உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-52

2

Posted on : Wednesday, May 14, 2014 | By : ஜெயராஜன் | In :

இளைஞனே விளையாடு.எவரும் உன்னை வெல்ல முடியாது என்பதற்காக அல்ல.உன்னை வெல்லும்  தகுதி கொண்டவன் யார் என்று அறிவதற்காக.
********
அச்சமும் ஐயமும் முடிவிலாது தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் வல்லமை உடையவை.
******
ஒரு தாய் தனது பிள்ளையை வயிற்றில் சுமப்பதை விட மனதில் சுமப்பதுதான் அதிகம்.
********
மிருகங்களில் வல்லமை அற்றவை உடனடியாக வல்லமையானவற்றால் கொன்று உண்ணப்  படுகின்றன.அது மிகக் கருணையான செயல்.மனிதன் கருணையால் தங்களில் வல்லமையற்றவனை குரூரமாக வதைத்து தங்கள் அகந்தைக்கு உணவாகக் கொள்கிறார்கள்.
********
நீ ஒரு முறைதான் வாழப் போகிறாய்.அதையே நீ சிறப்பாக செய்தால் ,அந்த ஒரு முறையே போதுமானதுதான்.
********
உன் வலியில் கவனம் செலுத்தாதே!
உன் வலிமையில் கவனம் செலுத்து.
********
ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது எறும்புகளை சாப்பிடுகிறது.
அந்தப் பறவை இறந்தால் எறும்புகள் அதை சாப்பிடுகின்றன.
காலமும் சூழலும் எப்போது  வேண்டுமானாலும் மாறலாம்.
யாரையும் குறைத்து மதிப்பிடாதே.
நீ இன்று அதிகாரம் மிக்கவனாக இருக்கலாம்.
காலம் உன்னை விட அதிகாரம் மிக்கது என்பதை மறந்து விடாதே.
******
சமூகத்தின் விதி முறைகளுக்கு மாறுபட்டு நீ நடந்தால் உன்னை மக்கள் வெறுக்கலாம்.ஆனால் உள்ளூர தங்களுக்கு அப்படி வாழ தைரியம் இல்லையே என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கும்.
********
கோபம் என்பது மனதின் பலவீனம்.
********

பிராமணன்

2

Posted on : Thursday, May 08, 2014 | By : ஜெயராஜன் | In :

முன்னொரு காலத்தில் ஒரு பிராமணர் இருந்தார்.அவருக்கு ஒரு மகன் இருந்தான்.ஜாதிகள் பற்றிய தீவிரமான பாகுபாடுகள் இருந்தகாலம் அது.பிராமணரின் மகன் ஒரு உழவர் வீட்டுப் . பெண்ணைக் காதலித்தான். ஆனாலும் தந்தை சம்மதிக்க மாட்டாரே என்று கவலைப்பட்டான்.நண்பன் ஒருவன் யோசனை சொன்னான்,''நீ உன் தந்தையிடம் அந்தப் பெண் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவள் என்று துணிந்து சொல்,''இளைஞனும் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு தந்தையிடம் நண்பன் சொன்னதுபோலப் பொய் சொன்னான்.அதிர்ச்சியுற்ற அந்தப் பெண் உடனே,''ஐயா,உங்கள் மகன் சொல்வது தவறு.நான் உழவர் வீட்டை சேர்ந்த பெண் தான்.நீங்கள் அனுமதித்தால் மட்டுமே இத்திருமணம் நடைபெறும்'' என்றாள்.பிராமணர் புன்னகை புரிந்தபடி சொன்னார்,''அம்மா,உன் அப்பா எந்தத் தொழில் செய்தால் என்ன?துணிந்து உண்மை சொன்ன நீயும் ஒரு பிராமணப் பெண்தான்.உண்மையான பிராமணர் பொய் சொல்ல மாட்டார்கள்.பிராமண  குலத்தில் பிறந்தாலும் என் மகன்  பொய் சொல்லி விட்டான்.அவன் உண்மையான பிராமணன் அல்ல...பிராமணன் அல்லாத இவனை நீ திருமணம் செய்து கொள்ள பிராமணரான உனக்கு ஆட்சேபம் இல்லாத நிலையில்  இத்திருமணத்திற்கு எனக்கு முழு சம்மதமே.''

சீடன்

1

Posted on : Thursday, May 08, 2014 | By : ஜெயராஜன் | In :

சாக்ரட்டீசிடம் நிறையப் பேர் தம்மை சீடராக்கிக் கொள்ள வேண்டி வருவதுண்டு.அப்போது சரியான சீடனைத் தேர்வு செய்ய அவர் ஒரு வினோதமான தேர்வு வைப்பார்.வந்தவரை அவர் ஒரு குளத்தைப் பார்த்து என்ன தெரிகிறது என்று கேட்பார்.அவர் சொல்லும் பதிலை வைத்தே சீடனைத் தேர்ந்தெடுப்பார்.அவர் எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.நண்பர் ஒருவர் அவரிடம் விபரம் கேட்டார்.சாக்ரடீஸ் சாதாரணமாகச் சொன்னார்,''அது ஒன்றும் பெரிய விசயமில்லை, நண்பரே!நான் குளத்தில் நீந்தும் மீன்களைப் பார்க்கிறேன் என்று சொல்பவர்களை எனது சீடராக ஏற்றுக் கொள்வேன்.அதற்கு மாறாக எனது முகம் தெரிகிறது என்று சொல்பவர்களை நான் நிராகரித்து விடுவேன்.ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் தங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.தன்னையே மறக்காத ஒருவர் பிறரையும் மற்றவற்றையும் கண்டறிய முடியாது,''

கண்ணாடி

0

Posted on : Wednesday, May 07, 2014 | By : ஜெயராஜன் | In :

மிகுந்த செல்வம் சேர்த்தும் மன நிம்மதி இல்லாத பணக்காரன் ஒருவன் மன நிம்மதி தேடி ஒரு குருவிடம் சென்று விபரம் சொன்னான்.குரு அவனிடம், ''இந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்து என்ன தெரிகிறது என்று சொல்,''என்றார்.அவனும்,''மக்கள் போய் வருகிறார்கள்,''என்றான்.குரு பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவனிடம் கொடுத்து,''இந்தக் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்று பார்த்து சொல்,''என்றார்.அவனும் பார்த்து விட்டு,''என் முகம் தெரிகிறது,''என்றான்.''மக்கள் யாரும் தெரியவில்லையா?''என்று குரு கேட்க அவன் இல்லை என்றான்.இப்போது குரு சொன்னார்,''இரண்டு கண்ணாடிகளும் ஒரே பொருளால் தான் செய்யப் பட்டுள்ளன.ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில் மட்டும் பின்புறம் பாதரசம் பூசப் பட்டுள்ளது பாதரசம் பூசியதால் வெளியே உள்ளது எதுவும் தெரியவில்லை.ஆனால் இந்த சாதாரண கண்ணாடி ஜன்னல் மூலம் வெளி உலகை உன்னால் பார்க்க முடிகிறது.நீ சாதாரணமாக ஏழையாய் இருந்தால் மற்றவர்களை உன்னால் சரியாகப் பார்க்க முடியும்.அவர்களிடம் இரக்கம் காட்ட முடியும்.பணம் எண்ணும் பாதரசத்தால் நீ மறைக்கப் பட்டு விட்டால் உன்னால் உன்னை மட்டுமே பார்க்க முடியும்.பொருள் ஆசையைக் களைந்து விடுவது ஒன்றுதான் உனக்கு நிம்மதி கிடைப்பதற்கான ஒரே வழி,''

தன்னம்பிக்கை

1

Posted on : Tuesday, May 06, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.அங்கு வந்து நிலைமையைக் கண்ட புத்தர் தன்னைக் காண வந்திருந்த அனைத்துத் தரப்பினரையும் பார்த்து,''இங்கு பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவளிக்கும் பணியை யார் செய்யத் தயாராயிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.ஊரின் பெரும் பணக்காரர்,''எனக்கு சொந்தமான எல்லாப் பணத்தை செலவழித்தாலும் பத்தாதே,''என்று அங்கலாய்த்தார்.படைத்தலைவர் ஒருவர்,''ஏதாவது போர் என்றால் நாட்டு மக்களுக்காக என் ரத்தம் சிந்தத் தயாராயிருக்கிறேன்.ஆனால் பட்டினி கிடப்போருக்கு உணவளிக்க தேவையான உணவு என் வீட்டில் இல்லையே,''என்றார்.நிலச்சுவான்தார் எழுந்து,''இந்தப் பஞ்சம் வந்தாலும் வந்தது,எனது வயல்களில் சுத்தமாக விளைச்சல் இல்லை.இந்த ஆண்டு அரசுக்கு எவ்வாறு வரி செலுத்தப்போகிறேன் என்பதே எனது இப்போதைய கவலை.எனவே என்னால் ஒன்றும் செய்ய இயலாது.''என்றார்.அப்போது ஒரு பிச்சைக்காரி எழுந்து,புத்தரை வணங்கி,''பட்டினி கிடப்பவர்களுக்கு நான் உணவளிக்கிறேன்,''என்றாள்.அனைவருக்கும் ஆச்சரியம்.''அது எப்படி உன்னால்  முடியும்,'' என்று அனைவரும் கேட்டார்கள்.அவள் பணிவுடன் சொன்னாள்,''ஐயா,நான் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருகிறேன்.அப்போது இங்கு,தன்னால் முடியாது என்று சொன்னவர்கள் தங்களால் இயன்றதை பிச்சையாகக் கொடுத்தால் அதையெல்லாம் ஒன்று சேர்த்து நான் பசியால் வாடுபவர்களின் துயர் தீர்ப்பேன்,''என்றாள்.அவளுடைய தன்னம்பிக்கை கண்டு புத்தர் அவளுக்கு ஆசி அளித்தார்.
மனம் இருந்தால் மார்க்கம் இருக்கும்.

பற்று

1

Posted on : Monday, May 05, 2014 | By : ஜெயராஜன் | In :

இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சாப்பாட்டில் ஆர்வம் உண்டு அடிக்கடி சமையல் அறைக்கு சென்று மனைவி சாரதாதேவியாரிடம் என்ன சமையல் என்று விசாரிப்பார்.ஒரு நாள் அன்னையார் அவரிடம்,''நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர்?யார் யாரெல்லாமோ உங்களைப் பார்க்க வருகிறார்கள்.நீங்கள் அடிக்கடி சமையல் அறைக்கு வருவதைப் பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்?''என்று கேட்டார்.பரமஹம்சர் சிரித்துக் கொண்டே சொன்னார், ''நான் எல்லாப் பற்றுக்களையும் எப்போதோ உதறி விட்டேன்.இருந்தாலும் என்னைப் பூமியுடன் இணைக்க ஒரு பந்தம் தேவை.எல்லாக் கயிற்றையும் அவிழ்த்து விட்டால் படகு ஆற்றோடு போய்விடும்.அதைக் கரையுடன் கட்டி வைக்க ஒரு கயிறு தேவை.என் கயிறு இதுதான் என் பணி முடிந்தவுடன் இந்தக் கயிற்றையும் அவிழ்த்து விடுவேன்.என்றைக்கு நான் சமையல் அறைக்கு வந்து இப்படி விசாரிக்கவில்லையோ அன்றிலிருந்து மூன்றாவது நாள் நான் இந்த உலகை விட்டுப் போய் விடுவேன் என்று பொருள், ''என்றார். அதேபோல் ஒருநாள் அவர் சமையல் அறைக்கு வராததைக் கண்டு அன்னையார் வந்து பார்த்தபோது அவர் கண் மூடிப் படுத்திருந்தார்.அடுத்த மூன்றாம்  நாள் அவர் உயிர் பிரிந்தது.

நஷ்டம் என்ன?

1

Posted on : Monday, May 05, 2014 | By : ஜெயராஜன் | In :

சிறுவன் ஒருவன் ஒரு கூடையில் நாவல் பழங்களை  வைத்து தெருவில் விற்றுக் கொண்டு வந்தான்.ஒரு பெண் அவனை அழைக்கவும் அவள் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான்.அந்தப்பெண் ,''நான் வீட்டிற்குள் எடுத்துச் சென்று நல்ல பழங்களைப்  பொறுக்கி எடுத்துக் கொள்ளவா?''என்று கேட்டாள்.சிறுவனும் சம்மதிக்கவே அவள் கூடையை வீட்டினுள் எடுத்துசென்று நல்ல பழங்களாகப் பார்த்து பொறுக்கி எடுத்தாள் . பையன் வீட்டிற்குள் செல்லவில்லை.வெளியே இருந்தமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டுத்  தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டாள். அவனும் எடை போட்டு விலை சொன்னான்.பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் கேட்டாள்,''ஏன் தம்பி,நான் உள்ளே கூடையை எடுத்து சென்ற போது நீ உள்ளே வரவில்லை.நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன .செய்வாய்?உனக்கு நஷ்டம் ஆகாதா?நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே,  அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா?''அந்தப் பெண் வாயடைத்து நின்றாள்.