உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெளிவு

0

Posted on : Tuesday, October 16, 2012 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு அரசியல்வாதி.ஊரில் பெரிய மனிதன்.எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார்.அவரும் சில பிரார்த்தனைகளையும்.பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி செய்து வரச் சொன்னார்.சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன்,''நீங்கள் சொன்னதெல்லாம் செய்தேன்.ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,''என்றார்.உடனே குரு,''சரி,வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,''என்றார்.அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது.''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?''என்று கேட்க,குருவும்,''ஒரு பத்து நிமிடம் நின்றால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,''என்றார்.''சரி பத்து நிமிடம் தானே,தெளிவு பிறந்தால் சரி,''என்று சொல்லிக்கொண்டே மழையில் நனைந்தபடி நின்றார்.அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் கண்களை மூடிக் கொண்டார்.பத்து நிமிடம் ஆயிற்று.கண்ணைத் திறந்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம்.அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது.உள்ளே விறுவிறுவென்று சென்று,''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?''என்று கேட்டார்.;;வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?''என்று குரு கேட்க அவர் சொன்னார்,''எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குமாறு செய்து விட்டீர்கள்.நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்''உடனே குரு சிரித்துக் கொண்டே சொன்னார்,''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே பொருள்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment