானே?கபீருக்கு இந்த வாதம் ஏற்புடையதாக இல்லை எனவே தன மகனை வெளிய போகச் சொன்னார்.கமாலும் தனியாகச்சென்று ஒரு குடிசையில் தங்கினார்.
கபீரைக் காண வந்த காசி அரசன்,விபரம் கேள்விப்பட்டு கமாலைப் பார்க்கச் சென்று ஒரு விலை மதிப்பற்ற வைரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கினான்.''ஒரு கல்லை எதற்குக் கொண்டு வந்தாய்?''என்று கமால் கேட்க திகைத்துப்போன அரசன் அதைத் திரும்ப எடுத்துச் செல்ல முனைந்தான்.''அது கல்தானே?அதை எடுத்துச் செல்ல ஏன் சிரமம்?அப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று நீ நினைத்தால்,இப்போதும் நீ அதை விலை உயர்ந்த வைரம் என்றே எண்ணுகிறாய் என்று அர்த்தம்,''என்றார் கமால்.கமால் வைரத்தை வைத்துக் கொள்வதற்காக சாதுரியமாகப் பேசுவதாக எண்ணினான் அரசன்.''சரி,இதை எங்கே வைப்பது?''என்று  கமாலிடம் அவன் கேட்டான்.''எங்கே வைப்பது என்று கேட்பதனால்,இதன் மீது உனக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது என்று பொருள்.ஆகவே வைப்பது என்ன,எங்காவது தூக்கி எறி,''என்றார் கமால்.அரசன் ஒன்றும் சொல்லாது வைரத்தை வாசலில் இருந்த பிறை இடுக்கில் சொருகினான்.கமால் அதை நிச்சயம் எடுத்துக் கொள்வார் என்று நம்பினான்.ஆறு மாதங்கள் கழித்து அவ்வழியே வந்த அரசன் கபீரைப் பார்த்து வணங்கி சிறிது நேரம் கழித்து வைரத்தை  கமால் என்ன செய்தார் என்று வினவ,கமாலுக்கு ஒன்றும்  புரியவில்லை.அரசன் உடனே வைரத்தைத் தான் வைத்த இடத்தில் தேட,அது அங்கேயே இருந்தது.கபீர் விருப்பு,வெறுப்பு,இச்சை,விரக்தி என்ற எல்லா நிலைகளையும் தாண்டிக் கடந்து விட்டார்.

யார் காரணம்?

0

Posted on : Monday, June 06, 2011 | By : ஜெயராஜன் | In :

அன்பே உருவான வயதான தம்பதியினர்,வெளியூரில் வசிக்கும் மகனைப் பார்க்க மலைப் பகுதி வழி செல்லும் பேருந்து ஒன்றில் ஏறினார்கள்.இறங்க வேண்டிய நிறுத்தத்தில் அவர்களை மட்டும் இறக்கி விட்டு பேருந்து கிளம்பிச் சென்றது..போகும் வழியில் மலையில் இருந்து உருண்டு வந்த ஒரு பெரிய பாறை பேருந்தின் மேல் விழுந்து பேருந்து நசுங்கி பயணிகள் அனைவரும் அந்த இடத்தில் இறந்து போனார்கள்.இச்செய்தி வயதான தம்பதியினருக்குத் தெரிய வந்தது.''நல்ல வேலை,நீங்கள் முன்னரே இறங்கியதால் தப்பித்தீர்கள்,''என்றார் ஒருவர்.பெரியவர் சொன்னார்,''நாங்கள் இறந்காதிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது.அனைவரும் தப்பித்திருப்பர்.''கேட்டவருக்கு  ஆச்சரியம்.''ஏன் அப்படி சொல்கிறீர்கள்?''என்று கேட்டார்.பெரியவர் வருத்தத்துடன் சொன்னார்,''பேருந்து எங்களுக்காக சிறிது நேரம் ஓரிடத்தில் நின்றதே.அப்படி நிற்காது தொடர்ந்து சென்றிருந்தால் அந்தப் பாறை விழுந்த நேரத்தில் அந்தப் பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்குமே?எவருக்கும் எதுவும் ஆகி இருக்காதே.''

சிலூட்

0

Posted on : Sunday, June 05, 2011 | By : ஜெயராஜன் | In :

நிழல் உருவத்தை சிலூட் (silhoutte) என்பார்கள்.இது ஒரு கொடியவனின் பெயர்.பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் நிதி அமைச்சராய்  இருந்த இவர் கடும் வரிகளைப் போட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானவர்.''எங்கள் நிழலைத் தவிர வேறு எதையும் விட்டு வைக்காமல் இப்படி வரி போடுகிறாரே''என்று மக்கள் நொந்து கொண்டிருந்தனர்.அதிலிருந்து நிழலை இகழ்ச்சியாகக் குறிப்பிடும் சொல்லாக சிலூட் நிலை பெற்று விட்டது.
**********
ரிகஷாஎன்ற வார்த்தை ஜின்-ரிக்கி-ஷா என்ற ஜப்பான் வார்த்தையிலிருந்து வந்தது.இதன் பொருள் 'மனித சக்தியில் ஓடுவது'
**********
கோஹினூர் என்பதற்கு 'ஒளிவெள்ளம்'என்று பொருள்.
**********
'தமுக்கம்'என்றால் யானைகள் போர் செய்யும் இடம் என்று பொருள்.
**********
ஸ்டாலின் என்ற சொல்லுக்கு எக்கு (steel) மனிதர் என்று பொருள்.
**********
பிளாஸ்டிக் என்னும் வார்த்தை பிலாஸ்டிகோ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.இச்சொல்லுக்கு வார்ப்பது என்பது பொருள்.
**********
ஜூடோ என்ற ஜப்பானிய சொல்லுக்கு சுலபமான வழி என்று பொருள்.
குங்க்பு என்ற சொல்லுக்கு உடைத்தல் என்று பொருள்.
**********
பிரமிட் என்ற சொல்லுக்கு கோதுமை கேக் என்று பொருள்.
**********

காலடிச்சுவடு

0

Posted on : Sunday, June 05, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதன் இறந்த பிறகு கடவுளிடம் போனான்.கடவுள் வாழ்க்கையில் அவன் கடந்து வந்த பாதையைக் காண்பித்தார்.அதில் நான்கு காலடிச்சுவடுகள் இருந்தன.''நீ போன இடங்களில் எல்லாம் நான் கூட வந்திருக்கிறேன் பார்,''என்றார் கடவுள்.ஆனால் நடுவில் கொஞ்ச தூரம் இரண்டு காலடிச்சுவடுகள் மட்டுமே இருந்தன.மனிதன் சொன்னான்,''துன்பத்தில் மட்டும் என்னைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டாயே,இறைவா!''சிரித்துக் கொண்டே கடவுள் சொன்னார்,''அந்த இரண்டு காலடிச்சுவடுகளும் என்னுடையவை.உன்னால் அத்துன்பத்தைத் தாங்க முடியாததால் நான் உன்னைச் சுமந்து கொண்டு சென்றேன்.''

ஔவையார்

0

Posted on : Sunday, June 05, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒளவையாரின் எளிய பாடல்களில் சில;

கொடிது கொடிது வறுமை கொடிது.
அதனினும் கொடிது இளமையில் வறுமை.
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்.
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்.
அதனினும் கொடிது இன்புற அவர் கையில் உண்பதுதானே.
**********
பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை யுண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம்.-சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே யாமாயிற்
கூறாமல் சன்னியாசம் கொள்.
**********
இனிது இனிது ஏகாந்தம் இனிது.
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினு நனவினும் காண்பதுதானே.
**********

உமிழ் நீர்

0

Posted on : Saturday, June 04, 2011 | By : ஜெயராஜன் | In :

நம் வாய்க்குழியில் மூன்று ஜோடி உமிழ் நீர் சுரப்பிகள் உள்ளன.அவைதான் உமிழ் நீரை சுரக்கின்றன.பரோடிட் என்றொரு உமிழ் நீர் சுரப்பி அளவில் பெரியது.இதன் எடை சுமார் இருபத்தைந்து  கிராம்.அடுத்து மேல்தாடை அடிசுரப்பி இருக்கிறது.இதன் எடை இருபது கிராம்.மூன்றாவதாக மூன்று கிராம் எடை கொண்ட நாக்கு அடி சுரப்பி உள்ளது.
நம் உமிழ் நீர் சுரப்பிகள் பார்ப்பதற்கு ஒரு சிறிய திராட்சைக் குலை போல இருக்கும்.தொட்டால் மிருதுவாக இருக்கும்.ஒவ்வொரு சுரப்பியிலும்  எண்ணற்ற சிறிய சுரப்பி செல்கள் இருக்கும்.இவை உமிழ் நீரை சுரக்கும்.இந்த உமிழ்நீர் உமிழ் நீர் நாளம் வளாக வாய்க்குழிக்குள் சுரக்கும்.
உமிழ் நீர் எப்படி சுரக்கிறது?நம் மூளையில் முகுளம்  என்றொரு பகுதி உள்ளது.அதுதான் உமிழ் நீர் சுரப்பிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறது.நாம் உணவை உண்ணும் நேரத்தில் உணவு உணர்வு நரம்புகள் உந்தப் படுகின்றன. அந்த உணர்வு மத்திய நரம்பு மண்டலம் வழியாக முகுளத்தை அடைகிறது.முகுளம் உடனே உமிழ் நீர் சுரக்க,சுரப்பிகளுக்கு மத்திய நரம்பு மண்டலம் வழியாகவே சமிக்ஞைகளை அனுப்பி விடுகிறது.வாய்க்குழியில் உமிழ் நீரும் சுரக்கிறது.
பொதுவாக இரவில் குறைவாகவும்,பகலில் சாப்பிடும் நேரங்களில் அதிகமாகவும் உமிழ் நீர் சுரக்கும்.ஒரு நாளில் சுமார் ஒன்றரை லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது.
உமிழ் நீரில் 99%தண்ணீரும் 1%சோடியம்,பொட்டாசியம் பைகார்பனேட் போன்ற பொருட்களும்  இருக்கின்றன.இது தவிர ம்யுசின் என்ற களிமண் போன்ற பொருளும் அமிலேஸ் என்ற செரிமான நொதியும் லைசொனசம் எனப்படும் கிருமிக் கொல்லி நொதியும் உள்ளன.உமிழ் நீரை வீணாக்கக்கூடாது.

வாங்க!சிரிங்க!

0

Posted on : Saturday, June 04, 2011 | By : ஜெயராஜன் | In :

அப்பா; (மகனிடம்)உன் வயதில் நான் பொய் பேசினதே இல்லை,தெரியுமா?
மகன்:அப்போ அதை எப்போது ஆரம்பித்தாய்?
**********
''நான் பிரச்சினைகளை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்வதே இல்லை.''
'நானும் தான்.ஏன்னா,என் வீட்டு வாசலிலேயே அது காத்திருக்கும்.'
**********
மன்றம் ஒன்றில் ஒருவர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்.அது மிக மோசமாக இருந்தது.கூட்டத்தில் எல்லோரும் உட்கார முடியாமல் நெளிந்து கொண்டிருந்தனர்.அப்போது ஒருவர் திடீரென ஒரு பெரிய பிரம்பை கையில் வைத்துக் கொண்டு மேடை அருகே வந்து முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தார்.கவிதை வாசித்துக் கொண்டிருந்தவர் பயந்து தன கவிதையை நிறுத்தி விட்டார்.பிரம்பை வைத்திருந்தவர் அவரிடம்,''நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள்.உங்களை இங்கு கவிதை வாசிக்க ஏற்பாடு செய்தவரைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.''
**********
சாலையில் எதிரில் வந்த ஆசாமியிடம் ஒருவர் சொன்னார்,''எனக்கு ஜோசியம் தெரியும்.உங்களுக்கு சொல்லவா?''அந்த ஆசாமி உடனே தன கையை அவரிடம்  நீட்டினார்.அவர் உடனே சொன்னார்,''நீங்கள்  வடக்குத்தெருவில் உள்ள சலவையகத்தில் வேலை பார்க்கிறீர்கள்.சரியா?'' ஆசாமி அசந்து விட்டார்.'மிகச் சரியாகச் சொன்னீர்கள்'என்றார்.அவர் சொன்னார்,''அது ஒன்றும் சிரமமில்லை.நீங்கள் போட்டிருக்கும் உடைகள் என்னுடையவை.''
**********
ஒருவர் தன கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் மாலை  ஐந்து மணி பேருந்தில் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தார்.நேரம் ஆகிவிட்டதோ என்ற பதைப்புடன் வழியில் ஒருவரிடம்,'நேரம் என்ன?'என்று கேட்டார்.அவர் உடனே வீட்டினுள் சென்று ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்து ஓரிடத்தில் நிறுத்தி அதன் நிழலை அளந்து  ''இப்போது மணி நான்கு'' என்றார்.வந்தவர் கேட்டார்,''நீங்கள் வெயில் இல்லாதபோது எப்படி நேரம் கண்டு பிடிப்பீர்கள்?''அவர் அமைதியாக தன இடது கை முழுக்கை சட்டையை சற்று மேலே தள்ளி தன வாட்சைக்  காட்டி,''இதை வைத்துதான் தெரிந்து கொள்வேன்.''என்றார்.
**********
ஒரு பெண் தன தோழியிடம் சொன்னாள்,''அதோ போகிறாரே,அந்த ஆள் என்னிடம் வந்து வழிந்து கொண்டிருந்தார்.திடீரென  முகமெல்லாம் வெளிறி ஒருவித படபடப்புடன் வேகமாகச் சென்று விட்டார். ஏன் என்று தெரியவில்லை.''தோழி சொன்னாள்,''நான் வருவதைப் பார்த்திருப்பார்,''பெண்  கேட்டாள்,''நீ என் தோழி  என்று அவருக்கு தெரிந்திருக்காதே?''தோழி சொன்னாள்,''அவர்தான் என் கணவர்.''
**********

கரடி மனிதர்கள்

0

Posted on : Friday, June 03, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் ஒருவருடன் உட்கார்ந்து ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கும்.அத்தகைய நேரத்தில் நுழைவார்கள் சில கரடி மனிதர்கள்.மரியாதைக்காக நாம் அவர்களை விசாரிப்போம்.அவ்வளவுதான்.ஒரு பெரிய செய்தி மூட்டையை அவிழ்த்து விட்டு நாம் பேசிக் கொண்டிருந்த தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் நம்மை எங்கோ கொண்டு விட்டு விடுவார்கள்.நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தில் வரக்கூடிய ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு தங்கள் அனுபவங்களைப் பேச ஆரம்பித்து அபூர்வமாகச் சந்தித்த இரு நண்பர்களின் பொன்னான நேரத்தை வீணடித்து அவர்கள் வந்த பிரச்சினைக்கு முடிவெடுக்க முடியாமலேயே செல்ல வைத்து விடுவார்கள்.கரடி மனிதர்கள் வந்த விஷயத்தையும் சொல்லாமல் அதிக நேரத்தையும் வீணாக்குவார்கள். நமக்கே நம் பிரச்சினை குழப்பிக் கொண்டிருக்கும்போது புரியாத்தனமாக தங்கள் பிரச்சினையை விலாவாரியாக எடுத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.ஒரு வேலையும் செய்ய விடமாட்டார்கள்.
சில சமயம் நம்மையும் அறியாமல் நாமே கரடி மனிதர்கள் ஆகி விடுவதுண்டு.நாம் கரடி மனிதர்களா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
*நாம் நுழைந்ததும் சம்பந்தப்பட்ட இருவர் பேச்சும் கப்பென்று துண்டிக்கப்பட்டால் நாம் கரடி மனிதர்கள்.
**நாம் நுழைந்ததும் அவர்கள் பேச்சை மாற்றினால் நாம் கரடி மனிதர்கள். என்பது அவர்களின் எண்ணம்.
***நம்மிடம் எந்தப் பேச்சையும் வளர்க்காமல் அவர்கள் பாட்டிற்குப் பேசிக் கொண்டிருந்தாலும் நாம் கரடி மனிதர்கள்.
சரி,நாம் கரடி மனிதர்கள் என்று பேர் வாங்காதிருக்க என்ன வழி?
*''நீங்கள் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருக்கும்போது நான் நுழைந்து கெடுத்து விட்டேன் என்று நினைக்கிறேன்,''என்று சொல்லிவிட்டு  பேச்சை தொடங்க வேண்டும்.
**தங்கள் தவிப்பை அடியோடு புறக்கணித்துவிட்டு நம்முடன் உரையாடுவதில் ஆர்வம் காட்டாவிட்டால் உடனே அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.
***அவர்கள் கேட்டாலொழிய நம் மூட்டைகளை அவிழ்க்காமல் அவர்கள் பேசும் தலைப்பை ஒட்டியே நாம் பேச வேண்டும்.அதையும் அவர்கள் விரும்பும்  வகையில் பேச வேண்டும்.
இப்படிச் செய்தால் நாம் கரடிகள் அல்ல;சூரப்புலிகள்.
                                                             --லேனா தமிழ்வாணன்

கடமை வீரர்

0

Posted on : Thursday, June 02, 2011 | By : ஜெயராஜன் | In :

பிரபல எழுத்தாளர் பிரேம் சந்த் உடல் நிலை மிகவும் குன்றிய நிலையிலும் சிரமத்துடன் எழுதிக் கொண்டே இருந்தார்.ஒருநாள் பொறுக்க முடியாத அவர் மனைவி,''உங்கள் உடல் நலம் சரியில்லாத இந்த நிலையிலும் எழுத் வேண்டுமா?சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்.உங்கள் உடல் நலத்தையும் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா?''என்று கேட்டார்.பிரேம்சந்த் அமைதியாகப் பதில் கூறினார்,''விளக்கு ஒன்று ஏற்றி வைத்தால்,அதனுடைய கடமை அந்த இடத்திற்கு வெளிச்சம் தருவதுதான்.எண்ணெயும் திரியும் எவ்வளவு காலத்திற்கு இருக்கிறதோ,அவ்வளவு காலமும் அது ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கும்.எண்ணெயானது தீர்ந்தவுடன் அவ்விளக்கு தானே அணைந்துவிடும்.''

விருந்தாளி

0

Posted on : Thursday, June 02, 2011 | By : ஜெயராஜன் | In :

துறவி ஒருவரைப் பார்க்க நீண்ட தூரத்திலிருந்து ஒருவர் வந்தார்.துறவி தங்கியிருந்த குடிலில் ஒரு பொருளும் இல்லை.வந்தவர் வியப்புடன் கேட்டார்,''உங்களுக்கென்று பொருள் எதுவும் கிடையாதா?''துறவி சிரித்துக்கொண்டே,''உங்கள் பார்வையில் அப்படித்தான் தோன்றும்.பரவாயில்லை,அதே கேள்வியை நான் உங்களிடம் இப்போது கேட்கலாம் அல்லவா?ஏனெனில் உங்களிடமும் தற்போது எந்தப் பொருளும் இல்லையே?''என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''நான் உங்களைத் தேடி வந்த விருந்தாளி.இங்கு சிறிது நேரம் மட்டுமே இருப்பேன்.அதனால் நான் எதையும் கொண்டு வரவில்லை.''துறவி இப்போது சொன்னார்,''அன்புக்குரியவரே!உங்களைப்போலத்தான் நானும் இவ்வுலகிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறேன்.நானும் சிறிது காலம் தான் இங்கே இருப்பேன்.எனவே எதற்கு தேவையில்லாத பொருட்கள்?''

பொன்மொழிகள்-17

1

Posted on : Wednesday, June 01, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு விஷயம் மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதில் ஏற்படும் அவமானம் பற்றிப் பேசாதே;அந்த ஒன்று இருப்பதே அவமானம் தானே.
**********
இங்கிதம் தெரியாத பெண்ணுக்கு
சங்கீதம் தெரிந்து என்ன பயன்?
**********
கடமையைச்செய்;மௌனமாக இருப்பதே அவதூறுக்கு சரியான பதில்.
**********
மனிதனுடைய ஆசைகளுக்கு அளவில்லை;அதேபோல அவனுடைய ஆற்றல்களுக்கும் அளவில்லை.
**********
கிளிகள் கூண்டில் அடைக்கப்படுகின்றன.காக்கைகளோ உல்லாசமாகத் திரிகின்றன.நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள்;அல்லாதவர்கள் சுகப்படுகிறார்கள்.
**********
நமது கெட்டிக்காரத்தனம் நமது அனுபவத்தில் இருந்து வருகிறது.
நமது அனுபவமோ நமது முட்டாள்தனத்திலிருந்து வருகிறது.
ஆக நமது கெட்டிக்காரத்தனம் நமது முட்டாள்தனத்திலிருந்தே வருகிறது.
**********
பேச்சில் ஆழம் அதிகம் இல்லாதபோது நீளம் அதிகமாக இருக்கும்.
**********
வலி இல்லையா?கை இல்லை.
முள் இல்லையா?சிம்மாதனம் இல்லை.
துன்பம் இல்லையா?புகழ் இல்லை.
சிலுவை இல்லையா?மகுடம் இல்லை.
**********
சும்மா எச்சரிக்கையுடன் நின்று கொண்டிருந்தால் மட்டும் உலகில் உங்களுக்கென்று தனி இடம் கிடைத்து விடாது.தாக்குங்கள்;அடிபடுங்கள்;அப்போதுதான் கிடைக்கும்.
**********
ஏமாற்றுக்காரனை ஏமாற்றுவது எமாற்றமல்ல.
**********
சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்;அவற்றைக் கிளிசல்கலாகவும்,அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!
**********
பாதிப்பணக்காரன் ஆகி விட்டால் முழுப் பணக்காரன் ஆவது எளிது.
**********
சட்டங்களை சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன.
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
**********
நீ விரும்புவதை செய்வதில் உன் சுதந்திரம் அடங்கி உள்ளது.
நீ செய்வதை விரும்புவதில் உன் மகிழ்ச்சி அடங்கி உள்ளது.
**********
மனிதன் பகுத்தறிவு சொல்கிறபடி நடப்பதில்லை.
ஆசை சொல்கிறபடிதான் நடக்கிறான்.
**********
குழந்தை இளமையாய் இருக்கும்போது பெற்றோருக்குத் தலைவலி.
அதுவே வயதாகிவிட்டால் பெற்றோருக்கு நெஞ்சுவலி.
**********

வாதம்

0

Posted on : Wednesday, June 01, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு விஷயத்தைப்பற்றிய உண்மையை அறிந்து கொள்ள மக்கள் வாதம் செய்வதுண்டு.வாதம் மூன்று வகைப்படும்.
விதண்டாவாதம்: தங்கள் கருத்து என்னவென்று சொல்லாமல் எதிராளியின் கருத்து தவறு என்று நிரூபிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதுதான் விதண்டாவாதம்.எதிராளியைத் தோற்கடித்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதுதான் குறி.உண்மையைத் தெரிந்து கொள்வதில் துளிக்கூட ஆர்வம் இருக்காது.
ஜல்பம் : எதிராளியின் கருத்து என்னவென்று அறிய விரும்பாமல் தன கருத்தை மட்டுமே வலியுறுத்திக் கூறுவதே ஜல்பம்.
வாதம் :தன்னைக் கெட்டிக்காரன் ஆகக்  காட்டிக் கொள்ளவோ,எதிராளியை மட்டம் தட்ட வேண்டும் என்பதோ நோக்கம் அல்ல.உண்மையை அறிவதுதான் குறிக்கோள்.எதிராளியின் கருத்து சரி என்று நிரூபிக்கப்பட்டால் அதனால் வருத்தம் அடையாது,தான் தோற்றதற்குக் கவலைப்படாமல் உண்மையை அறிந்து கொண்டோமே என்று மன மகிழ்வு ஏற்படும்.