உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரியுமா?-2

2

Posted on : Wednesday, March 20, 2013 | By : ஜெயராஜன் | In :

கருணைக் கிழங்கில் உள்ள கால்சியம் ஆக்ஸலேட் தான் நாக்கு அரிப்பதற் கான  காரணம்.
******
இந்தியாவில் முதல் முதலாக துவங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனம்;DAMODAR VALLEY CORPORATION.
******
மிகக் குறைந்த காலத்தில் சுதந்திரம் அடைந்த நாடு பங்களா தேஷ் தான். மக்கள் அதற்காகப் போராடியது ஒன்பது மாதங்கள் மட்டுமே,
******
குளிர்ச்சியான கிரகம் புளுட்டோ.
******
ஹாலி வால்நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது.
******
சுதந்திரத்திற்குப் பின் மொழி வழி அடிப்படையில் அமைந்த முதல் மாநிலம் ஆந்திரா.
******
வங்கக் கடலில் கலக்காத நதி தப்தி.
******
இந்தியாவின் தேசியக் கோடியை உருவாக்கியவர் விஜயவாடாவை சேர்ந்த பிஸ்கலி வெங்கையா என்பவர்.
******
கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயம்.
******
எந்த ஒரு புத்தகத்தின் இடது பக்க எண்ணும்  இரட்டைப் படை எண்ணாகத்தான் இருக்கும்.இதற்கு VERSO என்று பெயர்.வலது பக்க எண்கள் ஒற்றைப் படை எண்ணாக இருக்கும்.அதற்கு TECTO என்று பெயர்.
******
மலேரியா என்ற சொல் இத்தாலியிலிருந்து வந்தது.இத்தாலிய மொழியில் மலா என்றால் சதுப்பு நிலம்.ஏரியா என்றால் கெட்ட காற்று.கெட்ட காற்றினால்தான் இக்காய்ச்சல் வருவதாக அவர்கள் நம்பியதால் இப்பெயர் வந்தது.
******
மனிதன் கண்களால் காணும் காட்சிகளில் நூறில் ஒரு பங்குதான் மூளையில் பதிகிறது.
******
ஆங்கில மொழியில் அதிக அர்த்தங்கள் கொண்ட சொல் 'SET' என்பதாகும்..NOUNஆக 58 அர்த்தங்கள்.VERB ஆக 126அர்த்தங்கள்.ADJECTIVE ஆக 10அர்த்தங்கள் உள்ளன.
******

வெறுப்பின்மை

1

Posted on : Wednesday, March 20, 2013 | By : ஜெயராஜன் | In :

வெறுப்பு என்பது சினம் எண்ணும் மனநிலையின் மறைமுகக் குறிப்பு.வெறுப்பு உணர்ச்சி பிறரை,பிற பொருட்களை நம் வாழ்விலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது வாழ்நாள் முழுவதும் ஒதுக்கிவிடும்.இது வெறுப்பு உணர்ச்சியின் இளநிலை என்று கூறலாம்.அதன் முதுநிலை பிறரைத் துன்புறுத்தல் அல்லது அழித்தலே.இவ்விரண்டு நிலைகளும் மனித வாழ்வின் நலத்தையும் வளத்தையும் அழிக்க வல்லவை.இதனால் வெறுப்பு உணர்ச்சி  அற்ற மன நிலை அடையவும், காக்கவும் பயிற்சி வேண்டும்.வெறுப்பு ஒழிந்தால் மீதம் இருப்பது அன்பு,நட்பு,கருணை இவைதானே!
வெறுப்பு ஒவ்வொரு நண்பரையும்,குடும்ப உறுப்பினரையும்,மற்றும் பொருட்களையும் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நாம் ஒதுங்கி விடுகிறோம்.நாம் வாழ்வதற்கு உலகம்,சமுதாயம்,உறவினர்கள்,நண்பர்கள் குறைந்து விடுவர்.வாழ்வின் இன்பம் இழந்து,தனித்து நின்று துன்புற வேண்டியதே.
ஆழ்ந்து சிந்தியுங்கள்.உங்களுக்கு எந்த மனிதர் பேரில்.எந்தப் பொருளின் மீது வெறுப்பு இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து அதைப் போக்கிக் கொள்ளுங்கள்.துன்பம் தருபவற்றிலிருந்து ஒதுங்கி இருக்கலாம்.உணர்ந்த தெளிவோடு வெறுப்புக் கொள்ளத் தேவை இல்லை.
வெறுப்பின்மை தான் சிரித்த முகத்தைக் கொடுக்கும்.அந்த முகமே அன்பு ஒளிர் விளக்காகும்.
                                                            -மகரிஷி வேதாத்திரி.

பொன் மொழிகள்-42

1

Posted on : Tuesday, March 19, 2013 | By : ஜெயராஜன் | In :

தீயவனை நண்பனாக்கிக் கொள்வதை விடதனிமையை நண்பனாக்கிக் கொள்வது மேல்.
******
உன் பையனுக்கு நடக்கக் கற்றுக் கொடு.
ஓடுவதற்கு அவன் தானே கற்றுக் கொள்வான்.
******
தன் விருப்பபடி நடந்து கொல்லும் வசதி வரும்போதுதான்
மனிதனின் துன்பங்கள் ஆரம்பம் ஆகின்றன.
******
முழுமையான நிதானத்துடன் இருக்கும் ஒருவனை முட்டாள் ஆக்க முடியாது.
******
ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான்.
******
மழையைக் கண்டு கலங்குபவை காகிதப் பூக்களே.
******
உன்னை அடக்குபவர் முன் நீ சுதந்திரமாக இரு.
உனக்கு சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு.
******
வீணான எண்ணங்கள் விசக் கிருமிகள்.
உள்ளே அனுமதித்து விட்டால் அதன்பின் அழிப்பது சிரமம்.
******
ஆகாயத்திலிருந்து பால் கொட்டினாலும் அதைப் பிடிக்கும் பாத்திரம் என்னவோ பணக்காரர்களிடம் தான் இருக்கிறது.
******
என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர்.அவர்களின் பெயர்கள்:
எங்கே? என்ன? யார்? ஏன்? எப்படி?எப்போது?
******
தோற்று விடுவோமோ என்ற பயத்தை வெல்வதுதான் உண்மையான வெற்றி.
******
மனதின் காதுகளை மூடிவிடும் ஒரே சாதனம் அச்சம்தான்.
******

தாய்ப்பாசம்

2

Posted on : Saturday, March 16, 2013 | By : ஜெயராஜன் | In :

''தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை ,சர்வேசா,கண்ணீரால்  காத்தோம்,'' என்று இந்திய விடுதலை குறித்து பாரதியார் பாடினார்.இந்திய விடுதலைக்காகத் தன்னுயிர் ஈத்த தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் வீரன் பகத்சிங்கின் தோழர் சந்திர சேகர ஆசாத்.இவர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் இருபத்தி நான்கு ஆண்டுகளே.அதிலும் அவர்  நீண்ட காலம் தலை மறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.தோழர் ஒருவர் கேட்டார்,''நீ நாடெல்லாம் சுற்றுகிறாய்.புரட்சிக் கட்சியிலே பணியாற்றுகிறாய்.எப்போதும்  போலீசார் உன்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்.எப்போதாவது உன் தாயார் நினைவு வந்து கவலைப் படுகிறாயா?''உடனே ஆசாத்தின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.குரல் தழுதழுத்தது.பிறகு சொன்னார்,''தம்பி,இதுதான் என் பலவீனம்.இது போலீசாருக்கும் தெரியும்.எனவே  எப்போது நான் என் அன்னையைக் காணச் செல்வேன்,அப்போது கைது செய்யலாம் என்று காத்திருக்கிறார்கள்.நான் கைதானால் இயக்கத்துக்கு பெரிய நஷ்டம் என்பதால் நான் என் தாயை பார்க்க செல்வதே இல்லை.ஆனால் தாயின் நினைவு வரும்போதெல்லாம் நான் தரையின் மீது முழங்காலிட்டு தலையால் நிலத்தைத் தொட்டு,'அம்மா!நான் உன்னை மறந்து விட்டேன் என்று எப்போதும் நினைக்காதே!நான் என்ன செய்வேன் அம்மா?நான் உன் அருகே வர முடியாத நிலையில் இருக்கிறேன்.என்னை மன்னித்து விடு அம்மா,'என்று வேண்டிக் கொள்வேன்.''இப்படிப்பட்டவர்களின் தியாகத்தினால்தான் நாம் இன்று விடுதலையின் பலனை அனுபவித்து வருகிறோம்.ஆனால் நாம் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோமா ?

கொடைவள்ளல்-2

0

Posted on : Friday, March 15, 2013 | By : ஜெயராஜன் | In :

அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை.அவருடன் வாதிட்டான்.கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார்.அர்ஜுனனை அழைத்து,''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால்,நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,''என்றார்.அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து,ஆட்கள் வரவர,தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான்.எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை.அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே,கண்ணன் அவனை அழைத்து,''கர்ணா,இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.கர்ணனும்,''இது என்ன பெரிய வேலையா?''என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தான்.அவர்களிடம்,''உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம் அளிக்கிறேன்.வெட்டி உபயோகித்துக் கொள்ளங்கள்,''என்று கூறியபடியே,சென்று விட்டான்.அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார்,''இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா?உனக்கு முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றவில்லையே,உன்னை எப்படி கொடை வள்ளல் என்று சொல்ல முடியும்?''

கொடை வள்ளல்

0

Posted on : Thursday, March 14, 2013 | By : ஜெயராஜன் | In :

அர்ஜுனன் கண்ணனிடம் வருத்தப்பட்டுக் கொண்டான்,''எப்போது பார்த்தாலும் சிறந்த கொடை வள்ளல் கர்ணன் தான் என்று சொல்கிறீர்கள்.நான் எந்த விதத்தில் குறைந்தவன்?.நானும்தான் என்னிடம் வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வழங்குகிறேன்.''கண்ணன் சிரித்துக் கொண்டார். அப்போது  அங்கு ஒரு பிராமணன் வந்தான் .அர்ஜுனனிடம்,''என் மனைவி இறந்து விட்டாள்.அவளை எரிப்பதற்கு கொஞ்சம் சந்தனக் கட்டைகள் தேவை.எங்குமே கிடைக்க வில்லை.நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?''என்று கேட்டான் .அர்ஜுனன் உடனே ஆட்களை அழைத்து எங்கிருந்தாலும் சந்தனக் கட்டைகள் கொண்டு வரும்படி கட்டளை இட்டான்.சென்றவர்கள் திரும்ப வந்து இங்கு எங்குமே சந்தனக் கட்டைகள் கிடைக்கவில்லை என்றனர். பிராமணனுக்கு உதவி செய்ய முடியாததற்கு அர்ஜுனன் அவனிடம் மன்னிப்புக் கேட்டான்.அடுத்து பிராமணன் கர்ணனிடம் சென்றான்.கர்ணனிடம் தனது  தேவையை சொல்ல, அவனும் ஆட்களை அழைத்து எங்கிருந்தாலும் சந்தனக் கட்டைகள் கொண்டு வர ஆணை இட்டான்.அவர்களும் திரும்ப வந்து எங்குமே கிடைக்கவில்லை என்றனர்.கர்ணன் சிறிது நேரம் யோசித்து விட்டு கோடரி ஒன்று கொண்டு வரச் சொன்னான்.கோடரி வந்ததும் தனது  மாளிகையில் இருந்த சந்தனத்தால் ஆன தூண்களை வெட்டிப் போட்டான்.மாளிகை ஒரு பக்கம் சரிந்து விட்டது.அதைப் பற்றிக் கவலைப் படாமல் ஆட்களிடம் வெட்டிப்போட்ட சந்தனக் கட்டைகளை வண்டியில் போட்டு பிராமணனின் வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க சொன்னான்.அர்ஜுனன்,பிராமணன் சந்தனக் கட்டைகளுடன் செல்வதைப் பார்த்து அதிசயத்துடன் எப்படி கிடைத்தது என்று விபரம் தெரிந்த போது வெட்கி தலை குனிந்தான்.வழக்கம்போல கண்ணன் புன்முறுவல் பூத்தான்.

கொண்டாட்டம்.

1

Posted on : Wednesday, March 13, 2013 | By : ஜெயராஜன் | In :

சுஷ்யா என்றொரு யூத ஞானிஇருந்தார்.அவர் எப்போதும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருப்பார்.யூதக் கோவிலில் அவர் ஆட ஆரம்பித்து விட்டால் டேபிள்,சேர்,எல்லாம் பறக்கும்.எதிர்வரும் ஆட்கள் ஒதுங்கி ஓடி விடுவார்கள்.ஆடும்போது அவருக்கு எதுவும் தெரியாது. ஆட்டத்தில் தன்னையே அவர் மறந்து விடுவார்.இறை நினைப்பு மட்டுமே இருக்கும்.
ஒருநாள் திடீரென சிறுவனாயிருந்த அவருடைய ஒரே மகன் இறந்து விட்டான்.அவன் மீது அவருக்கு அளவு கடந்த பாசம்.அவன் இறந்ததும் அவர் என்ன செய்தார்  என்று நினைக்கிறீர்கள்?கண்களில் ஆனந்தக் கண்ணீர் சிந்த,கல்லறை வரை அவர் ஆடிக் கொண்டே சென்றார்.அவர் கடவுளிடம் சொன்னார்,''தூய்மையான ஆத்மாவான ஒரு குழந்தையை எனக்குப் பரிசாகத் தந்தாய்.இப்போது அந்த ஆத்மாவை மாசு எதுவும் ஏற்படாது தூய்மையாகவே உன்னிடம் நான் திரும்பவும் ஒப்படைக்கிறேன்.சில காலம் இந்தப் பரிசு என்னிடம் இருக்க அனுமதித்தமைக்கு நன்றி..''
மனம் தூய்மையாயிருந்தால் எந்த ஒரு காரணமும் கொண்டாட்டத்திற்கு இட்டுச்செல்ல முடியும்.இல்லாவிடில் எல்லாவற்றிலும் குறையே கண்டுபிடித்துக் கொண்டிருப்போம்..

பிரச்சனைகளை வெல்ல...

3

Posted on : Tuesday, March 12, 2013 | By : ஜெயராஜன் | In :

சோதனைக் கட்டங்களில் ஒரு சிலர் திணறும்போது ,தோல்வி அடையும் போது,மற்றவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?அவர்கள் பிரச்சினைகளை நிதர்சனமாகவும்,நடைமுறை ரீதியாகவும் அணுகும் முறைதான் காரணம்.
*வாழும் மனிதர்  ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் உண்டு.பிரச்சினை இல்லாத வாழ்க்கை என்பது ஒரு மாயை.
*ஒவ்வொரு பிரச்சினைக்கும் குறிப்பிட்ட கால அளவு உண்டு. ..பிரச்சினைகளுக்கு  முடிவு உண்டு.எந்தப் பிரச்சினையும் நிலையானது அல்ல..காலம் பல பிரச்சினைகளை முடித்து வைக்கின்றது.
*ஒவ்வொரு பிரச்சினையிலும் சாதகமான சாத்தியக் கூறுகள் உள்ளன.ஒவ்வொருவருடைய பிரச்சினையிலும் உங்களுக்கோ, மற்றவர்க்கோ பயனுள்ள அம்சம் ஏதாவது ஒன்று ரகசியமாக மறைந்து கிடக்கும்.ஒருவருடைய பிரச்சினை மற்றவர்க்கு வாய்ப்பாகவும் இருக்கலாம்.
*ஒவ்வொரு பிரச்சினையும் உங்களை மாற்றக் கூடியது. பிரச்சினைகளால் மாற்றம் ஏதாவது அடையாமல் யாரும் அவற்றிலிருந்து வெளி வருவதில்லை.
*உங்கள் சோதனைகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.ஆனால் எப்படி எதிர் கொள்வது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.பிரச்சினையை நீங்கள் எதிர் கொள்ளும்  விதம்தான்உங்களை மென்மையானவராகவோ, கடின மானவராகவோ,சிறந்தவராகவோ,இழிந்தவராகவோ ஆக்கும்.
* சோதனைகளை உறுதியாக எதிர் கொள்பவர்கள் நிலைக்கிறார்கள்..வாழ்வில் சோதனைகளை சமாளிப்பதில் நம்பிக்கையூட்டும் முறைகளைக் கற்றுக் கொள்கிறார்கள்.

செயற்கை

1

Posted on : Saturday, March 09, 2013 | By : ஜெயராஜன் | In :

நாம் சிறந்த மனிதர்களின் அடிசுவட்டில் நடக்க விரும்பாத போது, அவர்களைப் போல ஆக நினைக்காதபோது,அவர்களைத் தெய்வமாக்கிக் கோவில்களிலே பிரதிஷ்டை செய்து விடுகிறோம்.அவர்களின் சிறப்பியல்புகளை நாம்  பாராட்டுவோமே  தவிர,அவர்களை ப்போல நடந்து கொள்ள விரும்ப மாட்டோம்.நாம் மனிதனைத் தெய்வமாகச் சித்தரிக்க முயன்றால் அவனது இயற்கையான மனித உருவம் மறைந்துவிடும்.அதற்குப் பதிலாக ஒரு செயற்கையான,அருவெறுக்கத்தக்க உருவம் வெளியாகும்.அவ்விக்கிரகம் எவ்வாறாக இருந்தாலும் செயற்கையானதாகவே இருக்கும்.அதை நாம் மனப்பூர்வமாக ஆராதிக்க முடியாது.

வாழ்க்கையின் அர்த்தம்

1

Posted on : Saturday, March 09, 2013 | By : ஜெயராஜன் | In :

நமது தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி வீரர் பகத்சிங்கிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.அவரைப் பார்க்கச் சென்ற அவரது தோழர் ஜெயதேவ் கபூர்  என்பவர் அவரைப் பார்த்து,''சர்தார்,நீ மரணத்தை நெருங்கி விட்டாய்.ஆனால் இதற்காக நீ கவலைப்பட்டது மாதிரியே தெரியவில்லையே!''எனக் கேட்டார்.அதற்கு பகத்சிங் சொன்னார்,''நான் புரட்சிப் பாதையிலே அடி எடுத்து வைக்கும்போதே,என் உயிரை அர்ப்பணித்து,'இன்குலாப் சிந்தாபாத்'என்னும்  முழக்கத்தை நாடு முழுவதும் பரவச்செய்ய முடிந்தால் அதிலேயே என் வாழ்க்கையின் அர்த்தத்தை, ,நற்பயனைக் கண்டு விடுவேன் என நினைத்தேன்.இன்று நான் இந்த சிறைக் கொட்டடியிலே அடைந்து கிடந்தாலும்,இந்த சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலே உட்கார்ந்திருந்தாலும்,கோடிக்கணக்கான மக்கள்,'இன்குலாப் சிந்தாபாத்'என்று உரக்க முழக்கமிடுவதை என்னால் கேட்க முடிகிறது.இந்த முழக்கம் சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவிக்கும் சக்தியாக ஏகாதிபத்திய வாதிகளை இறுதி வரை தாக்கிக் கொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய இவ்வளவு சின்ன வாழ்க்கைக்கு இதைவிட அர்த்தம் வேறு என்ன வேண்டும்?''(பகத்சிங் 24 வயதுக்கு முன்னரே தூக்கிலிடப்பட்டார்.)

பலனை எதிர்பார்த்து...

0

Posted on : Friday, March 08, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண் ஞானி பால் செம் அவர்களிடம் வந்து தனக்குக் குழந்தை பிறக்க அருள் செய்யுமாறு கேட்டாள்.வேறு என்ன சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள் என்பதனை உணர்ந்த ஞானிஅவளிடம் என்ன குழந்தை வேண்டும் என்று கேட்க அவளும் ஆண் குழந்தை வேண்டும் என்று சொன்னாள். ஞானியும், ''முதலில் என் கதையைக் கேள்,''என்று சொல்லிவிட்டு தனது  கதையைக் கூற ஆரம்பித்தார்:
என் தாய்க்கும் குழந்தை இல்லாதிருந்ததால் ஒரு ஞானியிடம் சென்று இதே போல பிள்ளை வேண்டி வணங்கினாள்.அந்த ஞானியும்,''அதற்கு முதலில் அழகான தொப்பி ஒன்று செய்து கொண்டுவா,''என்றார்.மறுநாள் என் அன்னையும் ஒரு அழகான தொப்பி செய்து அவரிடம் கொடுத்தார்.ஞானி தொப்பியை தலையில் வைத்ததும்,என் தாய்,''இந்தத் தொப்பி உங்களுக்கு மிக அழகாக இருக்கிறது.எனக்காக நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.இந்தத் தொப்பியை அணிந்ததற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் ''என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.அதன்பின்தான்  நான் பிறந்தேன்.
கதையைக் கேட்டதும் அப்பெண் அங்கிருந்து சென்று மறுநாள் ஒரு தொப்பியுடன்  பால் செம்மிடம் வந்தாள் .அவரும் உடனே அத்தொப்பியை  அணிந்து கொண்டார்.ஆனால் அவர் நன்றி எதுவும் சொல்லாமல் தனது  காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.சிறிது நேரம் பொறுத்த பெண் அவரிடம்,''நான்தான் தொப்பி கொடுத்து விட்டேனே.குழந்தை வரம் தாருங்கள்,''என்று கேட்டாள்.அதற்கு பால் செம் சொன்னார்,''என் கதையில் என் தாய் எந்த விதஎதிர்பார்ப்பும் இல்லாமல் தொப்பியைக் கொடுத்தார்.அதனால் நான் பிறந்தேன்.இப்போது ஒரு தொப்பியை கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக ஒரு குழந்தை  கேட்கிறாயே,இது நியாயமா?உடனே நீ இங்கிருந்து போய்விடு.திரும்ப இங்கு வராதே,''.

முன்னேறத் துடிக்கிறீர்களா?

2

Posted on : Friday, March 08, 2013 | By : ஜெயராஜன் | In :

சிந்தனைதான் உன்னைத் தூண்டி வேலை செய்ய வைக்கிற உந்து சக்தி.எனவே மனதை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பிவிடு.
ஆயிரம் தடவைகள் வீழ்ந்தாலும் இலட்சியத்தைப் பிடித்துக்கொள்.ஆயிரம் தடவைகள் தோற்றுப் போனாலும் மீண்டும் முயற்சி பண்ணிப்பார்.
வலிவுடன் இரு.எல்லா மூட நம்பிக்கைகளையும் கைவிட்டு அப்பால் செல்.விடுதலை பெறு.
எந்த வேலையும் அற்பமானதல்ல.தனது மனதுக்குப் பிடித்த காரியத்தை ஒரு முட்டாள் கூட செய்து முடிக்க முடியும்.ஆனால் எந்த வேலையையும் தனக்குப் பிடித்தமானதாக ஆக்கிக் கொள்பவனே புத்திசாலி.
உன் தவறுக்கு அடுத்தவனைக் குற்றம் சொல்லாதே.உன் கால்களிலேயே நில்.முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்.
நீ இன்றிருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு.நீ எப்படி ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ,அப்படியே ஆவதற்கான ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
உதவி கிடைக்கவில்லை என்று கதறாதே.உதவி வெளியிலிருந்து வராது.உனக்குள்ளிருந்தே வரும்.
நல்ல கருத்துக்களையே  நினைத்து நல்லதையே செய்.நம்பிக்கையோடு இரு.
வளவளவென்று பேசாதே.மிக அமைதியான நிலையிலிருக்கும்போதுதான் மனிதனின் முழு சக்தியும் வெளிப்படுகிறது.
                                                   --சுவாமி விவேகானந்தர்.

சுகம் தரும் இல்லம்

1

Posted on : Thursday, March 07, 2013 | By : ஜெயராஜன் | In :

சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம்.நாம் வசிக்கும் இல்லத்தை தூய்மையாய் வைத்துக் கொள்ள சில ஆலோசனைகள்:
*பொருட்களை,தேவைக்கு மேல், அவை எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் வாங்கி சேர்க்காதீர்கள்.அவை வீணே இடத்தை அடித்துக் கொள்ளும்.
*பயனற்ற பொருட்களைக் கழிப்பதில் தயக்கம் வேண்டாம்.பின்னால் எதற்காகவேனும் பயன்படும் என்று குப்பை சேர்க்காதீர்கள்.
*மூதாதையர் மீது பற்றும் பாசமும்வைக்க வேண்டியதுதான்.அதற்காக அவர்கள் உபயோகித்த பழைய பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கடைப் பிடிப்பதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை.
*அதிக கடவுள் படம் இருந்தால்தான் அதிக பக்தி உடையவர் என்று பொருள் அல்ல.கரப்பான்களும்,பல்லிகளும் சூழ,துடைத்து வைக்க இயலாமல் வைத்திருப்பதைக் காட்டிலும் சிறிய படங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.
*வீட்டை போட்டோ ஸ்டுடியோ ஆக்கி விடாதீர்கள் ஆல்பம் வைத்துக் கொள்ளுங்கள்.
*இலவசமாகக் கிடைக்கிறது என்று வீடு முழுவதும் காலண்டர்களை மாட்டி வைக்காதீர்கள்.
*பால் கணக்கு,டெலிபோன் நம்பர் ஆகியவற்றை சுவற்றில் எழுதி வைக்காதீர்கள்.சிறிய டயரியில் குறிக்கப் பழகுங்கள்.
*குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்கள் புழங்கப் பழகுங்கள்.
*கொடியில் துணிகளைத் தோரணமாக தொங்க விடாதீர்கள்.பார்க்க சகிக்காது.
*தேவைக்கு உணவு தயாரித்து சமையல் அறையில் பழைய உணவுகளின் வாசனை இருந்தால் நன்றாக இருக்காது.
*தலையணை சிக்குப் பிடிக்காமல் அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும்.
*ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம்,அந்தந்த இடத்தில் அந்தந்த பொருட்கள் (A place for everything and everything in its place.)என்ற  பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

நச்சு எண்ணங்கள்

2

Posted on : Wednesday, March 06, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு சில நச்சு எண்ணங்களை சுலபமாக அடையாளம் காண முடியாது.அவை எங்கும் பரவிக் கிடக்கும்.மிகச் சாவகாசமாக வேலை செய்யும்.அவற்றுக்கு இரையாகும் மனிதர்கள் அவற்றின் பாதிப்பை உணரும்போது ஏற்கனவே காலம் கடந்து போயிருக்கும்.அவை:
குமுறல்: நாம் சிறுமைப்படுத்தப் பட்டு விட்டதாக எண்ணும் போதும்,நமது உறவு,உடமைகளை ஒருவர் அவமானப் படுத்தியதாக எண்ணும்போதும் நமக்குள் ஏற்படும் எரிச்சல்தான் குமுறல்.குமுறல் நமது உள் மனதில் அடியில் தங்கிப் புற்று நோய் போல வேலை செய்கிறது.அது படிப்படியாக வளர்ந்து மேற்கொண்டு மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்,மென்மையான உள்ளங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும்,தன்னிரக்க வடிவெடுத்து நாளாவட்டத்தில் வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரேயடியாக ஒதுங்கிக் கொள்ளச் செய்யும்.அல்லது படு வேகமாகப் பரவும் குமுறல்,கோபமாகி ,கோபம் தாங்க முடியாத வெறுப்பாகி,வெறுப்பு வன்முறையாகி,சில சமயங்களில் கொலையில் கூட முடியும்.
நழுவல் மனோபாவம்: மனதுக்குப் பிடிக்காத யதார்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று உள் மனதுக்கு ஏற்படும் விருப்பத்தால், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற உள் மனதில் முக்கியமான பணி திசை திருப்பப்படுகிறது.அதன் விளைவாகத் தப்பியதே குறிக்கோள் என்று ஆகி விடுகிறது.

சுதந்திர மலர்

1

Posted on : Tuesday, March 05, 2013 | By : ஜெயராஜன் | In :

எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை  எதிர்பாராது,தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ,அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான்.அவனிடம் ஏற்படும் அன்பு நிறைந்து வழிகிறது.ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான்.அவன் பிறரைச் சார்ந்து இல்லை.அடுத்தவர் அன்பு செலுத்தினாலும்,செலுத்தாவிட்டாலும்,அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.
ஒரு அடர்ந்த காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில்,யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில்,அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய,பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில் ,ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்?அவை மலர்ந்து கொண்டேதான் இருக்கும்.அதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாது.அது எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கும்.
நீங்கள் அன்புக்கு பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும்.ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான்.பிறகு ,நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள்.வழி தேடுகிறீர்கள்.ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார்.பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள்.அந்த நிலையில் அன்பு பரிமாற்றம் எப்படி ஏற்படும்?அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர்.
இந்த அதிகார சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

அமைதியில்லாதென் மனமே...

2

Posted on : Monday, March 04, 2013 | By : ஜெயராஜன் | In :

மரியாதைக்குரிய சாமியோ சாதாரண நடைபாதை ஆசாமியோ,யாராக இருந்தாலும் சரி,ஒருவருடைய மனதுக்கு இரண்டு வகையான செயல்பாடுகள் உண்டு.ஒன்று உணர்ச்சி பூர்வமாக உணர்வது, மற்றொன்று, சிந்திப்பது.
மிகவும் பிடித்தமான ஒரு விஷயத்தை,பொருளை நம் சிந்தனைக்குத் தீனியாகக் கொடுக்கும்போது நமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. காரணம்,மனதுக்கு அது சுவை மிக்கதாகவும்,ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்து விடுகிறது.
படிப்பாக இருந்தாலும் சரி,பாட்டாக இருந்தாலும் சரி,சாப்பாடாக இருந்தாலும் சரி,முனைப்போடு பயிற்சி செய்தாலே போதும்,நமக்குப் பிடிக்காததைக் கூட மனம் ஏற்றுக் கொண்டுவிடும்.
செயலற்ற மனமோ,சிந்தனையற்ற மனமோதான் அமைதியான மனம் என்று நினைப்பது தவறு.உணர்வதும் சிந்திப்பதும் மனதுக்கு இயற்கை. அப்படியானால்  மன அமைதி என்பது என்ன?மனதுடன் நீங்கள் சண்டை போடுவதை  நிறுத்தி விட்டாலே போதும்,மனம் அமைதியாகிவிடும்.மனதை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும்.மனதுடன் மல்லுக்கு நிற்காமல் வேடிக்கை பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு மனம் ஓடி வரும்.அழகை ரசிக்கலாம்.

ரயில் இன்ஜின்

1

Posted on : Monday, March 04, 2013 | By : ஜெயராஜன் | In :

ரயில் போக்குவரத்தில் 3000 டன் எடையுள்ள பெட்டிகளை இழுத்துச்செல்ல 4000H.Pகொண்ட டீசல் இன்ஜின் பயன்படுத்தப் படுகிறது.மதுரை.சென்னை இடையே சுமார் 500 கி.மீ.இதற்கு ஆகும் டீசல் 5000 லிட்டர்.மின்சார இன்ஜினின் சக்தி 5000H.Pஆகும்.மின்சார இன்ஜினை உபயோகித்து இதே மதுரையிலிருந்து சென்னை செல்ல 6000 யூனிட் மின்சாரம் தேவை.இந்திய ரயில் பாதையின் கட்டுமானம் அதிகபட்சம் 110 கி.மீ.வேகத்தில் செல்ல வழி வகுக்கிறது.மின்சார இன்ஜின் இருந்தால் எங்கும் நில்லாது இத்தூரத்தை 110 கி.மீ வேகத்தில் தொடர்ந்து இயக்கலாம்.டீசல் இன்ஜின் இருந்தால் வளைவுகளிலும் ,மலைக் குன்றுகளில் செல்லும் போதும் சிறிது வேகம் குறையும்.
ரயில் பாதைகளில் தற்போது ஒரு கி. மீ தூரத்திற்கு  1200 ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.

உடலில் மாற்றம்

1

Posted on : Sunday, March 03, 2013 | By : ஜெயராஜன் | In :

மனித இனம் தோன்றிய காலம் தொட்டு மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் ,இரையைப் பெறவும்,தான் இரையாகாமல் தப்பிக்கவும் சில ஏற்பாடுகள் உடலில் நடை பெறுகின்றன.இதற்கு 'Fight or Flight Response' என்று பெயர்.இதனை Automatic Nervous System கட்டுப் படுத்துகிறது.இக்கட்டான நேரங்களில் மூளையின் ஹைப்போதாலமஸ்,பிட்யூட்டரி,மற்றும் நாளமில்லா சுரப்பிகள் இயங்கி Cortisol என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.இதே போல சிறுநீரகத்திற்கு மேல் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பிகள் அட்ரிலீன் போன்ற ஹார்மோன்களை சுரக்க செய்கின்றன.இதனால் தசை இறுக்கம்,அதிக சுவாசம்,அதிக இதயத் துடிப்பு போன்றவை ஏற்படும்.கற்கால மனிதர்களுக்கு இம்மாறுபாடுகள் பயனுள்ளவையாய் இருந்தன.கற்கால மனிதனுக்கு இருந்த பிரச்சினைகள் இப்போது நமக்கு இல்லை.எனவே இப்போது நாம் tension  அடையும்போதும் கோபப்படும்போதும் இத்தகைய ஹார்மோன்களின் தாக்கத்தால் இதயப் படபடப்பு,சுவாசப் பெருமூச்சு,அதிக வியர்வை,தலைவலி,அடிக்கடி சிறுநீர் மலம் கழித்தல்,பசி இன்மை  மற்றும் தூக்கம் இன்மை போன்றவை ஏற்படும்.தசை இறுக்கம் ஏற்படும்போது மூளைக்கு செல்லும் பிராண வாய்வு தேவையில்லாமல் தசைகளுக்கும் செல்லும்.இந்தப் பதற்றத்தால் மூளையின் செயல்பாடு குறையும்.

மன்னிப்பு கேளுங்கள்.

1

Posted on : Sunday, March 03, 2013 | By : ஜெயராஜன் | In :

மன்னிப்பு கேளுங்கள்.வாழ்க்கையில் முன்னேறுங்கள்.சும்மா ஒரு பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதே தவறை செய்தால் அந்த மன்னிப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
*மன்னிப்பு கேட்குமுன் நாம் செய்தது தவறு என்பதனை மனதார உணர வேண்டும்.இனி இத்தவறை செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும் .
*மன்னிப்பு கேட்க வெறும் வார்த்தையோ பேச்சோ போதாது.அதற்கான மாற்று நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான்நமது மன்னிப்பு முழுமையடைகிறது.
*மன்னிப்பு கேட்க முடிவு செய்து விட்டால் நாளைத் தள்ளிப் போடாதீர்கள்.தாமதப்படுத்துகிற.பொறுப்பைத் தட்டிக் களிக்கிற ஒவ்வொரு வினாடியும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கும்.அதன்பின் மன்னிப்புக் கேட்டுப் பயனில்லை.
*நீங்கள் மன்னிப்புக் கேட்கப்போகும் நபர் உங்களைவிடக் குறைந்த நிலையில் இருந்தாலும் தயங்காது மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிடில் அந்த உறவு முழுமையாக சிதைந்துவிடும்.
மன்னிப்பு கேட்டு அது ஏற்கப்படா விட்டால் என்ன செய்வது என்று கவலைப் பட வேண்டியதில்லை.என்ன சொல்வாரோ என்று மன்னிப்பு கேட்கத் தயங்கினால் வாழ்நாள் முழுவதும் எந்தத் தவறுக்கும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை.மன்னிப்புக் கேட்பதனால்,தவறை மீண்டும் செய்ய மாட்டோம்;மற்றவர்களுடன் உறவு சீரடையும்.வாழ்க்கை சுமுகமாகும்.
          From'The one minute apology'written by Horper Collins.

பித்தனாயிருக்க

2

Posted on : Saturday, March 02, 2013 | By : ஜெயராஜன் | In :

பணத்தினை வாயால் வைது ,உள்ளத்தில் பூஜை செய்து
வனப்பினைப் பழித்துப் பேசி,முகங்களைத் தொடர்ந்து நோக்கி
புலன்களை வேசி என்றும்,உயிரினைப் பகல் கனவென்றும்,
மலங்களின் மகன் என்றும் உதட்டினால் வீரம் பேசி,
நெய்யோடு பழ வகையும் தின்று மிக ஏப்பம் இட்டு
பையாகப் பொன்னும் பொருளும் சிவன் பெயரை சொல்லிச் சேர்த்து
மடங்களைக் கட்டுவித்து மனதில் இடம்பம் கொண்டு
அடங்கலும் சிவனுக்கென்று ,ராஜஸம்  பொலியப் பழகி
வில்வமும் விளக்கும் சேர்த்துப் பூசனை முழக்கம் கூட்டி
கல்வமும் மருந்தும் காட்டிச் சித்தனின் சீடனென்று
பொய் வார்த்தை சொல்லாததாலே பித்தனென்று பெயரைப் பெற்றேன்.
பித்தனாயிருக்க அருள்வாய்,பித்தரே,பித்தர் குருவே.
                                 --ந..பிச்சமூர்த்தி.கவிதை 'பிரார்த்தனை'யிலிருந்து

சூரிய ஆற்றல்

1

Posted on : Friday, March 01, 2013 | By : ஜெயராஜன் | In :

சூரிய ஆற்றல் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் காதில் விழுந்த சிலவிஷயங்கள்:
*இந்தியாவில் ஒரு நாளைக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்ப சக்தியைக் கொண்டு உலகம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்க இயலும்.
*மின்சாரத்தேவை முழுமையடைய வேண்டுமானால் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு  3000 யூனிட் மின்சாரம் தேவை.இந்தியாவில் தற்போது சராசரியாக ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மின்சாரம் 800யூனிட்கள்.
*ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பில்கிடைக்கும் சூரியவெப்பம் கொண்டு 700 வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும்.
*நமக்குக் கிடைக்கும் ஒளியின் அளவு:
7வாட்ஸ் L.E.D.பல்ப் தரும் ஒளி =18 வாட்ஸ் C.F.L.BULBதரும்  ஒளி =40 வாட்ஸ் tube light தரும் ஒளி =60வாட்ஸ் குண்டு பல்ப் தரும் ஒளி.
எனவே L.E.D.பல்ப் அதிகம் உபயோகத்திற்கு வந்தால் மின்சார செலவு கணிசமாகக் குறையும்.
*ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு 0.5 கிலோ நிலக்கரி எரிக்கப்படுகிறது. அதிலிருந்து 1.5கிலோ கார்பன் டை ஆக்சைட் வெளியேறுகிறது.இதனால் நமது சுற்று சூழல் கணிசமாக பாதிக்கப்படுகிறது.
*இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரம்,நிலக்கரி மூலம் தெர்மல் நிலையங்களில் 70%ம் ,அணுமின் நிலையங்கள் மூலமாக 15%ம் ,நீர் மூலமாக 5%ம் முறைசாரா வழிகளில் காற்றாலை மூலமாக 3%ம்,சூரிய சக்தியின் மூலம் 1%ம் பயோ சிஸ்டத்தின் மூலம் 1%ம்கிடைக்கிறது.
*இந்தியாவில் இன்னும் 40%வீடுகளில் மின்சாரம் இல்லை.