உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சொல்ல முடியாது

0

Posted on : Thursday, May 31, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதன் ஒரு காரை ஓட்டுவதுபோல கற்பனையான ஸ்டீரிங்கை
இயக்கிக் கொண்டு காலை ஆக்சிலேடரை மிதிப்பதுபோல பாவனை செய்து கொண்டே நடந்து வந்தான்.அவனுடன் உதவியாளன் போல ஒருவனும் வந்தான்.முதல் மனிதனின் வித்தியாசமான நடவடிக்கை கண்டு அங்கு ஒரு
கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.அந்த பரிதாபத்திற்குரிய மனிதனின் நடவடிக்கையைப் பார்த்து கூட்டத்தில் ஒருவர் அந்த உதவியாளரிடம் விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்,''இவருக்கு கார் ஓட்டுவது என்றால் மிகுந்த ஆசை.நிறையப் போட்டிகளில் கூடக் கலந்து பரிசுகள் வாங்கியிருக்கிறார்.
துரதிருஷ்ட வசமாக அவருக்கு மன நோய் ஏற்பட்டு விட்டது.அதனால் அவரைக் கார் ஓட்ட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.என்றாலும் பழக்க தோசத்தின் காரணமாக தினசரி இங்கு இதேபோல வந்து இந்தக் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்குக்குப்போவார்.பிறகு வந்து காரை எடுத்துசெல்வதுபோல
செல்வார்.''கூட்டத்தில் ஒருவர் கேட்டார்,''ஏனப்பா,நீயாவது நிலையை அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி இதைத் தடுக்கப் பார்க்கலாமே?''
அவன் உடனே படபடப்புடன் சொன்னான்,''தயவு செய்து சப்தம் போட்டுப் பேசாதீர்கள்.அவர் தினசரி காரை நிறுத்துவது போல் செய்து விட்டு என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து நன்றாக சுத்தம் செய்து வைக்க சொல்வார்.நானும் அதுபோல நடித்து நூறு ரூபாய் வாங்கி என் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதைக் கெடுத்து விடாதீர்கள்.''கூட்டம் வாயைப் பிளந்தது.

சிரிப்பா இது?

0

Posted on : Wednesday, May 30, 2012 | By : ஜெயராஜன் | In :

''தினமும் என் புருஷன் குடிச்சிட்டு வராருடி.''
'அவரை ஏன் விட்டு வைக்கிறே?கேட்க வேண்டியதுதானே?'
''சீ,சீ!எனக்குக் குடிக்கிற பழக்கம் எல்லாம் கிடையாது.''
**********
''ஒரு பக்க மூக்கிலே மட்டும் பொடி போடுகிறீர்களே?ஏன்?''
'மூக்குப் பொடி போடுறதை பாதியாக் குறைச்சிக்கச் சொல்லி
டாக்டர் சொன்னார்.அதுதான்.'
**********
''அந்தக் காலத்திலேயே நானும் என் மனைவியும் நாடோடி
மன்னன் படம் பார்த்துவிட்டு வந்தபின் தான் எனக்கு இரட்டைக்
குழந்தைகள்  பிறந்தார்கள்.''
'நல்ல வேளை! நீங்கள் இருவரும் அலிபாபாவும் நாற்பது
திருடர்களும் படத்துக்குப் போகவில்லை.'
**********
''எனக்கு லேசா சுண்டு விரல் நுனியில் வலிக்குது டாக்டர்.
ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்திடலாமா?''
'எப்படி ஸ்கேன் எடுக்கணும் என்று சரியாகக் கண்டு பிடித்தீர்கள்?''
''நீங்க பயங்கர பணக் கஷ்டத்திலே இருக்கிறதா வெளியே
பேசிக்கிறாங்களே!''
**********
''முன்பெல்லாம் என் காதலர் கடற்கரைக்குப் போனால் கடலை வாங்கித்தருவாரு.''
'இப்ப என்ன ஆச்சு?'
''இப்பெல்லாம் கடலைக் காண்பிக் கிறதோடு சரி.''
**********
''படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம் என்று இருக்கிறாய்?''
'புத்தகத்தை மூடலாம் என்று  இருக்கிறேன்.'
**********
''என்னங்க,என் பல் ரொம்ப வலிக்குது.''
'பல் வலிக்கிற மாதிரி அப்படி என்னத்தைக் கடித்துத் தொலைத்தாய்?'
''உங்க அம்மாவைத்தான்.''
**********
''எங்க படத்துல இடைவேளைக்கு முன் மூன்று பாட்டு,
பின் நான்கு பாட்டு.''
'அப்பா வழக்கமான இடைவேளையோடு சேர்த்து எட்டு
இடைவேளை என்று சொல்லுங்கள்!'
**********
''உங்களுக்கு அல்சர் நோயாமே?''
'அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?'
**********
''இந்தக் காலத்திலேயே பத்து ரூபாய்க்கு மரியாதையே இல்லைங்க,''
'சரியாச் சொன்னீங்க!'
''அப்பா தெரிஞ்சுதான் என் திருமணத்துக்கு பத்து ரூபாய் மொய்
செய்தீர்களா?''
********** 

கொள்ளை.

0

Posted on : Tuesday, May 29, 2012 | By : ஜெயராஜன் | In :

இந்த உலகம் முழுவதும் கொள்ளைக்கார உலகம்.கொள்ளை
அடிக்கிறவன் யார் தெரியுமா?படித்தவன்,அறிவடைந்தவன்.
அறிவில்லாதவன், கொஞ்ச அறிவுள்ளவனைக் கண்டால்
தெரு நாயைக் காண்கிற மாதிரி மெத்தப் படித்தவனுக்கு.மெத்தத்
தெரிந்தவனுக்குக் கொள்ளை அடிக்கிறது பணக்காரன் இல்லை.
பணக்காரனுக்குக் கொள்ளை அடிக்க கை கொடுக்கிறவன் மெத்தப்
படித்தவன்.படித்தவனுக்குப் பணம் அவ்வளவு தேவையில்லை.
அவனுக்கு ஆட்டி வைக்க வேண்டும்.ஆனால் கொள்ளைக்காரன்
 என்று பேர் மட்டும் வரக் கூடாது.அதை வேறு யாராவது வாங்கிக்
கொள்ள வேண்டும்.பணக்காரனைப் பணக்காரனாகச் செய்கிறவன்
அறிவுக்காரன்.பணக்காரர்களுக்கு அடிமையாகி விட்டார்கள்,
அறிவுக்காரர்கள் என்று  சொல்கிறார்களே,அதை நான் நம்ப மாட்டேன்.
பணக்காரன் என்று யாரும் இல்லை.இந்த உலகத்தில் தெரிந்தவன்,
தெரியாதவன் என்று இரண்டு ஜாதி தான் உண்டு.தெரிந்தவன்
எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு தெரியாதவனைப் பறக்க
விடுகிறான்.அடிமைப் படுத்துகிறான்.  அறிவுதான்  கன்னக்கோல்.
கொள்ளை,கற்பழிக்க,திருட,ஏமாற்ற எல்லாவற்றுக்கும் உதவுகிற
கன்னக்கோல் அறிவு.அறிவு வந்தால் கபடம் வரும்,சூது வரும்,
கொள்ளை வரும்,நாசம் வரும்.
                    ---'மரப்பசு'என்ற நாவலில் தி.ஜானகிராமன்.

எப்படி முடிந்தது?

0

Posted on : Monday, May 28, 2012 | By : ஜெயராஜன் | In :

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.ஜெர்மன் உளவாளி ஒருவனை எதிரிகள் பார்த்து விட்டனர்.உடனே அவனைப் பிடிக்க விரைந்தனர்.எதிரிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்று எண்ணிய உளவாளி மிக வேகமாக ஓடத் துவங்கினான்.
எதிரிகளும்  பின் தொடர்ந்தனர்.ஓடிக் கொண்டிருந்த உளவாளி வழியில்
சாலை ஓரமாய் ஒரு சைக்கிள் கிடப்பதைப் பார்த்தான்.மிகுந்த மகிழ்ச்சியுடன்
அதில் ஏறி சைக்கிளை விரைவாக செலுத்தினான்.நீண்ட நேரத்திற்குப்
 பின்  திரும்பிப் பார்த்தபோது யாரும் பின் தொடரவில்லை என்பது
உறுதியாகத் தெரிந்தது.மெதுவாக சைக்கிளை விட்டு இறங்கினான்.
மெதுவாக யோசித்துக் கொண்டே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்தான்.
அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது.அவனுக்கு சிறு வயது முதலே சைக்கிள்  ஓட்ட வராது.இப்போது எப்படி இவ்வளவு தூரம்
அனாயசமாக சைக்கிள் ஓட்ட முடிந்தது என்பதை நினைத்து வியந்தான்.
எப்படியோ இனி சைக்கிள் ஓட்டுவது எளிதுதான் என்று நினைத்தான்.
அதை சோதித்துப் பார்க்க மறுபடியும் சைக்கிளில் ஏற முயன்றான்.
அந்தோ!அவனால் இப்போது சைக்கிளில் ஏறக் கூட முடியவில்லை.
பல முறை முயற்சித்தும் முடியவே இல்லை.எப்படியோ எதிரிகளிடம்
இருந்து தப்பி வந்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே.
ஆபத்துக் காலத்தில் நமக்குள் ஒரு அதிசயமான சக்தி  வந்து விடுகிறது என்பதையே  இந்நிகழ்ச்சி தெளிவுறுத்துகிறது.

இரக்கம்

0

Posted on : Saturday, May 26, 2012 | By : ஜெயராஜன் | In :

மிக அழகான விலைமாது ஒருத்தி ஒரு ஊரில் இருந்தாள் அவ்வூர் பணக்காரர்களும் பெரிய மனிதர்களும் .ஒரு நாளைக்கு
 ஒரு லட்சம் கொடுத்தேனும் அவளுடன்  தங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதினார்கள். அவள் தினசரி வந்து செல்லும் பாதையில் ஏழைத் தொழிலாளர்கள்  வாழ்ந்த ஒரு பகுதி இருந்தது.தினசரி
 அவள் செல்வதை அவர்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவள் அவர்களின் கற்பனைக்கு எட்டாத
 உயரத்தில் இருந்தாள் .ஒருநாள் அவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவு செய்தனர்.
அதாவது அவர்கள் நூறு பேர் சேர்ந்து ஆளுக்கு
 ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு லட்சம் சேர்க்க வேண்டியது;அதன்பின்
அவர்கள் பெயர்களைத்  தாள்களில் எழுதி
குலுக்கல்  முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்த அழகியிடம் அனுப்பி
அவன் அனுபவத்தை பின் எல்லோரும்
கேட்டுக் கொள்வது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் அங்கு சென்றபோது
 அவனை அழைத்து அவள்
வரவேற்றாள்.
காலையில் அவன் புறப்படும்போது அவள் கேட்டாள் ,''உங்களைப் பார்த்தால்  ஏழை போலத் தெரிகிறது.உங்களால் எப்படி ஒரு லட்சம் பிரட்ட முடிந்தது?''அவன் நடந்ததை  சொன்னான். அவள் மிக உணர்ச்சி வசப்பட்டு அவனிடம் சொன்னாள் ,''எனக்கு இதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் அதே சமயம்
.வருத்தமாகவும் உள்ளது. உங்கள் பணம் எனக்கு வேண்டாம்,''என்று கண்ணீர் மல்கச் சொன்னாள்.தங்கள்
 பணம் ஒரு லட்சமும் திரும்பக் கிடைக்கும்
என்று அவன் மகிழ்ச்சியுடன் காத்திருக்க அவள் ஆயிரம் ரூபாயை அவனிடம்
கொடுத்து,''உங்கள் பணத்தை எடுத்துக்
கொள்ளுங்கள்,''என்றாள் .அவன் மயக்கம் போடாத குறைதான்.

முதல் கேள்வி

0

Posted on : Thursday, May 24, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிறுவன் தன்  தந்தையிடம்,''அப்பா,உனக்கு அறிவு இருக்கா?''என்று கேட்டான்.தந்தையும் சிரித்துக் கொண்டே,''ஓ ,இருக்கே !''என்றார் . சிறுவனும் விடாது ''சரி,நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு.நான்கை ஒன்றால் பெருக்கினால்  என்ன வரும்?''என்று கேட்க அவரும் நான்கு என்று சொன்னார்.அடுத்து நான்கை
இரண்டால் பெருக்க என்ன வரும் என்று கேட்க,எட்டு என்று விடை சொன்னார்.
பின் நான்கை மூன்றால் பெருக்கினால் என்ன வரும் கேட்க அதற்கும் பன்னிரண்டு
என்று சொன்னார்.பையன் உற்சாகமாக,''முதலில் உன்னிடம் நான் என்ன கேள்வி
 கேட்டேன்?'''என்று கேட்டான் தந்தை சொன்னார்,''நான்கை ஒன்றால்
பெருக்கினால் என்ன
வரும் என்று கேட்டாய்,''என்றார்.பையன் உற்சாகமாகத் தாவிக் கொண்டே சொன்னான்,''அதுவா முதல் கேள்வி?உனக்கு அறிவு இருக்கா
 என்று கேட்டேனே,அது  தானே  முதல்  கேள்வி ?''

மனதின் வலிமை

0

Posted on : Tuesday, May 15, 2012 | By : ஜெயராஜன் | In :

நெப்போலியன் ஒரு பெரிய போரில் ஈடுபட்டிருந்தார்.போரின் விதியை நிர்ணயிக்கும் ஒரு தகவலுக்காகக் காத்திருந்தார்.அப்போது புழுதி பறக்க ஒரு வீரன் குதிரையில் காற்றினும் கடுகி வந்து கொண்டிருந்தான்.வந்தவன் நெப்போலியனுக்கு முன் வந்து கம்பீரமாக இறங்கி முறைப்படி மரியாதை செலுத்திவிட்டு அந்த முக்கியத் தகவலை சொன்னான்.. நெப்போலியனுக்கு மிக்க மகிழ்ச்சி.வந்த பதில் அவருக்கு சாதகமாக இருந்தது.தகவலைக் கொண்டு வந்த வீரனுக்கு ஏதாவது பரிசு கொடுக்க எண்ணி அவ்வீரனைப் பார்த்தார்.அப்போதுதான் அவன் உடல் முழுவது ரத்தம் வழிந்து
கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.உடனே அவனை நோக்கி,''நீ காயப் பட்டிருக்கிறாயா?''என்று கேட்டார்.அவன் உற்சாகம் சிறிதும் குறையாது பெருமையுடன்,''இல்லை அய்யா,நான் இறந்து கொண்டிருக்கிறேன்,''(NAY SIR,I AM KILLED.)என்று சொல்லியவாறு நெப்போலியன் காலடியில் விழுந்து விட்டான்.அவனைத் தூக்கிப் பார்த்தபோது அவன் உயிர் பிரிந்திருந்தது.உடல் முழுவதும் காயப்பட்டு இறக்கும் சூழ்நிலையிலும் தன உயிரைப் பிடித்துக்கொண்டு தன் கடமையை நிறைவேற்றிய அவன் மன வலிமை எத்தகையது?அவனுடைய விசுவாசம் எவ்வளவு உயரியது?தற்கொலை

0

Posted on : Wednesday, May 02, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்த அலுவலகத்தில் பணியாற்றும் தமிழர்,குஜராத்தி,சர்தார்ஜி ஆகிய மூன்று நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவர்.தமிழர் தினமும் இட்லி சட்னி,குஜராத்தி தினமும் பிரியாணி,சர்தார்ஜி தினமும் சப்பாத்தி சப்ஜி கொண்டு வருவது வழக்கம்.தினசரி ஒரே மாதிரி சாப்பிட்டதில் அலுத்துப்போய்  தமிழர் சொன்னார்,''நாளை மட்டும் இதே இட்லி சட்னி எனது டிபன் பாக்ஸில் இருந்தால் நான் இந்த ஆறாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்வேன்.''குஜராத்தியும் மறுநாள் உணவுக்கு பிரியாணி இருந்தால் நானும் அவ்வாறே குதிப்பேன் என்று சொல்ல,சர்தார்ஜியும் மறுநாள் சப்பாத்தியும் சப்ஜியும் இருந்தால் தானும் குதிப்பதாகச் சொன்னார்.மறுநாள் மூவரும் டிபன் பாக்ஸ்களைத் திறக்க உணவில் எந்த மாற்றமும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.சொன்னபடி மூவரும் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.மூவரது மனைவியர்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வந்ததும் தற்கொலைக்கான காரணத்தை அறிந்தனர்.''இப்படித் தெரிந்திருந்தால் இட்லி சட்னி கொடுத்திருக்க மாட்டேனே'' என்று தமிழ்ப்பெண் புலம்ப,பிரியாணி அனுப்பியிருக்க மாட்டேனே என்று குஜராத்திப்பேன் கதற,சர்தாரின் மனைவி மட்டும் அழுது கொண்டே சொன்னார்,''ஐயோ,சப்பாத்தி செய்ததும் அதை டிபன் பாக்சில் வைத்ததும் அவர்தானே!''

சூழல்

0

Posted on : Tuesday, May 01, 2012 | By : ஜெயராஜன் | In :

பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி:
பிரான்சில் பிரபுக்கள் ஆண்ட காலத்தில் பாஸ்டைல் என்ற மாபெரும் சிறை ஒன்று இருந்தது ஆட்சிக்கு எதிர்ப்பாளர் யாராயினும் இச்சிறையில் இருந்த இருண்ட குகை போன்ற செல்களுக்குள் அடைத்து விடுவார்கள்.விலங்கு பூட்டிய சாவியை உள்ளே இருந்த கிணற்றில் போட்டு விடுவார்கள்.செல்கள் என்றும் திறக்கப்பட மாட்டா.உள்ளேயே சாக வேண்டியதுதான் .இறந்த பின் கை விலங்குகளை வெட்டி எடுப்பார்கள்.
பிரெஞ்சுப் புரட்சியின்போது புரட்சியாளர்கள் முதலாவதாக அச்சிறையை உடைத்து கைதிகள் அனைவரையும் வெளியே அழைத்தனர்.ஆனால் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி.கைதிகள் வெளியே வர மறுத்து விட்டனர். முப்பது ஆண்டுகளுக்குமேல் வானம் பார்க்காமல் நிலவைப் பார்க்காமல் உலகம் பார்க்காமல் விலங்குகளுடன் வாழ்ந்த அவர்களுக்கு அந்த வாழ்வு பழக்கப் பட்டு விட்டது.அவர்களுக்கு வெளியே வர பயம்.வெளியே வந்தால் உறவினர் யார் இருப்பார்?எத்தனைபேர் இறந்திருப்பர்?உறவினர் பேர்கள் எதுவும் ஞாபகம் இல்லையே!அவர்களை அடையாளம் காண இயலுமா?அவர்கள் எங்கே போவார்கள்?உணவுக்கும்,உடைக்கும் உறங்கவும் எங்கே போவது?வயதாகி நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது உழைக்க முடியுமா?உழைக்கத் தயாராக இருந்தாலும் யார் வேலை கொடுப்பார்கள்?யார் இவர்களை நம்புவார்கள்?இங்கே சிறையில் எல்லாம் வசதியாகத்தான் இருக்கிறது வெளியே போனால்தான் சிரமம்.சிறையில் ஆரம்பத்தில் கொடுமையாகத்தான் இருந்தது.காலப்போக்கில் எல்லாம் பழகிவிட்டது.சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து வாழும் மாபெரும் சக்தி மனிதனுக்கு உண்டு.நாளைய தினம் பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்தாகிவிட்டது.இப்போது எதற்கு வெளியே?
அவர்கள் கூறியதை புரட்சிக்காரர்களால் நம்ப முடியவில்லை.''உங்களுக்கு சுதந்திரம்தானே கொடுக்கிறோம்,''என்று சொல்லி விலங்குகளை உடைத்து அனைவரையும் பலவந்தமாக வெளிய கொண்டு வந்தனர்.சிறைக்கு உள்ளே போகும்போதும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக,இப்போது வெளியே வந்ததும் விருப்பத்துக்கு மாறாக!
வெளியே வந்த பலரால் கண்களைத் திறக்க முடியவில்லை.ஒரே கூச்சம்.பலருக்கு நடக்கவே வரவில்லை.வெளிய அவர்களை வரவேற்க யாரும் இல்லை.சவங்களைப்போல,பேய்களைப்போல நகரில் இலக்கில்லாமல் அலைந்தார்கள்.அன்று மாலையே பெரும்பாலானோர் சிறைக்கே திரும்பினர்.புரட்சிக்காரர்கள் அவர்களைத் தடுத்தபோது அவர்கள் சொன்னார்கள்,''கை விலங்குகள் இல்லாமல் எங்களால் தூங்க முடியாது.எல்லாம் பழகி போய்விட்டது.ஏதோ இழந்துவிட்டதுபோல இருக்கிறது.எங்களைச் சித்திரவதை செய்யாதீர்கள்.வாழ்க்கை எங்களைக் கஷ்டப்படுத்தியது போதும்.எங்கள் வாழ்க்கை முறையை நாங்கள் மாற்ற விரும்பவில்லை.''புரட்சிக்காரர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அவரவர் சூழல் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது!.