உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சுகமா,துக்கமா?

2

Posted on : Wednesday, October 31, 2012 | By : ஜெயராஜன் | In :

ஞானி ஒருவர் பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்தார்.எதிரில் வந்த வயதான ஒரு பெண்மணி திடீரென அவர் காலில் விழுந்து அழுதார். ஞானியிடமவர்,''என்னிடம் மிக அன்பாக இருந்த என் கணவர் இறந்து விட்டார். என் உறவினர்கள் என்னை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர்.கடவுள் மிகக் குரூரமானவர்.எனக்கு அபார ஞாபக சக்தியைக் கொடுத்து பழையதை எல்லாம் நினைத்து துக்கம் நெஞ்சை அடைக்க செய்கிறார்,''என்று கூறி தேம்பினார்.
ஞானி வாய்விட்டு சிரித்தார்.அந்தப் பெண்ணிடம் அவர் சொன்னார்,''கடவுள் எனக்கும் அதிக ஞாபக சக்தியைக் கொடுத்துள்ளார்.வறண்ட பாலைவனத்தில் நடக்கும்போது நான் ரசித்த ரோஜாக்களை நினைவுக்குக் கொண்டு வந்து மகிழ்ச்சியாக இருக்க செய்கிறார்.முகம் சுளிக்கும் மனிதர்களைக் காணும்போது முன்னர் புன்னகையோடு பார்த்த மனிதர்களை நினைவூட்டுகிறார்.அதனால் எனக்கு அவர் கருணை வடிவானவராய்த்
தெரிகிறார்.''
எதையும் நாம் நோக்கும் விதத்தில்தான் வாழ்க்கை சுகமா,துக்கமா என்று தீர்மானிக்கப் படுகிறது..

பெனால்டி கார்னர்

1

Posted on : Wednesday, October 31, 2012 | By : ஜெயராஜன் | In :

கால்பந்து போட்டியில் பெனால்டி கார்னர் என்று ஒன்று உண்டு.கோல்  கம்பத்திலிருந்து 11 மீட்டர் தூரத்திலிருந்து பந்தை கோல்  போஸ்ட் நோக்கி உதைக்க வேண்டும்.அந்தப் பந்து கோல்  வலைக்குள் விழாமல் தடுக்க வேண்டியது கோல் கீப்பரின் வேலை.கோல் கீப்பருக்கு பந்து மேலே போகுமா,இடது புறம் போகுமா,வலது புறம் போகுமா என்பதனை முடிவெடுக்க ஒரு வினாடி நேரம் கூட இருக்காது.பந்து வரப்போகும் திசையைத் தீர்மானித்து பாய்ந்து பந்தைத் தடுக்க வேண்டும்.கோல்  விழுந்துவிட்டால் அவர் பாடு அதோ கதிதான்.
நூற்றுக்கணக்கான முக்கியமான போட்டிகளின் பெனால்டி கிக்குகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலான நேரங்களில் பந்து நேரடியாகத்தான் உதைக்கப் பட்டிருந்தது,தெரிய வந்தது.அந்த மாதிரி நேரங்களில் கோல் கீப்பர் நின்ற இடத்தில் இருந்தே கோல் விழாமல் தடுத்திருக்க முடியும்.ஆனால் 92 சதவிகித கோல் கீப்பர்கள் ஏதோ ஒரு திசையில் பாய்ந்து கோலைக் கோட்டை விட்டிருக்கிறார்கள்.ஏன் இப்படி அவர்கள் பாய்கிறார்கள்?நின்ற இடத்தில் நின்று இடது புறமோ,வலது புறமோ வந்து கோல் விழுந்து விட்டால் அனைவரும் கோல் கீப்பரைத்தான் திட்டுவார்கள்.ஏதோ ஒரு புறம் பாய்ந்து ,கோல் விழுந்தாலும்,''பாவம்,அவன் என்ன செய்வான்?நல்லாத்தான் தாவி முயற்சி செய்தான்''என்று உலகம் உச்சுக் கொட்டும்.
நம் அன்றாட வாழ்விலும் சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பதற்றத்திலும் தயக்கத்திலும் தவறான முடிவை எடுத்து அதை செயல் படுத்தி சொதப்பி விடுகிறோம்.சில சமயங்களில் எதுவும்  செய்யாமல் இருப்பதே நாம் செய்யக் கூடிய சிறந்த செயல் என்பதனை உணர்ந்தாலே பெருமளவு சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம்.

தனித்தன்மை.

1

Posted on : Tuesday, October 30, 2012 | By : ஜெயராஜன் | In :

முனிவர் ஒருவர் ஒரு பாதையில் நடந்து கொண்டிருக்கையிலேயே திடீரென பாதையில் குப்புறப் படுத்து,அந்த நிலையிலேயே தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.
அப்போது அந்த வழியே ஒரு குடிகாரன் வந்தான்.கீழே கிடந்த முனிவரைப் பார்த்து,''இவனும் நம்மை மாதிரி பெரிய குடிகாரன் போலிருக்கிறது இன்றைக்கு அளவுக்கு மீறி குடித்திருப்பான்.அதனால்தான் சுய நினைவில்லாமல் இங்கே கிடக்கிறான்,''என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.
அடுத்து ஒரு திருடன் அந்த வழியே வந்தான்.அவன் அவரைப் பாரத்தவுடன்,''இவன் நம்மைப்போல ஒரு திருடன் போலிருக்கிறது. இரவெல்லாம் திருடிவிட்டு களைப்பு மிகுதியால் நினைவில்லாமல்  படுத்துக் கிடக்கிறான்,பாவம்,''என்று கூறியவாறு அங்கிருந்து அகன்றான்.
பின்னர் முனிவர் ஒருவர் அங்கு வந்தார்.அவர்,''இவரும் நம்மைப் போல ஒரு முனிவராகத்தான் இருக்க வேண்டும்.தியானத்தில் இருக்கும் இவரை நாம் தொந்தரவு செய்யலாகாது,''என்று நினைத்தவாறு தன்  பாதையில் சென்றார்.
ஆக ஒவ்வொரு மனிதரும் அவரவர் தனித்தன்மையில்  இருக்கிறார்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.நாம்தான் நம் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களைப் பற்றி கற்பனைகள் செய்து கொண்டு அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்கிறோம்..உறவுகள் சீர்கெடுவதற்கு  இது ஒரு முக்கிய காரணம்.

காபி கோப்பை

3

Posted on : Monday, October 29, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை,பீங்கான் கோப்பை, அலங்காரக்  கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை.விருந்தளித்தவர் சொன்னார்''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே.ஆனால் உங்களது இப்போதைய தேவை காபிக் கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான்.எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காப்பியைத்தான்.
நம்  வாழ்க்கையும்  அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது.அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை,சமூக அந்தஸ்து,செல்வச் செழிப்பு எல்லாம்.நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள்,நண்பர்களே!''


தன்னம்பிக்கை வளர-2

1

Posted on : Sunday, October 28, 2012 | By : ஜெயராஜன் | In :

1 'நம்மால் முடியுமா?' என்று சந்தேகப்படுவதை தவிருங்கள்.
2 பழைய தவறுகளை நினைத்துக் குழம்பாதீர்கள்.அது தன்னம்பிக்கையை வெளிப்படாமல் செய்துவிடும்.
3 சிரமங்களை வெல்ல வேண்டும் என்ற எண்ணம், ஒரு பெரிய பிரச்சினை போல இருக்கக் கூடாது .காலால் சிறு கல்லைத் தட்டி விட்டதுபோல இருக்க வேண்டும்.
4 எந்த இடத்திலும்,எந்தப் பிரச்சினையிலும் தேவையில்லாமல் டென்சன் ஆகாதீர்கள்.
எந்தக் கட்டத்திலும் உங்களுக்கு நீங்கள் மட்டும்தான் சரியான துணை என்று ரகசியமாகப் புரிந்து வைத்திருங்கள்.

ஆழ்மனம்

3

Posted on : Sunday, October 28, 2012 | By : ஜெயராஜன் | In :

மனம் குழம்பிப் போய்விட்டதா?
இதயம் நொறுங்கி விட்டதா?
தீர்க்க முடியாத நோய்களின் தொல்லையா?
அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி
உங்கள் ஆழ்மனதிற்கு உண்டு.
மூன்று சிறைகளின் கதவையும் இது திறக்கும்.'
''நன்றாக,தெளிவாக இருக்கிறேன்,
என் நோய்கள் குணமாகிவிட்டன.
நான் முன்னேறுகிறேன்.''
பலமுறை இவற்றை சொல்லிவிட்டு ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் துவக்குங்கள்.உங்கள் ஆழ்மனம் இதற்காகப் பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சினைகளை நீங்கள் அறிந்து,புரிந்து கொள்வதற்கு முன்பே தீர்த்துவிடும்.எனவே நம்பிக்கையுடன் உங்கள் ஆழ்மனதிற்கு இடைவிடாது கட்டளையிட்டு வெற்றி பெறுங்கள்!
 

மௌனம்

2

Posted on : Saturday, October 27, 2012 | By : ஜெயராஜன் | In :

முட்டாளின் மேலான ஞானம் மௌனம்.
அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.
********
மௌனம் நூறு தடைகளை வென்றுவிடும்.
********
பேச்சினால் பின்னர் வருந்த நேர்கிறது.
மௌனத்தால் அப்படி நேர்வதில்லை.
********
உண்மையான மௌனம் உள்ளத்திற்கு ஓய்வளிக்கும்.
********
மௌனமாயிருந்து மூடனாகக் கருதப்படுவது,சந்தேகமில்லாமல் ,பேசி மூடன் என்று காட்டிக் கொள்வதைவிட மேலானது,
********
நீ அமைதியாக வாழ விரும்பினால்,கேள்;பார்;அனால் மௌனமாயிரு .
********
மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப் பேசவும் தெரியாது.
********
மௌனம் என்ற மரத்தில் அமைதி என்னும் கனி தொங்குகிறது.
********
உன்னைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக எண்ண  வேண்டுமானால் மௌனமாயிருக்க வேண்டும்.
********
மௌனம் என்பது சிந்தனையின் கூடு.
********
மூடிய வாயின் இசை இனியது.
********
ஒருவனுடைய வாய்ப் பேச்சைவிட அவனது மௌனம் அதிகமாக எண்ணங்களைப் பிரதிபலிக்கும்.
********

நேரம் நல்ல நேரம்

1

Posted on : Saturday, October 27, 2012 | By : ஜெயராஜன் | In :

அவசரத்துக்கும் அவசியத்துக்கும் என்ன வித்தியாசம்?எந்த ஒரு காரியம் ஒரு கால கட்டத்துக்குள்செய்து  முடிக்க வேண்டுமோ அது அவசரக் காரியம். பையனுக்கு கல்லூரிக் கட்டணம் மாதக் கடைசியில் செலுத்த வேண்டும் என்பது அவசரக் காரியம்.முதல் தேதியன்று அதன் அவசர நிலை குறைவு. நாளாக ஆக அது அதிக அவசரம் ஆகிறது.காலம் கடத்திக் கொண்டே போனால் அதுவே சிக்கல்  ஆகி விடுகிறது.ஆனால்,ஒரு அவசியமான காரியம் என்றும் அவசியமாகத்தான் இருக்கும்.நாள் ஆக ஆக அது அதிக அவசியம் ஆகாது.ஒவ்வொரு காரியத்தையும் நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
1 அபாயப் பகுதி:அவசியமும் அவசரமும் கூடிய காரியங்கள் .அவற்றைப்  புறக்கணித்து காலம் கடத்தினால் அபாயம்தான்.வேலைகள் சரியாக செய்யப் பட மாட்டாது.மன அமைதி பாதிக்கப்படும்.
உதாரணம்:மகளுக்குத் திருமணம் என்பது ஒரு அவசியமானதும் அவசரமானதுமான செயல்.உரிய வயதில் நடத்தாமல் தள்ளிப் போட்டு வந்தால் ஒரு கால கட்டத்தில் எப்படியோ திருமணம் நடந்தால் போதும் என்ற நிலை ஏற்படும்.
2 திட்டமிடும் பகுதி:அவசியமான செயல் ஆனால் அவசரம் இல்லை.நிதானமாக யோசித்து திட்டமிட்டு நேர்த்தியாகச்செய்ய போதிய அவகாசம் உண்டு.(உ-ம் )மகளுக்கு வயது பத்து.அவள் திருமணம் அவசியம்,ஆனால் அவசரம் இல்லை.பணம் சேமிக்கலாம்.அவளைப் படிக்க வைக்கலாம் .ஆரோக்கியமாக வளர்க்கலாம்.நல்ல பழக்க வழக்கங்களைப் போதிக்கலாம்.
3 வீணாகும் பகுதி:இந்த செயல்களுக்கு அவசியமும் கிடையாது,அவசரமும் கிடையாது.நம்மில் பலர் பெரும் பகுதி நேரத்தை இதில்தான்  கழிக்கின்றனர். உபயோகமற்ற அரட்டை ,சம்பந்தமில்லாப் பிரச்சினைகளில் தலையிடுதல் போன்ற செயல்கள் இதில் அடங்கும்.நமது பொன்போன்ற  நேரம் வீணாவது தான் இதில் உள்ள அபாயம்.
4 வேகமான பகுதி:அவசரமாகச் செய்ய வேண்டியவை,ஆனால் அவசியம் கிடையாது.(உ.ம் )அலுவலகம் செல்லும்போது வழியில் விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவரிடம் கொண்டு போய் சேர்ப்பது.மனிதாபிமான அடிப்படையில் செய்வது நல்லதுதான் என்றாலும் இதே வேலையாகத் திரிந்தால் நம் லட்சியங்களை அடைவது தாமதமாகும்.
இன்னின்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதுபோல இன்னின்ன வேலைகளை செய்யக்கூடாது என்ற பட்டியலையும் தயார் செய்ய வேண்டும்.நம் வளர்ச்சிக்கு இது மிகத் தேவையானது.

எப்படிப் பேசுவது?

2

Posted on : Friday, October 26, 2012 | By : ஜெயராஜன் | In :

பேசினால் உண்மை எல்லாம் அழிகிறது.
பேசப் பேச தீமை வளர்கிறது.எனவே
பேசுவதானால் ஆலோசித்துப் பேசு.
சாதுவைக் கண்டால் இரண்டொரு வார்த்தை பேசு.
துஷ்டனிடம் மௌனமாய் இரு.
பண்டிதரிடம் நன்மைக்கானவற்றைச் சொல்.
முட்டாளிடம் வாயைத் திறக்காதே.
அரை குடம் ததும்பும்.
ஞானப் பூர்த்தியினாலேயே மனிதன் ஆலோசித்துப் பேசுவான்.
இனிய மொழி பேசுவதால் எல்லோரும் நம்மிடம்
மலர்ச்சியாக இருக்கிறார்கள்.
நாமும் மலர்ச்சியாக இருக்கிறோம்.
                               --கபீர்தாசர்.

முத்திரை

3

Posted on : Friday, October 26, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை அறிஞர் அண்ணா தேர்தல்  கூட்டம் ஒன்றிற்கு இரவில் மிகத் தாமதமாக வந்தார்.இருப்பினும் அவர் வருகைக்காக பெருந்தொகையான மக்கள் காத்திருந்தனர்.அண்ணா பேசினார்,
''மாதமோ....சித்திரை.
மணியோ பத்தரை.
தழுவுவதோ  நித்திரை.
இடுவீர் எமக்கு முத்திரை.''
மக்களின் கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆகியது.
********
அண்ணா முதல்வராயிருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார், ''புளி விலை இப்போது அதிகமாக இருக்கிறது எங்கள் ஆட்சியில் புளியின் விலை மிகக் குறைவாக இருந்தது.இது யாருடைய சாதனை?''அண்ணா சொன்னார்,''இது புளிய மரத்தின் சாதனை!''
********

மன்னவனே அழலாமா?

2

Posted on : Thursday, October 25, 2012 | By : ஜெயராஜன் | In :

அழுவது தவறு என்றும் குறிப்பாக ஆண்கள் அழுவது ஆண்மைக்கு இழுக்கு என்றும் சிறு வயதிலிருந்து நாம் சொல்லிக் கொடுக்கப்பட்டு அதைக் கடைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.அழலாமா,கூடாதா?முக்கியமான நேரங்களில் உணர்ச்சிகளை அடக்கி வைக்காமல் அழுது  தீர்த்து விட்டால் மனதுக்கு அமைதி கிடைக்கும்.ஏதாவது முக்கியமான செய்திகளைக் கேட்கும்போது உடலும் மனதும் பதற்றப்படும்.அப்போது இரத்தக் கொதிப்பு ஏற்படாதிருக்க அழுது விடுவதே சிறந்தது.அழும்போது மன இறுக்கம் அகலும்.அழும்போது ஹார்மோன்கள் செயல்பட்டு தசைகளை டென்சன் இல்லாமல் ஆக்கி கவலைகளை துரத்தி விடுகின்றன.நடுநிலையுடன் உணர்வுக்கு அமைதி கிட்டுவதால் பிரச்சினைகளை மீண்டும் எதிர்த்து சமாளித்து வெற்றி பெற மனதில் வைராக்கியம் தோன்றும்.குரல் விட்டு அழுவதால் அகப் பண்பு விருத்தியாகி தைரியம் பிறக்கிறது.உடலில் நோய் உள்ளவர்களும் துன்பத்தில் உழல்பவர்களும்  மனம் விட்டு இறைவனிடம் அழுகிறார்கள்.அப்போது அவர்களுக்கு உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றங்கள் உண்டாகின்றன என்று மனோதத்துவ மருத்துவர்கள் கூறுகிறார்கள்.அழுவதால் ஒருவருக்கு மன தைரியம் இல்லை என்று அர்த்தம் இல்லை.

கவலையை ஒழிக்க

1

Posted on : Thursday, October 25, 2012 | By : ஜெயராஜன் | In :

கவலை வாழ்வைத் துன்பமயமாக்கி விடுகிறது.எனவே கவலைகளை ஒழித்தே ஆக வேண்டும்.அதற்கான சில பயிற்சிகள்:
1 தனிமையில் அமைதியாக உட்காருங்கள்.பேப்பர்,பேனா எடுத்துக் கொள்ளுங்கள்.
2 உங்கள் கவலைகளையெல்லாம் தொகுத்து வரிசைப் படுத்தி எழுதிக் கொள்ளுங்கள்.
3 கவலைதரும் சிக்கல்களை கீழ்க்கண்ட நான்கு வகைகளில் பிரித்துக் கொள்ளுங்கள்.
.அனுபவித்தே தீர வேண்டிய கவலைகள்.(தீராத நோய்,மரணம்,பொருள் இழப்பு போன்றவை)
.தள்ளி வைத்துப் பொறுமை கட்ட வேண்டிய கவலைகள்.(பருவம் வந்தும் திருமணம் ஆகாமை போன்றவை)
.அலட்சியப்படுத்த வேண்டிய கவலைகள்.(பிறரின் கருத்து வேறுபாடு, பொறாமைப் பேச்சு,செயல்கள் போன்றவை)
.உடனே தீர்த்து விட வேண்டியவை.(கடன் தொல்லை,பாகப் பிரிவினை,தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.)
இவ்வாறு தரம் பிரித்தவுடன் அவற்றிற்கேற்றவாறு செயல் பட வேண்டும்.
4 ஒரு சிக்கலை விரைவாகத் தீர்க்க உணர்ச்சி வசப்பட்டு செயலாற்ற வேண்டாம்.அறியாமையால் சிக்கல்களை மேலும் உண்டாக்கிக் கொள்ளாமல் இருந்தால் போதும்.
5 முன்பு வந்த கவலைகள் எப்படித் தீர்ந்தன என்று யோசித்துப் பாருங்கள்.
6 வாழ்வில் சிக்கல்களே இருக்கக் கூடாது என்று எண்ணவோ ,இருப்பவற்றை எல்லாம் வேரோடு களைந்து விட வேண்டும் என்று முடிவு செய்யவோ, செயலாற்றவோ வேண்டாம்.ஒரு சிக்கல் தீர்ந்து மற்றொன்று முளைக்கும் போது ஏற்படும் கவலைகளைத் திட்டமிட்டு செயலாற்றி நீக்கிக் கொண்டால் மகிழ்ச்சியும் அமைதியும் பெறலாம்.

முட்டை

1

Posted on : Wednesday, October 24, 2012 | By : ஜெயராஜன் | In :

முட்டை வியாபாரி:என் பையன் எப்படி படிக்கிறான்,சார்?
ஆசிரியர்:நீங்கள் விற்கிறீர்கள்.அவன் வாங்குகிறான்.அவ்வளவுதான்.
********
ராமு:அரையாண்டு தேர்வு எப்படி எழுதி இருக்கே?
சோமு:அரைகுறையாய்த்தான்.
********
தந்தை:ராமு,மணி என்னவென்று பார்த்துச் சொல்லு.
மகன்:எனக்கு மணி. பார்க்கத் தெரியாது அப்பா.
தந்தை:சரி,பெரிய முள்ளும்,சின்ன முள்ளும் எங்க இருக்கு என்று பார்த்துச்சொல்லு .
மகன்:இரண்டும் கடிகாரத்தில் தான் அப்பா இருக்கு.
********
''எலியின் ஆயுட்காலம் எவ்வளவு,தெரியுமா?''
'அது சுற்றி இருக்கும் பூனைகளைப் பொறுத்தது.'
********
ஆசிரியர்:செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:நீங்கள் கொடுக்கும் வீட்டுப் பாடத்தை நானே போட்டால் அது செய்வினை.அதையே எங்க அப்பா செய்து கொடுத்தால் அது செயப்பாட்டு வினை.
********
ராமு:மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்:தான் வாங்கக் கூடாது என்று நினைப்பவன் யார்?
சோமு:குத்து சண்டை வீரன்.
********
''நாம் எப்போதும் வக்கீல்களிடம் உண்மையே சொல்ல வேண்டும்''
'ஏன் அப்படி?
''பொய் சொல்வதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.''
********
ராமு:எங்கப்பா ஒரு ஆசிரியர்.ஸ்டாம்ப் சேர்ப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
சோமு:எங்கப்பா ஒரு அரசியல்வாதி.காந்தி படம் போட்ட நோட்டுகளை சேகரிப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
********
''கல்யாணமும் சூயிங்கமும் ஒரே மாதிரிதான்''
'எனக்குப் புரியலையே.'
''இரண்டும் போகப்போக சுவையே இல்லாமல் ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே இருக்கும்.''
********
''நம்ம பாகவதர் பாட ஆரம்பித்தாருன்னா உலகத்தையே மறந்து விடுவார்.''
'அதுக்காக பாடிய பாட்டையே மூணாவது தடவை பாடணுமா?'
********

கண்டுபிடி

1

Posted on : Wednesday, October 24, 2012 | By : ஜெயராஜன் | In :

பழைய காலத்தில் வைத்தியர் குடும்பம் ஒன்று இருந்தது.அவர் வீட்டில் எல்லோரின் பெயரும் வித்தியாசமாக இருந்தது.வைத்தியர் பெயர்,'தெரியாது'.அவரின் மனைவியின் பெயர்,'புரியாது'.மூத்த மகனின் பெயர்'புரியுமா'.இளைய மகனின் பெயர்'தெரியுமா'.மூத்த மருமகள் பெயர்,'சொன்னால் கேட்கிறேன்'.இளைய மருமகள் பெயர்,'கேட்டால் சொல்கிறேன்'.ஒரு பேரனின் பெயர்,'எனக்குத் தெரியும்'.இன்னொரு பேரனின் பெயர்,'எனக்குப் புரியும்'.அவர்கள் வீட்டில் ஒரு கழுதையும் இருந்தது.அதற்கும் அவர்கள் ஒரு வித்தியாசமான பெயரைத்தான் வைத்திருந்தார்கள். அது,என்னவென்று கண்டுபிடியுங்கள்.

விடை:இது ஒரு புதிரே அல்ல.இதில் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.அந்தக் கழுதையின் விசித்திரமான பெயர்தான்,'என்னவென்று கண்டுபிடியுங்கள்'.

''டைம் பாஸ் ''வார இதழிலிருந்து.

நேர்மை.

4

Posted on : Tuesday, October 23, 2012 | By : ஜெயராஜன் | In :

தனது  வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான்.பணத்தையே தெய்வமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.தனது  மூன்று மகன்களையும் அழைத்து,''நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போதுதான் தெளிந்துள்ளேன்.நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன்.ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது.நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,''என்றார்.பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார்.அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர். வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான்,''தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை.எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,'' இரண்டாமவன் உடனே சொன்னான்,''நீ பரவாயில்லை.எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்,''கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து,''அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா?அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,''என்று கன்னாபின்னாவெனத் திட்டினான்.அண்ணன்கள் இருவரும்,''பரவாயில்லை,நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?''என்று கேட்டனர்.கடைக்குட்டி சொன்னான்,''நான் நேர்மையானவன்.அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு  செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.''

கைப்பாவை

1

Posted on : Tuesday, October 23, 2012 | By : ஜெயராஜன் | In :

உங்கள் மனதில் நிறைந்துள்ளவை எல்லாம் உங்களுடையவை அல்ல.நீங்கள் அவற்றையெல்லாம் தாண்டியவர்கள்.நீங்கள் அவற்றுடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.அதுமட்டும்தான் பாவம்,குற்றம். உதாரணமாக, யாராவது உங்களை அவமதித்து விடுகிறார்கள்.நீங்கள் கோபமடைகிறீர்கள் .நீங்கள் கோபம் அடைவதாக எண்ணுகிறீர்கள்.ஆனால் அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது அவரது அவமதிப்பு ஒரு ரிமோட் கண்ட்ரோல்.உங்களை அவமதித்த மனிதன் உங்களுடைய நடவடிக்கையைக் கட்டுப் படுத்துகிறான். உங்களது கோபம் அவன் கையில் உள்ளது.நீங்கள் ஒரு கைப்பாவையாகச் செயல் படுகிறீர்கள்.
********
புத்தர் கூறுகிறார்,''கோபப்படுவது என்பது முட்டாள்தனமானது.யாரோ என்னவோ செய்கிறார்.நீங்கள் கோபமடைகிறீர்கள்.அவர் ஏதாவது தவறாகச் செய்யக் கூடும்.தவறாகச் சொல்லக் கூடும். . உங்களை அவமதிக்க ஏதேனும் முயற்சி செய்யக் கூடும்.ஆனால் அது அவரது சுதந்திரம்.நீங்கள் எதிர்ச் செயல் புரிந்தால் நீங்கள்தான் அடிமை என்றாகிறது.'' நீங்கள் அந்த மனிதரிடம்,''உனது மகிழ்ச்சி என்னை அவமதிப்பது.எனது மகிழ்ச்சி கோபம் கொள்ளாமல் இருப்பது.''என்று கூறினால் நீங்கள் எஜமானனைப் போல நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள்.
********

உதட்டளவில் அற்புதம்

1

Posted on : Monday, October 22, 2012 | By : ஜெயராஜன் | In :

உங்கள் எண்ணங்களுக்கு சிறகு வார்த்தைதான்.உயரப் பறந்தாலும் பறக்கும்,புழுதியில் விழுந்தாலும் விழும்.அது உங்கள் வார்த்தையின் தன்மையைப் பொறுத்தது.நீங்கள் வார்த்தை வடிவில்தான் சிந்திக்கிறீர்கள். உடலுக்கு ஆடைபோல,எண்ணங்களுக்கு வார்த்தைகள்.வார்த்தைகளின்றி மனிதர்களை இயக்க முடியாது.சரியான வார்த்தைகள்தான் உங்கள் கருவி.மற்றவர்களை உங்கள் வசமாக்குவது அவைதான்.உணர்வுகளைத் தட்டி எழுப்பிடும் சிறந்த ஆயுதம் பேச்சு.இந்த ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அது உங்கள் பக்கமே திரும்பக் கூடும்.சின்னச்சின்ன வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்.நாலு வார்த்தையில் அழகாகச் சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை நாள் முழுக்கச் சொன்னாலும் பயன்படாது.எதையும் புன்முறுவலோடு சொல்லுங்கள்.இனிய வார்த்தைகளைப்போல நெஞ்சைத் தொடுவது எதுவும் இல்லை.நிறையக் கேளுங்கள் குறையப் பேசுங்கள்.அதற்காகத்தான் உங்களுக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் உள்ளன.

தெரியுமா?

1

Posted on : Monday, October 22, 2012 | By : ஜெயராஜன் | In :

சூரியனிலிருந்து ஒரு மலையின் உச்சியானது ,பூமியின் நிலப்பரப்பைக் காட்டிலும் அருகாமையில் உள்ளது.அப்படியானால் மலை உச்சியில்தானே வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும்?மாறாக மலை உச்சியில் வெப்பம் குறைவாக இருப்பதேன்?
சூரியனிலிருந்து பூமிக்கு வெப்பம் வருவதில்லை.சிவப்புக் கதிர்கள்தான் (Infra red rays)வருகின்றன.அந்தக் கதிர்கள் ஒரு பொருளின் மீது படும்போது அந்தப் பொருள் சூடாகிறது.தரையிலிருந்து உயரே செல்லச்செல்ல காற்றின் அடர்த்தி குறைகிறது.அதனால் இக்கதிர்களை உட்கவர்ந்து வெப்பம் உண்டாக்கப் போதுமான பொருள் அங்கு இல்லை.அதனால் அங்கு அவ்வளவு வெப்பம் இருப்பதில்லை.எனவேதான் மலை உச்சிகள் குளிர்ச்சியாக உள்ளன.

ஒத்துழைப்பு இல்லையா?

1

Posted on : Sunday, October 21, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தொழிலையோ,ஒரு குடும்பத்தையோ,ஒரு அமைப்பையோ,ஏன்,ஒரு சிறு செயலையோ நல்லபடி நடத்திச் செல்ல விரும்பும் ஒருவர் எல்லோருடனும் இணக்கமாகவும் கை கோர்த்து நடக்கும் மன நிலையுடனும் செயல் பட வேண்டியது அவசியம்.நமமிச் சுற்றியுள்ள பலர் இலை மறை காய் மறையாக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதற்கு மூன்று பெரிய காரணங்கள் தான் இருக்க முடியும்.
1 இவர்கள் சொற்களால் காயப் பட்டிருப்பார்கள்.அல்லது போதுமான பாராட்டுக்களையோ உரிய அங்கீகாரங்களையோ பெறாமலிருப்பார்கள்.
2 இவர்களது தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.அதாவது இவர்களிடம் அதிருப்தி உள்ளது.
3இவர்கள்  பல்வேறு சம்பவங்களினால் நம்மீது எரிச்சல் அடைந்து இனம் புரியாத வெறுப்பைத் தங்கள் மனதிற்குள் வளர்த்திருப்பார்கள்.
முதல் பிரிவினர் அன்பு,பாசம்,மரியாதை,பாராட்டு இவற்றால் அடங்கி விடுவார்கள்.பணத்தையோ,பரிசையோ பெரிதாக எண்ண  மாட்டார்கள். இவர்கள் விசயத்தில் நாம் கௌரவம் பார்க்கக் கூடாது.
இரண்டாவது பிரிவினர் கொஞ்சம் பேராசைக்காரர்கள்.கேட்டதெல்லாம் இவர்களுக்குக் கிடைத்து விட வேண்டும்.இவர்கள் விசயத்தில் நாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கவும் இழக்கவும் தயாராக இருந்தால் வழிக்கு வந்து விடுவார்கள்.
மூன்றாவது ரகத்தினர் நம் மீது குறை காணுபவர்கள்.இவர்கள் நம் செயல் தவறு என்று கூறும்போது ஆமாம் என்று ஒத்துக் கொண்டு மறுபடியும் அந்தமாதிரி வராதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
------------லேனா தமிழ்வாணன்.

சில உண்மைகள்

2

Posted on : Saturday, October 20, 2012 | By : ஜெயராஜன் | In :

கழுத்தை முழு வட்டமாக சுற்றும் தன்மை கொண்ட ஒரே உயிரினம் ஆந்தை தான்.
********
ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது கடற்கரையிலிருந்து மூன்று கடல் மைல் .அதாவது 6080 அடி தூரமாகும்.
********
எப்போதும் விரியாத பூ அத்தி மலர்தான்.அதனால்தான் எப்போதாவது நடக்கும் செயலை 'அத்தி பூத்தாற்போல'என்கிறோம்.
********
ஒரு அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 வகையான தசைகள் பணி  புரிய வேண்டியுள்ளது.
********
'மஞ்சள் புரட்சி'என்பது முட்டை உற்பத்தியைக் குறிக்கிறது.
********
பழச்சாறு சாப்பிட்டால் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் பல்லில் எனாமல் வேகமாகத் தேயும்.
********
பளபளப்பான பகுதிகள் வெப்பத்தை மிக மிக தாமதமாகவே கடத்தும். அதனால்தான் இஸ்திரிப் பெட்டிகளின் அடிபாகம் பளபளப்பாக இருக்கிறது.
********
பர்மா ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியாவுடன் இணைந்திருந்தது.1937 ல்தான் அது இந்தியாவிலிருந்து பிரிந்தது.
********
பென்சிலில் H.B.என்று எழுதியிருப்பதற்கு HARD BLACK என்பதுதான் விரிவு.
********
யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.
********
ஒட்டகச்சிவிங்கியின் நீளமான கழுத்தில் இருப்பது ஏழே  எலும்புகள்.
********
உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் பெயர் ஈசாகானு
.நாடு-நைஜீரியா.மொத்தம் 72 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
********

பொன்மொழிகள்-34

2

Posted on : Saturday, October 20, 2012 | By : ஜெயராஜன் | In :

மிக ஆழமான கடல், பணம்தான்.இந்தப் பணக்கடலில் உண்மை, மனசாட்சி, கௌரவம் ஆகிய அனைத்தும் அடியோடு மூழ்கி விடுகின்றன.
********
நீங்கள் நேர்மையான மனிதர் என்றால் நீங்கள் முன்னேற உங்களுக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தைரியம் மட்டுமே.
********
மனிதர்கள் இரண்டு அழுக்குக் கைகளைப்போல:ஒன்றினால்தான் மற்றொன்றின் அழுக்கைப் போக்க முடியும்.
********
கடுமையான,கசப்பான சொற்கள் என்பது பலவீனமான கொள்கையின் அறிகுறி.
********
எல்லாம் வேடிக்கைதான்:நமக்கு நடக்காமல் அடுத்தவர்களுக்கு நடக்கும் வரை.
********
சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.
********
அவிழ்க்க முடிந்ததை
அறுக்க வேண்டியதில்லை.
********
குழந்தைகளின் உதட்டிலும் உள்ளத்திலும் உள்ள ஆண்டவனின் பெயர் அம்மா.
********
கும்பலுக்குப் பல தலைகள்:
மூளைதான் இல்லை.
********
நமது சமதர்ம ஆர்வத்தில் ஒரே ஒரு சிக்கல்!நாம் நம்மிலும் மேலோரிடம் மட்டும்தான் சமத்துவம் பாராட்ட விரும்புகிறோம்.
********

என்ன வாழ்க்கை இது?

1

Posted on : Friday, October 19, 2012 | By : ஜெயராஜன் | In :

முன்பெல்லாம் மனிதன்,மாடு ,நாய்,கொக்கு எல்லோருக்கும் வாழ்க்கை அதிக பட்சம் நாற்பது ஆண்டுகள் தான் இருந்தது.மாடு,நாய்,கொக்கு மூன்றும் இறைவனிடத்தில் தங்கள் ஆயுட்காலத்தை இருபது ஆண்டுகள் குறைக்கும்படி கேட்டுக் கொண்டன.உடனே மனிதன் ஆண்டவனிடம் அவை மூன்றும் விட்ட  அறுபது ஆண்டுகளையும் தனக்கு ஆயுட்காலத்தில் நீட்டித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டான்.இறைவனும் சம்மதித்து  விட்டான்.எனவே மனிதனுக்கு ஆயுட்காலம் நூறாகியது.ஆனாலும் அவனுடைய உரிமையான நாற்பது ஆண்டுகள்தான் அவன் மனித வாழ்க்கை வாழ்கிறான்.அதிலும் போட்டி பொறாமைகளுடன்!
நாற்பதிலிருந்த அறுபது வரை மாட்டிடம் இருந்து இரவல் பெற்ற இருபது ஆண்டுகள்.அப்போது மனிதன் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வாழ்க்கைப் பாரத்தை மாடுபோல இழுக்கிறான்.அறுபதிலிருந்து எண்பது வரை நாயிடமிருந்து இரவல் பெற்றது.எனவே அந்த காலகட்டம் நாய் வாழ்க்கை வாழ்கிறான்.அதிலும் சிலருக்குத் தெரு நாய் வாழ்க்கை!  எண்பதிலிருந்து  நூறு வரை கொக்கின் கடன்.அப்போது மனிதன் கொக்கு வாழ்க்கை வாழ்கிறான்.ஒற்றைக்காலில் அந்த' மரணம் 'என்கிற மீனுக்காகத் தவம் இருக்கிறான்.என்ன வாழ்க்கை இது?

வருத்தமில்லாமல் வாழ!

1

Posted on : Friday, October 19, 2012 | By : ஜெயராஜன் | In :

வருத்தப்படுவது உங்கள் குணமா?கவலையை விடுங்கள்.உங்களின்  அனுபவங்களைக் கொண்டே உங்கள் வருத்தங்களை நீக்கி விடலாம் . வருத்தப்படுவது என்பது உணர்ச்சி வசப்படுதலின் விளைவாக ஏற்படுவது.ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும் நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். எதிர் காலத்தைப் பற்றி அடிக்கடி குழம்பாதீர்கள்.அதற்குப் பதிலாக ரொம்ப சகஜமாகவும்,சிரமமற்றதாகவும் வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும். குழப்பமான வேலைகள் வந்தால் அதை சற்றே ஒதுக்கி வையுங்கள்.எந்த வேலையையும் ஆர்வமுடன் செய்யும்போது மகிழ்ச்சி ஏற்படும். அம்மகிழ்ச்சியே உங்களை மேலும் சாதனை புரியத் தூண்டும்.வருத்தமான ஒரு நிலை உங்கள் முன்னே உருவாகிறபோது அதைப் பற்றி யோசியுங்கள். ஆராயுங்கள்.காரணம் தெரிந்தவுடன் அதை எப்படி தவிர்ப்பது என்று சிந்தியுங்கள்.அப்போதே பாதி வருத்தம் போய்விடும்.''நான் வருத்தப்படுவதால்  எதிர்காலத்தில் ஏதாவது லாபம் ஏற்படுமா,மாற்றங்கள் உண்டாக வாய்ப்பு உண்டா'' என நினைத்துப் பாருங்கள்.வருத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வருத்தப்படும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். மனதில் உள்ள வருத்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நிம்மதியாக அடுத்த வேலையைக் கவனியுங்கள்.

உங்கள் சுமை

2

Posted on : Thursday, October 18, 2012 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் எதை வேண்டுமானாலும் மற்றவர் தலையில் கட்டிவிடலாம்:உங்கள் கவலையைத்தவிர.ஏனெனில் அது உங்கள் சுமை.சிலர் எதற்கும் கவலைப் படுவதில்லை.சிலர் எதெற்கெடுத்தாலும் கவலைப் படுகிறார்கள்.கவலை துளி அளவு படலாம்.அது எச்சரிக்கை உணர்வைத் தோற்றுவிக்கும்.அதே கவலை அளவுக்கு மீறினால் டெண்சன் தான் வரும்.நியாயமான கவலைகள் மனிதன் இயல்பு.கவலைப் படாமல் இருக்கவும் முடியாது.இன்றைய வாழ்வைப் பற்றிக் கவலைப் படுங்கள்.நாளைய மரணத்தைப் பற்றி மாய்வது அனாவசியம். நேற்று நடந்ததைப்  பற்றி நினைத்து வருந்துவதில் பயனில்லை.எதையும் எதிர் மறையாக சிந்திக்காதீர்கள்.மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத போதும்,நம் மீதே நம்பிக்கை இல்லாத போதும் கவலை வந்து விடுகிறது. கவலைகள் காளானைப் போல முளைக்கும்.விட்டு வைத்தால் மலையைப் போல வளர்ந்து நம்மை மலைக்க வைக்கும்.கவலைப் படுகிற சுபாவம் தொற்று நோய்போல,ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும்.சிலர் நோய் வந்து கவலைப் படுவார்கள்.சிலர் எந்த நோயும் இல்லாமலேயே ஏதோ நோய் இருப்பதாக எண்ணிக் கவலைப் படுவார்கள்.''எதுவும் நம் கையில் இல்லை'','கடமையைச்செய்'என்ற கீதையின் வாசகங்களை நினைவில் வையுங்கள்.

தர்மம் தலை காக்குமா?

1

Posted on : Thursday, October 18, 2012 | By : ஜெயராஜன் | In :

இறந்தவுடன் நரகத்திற்குக் கொண்டு வரப்பட்டான் ஒரு பணக்காரன். அவன் கணக்கைப் பார்த்துவிட்டு,சித்திரகுப்தன் ''இவன் பூமியில் எந்தவித தர்மமும் செய்யவில்லை.எனவே இவனைக் கொதிக்கும் எண்ணெயில் தூக்கிப் போடுங்கள் என்று ஆணையிட்டான்.அந்த வியாபாரி ஆவேசத்துடன், ''ஐயோ,என் வாழ்நாள் முழுவதும் என் பணம் முழுவதையும் தர்மத்திற்குத்தானே செலவு செய்தேன்!என்னை இப்படி வதைக்கிறீர்களே?''என்று கத்தினான்.சித்திரகுப்தனுக்கு வந்தது குழப்பம்.அந்த பணக்காரனின் கணக்கை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு,''என்ன விளையாடுகிறாயா?நீ யாருக்கும் ஒரு பைசா கூட தர்மம் கொடுக்கவில்லை. என் கணக்கில் பிழையே ஏற்படாதே!ஒழுங்காய் உண்மையைக் கூறு. இல்லையெனில் இன்னும் கூடுதலாக தண்டனை கொடுப்பேன்,''என்றார். பணக்காரனும் அப்பாவியாக சொன்னான்,''அய்யா,என் மனைவி தர்மம் என்ற தர்மாம்பாளுக்குதான் நான் என் பணம் முழுவதையும் செலவழித்தேன் .நான் சொல்வது உண்மை.''சித்திரகுப்தன் கோபத்தில் பல்லை நறநறவென்று கடித்தார்.

சிரிச்சு வைப்போம்

1

Posted on : Wednesday, October 17, 2012 | By : ஜெயராஜன் | In :

ஆசிரியர்:நீங்கள் எல்லாம் வைரம் மாதிரி.
மாணவன்:அப்படின்னா,நீங்களும் வைரம் தான் சார்.
ஆசிரியர்:எப்படி?
மாணவன்:வைரத்தை வைரத்தால்தானே சார் அறுக்க முடியும்?
********
ராமு:ஆசிரியர்கள் ஏணி மாதிரின்னு சொல்றாங்கள்ள ,அது ரொம்ப சரி.
சோமு:அது எப்படி?
ராமு:எப்பவும் படி,படின்னு சொல்றாங்கள்ள !
********
ஆசிரியர்:செய்முறை வகுப்பிற்கும்,பாடம் நடத்தப்படும் வகுப்பிற்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:செய்முறை வகுப்பில் நாங்கள் அறுப்போம்:மற்றதில் நீங்கள் அறுப்பீர்கள்.
********
ஆசிரியர்:ஏசுவுக்கும் காந்திக்கும் என்ன ஒற்றுமை?
மாணவன்:இரண்டு பேருமே விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள்,சார்.
********
மாணவனின் தந்தை:என் மகன் கணக்கிலே புலியாய் இருப்பானே!
ஆசிரியர்:நீங்க வேறே,அவனுக்கு ஐந்தும் நான்கும் கூட்டினால் என்ன விடை என்பதே தெரியவில்லை.
தந்தை:நீங்கள் வேண்டுமானால் ஒரு புலியிடம் இதே கணக்கைப் போட்டுப் பாருங்கள்!அதுவும் பதில் தெரியாமல் முழிக்கத்தான் செய்யும்.
********
ராமு:நான் தேர்வு எழுதக் கிளம்பும்போதெல்லாம் எங்க அப்பா வாசல் படி வரைக்கும் வந்து விடை கொடுத்து அனுப்புவார் தெரியுமா?
சோமு:எங்கப்பா விடையெல்லாம் கொடுத்து அனுப்ப மாட்டார்.தெரிஞ்ச வரைக்கும் எழுதினால் போதும் என்பார்.
********

கெட்டிக்காரன்.

1

Posted on : Tuesday, October 16, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கப்பல் கடலில் அமைதியாக சென்று கொண்டிருந்தது.திடீரென ஒரு பெரிய முதலை கப்பலைத் தாக்கியது.கப்பலில் இருந்தவர்கள் முதலையைப் பார்த்து டேபிள்,சேர்,ஆரஞ்சுப் பழங்கள் ஆகியவற்றைத் தூக்கி எறிந்தனர்.அவற்றை முழுங்கியபோதும் முதலை தாக்குதலை நிறுத்தவில்லை.உடனே கப்பலில் இருந்தவர்கள் ஒரு யூதனைத் தூக்கி எறிந்தனர்.அவனையும் விழுங்கிவிட்டு மறுபடியும் முதலை தாக்கியது.உடனே எல்லோரும் யோசனை செய்தார்கள்.''என்ன போட்டாலும் அதை விழுங்கிவிட்டு திரும்ப வருகிறது.வேறு வழியில்லை.நாம் எல்லோரும் இருக்கும் ஆயுதங்களுடன் ஒரே நேரம் அதன் மீது குதித்துக் கொன்று விட வேண்டியதுதான்.''என்று முடிவு செய்து அவ்வாறே செயல் படுத்தினர்.பின் இறந்த முதலையைக் கப்பலுக்குள் இழுத்து அதன் வயிற்றைக் கிழித்தனர்.அதன் உள்ளே கண்ட காட்சி அவர்களை மயக்கப்பட வைத்தது. ஆம்,.அதன் உள்ளே, தூக்கி எறியப்பட்ட யூதன், நாற்காலியில் உட்கார்ந்தவாறு ,.அவன் எதிரில் டேபிளைப் போட்டு,ஆரஞ்சுப் பழங்களை  அதன் மீது வைத்து,ஏற்கனவே முதலை விழுங்கிய மனிதர்களுக்கு விற்றுக் கொண்டிருந்தான்.

தெளிவு

0

Posted on : Tuesday, October 16, 2012 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு அரசியல்வாதி.ஊரில் பெரிய மனிதன்.எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார்.அவரும் சில பிரார்த்தனைகளையும்.பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி செய்து வரச் சொன்னார்.சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன்,''நீங்கள் சொன்னதெல்லாம் செய்தேன்.ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,''என்றார்.உடனே குரு,''சரி,வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,''என்றார்.அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது.''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?''என்று கேட்க,குருவும்,''ஒரு பத்து நிமிடம் நின்றால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,''என்றார்.''சரி பத்து நிமிடம் தானே,தெளிவு பிறந்தால் சரி,''என்று சொல்லிக்கொண்டே மழையில் நனைந்தபடி நின்றார்.அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் கண்களை மூடிக் கொண்டார்.பத்து நிமிடம் ஆயிற்று.கண்ணைத் திறந்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம்.அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது.உள்ளே விறுவிறுவென்று சென்று,''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?''என்று கேட்டார்.;;வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?''என்று குரு கேட்க அவர் சொன்னார்,''எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குமாறு செய்து விட்டீர்கள்.நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்''உடனே குரு சிரித்துக் கொண்டே சொன்னார்,''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே பொருள்?''

தாராளம்

0

Posted on : Monday, October 15, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கஞ்சன் சென்னைக்கு சென்றான்.ஒரு தெருவிற்கு சென்றான். கையிலிருந்த விலாசத்தைக்காட்டி பலரிடம் விசாரித்து ஒரு வீட்டுக்கு வந்தான்.அந்த வீடு ஒரு விலைமகளிர் வசித்து வந்த வீடு.ஒரு மனிதன் தனது  வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தவுடன் அந்தப் பெண் மிக மகிழ்வுடன் அவனை  வரவேற்று உபசரித்தாள்.அவனும் அவளுடன்  மகிழ்ச்சியாய் இருந்துவிட்டு புறப்படுகையில் பத்தாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்தான். அவளுக்கு மிகுந்த ஆச்சரியம்.அவள் அவனிடம் சொன்னாள் ,''மிக்க நன்றி இதுவரை யாரும்  பெருந்தன்மையுடன் இவ்வளவு பெருந்தொகையை  எனக்குக் கொடுத்தது கிடையாது.ஆமாம்,நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?''அவன் சொன்னான்,''மதுரையிலிருந்து வருகிறேன்.''அவள் வியப்பைத் தனது முகத்தில் காட்டியவாறே,''அடடே,நானும் மதுரைக்காரிதான்.''என்றாள் .அவனும்,''எனக்குத் தெரியும் பெண்ணே,''என்றான்.அந்தப்பெண் எப்படித்தெரியும் என்று கேட்க,அவன் சொன்னான்,''நான் சென்னைக்கு ஒரு வேலையாய் வருவது தெரிந்து உன் தந்தைதான் என்னிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து உன் முகவரியையும் கொடுத்து உன்னிடம் கொடுக்கச் சொன்னார்.''அந்தப்பெண் மயங்கி விழுந்தாள் .

இரண்டும் ஒன்றுதான்.

0

Posted on : Monday, October 15, 2012 | By : ஜெயராஜன் | In :

எண்பது வயது நிரம்பிய ஒரு வயதான மனிதன் தனது  வீட்டு முன்  பகுதியில் இருந்த மதில் சுவர் மீது  ஏறி உட்கார்ந்து கொண்டு தெருவில் போகிற வருகிற வாகனங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.அவ்வாறு செய்வதில் அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.விதவிதமான கார்களை மிகவும் ரசித்துக் கைகொட்டி தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தியவண்ணம் இருந்தார்.அவரது வித்தியாசமான செய்கையை காரில் செல்பவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.அப்போது ஒரு விலை உயர்ந்த கார் அந்தப் பக்கம் வந்தது.அந்தக் காரைப் பார்த்தவுடன் கிழவருக்கு மகிழ்ச்சி அதிகமாகி முகமெல்லாம் மலர்ந்திருந்தார்.அந்தக் காரில் வந்த பணக்காரர் அவரைப் பார்த்து காரிலிருந்து இறங்கி விட்டார்.அவர் கிழவரைப் பார்த்துக் கேட்டார்,''இவ்வளவு விலை உயர்ந்த காரை நான் வைத்திருக்கிறேன்.அதில் மிக சொகுசாய்  பயணம் செய்கிறேன்.ஆனாலும் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியைக் காட்டிலும் உங்களுக்கு மிக அதிகமாயிருக்கிறதே!உங்கள் செய்கை வியப்பைத் தருகிறது.''கிழவர் சொன்னார்,''நீங்கள் வீதியில் காரில் பயணித்தவாறு பல வீட்டு மதில் சுவர்களையும் பார்த்த வண்ணம் மகிழ்வுடன் செல்கிறீர்கள்.நான் என் வீட்டு மதில் சுவரில் உட்கார்ந்தவாறு வீதியில் செல்லும் கார்களைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.இரண்டும் ஒன்றுதானே!இதில் வித்தியாசம் என்ன இருக்கிறது?''

சில இனிய தகவல்கள்

1

Posted on : Sunday, October 14, 2012 | By : ஜெயராஜன் | In :

நாம் உண்ணும் சாதம் செரிக்க ஒரு மணி நேரம் ஆகிறது.பால் செரிக்க இரண்டு மணி நேரம் ஆகிறது.நெய் ,வேக அவித்த முட்டை,மாமிசம் செரிக்க நான்கு மணி நேரம் ஆகிறது.
********
மது அருந்தினால் சிலருக்கு தைரியம் வரும்.அதற்கு Dutch courage என்று பெயர்.
********
இப்போது உலகமெங்கும் உபயோகப் படுத்தப்படும் காலண்டருக்கு கிரிகேரியன் காலண்டர் என்று பெயர்.இது 1582ல் இத்தாலியில் போப் கிரிகேரி13 என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
********
உலகம் தோன்றியது முதல் எந்தவித பரிணாம வளர்ச்சியும் இல்லாத உயிரினம் கரப்பான் பூச்சி.
********
நிறக்குருடு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் வித்தியாசப் படுத்தி சொல்ல முடியாது.
********
ஒரு பிராணியைப் பார்த்தவுடன் அதன் காது வெளியே தெரிந்தால் அது குட்டி போடும் என்றும் காது வெளியே தெரியவில்லை என்றால் அது முட்டையிடும் என்றும் அறியலாம்.
**********
கிரேக்க நாட்டில் யூரல் மலைப் பகுதியில் 'ஆஸ்பெட்டாஸ்'என்ற நகரம் உள்ளது.இந்த நகரம் கல் நார் எடுக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது.இந்த நகரின் பெயராலேயே கல்நாருக்கு 'ஆஸ்பெட்டாஸ்'என்ற பெயர் வந்தது.கிரேக்க மொழியில் ஆஸ்பெட்டாஸ் என்றால் அழிக்க முடியாதது என்று பொருள்.
********
மத்தாப்பு மற்றும் வான வெடிகளில் விதவிதமான வர்ணங்கள் தோன்ற வெடிமருந்துடன் பல்வேறு உலோக உப்புகளைச் சேர்க்கிறார்கள்.
நீலம்-- காப்பர்
பச்சை--பேரியம்.
மஞ்சள்--சோடியம்.
சிவப்பு--ஸ்ட்ரோண்டியம்.
********
55அடிக்குக் குறைவான எந்த அறையிலும் எதிரொலி கேட்காது. காரணம்: காற்றில் ஒலி பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு 1100அடி.இதில் பத்தில் ஒரு வினாடி தூரத்தில் உள்ள ஒலிகளை மட்டும் நம் காது இனம் பிரித்துக் கேட்கும் இயல்புடையது.வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில் ஒலி  செல்வது 110அடி.எதிரொலிக்க வேண்டும் என்றால் ஒலி  அதில் பாதியில் மோதித் திரும்ப வேண்டும்.110ல் பாதி  55அடி.ஆகவேதான் அதற்குக் குறைவான நீளமுள்ள அறையில் எதிரொலி கேட்பதில்லை.
********


தேவையும் ஆசையும்

1

Posted on : Sunday, October 14, 2012 | By : ஜெயராஜன் | In :

நமக்குத் தேவைகள் என்பவை வெகு சிலவே.அவை எளிமையானவை. உங்களுக்கு என்ன தேவை?உணவு,நீர்,உறைவிடம்,உங்களை காதலிக்க ஒருவர்,அவரை விரும்ப நீங்கள்.இவைதானே உங்களது தேவைகள்.இந்தத் தேவைகளுக்கெல்லாம் மதங்கள் எதிரிகள்.யாரையும் காதலிக்காதே,பிரம்மச்சாரியாக இரு என்கிறது மதம்.தேவைக்கு உணவை உண்ணாதே,விரதம் இரு என்கிறது மதம்.தங்க ஒரு வீடு தேவை,ஆனால் எதிலும் பற்றில்லாமல் சந்நியாசியாகி நாடோடியாகசுற்றித்  திரி என்கிறது மதம்.நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது மேலும் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறீர்கள் .அதிலிருந்து மீள அந்த மதவாதிகளிடம் தஞ்சம் புகுகிறீர்கள் .மொத்தத்தில் அவர்கள் சொல்வதெல்லாம் நீங்கள் அவர்களை நம்பி இருப்பதற்காக உருவாக்கப் பட்டவை.
ஆசை என்பது என்ன?உங்களை காதலிக்க தேவை ஒரு பெண். கிளியோபாத்ராதான் வேண்டும் என்பது ஆசை..தங்க இடம் வேண்டுவது  தேவை.அரண்மனை வேண்டும் என்பது ஆசை.  உன்ன உணவு வேண்டும் என்பது தேவை.ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்பது ஆசை.தேவைகள் எளிதில் அடையக் கூடியவை.ஆசைகள் அடைய முடியாதவை.உங்களுடைய எளிமையான தேவைகள் நிறைவேறினாலே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.புத்தருக்கே இந்த தேவைகள் உண்டு.
உங்களது ஆசைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறையுங்கள்.ஆசைகள் செயற்கையானவை.தேவைகள் இயற்கையானவை.அதனால் உங்கள் தேவைகளைக் குறைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றுங்கள்.

நகைமுகம்

1

Posted on : Saturday, October 13, 2012 | By : ஜெயராஜன் | In :

ராமு:ஒரு ஆயிரம் ரூபாய் தாயேன்!
சோமு:இல்லையே!
ராமு:ஐநூறு ரூபாயாவது!
சோமு:வாய்ப்பே இல்லை.
ராமு:சரி,இருநூறாவது கொடு.
சோமு:நாந்தான் இல்லை என்று சொல்கிறேனே,ஏன் தொந்தரவு செய்கிறாய்?
ராமு:போனால் போகிறது.நூறு ரூபாயாவது கொடு.
சோமு:நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன்?
ராமு:இப்போதைக்கு ஐம்பது ரூபாய் தந்தால்  கூடப் போதும்.
சோமு:ஊகூம்.
ராமு:கடைசியாக் கேட்கிறேன்.திரும்பப் போக பஸ் செலவுக்கு பத்து ரூபாயாவது  தா.
சோமு:என்கிட்டே பத்து பைசா கூட இல்லை.ஆளைவிடு.
ராமு:ஏண்டா,என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே?உன் கிட்ட கொடுத்த கடனைக் கேட்டா,நீ என்னவோ,நான் உன்கிட்ட கடன் பட்டது போல நடந்துக்கிறாயே!
********
நடத்துனர்:டிக்கட்,டிக்கட்,...நீங்க டிக்கட் வாங்கிட்டீங்களா?
பயணி:பின்னால மீசை வைச்சவரு இருக்காரு பாருங்க.அவர் வாங்குவார்.
நடத்துனர்:இது என்னய்யா உலக அதிசயம்!.அது யாரையா,பின்னால மீசை வச்சிருப்பது?அவரைப் பார்க்கணுமே!
********
ராமு:எனக்கு ஜலதோஷம் பிடிச்சுருக்குடா!
சோமு:(ஏதோ கவனத்தில்) பிடிச்சிருந்தா வச்சுக்கோயேன்!
********
ராமு:டேய் ,பெரியவர் எதிரில் உட்கார்ந்து சிகரெட் பிடிக்காதே!
சோமு:பெரியவர் என்ன பெட்ரோல் பங்க்கா ,நான் சிகரெட் பிடித்தால் பற்றி எரிய?
********
தாய்:'குழந்தைகளை வளர்ப்பது எப்படி?'என்ற புத்தகத்தை எடுத்து ஏண்டா நீ படிச்சுக் கிட்டிருக்கே?
மகன்:நீ என்னை சரியாத்தான் வளர்க்கிறாயா என்று தெரிந்து கொள்ளத்தான்.
********
ராமு:தினம் நீ எவ்வளவு தூரம் ஓடுவே?
சோமு:அது துரத்தி வர்ற கடன்காரன்களைப் பொறுத்தது.
******

நாய்வால்

2

Posted on : Wednesday, October 10, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாய் தன வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது.என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.இதை நீண்ட நேரம் கைவைத்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் இதனிடம் வந்து விளக்கம் கேட்டது.முதல் நாய் சொன்னது,''ஒரு பெரிய மகானைப் பார்த்தேன்.அவர்,என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார்.அதனால் தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,'' இரண்டாவது நாய்  சொன்னது,''அன்பு நண்பனே,நானும் அந்த மகானைப் பார்த்தபோது என்னிடமும் அவர் இதையேதான் சொன்னார்.நானும் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன்.ஆனால் அதற்குப்பின் அதைப் பற்றிக் கவலைப்படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன்.ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே  வருகிறது.அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது.''
நாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது.நாம் நம் கடமைகளை சரிவர செய்து வந்தால்,மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.

மகத்தான மனிதர்கள்.

1

Posted on : Wednesday, October 10, 2012 | By : ஜெயராஜன் | In :

இயேசு,கிருஷ்ணன் போன்ற மகத்தான மனிதர்கள் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள்.அமைதிப் புரட்சி நடத்தி வரும் அவர்களை நாம் அறியவில்லை.அவ்வளவுதான்.ராமர்,கிருஷ்ணர் போன்ற வாழ்ந்து முடிந்தவர்களைப் பற்றி சொல்லும்போது சுவாரஸ்யத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மிகைப் படுத்தி சொல்லலாம்.கிருஷ்ணன் மலையைத் தூக்கினார்,இயேசு கடலைப் பிளந்தார் என்றால் நாம் ரசிக்கிறோம்.பிரமிக்க எதுவும் இல்லையெனில் நம்மிடையே ஆர்வம் வருவதில்லை.நம்முள் ஒருவராக இருப்பவரை நாம் கடவுளாக ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. தங்களை ஆர்ப்பாட்டமாக அறிவித்துக் கொள்பவர்களைத்தான் நாம் கவனிக்கிறோம்.பிரமிப்பு ஏற்பட்டால்தான் மரியாதையே வருகிறது. சாதாரணர்களாக வாழ்ந்து சப்தம் இல்லாமல் மாற்றம் நிகழ்த்துபவர்களை நாம் மதிப்பதில்லை.ராமன்,இயேசு இவர்கள் வாழ்ந்தபோது கூட வெகு சிலர்தான் அவர்களுடைய உண்மையான மதிப்பை அறிந்திருந்தார்கள். மற்றவர்கள் அன்று அவர்களை ஏற்கத் தயாராயில்லை. ராமனைக் காட்டுக்கு விரட்டி அடித்தார்கள்.இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.நபிகள் மீது கல்லெறிந்தார்கள்.அவர்கள் மற்றவர்களிலிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டவர்கள்,அற்புதமானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு சண்டை போடுவதன் மூலம் தான் கடவுளின் மதிப்பை நிலை நாட்ட முடியும் என்றல்லவா இன்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள, பக்குவமான புத்திசாலித்தனமும் ஆழமான விழிப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது.அல்லாவிடில் நடமாடும் சில மகத்தான மனிதர்களை நாம் அடையாளம் காண முடியாது தவற விட்டு விடுவோம்.

அடமானம்

2

Posted on : Tuesday, October 09, 2012 | By : ஜெயராஜன் | In :

கோட் சூட் அணிந்த ஒருவர் ஒரு உணவகத்திற்கு வந்து  சாப்பிட்டு  முடித்தவுடன் பணம் கொடுப்பதற்கு சட்டைப் பையில் கையை விட்டபோதுதான் பர்சை எடுத்துவர மறந்தது தெரிய வந்தது.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மிகுந்த சங்கடத்துடன் உணவக உரிமையாளரிடம் சென்று தன் நிலையை விளக்கினார்.பணத்திற்கு ஈடாக தன்  'கோட்'டைக் கொடுப்பதாகவும் உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும்  கூறினார். அவரும் அதை வாங்கிக் கொண்டே ''அதனால் பரவாயில்லை.உங்கள் மீது எனக்கு  நம்பிக்கை இருக்கிறது.ஆனால் எனக்கு மறந்து போய்விடக் கூடாது அல்லவா?அதனால் இந்த கரும் பலகையில் உங்கள் பெயரையும் நீங்கள் கொடுக்க வேண்டிய  தொகையையும் எழுதி வைப்பேன்,'' என்றார். அதிர்ச்சியுற்ற அந்த மனிதர்,''அய்யோ!அப்படியானால் எல்லோரும் அதைப் படிப்பார்கள் .இது எனக்கு அசிங்கம் அல்லவா?''என்று கேட்டார் . கடைக்காரரும்,'' யோசிக்க வேண்டிய விசயம்தான்.ஒன்று செய்யலாம்.நீங்கள் வரும் வரை உங்கள் கோட்டை அந்தப் பலகையின் மீது மாட்டி வைக்கிறேன்.அப்போது யாரும் படிக்க மாட்டார்கள் அல்லவா?''என்றதும் வந்தவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அமைதி காத்தவன்

1

Posted on : Tuesday, October 09, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கஞ்சன் தனது  மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான் .ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,''என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ  வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன்  கேட்டார்.அந்தக் கஞ்சனும் பெருமையாக,''எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன்,'' என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,கஞ்சன் சொன்னான்,''என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.''

நீங்கள் ஒரு மாணிக்கம்.

2

Posted on : Monday, October 08, 2012 | By : ஜெயராஜன் | In :

நாலு பேர் நம்மைப் பாராட்டுகிற மாதிரி இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு.உங்கள் சொத்து, நீங்கள் பழகுகிற விதம்தான். மிகையான மேக்கப்போ,பகட்டான ஆடைகளோ கை கொடுப்பதில்லை.
தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
உங்களுடைய சிறப்பம்சங்களைக் கண்டு பிடியுங்கள்.உங்களுடைய குறைபாடுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு புன்னகை பல காதங்களைக் கடக்கிறது.இது ஒரு அரிய சாதனம்.இது உதட்டில் பிறக்கிற சமாச்சாரம் அல்ல.மனதைத் திறக்கிற செயல்.'நமக்கு எல்லாம் தெரியும்;\'என்ற நினைப்பில் செயல் படாதீர்கள்.யார் யாரிடம் எதைப் பேசுவது,எந்த அளவு பேசுவது என்று ஒரு  கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடைய குறையைக் கண்டு பிடிப்பதுதான் தலையாய வேலை என்பது போல நடந்து கொள்ளாதீர்கள்.அடுத்தவர் ரகசியத்தை அறிவதில் ஆர்வம் வேண்டாம்.ஊர் வம்பு பேசுகிறவர்களை அனுமதிக்காதீர்கள்.
சிலர் 'தான் சொல்வதுதான் சரி' என்பதை மற்றவர்களிடம் நிரூபித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்.வாதிப்பதும்,முரண் படுவதும், மூர்க்கத்தனமாகப் பேசுவதும் சில நேரங்களில் வெற்றியைத் தரலாம். உண்மையில் இதனால் மற்றவர்களின் நல்லெண்ணத்தை மறைமுகமாக இழப்பீர்கள்.
சில நேரங்களில் விட்டுக் கொடுப்பது கூட வெற்றிதான்.காரியத்தின் பலனை இழந்தாலும்,எதிராளியை வெற்றி கொண்டு விடுகிறீர்களே!மன்னிக்க முடியாத தவறு என்று எதுவும் இல்லை.அதற்கு மனம்தான் விசாலமாக இருக்க வேண்டும்.மன்னிக்கத் தயங்காதீர்கள்.அது உங்களை மேலும் உயர்த்தும்.யாரேனும் வேண்டியவர்கள்,காரணம் இல்லாமல் உங்களை எரிந்து விழலாம்.அவருடைய அப்போதைய மனநிலை அப்படி.நீங்களும் பதிலுக்கு உங்கள் கோபத்தைக் காட்டினால் வெறுப்பும்கசப்பும்தான் வளரும்.மௌனமே சிறந்த ஆயுதம்.பதில் சொல்லியே ஆக வேண்டும் எனில் இனிய வார்த்தைகளையே உபயோகியுங்கள்.
இப்போது நீங்கள் மனிதருள் ஒரு மாணிக்கம்!

குலுங்க குலுங்க

2

Posted on : Sunday, October 07, 2012 | By : ஜெயராஜன் | In :

''உங்க பள்ளியிலே ராமன் என்று ஒரு ஆசிரியர் உண்டே,அவர் என்ன எடுக்கிறார்?''
'எங்க உயிரை எடுக்கிறார்.'
********
ஆசிரியர்:தானத்திலே சிறந்த தானம் எது?
விளையாட்டு வீரன்:மைதானம் சார்.
********
முட்டை வியாபாரி:என் பையன் எப்படி படிக்கிறான்?
ஆசிரியர்:நீங்கள் விற்கிறீர்கள்:அவன் வாங்குகிறான்.
********
''அப்பா,நான் தேர்வின் முதல் படியிலே இருக்கிறேன்.''
'என்ன சொல்லுகிறாய்?'
''நீங்கள் தானே சொல்லியிருக்கிறீர்கள்,தோல்விதான் வெற்றியின் முதல் படி என்று!''
********
அப்பா:கணக்கு பாடத்தில் என்ன மதிப்பெண் பெற்றுள்ளாய்?
மகன்:பக்கத்து வீட்டு முருகனை விட ஐந்து மதிப்பெண்கள் குறைவு.
அப்பா:முருகன் என்ன மதிப்பெண் பெற்றுள்ளான்?
மகன்:ஐந்துதான்.
********
''2020 ல் உலகம் எப்படி இருக்கும்?''
'அதிலென்ன சந்தேகம்?அப்போதும்  உருண்டையாகத்தான் இருக்கும்.'
********
அப்பா:இந்த மாதம் உங்கள் வகுப்பில் புதிதாய் ஒரு மாணவனை சேர்த்திருக்கிறார்களோ?
மகன்:அதெப்படியப்பா உங்களுக்குத் தெரியும்?''
அப்பா:போன மாதம் நீ நாற்பதாவது ரேன்க் எடுத்திருந்தாய் .இந்த மாதம் நாற்பத்தியோராவது ரேன்க் எடுத்திருக்கிறாயே!
********
ஆசிரியர்:நான் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது தூங்கிக் கொண்டிருந்தாயே,உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
மாணவன்:அந்த பாடத்தை மீண்டும் நடத்தி விடுங்கள்,சார்.
********
''தேளின் கொடுக்கில் என்ன இருக்கிறது?''
'தொண்டையில் இருக்கிறது, ஆனால் வர மாட்டேங்குது'
''பார்த்து!முழுங்கித் தொலைத்து விடாதே, அது விஷம்.''
********
''நான் ஒரு பழமொழியில் பாதியை சொல்லுவேன்.மீதியை நீ சொல்கிறாயா, பார்ப்போம்.கடுகு சிறுத்தாலும்.........''
'விலை குறையாது.'
********

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

1

Posted on : Saturday, October 06, 2012 | By : ஜெயராஜன் | In :

மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல.இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான்  எங்கோ குழப்பி விட்டீர்கள்.குழப்பத்தை விடுங்கள்.மகிழ்ச்சியாய்  இருங்கள்.உயர்ந்த குறிக்கோள் தேவைதான்.ஆனால் அது நம் நிகழ்  காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.கொடைக்கானாலும் ஊட்டியும் நன்றாகத்தான் இருக்கின்றன.ஆனால் போகும் வழியில் உள்ள மரங்கள், செடிகள்,கொடிகள்,நீர்நிலைகள்,மலைகள் இவற்றைக் காண்பதிலேயே மகிழ்ச்சி தொடங்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.
உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும்,தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது.
'';எனக்குத் தலைவலி,காய்ச்சல்,என் உடல் நிலை சரியில்லை,''என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.'நானே சரியில்லை,'என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.மனநிலை உடல்நிலையைப் பாதிக்கும். உடல்நிலை ,மனநிலையில் தெரியும்
ஏதாவது சாதனைகள் செய்தால்தான் மகிழ்ச்சி என்பதில்லை.சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும்,காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம்.மழை  கூட மகிழ்ச்சிதான்.நனைந்துதான் பாருங்களேன்!ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?
மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை.மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை.ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும்போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது.
மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது.நீங்கள் அதை விரட்ட விரட்ட,அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும்.புல்  தரையில் அமைதியாக அமர்ந்தால்,அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.
பூங்காக்களுக்கு யாரும் வழி  சொல்லியா தெரிய வேண்டும்?


பொன்மொழிகள்-33

3

Posted on : Saturday, October 06, 2012 | By : ஜெயராஜன் | In :

கோபம் என்பது ஒரு விலை மிகுந்த தவிர்க்க முடியாத பொருள்.அந்தப் பொருளை செலவழிக்கும்போது மனிதர்களுக்குக் கிடைக்கும் ஒரே லாபம் மனதிருப்திதான்.
********
பிறர் மகிழ்ச்சியாக இருக்க எப்போது வழி கண்டு பிடித்துக் கொடுக்கிறீர்களோ அப்போது முதலே நீங்கள் இன்பமாக இருக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
********
என் குறைகளைக் கண்டு நானே உள்ளூரச் சிரித்துக் கொள்ளும்போது எனது மனச்சுமை குறைகிறது.
********
உழைப்பு எந்த மனிதனையும் ஏமாற்றுவதில்லை.
மனிதன்தான் உழைப்பை ஏமாற்றுகிறான்.
********
வேலை மனிதனைக் கொல்வது இல்லை.
கவலைதான் மனிதனைக் கொல்லும் .
********
உலகில் மிகச் சிறந்தவை எவை?உப்பின் ருசி,குழந்தையின் அன்பு,உணவின் மணம் .
********
விடைக்கு ஏற்றமாதிரி கேள்வியை மாற்றிக் கொள்ளுங்கள்.சமரசம் என்பது அதுதான்.
********
வாழ்வில்,
தென்னை மாதிரி வளர வேண்டும்:
நாணல் மாதிரி வளைய வேண்டும்.:
வாழை மாதிரி வாரி வழங்க வேண்டும்.
********
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முயற்சி செய்வதைக் காட்டிலும்
'மகிழ்ச்சியாக நாங்கள் வாழ்கிறோம்,'என்று பிறர் நம்பும்படி செய்வதற்குத்தான் நம்மில் பலர் அதிக முயற்சி எடுத்துக் கொள்கிறோம்.
********
அறியாமல் இருப்பது தவறு அல்ல:
அறிய முயற்சி செய்யாமலிருப்பதே மாபெரும் தவறு.
********

விடுதலை

3

Posted on : Friday, October 05, 2012 | By : ஜெயராஜன் | In :

விடுதலை உள்ளபோது நீங்கள் ஏன் அடிமைத்தனத்தை தேர்வு செய்கிறீர்கள்? வானம் விரிந்து கிடக்கும்போது ஏன் கூண்டுகளை நாடுகிறீர்கள்?பதில் சிரமமானது அல்ல.கூண்டு பாதுகாப்பானது.அது,மழை ,காற்று, வெயில், பகைவர்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.உங்களுக்கு என்று ஏதும் பொறுப்பு இல்லை.ஆனால் விடுதலை மகத்தான பொறுப்பு மிக்கது.அடிமைத்தனம் ஒரு வியாபாரம்.நீ உன் விடுதலையை விற்று விட்டாய்.வேறு யாரோ,உன் உணவுக்காக, இருப்பிடத்திற்காக, பாதுகாப்பிற்காக, உன் தேவைகளுக்காகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.நீ இழந்தது உன் சுதந்திரத்தை.நீ உன் சிறகுகளை,நட்சத்திரம் மிக்க வானத்தை இழந்துவிட்டாய்.கூண்டுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும் நீ இறந்தவன்.நீ ஆபத்தில்லாத வாழ்வைத் தேர்வு செய்துவிட்டாய்.உன் ஆழமான இதயம் அடிமைத்தனத்தை ஒப்பாதபோதும் நீ கூண்டுக்குள் திரும்பும் காரணம் அதுதான்.நீ உன் சுதந்திரப் பாடல்களைக் கூண்டுக்குள் இருந்து பாடுகிறாய். கதவுகள் திறந்தே உள்ளன வானம் கைவசம் உள்ளது.நீயோ பொய்மையான வாழ்வுக்கு அடி பணிகிறாய்.கூண்டு உனக்கு சோம்பலையும் பாதுகாப்பையும் தருகிறது.ஆனால் நீ விடுதலை,விடுதலை என்று கத்துகிறாய்.இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதாகும்.
நீங்கள் உங்கள் பாதுகாப்புகளை,சோம்பலை விட்டு வெளியேறுங்கள். ஆகாயம் முழுவதும் உங்கள் வீடுதான்.ஒரு பயணியாக,வாழ்வின் எல்லா ரகசியங்களையும் மர்மங்களையும் அறியப் புறப்படுங்கள்.வாழ்வைத் துயரமான அம்சமாக மாற்றி விடாதீர்கள்.அது உல்லாசமாக, சிரிப்பாக, விளையாட்டுத் தனமாக இருக்கட்டும்.பிறகு ஒவ்வொரு கணமும் அரிதாக மாறும்.நீங்கள் விடுதலைப் பாடல்களைப் பாட மாட்டீர்கள்:அதில் வாழ்வீர்கள். உண்மையைப் பற்றிப் பேச மாட்டீர்கள்:அதை அறிந்திருப்பீர்கள்.கடவுளை வணங்க மாட்டீர்கள்:இருப்பு முழுவதும் எங்கெல்லாம் வாழ்வு இருக்கிறதோ, அங்கெல்லாம் அவனைக் கண்டு கொள்வீர்கள்.

பொன் மொழிகள்-32

1

Posted on : Friday, October 05, 2012 | By : ஜெயராஜன் | In :

இளமையாக இருக்கும்போது ரோஜா மலர்கள் மீது படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மீது படுக்க நேரிடும்.
இளமையில் தனது தோலை  கடினமாக்கிக் கொண்டவனுக்கு
முதுமையில் முட்கள் குத்தினாலும் வலிக்காது.
********
இசையைக் கேட்டுக் கொண்டே இரவு உணவை உண்பது,உணவை சமைத்த சமையல் காரனையும் ,இசையை இசைத்த கலைஞனையும் அவமானப் படுத்துவதாகும்.
********
சில விவாதங்களுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.ஆனால் முடிவு என்ற ஒன்று இருப்பதில்லை.
********
பணிவு ஒருபோதும் பலவீனம் அல்ல.உங்கள் பலத்தைக் காட்ட நினைப்பதுதான் பலவீனம்.
********
உங்கள் முகத்தில் புன்னகையின் ஒளிக்கீற்று இல்லையென்றால் நீங்கள் முழுமையாக உடை உடுத்தியவர் ஆக மாட்டீர்கள்.
********
வாழ்க்கையில் கடினமான மூன்று விஷயங்கள்:
*ஒரு  ரகசியத்தை பாதுகாப்பது.
**மனதில் ஏற்பட்ட ஒரு வலியை மறப்பது.
***ஓய்வு நேரத்தை பலனுள்ளதாகச் செய்வது.
********
ஆயிரம் தெய்வங்களின் மீது நம்பிக்கை வைத்துவிட்டு,உன் மீது நம்பிக்கை வைக்காமல் போனால் உன்னை விடப் பெரிய நாத்திகன் உலகில் யாரும் இல்லை.
********
நான் வசிப்பது ரொம்ப சிறிய சாதாரண வீடுதான்.ஆனால் என் வீட்டு ஜன்னல் வழியாக பரந்து விரிந்த உலகம் தெரிகின்றதே!
  ********
வெற்றியைக் கொண்டாடும்போது தோற்றவர்களைப் பற்றி நாம் கவலைப் படுவதில்லை.அங்கே நாம் வெற்றியின் மூலம் அசிங்கமாகிப் போகிறோம்.
********
பொறாமை ஏற்படுத்துகிற ஞாபகங்களைவிட அது நம் கண்களில் இருந்து மறைக்கும் உண்மைகள் அதிகம்.
********
மகிழ்ச்சி என்பது பிரச்சினைகளே இல்லாத நிலையில் இல்லை: பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
********

பொறாமைதான்

3

Posted on : Thursday, October 04, 2012 | By : ஜெயராஜன் | In :

காட்டில் மான் கழுதையிடம் கேட்டது,''உன் குரலை சிங்கம்,புலி உட்பட எல்லா மிருகங்களும் வெறுக்கின்றனவே,அது ஏன்?''கழுதை  சொன்னது,''எல்லாம் பொறாமையினால்தான் நண்பா!''
********
பாகிஸ்தான்காரர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் அருகருகே அமர்ந்து ஒரு விமானத்தில் பயணம் செய்தனர்.பாகிஸ்தானி கோக் குடிக்க ஆசைப்பட்டார்.இந்தியரும் உடனே எழுந்து போய் கோக் ஒன்று வாங்கப் போனார்.அந்த சமயம் பாகிஸ்தானி இந்தியர் கழட்டி  வைத்திருந்த சூவை எடுத்து அதில் எச்சல் துப்பி வைத்தார்.பின் இந்தியர் கோக் கொண்டு வந்து குடித்ததும் நன்றி சொல்லிவிட்டு இன்னொரு கோக் குடிக்க விரும்புவதாகச் சொன்னார்.இந்தியரும் தயங்காது உடனே சென்று அடுத்த கோக்கை வாங்கி வரச்செல்ல,பாகிஸ்தானியும் இன்னொரு சூவை எடுத்து அதில் எச்சல் துப்பி வைத்தார்.இந்தியர் வந்ததும் அவர் கொடுத்த கோக்கை ரசித்துக் குடித்தார்.இறங்கும் இடம் நெருங்கியது.இந்தியர் தன சூவை எடுத்துகாலில் அணிந்தார்.அப்போதுதான் அவர் அதில் எச்சல் துப்பப்பட்டிருப்பதை உணர்ந்தார்.உடனே,அவர் பாகிஸ்தானியிடம் கேட்டார்,''ஏன் நண்பா,இன்னும் எத்தனை நாளைக்கு நாம் இந்த விளையாட்டை விளையாடப் போகிறோம்? நான் எழுந்து சென்றதும் என் சூவில் நீங்கள் எச்சல் துப்புவதும் உங்களுக்கு  கோக் வாங்கித் தருகிறேன் என்று கூறிச் சென்று அதில் சிறிது சிறு நீரை நான் கலந்து தருவதும் இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்.?''பாகிஸ்தானியின் முகம் போன போக்கை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
(Times of India நாளிதழில் வந்த நகைச்சுவை)
********

என்ன காரணம்?

3

Posted on : Thursday, October 04, 2012 | By : ஜெயராஜன் | In :

மன்னனுக்கு திடீரென ஒரு ஆசை.சாதாரண உடை அணிந்து தெருவில் நடந்து சென்றால் எத்தனை பேர் அவரை அடையாளம் கண்டு கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.உடனே சாதாரண உடை அணிந்து கொண்டு தனது  மெய்க்  காப்பாளனை உடன் அழைத்துக் கொண்டு வீதியில் இறங்கி நடந்து சென்றார்.மெய்க்காப்பாளன் முன்னே செல்ல சிறிது இடைவெளியில் மன்னர் பின்னே நடந்து  சென்றார்.வீதியில் எதிர்ப்பட்ட அனைவரும் மெய்க்காப்பாளனைக்  கண்டு புன்  முறுவல் பூத்தவாறு சென்றனர்.மன்னனை யாரும் கண்டு கொள்ளவேயில்லை.மன்னனுக்கு மெய்க் காப்பாளனுக்கு இருந்த மரியாதை கண்டு ஒரு புறம் ஆச்சரியம், மறுபுறம் தன்னை யாரும் அடையாளம் காணவில்லையே என்று கடுமையான கோபம்.அவனிடம் சற்று கடுமையாகவே கேட்டார்,''என்ன உனக்கு நாட்டில் எல்லோரையும் தெரியும் போலிருக்கிறதே,அவ்வளவு செல்வாக்கா,உனக்கு?''அவன் சொன்னான், ''மன்னா,எனக்கு இவர்கள் யாரையும் முன்னேபின்னே தெரியாது.''மன்னன் ஒன்றும் புரியாமல் திகைப்பதைப் பார்த்து அவன் சொன்னான்,''மன்னா,நான் சாலையில் நடக்கும்போது எதிரில் வரும் யாரைப் பார்த்தாலும் ஒரு சினேக பாவத்துடன் சிறிதாகப் புன்முறுவல் பூப்பேன்.அப்போது எதிரில் வருபவன் எப்படிப்பட்ட குணம் உடையவனாகினும் பதிலுக்கு கட்டாயம் புன்முறுவல் பூப்பான்.இப்போதும் அப்படித்தான் நடந்தது.''மன்னன் அன்று தனது மெய்க் காப்பாளனிடம் நல்லதொரு பாடம் கற்றுக் கொண்டான்.