உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-51

1

Posted on : Thursday, April 24, 2014 | By : ஜெயராஜன் | In :

சொர்க்கம் மிகச்சிறியதாகத்தான் இருக்க வேண்டும்.ஏனெனில் அதை என் தாயின் கண்களில் காண்கிறேன்.
******
நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைத்த பரிசு.
நல்ல பெற்றோர்கள் பரிசாகக் கிடைத்த கடவுள்.
******
உனக்கு உதவ உன் மூளையைப் பயன்படுத்து.
மற்றவர்களுக்கு உதவ உன் இதயத்தைப் பயன்படுத்து.
******
நாம் பெண்களைப் பார்ப்பதே இல்லை.அவர்களை அவர்களின் அழகால் மூடி வைத்திருக்கிறோம்.
******
யாரேனும் பேசிக் கொண்டே இருந்தால் அவர்கள் தங்களது மனதில் இருப்பதை மறைக்கவே முயற்சி செய்கிறார்கள் என்று பொருள்.
******
மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கு அர்த்தமில்லாதது.
தகுதியும் உழைப்பும் உடையவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
வெற்றி கிடைக்காவிடில் அதற்கு அவரவர் சொந்தப் பிழையே காரணம்.
******
அடிமைகள் பிறர் சுதந்திரத்திற்காகப் போராடுவதில்லை.
******
மனப்பான்மைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது. நாம் எந்த செயலை செய்கிறோம் என்பதைவிட என்ன மனப்பான்மையுடன் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
******
நிலைமையை சாதகமாக்கிக் கொள்ளத் தெரிந்தால் வெற்றி எண்ணும் சிகரத்தை அடைய கடின உழைப்பு தேவையில்லை.
******
உண்மையை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாலோ,ஒப்புக் கொள்ள மறுப்பதாலோ,எந்த நன்மையையும் கிடையாது.சோகமும் விரக்தியும் உங்களை சுற்றி வளைக்கும்.நம்மால் மாற்ற முடியாத எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும்.
******
வெற்றியாளர்கள் நாற்காலிகளில் அமர்ந்து ஓய்வெடுப்பதில்லை.
ஏதாவது வேலைசெய்வதில்தான் ஓய்வினை அடைகிறார்கள்.
******

மீட்சி

2

Posted on : Wednesday, April 23, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர்.ஒருவன் வருத்தத்தோடு கேட்டான், ''நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.என் மனம்   அதை நினைத்து தினமும் துடிக்கிறது.நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?''அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,''நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை.சின்னச்  சின்னப்  பொய்கள்,சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன்.தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?''ஞானி சிரித்தார்.முதல் ஆளிடம்,''நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா,''என்றார்.இரண்டாமவனிடம்,''நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா.''என்றார்.இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான்.அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான.இப்போது ஞானி சொன்னார், ''சரி,இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,'' என்றார். முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான்.இரண்டாமவன் தயக்கத்துடன்,''இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?''என்று கேட்டான்.ஞானி சொன்னார்,''முடியாதல்லவா,அவன் பெரிய தவறு செய்தான்.அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம்.நீ சின்னச்  சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன்.யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது.அவனுக்கு மீட்சி சுலபம்.உனக்குத்தான் மீட்சி என்பது மிகக் கடினம்.''

வாத்தும் குதிரையும்.

1

Posted on : Tuesday, April 22, 2014 | By : ஜெயராஜன் | In :

வாத்து ஒன்று குதிரையைப் பார்த்து சொன்னது,''நான் எல்லா வகையிலும் உன்னைக் காட்டிலும் சிறப்புடையவன்.உன்னைப்போல தரையில் என்னால் நடக்க முடியும்.எனக்கு அழகான இறக்கைகள் இருக்கன்றன.அது கொண்டு வானில் என்னால் பார்க்க முடியும்.என்னால் ஆற்றில் நீந்திக் குளிக்க முடியும்.என்னிடம் ஒரு பறவை,ஒரு மீன்,ஒரு மிருகம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன.''
குதிரை சொன்னது,''உன்னிடம் மூன்று வித குணாதிசயங்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் இந்த மூன்றில் எதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக நீ இல்லை.உன்னால் ஒரு கிளி போலப் பறக்க முடியாது.சிறிது தூரம்தான் உன்னால் பறக்க முடியும்.உன்னால் நீரில் நீந்த முடியும்.ஆனால் உன்னால் மீன் போல நீரிலேயே வாழ முடியாது.உன் சப்பை காலுடனும் நீண்ட கழுத்துடனும் நடக்கும்போது எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?எனக்கு நடக்க மட்டும் தான் தெரியும் என்று ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் என் கம்பீரத்தைப் பார்த்து எத்தனை பேர் பரவசப் படுகிறார்கள்!என் அங்கங்கள் எவ்வளவு கன  கச்சிதமாக அழகாக அமைந்துள்ளன!என்னுடைய வலிமையை நீ அறிவாயா?என் வேகம்பற்றி உனக்கு என்ன தெரியும்?மூன்று விதமாக செயல்படும் உன்னைக் காட்டிலும் ஒரே வகையில் செயல்படும் நான் சிறப்புப் பெற்றிருக்கிறேன்.அதில் எனக்கு மகிழ்ச்சியே!''

விழுந்த பல்

2

Posted on : Monday, April 21, 2014 | By : ஜெயராஜன் | In :

விழுந்து போன பல்லைக் கூட
விழுந்து கும்பிட வேண்டுமென்றால்,
பல் புத்தனுடையதாக இருக்க வேண்டும்.
******
நேற்று என்பது வெட்டி எறிந்த நகம்,
நாளை என்பது வெளுக்கப் போகிற கறுப்பு முடி.
******
ஓடுகிற வரை நீ நதி.
நின்றால் குட்டை!
******
வெந்த சோறே மனிதனுக்கு செறிப்பதில்லை.
குருவியின் குடல்,நெல்லைக் கூட அரைத்து
நீராக்கி விடுகிறது.
******
மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்காக
நீ கவலைப்பட்டால்,
தாயக்கட்டைகளே,
தாண்ட முடியாத மலைகளாகிவிடும்.
உனது அபிப்பிராயங்களுக்காக
மற்றவர்கள் கவலைப்பட்டால்
நிலவே உனக்கு நெற்றிப் போட்டாகும்.
******
உப்பு,செத்தவற்றைப் பாதுகாப்பதற்காக
உபயோகப்படுத்தப்படுகிறது.
அதை உயிரோடிருப்பவர்கள்
சேர்க்கிறோமே ஏன்?
******
பத்துமுறை கீழே விழுந்தவனைப்
பூமி முத்தமிட்டுச் சொன்னது ''நீ
ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா?''என்று.
******
குழந்தைகளை அடிகிறவர்கள்
தண்டனைக்குத் தப்பி விடுகிற கொலைகாரர்கள்.
******
மிருகங்கள் குழந்தைகளை அடிப்பதை
நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
நீதான் கோழி மிதித்து
குஞ்சு சாவதில்லை என்று
கோழிக்கே சொன்னவன்.
******
கோவில்கள் அதிகமாகி விட்டால்
எங்கே குடியிருப்பது என்ற சங்கடம்
இறைவனுக்கே வந்துவிடும்.
ஆகவேதான் பல இடங்களில்
ஆலயங்கள் இருக்கின்றன.
ஆண்டவன் மாத்திரம் இல்லை.
******
              ---வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் எழுதிய ''எல்லா ராத்திரிகளும் விடிகின்றன''என்ற நூலிலிருந்து.



பணத்தின் கவர்ச்சி.

1

Posted on : Saturday, April 19, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.நன்னெறியைப் பற்றியும்,அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.ஒரு மனிதன் நிகழ்  காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.பணம் என்பது எதிர்காலம்.எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.அதிகாரத்தின் அடையாளம். அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது. ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.அது பணமாக இருக்கலாம்;அதிகாரமாக இருக்கலாம்; தன்  மதிப்பாக இருக்கலாம்;மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம்; நல்ல குண நலன்களாக இருக்கலாம்.இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை.இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள்.அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள்.அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார்.எதிர்காலத்தை விட்டுவிடு.அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்.

பெயர் என்ன?

0

Posted on : Friday, April 18, 2014 | By : ஜெயராஜன் | In :

தேர்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது.அதில் பல பறவைகளின் கால்களின் படங்களைப் போட்டு பறவையின் பெயர் என்ன என்று கேட்டிருந்தனர்.ஒரு மாணவனுக்குஒரே குழப்பம். எல்லாம் ஒரே மாதிரி தெரிந்தது .அவனால் எந்தக் கால் எந்தப் பறவைக்கு உரியது என்றுகண்டு பிடிக்கவே முடியவில்லை. அவனுக்குக் கோபம் வந்தது.எழுந்தான்.''சே!இதுபோல மோசமான கேள்வித்தாளை நான் பார்த்ததே இல்லை,''என்று சொல்லிக் கொண்டே கேள்வித்தாள்,விடைத்தாள் அனைத்தையும் தூக்கி எறிந்தான்.அங்கிருந்த ஆசிரியருக்கு இவன் ஏன் இப்படி  செய்கிறான் என்று புரியவில்லை. மெதுவாக,''தம்பி,உன் பெயர் என்ன?''என்று கேட்டார்.உடனே அவன் கோபம் சற்றும் குறையாது தனது பேண்டின் கால் பகுதியை மேலே தூக்கிக் காண்பித்து,''நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,''என்றான்.
******
பாட்டி சொன்னாள்,''தம்பி,உனக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்திருக்கிறான். அவன் அப்படியே உன் அப்பனை உரிச்சு வைச்சது போல இருக்கிறான்,'' சிறுவன் குதூகலத்துடன் கேட்டான்,''அப்படியா?அவனுக்கு இப்போதே மீசையெல்லாம் இருக்கா?''
******

கணவன் தேவை

2

Posted on : Thursday, April 17, 2014 | By : ஜெயராஜன் | In :

கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக் கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக்  கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும் கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும்  இடத்தில் ஒரு பலகையில், ''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண் உள்ளே செல்லாது இரண்டாம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பதோடு குழந்தைகளின் மீது பாசமாக இருப்பவர்கள்.''என்று இருந்தது.இளம்பெண் அங்கு உள்ளே செல்லாது அடுத்த தளத்துக்கு விரைந்தாள். அங்கு, ''இங்குள்ளவர்கள்,நல்ல வேலையில் இருக்கிறார்கள்..குழந்தைகளின் மீது அன்பு காட்டுபவர்கள்.மேலும் பார்க்க மிக அழகாக இருப்பார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.ஆர்வமுடன் அப்பெண் நான்காம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பவர்கள். குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர்கள். அழகானவர்கள். மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்பவர்கள்.''என்று இருந்தது.இங்கும் உள்ளே செல்லாது அடுத்த தளத்திற்கு அப்பெண் சென்றாள்.அங்கு,'' வணக்கம்,இங்கு யாருமில்லை.நீங்கள் இத்தளத்திற்கு வருகை தந்த 87,65,432,வது நபர்.பெண்கள் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்,என்று உறுதிப்படுத்தியமைக்கு நன்றி.நீங்கள் வெளியே செல்லலாம்.''என்றிருந்தது.

காரிருள்

2

Posted on : Wednesday, April 16, 2014 | By : ஜெயராஜன் | In :

குரு சீடர்களைப் பார்த்துக் கேட்டார்,''இரவு முடிந்து பொழுது புலர்கிறது.அந்த நேரத்தில் எந்த நொடியில் பொழுது புலர்ந்து விட்டது என்பதை அறிவாய்?'' ஒரு சீடன் சொன்னான்,''தொலைவில் நிற்கும் ஒரு மிருகத்தைப் பார்த்து அது குதிரையா,கழுதையா என்று அறிய முடியும்போது விடிந்து விட்டது என்று பொருள்.''குரு தவறான பதில் என்றார்.இன்னொரு சீடன் சொன்னான், ''இங்கிருந்தே தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தை ஆல  மரமா அரச மரமா என்று சொல்ல முடியும் என்றால் விடிந்து விட்டது என்று அர்த்தம்.''அதற்கும் குரு  மறுப்பாகத் தலை அசைத்தார்.பதில் சொல்லத் தெரியாத சீடர்கள் சரியான விடையைக் கூறும்படி வேண்டினர்.குரு சொன்னார்,''எந்த ஒரு மனிதனைக் கண்டாலும் இவன் எனது சகோதரன் என்றும்,எந்த ஒரு பெண்ணைக் கண்டாலும் இவள் என் சகோதரி என்றும்,எப்போது நீ அறிகிறாயோ, அப்போது தான் உண்மையாகப் பொழுது புலர்ந்து உண்மையான வெளிச்சம் உனக்கு ஏற்பட்டது என்று பொருள்.அதுவரை உச்சி வெயில் கூடக் காரிருளே.''

வருங்காலம்

1

Posted on : Tuesday, April 15, 2014 | By : ஜெயராஜன் | In :

உங்கள் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் நிச்சயமாகக் கூற முடியாது.சொல்லவும் கூடாது.வருங்காலம் என்பது ஒரு திறந்த வெளி.இதை அறிந்து கொள்ளும் மனிதனின் முயற்சி நகைப்புக்குரியது.ஆனால் மனிதன் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.,இறந்த காலத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான்.இது ஒருக்காலும் நடக்காது.நீங்கள் எப்போதும் நிகழ்காலத்துக்கு வருவதில்லை.நடந்து முடிந்ததை  நீங்கள் சீர் செய்ய முடியாது.நடக்கக் கூடியதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. வருங்காலத்தை உங்கள் அறிவால்  தீர்மானிக்க முடியாது. வருங்காலத்தைப் பற்றி எதுவும் நிலையில்லை.ஆனால் மனிதன் வருங்காலத்தை முன் கூட்டியே தெரிந்து  கொண்டு அதைத் தனக்கு சாதகமாகச் செய்ய முயலுகிறான்.இது முட்டாள்தனம்.நீங்கள் அதை முன்பே அறிந்து கொண்டால் அது வருங்காலமில்லை..அது இறந்த காலமாகி விடுகிறது.
******
கருமித்தனம்,பொறாமை கொண்ட மனம்,வெறுப்பு இவற்றிற்கு 'பகிர்ந்து கொள்ளுதல்'என்பது என்ன என்று தெரியாது.நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுத்தால் அதில் சில பேரங்கள் மறைந்திருக்கின்றன.நீங்கள் திரும்ப அவர்கள் ஏதேனும் வெகுமதிகள் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.எதையும் பதிலுக்கு எதிர்பாராது இருப்பதே பகிர்ந்து கொள்ளுதலின் அர்த்தமாகும்.இன்னும் சொல்லப் போனால் கொடுப்பவன்தான் நன்றியோடு இருக்க வேண்டும்.
******

சந்தோசமா....

0

Posted on : Friday, April 11, 2014 | By : ஜெயராஜன் | In :

கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கு வானொலியில் பேசஒரு வாய்ப்பு வந்தது.அவரும் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.அப்போது வானொலி இயக்குனர் அவரிடம், அவர் பேசக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு,''இதில் ஒரு வரியை மட்டும் நீங்கள் நீக்க வேண்டியிருக்கும்,''என்றார்.கலைவானரும் விபரம் கேட்க நீக்க வேண்டிய  வரியைக் காட்டினார் இயக்குனர்.என்.எஸ்.கே.வாசித்துப் பார்த்தார்.அதில்,''இந்த வருடத்திலே நீங்க எல்லோரும் சந்தோசமா இருங்க, காமராஜர் சந்தோசமா இருக்காரு!அண்ணா சந்தோசமாக இருக்காரு,''என்று இருந்தது.இயக்குனர் இதில்  அண்ணா பற்றிக் குறிப்பிட்ட வரியை மட்டும் நீக்க வேண்டும் என்று கூறினார்.அதற்கான காரணத்தையும் அவர் சொல்ல மறுத்தார்.உடனே என்.எஸ்.கே.முகத்தை குழந்தைத் தனமாக வைத்துக் கொண்டுசொன்னார்,''ஐயா,வேண்டுமானால் இப்போதே அண்ணா வீட்டுக்குப் போன் பண்ணுங்க.அவர் சந்தோசமா இருக்காரா,இல்லையா என்று கேளுங்க.அவரு சந்தோசமா இல்லாம காய்ச்சலில் படுத்திக் கிடந்தார் என்றால் இந்த வரியை  நான் எடுத்து விடுகிறேன்,''கலைவாணர் சொன்ன விதம் அதிகாரியின் மனதை மாற்றியது.இறுதியாக,''நீங்கள் உங்கள் விருப்பப்படியே  பேசுங்கள்,''என்று சொன்னார்.

காசாலேசா...

2

Posted on : Thursday, April 10, 2014 | By : ஜெயராஜன் | In :

வறுமையில் வாடிய புலவர் ஒருவர் செல்வந்தர் ஒருவரைப்  பாடிப்  பரிசு பெற்று வரலாம் என்று அவர் வீட்டிற்கு சென்றார்.அந்த செல்வந்தரோ எச்சில் கையாலும் காக்காய் ஓட்டாதவர்.புலவர் வந்த காரணத்தை சொன்னதும், செல்வந்தர் ஏளனமாக சிரித்துக் கொண்டே,''பாட்டுக்கு காசு வேண்டுமா?காசா லேசா?''என்றார்.புலவருக்கு கோபம் வந்து விட்டது. அவர், ''காசா லேசா, காசாலேசா''என்று கோபமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து விரைந்து வெளியேறிவிட்டார்.செல்வந்தருக்கும் அங்கிருந்த மற்றோருக்கும் ஒன்றும் புரியவில்லை.செல்வந்தர் காசாலேசா என்றார்.புலவரும் அதையே இரண்டு தடவை சொல்லிச் சென்றதன் பொருள் என்ன என்று புரியாமல் குழம்பினர்.புலவரின் நண்பர்ஒருவர் புலவரின் பின்னாலேயே சென்று அவர் சொன்னதற்கு என்ன பொருள் என்று கேட்டார்.அதற்குப் புலவர்,''அவனுக்கு பாட்டின் மகிமை தெரிவில்லை.காசாலேசா என்கிறான்.அதனால்தான்  நானும் கோபத்துடன் காசாலே சா,காசாலே சா என்றேன்.அதாவது காசாலே செத்துப்போ என்று பொருள்.''என்று விளக்கம் சொன்னார்.இதைக் கேள்விப்பட்ட செல்வந்தர் புலவரின் சாபத்துக்கு அஞ்சி அவரிடம் மன்னிப்புக் கேட்டு பரிசு கொடுத்து அனுப்பினார்.

திகைப்பு

0

Posted on : Wednesday, April 09, 2014 | By : ஜெயராஜன் | In :

''ஆண்டவன் தான் நம் வயிற்றை  நிரப்புகிறான்,''என்று ஆத்திகர் ஒருவர் தனது நாத்திக நண்பரிடம் சொன்னார்.''அதெப்படி,நாம் சாப்பிட்டால்தானே நம் வயிறு நிரம்பும்?''என்று கேட்டநாத்திகர் அதையும் சோதித்துப் பார்த்து விடுவது என்று நினைத்தார்.வீட்டில் மனைவியிடம் நிறைய உணவு தயாரிக்க சொல்லி அதை கட்டிக் கொண்டு ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு தான் கொண்டு வந்த சாப்பாட்டை திறந்து முன்னால்  வைத்துக் கொண்டு அதைத் தொடாமலேயே அமர்ந்திருந்தார்.நாம் சாப்பிடாமல் இருக்கும்போது ஆண்டவன் வந்து நம் வயிற்றை  நிரப்புகிரானா என்று பார்ப்போம் என்று நினைத்தார்.அப்போது இரண்டு முரடர்கள் அந்தப் பக்கம் வந்து இவனைப் பார்த்தார்கள்.அவர்கள் இருவருக்கும் நல்ல பசி.இவன் உணவை எடுத்து சாப்பிடலாம் என்று அவர்கள் யோசித்தபோது ஒருவன் கேட்டான் ,''இவன் எதுவும் பேசாமல் உணவைத் திறந்து வைத்தபடி இருக்கிறான்.ஒரு வேலை உணவில் விஷம் எதுவும் இருக்குமோ?''இருவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு உணவை எடுத்து இருவரும் வம்படியாக நாத்திகன் வாயில் ஊட்டி விட்டனர்.நாத்திகனுக்கு வயிறு நிரம்பி விட்டது.மீதி இருந்த உணவை முரடர் இருவரும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றனர்.நாத்திகன் திகைப்பில் உட்கார்ந்திருந்தான்.அப்போது அவனது ஆத்திக நண்பர் வந்தார்.அவர்,''நான் நடந்ததைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்,ஏன் திகைத்துப் போயிருக்கிறாய்?நான் சொன்னது நடந்து விட்டது என்பதால்தானே?''என்று கேட்டார்.அதற்கு நாத்திகன் சொன்னான், ''இல்லை,என் மனைவி தயாரிக்கும் உணவு எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்காது.இவர்கள் இருவரும் எப்படி இதை சாப்பிட்டார்கள் என்று எண்ணி திகைத்து நிற்கிறேன்,''

அர்த்தமெல்லாம் வேறுதான்.

0

Posted on : Tuesday, April 08, 2014 | By : ஜெயராஜன் | In :

கல்யாணம் ஆன புதிதில்ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடல்:
கணவன்: உங்க அம்மா வீட்டுக்குப் போறியா?
மனைவி:என்னைப் போகச் சொல்கிறாயா?
கணவன்:ஊஹூம்,அதை நினைத்துக்கூடப் பார்க்காதே.
மனைவி:உனக்கு என் மீது உண்மையான அன்பு இருக்கிறதா?
கணவன்:எப்போதும்.
மனைவி:எப்போதாவது என்னை ஏமாற்றியிருக்கிறாயா?
கணவன்:ஊஹூம்,ஏன் இப்படிக் கேட்கிறாய்?
மனைவி:என்னை முத்தம் இடுவாயா?
கணவன்:வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்.
மனைவி:என்னை அடிப்பாயா?
கணவன்:ஊஹூம்,உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?
மனைவி:நான் உன்னை நம்பலாமா?
கணவன்:ஹூம்.
மனைவி:என் அன்புக் கணவனே!

அது சரி,திருமணமானபின் பல ஆண்டுகள் கழித்தபின் அவர்களுக்கிடையே உரையாடல் எப்படி இருக்கும்?அதற்குத் தனியாக ஒன்றும் தயாரிக்க வேண்டாம்.மேலே கண்ட உரையாடலை கீழிருந்து மேலாகப் படியுங்கள் போதும்.

கன்னாபின்னா..

1

Posted on : Monday, April 07, 2014 | By : ஜெயராஜன் | In :

வறுமையில் வாடிய போதும் சம்பாதிக்க வழி தெரியாத ஒருவனை அவன் மனைவி,''சோழ மகாராஜாவைப் பார்த்து பாடல் ஏதேனும் பாடினால் நிறையப் பரிசு கொடுக்கிறாராம்.சும்மாவே உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே, போய்ப் பாடி  பரிசு வாங்கிவா,''என்றாள் .அவனும் வேறு வழியின்றி ஏதோ ஒரு பாட்டை எழுதி அரசவைக்கு சென்றான்.புதிய புலவர் ஒருவர் வந்திருக்கிறார் என்றெண்ணி மன்னனும் அவனுடைய கவிதையைப் பாட சொன்னார். அவனும்  உடனே தான் எழுதிக் கொண்டு வந்ததைப் பாடினான்.
''மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
காவிறையே!
கூவிறையே!
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி!
மன்னா!தென்னா!
கன்னா! பின்னா!
சோழங்கப் பெருமானே!''
இதைக் கேட்டதும் மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.அவனுக்கு தண்டனை கொடுக்க எத்தனிக்கையில் கம்பர் எழுந்து,''மன்னா,மிகச் சிறந்த இந்தப்  பாடலுக்கு நீங்கள் பரிசு கொடுக்க வேண்டும்,''என்று வேண்டினார்.மன்னனுக்கு ஒன்றும் புரியாது, விளக்கமாக சொல்ல சொன்னார்.கம்பரும் அந்தப் பாட்டிற்கு பொருள் கூறினார்:
மண் உண்ணி மாப்பிள்ளை என்றால் குழந்தையாய் இருந்த போது பசியில் மண்ணை உண்ட சிறந்த பிள்ளையாகியே பெருமாளே என்று பொருள்.
காவிறையே என்றால் தேவலோகத்தில் உள்ள கற்பக சோலைக்குத் தலைவனாகிய இந்திரனே,என்று பொருள்.
கூவிறையே என்றால் உலகுக்குக் கடவுள் போன்றவன் என்று பொருள்.உங்கள் அப்பன் கோ  என்றால் உங்கள் தந்தை யாகிய அரசன் என்றும்,வில் பெருச்சாளி என்றால் வில் போரில் பெரிய ஆளி போன்றவன் என்றும் பொருள்.மன்னா என்றால் மன்னவனே,தென்னா என்றால் தென்னாட்டை உடையவனே என்றும் கன்னா என்றால் கர்ணனைப் போல் கோடையில் சிறந்தவனே என்றும்,பின்னா என்றால் போரில் பின்னிட்டு 
 ஓடா தவனே  என்றும் பொருள்.
மகிழ்ச்சியுற்ற மன்னன் வந்தவனுக்கு நிறைய வெகுமதி கொடுத்து அனுப்பினார்.


நல்ல கேள்விகள்.

2

Posted on : Saturday, April 05, 2014 | By : ஜெயராஜன் | In :

மத போதகர் ஒருவர்,''நல்லவர்களும்,தெய்வநம்பிக்கை உள்ளவர்களும் சொர்க்கத்திற்குப் போவார்கள்,''என்று பிரசங்கம் செய்தார்.ஞானி ஒருவர்,''நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தைத் தருகிறது,''என்றார்.போதகர் விபரம் கேட்க ஞானி கேட்டார்,''ஒருவன் நல்லவனாய் இருக்கிறான். அவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.அவன் சொர்க்கம் போவானா, மாட்டானா? ஒருவன் கொலைக்கு அஞ்சாத்  திருடன். அவனுக்கு மிகுந்த தெய்வ நம்பிக்கை உண்டு. அவனுக்கு சொர்க்கமா, நரகமா? ஒரு அப்பாவிக்கு நல்லது கெட்டது தெரியாது.அவனுக்கு தெய்வம் பற்றியும் ஒன்றும் தெரியாது.அவனுக்கு எங்கே இடம்?ஒரு மன்னன் அடுத்த நாட்டின் மீது படையெடுத்து,நாட்டைக் கைப்பற்றி,பெரும் செல்வத்தையும் கைதிகளையும் கொண்டு வருகிறான்.அக்கைதிகளை வைத்து அந்த செல்வம் கொண்டு இறைவனுக்கு பெரிய ஆலயம் எழுப்புகிறான்.அவனுக்கு சொர்க்கம் தானா? அடிமையாக்கப்பட்ட அந்தக் கைதிகளுக்கு நல்லது செய்ய வழியில்லை.  .தொடர்ந்த துயரங்களால் தெய்வத்தையே நிந்திக்கிறார்கள்.அவர்கள் சொர்க்கம் செல்வார்களா,நரகம் செல்வார்களா?''போதகர் பதில் சொல்ல இயலாது தலை குனிந்தார்.அன்றுஇரவு அவருக்கு ஒரு கனவு வந்தது.கனவில் அவர் ஒரு ரதத்தில் செல்கிறார்.ரதம் எங்கே செல்கிறது என்று வினவ அது சொர்க்கம் நோக்கி செல்வதாகப் பதில் வந்தது.புல்  பூண்டு ஒன்றும் இல்லாமல் தண்ணீர் இல்லாமல் பாலை போலக் காட்சி அளித்த ஒரு இடத்தில் ரதம் நின்றது இது எந்த இடம் என்று வினவ இதுதான் சொர்க்கம் என்று பதில் ரதம் ஓட்டியவரிடமிருந்து வந்தது.''புத்தர் காந்தி,இயேசு எல்லாம் இங்கு இல்லையா''என்று கேட்க அப்படி யாரும் இங்கில்லை என்று சொல்லப்பட்டது.பின் ரதம் வேறு திசையில் பயணிக்கிறது.இனிய சோலைகள்,  நதிகள், ஆடிப்பாடும் மக்கள் நிறைந்த ஓரிடத்தில் இப்போது ரதம் நின்றது.இந்தஇடம் எது என்று கேட்க,''இதுதான் நரகம்.நீங்கள் கேட்ட புத்தர் இயேசு எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள்.''கனவு கலைந்தது.இப்போது போதகருக்கு தெளிவு ஏற்பட்டது.நல்லவர்கள் எங்கிருக்கிறார்களோ,அந்த இடமே சொர்க்கமாக மாறிவிடும்..

பொன்மொழிகள்-50

1

Posted on : Friday, April 04, 2014 | By : ஜெயராஜன் | In :

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
******
எது தவறானதோ,அது விரும்பப்படுவதாகவும் இருக்கும்.
******
பொய் சொல்வது கேவலம் அல்ல.அது மனித இயல்பு.
அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம்.
******
ஆயிரம் முறை சிந்தனை செய்யுங்கள்.
ஆனால் ஒரு முறை முடிவெடுங்கள்.
******
வேலை செய்ய வேண்டியது நம் தலைஎழுத்து
என்று வேலை செய்பவன் அடிமை.
வேலை செய்வதுதான் சுகம்
என்று வேலை செய்கிறவன் கலைஞன்.
தேவை இல்லாத வேலைகளை
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவன் முட்டாள்.
******
தூங்குகிறவனை எழுப்புவதற்காகப் பொழுது இருமுறை விடிவதில்லை.
******
எவ்வளவுதான் மறைத்து வைத்திருந்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழுக்கான ஆசை எப்போதும் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.
******
அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.
தவறுகள் அதற்குரிய செலவுகள்.
******
அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டிற்கும் நெருக்கம் அதிகம்.
******
குழந்தைகள் இல்லையென்றால் உலகம் துன்பம் நிறைந்ததாகி விடும்.
முதியோர் இல்லையென்றால் உலகம் மனித இயல்பற்றதாகி விடும்.
******
விவேகத்திற்குத் தந்தை அனுபவம்.
******
மகிழ்ச்சி,மிதமான உணவு,போதிய ஓய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா.
******

தான்தான்...

1

Posted on : Thursday, April 03, 2014 | By : ஜெயராஜன் | In :

இராமச்சந்திரக் கவிராயர் என்று ஒரு புலவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்தார்.சரியாசனம் புலவர்க்கு மன்னர் அளித்த காலம் போய் ,புலவர்கள் வறுமையில் வாடும் காலம் அது .அவர் ஒரு மாவட்ட ஆட்சியருக்குக் கூட தமிழ் சொல்லிக் கொடுத்தார்.வேறு யாரும் ஆதரிப்பார் இல்லாததால் வறுமையில் வாடினார்.ஒரு நாள் காலையில் அவர் குழந்தைகள் அழுது கொண்டிருந்தன.அவர் மனைவியைப் பார்த்து,''குழந்தைகளுக்கு கஞ்சி ஏதாவது வைத்து பசியாற்று,''என்றார்.அவர் மனைவி,''சமைக்க ஏதுமில்லை.''என்றார்.''நொய்யரிசி கூட இல்லையா?"'என்று புலவர் கேட்க அவர் மனைவி அழுது கொண்டே,''இனி கல்லைத்தான்,மண்ணைத்தான் காய்ச்சிக் கொடுக்க வேண்டும்,''என்றார்.அந்த துயர் நிலையிலும் புலவரின் கவித்துவம் மேலோங்கி நின்றது.அப்போது அவர் பாடிய பாடல்:
''கல்லைத்தான் மண்ணைத்தான் 
காய்ச்சித்தான் குடிக்கத்தான் 
கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் 
எனக்குத்தான் கொடுத்துத்தான் 
இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் 
ஆரைத்தான் நோவத்தான்
ஐயோ!எங்கும் 
பல்லைத்தான் திறக்கத்தான் 
பதுமத்தான் புவியில்தான் 
பண்ணினானே!''
இப்பாடலில் தான் என்ற வார்த்தை பதினெட்டு முறை வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

புத்தியின் வகைகள்.

2

Posted on : Wednesday, April 02, 2014 | By : ஜெயராஜன் | In :

1.மண் புத்தி:(மிருத்து புத்தி)
மண் சுவரில் ஆணி அடித்தால் உடனே எடுத்து விடலாம்.அது போல கேட்ட விசயங்களை உடனே விட்டு விடுவான்.
2.மரபுத்தி:(தாருபுத்தி)
ஆனி சுலபமாக இறங்கும்.ஆனால் சுலபமாக எடுக்க முடியாது.அதுபோல கேட்ட நல்ல விசயங்களை வெளியே விடாத புத்தி.
3.கல்புத்தி:(சிலாபுத்தி)
வரிசையாகத் துளையிட்டு முதல் துளையில் உளியால் அடித்தால் கல்  பிளக்கும்.அதுபோல சொன்னால்  முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய புத்தி.
4.மூங்கில் புத்தி:(வேணு புத்தி)
மூங்கில் கணுவின் ஒரு பக்கம் அடித்தால் மறு பக்கம் பிளந்து விடும். அது போல ஒரு விசயத்தைக் கேட்டவுடன் பின் விளைவுகளைப் புரியும்புத்தி.
5.எண்ணெய் புத்தி:(தைலபுத்தி)
தண்ணீரில் ஒருதுளி எண்ணெய் விட்டால் அது எல்லா இடத்திலும் பரவி விடும். ஒரு விஷயத்தை லேசாகச் சொன்னாலும் விபரமாகப் புரிந்து கொள்ளும்  புத்தி.
******
உலகில் ஏழு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.
1.பயந்த குணம் உள்ளவர்கள்.
2.சஞ்சலப் படுபவர்கள்.
3.சதா கற்பனையில் மிதந்து எதார்த்தத்தைக் கோட்டை விடுபவர்கள்.
4.தனிமை உணர்வு மிக்கவர்கள்.
5.மற்றவர்களின் செல்வாக்குக்கோ,சொல்லுக்கோ உடன் படமறுப்பவர்கள்.
6.எதிலும் பற்றற்றவர்கள்.
7.மற்றவர்களின் கவலைகளைத் தம் கவலைகளாக எடுத்தப் போட்டுக் கொண்டு செயல் ஆற்றுபவர்கள்.
******