உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உனக்கென்ன வேலை?

4

Posted on : Wednesday, July 31, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது,''நான் குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''பிறந்து கொள்,''
பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது,''நான் வளர வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''வளர்ந்து கொள்.''
வளர்ந்த குழந்தை கேட்டது,''நான் படிக்க வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''படித்துக் கொள்.''
படித்த பையன் கேட்டான்,''எனக்கு நல்ல வேலை வேண்டுமே?''
கடவுள் சொன்னார்,''தேடிக் கண்டுபிடி,''
வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்,''எனக்கு திருமணம் செய்ய வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''நல்ல பெண்ணாய்ப்பார்த்து திருமணம் செய்துகொள்.''
திருமணம் ஆனதும் கேட்டான்,''நல்ல குழந்தை வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''பெற்றுக் கொள்.''
வயதானபின் அவன் கேட்டான்,''நான் நல்ல படியாக இறக்க வேண்டுமே,''
கடவுள் சொன்னார்,''இறந்து கொள்.''
அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்,''ஆரம்பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் என்றே கூறி வருகிறாய்.அப்புறம் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் வேலை?''
கடவுள் புன்னகையுடன்  சொன்னார்,''இத்தனையிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே அதுதான் நான்.''


திருமணம்

3

Posted on : Wednesday, July 17, 2013 | By : ஜெயராஜன் | In :

'அனுபவம் பேசுகிறது,'என்பார்கள்.திருமணம் பற்றி எத்தனை விதமான அனுபவங்கள்!
*திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல.நாணயத்தின் இரு புறங்களும் ஒன்றை ஒன்று எதிர் கொள்ள முடிவதில்லை.ஆனாலும் சேர்ந்தே அவை இருக்கும்.
******
*ஒருவனுக்கு நல்ல மனைவி கிடைத்தால் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான். கெட்ட மனைவி அமைந்து விட்டால் அவன் தத்துவ வாதியாகி விடுகிறான்.எப்படியும் நன்மைதான்.அதனால் திருமணம் செய்துகொள்.
******
*பெண்கள் தங்கள் கணவனை அரிய செயல்கள் புரிய ஊக்குவிப்பார்கள்.ஆனால் அவற்றை சாதிக்கத்தான்  விட மாட்டார்கள்.
******
*என்னால் எப்போதும் பதில் சொல்ல முடியாத கேள்வி இதுதான் ''இந்தப் பெண்களுக்கு என்னதான் வேண்டும்?''
******
*எனக்கு தீவிரவாதம் குறித்து எந்தவித அச்சமும் இல்லை.ஏனெனில்  எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
******
*திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய,நீ செய்ய .வேண்டியதெல்லாம்
1.நீ தவறுசெய்யும் போது  அதை ஒத்துக் கொள்.
2.நீ செய்தது சரிதான் என்றால் வாயை மூடிக் கொண்டிரு.
******
*ஒரு நல்ல மனைவி பல சமயங்களில் தனது  கணவனை பெருந்தன்மையுடன் மன்னிக்கிறாள்.எந்த சமயங்களில்?அவள் செய்தது தவறாயிருக்கும் போது .
******
*''என் மனைவி தேவதை.''
'நீ கொடுத்து வைத்தவன்.என் மனைவி உயிருடன் இருக்கிறாள்.'
******
*நான் என் மனைவியிடம் பேசியது சில வார்த்தைகள்.வந்த பதிலோ பல பக்கங்கள்.
******
*''உங்கள் நீண்ட காலத் திருமண வெற்றிக்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?''
'வாரத்திற்கு இரண்டு நாட்கள் நல்ல உணவகம் ஒன்றிற்கு செல்வோம். குறைந்த வெளிச்சம்;நல்லிசை .சிறந்த நடனம்.அருமையான உணவு. இவை போதாதா?என்ன,நான் செவ்வாய்க்கிழமைகளில் செல்வேன்.என் மனைவி வெள்ளிக் கிழமைகளில் செல்வாள்.'
******

விமரிசனத்தை எதிர்கொள்ள...

0

Posted on : Thursday, July 04, 2013 | By : ஜெயராஜன் | In :

நமக்கு முன்னும் பின்னும் மற்றவர்கள் செய்யும் விமரிசனத்திலிருந்து யாரும் தப்ப  முடியாது.நம் வாழ்வில் மகிழ்ச்சியோ துயரமோ,இந்த விமரிசனத்தை எதிர் கொள்வதைப் பொறுத்துத்தான் அமைகின்றன.மற்றவர்கள் செய்யும் விமரிசனத்தை மூன்று வழிகளில் எதிர் கொள்ளலாம்.
உணர்ச்சி வழி:
    உணர்ச்சி வயப்பட்டு மனம் கொந்தளிப்பது,அதுவும் மற்றவர்கள் விமரிசனம் செய்வதைக் கேட்டு மனம் பதறுவது இயற்கை.அதனால் சினத்துடன் நமது மறுதலிப்பைப் புலப்படுத்துவது மிக எளிது.ஆனால் உணர்ச்சி வசப்படுவது நமக்கு நாமே நஞ்சு ஊட்டிக் கொள்வது போலாகும்.முதலில் உணர்ச்சி வசப்படாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது.விமரிசனங்களை முன்னரே எதிர் பார்த்தால் வரும் துன்பம் இலேசாக இருக்கும்.நம் மனதை அடிக்கடல் போல அமைதியாக வைத்திருக்கப் பழகிக் கொள்ள  வேண்டும்.நம்மை விமரிசிப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்பப் பழகிக் கொள்ள வேண்டும்.
பகுத்தறிவு வழி:
உண்மையான விமரிசகர்கள் நம்மை சிந்திக்கவைக்கிறார்கள்.அது நல்லதுதானே.விமரிசனத்தின் உண்மையைக் காண வேண்டுமே தவிர நம்மை விமரிசித்தாரே என்று ஆத்திரம் கொள்ளக் கூடாது.அப்படி அறியும்போது விமரிசனத்தில் உண்மை இருந்தால் ஒப்புக் கொண்டு விடுவது நல்லது.அது விமரிசகர்களின் வாயையும் அடைத்துவிடும்.விமரிசிப்பவர்கள் நல்லவர் அல்லாதவராய்  இருந்தால் அந்த விமரிசனத்தை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் கூறி நம் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது.விமரிசகரை ஆய்வதோடு மட்டுமல்லாது ஒருவரின் விமரிசனத்தை நம் காதுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறவர் அதற்குக் காது மூக்கு வைத்து நீட்டியிருக்கிறாரா என்பதையும் ஆராய வேண்டும்.அவர்களின் தூண்டுதலுக்கு நாம் ஆளாகி விடக்கூடாது.
செய்முறை வழி:
கருணை,பழிவாங்கும் உணர்வைவிட ஆற்றல் மிக்கது.பழிவாங்கும் செயலுக்குப் பணியாதவன் அன்பிற்குப் பணிந்து விடுவான்.கடுமையான விமரிசகர்களைக் கூட கனிவுடன் அனைத்தும்,இணைத்தும் சென்று வெற்றி காண வேண்டும்.

தெரியுமா?-5

1

Posted on : Wednesday, July 03, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது.அதை ஊதி அணைத்துவிட்டு உடனே மறுபடியும் தீக்குச்சி கொண்டு பொருத்தினால் உடனே பற்றிக் கொள்கிறது.ஆனால் புதிதாக ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க சிறிது நேரமாகிறது.ஏன்?
            எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்தாலும் அதைச் சுற்றி மெழுகு  ஆவி சுற்றியிருக்கும்.தீப்பொறி கண்டவுடன் மெழுகுவர்த்தி உடனே பற்றிக் கொள்ள அது பயன் படுகிறது.
******
துணியை அயர்ன் செய்யும்போது தண்ணீரில்தெளித்து பின் சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது மட்டும் ஒழுங்காகத் தேய்க்க வருகிறது.ஏன்?
             துணியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீர் பட்டவுடன் நன்கு பரவி துணிக்கு மிருதுத் தன்மை  கொடுக்கிறது.சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது தண்ணீர் ஆவியாகி stiff ஆன surface கிடைக்கிறது.
******
ஒரு காகிதத்தின் கனம் 0.01அங்குலம்.அதை 50 முறை மடக்கினால் அதன் கனம் எவ்வளவு இருக்கும்?
            பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் இருக்கும்.
******
ஒரு பேப்பரில் ஒரு கத்தியை வைத்து மடக்கிப்  பின் ஒரு உருளைக் கிழங்கை அறுத்தால் உருளைக் கிழங்கு அறுபடும்.ஆனால் பேப்பரை வெளியே எடுத்துப் பார்த்தால் பேப்பர் அறுபடாமல் அப்படியே இருக்கும்.  காரணம் என்ன?
            
          பேப்பரின் fibre உருளைக் கிழங்கின் fibre  ஐ விட பலமானது.அதனால் பேப்பர் அறுபடுவதில்லை.உருளைக் கிழங்கிற்கு பதிலாக கடினமான பொருள் ஒன்றினை அறுத்தால் பேப்பர் அறுபடும்.
******

தமிழரின் கால அளவுகள்

1

Posted on : Tuesday, July 02, 2013 | By : ஜெயராஜன் | In :

தமிழர்கள் பழங்காலத்திலேயே நுண்ணிய கால அளவுகளை வகுத்துள்ளனர். .அதன் விபரம்:
60 தற்பரை=ஒரு வினாடி.
60 வினாடி=ஒரு நாழிகை
60 நாழிகை=ஒரு நாள்
3.75 நாழிகை=ஒரு முழுத்தம்.
2 முழுத்தம்=ஒரு யாமம்.
8 யாமம்=ஒரு நாள்.
7 நாள்=ஒரு கிழமை.
15 நாள்=ஒரு பக்கம்.
2 பக்கம்=ஒரு மாதம்.
2 மாதம்=ஒரு பருவம்.
3பருவம்=ஒரு செலவு.
2 செல வு=ஒரு ஆண்டு.
365நாள்,15நாளிகை,31வினாடி,15 தற்பரைகள்=ஒரு ஆண்டு.

சாப்பாடு இலவசம்!

1

Posted on : Monday, July 01, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு உணவு விடுதியில் கீழ்க்கண்டவாறு எழுதிப் போடப்பட்டிருந்தது.
      ''இங்கு சாப்பிட்டு விட்டு நீங்கள் பணம் தர வேண்டியதில்லை.உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களிடம் வசூலித்துக் கொள்வோம்.''
இதைப் பார்த்தவுடன் பசியாய் இருந்த ஒருவன் உணவகத்திற்குள் நுழைந்து வயிறு புடைக்க சாப்பிட்டான்.சாப்பிட்டு வெளியே செல்லும்போது அவனிடம் விடுதி சிப்பந்தி ஒரு பில்லை நீட்டினார்.அவனுக்குக் கோபம் வந்து விட்டது.விடுதி உரிமையாளரிடம்,''என்ன மோசடி செய்கிறீர்களா? பிள்ளைகளிடம் வசூலித்துக் கொள்வோம் என்று எழுதிப் போட்டுவிட்டு இப்போது சாப்பிட்டதற்கு பணம் கேட்கிறீர்களே?''என்று கத்தினான். விடுதிக்காரர் அமைதியாகச் சொன்னார்,''ஐயா,இது நீங்கள் சாப்பிட்டதற்கான பில் அல்ல.உங்கள் தந்தை இங்கு முன்னால்  சாப்பிட்டதற்கான தொகைக்குரிய பில் இது.இதை உங்களிடம்தானே வசூலிக்க வேண்டும்?''அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.