உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நிர்வாகத்திறமை

0

Posted on : Monday, January 24, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு நிறுவனத்தின் மேலாளராகபுதிதாக ஒருவர் சேர்ந்தார்.அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர்.எனவே புதியவர் அவரிடம்  திறமையான நிர்வாகம் பற்றி சில ஆலோசனைகள் கேட்டார்.அவர் உடனே புதியவரிடம் மூன்று கவர்களைக் கொடுத்து சொன்னார்,''உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும்.அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்,''புதியவர் அவருக்கு நன்றி கூறி மூன்று கவர்களையும் வாங்கி வைத்துக் கொண்டார். ஒரு மாதத்திலேயே அவருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடிவந்தது.உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார்.அதில்,''நான் புதியவன்.எனவே எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்.''என்று எழுதியிருந்தது.அதேபோல அவரும்,''நான் இப்போதுதானே வந்திருக்கிறேன்.நிறுவனத்தைப்பற்றி  முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும்.''என்றார்.வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.அடுத்து ஒரு ஆண்டில்  மறுபடியும் பிரச்சினை வந்தது.இரண்டாவது கவரை திறந்து பார்த்தார்.அதில்,''முன்பு மேலாளர் களாய்  இருந்தவர்களைக்  குறை சொல்,''என்றிருந்தது.உடனே அவரும் சொன்னார்,''பாருங்கள்,நான் என்ன செய்வது?இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக சிந்தித்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் இங்கு முன்பு பணி புரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை.எதை எடுத்தாலும் ஒரே குப்பை இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.''வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.இப்போது தொழிலாளர் தலைவர்கள் தீவிரமாக வந்தார்கள்.இவருக்கு  எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது.உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார்.அதில்.''உனக்கு அடுத்து வருபவருக்கு மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும்,''என்று எழுதப்பட்டிருந்தது.

சிரிச்சா போதும்!

0

Posted on : Friday, January 07, 2011 | By : ஜெயராஜன் | In :

நாட்டுப்பற்று பற்றி பாடம் நடத்திய ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்கள் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவர்கள் என்பதை விளக்க சொன்னார். ஒரு மாணவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுப் பொருட்கள் எதையும் உபயோகிப்பதில்லை.''அடுத்தவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுத் திரைப்படங்கள் எதுவும் பார்ப்பதில்லை.''மூன்றாவது மாணவன் சொன்னான்,''நான் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை ஆங்கிலத்தில் தேறியதில்லை''
**********
''நண்பா,புலித் தோல் பார்த்திருக்கிறாயா?''
'பார்த்திருக்கிறேனே!'
''எங்கே?''
'புலியின் மீதுதான்.''
**********
குறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.ஒருவன் சொன்னான்,''ஐயா,இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே?''இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன் என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.அவன் சொன்னான்,''இல்லை ஐயா,அவன் பெயர் ரவி.என் பெயரோ,வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.''
**********
''நாய் பற்றிய கட்டுரை எழுதி வரச் சொன்னால்,நீயும் உன் அண்ணனும் ஒரே மாதிரி எழுதி வந்திருக்கிறீர்களே?''என்று ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்டார்.அவன் சொன்னான்,''எங்கள் வீட்டில் ஒரு நாய் தானே சார் இருக்குது.''
**********

அப்பளம்

0

Posted on : Thursday, January 06, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் ஒரு ஹோட்டலில் பல வருடங்களாகத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.எனவே அவரை நன்றாகக் கவனிக்கும்படி முதலாளி உத்தரவிட்டார்.அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்கப்பட்டது.''நீங்கள் கஞ்சத்தனமாக ஒரே ஒரு அப்பளம் வைக்கிறார்கள்.எனக்கு அது போதவில்லை'' என்றார்.உடனே அவருக்குமறுநாள் இரண்டு அப்பளம் வைக்கப்பட்டது.அதுவும் போதவில்லை என்றதும் மூன்று அப்பளம்  வைக்கப்பட்டது.அதிலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.முதலாளி,அவருக்கு அப்பளம் பிடிக்கிறது என்று தெரிந்து மறுநாள் தரமான விலை கூடுதலான ஒரு பெரிய அப்பளம் வைக்கச்சொன்னார்.அதுவும் செய்யப்பட்டது.''பார்த்தீர்களா!நீங்கள் கஞ்சர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும் இன்று மறுபடியும் ஒரு அப்பளம் தான் வைத்திருக்கிறீர்களே?''என்று கோபமான பதில் வந்தது.முதலாளிக்கு மயக்கமே வந்துவிட்டது.

லஞ்சம்

2

Posted on : Thursday, January 06, 2011 | By : ஜெயராஜன் | In :

ரவியும் கோபாலும் இரண்டு பணக்காரர்கள். ஒருவருக்கு எதிராக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.ரவி தன வக்கீலிடம் கேட்டார்,''இந்த நீதிபதிக்கு நாம் லஞ்சம் கொடுத்தால் நமக்கு சாதகமாகத் தீர்ப்பு வருமா?'' வக்கீல் சொன்னார்,''ஐயையோ,அவருக்கு லஞ்சம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கோபம் வரும்.லஞ்சம் கொடுக்க முயன்றால் தீர்ப்பு நமக்கு எதிராகவே முடியும்.''சில மாதங்களுக்குப் பின் தீர்ப்பு வந்தது.தீர்ப்பு ரவிக்கு சாதகமாகவே வந்தது.வக்கீலுக்கே இந்த வழக்கு வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது.எனவே தீர்ப்பைக் கேட்டவுடன் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.இருந்தாலும் தன மகிழ்ச்சியை ரவியிடம் தெரியப்படுத்தினார்.அப்போது ரவி சொன்னார்,''உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்,''வக்கீலுக்கு ஒன்றும் புரியவில்லை.ரவி விளக்கினார்,''அன்று நீதிபதி லஞ்சத்துக்கு எதிரானவர் என்றும் லஞ்சம் கொடுத்தால் தீர்ப்பு பாதகமாகி விடும் என்று சொன்னீர்கள் அல்லவா?அன்றே நான் ஒரு தொகையை கோபால் அனுப்பியதாக நீதிபதிக்கு அனுப்பி விட்டேன்.''

முத்தம்

0

Posted on : Wednesday, January 05, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண் காவல் நிலையம் வந்து,ஒருவன் தன்னை நாடு ரோட்டில் நிறுத்தி முத்தமிட்டதாகவும் அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாள். காவல் அதிகாரி  அவனுடைய அடையாளங்களைக் கூறுமாறு கேட்டார்.அந்தப் பெண்ணோ அடையாளம் ஏதும் தெரியாதென்றாள்.காவல் அதிகாரிக்கு ஆச்சரியம்.''என்ன,உன்னை முத்தமிட்டவனை உனக்கு எப்படி  அடையாளம் தெரியாமல் போகும்?''அந்தப் பெண் சொன்னாள்.''என்னை யாராவது முத்தமிட்டால் நான் கண்ணை இருக்க மூடிக் கொள்வேன்.''

சபதம்

0

Posted on : Wednesday, January 05, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லா தீவிரமான குடிகாரர்.ஒரு புத்தாண்டு தினத்தன்று,''இந்த ஆண்டு நான் குடிக்க மாட்டேன்,''என்று சபதம் செய்தார்.அடுத்த நாள் அவர்மது விற்கும் கடை வழியே செல்ல வேண்டியிருந்தது.அவர் கடையைத் திரும்பப் பார்க்காது இருபது மீட்டர் தூரம் சென்று விட்டார்.அவருக்கு மிக்க மகிழ்ச்சி.''முல்லா,மதுக் கடைக்கு அருகில் சென்றும் ,நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக முன்னேறி விட்டாயே!பரவாயில்லை.அந்த மகிழ்ச்சியில் நட.போய் மது அருந்தலாம்.''என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு முல்லா அன்று இரட்டிப்பாய் மது அருந்தினார்.

மதுபோதை

0

Posted on : Tuesday, January 04, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு முறை தன சகோதரனின் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு உணவு விடுதிக்கு சென்று,நன்கு சாப்பிட்டு மகிழ்வுடன் சகோதரனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.அப்போது எதிரில் ஒரு மனிதன் நன்கு குடித்து விட்டு இவர்களையே அதிசயமாகக் கண்ணைக் கசக்கிக் கசக்கிப்  பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள்.எனவே முல்லா அவனிடம் சொன்னார்,''நீ குடித்ததனால் தான் நாங்கள் இருவராகத் தெரிகிறோம் என்று எண்ணாதே.நாங்கள் ஒரே மாதிரி இருக்கும் சகோதரர்கள்.''அதற்கு அந்தக் குடிகாரன் மீண்டும் கண்களை சுருக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்,''நீங்கள் நால்வருமா?''

சமூகம்

0

Posted on : Monday, January 03, 2011 | By : ஜெயராஜன் | In :

இது ஒரு சூபி கதை:
முன்னொரு காலத்தில் கித்ர்என்றொரு ஞானி இருந்தார்.ஒரு நாள் அனைவரையும் கூப்பிட்டு அவர் சொன்னார்,''நாளையிலிருந்து உலகம் முழுவதும் தண்ணீரின் குணம் மாறிவிடும்.அதனைக் குடிப்பவர்கள் அனைவரும் பைத்தியம் ஆகி விடுவார்கள்.இப்போது தண்ணீரை கொஞ்சம் மிச்சப் படுத்தி வைப்பவர்கள் மட்டுமே இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முடியும்.''யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.ஒரே ஒருவன் மட்டும் கொஞ்சம் தண்ணீரை மிச்சப்படுத்தி வைத்துக் கொண்டான்.மறுநாள் ஞானி சொன்னது போலவே நடந்தது.அந்த ஒரு ஆளைத் தவிர அனைவரும் பைத்தியம் ஆகி விட்டார்கள்.இவன் ஒருவன் மட்டும் எப்போதும்போல இருந்தான்.அனைவரும் பைத்தியம் ஆகி விட்டதை அவர்கள் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொண்டான்.
அந்தப் பைத்தியக்காரர்களிடமிருந்து தான் தனித்து நிற்பது அவனுக்கு மெல்ல மெல்ல விளங்கலாயிற்று.ஊர் மக்கள் அனைவரும் இவனைப் பைத்தியம் என்று கூற ஆரம்பித்தார்கள்.பாவம்!இவன் ஒரு தனி ஆள்.அவனால் தான் பைத்தியம் இல்லைஎன்றும் மற்றவர்கள் அனைவரும் பைத்தியம் என்றும் எப்படி நிரூபிக்க முடியும்?பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவனும் புதிய தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டான்.அவனும் இப்போது பைத்தியம் ஆகி விட்டான்.ஊர் மக்கள் இப்போது சொன்னார்கள்,''நம்மிடையே ஒரு பைத்தியக்காரன் இருந்தான்.அவனும் இப்போது குணமடைந்து விட்டான்..''
இந்தக் கதையின் கருத்து என்ன?ஓஷோ சொல்கிறார்:
சமூகம் மக்களின் மனோதத்துவத்தில்தான் வாழ்கிறது.உண்மையைப் பற்றிய கவலை சமூகத்தில் யாருக்கும்  கிடையாது.மற்றவர்களுடன் கருத்து வேறுபாடின்றி இருப்பதிலேயே அது கவலை கொள்கிறது.சமூகத்துடன் ஒருவன் எவ்வாறு ஒத்துப் போவது என்ற கவலையே அது கொள்கிறது.சமூகம் பொய் என்றால் அவனும் பொய்யாகி விட வேண்டியிருக்கிறது.மனிதன் மிகவும் தனியானவன்.சமூகமோ மிகப் பெரியது.சமூகத்தை விட பெரிய ஏதோ ஒன்றின் ஆதாயம் இவனுக்குக் கிடைக்காதவரை அவன் சமூகத்திற்குக் கட்டுப் பட்டே தீர வேண்டும்.

முள்ளில் ரோஜா

0

Posted on : Monday, January 03, 2011 | By : ஜெயராஜன் | In :

பிரபல ஆங்கில மஹாகவி மில்டன் தம் வாழ்வின் கடைசி காலத்தில் திருமணம் செய்து கொண்டார்.அவர் அப்போது கண் பார்வை இழந்திருந்தார்.அவருக்கு வாய்த்த மனைவியோ பொல்லாத வாயாடியாக இருந்தாள்.எதற்கு  எடுத்தாலும்  சண்டையிடுபவளாக இருந்தாள்.பாவம் மில்டன்!மில்டனின் நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வீட்டுக்கு வந்தார்.அவர் இதற்கு முன் மில்டனின் மனைவியைப் பார்த்ததில்லை.அவர் மில்டனிடம் கூறினார்,''எவ்வளவு அழகான மனைவி! ரோஜாப்பூவைப்  போல இருக்கிறாள்.!''அதற்கு மில்டன் கூறினார்,''எனக்கோ கண் பார்வை இல்லை.எனவே என் மனைவி ரோஜா மலரா என்று தெரியவில்லை.ஆனால் அதன் முட்கள் குத்துவதை நான் உணர்கிறேன்.''

அப்பனும் வருவான்

0

Posted on : Sunday, January 02, 2011 | By : ஜெயராஜன் | In :

செருப்புக் கடைக்கார ஒருவர்,ஒரு புதிய  மனிதனை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.அன்று முதல் நாள்.கடைக்கு செருப்பு வாங்க ஒருவன் தன தந்தையுடன் வந்தான்.புதிய ஆள் அவர்களிடம் பல செருப்புகளைக் காட்டி பின் ஒரு ஜோடி காலணிகளைக் கட்டிக் கொடுத்து,பணத்தை வாங்கி தன் முதலாளியிடம் கொடுத்தான்.முதலாளி விபரம் கேட்க,அவன் கூறினான்,''நூறு ரூபாய் செருப்பைக் காட்டினேன்.அவனிடம் ஐம்பது ரூபாய் தான் இருந்தது.சரி,மீதியை நாளை கொண்டு வந்து கொடுத்து விடு என்று கூறி அவனிடம் செருப்பைக் கொடுத்தனுப்பி விட்டேன்.''முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது.''முட்டாளே!செருப்பு எடுத்து சென்றவன் திரும்பி வரவா போகிறான்?என்று திட்டினார்.அதற்கு வேலையாள் சொன்னான்,''ஏன் வரமாட்டான்?அவனென்ன,அவன் அப்பனும் வருவான்.காரணம் என்ன தெரியுமா?நான் இரண்டும் வலது கால் செருப்பாகக் கட்டிக் கொடுத்து உள்ளேன்.அவன் நிச்சயம் வரத்தான் செய்வான்.''

தண்டனை

0

Posted on : Sunday, January 02, 2011 | By : ஜெயராஜன் | In :

தன் பேரன் சிறு சிறு தவறுகள் செய்யும் போதெல்லாம் ஒருவர் கடுமையான தண்டனைகள் கொடுத்து வந்தார்.சிறுவனின் தகப்பனாரால் தன் தகப்பனாரை கண்டிக்க முடியவில்லை.சிறுவனின் நன்மைக்காகத்தான் தண்டனைகள் கொடுப்பதாக பெரியவர் கூறிவிடுவார்.
ஒரு நாள் பெரியவர்,சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.சிறுவன் சரியாகக் கவனிக்கவில்லை என்று கோபம் கொண்டு சிறுவனை கடும் பனியில் நிறுத்தி விட்டார்.சிறுவன் நடுங்கிக் கொண்டிருப்பதைப்   பார்த்த  தகப்பனால் தாங்க முடியவில்லை.பெரியவரையும் ஒன்றும் கேட்கவும் முடியாத சூழ் நிலையில்  சடசடவென தன் சட்டையைக் கழட்டினார்.வெளியே சென்று பனியில் தன் பையனுடன்  சேர்ந்து நின்றார்.பெரியவர்,''நீ ஏன் குளிரில் நிற்கிறாய்?''என்று கேட்டார்.அவர் உடனே பதில் சொன்னார்,''தந்தையே!நீங்கள் என் மகனை குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறீர்கள்.பதிலுக்கு நான் என்ன செய்ய முடியும்?உங்கள் மகனைக் குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறேன்.''
இருவரையும் உள்ளே வரச் சொன்ன பெரியவர் அதன் பின் பேரனைக் கண்டிப்பதை நிறுத்தி விட்டார்.

பரோபகாரி

0

Posted on : Saturday, January 01, 2011 | By : ஜெயராஜன் | In :

இளைஞன் ஒருவன் நிறைய கோழி முட்டைகளை ஒரு மூன்று சக்கர வண்டியில் வைத்து மக்கள் கூட்டம் மிகுதியாக உள்ள கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்தான்.ஒரு திருப்பத்தில் எதிர் பாராதவிதமாக வண்டி கவிழ்ந்து விட்டது.முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறி விட்டன.இளைஞன் அழ ஆரம்பித்து விட்டான்,''ஐயோ,என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்? இவ்வளவு முட்டைக்குரிய  காசுக்கு நான் என்ன செய்வேன்?''அங்கே பெரும் கூட்டம் கூடி விட்டது.எல்லோருக்கும் அழுது கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது.அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர்,''தம்பி,ஏன் அழுகிறாய்?உடைந்த முட்டைகளுக்கான காசை உன்னால் கொடுக்க முடியாது என்பது தானே  உன் வருத்தம்?''என்று கேட்க இளைஞனும் ஆம் என்றான்.உடனே அப்பெரியவர் தன துண்டை எடுத்தார்.''இந்தக் கூட்டத்தில் இரக்க குணமுடையவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்,''என்று சொல்லியபடியே அதில் தன பையிலிருந்து எடுத்துஒரு பத்து ரூபாய் நோட்டைப் போட்டார்.பின் அந்தத் துண்டுடன் அந்தக் கூட்டத்தை சுற்றி வந்தார்.எல்லோரும் அதில் காசு போட்டார்கள்.எல்லோர் முன்னிலும் பணத்தை எண்ணினார்.அதை அப்படியே இளைஞனிடம் கொடுத்துவிட்டு,''இனியாவதுகவனமாக நடந்துகொள்,''என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு  சென்று விட்டார்.கூட்டத்திலிருந்த அனைவரும் அவரை பரோபகாரி என்று வாழ்த்தினர்.கூட்டம் கலைந்தது.எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இளைஞனிடம்,''அவர் மட்டும் வரவில்லைஎன்றால் உன் கதி என்ன ஆகி இருக்கும்?என்ன நல்ல குணம் அவருக்கு?அவரை உனக்கு முன்னரே தெரியுமா?''என்று கேட்டார்.அந்த இளைஞன் சொன்னான்,''அவர் தாங்க என் முதலாளி.இந்த முட்டைகளை ஏற்றி அனுப்பியவர்.''

கடவுள் எங்கே?

0

Posted on : Saturday, January 01, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆசிரியர் ஒரு மாணவனிடம்,''கடவுள் எங்கே இருக்கிறார்?''என்று கேட்டார்.மாணவன் சொன்னான்,''எங்கள் வீட்டுக் குளியல்  அறையில்,''ஆசிரியர் இப்பதிலை சற்றும் எதிர் பார்க்கவில்லை.அவர் அவனிடம் கேட்டார்,''உனக்கு யார் இப்படி சொன்னது?''மாணவனும் உடனே சொன்னான்,''எனக்கு யாரும் சொல்லவில்லை.எனது தந்தைதினமும் குளித்துக் கொண்டிருக்கும்போது,என் தாயார் குளியல் அறைக் கதவின் முன் நின்று கொண்டு,'அடக்கடவுளே,இன்னுமா குளித்து முடிக்கவில்லை?'என்று கூவுவாள்.இதனால் கடவுள் குளியல் அறையில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.''