உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

குரைக்காதே!

0

Posted on : Wednesday, February 29, 2012 | By : ஜெயராஜன் | In :

நாய் ஒன்று தன இன நாய்களுக்கு போதனை செய்து வந்தது.கடவுள் தன வடிவில் நாயைப் படைத்தார் என்று அது சொல்வதுண்டு.எல்லா நாய்களுக்கும் அதன் மீது ஒரு குருவுக்குள்ள மரியாதை உண்டு.அந்த நாய்  மற்ற நாய்களிடம் எப்போதும் குரைக்கக் கூடாது என்று போதனை செய்து வந்தது.எந்த நாய் குரைப்பதைக் கண்டாலும் அந்த இடத்திலேயே அது குரைப்பது ஒரு பயனற்ற செயல் என்று போதிக்க ஆரம்பித்துவிடும்.இந்த போதனை செய்பவர்களே இப்படித்தான்!எது ஒன்றை தவிர்க்க முடியாதோ அதைத்தான் செய்யக்கூடாது என்று வலியுறுத்துவார்கள்.மற்ற நாய்களும் குரைப்பதைத் தவிர்க்க முயற்சித்தும் அவற்றால் முடியவில்லை.எனவே குற்ற உணர்வுடன் அவை ஒருநாள் ஒரு இடத்தில் கூடியபோது ஒரு நாய் ,''நமது குரு சொல்வது உண்மை. குரைப்பது ஒரு தேவையற்ற செயல் அது நம் மரியாதையைக் குறைக்கிறது.எனவே நாம் நாளை ஒரு நாள் எங்காவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாவது நாளை முழுவதும் குரைக்காமல் இருப்போம்,''என்று கூற அனைத்து நாய்களும் அதை ஆமோதித்தன.மறுநாள் சொன்னதுபோல நாய்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு குரைக்காமல் இருந்தன.அப்போது அந்த குரு நாயானது வெளியே வந்தது.அதற்கு ஒரே அதிசயம்.எங்குமே குரைப்பு சப்தம் கேட்கவேயில்லை.அதற்கு தெரிந்து விட்டது,தமது சொல்லுக்கு எல்லா நாய்களும் மதிப்புக் கொடுத்துள்ளனவென்று. அதே சமயம் அதற்கு ஒரு பயமும் வந்துவிட்டது.எல்லா நாய்களும் குரைக்கவில்லை என்றால் தனக்கு வேலை எதுவும் இருக்காதே,யாருக்கும் ஆலோசனை கூற முடியாதே என்ற அச்சம் ஏற்பட்டது.அப்போது தனக்கே குரைக்கவேண்டும்போலத் தோன்றியது.அருகில் நாய் எதுவும் இல்லாததால் தைரியமாக அது குரைத்தது.அவ்வளவுதான்.அடக்கிக் கொண்டிருந்த நாய்கள் அவ்வளவும் தங்களுக்குள் யாரோ கட்டுப் பாட்டை மீறி விட்டார்கள் என்ற தைரியத்தில் எல்லாம் ஒன்று சேரக் குரைத்தன.இப்போது குருவான நாய்க்கும் மகிழ்ச்சி,இனிமேல் எல்லோருக்கும் புத்திமதி சொல்லலாம் என்று;மற்ற நாய்களுக்கும் மகிழ்ச்சி,குரைப்பதை யாராலும் கட்டுப் படுத்த இயலாது,எப்போதும்போலக் குரைக்கலாம்என்று.

உங்கள் அடையாளம் என்ன?

0

Posted on : Tuesday, February 28, 2012 | By : ஜெயராஜன் | In :

கவலைப் படுவதற்கான காரணிகளைத் தேடித்தேடி கவலைப் பட்டுக் கொண்டிருக்கிற நீங்கள்தான் அங்கிருக்கும் சந்தோசத்திற்கான வெளியை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
**********
நம் அக்கறை சிரிக்கக் கூடாது என்பதில் இல்லை....உண்மையில் பார்த்தால் அது அழக்கூடாது என்ற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.
**********
தோற்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக நீங்கள் ஜெயிக்கப் பார்த்தால்,தோல்வி தான் உங்களுக்கு மிஞ்சும்.
**********
ஒரு வேலையை விரும்பிச் செய்கின்றபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை.வருந்திச் செய்கிறபோது உங்கள் கஷ்டம் பல மடங்காகிறது.
**********
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க யாராலும் முடியாது.நீங்கள் தப்பு செய்ய வேண்டும் என்று நினைக்காமல் செய்யும் எந்த செயலுக்காகவும்,சம்பந்தமில்லாதவர்களின் விமரிசனங்களுக்காகப் பயந்துகொண்டு அதை செய்யாமல் முடங்கிப் போகாதீர்கள்.
**********
யோசித்துப் பார்த்து பிரச்சினை என்னவென்று கண்டு பிடித்துவிட்டால்....அதனைத் தீர்க்க வேண்டுமே...அதனை சந்திக்க வேண்டுமே....அதற்குப் பதிலாக இப்படி முனகிக் கொண்டே இருந்தால் அதுவாகவே சரியாகிவிடும் என்பது நம் எண்ணம்.
**********
உயிரே போனாலும் என் கொள்கையை விட்டுத் தர மாட்டேன் என்று நீங்கள் சண்டை போட்டால் அதற்குப் பெயர் கொள்கை அல்ல,மனோவியாதி.
**********
உங்கள் பிள்ளைக்கு தெரியாமல் வெளிப்படுத்த அன்பு ஒன்றும் மோசமான விஷயமில்லையே.நீங்கள் இரும்புதான்-அந்தப் பதக்கத்தைக் காப்பாத்த எத்தனை நாளைக்கு இப்படி மனசுக்குள்ளேயே அன்பை சுமந்து கொண்டு திரிவீர்கள்?
**********
இந்த உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்றால் இந்த ஒட்டு மொத்த உலகிற்கு எதிராக நீங்களும் நடந்து கொள்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
**********
உங்களை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே,நீங்கள் ஏன் இதுவரை யாரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை?
**********
உங்கள் மனம் ஒரு தொட்டி.அதைக் குப்புறக் கவிழ்த்து வையுங்கள்....இல்லை என்றால் குப்பையை வைத்துக் கொண்டு வருபவர்கள் அதில் கொட்டிவிட்டுப் போவார்கள்.
**********
        ---கோபிநாத் எழுதிய,''ப்ளீஸ்!இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!''என்ற புத்தகத்திலிருந்து.

பார்வை

0

Posted on : Monday, February 27, 2012 | By : ஜெயராஜன் | In :

வெளியூரிலிருந்து வந்த ஒரு இளைஞன் ஒரு முதியவரை அணுகிக் கேட்டான்,''நான் இந்த ஊருக்குக் குடி வரலாம் என்று நினைக்கிறேன்.இந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?''பெரியவர்,''நீ எந்த ஊரிலிருந்து வருகிறாய்?''என்று கேட்க அவனும் சற்று தூரத்தில் இருந்த ஒரு ஊரிலிருந்து வருவதாகச் சொன்னான்.''அந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்?''என்று பெரியவர் அவனைக் கேட்டார்.அவனும்,''மிக மட்டமான மக்கள் அவர்கள்.ஒருவர் நன்றாய் வாழ அவர்கள் பொறுக்க மாட்டார்கள்.அடுத்தவருக்குக் கெடுதல் செய்யத் தயங்காதவர்கள்.அவர்களின் போக்கு பிடிக்காமல்தான் நான் அந்த ஊரை விட்டு இங்கு வரலாம் என யோசித்தேன்.''என்றான்.பெரியவர் சொன்னார்,''நல்ல வேலை என்னிடம் விபரம் கேட்டாய்.இந்த ஊர் மக்கள் உன் ஊர் மக்களைக் காட்டிலும் பொல்லாதவர்கள்.தயவு செய்து நீ இந்த ஊருக்கு வந்து விடாதே,'' இளைஞனும் பெரியவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் பெரியவரிடம் ,''அய்யா,நம் ஊர் மக்கள் நல்லவர்கள்தானே?ஏன் அந்த ஆளிடம் நம் ஊர் மக்களைப் பற்றித் தவறான தகவல் சொன்னீர்கள்?''என்று கோபத்துடன் கேட்டான்.அதற்குப் பெரியவர் அமைதியாகப் பதில் சொன்னார்,''தம்பி,இந்த ஆள் நம் ஊருக்கு வந்தால் சில நாட்கள் கழித்து நம் ஊரைப் பற்றியும் இதே போல்தான் பேசுவான்.எந்த ஊரிலும் நல்லவர்களும்
இருப்பார்கள்;கெட்டவர்களும் இருப்பார்கள். கெட்டதைமட்டும் பார்க்கும் மனோபாவம் கொண்ட இந்த மாதிரி ஆட்கள் நம் ஊருக்கு வராமல் இருப்பதே நல்லது.''

அமைதி

0

Posted on : Sunday, February 26, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு விவசாயி தன கைக் கடிகாரத்தைக் கழட்டி வைத்துவிட்டுத் தன் மாட்டுக் கொட்டத்தில் வேலை பார்த்து முடித்தபின் தன் கைக் கடிகாரத்தைத் தேடியபோது அது கிடைக்கவில்லை.தீவிர முயற்சியின் பின்னும் அது அகப்படவில்லை.அந்தக் கடிகாரத்தைப் பொறுத்தமட்டிலும் அது அவனுக்கு ஒரு விலை மதிப்பிடமுடியாத ஒரு பொருள் ஏனென்றால் அது இறந்துபோன அவன் தந்தை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தது.
அப்போது அருகில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை அவன் கண்டான்.அவர்களை அழைத்து விவரம் சொல்லித் தேடச் சொன்னான்.எடுத்துக் கொடுப்பவருக்குத் தக்க பரிசு கொடுப்பதாகவும் உறுதி அளித்தான்.சிறுவர்கள் உடனே ஆர்வத்துடன் உள்ளே நுழைந்து இருந்த எல்லாப் பொருட்களையும் தலை கீழாகப் புரட்டியும் கடிகாரம் கிடைத்த பாடில்லை.விரக்தி அடைந்த விவசாயி அனைவரையும் வெளியே போகச் சொல்லி மாட்டுக் கொட்டத்தின் கதவைப் பூட்டினான்.
அப்போது ஒரு சிறுவன் அவனிடம் தனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்க வேண்டினான்.அவனுடைய ஆர்வத்தைப் பார்த்த விவசாயியும் கதவை மறுபடியும் திறந்து அவனை உள்ளே அனுமதித்தான்.சிறிது நேரத்தில் அச்சிறுவன் கையில் கடிகாரத்துடன் வந்தான் .ஆச்சரியப்பட்ட விவசாயி சிறுவனிடம் அவனால் மட்டும் எப்படி கண்டு பிடிக்க முடிந்தது என்று கேட்டான்.சிறுவன் சொன்னான்,''உள்ளே சென்றதும் நான் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து உன்னிப்பாகக் கவனித்தேன்.அப்போது ஒரு இடத்திலிருந்து கடிகாரத்தின் டிக் டிக் ஓசை தெளிவாகக் கேட்டது.அதை வைத்து கடிகாரத்தின் இருப்பிடம் அறிந்து எடுக்க முடிந்தது,'' விவசாயி சிறுவனின் அறிவுத்திறம் கண்டு வியந்து பாராட்டி பரிசளித்தான்.
எந்த வேலையையும் அமைதியாகச் செய்தால் அதை சிறப்பாகச் செய்ய முடியும்.

புதிர் போடுவோமா?

0

Posted on : Thursday, February 23, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் இரு சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பெரிய ஆறு குறுக்கிட்டது.அங்கு ஒரு படகு, ஆள் இல்லாமல் இருந்தது.அவர்கள் அனைவரும் அந்தப் படகின் உதவியுடன் ஆற்றைக் கடக்க முடிவு எடுத்தனர்.படகில் சில குறிப்புகள் இருந்தன;
தாங்கக் கூடிய எடை;120 கிலோ கிராம்.
அவர்களால் ஆற்றைக் கடக்க முடியுமா?
தந்தையின் எடை 82kg
தாயார் எடை79kg
மூத்த சிறுவன் எடை  65kg
இளைய சிறுவன் எடை 50kg.

விடை;
அவர்களால் ஆற்றைக் கடக்க முடியும்.
முதலில் இரு சிறுவர்களும் ஆற்றைக் கடக்க வேண்டும்.
அடுத்து மூத்தவன் இளையவனை அக்கரையில் விட்டுவிட்டு திரும்ப இக்கரைக்கு வர வேண்டும்.
தாய் படகை எடுத்துக் கொண்டு அக்கரை சென்று இறங்கிக் கொள்ள வேண்டும்.
இளையவன் படகை எடுத்து இக்கரை வரவேண்டும்.
திரும்பவும் இரு சிறுவர்களும் படகில் அக்கரைசெல்ல வேண்டும்.
மறுபடியும் மூத்தவன் இளையவனை இறக்கிவிட்டு இக்கரை வர வேண்டும்.
தந்தை இப்போது படகை எடுத்துக் கொண்டுபோய் அக்கரையில் இறங்கிக் கொள்ள வேண்டும்.
இளையவன் படகை எடுத்துக் கொண்டு இக்கரை வர வேண்டும்.
இரண்டு சிறுவர்களும் படகில் ஏறி அக்கரையில் இறங்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது அனைவரும் அக்கரை போய் சேர்ந்து விட்டனர் அல்லவா?

குற்ற உணர்வு

0

Posted on : Thursday, February 23, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தவறு செய்தபின் அதற்காக நமக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.அப்போது இல்லாத ஒரு புத்திசாலித்தனம் இப்போது வளர்ந்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டுமே தவிர நடந்த நிகழ்ச்சிகளுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
குற்ற உணர்வு என்பது வளர்ந்து விட்ட புத்திசாலித்தனத்தை வைத்து கடந்து போன வாழ்க்கையை நினைத்து நொந்து கொண்டிருப்பது.குற்ற உணர்வினால் மட்டும் ஒருவன் நல்லவனாகிவிட முடியாது.இன்னும் சொல்லப் போனால் குற்ற உணர்வு ஆழமாக ஆழமாக அந்தச் செயலை உங்களால் நிறுத்தவே முடியாது.எந்த ஒரு செயலையும் செய்யும்போது யோசிக்காமல் செய்த பின் யோசிப்பது போஸ்ட் மாஸ்டர் செய்வது மாதிரி.இறந்து போனவரின் உடலை வைத்துக் கொண்டு அதிக பட்சம் என்ன செய்ய முடியும்?அழலாம்.எப்படி இறந்தார் என்று கண்டு பிடிக்கலாம்.வேறு ஒன்றும் செய்ய இயலாது.குற்ற உணர்வும் அது போன்றதே.குற்ற உணர்விலிருந்து  தன்னை  விடுத்துக்  கொள்வது  தியானம்.மற்றவர்களைக் குற்ற உணர்வில் ஆழ்த்தாது இருப்பது  சேவை.   .

வயதானால்...

0

Posted on : Wednesday, February 22, 2012 | By : ஜெயராஜன் | In :

பெரும்பாலும் முதுமை எய்தியவர்கள் புலம்புவதுண்டு,''என் பிள்ளைகள் என் பேச்சைக் கேட்பதில்லையே,''என்று.பெற்றோர்களே,ஒன்றை யோசித்துப் பாருங்கள்.உங்கள் பிள்ளைகள் பின்னால் வந்தவர்கள்.நீங்கள் பிறக்கும்போதே உங்களுடன் வந்தவை உங்கள் கையும்,காலும்.வயதாகிவிட்டால்,உங்கள் கையும் காலுமே உங்கள் பேச்சைக் கேட்பதில்லையே?வாரிசுகள் கேட்காததில் என்ன வியப்பிருக்கிறது?
                                  --திருக்குறள் முனுசாமி.
கடந்த காலமோ திரும்புவதில்லை.
நிகழ காலமோ விரும்புவதில்லை.
எதிர்காலமோ அரும்புவதில்லை.
இதுதானே அறுபதின் நிலை!
                                 --வாலி.
அறுபதில் முகத்தில் ஏற்படும் வரிதான் முதுமையின் முகவரி.
                                   --வாலி.

தித்திப்பு

0

Posted on : Wednesday, February 22, 2012 | By : ஜெயராஜன் | In :

வேதாரண்யத்தில் ஒரு கோவில் கதவு என்ன காரணத்தினாலோ மூடியே இருந்தது.யாராலும் அந்தக் கதவைத் திறக்க முடியவில்லை.அவ்வூருக்கு சம்பந்தரும் திருநாவுக்கரசரும் வந்தனர்.கதவு திறக்க வேண்டும் என சம்பந்தர் ஒரு பாட்டைப் பாடினார்.உடனே கதவு திறந்தது.மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டனர்.எல்லோரும் வெளியே வந்தபின் திறந்த கதவை மூட முயற்சித்தபோது அதை அடைக்க இயலவில்லை.இப்போது கதவை மூட வேண்டி திருநாவுக்கரசர் பாட ஆரம்பித்தார்.ஒன்று,இரண்டு, என வரிசையாகப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்.பதினோரு பாடல்கள் பாடி முடிந்தவுடன் கதவு தானே மூடிக் கொண்டது.திருநாவுக்கரசர் சம்பந்தரிடம் சொன்னார்,''நீங்கள் பாடிய ஒரே பாட்டில் கோவிலின் கதவு திறந்தது.கதவை மூட எனக்கோ பதினோரு பாடல்கள் பாட வேண்டி வந்தது.தங்கள் மகிமையின் முன் நான் சிறியவன் என்பதை இறைவன் இதன் மூலம் எனக்கு உணர்த்தி விட்டான்.''சம்பந்தர் சொன்னார்,''நாவுக்கரசரே,தாங்கள் நினைப்பது தவறு.என்னுடைய ஒரு பாட்டே இறைவனை சலிப்படைய வைத்துவிட்டது.எனவேதான் என் ஒரே பாட்டில் கதவைத் திறந்து விட்டான்.ஆனால் உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய்த் தித்திக்கவே இறைவன் உங்களைத் தொடர்ந்து பாட வைத்திருக்கிறான்.''

பொன் மொழிகள்-26

0

Posted on : Tuesday, February 21, 2012 | By : ஜெயராஜன் | In :

பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட
உண்மையால் அறைவதே மேலானது.
**********
பிறருக்குப் பயன்படுங்கள்.
பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள்.
**********
முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது.
**********
முன்னேற்றம் என்பது ''இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்'' என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம்.
**********
உங்களுக்கு  மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள்.
**********
நான்மறையைக் கற்றவனல்ல ஞானி.
'நான்'மறையக் கற்றவன் தான் ஞானி.
**********
உறவால் வரும் அன்பைவிட
அன்பால் வரும் உறவே புனிதமானது.
**********
விழுவதெல்லாம்
எழுவதற்குத்தானே தவிர
அழுவதற்காக அல்ல.
**********
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும்,
மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்.
**********
பலமான மழை பெய்யும்போது
லேசான மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டாதே.
உறுதியான குடை வேண்டும் என்று வேண்டு.
**********

ஜெயகாந்தன்

0

Posted on : Wednesday, February 15, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பாவத்திலிருந்து தனி ஒரு மனிதன் தப்பித்துக் கொள்வதா பிரச்சினை?அந்தப் பாவமே முற்றாகத் தவிர்க்கப்படுவதற்கு என்ன வழி?அப்படித் தவிர்க்கவொண்ணாத ஒரு செயல்-ஒரு தொழில்-ஒரு வாழ்க்கை முறை எப்படி ஒரு பாவமாகும்?
**********
அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதேயில்லை.காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும்.சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்.மெய்யான இலட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை.அவை மக்கினாலும் மடிந்து விடுவதில்லை.
**********
கொள்கைகளாலும், மரபுகளாலும் மதங்கள் அமைந்ததாகச் சொல்கிறார்கள்.இல்லை..இல்லை,அது குல்லாய்களாலும்,குடுமிகளாலும்,சில குறிப்பிட்ட அந்நியச் சொற்களைக் கலந்து தாய்மொழியில் பேசுவதாலும்,வேறு சில புறத் தொற்றங்களாலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
**********
ஒரு குழந்தை நடப்பதற்கு நடை வண்டி வேண்டும்.அதை வாங்கித் தரும் பெற்றோர்கள் அப்புறம் அதை தூக்கி பரண் மேல் போடவும் தயாராயிருக்க வேண்டும்.எக்காலத்துக்கும் தங்கள் குழந்தைகள் நடை வண்டியைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள்.
**********
குழந்தைப் பருவத்தில் தமது பிள்ளைகளின் குறைகளை எப்படி அவர்கள் சகித்து அன்பு காட்டி வளர்க்கிறார்களோ,அதைப்போல வயது வந்தபின் பெரியோர்களின் குழந்தைத்தனங்களைஎல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியது புத்திரர்களின் கடமை.
**********
ஒரு குடும்பத்தில் இல்லாமையும் வறுமையும் இருப்பது கூடக் கொடுமையல்ல.அது காரணமாக அவர்கள் அன்பற்றவர்களாகவும்,பண்பற்றவர்களாகவும்  ஆகி விடுகிறார்களே,அதுதான் கொடுமை.
**********
வளர்ந்தவர்களும்,அறிவு பெற்றவர்களும் நமது துன்பதுயரங்களுக்கான  காரணங்களை ஆராய்ந்து கூறிவிட்டு,நம்மை விட்டு அவர்கள் ஒதுங்கி விடுகிறார்களே,பிறகு நம்மவர்களுக்கு எப்படி விமோசனம் கிடைக்கும்?
**********
     '' ஈஸ்வர அல்லா தேரே நாம் ''என்னும் நூலில் ஜெயகாந்தன்.

எளிய வழி

0

Posted on : Tuesday, February 14, 2012 | By : ஜெயராஜன் | In :

அரசன் ஒருவன் தன் குடி மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை நேரில் அறிய நினைத்து தன் நாட்டின் பல பகுதிகளுக்கும் நடந்தே சென்றான்.சென்ற இடங்களில் எல்லாம் மேடு பள்ளமும் முட்கள் நிறைந்தும்  இருந்தன.எனவே அவன் அரண்மனை திரும்பியதும் ஒரு ஆணை பிறப்பித்தான்.அதாவது ஒவ்வொரு ஊர் மக்களும் தங்கள் பகுதியில், நடக்கும் பாதை முழுவதும் தோல் விரிக்க வேண்டும்.அப்போது யார் காலிலும் முள் குத்தாது என்று அவன் கருதினான்.மக்கள் மலைத்தார்கள்.பாதை முழுவதும் தோல் விரிக்க எத்தனை விலங்குகளைக் கொல்லவேண்டுமோ ,முதலில் அத்தனை விலங்குகள் கிடைக்குமா என்று அஞ்சினர்.அறிவுள்ள அமைச்சர் ஒருவர் அரசனை அணுகி,''அரசே,நீங்கள் நடக்கும்போது முள் குத்தினால் உங்கள் காலில்  மட்டும் தோல் அணிந்தால் போதுமே?எதற்காகப் பாதை முழுவதும் விரிக்க வேண்டும்/''என்று கேட்டான் அரசனும் அதைப் புரிந்து ஏற்றுக் கொண்டான்.
நம் வாழ்க்கையிலும் அப்படித்தான்,இந்த உலகமே சரியில்லை என்று கோபம் கொள்வதை விடுத்து,முதலில் நம்மை சரி செய்து கொண்டால் உலகமே சரியாகிவிடுமே!

கடவுள் எங்கே?

0

Posted on : Tuesday, February 14, 2012 | By : ஜெயராஜன் | In :

''கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?''என்று ஒருவன் நெக்குருக வேண்டினான்.அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று.ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான்.அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான்.அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டு,''என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில் ஒரு குழந்தை பிறந்து அழும் சப்தம் கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்,''என்று கூவினான்.அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான்.
கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விசயங்களில் இருக்கிறார்.எனவே அந்த அருட்கொடையை தவற விட்டு விடாதீர்கள்.ஏனெனில் கடவுள் நீங்கள் எதிர் பார்க்கும் வடிவில் வருவார் என்று எதிர் பார்க்காதீர்கள்.

எதிர்பார்ப்பு

0

Posted on : Monday, February 06, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு வகை அபூர்வமான வைரக்கல் இருப்பதாகக் கேள்விப்பட்ட ஒருவர் அதை எப்படியும் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்று புறப்பட்டார்.அவர் முடிவினைத் தெரிந்த அவர் நண்பர்கள் சொன்னார்கள்,''உனக்கேன் இந்த வீண் வேலை?இது  ஒரு பெரிய காடு.மிருகங்கள் நிறைய உண்டு.இதில் உள்ளே செல்வதே சிரமம்.அதிலும் இந்த வைரக்கல் எங்கு இருக்கும் என்று தேடிக் கண்டு பிடிப்பது எளிதல்ல. ஊண் உறக்கமின்றி தேடினாலும் கிடைக்க மாதக் கணக்கில் ஆகலாம்.ஒரு வேலை கிடைக்காமல் போனாலும் போகலாம்.''இதைக் கேட்டபின்னும்  அவர் தன முயற்சியைக் கை விடவில்லை.காட்டினுள் சென்றார்.அதிர்ஷ்டவசமாக உள்ளே சென்ற சிறிது நேரத்திலேய அவருக்கு வைரக்கல் தென்பட்டது.அதைக் கையில் எடுத்துப் பார்த்தார்.அவருக்கு நண்பர்களின் எச்சரிக்கை ஞாபகம் வந்தது.அவர்,''இவ்வளவு எளிதில் கிடைத்தால் இது வைரக்கல்லாக இருக்காது,''என்று சொல்லியவாறு அதை வீசி எறிந்துவிட்டு காட்டுக்குள் மேற்கொண்டு தேடுவதற்கு விரைந்தார்.
இப்படித்தான் நாம் ஒவ்வொரு விசயத்திலும் முன் சிந்தனைகளாலும் எதிர்பார்ப்புகளாலும், கிடைக்கும் அறிய பல வாய்ப்புகளை இழக்கிறோம்.

சரியான வாரிசு

0

Posted on : Sunday, February 05, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர்,ஓய்வு பெற ஓராண்டு இருக்கையில் தனக்குப்பின் நிறுவனத்தை நடத்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.அவர் தன மகனையோ.அடுத்து இருந்த மூத்த அதிகாரிகளையோ தலைவராக விரும்பவில்லை.எனவே அவர் துவக்க  நிலையில் இருந்த இளம் அதிகாரிகள் பத்துப் பேரை அழைத்து சொன்னார்,''அடுத்த ஆண்டு உங்களில் ஒருவர்தான் இந்த நிறுவனத்தின் தலைவர்.''இளைஞர்களுக்கு ஒரே திகைப்பு.தொடர்ந்து அவர் சொன்னார்,''நான் இன்று ஒவ்வொருவருக்கும் ஒரு விதை கொடுப்பேன்.அதை நீங்கள் எடுத்துச்சென்று நன்றாக வளர்த்து ஒரு ஆண்டு கழித்து இங்கு கொண்டு வர வேண்டும்.அதைப் பார்த்து நான் ஒருவரை தேர்வு செய்வேன்.''
அனைவரும் மகிழ்வுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விதைகளுடன் தங்கள் வீட்டுக்கு சென்றனர்.அவர்களில் முருகன்  என்பவன் வீட்டிற்கு சென்றவன்  தன் மனைவியிடம் விபரத்தை சொல்ல அவளும் அவன் உதவிக்கு வந்தாள்.ஒரு தொட்டியை எடுத்து மண்ணிட்டு உரமிட்டு அதில் விதைத்தார்கள்.தொடர்ந்து தண்ணீரும் ஊற்றி வந்தனர்.ஆனால் என்ன காரணத்தாலோ விதை முளைக்கவில்லை.ஒரு ஆண்டு முழுவதும் பல முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை.
குறிப்பிட்ட நாள் வந்தது.அவனுக்கு மிகுந்த வருத்தம்.ஆனால் அவன் மனைவி,''நீங்கள் இன்று வெறும் தொட்டியையே எடுத்துச்சென்று வளரவில்லை என்ற உண்மையை சொல்லி விடுங்கள்.என்ன ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வோம்,''என்று சொல்ல அவனும் அவ்வாறே செய்தான்.அலுவலகம் சென்றபோது அவன் நண்பர்கள் அனைவரும் அழகழகான செடிகளைக் கொண்டு வந்திருந்தனர்.இவனுடையவெறும்
தொட்டியைப் பார்த்து அனைவரும் கேலி செய்தனர்.
தலைவர் வந்தார்.எல்லாத் தொட்டிகளையும் பார்த்தார்.முருகனுக்கோ ஒரே பயம் இருக்கும் வேலையும் போய்விடுமோ?சிறிது நேரம் கழித்து தலைவர்,''உங்களது அடுத்த தலைவர் முருகன்தான்,''என்று அறிவித்தார்.ஒரே சலசலப்பு.அவரே மீண்டும் பேசினார்,''இத்தேர்வு நம்பிக்கைத் தேர்வு.நான் எல்லோருக்கும் கொடுத்த விதைகள் அவிக்கப்பட்டவை.எனவே அவை முளைப்பதற்கு வாய்ப்பே இல்லை.எல்லோரும் வேறு விதைகளை வளர்த்து இங்கே கொண்டு வந்துள்ளபோது முருகன் மட்டும் உண்மையை இங்கு கூறினான்.எனவே நம்பிக்கைக்குரிய அவனே  இந்த நிறுவனத்துக்கு ஏற்ற தலைவர்.''

நட்பு

0

Posted on : Sunday, February 05, 2012 | By : ஜெயராஜன் | In :

உண்மையான நட்புக்கு இலக்கணம் என்ன?
உண்மையான இரு நண்பர்கள் இரு கண்களைப் போல இருக்க வேண்டும்.
கண்கள் இரண்டும் ஒரே நேரத்தில் சேர்ந்தே  இமைக்கின்றன
இரண்டும் ஒரே திசையில் சேர்ந்தே நகர்கின்றன.
இரண்டும் அழும்போது ஒரே மாதிரி  கண்ணீர் விடுகின்றன.
இரண்டும் சேர்ந்தே ஒரு பொருளைப் பார்க்கின்றன.
இரண்டும் சேர்ந்தே தூங்குகின்றன.
ஒரு கண்ணில் அடி பட்டால் அடுத்த கண்ணும் துடிக்கிறது.
ஆனால்
அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்ப்பது கூடக் கிடையாது.

பிடித்திருப்பது யார்?

0

Posted on : Saturday, February 04, 2012 | By : ஜெயராஜன் | In :

இரண்டு நண்பர்கள் ஒரு ஆற்றங்கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது ஆற்றில் ஒரு மூட்டையொன்று மிதந்து வருவது தெரிந்தது.அந்த மூட்டைக்குள் என்ன இருக்கும் என்று இருவரும் யோசித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.இருவரில் ஒருவனுக்கு அதில் ஏதேனும் விலை மதிப்புள்ள பொருட்கள் இருக்க வேண்டும் என்று தோன்றியது.உடனே கொஞ்சமும் யோசியாது ஆற்றினுள் தவ்வி நீந்திச்சென்று அந்த மூட்டையைப் பிடித்தான்.அப்போதுதான் தெரிந்தது.அது மூட்டையல்ல;உயிருக்குப் போராடிக் கொண்டுயருந்த ஒரு கரடி அது என்பது..அந்தக் கரடியும் உயிர் தப்பிக்கும் எண்ணத்தில் அவனை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது.இதை அறியாத கரையில் இருந்த நண்பன் ,''மூட்டையைக் கொண்டு வருவது சிரமமாக இருந்தால் அதை விட்டுவிடு.அதற்காக உயிரைப் பணயம் வைக்காதே,''என்றான்.அதற்கு அவன் சொன்னான்,''மூட்டையை நான் பிடிக்கவில்லை.மூட்டை தான் என்னைப் பிடித்துக் கொண்டுள்ளது.''
இதுபோல உலகப் பற்றுக்களை நாம் தான் பிடித்துக் கொண்டிருக்கிறோமே தவிர அவை நம்மைப் பிடித்துக் கொண்டு இருக்கவில்லை.

விமரிசனம்

0

Posted on : Friday, February 03, 2012 | By : ஜெயராஜன் | In :

விமரிசனங்கள் உங்களைப் பாதிக்கிறதா?இக்கேள்வி கேட்கப்பட்டால் 90%பேர் ஆம் என்பார்கள்.10%பேர் அது என் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பார்கள்.எப்படி?
உங்களை நோக்கி ஒரு விமரிசனம் எழும்போது இறுதியில்  அதற்கு மதிப்புத் தர வேண்டுமா என்று யோசியுங்கள்.பிறகு  இதற்குமுன் இப்படி ஒரு விமரிசனம் நம்மை நோக்கி வந்திருக்கிறதா என்று பாருங்கள்.பலமுறை உங்களை நோக்கி வந்த விமரிசனம் அது என்றால் நீங்கள் அதற்கு உறுதியாகக் கவனம் செலுத்தியாக வேண்டும்.
உங்களை நோக்கி ஒரு விமரிசனம் எழும்போது அதை என்னவென்று ஆராயாமல் நீங்களும் உடனே உங்கள் பங்கிற்கு எதிராளியை விமரிசிக்க ஆரம்பிக்காதீர்கள்.அது மனக்கசப்பை வளர்க்கும்.
அமைதியாக இருந்து கவனியுங்கள்.என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்பது சிறந்தது.
உங்கள் மீதுள்ள பொறாமையால் எழும் வீண் விமரிசனமானால் அதைத் தூக்கி எறிந்து விடுங்கள்.

கேலி

0

Posted on : Thursday, February 02, 2012 | By : ஜெயராஜன் | In :

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் நன்றாக வயலின் வாசிப்பார்.ஒரு நாள் அவர் வயலின் வாசித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் கேலியாக சிரித்துக் கொண்டிருந்தார்.
''நான் வயலின் வாசிக்கும்போது சிரிக்கிறீர்களே,நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதைப் பார்த்து நான் எப்போதாவது சிரித்திருக்கிறேனா?''என்று கேட்டார் ஐன்ஸ்டீன்.

படித்தால் தெரியும்.

0

Posted on : Thursday, February 02, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு சீடன் குருவைப் பார்த்து,''என்னால் முழுக் கீதையையும் படிக்க முடியாது.ஆகவே எது முக்கியமோ,அதை மட்டும் சொல்லுங்கள்,''என்றான்
''சரி பதினேழு அத்தியாயத்தைத் தள்ளிவிட்டு பதினெட்டாம் அத்தியாயத்தை மட்டும் படி.''
''அதில் 78 சுலோகங்கள் இருக்கின்றன.என்னால் அவ்வளவு படிக்க முடியாது.''
''சரி,அதில் 68 வது சுலோகத்தை மட்டுமாவது படி.''
''ஆ,அதில் 12 வார்த்தைகள் உள்ளன.என்னால் முடியாது.''
''பரவாயில்லை,அதில் கடைசி இரு பதங்களை மட்டும் படி.''
''அதற்கு என்ன பொருள் என்று நீங்களே சொல்லி விடுங்களேன்.''
''கவலைப்படாதே என்று பொருள்.''
''எப்பொழுது கவலைப்படாமல் இருக்கலாம்?''
''''பகவான் சொன்னபடி செய்தால் கவலைப் பட வேண்டாம்.''
''அப்படி பகவான் என்னதான் சொன்னார்?''
''அது முழு கீதையையும் படித்தால்தான் தெரியும்.''