உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இரண்டு செய்திகள்

0

Posted on : Monday, November 29, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு செல்வந்தர் ஒரு ஓவியரின் படங்களால் கவரப்பட்டு அவற்றை விற்றுக் கொடுப்பதற்கு வசதியாக ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்தார் இரண்டு நாள் கழித்து அந்த ஓவியர் அவரிடம் வந்து தன ஓவியங்கள் ஏதேனும் விற்றனவா எனக் கேட்டார்.அதற்கு அந்த செல்வந்தர்,''உங்களுக்கு இரண்டு செய்திகள் வைத்துள்ளேன்.ஒன்று நல்ல செய்தி இன்னொன்று கெட்டசெய்தி.''என்றார்.ஓவியர் முதலில் நல்ல செய்தியைக் கூறச் சொன்னார்.செல்வந்தரும்,,''நேற்று ஒருவர் வந்து உங்கள் ஓவியங்கள் நீங்கள் இறந்தபின் புகழ் பெறுமா எனக் கேட்டார்.ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் அப்படியானால் பின்னால் நல்ல விலைக்குப் போகும் அல்லவா என்றார்..நானும் அவ்வாறு கண்டிப்பாக நடக்கும் என்று சொன்னேன்.உடனே அவர் உங்களுடைய ஓவியங்கள் அனைத்தையும் நல்ல விலைக்கு வாங்கிச் சென்று விட்டார்.இதுதான் நல்ல செய்தி''என்றார்..ஓவியர் அடுத்த் கெட்ட செய்தியைக் கேட்க ,செல்வந்தர் சொன்னார்,''உங்கள் படங்களை வாங்கியது வேறு யாருமில்லை,உங்கள் குடும்ப டாக்டர் தான்.''

அற்புத விளக்கு

0

Posted on : Monday, November 29, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு வயதான மனிதன் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தபோது ஒரு பழைய விளக்கினைக் கண்டு எடுத்தார்.அதை எடுத்து தேய்த்தபோது ,அதிலிருந்து ஒரு பூதம் வந்தது,பூதம் அவரிடம் சொன்னது,''நீங்கள் எனக்கு விடுதலை அளித்ததால் நான் உங்களுக்கு ஒரு வரம் தருகிறேன்.என்ன வேண்டும்?''அவர் சொன்னார்,''எனக்கும் என் அண்ணனுக்கும் நான் செய்த ஒரு சிறு தவறினால் முப்பது ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தை இல்லை.அவர் எனது தவறை மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.''பூதம் உடனே,''உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது.ஆனால் எனக்கு ஒரு ஆச்சரியம்.எல்லோரும் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் பெரும் பணமும்,புகழும் கேட்டிருப்பார்கள்.ஆனால் உங்களுக்கு அன்பு தான் பெரிதாகப் பட்டது.உங்கள் அண்ணனின் உறவைத்தான் விரும்பினீர்கள்.என்ன காரணம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?''என்று கேட்டது.அவர் சொன்னார்,''வாரிசில்லா என் அண்ணனிடம் பல கோடி பெறுமானமுள்ள சொத்து உள்ளது.நான் அவருக்கு ஒரே தம்பி.''

உணர்வு

0

Posted on : Sunday, November 28, 2010 | By : ஜெயராஜன் | In :

மகா பாரதத்தை எழுதியதோடு வேதங்களைத் தொகுத்தவர் வியாச முனிவர் அவருடைய மகன் சுகர்.பிரம்ம ஞானி.ஆடைகளையே சுமை என்று கருதி அவற்றைத் தவிர்த்தவர்.ஒரு நாள் அவர் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தார்.ஆற்றில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.இதைக் கவனித்த வியாசர் தன மகன் உடையின்றி செல்வதால் இளம் பெண்கள் சங்கடப் படுவார்களே என்று எண்ணி மகனை வேறு பாதைக்குத் திருப்ப விரைந்து சென்றார்.ஆனால் சுகர் பெண்களைக் கடந்து செல்லும்போது பெண்கள் பகுதியில் எந்த வித சலசலப்பும் இல்லை.ஆனால் வியாசர் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது பெண்கள் சட்டென்று உடைகளை இழுத்துப் போர்த்துக் கொண்டு நின்றனர்.வியாசருக்கு ஆச்சரியம்.தன மகன் உடையில்லாமல் போவதைப் பொருட்படுத்தாத பெண்கள் தான் முனிவர் என்பது தெரிந்தும் பெண்களிடையே ஒரு பதற்றம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.அப்பெண்களிடம் அவர் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள்,''தங்கள் மகனைப் பார்க்கும்போது அவர் மனதில் தான் ஒரு ஆண் என்ற உணர்வு கூட இருப்பதாகத் தெரியவில்லை.எனவே எங்களுக்கு அவரைக் கண்டபோது மனதில் எந்த சஞ்சலமும் இல்லை.எங்களுக்கும் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு அந்நேரம் இல்லை.உங்கள் மனதில் நீங்கள் ஒரு ஆண் என்ற உணர்வு அழுத்தமாக இருக்கிறது.அதனால் எங்களுக்கும் உங்களைப் பார்த்த உடன் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு வந்து விட்டதால் எங்களுக்குள் ஒரு பதட்டம் ஏற்பட்டு நாங்கள் உடைகளை சரி செய்தோம்.''தன மகன் தன்னையே மிஞ்சி விட்டார் என்பதை வியாசர் புரிந்து கொண்டார்.

மூன்று பாவங்கள்.

0

Posted on : Sunday, November 28, 2010 | By : ஜெயராஜன் | In :

பக்தர் ஒருவர் இறைவனிடம் வேண்டினார்:
இறைவா!நான் மூன்று பாவங்கள் செய்துள்ளேன்.அவற்றை மன்னிப்பாயாக!முதலாவது,நான் செய்த பாவங்கள் எல்லாம்முன்னதாகவே உன்னால் மன்னிக்கப் பட்டவை என்று அறிந்தும் பாவ மன்னிப்பு கோரினேன்.இரண்டாவதாக,நீ எங்கும் எல்லா இடத்திலும் நிறைந்து இருப்பவன் என்று தெரிந்தும் உன்னைத்தேடி ஊர் ஊராக அலைந்தேன்.மூன்றாவதாக என் மீது என்னை விட உனக்கு அக்கறை அதிகம் என்று தெரிந்தும்,எனக்கு அதைக்கொடு,இதைக்கொடு என்று வேண்டினேன்.இம்மூன்று பாவங்களையும் மன்னித்து அருள்வாயாக!

அனுதாபம்

0

Posted on : Saturday, November 27, 2010 | By : ஜெயராஜன் | In :

தங்கள் கவலைகளை நேசிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.சொல்லப்போனால்,அதைப் பெரிது படுத்தி,பூதாகரமாக்கி விடுவார்கள்.அவர்கள் எப்போதும் தங்கள் துயரங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.வேறு எதைப் பற்றியும் பேச மாட்டார்கள்.நீங்கள் அதைக் கேட்காமல் போனால்,அவர்கள் உங்களை விரோதியாகவே பாவித்து விடுவார்கள்.உலகில் இப்படிப்பட்டவர்களே அதிகம்.அனுதாபம் பெறவே அவர்கள் அப்படிப் புலம்புகிறார்கள்.மிகவும் நுட்பமான தன முனைப்பு அது.கவலைப் படுபவர்களைக் கண்டால் நாம் அனுதாபம் கொள்கிறோம்.அவர்களின் நிலையில் இல்லாது நாம் மகிழ்ச்சியாக இருக்கும் மன நிலையில் தோன்றும் அனுதாபம் அது.இரண்டாவதாக அனுதாபம் காட்டும்போது நம்முடைய நிலை உயர்ந்து விடுகிறது.கவலைப்படுபவர் நமது அனுதாபத்தை அன்பு என்று தவறாக நினைக்கிறார்.அனுதாபம் அன்பு ஆகாது.

இயல்புதானே?

0

Posted on : Saturday, November 27, 2010 | By : ஜெயராஜன் | In :

பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார்.அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும்போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார்.ஆதீனத்தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார்.செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார்.ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார்.கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும்,தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே?அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.

திருநாள்

0

Posted on : Saturday, November 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார்.அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார்.ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார்.ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?

அடையாளம்

0

Posted on : Friday, November 26, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.
இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்!

கஞ்சத்தனம்

0

Posted on : Friday, November 26, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் ஏன் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்?அது ஒரு அடிப்படைச் சிக்கல்.அதன் அடிப்படையைக் காண மாபெரும் உளவியல் அறிஞர்களாலும் முடியவில்லை.கொடுக்க யாரும் விரும்புவதில்லை.எல்லோரும் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறார்கள்.அதன் மனோதத்துவம் எளிமையானது.நீங்கள் காலியாக இருக்கிறீர்கள்..உங்கள் உள்ளே அன்பு இல்லாமல் மொத்த இடமும் காலியாக இருக்கிறது.அதில் எதையாவது போட்டு நிரப்ப பார்க்கிறீர்கள்.யாராவது ஏதாவது கொடுக்க மாட்டார்களா என எப்போதும் எதிர் பார்த்து இருக்கிறீர்கள்.உங்கள் உள்ளே உள்ள காலி இடமோ மிகப் பெரியது.பணம்,அதிகாரம்,பெருமை,மரியாதை இவை எவற்றாலும் உங்கள் காலியிடத்தை நிரப்ப முடியாது.இவை எல்லாம் கிடைத்து விட்டாலும் வெறுமையைத் தான் உணர்வீர்கள்.அப்புறம்,என் வாழ்வே வீண் என்று கவலைப் படுவீர்கள்.வெறுமையே கருமித்தனத்தை உருவாக்குகிறது.பொங்கும் அன்பு வெள்ளமே அதனை அடித்துச் செல்லக்கூடியது.நீங்கள் அன்பினால் நிறைந்து வழியும்போது கருமித்தனம் நில்லாது.

ஜம்ஜம்

0

Posted on : Thursday, November 25, 2010 | By : ஜெயராஜன் | In :

மக்கா சென்று வரும் இஸ்லாமிய சகோதரர்கள் புனித நீரான ஜம்ஜம் நீரைக் கொண்டு வருவது வழக்கம்.ஜம்ஜம் என்ற பெயர் எப்படி வந்தது?
தீர்க்கதரிசி இப்ராஹீமுக்கு தொண்ணூறு வயதில் அவரது இளைய மனைவி ஹாஜகா மூலம் இஸ்மாயில் பிறந்தார்.இறைவனின் கட்டளையை ஏற்று கைக்குழந்தையையும் தாயையும் நெடுந்தொலைவிலிருந்த தண்ணீர் இல்லாத,புல் பூண்டு முளைக்காத,மக்கள் அற்ற பாலைவனத்திற்கு இட்டுச்சென்று தனியே விட்டுவிட்டுத் திரும்பினார்.தனியே விடப்பட்ட தாய்க்கும்,மகனுக்கும் கொண்டு வந்த உணவும்,நீரும் ஒரு நாள் தீர்ந்தது.குழந்தை தண்ணீருக்காக அழுதது.அன்னை பதைபதைப்புடன் நீரைத் தேடினார்.சப்பா,மர்வா என்ற இரண்டு குன்றுகளுக்கிடையே ஏழு முறை விறுவிறுக்க ஓடினார்.குழந்தை தரையில் உதைத்துக் கொண்டிருந்த இடத்தில் திடீரென தண்ணீர் பொங்கி ஓடியது.இறையருளை உணர்ந்த அன்னையின் வாய்,''ஜம்ஜம்''என்றது.ஜம்ஜம் என்றால் போதும்,போதும் என்று பொருள்.வற்றாத நீர்வளம் ஏற்பட்டதால்,மக்கள் அங்கு குடியேறி,பின்பு அது மக்கா பெருநகராகிவிட்டது.

என்னுள் நீ

0

Posted on : Thursday, November 25, 2010 | By : ஜெயராஜன் | In :

கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி:
வாலி வதை செய்யப்பட்டவுடன் அவன் மனைவி தாரை புலம்புகிறாள்:
''செருவார் தோள!நின்
சிந்தையேன் எனின்
மருவா வெஞ்சரம்
எனையும் எவ்வு மால்
ஒருவேன் உள் உனை
ஆகின உய்தியால்
இருவேம் உள் இரு
வேம் இருந்திலேம்.''
இப்பாடலின் பொருள்: உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் என்றால் உன்னைக் கொன்ற பாணம் என்னையும் கொன்றிருக்க வேண்டும்.இப்போது,நான் மட்டும் இருக்கிறேன்.என்னுள் நீ இருக்கிறாய் என்றால் என்னைக் கொன்று தானே உன்னைக் கொன்றிருக்க வேண்டும்?நான் தான் உயிரோடு இருக்கிறேனே?அப்படியானால் நீயும் உயிரோடு இருக்க வேண்டும்.இல்லையே,நீ மாண்டு போய் விட்டாயே?
அப்டியானால் ஒருவரில் ஒருவர் மாறிப் புகுந்திருந்தோம் என்பது வெறும் வார்த்தை.
''இருவேம் உள் இருவேம் இருந்திலேம் ''என்பதில்,சோக பாவமும்,அழகு பாவமும் போட்டியிட்டு வெளிப்படுகின்றன.மரணத்திற்குக் கூட உயிர் ஊட்டி விட்டது கம்பனின் இலக்கியம்!.

கவியரங்கம்

0

Posted on : Wednesday, November 24, 2010 | By : ஜெயராஜன் | In :

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''

பிடித்த மதம்

0

Posted on : Wednesday, November 24, 2010 | By : ஜெயராஜன் | In :

மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார்.விழா அரங்கு முழுவதும் மாணவர்கள்.குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை.மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர்.ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர்.கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை.பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும்.சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும்.எனக்குப் பிடித்த மதம்.....''என்று சொல்லி நிறுத்தினார்.மாணவர்களிடையே அமைதி.அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல்.அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது.அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன இனிய பேச்சைத் தொடர்ந்தார்.

வரவேற்பு

0

Posted on : Tuesday, November 23, 2010 | By : ஜெயராஜன் | In :

காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார்.தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார்.மகாத்மா சிரித்துக் கொண்டே,''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள்.இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?''என்று பேசினார்.காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.

அபார நம்பிக்கை

0

Posted on : Tuesday, November 23, 2010 | By : ஜெயராஜன் | In :

ராமானுஜர்,தனது குருவான திருக்கோட்டியூர் நம்பியை அணுகி தனக்கு அஷ்டாச்சற மந்திரத்தை சொல்லிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார் .நம்பி உடனடியாக சொல்லிக் கொடுக்காமல் அவருடைய உண்மையான ஆர்வத்தை தெரிந்து கொள்ள அவரை பதினெட்டு முறை அலைய விட்டு அதன் பின் அவர் காதில் ரகசியமாக ஓதினார் இம்மந்திரத்தின் சிறப்பு என்னவென்றால் இதைத் தொடர்ந்து ஓதுபவன் பிறவித் தளையிலிருந்து விடுபடுவான் என்பதாகும் .நம்பி இதை உபதேசிக்கும்போதே வேறு யாருக்கும் இதை ராமானுஜர் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும்,அதை மீறிச் சொன்னால் நரகம் கிட்டும் என்றும் சொன்னார்.மந்திரத்தை கவனித்து கேட்டுக் கொண்ட ராமானுஜர்,உடனே ஊரின் மையத்தில் இருந்த கோபுரத்தில் ஏறிக் கொண்டு மக்கள் அனைவரையும் கூவி அழைத்தார் .அனைவருக்கும் மந்திரத்தை சொல்லிக் கொடுத்து அதன் பயன்களையும் விவரித்தார்.இதைக் கேள்விப்பட்ட நம்பி,ராமானுஜரை அழைத்து கோபத்துடன் தன சொல்லை மீறியதன் காரணம் கேட்டார்.ராமானுஜர் பய பக்தியுடன் அவரிடம் சொன்னார்,''இந்த மந்திரத்தை சொன்னால் முக்தி கிடைக்கும் என்றும் பிறரிடம் சொன்னால் நரகம் கிட்டும் என்று சொன்னீர்கள் .நான் ஒருவன் மட்டும் முக்தி அடைவதற்குப் பதிலாக ,நான் நரகம் சென்றாலும் ஆயிரக்கணக்கானோர் முக்தி அடைவார்கள் அல்லவா ?'' 'ராமானுஜரின் பெருந்தன்மையைக் கண்டு கண்ணீர் மல்க நம்பி,ராமானுஜரை கட்டிப் பிடித்துக் கொண்டார்.

தோலின் ஆழம்

0

Posted on : Monday, November 22, 2010 | By : ஜெயராஜன் | In :

பொதுவாக வாழ்வில் ஒருவர் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறு ஒன்றாகவும் இருக்கும்.அவர் நம்புவது இன்னொன்றாக இருக்கலாம்.தன்னுடைய இந்த மாறுபட்ட தன்மையைப் பார்க்கவே அவர்களுக்கு அறிவுத்தெளிவு கிடையாது.அவர்கள் நினைப்பது அனைத்தும் உயர்ந்ததாக இருக்கும்.ஆனால் நடைமுறையில் அவர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள்?ஏனெனில் அவர்களுடைய மேலோட்டமான அழகிய எண்ணங்கள்,கோட்பாடுகள் அனைத்தும் அவர்களது அடக்கப்பட்ட மோசமான உணர்வுகளிளிருந்துதான் வருகின்றன.நீங்கள் பல நூற்றாண்டுகளாக எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள்.அது உங்களை எந்த நேரமும் எரித்து விடும்.சிறிது ஆக்ரோசமான தூண்டுதல் போதும்.உங்களுடைய நீதிக் கோட்பாடுகள் அனைத்தும் உங்களின் தோலின் ஆழம் கூட இல்லை.கொஞ்சம் உரசினால் போதும்.தோளிலிருந்து உடனே இரத்தம் வருவதுபோல ,உங்களிடமிருந்து எல்லா விலங்குகளும் ஒருங்கே வெளிப்படும் .

அபசகுனம்

0

Posted on : Monday, November 22, 2010 | By : ஜெயராஜன் | In :

அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார் .அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.ஓடிய பூனை நின்றது.கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.வியப்படைந்த அந்தணர்,''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார் சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள்.அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.
----குருஜி வாசுதேவ் எழுதிய 'மாறுபட்டு சிந்தியுங்கள்'என்ற நூலிலிருந்து.

நாற்றம்

0

Posted on : Sunday, November 21, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.''குரங்கு என்ன சாப்பிடும்?''என்று கேட்டார்.மனைவி,''நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.''என்று பதில் கூறினார்.''அது எங்கே தூங்கப் போகிறது?''என்று அவர் கேட்க,மனைவி,''நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.''என்றார்.முல்லா கோபமுடன்,''நம் படுக்கையிலா?நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?''என்று கேட்டார்.அவர் மனைவி அமைதியாக சொன்னார்,''என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால்,குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.''

எனக்குத்தெரியாது

0

Posted on : Sunday, November 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ரஷ்யாவில் ஒரு யூத மத குரு வசித்து வந்தார்.இருபது வருடங்களாக அவர் தினமும் காலை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சதுக்கம் வழியாக யூதத் திருக் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இதை தினமும், யூதர்களை வெறுத்து வந்த காவலன் ஒருவன் கவனித்து வந்தான்.ஒரு நாள் அவன் அந்த மத குருவை வழி மறித்து,''எங்கே செல்கிறாய்,''என்று அதிகாரமாகக் கேட்டான்.அதற்கு அவர்,''எனக்குத் தெரியாது,''என்று பதிலுரைத்தார்.உடனே காவலன் கோபமுடன்,''நீ தினமும் யூதர் கோவிலுக்கு இவ்வழியே செல்வதை நான் கவனித்து வருகிறேன்.ஆனால் இப்போது எங்கே செல்கிறாய் என்று கேட்டால் தெரியாது என்று சொல்கிறாய்.உனக்கு நான் ஒரு பாடம் கற்பிக்கிறேன்,''என்று சொல்லியபடி அவன் அவரை இழுத்துக் கொண்டுபோய் சிறையில் தள்ளினான்.யூத மதகுரு அப்போது அவனைப் பார்த்து சொன்னார்,''நான் திருக்கோவிலுக்கு செல்லத்தான் வந்தேன்.ஆனால் ஆண்டவனின் திரு உள்ளம் எப்படி என்று எனக்குத்தெரியாது அதனால் தான் எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.இப்படி சிறைக்குவருவேன் என்று எனக்குத் தெரியாது.அதனால் நான் எங்கே போகிறேன் என்று எனக்குத்தெரியாது என்று சொன்னதன் பொருள் இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.''.

''

முழு திருப்தி

0

Posted on : Saturday, November 20, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பணக்காரர்,தன வீட்டிற்கு அருகில் இருந்த தனக்கு சொந்தமான காலி மனையில்,''இந்த நிலம்,வாழ்வில் முழுமையான திருப்தி அடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும்.''என்று எழுதி வைத்தார்.அந்தப் பக்கம் வந்த ஒருவர்,அவரை அணுகி,''அய்யா,என்னிடம் எல்லா செல்வங்களும் தேவைக்கு இருக்கின்றன.அதனால் நீங்கள் சொன்ன தகுதி எனக்கு உள்ளது.எனவே இந்த நிலத்தை எனக்கே தாருங்கள்,''என்றார்.செல்வந்தர் கேட்டார்,''உண்மையிலேயே நீங்கள் வாழ்வில் திருப்தியுடன் இருக்கிறீர்களா?"'உடனே வந்தவர்,''உண்மையிலேயே நான் திருப்தியுடன் இருக்கிறேன்.எனக்குத் தேவையானது அனைத்தும் இருப்பதால் எனக்கு வாழ்வில் முழு திருப்தியே,''என்றார்.செல்வந்தர் சொன்னார்,''நண்பரே,நீங்கள் உண்மையிலேயே முழு திருப்தியுடன் இருந்தால் இந்தக் காலி மனையை அடைய ஏன் ஆசைப்படுகிறீர்கள்?'' வந்தவர் தலை குனிந்து அங்கிருந்து சென்றார் .

சிறந்த பொருட்கள்

0

Posted on : Friday, November 19, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜப்பானில் அடிக்கடி தேநீர் விருந்து நடை பெறுவதுண்டு.ஒரு வயதானவர் தன நண்பர்களுக்கு ஒரு நாள் தேநீர் விருந்து அளித்தார்.அவர் மிகச் சிறப்பாகத் தேநீர் தயாரித்து எல்லோருக்கும் வழங்கினார்.எல்லோரும் அந்த தேயிலையை விரும்பிக் குடித்தனர்.இப்படி ஒரு சிறப்பான தேநீர் எப்படி தயாரிக்கப் பட்டது என்று அவரிடம் அனைவரும் கேட்டனர்.அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''நண்பர்களே,நீங்கள் மகிழ்ந்து புகழும் இந்த தேநீர் எனது தோட்டத்திலுள்ள வேலையாட்கள் தினசரி அருந்தும் தேநீர்தான்.இதில் விசேசமான பொருட்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.வாழ்க்கையில் மிகச் சிறந்த பொருட்கள் விலை மிக அதிகம் உள்ளதாகவோ,காணக் கிடைக்காததாகவோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.''

உடைமை

2

Posted on : Friday, November 19, 2010 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் உண்மையில்,ஒருபோதும்
பொருட்களுக்கு உடைமையாளராக இருப்பதில்லை.
ஒரு சில காலத்திற்கு அவற்றை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
உங்களால் அவற்றைக் கொடுக்க முடியவில்லை என்றால்
நீங்கள் அவற்றால் பிடிக்கப் பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எதைப் புதையல் என்று போற்றுகிறீர்களோ,
அது,உங்களது கையின் குழிவிற்குள் இருக்க வேண்டும்
தண்ணீரைப் பிடித்திருப்பதுபோல.
அதை இறுக்கமாகப் பிடித்தால்
அது சென்று விடுகிறது..
உங்களுக்காக அதை ஒதுக்கி வைத்தால்
அதை நீங்கள் அழுக்குஆக்குகிறீர்கள்
அதை சுதந்திரமாக விட்டு விடுங்கள்.
அது எப்போதும் உங்களுடையதாகவே இருக்கிறது.

நமது செல்வத்தினால் அல்ல
ஆனால் மகிழ்ச்சிக்கான நமது ஆற்றலினால் மட்டுமே
நாம் செல்வந்தராகவோ,ஏழையாகவோ இருக்கிறோம்.
செல்வத்திற்காக போராடி
மகிழ்ச்சிக்கான ஆற்றலைப் பெறாமலிருப்பது
தலை வழுக்கையானவர்
சீப்புகளை சேகரிக்கப் போராடுவதைப்போல இருக்கும்.
தவளையின் பிரார்த்தனை என்ற நூலிலிருந்து.

பதறாதே!

0

Posted on : Thursday, November 18, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதன் ஒரு உணர்ச்சிக் குவியல்.பல நேரங்களில் கோபம்,பரிதாபம்,பயம் ,மகிழ்ச்சி,இரக்கம்,எரிச்சல்,பொறாமை போன்ற உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் தன்னிச்சையாக வெளிப்பட்டு காரியத்தைக் கெடுத்து விடும்.உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் காரியங்கள் எதுவும் சரியாக அமைவதில்லை.பொங்கிப் பிரவகிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பின்போது எதிர்த்துப் பேசுதல்,விட்டெறிந்து பேசுதல்,எழுந்து போய் விடுதல்,அடித்து விடுதல்,பணியை ராஜினாமா செய்து விடல்,ஏன்,கொலை கூட செய்தல் நாம் காணும் அன்றாட காட்சிகள்.நிகழ்ந்து விட்ட சம்பவங்களை,வெளியிட்ட வார்த்தைகளை திரும்பப் பெறவோ,மாற்றவோ,அழிக்கவோ,முடியாது.வாழ் நாள் முழுவது வடுக்களாக நம்மை அவை அசிங்கப் படுத்திக் கொண்டே இருக்கும்.இந்த நம் உணர்ச்சிகள்,நமது சுற்றுச்சூழல்,வாழ்க்கை மோதல்களில்-,உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும்,நடைமுறையிலிருந்தும் ஏற்படுகின்றன.நிச்சயம் இவை வெளியிலிருந்து வருவதில்லை.''எது உனக்கு நிகழ்கிறதோ,அந்த நிகழ்ச்சியைவிட,அதற்கு நீ எப்படி மறுவினை ஆற்றுகிறாய் என்பதே முக்கியம்,''என்கிறார்.கிரேக்க ஞானி எபிசிடஸ்.நம் உணர்ச்சியைத் தூண்டத்தக்க ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் எல்லாம் போச்சு என்று ஒடுங்கி விடக்கூடாது.பெற்றோர்,உறவினர்,மனைவி,குழந்தைகள்,நண்பர்கள் உள்ளனர்.கை,கால்,மூளை,சிந்தனை,நேர்மை,உழைப்பு,ஆக்கத்திறன் எல்லாம் நம்மிடம் உள்ளன.எனவே உணர்ச்சி வசப்பட்டு பதறாதே!காரியம் சிதறாது!

நார்சிசம்

0

Posted on : Thursday, November 18, 2010 | By : ஜெயராஜன் | In :

நார்சிசம் (naarcissim) என்ற சொல் கிரேக்க புராணத்தில் இடம் பெற்ற ஒருவனின் பெயரிலிருந்து வந்தது.ஆற்று தெய்வத்தின் மகன் நார்சிசஸ் என்பவன்.இவன் தன்னை நேசித்து பிறரை வெறுத்ததன் காரணமாக கடவுளால் தண்டிக்கப் பட்டான்.ஓடும் நீரோடை ஒன்றில் தன உருவம் கண்டு தன்னையே மோகித்து தன உருவத்தைத் தழுவ முயன்று முடியாமல் செத்துப் போனான் நார்சிசஸ் அதிலிருந்து தன்னையே நேசித்து காதல் கொள்ளும் மனிதர்களை நார்சிஸ்ட் என்பார்கள்.நார்சிசம் ஒரு மனோநிலை.இந்த மனம் கொண்டவர்கள் தன்னை முன்னிட்டே பிறரை எடை போடுவார்கள்.

மெஷகிசம்

0

Posted on : Thursday, November 18, 2010 | By : ஜெயராஜன் | In :

மெஷகிசம் (mesochism):
இந்த வார்த்தை உருவாகக் காரணம் ஒரு ஆஷ்ட்ரிய எழுத்தாளர் பிரபுக்கள் வம்சத்தை சேர்ந்தவர்.அவர் பெயர் Count Leepold von socher-masoch(1835-1895) அவர் சின்ன வயதில் ஹன்ட்சா என்ற வாடகைத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்.அந்த அம்மா பயங்கரக் கதைகளை சொல்லி வளர்த்ததால்,தன மனம்,உடல் இரண்டிலும் துன்பத்தை உண்டு பண்ணிக் கொண்டு அதில் இன்பத்தைக் காணுவது அவருக்கு பழக்கம் ஆகிவிட்டது.அதிலிருந்து தன்னை வருத்திக் கொண்டு அதில் இன்பத்தைக் காணுவதற்கு மெஷகிசம் என்ற பெயர் வந்தது.இது சேடிசத்திற்கு எதிரானதாகும்.

பரிசின் தன்மை

0

Posted on : Wednesday, November 17, 2010 | By : ஜெயராஜன் | In :

மனித உறவுகளில் நாம் ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டேயிருக்கிறோம். அப்படி இல்லையென்றால் உறவில் விரிசல் வரும்.இப்படி நாம் கொடுக்கும் பரிசுகள் நமது சகதிக்குள் இருக்கிறவரை பிரச்சினை இல்லை.நம்மால் கொடுக்க இயலாத பரிசினைக் கொடுக்க்ம்போதுதான் பிரச்சினை வருகிறது.
நண்பர் ஒருவர் உங்கள் ஸ்கூட்டரை ஒருநாள் உபயோகத்துக்குக் கேட்கிறார்.உங்களுக்கோ கொடுக்க மனதில்லை.மனம் பதைபதைக்கிறது.தரமாட்டேன் என்று சொன்னால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும் என அஞ்சி வேண்டா வெறுப்பாகக் கொடுக்கிறீர்கள்.அவர் ஸ்கூட்டரைத் திரும்பக் கொடுக்கும் வரை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறீர்கள்.அடுத்து இரண்டு நாட்களுக்கு உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் அவரிடம் சண்டை போடுகிறீர்கள்.என்ன காரணம்? ஸ்கூட்டரை இரவல் கொடுப்பது உங்கள் சக்திக்கு மீறின பரிசு.
ஊனமுள்ள பெண்ணை ஒரு இலட்சியத்திற்காக திருமணம் செய்யலாம்.அது ஒரு பெரிய பரிசு என்பதில் சந்தேகமில்லை.ஆனால் அந்த மாதிரி பெரிய பரிசைக் கொடுக்குமுன் அதைக் கொடுக்கிற சக்தி நமக்கு உணர்வு பூர்வமாக இருக்கிறதா என யோசித்துப் பார்க்க வேண்டும்.அவ்வளவு அன்பு இருக்கிறதா என்று நமக்குள் நாமே தேடித் பார்க்க வேண்டும்.அது சக்திக்கு மீறிய பரிசாக இருக்கும் நிலையில் அந்தப் பரிசை நம்மால் முழுமையாக மனப்பூர்வமாகக் கொடுக்க முடியாது.எனவே அந்த அன்பு இல்லை என்றால் அந்தப் பரிசை வாங்குபவர்களுக்கும் அது நரகமாகிவிடும்.

வழுக்கை

1

Posted on : Sunday, November 14, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆசிரியரொருவர் பின்னே இரண்டு மாணவர்கள் போய்க்கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரும் குறும்புக்காரர்கள்.ஆசிரியருக்கு தலை வழுக்கை.ஒரு மாணவன் சொன்னான்,''நண்பா,வழுக்க போகுது,பார்த்து வா,''இதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே வந்தான்.ஆசிரியருக்கு கோபம் வந்துவிட்டது நேரே தலைமை ஆசிரியரிடம் சென்று புகார் கொடுத்தார்.தலைமை ஆசிரியர் இரு மாணவர்களையும் வரவழைத்து விசாரித்தார்.அப்போது அந்த பையன் சொன்னான்,''அய்யா,நேற்று பெய்த கடும் மழையில் பள்ளிக்கு வரும் பாதை முழுவதும் சேறாக இருந்தது.அதனால் சேற்றில் என் நண்பன் வழுக்கி விழுந்து விடக்கூடாதே என்றுதான்,திரும்பத்திரும்ப,வழுக்க போகுது ,பார்த்துவா,என்று சொன்னேன்.''
**********
ஒருவர் வெளிநாடு சென்று திரும்பினார்.நண்பர் கேட்டார்,''அங்கு உங்களுக்கு என்ன பிடித்தது?''அவர் சொன்னார்,''குளிர் அதிகமாக இருந்ததால் சளி பிடித்தது.''
**********

மும்மணிகள்

0

Posted on : Sunday, November 14, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,''இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,''என்று பேசினார்.அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள்.அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி.இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,''என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.

உதாசீனம்

0

Posted on : Saturday, November 13, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு அரசியல்வாதி மக்களால் போற்றப்பட்டான்.பின் அவனுக்கு அதிகாரம் கிடைத்த் உடன் எல்லோரும் அவனுக்கு எதிராகி விட்டார்கள்.அவன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான்.அவன் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அவன் ஊர் ஊராய் தன மனைவியுடன் சென்று வீடு தேட ஆரம்பித்தான்.யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை.ஒரு ஊருக்குள் சென்றபோது அந்த ஊர் மக்கள் அவன் மீது கல்லெறிய ஆரம்பித்தார்கள்.அவன் மனைவியிடம் சொன்னான்,''இந்த ஊர்தான் நம் வாழ்வைத் தொடங்க சரியான இடம்,''என்றான்.மனைவியோ,''உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''மற்ற ஊர்க்காரர்களைப் போல இந்த ஊர் மக்கள் நம்மை உதாசீனப் படுத்த வில்லையே?அவர்கள் நம்மை கவனிப்பதால் தான் கல்லை விட்டெறிகிறார்கள்.''உதாசீனத்தை விட எதிர்ப்பு மேலானது.

விடுதி

0

Posted on : Saturday, November 13, 2010 | By : ஜெயராஜன் | In :

மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.''சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,''என்றார் அவர்.மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,''குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?''குரு கேட்டார்,''மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?''மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,''உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?''என்று கேட்டார்.மன்னனும்,''அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,''என்று சொன்னான்.அதன் பின் குரு கேட்டார்,''உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?''அரசன் சொன்னான்,''என் மகன்,அதன் பின் என் பேரன்.''குரு,''ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.பிறகு போய் விட்டார்.அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார்.இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய்.உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?''என்று கேட்டார்.

எகத்தாளம்

0

Posted on : Friday, November 12, 2010 | By : ஜெயராஜன் | In :

''அவன் எவ்வளவு எகத்தாளமாய் பேசுகிறான்?''என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.அது என்ன எகத்தாளம்?
ஆதிதாளம்,அடதாளம்,திரிபுரதாளம்,ஜம்பதாளம்,ரூபகதாளம்,ஆகியவை பஞ்ச தாளங்கள் என்று அழைக்கப்படும்.ஒவ்வொரு ராகத்துக்கும் தகுந்த தாளம் வாசிக்க வேண்டும். இந்த ஐந்து தாளங்களையும் சேர்த்து வாசிப்பதற்கு ஏக தாளம் என்று பெயர்.பாடுபவருக்கும்,வாசிப்பவருக்கும் ஒத்து வராமல் போகும்போது வாசிப்பவர் வேண்டுமென்றே ஏக தாளமாக வாசிப்பார்.
அதேபோல கேட்பவரிடம் பதில் சொல்பவன் ஏறுக்கு மாறாகப் பதில் சொல்வதை ஏக தாளம் என்று சொல்லப்பட்டது.இது நாளடைவில் மருவி எகத்தாளம் என்று ஆகிவிட்டது.

புத்தாண்டு வாழ்த்து

0

Posted on : Friday, November 12, 2010 | By : ஜெயராஜன் | In :

சாராயக் கடையில் நல்ல கூட்டம்.ஒரே சப்தம்.அப்போது ஒரு குடிகாரன் திடீரென உரத்த குரலில்,''எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,''என்று கத்தினான்.உடனே ஒருவன் கேட்டான்,''ஏனப்பா இன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கிறாய்?புத்தாண்டு பிறந்து இருபது நாட்கள் ஆகி விட்டனவே!''குடிகாரனுக்கு ஒரே குழப்பம்.பலரும் இதேபோல சொல்ல அவன் கூவினான்,''ஐயையோஇதுவரை நான் இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனதில்லையே.என் மனைவி என்னைக் கொன்று விடுவாளே!''
**********
கல்லூரியில் படிக்கும் பையன் தந்தைக்குக் கடிதம் எழுதினான்,''அன்புள்ள தந்தைக்கு,உங்களிடம் இருந்து செய்தி வந்து நீண்ட நாட்களாகி விட்டன.உடனடியாக ஒரு செக் அனுப்பினால் நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வேன் அல்லவா?''
**********
ஒரு கடையில் சேலை திருடிய குற்றத்திற்காக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி கூறினார்,''இதே குற்றத்திற்காக முன் ஒரு முறை தண்டனை பெற்றிருக்கிறாயே?மீண்டும் அதே தவறை செய்யலாமா?''திருடன் சொன்னான்,''என் மனைவி முதலில் திருடிய சேலை கிழிந்து விட்டது என்று கூறினாள்.அவளும் எவ்வளவு நாள் தான் கிழிந்த சேலையை உடுத்துவாள்?''
**********
ஒரு கூட்டத்தில் பெண்கள் பகுதியில் ஒரே அரட்டை.பேச்சாளருக்கு அது இடையூறாயிருந்தது.''அமைதி,அமைதி,''என்று சொல்லியும் சத்தம் நின்றபாடில்லை.அப்போது பேச்சாளர்,''பெண்மணிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்,''என்றார்.உடனே கூச்சல் நின்றது.
**********

வாடகை வீடு

0

Posted on : Thursday, November 11, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு இளைஞன் இரு ஏரிக்கரை வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டான்.அவர் உதவி கேட்டு அலறவே இளைஞனும் உடனே நீரில் குதித்து அவரைதூக்கினான். அந்த ஆளுக்கு நினைவு இருந்தது.இளைஞன் நீந்திக் கொண்டே அவர் குடியிருப்பது ,சொந்த வீடா வாடகி வீடா என்று கேட்டான்.அவரும் வாடகை வீட்டில்குடியிருப்பதாகச் சொன்னார்.அவருடைய வீட்டு முகவரி கேட்டான்.அவரும் சொன்னார்.உடனே இளைஞன் அவரை அப்படியே நீரில் விட்டுவிட்டு தான் மட்டும் கரைக்கு நீந்தி வந்து அவர் சொன்ன முகவரிக்கு ஓடினான்.அந்த வீட்டின் சொந்தக்காரரை அணுகி,''ஐயா,உங்கள் வீட்டில் குடியிருந்தவர் ஏரியில் மூழ்கி விட்டார்.எனக்கு அந்த வீட்டை வாடகைக்குக் கொடுப்பீர்களா?''வீட்டின் உரிமையாளர் சொன்னார்,''அடப்பாவமே,கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா?இப்போதுதான் அவரைத் தண்ணீரில் தள்ளிவிட்டவர் வந்து வாடகைக்கு வீட்டைப் பிடித்து விட்டார்.''

மரணம்

0

Posted on : Thursday, November 11, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,''குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?''ஞானி சொன்னார்,''பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.இப்போது இரண்டும் போய்விட்டன.இடையில் வந்தவை இடையில் போயின.இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?''

கையாலாகாதவன்

2

Posted on : Wednesday, November 10, 2010 | By : ஜெயராஜன் | In :

கலிலியோ பூமி சூரியனை சுற்றுகிறது என்று கண்டு பிடித்து சொன்னதற்கு கிறிஸ்துவ மதத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.ஏனெனில் பைபிளில் சொல்லப்பட்டிருந்ததற்கு அது எதிராக இருந்தது.கடைசியில் எழுபது வயதுக் கிழவராயிருந்த அவரை போப்புக்கு முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கக் கட்டாயப் படுத்தினார்கள்.அவரும் தள்ளாடியபடி நடந்துபோய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு,சூரியன் தான் உலகை சுற்றுகிறது என்று ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.அனைவருக்கும் மகிழ்ச்சி.பிறகு கலிலியோ வாய் விட்டு சிரித்தார்.''நான் சொல்வதனால் ஏதாவது மாறி விடப் போகிறதா என்ன?என் வார்த்தைகள் எதை சாதித்துவிட முடியும்?நான் சொல்வதனால் பூமியும் சூரியனும் தம் போக்கை மாற்றிக் கொள்ளப் போகின்றனவா?ஆனாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.நான் சொன்னது தவறு.ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.பூமிதான் சூரியனை சுற்றுகிறது.என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பூமிக்குக் கிடையாது.நான் பைபிள் சொல்கிறபடி நடந்து கொள்கிறேன்.நான் கையாலாகாதவன்.''

பலம்

0

Posted on : Wednesday, November 10, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மரம் கொத்திப் பறவை அன்று காலை சுறுசுறுப்பாக இருந்தது.ஒரு பெரிய தேவதாரு மரத்தைக் கொத்திப் போட காட்டுக்குள் போனது.மரத்தின் பட்டையை அது கொத்திப்போட எத்தனிக்கும் போது ஒரு மின்னல் பாய்ந்து மரம் இரண்டாகப் பிளந்தது. ''அட,இத்தனை பலம் எனக்கு இருக்கு என்பது இத்தனை நாளாகத் தெரியாமல் போச்சே ''என்று அப்பறவை சிலிர்த்துக்கொண்டது.
இது தான் அகந்தை.

புரிதல்

0

Posted on : Wednesday, November 10, 2010 | By : ஜெயராஜன் | In :

கடவுள் யார் என்பதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கும் முன் நம்மை நாமே புரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் நம்மைப் பற்றித்தான் நமக்குக் குழப்பம்.நம் நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக நாம் கடவுளைப் புரிந்து கொள்கிறோம்.சில சமயங்களில் நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.நம்மிடம் நம்பிக்கை இருக்கும்போது கடவுளை நினைப்பதில்லை.மனிதன் தனக்கு வசதியான முறையில் கடவுளை எற்கிறானே தவிர அவர் இருக்கும் விதத்தில் அல்ல.எந்தக் கருத்து வசதியாக இருக்கிறதோ,அதை ஏற்று,அதை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளவும் செய்வான்.இது ஒரு விளையாட்டு.கடவுள் பெயரை சொல்லி நாமெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்_நம்மை வைத்தே நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலேயே!

உதவாக்கரை

0

Posted on : Tuesday, November 09, 2010 | By : ஜெயராஜன் | In :

ராமுவும் சோமுவும் நண்பர்கள்.ராமு சொன்னான்,''நீ ஒரு உதவாக்கரை.உனக்கு ஒன்றும் தெரியாது.''சோமு சொன்னான்,''என்னை அடிக்கடி உதவாக்கரை என்று சொல்கிறாய்.நான் ஒரு வாரத்தில் ஹெலிகாப்டர் ஓட்டிக்காட்டுகிறேன் பார்,''என்று சொன்னான்.சரியாக ஒரு வாரம் கழித்து சொன்னதுபோல ஒரு ஹெலிகாப்டரில் சோமு ஏறினான்.ராமுவும் சுற்றியிருந்தவர்களும் கைதட்டி அவனை உற்சாகப் படுத்தினர்.சோமுவும் ஹெலிகாப்டரில் ஜம்மென்று பறந்தான்.சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் வானிலிருந்து கீழே விழுது சிதைந்தது.அனைவரும் அங்கு ஓடினர்.அதிர்ஷ்டவசமாக சோமு சிறு காயங்களுடன் உயிர் தப்பினான்.''என்ன ஆயிற்று?''என்று ராமு வினவினான்.சோமு சொன்னான்,''ஹெலிகாப்டர் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.ஆனால் மேலே போகப்போக அதிகமாகக் குளிர்ந்தது.எனவே மேலே ஓடிக் கொண்டிருந்த காற்றாடியை நிறுத்தி விட்டேன்.''

கண்டுபிடி

0

Posted on : Tuesday, November 09, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான் .ஆப்ரஹாம் லிங்கனை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா?''என்று அவனிடம் கேட்கப்பட்டது.உடனே அவன் தேர்வு அதிகாரிகளிடம் ,''எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்,''என்றான்.அதிகாரியும் சிரித்துக் கொண்டே,''சரி,ஒரு வாரம் தருகிறோம்.விடையுடன் வா,''என்றார்.அவன் வீடு திரும்பினான்.வேலை கிடைத்து விட்டதா என்று அவன் மனைவி கேட்டாள்.அவன் சொன்னான்,''அநேகமாக வேலை கிடைத்த மாதிரிதான்.இல்லாவிட்டால் நேர்முகத் தேர்வின் போதே கண்டுபிடிக்க எனக்கு ஒரு கேசைத் தருவார்களா?ஒரு வாரத்திற்குள் அந்தக் கொலையாளியை நான் கண்டு பிடிக்க வேண்டும்.''

சான்றிதழ்

0

Posted on : Monday, November 08, 2010 | By : ஜெயராஜன் | In :

டாக்டர்:இதற்கு முன்னாள் டாக்டர் ரவியிடம் வேலை பார்த்ததாகச் சொல்கிறாயே,உன்னை எப்படி நம்புவது?சான்றிதழ் ஏதேனும் வைத்திருக்கிறாயா?
வந்தவர்:சான்றிதழ் எல்லாம் எதற்கு டாக்டர்?இதோ அவருடைய ஸ்டெதாஸ்கோப், தெர்மாமீட்டர் எல்லாம் வைத்திருக்கிறேனே!
**********
எஜமான்:ஏம்பா,இன்றைக்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலையா?
வேலைக்காரன்:இன்றைக்கு மழை பெஞ்சதில்ல எஜமான்!
எஜமான்:உனக்கு எப்பவும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லணும்.குடையைப் பிடிச்சுக்கிட்டு தண்ணீர் ஊற்றியிருக்கலாம் இல்லையா?
**********
பயணி:குழந்தைகளுக்கு அரை டிக்கட் வாங்க வேண்டுமா?
நடத்துனர்:ஐந்துக்குக் கீழ் என்றால் வேண்டாம்.
பயணி:நல்ல வேளை, நான் நான்கு பிள்ளைகளைத்தான் கூட்டி வந்திருக்கிறேன்.
**********
ஒரு பேருந்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் வாயில் சிகரெட் வைத்திருந்தார்.அதைப் பார்த்த நடத்துனர்,பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த,'புகை பிடிக்காதீர்'என்ற அறிவிப்பினை சுட்டிக் காட்டி,;;இங்கு புகை பிடிக்கக் கூடாது,''என்றார்.பயணி சொன்னார்,''நான் புகைக்கவில்லை,''நடத்துனர் கேட்டார்,''நீங்கள்தான் வாயில் சிகரெட் வைத்திருக்கிறீர்களே?''பயணி பதிலுரைத்தார்,''அதனால் என்ன?இதோ பாருங்கள்!காலில் நான் செருப்பு அணிந்துள்ளேன்.அதற்காக நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமா?''
**********

எதையும் செய்வேன்

0

Posted on : Monday, November 08, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாடோடி ஒரு கிராமத்தை நோக்கி செல்கையில் பசி எடுத்ததால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒரு சுல்தான் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.சுல்தான் இவனைப் பார்த்து,''இப்படி நாடோடியாகத் திரிகிறாயே?சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?''என்று கேட்டார்.அதற்கு நாடோடி,''நான் நினைத்தால் எதையும் செய்வேன்,''என்றான்.சுல்தான்,''என்னப்பா,ஒரு நாட்டிற்கே அதிபதியான எனக்கே நான் நினைத்ததைஎல்லாம் செய்ய முடியாது.ஒரு நாடோடியாகிய நீ எல்லாம் முடியும் என்கிறாயே?''என்று வியப்புடன் கேட்டார்.நாடோடி சொன்னான்,''உங்களால் முடியாது.ஆனால் என்னால் முடியும்.''உடனே சுல்தான் ,''எங்கே என்னைக் குதிரையிலிருந்து இறங்க வை பார்ப்போம்,''என்று சவால் விட்டார்.அதற்கு அவன்,''அய்யா,உங்களைப் போன்ற சுல்தானைக் குதிரையிலிருந்து இறங்க வைக்க முடியாது.ஆனால் நீங்கள் குதிரையிலிருந்து இறங்கினால்,அடுத்த நிமிடமே உங்களைக் குதிரையில் திரும்ப ஏற வைக்க முடியும்,''என்றான்.உடனே சுல்தானும் கீழே இறங்கினார்.உடனே நாடோடி,''இதோ,நான் சொன்ன உடனே இறங்கி விட்டர்கள்,பார்த்தீர்களா?''என்றான்.சுல்தானுக்கக் கோபம் வந்து விட்டது.''நீ சரியான் ஏமாற்றுப் பேர்வழி,''என்று கூறிக் கொண்டே மீண்டும் குதைரை மீது ஏறி கிளம்பினார்.அவன் சொன்னான்,''பார்த்தீர்களா?நான் சொன்னது போல நீங்கள் குதிரையிலிருந்து இறங்கிய உடனே திரும்பவும் ஏற வைத்து விட்டேன்.''என்றான்.சுல்தான்,அந்த நாடோடி தன்னை முட்டாளாக்கி விட்டான் என்பதை உணர்ந்தாலும் அவனுடைய சாமர்த்தயத்தை மெச்சி ஒரு தங்கக் காசினைக் கொடுத்துவிட்டு சென்றார்.நாடோடிக்கு இப்போதைக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது.

வந்தாண்டா பால்காரன்!

0

Posted on : Sunday, November 07, 2010 | By : ஜெயராஜன் | In :

தண்ணீர் கலந்து பால் விற்கும் ஒருவன் முன் கடவுள் தோன்றி,பாலில் தண்ணீர் கலக்கும் காரணம் என்ன என்று கேட்டார்.அவன் சொன்னான்,''ஒரு குடம் பாலில் ஒரு குடம் தண்ணீர் கலந்தால் இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும்,''என்றான்.கடவுள் உடனே அவனுக்கு ஒரு குடம் பால் வரவழைத்துக் கொடுத்தார்.அவனும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு அவன் வழியே நடக்கலானான்.வேறேதேனும் வேண்டுமா எனக் கடவுள் அவனிடம் கேட்டார்.''உங்களால் முடிந்தால்...''என்று அவன் இழுக்க,''இன்னொரு குடம் பால் வேண்டுமா என்று கடவுள் கேட்டார்.அவன் சொன்னான்,''நான் அவ்வளவு பேராசைக்காரன் அல்ல.இன்னொரு குடம் தண்ணீர் கொடுத்தால் போதும்.அதை நீங்கள் கொடுத்த பாலில் ஊற்றி இரட்டிப்பாக்கி விடுவேன்.''அடுத்த நிமிடம் கடவுள் அந்த இடத்தில் நிற்க வில்லை.

தாமதம்

0

Posted on : Sunday, November 07, 2010 | By : ஜெயராஜன் | In :

படைவீரர்களின் காலை பெரேடுக்கு எட்டு பேர் சரியான நேரத்துக்கு வரவில்லை.பத்து நிமிட தாமதத்தில் ஒருவன் வந்தான்.தாமதத்திற்கான காரணத்தை அதிகாரி கேட்க அவன் சொன்னா,''என் தாயாருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரைப் பார்த்து விட்டு வந்ததில் சிறிது தாமதமாயிற்று.பின்னர் நான் வந்த பேருந்து வழியில் ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு குதிரையை வாடகைக்கு பிடித்து வந்தேன்.வரும் வழியில் திடீரென குதிரை கீழே விழுந்து இறந்து விட்டது.எனவே எஞ்சிய பத்து கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்தேன்.அதனால் சற்று தாமதமாகி விட்டது,''அதிகாரி அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவனை அனுமதித்தார்.அடுத்து இரண்டாவது ஒருவன் வந்தான்.இவனும் முதலாமவன் சொன்னது போலவே சொன்னான்.அரைகுறை மனதோடு அவனும் அனுமதிக்கப் பட்டான்.பின்னர் வந்த ஐந்து பேர் அதே காரணத்தை சொல்ல அதிகாரி ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை நிறுத்தி வைத்தார்.அப்போது எட்டாவது ஆளும் வந்து,''சார், உடல் நலமில்லாத தாயாரைப் பார்க்கப் போயிருந்தேன்பெருந்து ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு டாக்சியை பிடித்து வந்தேன்.''என்று ஆரம்பித்தான்.உடனே அதிகாரி,''நிறுத்து.அடுத்து டாக்சி ரிப்பேர் ஆகி விட்டது என்று சொல்லப் போகிறாய்.அப்படித்தானே?''அந்த ஆள் சொன்னான்,''இல்லை சார்,டாக்சி ரிப்பேர் ஆகவில்லை.வரும் வழியில் ஏழு குதிரைகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் அதைத் தாண்டி வரமுடிய வில்லை.எனவே அங்கிருந்து நடந்தே வந்தேன்.''

பாவங்கள்

0

Posted on : Saturday, November 06, 2010 | By : ஜெயராஜன் | In :

நான்கு பாதிரியார்கள் ஒரு இடத்தில் மகிழ்ச்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சொன்னார்,''நாமெல்லாம் நல்ல நண்பர்கள்.பிறரிடம் சொல்ல முடியாத நம் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசலாமே?''என்றார்.எல்லோரும் சம்மதிக்கவே அவர் சொன்னார்,''இப்போதெல்லாம் நான் அதிகம் குடிக்கிறேன்.அதை நிறுத்த முடியவில்லை.'' அவர் வெளிப்படையாகப் பேசியதைப் பார்த்து அடுத்தவர் தைரியம் அடைந்து ,''என்னுடைய பிரச்சினையே நான் அதிகம் சூதாடுவதுதான்.எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை.''மூன்றாமவர் சொன்னார்,''சமீப காலமாக என் கவனம் எல்லாம் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணை எப்படி அடைவது என்பதுதான்.பாவம் என்று தெரிந்தும் என் மனம் அதையே நாடுகிறது.''நான்காமவர் சொன்னார்,''என்னுடைய கெட்ட பழக்கம் என்னவென்றால்,ஏதாவது ஒரு செய்தியைக் கேள்விப்பட்டால்,அதை எல்லோரிடமும் சொல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை.''மற்ற மூவரும் மயக்கம் அடையாத குறைதான்.

பேசும் எந்திரம்

0

Posted on : Saturday, November 06, 2010 | By : ஜெயராஜன் | In :

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார்.எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார்.எடிசனுக்கோ தாங்க முடியவில்லை.இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை.நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,''என்றார்.எடிசன் அவரிடம் சொன்னார்,''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான்.ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''

பொருத்தமான நேரம்

0

Posted on : Friday, November 05, 2010 | By : ஜெயராஜன் | In :

சில ராகங்களுக்கான நேரங்கள்:
காலை --பூபாளம்
உச்சிவேளை --காம்போதி
மாலை --சந்நியாசி,பூர்வ கல்யாணி
நள்ளிரவு --கானடா
மகிழ்ச்சி --மோகனம்,கல்யாணி
துயரம் --முகாரி,சுப பந்துவராளி
சாமி வீதி உலா --நாட்டை
முகூர்த்தம் --நாட்டைக் குறிச்சி
தாலி கட்டியதும் --காபி
தாலாட்டு --ஆனந்த பைரவி
மங்களம் --மத்யமாவதி
மழை பொழிய --அமிர்த வர்ஷினி
வளரும் பயிருக்கு --சாருகேசி

பொறுப்பானவர்

0

Posted on : Friday, November 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நேர்முகத் தேர்வுக்கு ஒருவர் வந்தார்.மேனேஜர் சொன்னார்,''நாங்கள் இந்த வேலைக்கு பொறுப்பான ஒரு நபரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்,''.இளைஞன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னார்,''நான் இதற்கு முன் வேலை பார்த்த இடத்தில் என்னை அடிக்கடி பொறுப்பானவர் என்று சொல்வார்கள்,''ஆர்வமுடன் மேனேஜர்,''இன்னும் கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்களேன்.''என்று கேட்டார்.இளைஞன் சொன்னார்,''எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் ஏதாவது தவறாகப் போனால்,'இதற்கு நீங்கள்தான் பொறுப்பானவர்,'என்று சொல்வார்கள்.உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நான் முன்பு வேலை பார்த்த நிறுவன மேனேஜரிடம் கேட்டுப் பாருங்கள்.'';

சேடிசம்

0

Posted on : Thursday, November 04, 2010 | By : ஜெயராஜன் | In :

சேடிசம் (sadism)என்ற சொல் Marquis-de-sade என்ற எழுத்தாளரின் பெயரில் இருந்து தோன்றியதாகும்.இவருடைய காலம் 1740-1814 ஆகும்.பிரான்சில் பிரபுக்கள்  குடும்பத்தில் பிறந்தவர் இவர்.பிரெஞ்ச் இலக்கியத்தில் குரூரத்தை சிறப்பித்து எழுதியவர்.பிறர் துன்பம் கண்டு இன்பம் அடைதல் என்ற எண்ணத்திற்கு வக்காலத்து வாங்கியவர். மனிதர்களைக் கீழ்மை
படுத்துவது ,சித்தரவதை,விபரீதமான காரியங்கள்தான் அவருடைய நாவல்களின் முக்கிய அம்சங்களாகும்.

துணிச்சல்

0

Posted on : Thursday, November 04, 2010 | By : ஜெயராஜன் | In :

சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் தன நண்பரின் வீட்டில் இருந்தார்.அவரைத் தேடி போலீஸ் நண்பர் வீட்டுக்கு வந்து விட்டனர்.அப்போதுஆசாத் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.போலீசிடம் நண்பர்,ஆசாத்தைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் மனைவி ஆசாத்தைப் பார்த்து,''பண்டிகை தினமும் அதுவுமாய் இப்படி சோம்பேறித்தனமாய்உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே!இனிப்பு பலகாரங்களை எல்லாம்எடுத்துக் கொண்டு போய் நண்பர்கள் வீடுகளில் கொடுக்க வேண்டாமா?''என்று வேலைக்காரனிடம்ஆணையிடுவது போல சொல்ல.புரிந்து கொண்ட ஆசாத்,இனிப்புகளை எடுத்துக் கொண்டு வெளியே சென்று அப்படியே தப்பிச் சென்று விட்டார்.அந்தப் பெண்மணியின் அபார துணிச்சல்,விசுவாசம்,தேசப்பற்று ஆசாத்தை அன்று காப்பாற்றியது.

இறப்பு அச்சம்

0

Posted on : Wednesday, November 03, 2010 | By : ஜெயராஜன் | In :

இறப்பு என்பது அழகானதுதான்.ஏனெனில்அப்போது ஒரு ஆழ்ந்த அமைதியும் மிகுந்த ஓய்வும் ஏற்படுகிறது.ஆனால் இறப்பைக் கண்டு நாம் பொதுவாகவே பயப்படுகிறோம்.நீங்கள் தொடர்ந்து வாழ விரும்புகிறீர்கள்.நீங்கள் வாழ்வை இதுவரை முழுமையாக வாழவில்லை.இவ்வளவுதான் வாழ்வு என்று புரிந்தவனுக்கு இறப்பு ஒரு கொண்டாட்டம்.உங்கள் சக்தியை பணம் ,அந்தஸ்து,பதவி,சொத்து,சுகம்,மனைவி,மக்கள் என்ற உலகப் பொருள்களுக்கு செலவழித்து,அதுதான் நிரந்தரம் என்ற கருத்தை உங்கள் மனதில் ஆழமாக செலுத்தி விட்டீர்கள்.அது எப்போதும் வேலை செய்து கொண்டேயிருக்கும்.அதிலிருந்து உங்களால் மீள முடியவில்லை.இறப்பைக் கண்டு பயப்பட இது ஒரு காரணம்.

தாஜ்மஹால்

0

Posted on : Wednesday, November 03, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு புதுக் கவிதை:
எனக்காக தாஜ்மஹாலைக் கூடக்
கட்டித் தருவதாகச் சொன்னான்.
நான் ஒரு தாலி மட்டும் கட்டச் சொன்னேன்.
ஷாஜஹானைக் காணவில்லை.........

அதிசயம்

0

Posted on : Wednesday, November 03, 2010 | By : ஜெயராஜன் | In :

கிராமவாசி ஒருவன் புதிதாக நகரத்திற்கு வந்தான்.பலமாடிக் கட்டிடம் ஒன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.அங்கே இருந்த லிப்டில் வயதான ஒரு பெண் மேலே போக ஏறினார்.சிறிது நேரம் கழித்து லிப்ட் கீழே வந்தபோது ஒருஇளம்பெண் இறங்கி வந்தார்.கிராமவாசி சொன்னான்,''பட்டணத்திலே எவ்வளவு அதிசயம் நடக்குது?கிழவி ஒருத்தி இந்தக் கூண்டுக்குள் போனாள்.கொஞ்ச நேரத்தில் குமரியாக மாறி வெளியே வராளே!இப்படித் தெரிஞ்சிருந்தா ஊரிலிருந்து என் பொண்டாட்டியையும் கூட்டி வந்து குமரியாக்கி இருப்பேனே!''

கழுதை

0

Posted on : Tuesday, November 02, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா கடை வீதிக்கு தன கழுதை மீதேறி சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே ஒரு பணக்காரன் தன குதிரையில் வந்து கொண்டிருந்தான்.முல்லாவைப் பார்த்து அவன் கிண்டலாக,''முல்லா,கழுதை எப்படியிருக்கிறது?''எனக் கேட்டான்.முல்லா அமைதியாக சொன்னார்,''கழுதை குதிரையின் மீது சென்று கொண்டிருக்கிறது.

சீனிவாசன்

0

Posted on : Tuesday, November 02, 2010 | By : ஜெயராஜன் | In :

பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார்.உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர்.அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு,''திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே!''என்றார்.விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது.உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,''அடடே,எறும்பு இருக்கிறது,''என்றார்.செட்டியார் சொன்னார்,''எறும்பு சீனியில்  வாசம் செய்யக் கூடியது அல்லவா?அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்''என்றார்.

புண்ணாக்கு

0

Posted on : Tuesday, November 02, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தன மாட்டைக் கூட்டிக் கொண்டு கால் நடை மருத்துவரிடம் வந்தார்.மருத்துவர் என்ன பிரச்சினை என்று கேட்க வந்தவர் சொன்னார்,''மாட்டிற்கு புண் இருப்பதால் சரியாகப் புண்ணாக்கு தின்ன மாட்டேன் என்கிறது.''மருத்துவர் கேட்டார்,''புண் எங்கே உள்ளது?'' மாட்டுக்காரர் சொன்னார்,''புண்ணாக்கில் உள்ளது.''மருத்துவருக்கு கோபம் வந்து விட்டது.''என்ன நக்கலா?''என்று கேட்டார்.உடனே அவர் பதறிப்போய்,''அய்யா,நான் உங்களிடம் கிண்டல் செய்வேனா?மாட்டுக்குப் புண் நாக்கில் உள்ளது.என்று தான் சொன்னேன்.''

என்ன எழுதினார்?

0

Posted on : Monday, November 01, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நூலகத்திற்கு ஒருவரின் பெயர் இடப்பட்டிருந்தது.நூலகத்திற்கு வந்த ஒருவர் கேட்டார்,''இந்தப் பெயரை முன்னர் கேள்விப் பட்டதில்லையே? இவர் ஏதேனும் சிறந்த புத்தகம் எழுதியிருக்கிறாரா?இவர் என்ன எழுதினார்?''அங்கு பணி புரிந்த ஒருவர் சொன்னார்,''ஒரு செக்,''(cheque) 
**********
ஒரு நகைச்சுவை எழுத்தாளர் சொன்னார்,''நான் இருபத்தாறு ஆண்டுகளும் என் மனைவி இருபத்தி நான்கு ஆண்டுகளும் மகிழ்ச்சியாக இருந்தோம்.''நண்பர் கேட்டார்,''அதன் பின் என்னாயிற்று?''எழுத்தாளர் சொன்னார்,'அதன் பின் எங்களுக்கு திருமணம் ஆகி விட்டது.''
**********
நேர்முகத் தேர்வில் விற்பனை அதிகாரி கேட்டார்,''உங்களுக்கு விற்பனையில் முன் அனுபவம் இருக்கிறதா?''வந்தவர் சொன்னார்,''நிறைய அனுபவம் இருக்கிறது,சார்.சமீபத்தில் கூட என் வீடு ,கார்,என் மனைவியின் நகைகள்.நிலம் எல்லாவற்றையும் விற்றிருக்கிறேன்.''
**********
ஆசிரியை கேட்டார்,''தேர்வுத் தாளில் உன் பக்கத்தில் இருந்தவன் செய்த தவறும்,உன் தவறும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?அதற்கு என்ன காரணம்?''மாணவன் சொன்னான்,''இருவருக்கும் ஒரே ஆசிரியை தானே சொல்லிக் கொடுக்கிறார்?''
**********
ஒரு கல்லறை மீது எழுதப்பட்டிருந்தது,''இங்கு நேர்மையான வக்கீல்,ஜான் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.''ஒருவர் கேட்டார்,''ஒரே கல்லறையில்  எப்படி மூன்று பேரை அடக்கம் செய்துள்ளார்கள்?''
**********
ஒருவர் விடுமுறைக்கு ஒரு கடற்கரை நகருக்கு செல்ல உத்தேசித்து அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்துவிட்டு,அதன் முகவரி கேட்டார்.மேனேஜர் சொன்னார்,''கடற்கரையிலிருந்து கல்லடி தூரத்தில் தான் எங்கள் ஹோட்டல் உள்ளது.''இவர் கேட்டார்,''அது சரி,அதை எப்படி அடையாளம்  காண்பது?''கண்ணாடிகள் எல்லாம் கல்லடி பட்ட அடையாளம் தெரியும் ''என்று பதில் வந்தது.
**********
ஒரு நேர்முகத் தேர்வில்,''இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?''என்று கேட்கப்பட்டது.''அது எவ்வளவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ,அவ்வளவு,''என்று பதில் வந்தது.அவர் தேர்வு செய்யப்பட்டார்.
**********