உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஊழல்

0

Posted on : Saturday, July 31, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாட்டின் அமைச்சர் பக்கத்து நாட்டு அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.அங்கு அவருக்குக் கிடைத்த ஆடம்பரமான வரவேற்பைப் பார்த்து அதிசயித்து,அந்த அமைச்சரால் தனிப்பட்ட முறையில் எப்படி அவ்வாறு செலவழிக்க முடிகிறது என்று கேட்டார்.அவர் ஜன்னலைத் திறந்து ஒரு பாலத்தைக் காட்டினார்.அதில் தனக்கு பத்து சதவீதம் என்றார்.
அடுத்த வருடம் இந்த அமைச்சர் பக்கத்து நாட்டுக்காரரை தன் சொந்த விருந்தாளியாக அழைத்ததன் பேரில் அவரும் வந்தார்.இவர் கொடுத்த வரவேற்பைப் பார்த்து அவர் கதி கலங்கி விட்டார்.அவர் முகக்  குறிப்பறிந்து, ,இவரும் ஜன்னலைத் திறந்து,''அதோ  பாலம்  தெரிகிறதா ?''எனக்  கேட்டார். அவர் பார்த்துவிட்டு,'கண் பார்வை தெரியும் தூரம் வரை பாலம் ஒன்றையும் காணவில்லையே?'எனக் கேட்டார்.சிரித்துக் கொண்டே அமைச்சர் சொன்னார்,''ஆமாம்,எனக்கு நூறு சதவீதம்.'

தியானம்

0

Posted on : Friday, July 30, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண்மணி தன்   தோழியிடம் சொன்னாள்,''இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா  இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில் சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.''தோழி சொன்னாள்,'விபரம் தெரியாமல் பேசாதே.தியானம் என்பதே சும்மா இருப்பதுதான்.உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான்.இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான்.அவ்வளவு தான் வித்தியாசம்.'

வாதத் திறமை

0

Posted on : Friday, July 30, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பிரபலமான வக்கீல்,வாதத் திறமை மிக்கவர்.அவர் ஒரு பெரும் பணக்காரருக்காக  ஒரு கேசில் ஆஜரானார்.இந்த வக்கீல் பெரும் குடிகாரர்.பணக்காரரின் கேஸ் கோர்ட்டில் இறுதிக் கட்டத்துக்கு வந்தது.அன்று வக்கீல் தன் வாதத் திறமையைக் காட்ட வேண்டிய நாள்.ஆனால் முந்திய இரவு மிக அதிகமாகக் குடித்திருந்ததால் கோர்ட்டிற்கு தள்ளாடிக் கொண்டே வந்தார்.குடி வெறியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல்,வாதத்தின்போது அவர் பணக்காரருக்கு எதிரான வலுவான வாதங்களை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்.பணக்காரர் அழ ஆரம்பித்துவிட்டார்.வக்கீலின் உதவியாளர்கள் சைகைகள் மூலம் எவ்வளவோ சொல்லியும் வக்கீல் கண்டுகொள்ளவில்லை.மதிய உணவு இடைவேளை வந்தது.பணக்காரரும் வக்கீலின் உதவியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர்.அவருக்கு அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுவந்தது.நடந்த தவறைப் புரிந்து கொண்ட அவர்,பணக்காரரிடம் ஒன்றும் பயப்பட வேண்டாம் எனக் கூறினார்.கோர்ட் மீண்டும் கூடியது.வக்கீல்வாதாட ஆரம்பித்தார்,''கணம் கோர்ட்டார் அவர்களே,காலையில் நான் உங்கள் முன் வைத்த விவாதங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய எதிர்த்தரப்பு வக்கீல் உங்கள் முன் வைக்கக்கூடிய வாதங்களாகும்.இப்போது நான் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும்.''என்றுகூறிவிட்டு ஆனித்தரமாக பணக்காரருக்கு சாதகமாக, காலையில் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் மாற்றுக் கருத்தை முன் வைத்தார்.அவர் வாதம் முடிந்தவுடன் நீதிபதி,எதிர்த்தரப்பு  வக்கீலை  அழைத்தார்.அவரோ,'நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் அவரே சொல்லி பதிலும் சொல்லிவிட்டார்.இதில் நான் பேசே என்ன இருக்கிறது?'என்று கூறி அமர்ந்துவிட்டார்.கேஸ் பணக்காரருக்கு சாதகமாக முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அச்சம்

0

Posted on : Thursday, July 29, 2010 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.அது நடந்து முடிந்து விட்டது.அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.அது நடந்து கொண்டே இருக்கிறது.அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?
''நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை.எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.  அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.அதைப்போல இறக்கும் போதும்,அதே உணர்வுடன் தான் இறப்பேன்,''என்று எண்ணுங்கள்.
மென்சியஸ் என்னும்  சீடன் தன குருவான கன்பூசியசிடம்,'இறந்த பிறகு என்ன நடக்கும்?'என்று கேட்டான்.அதற்கு அவர்,''இதற்குப்போய் உன் நேரத்தை வீணடிக்காதே.நீ கல்லறையில் படுத்திருக்கும்போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம்.இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்?''என்றார்.

மலரினும் அழகு

0

Posted on : Thursday, July 29, 2010 | By : ஜெயராஜன் | In :

ஹைக்கூ கவிஞர் பாஷோ,ஒரு வசந்த காலத்தில்,மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு மலைப் பிரதேசத்திற்குச் செல்ல நினைத்து,தன பயணத்தைத் துவங்கினார்.செலவுக்குத் தேவையான பணத்தையும் எடுத்தக் கொண்டார்.போகும் வழியில் ஒரு கிராமத்தில்,தன பெற்றோரை பக்தி சிரத்தையுடன் கவனித்துக்  கொள்ளும் ஒரு ஏழை விவசாய வீட்டுப் பெண்ணைப்பற்றிக் கேள்விப்பட்டார்..அவளுடைய  நடவடிக்கைகளை  நேரில் பார்த்து மிக  ஆனந்தம் அடைந்தார்.அந்தப் பெண்ணிடம் தான் கொண்டு வந்த பணம் அவ்வளவையும் கொடுத்துவிட்டார்.மலர்க் காட்சியைக் காணாது ஊருக்குத் திரும்பிய அவர் தன நண்பர்களிடம் சொன்னார்,''இந்த ஆண்டு மலர்களைக் காட்டிலும் இறைவனின் சிறந்த ஒரு படைப்பைக் கண்டேன்.''

என்ன விலை அழகே!

0

Posted on : Wednesday, July 28, 2010 | By : ஜெயராஜன் | In :

பெர்னாட்ஷா ஒரு நிகழ்ச்சியில் ஒரு அழகிய மங்கையை சந்தித்தார்.ஆயிரம் பவுண்ட் தொகையை அவளிடம் கொடுத்து,ஒரு நாள் இரவை அவருடன் கழிக்க முடியுமா எனக் கேட்டார்.அந்தப் பெண் உடனடியாக,''நான் திருமணமானவள்;மரியாதைக்குரியவள்.என்னிடமிப்படிக் கேட்பதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்?''என்று கோபப்பட்டாள்.ஷா உடனே பத்தாயிரம் பவுண்ட் தருவதாகச் சொன்னார்.அவள் இன்னும் கோபத்துடன்,தன கணவனைக் கூப்பிடுவேன் என்றாள்.''சரி,பத்து லட்சம் பவுண்ட் தருகிறேன் யாருக்கும் தெரியப்போவதில்ல.என்ன சொல்கிறாய்?''என்று கேட்டார் ஷா.அந்தப்பெண் யோசித்துவிட்டுத் தன சம்மதத்தைத் தெரிவித்தாள்.உடனே ஷா,''இப்போது நான் பத்து  பவுண்ட் தான் தருவேன் என்று சொன்னால் நீ என்ன செய்வாய்?''என்று கேலியாகக் கேட்டார்.அந்தப்பெண் சீற்றத்துடன்,''நீங்கள் என்னை அவமானப்படுத்துகிரீர்கள்.என்னை யார் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?''என்று வெடித்தாள்.ஷா,''அம்மணி நீங்கள் யார் என்பதை ஏற்கனவே நிர்ணயித்துவிட்டோம்.எவ்வளவு விலை என்பதைப் பற்றித்தான் இப்போது விவாதித்துக் கொண்டு இருக்கிறோம்.என்று அமைதியாகக் கூற அந்தப்பெண் தலை கவிழ்ந்து அங்கிருந்து சென்றாள்.

கண்ணதாசன்-2

0

Posted on : Wednesday, July 28, 2010 | By : ஜெயராஜன் | In :

உன் கையிலுள்ள ஒட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால்,உன் எதிர் காலம் காப்பாற்றப்படும்;ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்.
**********
ஒரு நடிகையின் கணவனாக இருப்பதில் உள்ள மதிப்பு என்ன?சிங்கம் மார்க் பிடியிலே சிங்கத்துக்கு என்ன மதிப்போ,அவ்வளவு மதிப்பு அவனுக்கும் உண்டு.பீடியை யார் பிடித்தால் என்ன,லேபல் சிங்கம் தானே!
**********
வெற்றியிலே நிதானம் போகிறது;அதோடு வெற்றியும் போய் விடுகிறது.
**********
தலைவர்கள் ஜனங்களை ஏமாற்றுவதற்குப் பெயர் ராஜதந்திரம்;ஜனங்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்குப் பெயர் ஜனநாயகம்.
**********
சருமம் பளபளப்பாக இருந்தால் உடம்பிலே நோய் இல்லை என்று பொருளல்ல.தட்டிக் கொடுப்பவர்கள் எல்லாம் அன்புள்ளவர்கள் என்றும்  பொருளல்ல.
**********
உலகத்திலுள்ள எல்லோரும் யோக்கியர்களே!எப்போது?தூங்கும் போது!
**********
இரண்டு பக்கமும் கூர்மையாய் உள்ள கத்தியை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்;எந்தப் பக்கமும் சேரக் கூடிய மனிதர்களிடம் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.
**********
அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்லும் போது இருக்கும் தைரியம் ,தனக்குத் தேவைப்படும் போது அடுத்தவனிடம் போய்விடுகிறது.
**********
பாத்திரத்தின் நிறமல்ல,பாலின் நிறம்;ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.
**********
விஷ்கியைக் குடித்தவன் தான் ஆட வேண்டும்;விஸ்கி பாட்டிலே ஆடக்கூடாது.நம்மைப் பிறர் தான் புகழ வேண்டும்,நாமே புகழக்கூடாது.
**********
குடித்திருப்பவரோடு  விவாதம்  செய்தால் ,உங்களில்  யார் குடித்திருப்பவர்  என்பது  தெரியாது
**********.

கருத்து

0

Posted on : Tuesday, July 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு விஷயம் குறித்துக் கருத்து சொல்வதில் மூன்று விதமான அணுகுமுறைகள் உள்ளன.அவை,தர்க்கம்,குதர்க்கம்,விதர்க்கம்.தர்க்கம் என்பது எது ஒன்றானாலும்,அதைப்பற்றித் தனக்கென ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்வது;குதர்க்கம் என்பதுஅந்தக் கருத்து சரியானதுதான் என்பதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போவது;விதர்க்கம் என்பது ஒரு பொருள் குறித்து,மாறுபட்ட கருத்துக்களைத் தானே அலசிப் பார்த்து,சரியானது எது என்று தானே கண்டு உணர்ந்து கொள்வது.

வெற்றியின் ரகசியம்

0

Posted on : Tuesday, July 27, 2010 | By : ஜெயராஜன் | In :

அலெக்சாண்டர் ஒரு முறை படையெடுப்பின் போது,பதினோரு நாளில் 3300  பர்லாங் தூரம் தன படைகளை அழைத்துச் சென்றிட வீரர்கள் அனைவரும் சோர்வடைந்தனர்.அதிலும் குடிக்க சிறிதும் தண்ணீரே இல்லாத சூழ்நிலையில் மிகவும் களைப்புற்று மேற்கொண்டு செல்ல விருப்பமில்லாதிருந்தனர்.அலெக்சாண்டருக்கு அவர்களை எப்படி சமாதானப்படுத்திக் கூட்டிச் செல்வது என்று யோசனை.அப்போது அவருடைய மெய்க்காப்பாளன் ஒருவன் எங்கிருந்தோ ஒரு குடுவையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.அவருக்கும் தாகம் அதிகம் இருந்ததால் குடிக்கலாம்என்று எண்ணியபோது சுற்றிலுமிருந்த வீர்களின் முகங்களைப் பார்த்தார்.அவர்கள் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே அவர் நீரைக் குடிக்காது  திரும்பக் கொடுத்தார்.எல்லோரும் வியப்புடன் அவரை பார்க்கையில் அவர் சொன்னார்,''நான் மட்டும் நீரை அருந்தினால் மற்றவர்கள் மனமுடைந்து விடுவர்.மேலும் அது நியாயமுமில்லை.''அவருடைய பெருந்தன்மையைக் கவனித்த வீரர்கள் உடனடியாக தங்கள் களைப்பையும் தாகத்தையும் பொருட்படுத்தாது,குதிரைகளில் ஏறிப் புறப்பட்டனர்.

பலசாலி

0

Posted on : Tuesday, July 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆமை ஒன்றை யானை மிதித்துச் சென்றது கனத்த ஓட்டின் காரணமாக ஆமை நசுங்கி விடவில்லை.ஆமை யானையிடம் சொன்னது,'நான் உன்னளவுக்கு பலசாலி',யானை ஏளனமாகச் சிரித்தது.ஆமை,யானையிடம் மலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மறுநாள் காலை வந்தால்,தான் பலசாலி என்பதை நிரூபிப்பதாகக் கூறியது.யானையும் ஒத்துக் கொண்டது.
ஆமை அடுத்து ஒரு நீர் யானையிடம் சென்றது.அதனிடமும் தான் அதற்கு இணையான பலசாலி என்றும் மறுநாள் காலை நீர் யானை அதன் குளத்தில் இருந்தால் நிரூபிப்பதாகக்  கூறியது.நீர் யானையும் சிரித்துக்கொண்டே சம்மதித்தது.
ஆமை நீண்ட ஒரு கயிறை தயார் செய்தது.மறுநாள் காலை அது நீர்யானையிடம் சென்று கயிறின் ஒரு முனையைக் கொடுத்துவிட்டு,தான் ரெடி என்று சொன்னவுடன் இழுக்குமாறு சொல்ல நீர்யானையும் சரிஎன்றது.பின் விரைவாக மலைக்கு சென்று யானையிடம் மறு  நுனியைக் கொடுத்துவிட்டு,தான் ரெடி என்று சொன்னவுடன் இழுக்கக் கேட்டுக் கொண்டது யானையும் ஒத்துக் கொண்டது.
பின் ஆமை இருவர் கண்ணிலும் படாத மையமான ஒரு இடத்தில் நின்று கொண்டு ரெடி என்றது.யானையும்,நீர்யானையும் கயிறை இழுக்க ஆரம்பித்தன.இரண்டும் சம பலம் உடையதானதால் நீண்ட நேரம் இழுத்தும் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.களைப்பினால் இரண்டும் கயிறை விட்டு விட்டன.இரண்டுமே அடுத்த முனையில் ஆமை தான் இருந்தது என்று நம்பி ஆமைக்கு தங்கள அளவுக்கு  பலம் இருப்பதை ஒத்துக் கொண்டன. அடுத்தவர்கள் உங்களுக்காகச் செய்யக்கூடிய காரியத்தை நீங்கள் செய்யாதீர்கள்.

இரட்டை வெற்றி

0

Posted on : Monday, July 26, 2010 | By : ஜெயராஜன் | In :

பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிளாரன்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் இருந்த ஒரு பெரிய பளிங்குக் கல்லில் சிலை ஒன்று வடித்துத் தருமாறு சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவை அந்த நகரத்தின்  மேயர் கேட்டுக் கொண்டார்.இளைய வயது  தாவூதுவின் சிற்பம் ஒன்றை அல்லும் பகலும் உழைத்து முடித்தார் ஏஞ்சலோ.இறுதி வேலை முடிந்தவுடன் மேயர் சிலையைப் பார்வையிட வந்தார்.அவர் ஏஞ்சலோவிடம், சிலையின் மூக்கு பெரிதாக இருப்பதாக, மிகத் தெரிந்தவர் போலக்  கூறினார்.பெரிய அச்சிலையின் நேர் கீழே நின்று பார்ப்பதால் மேயர் சரியான கோணத்திலிருந்து சிலையைப் பார்க்கவில்லை என்பதை ஏஞ்சலோ புரிந்து கொண்டார்.அனால் அவர் எதிர் வார்த்தை ஏதும் பேசாது,ஒரு உளியையும்,கொஞ்சம் பளிங்குத் தூளையும் கையில் எடுத்துக் கொண்டு,மேயரை மேலே  வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.மேயர்
மேலே வந்ததும் சிலைக்கு முன்னால் சில அடி தூரத்தில் நின்று கொண்டார். அவர் வந்ததைக் கவனித்த ஏஞ்சலோ ,உளியைக் கொண்டு சிலையின் மூக்குப் பகுதியில் லேசாகத் தட்டிக் கொண்டு,அதே சமயம் கையிலிருந்த பளிங்குத்தூள் மூக்குப் பகுதியிலிருந்து கீழே  விழச் செய்தார்.மேயரும்  அவர் மூக்குப் பகுதியை சீர்திருத்துவதால் தான் அந்தத் தூள் விழுகிறது என்று நம்பி மிகுந்த திருப்தி அடைந்தார்.ஆனால் ஏஞ்சலோ உண்மையில் ஒரு சிறு மாற்றமும் செய்யவில்லை.அவர் சூழ்நிலைக்கேற்றபடி நடந்து கொண்டதால் இருவருக்கும் திருப்தி;இருவருக்கும் வெற்றி.யாரும் மனம் புண்படவில்லை.

பெண்கள்

0

Posted on : Monday, July 26, 2010 | By : ஜெயராஜன் | In :

தமிழில் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்துக்கேற்ற பெயர்கள் உள்ளன.நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களின் பருவங்களை ஏழாகப் பிரித்திருக்கிறார்கள்.
ஐந்து வயது முதல் ஏழு வயது முடிய பேதைப் பருவம்
எட்டு முதல் பதினொன்று முடிய பெதும்பைப்  பருவம்..
பன்னிரெண்டும்,பதிமூன்றும் மங்கைப் பருவம்.
பதினான்கு முதல் பத்தொன்பது முடிய மடந்தை.
இருபது முதல் இருபத்தைந்து முடிய அரிவை.
இருபத்தாறு முதல் முப்பத்தொன்பது முடிய தெரிவைப் பருவம்.
நாற்பது முதல் பேரிளம்பெண்.

பைத்தியக்காரத்தனம்

0

Posted on : Sunday, July 25, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் கையில்லை என்று வருந்துகிறான்.கையுள்ளவன் பணமில்லை என்று வருந்துகிறான்.பணமுள்ளவன் ஆசைப்பட்டதை அனுபவிக்க நேரமில்லை என்று வருந்துகிறான்.இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில்வருந்துகிறார்கள்;வருத்திக்கொள்கிறார்கள்.இது பைத்தியக்காரத்தனம்.உங்களுக்கு ஜலதோஷம்.அது உங்களை முடக்கிப் போடாதவரை அதைப் பெரிது படுத்த மாட்டீர்கள்.அதற்காக உங்களுக்கு நோய் இல்லை என்று பொருள் இல்லை.படபடப்பு,பயம்,வக்கிரம்,கோபம் என்று எத்தனையோ பைத்தியக்காரத்தனங்களும் அப்படிப்பட்ட நோய்கள் தான்.அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் பலரும்,உண்மையில் அமைதியாக இல்லை.அவர்களுடைய பைத்தியக்காரத்தனம் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.அவ்வளவுதான் ஒரு குண்டூசி கொண்டு குத்தினால் போதும்;பட்டென்று வெடித்துவிடும்.இன்றைக்கு 90% பேர் தங்கள் பைத்தியக்காரத்தனம் வெளிப்படாது ஒளித்து வைக்கும் தந்திரம் என்னவெனத் தேடி அலைகிறார்கள்.அவற்றை மொத்தமாகக் களைவது தான் ஆரோக்கியம் என யோசிப்பதில்லை.நீங்கள் உங்களைப் போன்ற பைத்தியக்காரர்கள்  கூட்டத்தில் பாதுகாப்பாக உணர்கிறீர்கள்.
நீங்கள் கோபம் கொள்கிறீர்கள்.அதற்குப் பிறர்தான் காரணம் என நினைக்கிறீர்கள்.மன நலம் தவறிய ஒருவன் ஒரு கயிறு வைத்துத் தன்னைக் கட்டியிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு வருவோர் போவோரை,கயிற்றை வெட்டிவிடச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்களும் அப்படித்தான்.கோபம் என்ற தூணுடன் யாரும் உங்களைப் பிணைக்கவில்லை.தேவையற்றபல விசயங்களுடன் கற்பனைக் கயிற்றால் உங்களை நீங்களே பிணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.யாராவது வந்து நீங்கள் கற்பனையாகப் போட்ட விலங்கை வெட்டி விடுவார்கள் என்று எதிர் பார்த்திருந்தால் வாழ்நாள் முடிந்துவிடும்.
அசிங்கத்தை எடுத்துப் பூசிக் கொண்டால்,எங்கே போய் ஒளிந்து கொண்டாலும்,துர்நாற்றத்திலிருந்து தப்ப முடியாது.கோபம்,பொறாமை,சந்தேகம் போன்ற பல தவறான குணங்களுக்கு இடம் கொடுத்தால்,வேதனைகளில் இருந்து விடுபட முடியாது.

தாமரை

0

Posted on : Sunday, July 25, 2010 | By : ஜெயராஜன் | In :

தாமரைக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன.
ஆய்மலர்,அம்புயம்அரவிந்தம்,இண்டை,ராசியம்,கமலம்,திருமாலுந்தி,
முண்டகம்,செங்கோலகம் ,கஞ்சம்,சரோமுகம்,வாரிகம்,முரளி.பங்கஜம்.

என்ன சம்பந்தம்?

0

Posted on : Sunday, July 25, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சில பெயர்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை.
**சரித்திரப்  புகழ் பெற்ற நூற்றாண்டுப் போர்  116 ஆண்டுகள் நடந்தது.
**ரஷ்யர்கள் அக்டோபர் புரட்சியை நவம்பரில் கொண்டாடுகிறார்கள்.
**விமானத்தில்  இருக்கும் கறுப்புப் பெட்டியின் (black box ) நிறம் ஆரஞ்சு.
**சீன முள் பழம் நியூசிலாந்து நாட்டில் விளைகிறது.
**பனாமா தொப்பி ஈக்வடார் நாட்டில் தயாரிக்கப் படுகிறது.
**ஒட்டகத் தூரிகை (camel brush) அணில்  ரோமத்திலிருந்து  தயாரிக்கப்  படுகிறது **இந்தியன் இங்கின் (indiyan ank) தாயகம் சீனா..

முடி வெட்டலாமா?

2

Posted on : Sunday, July 25, 2010 | By : ஜெயராஜன் | In :

அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் ஒரு முறை அழுக்குத் தோற்றமுடைய நீக்ரோ  சிறுவன் ஒருவனை சந்தித்தார்.அவனிடம்,''உன் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தால் உனக்கு பத்து ரூபாய் தருகிறேன்,''என்றார்.அவனும் முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு வந்து பத்து ரூபாயைப் பெற்றுக் கொண்டான்.''இந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?''என்று ஐன்ஸ்டீன் கேட்க,பையன் சொன்னான்,'உங்களது தலை முடியை வெட்டிக் கொண்டு வந்தால்,இந்தப் பணத்தைத் தங்களுக்குத் தரலாம்என்று நினைக்கிறேன்.'

ஆராய்ச்சி

0

Posted on : Sunday, July 25, 2010 | By : ஜெயராஜன் | In :

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாத தாமஸ் ஆல்வா  எடிசன்,ஒரு  நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை.பாதியில்  அவர் அங்கிருந்து கிளம்பத் தீர்மானித்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர்,''மிஸ்டர் எடிசன்,தாங்கள் இப்போது என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.எடிசன் உடனே சொன்னார்,''இங்கிருந்து வெளியே செல்ல வழி எங்கிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்.''

மாற்று சிந்தனை.

0

Posted on : Saturday, July 24, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு அழகிய இளவரசியை மணக்க நடக்கவிருந்த போட்டியில் கலந்து கொள்ள நான்கு இளைஞர்கள் வந்திருந்தனர்.போட்டி இது தான்.''ஒரு பெரிய சதுரமான அறையில் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும்;நான்கு மூலைகளிலும்  முக்காலிகள்போடப்பட்டிருக்கும்.இளவரசி அறையின் மையத்தில் நிற்பாள்; முக்காலியில் நின்று கொண்டு ,கம்பளியை மிதிக்காமலும் ,தொடாமலும் இளவரசியின் கரத்தைப் பிடிக்க வேண்டும்.அவ்வாறு செய்பவர் இளவரசியை மணக்கத் தகுதி பெறுவார்.''எப்படிப் பார்த்தாலும் இளவரசிக்கும் அறையின் ஒவ்வொரு மூலைக்கும் உள்ள தூரத்தைப் பார்த்தால்,இது சாத்தியம் என்று தோன்றவில்லை.சிறிது நேரத்தில் மூவர் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டனர்.நாலாவது  ஆள் சிறிது நேரம் யோசித்து விட்டு,''இளவரசியே,நான் உன்னை மனப்பூர்வமாகக்  காதலிக்கிறேன்.,நீயும் என்னை விரும்பினால்,. ஓடி வந்து என் கரத்தைக் கைப்பற்று.''என்றான்.போட்டியின் விதிகளின்படி  போட்டியாளர் தானே கம்பளத்தை மிதிக்கவோ தொடவோ கூடாது இளவரசி மிதிக்கலாமே?மாற்றி யோசித்த இளவரசனின் புத்திக் கூர்மையை அறிந்து இளவரசியும் ஓடிச் சென்று அவன் கரம் பற்றினாள்.

பிரார்த்தனையின் பலன்

0

Posted on : Saturday, July 24, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஞானி ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கையிலே ஒரு பெண் ஓடி வந்து,தன குழந்தை உடல் நலமின்றி இருப்பதாகவும் ஞானி வந்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். ஞானியும் அவளது வீட்டிற்கு வந்து குழந்தையைக் குணப்படுத்த பிரார்த்தனையில் ஈடுபட்டார்.உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது.ஒருவன் ஞானியிடம் கேட்டான்,'மருந்தால் குணமாகாத குழந்தை உன் பிரார்த்தனையால் குணமாகி விடுமா?'ஞானி அவனிடம்,''உனக்கு ஒன்றும் தெரியாது. நீ ஒரு முட்டாள்.'' என்றார்.அவன் அந்த ஊரில் ஒரு பெரியஆள்.எல்லோருக்கும் முன்னால் ஞானி முட்டாள் என்று சொன்னவுடன் அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது.அவன் கோபத்துடன் திட்டிக் கொண்டே ஞானியை அடிக்கப் போனான்.ஞானி பொறுமையுடன் அவனை நோக்கி வந்து,''அப்பா,நான் சொன்ன சொல் உனக்குக் கோபத்தைவரவழைக்க முடியும் என்றால்,ஏன் என் பிரார்த்தனை இக்குழந்தையைக் காப்பாற்றக் கூடாது?''என்று கேட்டார்.அவன் முகத்தைத் தொங்க விட்டவாறு வெளியேறினான்.

கார்ப்ரேகர் எண்

0

Posted on : Friday, July 23, 2010 | By : ஜெயராஜன் | In :

தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை   6174         என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு   நிலையில் 6174     என்ற எண் வரும் இந்த எண்ணை கார்ப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.
உதாரணம்;
எடுத்துக்  கொண்ட  எண்கள்;8,7,9,6
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;9876
சிறிய எண்;6789
வித்தியாசம்;3087
மீதியில் வரும் நான்கு எண்கள்;. 3,0,8,7
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;8730
சிறிய எண்;  0378
வித்தியாசம்;8352
8,3,5,2,இவற்றின் பெரிய எண்;8532
சிறிய எண்;2358
வித்தியாசம்;6174
ஒரு  சில  எண்களுக்கு ஒரே  முறையிலும் ,வேறு  சில  எண்களுக்கு  நான்கைந்து  தடவைகளுக்குப்  பின்னும்  இந்த  6174  என்ற  எண்  வரும் .

ஹா!ஹா!

0

Posted on : Friday, July 23, 2010 | By : ஜெயராஜன் | In :

குட்டிப் பாம்பு தாய்ப் பாம்பிடம் கேட்டது,'அம்மா,நாம் கடித்தால் விஷமா?தாய் கேட்டது,''ஆமாம்,ஏன் கேட்கிறாய்?''குட்டி சொன்னது,'இல்லை நான் தெரியாமல் என் நாக்கைக் கடித்துக் கொண்டேன்.'
**********
வேலைக்காரன் முதலாளியிடம் சொன்னான்,''எனக்கு சம்பள உயர்வு வேண்டும்,மூன்று கடைக்காரர்கள் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்,'முதலாளி கேட்டார்,''யாரப்பா அந்த மூன்று பேர்?என்ன கேட்கிறார்கள்?''வேலைக்காரன் சொன்னான்,'பலசரக்குக் கடைக்காரர்,அரிசிக் கடைக்காரர்,காய்கறிக் கடைக்காரர்.அவர்கள் நான் தர வேண்டிய கடனைக் கேட்கிறார்கள்.'
**********
ஒரு பெண் காலில் செருப்பிலாத ஒரு சிறுவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டு,அவனை ஒரு கடைக்கு அழைத்து சென்று செருப்பு வாங்கிக் கொடுத்தாள்.சிறுவன் கேட்டான்,'நீங்கள் கடவுளா?'அந்தப்  பெண் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னாள்,''இல்லையப்பா,நான் அவருடைய பல குழந்தைகளில் ஒருத்தி.''சிறுவன் கூறினான்,'நான் அப்போதே நினைத்தேன்,நீங்கள் கடவுளாக இல்லாவிடில் அவருக்கு உறவாயிருப்பீர்கள் என்று.'
**********
பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு நேரம்.எல்லோரும் வரிசையில் வந்தனர்.ஒரு கூடையில் நிறைய ஆப்பிள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.முன் எச்சரிக்கையாய்.ஆசிரியர் ஒரு பலகையில்,'ஒருவர் ஒரு ஆப்பிள் மட்டும் எடுக்கவும்.கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.'என்று எழுதி வைத்திருந்தார்.சிறுவர்கள் ஆளுக்கொன்று எடுத்துச் சென்றார்கள்.கடைசியில் ஒரு பெரிய தட்டில் சாக்லேட்டுகள் வைக்கப் பட்டிருந்தன.ஒருவன் அடுத்தவனிடம் சொன்னான்,''உனக்கு வேண்டுமளவுக்கு சாக்லேட் எடுத்துக் கொள்.கடவுள் ஆப்பிளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.''
**********
ஒரு விருந்து நடக்க இருந்தது.எதிர் பார்த்ததற்கு மேல் அழையாமலே நிறையப் பேர் வந்திருந்தனர்.அவ்வளவு பேருக்கும் உணவு பத்தாது.என்ன செய்வது என்று ஏற்பாடு செய்தவர் யோசித்துக் கொண்டிருந்தார்.அவருடைய நண்பர் ,''நான் சரி செய்கிறேன்,''என்று சொல்லிவிட்டு கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டு,''இங்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் வந்திருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்,''என்றார்.ஒரு நாற்பது பேர் எழுந்து நின்றார்கள்.''அதே போல் பெண் வீட்டார் சார்பில் வந்திருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்,''என்று அவர் சொல்ல முப்பது பேர் எழுந்து நின்றார்கள்.பின்னர் அவர் சொன்னார்,''இப்போது எழுந்து நிற்பவர்கள் எல்லாம் தயவு செய்து வெளியே செல்லுங்கள்.ஏனெனில் இது இந்த வீட்டுக் குழந்தையின் பிறந்த நாள் விருந்து.''
**********
ஒரு கடைக்காரர் தன வாடிக்கையாளரிடம் கூறினார்,''இதோ நிற்கும் பையன் சரியான முட்டாள்.நான் அதை உங்களிடம் நிரூபிக்கிறேன்.வேடிக்கை பாருங்கள்,''என்றார்.பின்னர் அந்தப் பையனைக் கூப்பிட்டு,ஒரு கையில்  ஐந்து ரூபாய்  நாணயத்தையும் இன்னொரு கையில் இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு,''இதில் எது உனக்கு வேண்டு தம்பி,''என்று கேட்க அவன் இரண்டு ஒரு ரூபாய்  நாணயத்தை மகிழ்வுடன் எடுத்துக் கொண்டான்.கடைக்காரர் வெற்றிப் புன்னகையுடன் வாடிக்கையாளரைப் பார்த்தார்.
வாடிக்கையாளர் கடையை விட்டு சிறிது தூரம் சென்ற பின் அந்தப் பையன் எதிரில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு வந்தான்.அவனிடம் அவர் கேட்டார்,''ஏன் தம்பி ஐந்து ரூபாயை எடுத்தக் கொள்ளாமல் இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டாய்?''பையன் சொன்னான்,'எனக்கு எல்லாம் தெரியும்.ஏற்கனவே நான் பல முறை இதே போல இரண்டு ரூபாய் வாங்கியிருக்கிறேன்.நான் ஐந்து ரூபாயை எடுத்திருந்தால் இன்னொரு முறை இது போல செய்ய மாட்டார்.அப்போது எனக்கு நஷ்டம் தானே?'
**********

கண்ணோட்டம்

0

Posted on : Thursday, July 22, 2010 | By : ஜெயராஜன் | In :

உண்மைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன.இவை அவற்றை விளக்குவதைப் பொறுத்தே இருக்கிறது.ஒரே உண்மை ஆயிரத்தொரு விதத்தில் விளக்கிச் சொல்லப்படலாம்.அதைத்தான் நாம் எல்லோரும் செய்து கொண்டிருக்கிறோம்.இல்லாவிடில்,இத்தனை மதங்கள்,இத்தனை தத்துவங்கள்,கொள்கைகள் தேவையில்லையே?சில உண்மைகளை வேறு விதமாக மட்டுமல்ல,நேர் எதிரான வகையிலும் எடுத்துக் கூறப்படலாம்.
மகாவீரர் தன வாழ்நாள் முழுவதும் நிர்வாணமாக வாழ்ந்தார்.ஒருவர் சார்ந்து நிற்கக்கூடிய எந்தப் பொருளையும் அவர் பயன் படுத்தவில்லை.அவர் தன முடியைக் கரங்களாலே பிடுங்கி விடுவார்.அவர் குளிப்பதில்லை.அவரது கண்ணோட்டத்தின்படி குளிப்பது என்பது உடலை அலங்கரிப்பதாகும்.
இந்த மகாவீரரின் குணாதிசயங்களை சிக்மன்ட் பிராய்டின் கண்ணோட்டத்தில் பார்த்தால் மகாவீரர் ஒரு மனோ வியாதியஸ்தர்.நிர்வாணமாக இருப்பதும் முடியைப் பிடுங்கிக் கொள்வதும்,  குளிக்காமல் இருப்பதும் மன நோயாளியின் குணாதிசயங்கள்.மகாவீரர் இந்த வகையைச் சேர்ந்த மன நோயாளியா?உண்மை தனியாகப் பார்க்கப் படும்போது  அதில் மதிப்பீடுகள்  ஏதும் இல்லை.நீங்கள் அதைப் பற்றி எண்ணும்போது விளக்கங்கள் உருவாகின்றன.அவ்விளக்கங்கள் உங்கள் கண்ணோட்டத்தைப் பொறுத்து அமைகின்றன.அவற்றிற்கும் உண்மைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

கண்ணதாசன்

0

Posted on : Thursday, July 22, 2010 | By : ஜெயராஜன் | In :

அறிவாளிகளுக்கு அறிவு தான் அதிகம்.
முட்டாள்களுக்குத்தான் அனுபவம் அதிகம்.
**********
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
**********
அறிஞர்கள் அகப்பட்டால் விட மாட்டார்கள்.
திருடர்கள் விட்டால் அகப்பட மாட்டார்கள்.
**********
மனிதர்கள் பெரும் வெற்றிக்கு அவர்களே காரணம்.
தோல்விக்குத்தான் கடவுள் காரணம்.
இல்லை என்றால் அவர்களா தோல்வி அடைவார்கள்?
**********
சாதாரண மனிதன் புகழ் பெறத் துவங்கும்போது ,
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறத் தொடங்குகின்றன.
**********
காமம் என்பது எப்போது ஆரம்பமானது?
நிர்வாணமாக இருந்த மனிதன் ஆடை கட்டத் துவங்கியபோது.
**********
கஷ்டமான நேரத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் மரியாதை வருகிறது.
வழி தெரியாத நேரத்தில் ஒவ்வொரு யோசனையும் நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.
நீண்ட நாள் சிறையில் இருப்பவனுக்குக் கிழவி கூட அழகாகத் தெரிகிறாள்.
பல நாள் சாப்பிடாதவனுக்குக் கோதுமைக் கஞ்சியே அல்வா ஆகிறது.
கிடைக்கக் கூடாதவனுக்கு சிறிய பதவி கிடைத்தாலும் அவனே தெய்வமாகிவிட்டதாகக் கனவு காண்கிறான்.
**********
கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாயை வேண்டுமானாலும் எழுதலாம்.செய்யப்போவதில்லை என்று முடிவு கட்டி விட்டால் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.
**********
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன வேண்டும்?
எந்த விமரிசனத்தையும் தூக்கி எறிய வேண்டும்.
**********
சோழன் காலத்தில் யாரும் மின்சாரத்தைப் பற்றிப் பேசவில்லை.ஆகவே,
மின்சார யுகத்தில் சோழனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன?
**********

பலன் என்ன?

0

Posted on : Wednesday, July 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சுல்தானிடம் ஒரு அமைச்சர் முப்பது ஆண்டு காலமாகப் பணிபுரிந்து வந்தார்.நேர்மைக்கும் உண்மைக்கும் விஷ்வாசத்திற்கும் சான்றாகத்  திகழ்ந்தவர்.அவருடைய நேர்மையே  சக அமைச்சர்களிடம் அவர் மீது பொறாமையை உருவாக்கியது.அவர் மீது நம்பிக்கை அதிகம் வைத்திருந்த சுல்தானிடம் அடிக்கடி அவரைப்பற்றிப் புகார்கள் கூறிய வண்ணம் இருந்தனர்.இறுதியாக மன்னர் மனம் மாறி அமைச்சரை கொன்று விட முடிவு செய்தார் அந்த நாட்டில் மரண தண்டனை பெற்றவர்களை  ஒரு மைதானத்தில் விட்டு இருபது வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டு விடுவர்.நாய்களிடம் கடிபட்டு அவர்கள் அகோர ம்ரணம் அடைவர்.அமைச்சர் தன வீட்டுப் பிரச்சினைகளை முடிக்க பத்து நாட்கள் அவகாசம் தருமாறு வேண்டிக்கொண்டார்.தான் எங்கும் தப்பி ஓடமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிக் கொண்டு அனுமதித்தார்.சுல்தான்.
நேரே வீட்டிற்கு சென்ற அமைச்சர் நூறு தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு அந்த இருபது வேட்டை நாய்களை வளர்க்கும் பொறுப்பு உள்ளவரை  பார்த்து அவரிடம் கொடுத்து விட்டு அந்த நாய்களைப் பத்து நாட்கள் தானே பார்த்துக்கொள்ள அனுமதி வேண்டினார்.அவனும் மகிழ்வுடன் ஒத்துக் கொண்டான்.பத்து நாட்களில் அவர் அந்த நாய்களை மிக நல்லபடியாக அன்புடன் கவனித்துக் கொண்டார்.வெறியோடு முதலில் பாய்ந்த நாய்கள் பத்தாம் நாள் அவர் கையாலேயே உணவு சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டன.பதினோராம் நாள் அமைச்சர் மன்னனிடம் சென்று மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்று கூறினார்.அரசன் ஆணையிட அமைச்சரும் அந்த மைதானத்தில் தள்ளப்பட்டு நாய்களும் அவிழ்த்து விடப் பட்டன. பாய்ந்து வந்த நாய்கள் அவரைக் கண்டவுடன் அவரைச் சுற்றி அமைதியாக வாலை ஆட்டின. சுல்தானுக்கு ஆச்சரியம்.'இது எப்படி இயலும்?'என்று அமைச்சரைக் கேட்டார்.அவரும் நடந்ததைக் கூறி விட்டு,''இந்த விலங்குகளை நான் பத்து நாட்கள் தான் பார்த்துக் கொண்டேன்.அதன் பலன் என்ன என்பதை சுல்தான் நேரிலேயே பார்த்தீர்கள்.முப்பது ஆண்டு காலம் உங்களுக்கு நேர்மையாய் சேவை புரிந்ததற்கு என்ன பலன் என்பது இனிமேல் தான் தெரியும்.''என்றார்.அரசன் வெட்கித் தலை குனிந்தான்.அவன் அவரை மன்னித்ததுடன் அவரைப் பற்றி குறை சொன்னவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அவரிடமே ஒப்படைத்தார்.அமைச்சரோ அவர்களையும் மன்னித்து அவர்களிடமும் அன்பு பாராட்டி வந்தார்.

நல்லுபதேசம்

0

Posted on : Wednesday, July 21, 2010 | By : ஜெயராஜன் | In :

நோபல் பரிசு பெற்ற ஒருவரை வரவேற்பதற்காக சிகாகோ ரயில் நிலையத்தில் ஏராளமான தலைவர்களும் அதிகாரிகளும் புகைப்படக் காரர்களும் குழுமியிருந்தனர்.ரயில் வந்து நின்றவுடன் விருது பெற்றவர் வண்டியிலிருந்து இறங்கினார்.அவரோடு கை குலுக்கவும் அவரைப் பாராட்டுவதாகக் காட்டிக் கொள்ளவும் பலர் போட்டியிட்டனர்.புகைப்பட விளக்குகள் மிளிர்ந்த வண்ணமாய் இருந்தன.எல்லோருடைய கவனமும் அவர் மீது இருக்க அவர் கவனம் மட்டும்,தன சுமைகளைத்  தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் பக்கம்இருந்தது.அவர் விரைந்து சென்று அந்த மூதாட்டியின்  சுமைகளைத் தூக்கி அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டுப்  பின்கூடியிருந்தவர்கள் அருகில் வந்து அவர்களுக்குத் தன நன்றியைத் தெரிவித்தார்.அவர்களை சிறிது காக்க வைக்க நேரிட்டதற்காக மன்னிப்பு கோரினார்.இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார்,''ஒரு நல்லுபதேசம் உயிருடன் நடந்து செல்வதை என் வாழ்வில் இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.''
அந்த நல்ல மனிதரின் பெயர் டாக்டர் ஆல்பர்ட் ஷ்வெய்த்சர்

மௌனம்

0

Posted on : Tuesday, July 20, 2010 | By : ஜெயராஜன் | In :

எப்போதும் செய்தித் தாள்களுக்கு பேட்டி கொடுக்க விரும்பாத வினோபாஜி ஒரு முறை அனைவரின் வற்புறுத்தலுக்காக ஒத்துக் கொண்டார்.நிருபர்கள் முன் வினோபாஜி வந்தவுடன்,'தங்களுக்குப் பிடித்த மொழியில் நீங்கள் பேட்டி
அளிக்கலாம்' என அவர்கள் சொன்னார்கள்.உடனே வினோபாஜி,''எனக்குப் பிடித்த மொழி மௌனம் தான்,''என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்டார்.

கோமாளிகள்

0

Posted on : Tuesday, July 20, 2010 | By : ஜெயராஜன் | In :

உலகில் நாம் கோமாளிகளாகக் காட்சி அளிக்கக் காரணம் என்ன?அடிப்படையான பிழைப்பு க்குக்கூட நம்மை நம்புவதைக் குறைத்துக் கொண்டு கடவுளை நம்பி இருப்பது தான்.இந்த உலகில் தங்கள் தேவைகளைப் பெற மண்புழு முதல் யானைவரை தங்கள் திறமையைத் தான் நம்பி இருக்கின்றன.ஆனால் புத்திசாலியான மனிதன் மட்டும் தனக்குத் தேவையானதைக் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.உழைக்காமல் சாப்பிடவும்,படிக்காமல் தேர்வடையவும்,உங்கள் தவறுகள் கவனிக்கப் படாமல் போகவும் கடவுளைத் துணையிருக்க வேண்டுகிறீர்கள்.வாழ்க்கை திடுமெனப் புரண்டு விட்டால் என்ன செய்வது என்று கடவுளைத் துணையிருக்கச் சொல்கிறீர்கள்.கோவில் கோவிலாக அதற்கான  பிரிமியம் கட்டுகிறீர்கள்.
வாழ்க்கை பற்றிய அச்சம் மட்டும் கடவுளைப் பற்றிய நம்பிக்கையை வளர்த்திருந்தால் உங்களிடம் தெய்வமும் தங்காது.வாழ்க்கையும் மிஞ்சாது.சந்தேகம் இருக்கும் மனதில் பக்தி நிகழ்வதில்லை.கடவுளிடம் பணிவது போன்ற பாசாங்கு தான் நிகழ்கிறது.பக்தி என்பது உங்கள் அடையாளங்களை இழந்து எதன் மீது பக்தி கொண்டீர்களோ,அதனுடன் இரண்டறக் கலப்பதுதான்.
உங்கள் தவறுகளுக்கான பழியை ஏற்றுக் கொள்ள சக மனிதர்கள் தயாராக இல்லாதபோது,தெய்வச் செயல் என்று அவற்றைச் சுமத்த வசதியான தோள்கள் ஆகக்  கடவுளை வைத்திருக்கிறீர்கள்.அதன் பெயர் பக்தி இல்லை.உங்களின் வாழ்வைக் கடவுளின் உதவியைக் கோராமல் நீங்களாகவே வாழக் கற்றுக் கொண்டீர்களேயானால் உங்கள் வாழ்வு மேன்மை ஆகிவிடும்.

முஸ்லீம்

0

Posted on : Tuesday, July 20, 2010 | By : ஜெயராஜன் | In :

தமிழில் முஸ்லீம்களுக்கு பல பெயர்கள் உள்ளன.அவை பெரும்பாலும் காரணப் பெயர்களே.
அரேபியாவிலிருந்து மரக்கலங்களில்  வந்தவர்கள்  மரைக்காயர்  என்று  அழைக்கப்பட்டனர்
'இராவுத்'என்ற உருதுச் சொல்லுக்கு குதிரை வீரன் என்று பொருள்.முஸ்லீம்கள் அரேபியாவிலிருந்து குதிரைகளில் வந்ததால் 'இராவுத்தர்கள்'என்று அழைக்கப்பட்டனர்.
'லெப்பை'என்ற அரபுச் சொல்லுக்கு ஆசிரியர் என்று பொருள்.திருக்குர்ரான் சொல்லிக் கொடுத்தவர்கள்.லெப்பைகள் ஆனார்கள்.
துருக்கி நாட்டிலிருந்து வந்தவர்கள் துருக்கியர்.அதுவே மருவி துலுக்கர் ஆயிற்று.
'சகிபா'என்ற அரபுச் சொல்லுக்கு தோழன் என்று பொருள்.நபிகளின் தோழர்கள்,'சாஹிப்'என்று அழைக்கப்பட்டனர்.
பாயி என்ற ஹிந்திச் சொல்லுக்கு சகோதரன் என்று பொருள்.மத வேற்றுமை பாராத பிற மதத்தினர்,முஸ்லீம்களை பாயிஎன்று அழைக்க அது பாய் என்று மருவி விட்டது.

தைரியம்

0

Posted on : Monday, July 19, 2010 | By : ஜெயராஜன் | In :

வயது முதிர்ந்த விவசாயி ஒருவன் இருந்தான்.வாழ்வில் என்ன பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும் எப்போதும் மகிழ்வுடன் காணப்பட்டான்.ஒரு நாள் அவனுடைய நண்பன் கேட்டான்,'இவ்வளவு துன்பங்களுக்குப் பின்பும் தைரியமாக இருக்கிறாயே,அது எப்படி முடிகிறது?'சிரித்துக்கொண்டே விவசாயி சொன்னான்,''அது ஒன்றும் கஷ்டமில்லை.தவிர்க்க முடியாததுடன் எப்படி சமரசம் செய்து கொள்வது என்று தெரிந்து கொண்டால் போதும்.''
இயற்கை உன்னை நோக்கிக் கோடாரியை வீசும் போது உனக்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன.ஒன்று,கோடரியின் கைப்பிடியைப் பிடிப்பது;மற்றொண்டு கோடரியின் கூர் முனையைப் பிடிப்பது.பறந்து வரும் கோடரியின் கைப்பிடியைப் பிடித்து அதை நமக்குப் பயன் தரும் வகையில் உபயோகப்படுத்திக் கொள்வது தான் தைரியம்.

பீதி

0

Posted on : Monday, July 19, 2010 | By : ஜெயராஜன் | In :

ஹுய்த்ஷு  லியாங் நாட்டு பிரதம மந்திரியாக இருந்தார்.அவருக்குக் கிடைத்த தகவலின் படி சுவாங்க்தசு  அவர் பதவி மீது ஆசைப்பட்டு அவரை விலக்கிவிட்டு,தான் அப்பதவியில் இருக்க சதி செய்வதாக நம்பினார்.
சுவாங்க்தசு லியாங் நகருக்கு விஜயம் செய்த போது பிரதம மந்திரி,அவரைக் கைது செய்து வரக் காவலரை அனுப்பினார்.அவர்கள் இரவு பகலாக மூன்று நாட்கள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.இதற்கிடையே சுவாங்க்தசு தானாக  ஹுய்த்ஷு முன்  தோன்றி  அவரிடம்  சொன்னார் ,'' தெற்கே வாழும் புராண காலப் பறவை,அதன் பெயர் தீப்பறவை.அது முதுமை அடைவதேயில்லையாம்.அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?தெற்குக் கடலிருந்து எழுகின்ற இந்த மரணமில்லா தீப்பறவை வடக்குக் கடலுக்குப் பறக்கிறது.சில புனித மரங்களைத் தவிர வேறு எங்கும் அதுஎங்கும் இறங்குவதில்லை.அது எவ்வித உணவையும் தொடுவதில்லை.அபூர்வமான சில பழங்களை மட்டுமே உணவாக்கிக் கொள்கிறது.அது தூய்மையான நீரூற்றிலிருந்து வரும் நீரை மட்டும் பருகுகிறது.ஒரு முறை ஒரு ஆந்தை ஏற்கனவே அழுகிப் போன செத்த எலியைத் தின்று கொண்டிருக்கும்போது  அது தனக்கு மேலே பறந்து செல்லும் தீப்பறவையைக் கண்டவுடன் திடுக்கிட்டு பயந்து போய் கூக்குரலிட்டு தான் தின்று கொண்டிருந்த செத்த எலியை மிகவும் கெட்டியாக பிடித்துக் கொண்டதாம்.பிரதம மந்திரியே!நீங்களும் அந்த ஆந்தையைப் போல ஏன் இப்படிப் பயந்து உங்கள் மந்திரி பதவியைப் பிடித்துக்கொண்டு பீதியில் கூக்குரல் இடுகிறீர்கள்?''

எளிமை

0

Posted on : Monday, July 19, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு உட்கொள்ளுகிறான்.மிக மலிவான ஆடைகளையே அணிகிறான்.மரத்தடியில் வாழ்கிறான்.அவன் தன்னைத் துறவி என்றுஎண்ணிக் கொள்ளுகிறான்.ஆனால் அவன் பக்கம் ஒரு பணக்காரன் கடந்து செல்லும் போது,துறவிக்கு  அவன் மீது குறை காணும் இயல்பு தோன்றி,''இந்தப் பாவிக்கு என்ன நிகழப் போகிறதோ,இவனுக்கு நரகம் தான் கிடைக்கும்.,''என்று எண்ணி இரக்கப்படுகிறான்.இப்படி நினைத்தால் அந்தத் துறவி எளிமையானவரில்லை.ஏனெனில் அவர் மனதில் தான் உயர்ந்தவன்,அப்பணக்காரன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் வந்து விடுகிறது. எப்போதெல்லாம் வேற்றுமை வித்தியாசம்  வந்து விடுகிறதோ அங்கு தன முனைப்பு வந்து விடுகிறது.தன் முனைப்பு இல்லாததுதான் எளிமையாகும்.

மனசாட்சியின் கணம்

0

Posted on : Sunday, July 18, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு,தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்தது மூன்று பெரிய கற்களைத்  தூக்கிக்கொண்டு அவர் பின்னே வரச்சொல்லிப்  பணித்தார்.அவர் மலை ஏறத் துவங்கி விட்டார்.திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை.அதை ஞானியிடன் அவன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டுவிட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன்நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூற ஞானியும் இன்னொரு கல்லைக் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை மட்டுஎடுத்து வரச் சொன்னார்.மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள்.ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.அதைக் கண்ட ஞானியும் ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.மலை உச்சியை அடைந்தவுடன் ஞானி சொன்னார்,''நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும்.கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை.அதுபோல மனசாட்சியைக் கனமாக வைத்துக்கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும்  வாழ முடியாது.''

யாருக்காக அழ?

0

Posted on : Sunday, July 18, 2010 | By : ஜெயராஜன் | In :

குடியானவன் ஒருவன் தன அன்பு மனைவியுடன் ஒரு ஊரில் வசித்து வந்தான்.அவன் ஒரு ஞானி.நீண்ட நாள் கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
ஒரு நாள் குடியானவன் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போதுஅவனது நண்பன் ஒருவன் வந்து குடியானவனின் குழந்தைக்கு காலரா கண்டிருப்பதாக பதட்டத்துடன் வந்து சொன்னான்.குடியானவன் உடனே வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு விரைந்தான்.குழந்தை இறந்து விட்டது.அவன் மனைவி மற்றும் உறவினர்கள் தாங்கொணாத துயரத்துடன் கதறி அழுதனர்.ஆனால் குடியானவனின் முகத்தில் மட்டும் பாதிப்பு ஏதும் தெரியவில்லை.மற்றவர்களிடமும் அவன்,''வருந்தி என்ன ஆகப் போகிறது?வருத்தப்படாதீர்கள்,''என்று கூறினான்.அது மட்டுமல்ல;அவன் வயலுக்கு சென்று விட்ட வேலையைத் தொடர்ந்து முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பினான்.அப்போதும் அமைதியாக இருந்த அவனைக் கண்டு அழுது புலம்பிக் கொண்டே அவனைப் பார்த்து அவன் மனைவி ,'நீ ஒரு கல் நெஞ்சுக்காரன்.இதயமே இல்லாதவன்.மகன் இறந்ததற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் இருக்கிறாயே?'என்று திட்டினாள்.குடியானவன் சாவகாசமாக அமர்ந்துகொண்டு அமைதியாகப் பதில் சொன்னான்,''நேற்றைய இரவு நான் ஒரு புதுமையான கனவு கண்டேன்.அந்தக் கனவில் நான் ஒரு அரசனாகவும்,நீ அரசியாகவும் இருந்தோம் நமக்கு எட்டுக் குழந்தைகள்.நாம் மகிழ்ச்சியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தோம்.பிறகு தூக்கம் கலைந்து விட்டது. விழிப்பு வந்தது அந்த எட்டுக் குழந்தைகளில் ஒருவரைக்கூடக்  காணோம்.அரசாட்சியும் நமக்கில்லை என்று தெரிந்தது.பிறகு அது ஒரு கனவு என்று மட்டும் புரிந்தது.இப்போது என் எண்ணமெல்லாம்,அந்த நம்முடைய எட்டுக் குழந்தைகளுக்காக அழுவதா அல்லது இப்போது பறிகொடுத்திருக்கும் ஒரு குழந்தைக்காக அழுவதா என்பதுதான்.''
ஞானிகள் இறந்து போனவர்களைக் குறித்தோ இருப்பவர்களைக் குறித்தோ துன்பப் பட மாட்டார்கள்.
                                                     --பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன கதை.

பொன்மொழிகள்-11

0

Posted on : Friday, July 16, 2010 | By : ஜெயராஜன் | In :

நட்பு உடையக்கூடிய பொருள் அதைக் கவனத்துடன் கையாள வேண்டும்.
**********
முதுமைக்கு முன் இளமையையும்
நோய்க்கு முன் உடல் நலத்தையும்
வறுமைக்கு முன் செல்வத்தையும்
வேலையில் ஈடுபடுமுன் ஓய்வையும் 
மரணம் வருமுன் வாழ்க்கையையும்
அரிதாகக் கருதி நன்றாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
**********
ஒரு பணக்காரன் சொல்வதை பத்து ஏழைகள் சேர்ந்து மாற்றி விடலாம்.
இது ஜனநாயகத்தின் பலம்.
ஒரு அறிவாளி சொல்வதைப் பத்து முட்டாள்கள் சேர்ந்து மாற்றிவிடலாம்.
இது ஜனநாயகத்தின் பலவீனம்.
**********
விருப்பம் நிறைவேறாத போதுதான் ஒருவனின்உண்மையான குணம் வெளிப்படும்.
**********
நாம் பிறரிடம் கண்டு கேலி செய்யும் குற்றங்கள்,நமக்குள் நம்மையே கேலி செய்யும்.
**********
வன்மம் மிகுந்தவன் தன எதிரியை இழிவு செய்வதற்காக எவ்வளவு கீழான செயலையும் செய்யத் தயங்க மாட்டான்.
**********
ஆடு,'மே,மே,' என்று கத்தினால் அறுக்கிறவன் புத்தனாகிவிடுவானா?
**********
முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு;ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.
**********
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனின் பலவீனம்.
**********
அடக்கி வைக்கப்பட்ட கோபமே வெறுப்பு.
**********
துயரத்திற்கு ஒரே மாற்று மருந்து சாதனை தான்.
**********
சொல்லில் இங்கிதம் நாவன்மையை விடச் சிறந்தது.
**********
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
**********
நல்ல வரவேற்பு பாதி விருந்துக்கு சமம்.
**********
முகம் மனிதனின் ஓவியம்
கண்கள் அதன் தூதுவர்கள்.
**********
தவறு செய்வது மனிதத் தனம்.
அதன் பழியை மற்றவர் மீது சுமத்துவது மனித குணம்.
**********
கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.
**********

இறப்பு

0

Posted on : Friday, July 16, 2010 | By : ஜெயராஜன் | In :

சாக்ரடீஸ் இறக்கும் தருவாயில் சீடர்கள் இறுதிச்சடங்குகள் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தனர்.அவர்கள் அவரை நோக்கி,'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'என்று கேட்டனர்.அதற்கு சாக்ரடீஸ் சொன்னார்,''எதிரிகள் என்னைக் கொல்ல விஷம் தருகிறார்கள்.நீங்கள் என்னை எப்படிப் புதைக்கலாம் எனத் திட்டமிடுகிறீர்கள்.நீங்கள் இரு கூட்டத்தினருமே என் இறப்பிலேயே குறியாக இருக்கிறீர்கள்.யாருமே என்னைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.''
**********
சீன ஞானி லாவோத்சுவின் சீடர் சுவாங்க்தசு இறக்கும் தருவாயில் அவரது  சீடர்கள் ஒரு பிரமாண்டமான இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்..அவர்கள் சுவாங்க்தசுவிடம் சொன்னார்கள்,'காக்கைகளும் குருவிகளும் எங்கள் குருவின் உடலை உண்டு விடுமே என்று பயப்படுகிறோம்.' சுவாங்க்தசு பதிலளித்தார்,''பூமிக்கு மேலேஎன் உடல் இருந்தால் அது காக்கைகளாலும் பருந்துகளாலும் உண்ணப்படும்.பூமிக்குக் கீழே புதைத்தால்,எறும்புகளாலும் புழுக்க லாலும்  உண்ணப்படும்.இரண்டு விதத்திலும் என் உடல் உண்ணப்படும்.பிறகு ஏன் பரவைகளுக்காகப் பயப்படுகிறீர்கள்?''

நல்ல முடிவு

0

Posted on : Thursday, July 15, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு இளைஞனுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு ஒன்று வந்தது.அந்த   வேலை மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல என்ற காரணத்தால் அவனுக்கு அந்த வேலையை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டது.முடிவு சொல்ல ஒரு நாள் அவகாசம் கேட்டுவிட்டு தன் தாயிடம் கருத்துக் கேட்கச் சென்றான்.தாய் படிப்பு அறிவு இல்லாதவள்.அவன் சொன்ன முழு விபரங்களையும் கேட்டு விட்டு அவள் சொன்னாள்,''நீ சொன்ன விஷயங்கள் எதுவும் எனக்குப் புரியவில்லை.அனால் ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.ஒவ்வொரு நாள் காலையிலும் உன்னை நான் தூக்கத்திலிருந்து எழுப்ப வரும் போது நீ நிம்மதியாகத்  தூங்கிக் கொண்டிருப்பாய்.உன்னை எழுப்புவது பெரும்பாடு.அந்த நிலை தொடர வேண்டும்.நான் எழுப்ப வரும் போது நீ உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பதைக் காணநான் சகித்துக் கொள்ள . மாட்டேன்.இறுதி முடிவு எடுக்க வேண்டியது நீ தான்,''இதைச் சொல்லிவிட்டு  தாய் அங்கிருந்து வெளியேறினாள்.இளைஞன் தனக்குள் சொல்லிக் கொண்டான்,'எனக்கு நல்ல முடிவு கிடைத்துவிட்டது.'

சுமை

0

Posted on : Wednesday, July 14, 2010 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் உங்கள் அன்பைக் கூட ஒரு சுமையாக மாற்றிவிட்டால் நீங்கள் மகிழ்ச்சியாக  இருக்க முடியாது.உங்கள் காதலைக் கூட சுமையாக மாற்றிவிட்டால்,உங்கள் பிரார்த்தனையும் சுமையாகிவிடும்.உங்களுக்கு அன்பு இருந்தால் நீங்கள் எங்கே இருந்தாலும் அது சுமை இல்லை.நீங்கள் உங்கள் பிள்ளைகளை விட்டுப் பிரிந்திருந்தாலும்கூட அவர்கள் உங்கள் அன்பைப் புரிந்து கொள்வார்கள்.அவர்களை நேசிக்காமல் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தாலும் அதுபொய்யான விஷயம் என்பது அவர்களுக்குப் புரிந்துவிடும்.சிலர்,''நான் வாழ் நாள் முழுவதும் உழைத்துவிட்டேன்,ஆனால் ஒருவரும் நன்றியுடன் இல்லை,''என்பார்கள்.எப்படி இருப்பார்கள்?நீங்கள் அவர்களை ஒரு பாரம்போல சுமந்து வந்தீர்கள்.நீங்கள் அன்போடு செய்வதையும்,கடனுக்கு செய்வதையும் சிறு குழந்தை கூடப் புரிந்து கொள்ளும்.கடமை என்ற வார்த்தையே  அசிங்கமானது.வன்முறையானது.அது உங்கள் கவலையை,அக்கறையைக் காட்டுகிறது.ஆனால் உங்கள் இயல்பை,தன்னிச்சையான தனமையைக் காட்டவில்லை.

செய்த தவறு

0

Posted on : Wednesday, July 14, 2010 | By : ஜெயராஜன் | In :

செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தால் கூடப் பிரச்சினை வருமா என்ன?விடிந்தும் விடியாத அரை இருளில் அரண்மனை நந்தவனத்தில் அரசர் உலாவிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த அமைச்சர், மன்னரின் பின்புறத்தில் ஒரு தட்டு தட்டினார்.இருளில் கூர்ந்து கவனித்து,தட்டியது அமைச்சர் என்பதை அறிந்து கொண்ட மன்னர்,''என்னையே பின்னால் தட்டும் அளவிற்கு உமக்குத் தைரியம் வந்து விட்டதா?''என்று கேட்டார்.அமைச்சர் சொன்னார்,'மன்னிக்க வேண்டும்,மன்னரே,நான் இருளில் சரியாகக் கவனிக்கவில்லை.மகாராணி தான்உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து விட்டேன்.'அமைச்சரின் கதி என்ன ஆயிற்றோ!

ஓவியன்

0

Posted on : Wednesday, July 14, 2010 | By : ஜெயராஜன் | In :

அவன் பெண்களை நிர்வாணமாக வரையும் ஓவியன்.ஒரு நாள் வழக்கம் போல மாடல் பெண், உடைகளைக் களைய ஆரம்பித்தபோது அவன் சொன்னான்,''இன்று எனக்குத் தலைவலி.நான் ஓவியம் வரையப் போவதில்லை.சூடாகக் காபி மட்டும் போட்டுக் கொண்டு வா.''
காபி தயாரானதும் இருவரும் அருகருகே அமர்ந்து அருந்த ஆரம்பித்தனர்.அந்த நேரம் ஓவியரின் மனைவி  வரும் ஓசை கேட்டது. ஓவியன் உடனே பதட்டத்துடன்,''சரி,சரி,உடைகளைக் களைந்து விட்டு போஸ் கொடு.என் மனைவி இப்போதிருக்கும் நிலையில் நம்மைப் பார்த்தால் சந்தேகப் படுவாள்.''என்றான்.

கிணறா?

0

Posted on : Tuesday, July 13, 2010 | By : ஜெயராஜன் | In :

விஜயன் ஆபீசுக்குப் போன சிறிது நேரத்தில் வீட்டிற்கு போன் செய்தான்.வேறு பெண் குரல் கேட்டது.யார் பேசுவது என்று கேட்க புது வேலைக்காரி என்று பதில் வந்தது.
விஜயன் :சரி,சரி,அம்மா எங்கே?
வேலைக்காரி:யாரோ ஒருவர் கல்லூரி மாணவர் போல வந்தார்.அவர் தோல் மேல் கையைப் போட்டுக்கொண்டு படுக்கை அறைக்குப் போனார்கள்.
விஜயன்:ஒரு காரியம் செய் .உனக்கு லட்சம் ரூபாய் தருகிறேன்.
வேலைக்காரி:என்னங்க செய்யணும்?
விஜயன் :மேஜை டிராயரில் ஒரு துப்பாக்கி இருக்கும்.அதை எடுத்துக் கொண்டு போய் இருவரையும் குருவியைச் சுடுவது போலச்சுடு.
வேலைக்காரி: ஐயோ,எனக்கு சுடத் தெரியாதே?
விஜயன் :ரொம்ப சுலபம்.துப்பாக்கியின் கீழ் பகுதியில் ஒரு நாக்கு இருக்கும்.அதை இழு,படபடவெனக் குண்டு பாயும்.செய்வாயா?
வேலைக்காரி :சரிங்க...(சிறிது நேரம் கழித்து) ஐயா,ஐயா,சுட்டுட்டேனுங்க.இரண்டு பெரும் இறந்துட்டாங்க.இப்போ இரண்டு உடலையும் என்ன செய்வது?
\விஜயன் :சபாஷ்!நம் வீட்டின் பின் பக்கக் கிணற்றில் போட்டு விடு.
வேலைக்காரி :கிணறா?நம் வீடு நாலாவது மாடி பிளாட்டாச்சே?
விஜயன் :என்னது?இந்த வீட்டு போன் நம்பர்  847002 இல்லையா?

குடும்ப ரகசியம்

0

Posted on : Sunday, July 11, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆப்கானிஷ்தானத்தின் அரசன் ஒரு போருக்கு தயார் செய்து கொண்டிருந்தான்.தனக்கு மிகக் கூர்மையான கத்தி ஒன்று செய்யச் சொல்லி ஆணையிட்டான்.ஒருவன் ஒரு கத்தியைக்  கொண்டு வந்து காட்டி,'வானத்தில் ஒரு முடியை எறிந்து அது இறங்கும் போது இக்கத்தியால் அதை இரண்டாக வெட்ட முடியும் என்று கூறி அதை செயல் படுத்திக் காட்டினனான்.அரசனுக்கு திருப்தி.அப்போது அங்கு அருகிலிருந்த ஒரு கண் பார்வையற்றவர்,'இது போருக்குப்  பயனற்றது,'என்றார்.அரசன்,''நீயார்?இது பயனற்றது என்று உனக்கு எப்படித் தெரியும்?''என்று கேட்டான்.'இந்த கத்தி கொண்டு வரப்படும் போது தற்செயலாக என்னை உரசிச் சென்றது.உடனே இது உடையக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டேன்.'என்று பார்வையற்றவர் சொன்னார்.அரசன் அதை சோதித்துப் பார்க்கையில் அது உடைந்து விட்டது.''நல்ல வேலை என்னைக் காப்பாற்றினாய்.இந்தக் கத்தியை வைத்து நான் போரிட்டிருந்தால் நன் உயிரோடு திரும்பியிருக்க முடியாது.சரி,நீ சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?''என்று அரசன் கேட்க பார்வையற்றவரும் தான் பிச்சை எடுப்பதாகக் கூறினார்.உடனே அரசன்,''நாளையிலிருந்து சாப்பாட்டு நேரத்தில் அரண்மனைக்கு வா.உனக்கு இரண்டு சப்பாத்தி கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்,''என்று கூற பார்வையற்றவரும் நன்றி கூறிச் சென்று விட்டார்.
பின் போரில் அரசன் வெற்றி பெற்று வந்தான்.அந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனின் அழகான பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தான்.திருமணத்தின் போது அந்தப் பார்வையற்ற பிச்சைக்காரனையும் பார்த்தான்.அவரைத் தனியே அழைத்து,'' ,''இந்தத் திருமணம் பற்றி என்ன நினைக்கிறாய்?''என்று கேட்டான்.அவரும்,'சில நாட்களுக்கு முன் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த காவலர்கள் என்னை விரட்டினார்கள்.ஆனால் இந்தப் பெண் என்னை தோளைப் பிடித்து அழைத்துச் சென்று எனக்கு சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்தாள்.என்னைத் தொட்டபோது அவளைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.அவள் உனக்கு நல்ல மனைவியாக இருப்பாள்.அவள் உங்களுக்கு மட்டுமே ஏற்றவள்.வேறு எந்த அரசருக்கும் ஏற்றவளாக இருக்க முடியாது.'என்றார்.அரசனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
சில மாதங்களுக்குப் பின் அந்த பார்வையற்றவரை  அழைத்து வரச் சொல்லி,அவரிடம்,''அன்று என் மனைவி எனக்கு மட்டுமே பொருத்தமானவள் என்று சொன்னாயே,அது பற்றி விபரமாகச் சொல்,''என்றான்.'தங்கள் மனைவி சிறந்த பெண்;ஆனால் அவள் பணக்கார வீட்டுப்பெண் அல்ல.அவளுடைய தந்தை ஒரு சாதாரண நெசவாளி.'என்ற பதில் வந்தது.அரசனுக்கு அதிர்ச்சி.தீவிர விசாரணையில் அவன் மனைவி ஒரு நெசவாளியின் பெண் என்பதும் பணக்காரரால் ஸ்வீகாரம் எடுக்கப்பட்டவள் என்பதும் தெரிய வந்தது.
அரசன் மீண்டும் பார்வையற்றவரை வரவழைத்து,''என் மனைவி எனக்கு மட்டுமே பொருத்தமானவள் என்றும் வேறு யாருக்கும் பொருத்தமாக மாட்டாள் என்றும் சொன்னதற்குக் காரணம் என்ன?''என்று கேட்டார்.'நீங்களும் அரச குடும்பத்தில் வந்தவரல்ல.உங்கள் தந்தை ஒரு சாதாரண வியாபாரி,''என்றார்.அரசனுக்கு மீண்டும் அதிர்ச்சி.ரகசியமாய் விசாரித்ததில் அது உண்மை என்பது தெரிந்தது.அவன் பார்வையற்றவரிடம்,''இதுவரை நீ சொன்னதெல்லாம் உன் தொடு உணர்ச்சியினால் தான்.ஆனால் என்னை இதுவரை என்னைத் தொட்டதில்லை.எப்படி என்னைப் பற்றி சரியாகச் சொன்னாய்?''என்று கேட்டார்.'நம்முடைய வார்த்தைகளும்  செயல்களும் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும்.நான் தங்கள் உயிரைக் காப்பாற்றினேன்.அதற்கு எனக்கு என்ன பரிசு?தினமும் இரண்டு சப்பாத்தி.அரச பரம்பரையில் வந்த ஒருவரானால், உயிரைக் காப்பாற்றியதற்கு மிகப் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பார்.அதனால் நீங்கள் அரச குடும்பத்தில் பிறந்திருக்கமுடியாது;ஒரு வியாபாரியின் பையனாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.'என்று விளக்கினார் அந்த பார்வையற்றவர்.

தெளிவு

0

Posted on : Saturday, July 10, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நிறுவனத்தில் ஓய்வூதியத்  திட்டம் ஒன்றை செயல் படுத்த நினைத்தனர்.இந்தத் திட்டத்தை செயல்  படுத்த அனைத்து தொழிலாளர்களின் சம்மதமும் வேண்டும்.சம்மதம் தெரிவித்து ஜான் தவிர மற்ற அனைவரும் கையெழுத்திட்டு விட்டனர்.அது ஒரு நல்ல திட்டம்.ஆனால் ஜான் கையெழுத்து இடாததால் செயல் படுத்த முடியவில்லை.
அவனது சக நண்பர்களும்,மேற்பார்வையாளரும்,மேலாளரும் விளக்கிக் கூறியும் ஜான் ஏற்றுக் கொள்ளவில்லை.முதலாளிக்குத் தகவல் தெரிந்ததும் ஜானை  அவர் அறைக்கு வரச்செய்து,''ஜான்,இதோ  பேனா.ஓய்வூதியத்  திட்டத்திற்கான இந்தத் தாள்களில் கையெழுத்திடு.நீ மறுத்தால் உன்னை வேலையை விட்டு நீக்க வேண்டியிருக்கும்.''என்றார்.ஜான் உடனே கையெழுத்திட்டான்.முதலாளி,ஏன் முதலில் கையெழுத்தப் போடவில்லை என்று கேட்டார்.ஜான் சொன்னான்,''இந்தத் திட்டத்தைப் பற்றி தங்களைப் போல யாரும் விளக்கமாகச் சொல்லவில்லை,முதலாளி.''என்றான்.

வேலைக்காரன்

0

Posted on : Saturday, July 10, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆப்பிரிக்காவில் ஒரு கர்வம் மிகுந்த அரசன் இருந்தான்.ஒரு நாள் அரசவையில் அங்கிருந்த அனைவரையும் பார்த்து,''நான் தான் உலகின் அதிபதி.எல்லா மனிதரும் எனக்கு வேலைக்காரகளே,''என்றான்.'நீங்கள் சொல்வது தவறு.அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.அனைவருக்கும் அதிர்ச்சி.அரசன் கோபத்தில் வெடித்தான்,''என்னையும் வேலைக்காரன் என்று சொன்னது யார்?''கம்பை ஊன்றியபடி ஒரு வயதான மனிதன் முன்னால் வந்து,'நான்தான் சொன்னேன்.'என்றான்.நீயார் என்று அரசன் கேட்க,முதியவர் சொன்னார்,'நான் ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்.எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லை.ஒரு கிணறு தோண்ட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்ளவே இங்குவந்தேன்,'உடனே அரசன் ஏளனத்துடன் சொன்னான்,''அப்படியானால்,நீயே பிச்சை கேட்க வந்திருக்கிறாய்.ஆனால் என்னையும் வேலைக்காரன் என்று சொல்லும் அளவுக்கு உனக்குத்  திமிர்.''கிழவன் பயம் ஏதுமின்றி மீண்டும் சொன்னான்,'நாம் ஒருவருக்கொருவர் வேலை செய்கிறோம்.அதை என்னால் இப்போதே நிரூபிக்க முடியும்.'அரசன் சொன்னான்,''நீ மட்டும் அதை நிரூபித்து விட்டால் உன் ஊரில் ஒன்றல்ல,மூன்று கிணறு தோண்ட ஏற்பாடு செய்கிறேன்.''கிழவன் அமைதியாக''எங்கள் ஊரில் ஒரு பழக்கம் இருக்கிறது.ஒருவரின் சவாலை ஏற்றுக்கொள்ளும் போது,சவால் விட்டவரின் பாதத்தைத் தொட்டு வணங்க வேண்டும்.உங்கள் பாதத்தைத் தொட அனுமதியுங்கள்.''என்று கூறி அரசன் அனுமதித்ததும்,'இந்த ஊன்றுகோலை ஒரு நிமிடம் பிடியுங்கள்,'என்று கூற அரசனும் அதை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டான்.அரசனின் காலை வணங்கிவிட்டு,'இப்போது ஊன்று கோலைத் திரும்பக் கொடுங்கள்,'என்று சொல்ல அரசனும் அதைத் திரும்பக் கொடுத்தான்.உடனே கிழவன்,'இதைவிட என்னநிரூபணம் வேண்டும்?'என்று கேட்டான்.''என்ன நிரூபித்தாய்?''என்று அரசன் கேட்டான்.'இந்த ஊன்று கோலைப் பிடியுங்கள் என்றேன்.உடனே பிடித்துக் கொண்டீர்கள்.திரும்பக் கொடுங்கள் என்றேன்.உடனே திரும்பக் கொடுத்து விட்டீர்கள் .நான் சொன்ன மாதிரி நல்ல மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே,'என்றான் கிழவன்.அரசன் மிக்க மகிழ்ச்சியுடன் கிழவனின் ஊரில் மூன்று கிணறு தோண்ட ஆணையிட்டதோடு கிழவனையும் தன் ஆலோசகராக வைத்துக் கொண்டான்.

வினோத ஒலி

1

Posted on : Thursday, July 08, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதன் தன காரில்சென்று கொண்டிருக்கும் போது,இருட்டிவிட்டதால் அருகிலிருந்த புத்த மடாலயத்திற்கு சென்று இரவை அங்கு கழிக்கலாம் என்று கருதி,அங்கிருந்த புத்த பிக்குவை அணுகினான்.அவரும் அவனுக்கு நல்ல உணவளித்தார்.ஒரு நல்ல படுக்கை கொடுத்ததும் அவன் அலுப்பில் உடனே தூங்கி விட்டான்.நள்ளிரவில் ஒரு சப்தம் கேட்டதும் விழித்துக் கொண்டான்.அந்த சப்தம் அவனுடைய முதுகுத் தண்டை உறைய வைப்பதாக இருந்தது.சிறிது நேரம் கழித்து அந்த சப்தம் நின்று விட்டது.அதன் பின் அவனுக்கு தூக்கம் வரவில்லை.காலை எழுந்ததும்,அங்கிருந்த புத்த பிக்குகளிடம் அந்த வினோத  ஒலி பற்றிக் கேட்டான்.அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.ஒருவர் சொன்னார்,''நீங்கள் ஒரு புத்த பிக்கு இல்லை.எனவேஅது பற்றி உங்களுக்கு சொல்ல முடியாது.''அந்த மனிதன் பின் அவர்களிடம் விடை பெற்றான்.சிலஆண்டுகள் கழித்து அவன் அந்தப் பக்கம் வந்த போது அதே மடாலயத்தில் தங்க முடிவு  செய்தான்.புத்த பிக்குகளும் அவனுக்கு உணவளித்து,படுக்கையும் கொடுத்தனர்.அன்று  இரவும்  அவனுக்கு  அந்த  வினோத ஒலி கேட்டது.முதுகுத்தண்டு சில்லிட்டது.அவனால் தூங்க முடியவில்லை.காலை எழுந்ததும்புத்த பிக்குகளிடம் அந்த வினோத ஒலி பற்றிக் கூறக் கெஞ்சினான்.அவர்கள் இம்முறையும்,''நீங்கள் ஒரு புத்த பிக்கு இல்லை.எனவே அது பற்றி உங்களுக்குச் சொல்ல முடியாது,''என்றனர்.அவனுக்கு பைத்தியம் பிடித்து  விடும்  போல  இருந்தது.''இந்த உண்மை தெரிய நான் புத்த பிக்குவாக வேண்டுமானால் அதற்கும் நான் தயார்.நான்  என்ன செய்ய வேண்டும்?''என்று அவர்களிடம் அவன்கேட்டான்.
'' உன் உடமைகள் அனைத்தையும் துறந்து வா,''என்றனர் பிக்குகள். அவனும் அனைத்தையும் துறந்து அங்கு வர,அவனுக்குபிக்குகளுக்கானஉடையைக் கொடுத்தனர்.     ''இப்பொழுதாவது எனக்கு அந்த வினோத ஒலி பற்றிச் சொல்லுங்களேன்,''என்று அவர்களிடம் கேட்டான்.அவர்களும் ஒரு கதவைக் காட்டி,அதைத் திறந்து பார்த்துத் தெரிந்து கொள்ளச் சொல்லினர்.அவன் வேகமாய்ப்  போய் அந்தக் கதவைத் திறந்தான்.உள்ளே ஒரு கல் கதவு இருந்தது.அதைத் திறக்க,அதனுள் இரும்புக்  கதவு இருந்தது.அதையும் திறந்தால்,அதனுள் ஒரு வெள்ளிக் கதவு இருந்தது.அதையும் திறந்து உள்ளே பார்த்தபோது ஒலி எங்கிருந்து வந்தது  என்பது  அவனுக்குத்  தெரிந்தது.அதைப் பார்த்ததும் அவனுக்குப் பயம் வந்து விட்டது.அவன்   அலறி ,ஓட முயற்சி செய்த  போது  பயத்தில் அவனால் அங்கிருந்து நகர முடியவில்லை.'அவன் அங்கு என்ன பார்த்தான்? அந்த ஒலி எங்கிருந்து வந்தது?என்று கேட்கிறீர்களா?மன்னிக்கவும்.நீங்கள் ஒரு புத்தபிக்கு இல்லை.எனவே அது பற்றி உங்களுக்குச் சொல்ல முடியாது.'

உண்மையான பக்தி

0

Posted on : Thursday, July 08, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருகண் பார்வை இல்லாதவர்  கோவிலுக்கு  வந்தார்.பூசாரி கேட்டார்,''ஐயா,உங்களுக்குத்தான் கண் தெரியாதே?மலை ஏறி வரிசையில் நின்று இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே,கடவுளை உங்களால் தரிசிக்கவா முடியும்?''பார்வை அற்றவர் சொன்னார்,''ஐயா,நான் கடவுளை தரிசிப்பதில் அவருக்கு என்ன ஆதாயம்?கடவுள் என்னைப் பார்த்தால் போதும்.என் கஷ்டங்கள் எல்லாம் ஓடிவிடும் என்று  நம்பித்தான்  வந்திருக்கிறேன்.''
இது தான் உண்மையான பக்தி;உண்மையான ஆர்வம்;உண்மையான நம்பிக்கை.

மூன்று சகோதரர்கள் .

2

Posted on : Tuesday, July 06, 2010 | By : ஜெயராஜன் | In :

சீனாவில் மூன்று சகோதரர்கள் இருந்தனர்.மூவருக்கும் அரைகுறைப் பார்வை.ஒரு நாள் இளையவர் சொன்னார்,''மூத்த அண்ணனுக்கு பார்வை மிகவும் மோசம்.எவ்வளவு பணம் கொடுக்கிறோம்,எவ்வளவு பணம் வாங்குகிறோம் என்பது கூடத் தெரிவதில்லை.எனவே இனி நான் பணப் பொறுப்புகளைப் பார்க்கிறேன்.''இரண்டாமவர் சொன்னார்,'உனக்கு மட்டும்  கண் பார்வை நன்றாக இருக்கிறதா?நம் மூவரில் எனக்குத் தான் கண் பார்வை நன்றாக இருக்கிறது.எனவே பணப் பொறுப்புகளை இனி நான் பார்ப்பது தான் சரி.' மூத்தவர் சொன்னார்,''எனக்கு உன் பார்வையில்நம்பிக்கை இல்லை.ஒன்று செய்வோம்.நம் ஊர்க் கோவிலில் இன்று இரவு ஒரு கற்பலகை வைக்கப்போகிரார்களாம்.அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை  யார் சரியாகப் படிக்கிறார்களோ அவரிடம் நிதிப் பொறுப்பைக் கொடுப்போம்.''மூவரும் ஒத்துக் கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து மூத்தவர் பிறர் அறியாமல் கோவிலுக்கு சென்று,அங்கிருந்த ஒரு பிக்குவிடம் அன்று இரவு வைக்கப் போகும் பலகையில் என்ன எழுதப் போகிறார்கள் என்ற விபரம் கேட்டார்.பிக்கு,''எப்போதும் நேர்மையுடன் இரு என்ற கன்பூசியஸின் பொன்மொழியை எழுதப் போகிறார்கள்,''என்றார்.தன்
புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டே அங்கிருந்து அவர் சென்ற சில நிமிடங்களில் இரண்டாமவர் கோவிலுக்கு வந்தார். அவரும் பிக்குவிடம் விபரம் கேட்க அவரும் தான் ஏற்கனவே சொன்னதையே சொன்னார்.'பலகையை சுற்றி ஏதேனும் அலங்காரம் செய்வீர்களா?'என்று அவர் கேட்க பிக்குவும் பொன்மொழியைச் சுற்றி பூக்களை வரையப் போகிறார்கள் என்றார்.மகிழ்ச்சியுடன் இரண்டாவது சகோதரர் வெளியேறினார்.அடுத்து  இளையவர் அங்கு வந்து இரண்டாமவர் தெரிந்து கொண்ட விசயங்களுடன் பலகையில் அதைத்தானம் செய்பவரின்  பெயரும் பொறிக்கப்படும் என்பதை தெரிந்து கொண்டார்.
மறு நாள் காலை மூன்று  பேரும் கோவிலுக்கு சென்றார்கள். ''இதோ இங்கு தான் பலகை வைக்கப்பட்டிருக்கிறது.என்னால் அதைப் படிக்க முடிகிறது.எப்போதும் நேர்மையாய் இரு என்று எழுதப்பட்டிருக்கிறது.''என்றார்.இரண்டாமவர் சொன்னார்,'உன் பார்வை அவ்வளவு தானா?அதைசுற்றி அலங்காரமாகப் பூக்கள் வரையப்பட்டிருப்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.'மூத்தவருக்கோ திகைப்பு.இளையவர் இப்போது பேசினார்,''பரவாயில்லை.இதில் வேறு  ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா?''என்று கேட்க இரண்டாமவர் அதிர்ச்சியுடன் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்டார்.''இப்பலகையை வைக்க ஏற்பாடு செய்த வாங் லீயின் பெயர்  கீழே ஓரத்தில் எழுதப் பட்டிருக்கிறது.'' என்று பெருமையோடு சொன்னார் இளையவர்.அப்போது முதல் நாள் மாலை அவர்கள் பார்த்த பிக்கு அங்கு வந்தார்.இவர்களைப் பார்த்தவுடன்,''ஓ,நீங்கள் பலகையைப் பார்க்க வந்தீர்களா?நேற்று இரவு இங்கு அதை வைக்க முடியவில்லை.இன்று இரவுதான் அந்த வேலை முடியும்.''என்று கூறிச் சென்றார்.

உன்னைப்போல் ஒருவன்

0

Posted on : Sunday, July 04, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது.அது புறாவைப் போல இருக்கும்.முல்லா இதற்குமுன் இப்பறவையைப் பார்த்ததில்லை.அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும்,வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை ''என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா?ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,''என்று கூறிக்கொண்டே,அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார்.வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார்.ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.பின் திருப்தியாக,''இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,''என்றார்.மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம்.நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால்,அது சரியா,தவாறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சிக்கிறோம்.பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல,நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம்.நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்;அதை நம்மால் பொறுத்தக்கொள்ள முடிவதில்லை.நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இதனால் தான் பிரச்சினைகளே.நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்ப்போமே!

வழி கிடைக்கும்

0

Posted on : Saturday, July 03, 2010 | By : ஜெயராஜன் | In :

கோபால் சரியான சாப்பாட்டு  ராமன்.ஏதாவது விருந்துக்குச் சென்றால் ஒரு பிடி பிடித்துவிடுவான்.அவனைப் பற்றிக் கேள்விப்பட்ட அரசர்,அவன் எவ்வளவு தான் சாப்பிடுகிறான் என்பதை அறிய ஆவல்  கொண்டு ஒரு விருந்துக்கு அவனை அழைத்தார்.கோபாலும் மூன்று பேர் சாப்பிடக்கூடிய அளவு சாப்பிட்டு விட்டு ஒரு பெரிய  ஏப்பம் விட்டான்.'போதுமா?'என்று அரசர் கேட்டார்.''ஒரு பருக்கை நுழையக்கூட  இடம்  இல்லை,மகாராஜா!''என்றான் கோபால்.அப்போது ஒரு தட்டில் அருமையான  மாம்பழங்களை வெட்டி எடுத்துக் கொண்டு வந்தான் ஒரு சேவகன்.மாம்பழத்தைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊற,வேகமாகத் தட்டைப் பிடுங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.''என்ன ஆச்சரியம்!இப்போது தான் ஒரு பருக்கை கூட நுழைய  இடம் இல்லை என்றாய்.ஆனால் இப்போது மூன்று மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டு விட்டாய்.இதற்கென்ன சொல்கிறாய்?''என்று கேட்டார் மன்னர்.கோபால் சொன்னான், ''இது  ஒரு பெரிய விஷயம் இல்லை,மகாராஜா!மகாராஜா பிறந்த நாளன்று கோவிலுக்குப் போகும் போது,அங்கு எள் கூட விழ முடியாத  அளவுக்குக் கூட்டம் இருக்கும்.ஆனாலும் தாங்கள் குதிரையில் வரும்போது,மகாராஜா வருகிறார் என்று சொல்லி கூட்டம் வழி கொடுக்கும்.அதுபோல வயிற்றில் இடம் இல்லையென்றாலும் ,பழங்களின் ராஜாவான மாம்பழம் வரும்போது வயிற்றில் இடம் கிடைக்காமலா போய்விடும்?''

டிக்கெட்

0

Posted on : Friday, July 02, 2010 | By : ஜெயராஜன் | In :

மதுரை புகைவண்டி நிலையத்தில் , மூன்று இளைஞர்கள்,மூன்று  டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்னை செல்லும் புகை வண்டியில் ஏறினர்.பின்னாலேயே வேறு மூன்று பேர் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் வாங்கிக்கொண்டு அவர்கள் ஏறிய அதே பெட்டியில் ஏறியதைப் பார்த்தனர்.அவர்களிடம்,'ஒரு டிக்கெட் வாங்கி,மூன்று பேர் எப்படி பயணம் செய்வீர்கள்?'என்று கேட்டனர்.''பொறுத்திருந்து பாருங்கள்,''என்று பதில் வந்தது.மூன்று டிக்கெட் வாங்கியவர்கள்,இருக்கையில் அமர்ந்தார்கள்.ஒரு டிக்கெட் மட்டும் வாங்கியவர்கள்மூவரும் கழிப்பறை யினுள் சென்று தாழிட்டனர்.சிறிது நேரத்தில்  டிக்கெட்  பரிசோதகர் வந்து பெட்டியிலிருந்த அனைவரிடமும் பரிசோதித்துவிட்டு,கழிப்பறையின் கதவைத் தட்டினார்.உடனே கதவு லேசாகத் திறந்தது..ஒரு கை ஒருடிக்கெட்டை வெளியே நீட்டியது.பரிசோதகர்  வாங்கிப் பார்த்துவிட்டு சென்று விட்டார்.சிறிது நேரம் சென்றபின் மூவரும் கழிப்பறையிலிருந்து வெளிவந்து இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.
ஒரு வாரம் கழித்து அந்த மூன்று இளைஞர்களும் மதுரை  திரும்ப ரயில் நிலையம் வந்தார்கள். தற்செயலாக,சென்னை வரும்போது உடன் வந்த மூன்று இளைஞர்கள் மதுரை செல்ல டிக்கெட் வாங்க நிற்பதைப் பார்த்தார்கள்.அவர்கள் இம்முறை ஒரு டிக்கெட் மட்டும் வாங்குவதைப் பார்த்தார்கள். இவர்கள் இப்போது ஒரு டிக்கெட்டும் வாங்காமலேயே புகைவண்டியில் ஏறினார்கள்.'ஒரு டிக்கெட் கூட இல்லாமல் எப்படி சமாளிப்பீர்கள்?'என்று இவர்களை அவர்கள் கேட்டார்கள்.அப்போதும்,''பொறுத்திருந்து பாருங்கள்,''என்று பதில் வந்தது.இப்போது ஒரு டிக்கெட் வாங்கிய மூவரும் வேகமாக ஒரு கழிப்பறையில் நுழைந்தனர்.டிக்கெட் ஏதும் வாங்காதவர்கள் வேறு ஒரு கழிப்பறையில் புகுந்தனர். வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில் டிக்கெட் எதுவும் வாங்காத மூவருள் ஒருவர் கழிப்பறையில் இருந்து வெளியே வந்தார்.அடுத்த கழிப்பறை கதவு தட்டி,'டிக்கெட் காண்பியுங்கள்,'என்று பரிசோதகர் போலக் கேட்டார்.கதவு லேசாகத் திறந்தது.ஒரு கை ,ஒரு டிக்கெட்டுடன் வெளி வந்தது.தட்டியவர்,அந்த டிக்கெட்டை வாங்கிக்கொண்டு தன நண்பர்கள் இருந்த கழிப்பறையில் புகுந்து கொண்டார்.

அவசரம்

0

Posted on : Friday, July 02, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் பத்தாவது மாடியிலிருந்த தனது அலுவலகத்தில் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது யாரோ பதட்டத்துடன்,'முருகா,உன் பெண்  விபத்தில் சிக்கி இறந்துவிட்டாள்,'என்று சப்தம் போட்டுச் சொன்னார்கள்.உடனே அவன்,'இனி வாழ்வதில் அர்த்தமில்லை,'என்று கூறிக் கொண்டே பத்தாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியே  கீழே குதித்துவிட்டான்.அவன் ஆறாவது மாடியைக் கடக்கும் போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.''ஐயோ,எனக்குத்தான் பெண் குழந்தை கிடையாதே!''என்று கத்தினான்.நான்காவது மாடி அருகில் செல்லும் போது தான் அவன் உணர்ந்தான்,''அடடா,எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே!''தரையில் சென்று விழும் தருணத்தில் தான் அவனுக்குப் புரிந்தது,''நான் என்ன செய்வேன்,என் பெயர் முருகன் இல்லையே!''