உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பல்வலி

0

Posted on : Wednesday, June 30, 2010 | By : ஜெயராஜன் | In :

தேமுஜின் என்பவனுக்குக் கடுமையான பல்வலி.பல்லைத்  தான் பிடுங்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லி விட்டார்.உடனே அவன் குதிரை மீதேறி பக்கத்திலுள்ள காட்டிற்குள் சென்றான்.நீண்ட நேரம் பயணம் செய்ததில் பல்வலி கொஞ்சம் குறைந்திருந்தது.ஆனால் இப்போது அவனுக்குக் கடுமையான  பசி.சாப்பிட  ஏதாவது கிடைக்குமா என்று தேடி காட்டினுள் அலைந்தான்.அப்பகுதியின் ஆளுநர் வேட்டைக்காக வந்து அங்கு ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தார்.அவருடைய ஆட்கள் தேமுஜின்னைக் கண்டு,சந்தேகத்தில் கைது செய்து ஆளுநரிடம் கொண்டு வந்தனர்.தேமுஜின்,தான் ஒரு  தவறும் செய்யாதவன் என்று கூறியும் ஆளுநர் ஏற்றுக் கொள்ள வில்லை.''நீ தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது'' என்று கூறிவிட்டார்.தேமுஜின் சொன்னான்,'உங்களுக்கு விருப்பப்பட்ட தண்டனையைக் கொடுங்கள்.ஆனால் என்னைச் சாப்பிட மட்டும் வைத்து விடாதீர்கள்.ஏதாவது சாப்பிட்டால் நான் இறந்து விடுவேன்.'''சாப்பிடுவதனால் யாராவது இறப்பார்களா?''என்று ஆளுநர் கேட்டார்.தன்னுடைய அழுகிய பல்லைக் காட்டி தேமுஜின் சொன்னான்,'ஒரு மந்திரவாதி எனக்கு இந்தப் பல்லைக் கட்டி விட்டார்.இது அழுகிய பல் போல தோற்றமளித்தாலும் இது இருப்பதால் எனக்குப் பசியே எடுக்காது.அதை மீறி எதையாவது நான் சாப்பிட்டால்,அதுவும் குறிப்பாக,ஆட்டிறைச்சி,இனிப்புகள்,பழ  ரசங்கள்,ஆகியவற்றை சாப்பிட்டால் என் வயிறு வெடித்துவிடும்.'உடனே ஆளுநர்,''இதை நான் உண்மையாவென சோதித்துப் பார்க்க வேண்டும்,''என்று கூறி,கைதிக்கு  சிறப்பான உணவு வகைகளை அளித்திட  ஆணையிட்டார்.வகைவகையான உணவுகள் பரிமாறப்பட்டன.''சாப்பிடு,''என்று கட்டளையிட்டார் ஆளுநர்.சாப்பிடக்கூடாது என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு மிக கவனமாக முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் பின்னர் வேகமாகவும் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவுடன் பாசாங்கு செய்து இறந்தவன் போல கீழே விழுந்தான்.''வயிறு வெடித்து இறந்து விட்டான்,''என்று ஆளுநர் நினைத்தார்.உடனே அவர்,தன்னுடைய பல் மருத்துவரை வரவழைத்து,அந்தப் பல்லை பிடுங்கச் செய்தார்.மருத்துவர் ,'இது ஒரு அழுகிய பல்தான்.இதில் வேறு விசேசம் ஏதும் இல்லை.'என்றார்.ஆளுநரோ தன ஏமாற்றத்தை வெளிக்காட்டாது,,''அதை சுத்தம் செய்து வையுங்கள் எதற்கும் உபயோகப்படும்,''என்று சொல்லிவிட்டு வீரர்களைப் பார்த்து,''இவனை மலைச்சரிவில்  உருட்டி விடுங்கள்.''என்றார்.வீர்கள் அவனைத்தூக்கி எரியும் தருணத்தில் அவன் திமிறிக் குதித்து தன குதிரையின் மீதேறிவிரைந்து தப்பித்தான்.

எதிர்மறை எண்ணம்

0

Posted on : Wednesday, June 30, 2010 | By : ஜெயராஜன் | In :

'நேர்மறையான சிந்தனைகளின் அதிசயக்கத்தக்க முடிவுகள்'என்ற தலைப்பில் டாக்டர் பீலே என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.அதில் அவர் சொல்கிறார்,''நம் வாழ் நாள் முழுவதும்  நமக்குத் தேவையில்லாத பயங்களைக் கொண்டுள்ளோம்.முக்கியமில்லாத விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.ஒவ்வொருவரும் நம்மையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அஞ்சுகிறோம்.ஆனால் உண்மையில் யாரும் அப்படிக் கவனிப்பதில்லை.''ஒரு இளைஞன் ஒரு நாள் பீலேயிடம் சொன்னான்,'என்னுடைய மூக்கு நீளமாக இருப்பதால் யாருக்கும் என்னைப் பிடிப்பதில்லை.'''அவ்வாறு உன் மூக்கைக் கண்டுஉன்னை வெறுப்பவர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட முடியுமா?''என்று பீலே அவனிடம் கேட்டார்.இளைஞன் ஆறு பேரின் பெயர்களைத் தெரிவித்தான்.டாக்டர் பீலே அந்த ஆறு பேருக்கும் தனித்தனியே தொலை பேசி மூலம் பேசினார்.இளைஞனிடம்  வித்யாசமான,குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதை அவர்கள் கவனித்திருக்கிறார்கள் என்பது பற்றி விசாரித்தார்.ஒருவன் சொன்னான்,'அவன் நட்பில் சிறந்தவன்.'அடுத்தவன் சொன்னான்,'அவன் கணக்கில் புலி.' ஒரு பெண் சொன்னாள்,'அவன் பிரமாதமாக நடனம்ஆடுவான்.'யாருமே  அவனுடைய மூக்கைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை.டாக்டர் தன்னுடைய விசாரணை முடிவை அந்த இளைஞனிடம் இவ்வாறு தெரிவித்தார்,''உன்னுடைய மூக்கைப் பற்றி எதிர் மறையான எண்ணம் கொண்டிருக்கும் ஒரே நபர் நீ தான்.''

நீயா,நானா?

0

Posted on : Monday, June 28, 2010 | By : ஜெயராஜன் | In :

மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
முதியவர் : லதா,நம்முடைய கடையை மூத்த மகன் ராமுக்குக் கொடுத்துவிடு.
மனைவி : அதை  அடுத்த மகன் ராஜாவுக்குக் கொடுத்து விடுவோம்.அவன் ஒரு புத்திசாலி.
முதியவர் :சரி,நமது லாரியை மூன்றாவது மகன் முருகனுக்குக் கொடுத்துவிடு.
மனைவி :ஆனால் என் தம்பி தான் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் அவன் குடும்பத்துக்கு அது வேண்டுமே?
முதியவர்  : சரி,சரி,கிராமத்திலிருக்கும் வீட்டை நம் மகள் சாந்திக்குக் கொடுத்து விடு.
மனைவி :உங்களுக்குத் தெரியுமா?சாந்திக்கு அந்த வீடு பிடிக்காது.எனவே அதை இளைய மகள் மீனாவுக்குக்  கொடுத்து விடுவோம்.
முதியவர் :(கோபத்துடன்)இப்போது செத்துக் கொண்டிருப்பது யார்?நீயா,நானா?

கதர்

0

Posted on : Monday, June 28, 2010 | By : ஜெயராஜன் | In :

'கதர்' என்பதுஒரு அரபு மொழிச்சொல்.அதற்கு கெளரவம் என்று பொருள்.சுதந்திரப் போராட்ட வீரரான முகம்மது அலி கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை காந்தியடிகளுக்குப் போர்த்தி,''இதைக் கதராக ஏற்றுக் கொள்ளுங்கள்''என்றார்.அதன் பின் தான் இத்துணிக்கு  கதர் என்ற சொல் வழக்கு ஏற்பட்டது.

ஏன்வருகிறது?

0

Posted on : Monday, June 28, 2010 | By : ஜெயராஜன் | In :

கொட்டாவி,ஏப்பம்,விக்கல்,பொறை,இருமல் இவை ஏன் வருகின்றன?
இவை எல்லாமே நம் உடல் செயல் நிகழ்ச்சிகள் சரிவர நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்ற உடற்செயலியல் பிரதிபலிப்புகளே.
கொட்டாவி: நமக்குக் களைப்பு ஏற்படும் போதும்,மூளை சோர்வடையும் போதும் நமக்கு அறிவிக்கும் செயல்.
ஏப்பம் : நாம் உண்ட உணவில் அதிகப்படியான புரதப் பொருட்கள் இருந்தாலும்,புளிப்புப் பொருட்கள் இருந்தாலும் இவற்றைச் சிதைக்கும் பொழுது ஏற்படும் வாயுவை வெளியேற்றும் ஒரு செயல்.
விக்கல் :உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல் பட முடியாத போது ஏற்படும் ஒரு சுவாசச் சிக்கல்.
பொறை :உணவுப் பாதையில் செல்ல வேண்டிய உணவு சுவாசப் பாதையில் நுழைந்து பாதை மாறுவதால் ஏற்படும் விளைவு.
இருமல் : சுவாசப் பாதையில் ஏற்படும் ஒரு வித உறுத்தல் இருமலாக வெளி வருகிறது.

யாரிடம் முறையிட?

0

Posted on : Monday, June 28, 2010 | By : ஜெயராஜன் | In :

ராமபிரான் வனவாசத்தின் போது காட்டில் சென்று கொண்டிருக்கையில் தனது அம்பையும் வில்லையும் தரையில் நட்டுவிட்டு அருகிலிருந்தகுளத்தில் நீர்  அருந்துவதற்காக இறங்கினார்.மீண்டும் அவர் கரை ஏறி வந்த போது தனது வில் ஒரு தவளையை ஊடுருவிச்சென்றுதுளைத்திருந்ததைப் பார்த்தார்.தவளையின் உடல் முழுவதும் ரத்தத்தால் நனைந்திருந்தது.இதைக்  கண்ட ராமபிரான் மிகவும்வருந்தினார்.அவர் தவளையிடம்,''நீ ஏதாவது சப்தம் செய்திருக்கக் கூடாதா?அப்போது நீ இங்கிருப்பது எனக்குத் தெரிந்திருக்கும்.உனக்கு இந்தக் கதி வந்திருக்காதே,''என்று கேட்டார்.அதற்குத் தவளை பதில் சொன்னது,'ராமா,எனக்கு ஏதாவது ஆபத்து நேரும் போது,ராமா,என்னைக் காப்பாற்று!என்று சொல்லி உன்னைச் சரணடைவேன்.ஆனால் நீயே இப்போது என்னைக் கொல்லும்  போது நான் யாரிடம் சொல்லி முறையிடுவேன்?'
                                             பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன கதை.

தலை சுற்றுவது ஏன்?

0

Posted on : Sunday, June 27, 2010 | By : ஜெயராஜன் | In :

நாம் வேகமாக சுழன்றாடினால் தலை சுற்றுவது போல் தோன்றுவதேன்?
நம்முடைய காதுகளில் ஒலியின் அதிர்வை அறியும் அங்கவடி எலும்புகள் காது சிப்பியிலுள்ள திரவத்தில் மிதக்கின்றன.இந்தத் திரவப் பகுதியில் ஏற்படும் மெல்லிய ஒலி அலைகளே நாம் செய்திகளைக் கேட்க உதவுகிறது. நாம் வேகமாகச் சுழன்றாடும் போது நம் காதுக்குள் மேலே குறிப்பிட்ட திரவப் பகுதியில் சீரற்ற அலைகள் ஏற்படுகின்றன.இந்த உணர்வுகள் மூளையை அடைந்து நமக்கு ஒரு குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன.இதனால் தான் ஒரு சில நொடிகள் நம் தலை சுழலுவது போலவும் நம் உடல் சம நிலை பெறாமல் இருப்பது போலவும் தோன்றுகிறது.

ஞாபக சக்தி

0

Posted on : Sunday, June 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கிழவன்,தன மரணப் படுக்கையில்,தன மனைவியை அழைத்து,''நான் இறப்பதற்கு முன் சிலவற்றை உன்னிடம் சொல்ல வேண்டும்.அதாவது பக்கத்தில் உள்ள தையல்காரன் நமக்கு பத்தாயிரம் ரூபாயும்,பக்கத்து வீட்டுக்காரர் ஐயாயிரம் ரூபாயும்,என் தம்பி இருபதாயிரம் ரூபாயும் தர வேண்டும்.இவைகளை மறந்திடாமல் ஞாபகமாகக் கேட்டு வாங்கு.''என்றான்.இதைக் கேட்ட அவன் மனைவி மிக மகிழ்ச்சியுடன் ,தன பிள்ளைகளிடம் கூறினாள்,'உங்கள் அப்பா மிக நல்ல மனிதர்.அற்புதமானவர். சாகும் தருவாயிலும் அவரது ஞாபக சக்தி எவ்வளவு துல்லியமாக இருக்கிறது என்று பாருங்கள்.'அந்தக் கிழவன் மீண்டும் பேசினான்,''நான் ஒன்றைச் சொல்ல விட்டுவிட்டேன்.நம்முடைய வீட்டு சொந்தக்காரருக்கு நான் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.''இதைக் கேட்ட மனைவி,'ஒ, சாகப்போற நேரத்தில் இவரது மன நிலை சரியாய் இல்லை.ஏதேதோ உளறுகிறார்.'என்று கத்தினாள்.

குற்ற உணர்வு

0

Posted on : Saturday, June 26, 2010 | By : ஜெயராஜன் | In :

குற்ற உணர்வு என்பது ஆத்மாவில் உண்டாகிய புற்றுநோய்.உங்களை எப்போதும் அடிமை நிலையில் வைத்திருக்க,உங்களுடைய தனித்தன்மையை  அழிக்க,இந்தக் குற்ற உணர்வை மதங்களெல்லாம் ஒரு ஆயுதமாக வைத்திருக்கின்றன.ஆகவே எதைக் குறித்தும் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்.அப்படி ஏதாவது உங்களை அறியாமல் தவறு செய்து விட்டால்,அதற்காக வருந்த வேண்டாம்.மீண்டும் அதைச் செய்யாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம்.நீங்கள் குற்ற உணர்வு பெற்றால்,உங்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.இதனால் பல செயல்களில் நீங்கள் தோல்வியைத் தழுவ நேரிடும்.இதனால் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாகும்.
தவுறு செய்வது மனித இயல்பு.அதே போல் மன்னிப்பதும் மனித இயல்பு தான்.நீங்கள் உங்களையே முதலில் மன்னித்துக் கொள்ள வேண்டும்.அப்படி உங்களையே உங்களுக்கு மன்னிக்கத் தெரியாவிட்டால்,பிறரை உங்களால் எப்படி மன்னிக்க முடியும்?
உமர்கயாம் என்ற சுபி புலவர்,தன்னுடைய 'ரூபையாத்'என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தில்,''நான் குடிக்க விரும்புகிறேன்,ஆட விரும்புகிறேன்,பாட விரும்புகிறேன்.நீங்கள் கருதும்  சகல  பாவங்களையும் செய்ய விரும்புகிறேன்.ஏனெனில் கடவுள் கருணை உள்ளவர்.அவர் என்னை நிச்சயம் மன்னிப்பார்.என்னுடைய பாவச் செயல்களை அவருடைய கருணையுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.''என்கிறார்.உமர்கயாம் ஞானம் அடைந்தவர்.மிகவும் தெளிவான ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்.அவர் சொன்னதில் உள்ள முக்கிய கருத்து,''நீங்கள் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்''என்பதே.

அப்பா எங்கே?

0

Posted on : Saturday, June 26, 2010 | By : ஜெயராஜன் | In :

'உங்கப்பா எங்கே?'என்று ஒரு பெரியவர் கேட்க,பெண் பதில்
 சொன்னாள்,''வீட்டில் நிறைய பிணம் சேர்ந்து விட்டதால் அதை விற்கப் போயிருக்கிறார்.''பெரியவர் கேட்டார்,'ஓஹோ,கருவாடு விற்கப் போயிருக்கிறாரா?'
அடுத்து நின்ற பெண்ணிடம் அவளுடைய அப்பா பற்றி விசாரிக்க அவள் சொன்னாள்,''எங்கப்பா சுட்ட பிணத்தை மீண்டும் சுட சுட்ட பிணத்தைஎல்லாம் எடுத்துக் கொண்டு விற்கப் போயிருக்கிறார்.'' பெரியவரும்,'அப்படியா,அடுப்புக்கரி விற்கப் போயிருக்கிறாரா?சரி,நான் பிறகு வருகிறேன்.'என்று கூறிச் சென்றார்.

வாங்க சிரிக்கலாம்

0

Posted on : Friday, June 25, 2010 | By : ஜெயராஜன் | In :

'எப்படிங்க வாழ்க்கை?'
''மாமூல் வாழ்க்கைதானுங்க.''
'அப்போ சம்பளம் அப்படியே மிச்சம்னு சொல்லுங்க.'
**********
'முட்டைக்கு நடுவில என்ன இருக்கு?'
''மஞ்சள் கரு தான்.''
'இல்லை,ட் என்னும் எழுத்து தான்.'
**********
''ஒரு ஐம்பது பைசா காணாமல் போனதற்காக இருட்டில் தேடிக்கிட்டு இருக்காயே,காலையில் தேடக்கூடாதா?'
''அட,காலையிலிருந்து தான் தேடிக்கிட்டிருக்கேன்.''
**********
புலவர்: உங்கள் கடையிலே ரவா வாங்க வேண்டும் என்பது என் பேரவா.நான் வரவா?இல்லை என் பையனை அனுப்பித்தரவா?
கடைக்காரர்: ஒரே தொந்தரவா  போச்சு.
**********
தாய்: மகனே,உன்னை உளுந்தும் பெருங்காயமும் வாங்கக் கடைக்கு அனுப்பினால் நீ கீழே விழுந்து பெருங்காயத்துடன்    வந்திருக்கிறாயே?
**********
''புளிரசம் வைக்கவா,மிளகு ரசம் வைக்கவா என்பதில் உனக்கும் உன் மாமிக்கும் ஏற்பட்ட சண்டை என்னாச்சு?''
'அக்கம் பக்கத்தில வந்து சமரசம் செஞ்சாங்க.'
**********
''இங்கு சப்தம் செய்யாதீர்கள்''என்று ஒரு அரசு அலுவகத்தில்  ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.குறும்புக்காரர் ஒருவர் அதன் பக்கத்திலேயே,'இல்லையென்றால் நாங்கள் எழுந்து விடுவோம்.'என்றுஎழுதி வைத்தார்.
**********
காதல் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்ட தந்தை கேட்டார்,''அவனிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?''மகள் ஆச்சரியத்துடன் கேட்டாள்,''இதே கேள்வியைத்தான் அப்பா அவரும் கேட்டார்.'
**********
''கண்ணே, என்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காகத்தான் என்னைக் காதலிக்கிறாயா?''
'இல்லை,என்னிடம் பணம் இல்லை என்பதற்காகத்தான் காதலிக்கிறேன்.'
**********
விபத்தில்  நினைவிழந்த கணவன்,நினைவு வந்ததும் கேட்டான்,''நான் சொர்க்கத்தில் இருக்கிறேனா?''மனைவி சொன்னாள்,'நான் இங்கே இருக்கிறேன் தெரியவில்லையா?'

**********
''

அழகான பெருக்கல்

0

Posted on : Friday, June 25, 2010 | By : ஜெயராஜன் | In :

கீழேதரப்பட்டுள்ள பெருக்கல்களில் ஒருசிறப்பம்சம்உள்ளது.விடையில்வரும் எண்கள் எல்லாம் ஒரே எண்கள் திரும்பவும் வருகின்றன.அதுவும் வரிசையாக வருகின்றன.(same figures in the same order starting in a different place as if written round the edge of a circle)
142857 X2= 285714
142857 X3 =428571
142857X4 =571428
142857 X5 =714285
142857 X6=857142

நனையும் குழந்தை.

1

Posted on : Monday, June 21, 2010 | By : ஜெயராஜன் | In :

கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய் கனத்துப் பெய்யும் மழையில் தன கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று தன முதுகையே கூடாரமாக்குவாள்.அப்படியும் அக்குழந்தை நனையும்,தாயின் கண்ணீர்த்துளிகளால்.
                                                    --மேனாட்டுக் கவிதை ஒன்றிலிருந்து

புத்திசாலித்தனம்

0

Posted on : Monday, June 21, 2010 | By : ஜெயராஜன் | In :

பட்டதாரி இளைஞர் ஒரு அரசியல்வாதி நிர்வாக அதிகாரியாக இருந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று கேட்க,
அரசியல்வாதி:உன்னால் ஒரு லட்சம் ரூபாய் தர முடியுமா?
இளைஞன்:முடியாது ஐயா.
அரசியல்வாதி: கொடுத்தால் உன்னை ஒரு நிர்வாகி ஆக்குவேன்.சரி,உன்னிடம் முனைவர் பட்டம் இருக்கிறதா?
இளைஞர்: இல்லை ஐயா.
அரசியல்வாதி: இருந்தால் ஒரு கல்லூரியில் உன்னை ஒரு பேராசிரியர் ஆக்குவேன்.உனக்கு நடிக்கத் தெரியுமா?
இளைஞன்:தெரியாது ஐயா.
அரசியல்வாதி: தெரிந்தால் உன்னை நடிகனாக்கலாம்.உன்னிடம் புத்திசாலித்தனம் இருக்கிறதா?
இளைஞன்:நிறைய இருக்கிறது ஐயா.
அரசியல்வாதி:அடடே,அது மட்டும் இல்லாதிருந்தால் உன்னை அரசியல்வாதியாக ஆக்கலாம்.

நம்பவில்லை

0

Posted on : Monday, June 21, 2010 | By : ஜெயராஜன் | In :

அரசியல்வாதிகள் பயணம் செய்த ஒரு பேருந்து ஒரு மரத்தில் மோதி பின் ஒரு விவசாயியின் வயலுக்குள் கவிழ்ந்தது.அந்த நிலத்துக்கு சொந்தக்காரரான விவசாயி என்ன நடந்தது என்று பார்க்கப் போனார்.ஒரு பெரிய குழியைத் தோண்டி அனைவரையும் புதைத்துவிட்டு வயலுக்குள் சற்றுத் தள்ளியிருந்த தன வீட்டிற்குச்  சென்றார்.சிறிது நேரம் கழித்து போலீஸ்காரர்கள் வந்தார்கள்.கவிழ்ந்த பேருந்து மட்டும் கிடந்தது.பயணிகள் யாரையும் காணவில்லை.அவர்கள் விவசாயி வீட்டுக் கதவைத்தட்டி விசாரித்தனர்.பயணிகளான அரசியல்வாதிகள் அனைவரையும் புதைத்துவிட்டதாக விவசாயி அவர்களிடம் சொன்னார்.எல்லோருமா இறந்து விட்டார்கள் என போலீஸ் அதிகாரி கேட்டார்.''நான் வரிசையாக ஒவ்வொருவராய் புதைத்து வந்தேன்.ஒரு சிலர் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள்.ஆனால் நான் நம்பவில்லை.உங்களுக்குத் தெரியாதா என்ன? அரசியல்வாதிகள் எப்படிப் பொய் சொல்வார்கள் என்று?''என்றார் விவசாயி.

தந்திரம்

0

Posted on : Sunday, June 20, 2010 | By : ஜெயராஜன் | In :

வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு,இளைஞர்கள் சிலர்  கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது.ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,''நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன்.எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,'' என்றார்.இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்!தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா!அவர்கள் தினசரி விளையாடினார்கள்.ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான்  கொடுத்தார்.மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.நான்காவது வாரம்,தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.''வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா?இனி நாங்கள் இங்கே விளையாட வரமாட்டோம்.''என்று கூறிச் சென்று விட்டனர்.பெரியவருக்கு இப்போது பரம திருப்தி.

உயர்ந்தவர் யார்?

0

Posted on : Sunday, June 20, 2010 | By : ஜெயராஜன் | In :

மகா விஷ்ணு : நாரதா,பெரியது எது?
நாரதர் :பூமி.
விஷ்ணு :உலகில் முக்கால் பாகம் நீர்.கால் பாகம் தானே நிலம்?
நாரதர் :தண்ணீர் தான் பெரியது.
விஷ்ணு :அகத்தியர் தவத் தீயை அணைக்க ஏழு கடலையும் குடித்தாராமே?
நாரதர் :அகத்தியர் தான் பெரியவர்.
விஷ்ணு :இவ்வளவு பெரிய வானில் அவர் ஒரு சிறு நட்சத்திரம் தானே?
நாரதர் :வானம் தான் பெரிது.
விஷ்ணு :வானமே,என் ஒரு பாத அடிதானே?
நாரதர் :பிரபோ,நீங்கள் தான் பெரியவர்.
விஷ்ணு :நீ கூறினாயே,நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம்,காற்று இந்த பஞ்ச பூதங்களால் ஆனா என் பக்தன் தான் உயர்ந்தவன்.அவனதுஉள்ளத்தில் தானே நான் பிடிபட்டுக் கிடக்கிறேன்?ஆக பக்தன் தானே உயர்ந்தவன்?
நாரதர் :ஆம்,பிரபு.

வாழை

0

Posted on : Saturday, June 19, 2010 | By : ஜெயராஜன் | In :

வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவை.
இலை :வாழை இலையில் சாப்பிட்டால் மந்தம் வராது;உடலுக்கு நல்லது.
பூ :குடல் கிருமிகளை அழிக்கவல்லது.
பிஞ்சு :வயிற்றுக் கடுப்பை அகற்றும்.
காய் :உடல் சூட்டைத் தணிக்கும்.
கனி :மலச்சிக்கலைக் களையும்.
தண்டு :சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.
பட்டை :தீப்புண்ணை ஆற வைக்கும்.
சாறு :பாம்புக்கடி விஷத்தை முறியடிக்கும்.
நார் :பூத்தொடுக்க உதவும்
         வாழையைப்போல் பிறருக்கு உதவியாக வாழ்க என்பதைத்தான்  வாழையடி வாழையாக வாழ்க என்கிறார்கள்.

மரியாதை

0

Posted on : Saturday, June 19, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஞானியைத் தேடி வந்த இளைஞன் அவரிடம்,''நான் உங்களுக்கு சீடனாக விரும்புகிறேன்.அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.''
ஞானி ;உள்ளே வா,இப்போது உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது.
இளைஞன் ;சொல்லுங்கள்,செய்யக் காத்திருக்கிறேன்.
ஞானி ;கொஞ்ச நேரம் என் உடம்பில் ஏறி மிதிக்க வேண்டும்.
இளைஞன் ;நீங்கள் பெரிய ஞானி.உங்கள் கால் தூசுக்கும் நான் ஈடாக மாட்டேன்.உங்கள் மேல் என் கால் படுவதா?
ஞானி ;இப்போது எனக்கு உடல் வலி....
இளைஞன் ;அதற்காக என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன்.ஆனால்  உங்கள் புனிதமான உடலை நான் மிதிக்க மாட்டேன்.
ஞானி ;என் உடலை மிதிக்க நீ மறுக்கிறாய்.ஆனால் என் வார்த்தைகளை மிதிக்கிறாய்.குருவை மதிப்பவனாக நீ எப்படி ஆக முடியும்?
இளைஞன் குழம்பினான்.
குரு தெளிவுபடுத்தினார்;மரியாதைக் குறைவாகத் தோன்றும் செயல்கள் எல்லாம் மரியாதைக் குறைவான செயல்கள் அல்ல.

அத்தான்

0

Posted on : Friday, June 18, 2010 | By : ஜெயராஜன் | In :

அம்மான் சேய் அதாவது மாமாவின் குழந்தை,அம்மாஞ்சி ஆயிற்று.
அத்தை மகன் அத்தான் என்றாயிற்று.
நொய்து என்றால் லேசான என்று பொருள்;அரிசியை விட நொய்தாக இருப்பதால் நொய் அரிசி என்று ஆனது.
அதைவிடச் சிறியது குறு நொய்;அதுவே குருணை ஆயிற்று.
**********
அச்சம் என்பது அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுதல் ஆகும்.
மடம் என்பது,அனைத்தும் அறிந்தும்,தெரியாதது போல் அடக்கமாக இருப்பது.
நாணம் என்பது வெட்கம்.
பயிர்ப்பு என்பது பிற ஆடவரின் ஸ்பரிசம் அருவருப்பைத் தருவது ஆகும்.
பெண்ணின் இலக்கணமாக முன்னாளில் கருதப்பட்டவை இவை.
**********

பொன்மொழி -10

0

Posted on : Friday, June 18, 2010 | By : ஜெயராஜன் | In :

கசப்புச் சொற்களும்,கடுமையான சொற்களும் சொல்பவன் பக்கத்தில் நியாயமில்லை என்பதைப் பறை சாற்றுகின்றன.
**********
அடுத்தவன் தோள் மீது ஏறி சவாரி செய்பவனுக்கு அடுத்த ஊர் அருகிலிருந்தால் என்ன?தொலைவில் இருந்தால் என்ன?
**********
வாழ்க்கை என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் போது,வாழ்க்கை முடிந்து விடுகிறது.
**********
சகிப்புத்தன்மை என்பது,சமயோசித உணர்வால் அடக்கப்பட்ட கோபமே தவிர வேறொன்றுமில்லை.
**********
நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் நிதானம் காட்டு.
நண்பனைத் துறப்பதில் அதை விட நிதானம் காட்டு.
**********
நாணயம் தயாரிக்கப்பட்ட போதே மனித நாணயம் தவறிப் போய்விட்டது.
**********
பொறுமை கசப்பு;ஆனால் அதன் கனி இனிப்பு.
**********
ஒரு பிழையை உணர்ந்து நீங்கள் திருந்த மறுக்கும் போது தான் அது தவறாகிறது.
**********
குழந்தைகளைக் கழுதைகள் ஆகவும் ,ஒன்றுக்கும் மதிப்பில்லாதவராகவும்  நீங்கள் கருதினால்,உங்கள் வயது நாற்பதைத் தாண்டி விட்டது என்று அர்த்தம்.
**********
வெற்றி  என்பது குறிக்கோள் அன்று ;அது ஒரு பயணமே.
**********
வேலை மனிதனைக் கொல்லாது;கவலைதான் கொல்லும்
**********.

ஏற்றுக்கொள்ளாதது

0

Posted on : Friday, June 18, 2010 | By : ஜெயராஜன் | In :

புத்தர் ஒரு முறை தனது சீடர்களுடன் ஒரு ஊருக்குள் சென்றார்.அந்த ஊர் மக்கள் பல்வேறு பலகாரங்களைக் கொண்டு வந்து அவரை எடுத்துக்   கொள்ளச் சொன்னார்கள்.ஆனால் அவரோ,எதையும் எடுத்துக் கொள்ளாமல் புன்முறுவலோடுபோய்விட்டார்.அடுத்த ஊர் வந்தது.அந்த ஊர் மக்களோ புத்தரை வாய்க்கு வந்தபடி திட்டினர்.அப்போதும் அவர் புன்  முறுவலோடு சென்று விட்டார்.ஒரு சீடர் கேட்டார்,'சுவாமி,அவ்வளவு பேர் அவதூறாகப் பேசினார்களே,பதிலுக்கு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வந்து விட்டீர்களே?உங்களால் எப்படி முடிகிறது?'புத்தபிரான் சொன்னார்,''நாம் முதலில் சென்ற ஊர் மக்கள் கொடுத்த பலகாரம் எதையும் ஏற்கவில்லை  அல்லவா?அதே போலத்தான் இந்த ஊர் மக்கள் கொடுத்ததையும் நான் ஏற்கவில்லை.அங்கே வயிறு ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.இங்கே மனம் ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.அவ்வளவுதான்.''

நல்ல தம்பி

0

Posted on : Thursday, June 17, 2010 | By : ஜெயராஜன் | In :

அறிஞர் அண்ணா அவர்களின் 'நல்லதம்பி' கதையை என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்துப்  படம் வெளி வந்ததும்,அண்ணாவைப் படம் பார்க்க அழைத்தார் என்.எஸ் கே.படம் பார்த்து முடித்த பின் அண்ணா என்.எஸ் கேயைக் கேட்டார்,''கிந்தனார் கதா காலேட்சபம்,மது விலக்குப் பிரச்சாரம் இவற்றுக்கிடையே என் கதையை எப்படி நுழைத்தீர்கள்?''

சரிகமபதநி

0

Posted on : Thursday, June 17, 2010 | By : ஜெயராஜன் | In :

கர்நாடக சங்கீதத்தில் சரிகமபதநி பற்றிய ஒரு விளக்கம்;
ச-சட்ஜமம்  --மயிலின் அகவல்.
ரி-ரிஷபம்    --காளையின் ஹூங்காரம்.
க -காந்தாரம் --ஆட்டின் குரல்.\
ம -மத்யமம்  --கொக்கின் குரல்.
ப -பஞ்சமம்  --குயிலின் குரல்
த -தைவதம் --குதிரையின் கனைப்பு.
நி -நிஷாதம் --யானையின் பிளிறல்.
             -நாராதீய சிட்சா என்ற நூலிலிருந்து.

சரியான பையன்

0

Posted on : Thursday, June 17, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கருமியான பணக்காரன் சாகும் தருவாயில் இருந்தார்..அப்போது தன மூத்த மகனைக் கூப்பிட்டு,''என்னைஎப்படி அடக்கம் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டார்..மூத்த மகன்,'சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்வேன்,''என்றான்.இருந்த சக்தியெல்லாம் திரட்டி ஒரு அறை கொடுத்தார் தந்தை மகனுக்கு.''ஏண்டா,நான் சேர்த்து வைத்ததையெல்லாம் அநியாயமாகக் காலி செய்து விடுவாய் போலிருக்கே,''என்றவர்,அடுத்த மகனைக் கூப்பிட்டு அதே கேள்வியைக் கேட்டார்.அவன் சொன்னான்,''சாதாக் கள்ளிப் பலகையில் அடக்கம் செய்வேன்,''தந்தை கோபத்துடன்,''கள்ளிப் பெட்டியை ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?ஒரு நாள் அடுப்பெரிக்க உதவுமே.நீயும் சரியில்லை.''என்றார்.மூன்றாம் மகன் அதே கேள்விக்குப் பதில் சொன்னான்,''அப்பா,நீ இறந்தவுடன் உன் உடல் உறுப்புக்களை ஏதாவது ஒரு டாக்டரிடம் விற்று விடுவேன்.''தந்தை மகிழ்ச்சியுடன் சொன்னார்,''சபாஷ்,நீதான் சரியானபையன்.ஆனால் ஒன்று.என்உறுப்புக்களை மேலத் தெருவில் இருக்கும் டாக்டரிடம் விற்று விடாதே.மனுஷன் உடனே பணம் தராது இழுத்தடிப்பான்.''

வீண் செலவு

0

Posted on : Thursday, June 17, 2010 | By : ஜெயராஜன் | In :

மரணப் படுக்கையில் தந்தை. சுற்றிலும்  அவருடைய  மூன்று  பையன்கள். மூத்தவன் சொன்னான்,''அப்பா இறந்ததும்,மிகப் பிரமாதமாகச் செலவு செய்து அடக்கம் செய்ய வேண்டும்,''இரண்டாம் மகன் சொன்னான்,''ரொம்ப ஆடம்பரம் வேண்டாம்.சுமாராகச் செய்யலாம்.''மூன்றாம் மகன் சொன்னான்,''அப்பாவே  இறந்த பின் வீண் செலவு எதற்கு? சிக்கனமாகச் செய்யலாம்.''மரணப் படுக்கையிலிருந்த தந்தை சிரமப்பட்டுப் பேசினார்,''பிள்ளைகளே,கட்டிலுக்கு  அடியில் என் கைத்தடி இருக்கிறது.அதை எடுத்துக் கொடுத்தீர்களேயானால்  நான் மெது மெதுவே நடந்து சுடு காட்டிற்குச் சென்று விடுவேன்.அங்கு சென்றதும் நான் இறந்து விடுவேன்.உடனே செலவு ஏதும் இன்றி நீங்கள் அடக்கம் செய்யலாம்.''

புத்திசாலி

0

Posted on : Wednesday, June 16, 2010 | By : ஜெயராஜன் | In :

'ஒரே ஒரு ரூபாய் வைத்து,அதற்குள் எள்,புண்ணாக்கு,எண்ணெய்,விறகு  இத்தனையும் வாங்கிக் கொடுத்து மீதிச் சில்லரையும் தருபவர் தான் என் கணவர்,'என்றாள் ஒரு அழகான இளம்பெண்.கல்யாணம் நடக்குமா என்று கவலை கொண்டார் அவள் தந்தை.ஒருவன் ஒரு ரூபாய் எடுத்துக் கொண்டு போய்,அரை ரூபாய்க்கு ஒரு விவசாயியிடம் எள் செடி வாங்கிக் கொண்டு வந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மீதி காசையும் கொடுத்தான்.பின் அவன் விளக்கம் சொன்னான்,''இச்செடியில் எள் இருக்கிறது.எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிறது.புண்ணாக்கும் இருக்கிறது.எள் செடி காய்ந்தால் விறகு.''புத்திசாலி கணவனைக் கண்டுகொண்டாள் அந்தப் பெண்..

தையல்காரன்.

0

Posted on : Wednesday, June 16, 2010 | By : ஜெயராஜன் | In :

தையல்காரன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சம்பாச்சு.அவனிடம் மேல் சட்டை தைக்கக் கொடுத்திருந்த ஒருவன் வந்து,சட்டையைப் போட்டுப் பார்த்ததில் ஒரு கை குட்டையாக இருந்தது.அதை சரி செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது சம்பாச்சு சொன்னான்,''இந்த துணி கலை நயம்வாய்ந்த துணி.இதைத் திரும்பத் தைத்தால் அதன் நயம் கெட்டுவிடும்.கையைக் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.''சரியென்று பார்த்தால் முதுகுப் பக்கம் துணி அதிகமாக இருந்ததால் மிக லூசாக இருந்தது.இதற்கென்ன செய்வது என்று கேட்டதற்கு,''கொஞ்சம் கூனிக் கொள்ளுங்கள்.சரியாக இருக்கும்.இவ்வளவு நல்லதுணியை மீண்டும் பிரித்து அதன் அழகைக் கெடுக்க விரும்பவில்லை.'' என்றான் சம்பாச்சு.வேறு வழியின்றி அவன் சொன்ன மாதிரியே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டு சற்றுக் கூனியவாறு நடந்து கொண்டு கடையை விட்டு வெளியேறினான்.வழியில் ஒருவன் அவனைப் பார்த்து,'இந்த சட்டைமிக அழகாக இருக்கிறது.இதை சம்பாச்சு தான் தைத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.'என்றான்.சட்டைக்காரனுக்கோ மிக ஆச்சரியம்.''எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னாய்?''என்று கேட்டான்.வந்தவன் சொன்னான்,
 ''எனக்கு எப்படித் தெரியும்  என்றா கேட்கிறீர்கள்?சம்பாச்சுவால் தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகாக ஆடையை தைக்க முடியும்.''

சிரித்து சிரித்து

0

Posted on : Tuesday, June 15, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு இடத்தில் காந்தி,ஜான்சி ராணி ,வீர சிவாஜி ஆகியோரின் சிலைகள் இருந்தன.அந்த வழியே போன ஒருவரிடம் காந்தி சிலை சொன்னதாம்,''இதோ பாரப்பா,அவங்க இரண்டு பெரும் ஜம்முன்னு குதிரை மேலே உட்கார்ந்திருக்காங்க!எனக்கும் ஒரு குதிரை தரக்கூடாதா?''வந்த ஆள் சிலை பேசுகிறதைப் பார்த்து ,ஒரு மந்திரியிடம் போய் சொல்லி அவரை அழைத்து வந்தார்.காந்தி சிலை கேட்டதாம்,''என்னப்பா,ஒரு குதிரையை நான் கேட்டால் ஒரு கழுதையைக் கூட்டி வந்திருக்கிறாயே!''
**********
அமெரிக்க விஞ்ஞானி; நாங்கள் ஒரு கருவி கண்டு பிடித்துள்ளோம்.அதன் முன்னால் யாரும் பொய் பேச முடியாது.
இந்திய விஞ்ஞானி; இது ஒன்றும் புதிதில்லை.இந்தியர்களாகிய நாங்கள் அந்த மாதிரிக் கருவியைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம்.
**********
நோயாளி ; ஒரு வாரமா உடம்பு சரியில்ல,டாக்டர்.
டாக்டர் ; ஒரு வாரமா ஏன்இங்கு வரலை?
நோயாளி ; அதான் சொன்னேனே,உடம்பு சரியில்லையின்னு.
**********
''மூணு பேர் ஆத்தில குதிச்சு நீந்தினாங்க..அதில ஒருத்தர் முடி தான் நனைந்து இருந்தது.''
'அது எப்படி?'
''மீதி ரெண்டு பேர் தலையும் வழுக்கை.''
**********
நாவலாசிரியர் ; தெரியுமா உனக்கு?கொஞ்ச நேரத்துக்கு முன்னால்
புத்தகம்  வாங்க வந்த ஒருவன் அந்தக் கடையிலிருந்து நான் எழுதிய நாவல் ஒன்றைத் திருடிக் கொண்டு போய் விட்டானாம்.
மற்றவர்; அதற்கான் தண்டனையை அவன்  சீக்கிரம் அனுபவிப்பான்.
**********
''நேத்து ராத்திரி டி.வி.இல வானிலை  அறிக்கை கேட்டாயா?''
;நான் கேட்கலை.அவங்கதான் சொன்னாங்க.'
**********
''அறுபதடிஉயர ஏணியிலிருந்து விழுந்து விட்டேன்.நல்ல வேளை,சிறு காயம் கூட இல்லாமல் தப்பிச்சிட்டேன்.'
'ஆச்சரியமா இருக்கே,எப்படி?'
''நான் விழுந்தது ஏணியின் இரண்டாவதுபடியிலிருந்து தானே!''
**********
முதலாளி/; கோழிப் பண்ணையில் வேலைக்கு வந்தால் கோழி முட்டையைத் திருட மாட்டாயே?
தொழிலாளி;கேட்டுப் பாருங்க எசமான்,நான் முன்னே வேலை பார்த்த கப்பல் கம்பெனியிலே ஒரு கப்பலைக் கூடத் திருடினதில்லீங்க.
**********
ஒரு விவசாயி வங்கிக்கு சென்று,இரண்டாயிரம் ரூபாய் கடன் கேட்டான்.'உன்னிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றன?"என்று அதிகாரி கேட்டார்.''இருபது மாடுகள் ''என்றான் விவசாயி.கடன் கொடுக்கப் பட்டது.சில மாதங்கள் கழித்து விவசாயி நிறைய பணத்துடன் வங்கிக்கு வந்து,கடனை அடைத்தான்.மீதிப் பணத்துடன் புறப்பட்ட அவனை பார்த்து அதிகாரி,'கையிலிருக்கும் பணத்தையும் இந்த வங்கியிலேயே போட்டு விடுங்களேன்.'என்றார்.சந்தேகப் பார்வையுடன் விவசாயி கேட்டான்,''உங்களிடம் எத்தனை மாடுகள் உள்ளன?''
**********
யாருக்கும் சுலபமாகப் பணம் கொடுக்காத வட்டிக் கடைக் காரர் ஒருவரிடம் கடன் வாங்க வந்தார் ஒருவர். வட்டிக் கடைக்காரர் ஒரு சோதனை வைத்தார்.'என் கண்ணில் ஒன்று போலிக்கண்.அதை சரியாகக் கண்டு பிடித்தால் கடன் தருகிறேன்.'என்றார்.வந்தவர் சரியான விடையை சொல்ல,வட்டிக் கடைக்காரர் அதிசயத்துடன்,'எப்படி சரியாகச் சொன்னீர்கள்?'என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''அந்தக் கண்ணில் தான் கொஞ்சம் கருணை இருப்பதாகத் தெரிந்தது.''
**********

நஷ்டம்

0

Posted on : Tuesday, June 15, 2010 | By : ஜெயராஜன் | In :

நீசனுக்கு நீ செய்யும் நூறு உபகாரங்களும்  நஷ்டம்.
மூடனுக்கு அளிக்கும் நூறு புத்திமதிகளும் நஷ்டம்.
கேளாதவனுக்கு  சொல்லும்  நூறு நல்லுபதேசங்களும்  நஷ்டம்.
அறிவில்லாதவனுக்கு அளிக்கும் நூறு ஞானோபதேசங்களும் நஷ்டம்.
பாத்திரமில்லாதவனுக்கு அளிக்கும் நூறு  தானம் நஷ்டம்.
நன்றியற்றவர்களுக்கு செய்யும் நூறு உதவி நஷ்டம்/
குணம்ற்றவர்களுக்குக் காட்டும் நூறு கருணை நஷ்டம்.

நீ யார் கேட்க?

1

Posted on : Monday, June 14, 2010 | By : ஜெயராஜன் | In :

மேல் மாடியில் இருந்தவர்கள் எப்போதும் இரைச்சல் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.கீழ்ப் பகுதியில் இருந்த முல்லா,''ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?எங்களால் தூங்க முடியவில்லை.''என்றார்.மேல் மாடியில் இருந்தவர்கள் சொன்னார்கள்,''நாங்கள் வாடகை கொடுக்கிறோம்;என்ன வேண்டுமானாலும் மேல் மாடியில் செய்வோம்.நீ யார் அதைக் கேட்க?'' உடனே முல்லா,கீழே வந்து வீட்டின் கீழ்ப் பகுதியைக் கடப்பாரையால் இடிக்க ஆரம்பித்தார்.உடனே மேல் மாடிக்காரர்கள் கேட்டார்கள்,''கீழ் பகுதியை இடித்தால் மேல் பகுதியும் விழுந்து விடுமே?ஏன் இடிக்கிறீர்கள்?''முல்லா சொன்னார்,''கீழ்ப் பகுதிக்கு நான் வாடகை கொடுக்கிறேன்;கீழ்ப் பகுதியில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.அதைக் கேட்க நீ யார்?''மேல் மாடிக்காரர்கள் மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்தார்கள்.

செய்யாதீர்கள்

0

Posted on : Monday, June 14, 2010 | By : ஜெயராஜன் | In :

அழகில்லா உருவங்களை ஒதுக்காதீர்கள்;
அதற்குள் ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.
அழகான உருவங்களுக்கு ஏங்காதீர்கள்;
அங்கே ஆணவம் தலை தூக்கி நிற்கிறது.
வறுமையில் வாடுபவர்களைக் கேலி செய்யாதீர்கள்;
அங்கே வாழ்க்கைத்தரம் வணங்கிக் கொண்டிருக்கிறது.
பணக்காரன் வீட்டுப் படிக்கட்டில் ஏறாதீர்கள்;
அங்கே அவமரியாதை காத்துக் கொண்டிருக்கிறது.
மேதைகளை அளவுக்கு மீறிப் புகழாதீர்கள்;
அங்கு மேதைத்தன்மை  அத்தோடு முடிந்து விடுகிறது.
                                                  --கண்ணதாசன்

கள்

0

Posted on : Monday, June 14, 2010 | By : ஜெயராஜன் | In :

கள்ளுக்கு போதை உண்டு.கள்ளை உண்டால் தான் போதை வரும் என்பதல்ல.கள் என்ற சொல்லுக்கே போதை வரும்.சான்றாக,'நீ'என்று சொல்பவரை நீங்கள் என்று சொல்லிப் பாருங்கள்,அவருக்கு உடனே எவ்வளவு போதை வருகிறதென்று!

சிம்பன்சி

0

Posted on : Sunday, June 13, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு சர்க்கஸ் கம்பெனி மிகச் சிறப்பாகக் காட்சிகளை நடத்தி வந்தது.அதிலும் ஒரு சிம்பன்சி குரங்கின் அட்டகாசமான ஆட்டங்கள் அந்தக் காட்சிக்கே  பெரும் சிறப்பைத் தந்தது.திடீரென அந்தகுரங்கு இறந்து விட்டது.கம்பெனியின்மேனேஜர் முதலாளிக்கு ஒரு தந்தி கொடுத்தார்,''சிம்பன்சி இறந்து விட்டது.அதற்குப் பதிலாக வேறொன்று மாற்றவா அல்லது நீங்கள் வரும் வரை காத்திருக்கவா?''

கச்சேரி 
கச்சேரியில் மிருதங்க வித்துவான் பாடகருடன் ஒத்துழைக்கவில்லை.கச்சேரி  முடிந்தவுடன் பாடகர் சொன்னார்,''அவன் என் பாட்டுக்கு எங்கே வாசித்தான்?அவன் பாட்டுக்கு வாசித்துக் கொண்டே போனான்.''

பொன்மொழிகள் -9

0

Posted on : Sunday, June 13, 2010 | By : ஜெயராஜன் | In :

''குற்றங்குறைகளைச் சொல்லுங்கள்,''என்று கேட்பார்கள்.ஆனால் புகழ்ந்து சொல்வதைத் தான் விரும்புவார்கள்.
**********
''இளமையாக இருக்கிறீர்களே,''என்று உங்களை உங்கள் நண்பர்கள் பாராட்டினால் உங்களுக்கு வயதாகிறது என்று அவர்கள் நினைப்பதாக அர்த்தம்.
**********
பணம் என்பது ஆறாவது அறிவு;அது இல்லாவிட்டால் ஐந்து அறிவும் வீண்.
*********
பிறக்கும் போது எல்லோருமே பைத்தியம் தான்.சிலர் கடைசி வரை அப்படியே இருந்து விடுகிறார்கள்.
**********.
பணம் என்பது கடல் நீர்.குடிக்கக் குடிக்க தாகத்தை அதிகமாக்குவது தான் அதன் தன்மை.
**********
தனி மரம் தோப்பாகாது.ஆனால் அது ஒரு தோப்பு உருவாக துணை புரிகிறது.
**********
ஓடுவதில் பயனில்லை;நேரத்தில் புறப்படுவது தான் முக்கியம்.
**********
அகங்காரம் வரும் போது அவமானமும் கூடவே வரும்.
**********
நம்முடைய முக்கிய  குறைபாடு என்னவென்றால்,நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக,அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறோம் என்பது தான்.
**********
மனித இனத்தை மாற்ற வேண்டும் என்று எல்லோரும் கூறுகிறார்கள்;தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யாருமே சிந்திப்பதில்லை.
**********
நழுவாமல் எதிர் நோக்குங்கள்.எந்தப் பிரச்சினையும் சின்னதாகி விடும்.
முள்ளை மெல்லத் தொட்டால் குத்தும்.அழுத்திப் பிடித்தால் நொறுங்கி விடும்.
**********
பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவது பன் மடங்கு மேல்.
**********
துரதிருஷ்டம் இரண்டு வகை;ஒன்று நமக்கு வரும் துரதிருஷ்டம்;மற்றது பிறர்க்கு வரும் அதிருஷ்டம்.
**********

தியாகி

0

Posted on : Sunday, June 13, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு கல்லின் மேல் அழுக்குத் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தான் ஒரு சலவைத் தொழிலாளி.''அழுக்கடைவது துணி;அதை வெளுக்கும் போது அடிபடுவது நீ.ஆஹா,உன் தியாகமே தியாகம்.,''என்று கல்லைப் புகழ்ந்தது கழுதை.''மன்னியுங்கள்.துணி வெளுக்கப்படும் போது நானும் வெளுக்கப்படுகிறேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.,''என்றது கல்.அசடு வழிந்தகழுதை முணுமுணுத்தது,''பிழைக்கத்தெரியாத தியாகி.''

அடிப்பது யார்?

0

Posted on : Saturday, June 12, 2010 | By : ஜெயராஜன் | In :

வீட்டை விட்டு ஓடிப் போவதைப் பற்றி இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள்.;;இது நம்முடைய தகப்பனார்களுக்குத் தெரிய வந்தால் நம்மை அடிப்பார்களே?''என்றான் ஒருவன்.''அதனாலென்ன,நாம் அவர்களைத் திரும்பி அடித்தால் போயிற்று.''என்றான் மற்றவன்.''நாம் அவ்வாறு செய்ய முடியாதே.ஏனெனில் உன் தகப்பனையும்,தாயையும் மதிக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது அல்லவா?''என்றான் முதல்வன்.''சரி,அப்படியானால் ஒன்று செய்வோம்.நீ என்னுடைய அப்பாவை அடி.நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்.''என்றான் மற்றவன்.

சந்தர்ப்பம்

0

Posted on : Saturday, June 12, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான்.எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான்.''என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை.சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன்.அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன்.நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள்.ஒரு மனிதனை வெற்றிப்பாதையில்  செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள்,''என்று சொன்னான்.அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு ,''ஆமாம்,எனக்கு ஞாபகம் வந்து விட்டது.அப்புறம் சொல்லுங்கள்''என்று ஆவலுடன் கேட்டான்.அதற்கு அவன்,''நல்லது,இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?''என்று கேட்டான்.

ஆற்றில் விழுந்த அழகி

0

Posted on : Friday, June 11, 2010 | By : ஜெயராஜன் | In :

அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் போது
''நமக்கென்ன''என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்.
''ஆபத்து,ஆபத்து!''என்று அலறுபவன் பொது ஜனம்.
''ஐயோ பாவம்''என்று முணுமுணுப்பவன் அனுதாபி
''ஆண்டவனே, அவளைக் காப்பாற்று'' என்பவன் பக்தன்.
''அற்புதமான அழகு''என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்.
''பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்''என்பவன் சீர்திருத்தவாதி.
''ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை''என்பவன் எதிக்கட்சிக்காரன்.
''எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்''என யோசிப்பவன் ஆளும் கட்சிக்காரன்.
காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறப்பவன் தியாகி.
ஆற்றில்  இறங்கி,காப்பாற்றி,தன வழியே செல்பவன் கர்மயோகி.

குறிப்பு

0

Posted on : Friday, June 11, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கிராமத்தில்ஒரு வைத்தியன் எந்த நோயாளியின் வீட்டிற்கு வைத்தியத்திற்குப் போனாலும் அந்த வீட்டு ஜன்னலில் ஒரு சிறு கல்லை எடுத்து வைத்து விட்டுத்தான் மருந்து கொடுப்பான்.''என்னிடம் மருந்து சாப்பிடும் நோயாளி கல்லால் அடித்தாலும் சாக மாட்டான் என்பதற்கு அடையாளமாகத்தான் இப்படிக் கல்லை வைக்கிறேன் ''என்று கூறுவான்.ஒரு முறை ஒரு நோயாளி இறந்து விட்டான்.நோயாளியின் தாயார் வைத்தியரிடம் சண்டைக்குப் போனாள்.''நீங்கள் கல் வைத்தும் என் மகன் இறந்து போய் விட்டானே!''''உங்கள் வீட்டு ஜன்னலில் கல் வைத்ததன் பொருள் என்னவென்றால்,உங்கள் மகன் உங்கள்தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விடுவான்,பிழைக்க மாட்டான் என்று குறிப்பிடத்தான் கல்லை வைத்தேன்.''என்றான் சாமர்த்தியசாலியான வைத்தியன்.

எது ஞானம்?

0

Posted on : Friday, June 11, 2010 | By : ஜெயராஜன் | In :

''ஞானத்தில் சிறந்த ஞானம் எது?''என்று ஒரு ஞானியிடம் கேட்கப்பட்டது. ''இன்பத்தினால் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் சோர்வடையாமலும் இருப்பது தான்.''என்று ஞானி கூறினார்.;;அந்த ஞானம் தங்களுக்கு எப்படி வந்தது?''என்று கேட்டதற்கு ஞானி சொன்னார்,''கழுதையைப் பார்.உமக்குப் புரியும்.''கேட்டவருக்குப் புரியவில்லை.ஞானி விளக்கினார்,''இந்தக் கழுதை  தினமும் தன முதுகில் கனமான அழுக்கு மூடைகளை ஆற்றுக்குக் காலையில் சுமந்து செல்கிறது.மாலையில் அழுக்கு நீங்கிய துவைத்த துணிகளை ஆற்றிலிருந்து சுமந்து வருகிறது.ஆனால் கழுதை போகும் போது அழுக்கு மூடைகளை சுமந்து செல்கிறோமே என்று வருத்தம் அடைவதும் இல்லை.திரும்பும் போது சுத்தமான துணிகளைச் சுமந்து வருகிறோம் என்று மகிழ்ச்சி அடைவதும் இல்லை.இதைப் பார்த்துத் தான் நான் ஞானம்அடைந்தேன்.''

உணர்வு

0

Posted on : Thursday, June 10, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பிச்சைக்காரன்,தினசரி பிச்சை எடுக்கும் போது பலர் கேலி செய்தனர்.அவனைத் தாழ்வாகப் பேசினர்.ஏளனம் செய்தனர்.அப்போதெல்லாம் அவனுக்கு மிகவும் அவமானமாகவும் மனம் பாதிக்கவும் செய்தது.அதிர்ஷ்டவசமாக சில நாட்களில் அவன் ஒரு ராஜா ஆகி விட்டான்.உலகின் எல்லா இன்பங்களும் கிடைக்கப் பெற்றன.அப்போது அவன் பழைய பிச்சைக்காரன் போல ஒரு நாள் திரியத் திட்டமிட்டு அவ்வாறே மாறு வேடம் புனைந்து நகருக்குள் சென்று பிச்சை கேட்டான்.இப்போதும் பலர் கேலி செய்தனர்.ஏளனம் செய்தனர்.ஆனால் அவனுக்கு இப்போது அவமான உணர்வு ஏற்படவில்லை.மனம் பாதிக்கப் படவில்லை.ஏனெனில் அவனுடைய உள்ளுணர்வில் தான் ராஜா என்பதும் தனக்கு இந்த தேசமே சொந்தம் என்ற எண்ணங்களும் இருந்தன.

வீடு செல்ல

0

Posted on : Thursday, June 10, 2010 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டி நிலையத்திலிருந்து சாமான்களுடன் வந்த ஒரு கஞ்சன் செலவில்லாமல் வீட்டிற்குச் செல்ல யோசனை செய்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு ஆம்புலன்ஸ் வண்டி வருவதைக் கண்டதும்  மயக்கம் வந்தவர் போல கீழே விழுந்தார்.ஆம்புலன்ஸ் டிரைவர் அவரைத் தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் பின்னர் வீட்டில் சாமான்களுடன் அவரை பத்திரமாக இறக்கிச் சென்றார்.

முன் முடிவு

0

Posted on : Thursday, June 10, 2010 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் எந்த விஷயத்தை அணுகும் போதும் நாமே ஒரு முன் முடிவு செய்து கொள்ளாமல் நடுநிலையோடு அணுகுவதுமிக அவசியம். முன் முடிவோடு அணுகும் போது அதன் மீது நமக்கு இருக்கும் உடன்பாடோ,முரண்பாடோ உண்மையைக் காண முடியாமல் நம் கண்களையும் மனதையும் குருடாக்கிவிடும்.''அவரா?அவர் அப்படித்தான் சொல்வார்.''''அதுவா,அது அப்படித்தான் இருக்கும்.''என்று ஒரு முன் முடிவு எடுத்துக் கொண்டுஒரு விஷயத்தை அணுகுபவர்களால் உண்மை நிலையைக்காண முடியாது.முன் முடிவுக்காரர்களிடம் முட்டிக் கொள்வதை நாம் எப்போதுமே தவிர்ப்பது நல்லது.

அதிசய பெருக்கல்

0

Posted on : Thursday, June 10, 2010 | By : ஜெயராஜன் | In :

கீழே உள்ள பெருக்கல்களைப் பாருங்கள் இடது புறமும் வலது புறமும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை உள்ள எண்கள் இடம் பெற்றுள்ளன.
51249876 X3=153749628
32547891X6=195287346
16583742X9=149253678

கீழே உள்ள வித்தியாசமான பெருக்கலைப் பாருங்கள்.இடது புறத்தில் உள்ள எண்கள் வலது புறத்தில் அப்படியே திரும்பி இருக்கின்றன.
10989 X 9 =98901.

வெண்டைக்காய்

1

Posted on : Wednesday, June 09, 2010 | By : ஜெயராஜன் | In :

கணவனைக் காய் வாங்கி வரச் சொன்னாள் மனைவி.கணவனும் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.காயை வாங்கிப் பார்த்த மனைவி,''இது என்ன ,முத்தல் காயா வாங்கி வந்திருக்கீங்க?ஒரு காய் கூட வாங்கத் தெரியாதா?''என்று எரிந்து விழுந்தாள்.மறு நாள் கடைக்குப் போன கணவன் இளம் பிஞ்சாகப் பொறுக்கி வாங்கி வந்தான்.மனைவி,''வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சாக யாராவது வாங்குவாங்களா?அடுப்பில் ஒரு நொடியில்  கூழாகி விடுமே.இந்த சின்ன வேலைக்குக் கூட நீங்கள் லாயக்கில்லை.''என்று பொரிந்தாள் .அடுத்த நாள் கடைக்குப் போன கணவன்,இன்று எப்படியும் நல்ல பேர் வாங்கவேண்டும் என்று நினைத்து,கடையில் காய்வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி நல்ல வெண்டைக்காய்களாக வாங்கிக் கொண்டு கம்பீர நடை போட்டு வீடு வந்து சேர்ந்தான். வெண்டைக்காயைப் பார்த்ததும்மனைவிக்கு ஆக்ரோசமே வந்து விட்டது,''ஏனய்யா,உனக்கு வெண்டைக்காயை விட்டால் வேறு காயே தெரியாதா?''என்றாள்.கணவனுக்கு மயக்கம்வந்தது.

எப்போது வரலாம்?

0

Posted on : Wednesday, June 09, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதலித்தான்.அவளிடம் தன விருப்பத்தைக் கூற நினைத்தான்.அவள் தினசரி கடை வீதி வழியே செல்வதுண்டு.அனால் கூடவே அவளுடைய தந்தையும் வருவார்.அவர் வராத  ஒரு நாள் பார்த்து அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்.பல நாள் காத்திருந்ததன் பலனாக ஒரு நாள் அவள் தனியே வந்தாள்.நேரடியாக விசயத்தைச் சொன்னால் அதில் என்ன ஆவல் நிறைவேறும்?எனவே அவளைப் பார்த்து சொல்கிறான்:
ஒரு மரம் ஏறி,ஒரு மரம் பூசி 
ஒரு மரம் பிடித்து,ஒரு மரம் வீசிப் 
போகிறவன் பெண்ணே,உன் 
வீடு எங்கே?
அதன் பொருள்:ஒரு மரமாகிய பாதக் குறட்டுக் கட்டையின் மேலே ஏறி
(அந்தக் காலத்தில் செருப்பு மரத்தாலானதாக இருக்கும்.) ஒரு மரமாகிய சந்தனத்தைப் பூசிக் கொண்டு,ஒரு மரமாகிய கைத்தடியைப் பிடித்துக் கொண்டு,ஒரு மரமாகிய பனை ஓலை விசிறியை  வீசிக் கொண்டு செல்பவரின் பெண்ணே,உன் வீடு எங்கே இருக்கிறது?
அவன்பேசிய பேச்சின்  உட்கருத்தை அவள் புரிந்து கொண்டாளா? புரிந்து கொண்டதனால் உடனே பதில்  இதோ சொல்லி விட்டாளே!
பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே 
அவன் ஒரு நிமிடம் யோசித்தான்.அவனும் புரிந்து கொண்டான்.அதாவது அவள் வீடு பால் விற்கும் இடையன் வீட்டிற்கும்,பானை செய்யும் குயவன் வீட்டிற்கும் நடுவிலேயும்,ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும்,நூலைக்  கொண்டு நெசவு செய்யும் நெசவாளியின் வீட்டிற்கும் அருகில் இருக்கிறது.
அடுத்து அவன்,அவள் வீட்டிற்கு எப்போது வரலாம் என்று கேட்கிறான்.
அவள் சொல்கிறாள்:
இந்த ராஜா செத்து 
அந்த ராஜா பட்டம் 
கட்டிக் கொண்டு மரத்தோடு மரம் 
சேர்ந்த பிறகு வந்து சேர்
 அதாவது கதிரவன் மறைந்து,சந்திரன் உதயமான பிறகு,வீட்டில் உள்ளவர்கள்  கதவைச் சாத்தும் போது,கதவு நிலையும் கதவும் சேர்ந்து விடும்.அந்த சமயத்தில் அதாவது நள்ளிரவில் வருவாயாக என்று தெரிவிக்கிறாள் காதலி.
இனிப்பேச்சு எதற்கு?

தாமதம்

0

Posted on : Tuesday, June 08, 2010 | By : ஜெயராஜன் | In :

சாலையின் நடுவில் பெயிண்ட் கொடு போட ஒருவர் நியமிக்கப் பட்டார்.முதல் நாள் ஐந்து கிலோமீட்டர் தூரமும்,இரண்டாம் நாள் மூன்று கிலோமீட்டர்தூரமும்,மூன்றாம் நாள் ஒரு கிலோ மீட்டர் தூரமும் அவர் பெயிண்ட் கொடு போட்டார்.நாளுக்கு நாள் வேலை தாமதமாவதைக் கண்ட அதிகாரி,அந்த ஆள் மீது நம்பிக்கை இருந்த போதும் கூப்பிட்டுக் கண்டித்தார். பெயிண்டும் கையுமாக நின்ற அந்த வேலையாள் சொன்னார்,''அதை ஏன் கேக்குறீங்க?நானும் நாளுக்கு நாள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் தான் உழைக்கிறேன்.ஆனால் பெயிண்ட் டப்பா இருக்கிற தூரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறதே!ஒவ்வொரு தடவையும் இவ்வளவு தூரம் போய் பிரஷ்ஷில் தொட்டுக் கொண்டு வர வேண்டியிருக்கிறதே!அதுதான் காரணம்.''அதிகாரிக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

ஆடிப்பெருக்கு

0

Posted on : Tuesday, June 08, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆடி பதினெட்டு அன்று அதிகாலை.காவிரியின் கரையிலிருந்த ஒரு மரம்,காவிரியைப் பார்த்து,''நீ ஏன்இன்று இப்படிப் பெருக்கெடுத்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது.காவிரி சொன்னது,''பொழுது விடிந்ததும் பாவங்களைப் போக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பயங்கரமான பாவிகள் எல்லாம் என்னிடம் ஓடி வரப் போகிறார்கள்.அவர்கள்வருவதற்கு முன் தப்பித்து விட வேண்டும் என்று தான் நான் பயந்து ஓடுகிறேன்.''

முதன்மையான பரிசு

0

Posted on : Tuesday, June 08, 2010 | By : ஜெயராஜன் | In :

பகைவனுக்கு        --மன்னிப்பு.
நண்பனுக்கு           --இதயம்
குழந்தைக்கு           --நன்னடத்தை
தந்தைக்கு               --மரியாதை.
தாய்க்கு                   --நம்முடைய ஒழுக்கம்
போட்டியாளனுக்கு --சகிப்புத்தன்மை
எல்லோருக்கும்       --தாராள மனப்பான்மை

கறுப்பு ஆடு

0

Posted on : Tuesday, June 08, 2010 | By : ஜெயராஜன் | In :

மூன்று விஞ்ஞானிகள் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.வழியில் வயலில் ஒருகறுப்பு ஆடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
முதல் விஞ்ஞானி; இந்த கிராமத்தில் எல்லா ஆடுகளும் கறுப்பாக இருக்கும் போலிருக்கிறது.
இரண்டாம் விஞ்ஞானி; அதெப்படிச் சொல்ல முடியும்?இங்கிருக்கும் ஆடுகளில் சில கறுப்பு என்ற முடிவுக்கு வேண்டுமானால் நாம் வரலாம்.
மூன்றாம் விஞ்ஞானி; இந்த கிராமத்தில் இந்த ஆட்டின் நாம் காணும் ஒரு பக்கம் நிச்சயம் கறுப்பு என்று உறுதியாகச் சொல்லலாம்.
மெத்தப் படித்தால் இப்படித்தான்!

பொம்மை

0

Posted on : Monday, June 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஏழை ஒருவனின் குழந்தை. தன தாயிடம் சொன்னது,''அம்மா,எனக்கு இந்த மண் பொம்மை வேண்டாம் .பார்,எல்லாம் உடைந்து இருக்கிறது.பக்கத்து வீட்டு அண்ணன் நல்ல நல்ல பொம்மைகள் எல்லாம் வைத்திருக்கிறான்.அது போல பொம்மைகள் வாங்கித்தா.''அடுத்த வேலை சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் குழந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றாள் அந்த  ஏழைத்தாய்.
பக்கத்துவீடு ஒரு பணக்காரரின் வீடு.அந்த வீட்டுப் பையனைப் பார்த்துக்கொள்ள ஒரு பணிப் பெண்.விளையாட வித விதமான பொம்மைகள். விளையாடிக் கொண்டிருந்த பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான்,''ஆயா,எனக்கு இந்த பொம்மையெல்லாம் வேண்டாம்.பக்கத்து வீட்டுத் தம்பி அழகான மண் பொம்மைகள் வைத்து விளையாடுகிறான்.எனக்கு அது போல பொம்மைகள் வேண்டும்'' என்று கூறி அழ ஆரம்பித்தான்.அவன் அழுகையை அடக்க வழி தெரியாது திகைத்து நின்றாள் வேலைக்காரப்பெண்.
பொன்னென்றும் மண்ணென்றும் வேறுபாடு அறியாக் குழந்தை,பொன்னுக்கும்,மண்ணுக்கும் போராடுகிறது வளர்ந்த பின். என்றென்றும் குழந்தையாய் இருந்தால்  இவ்வுலகில் ஏனிந்த சண்டை,ஏனிந்த வேற்றுமை?
                                                             மூலம் ;ஒரு இந்திக் கவிதை

காற்று

0

Posted on : Monday, June 07, 2010 | By : ஜெயராஜன் | In :

காற்று 
தெற்கிலிருந்து வீசினால்    --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால்   --வாடை
கிழக்கிலிருந்து வீசினால்   ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால்     ---மேலை

பூ 
மலர்வதால்    --மலர்.
விரிவதால்     ---வீ
பூப்பதால்          --பூ
வாடுவதால்    --அலர்

பயனிலை

0

Posted on : Monday, June 07, 2010 | By : ஜெயராஜன் | In :

தமிழ் ஆசிரியர் திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தொடர்ந்து பாடம் கேட்ட சீடர் ஒருவர்,பலமுறை சொல்லிக் கொடுத்தும் பாடம் சரியாகக் கேட்காமல் ஒரு நாள்,''எழுவாய்,பயனிலை என்றால் என்ன?'' என்று கேட்டார். பிள்ளையவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே அவர்,''நீ இங்கிருந்து எழுவாய்!உன்னால் ஏதும் பயனிலை,''என்றதுமே சீடன் ஓடி விட்டான்.

வகுத்தல்

0

Posted on : Sunday, June 06, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தன நண்பனிடம் சொன்னான்,''எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள்.சிறு வயதில் எங்களுக்கு ஒரு பிரச்சினை.நாங்கள் மூவரும் இரு நூறு ஆடுகளை மேய்க்க வேண்டியிருந்தது.எங்களுக்குள் அதனால் அடிக்கடி சண்டை வந்தது.''நண்பன் சொன்னான்,''மூன்று பேர் இருநூறு ஆடுகளை மேய்ப்பது என்பது எவ்வளவு கஷ்டம்!சரி,பின் என்ன செய்தீர்கள்?அவன் சொன்னான்,''எங்கள் அப்பா மேலும் நூறு ஆடுகள் வாங்கினார்.அதன் பின் தான் பிரச்சினை முடிந்தது.''நண்பன் அதிர்ச்சி அடைந்தான்.''இருநூறு ஆடு மேய்ப்பதே சிரமம்.அதிலே மேலும் நூறு ஆடுகள் வாங்கியபின் எப்படி பிரச்சினை தீரும்?மேலும் சிரமம் கூடத்தானே செய்யும்?''என்று நண்பன் கேட்க அவன்சொன்னான்,''மூன்று நூறை மூன்றால் வகுப்பது எளிதல்லவா?''

ஜலதோஷம்

0

Posted on : Sunday, June 06, 2010 | By : ஜெயராஜன் | In :

காட்டில் ஒரு சிங்கம்,ஒரு ஆட்டை அழைத்தது.''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து.அதனுடைய கருத்தைக் கேட்டது.ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.நரி சொன்னது,''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

பாவம்

0

Posted on : Saturday, June 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாட்டில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அதனால் பல நாட்கள் பட்டினி கிடந்த ஒரு முனிவர், ஒரு யானைப் பாகனைப் பார்த்து,''உண்ண ஏதாவது உணவு இருந்தால் கொடு,''என்று கேட்டார்.''நான் எச்சில் படுத்தியஉணவு தான் இருக்கிறது,''என்றான் பாகன்.''பரவாயில்லை,அதையே கொடு,''என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டார் முனிவர்.''இந்தாருங்கள்,இந்தத் தண்ணீரைக் குடியுங்கள்,''என்றான் பாகன்.;;அது எச்சில்,நான் குடிக்க மாட்டேன்,''என்றார் முனிவர்.''உணவுக்கு இல்லாத எச்சில்,தண்ணீருக்கு மட்டும் எப்படி வந்தது?''என்று கேட்டான்,பாகன்.முனிவர் சொன்னார்,''வேறு எங்கும் உணவு கிடைக்கவில்லை.இதைச் சாப்பிடாவிட்டால் என் உயிர்போயிருக்கும்.ஆனால் தண்ணீர் எங்கும் கிடைக்கும்.''
ஒரு தடவை தவறு செய்து விட்டால் தொடர்ந்து தவறு செய்தால் என்ன என்று நாம் நினைப்பதால் தான் பாவங்கள் அதிகரிக்கின்றன.வேறு வழியின்றி,நிர்பந்தத்தால் தவறு செய்தால் அது பாவமில்லை.நிர்ப்பந்தம் இல்லாத போது,வேண்டுமென்று தவறு செய்வது தான் பாவம்.

இயல்பு

0

Posted on : Saturday, June 05, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதனின் இயல்பு;
முப்பது வயதில்  --முறுக்கு
நாற்பது வயதில் --நழுவல்
ஐம்பது வயதில்  --அசதி
அறுபது வயதில்--மறதி
எழுபது வயதில்  --ஏக்கம்
என்பது வயதில்  --தூக்கம்

கிளிப்பேச்சு

0

Posted on : Saturday, June 05, 2010 | By : ஜெயராஜன் | In :

வீட்டின் வரவேற்பறை. உச்சியில் ஊஞ்சல் கட்டப்பட்டு ஒரு கிளி.அந்தக் கிளியின் ஒரு காலில் பச்சை நிற நூலும்,மறுகாலில் சிவப்பு நிற நூலும் கட்டப்பட்டுக் கீழே தரை வரை தொங்கிக் கொண்டிருந்தன.வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்ததும் வீட்டுக்காரர் பச்சை நூலை ஒரு சுண்டு சுண்டினார்.உடனே கிளி,''வாங்க!வாங்க!வணக்கம்!சௌக்கியமா?''என்றது. விருந்தாளி விடை பெற்றுச் செல்லும் போது வீட்டுக்காரர் சிவப்பு நூலை சுண்டினார்.உடனே கிளி,''போயிட்டு வாங்க!அடிக்கடி வாங்க!நன்றி,''என்றது.விருந்தாளி வியந்து கூவினார்,''என்ன ஆச்சரியம்!பச்சை நூலை இழுத்தால் கிளி வரவேற்றுப் பேசுகிறது!சிவப்பு நூலை இழுத்தால் விடை கொடுக்கிறது!இரண்டையும் சேர்த்து இழுத்தால் என்னாகும்?''கிளி அவசரமாகக் கத்தியது,''அறிவு கெட்ட முட்டாளே,கீழே விழுவேன் !''

மூவருக்கு இரு கால்

0

Posted on : Friday, June 04, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கணவன் எதோ வருத்தத்தில் தன மனைவி மேல் கோபித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டான்.முன் கோபத்தால் அப்படிச் செய்து விட்டாலும் பிறகு அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டான்.வழியிலே ஒருவனைக் கண்டு,
''ஆற்றுக்குக்குப் பகையாய் இருக்கும் மரத்தின் கீழே இருந்து 
வேலியைப் படல் கட்டுகிறவனே!
மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ?''என்று கேட்டான்.
அதற்கு அவன் விடை சொல்கிறான்,
''அவள் செத்து மூன்று நாள் ஆச்சு;
அவளைக் கொன்றவன் செத்து 
ஆறு நாள் ஆச்சு;
அவளைச் சுட்டவன் செத்து 
ஆறு மாசம் ஆச்சு'' என்று சொன்னான்.
நெசவுகாரன் ஒருவன் தேற்றா மரத்தின் கீழ் பாவு போட்டிருந்தான்.அவனைப் பார்த்து தான் கணவன் கேட்கிறான்.'ஆற்றுக்குப் பகை' என்றது,கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் கொட்டையைத்  தரும் தேற்றா மரத்தை. மனிதர்,வேலியைப்போலச் சுற்றி உடுக்கும் ஆடையின் பொருட்டுப் பாவு ஓட்டுபவன் என்பதை,'வேலிக்குப் படல் கட்டுகிறவனே'என்று குறிப்பிட்டான்.தன மனைவி இடுப்பில் ஒரு குழந்தையையும்,வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து சென்றாள் என்பதை,'மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ'என்று கேட்கிறான்.
அவள் இடையில் ஓரிடத்தில்  தண்ணீர் குடித்த போது, அந்தத் தண்ணீரில் ஆறு நாளாகச் செத்துக் கிடந்த சிறு பாம்பின் விஷத்தால் இறந்தாள்.ஊரார்,ஆறு மாதத்துக்கு முன் வெட்டி உலர்த்தின மரத்தின் விறகைக் கொண்டு அவளைத் தர்மத்திற்கு எரித்து விட்டார்கள்.இதையே அந்த நெசவுகாரன்,அவள் செத்து மூன்று நாள் ஆச்சு.அவளைக் கொன்றவன்  (பாம்பு )செத்து ஆறு நாள் ஆச்சு.அவளைச் சுட்டவன் (மரம்) செத்துஆறு மாசம் ஆச்சு''என்று குறிப்பிடுகிறான்

கடவுள் அருள்

0

Posted on : Thursday, June 03, 2010 | By : ஜெயராஜன் | In :

மழையில் ஒரு மதப் பெரியவர் ஓடி வருவதைக் கண்ட முல்லா,''பெரியவரே,கடவுள் மக்கள் மீது கொண்ட கருணையினால் பெய்விக்கும் மழையைக் கண்டு ஓடினால் அது கடவுளை அவமதிப்பதாகும்,''என்றார்.பெரியவரும் உடனே மழையில் நனைந்து சென்று மறு நாள் காய்ச்சலால் அவதிப்பட்டார்.பிறகு ஒரு நாள் மழையில் நனைந்து முல்லா ஓடி வருவதைக் கண்ட அப்பெரியவர்,''என்ன முல்லா,எனக்கு புத்திமதி கூறிவிட்டு நீ மட்டும் மழையைக் கண்டு ஓடி வருவது கடவுளை அவமதிப்பதாகாதா?''என்று கேட்டார்.அதற்கு முல்லா,''ஐயா,கடவுளின் அருள் தான் மழை.நான் நனைவதற்கு அஞ்சிஓடவில்லை.ஆனால்  கடவுள்  அருள்  பெற்ற மழையை மிதிக்கக் கூடாதே என்று தான் வேகமாக ஓடுகிறேன்.''என்றாரே பார்க்கலாம்!பெரியவர் வாயடைத்துப்போனார்.

தகுதி

0

Posted on : Wednesday, June 02, 2010 | By : ஜெயராஜன் | In :

முதல் முதலாக  ஒரு இளைஞன்ஒரு வேலைக்கான நேர் முகத் தேர்வுக்குப் போனான்.தேர்வுக்குழுவின் தலைவர் கேட்டார்,''ஏதாவது ஒரு குறிப்பிட்ட தன்மையுள்ள வேலையை விரும்புகிறாயா?''இளைஞன் சொன்னான்,''நல்லது,முடியுமானால் கம்பெனியின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருக்க விரும்புய்கிறேன்.''தலைவருக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது.அவர் கேட்டார்,''உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?'  இளைஞன் அமைதியாகக் கேட்டான்,''ஏன் சார்,அது தான் அதற்கான தகுதியா?''

புத்திமதி

0

Posted on : Wednesday, June 02, 2010 | By : ஜெயராஜன் | In :

மசூதியிலிருந்து ஒரு ஞானி திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் ஒரு குடிகாரன் கையில் ஒரு இசைக் கருவியுடன் வழியில் போவோர் வருவோரை ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தான்.ஞானி அவனுக்குப் புத்திமதி சொல்ல,அவன் தனது இசைக் கருவியினால் அவர் தலையில் அடித்தான்.அவர் தலையும் உடைந்தது.இசைக்  கருவியும் உடைந்தது.
மறுநாள் காலை ஞானி அந்தக் குடிகாரனுக்கு சில இனிப்புப் பண்டங்களும் கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்தார்.கூடவே ஒரு சிறு குறிப்பு;
''உங்களுடைய இசைக் கருவி உடைய என் தலை காரணமாக இருந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.இத்துடன் அனுப்பியுள்ள பணத்தைக் கொண்டு புதிய இசைக் கருவி வாங்கிக் கொள்ளவும்.''

குழந்தை மேதையாக....

0

Posted on : Wednesday, June 02, 2010 | By : ஜெயராஜன் | In :

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?
சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும்.எவ்வளவுக்கு  எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
**படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.
**தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம்  குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
**இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.
**அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.
**வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.
.**குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.
**ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.
**எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.
**சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.
**குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.
**ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.
**குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.
**படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.