உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அல்லேலூயா

0

Posted on : Thursday, September 30, 2010 | By : ஜெயராஜன் | In :

மெஸ்ஸையா என்ற இசைக் குழுவினர்,தங்கள் நிகழ்ச்சியை முதல் முதலாக லண்டனில் நடத்தியபோது,அரசரும் அதைக் கேட்க வந்திருந்தார்.அந்த இசைக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அல்லேலூயா பாடிக்கொண்டிருந்தபோது,அரசர் மனம் நெகிழ்ந்து, உணர்ச்சி வசப்பட்டு மரபுகளை மறந்து,அந்த இசைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எழுந்து நின்றார்.அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லா பிரபுக்களும் அரசரைப் பின்பற்றி எழுந்து நின்றனர்.இசையை ரசித்துக் கொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் எழுந்து நின்றனர்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து அல்லேலூயா பாடப்படும்போது எழுந்து நிற்பது என்ற வழக்கம் ஏற்பட்டது.

இருமல்

0

Posted on : Thursday, September 30, 2010 | By : ஜெயராஜன் | In :

வயதான ஒருவர் ஒரு கிளி வளர்த்து வந்தார்.அவர் சிகரெட் மிக அதிகமாகக் குடிப்பார்.அந்தக்கிளி மிக அதிகமாக இருமிக் கொண்டிருந்தது.சிகரெட் புகையினால் பாதிக்கப்பட்டு,அந்தக் கிளி இருமுகிறது என்று முடிவுக்கு வந்தார்.அது படும் சிரமத்தைக் காணச் சகியாது,பறவைகளுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு மருத்துவரை அழைத்து வந்தார்.அவரும் எல்லா சோதனைகளும் செய்து பார்த்துவிட்டு கிளி எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை என்றார்.பின் கிளியின் தொடர்ந்த இருமலுக்கு காரணம் என்ன என்று யோசித்தபோதுதான் தெரிந்தது:கிளியின் சொந்தக்காரர் அதிகமாக சிகரெட் குடித்து இருமிக் கொண்டே இருந்ததனால்,அதைப் பார்த்து கிளி தன எஜமானனின் செயலை அப்படியே திரும்ப செய்து கொண்டிருந்திருக்கிறது.சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பது சரிதானே.

தவறான காரியம்

0

Posted on : Wednesday, September 29, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு அமெரிக்க இளைஞன்,இங்கிலாந்தில் ஒரு புகை வண்டியில் பயணம் செய்ய ஏறினான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்ததால் அவனுக்கு உட்கார இருக்கை கிடைக்கவில்லை.ஒரு ஆங்கிலப் பெண்மணி,தன அருகில் ஒரு இருக்கையில் தன நாயை வைத்திருந்தார்.அமெரிக்க இளைஞன் அந்தப் பெண்மணியிடம் பணிவாக,''நான் இந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாமா?''என்று கேட்டான்.அந்தப் பெண்மணி காது கேளாதவர் போல இருந்ததால் மீண்டும் கேட்டான் .அப்போதும் அந்தப் பெண் அவனை சட்டை செய்யவில்லை.உடனே விறுவிறுவென்று  போய் அந்த நாயைத் தூக்கி ஒரு ஜன்னலைத் திறந்து,வெளியே வீசிவிட்டு அமைதியாக அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.சுற்றிலும் ஒரே அமைதி.அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு வயதான ஆங்கிலேயர் அவனைப் பார்த்து,''இந்த அமெரிக்கர்களே இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம் காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில் வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன்,நீ தவறான குட்டியை வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார் .அந்த அம்மணியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?

பறக்க முடியுமா?

0

Posted on : Wednesday, September 29, 2010 | By : ஜெயராஜன் | In :

கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு அன்று இரவு ஒரு  பெரிய ஹோட்டலின்  பத்தாவது  மாடியில் விருந்து நடைபெற்றது.விருந்தில் மது பரிமாறப்பட்டதால் அனைவரும் அளவுக்கு மீறிக் குடித்து போதையில் இருந்தனர்.மறுநாள் காலை அந்த அணியில் ஒருவர்,தான் உடல் முழுவதும் கட்டுக்களுடனும் மிகுத்த வலியுடனும் ஒரு மருத்துவ மனையில்  இருந்ததை  உணர்ந்தார்.அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.அப்போது அதே அணியில் விளையாடிய அவரது நண்பர் அவரைப் பார்க்க வந்தார்.அவரிடம் விபரம் கேட்க,அவர் சொன்னார்,''நீ அளவுக்கு மீறிய போதையில் பத்தாவது மாடியிலிருந்து கீழே  பறக்கப் போவதாகச் சொல்லி குதித்துவிட்டாய்.உடனே எல்லோரும் சேர்ந்து உன்னை மருத்துவ  மனைக்குக் கொண்டு வந்தோம்.''உடனே அவர் மிகுந்த வருத்தத்துடன்,''அடப் பாவி,நான் போதையில் குதிக்கப் போகிறேன் என்று சொன்னால்,நீ என்னை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?''என்று நண்பரைக்  கேட்டார்.நண்பரும் அமைதியாகப் பதில் சொன்னார்,'நானும் போதையில் இருந்தேனா?அதனால் நீ பறந்து விடுவாய் என்று நம்பி விட்டேன்.''

கெளரவம்

1

Posted on : Tuesday, September 28, 2010 | By : ஜெயராஜன் | In :

இங்கிலாந்து அரசராக இருந்தவர் எட்டாவது எட்வர்ட்.சிறுவனாக இருக்கும்போது ,ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது,''சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக் கருதப்படுவார்கள்.''என்றார்.உடனே எட்வர்ட்,''என்ன,எல்லோரும் ஒன்றாகக் கருதப்படுவார்களா?என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்?''என்று சந்தேகம் கேட்டார்.''ஆமாம்.''என்று ஆசிரியர் கூறினார்.''அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது.அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.''என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.

விருந்து

0

Posted on : Tuesday, September 28, 2010 | By : ஜெயராஜன் | In :

மாலை நேரம்.மழை சொட்டச்சொட்ட நண்பர் ஒருவர் முல்லாவைப் பார்க்க வந்தார்.அவருடன் வெகு நேரம் பேசினார்.நீண்ட நேரமாகியும் மழை நிற்கவில்லை.முல்லா சொன்னார்,''இந்த மழையில் நீங்கள் வீட்டுக்குப் போக முடியாது.இன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள்.''நண்பரும்  ஒப்புக்கொண்டார்.நண்பருக்கு சேர்த்து உணவு தயாரிக்க மனைவியிடம் சொல்ல வீட்டுக்குள் சென்றார் முல்லா.பின் திரும்பி வந்து பார்த்தபோது   நண்பரைக் காணவில்லை.சிறிது நேரம் சென்றபின் நண்பர் மழையில் நனைந்து கொண்டே வந்தார்.''அடடா,மழையில் நனைந்துகொண்டு எங்கே போனீர்கள்?''என்று முல்லா அவரைக் கேட்டார்.நண்பர் நிதானமாகச் சொன்னார்,''இன்றிரவு உங்கள் வீட்டில் விருந்து என்பதை என் மனைவியிடம் சொல்லிவிட்டு,அதனால்  சமைக்க வேண்டாம் என்று வீட்டிற்குப் போய் சொல்லி வந்தேன்.''

பட்டுக்கோட்டையார்

0

Posted on : Monday, September 27, 2010 | By : ஜெயராஜன் | In :

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சிறந்த கவிஞர்.அவர் பாடல்கள் எளிமையானவை.சிந்தனைக்கு விருந்தாகும் பல பாடல்களை திரைப் படங்களுக்காக எழுதி உள்ளார்.ரசித்த சில பகுதிகள்:
**********
ஆயுள் காலம் மனிதர்களுக்கு ,அமைப்பிலே ஒரு நூறடா.
அரையும் குறையாய்ப் போவதெல்லாம் அறிவும் செயலும்  ஆமடா.
மாயவானாம் குயவன் செய்த மண்ணுப் பாண்டம் தானடா- இது
மத்தியில் உடையாதபடி நீ மருந்து மாயம் தின்னடா.
**********
அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால் ஆண்டவன் கூட அஞ்சிடுவான்.
அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால்,பிறவிக் குருடனும்  கண் பெறுவான்.
**********
காலொடிந்த ஆட்டுக்காகக் கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளம் கொண்ட காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு திருந்த வழி சொன்னதுமுண்டு.
காதில் மட்டும் கேட்டு அதை ரசித்தாங்க-ஆனா
கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க.
**********
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு.
கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு.
**********
நீதியின் எதிரிகளாய் நிலை மாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை,பரமனையும் மதிப்பதில்லை.
**********
நாளை நாளை என்று பொன்னான நாளைக் கெடுப்பவன் குருடன்.
நடந்து போனதை நெனைச்சு ஒடம்பு நலிஞ்சு போறவன் மடையன்.
நம்மைப்போலக் கெடைச்சதைத்  தின்னு நெனைச்சதைச் செய்யிறவன் மனிதன்.
**********
வசதி இருக்கிறவன் தர மாட்டான்.-அவனை
வயிறு பசிக்கிறவன் விட மாட்டான்.
**********
எழுதிப் படிச்சு அறியாதவன் தான் உழுது ஒளச்சுச் சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி நல்லா நாட்டைக்கூறு போடறான்.
**********
சித்தர்களும் யோகிகளும்,சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க,என்ன பண்ணிக் கிழிச்சீங்க?
**********
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங்கூட்டிருக்குது கோனாரே-இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே!
**********

நம்பிக்கை

0

Posted on : Monday, September 27, 2010 | By : ஜெயராஜன் | In :

''மனிதர்கள் என்னிடம் கூறுவதில் பாதிதான் உண்மை என நான் நம்புகிறேன்.''
'ஏன்?'
''நான் ஒரு வழக்கறிஞர்.''
/மற்றவர்கள் கூறுவதில் இரு மடங்கு உண்மை இருப்பதாக நான் நம்புகிறேன்.'
''எதனால் அப்படி?''
'நான் ஒரு வருமான வரி அதிகாரி.'
**********
வேடிக்கை
''அப்பா,இந்த நீரில் மீன் குதித்து விளையாடுவது நல்ல வேடிக்கை.''
'அது அல்ல மகனே உண்மையான வேடிக்கை.அவை குதித்து விளையாடும் நீரிலேயே கொதித்துக் குழம்பாகிறதே அதுதான் வேடிக்கை.'
**********
பஸ்ஸில் ஒருவன்:ஏனையா,செருப்பை வைத்து நன்றாக என் காலில் மிதித்துவிட்டு,சாரி சொல்கிறாயே?
பதில்:மிதிக்காமல் சாரி சொல்ல முடியாதே?
**********
''உன்னை ஏன் வேலை நீக்கம் செய்தார்கள்?''
'மாவட்டக் கலெக்டர் வருகை,என எழுதுவதற்குப் பதிலாக,மாவாட்டக் கலெக்டர் வருகை என எழுதி விட்டேன்.'
**********

கோபப்படுகிறீர்களா?

0

Posted on : Sunday, September 26, 2010 | By : ஜெயராஜன் | In :

நாம் ஏன் கோபப்படுகிறோம்?ஒவ்வொருவரிடமும் ஒரு பிடிவாத குணம் இருக்கிறது.'நாம் நினைப்பதுதான் சரி:நாம் சொல்வதுதான் சரி;நாம் செய்வதுதான் சரி.'இந்த மாதிரிஇதற்கு எதிராக ஏதாவது நடந்தால் மனம் கொந்தளிக்கிறது.இந்தக் கொந்தளிப்புதான் கோபமாக வெளிப்படுகிறது.ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.தன கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட  அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன.இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்?நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம் .கோபம் வடிந்தவுடன்  நினைத்துப் பார்த்துஇப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறான். அடுத்தவர் சொல்வதிலும் செய்வதிலும் நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே கோபத்தைக் கிட்டத்தட்ட முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம். 

எழுத்தாளர்

0

Posted on : Sunday, September 26, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு எழுத்தாளரை தன வீட்டில் வாடகைக்கு வைத்திருந்தார் ஒருவர்.எழுத்தாளர் பல மாத வாடகை கொடுக்கவில்லை.பல முறை நடந்தும் ஒன்றும் நடக்கவில்லை.பொறுமையிழந்த வீட்டுக்காரர்,ஒருநாள் அவரிடம் வந்து உடனடியாக வாடகைப் பாக்கியைக் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.எழுத்தாளர் சொன்னார்,''நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது.பத்து ஆண்டுகள் கழித்து,'இந்த வீட்டில் ஒரு மாபெரும் எழுத்தாளர் குடியிருந்தார்' என்று மக்கள் பேசுவார்கள்.''வீட்டுக்காரர் சொன்னார்,''நீங்கள் இன்று பணத்தைக் கொடுக்காவிட்டால்,நாளையே மக்கள் அந்த மாதிரிபேசுவார்கள்.''

கர்வம்

0

Posted on : Saturday, September 25, 2010 | By : ஜெயராஜன் | In :

மகனே,
நான் உன்னை எச்சரிக்கிறேன்.
நீ கர்வியாகி விட வேண்டாம்.
அது என்றைக்காவது உன்னைத் தலை கீழாகத் தள்ளிவிடும்.
அறிவுள்ள மனிதனுக்கு கர்வம் அழகன்று.
அறிவற்றவர்களேகர்வம் கொள்வார்கள்.
இயல்பிலே கர்வம் கொண்டவர் எவரோ,
அவர் தலையானது கற்பனைக்கும் அடங்காத
அளவு மீறிய கர்வத்தால் நிரம்பி விடுகிறது..
கர்வமே துன்பத்தின் பிறப்பிடம்.
கர்வத்தைப் பற்றி அறிந்திருந்தும் நீ ஏன் அதனை
துரத்திக் கொண்டு செல்ல வேண்டும்?

திமிர்

0

Posted on : Saturday, September 25, 2010 | By : ஜெயராஜன் | In :

புகை வண்டியில் மேல் பெர்த்தில் படுத்திருந்தவரைப் பார்த்து,கீழே படுத்திருந்தவர் சொன்னார்,''யோவ்,என் தலைக்கு நேரே உன் காலை நீட்டியிருக்கிறாயே,என் முகத்தில் மண் விழுகிறது.இந்தப் பக்கம் தலை வைச்சுப் படுப்பா.''மேலே இருந்த ஆள் எரிந்து விழுந்தார்,''நன்றாகப் பார்.நான் உன் தலை இருக்கும்   பக்கத்தில் தான் என் தலையையும் வைத்திருக்கிறேன்.நீ சொல்வதைப் பார்த்தால் என்தலையிலிருந்து மண் விழுவதாக  அல்லவா அர்த்தம்.என்ன திமிர் அய்யா உனக்கு?''

புதையல்

0

Posted on : Friday, September 24, 2010 | By : ஜெயராஜன் | In :

புலவர் ஒருவர் பாட்டிலேயே விடுகதை ஒன்று போட்டார்.அதற்குவிடை தெரிகிறதா என்று பாருங்கள்.
முற்பாதி போய்விட்டால் இருட்டே ஆகும்.
முன் எழுத்து இல்லாவிட்டால்,பெண்ணே ஆகும்.
பிற்பாதி போய்விட்டால் ஏவல்  சொல்லாம்.
பிற்பாதியுடன் முன் எழுத்து இருந்தால் மேகம்.'
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி.
தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் ஒன்றாம்.
பொற்பார் திண்புய முத்து சாமி மன்னா!
புகலுவாய்  இக்கதையின் புதையல் கண்டே!
விடை கண்டு பிடித்து விட்டீர்களா?விடைதான் கவிதையிலேயே இருக்கிறதே!ஆம்,புதையல் என்பதுதான் விடை.எப்படி?
புதையல் என்ற வார்த்தையில் முதல் பாதியை நீக்கிவிட்டால்இருப்பது அல்.அல் என்றால் இருள்.முதல் எழுத்து பு வை நீக்கி விட்டால் மிஞ்சுவது தையல்.தையல் என்றால் பெண்.இச்சொல்லின் பிற்பகுதியை எடுத்துவிட்டால் புதை என்னும் கட்டளைச் சொல் ஆகிவிடும்.பிற்பாதியோடு முதல் எழுத்து  சேர்ந்தால் புயல் என்று வரும்.அதன் பொருள் மேகம்.முதல் எழுத்தும் கடைசி எழுத்தும்  சேர்ந்தால் புல்.புதையலில் இரண்டாம் எழுத்து தை என்பது ஒரு மாதமாகும்.
புதையல் என்ற ஒரு சொல்லிலே எத்தனை பொருள் உள்ள வார்த்தைகள் உள்ளன என்ற அழகை அழகாகப்  பாடியுள்ளார் புலவர்.

தூக்குதண்டனை

0

Posted on : Friday, September 24, 2010 | By : ஜெயராஜன் | In :

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக்  கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று  ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின்  சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,''என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.''

டாக்டர் கோவூர்

0

Posted on : Thursday, September 23, 2010 | By : ஜெயராஜன் | In :

டாக்டர் கோவூர் கேரளத்தில் பிறந்து இலங்கையில் வாழ்ந்தவர்.தலை சிறந்த மனோதத்துவ மருத்துவர்.மாபெரும் பகுத்தறிவாளர்.பல மூட நம்பிக்கைகளையும் அறிவியல்,மருத்துவ இயல் மூலமாக அம்பலப்படுத்தியவர்.அவருடைய சிந்தனை முத்துக்கள் சில;
**ஒரு குழந்தை பிறக்கும்போது எதைப்பற்றியும் எந்தவித அறிவும் இன்றி வெறுமையாகத்தான் பிறக்கிறது.அப்போது அதன் மூளையை ஒரு புதிய பணப்பைக்கு ஒப்பிடலாம்.அதில் நாம் பணம் போடும் வரை அது காலிதான்.நாம் அதில் எதைப் போடுகிறோமோ அதைத்தான் திரும்ப எடுக்கலாம்.செல்லாத நாணயத்தைப்  போட்டால் செல்லாத நாணயத்தைத் தான் எடுக்க முடியும்.அதுபோல குழந்தையின் உள்ளத்தில் எத்தகைய கருத்துக்களை செலுத்துகிறோமோ அவையே  வெளிப்படும். ஒரு வேறுபாடு.பணப்பையில் போட்டதை நாம் எடுத்துவிட்டால் அது காலியாகிவிடும்.ஆனால் குழந்தையின் மனதிலிருந்து கருத்துக்கள் வெளிப்பட அது மென்மேலும் அறிவு வளர்ச்சியாகும்.குழந்தைகளின் உள்ளத்தில் தீய கருத்துக்களைத் தூவுவதில் பெற்றோரே பெரும்பங்கு ஏற்கின்றனர்.
** ஏமாற்றுதல் என்பது சட்டம் மீறிய கிரிமினல் குற்றம் ஆயினும் மதத்தின் பெயரால் செய்தால் அதற்கு சட்ட ஒப்புதல் கிடைக்கும்.
**பிரபஞ்சத்தில் நடப்பது எல்லாம் இயற்கையே ஒழிய,இயற்கைக்கு மேம்பட்டதல்ல.சிலவற்றுக்கான காரண காரிய விளக்கங்களை இன்னும் மனிதன் அறியாதிருக்கலாம்.நேற்றுப் புரியாத சில இன்று புரிகின்றன.இன்றைய அற்புதங்கள் சில நாளை சாதாரணமாகலாம்.இன்று நமக்கு விளங்காத சிலவற்றுக்கு அறிவியல் வழியில் விளக்கம் தரப்படும் வரையில் நாம் காட்டுமிராண்டித்தனமான காரணங்களை நம்பித்தான் தீர வேண்டுமா?
**எதையும் சரிதானா என்று ஆராய்ந்து பாராமல் ஏற்றுக்கொள்வது முட்டாள் தனம் மட்டுமல்ல.ஆபத்தானதும் கூட.
**பல்வேறு மத நூல்களில் நீர் மேல் நடப்பது,மலையைத் தூக்கியது போன்ற கதைகள் உள்ளன.பெருமையாகவும் சிறப்பாகவும்  தனித்துத்  தெரிய  வேண்டும்  என்பதற்காக தீர்க்கதரிசிகள் இவற்றை செய்ததாக புனைந்துரைக்கப்பட்ட கதைகளால் அந்த தீர்க்கதரிசிகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.பெரியோர்கள் மீது அற்புதங்களைத் திணிக்கும்போது அவர்கள் வாழ்க்கையின் பயன் கெட்டுப்போய் ,அவர்கள் சொல்லியும் செய்தும் வாழ்ந்தும் காட்டிய நன்னெறிகளைக் கடைப்பிடிக்காமல்,அவர்களை வணங்கி வழிபடவே மக்கள் விரும்பினர்.
நேரிய வாழ்வும்,தன்னலமற்ற தொண்டும் ஒருவரை உன்னத நிலைக்கு உயர்த்திடப்  போதுமானவை.
**பொய்யான எண்ணம் ஒன்று, பெரும்பான்மை மக்கள் நம்புவதாலோ,பழங்காலத்திலிருந்தே நம்பப்படுவதாலோ,நம்புவோரில்  புகழ் பெற்ற அறிவியல் வல்லுநர் இருப்பதாலோ மெயயாகிவிடாது
**படிக்காத எமாளிகளால் சமுதாயத்துக்கு விளையும் கேடுகளைவிட படித்த எத்தர்களால் வரும் தீமையே அதிகம்.

தெரியாமல்

0

Posted on : Wednesday, September 22, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் ஒரு அலுவலகம் செல்ல மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்.எதிரே வந்த ஒருவர் திடீரெனக் கத்தினார்,''என்ன அய்யா,இப்படி மிதித்துவிட்டு ஒன்றுமே நடவாததுபோலச் செல்கிறீர்கள்?''முன்னவர் சொன்னார்,''தெரியாமல் நடந்துவிட்டது.மன்னித்துக் கொள்ளுங்கள்.''உடனே மிதிபட்டவர் சீறினார்,''மன்னிப்புக் கேட்டு விட்டால் என் காலில் உள்ள வலி போய்விடுமா?''அவர் சொன்னார்,''நான் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?வேண்டுமானால் நீங்களும் அதே போல என்னை மிதித்து விடுங்கள்.ஆனால் ஒன்று,நான் உங்களைத் தெரியாமல் தான் மிதித்தேன்.அதுபோல நீங்களும் என்னைத் தெரியாமல் தான் மிதிக்க வேண்டும்.''மிதிபட்டவருக்கு மேற்கொண்டு  என்ன பேசுவதென்று  தெரியவில்லை.

சோம்பேறி

0

Posted on : Wednesday, September 22, 2010 | By : ஜெயராஜன் | In :

மார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.ஆறு மாதம் கழிந்தபின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார்.காரணம் என்னவென்று வினவியபோது,மேனேஜர் சொன்னார்,''நீ ஒரு சரியான சோம்பேறி.நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.''மார்க் ட்வைன் உடனே சொன்னார்,''நீங்கள் தான் சரியான சோம்பேறி.''மேனேஜருக்கு கோபம் வந்தது.தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்.';நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே?நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேளையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.''

தெரிந்து கொள்ள....

0

Posted on : Tuesday, September 21, 2010 | By : ஜெயராஜன் | In :

உலகிலேயே மிகச்சிறிய தேசீய கீதம் ஜப்பானுடையது.மொத்தம் நான்கே வரிகள்.ஹைக்கூகவிதை வகையைச் சேர்ந்தது.
**********
நத்தை தன எடையைப்போல அறுபது மடங்கு எடை கொண்ட பொருளை இழுத்துச்செல்லும் சக்தி உடையது.
**********
உலகிலேயே அதிக நீளமான தேசீய கீதம் கிரேக்க நாட்டு கீதம்தான்.இது 128 வரிகள் கொண்டது.
**********
இந்தியாவிற்கு சொந்தமாக 1197 தீவுகள் உள்ளன.இவற்றில் 723 தீவுகள் அரபிக்கடலில் உள்ளன.
**********
பாலைவனம் இல்லாத ஒரே அரபு நாடு லெபனான்.
**********
சிகரெட்டிலுள்ள நிகோடின் நச்சு ரத்தக் குழாயை சுருங்கச் செய்து தோலின் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் உணவுச்சத்து கிடைக்காமல் செய்கிறது.எனவே சிகரெட் பிடிப்பவர்களின் தோல் மற்றவர்களைவிட பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே சுருக்கம் விழ ஆரம்பிக்கிறது.
**********
கேமரா என்ற இத்தாலியச் சொல்லுக்கு இருட்டறை என்று பொருள்.
**********
கேரம் என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு அடித்துத் தள்ளச் செய்தல் என்று பொருள்.
**********
கிராம்பு என்பது காயோ கனியோ அல்ல;அது ஒரு மரத்தின் மொட்டு.
**********.
நமது உடலில் வேர்க்காத பகுதி நம் உதடு
இரத்தம் பாயாத பகுதி கண்ணின் கரு விழி.
**********
பனிக்கட்டி என்பது உறைந்த தண்ணீரின் படிகங்கள்.இந்தப் படிகங்கள் பல முகங்களைக் கொண்டவை.இந்த முகங்கள் வெளியே உள்ள வெளிச்சத்தைப் பிரதி பலிப்பதனால் தான் பனிக்கட்டி வெள்ளை நிறமாகத் தெரிகிறது.
**********
நமது மூளையில் தூக்கம் வருவதற்கான அறிகுறிகள்தொடங்கியவுடனே இருதயமானது மூச்சு விடும் வேகத்தை சற்றுக் குறைத்துக் கொள்கிறது.இதை ஈடு செய்து மூளைக்கு அதிக இரத்தத்தை ஏற்றுவதற்கு பிராணவாயு வேகமாகஉள்ளே இழுக்கப்பட்டு,கரியமில வாயு வெளியேறி,இருதயம் சுருங்கி விரிந்து இரத்தம் சுத்திகரிக்கப்பட வேண்டும்.இதற்கு வசதியாக நமது வாய் அகலத்திறந்து காற்றினை உள்ளே இழுத்துக் கொள்கிறது.அது தான் கொட்டாவி.
**********

இன்று.....

0

Posted on : Tuesday, September 21, 2010 | By : ஜெயராஜன் | In :

இன்று......
ஒரு  கோபத்தை  மறந்து  சமரசம் செய்து கொள்ளுங்கள்
அல்லது
மறந்த ஒரு நண்பரைத் தேடிக் கண்டு பிடியுங்கள்
அல்லது
ஏதேனும் ஒரு அறிய பொருளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
அல்லது
ஒரு வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
அல்லது
ஒரு தவறுக்கு மன்னிப்புக் கேளுங்கள்
அல்லது
ஒரு குழந்தையின் உள்ளத்திற்குக் களிப்பூட்டுங்கள்.
 

பயிற்சி

0

Posted on : Monday, September 20, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு திருடனுக்கு வயதாகி விட்டது.அவன் மகன் ,தனக்கு திருட்டுத் தொழில் செய்ய பயிற்சி கொடுக்குமாறு கேட்டான்.திருடனும் அன்றிரவே மகனை  ஒரு வீட்டிற்குத் திருட அழைத்து சென்றான்.அந்த வீட்டின் ஒரு அறையைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று மகனைப் பார்க்க சொன்னான்.அந்த அறைக்குள் மகன சென்றதுமே அறையை சத்தத்துடன் மூடி வெளியில் தாழ்ப்பாளும் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.சத்தம்கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் விழித்து விட்டனர்.
மாட்டிக்கொண்ட மகன் பயந்து போனான்.ஒரு நிமிடம் தந்தையின் மீது அவனுக்குக் கோபம் வந்தது.மறு நிமிடம் அங்கிருந்து எப்படி தப்பிச் செல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.உடனே ஒரு பூனையைப் போல சப்தமிடத் துவங்கினான்.அதைக் கேட்ட,ஒரு வேலைக்காரன்,அறையின் உள்ளே மாட்டிக் கொண்டிருக்கும் பூனையை வெளியே கொண்டுவரக் கதவைத் திறந்து வைத்தான்.கதவு திறந்ததும் திருடனின் மகன் வேலைக்காரனை தள்ளிவிட்டு வெளியே ஓடினான்.எல்லோரும் அவனைத்  துரத்தினர். வீட்டின் சுற்றுச் சுவர் அருகே வந்தவன் அங்கு ஒரு கிணறு இருப்பதைப் பார்த்து அதற்குள் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு இருளில் மறைந்து கொண்டான்.ஓடி வந்தவர்கள் அவன் கிணற்றில் குதித்து விட்டான் என்று கருதி அது பெரிய கிணறு என்பதால் அதில் மூழ்கி இறந்து விடுவான் என்று நம்பி மெதுவாக வீட்டிற்குள் திரும்பினர்.அவர்கள் சென்றதும் அவன்  வீட்டை விட்டு  வெளியேறினான்.தன தந்தையின் செயல் தனக்கு பயிற்சி கொடும்பதர்காகத்தான் என்பதனை உணர்ந்த அவன்,முதல் தேர்விலேயே தான் எப்படி வெற்றி பெற்றோம்என்பதை தந்தையிடம் விளக்க வேண்டும் என்ற ஆசையுடன் வீட்டிற்கு வந்து தந்தையிடம் சொல்ல ஆரம்பித்தான்.தந்தை சொன்னான்,''கதை எல்லாம் எதற்கு?இப்போது நீ இங்கே இருக்கிறாய்.அதுவே போதும்,நீ என் தொழிலைக் கற்றுக் கொண்டு விட்டாய்.எனக்கு மகிழ்ச்சி.''

மொட்டை

0

Posted on : Monday, September 20, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவனுக்கு இரண்டு மனைவியர்.ஒருத்தி அவனை விட வயதானவள்.மற்றவள் அவனைவிட வயது குறைந்தவள்.அந்த மனிதனுக்கு முடி நரைக்க ஆரம்பித்தது.அதைப் பார்த்த இளம் மனைவி,தன் கணவன் கிழவனாகி விட்டான் என்று ஊரில் எல்லோரும் கேலி செய்வார்கள் என்று எண்ணினாள்.அதனால் அவன் தலையில் இருந்த  வெள்ளை முடிகளை எல்லாம் பிடுங்க ஆரம்பித்தாள்.மூத்த மனைவியோ,அவனுக்கு முடி கருப்பாயிருந்தால்  அவன் இளமையாகவும் தான் அதிக வயதானவள் போல தோற்றம் அளிக்கக் கூடும்  என்று நினைத்து தன் கணவன் தலையிலுள்ள கருப்பு முடியைப் பிடுங்க ஆரம்பித்தாள்.இரு மனைவியரின் கைங்கர்யத்தால் அவன் வெகு விரைவிலேயே மொட்டை ஆகி விட்டான். 

தகுதி

0

Posted on : Sunday, September 19, 2010 | By : ஜெயராஜன் | In :

விருந்துக்கு வந்த ஒருவரை விருந்து கொடுத்தவர் அருகில் அழைத்து,''என்ன உங்கள் தகுதிக்குரிய உடை உடுத்தி வர வேண்டாமா?நீங்கள் இவ்வளவு அலங்கோலமான ஆடைகளை அணிந்து வந்திருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது.உங்கள் தாத்தா விருந்துக்கு வந்தால் எவ்வளவு அழகாக அவர் தகுதிக்கேற்ற  உடை உடுத்தி வருவார்,தெரியுமா?''வந்தவர் சொன்னார்,''நானும் அவர் உடுத்தி வந்த உடையைத் தானே அணிந்து வந்திருக்கிறேன்?''

கொள்ளை

0

Posted on : Sunday, September 19, 2010 | By : ஜெயராஜன் | In :

இரண்டு திருடர்கள் ஒரு நாள் இரவு, ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்து,அங்கிருந்த சேலை மற்றும் பல ரகமான துணிகளை வாரிச்  சுருட்டிக் கட்ட ஆரம்பித்தனர் அப்போது ஒரு திருடன்,'ஐயோ,'என்று திடீரெனக் கத்தினான்.வசமாக மாட்டிக் கொண்டோம் என்று இன்னொரு திருடன் பயந்து,மற்றவன் அருகே சென்று விபரம் கேட்டான்..ஒரு சேலையிலிருந்த விலை அட்டையைக் காட்டியவன் சொன்னான்,''இந்த சேலை மூவாயிரம் ரூபாயாம்.எவ்வளவு கொள்ளை  அடிக்கிறாங்க பார்.''

அவலம்

0

Posted on : Saturday, September 18, 2010 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் அவலத்தில் இருக்கும்போதெல்லாம் உலகத்துக்கு உங்களை மூடிக் கொண்டு விடுகிறீர்கள்.அவலம் உங்களின் உட்புறத்தில் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.எனவேதான் துன்புறும் மனிதர்கள் தற்கொலைபற்றி  எண்ணத் தொடங்குகிறார்கள்.தற்கொலை என்பது முழு அடைப்பு.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் முழுமையாகத் திறந்திருக்கிறீர்கள்.ஒருவர் மகிழ்வுடன் இருக்கும்போது அவர் கையைத் தொட்டுப் பார்த்தால்,ஒரு இதம் பரவுகிறது.அவரது கரத்தின் வழியாக ஏதோ ஒன்று உங்களிடம் வந்து சேர்கிறது.அவர் உங்களை அடைகிறார்.ஆனால் அவலத்தில் இருப்பவரின் கையைத் தொட்டுப் பார்த்தால் அவர் கை செத்ததுபோல இருக்கும்.உயிரோட்டம் இருக்காது.அன்பு,இதம் ஏதும் இருக்காது.விரைத்துப்போய் காணப்படும்.
ஏழைகள் வெளிப்படையாகவே அவலத்தில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளே நிறைவேறவில்லை.பணக்காரகளும் பரிதாபமாகவே இருக்கிறார்கள்.செல்வம் கொண்டாட்டத்துக்கு இட்டுச்செல்ல முடியும்.ஆனால் கொண்டாடும் மனநிலை அவர்களிடம் இல்லை.ஏழை அவலத்தில் இருக்கிறான்.பணக்காரன் அதிக அவலத்தில் இருக்கிறான்.உடனே,''உலகில் ஒன்றுமில்லை;செல்வம் பயனற்றது''என்ற முடிவுக்கு வருகிறான்.உண்மை அப்படி  அல்ல.அவனால் மனத்தால் கொண்டாட முடிவதில்லை.
நரகமும் மோட்சமும் புவியியல் பிரதேசங்கள் அல்ல.மன நிலைகளே.

தகப்பன்

0

Posted on : Saturday, September 18, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜென் மாஸ்டர் ஹாக்யுன் அவர்களினால் கவரப்பட்ட ஒரு வியாபாரி அவருக்கு அவ்வப்போது நிதிஉதவிகளையும் பரிசுகளையும் கேட்காமலே கொடுத்து வந்தான்.அவனுக்கு ஒரு பெண் இருந்தாள்.அவள் அவ்வீட்டு வேலைக்காரனை குடும்பத்தினருக்குத் தெரியாமல் காதலித்து ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள்.குழந்தையின் தகப்பன் யார் என்று கோபத்துடன் வியாபாரி கேட்டபோது பயந்துபோன அந்தப்பெண் ஹாக்யுனைக் கை காட்டிவிட்டாள்.அதிர்ந்துபோன வியாபாரி,கோபத்துடன் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு ஹாக்யுனிடம் சென்று அவரை எவ்வளவு தரக்குறைவாகப் பேசமுடியுமோ,அவ்வளவு பேசிவிட்டு,குழந்தையை அவர் மடியில் விட்டுவிட்டு வந்துவிட்டான்.ஹாக்யுன் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை.பதில் எதுவும் பேசவுமில்லை.அவர் அந்தக் குழந்தையை எடுத்து தன குழந்தைபோலவே கொஞ்சினார்.இதைப் பார்த்த ஊர் மக்களும் ஹாக்யுன் தவறு செய்திருப்பார் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.இப்போது ஊரில் யாரும் அவரை மதிப்பதில்லை ஆனால்அது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஒரு நாள் கடுங்குளிரில் குழந்தையைத் தோளில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று உணவுக்கு பிச்சை  எடுத்துக் கொண்டிருந்தார்.அவர் அந்த  வியாபாரியின் வீட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது இக்காட்சியை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த வியாபாரியின் மகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.உடனே தன தந்தையிடம் சென்று நடந்த உண்மைகளை அப்படியே சொல்லிவிட்டாள்.வியாபாரிக்கோ மிகுந்த வருத்தம் ஏற்பட்டது ஒன்றும் அறியாத ஒரு ஞானியை அவதூறுக்கு உள்ளாக்கி  விட்டோமே என்று கதறினான்.நேரே அவர் இருக்கும் இடம் சென்று அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து,குழந்தையை அவர் கையிலிருந்து வாங்கிக் கொண்டான்.ஹாக்யுன் கேட்டார்,''என்ன,குழந்தைக்கு வேறொரு தகப்பன் கிடைத்து விட்டானா?''

முறை என்ன?

0

Posted on : Friday, September 17, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தன நாய்க்குக் குணம் இல்லை என்று மிருக வைத்தியர் ஒருவரை அணுகினான்.அவரும் பரிசோதித்துவிட்டு,''இந்த மருந்தை ஒரு வாரம் கொடுத்து வாருங்கள் சரியாகிவிடும்.இந்த மருந்து இனிப்பாய் இருக்கும்.அதனால் நாய் அதை விரும்பிக் குடிக்கும்,''என்றார்.வீட்டுக்கு  சென்றவுடன்,அவன்நாயை தன முழங்கால்களுக்கு இடையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு மருந்தை அதன் தொண்டைக்குள் ஊற்ற முயற்சி செய்கையில் அது திமிறி ஓடி விட்டது.மருந்தும் கொட்டிவிட்டது.சிறிது நேரம் கழித்து பார்க்கையில் அந்த நாய் சிந்திய மருந்தை நக்கிக் கொண்டிருந்தது.இப்போதுதான் அவருக்குப் புரிந்தது.நாய் மருந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அதை வம்படியாக ஊற்றிய முறைக்கு தான் எதிர்ப்பாய் இருந்திருக்கிறது.

சொர்க்கம் நரகம்

0

Posted on : Friday, September 17, 2010 | By : ஜெயராஜன் | In :

படைத் தளபதி ஒருவன் ஜென் ஞானி ஒருவரிடம்,''அய்யா,எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்.உண்மையில் சொர்க்கம் நரகம் இருக்கிறதா?''என்று கேட்டான். ஞானி அவனை ஏறெடுத்துப்  பார்த்து,''நீ யார்?''என்று கேட்க,தான் ஒரு படைத்தளபதி என்று கூறினான்.உடனே ஞானி,''நீ ஒரு முட்டாள்.நீயெல்லாம் படைத் தளபதியாய் இருப்பதற்குத் தகுதி அற்றவன்.''என்று கூறினார்.தளபதிக்கு பயங்கரமான கோபம்.உடனே வாளைஉருவினான்.ஞானி சிரித்துக்கொண்டே,''இதோ நரகத்தின் வாசல் திறந்து விட்டது,''என்றார்.அதிர்ச்சி அடைந்த தளபதி வாளை உரையிலிட்டவாறே ,''அய்யா,என்னை மன்னிக்க வேண்டும்.''என்றான். ஞானி,''இப்போது சொர்க்கத்தின்  வாசல்  திறந்து  விட்டது.''என்றார்.சந்தேகம் தீர்ந்த தளபதி ஞானியை வணங்கி விடை பெற்றான்.

களைப்பு

0

Posted on : Thursday, September 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜென் மாஸ்டர் ஹாக்யுன் ஒரு முறை இரண்டு சாதுக்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.முதலில் ஒரு சாது தான் சுமந்து வந்த சுமையை ஹாக்யுனைக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டார்.அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை தன சுமையுடன் சேர்த்து சுமந்து வந்தார்.ஆனால் அவர் முகத்திலிருந்த மலர்ச்சி கொஞ்சமும் குறையவில்லை.அவர் உல்லாசமாக வருவதைப் பார்த்தஇன்னொரு சாதுவும் தனக்கு உடல் நலம் இல்லாதிருப்பதாகவும் தன்னுடைய சுமையையும் அவர் எடுத்து வர வேண்டும் என்று வேண்டினார்.இப்போதும் ஹாக்யுன் மறுப்பேதுமின்றி அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சுமந்து வந்தார்.மூன்று பெரும் தொடர்ந்து பயணிக்கையில்,வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டதால் அவர்கள் படகில் செல்ல நேர்ந்தது.படகில் ஏறியதும் களைப்பு மிகுதியால் அவர் உடனேஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். திரும்ப அவர் விழித்தபோதுஉடனடியாக அவருக்கு பயணத்தைப் பற்றிய ஞாபகம் வரவில்லை. ஒரு துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து,சுற்றிலும் பார்க்கையில்,உடன் வந்த இரு துறவிகளும்,படகோட்டியும்,முழுக்க வாந்தி எடுத்த நிலையில் இருந்தனர் அவர்கள் இவரை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.பின்னர்தான் அவர் நடந்தது என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்.அவர் தூங்கிய சிறிது நேரத்தில் ஒரு பெரும் புயல் வந்து படகைப் பயங்கரமாக ஆட்டியுள்ளது. அதன் பாதிப்பால் தாங்க முடியாத அளவிற்கு படகோட்டியும் இரு சாதுக்களும் வாந்தி எடுத்து உடல் நலம் பாதிக்கப் பட்டனர்.ஆனால் ஹாக்யுன் மிகுந்த களைப்பில் அயர்ந்து  தூங்கிக்  கொண்டிருந்ததால்  அவருக்கு எந்த பாதிப்பும்  ஏற்படவில்லை .

சோம்பேறி

0

Posted on : Thursday, September 16, 2010 | By : ஜெயராஜன் | In :

யாராவது நம்மைப் பார்த்து,'சோம்பேறி'என்று சொன்னால் நாம் அதனால் பாதிக்கப் படுகிறோம்.''நான் சோம்பேறி கிடையாது,''என்பது நமக்குத்  தெளிவாகவும் உறுதியாகவும் தெரிந்தால் பிறர் நம்மைப் பார்த்து சோம்பேறி  என்று சொல்வது வெறும் பிதற்றல் ஆகத் தெரியும்.அது நம்மை ஒருபோதும் பாதிக்காது.அப்படி பிதற்றுகிறவனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.அப்படியானால் சோம்பேறி என்று சொன்னவுடனே  சிலர் பாதிப்படைகிறார்களே,அது ஏன்?சோம்பேறி என்று ஒருவர் சொன்னதை திட்டப்பட்டவர் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அவருக்கு கோபம் வருகிறது.இன்னும் சொல்லப்போனால்,பிறர்,சோம்பேறி என்று திட்டும்போது,சிலர் அந்த திட்டலுக்கு வருந்துவதைவிடத் தான் சோம்பேறி என்பதை மற்றவர் அறிந்து கொண்டனரே,அந்த உண்மையை எல்லோர் முன்னாலும் சொல்லி விட்டனரே என்பதற்காகவே வருந்துகின்றனர். யார் என்ன சொன்னாலும் நம்மைப் பற்றி நமக்கு தெளிவான கருத்து இருக்கும் வரை அது நம்மை பாதிக்காது.

லாபம்

0

Posted on : Wednesday, September 15, 2010 | By : ஜெயராஜன் | In :

தாயின் தளரா உழைப்பினால் படித்துநல்ல வேளையில் அமர்ந்த ஒருவன்,தன முதல் மாத சம்பளத்தில் தன தாய்க்கு ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நல்ல சேலை வாங்கி ஊருக்கு அனுப்பிவைத்தான்.அதன் உண்மையான விலை தெரிந்தால் ,அம்மா வருத்தப்படுவார்களே என்று கருதி அதன் விலை இருநூறு ரூபாய் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.அடுத்த வாரம் அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.''நீ அனுப்பிய சேலை நன்றாக இருந்தது .அதைப் பார்த்த பக்கத்து வீட்டு அக்கா ஐநூறு ரூபாய் கொடுத்துவாங்கிக் கொண்டார்கள்.இன்னும் பல பேர் இதே மாதி சேலையை ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராய் இருக்கிறார்கள்.இதில் நல்ல லாபம் கிடைக்கும்போலத் தெரிகிறது.எனவே உடனே அதே மாதிரி சேலைகள் பத்து வாங்கி அனுப்பவும்.''

அதனால் என்ன?

0

Posted on : Wednesday, September 15, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தன ஊரிலேயே பெரிய பணக்காரராயிருந்த ஒருவரைப் பார்க்கப் போனார்.அப்போது அவர் எதிரிலேயே வந்தார்.அவர் ஒரு பழைய வேஷ்டிஒரு கிழிந்த துண்டுடனும் இருந்தார்.இவருக்கோ பொறுக்க முடியவில்லை ''அய்யா,நீங்கள் இந்த ஊரில் பெரும் பணக்காரர்.நீங்கள் இந்த மாதிரி உடை உடுக்கலாமா?''என்று கேட்டார்.அவர் சொன்னார்,''தம்பி,அதனால் என்ன?இது நம்ம ஊர் தானே?எல்லோருக்கும் என்னைத் தெரியுமே?இவர்களிடம் நான் பகட்டாய் இருக்க வேண்டிய அவசியம் என்ன?''
சில நாட்கள் கழித்து அதே நபர் பக்கத்திலிருந்த ஒரு பெரிய நகரத்திற்கு ஒரு வேலையாய் சென்றார்.அங்கும் அவர் அந்த பணக்காரரை சந்திக்க நேர்ந்தது. அப்போதும் அவர் பழைய வேஷ்டி,கிழிந்த துண்டுடனே காணப்பட்டார். ''என்ன அய்யா,நம்ம ஊரில தான் எல்லோரையும் தெரியும் என்று பழைய துணி உடுத்தியிருந்தீர்கள்.இந்த நகரத்திற்கு வரும்போதாவது நல்ல உடைகளை உடுத்தி வந்திருக்கலாமே?''என்று கேட்டபோது,பணக்காரர் சொன்னார்,''அதனால் என்ன,தம்பி,இந்த ஊரில் யாருக்கும் நம்மைத் தெரியாதே?எந்த உடை உடுத்தினால் என்ன?''

ஓஷோ சொல்கிறார்

0

Posted on : Tuesday, September 14, 2010 | By : ஜெயராஜன் | In :

எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும்.
**********
பொதுவாக மனிதர்கள் கோபம்,வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக் கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள்.ஏதாவது சிறு காரணம் போதும்.அவை வெளிப்பட்டுவிடும்.
**********
செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத் தலைவனாக இருக்கவே  விரும்புவான்.ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி நடத்திச் செல்லவும் ஆசைப் படுவான்.அவன் மக்களுக்கு சொல்லும் அறிவுரையில் உண்மை அல்லது நன்மை  இருக்கிறதா என்பது பற்றி  அவனுக்கு அக்கறை கிடையாது.இங்கு எது முக்கியம் எனில்,அப்படி எடுத்து சொல்வதால் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது.ஏனெனில் அவனை பிறர் புத்திசாலி என்று மதிக்கிறார்கள்,என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான்.பல பேர் அவனை அண்ணாந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.
**********
ஒரு மனிதர் சாவைக் கண்டு அஞ்சாதபோது,அவரை ஒரு செயலைச் செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது.உங்களுடையஅச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது.உண்மையில்,நீங்கள,எங்கே மற்றவர்களால் அவமானப்படுத்தப் பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தான் மற்றவர்களை அடிமையாக்க  முயற்சி செய்கிறீர்கள்.ஒருவர் தைரியமாகஇருந்தால் யாரையும் அச்சப்படுத்தவோ ,மற்றவர்களால் அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள்.
**********
அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த அமைதியை ஒரு சோகமாக ஆக்கி விடாதீர்கள்.அதை ஒரு சிரிப்பாகவும்,நடனமாகவும் இருக்க விடுங்கள்.அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன் கூடியதாக இருக்கட்டும்.ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும்.அது செத்துப்போன சவமாக இருக்க வேண்டாம்.
**********

அண்ணலின் அன்பு

0

Posted on : Tuesday, September 14, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் தன நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு வயதான பெண்மணி அண்ணலைப் பார்க்க வெகு தூரத்திலிருந்து வந்திருந்தார்.அண்ணலை தரிசித்தபின் தான் கொண்டு வந்திருந்த திராட்சைப் பழத்தை அவரிடம் அன்போடு கொடுத்தார் அந்த மூதாட்டி.அண்ணலும் சிரித்துக் கொண்டு அந்த மூதாட்டி முன்னிலையிலேயே அவர் கொடுத்த பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.அவர் சென்றபின் நண்பர்கள் கேட்டனர்,''வழக்கமாக யார் எது கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து சாப்பிடுவீர்களே?இன்று என்ன பழம் மிக ருசியாக இருந்ததோ?நீங்களே முழுவதும் சாப்பிட்டுவிட்டீர்களே?''அண்ணல் சொன்னார்,''அந்தப் பெண்மணி கொடுத்த பழம் ஒன்றை வாயில் போட்டேன். அது மிகப் புளிப்பாக இருந்தது.உங்களிடம் கொடுத்தால் மிகப் புளிப்பாயிருக்கிறது என்று யாராவது  சொல்லி விடுவீர்கள்.உடனே அந்த மூதாட்டியின் மனம் மிகவும் புண்படும்.அதனால் சிரித்துக் கொண்டே நான் முழுவதையும் சாப்பிட்டேன் அந்த மூதாட்டி முகத்திலே எவ்வளவு மகிழ்ச்சியுடன் சென்றார்கள்?''

மனச்சோர்வு

1

Posted on : Monday, September 13, 2010 | By : ஜெயராஜன் | In :

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம்.எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும்.யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும்.மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல ஒரு வெறுமை வரும்.அப்படியானால்  உங்களுக்கு மனச்சோர்வு என்று அர்த்தம்.
நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை.எதிர்பார்த்தது எதுவோ நிகழவில்லை.ஆசைப்படி வாழ்க்கை அமையவில்லை.உங்களுக்குக் கிடைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறீர்கள்.அதை எதிர்க்கிறீர்கள்.
நீங்கள்மனச்சோர்வுடன் இருக்கும்போது மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொளவேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்.உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்.இரக்கத்தை யாசிக்கிறீர்கள்.
உங்கள் விருப்பப்படி உலகம் ஏன் நடக்க வேண்டும்?நீங்கள் விரும்பும்படி தங்களை மற்றவர்கள் ஏன் ஏய்த்துக் கொள்ள  வேண்டும்? அகங்காரம் எங்கிருந்தாலும் அதற்கு அடி விழத்தான் செய்யும்.அப்போது மனச்சோர்வு முளைத்து எழும்.அது உங்களைப்பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.
வெளியே இருந்து ஆயுதம் கொண்டு தாக்குபவர்களைவிட உள்ளிருந்துகொண்டு உங்களைக் கீறிக் கிழித்து குடைந்து உங்களை உபயோகம் இல்லாமல் அழித்துவிடும்.மனச்சோர்வு ஒரு விஷ ஆயுதம்.
மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு,அதற்குக் காரணம் நீங்கள் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.உலகின் மீது கோபம் கொள்ளாதீர்கள்.உங்கள் குறைகளை உணர்ந்து,மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு என்று உணருங்கள்.வழியும் வேதனையும்  நிறைந்த அனுபவங்களையே வாழ்க்கைப் பாடமாக ஏற்று உங்களைப் பக்குவப் படுத்திக் கொள்ளுங்கள்.மாற்றுக் கருத்துக்களை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.அவற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்.கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

இசை எனும் தவம்

0

Posted on : Monday, September 13, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நவாபின் அரண்மனையில் பல இளம் பாடகர்கள் இருந்தனர்.அரசவைக்கு  வந்த சிறந்த பாடகன் ஒருவன் தான் பட சில விதிகளைச் சொன்னான்.அவை கடுமையாயிருந்தன.அதாவது அவன் பாடும்போது யாரும் தலையை அசைக்கக் கூடாது.அசைந்தால் அவர்களின் தலைதுண்டிக்கப் பட வேண்டும்.நவாபும் விதிமுறைகளுக்கு ஒத்துக் கொண்டு,இசையைக் கேட்க விரும்புபவர்கள் இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டால் வரலாம் என அறிவித்தான்.பல ஆயிரம் பேர் அந்த பாடகனின் இசையைக் கேட்கக் கூடினர்.விதிகளை நிறைவேற்றும் பொருட்டு நவாப் உருவிய வாளுடன் வீரர்களை ஆங்காங்கு நிறுத்தினார்.ஆனால் தலையை அசைப்பவர்களை நிகழ்ச்சியின் இடையில் வெட்டிக்கொண்டு இருந்தால் ,பாடகனுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால்,தலை அசைப்பவர்களை  அடையாளம் காணச் சொன்னான்.இவ்வளவு கடுமையான ஏற்பாடுகளுக்குப் பின்னும் பத்து பேர் தலை அசைத்துவிட்டனர்.நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் தலையை வெட்ட அரசன் ஏற்பாடு செய்தான்.அப்போது அந்த பாடகன் சொன்னான்,''இந்த பத்து பேர் மட்டுமே என் பாடலைக் கேட்கத் தகுதி உள்ளவர்கள்.மற்றவர்கள் மரணத்திற்குப் பயந்து என் பாடலைக் கவனிக்கவில்லை.அவர்கள் கவனம் அவர்களின் உயிர் மீதுதான்.அவர்களுக்கு இசை தேவையில்லை.நான் பாடிய பாடல் இந்த பத்து பேருக்கு மட்டும் தான்.அவர்கள் என் பாடலின் இனிமையில் தம்மை மறந்து விட்டார்கள்.எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி பாடலின் இனிமை அவர்களது இதயங்களைத் தொட்டிருக்கிறது..மீதி இரவும் நான் அவர்களுக்காக பாடுவேன்.எனக்குப் பரிசு எதுவும்  தேவையில்லை.இசையைக் கேட்கும் உண்மையான மனிதர்களைக் கண்டுபிடித்ததே சரியான பரிசு.இவர்களுக்கு பரிசு கொடுக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.ஏனெனில் இசை என்பது ஒரு தவம் என உணர்ந்தவர்கள் இவர்கள்''அந்த பத்துப் பேரைப் பொருத்தமட்டில் இசையைக் கேட்கும்போது அவர்களே  மறைந்து  போய்விட்டார்கள்..இசைமட்டுமே  அங்கு  இருந்தது .

சில தகவல்கள்

0

Posted on : Saturday, September 11, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கிலோ பஞ்சை 660 கிலோ மீட்டர் நீளத்திற்கு நூலாகத் திரிக்க முடியும்.
**********
இறை இல்லமான காபா ஒரு கருங்கல் கட்டிடம்.33 முழ நீளமும்,22 முழ அகலமும் உள்ள இந்தக் கட்டிடம் உயர்ந்த கறுப்புத் துணியினால் போர்த்தப்பட்டிருக்கிறது.முதல் மனிதரான ஆதம் இறைவனை வணங்க இந்த ஆலயத்தைக் கட்டினார்.
**********
உலகில் அதிகமாக உபயோகப் படுத்தப்படும் காய்கறி,வெங்காயம்.
**********
எஸ்கிமோ என்றால் பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று பொருள்.அதனால் அவர்கள் தங்களை இனுட் (inuit) என்று சொல்லிக் கொள்கிறார்கள்.அதன் பொருள்,'உண்மையான மனிதர்கள்'.
**********
கிரேக்க புராணப்படி,பண்டோரா என்பவள் தான் முதல் பெண்மணி.ஜீயஸ் கடவுள் ஆணின் கொட்டத்தை அடக்க அவளைப் படைத்தார்.அவர் அவளிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து,''இந்தப் பெட்டிக்குள் உனக்கு தேவையான அத்தனை ஆயுதங்களும் இருக்கின்றன.அதைத் திறந்து பார்க்காதே.எப்போதாவது தேவைப்படும்,''என்றார்.உலகுக்கு வந்தவுடன் பெண்களுக்கே உரிய ஆர்வத்தில் அவள் அதைத் திறக்கிறாள்.உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் முதலில் அந்தப் பெட்டியில் தான் இருந்தன.அதனைத் திறந்தவுடன் அத்தனையும் வெளி வந்து விட்டன.ஒன்றே ஒன்று மட்டும் பெட்டிக்குள் ஒரு மூலையில் ஒட்டி ஒளிந்து கொண்டது.அது நம்பிக்கை.
'இந்தத் துன்பத்தை நாம் கடப்போம்.நல்லது நடக்கும்,'என்கிற நம்பிக்கை தான் நம்மை எந்தப் புயலிலும் வலி நடத்தி செல்லும் .
**********

மருத்துவம்

0

Posted on : Friday, September 10, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மளிகைக் கடைக்காரருக்கு,ஒரு டாக்டர் பலசரக்கு வாங்கியதற்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது.தொலைபேசி மூலம்தொடர்பு கொண்ட போதெல்லாம்,டாக்டர் இல்லை என்ற பதிலே வந்தது.இறுதியில் தன கடை ஆள் ஒருவரை நேரில் அனுப்பி வைத்தார்.அவன் சென்று ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான்.அவன் முகம் சோர்வாயிருந்தது.கடைக்காரர் போய் வந்த விபரம் கேட்டார்.கடை ஆள் சொன்னான்,''என்ன சொன்னார்!என் நாக்கை நீட்ட சொன்னார்.!கை நாடியைப் பிடித்துப் பார்த்தார்!எனக்கு உடல்நிலை சரியில்லை என்றார்!இன்னும் ஏழெட்டு வாரங்களுக்கு இருக்கும் இடத்தை விட்டுஅசையாதே,ஓடி ஆடி வேலை செய்யாதே என்று எச்சரித்து அனுப்பினார்''

பொன்மொழிகள்-13

0

Posted on : Friday, September 10, 2010 | By : ஜெயராஜன் | In :

பழக்கிய யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பதுபோல  பணத்தைப் போட்டுத்தான் பணத்தை ஈட்ட வேண்டும்.
**********
தன்னிடம் குவிந்த செல்வத்தை,தானும் அனுபவியாமலும்,நற்காரியங்களுக்கு செலவிடாமலும் இருப்பவன் சுகம் பெற மாட்டான்.அவன் பணம் படைத்த முட்டாள்.
**********
சிங்கத்துக்கு முடிசூட்டு விழாவோ,சடங்குகளோ விலங்குகள் செய்து வைக்கவில்லை.தன்னுடைய பராக்கிரமத்தால் அல்லவோ சிங்கம் அரச பதவி வகிக்கிறது?
**********
பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை.
முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை.
கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை.
அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை.
**********
சமய சந்தர்ப்பம் தெரியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் வெகுமதி  பெறாமல் போவது மட்டும் அல்லாமல் வெறுப்பையும் தேடிக் கொள்கிறான்.
**********
குதிரை,ஆயுதம்,வீணை,சொல்,புத்தகம்,ஆண்,பெண் இவை அனைத்தும் பயன்படுவதும்,பயன்படாமல் போவதும் உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து உள்ளது.
**********
பிரம்மாவே பயமுறுத்தினாலும் தைரியசாலி தைரியத்தைக் கைவிடுவதில்லை.கோடை கால வெயில் குட்டையைததான் வற்றச் செய்யும்.சிந்து நதியோ,எப்போதும் பெருகி ஓடிக் கொண்டேயிருக்கும்.
**********
நெருக்கடி இல்லாத சாதாரண காலத்தில் எல்லோரும் அறிவாளிகளாக இருக்க முடியும்.
**********
செல்வம் சேர்ந்தவனிடம் அகம்பாவம் சேரும்.உணர்ச்சி வசப்படுபவன் ஆபத்தில் சிக்கிக் கொள்வான்.
**********
அரசனின் அருகில் இருந்து ஊழியம் செய்பவன்,நல்ல குடும்பத்தில் பிறக்காதவனாகவோ,மூடனாகவோ,கருணை இல்லாதவனாகவோ இருந்தாலும் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள்.
**********
பணத்தைசெர்ப்பதிலும் துன்பம்;சேர்த்த பணத்தைக் காப்பதிலும் துன்பம்;அதை இழந்து விட்டாலும் துன்பம்;செலவிட்டு விட்டாலும் துன்பம்.எப்போது பார்த்தாலும் பணத்தால் துன்பமே உண்டாகிறது.
**********
                                                           --பஞ்ச தந்திரக் கதைகள் நூலிலிருந்து

சமன் நிலை

1

Posted on : Thursday, September 09, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை  என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

மரியாதைக்குறைவு

0

Posted on : Thursday, September 09, 2010 | By : ஜெயராஜன் | In :

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர்.பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார்.கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு,''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.''என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர் ,''என்ன கவிஞரே,இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே,கொஞ்சம் மாற்றக்கூடாதா?யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா?''என்று கேட்டார்.அதற்கு கவிஞர் கிண்டலாகச் சொன்னார்,''டேய்,நீ ரொம்ப அடக்கமானவன்.இது எனக்கு மட்டுமல்ல.ஊருக்கே தெரியும்.விஜயவாடா என்கிற ஊரைக்கூட விஜயவாங்க  என்று  சொல்கிற  ஆள்  நீ.பேசாம   நான் சொல்கிற  பல்லவியை  அப்படியே  போடு .'',

திருப்தியற்ற மனம்

0

Posted on : Wednesday, September 08, 2010 | By : ஜெயராஜன் | In :

இளம் பெண்மணி ஒருத்தி தன குழந்தையுடன் கடற்கரைக்குப் போயிருந்தாள்.கடல் அலைகளிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு அலை திடீரென இழுத்துச் சென்று விட்டது.''ஐயையோ,என் குழந்தை போய்விட்டதே,''என்று அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுதாள்.அந்தப் பண்ணின் அழுகை  உருக்கமானதாக இருந்ததால்,கடல் தெய்வம் குழந்தையை மீண்டும் உயிருடன் கரைக்கு அனுப்பியது.தன குழந்தைக்கு ஏதும் ஆகாதது கண்டு மகிழ்ச்சியில் அவள் திக்குமுக்காடி விட்டாள்.குழந்தையின் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டவள்,எதேச்சையாகக்  குழந்தையின் காலைக் கவனித்தாள்.குழந்தையின் ஒரு காலில் தான் செருப்பிருந்தது.இன்னொரு காலில் இருந்த செருப்பைக் காணவில்லை.உடனே அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி பறந்து விட்டது.''ஐயையோ,செருப்பு போய்விட்டதே,''என்று அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
இப்படித்தான் பல சமயங்களில் முக்கியம் இல்லாத சமாச்சாரங்கள் நம் மகிழ்ச்சியைப் பறித்து விடுகின்றன.எதிலும் திருப்து அடையாதவர்களுக்கு மகிழ்ச்சி ஏது?
                                                            ----சுவாமி சுகபோதானந்தா.

கரும்புள்ளிகள்

0

Posted on : Wednesday, September 08, 2010 | By : ஜெயராஜன் | In :

மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில் தான் இருக்கிறது.எல்லைகளை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் விரிவடையச்செய்து கொண்டே போனால்,எந்த மகிழ்ச்சியும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது.ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ அது மாதிரி திருப்தியற்ற  மனம் உடையவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி வந்தாலும் அது தங்காது.அவர்களின் மனம் சோக மயமாகவே இருக்கும்.தன்னிடம் இல்லாததை நினைத்தேதுன்பப்படும்.வாளியில் உள்ள ஓட்டையை அடைத்து விட்டால் தண்ணீர் ஊற்றியதும் நிரம்பி விடுவதுபோல மனதில் இருக்கும் கரும் புள்ளிகளை அழித்து விட்டால் மகிழ்ச்சி நிரம்பும்.''இது கிடைத்தால் தான் என் மனம் மகிழ்ச்சி அடையும்,''என்று மண்டைக்குள் சில விஷயங்களை நம் மனது ஏற்றிக் கொள்கிறது.அவைதான் மனதின் கரும்புள்ளிகள்.
                                 --சுவாமி சுகபோதானந்தா.

தற்புகழ்ச்சி

0

Posted on : Tuesday, September 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஏதேனும் ஒரு சூழ்நிலையில் தன்னைப் பற்றி ஒருவர் கூற நேரிடும்போது,அதற்கான கட்டாயம் நேரும்போது தற்புகழ்ச்சி குற்றமாகாது.  மற்ற நேரங்களில் ஒருவர் எப்போதும் தன்னுடைய சாதனைகள் என்று ஏதாவது பேசிக்கொண்டே இருந்தால் யாரும் அதை ரசிக்க மாட்டார்கள்.
நம் கல்வியாற்றலை அறியாதவரிடம் நம்மைப் பற்றிச் சொன்னாலும்  அதைப் புரிந்து கொள்ளவா போகிறார்கள்?நாம் சாதாரணமாகப் பேசுவதிலேயே நம் கல்வி ஆற்றல் வெளி வருமே?பின் ஏன் தற்பெருமை பேச வேண்டும்?
நம் எதிரி நம் பெருமையை உணர்ந்து தானே தூற்றுகிறான்?பொறாமையில் தானே பழிக்கிறான்?பின் ஏன் தற்பெருமை பேசி அவனுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்?
நம்முடைய செயல்கள்,நம் உழைப்பு,நம் ஆர்வம்,நம் இலக்கு ஆகியவை நம்மைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவர் களுக்கும்  காலப்போக்கில் புரிய வைத்துவிடுகின்றன.எனவே தற்பெருமை தேவையில்லை.

நிறம்

0

Posted on : Tuesday, September 07, 2010 | By : ஜெயராஜன் | In :

டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் ஐரோப்பியர்கள் ஒரு முறை கேட்டார்கள்,''எங்கள் ஊரில் மக்கள் ஒன்று,கருப்பாக இருக்கிறார்கள் அல்லது,வெள்ளையாக இருக்கிறார்கள்.ஆனால் உங்கள் ஊரில் வெள்ளை, பழுப்பு,பழுப்பு கலந்த சிவப்பு,மஞ்சள்,வெளிர் மஞ்சள்,கருப்பு என்று பல்வேறு நிறங்களில் இருக்கிறார்களே,அது ஏன்?''ராதாகிருஷ்ணன் சட்டென்று பதில் சொன்னார்,''கழுதைகள் ஒரே நிறத்தில் இருக்கின்றன.குதிரைகள் பல்வேறு நிறங்களில் இருக்கின்றன..''

இரு நண்பர்கள்

1

Posted on : Monday, September 06, 2010 | By : ஜெயராஜன் | In :

இரண்டு நண்பர்கள்  ஒரு சாலையின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் ஒரு பை கிடந்தது அதை ஒருவன் எடுத்துப் பார்த்ததில் பணம் இருந்தது.மற்றவன் சொன்னான்,''நமக்கு நல்ல யோகம் இன்று எதிர் பாராத  விதமாக நமக்குப் பணம் கிடைத்துள்ளது.''முதல்வன் சொன்னான்,''நமக்கு என்று சொல்லாதே.எனக்கு என்று சொல் நான் தானே பையை எடுத்தேன்.''சிறிது தூரம் சென்றவுடன் ஒருவன் ஒருவன் ஒரு காவலரைக் கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.அவன் தான் பையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டு,''நமக்கு பிரச்சினை வரும்போல் இருக்கிறதே,''என்றான் பையை எடுத்தவன் நண்பன் சொன்னான்,''நமக்கு என்று சொல்லாதே.உனக்கு என்று சொல்,''
பிறர்க்கு  உதவி  செய்யாதவர்கள் பிறர் உதவியை எதிர் பார்க்க முடியாது.

என்ன சந்தேகம்?

0

Posted on : Sunday, September 05, 2010 | By : ஜெயராஜன் | In :

நூறு வயது முடிந்த ஒருவருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடந்தது.விழாவுக்கு வந்திருந்த ஒரு செய்தித் தாளின் நிருபர் அவரிடம் நூறு வயது வரை உற்சாகத்துடனும்,உடல் நலத்துடனும் அவர் இருப்பதற்கான காரணங்களைக் கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொண்டார்.பிறகு அவரிடம் விடை பெறும்போது,  ''அடுத்த தங்களின் நூற்றியோராவது பிறந்த நாள் விழாவிலும் நான் தங்களை  சந்திப்பேன் என நம்புகிறேன்,''என்றார்.அந்தக் கிழவர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''தங்களுக்கு இப்போது முப்பது வயது தானே இருக்கும்.அதற்குள் என்ன சந்தேகம் உங்களுக்கு வந்தது,நீங்கள் என்னை அடுத்த வருடம் வந்து பார்ப்பதில்?''

ராங் நம்பர்

0

Posted on : Sunday, September 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு அலுவலக மேலாளர் தன மனைவியிடம் டெலிபோனில்,''இன்றிரவு  நமது வீட்டுக்கு எனது மூன்று நண்பர்களை விருந்து சாப்பிட அழைக்கலாம் என்றிருக்கிறேன்.சமையல் சிறப்பாக இருக்க வேண்டும்.உனக்கு சம்மதம் என்றால் அவர்களை அழைக்கிறேன்,''என்றார்.''ஆஹா!தாராளமாய் அழைத்து வாருங்கள்.இதற்கு என்னைக் கேட்க வேண்டுமா?எனக்கு முழு சம்மதம். வெஜிடேரியனா,நான்வெஜிடேரியனா?சொல்லுங்கள் பாயாசமும் வைத்து விடுகிறேன்,''என்று டெலிபோனில் ஒரு அன்புக்குரல் ஒலித்தது.உடனே மேலாளர்,''சாரி,ராங் நம்பர்,''என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

ஏற்பாடு

0

Posted on : Sunday, September 05, 2010 | By : ஜெயராஜன் | In :

சந்நியாசி ஒருவரைத் தேடி இளைஞன் ஒருவன் வந்தான்.சந்நியாசி அவனைக் கேட்டார்,''இந்த வயதில் ஒரு சந்நியாசியைத்  தேடி வர வேண்டிய அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை அப்பா?''இளைஞன் சொன்னான்,''நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.நாளை என் கல்லூரியில் ஒரு மாறு வேடப் போட்டி நடக்கவிருக்கிறது.அதில் சந்நியாசி வேடம் போடலாமென நினைத்து உங்கள் உடைகளை இரவல் வாங்கிச் செல்லலாம் என வந்தேன்.''சந்நியாசி உடனே சொன்னார்,''உடைகள் மட்டும் என்ன?என் தாடியையும் தருகிறேன்.''என்று சொல்லிக்கொண்டே தாடியையும் உருவினார்.அவர் வேறு யாருமல்ல.அந்த இளைஞனின் நண்பன் தான்.தான் சந்நியாசி வேடம் போட  யாரிடமோ அந்த உடைகளை வாங்கிப் போட்டுப்  பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான்.

எல்லாம் ஒன்றுதான்.

0

Posted on : Friday, September 03, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான் ஆனால் மறந்தும் கூட அதிலிருந்து ஏதேனும் எடுத்து செலவு செய்ய மாட்டான்.அவன் அடிக்கடி அங்கு சென்று வருவதை ஒரு திருடன் கவனித்து ஒரு நாள் அவன் பின்னாலேயே சென்று அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான்.ஒரு நாள் இரவு அங்கு சென்று பணத்தை எல்லாம் எடுத்துச்சென்று விட்டான்.மறுநாள்  கஞ்சன் பார்த்தபோது பணம் காணவில்லை என்றதும்,வாயிலும் வயிற்றிலும் அடித்தக் கொண்டு கதறினான்.அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன்,''நண்பா,வருந்தாதே,பணம் அங்கு இருந்தாலும் நீ அதை செலவிடப் போவதில்லை.எனவே பணம் அங்கே இருந்தாலும் ஒன்றுதான்:இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.ஒன்று செய்.நீ பணம் வைத்த இடத்திலேயே  அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக்கொள்.வீணே வருத்தப்படாதே.''என்றான்.
ஒரு பொருளை உபயோகிக்காவிடில் அது இருந்தாலும் ஒன்றுதான்;இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

மன நிம்மதி

0

Posted on : Friday, September 03, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெரிய பணக்காரன்.அவனுக்கோ மனதில்  திருப்தியும் அமைதியும் இல்லை.பணத்தால் அடையக்கூடிய சுகமெல்லாம் அடைந்த பின்னும் அவனுக்குள் ஒரு வெற்றிடம்.தன் செல்வமனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து அங்கு வந்த ஒரு ஞானியைப்  போய்ப் பார்த்தான்.அவரிடம்,''சுவாமி,இந்த என்னுடைய சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்.எனக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தாருங்கள். ஞானி சிரித்தார்.அடுத்த கணம் அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட  ஆரம்பித்தார்.செல்வந்தனுக்கோ பயங்கர அதிர்ச்சி.வாழ் நாள் முழுவதும் தேடிய சொத்தை ஒரு போலிச் சாமியாரிடம் கொடுத்து ஏமாந்து போய் விட்டோமே என்ற கவலையுடன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான். ஞானி எங்கெங்கோ சுற்றி ஓடி விட்டு மீண்டும் முதலில் இருந்த இடத்துக்கே திரும்ப வந்தார்.பணக்காரனும் மூச்சிரைக்க பின்னாலேய அங்கு வந்து சேர்ந்தான்.ஞானி அந்தப் பெட்டியை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.பணம் திரும்பக் கிடைத்ததில் நிம்மதி.இப்போது ஞானி அவனிடம் சொன்னார்,''இங்கே நீ வருமுன் இந்த பெட்டி உன்னிடம் தான் இருந்தது.அப்போது அதிலிருந்த செல்வத்தால் உனக்கு மகிழ்ச்சி இல்லை.அதே பெட்டி தான் உன்னிடம் இப்போது இருக்கிறது.ஆனால் உன் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி:நிம்மதி.மகிழ்ச்சியும் நிம்மதியும் வெளியில் இல்லை நம்மிடம் தான் உள்ளது.''

கமால்

0

Posted on : Thursday, September 02, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை கபீர்,தன மகனிடம்,மாடுகளுக்குத் தீனி வைக்கப் புல் வெட்டிக் கொண்டுவரப் பணித்தார்.போனவன் வெகு நேரமாகியும் திரும்ப வராததால் தேடிச்சென்றார்.புல் வெளி நடுவே அவர் மகன்ஆடிக் கொண்டிருந்தார்.அங்கே சிலு சிலுவெனக்  காற்று வீசிக் கொண்டிருக்க புற்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன.அவற்றுக்கு இணையாக அவர் மகனும் அசைந்தாடிக் கொண்டிருந்தார்.கபீர்,''என்ன செய்து கொண்டிருக்கிறாய்,இங்கே?''என்று வினவ அவரது மகன்,''நான் இங்கே வந்தபோது இந்தப் புற்கள் ஏகாந்தமாக ஆடிக் கொண்டிருந்தன.சட்டென்று ஒரு ஆனந்தம்என்னையும் தொற்றிக் கொண்டது.நானும் அவற்றுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்து விட்டேன்.ஆஹா,என்ன ஆனந்தம் அது!''என்றார்.கபீர்,''புல்லை வெட்டி எடுத்து வரச் சொன்னேனே?''என்று கேட்க,''என்னது?புல்லை வெட்டுவதா?என்னால் ஒருபோதும் முடியாது.ஆனந்தம் எனக்களித்த இவற்றுடன் எனக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டு விட்டது.என்னால் இவற்றைக் கிள்ளக் கூட முடியாது.''என்றார் மகன்.பிரமித்துப்போன கபீர்,மிகுந்த மகிழ்ச்சியில்,''கமால்''என்றார்.கமால் என்றால் அற்புதம் என்று பொருள்.அதன்பின் அவர் கமால் என்றே அழைக்கப்பட்டார்.

ஆலோசனை

0

Posted on : Thursday, September 02, 2010 | By : ஜெயராஜன் | In :

நம்மிடம் ஆலோசனை கேட்கப் பலர் வருவார்கள்.அவர்கள் எல்லோருமே நம்மை உயர்வாக மதித்து,நாம் கூறும் ஆலோசனைகளை அப்படியே  எடுத்துக்  கொண்டு அதன் படி செயல்பட வேண்டும் என்ன்ற எண்ணத்துடன் வருவார்கள் என்று நாம் நினைத்தால் அது மாபெரும் தவறு.அவர்களில் பெரும்பாலோர் தாம் எடுத்த முடிவு சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வருகிறார்களே தவிர,நம்முடைய ஆலோசனையை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாட அல்ல.அவர்களுடைய சிந்தனையில் என்ன இருக்கிறதோ அதையே நாம் சொன்னால்,''நீங்கள் சொல்வது தான் சரி,''என்பார்கள்.அவர்கள் நினைத்ததற்கு நேர் மாறானஆலோசனையை நாம்  சொன்னால் ,''இவரிடம் போய்க் கேட்டேன் பார்,''என்று மனதில் நினைத்துக் கொண்டு அதன் பின் நம் பக்கம் தலை காட்டக்கூட மாட்டார்கள். எனவே யாராவது ஆலோசனை கேட்டு வந்தால்,அவர்கள் முகக் குறிப்பு அறிந்து,''அட,உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன்,''என்று சொல்லலாம்.அதற்கு மேல் அவர்கள் வற்புறுத்திக் கேட்டால்,நம் கருத்தை சொல்லிவிட்டு,''உங்கள் பிரச்சினைக்கு பல தீர்வுகள் உள்ளன. எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்.நீங்கள் யோசித்து முடிவெடுங்கள்,''என்று சொல்லலாமே தவிர,நான் சொல்வது தான் ஒரே தீர்வு என்ற முறையில் பேசாதிருப்பது நல்லது.

இயல்பாக இரு

0

Posted on : Wednesday, September 01, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு குழந்தை நாள் முழுக்கக் கீழே விழுந்தாலும்,இயல்பாகவே எழுந்துவிடும். அது கீழே விழுந்ததைப்பற்றியே நினைக்காது.ஆனால்,அதைப்போல நீங்கள் விழுந்தால்,உங்களை மருத்துவ மனையில் தான் சந்திக்க வேண்டிவரும். ஏன்?  ஒரு குழந்தை கீழே விழும்போது அது இயல்பாக விழுகிறது.விழுதலில்  இருந்து சண்டை போட்டு தப்பிக்க நினைப்பதில்லை.அது அதன் போக்கிலேயே விழுகிறது.புவி ஈர்ப்புடன் போராடுவது இல்லை.ஒரு தலையணை எப்படி வெறுமே தரையில் விழுமோ,அப்படியே அது விழுகிறது.ஆனால்,நீங்கள் விழும்போது ஆரம்பத்திலேயே எதிர்க்கிறீர்கள்.உங்களுடைய எல்லா தசைகளும்,ஏன்,உங்கள் எலும்புகள் கூட இறுக்கம் அடைகின்றன.இப்படி இறுக்கமான தசைகள்,நரம்புகள் மற்றும் எலும்புகள் கூட்டாக விழும்போது விரும்பத்தாகாத பல உடைவுகள் உங்கள் உடலிலஎற்படுகின்றன.அதேபோல,ஒரு குடிகாரன் கீழே விழும்போது  பார்த்திருக்கிறீர்களா?அவன் எந்த விதப் போராட்டமும் இல்லாமல், முழுமையாக விழுவான்.அவனுக்கும் ஒன்றும் ஆகியிருக்காது.முக்கியமாக,அவன் போராடும் மன நிலையில் இல்லை.இது தான் காரணம்.காலையில்,அவன் மிக இயல்பாக ,சாதாரணமாக எழுந்து நடப்பான்.அவன் உடலில் உடைவோ வலியோ இருக்காது.

விடுகதை

0

Posted on : Wednesday, September 01, 2010 | By : ஜெயராஜன் | In :

ஔவையாரை அவமதிக்க நினைத்த கம்பர்,அவரிடம் ஒரு விடுகதை போடும் சாக்கில்,'அடி' என்று அழைக்கிறார்.அது,'ஒரு காலில் நாலிலைப் பந்தலடி'என்பதாகும்.அதாவது,'நாலு இலைகளைப் பந்தலாகவும் ஒரு கம்பத்தை அடிக்காலாகவும் உடையது எது?'என்பது விடுகதை.
ஔவையார் என்ன சாதாரணமான புலவரா?அவர் அதற்கு பதில் சொல்லுமுகத்தான் கம்பரை,'அடா'என்று அழைக்க விரும்பினார்.
எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே-முட்டமேல்
கூரையில்ல வீடே,குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது?
அவலட்சணமே!எமன் ஏறி வருகின்ற எருமைக்கடாவே!மூதேவியே!கழுதையே!கூரையில்லாகுட்டிசுவரே!
குரங்கே!உன் விடுகதைக்கு பதில்,''ஆரைக்கீரையடா!''என்று கொட்டித் தீர்த்தார்.கம்பர் ஒரு முறை அடி என்று அவமதித்ததற்கு எத்தனை பெரிய அவமதிப்பு?எப்படியோ,அவ்விருவருக்கும் இடையில் இருந்த பிரச்சினை நமக்கு ஒரு நல்ல பாடலைக் கொடுத்துள்ளது.