உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மெழுகுவர்த்தி

0

Posted on : Sunday, October 31, 2010 | By : ஜெயராஜன் | In :

கணவனும் மனைவியும் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென மின்சாரம் நின்று விட்டது.ஆனாலும் ஒரு மெழுகு வர்த்தியைப் பொருத்தி வைத்து விட்டு இருவரும் தொடர்ந்து சாப்பிட்டார்கள்.கணவன் முதலில்சாப்பிட்டு முடித்தான்.அவன் கை கழுவ எழுந்தான் மனைவி சொன்னாள்.''எனக்குரொம்ப வேர்க்கிறது..''கணவன் உடனடியாக,''மின் காற்றாடியை சுழல விடட்டுமா?''எனக் கேட்டான்.மனைவி கோபத்துடன்,''உங்களுக்கு மூளை மழுங்கி விட்டதா?என்னால் இருளில் சாப்பிட முடியுமா?நீங்கள் காற்றாடியைப் போட்டால் மெழுகுவர்த்தி அணைந்து விடாதா?''என்று கேட்டாள்.

எப்போது?

0

Posted on : Sunday, October 31, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜெயிலிலிருந்த ஒருவனுடைய கடிதப் போக்குவரத்து முழுவதும் கடுமையாகக் கண்காணிக்கப் பட்டன.ஒருமுறை அவன் மனைவியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.அதில்,தோட்டத்தில் எப்போது விதைக்கலாம் எனக் கேட்டு எழுதியிருந்தாள்.உடனே இவன் பதில் எழுதினான்,''அன்பே,தோட்டத்தில் மண்ணை இப்போது தோண்டாதே.அதில் தான் நான் என்னுடைய ஆயுதங்களை எல்லாம் ஒழித்து வைத்திருக்கிறன்.''அடுத்து மனைவியிடமிருந்து கடிதம் வந்தது.''ஆறு பேர் வந்து நம் தோட்டத்தை முழுவதும் தோண்டி  மண்ணைப் புரட்டி விட்டார்கள்.''கணவன் இப்போது எழுதினான்,''சரி,இப்போது விதைகளை விதைத்துவிடு.''

கிரிக்கெட்

0

Posted on : Saturday, October 30, 2010 | By : ஜெயராஜன் | In :

இரண்டு வயதானவர்கள் பொழுது போகாமல் பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரும் இளவயதில் கிரிக்கெட் விளையாடியவர்கள்.அப்போது ஒருவர் கேட்டார்,''சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுவார்களா?''அடுத்தவருக்கு பதில் தெரியவில்லை.அப்போது யார் முதலில் இறந்தாலும்,இதுபற்றி அடுத்தவரின் கனவில் வந்து சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.சில நாட்களில் ஒருவர் இறந்து விட்டார்.அடுத்தவரின் கனவில் வந்து அவர் சொன்னார்,''ஒரு நல்ல செய்தி,இங்கு கிரிக்கெட் தினசரி விளையாடுகிறார்கள்.ஒரு கெட்டசெய்தி,நாளைய கிரிக்கெட் விளையாட்டில்உன் பெயரும் சேர்க்கப்  பட்டுள்ளது.''

உபயோகம்

0

Posted on : Saturday, October 30, 2010 | By : ஜெயராஜன் | In :

1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது.அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு.அப்போது நேரு ,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான்.ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள்.அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார்.உடனே சிறந்த பாராளுமன்றவாதியான  மகாவீர் தியாகி எழுந்து  ,''இதோ,என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார்.பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை.அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.

குழந்தைகளை அடிக்கலாமா?

0

Posted on : Friday, October 29, 2010 | By : ஜெயராஜன் | In :

குழந்தைகள் தவறு செய்யும்போது அடிக்கலாமா?அடிக்கலாம் என்பதைவிட தண்டிக்கலாம்.குழந்தைகளைத் தண்டிக்கும்போது  கவனிக்க வேண்டியவை:
**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும்.பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
**தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்.மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
**தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
**தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது,குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.
**தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான்,அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
**குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும்.நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
**குழந்தை தவறு செய்தால்,தொடர்ந்து தண்டிக்க வேண்டும்.ஒரு முறை தண்டிப்பதும்,மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
**குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும்.தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தானுருவாகும்.
**குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
**தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிடமன ரீதியான அணுகு முறையே  சிறந்தது.

விவேகானந்தர்

0

Posted on : Friday, October 29, 2010 | By : ஜெயராஜன் | In :

விவேகானந்தரின் பொன்மொழிகளில் சில:
இந்தியாவில் மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஒற்றுமையுடன் செயல்படுவதில்லை.ஒவ்வொருவரும் பட்டம் பதவிகளுக்காகப் போட்டி இடுகிறார்கள்.
**********
பேச்சு...பேச்சு....எப்போதும் பேசிக்கொண்டிருப்பதே வியாதி இதை நன்கு உணர வேண்டும்.
**********
கோழைத்தனத்தை விடப் பெரியதொரு பாவம் வேறெதுவுமில்லை.கோழைகள் என்றுமே காப்பாற்றப் பட மாட்டார்கள்.
**********
வலிமையே வாழ்வு:கோழைத்தனமே மரணம்.வலிமையற்றவர்க்கு இங்கு இடமில்லை.பலவீனம் அடிமைத்தனத்தில் புகுத்தி விடும்.உடலளவிலும் உள்ளத்தளவிலும் வரக் கூடிய எல்லாத் துன்பங்களுக்கும் பலவீனமே காரணம்.
**********
தீயோர்களுக்கு உலகம் நரகமாகத் தெரிகிறது.நல்லோருக்கு சுவர்க்கமாகத் தெரிகிறது.அருளாளருக்கு அருள் வடிவமாகத் தெரிகிறது.பகை உணர்ச்சி உடையவர்களுக்கு வெறுப்பு மயமாகத் தெரிகிறது.சண்டை சச்சரவு இடுபவர்களுக்கு போர்க்களமாகத் தெரிகிறது.அமைதியானவர்களுக்கு அமைதிக் களஞ்சியமாகத் தெரிகிறது.முழுமையுற்ற மனிதனுக்கு தெய்வமாகத் தெரிகிறது.
**********
ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுக்க முடியும் என்றா நீ நினைக்கிறாய்?அது தானாகவே கற்றுக் கொள்ளும்.வாய்ப்புகளை உண்டாக்கித் தருவது,இடர்ப்பாடுகளை நீக்குவதுதான் உன் கடமை.
**********
உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.
**********
நீங்கள் கற்ற லட்சணம் தான் என்ன?மாற்றான் மொழியில் மற்றவர் கருத்துக்களை மனப்பாடம் செய்து மூளையில் அவற்றைத் திணித்து வைத்துப் பிறகு ஒரு சில பட்டங்களைப் பெற்றதனால் மெத்தப் படித்தவர் என்ற எண்ணம் உங்களுக்கு!இதுவா கல்வி?
**********
தனக்கு எது தேவையோ,அதை இறைவன் தந்தருளவில்லை என்ற காரணத்தினால் உலகம் இறைவனைத்  துறந்து விட்டது.உதாசீனப்  படுத்தியுள்ளது.கடவுளை ஒரு நகராட்சியின் அதிகாரியாகவா நாம் நினைப்பது?
**********

விளைவு

0

Posted on : Thursday, October 28, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு யானை தன உணவுக்காக,ஒரு தோட்டத்தில் நுழைந்தால்,அது அங்கு உண்பதை விட சேதமாவதே அதிகமாக இருக்கும்.அதே சமயம்,தேனீ,தன உணவுக்காக ஒரு மலரிலிருந்து தேன் எடுப்பது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது?அது தேனை எடுக்கும்போது பூவிற்கு எந்த சேதமும்,மாற்றமும் ஏற்படுவதில்லை.ஒரு பூவைப் பார்த்தால்,அதிலிருந்து தேனீ தேன் எடுத்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்கவேமுடியாது.
தன கீழே உள்ளவர்களிடம் வேலை வாங்கும் நிலையில் உள்ளவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய பாடம் இது.

பரிசின் பொருள்

0

Posted on : Thursday, October 28, 2010 | By : ஜெயராஜன் | In :

வீர சிவாஜி,தன குருவான ராமதாசரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.ஒரு முறை சிவாஜி ராமதாசருக்கு ஏராளமான பொன்னும்,மணியும் பரிசாக அனுப்பினார்.அவற்றைப்  பெற்ற ராமதாசர்,கையளவு மண்,சில கூலாங்கற்கள்,கொஞ்சம் குதிரை சாணம்,ஆகியவற்றை சிவாஜிக்கு பரிசாக அனுப்பினார்.அதைப் பார்த்த அனைவரும் கோபப்பட,சிவாஜி மட்டும் புன் முறுவலோடு சொன்னார்,''என் குரு தீர்க்க தரிசனத்துடன் அனுப்பிய பொருட்கள் இவை.இந்த மண்,முகலாயரின் ஆதிக்கத்திலிருந்து நாடு முழுவதையும் நான் ஜெயிப்பேன்,என்பதைக்  குறிக்கிறது.கூலாங்கற்கள்,எனது நாட்டை வலிமை மிக்க கோட்டைகளால் பாதுகாப்பேன் என்று காட்டுகின்றன. குதிரையின் சாணம்,எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய குதிரைப் படையை நான் அமைப்பேன் என்பதை உணர்த்துகிறது.''

சொல்லின் செல்வர்

0

Posted on : Wednesday, October 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில்  ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார்,''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள்.இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.வாரியார் தொடர்ந்தார்,''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத்  தான்  சொல்கிறேன் .''

அறிஞர்

0

Posted on : Wednesday, October 27, 2010 | By : ஜெயராஜன் | In :

கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார்.அவர் கேட்டார்,''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''வாலி சொன்னார்,''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம்.அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''அறிஞர்உடனே கிண்டலாக சொன்னார்,''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?''  வாலி  சிரித்துக் கொண்டே,''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.

தூய அன்பு

0

Posted on : Tuesday, October 26, 2010 | By : ஜெயராஜன் | In :

சுவாமி ராமதீர்த்தர் அமெரிக்கா சென்றார்.உடன் வந்த பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.சுவாமி எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.தனியாக நின்ற அவரைக் கண்ட ஒரு அமெரிக்கர்,அவரிடம் வந்து,''நீங்கள் எங்கே போகவேண்டும்?உங்கள் உடமைகள் எங்கே?அறிமுகக் கடிதம் ஏதேனும் உள்ளதா?''என்று கேட்டார்.சுவாமி சொன்னார்,''எனக்கு உடமைகள் எதுவும் கிடையாது.என்னிடம் பணமும் எதுவுமில்லை.அறிமுகக் கடிதம்  எதுவும் கிடையாது.''ஆச்சரியமுற்ற அந்த அமெரிக்கர்,''அப்படியானால் நீங்கள் இங்கு எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?இங்கு நண்பர்கள் யாரேனும் உள்ளனரா?'' என்று கேட்டார்.  ராமதீர்த்தர் புன்னகையுடன் அமெரிக்கரின் தோளில் கையை வைத்து,''எனக்கு ஒரு நண்பர் இங்கே உள்ளார்,''என்றார்.அவரும்,''அவர் எங்கேயிருக்கிறார்?''என்று கேட்க சுவாமி சொன்னார்,''அவர் நீங்கள்தான்.'' இதைக் கேட்ட அந்த அமெரிக்கர் நெகிழ்ந்து போய்விட்டார்.பின் அவரே அவருக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்.

மெய்யழகு

0

Posted on : Tuesday, October 26, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜனகரின் அரசவைக்கு அஷ்டவக்கிரர் என்ற தத்துவ மேதை வந்தார்,அவர் உடல் எட்டு கோணலாகத் திருகியிருந்ததால் அவருக்கு அந்தப் பெயர்.அவைக்குள் அவர் வந்ததும் அங்கு கூடியிருந்தோர் அவருடைய அவலட்சணத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.அஷ்டவக்கிரர் நிதானமாகச் சொன்னார்,''ஜனகரே,இது தத்துவ ஞானிகள் நிறைந்த சபை என்று நான் எண்ணித்தான் இங்கு வந்தேன்.கசாப்புக் கடைக்காரர்களும்,செருப்பு தைப்பவர்களும் நிறைந்த இந்த சபைக்கு தவறுதலாக வந்து விட்டேன்.''இதைக்கேட்ட அறிஞர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.மன்னர் அவரிடம் விளக்கம் கேட்டார்.அதற்கு அவர்,''இங்குள்ளவர்கள் என்னைத் தோலாகவும் சதையாகவும், எலும்பாகவுமே பார்த்தனர்.சதையையும் எலும்பையும் விற்பவர் கசாப்புக் கடைக்காரர்.தோலைப் பயன்படுத்துபவர் செருப்புத் தைப்பவர்.ஒரு உன்னதமான தத்துவ ஞானி,மனிதனின் ஆன்மாவையே பார்க்கிறார்.அதையே அங்கீகரிக்கிறார்.அது அனைவருக்கும் ஒன்றே,''என்று பதிலளித்தார்.

பணிவு

0

Posted on : Monday, October 25, 2010 | By : ஜெயராஜன் | In :

அசோகா சக்கரவர்த்தி தன ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே  வெளிப்படுத்தினார்.மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புளித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையையாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.இப்போது அசோகா மன்னர் சொன்னார்,''தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது?இறந்த பிறகு நமக்கு  மதிப்பில்லைஎன்பது நமக்கு தெரிகிறது.உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?''தளபதிக்கு இப்போது புரிந்தது.

ஓம்சாந்தி

0

Posted on : Monday, October 25, 2010 | By : ஜெயராஜன் | In :

இறைவனை வேதங்கள்  மற்றும் கீர்த்தனைகளால் துதிக்கும்போது இறுதியில் ஓம் சாந்தி:சாந்தி:சாந்தி என்று முடிப்பதைக் காணலாம்.சாந்தி என்றால் அமைதி.சாந்தி என்று மூன்று முறை சொல்வதன் நோக்கம் மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காகச் சொல்லப்படுவதாகும்.
ஆத்யாத்மிகம்:நம்மால்  வரும்  தடை.உடல் நோய்,மனப் பிரச்சினைகள் போன்றவை.
ஆதி பௌதீகம்:பிற உயிர்களால் வரும் தடைகள்.
ஆதி தைவீகம் .இயற்கை சக்திகளால் வரும் தடைகள்.மழை,இடி,தீ போன்றவை.
மூன்று முறை சாந்தி என்று சொல்வதன் மூலம்  நாம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபடுவதாக சொல்லப்படுகிறது. 

துயரம்

0

Posted on : Sunday, October 24, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா வேலையிலிருந்து வீடு திரும்பியதும்சட்டையைக் கழற்றினார்.அந்த சட்டையை வாங்கிய அவரது மனைவி அதில் ஒருநீளமான கருப்பு முடி இருந்ததைப் பார்த்ததும் அவள்மிகுந்த கோபத்துடன்,''நீ ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்,''என்று கூறி சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.''வழியில் ஒரு கூட்டத்தில் புகுந்து வந்தபோது யாருடைய முடியாவது ஒட்டியிருக்கும்,''என்று முல்லா கூறிய சமாதானம் எடுபடவில்லை.அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மறுநாள் முல்லா வேலை முடிந்து வந்தவுடன்,விரைந்து வந்து அவரது மனைவி அவருடைய சட்டையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.அப்போது சட்டையில் ஒரு வெள்ளை முடி இருப்பதைக் கண்டாள்.அவ்வளவுதான்..பிடி பிடிஎனப் பிடித்துக் கொண்டாள் ''நேற்று ஒரு இளம் பெண்:இன்று ஒரு வயதான பெண்.நீ சரியான காமாந்தகனாக இருக்க வேண்டும்.என் வாழ்க்கையே பாழாகி விட்டது.''என்று கூவ ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் முல்லா  வேலையிலிருந்து வரும்போது,பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்று எண்ணி சட்டையை கழட்டி ,நன்றாக உதறிவிட்டு மறுபடியும் உடுத்திக் கொண்டார்.வீட்டுக்கு வந்தவுடன் அவரது மனைவி வழக்கம் போல அவரது சட்டையை பரபரவென சோதனை போட்டாள்.ஒன்றும் கிடைக்கவில்லை.முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.ஆனால் திடீரென உரத்த குரலில் அவர் மனைவி அழ ஆரம்பித்தாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.அவள்,''செய்வதைசெய்துவிட்டு ஒன்றும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?கேவலம்,ஒரு மொட்டைத் தலைக்காரியுடன் இன்று சுற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்.நான் என் தாயின் வீட்டுக்குப் போகிறேன்,''என்றாள்.பாவம்,முல்லாவால் என்ன சொல்ல முடியும?

கும்பல்

0

Posted on : Sunday, October 24, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கும்பலோடு நீங்கள் சேர்ந்து இயங்கும்போது எந்த குற்றத்தையும் செய்ய முடியும்.ஏனெனில்,''கும்பலே அதை செய்தது,நான் அதன் பகுதி மட்டுமே,''என்பதாக நீங்கள் உணர்கிறீர்கள்.தனியாக என்றால்,அதை செய்வதா வேண்டாமா என்று ஒரு முறைக்கு பல முறை யோசிப்பீர்கள்.கும்பலிலோ பொறுப்பு இல்லாமல் போகிறது.உங்களின் தனி மனித சிந்தனை மழுங்கி விடுகிறது.கும்பல்களுக்கு பைத்தியம் பிடிக்க முடியும்.இதை ஒவ்வொரு நாடும் அறிந்திருக்கிறது.ஒவ்வொரு கால கட்டமும் அறிந்துள்ளது.ஆனால் கும்பல்கள் ஞான நிலைப்பெறு பெற முடிந்ததாக எந்த நாடும் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை.நீங்கள் முற்றிலும் தனியாக இருக்கும்போது நீங்கள் வளரத் தொடங்குகிறீர்கள்.

வேட்டை நாய்

0

Posted on : Saturday, October 23, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு வேட்டை நாய் கிராமத்தைக் காவல் காத்து வந்தது.ஒரு நாள் அது தன குட்டியுடன் சென்று கொண்டிருந்தது.அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய்கள் வேட்டை நாய்களைப் பார்த்து குலைத்தன.வேட்டை நாயோ அதனை கருத்தில் கொள்ளாது தன வழியே சென்று கொண்டிருந்தது. குட்டி நாய்,தாயிடம் கேட்டது,''அவை குலைப்பதை கேட்டுவிட்டு ஒன்றும் செய்யாது வருகிறாயே?அந்த நாய்களைக் கடித்துக் குதற வேண்டாமா?'' வேட்டை நாய் பதில் சொன்னது,''அப்படி செய்யக் கூடாது.தெரு நாய்கள் இருப்பதால் தான் வேட்டை நாய்களான நமக்கு உயர்ந்த மதிப்பு இருக்கிறது.எனவே அவற்றை ஒன்றும் செய்யக்கூடாது.''

அரசும் வேம்பும்

0

Posted on : Saturday, October 23, 2010 | By : ஜெயராஜன் | In :

ராமநாதபுரம் சேதுபதியின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் சிலேடைப்புலி என்ற பட்டம் பெற்ற வேம்பத்தூர் பிச்சுவையர் .ஒரு சமயம் புலவர் சபை கூடியது.எல்லா இருக்கைகளிலும்புலவர்கள் அமர்ந்து விட்டனர்.தாமதமாகப் பிச்சுவையர் வந்தார்.''வேம்புக்கு இங்கு இடம் இல்லையே!''என்று சேதுபதி வேடிக்கையாகக் கூறினார்.உடனே பிச்சுவையர்,''வேம்பு அரசின் அருகில் தானே இருக்கும்.''என்று கூறி சேதுபதியின் அருகில் போய் அமர்ந்து கொண்டார்.

தாகம்

0

Posted on : Friday, October 22, 2010 | By : ஜெயராஜன் | In :

நமக்கு தாகம் எப்படி எடுக்கிறது?
இரத்தத்தில் நீரும் உப்பும் இருக்கின்றன.இவை ஒரே சீரான அளவில் இருக்கும்போது நமக்கு தாகம் எடுப்பதில்லை.இவற்றின் அளவு குறையும்போது தான் தாகம் எடுக்கிறது.உதாரணமாக வெயிலில் நடந்து வரும்போது உடலிலுள்ள வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. இதனால் இரத்தத்திலுள்ள உப்பின் அளவு குறைகிறது.இந்த அவசர நிலையை மூளையிலுள்ள தாக மையம் தொண்டைக்கு செய்தியாக அனுப்புகிறது.அப்போது தொண்டையில் சுருக்கம் ஏற்படுகிறது.உடனே தொண்டை உலர்ந்து தாகம் எடுக்கிறது.
**********
இஸ்லாமிய சகோதரர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக் கொள்கிறபோது ,''அஸ்ஸலாமு அலைக்கும்''என்பர்.இதன் பொருள்,''உங்களுக்கு எல்லா நலன்களும் அமைதியும் உண்டாகட்டும் என்பதுதான்.
**********
கராத்தே என்றால் வெறும் கை என்று பொருள்.
**********
ஆண்டு மழை 125 மில்லி  மீட்டருக்கும்  குறைவாக உள்ள பகுதிகள் தாம் பாலைவனம் என்று அழைக்கப்படுகின்றன.
**********
மூங்கில் ஒரு வகை புல் இனத்தை சேர்ந்தது.
**********
கி.பி 440 லிருந்துதான் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ல் கொண்டாடப்படுகிறது.
**********

தெரியுமா?

0

Posted on : Friday, October 22, 2010 | By : ஜெயராஜன் | In :

பிரபலமான நாவலாசிரியர்,ஜார்ஜ் மூர் ஒரு  சிறந்த மேதை.அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது.டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர்.  வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.
                                                                         இப்படிக்கு.
                                                                       ஜார்ஜ் மூர்.
அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம்.அப்போது பசு தன வால் பக்கம் திரும்பி,''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!''என்று பதில் சொல்லியதாம்.
                                                                        இப்படிக்கு
                                                                       ஆர்ச் பிஷப்

நரகத்துக்குப்போ

0

Posted on : Thursday, October 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு அதிகாரி கோபம் வரும் போதெல்லாம் தன கீழ் உள்ள அலுவலரை,'நரகத்துக்குப்போ,''என்று கூச்சலிடுவது வழக்கம்.அந்த அலுவலருக்கு இதைக் கேட்கும் பொழுதெல்லாம் வருத்தமாக இருக்கும். இதை தவிர்ப்பதற்கு ஒரு வழி கண்டாக வேண்டும் என்று நீண்ட நாள் யோசித்தார்.ஒரு நாள் அதிகாரி கோபத்தில்,'நரகத்துக்குப்போ,''என்று திட்டியபோது,அவர் அமைதியாகச் சொன்னார்,''ஐயா,எனக்கு உங்களிடம் வேலை பார்பதுதான் மிகவும் பிடித்திருக்கிறது.அதனால் அடுத்த முறை உங்களுக்கு நரகத்துக்கு  மாறுதல் வரும்போது உங்களுடன் நானும் நரகம் வந்து விடுகிறேன்.''அதன்பின் அந்த அதிகாரி அந்த மாதிரி யாரையும் திட்டுவதில்லை.

பரிசோதனை

0

Posted on : Thursday, October 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஓவியர் புதிதாக ஒரு ஓவியம் வரைந்திருந்தார்.இது வரை அவர் வரைந்த  ஓவியங்களிலே இதுதான் சிறந்தது என்று அவர் நினைத்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒரு மருத்துவர் வந்தார்.ஓவியர் அவரிடம் தன புதிய ஓவியத்தைக் காட்டி அவருடைய கருத்தைக் கேட்டார்.மருத்துவரும் அந்த ஓவியத்தை நீண்ட நேரம் பரிசோதித்தார்.ஓவியத்தின் ஒவ்வொரு பகுதியையும் உற்றுக் கவனித்தார்.இருபது நிமிடம் சென்றது ஓவியருக்கே மருத்துவர் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. பின்  மருத்துவர் சொன்னார்,''நிச்சயமாக  இது மலேரியா காய்ச்சலின் அறிகுறி  போலத்தான் தெரிகிறது.''

அனுபவம் புதுமை!

0

Posted on : Wednesday, October 20, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லாவிடம் ஒருவர் வந்து,''நீங்கள் மிகுந்த அனுபவம் உடையவர்கள்.எனக்கு கண்ணில் மிகுந்த வலி.அதற்கு தகுந்த மருந்தினைக் கூறுங்களேன்.''என்று நயந்து கேட்டார்.முல்லா சொன்னார்,''முன்பொரு முறை எனக்கு பல்லில் வலிவந்தது.அப்போது நான் வலித்த பல்லைப் பிடுங்கி விட்டேன்.''வந்தவர் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்.

காப்பாற்றுவது யார்?

0

Posted on : Wednesday, October 20, 2010 | By : ஜெயராஜன் | In :

முஹம்மது நபி அவர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே சென்ற ஒரு யூத வீரன் அவரை அடையாளம் கண்டு அவர் மீது இருந்த வெறுப்பினால் அவரைக் கொன்று விட முடிவு செய்து,வாளை உருவிக்கொண்டு  அவர் அருகில் சென்றான்.சப்தம் கேட்டு விழித்தார் நபிகள்.அந்த யூதன்,''முகம்மதுவே,இப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார்கள்?''என்று அவரிடம் கேட்டான்.நபிகள்,''இறைவன் தான் என்னைக் காப்பான்,''என்று உரக்கக் கூறினார்.அந்தக் குரல் தந்த அதிர்ச்சியில் யூதன்கையிலிருந்து வாள் நழுவியது.நபிகள் உடனே அந்த வாளை எடுத்துக் கொண்டு அவனிடம் கேட்டார்,''இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்கள்?'' அவன்,''என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை,''என்று கதறினான்.நபிகள் புன்முறுவலுடன் அவனிடன் சொன்னார்,''இல்லை நண்பரே,உம்மையும் அந்த இறைவன் தான் காப்பாற்றுவான்,''பின் அந்த வாளை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.அந்த வீரன் தன செயல் குறித்து வெட்கி தலை குனிந்தான்.

சிந்திப்போம்

0

Posted on : Tuesday, October 19, 2010 | By : ஜெயராஜன் | In :

சொத்து சேர சேர ஒரு குடும்பத்தில் கலகம் உண்டாகும்.செல்வம் சேர சேர  ஒரு ஜாதியில் பிளவு உண்டாகும்.அதிகாரம் வளர வளர ஒரு  மதம் தன மரியாதை இழக்கும்.
**********
கர்வம் கொண்டவன் எல்லோரையும் தூஷிப்பான்.எல்லா நேரமும் தூஷிப்பான்.கர்வம் கொண்டவன் கடவுள் நிந்தனை செய்யவும் தயங்க மாட்டான்.
**********
எல்லா மதத்தினரும் இறை வழிபாட்டை வெறும் கர்வக் கொப்பளிப்பாக மாற்றிவிட்டார்கள்.அலட்டலாய் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அகம்பாவத்தின் உச்சகட்டமாக இறை வழிபாடு ஆகிவிட்டது.அதனால்தான் மற்ற மதத்தினர் மீது ஆத்திரம் வருகிறது.
**********
இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆணின் அகங்காரமும் அதிகமாக வெளிப்படுகின்ற இடம் மனைவியின் மீதுதான்.
**********
கர்வப்படக் கூடாது என்று கட்டளை போட்டால் கர்வப்படும்.பொய்  சொல்லாதே என்று மனசுக்குக் கட்டளை போட்டால் அது பொய் சொல்லும். கர்வப்படு என்று விட்டுவிட்டு,கர்வப்படுவதை வேடிக்கை பார்த்தா,நம்ம கர்வம் நம்ம எதிர்க்கே வெட்கப்பட்டு நம்மையே விட்டுட்டு ஓடிடும்.
**********
உதறி விடுவோமே என்று பயந்துதானே உரிமை கொண்டாடுகிறாய்.கலவரம் தானே உறவுக்குக் காரணம்?அதீத பயம் தானே  குழு மனப்பான்மை?
**********
இல்லறத்தைத் துறப்பது துறவல்ல.அகந்தையைத் துறப்பதே துறவு.மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்.
**********
ஆசை,ஆங்காரம்,அதைரியம் மூன்றும் புத்தியை அலுப்படைய  வைக்கும்.உடம்பிலுள்ள சுரப்பிகளை தேவையில்லாமல் வேலை வாங்கும்.அதனால் தூக்கம்,கனவு,மயக்கம்,வியாதி ஏற்படும்.ஆசையற்று இருப்பவருக்கு வியாதியில்லை.தூக்கமும் ஒரு வித நோயே.
**********
                        'என் கண்மணித்தாமரை'என்ற நூலில் பாலகுமாரன்.

இறை வணக்கம்

0

Posted on : Tuesday, October 19, 2010 | By : ஜெயராஜன் | In :

நபிகள் நாயகம் மதீனாவில் ஒரு பள்ளி வாசலுக்கு செல்லும் போதெல்லாம்  ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடு பட்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பற்றி விசாரித்தபோது அவர் சிறந்த பக்திமான் என்றனர்.இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே அவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவர் குடும்ப செலவுக்கு என்ன செய்கிறார் என்று நபிகள்  கேட்டார்.அருகிலிருந்தவர் சொன்னார்,''அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.அவர் விறகு வெட்டி வியாபாரம் செய்கிறார்.அவர் தான் இவருடைய தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்.''நபிகள் உடனே சொன்னார்,''இரவும் பகலும் இறைவனை வழி படும் அந்த நண்பரிடம் சொல்லுங்கள்.இவரைக்காட்டிலும் விறகு வெட்டிப் பிழைக்கும் இவரது அண்ணன் ஆயிரம் பங்கு மேலானவர்.குடும்பத்தின் தேவைக்கு நியாயமான வழியில் சம்பாதிப்பது சிறந்த இறை வணக்கம்தான் என்று அவருக்கு எடுத்து சொல்லுங்கள்.''பெருமானாரின் கூற்றை அறிந்த அந்த பக்தர் அன்று முதல் தமது அண்ணனுக்கு உதவியாக விறகு வெட்ட ஆரம்பித்தார்.ஓய்வு கிடைத்தபோதெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபடலானார்.

மூன்றாம் பதிப்பு

0

Posted on : Monday, October 18, 2010 | By : ஜெயராஜன் | In :

டெட்சுகன்  என்றொரு ஜென் ஞானி இருந்தார்.அவர் ஜென் சூத்திரங்களை எல்லாம் சீன மொழியிலிருந்து ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கக் கருதி,  அதற்கு ஆகும் செலவை சரிக்கட்ட ஜப்பான் முழுவதும் சென்று பலரிடமு நிதி உதவி கேட்டார்.அனைத்துத் தரப்பினரும் உதவி அளித்தனர்.ஆனால் தேவையான பணம் திரட்ட பத்து ஆண்டுகள் ஆயிற்று.மொழி பெயர்ப்பு வேலையை ஆரம்பிக்க இருந்த தருணத்தில் நதி ஒன்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்இழந்துதுன்புற்றனர் .டெட்சுகன் சேர்த்த பணம் முழுவதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
செலவழித்தார்.
மீண்டும் பல ஆண்டுகள் மொழி பெயர்ப்புக்காக நிதி திரட்டினார்.இரண்டாம் முறை வேலை ஆரம்பிக்கும்போது நாடெங்கும் கொள்ளை நோய் பரவி ஏராளமான மக்கள் துன்புற்றதால் மறுபடியும் சேர்த்த பணம் எல்லாவற்றையும் அந்த மக்களுக்காக செலவழித்தார்.
பின்னரும் அவர் மனம் தளர்வடையாமல் மொழி பெயர்ப்பு வேலைகளுக்காக பணம் திரட்ட ஆரம்பித்தார்.சுமார் இருபது ஆண்டுகள் பணம் திரட்டி தான் நினைத்தபடி அனைத்துஜென் சூத்திரங்களையும் மொழி பெயர்த்து முடித்து விட்டார்.முதல் பிரதியை அவர் ஒரு மடாலயத்தில் மக்களின் பார்வைக்காக வைத்தார்.அதனைப் பார்வையிட்ட ஜென் துறவிகள்,''உண்மையில் இது டெட்சுகன் வெளியிட்ட மூன்றாவது பதிப்பாகும்.இதைவிட நாம் கண்ணால் பார்க்க முடியாத  முதல் இரண்டு பதிப்புகளும் மிக அற்புதமானவை,''என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

உடைமை

0

Posted on : Monday, October 18, 2010 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார்.அவருடைய நண்பர் ஒருவர் இருந்தார்.அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது.எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு.ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார்.உயிருள்ள தன மனைவியை ஒரு பொருளுடன்  ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை.எனினும் தன நண்பரின் வாயடைக்க விரும்பினார்.அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர்,உமக்கு  உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?''நண்பர் வாயைத்திறக்கவில்லை.

எந்த கட்சி?

0

Posted on : Sunday, October 17, 2010 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் தமது குடியரசுக்  கட்சிக்காக  தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.கூட்டத்தில் ஒருவன் எழுந்து,''நான் ஜனநாயகக் கட்சியை  சேர்ந்தவன்,''என்று கூச்சலிட்டான்.  ''நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்?''என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட்.அவன் சொன்னான்,''என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார்.எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.''ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,''உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய்?அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்,''கட்டாயம் உங்கள் குடியரசுக் கட்சியில் இருந்திருப்பேன்.''

அறிவில்லாதவன்

0

Posted on : Sunday, October 17, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு புலவர்,தன மகனைப் பார்த்து,'அறிவில்லாதவனே,'என்று திட்டினார். அவனோ சிரித்துக் கொண்டேஇருந்தான்.புலவருக்கு இன்னும் கோபம் அதிகமாகிவிட்டது.''நான் உன்னை அறிவில்லாதவன் என்று கூறியும் கொஞ்சம் கூடவெட்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாயே?''என்று கேட்டார்.மகன் சொன்னான்,''நீங்கள் என்னைப் பாராட்டும்போது எனக்கு எப்படிக் கோபம் வரும்?''புலவருக்கு திகைப்பு.மகன் சொன்னான் ,''அப்பா,நீங்கள்  ஒரு புலவர்.நீங்களே என்னை அறிவில் ஆதவன் என்று சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியே.''

யார் வாழ்ந்தார்?
கோவில் குருக்கள் சொன்னார்,
''திரு நீறிட்டார் தாழ்ந்தார்.இடாதார் வாழ்ந்தார்.''
கேட்டவர் திகைத்தார்.குருக்கள் விளக்கம் சொன்னார்,
''திருநீறு இட்டு யார் தாழ்ந்தார்?இடாது யார் வாழ்ந்தார்?''

கால் வலிக்கும்

0

Posted on : Saturday, October 16, 2010 | By : ஜெயராஜன் | In :

அந்த ஊரில் முல்லா  ஒருவரைத் தவிர யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது.  ஒரு ஏழை முல்லாவிடம் வந்து வெளியூரிலிருக்கும் தன தங்கைக்குக் கடிதம் எழுதித் தரச் சொன்னான்.முல்லா சொன்னார்,''முடியாது.எழுதினால் கால் வலிக்கும்.''வந்தவன் திகைத்து,'அது எப்படி?'என்று கேட்டான்.முல்லா சொன்னார்,''என்னுடைய கையெழுத்தை என்னைத் தவிர யாராலும்படிக்க முடியாது.உன் சகோதரிக்கு நான் கடிதம் எழுதிக் கொடுத்தால்,அதைப் படித்துக் காட்ட,நான் உன் சகோதரியின் ஊருக்கு நடந்து தானே செல்ல வேண்டும்? அவ்வளவு தூரம் நடந்தால் கால் வலிக்காதா?''

நல்லது கெட்டது

0

Posted on : Saturday, October 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சீடன் தன குருவிடம் கேட்டான்,''நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே  கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?''குரு சிரித்துக் கொண்டே,''அது அவரவர் விருப்பம்,''என்றார்.பகல் உணவு வேலை வந்தது.அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான்.குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார்,''பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது.பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?''

பொன்மொழிகள்--14

0

Posted on : Friday, October 15, 2010 | By : ஜெயராஜன் | In :

சூதாட்டம் பேராசையின் குழந்தை:அநீதியின் சகோதரன்.
**********
தகுதியில்லாத ஒருவனைப் புகழ்தல் ,கள்ளச்சந்தையில் ஒரு பொருளை விற்பதற்கு சமம்.
**********
ஒத்தாசைக்கு பத்துப் பேர்இருந்தால்,செத்துப்போன குதிரையும் பந்தயத்தில் ஓடும்.
**********
ஒருவர் உங்களிடம் அறிவுரை கேட்கிறார்  என்றால்,உங்கள் வாயால்,தன்னைப் புகழ வேண்டும் என்று நினைக்கிறார் என்று பொருள்.
**********
யாராவது தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால்,எனக்கு அவரைப் பிடிக்கும்.காரணம் ,நல்லதைத்தவிர எதுவும் என் காதில் விழாது அல்லவா ?
**********
ஒரு காரியத்தை எப்போது தொடங்கலாம் என்று நாம் யோசிக்கும்போதே  காலம் கடந்து விடுகிறது.
**********
உங்கள் பிரச்சினை என்றால் மூளையை உபயோகியுங்கள்:
மற்றவர் பிரச்சினை என்றால் இருதயத்தை உபயோகியுங்கள்.
**********
ஒரே ஒருவர் உங்களை கழுதை என்று சொன்னால் அதை லட்சியம் செய்யத் தேவையில்லை.இரண்டு பேர் சொன்னால் ஒரு சேணம் வாங்கிக் கொள்வது நல்லது.
**********
முகஸ்துதிக்காரரிடம்  எச்சரிக்கையாய் இருங்கள்.அவர் உங்களுக்கு  விருந்து  அளிக்கிறார்--வெறும் கரண்டி கொண்டு.
**********
புகழ் என்பது ஒரு வலை:இதனைக் கொண்டு எந்த மனிதனையும் பிடித்து விடலாம்.
**********
மற்றவர்களின் தவறுகளிலிருந்து தான் நாம்பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.அவ்வளவு தவறுகளையும் செய்ய நம் ஆயுள் போதாது.
**********
மௌனத்தின் சிறப்பைப் பற்றி என்னால் மணிக்கணக்காகப் பேச முடியும்.
**********
ஆகாயக் கோட்டை கட்டுவதில் தவறில்லை.அஸ்திவாரம் மட்டும் தரையில் இருக்க வேண்டும்.
**********
ஒவ்வொரு பறவைக்கும் கடவுள் உணவளிக்கிறார்.ஆனால்
அதை அவர் அதன் கூட்டினுள் போடுவதில்லை.
**********

நேரம் சரியில்லை

0

Posted on : Friday, October 15, 2010 | By : ஜெயராஜன் | In :

இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.ஒரு கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மக்களில் பத்து பேர் மழைக்காக அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில் ஒதுங்கினார்கள்.அவர்களில் ஒருவர் ஜோஷ்யர்.அவர் சொன்னார்,''இங்குள்ளவர்களில் ஒருவருக்கு நேரம் சரியில்லை ஆகவே அவர் தலையில் சிறிது நேரத்தில் இடி விழப்போகிறது.''இதைக்கேட்டு அனைவருக்கும் பயமாகிவிட்டது,நேரம் சரியில்லாத ஒருவரால் அவ்வளவு பெரும் பாதிக்கப் படுவதா?அந்த ஆள யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?  இறுதியில் ஒருவர் சொன்னார்,''இந்த வயதான கிழவன் தான் நேரம் சரியில்லாத மனிதன் போலத் தெரிகிறது.எனவே நாம் அவரை இங்கிருந்து வெளியே விரட்டி விடுவோம்.''அனைவரும் ஆமோதித்தனர்.கிழவர் வேறு வழியில்லாது,இருமிக்கொண்டே மெதுவாக அங்கிருந்து வெளியே சென்று  ஒரு மரத்தடியில் நின்று கொண்டார்.அப்போது ஒரு பெரிய இடி இடித்தது. கிழவர் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டார்.சிறிது நேரம் கழித்து கண்ணைத்  திறந்து பார்த்தபோது அந்த பழைய கட்டிடம் இடி விழுந்து தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

ஆறு தவறுகள்

1

Posted on : Thursday, October 14, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் எல்லோருமே பொதுவாக ஆறு தவறுகளை செய்கிறார்கள்.
*பிறரை அழித்துதனக்கு லாபம் பெற முயற்சிப்பது.
**திருத்த அல்லது மாற்ற முடியாதவைகளைப் பற்றி நினைத்து கவலைப்படுவது.
***நம்மால் முடியாது என்பதற்காக ஒரு செயலை எவராலும் செய்ய முடியாது என்று சாதிப்பது.
****சில்லறை விவகாரங்களுக்கு எல்லாம் அலட்டிக் கொள்வது.
*****மன வளர்ச்சிஇல்லாமை ,பக்குவம்பெறாமை ,பொறாமை,ஆகியவை.
******நாம் செய்வது போலவே மற்றவர்களும் செய்து வாழ வேண்டும் என்று பிறரைக் கட்டாயப் படுத்துவது.
                                   -- 2000ஆண்டுகளுக்கு முன் ரோமானியத் தலைவரும் அறிஞருமான சிசரோ கூறியது.

மேகமே,மேகமே

0

Posted on : Thursday, October 14, 2010 | By : ஜெயராஜன் | In :

எல்லா மேகங்களும் மழை தருவதில்லை.மேகங்களில் பல விதங்கள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமானவை நான்கு.
மென் பஞ்சியல் முகில்கள் (SIRRUS CLOUDS)
வெண்ணிற முகில்களான இவை பறவைகளின் இறகுகள்போல இருக்கும்.சின்னஞ்சிறு பனிக்கட்டிகளால் ஆன இவை விண்ணில் எட்டு கி.மீட்டர் முதல் பதினோரு கி.மீட்டர் உயரத்தில் உருவாகின்றன.
பாவடி முகில்கள்  (STRATUS CLOUDS)
மழை மூட்டத்திற்கும்,தூறலுக்கும் அறிகுறி இவ்வகை மேகங்கள்.8000 அடி    உயரத்தில் உருவாகுபவை இவை.
திரள்குவிக் கருமுகில்கள் (CUMULUS CLOUDS)
விண்ணில் வெண்ணிறமான மாலைபோலத் தோற்றமளிக்கும் இவற்றின் அடிப்பகுதி பரந்து காணப்படும்.  4000    அடி முதல்  5000     அடி உயரத்தில் உருவாகும்.
மழை முகில்கள் (NIMBO STRATUS CLOUDS)
கருப்பு நிறத்தில் தாழ்வாகக் காணப்படும்.இவ்வகை நமக்கு மழை தருபவை.

அண்டங்காக்கை

0

Posted on : Wednesday, October 13, 2010 | By : ஜெயராஜன் | In :

புலவர் ஒருவர்,ஒரு அரசனைக் கண்டு அவன் புகழைப்  பாடினார்.அரசனும் ஏதோ சன்மானம் அளித்தான்.புலவருக்கு அதில் திருப்தியில்லை.அரசனுக்கு தன பாடலை ரசிக்கக் கூடிய அளவுக்கு புலமை இல்லை என்று எண்ணி அவன் மீது அவருக்கு கோபம் வந்தது.அரசன் சரியான கருப்பு.புலவர் அரசனைப் பார்த்து,''அண்டங்காக்கைக்குப் பிறந்தவனே,''என்றார்.அரசனுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது உடனே வாளை உருவினான்.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த புலவர் புன்முறுவல் பூத்த முகத்துடன் அரசனிடம் சொன்னார்,''அரசே,அண்டம் என்றால் உலகம்.காக்கை என்றால் காப்பதற்கு என்று பொருள் அதாவது நீ உலகத்தை ஆள்வதற்குப் பிறந்தவன் என்று சொன்னேன்.''அரசன் முகத்தில் இப்போது மகிழ்ச்சி.உடனே மேலும் பரிசுகளைப் புலவருக்குக் கொடுத்து அனுப்பினான்.

நிலையாமை

0

Posted on : Wednesday, October 13, 2010 | By : ஜெயராஜன் | In :

வாழ்க்கையின் நிலையாமை குறித்து சித்தர்கள் பல பாடல்கள் எழுதியுள்ளனர்.அவற்றின் நோக்கம் வாழ்க்கையைக் கண்டு பயந்து ஓடுவதற்கு  அல்ல .நம்   வாழ்வில்  நாம்  நிதானத்துடன்  நடந்து  கொள்ள  அவை  பயன்படும் .இதோ ஒரு பாடல்:

ஊரைக்கூட்டி ஒலிக்கஅழுதிட்டு
பேரை  நீக்கி பிணமென்று பெயரிட்டு
சூறையங்காட்டிடையே  கொண்டு போய் சுட்டிட்டு 
நீரில் மூழ்கி நினைப் பொழிவரே.

 அதாவது ஒருவன் இறந்துவிட்டால்,ஊரில் அனைவருக்கும்  தகவல் சொல்லி விட்டு,சப்தம் போட்டு அழுதுவிட்டு.இதுவரை ஒரு பேர் சொல்லி அழைத்து வந்த அவருக்கு பிணம் என்று பெயரிட்டு,சுடுகாட்டிலே கொண்டு போய் பொசுக்கிவிட்டு,நீரில் முழுகிக் குளித்துவிட்டு அதோடு அவர் பற்றிய நினைப்பை ஒழித்துவிட்டு தம் வாழ்க்கையைப் பார்க்கப் போய் விடுவார்கள்.

இறைவனுக்கு நன்றி

0

Posted on : Tuesday, October 12, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜென் குரு ஒருவர் தன சீடர்களுடன் ஒரு பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.கடும் வெயில்.ஒரு மரம் கூட இல்லை.ஒதுங்குவதற்கு எங்கும் இடமில்லை.நீர்நிலை எதுவும் தென்படவில்லை.குடிக்க தண்ணீர் கூடக் கிடைக்காததால் சீடர்கள் அனைவரும் சோர்வடைந்தனர்.அதைப் பார்த்த குரு மாலை நேரம் ஆகிவிட்டதால் ஒரு இடத்தில் தங்கலாம் என்று சொன்னார்.உடனே சீடர்கள் அனைவரும் சுருண்டு படுத்து விட்டனர்.குரு,உறங்கச் செல்லும் முன் தியானம் செய்வது வழக்கம்.அன்றும் அவர் மண்டியிட்டபடியே,''இறைவா,தாங்கள் இன்று எமக்களித்த அனைத்திற்கும் நன்றி.''என்று கூறி வணங்கினார்.பசியில் இருந்த ஒரு சீடனுக்கு உடனே கடுமையான கோபம் வந்தது.எழுந்து உட்கார்ந்த அவன்,''குருவே இன்று இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே?''  என்றான்.சிரித்துக்கொண்டே குரு சொன்னார்,''யார் அப்படி சொன்னது?இறைவன் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார்.அற்புதமான தாகத்தைக் கொடுத்தார்.அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.''இன்பமு துன்பமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை ஞானிகள் உணர்ந்திருக்கின்றனர்.

பிச்சை

0

Posted on : Tuesday, October 12, 2010 | By : ஜெயராஜன் | In :

''நாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.நமக்கு எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும்.''என்று தான் பலரும் நினைக்கிறார்கள்.அப்படிஎன்றால் என்ன அர்த்தம்?மற்றவர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் இவர்கள் சந்தோசப்படுவார்கள்.இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால்,இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர் பார்த்திருப்பார்கள்.இன்னும் பச்சையாகச் சொன்னால்,''எனக்கு மரியாதை கொடு,எனக்கு மரியாதை கொடு,''என்று மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள்.மரியாதை என்ற பிச்சையை மற்றவர்கள் கொடுக்க மறுக்கும்போது இவர்களின் அமைதி பறிபோய் விடுகிறது.மகிழ்ச்சி தொலைந்து விடுகிறது.
                                              --சுவாமி சுகபோதானந்தா .

தலைவலி

0

Posted on : Monday, October 11, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாவலாசிரியர் ஆயிரம் பக்கங்கள் எழுதப்பட்ட கையெழுத்து பிரதியை எடுத்துக் கொண்டு ஒரு பிரசுரகர்த்தரைப் பார்க்கப்போனார்.அவரிடம் தன நாவலின் தனித்தன்மையைப் பற்றி விலாவாரியாகப் பேசினார்.தன கதா பாத்திரங்களைப் பற்றி பெருமையாகப் பேசினார்.மேலும் அவர் சொன்னார்,''சொன்னால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்.எனக்கு இங்கு வரும்போது கடுமையான தலைவலி இருந்தது.என் நாவலைப் பற்றி உங்களிடம் பேசியதில் அந்த தலைவலி போன இடம் தெரியவில்லை.''  பிரசுரகர்த்தர் சொன்னார்,''அந்த தலைவலி வேறு எங்கும் போகவில்லை.என்னிடம் வந்துவிட்டது.''

எதைப் பொறுத்தது?

0

Posted on : Sunday, October 10, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜென் ஞானியிடம்,''ஒருவரின் முன்னேற்றம்,வளர்ச்சி எதைப் பொறுத்தது?'' என்று கேட்கப் பட்டது.''அது நீங்கள்  கழுதையா,குதிரையா,எருமையா   என்பதைப் பொறுத்தது,''என்றார் ஞானி அதன் விளக்கம்:
கழுதையை ஒரு தட்டு தட்டினால்,பின்னால் எட்டி உதைக்கும்.எருமையை ஒரு தட்டு தட்டினால் அது கொஞ்சம் கூட கண்டுகொள்ளாது.குதிரையோ தட்டினால்  அசுர வேகத்தில் முன்னால் ஓட ஆரம்பிக்கும்.
அதேபோல்,யாராவது ஒரு திட்டு திட்டினால்,
சிலர் மீண்டும் திட்டுவார்கள்.இதனால் முன்னேற்றம் இராது.சக்தி முன்னோக்கிப் பாயாததால் வளர்ச்சி சாத்தியமில்லை.
சிலர் திட்டினால் கண்டு கொள்ள மாட்டார்கள்.இவர்கள் வாழ்வு வெறுமையாகத் தொடரும்.
சிலர் திட்டினால்,வாங்கிய திட்டுக்கும் கிடைத்த அவமானத்துக்கும் நேர் எதிராகச் செயல் படுவார்கள்.முன்னேற்றம் அடைவார்கள்.முன்னோக்கி ஓடுவதும்,திட்டியவர் ம்மேது வஞ்சம் கொள்ளாமல் அதையும் தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வர்.

பிறர் கவனம்

0

Posted on : Sunday, October 10, 2010 | By : ஜெயராஜன் | In :

மற்றவர்களின் கவனத்தை நாம் பெற நினைப்பது ஏன்?'நீ புத்திசாலி,நீ நல்லவன்,'என்று புகழ்ச்சியான சில வார்த்தைகளைக் கேட்பதற்குத்தான். 'நீ முட்டாள்,எதற்கும் லாயக்கில்லாதவன்'என்பது போன்ற அவச்சொற்களை வாங்கி விடக் கூடாது என்பதற்காகவும்தான்.
புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு மகிழ்ச்சியடைகிறோம்.இகழ்ச்சியான வார்த்தைகளுக்கு கோபமும்வெறுப்பும் கொள்கிறோம்.இப்படி பலர் நமக்குக் கொடுத்த மதிப்பெண் பட்டியலை வைத்து வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அதனால் நம் வாழ்க்கை,நம் மகிழ்ச்சி நம் கையில் இல்லை.போலித்தனமான வாழ்க்கை வாழ்கிறோம்.
நீ மோசமானவன் என்று யாராவது சொன்னால்,அது உண்மைதான் என்று  உடனே கோபப்பட்டோ,நொந்துபோயோ  நாம் நிரூபித்து விடுவோம்.
கணவனும் மனைவியும்,மாமியாரும் மருமகளும்,காதலனும் காதலியும் ஓயாது சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை.காரணம்,இது போன்ற சண்டைகள்தான் அவர்களிடையே சலிப்பு ஏற்படாமல் காத்துக் கொள்கிறது.சண்டையின் மூலம் மேலும் மேலும் ஒருவர் மீது இன்னொருவர் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள்.
நூறு பேர் ஒருவரை கவனித்தால் தெருவில் அவர் ஒரு முக்கியமான ஆள்.ஆயிரம் பேர் கவனித்தால் அவர் ஒரு பிரமுகர்.பத்தாயிரம் பேர் கவனித்தால் அவர் மிக முக்கியமானவர்.ஐம்பதாயிரம் பேர் கவனித்தால் அவர் ஒரு தலைவர்.
மற்றவர்களின் நன் மதிப்பை பெறுவது மட்டுமே நோக்கமாக இருக்கும்போது, அதற்காகவே வாழ ஆரம்பிக்கும்போது  அவர்கள் தங்களை வருத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.விளைவு,நல்ல பெயர் கிடைத்தாலும் திருப்தி அடைவதில்லை.தன ஆற்றலை வளர்த்துக் கொள்ள அக்கறை பிறக்காதவரை அடுத்தவர்களுக்காக நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
''நான் என் சுதந்திரத்தை இழக்க மாட்டேன்,மற்றவர்களின் நல்ல,கெட்ட  ஒப்புதல்களால் பாதிக்கப் படாத அளவுக்கு சிறந்த முதிர்ச்சியைப் பெறுவேன்,''என்ற அக்கறை பிறக்கும்போது நீங்கள் ஒப்பற்ற மனிதர் ஆகி விடுவீர்கள்.

சிந்தனைக்கு

0

Posted on : Saturday, October 09, 2010 | By : ஜெயராஜன் | In :

திரும்பத்திரும்ப ஒரே எண்ணம்மனதில் வட்டமடித்துக் கொண்டிருப்பதை  முக்கியமான பிரச்சினையாகக் கருதுகிறோம்.இதிலிருந்து விடுபட ஒரே வழி,மனதின் பிரச்சினைகளை உங்கள் சொந்தப் பிரச்சினையாக நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.உலகம் ஒரு சூப்பர் மார்க்கெட் மாதிரி.பல பொருட்கள்  அங்கேயிருந்தாலும் ஒரு சில தான் உங்களுக்கு தேவையானவை.
**********
உலகில் பிரச்சினை என்று ஒன்றும் கிடையாது.உங்களால் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளைப் பிரச்சினைகள் என்று முத்திரை குத்தி விடுகிறீர்கள்.சூழ்நிலை எப்படியிருந்தாலும் அதை உங்கள் முன்னேற்றத்திற்கு சாதகமாக ஆக்கிக் கொள்வது எப்படி என்று பார்க்க வேண்டும்.ஏதாவது ஒரு அனுபவம் கசப்பாகத் தோன்றினால் ,அது அந்த அனுபவத்தின் ருசியில்ல.அந்த சூழ்நிலையை நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள் என்று பொருள்.ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதைத் துரத்தி விட முடியாது.என்ன செய்தால் குறைவான பாதிப்பு ஏற்படும் என்று கவனித்து செயல் படுங்கள்.பிரச்சினையா,இல்லையா என்பது நிகழ்வில் இல்லை.அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.
**********
சலிப்பு,உற்சாகமின்மை,விரக்தி இந்த மூன்றும் வாழ்க்கையின் சாரத்தையே அழிக்கவல்லவை.உலகில் எந்த உயிர் சக்திக்கும் இவை ஏற்படுவது கிடையாது.மனிதனின் குறுகிய மனதில்தான் சலிப்பும்,எரிச்சலும் நம்பிக்கையின்மையும் ஊற்றெடுக்கின்றன.வாழ்க்கை என்பதே உற்சாகம்தான்.ஒரு முடிவைக் கண்டு அது தோல்வி என எரிச்சல் கொள்ளக் கூடாது.
**********
இன்றைய மனிதனுக்கு யார் மீதும் முழு நம்பிக்கை இல்லை.எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.சந்தேகங்கள் பெருகப் பெருக மனிதனுக்கு வாழ்க்கை பற்றிய தைரியம் குறைந்து போகிறது.சந்தேகங்கள் ஒரு மனிதனின் அடிப்படையையே அசைத்துப் பார்க்கும்.அடுத்தவர் மீதும் சமூகத்தின் மீதும் நம்பிக்கை இழந்தவர்கள் தான் ஒரு கட்டத்தில் குற்றவாளியாகிறார்கள்.அவர்களது சந்தேகம் தான் வன்முறையாக உருவாகிறது.மனித வாழ்வு வளம் பெறசந்தேகங்கள் களையப்பட வேண்டும்.
**********

தாயன்பு

0

Posted on : Saturday, October 09, 2010 | By : ஜெயராஜன் | In :

தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்க வில்லை.திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று  கொண்டிருந்ததைக் கவனித்தாள்.அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும்.கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.தாய் சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று,குழந்தையைப் பார்த்து,''பாப்பா,அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டேன்.நீ வருகிறாயா,இல்லையா?''என்று சப்தம் போட்டு சொன்னாள்.அடுத்த நிமிடம் குழந்தை திரும்பிதாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது.தாயன்பு தானே அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.

ஒப்பீடு

0

Posted on : Thursday, October 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பேராசிரியர் ஒரு ஜென் ஞானியிடம் சென்று,''நான் ஏன் உங்களைப்போல இல்லை?உங்களைப்போல என்னால் ஏன் அமைதியாய் இருக்க முடியவில்லை?உங்களுக்கு இருக்கும் அறிவு எனக்கு ஏன்  இல்லை?''என்று கேட்டார்.ஞானி சொன்னார்,''இன்று முழுவதும் என்னுடன் இருந்து என்னை கவனித்து வா.எல்லோரும் சென்றவுடன் உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.''அன்று முழுவதும் ஏராளமான மக்கள் ஞானியை வந்து தரிசித்து சென்றனர்.மாலையில் எல்லோரும்போன பின் பேராசிரியர் ஞானியிடம் தன கேள்விக்கு பதில் சொல்ல ஞாபகப் படுத்தினார்.அன்று பௌர்ணமி.முழு நிலவு வானில் அழகுடன் ஜொலித்தது.ஞானி கேட்டார்,''இன்னுமா உனக்கு பதில் கிடைக்கவில்லை?நான் மக்களுக்கு சொன்ன பதில்களைக்  கவனித்திருந்தால் உனக்கு பதில் கிடைத்திருக்கும்.பரவாயில்லை வெளியில் வா.இந்த அமைதியான தோட்டத்தில் முழு நிலவின் அழகினைப் பார்.இந்த நிலவொளியில் இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் எவ்வளவு அழகாய் இருக்கின்றன?''பேராசிரியர் பொறுமை இழந்து தன  கேள்விக்கு  பதில் சொல்லுமாறு கேட்டார்.ஞானி சொன்னார்,''உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் வெகு நாட்களாக என் தோட்டத்தில் இருக்கின்றன.ஆனால் ஒரு நாளும்.இந்த செடி தான் ஏன் இந்த  பெரிய மரம் போல இல்லை என்று மரத்திடம் கேட்டதில்லை.அதேபோல மரமும் அந்த செடியிடம் தான் ஏன் செடிபோல இல்லை என்று கேட்டதில்லை.மரம்,மரம்தான்.செடி,செடிதான்.மரம் தான் மரமாயிருப்பதிலும்,செடி,தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கின்றன.''
ஒப்பீடுதான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

மல்லிகை

0

Posted on : Wednesday, October 06, 2010 | By : ஜெயராஜன் | In :

பிரசவத்திற்கு வீட்டுக்கு வந்திருக்கும் நம் மகள்,
என் தலை முடியைப் பார்த்து,
''என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு,''என்றதும்
குறுக்கே புகுந்த நீங்கள்
''இது நரையா?முப்பது வருடம் மல்லிகைப் பூவை
சூடிச்சூடி இவள் கூந்தலும்
மல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது,''என்றீர்கள்.
 ''அப்பா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டாரே?''என்றாள் மகள்.
கட்டிக் கொண்டவளை விட்டுக் கொடுக்க
அவருக்குத் தெரியாது,மகளே.

வினோதமான கேள்வி

0

Posted on : Wednesday, October 06, 2010 | By : ஜெயராஜன் | In :

சீன ஞானி கன்பூசியசிடம் ஒரு சீடர்,''ஆனந்தமாயிருக்க ஒரு வழி சொல்லுங்கள்,குருவே,''என்று கேட்டுக் கொண்டான்.அதற்கு  கன்பூசியஸ்   ''உன் கேள்வியே விநோதமாக இருக்கிறது.எந்த ரோஜாவும்,தான் ரோஜாவாக என்ன வழி என்று கேட்பதில்லை.''என்றார்.உங்களுக்குள் ஆனந்தம் எப்போதும் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் மனிதன் தன அறியாமையினால் தன்னுள் பொங்கும் ஆனந்தத்தை தடுத்துக் கொண்டிருக்கிறான்.அவ்வாறு தடுக்காமலிருக்கக் கற்றுக் கொண்டால் ஆனந்தம் பொங்கிக்கொண்டே இருக்கும்.

அடையாளம்

0

Posted on : Tuesday, October 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதன் வேகமாக காவல் நிலையத்துக்குள் நுழைந்து,,''சார்,சற்று நேரத்துக்குமுன் ஒரு அயல் கிரக வாசியைப் பார்த்தேன்.அவன் எங்களைத் தாக்க வந்தான்.''என்று படபடவென சொன்னான்.அதிகாரி நடந்தவிஷயங்களை விளக்கமாகக் கூறச்சொன்னார்.அவன் சொன்னான்,  ''நான் என் மாமியாருடன் நடந்து வந்து கொண்டிருந்தேன்.திடீரென  அந்த அயல் கிரகவாசி என் மாமியாரைப் பிடித்துக் கொண்டான்.எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இங்கு ஓடி வந்தேன்.''காவல்  அதிகாரி,''அடையாளம் ஏதேனும் சொல்ல முடியுமா?''என்று கேட்க அவன் சொன்னான்,''நல்ல கனத்த உருவம்.தலை முடி சடை சடையாக இருக்கும்.பல் மூன்று வெளியே துருத்திக் கொண்டிருக்கும்.கூன் விழுந்திருக்கும்...''அதிகாரி,''அயல் கிரகவாசி அவ்வளவு பயங்கரமாகவா இருந்தான்?''என்று கேட்க,அவன் சொன்னான்,''ஹி,ஹி,...நான் என் மாமியாரைப் பற்றி சொன்னேன்.''

உலகில் சிறந்தவர்

0

Posted on : Tuesday, October 05, 2010 | By : ஜெயராஜன் | In :

பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பல்கலைக்கழக மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார்,''உலகிலேயே  சிறந்த மனிதன் நான் தான்,''உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து,''உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?''என்று கேட்டான். அடுத்து ஆசிரியர்,''உலகிலேயே சிறந்த நாடு எது?''என்று மாணவர்களைப் பார்த்துக்  கேட்டார்.மாணவர்கள் அனைவரும் பிரான்சு தேசக்காரர்களே.எனவே அவர்கள்,''பிரான்சு தான் சிறந்த நாடு,''என்றனர். பின் ஆசிரியர் கேட்டார்,''பிரான்சிலேயே சிறந்த நகரம் எது?''மாணவர்கள் அனைவரும் பாரிஸ் நகரை சேர்ந்தவர்கள்.எனவே அவர்கள் ஒருமித்து சொன்னார்கள்,''பாரிஸ் நகரம்தான்சிறந்த நகரம்.''  ''பாரிஸ் நகரிலேயே சிறந்த இடம் எது?''என்று ஆசிரியர் கேட்கே,மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததால்,அதுதான் சிறந்த இடம் என்றனர்.''நமது பல்கலைக் கழகத்திலேயே சிறந்த துறைஎது?''என்று ஆசிரியர் கேட்க,அவர்கள் அனைவரும் மனோதத்துவத் துறையில் இருப்பதால்,அதுதான் சிறந்த துறை என்று தயக்கம் ஏதுமின்றிக் கூறினார்.அடுத்து  பேராசிரியர்,''அந்த சிறந்த துறையின் தலைவர் யார்?''என்று கேட்க,''நீங்கள்தான்,''என்று கூறினர்.  இப்போது பேராசிரியர்,நிரூபிக்க முடியுமா என்று கேட்ட மாணவனிடம் கேட்டார்,''அப்போது நான் தானே உலகின் சிறந்த மனிதன்?''

கேட்டது என்ன?

0

Posted on : Monday, October 04, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் முல்லா ஒரு பணக்காரரிடம் சென்று தனக்கு ஒரு பெரிய தொகை கடனாகக் கேட்டார்.அவ்வளவு பணம் எதற்கு என்று அவர் கேட்டார்.உடனே முல்லா,''நன் யானை வாங்கப் போகிறேன்,''என்றார்.பணக்காரர் சொன்னார் ,''உன்னிடமோ பணம் இல்லை என்கிறாய்.யானை வாங்கினால் உன்னால் அதை வைத்து பராமரிக்க முடியாது.''முல்லா சொன்னார்,''நான் உங்களிடம் கேட்டது பணம் தான்.அறிவுரை கேட்கவில்லை.''

எது உதவும்?

0

Posted on : Monday, October 04, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெற்றோர் தன குழந்தையை பக்கத்து வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தனர்.அங்கு இருந்த ஆடும் மரக்குதிரையின் மீது ஏறி குழந்தை விளையாட ஆரம்பித்தது.புறப்படும் சமயம் பெற்றோர் குழந்தையை தூக்க சென்றபோது குழந்தை இறங்க மறுத்து அடம் செய்தது.''நம் வீட்டில் மூன்று மரக்குதிரைகள் இருக்கின்றன அதில் போய் விளையாடலாம் வா,''என அழைத்தனர்.குழந்தை வர மறுத்தது.வம்படியாகத் தூக்கி செல்லலாம் என்றால் அது அழுது அலறி ஆர்ப்பாட்டம் செய்தது.என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை.வீட்டுக்காரர்,''பக்கத்திலே ஒரு மனோ வைத்தியர் இருக்கிறார்.அவரை அழைத்து  வந்தால் அவர் சரி செய்து விடுவார்,''என்று ஆலோசனை கூறினார்.வைத்தியர் வந்ததும் குழந்தையைப் பார்த்துவிட்டு,தனக்கு வர வேண்டிய ஊதியம் பற்றி முதலில் முடிவு செய்து கொண்டு,குழந்தையின் அருகில்  சென்று,அதன் காதில் மெதுவாக ஏதோ சொன்னார்.குழந்தை உடனே கீழே இறங்கித்தான் தாயிடம் வந்து மரியாதையாக நின்று,''நம்ம வீட்டுக்குப் போகலாம் அம்மா,''என்றான்.அதிசயத்துடன் பெற்றோர்கள்,''என்ன மந்திரம் உபயோகித்தீர்கள்.இவ்வளவு விரைவில்நல்ல பிள்ளை ஆகிவிட்டானே!''என்று கேட்டனர்.மருத்துவர் தனஊதியத்தை முதலில் வாங்கிக் கொண்டு சொன்னார்,''உடனே நீ இறங்காவிட்டால்,நான் உன்னை அடிக்கிற அடியில் ஒரு வாரம் எழுந்திருக்க மாட்டாய்.உன்னை அடிக்க எனக்கு பணம் கிடைக்கிறது.அதனால் நான் சொல்வது விளையாட்டில்லை.உன்னை உறுதியாக அடிப்பேன்,என்று சொன்னேன்.''

தீராத சந்தேகம்

0

Posted on : Sunday, October 03, 2010 | By : ஜெயராஜன் | In :

கியூபாவில் புரட்சிக்கு பாடுபட்ட சே குவாரா ,அதன் பின் காங்கோவில் புரட்சிக்கு வித்திட முனைந்தார்.அப்போது அவர் எகிப்தின் அதிபர் நாசரை சந்தித்தார்.சே யின் முடிவினை அறிந்த நாசர் மிகப் பொறுமையுடன் அவரிடம் சொன்னார்,''மக்களைக் காப்பாற்ற,வழி காட்ட வந்த பல தீர்க்கதரிசிகளுக்கு என்ன  நடந்தது என்று தெரியுமல்லவா?நீயும்,இன்னும் பெரிய தாடியும்,தீர்க்கதரிசி போன்ற ஆடை அணிந்து வந்தாலும் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.எங்களையும் ஏற்க மாட்டார்கள்.நம் நிறமே அவர்களுக்குப் பிடிக்காது.வெள்ளையர்களுக்கு கருப்பு நிறம் பிடிக்காது.இவர்களுக்கோ வேறு நிறத்தைக் கண்டாலே சந்தேகம்.வெறுப்பார்கள்.விலகிப்போவார்கள்.நம்ப மாட்டார்கள்.நீ  இவர்களுக்காகப் போராடி அநியாயமாகக் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை.''இதைக்கேட்டு குவேரா சற்று ஏமாற்றம் அடைந்தார்.எதைக் கேட்டும் மாறாத அவர் நாசர் சொன்னதைக் கேட்டும் மனம் மாறவில்லை.

ஓவர் லோடு

0

Posted on : Saturday, October 02, 2010 | By : ஜெயராஜன் | In :

இரண்டு பாதிரியார்கள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாகச்சென்று கொண்டிருந்தனர்.ஒரு போலீஸ்  அதிகாரி அவர்களை நிறுத்தி,''ஏன் இவ்வளவு வேகமாகப் போகிறீர்கள் விபத்து ஏற்படலாமல்லவா?மெதுவாகச் செல்லுங்கள் ,''என்று கூறினார்.ஒரு பாதிரியார் சொன்னார்,''அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.கடவுள் எங்களுடன் இருக்கிறார்.''உடனே போலீஸ் அதிகாரி சொன்னார்,''அப்படியானால் நான் உங்களை  ஓவர்லோடு சார்ஜ்  செய்ய வேண்டியிருக்கும்.''பாதிரியாருக்கு ஒன்றும் புரியவில்லை.ஏனென்று கேட்க,''உங்களுடன் கடவுளும் இருந்தால் ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்கிறதாகிறது.ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்வது குற்றம்,''என்றார் போலீஸ் அதிகாரி.

தெரியாதது

0

Posted on : Saturday, October 02, 2010 | By : ஜெயராஜன் | In :

சாது ஒருவர்  புத்தரைப் பார்க்க வந்தார்.அவர் புத்தரைப் பார்த்து,''உங்களைப் போல ஒரு புத்தரை நான் பார்த்ததில்லை.உங்களைப்போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்த வேறொருவர் உலகில் இல்லை.''என்று புகழ்ந்தார்.புத்தர் புன்முறுவலுடன்,''நீங்கள் எத்தனை புத்தரைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள்?அவர்கள் என்னளவிற்கு இல்லை என்றீர்கள்.அவர்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள்?.''என்று கேட்டார்..சாதுவோ இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை.பதில் சொல்ல  இயலாமல்  தயங்கினார்.புத்தர் சிரித்துக் கொண்டே,''பரவாயில்லை,உங்களுக்குத்தான் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று சொன்னீர்கள் அல்லவா?என்னைப்பற்றியாவது சொல்லுங்கள்.நான் எப்படி வாழ்கிறேன்?''என்று கேட்டார்.அதற்கும் பதில் சொல்லத்தெரியாது அந்த சாது அமைதி காத்தார்.பின் அங்கிருந்து வெளியே சென்றார்.
 தெரியாத விஷயத்தில் மௌனம் காப்பதுதான் சிறந்தது.

துர்நாற்றம்

0

Posted on : Friday, October 01, 2010 | By : ஜெயராஜன் | In :

சுபி ஞானி ஒருவரிடம் ஒரு விவசாயி வந்தான்.''ஐயா.என் மனைவி வீடு முழுவதும் ஆடு,மாடு,கோழி என்று வளர்க்கிறாள்.அதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.இதற்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.''என்று அவன் ஞானியிடம் சொன்னான்.அவன் வீட்டைக் கவனித்த அந்த ஞானி சொன்னார்,''உன் வீட்டில் தான் ஜன்னல்கள் இருக்கின்றனவே?அவற்றை ஏன் மூடி வைத்திருக்கிறாய்?ஜன்னலைத் திறந்து விட்டால் காற்று நன்றாக வரும்.துர்நாற்றமும் போய்விடும்.''உடனே விவசாயி பதற்றத்துடன் ,''ஐயையோ,ஜன்னலைத் திறந்து விட்டால்  என் புறாக்கள்  எல்லாம் பறந்து போய்விடுமே?''என்றான்.
அதிக முக்கியத்துவம் இல்லாத புறாக்களுக்காக ஜன்னலைத் திறக்காமல்  துர் நாற்றத்தை அவன் சகித்துக் கொள்கிறான் அதே போல நாமும் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை எண்ணிக்கொண்டே நமது அறிவு என்னும் ஜன்னலை திறவாதிருக்கிறோம் அதன் விளைவு தான் மன அழுத்தம்.

ஆயுட்காலம்

0

Posted on : Friday, October 01, 2010 | By : ஜெயராஜன் | In :

புத்தர் தன சீடர்களிடம்,''ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?''என்று கேட்டார்.ஒரு சீடர் எழுபது என்றார்,இன்னொருவர் அறுபது என்றார்,மற்றொருவர் ஐம்பது என்றார்.அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல,சரியான விடையை அவரே சொல்லும்படி அனைத்து சீடர்களும் வேண்டினர்.புத்தர் புன் முறுவலுடன்  சொன்னார்,''ஒரு மூச்சு விடும் நேரம்,'' சீடர்கள் வியப்படைந்தனர்.''மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?'' என்றனர்.''உண்மை.மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது.ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்.''என்றார் புத்தர்.
பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள்.  நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது.அதை முழுமையாக வாழ வேண்டும்.