உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தூங்கச் செல்லுமுன் ...

0

Posted on : Saturday, June 30, 2012 | By : ஜெயராஜன் | In :

1.பகல் நேரக் கவலைகளை படுக்கைக்குக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது.
2.படுக்கை மிக மிருதுவாகவோ,மிகக் கடினமாகவோ இருக்கக் கூடாது.
3.இவ்வளவு நேரம் கட்டாயம் தூங்கியாக வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.தேவைப்படும் அளவுக்கு தூக்கம் இருந்தால் போதும்.
4.தூங்கச் செல்லுமுன்  மிகவும் சுவாரசியமான விசயங்களைப் படிக்க வேண்டாம்.அந்த உற்சாகமே தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கும்.
5.தூக்கம் வரவில்லை என அலுத்துக் கொள்ள வேண்டாம்.கண்ணை மூடி சும்மா படுத்தாலே தானே தூக்கம் வரும்.
6.பசியுடன் படுக்கச் செல்லக் கூடாது.
7.படுக்கைக்குச் செல்லுமுன் புகை பிடித்தல்,சூடான பானம் அருந்துதல் கூடாது.
8.ஒருக்களித்துப் படுப்பது நல்லது.
9.இறுக்கமில்லாத ஆடைகளுடன் படுப்பது நல்லது.

சிரிப்போமே!

0

Posted on : Saturday, June 30, 2012 | By : ஜெயராஜன் | In :

''இந்தக் கார் வாங்கினதிலிருந்து ஒரு ரூபாய் கூட ரிப்பேருக்காகக் கொடுக்கவில்லை.''
.அமாம்,உன் மெக்கானிக் கூட அப்படித்தான் சொன்னான்.'
********
மனைவி:உங்க நண்பர் உங்க கிட்ட கடன் வாங்க வந்திருக்கிறார் போலத் தெரிகிறதே?''
கணவன்:எப்படி அவ்வளவு சரியாகக் கண்டு பிடித்தாய்?'
மனைவி:நான் சீனி போடாமல்,தண்ணீராகக் கொடுத்த காபியை அவ்வளவு புகழோ புகழ் என்று புகழுகிறா ரே,அதனால் தான் கேட்டேன்.
********
''வானத்தில் மூன்று கிளிகள் பறந்து கொண்டிருந்தன.முதல் கிளி,தன் பின்னால் இரண்டு கிளிகள் வருவதாகச் சொன்னது.இரண்டாவது கிளியும்,மூன்றாவது கிளியும் அவ்வாறே தங்கள் பின்னால் இரண்டு கிளிகள் வருவதாகச் சொல்லின.அதெப்படி?''
'கிளிகள் தான் சொன்னதையே சொல்லுமே!'
********
''தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..ஏன்?''
'தம்பி தோல் வைத்தியராய் இருப்பார்.'
********
தாய்:ஏண்டா,பால் முழுவதையும் பூனை குடிக்கும் வரை என்ன செய்து கொண்டிருந்தாய்?
மகன்:இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
********
''கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாது.''
'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'
''கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்தால் எப்படி நீச்சல் அடிக்க முடியும்?''  
********
''ஆபீசுக்கு குடிச்சிட்டு போதையில் போனது தப்பாப் போச்சு.''
'ஏன்?என்ன ஆயிற்று?''
''இப்ப என்னை தண்ணி இல்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க.''
********
''உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் திருமணத்துக்குப் பின் நீங்கிடுச்சாமே?''
'ஆமாம்,கடைசியா இருந்தது சந்தோசம்,இப்ப அதுவும் நீங்கிடுச்சு.'
******** 

தலைவலி

1

Posted on : Friday, June 29, 2012 | By : ஜெயராஜன் | In :

ஐஸ்க்ரீம்,குளிர்ந்த உணவு அல்லது குளிர் பானங்கள் சாப்பிட்டால் தலைவலி வரும்.காரணம்:குளிர்ந்த பொருட்கள் வாயை அதி விரைவில் குளிர்ச்சி அடையச் செய்து விடுகிறது.அதனால் தலையிலிருந்து அனுப்பப்படும் மித வெப்ப இரத்தம் உடனடியாகக் குளிர்ந்து விடுகிறது.குளிர்ந்த இரத்தத்தை வலுக் கட்டாயமாகத்தான் தலை மீண்டும் இழுக்க வேண்டியுள்ளது.இதனால் நரம்புகள் தளர்வடைந்து வலிக்கான அறிகுறியை ஏற்படுத்துகின்றன.எனவே எவ்வளவு குறைவாகவும்,மெதுவாகவும் ஐஸ்க்ரீமை சாப்பிட முடியுமோ,அப்படி சாப்பிட்டால் தலைவலியைத் தவிர்க்கலாம்.
********
கண் சிமிட்டுங்கள் 
புத்தகம் படிக்கும்போது நிமிடத்திற்குப் பத்து முறையும், கம்ப்யூட்டர் 
திரையில் படிக்கும்  போது நிமிடத்திற்கு ஏழு முறையும் என்று குறைந்த அளவில்தான் நாம் கண் சிமிட்டுகிறோம்.இதனால் கண்களிலுள்ள ஈரப்பசை வெகு விரைவில் ஆவியாகி கண்கள் கஷ்டப்படுகின்றன.இதைத் தடுக்க அவ்வப்போது சிறிது நரம் கண்களை மூடி வைத்திருங்கள்.கண்களில் ஈரப் பசை பரவி விடும்.கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொள்ள மறவாதீர்!
********

உன்னைச்சுற்றி

0

Posted on : Friday, June 29, 2012 | By : ஜெயராஜன் | In :

எந்த உத்தரவுக்கும் கீழ்ப்படியாதே!
        உனக்குள்ளிருந்து எழுவதைத் தவிர !
எந்தக் கடவுளும் இல்லை,வாழ்வைத்தவிர!
சத்தியத்தை வெளியே தேடாதே.
        அது உனக்குள்ளே இருக்கிறது.
பிரார்த்தனை என்பது எதை நோக்கியும் வணங்குவது இல்லை.
        எல்லோரிடமும் அன்பாக இருப்பதே பிரார்த்தனை.
சத்தியத்தின் வாசல்,வழி,முடிவு எல்லாமே
      பலன் நோக்காமைதான்.
வாழ்க்கை என்பது இங்கு,இப்போது இருப்பதுவே.
    முழுமையான விழிப்புடன் வாழ்.
நீந்த வேண்டாம்.மிதந்து கொண்டு இரு.
ஒவ்வொரு வினாடியும் இர;அப்போதுதான்
     ஒவ்வொரு வினாடியும் நீ புதுப்பிக்கப் படுவாய்.
தேடுவதை நிறுத்தி,நில்!பார்! எல்லாம்
      உன்னைச்சுற்றி உன் எல்லைக்குள்தான் இருக்கின்றன.

மற்றவர்களைப்பற்றி...

0

Posted on : Wednesday, June 27, 2012 | By : ஜெயராஜன் | In :

மற்றவர்களைப்பற்றிக் குறிப்பிடுவதில் நான்கு வகை உண்டு.
1.அவர்களது இயல்புகளை உள்ளபடி சொல்வது.
2.அவர்களைப் பாராட்டுவது.
3.அவர்களை மோசமாக விமரிசிப்பது.
4.வாயைத் திறக்காமல் இருப்பது.
நம்மில் பலர் மூன்றாவது வழியைத்தான் அதிகம் பின் பற்றுகிறோம்.
சிலர் பிறரைப் பற்றிய பேச்சை எடுத்தாலே சிரித்துக் கொண்டு வாயைத் திறந்து ஒரு கருத்தும் சொல்ல மாட்டார்கள்.இவர்கள் சர்வ ஜாக்கிரதையான ஆசாமிகள்.இவர்கள் எந்த வம்பிலும் சிக்குவதில்லை.இவர்கள் எல்லோருக்கும் நல்லவர்கள்.
நமக்கு மிக வேண்டியவர்களைப் பற்றிக்கூட மூன்றாவது மனிதர் கருத்து கேட்கிறார் என்பதற்காக அவர் குறைகளைப் பற்றியே அதிகம் விவாதிக்கிறோம்.போயும் போயும் அவர்களை மகிழ்விப்பதற்காக நம் முன்னேற்றத்திற்குக் காரணமாய் இருப்பவர்களைக்கூட மட்டம் தட்டிப் பேச ஆரம்பித்து விடுகிறோம்.எல்லா மனிதர்களிடமும் சில இழிவான கண்ணோட்டங்கள் உண்டு.இவை மனதில் தோன்றும் போதெல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு எப்போது வெளியிடுவோம் என்று காத்திருக்கும் வேளையில் முன்பின் தெரியாதவர்களிடம் கூட விமரிசிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
இதிலிருந்து நாம் விடுபட முடியும்.
1.முதலில் யாரிடமாவது சொல்லித் தீர்க்க வேண்டும் என்கிற நினைப்பு வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும்.
2.காலமெல்லாம் கஷ்டப்பட்டு பெற்ற நல்லவாய்ப்புகளையும் இப்படிப்பட்ட வாய் ஓட்டைகளின் மூலம் வடியவிட்டு நாம் வற்றிப் போய்விடக் கூடாது.
3.மற்றவர்களைப் பற்றி சிறு சிறு குறைகளை நம்மிடம் சொல்லி,நம் வாயைக் கிளறி அவற்றை உடையவர்களிடம் போய்ச்சொல்லி,நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்ளும் சதிக் கும்பல்களின் பிடியிலிருந்து நாம்விடுபட்டாக வேண்டும்.
நம் விரல்களைக் கொண்டு நம் கண்களைக் குத்தும் இவர்களின் வலைக்கு நாம் இனியும் இரையாவதாவது?     
                                                                             --லேனா தமிழ்வாணன்.

திருப்தி

0

Posted on : Wednesday, June 27, 2012 | By : ஜெயராஜன் | In :

அறிஞர் கி.வா ஜ.க்கு ஒரு நண்பர் விருந்து கொடுத்தார்.விருந்தில் பரிமாறப்பட்ட அனைத்து உணவு வகைகளும் மிகவும் சுவையாக இருந்தன.அவருக்கு எதையும் விட மனதில்லை .ஆனால்  அதே  சமயம்  வயிறு  நிரம்பி  விட்டது .ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்தார்.நண்பர்,''சாப்பாடு எப்படி இருந்தது?ஏதாவது குறைபாடு உண்டா?''என்று கேட்டார். கி.வா.ஜ.சொன்னார்,''எல்லாம் சரி;இன்னும் ஒன்று செய்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்.''நண்பர் அதிர்ச்சி அடைந்தார்.பார்த்துப் பார்த்து செய்தும் ஏதோ குறை இருந்திருக்கிறதோ என்று எண்ணி அவரிடம் பதட்டத்துடன்,''என்ன இல்லை?என்ன செய்திருக்க வேண்டும்?தயவு செய்து சொல்லுங்கள்,''என்று வேண்டிக் கேட்டார்.கி.வா.ஜ.சிரித்துக் கொண்டே,''ஒன்றும் பெரிதாக இல்லை.எனக்கு இன்னும் ஒரு வயிறு செய்து கொடுத்திருந்தால் இன்னும் ஒரு பங்கு சாப்பிட்டிருப்பேனே!'' என்றார்.நண்பரின் முகத்தில் இப்போது மிகுந்த மகிழ்ச்சி.

சண்டை

0

Posted on : Tuesday, June 26, 2012 | By : ஜெயராஜன் | In :

வன்முறை இல்லாமல் விலங்குகளால் வாழ முடியாது.ஆனால் வன்முறை செய்து மனிதனால் வாழ முடியாது.ஆனால் மனிதன் விலங்காய் இருந்த காலத்தில் பதிந்த வன்முறை இன்னும் தொடர்கிறது.கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் 15000 போர்கள் நடந்துள்ளன.ஒரு நாளில் இருபத்திநாலு மணி நேரமும் நாம் நமக்குள் சண்டை இட்டுக் கொண்டே இருக்கிறோம்.பகைவரோடு சண்டை போடுகிறோம்..சில சமயங்களில் நண்பர்களுடன் சண்டை போடுகிறோம்.பணத்துக்காக சண்டை போடுகிறோம்.புகழுக்காக சண்டை போடுகிறோம்.சண்டை போடுவதே பழக்கமாகி விட்டதால் காரணமின்றியும் சண்டை போடுகிறோம்.வேட்டைக்குப் போகிறவன் காரணமின்றி சண்டை போடுகிறான்.சண்டை போடுவது அவனுக்கு விளையாட்டு.நேரடி சண்டைக்கு போக முடியவில்லை என்றால் சண்டையிடும் உணர்வுள்ள விளையாட்டுக்களை மனிதன் தேடிக் கண்டு பிடிக்கிறான்.அவற்றை வளர்க்கிறான்.ஆழ்ந்து நோக்கினால் மற்றவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமும் பிறரோடு சண்டை போடுவதில் உள்ள ஆர்வமும் புலப்படும்.
வன்முறை உள்ள மனம் சண்டை போடாமல் திருப்தி அடையாது.பிறரைத் துன்பப் படுத்துவதில் மகிழ்ச்சி காணும்.அத்தகைய மனம் ஒருபோதும் நிரந்தர மகிழ்ச்சி அடைய முடியாது.
வன்முறை மனிதனைப் பிடித்திருக்கும் நோய்.அது தவிர்க்க முடியாதது அல்ல.மனிதத் தன்மை என்னும் மலர் ஒரு நாளும் வன்முறைக்கு இடையே மலர முடியாது.அன்புச் சூழலில் மட்டுமே அது மலர்வது சாத்தியம்.

புல்லாங்குழல்

1

Posted on : Tuesday, June 26, 2012 | By : ஜெயராஜன் | In :

மோசசிடம் ஒரு புல்லாங்குழல் இருந்தது.சில சமயம் அதை வாசிக்க அவர் மலைக்கு செல்வதுண்டு.அவர் வாசிப்பை அவ்வழியில் செல்லும் இடையர்கள் மெய்மறந்து கேட்பர்.மான்கள் அசையாது நிற்கும்.பறவைகள் அவரை சூழ்ந்து கொள்ளும்.மோசஸ் இறந்த பிறகு அவ்விடையர்கள் அந்தப் புல்லாங்குழலை ஒரு மரத்தடியில் வைத்து வழிபட ஆரம்பித்தனர்.ஓரிரு தலைமுறைக்குப்பின் மக்கள்,''இந்த மூங்கில் புல்லாங்குழலில் என்ன  இருக்கிறது?.வழிபடுவதற்கு இது மேலும் சிறப்புள்ளதாக இருக்க வேண்டும்.''என்று கூறி அதைத் தங்கத்தால் அலங்கரித்தனர்.அடுத்து வந்த மக்கள் அதை வைரத்தால் அலங்கரித்தனர்.சில ஆண்டுகள் கழித்து ஒரு சங்கீதக் கலைஞர் அவ்வழியே வந்தார்.அவர் மோசசின் புல்லாங்குழல் பற்றிக் கேள்விப்பட்டு ஆவலுடன் அதைப் பார்க்க வந்தார்.தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் புல்லாங்குழலை கையில் எடுத்துப் பார்த்தார்.பின் அதை ஊதிப் பார்த்தார்.அதன் துளைகள் முழுவதும் அடைபட்டிருந்தன.
மகாவீரரின் புல்லாங்குழலும்,புத்தரின் புல்லாங்குழலும்,இயேசுவின் புல்லாங்குழலும் இப்படித்தான் மாற்றப்பட்டு விட்டன.அவற்றை வைத்திருப்பவர்கள் அவற்றை அழகற்றவை ஆக்கி விட்டனர்.இதற்கு மகா வீரரோ,புத்தரோ ஏசுவோ பொறுப்பல்ல.நாமே காரணம்.

புத்திசாலி

0

Posted on : Monday, June 25, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு புத்திசாலியான பெரியவர்.அவர் ஏதோ தவறு செய்து விட்டார்.விசாரணை நடைபெற்றது.தீர்ப்பு அவருக்கு சாதகமாக இல்லை.நீதிபதி அவரைப் பார்த்து,''கடைசியாக நீர் சொல்ல விரும்புவதை சொல்லலாம்.ஆனால் ஒரு  விஷயம்.நீர் உண்மை சொன்னால் உம்மைத் தூக்கில் போடுவோம்.பொய் சொன்னால் உமது தலை வெட்டப்படும்.''என்று சொன்னார்.பெரியவர் சொன்னார்,''எனது தலை வெட்டப்படட்டும்.''இதைக்  கேட்டதும் நீதிபதி குழப்பமடைந்து தீர்ப்பைத் தள்ளி வைத்தார்.ஏன்?
பெரியவரின் தலையை வெட்டினால் அவர் குற்றம் செய்தது உண்மை என்றாகும்.அது உண்மை என்று ஆனால் அவரைத் தூக்கில் போட வேண்டும்.சரி, அவரைத் தூக்கில் போடலாம் என்றால் அப்போது அவர் சொன்னது பொய் என்றாகிவிடும்.அப்படிஎன்றால் அவர் தலை வெட்டப்பட்டிருக்க வேண்டும்.நீதிபதியால் என்ன செய்ய முடியும்?

தெரிந்து கொள்ள

1

Posted on : Monday, June 25, 2012 | By : ஜெயராஜன் | In :

'பிரேசில்'என்பது ஒரு மரத்தின் பெயர்.
********
மிகப் பழமையான நகரம் பாபிலோன்.கி.மு.3500 இல் அதன் மக்கள்தொகை 80,000.
********
பின்லாந்து ஏரிகள் நிறைந்த நாடு.இங்கு 55,000 ஏரிகள் உள்ளன.
********
'Fools cap paper' என்பது  17''x13.5'' அளவுடையது.பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை இந்த மாதிரித் தாள்களின் அசல் தன்மையை குறிக்க சர்க்கஸ் கோமாளிகள் அணியும் தொப்பியை வாட்டர் மார்க்காகப் பயன் படுத்தினார்கள்.அதனால்தான் அதற்கு அந்தப் பெயர் வந்தது.
********
1822 இல் கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் தான் ஊட்டியைக் கண்டறிந்தார். 
********
'பெரூலா'என்ற செடியின் வேரிலிருந்து வரும் பாலிலிருந்துதான் பெருங்காயம் செய்யப்படுகிறது.இந்தச்செடி ஈரானிலும் ஆப்கானிஸ்தானத்திலும் கிடைக்கிறது.
********
அயர்லாந்து தேசியக் கோடியில் ஹார்ப் என்ற இசைக் கருவி உள்ளது.உலகிலேயே இக்கொடியில் மட்டுமே ஒரு இசைக் கருவி இடம் பெற்றுள்ளது.  
********
காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டம் வழங்கியவர் தாகூர்.
********
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் அல் அசார் பல்கலைக்கழகம் உள்ளது.குர் ஆனில் ஏற்படும் எச்சந்தேகத்திற்கும் இங்கு அளிக்கப்படும் விளக்கம் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
******** 
நீண்ட நாள் கழித்து மிக நெருங்கிய ஒருவரைப் பார்க்கும்போது நம் உடலில் உள்ள எல்லா சுரப்பிகளும் திரவங்களை சுரக்கும்.அதுபோல கண்ணில் உள்ள லாக்ரிமல் என்ற சுரப்பியும் அதிகமாக சுரப்பதால் கண்ணீர் அரும்பி வழியும்.  
இதுதான் ஆனந்தக் கண்ணீர்.
********

கருணை உள்ளம்

1

Posted on : Sunday, June 24, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பிச்சைக்காரன் ஒரு மரத்தின் பக்கம் சென்று கொண்டிருந்தான்.அப்போது ஒரு மனிதன் வேகமாக வந்து அவனைக் குச்சியால் பலமாக அடித்தான்.நீண்ட நேரம் அடித்ததில் கை வலித்து குச்சி கீழே விழுந்ததும் அடித்தவன் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடி விட்டான்.அந்தத் தடியைக் கையில் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த கடைக்கு பிச்சைக்காரன் சென்றான்.அந்தக் கழியை பத்திரமாக வைத்திருந்து அடித்தவன் அந்தப் பக்கம் வந்தால் அவனிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டான்.கடைக்காரன்,''அவன் உங்களைக் கழியால் அடித்திருக்கிறான்.நீங்கள் மிகுந்த கருணையுடன் அவன் அடித்த கழியையே அவனிடம் திரும்பத் தரச் சொல்கிறீர்களே!''என்று கேட்டான்.பிச்சைக்காரன் சொன்னான்,''முன்பொரு சமயம் இந்த மரத்தின் கீழே சென்று கொண்டிருந்தேன்.மரத்தின் கிளை ஒன்று என் மீது விழுந்தது.நான் அதை ஏற்றுக் கொண்டேன்.இந்த மனிதன் அந்த மரத்தை விடக் கொஞ்சமாவது மேலல்லவா?அதனால் தான் நான் அடியையும் ஏற்றுக் கொண்டேன்.''

ஏற்பும் எதிர் விளைவும்

0

Posted on : Sunday, June 24, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒன்றை ஏற்றல்(response) என்பது அனுபவ உணர்வு.ஏற்றலுக்கும் எதிர் விளைவுக்கும்(reaction) இடையே பெரிய வேறுபாடு உண்டு.ஒருவர் நம்மைத் திட்டினால்,பதிலுக்கு அவரைத் திட்ட வேண்டும் என்ற விருப்பம் நமக்குள் எப்போதும் இருக்கும்.ஆனால் அதை எதிர்க்காமல் ஏற்கும்போது அது வேறு விதமாக அமையும்.ஒருவர் நம்மைத் திட்டும்போது,''பாவம்,இவர் இவ்வாறு திட்ட என்ன காரணமோ எனக்குத் தெரியவில்லையே,''என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் அது ஏற்பு.அவர் திட்டியதற்கு நாம் செயல்படவில்லை.உணர்வுபூர்ணமான நேர்விளைவு இது.பட்டனைத் தட்டியவுடன் மின்விசிறி சுழல ஆரம்பிக்கிறது.சுற்றலாமா வேண்டாமா என்று யோசிப்பதில்லை.மறுபடியும் அழுத்தினால் மின்விசிறி நிற்கிறது.அது போலவே நாம் திட்டப்படும்போது-பட்டன் அழுத்தப் படுகிறது.-உடனே கோபம் வருகிறது.ஒருவர் நம்மைப் பாராட்டுகிறார்-பட்டன் அழுத்தப் படுகிறது.-கோபம் நீங்குகிறது.ஆகவே நாம் ஒரு தனி மனிதனா அல்லது இயந்திரமா?நம் நடத்தை இயந்திரத்தனமாய் இருக்கிறது.ஏற்பு என்பது உணர்வின் அடையாளம்.சிலுவையில் அறையப்படும்போது இயேசு ,''கர்த்தரே,இவர்கள் தாம் செய்வது என்னவென அறியாதவர்கள்.இவர்களை மன்னியும்.''என்றார் .இது உணர்வுப் பூர்வமான பதில்.இதுதான் ஏற்பு.

புது வழி

0

Posted on : Saturday, June 23, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான்.அவன் மகாக் கருமி.அந்த ஊரில் பொதுவில் கோவில் கட்டிக் கொண்டிருந்தார்கள்.அதற்கு நிதி பலரிடமும் வாங்கிவிட்டு பணக்காரனிடம் வந்தார்கள்.அவனிடம்  பணம் வசூலிக்க முடியாது என்று பலரும் சொல்லியும் எப்படியும் அவனிடம் வசூலிக்க வேண்டும் என்று சிலர் வந்தனர்.இதுவரை பணம் கொடுத்தவர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டனர்.அதில் பணக்கார்கள் முதல் பாமரர் வரை பணம் கொடுத்த விபரம் இருந்தது.அதை முழுவதும் வாசித்தால் இப்படி அனைத்துத் தரப்பினரும் பணம் கொடுத்திருக்கும்போது தான் மட்டும் கொடுக்காவிடில் ஊரில் அசிங்கம் என்று நினைத்து அவன் எப்படியும் பணம் கொடுத்து விடுவான் என்று நினைத்தார்கள்.அப்படியே அந்த பட்டியலையும் அவனிடம் வாசித்தார்கள்.அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி.வந்தவர்களுக்கு நம்பிக்கை.கோவிலுக்கு எவ்வளவு எழுதப் போகிறீர்கள் என்று அவர்கள் கேட்க அந்தக் கஞ்சன் சொன்னான்,''நீங்கள் எண்ணப் புரிந்து கொள்ளவில்லை.நான் இதுவரை பல வகையில் பொருள் சேர்த்துள்ளேன்.இப்போது நீங்கள் எனக்குப் புது வழி காண்பித்து விட்டீர்கள்,'' வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க அவன் தொடர்ந்தான்,''இது வரை நான் பிச்சை எடுத்து பொருள் சேர்த்ததில்லை.இப்போது இந்த ஊரில் பிச்சை போட நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.அதை முயற்சி செய்யப் போகிறேன்.தங்கள் ஆலோசனைக்கு நன்றி.''

எது சொந்தம்?

0

Posted on : Saturday, June 23, 2012 | By : ஜெயராஜன் | In :

துறவி ஒருவர் தன் சீடனை அழைத்து ஒரு நாள் முழுவதும் அரண்மனையில் தங்கி பாடம் கற்று வருமாறு கூறினார்.ஆசிரமத்தில் படிக்காத பாடமா அரண்மனையில் படிக்க என்று எண்ணினாலும் குருவின் கட்டளைப்படி அவன் அன்று அரண்மனை சென்றான்.அரசன் அவனை நன்கு உபசரித்து அன்று அங்கு தங்கிச்செல்லுமாறு கூறி அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தான்.ஆனால் சீடன் பார்க்கையில் எங்கு பார்த்தாலும் ஆட்டமும்,பாடலும்,குடியுமாக இருந்தது அவனுக்கு அருவருப்பாக இருந்தது.இருந்தாலும் மனத்தைக் கட்டுப்படுத்தி படுத்து உறங்கினான்.அதிகாலையில் அரசன் சீடனை அழைத்து அரண்மனையின் பின்புறம் செல்லும் நதியில் குளித்து வர அழைத்தார்.சீடனும் அரசனும் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென அரண்மனையில் தீப்பற்றியது.அதை அரசன் சீடனிடம் காண்பித்தான்.உடனே சீடன் அவசரமாக குளிப்பதை விட்டு, தன் கோவணம் எரிந்து விடாமல் காக்க வேண்டி ஓடினான். கோவணத்தைக் கையில் எடுத்தபின் திரும்பிப் பார்த்தால் அரசன் இன்னும் ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்தான்..அரண்மனை பற்றி எரியும்போது அரசன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது தான் மட்டும் கோவணத்திற்காக ஓடி வந்ததை எண்ணி தலை கவிழ்ந்தான்.அரசனின் காலில் விழுந்து எப்படி அவரால் பதட்டப்படாமல் இருக்க முடிந்தது என்று கேட்டான்.அரசன் சொன்னார்,''இந்த அரண்மனை என்னுடையது என்று நினைத்திருந்தால் நான் இங்கே நின்றிருக்க மாட்டேன்.இது ஒரு அரண்மனை.நான்,நான்தான்.அரண்மனை எப்படி என்னுடையதாகும்?நான் பிறக்காத போதும் இந்த அரண்மனை இங்கு இருந்தது.நான் இறந்த பின்னும் அது இங்கு இருக்கும்.இது எப்படி என்னுடையதாகும்?கோவணம் உங்களுடையது என்றும் அரண்மனை என்னுடையது என்றும் கருதியதால் நீங்கள் அதைப் பின்பற்றி ஓடினீர்கள்.நான் அவ்வாறு கருதாததால் ஓடவில்லை.''
தன் மனப்பாங்கினால்தான் மனிதன் அடிமை ஆகிறான்.அதை மாற்றினால்தான் அவன் விடுதலை பெறமுடியும்.

பொன்மொழிகள்-29

0

Posted on : Friday, June 22, 2012 | By : ஜெயராஜன் | In :

எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
**********
நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
**********
பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
**********
வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள்.-அதை
வீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள்.
**********
நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று வருந்துகிறோம்.ஆனால் நம் வாழ்விற்கு முடிவே இல்லாததுபோலக் காரியங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.
**********
கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
**********
மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது.
மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை.
**********
நீ தொலைத்தது நாட்களைத்தான்.
நம்பிக்கையை அல்ல.
**********
தவறான வழிதான் எப்போதும் பொருத்தமான வழியைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.
**********
நம்முடைய சந்தேகங்கள் நமக்கு துரோகிகள்.
நாம் வெற்றி பெற முடியாதபடி நம்மை பயமுறுத்தி தடுத்து விடுகின்றன.
**********
ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை
ஒரு பொறுமைசாலி சாதித்து விடுவான்.
**********
 .

நடக்கும்

0

Posted on : Friday, June 22, 2012 | By : ஜெயராஜன் | In :

''The best way to eat an elephant is one bite at a time.'' என்றார் மார்க் ட்வைன்.இந்தக் கூற்றை ''Elephant technique'' என்று சொல்வார்கள்.முழு யானையையும் எப்படி சாப்பிடுவது என யோசித்தால் மலைப்பாகத்தான் தெரியும்.வாய் கொள்ளுமளவு துண்டுகளாக்கிக் கொண்டால் முடித்து விட வேண்டியதுதானே!இந்த முறையின் சூட்சுமங்கள்:
*எந்தப் பெரிய வேலையையும் சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுதல்.
**பிரித்துக் கொண்ட சிறிய பகுதியை குறித்துக் கொண்ட கால அளவில் விடாது முடித்து விடுதல்.
***மொத்த விசயமும் முடியும் வரை கவனம்,ஆர்வம் பிசகாமல் தொடர்ந்து செய்தல்.
****ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு பெரிய விசயங்களை மட்டும் கையாளுதல்.
நாளொன்றிற்கு இத்தனை அல்லது இவ்வளவு என்று முடிவு செய்யும்போது அது ரியலிஸ்டிக் ஆக இருப்பது நல்லது.ஆர்வக் கோளாறினால் முடியாத அளவினை முடிவு செய்து கொண்டு திணறி பின் கை விட்டுவிட  வேண்டாம். அதேபோல தன் சக்திக்குக் குறைவாக இலக்கினைக் குறைத்து வைத்துக் கொண்டு முடிக்க சிரமப்பட வேண்டாம்.
தள்ளிப்போடும் மனோபாவம் கூடாது.சில முக்கிய வேலைகள் செய்யப்படாமலேயே,ஏன்,துவக்கப் படாமலேயே இருப்பதற்கு,'அதென்ன,பிறகு செய்து கொள்ளலாம்,''எனும் மனோபாவம்தான்.
திட்டமிட்டு செயல்படுபவர் வாழ்வில்,நடக்கும்  என்பார்-நடக்கும்.

புத்தரா,ஏசுவா?

0

Posted on : Thursday, June 21, 2012 | By : ஜெயராஜன் | In :

கிறிஸ்தவர் ஒருவர் இயேசுவின் பெருமையை விளக்க ஒரு ஜென் ஞானியை அணுகினார்.அவர் ஞானியிடம்,''நாங்கள் பின்பற்றும் நூலிலிருந்து உங்களுக்கு சிலவற்றை வாசித்துக் காட்டலாமா?''என்று கேட்க ஜென் ஞானியும்,''ஆஹா,அதற்கென்ன,வாசியுங்களேன்,''என்றார்.உடனே கிறிஸ்தவர்,இயேசுவின் மலைப் பிரசங்கத்தை துறவிக்குப் புரியுமாறு ஜப்பானிய மொழியில் சொன்னார்.அதைக் கேட்டு முடித்ததும் துறவியின் கண்களிலிருந்து கண்ணீர்  அருவியாய்க் கொட்டிற்று.அவர் வந்தவருக்கு நன்றி சொல்லிவிட்டு,''இவையெல்லாம் புத்தரின் வாக்கியங்களாயிற்றே,''என்றார்.வந்தவர் உடனே அதை மறுத்து,''இல்லை,இல்லை,இவை ஏசுபிரான் சொன்ன வாக்கியங்கள்.''என்றார்.துறவி சொன்னார்,''நீங்கள் என்ன பேர் வேண்டுமானாலும் சொல்லுங்கள்.இவை ஒரு புத்தரின் வாக்கியங்களே! இனி நான் என் சீடர்களிடம் ஏசுவும் ஒரு புத்தரே என்று சொல்லுவேன்.''நீங்களும் இறைத் தன்மையை உணர்ந்தால் இயேசு,புத்தர் போன்ற பெயர்கள் ஒரு பெரிய விசயமில்லை..

அறிமுகம்

1

Posted on : Thursday, June 21, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லாவிடம் அவரது நண்பர் ஒருநாள் கேட்டார்,''முல்லா,உன் மனைவியை முதன் முதலாய் யார் உனக்கு அறிமுகம் செய்து வைத்தது?''முல்லா சொன்னார்,''அது ஒரு விபத்து..அதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.''
***********
முல்லா ஒரு துறவியை மன அமைதி வேண்டி பல முறை சென்று பார்த்தார்.ஆனால் அவர் முல்லாவிடம் ஒன்றுமே பேசவில்லை.வெறுத்துப் போன முல்லா அவரிடம்,''நான் பல முறை வந்தும் நீங்கள் எனக்கு ஒரு அறிவுரையும் கூறவில்லை.மற்றவர்களுக்கு நீங்கள் சொல்வதும் எனக்குப் புரியவில்லை.எனக்கு மன அமைதி கிட்ட ஏதேனும் ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.நான் அதன் படி நடந்து கொள்வேன்.''என்றார்.துறவி சொன்னார்,''பிறருக்கு நல்லது செய்.பின் அதை கிணற்றில் தூக்கிப் போடு.''முல்லாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றார்.அடுத்த நாள் வழக்கத்துக்கு மாறாக அவரது மாமியாரை மெதுவாக அழைத்து அவர் விரும்பிய இடத்துக்கு கூட்டிச் சென்றார்.மாமியாருக்கோ மிகுந்த மகிழ்ச்சி.எப்போதும் சிடுசிடுவென இருக்கும் மருமகன் இன்று உதவி செய்துள்ளாரே என்று.சிறிது நேரம் கழித்து முல்லா அவரைத் தூக்கிக் கொண்டுபோய் கிணற்றில் போட்டு விட்டார்.முல்லாவின் மனைவி பதறி ஓடி வந்து ,''ஏன் இப்படி செய்தீர்கள்?''என்று கேட்டாள்.முல்லாவும் தான் துறவி சொன்னபடியே நடந்ததாகக் கூறினார்.முல்லாவின் மனைவி துறவியிடம் சென்று நடந்ததைக் கூறி விளக்கம் கேட்க துறவி தன் தலையில் அடித்துக் கொண்டு,''இருந்திருந்தும் இவனுக்குப் போய் நான் அறிவுரை கூறினேனே!நானும் நீண்ட நாள் தவிர்த்துப் பார்த்தேன்.அன்று மிகவும் வலியுறுத்தியதால் சொன்னேன்.நான் சொன்னது ஒரு சூபி பொன்மொழி.அதன் பொருள்,நல்லது செய்,உடனே அதை மறந்துவிடு என்பதாகும்.''என்றார்.

அழகான வேலை

0

Posted on : Wednesday, June 20, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒருநாள் தன் கிராமத்தில் இருந்த ஒரு கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றார்.கடை வாசலில் தன் கழுதையை நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்றார்.திரும்ப வந்து பார்த்தபோது யாரோ அவருடைய கழுதையின் மீது சிவப்பு வண்ண பெயிண்டை அடித்து வைத்திருந்தார்கள்.அதைப் பார்த்ததும் அவருக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது.அவர் சப்தம் போட்டு,''யார் என் கழுதைக்கு இப்படி பெயின்ட் அடித்தது?இன்று அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்.''என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன்,''யாரோ ஒரு புதியவர் கழுதையின் மீது பெயின்ட் அடித்துவிட்டு இப்போதுதான் அந்த மதுக் கடைக்குள் சென்றார்,''என்றான்.முல்லாவும் மதுக்கடைக்குள் சென்று,''யார் என் கழுதையின்  மீது பெயின்ட் அடித்தது?''என்று ஆத்திரத்துடன் கேட்டார்.ஒரு வாட்டசாட்டமான ஆள் ஒருவர் முன் வந்து,''நான்தான் அடித்தேன்.இப்போது என்ன செய்யப் போகிறாய்?''என்று இளக்காரமாகக் கேட்டார்.அந்த ஆளின் புஜ பலத்தைப் பார்த்தவுடன் அரண்டு போன முல்லா ,''ஹி,ஹி...நீங்கள்தானா.வேறு ஒன்றுமில்லை,கழுதையின் மீது நீங்கள் அடித்த முதல் பெயின்ட் காய்ந்து உலர்ந்துவிட்டது.எனவே நீங்கள் வந்து அடுத்த கோட் பெயின்ட் அடிக்கலாம் என்பதைச் சொல்ல வந்தேன்.''என்று வழிந்தார்.
இப்படித்தான்,நாம் ஒவ்வொருவரும். நாம் பலசாலியாக இருந்தால் சண்டைக்கு தயாராகி விடுகிறோம்.எதிரி பலசாலியாக இருந்தால் அங்கு நம் கோபம் செல்லுபடி ஆவதில்லை.நாம் பயந்து சரண் அடைந்து விடுகிறோம்.

சட்டப்படி

0

Posted on : Wednesday, June 20, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு அருங்காட்சியகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.அவருக்கு கதவருகே நின்று உள்ளே வரும் பார்வையாளர்களைக் கண்காணிக்கும் பணி கொடுக்கப்பட்டது.நீண்ட நாள் வேலை கிடைக்காமல் தவித்தபின் இவ்வேலை கிடைத்ததால் நன்றாக வேலை பார்த்து அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முல்லா நினைத்தார்.எனவே அவருடைய மேலாளரிடம்,''இந்த வேளையில் கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகளை தயவு செய்து சொல்லுங்கள்,''என்று கேட்டார்.அவரும் ஒரு விதிகள் அடங்கிய ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.அன்று இரவே முல்லா அதை முழுமையாகப் படித்து முடித்து விட்டார்.மறுநாள் காலை மிகவும் தைரியமாகப் பணிக்கு சென்றார்.முதலில் ஒரு பார்வையாளர் வந்தார்.அவரிடம் முல்லா,''முதலில் உங்கள் குடையை வெளியே வைத்துவிட்டு வாருங்கள்.அதன் பின்தான் நீங்கள் உள்ளே அனுமதிக்கப் படுவீர்கள்,''என்றார்.அந்தப் பார்வையாளரோ அதிர்ச்சியுடன்,''நான் குடையே எடுத்து வரவில்லையே?''என்று கேட்டார்.முல்லா அமைதியாகச் சொன்னார்,''அய்யா,நான் சொல்வது இங்குள்ள சட்டப்படிதான்.நீங்கள் அதன்படி நடக்கத்தான் வேண்டும்.எனவே நீங்கள் திரும்பப் போய் ஒரு குடையை எடுத்துவந்து  அதை வெளியே வைத்து விட்டுப் பின் உள்ளே செல்லலாம்.இங்குள்ள விதிப்படி குடையை வெளியே விட்டுச் செல்லாமல் எந்தப் பார்வையாளரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.''

கிளி பேசுமா?

0

Posted on : Wednesday, June 20, 2012 | By : ஜெயராஜன் | In :

சர்வாதிகார நாடு ஒன்றில் வாழ்ந்து வந்த ஒருவன் கிளி ஒன்றினை ஆசையாய் வளர்த்து வந்தான்.ஒரு நாள் திடீரென கிளி காணாமல் போய் விட்டது.மிகுந்த கவலையுடன் அவன் காவல் நிலையம் சென்று தன் கிளியைக் கண்டு பிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான்.அங்கிருந்த காவல் அதிகாரி அவனைப் பற்றியும் அவனுடைய கிளியைப் பற்றியும் பல விபரங்களைக் கேட்டார்.அவர் ,''உன்னுடைய கிளி நன்றாகப் பேசுமா?''என்று கேட்டார்.ஒரு நிமிடம் மிகுந்த அச்சத்துடன் யோசித்தான்.பின் அவன் தயங்கியபடியே சொன்னான்,''  கிளி நன்றாகப் பேசும் .ஆனால்  அது  பேசும் அரசியல்  கருத்துக்கள்  எல்லாம்  அதனுடைய  சொந்தக்  கருத்துக்களே. .எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.''

தைரியம்

0

Posted on : Saturday, June 02, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் காலை முல்லாவின் மனைவி மிகுந்த கோபத்துடன் முல்லாவிடம் வந்தார்.''நேற்று நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசினீர்கள் இழிவு படுத்தினீர்கள்.என்னை என்னவெல்லாமோ பண்ணுவேன் என்று மிரட்டினீர்கள்.எனக்கு இதன் காரணம் தெரிய வேண்டும்.நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்,''என்று ஆவேசமாகக் கத்தினாள்.படுத்திருந்த முல்லா அவள் நின்ற நிலைக்கு எதிர்ப்புறம் திரும்பிப் படுத்தக் கொண்டே,''நேற்று நான் தூங்கியதாக யார் சொன்னது?.உன்னிடம் சொல்ல வேண்டிய சில விசயங்களை பகலில் பேச எனக்கு தைரியம் கிடையாது.அதனால்தான் இப்படி!''என்றார்.அடுத்து நடந்ததை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!

உண்மையை எழுதவா?

0

Posted on : Saturday, June 02, 2012 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவில் நிக்சன் அதிபராக இருந்தபோது ஒரு முன்னணிப் பத்திரிகை அவரைப்பற்றி மிக அவதூறாக எழுதி வந்தது.அதனால் அவர் பெயருக்கே களங்கம் வரும் நிலை ஏற்பட்டது.பொறுக்க முடியாமல் அவர் ஒருநாள் அந்த பத்திரிகை அலுவலகம் சென்று அதன் ஆசிரியரிடம்,''என்னைப்பற்றி ஏன் இவ்வளவு அவதூறாக எழுதுகிறீர்கள்?நீங்கள் எழுதுவதில் உண்மை எள்ளளவும் கிடையாது என்று உங்களுக்கே தெரியும்.உங்கள் நோக்கம் தான் என்ன?''என்று கேட்டார்.அமைதியாக ஆசிரியர் சொன்னார்,''இதோ பாருங்கள்,மிஸ்டர் நிக்சன்,நாங்கள் உங்களைப் பற்றி எழுதுவது அனைத்தும் உண்மை இல்லை என்று அறிவோம்.ஆனால்....உங்களைப்  பற்றிய உண்மைகளை எழுதினால் விளைவுகள் இதை விட மோசமாக இருக்குமே!என்ன,உண்மையை எழுதவா?''சப்தம் போடாமல் நிக்சன் அந்த இடத்தைக் காலி செய்தார்.

கடவுளின் தேவை

0

Posted on : Saturday, June 02, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு நாள் ஒரு ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டார்.கிட்டத்தட்ட மூழ்கும் நிலை வந்து விட்டது.அவருக்கு பெரிதாகக் கடவுள் பக்தி ஒன்றும் கிடையாது.ஆனாலும் உயிர் போகும் அபாய நிலையிலவர்,''கடவுளே,என்னைக் காப்பாற்று.இனி அனுதினமும் உன்னை வணங்குவேன்,''என்று உருக ஆரம்பித்தார்.அப்போது அவர் எதிர்பாராத வகையில் ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தின் நீண்ட கிளை ஒன்று நீரை ஒட்டி தாழ இருந்ததைக் கண்டு கையால் அதைப் பற்றிக் கிளையில் ஏறிக் கொண்டார்.மெதுவாகக் கிளையில் கொஞ்சம்கொஞ்சமாக நகர்ந்தார்.கிளையில் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்த வுடன் அவர் கடவுளிடம்,''இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன்என்னைப் பற்றி நீ கவலைப் பட வேண்டாம்,''என்றார்.அப்போது அவர் அமர்ந்திருந்த கிளை முறிந்து மீண்டும் அவர் ஆற்றில் விழுந்தார்.அப்போது முல்லா உரக்க,''கடவுளே! என்னுடைய சின்ன ஜோக்கைக் கூட உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?"'என்று கூவினார்.

வரவேற்பு

0

Posted on : Saturday, June 02, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார்.அவருடன் அவருடைய நாயும் இருந்தது.வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார்.முல்லா,''நாய் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்,'' என்றார்.மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை,''முல்லா,உன் நாய் அழகாக இருக்கிறது.அதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும்.ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்?தயவு செய்து அதன் வாலை நறுக்க வேண்டாம்,''என்றார்.முல்லா வைத்தியரின் காதருகே குனிந்து,''நமக்குள் இந்த ரகசியம் இருக்கட்டும்,யாரிடமும் சொல்ல வேண்டாம். நாளை என் வீட்டிற்கு என் மாமியார் வருகிறார்.எனக்கு அவரைக் கொஞ்சமும் பிடிக்காது.எனவே அவர் வரும்போது அவரை வரவேற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபடி ஏற்பாடு செய்து விட்டேன்.ஆனால் இந்த நாய் மாட்டும் அவர் வரும்போது வாலை ஆட்டி வரவேற்பு தெரிவித்து விடும்.அதற்காகத்தான் இந்த ஏற்பாடு,''என்றார்.