உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஆசை

1

Posted on : Monday, November 25, 2013 | By : ஜெயராஜன் | In :

ஆசை என்ற ஒன்று இருக்கிறது.அது மனிதர்களை ஆட்டிப் படை க்கிறது. .ஆணோ,பெண்ணோ ஒருவரையும் அது விட்டு வைப்பதில்லை.ஒரு பொருளின் மீது ஆசை உண்டாகிறது.அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை.ஆசைப்பட்டது கிடைக்காது என்றால் பிரச்சினை இல்லை.கிடைக்கும்,ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது என்ற நிலை வரும்போதுதான்.பிரச்சினை.அப்போதுதான் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது.முடிவு ஏற்படாமல் இப்படி ஒரு இழுபறி நிலை உண்டாகும்போது ஆசைக்குத் தீவிரம் உண்டாகும்.பின் வெறியாக ஆவேசமடைந்துவிடும்.பயம் ஒரு பக்கம்,வெறி ஒரு பக்கம் ஆக இரண்டு பக்கமும் பிசையப் பிசையக் குழப்பம் உண்டாகும்.தைரியம் எவ்வளவு இருந்தாலும் புத்தி தடுமாறிவிடும்
ஆசை நிறைவேறுமா,நிறைவேறாதா என்ற சந்தேகத்தில் ஜோதிடம் பார்ப்பார்கள்.ரேகை சாஸ்திரம் பார்ப்பார்கள்.தங்களுக்குள்ளே ஒரு ஆரூடத்தை உண்டாக்கி அதை வைத்துப் பலனைக் கணிப்பார்கள். புத்தகத்தைப்  பிரித்துப் பார்ப்பார்கள்.பிரித்த பக்கத்தில் விஷயம் நன்றாக இருந்தால் காரியம் கைகூடும் என்று திருப்திப் படுவார்கள்.விஷயம் ஒரு மாதிரியாக இருந்தால் காரியம் கைகூடாதோ என்று பதறுவார்கள்.
காரியம் கைகூடும் வரை மனம் அதை நோக்கியே ஓடும்.மறப்பதற்கு மனமும் எத்தனையோ தந்திரம் செய்து பார்க்கும்.ஆனாலும் மறக்க முடியாது.அந்த நினைப்பே சுற்றிச் சுற்றி வரும்.
நினைப்பு வந்தால் சும்மா இருக்குமா?அது சம்பந்தமான பாரத்தை வார்த்தைகளாக இறக்கி வைக்கத் துடிக்கும்.மனதிற்குப் பிடித்தவர்களிடம்  அக்காரியத்தைப் பற்றி,விசயத்தைத் தொடாமல் ஜாக்கிரதையாகப் பேச்சுக் கொடுக்கும்.சுற்றி வளைத்து பட்டும் படாமலும் விஷயத்தை ஜாடைமாடையாகக் காட்டும்.
இவ்வளவும் ஆசை காரணமாக வரும் உணர்ச்சிகள்.சோர்வு,பயம்,கலக்கம்,தைரியம்,மகிழ்ச்சி இவை யாவும் ஆசையிலிருந்து பிறக்கின்றன.

பிரச்சினைக்குத்தீர்வு...

1

Posted on : Sunday, November 24, 2013 | By : ஜெயராஜன் | In :

பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்வது விவேகம் அல்ல.பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கூடும் பல கூட்டங்கள் துன்பத்தில் முடிந்துள்ளன. உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லையென்றால் நீங்கள் பிறருக்குப் பிரச்சினையை உண்டாக்குவீர்கள்.ஏதாவது ஒரு பிரச்சினை உங்கள் கையில் இருந்தால்தான் உங்கள் மனம் ஒருமுகப்படும்.எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால் நீங்கள் மற்றவர்களுக்குப் பிரச்சினை ஆகி விடுவீர்கள். எனவே பிறருக்குப் பிரச்சினையாக இருப்பதை விட நாம் ஒரு பிரச்சினையோடு  இருப்பது நல்லது.
******
சலிப்போடு இருந்தால் உங்களை நீங்களே சாந்தப் படுத்திக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே  திருப்திப் படுத்திக் கொள்ளுங்கள்.இன்னொருவர் உங்களை சாந்தப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது நீங்கள் தெளிவாயில்லை என்பதன் அடையாளம்.இதுதான் அறியாமையின் வேர்.எப்போதும் உற்சாகத்துடன் இருங்கள்.
******
குறை கூறுகிற முகத்துடன் தெய்வீக அன்பைப் பெறுதல் இயலாதது.அது முன்னுணர்வு இல்லாத மனதின் அடையாளம்.குறை கூற வேண்டும் என்றால் ஆண்டவனிடம் கூறுங்கள்.ஏனெனில் அவர் காதுகளை மூடிக் கொண்டுள்ளார்.
******
இன்னொருவர்க்குக் கீழ் வேலை செய்ய மறுப்பது பலவீனத்தின் அடையாளம்.தன்  பலம் தெரிந்தவர்கள் யாருக்குக் கீழ் வேலை செய்தாலும் அதை வசதிக் குறைவாக எண்ண  மாட்டார்கள்.பலவீனமானவர்களும் ஊக்கம் குன்றியவர்களும் தான் இன்னொருவருக்குக் கீழ் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரிவதில்லை.
******
                                      ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

பொன்மொழிகள்-46

0

Posted on : Saturday, November 23, 2013 | By : ஜெயராஜன் | In :

நண்பர்கள் முலாம்  பழத்தைப் போன்றவர்கள்.ஒரு நல்ல முலாம் பழத்தை சுவைக்க நூறு பழங்களை  ருசி பார்க்க வேண்டியிருக்கும்.
******
நட்பு இரு உடல்களில் உறையும் ஒரே ஆன்மா.
******
நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும்.நட்பு கொண்டபின் அதில் நிலையாகவும் உறுதியாகவும் இருக்கவும்.
******
மனிதன் மன மகிழ்ச்சி கொள்ளவும்,பெருமை கொள்ளவும் இறைவன் கொடுத்த வரம் 'நண்பர்கள்'.
******
நம்மைப் பாராட்டுவதை விட நம்மிடம் அதிக அன்பு செலுத்தி,நமக்கு உதவுபவனே உண்மையான நண்பன்.
******
சட்டம் என்ன சொல்கிறது என்பது முக்கியம் அல்ல.
சட்டம் என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம்.
******
இறக்கைகளுடன் பிறந்திருக்கும் நீ ஏன் தவழ ஆசைப்படுகிறாய்?
******
எல்லோரிடமும் இரக்கம் காட்டு.ஏனெனில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினையோடு கடுமையாகபோரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
******
ஆயிரம் தலைகள் பிரார்த்தனைக்காக குனிந்து வணங்குவதை விட
ஒரேஓர் இதயம் மகிழ செய்யப்படும் ஒரே ஒரு செயல்  மேலானது.
******
உண்மையே பேசு.
இனிமையானவற்றையே பேசு.
இனிமையற்ற உண்மையைப் பேசாதே.
இனிமையான பொய்யைப் பேசாதே.
******
பணத்தையும்,அதிகாரத்தையும்,செல்வாக்கையும்
அடித்துவிடக் கூடிய சமாசாரம் ஒன்று உண்டு.
அதுதான் உற்சாகம்.
******
நண்பர்களைக் கூட்டு.பகைவர்களைக்கழி.
உற்சாகத்தைப் பெருக்கு.உன் கவலைகளை வகு.
கடவுளை மையமாக வைத்து
அன்பை ஆரமாக வைத்து
உன் வாழ்க்கை என்னும் வட்டத்தை வரை.
******
அதிக ஏக்கமே புலம்பலாக மாறும்.
******


பின்வாங்குவது தவறா?

2

Posted on : Friday, November 22, 2013 | By : ஜெயராஜன் | In :

பல விசயங்களில்  நாம் ஆர்வமாக ஈடுபடுகின்றோம்.கொஞ்ச தூரம் போனதும்தான்,''ஐயோ! வசமாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே!ஜகா வாங்க வேண்டியதுதானா?''என்கிற கலவர நினைப்பு வரும்.ஆனால் சுற்றியிருப்பவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நினைப்பும் சேர்ந்தே வரும்.இவை நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்தி விட்டுப் போகும்.அதாவது,'என்ன ஆனாலும் சரி,ஒரு கை பார்த்து விடுவது,''என்று இறங்கி,முகத்தைப் பெயர்த்துக் கொள்வார்கள்.இது புத்திசாலிக்கு அழகல்ல.எவ்வளவோ விசயங்களை ஆர்வக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம்,அப்போது பிரச்சினை பூதாகரமாகத் தெரிவதில்லை.இறங்க இறங்கத்தான் ஆழம் மட்டுப் படுகிறது.சுட்டுப் பொசுங்கிய பின்தான்  சூடு புலப்படுகிறது.இது பின் வாங்க வேண்டிய தருணம்!அதற்காக எந்த விசயத்தில் தடங்கல் வந்தாலும் உடனே உதறி விட்டு ஓடி விட வேண்டும் என்று பொருள் அல்ல.கடைசி வரை போராட வேண்டியது தான்.ஆனால் நம்பிக்கை ஒளி கொஞ்சம் கூடத் தெரியாத பிரச்னை எண்ணும் மலை முகட்டில்,போலியான கௌரவத்திற்காகவும்,யார் என்ன நினைப்பார்களோ என்ற அர்த்தமற்ற வாதத்திற்காகவும் நடந்து,நடந்து அதல பாதாளத்தில் விழுந்து விடக் கூடாது.சொல்லியும் கேளாமல் சுயமாயும் புரியாமல்,'எனக்கு நானே குழி தோண்டிக் கொள்கிறேன்,''என்ற வரட்டுத் தனத்திற்கு நாம் ஒரு போதும் விலை போய் விடக் கூடாது.இடையில் பின் வாங்குவது அவமானம் எனத் தயங்குபவர்கள் முழுப் பாதையும் கடந்தபின் வாங்கப் போவது அதை விடப் பெரிய அவமானம் என்பதை உணர வேண்டும்.பாதித் தவறை செய்து திருத்திக் கொண்டவனை மன்னிக்க உலகம் தயாராக இருக்கிறது.ஆனால் முழுத் தவறை செய்து விட்டால் சாமான்யமாய் மறக்காது;மன்னிக்கவும் செய்யாது.
நிச்சயமாகத் தவறு என்று தெரிந்து விட்டால் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பின் வாங்குவதில் தவறேயில்லை!

பெண்

0

Posted on : Thursday, November 21, 2013 | By : ஜெயராஜன் | In :

பெண்ணை மலிவாக நினைக்காதே.,இழிவாகப்பேசாதே,
அடிமையாக நடத்தாதே!
அவளை சக மனுஷியாக நினை;சரிசமமாக நடத்து.
சரியும்,தவறும் செய்யும் சராசரி பிறவியாக நினை.
அதை விட்டுவிட்டு,ஏண்டா பாவி,
தேவதையாக வர்ணிக்கிறாய்,தெய்வமாக வணங்குகிறாய்,
'உலகமே'என்று உளறுகிறாய்?
சமமானவளை  சாமியாக்கி,சாமியாடிவிட்டு,
சகஜம் புரியும்போது,சமாதானம் ஆக முடியாமல்
சமாதியாகி விடுகிறாய்.
கற்பை she-mail க்கு மட்டும் அனுப்பாதே,அது he-mail க்கும்தான்.
எந்த லட்சணத்தில் நீ காப்பாற்றுகிறாயோ கற்பை,
அதே லட்சியத்தில் அவளும்,புரிந்து கொள்!
******
பிடிக்கலையின்னு சொல்ல காரணம் ஆயிரம் இருக்கும்.
ஆனால் பிடிச்சதுக்குக் காரணம் என்னமோ,அனேகமாக 'என்னமோ'வாகத்தான் இருக்கும்.
******
வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி அல்ல அறிவிக்க:
அது ஒரு அனுபவம்-அனுபவிக்க;சுவை-சுவைக்க;ரசனை-ரசிக்க.
******
தன்னிடமுள்ள ப்ளஸ்களை மட்டுமே
சீவிச் சிங்காரித்துக் காட்டி சிக்கிக் கொண்டவர்களின்
காதல் மட்டுமே கல்யாணத்துக்குப் பிறகு
ஒரு சிறு மைனஸ் தென்பட்டாலும் முறிந்துவிடும்.
******
                                        ரா .பார்த்திபன் எழுதிய 'கிறுக்கல்கள்'என்ற நூலிலிருந்து.

வாழ்க்கை ஒரு பரிசு.

0

Posted on : Wednesday, November 20, 2013 | By : ஜெயராஜன் | In :

வாழ்க்கை ஒரு சிறைச்சாலை அல்ல.அது ஒரு தண்டனை அல்ல.அது ஒரு பரிசு.அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு உள்ளது.இப்போது அதை ரசித்து மகிழ்வது உங்கள் கடமை.அதை ரசிக்கா  விட்டால்  அது ஒரு பாவம்.நீங்கள் வாழ்க்கையை அழகு படுத்தவில்லை என்றால்,அது இருந்தபடியே அதை விட்டு வைத்தால்,அது உயிர் வாழ்தலுக்கு எதிரானது.வாழ்வை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள்.மேலும் சற்றே அழகானதாக, நறுமணம் மிக்கதாக ஆக்குங்கள்.
******
வாழ்க்கை ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்,ஒரு ஆசையாக அல்ல.ஒரு நாட்டின் அதிபராகவோ,பிரதமராகவோ ஆக வேண்டும் என்பது போன்ற லட்சியம் இல்லாமல்,'நான்யார்?'என்று கண்டறியும் ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்.தான் யார் என்று அறியாத மக்கள் யாராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு வினோதம்தான்.அவர்கள் இப்போது யாராக இருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
******
நீ அக்கறை காட்டத் தேவையில்லாத விசயங்கள்இருக்கின்றன.நீ அவற்றை வெறுமனே கவனித்தால் போதும்.அவை சென்று விடும். கோபம், பொறாமை, பேராசை --இருளின் இந்த பாகங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அதாவது அவற்றை நீ கவனித்தால் போதும்,அவை மறையத் தொடங்கிவிடும்.நீ வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.நல்லது கெட்டது என்பதற்கு வேறு எந்த வரைமுறையும் கிடையாது.கவனிப்பதுதான் அதை முடிவு செய்கிறது.
******

அழைப்பா,விசாரணையா?

1

Posted on : Tuesday, November 19, 2013 | By : ஜெயராஜன் | In :

அரசியல்வாதி ஒருவர் மேடையில் பேசி முடித்துக் கீழே இறங்கினார். அப்போது ஒரு நிருபர் கேட்டார்,''நீங்கள் மது குடிப்பது உண்டா?''அரசியல்வாதி கேட்டார்,''இது அழைப்பா,விசாரணையா?''
******
தபால் அலுவலகத்துக்கு கோபத்துடன் ஒருவர் வந்தார்.''எனக்கு அடிக்கடி மிரட்டல் கடிதம் வருகிறது.இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.''என்று கத்தினார்.அங்கிருந்த அதிகாரி,''இதுஉடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.நீங்கள் முழு விபரங்கள் கொடுத்தால் நாங்கள் உங்களுக்கு உதவத் தயார்.இப்போது சொல்லுங்கள்,யாரிடமிருந்து உங்களுக்கு மிரட்டல் கடிதங்கள்  வருகின்றன?''என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''வருமான வரி அலுவலகத்திலிருந்து.''
******
''என் மனைவி தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள்.என்ன  செய்வது என்றே தெரியவில்லை,''என்று நண்பரிடம் அங்கலாய்த்தார் ஒருவர்.நண்பர் சொன்னார்,''அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.என் மனைவியும் அடிக்கடி தனக்குத்தானே பேசிக் கொள்வாள்.அவளுக்கே அது தெரிவதில்லை.என்ன,அவள் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வாள்.''
******
குடிகாரன் ஒருவன் சாக்கடையில் விழுந்து கிடந்தான்.அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் கேட்டார்,''மது செய்த வேலைதானே இது?''குடிகாரன் சொன்னான்,''இல்லை,இது வாழைப்பழத் தோல் செய்த வேலை.''
******

மயங்குகிறாள் ஒரு மாது

1

Posted on : Monday, November 18, 2013 | By : ஜெயராஜன் | In :

கம்ப ராமாயணத்தில் ரசிக்கக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.
அசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.அப்போது அவர் நினைவெல்லாம் ராமன்தான்.ராமனுடைய சிறந்த குணங்கள் ஒவ்வொன்றையும் நினைவு படுத்தி மகிழ்கிறார்,கண்ணீர் சொறிகிறார்.நட்பின் இலக்கணமான ராமனைப் பற்றி நினைக்கும் பாடல் ஒன்று:

''ஆழ நீர்க் கங்கை  அம்பி கடாவிய 
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி
 தோழன் மங்கைகொழுந்தி எனச்சொன்ன
  வாழி நட்பினைஉண்ணி மயங்குவாள்.''

ஆழமான நீரை உடைய கங்கை நதியில் படகு ஓட்டும்ஏழை வேடன் குகன் செய்த உதவிக்கு நன்றி கூறும் ராமன் சொல்கிறார்,''நீ என் தம்பி.என் தம்பி உன் தோழன்.என் மனைவி உன் கொழுந்தி.''ஏழை வேடனிடம் இப்படி ராமன் நட்பு பாராட்டியுள்ளதை சீதை நினைவு கூர்வதாக கம்பன் அழகாக வர்ணித்துள்ளார்.

பலசாலி

0

Posted on : Sunday, November 17, 2013 | By : ஜெயராஜன் | In :

பல் டாக்டரிடம் சென்று முல்லா,''இங்கு பல் பிடுங்குவதற்கு என்ன கட்டணம்?:''என்று கேட்டார்.டாக்டர் சொன்னார்,''சாதாரணமாய் பிடுங்குவதற்கு முன்னூறு ரூபாய் ஆகும்.ஆனால் வலி அதிகம் இருக்கும்.மயக்க மருந்து கொடுத்து பிடுங்கினால் வலி  தெரியாது ஆனால் கட்டணம் ஐநூறு ரூபாய் ஆகும்,''முல்லா சொன்னார், ''பரவாயில்லை, முன்னூறு ரூபாய் கட்டணத்திலேயே பிடுங்கிக் கொள்ளலாம்,''உடனே டாக்டர், ''பரவாயில்லையே, நீங்கள் பலசாலி மட்டுமல்ல,தைரியசாலியும் கூட,''என்றார்.முல்லா சொன்னார், ''எனக்குப் பல்பிடுங்க வேண்டியதில்லை .என்மாமியாருக்குத்தான் பிடுங்க வேண்டியிருக்கிறது.''
******
முல்லா சரியான சோம்பேறி.அலுவலகத்துக்கு தினசரி தாமதமாக வந்து கொண்டிருந்தார். முதலாளி கூப்பிட்டு சொல்லிவிட்டார்,''இனி ஒரு நாள் தாமதமாக வந்தால் கூட உன்னை வேலையில் வைத்துக் கொள்ள மாட்டேன்.''முல்லா அன்றே ஒரு டாக்டரைப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிட்டார்.
முல்லா அரை மணி நேரம் முன்னாலேயே அன்று வருவதைப் பார்த்த முதலாளி கேட்டார் ,''பரவாயில்லை,இதே மாதிரி தினமும் வர வேண்டும்.அது சரி,நேற்று நீ எங்கே போயிருந்தாய்?''
******
முல்லா தனது குடும்பத்தினருடன் ஒரு மலைப் பகுதிக்கு உல்லாசப் பயணம் சென்றார்.அவரது மனைவி இயற்கை அழகில் ஒன்றி விட்டார்.ஒவ்வொரு மரம் செடி கொடியையும் ரசித்துக் கொண்டே வந்த அவர் ஒரு முகட்டின் ஓரத்திற்கு வந்து விட்டார்.சற்றே நகர்ந்தாலும் கீழே விழ வேண்டியது தான்.அதை அவர் கவனிக்கவில்லை.அப்போது முல்லாவின் பையன் அவரிடம் வந்து,''அம்மா,அப்பா, ஒன்று,நீ பின் பக்கமாக உடனே இரண்டு அடி எடுத்து வைக்க வேண்டும்,அல்லது கையில் வைத்திருக்கும் தின் பண்டங்களை என்னிடம் கொடுத்து விட வேண்டும்,என்று சொல்லச்சொன்னார்.''என்றான்.
******

என்ன கவலை?

1

Posted on : Saturday, November 16, 2013 | By : ஜெயராஜன் | In :

முடி திருத்துபவர் முல்லாவிடம் சொன்னார்,''உங்களுக்கு முடி நிறைய உதிர்கிறதே!''முல்லா சொன்னார்,''எனக்கு ரொம்பக் கவலை.அதனால்தான் முடி உதிர்கிறது.''முடி திருத்துபவர் கேட்டார்,''அப்படி உங்களுக்கு என்ன தான் கவலை?''முல்லா சொன்னார்,''முடி உதிர்கிறதே என்ற கவலைதான்.''
******
நண்பர் முல்லாவிடம் சொன்னார்,''அன்றைக்கு நடந்த கூட்டத்திற்கு மனைவியுடன் வந்திருந்தீர்களே!பாவம்,உங்கள் மனைவிக்குதான் அன்று உடல் நிலை சரியில்லைபோல.தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார்களே!''முல்லா சொன்னார்,''அது வேறொன்றுமில்லை.அன்றுதான் அவள் புதிய நகை ஒன்று அணிந்திருந்தாள்.''
******
முல்லா,கடைவீதியில் வாங்க வேண்டியதை எல்லாம் முடித்துவிட்டு காரை எடுத்தார்.அப்போது கார் முன்னால்  நின்ற வண்டி மீது இடித்தது.அவசரமாக தனது காரை பின்புறம் நகர்த்தினார்.அப்போது கார் பின்னால் நின்று கொண்டிருந்த காரில் இடித்தது.ஒரு வழியாக சமாளித்து காரை சாலையில் திருப்பும்போது வந்து கொண்டிருந்த வண்டியில் இடித்தார்.உடனே போலீஸ் அந்த இடத்திற்கு வந்துவிட்டார்.''உங்கள் லைசென்சைக் காட்டுங்கள்''என்று அவர் கேட்க முல்லா சொன்னார்,''ஏன் சார்,எனக்கு எவனாவது லைசென்ஸ் தருவானா?''
******

பார்வைகள் ஐந்து.

3

Posted on : Friday, November 15, 2013 | By : ஜெயராஜன் | In :

அர்ஜுனன் மனதை மாற்ற கண்ணன் ஐந்து பார்வைகளை விளக்குகிறார்.
வேதாந்தப்பார்வை :ஆன்மா ஒன்றுதான் அழிக்க  முடியாதது.அழிவது உடல்தான்.
சுயதர்மப் பாதை:சுய தர்மத்திலிருந்து பின் வாங்கக் கூடாது. குறை யிருப்பினும்   கை விடக்கூடாது.நெருப்புக்குப் புகை இருப்பதுபோல எச்செயலிலும் குறை இருக்கத்தான் செய்கிறது.உனக்கென விதிக்கப்பட்ட கடமையை செய்யும் போது அதில் எந்தப் பாவமும் ஏற்படுவதில்லை.
கர்மயோகப் பார்வை:கடமையைக் கடமைக்காகச் செய்ய வேண்டும்.விருப்பு வெறுப்பு கூடாது.கடமையை செய்.வரப்போகும் பலன் உன்னை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது.பலனை விரும்பியோ,வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை எந்த விதத்திலாவது கட்டுப் படுத்தி விடும்.செயலில் ஆசை ,கோபம்,விரக்தி போன்ற உணர்வுகள் சேரக் கூடாது.உனது செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்து விடு.இறைவனை எண்ணி,அகங்காரம் இன்றி ,பலன் கருதாது செயல்படு.
பக்திப்பார்வை:எல்லாவற்றையும் செயலாக்குவது கடவுள்.அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது.செயலுக்கு நீ ஒரு கருவிதான்.உன் செயல்களை இறைவனுக்காக செய்.எப்போதும் கடவுள் உன்னிடம் இருப்பார்.
தத்துவப்பார்வை:செயல்படுவது ஒருவனுடைய சுபாவம்தான்.எந்தக் காரியத்தை செய்ய மாட்டேன் என்று பின் வாங்குகிறாயோ ,அதையே செய்யும்படி உன் சுபாவம் கட்டுப் படுத்தும்.
இறுதியாக கண்ணன் சரணாகதி பற்றி சொல்கிறான்:
உன் சுமையை என் மேல் இறக்கி வை.தருமம் அதர்மம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீ அல்ல.என்னையே புகலிடமாகக் கொண்டு உன் கடமையை செய்.

ஜிப்ரிஷ்

0

Posted on : Thursday, November 14, 2013 | By : ஜெயராஜன் | In :

சூபி ஞானி ஜப்பார் தன்னிடம் வருபவர்களையெல்லாம் உட்கார்,ஆரம்பி என்று சொல்வார்.அவர் எந்த போதனையும் செய்வதில்லை.வருபவர்கள்தான்  பேச வேண்டும்.அவர்கள் மனதில் உள்ளதெல்லாம் பேசி வெளியேற்றி விட வேண்டும்.சில சமயம் அவர்கூட கண்டபடி உளறுவார்.அதுபோல வருபவரையும் உளறச்சொல்வார்.மனிதர்களால் எவ்வளவு நேரம்தான் உளற முடியும்?எவ்வளவு நேரம்தான் பேச முடியும்?எல்லாம் கொட்டியபின் மனம் வெறுமையாகி விடும்.அவர்கள் மௌனமாக இருக்க ஆரம்பித்து விடுவார்கள். மனம் காலியான பின் ஒரு சூன்யம் தோன்றும்.அந்த வெறுமையில் தோன்றுவதுதான் விழிப்புணர்வு எனும் சுடர்.உண்மையில் அது அங்கேதான் இருந்தது.அதை மூடியிருந்த சிந்தனைகளையும், எண்ணங்களையும், இரைச்சல்களையும் எடுத்தெரிந்த பின்னர் அது தானே வெளிப்படுகிறது. ஜப்பார் கொண்டு வந்த இந்த முறை பிரபலமடைந்து,இன்று அவர் பெயரால் ஜிப்ரிஷ் என்று அழைக்கப் படுகிறது.
உடலுக்கும் இதே  தன்மை உண்டு.எண்ணற்ற இறுக்கங்கள் உண்டு.நிர்ப்பந்தம் இல்லாமல் அது விரும்பும் அசைவுகளைச் செய்ய விடுங்கள். ஆடலாம், பாடலாம்,விழுந்து புரளலாம்,எதுவாயினும் சரி,செய்யட்டும்.வலிந்து திணிக்கக் கூடாது.அவ்வளவே.உடல் விரும்பிய அசைவுகளை செய்ய விட்டால் ஏற்படும் இறுக்கம் நீங்கிய தளர்வு நிலை இருக்கிறதே,அது ஒரு பரம சுகமான நிலை.

எட்டுத்தொகை

0

Posted on : Wednesday, November 13, 2013 | By : ஜெயராஜன் | In :

சங்க கால நூல்களில் முக்கியமானது.எட்டுத்தொகை.பல்வேறு சமயங்களில் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்கள்அறிஞர்களின் உதவியால் தொகுக்கப் பட்டவை.இந்நூல்கள் அகத்தைப் பற்றியும்,புறத்தைப் பற்றியும் கூறுவனவாக உள்ளன.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 
ஒத்த பதிற்றுப் பத்தோங்கு பரிபாடல் 
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென் 
றித்திறந்த எட்டுத்தொகை.

நற்றிணை:அகப்பொருளில் திணை வகையை சேர்ந்த நூல்.175 புலவர்கள் பாடிய  400 பாக்கள் உள்ளன.உவமை அழகுக்கு இந்நூல் சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்நூலைத் தொகுப்பிக்க உதவி செய்தது,பன்னாடு தந்த  பாண்டியன் மாறன் வழுதி என்பவராகும்.
குறுந்தொகை:இதனைத் தொகுத்தவர் பெயர் பூரிக்கோ.டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் உரை எழுதியுள்ளார்.இந்நூலின் 400  பாடல்கள் 206 புலவர்களால் பாடப்பட்டவை.'கொங்குதேர் வாழ்க்கை'என்று துவங்கும் பாடல் இதில் தான் உள்ளது.
ஐங்குறுநூறு:இந்நூல் அகப்பொருள் தழுவியது.பொருட்களின் இயற்கையையும்,தமிழின்  இன்சுவையையும் இதன் கண் அறியலாம்.இதனைத் தொகுத்துத் தந்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார்.சில பாடல்கள் இந்நூலில் தற்போது காணப்படவில்லை.
பதிற்றுப்பத்து.சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் பத்துப் பாடல்கள் பாடப் பட்டிருப்பதால் இப்பெயர்.இந்நூல் புறப்பொருள் பிரிவை சேர்ந்தது.
பரிபாடல்.பரிபாடல் என்பது பரிந்து வருவது.இது இசைப்பாட்டு என்றும் கூறப்பட்டது.இன்பத்தைப் பொருளாகக் கொண்டது.மொத்தப் பாடல்கள் 70 இந்நூலில் காணப்படும் பாடல்களைப் பாடியவர்கள் 13 பேர்.இந்நூலுக்கு உரை கண்டவர் பரிமேல் அழகர்.மதுரையின் மாண்பை விளக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கலித்தொகை:இது அகப்பொருள் தழுவிய நூல்.இதனைத் தொகுத்தவர் அறிஞர் நல்லந்துவனார்.
அகநானூறு:இந்நூல் நெடுந்தொகை என்றும் கூறப்படும்.பாடல்களை 145 பேர் எழுதியுள்ளனர்.இந்நூலைத் தொகுக்க உதவியது உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன்.தொகுத்தது மதுரை உப்பிரிகுடிகிழார் உருத்திரசன்மர் ஆவார்.இயற்கை வர்ணனைகள் மிகுதியாக உள்ளன.
புறநானூறு.:இந்நூலில் அமைந்த உவமைகள் சுவையும் பொருத்தமும் உடையன.இது தமிழ்நாடு,தமிழ் மக்களின் பண்டைய நிலை,சிறந்த நாகரீகம்முதலானவற்றை உணர்த்தும் தலை சிறந்த நூல்.

இயல்பை ஏற்றுக்கொள்.

1

Posted on : Tuesday, November 12, 2013 | By : ஜெயராஜன் | In :

வாழ்க்கையே ஒரு நதியின் பிரவாகம் போன்றது.மலையில் பிறந்த நதி கடலில் சென்று முடிவது போல கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிகிறது.இடையிடையே எத்தனையோ மேடு பள்ளங்கள், ஆரவாரங்கள், மோதல்கள்.அத்தனை ரணங்களையும் போராட்டங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்.வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக்கொள். எதையும்  திணிக்காதே.எதையும் மறுக்காதே.இயல்பை இயல்பு என உணர்ந்து அந்த இயல்போடு ஏற்றுக் கொள்.
******
குறிப்பிட்ட ஒரு பொருளால் ஒருவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் அந்தப் பொருள் அவனை விட்டு நீங்கி விட்டால் அந்த மகிழ்ச்சியும் அவனை விட்டுப் போய்விடும்.குறிப்பிட்ட செயலால், நோக்கத்தால்,ஒருவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் அந்த செயல் முடிவடைந்த பின்னர் அந்த மகிழ்ச்சி அவனிடம் காணாமல் போய்விடும்.இங்கே மகிழ்ச்சி வெளியிலிருந்து  வருவதல்ல.அது உள்ளிருந்து பொங்கிப் பெருகுவது. எப்போதும் பரவச நிலையில் இருப்பது.
******
தனிமையைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன்,
ஏனெனில் தனிமை என்னைக்  கண்டு அஞ்சியதில்லை.
தனிமையைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன்.
ஏனெனில் என்னைப்போல் அதுவும் தனியானது.
தனிமையை நான் விரும்புகிறேன்.
ஏனெனில் அது என்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறது.
******
                                                   சூபி தத்துவங்கள்.

கடவுளிடம் ஒரு பேட்டி.

0

Posted on : Monday, November 11, 2013 | By : ஜெயராஜன் | In :

கடவுளைப் பேட்டி காண்பது போல கனவொன்று கண்டேன்.''ஓ.என்னைப் 
பேட்டி காண வேண்டுமா?''என்று புன்னகையுடன் கடவுள் கேட்டார்.'உனக்கு நேரம் ஒதுக்க முடியுமானால் ...''என்று இழுத்தேன்.''காலமே நான் தானே?.சரி,என்ன கேள்விகள்  கேட்க விரும்புகிறாய்?''என்று கடவுள் என்னைத் தட்டிக் கொடுத்துக் கேட்டார்.நான் கேட்டேன்,''மனித குலம் எந்த வகையிலாவது உன்னை ஆச்சரியப் படுத்துகிறதா?''கடவுள் சொல்ல ஆரம்பித்தார்,''மனிதன் குழந்தையாய் இருக்கும்போது விரைவில் பெரிய மனிதன் ஆக வேண்டும் என்று விரும்புகிறான்.பெரியவன் ஆகிய பின் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா,என்று ஏங்குகிறான்.அடுத்து,உடல் நலம் கெட்டாலும் பரவாயில்லை என்று ஓய்வின்றிப் பணம் சேர்க்கிறான்.பின்னர் நோய் வந்து பணத்தை முழுவதும் உடல் நலத்திற்காக செலவழிக்கிறான்.இதை விட முக்கியமானது ஒன்று உள்ளது.எதிர்காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு நிகழ்  காலத்தை மறந்து விடுகிறான்.ஆனால் அவன் நிகழ்  காலத்திலும் வாழ்வதில்லை.எதிர் காலத்திலும் வாழ்வதில்லை.
தனக்கு மரணமே கிடையாது என்ற எண்ணத்தில் வாழ்கிறான்.ஆனால் எப்போதுமே வாழாமல் இறக்கிறான்.''பின் சிறிது நேரம் எங்களுக்குள் மௌனம் நிலவியது.
மீண்டும் நான் கேட்டேன்,''குழந்தைகள் வாழ்க்கையில் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாய்?''கடவுள் திருவாய் மலர்ந்து,
''யாரும் நம்மீது அன்பு செலுத்த மாட்டார்கள்.,நாம்தான் பிறர் அன்பு செலுத்துமாறு நடந்து கொள்ள வேண்டும்.நம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதில்லை.சில நொடிகளில் பிறரைக் காயப் படுத்தி விடலாம்.ஆனால் அதை சரி செய்ய பல ஆண்டுகள்  ஆகும்.இரண்டு மனிதர்கள் ஒரே பொருளை வெவ்வேறு கோணத்தில் பார்க்க முடியும்.இவற்றையெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே மனதில் படும்படி சொல்லி வையுங்கள்.''
''நன்றி கடவுளே,வேறேதேனும் குழந்தைகளுக்கு சொல்ல விரும்புகிறீர்களா?''என்று நான் கேட்க கடவுள் புன்னகையுடன் சொன்னார்,''நான் எப்போதும் இங்கு இருக்கிறேன்...''

புனித நூல் எது?

1

Posted on : Sunday, November 10, 2013 | By : ஜெயராஜன் | In :

இதுவரை இருந்தமனிதன் நிறைய வேதனைப்பட்டு விட்டான்.அவன் அவலத்தில் வாழ பழக்கப் பட்டிருக்கிறான்.துன்புறுவதிலும் சுய சித்திரவதையிலும் அவன் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறான்.அவனுக்கு சத்தியங்கள் வழங்கப்பட்டன.சாவுக்குப் பிறகு மகத்தான பரிசுகள் காத்திருப்பதாகக் கூறப்பட்டது.எத்தனை வேதனை அவன் படுகிறானோ,எந்த அளவுக்கு அவன் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்கிறானோ அவ்வளவு தூரம் பரிசுகள் அதிகரிக்குமாம்.இது சிலரின் சுயநலன்களுக்கு சாதகமாக இருந்தது.துன்புறும் மனிதனை அடிமைப் படுத்துவது சுலபம். அறியாத வருங்காலத்துக்காக தனது  இன்றைய வாழ்வைத் தியாகம் செய்ய ஒப்புக் கொண்டவன்,தன்னை அடிமையாக்கிக் கொள்ளும்படி அறிவித்து விட்டவன் அவன்..காலம் காலமாக அவன்  வெறும் நம்பிக்கைகளில் வாழ்ந்து விட்டான்.கற்பனைகளிலும்,கனவுகளிலும் வாழ்ந்து விட்டானே தவிர,யதார்த்தத்தை அவன் கண்டதில்லை.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு கட்டுப் படுத்தப்பட்ட கும்பலில்தான் பிறக்கிறது.ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,அண்டை அயலார் அனைவரும் கட்டுப் பட்டவர்களே.ஒரு சின்னக் குழந்தை ஆதரவற்றது.அதற்கு அந்தக் கும்பலுடன் ஒத்துப் போவதைத் தவிர வேறு வழி இல்லை.
பழையது சாகட்டும்;புதியது பிறக்கட்டும்!
புனித நூல் உன் வாழ்க்கைதான்.அதை உன்னையன்றி வேறு யாரும் எழுத முடியாது.நீ வெற்றுத்தாளுடைய புத்தகத்துடன் வந்தாய்.அதில் நீ என்ன எழுதுகிறாய் என்பதுதான் முக்கியம்.பிறப்பு மட்டும் வாழ்வல்ல.அது வாழ்வை உருவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகும்.நீங்கள் நேசிக்கக் கூடிய அளவு ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்வது அவசியம்.

பிறரைக் கவர்வது எப்படி?

1

Posted on : Saturday, November 09, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒருவரை நாம் பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்று எடை போட ஆரம்பித்து விடுகிறோம்.இதேபோல மற்றவர்களும் நம்மை எடை போடுவார்களே!அவர்களது மனதில் இடம் பிடிக்கிற மாதிரி நாம் நடந்து கொள்ள வேண்டாமா?அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன?
இனிமையான குணத்தை விரும்பாதவர் யாருமில்லை.புதிதாக ஒருவரை சந்திக்கும்போது உங்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் வெளிப் படுத்துங்கள்.அளவாகப் பேசுங்கள்;அழகாகப் பேசுங்கள்;இயல்பாகப் பேசுங்கள்;இனிமையாகப் பேசுங்கள்;சிரிக்க சிரிக்கப் பேசுங்கள். தேவைப்படும் போது ஆழமாகப் பேசுங்கள்.உங்களது பேச்சும் செயலும் அடுத்தவர் மனதில் அட்டை போல ஒட்டிக் கொள்ளும்.
எப்போதும் எந்த சூழ்  நிலையிலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். போலித் தனம் வேண்டாம்.நீங்கள் செயற்கையாக நடந்து கொள்ள முயற்சிப்பது ஆபத்து.ஏனெனில் உங்கள் செயற்கை சாயம் அடுத்தவர்க்கு அப்பட்டமாகத் தெரியும்.
உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய உறுப்பு கண் தான்.மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டோ,தரையைப் பார்த்துக் கொண்டோ அடுத்தவரிடம் பேசுவது உங்கள் தாழ்வு மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.அடுத்தவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசினால் உங்கள்  தன்னம்பிக்கை பளிச்சிடும்.
பலர் இருக்கும் இடத்தில்,சுற்றியிருப்பவர்களின் எண்ண  ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ.எப்படி எதிர் பார்க்கிறார்களோ அதற்கேற்றபடி உங்கள் கருத்துக்களை சொல்லத் தொடங்கினால் தூண்டில் போல மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் கவ்வி இழுக்கப்படும்.
முக மலர்ச்சியும்,கலகலப்பும் உங்களை உயர்த்திக் காட்டுகிற உன்னதமான குணங்கள்.வருத்தத்தோடு உங்களிடம் வருபவர்களின் கவனத்தை திசை திருப்பினால் அவரும் கவலையை மறந்து கலகலப்பாகி விடுவார்.
இந்த உத்திகளைப் பயன்படுத்தினால்  பிறரைக் கவர்வதில் சிறந்த மனிதர் நீங்கள்தான்!

பொன்மொழிகள்-45

1

Posted on : Friday, November 08, 2013 | By : ஜெயராஜன் | In :

விசிறியை அசைக்காமல் காற்று வராது.
உழைப்பில்லாமல் உயர்வு வராது.
******
புத்திசாலித்தனமான குழந்தை
மகிழ்ச்சியான தந்தையை உருவாக்குகிறான்.
******
வெற்றி நமது தவறுகளை மூடி மறைத்துவிடும்.
******
கடமை உங்கள் வாசல்கதவைத்தட்டும் போது உடனே உள்ளே அழையுங்கள்.
காக்க வைத்தீர்களோ,அது புறப்பட்டுப்போய் இன்னும் ஏழு கடமைகளை அழைத்து வந்துவிடும்.
******
பணம் வரும்போது இரண்டு கால்களுடன் வரும்.
போகும்போது பல கால்களுடன் போகும்.
******
நீ நிமிர்ந்து நிற்கும்வரை உன் நிழல் கோணலாய் இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
******
சந்தேகம்,நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.
அதன் ஒரு பாகமே.
******
இரக்கத்தின் பனித்துளி கண்ணீர்.
******
துளசிக்கு வாசமும்,முள்ளுக்குக்  கூர்மையும்
முளைக்கிறபோதே தெரியும்.
******
அசுத்தம்,வறுமை,துன்பம் எங்கு இருக்கிறதோ,அங்கு இசை இருக்க முடியாது.
******
கிணறு வற்றியபின் தான் தண்ணீரின் அருமை நமக்குத் தெரிகிறது.
******
கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு.
******
தங்கத் திறவுகோல் எல்லா பூட்டுக்களுக்கும் சேரும்.
******

தொழிலில் புதுமை.

0

Posted on : Thursday, November 07, 2013 | By : ஜெயராஜன் | In :

பெண்களைக் கடத்திக் கொண்டு போய் ,பின் அவர்களது கணவர்களுக்குக் கடிதம் எழுதி மிரட்டி பணம் பெற்று விடுவிப்பது அவன் தொழில்.ஒரே மாதிரியாக அத்தொழிலை செய்தது அவனுக்கு போரடித்தது.அனைத்துத் துறையிலும் புதுமை விரும்புவோர் அமெரிக்கா செல்வதாக அறிந்த அவனும் அமெரிக்கா பயணமானான்.அங்கு இவன் தொழிலே  செய்பவர்களைக் கண்டு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்ற விபரம் கேட்டான்.அவர்கள், பெண்ணைக் கடத்திக் கொண்டு வைத்துக் கொண்டு அவர்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதி வரவழைத்து பணம் பறிப்பதாகக்  கூறினர். நம்மாளுக்கோ ஏமாற்றம்.''இதைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். இதைத் தெரிந்து கொள்ளவா இவ்வளவு தூரம் வந்தேன்?''என்று அங்கலாய்த்தான்.அமெரிக்கனுக்கும் மானப் பிரச்சினை.தான் தொழிலில் உயர்வானவன் என்று காட்ட வேண்டுமே!''சரி,கடிதத்தில் என்ன எழுதுவாய்?''என்று கேட்டனர்.நம்மாளும் சொன்னான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்ச ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால் உன் மனைவி உனக்கு. இல்லையெனில் அவளைப் பிணமாகத்தான் பார்ப்பாய் என்று எழுதுவேன்.''அமெரிக்கன் சொன்னான்,''அங்குதான் உன் பழமைத்தன்மை வெளிப்படுகிறது.நாங்களெல்லாம் அப்படி எழுத மாட்டோம்.''நம்மவனுக்கு இப்போது சுவாரசியம் வந்து விட்டது .அமெரிக்கன் தொடர்ந்தான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்சம் டாலர் கொண்டு வந்து கொடுக்கா விட்டால் நாங்கள் உன் மனைவியை உன்னிடமே அனுப்பிவிடுவோம் என்று எழுதுவோம்.மறுநாளே அந்த ஆட்கள் அலறி அடித்துக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள்.''

துன்பம் நிரந்தரமாய் நீங்க...

2

Posted on : Wednesday, November 06, 2013 | By : ஜெயராஜன் | In :

துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.
உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து  வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக்  கவனியுங்கள்.உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை  போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.
துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி,அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.இப்போது உங்கள் வலி,துயரம்,கவலை,இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்.