உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-22

1

Posted on : Friday, October 28, 2011 | By : ஜெயராஜன் | In :

உழைத்துப் பார் ,அதிர்ஷ்டம் வரும்.
உறங்கிப்பார்,கஷ்டம் வரும்.
**********
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
**********
நோயாளிக்கு எப்போதாவது நித்திரை உண்டு.
கடன்காரனுக்கு ஒருபோதும் இல்லை.
**********
அறிவு இருப்பவர்களிடையே கருத்து வேறுபாடு வருவது இயற்கை .
அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கு அதுவே அர்த்தம்.
**********
சொர்க்கம் போவதற்கு நல்லவர்கள் உழைப்பதை விட
நரகம் போக கெட்டவர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.
**********
ஒருவரை கீழே தள்ளுவதற்காகக் குனியாதே.
கீழே விழுந்தவரை மேலே தூக்கிவிடக்குனி.
**********
இனிமையாக வாழ முடியாதவர்கள்,இனிமையாக வாழ்பவரை வெறுக்கிறார்கள்.அல்லது அவர்களை விட்டு விலகுகிறார்கள்.
**********
வறுமை என்பது பயந்தவரை அடிக்க வரும் போக்கிரி.
ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது பயந்த சாது.
**********
தூங்குபவனை எழுப்புவதற்காக பொழுது இருமுறை விடிவதில்லை.
**********
விருதுகளும் பட்டங்களும் சராசரி மனிதனுக்கு சிறப்புச் சேர்க்கின்றன.
உயர்ந்த மனிதனுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகின்றன.
தாழ்ந்த மனிதரால் அவை களங்கப் படுத்தப்படுகின்றன.
**********
வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்.
பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்துவிடும்.
**********

நமக்குள் ஒரு நரகாசுரன்.

0

Posted on : Friday, October 28, 2011 | By : ஜெயராஜன் | In :

நரகாசுரனை வதைத்து தீமைகளை அழித்து,உலகிற்கு நன்மை செய்த இறைவனுக்கு தீபாவளியன்று நன்றி செலுத்துகிறோம்.ஆனால் நமக்குள்ளே ஒரு நரகாசுரன் அழியாமல் உலவி வருகிறானே,அவனோடு வதம் நடத்தினோமா?நம்மை மிருகமாக்கும் அவனை அடையாளம் காண முடிகிறதா?
நம் நண்பன் உயரும்போது மகிழ்ந்து பாராட்டாமல் பொறாமைத் தீயில் உருகி வெடிக்கிறோமே!எல்லாம் நமக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று பேராசைப் படுகிறோமே!தர்மம்,நியாயம்,நீதி எல்லாம் மற்றவர்க்கு மட்டுமே என்று நினைக்கிறோமே!நமக்கு நாம் விரும்பியது கிடைக்க வேண்டும் என்று முறை தவறுகிறோமே!உழைக்காமல் சோம்பேறித்தனம் என்ற போர்வையில் தாமதம் என்னும் கதகதப்பில் முன்னேற முடியாமல் முடங்கிக் கிடக்கிறோமே!என்னைவிட யாருமில்லை என்ற எண்ணப் புழுதியால் அகந்தை திரை அமைத்து நம் அறிவுப் பார்வை மயங்கிக் கிடக்கிறோமே!ஆற்றலை வெளிப்படுத்தாமல், ஆகப்போவது என்ன என்று அதைரியமடைந்து வளர முடியாமல் முடங்கிக் கிடக்கிறோமே!அப்போது எல்லாம் நம்முள் ஒரு நரகாசுரன் ஆட்சி செய்கிறான்.அவனை அழித்து வதம் செய்வோம்!
அகிலம் வளர வேண்டும்,அதில் அனைவரும் உயர வேண்டும் என்ற பூவானத்தை பூக்கச் செய்வோம்!
மனித நேயம் வளர வேண்டும்,மக்கள் எல்லாம் வாழ வேண்டும் என்ற மத்தாப்பை சிரிக்க செய்வோம்!
அகந்தை என்னும் அணுகுண்டை வெடித்து செயல் இழக்க செய்வோம்!
அன்பு என்னும் அகல் விளக்கைத் தூண்டச் செய்வோம்!
உழைத்து உயர வேண்டும்,அந்த உயர்வில் மற்றவர்க்கு உதவ வேண்டும் என்ற மகிழ்ச்சி வெடியை மலரச்செய்வோம்!
அன்றுதான் உண்மையில் நமக்கு தீபாவளி!

வேலைக்காரன்

0

Posted on : Thursday, October 20, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு அரசன் பதவி அகங்காரத்தில் சொன்னான்,''நான் தான் உலகுக்கே அதிபதி.அனைவரும் எனக்கு வேலைக்காரர்கள்.''அப்போது ஒரு வயது  முதிர்ந்த பெரியவர் ஒருவர்,'இல்லை,உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்கள்தான்.யாரும் அதிபதி கிடையாது.''என்று சொன்னார்.அரசன்,''யாரது?''என்று கேட்க முதியவர் முன் வந்தார்.அரசன்,''நீ இப்போது சொன்னது என்னையும் சேர்த்தா?''என்று கேட்க முதியவர் ஆம் என்று சொன்னார்.அரசனுக்குக் கோபம் வ்நதுவிட்டது,''நீ யார்?உனக்கு என்ன வேண்டும்?''என்று கேட்க அந்த முதியவரும்,''எங்கள் ஊரில் குடிக்கத் தண்ணீர்  இல்லை.எங்கள் ஊரில் ஒரு கிணறு தோண்ட நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இங்கு வந்தேன்,''என்றார்.அரசன்,''நீயோ பிச்சைக்காரன் மாதிரி என்னிடம் வேண்டுகோளுடன் வந்துள்ளாய்.இந்த நிலையில் என்னையும் ஒரு வேலைக்காரன் என்று சொல்ல உனக்கு எவ்வளவு ஆணவம்?''என்று கத்தினான்.பெரியாவர்,''அதில் எந்த மாற்றமும் இல்லை.என்னால் அதை நிரூபிக்க முடியும்,''என்றார்.அரசன் சொன்னான்,''நீ மட்டும் அதை நிரூபித்து விட்டால் உங்கள் ஊருக்கு ஒன்றென்ன,மூன்று கிணறுகள் தோண்ட ஏற்பாடு செய்து தருகிறேன், ''என்றான்.முதியவர் ,''எங்கள்  ஊர்  வழக்கப்படி யாராவது ஒருவர் இன்னொருவரின் சவாலை ஏற்றுக் கொண்டால் அவரது பாதம் தொட்டு வணங்க வேண்டும்.உங்கள் சவாலை நான் ஏற்றுக் கொண்டதால் இப்போது நான் உங்கள் பாதத்தை வணங்கப் போகிறேன்.ஒரு நிமிடம் என் கைத்தடியைப் பிடித்துக் கொள்கிறீர்களா?''என்று சொல்ல அரசனும் முதியவரின் கைத்தடியைத் தன கையில் வாங்கிக் கொண்டான். முதியவரும் அரசனைப் பாதம் தொட்டு வணங்கிவிட்டு,''இப்போது என் கைத் தடியைத் திரும்பத் தருகிறீர்களா?''என்று கேட்க அரசனும் திரும்பக் கொடுத்து விட்டான். பெரியவர் ,''இதற்கு மேலும் நான் நிரூபிக்க வேண்டுமா?''என்று கேட்க அரசன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.முதியவர் சொன்னார்,''அரசே,நான் என் கைத்தடியைப் பிடியுங்கள் என்றதும் பிடித்தீர்கள்,திரும்பக் கொடுங்கள் என்றதும் கொடுத்தீர்கள்.நான் இட்ட வேலைகளை இப்போது நீங்கள்செய்யவில்லையா?அதனால்தான் சொல்கிறேன் இவ்வுலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே.''தன தவறை உணர்ந்த மன்னன் முதியவரின் கோரிக்கையை உடனே நிறைவேற்றினான்.

காட்டுச்செடி

0

Posted on : Thursday, October 20, 2011 | By : ஜெயராஜன் | In :

அக்பர் ஒருநாள் ஒரு கிராமத்து வழியே சென்று கொண்டிருக்கையில் ஒரு அபூர்வமான காட்சியைக் கண்டார்.வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் வேலையின் இடையே வெளியே வந்து மரத்தடிக்கு சென்று தன வயிற்றில் இருந்த குழந்தையைத் தானே பிரசவம் பார்த்து வெளியே எடுத்து அங்கிருந்த நீரில் குளிப்பாட்டி,பாலூட்டி பின் ஒரு துணியை மரத்தில் தொட்டிலாகக் கட்டி அதில் படுக்கப் போட்டுவிட்டு மீண்டும் வயலில் இறங்கித் தன வேலையைத் தொடர்ந்தாள்.அக்பர் நினைத்தார்,''இந்தப் பிரசவம் எவ்வளவு எளிதாக முடிந்தது!நம் ராணிகள் இதை சாக்காக வைத்து செய்யும் ஆர்ப்பாட்டங்களுக்கு அளவே இல்லையே!அவர்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.''அரண்மனை திரும்பியதும் கருவுற்ற பெண்களுக்கு எந்த விதமான உதவியோ,செய்முறைகளோ செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டார்.இதைக் கேள்விப்பட்டு கவலையுற்ற மகாராணி,பீர்பாலை அழைத்து மன்னரை எப்படியாவது சமாதானப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அடுத்த நாள் பீர்பால் அக்பர் தினசரி விரும்பி வரும் அவர் தோட்டத்தில் சில செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த மன்னர்,''முட்டாளே,காட்டில் வளரக் கூடிய செடிகளை தோட்டத்தில் நட்டால் எப்படி வளரும்?''என்று கேட்டார்,''அதற்கு  பீர்பால் சொன்னார்,''தினமும் கடுமையாய் உழைக்கும் கிராமத்துப் பெண்களைப் போல அரண்மனைப் பெண்களும் குழந்தை பெற முடியுமானால்,காட்டுச் செடிகள் நம் தோட்டத்தில் ஏன் வளராது?''அக்பர் தன தவறினை உணர்ந்து தன ஆணையைத் திரும்பப் பெற்றார்.