உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனப்பக்குவம்

0

Posted on : Wednesday, August 31, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண் ஜென் ஞானி தன பயணத்தில் ஒருநாள் இரவு ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.அந்த ஊர்க்காரர்களுக்கு ஜென கொளகைக்காரகளைக் கண்டாலே பிடிக்காது.அந்த பெண் துறவியும் ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி தங்க இடம் கேட்டார்.ஒருவரும் இடம் தராததுடன் எல்லோரும் கதவை சாத்திவிட்டனர்.வேறு வழியில்லாததால் கிராமத்தின் வெளியே தங்க நேர்ந்தது.அவர் ஒரு பழ மரத்தடியில் தங்கிக் கொண்டார்.கடுமையான குளிர் .காட்டு விலங்குகள் வேறு கத்திக் கொண்டிருந்தன.களைப்பின் மிகுதியால்  சற்றே கண்ணயர்ந்து தூங்கினார்.நள்ளிரவில் குளிர் தாங்க முடியாது விழித்துக் கொண்டார்.வானத்தில் முழுநிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.மரத்திலிருந்து மணமுடைய மலர்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.வயலில் செடிகள் காற்றுக்கு அழகாக ஆடிக் கொண்டிருந்தன.இந்த மனோரம்மியமான காட்சிகளைக் கண்டு மனம் மயங்கினார் அந்தத் துறவி.மறுநாள் காலை அவர் ஒவ்வொருவர் வீடாகச் சென்று அவர்கள் தனக்கு தங்க இடம் கொடுக்காததற்கு நன்றி கூறினார்.கிராமத்து மக்கள் புரியாமல் விழிக்க அவர் சொன்னார்,''உங்களில் யாரேனும் தங்க இடம் கொடுத்திருந்தால் நேற்று இரவு இயற்கையின் அழகினை அள்ளிப் பருகியிருக்க மாட்டேன்.தங்க நிலவினை காணவும் , மலர்களின் மணத்தை அறியவும், மூடுபனியை ரசிக்கவும் வயல்செடிகளின் நாட்டியத்தையும் காண வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி,''எந்த சூழ்நிலையிலும் இன்பம் அடையும் மனப்பக்குவம் தான் ஜென் வழிமுறைகள்.

நேசத்திற்குரியவர்

0

Posted on : Wednesday, August 31, 2011 | By : ஜெயராஜன் | In :

குத்துச் சண்டையில்பிறரை வீழ்த்துபவனைவிட கோபம் வரும்போது தன்னைத் தானே அடக்கிக் கொள்பவனே வலிமை வாய்ந்தவன் ஆவான்.
உங்களில் ஒருவனுக்கு நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும்.அப்போதும் கோபம் குறையாவிடில் படுத்துக் கொள்ளட்டும்.எவர் பழிவாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்து விடுகிறாரோ அவரே இறைவனின் நேசத்திற்கு உரியவர் ஆவார்.
                                                   --அண்ணல் நபிகள் நாயகம்.

பெரிய குற்றம்

2

Posted on : Monday, August 29, 2011 | By : ஜெயராஜன் | In :

'தாவோ 'தத்துவத்தின் தந்தை லா வோ த்சு சீனாவின் பெரிய ஞானி.அவர் வாழ்ந்தபோது இருந்த  அரசர் ஒருநாள் அவரிடம் வந்து ,''நீங்கள் பெரிய ஞானி நீங்கள் என் அரசவையில் நீதிபதியாக இருந்தால் எனக்குப் பெருமையாக இருக்கும்,''என்றார்.ஞானி எவ்வளவோ மறுத்து,பின்னால் வருத்தப்படக்கூடாது என்று சொன்ன போதிலும்  அரசன் மிகவும் வற்புறுத்தவே அவரும் ஒத்துக் கொண்டார்.முதல் நாள் ஒரு வழக்கு வந்தது. பணக்காரன் ஒருவன் வந்து,''இவன் என் வீட்டில் புகுந்து திருடி விட்டான்.இவனுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்,''என்று வேண்டிக் கொண்டார்.ஞானியும் வழக்கை விசாரித்துவிட்டு,''திருடியவனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை.இந்தப் பணக்காரனுக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை,''என்று தீர்ப்புக் கூறினார்.அரசனே இந்தத் தீர்ப்பைக் கேட்டுத் திடுக்கிட்டான்.பணக்காரனோ அலறிக்கொண்டே,''இது என்ன அநியாயமான தீர்ப்பு?''என்று கேட்டான்.ஞானி சொன்னார்,''ஒருவனைத் திருடனாக்கியது நீ செய்த குற்றம்.இவன் வறுமைக்கு நீதான் காரணம்.இவனாவது ஒருவனிடம்தான் திருடியிருக்கிறான்.நீயோ பலருடைய சொத்தைத் திருடியுள்ளாய்.ஏழைகளின் உழைப்பை நீ திருடியுள்ளாய்.நீ செய்த குற்றங்கள் இரண்டு.ஒன்று பிறர் உழைப்பத் திருடியது.மற்றொன்று நல்லவன் ஒருவனைத் திருடத் தூண்டியது.நியாயமாகப் பார்த்தால் உனக்குக் கூடுதல் தண்டனை தந்திருக்க வேண்டும்.நான் இரக்கம் உடையவன்.அதனால் உனக்குக் குறைந்த தண்டனை தான் கொடுத்திருக்கிறேன்,''அவர் அதற்குப்பின்னரும் நீதிபதியாய் இருந்திருப்பார் என்று  எண்ணுகிறீர்களா?

எதிர்த்துப்பேசு

0

Posted on : Monday, August 29, 2011 | By : ஜெயராஜன் | In :

ஊருக்கு வந்த துறவியிடம் ஒருவன் சொன்னான்,''இந்த ஊரில் என்னை எல்லோரும் முட்டாள் என்று சொல்கிறார்கள் நான் என்ன சொன்னாலும் சிரிக்கிறார்கள்.என் பிரச்சினை தீர ஒரு வழிசொல்லுங்கள்.துறவி சொன்னார்,''நீ யார் எது பேசினாலும் அதை மறுத்துப்பேசு.யாரவது ஒருவனை நல்லவன் என்று சொன்னால் நீ தீயவன் என்று சொல்.கடவுள் உண்டு என்றால்  இல்லை என்று சொல்.ஏதாவது ஆணித்தரமாக யாராவது பேசினால் நிரூபிக்க முடியுமா என்று கேள்.''அவன் துறவியிடம் கேட்டான்,''அவர்கள் நிரூபித்து விட்டால் நான் முட்டாளாகிவிடுவேனே?''துறவி சிரித்துக்கொண்டே சொன்னார்,''யாராலும் நிரூபிக்க முடியாது.இந்த பிரபஞ்சம் மர்மமானது.வாழ்க்கை மர்மமானது.இதில் யாரும் எதையும் நிரூபிக்க முடியாது.பயப்படாதே.''அவன் துறவி சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.யார் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசினான்.எதைச்சொன்னாலும் நிரூபிக்கச் சொன்னான்.ஒருவராலும் அவனிடம் பேச முடிய வில்லை.ஊரில் அவனுக்கு மரியாதை கூடத் துவங்கியது.''அவன் இப்போது பெரிய அறிவாளி ஆகி விட்டான்,''என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்
                                       --கோகோல் என்ற இரஷ்ய எழுத்தாளரின் கதை.

இதயமும் மூளையும்

0

Posted on : Saturday, August 27, 2011 | By : ஜெயராஜன் | In :

இந்த உலகம் முழுவதும் அன்பினால் செலுத்தப்படவில்லை.அது தந்திரத்தால் செலுத்தப்படுகிறது.இந்த உலகில் வெற்றி பெற உங்களுக்கு அன்பு தேவையில்லை.உங்களுக்குக் கல்லாகிப் போன ஒரு இதயமும் கூரிய புத்தியும் தான் தேவை.சொல்லப்போனால் உங்களுக்கு இதயமே தேவையில்லை.ஏனெனில் நீங்கள் வளரும் முறை,கலாச்சாரம்,சமுதாயம் ஆகியவை அன்பு செலுத்தும் திறனைக் கொன்று விட்டன.இதயம் உள்ள மனிதர்கள் நசுக்கப்பட்டு சுரண்டப்பட்டு அடக்கியாளப் படுகின்றனர்.இந்த உலகம் தந்திரக்காரர்களால்  இதயமில்லாத கொடூரமானவர்களால் நடத்திச் செல்லப்படுகிறது.எனவே வளரும் பிள்ளையும் தனது இதயத்தை இழக்கும்படி இந்த சமூகம் செய்கிறது.எனவே அவனது சக்தி முழுவதும் மூளையை நோக்கி செலுத்தப்படுகிறது.இதயம் அலட்சியப்படுத்தப் படுகிறது. இதயம் எப்போதாவது ஏதாவது சொன்னாலும்,அது உங்கள் செவியை வந்து அடைவதில்லை.உங்கள் தலையில்,மூளையில் ஒலிஅதிகம் இருப்பதால் இதயத்தின் குரல் எழும்பாது.மெல்ல மெல்ல இதயம்,அது அலட்சியப் படுத்தப் படுவதால் சொல்லுவதை நிறுத்தி மௌனமாகி விடுகிறது.சமூகத்தைப் புத்தி நடத்திச் செல்கிறது.அன்பு நடத்திச் சென்றால் நாம்,முற்றிலும் மாறுபட்ட,அதிக அன்பு கொண்ட,குறைந்த வெறுப்பு கொண்ட,போர்களற்ற  உலகில் வாழ்ந்து கொண்டிருப்போம்.அழிக்கும் முறைகளை உருவாக்குவதை என்றும் இதயம் ஆதரிக்காது.அது வாழ்விற்காக மட்டுமே உயிர்க்கிறது; துடிக்கிறது.

உயிருள்ள புத்தர் .

0

Posted on : Saturday, August 27, 2011 | By : ஜெயராஜன் | In :

கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த  ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது.அன்று இரவு  கடுங்குளிர்..கிழவரால்  குளிரைத் தாங்க முடியவில்லை.மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார்.மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கிழவரிடம்,''நீங்கள் என்ன செய்கிறீர்கள்?உங்களுக்குப் பைத்தியமா?தெய்வத்தையே எரித்து விட்டீர்களே''என்று கோபத்தில் கதறினார்.உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார்.அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது,அக்கிழவர் சொன்னார்,''நான் எலும்புகளைத் தேடுகிறேன்.நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண்டுமே?''கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார்.மறுநாள் காலை அக்கிழவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.அக்கிழவர் அங்குள்ள ஒரு மைல் கல்லின் முன் அமர்ந்து பூக்களைத் தூவி,''புத்தம் சரணம் கச்சாமி,''என்று  பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.குரு அவர் அருகே சென்று,''என்ன செய்கிறீர்கள்?மைல் கல்தான்  புத்தரா?''என்று கேட்டார்.கிழவர் சொன்னார், ''மரம் புத்தராகும்போது மைல் கல் புத்தராகக் கூடாதா?நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது,என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான்.அந்த மரச்சிலைகள் உயிரற்றவை.அந்த மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்களே?'

மனைவிக்கு பயப்படாதவன்

1

Posted on : Friday, August 26, 2011 | By : ஜெயராஜன் | In :

அக்பர் ஒருநாள் பீர்பாலிடம் மனைவிக்கு பயப்படாத கணவன் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.பீர்பாலும் தனக்குத் தெரிந்தவரை யாரும் அப்படியில்லை என்றார்.அக்பர்,''பீர்பால்,இதோ.ஒரு வெள்ளைக்குதிரையும், ஒரு கறுப்புக் குதிரையையும் எடுத்துக் கொள்.யாரேனும் விதிவிலக்கான ஆள் இருந்தால் அவனுக்கு அவன் விரும்பும் ஒரு குதிரையை அரசனின் பரிசு என்று சொல்லிக்கொடு ''என்றார்.பீர்பாலும் குதிரைகளுடன் பல ஊர்களுக்கு சென்று ஒவ்வொருவரை விசாரித்தும் அதுமாதிரியான ஆள் அகப்படவில்லை. ஒரு குதிரைக்காக யாரும் தங்கள் வாழ்வைப் பாழ்படுத்திக்  கொள்ள  விரும்பவில்லை.இறுதியில் சோர்ந்துபோய் ஒரு மல்யுத்த வீரனைக் கண்டு அவனிடம் இக்கேள்வியைக் கேட்டார்.அவன் இவரைக் கை குலுக்கிய விதத்திலிருந்தே அவன் நிச்சயம் மனைவிக்கு பயந்தவன் அல்ல என்று முடிவு செய்து,''எங்கே உன் மனைவி?''என்று கேட்க அவனும் தன மனைவியை நோக்கிக் கையை காட்டினான்.அங்கு மிகவும் சிறிய உருவம் கொண்ட மெலிந்த ஒரு பெண் சமைத்துக் கொண்டிருந்தாள்.பீர்பால் இதை மேற்கொண்டு விசாரிக்க வேண்டியதில்லை என்று கருதி,''இந்த இரண்டு குதிரைகளில் ஒன்றை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மனைவிக்குப் பயப்படாத உனக்கு இது அரசனின் பரிசு,''என்றார்.அவன் கறுப்புக் குதிரையை தேர்ந்தெடுத்தான்.அப்போது அவன் மனைவி உரத்த குரலில் கறுப்புக் குதிரை வேண்டாம்,வெள்ளை வேண்டும் ''என்றாள்.அவன் கருப்பே இருக்கட்டும் என்று சொல்ல அவள் மீண்டும் கத்தினாள்,''நீ கறுப்புக் குதிரையை எடுத்தால் நடப்பதே வேறு.உன் வாழ்வை நரகமாக்கிவிடுவேன்,ஜாக்கிரதை,''வீரனும்,''சரி,சரி,நான் வெள்ளைக் குதிரையையே எடுத்துக்  கொள்கிறேன்.நீ கத்தாமல் இரு,,''என்றான்.பீர்பால் உடனே ,''உனக்கு எதுவும் கிடையாது.நீ தோற்று விட்டாய்.நீயும் மனைவிக்குப் பயந்தவன்தான்.இங்கு விதிவிலக்கானவர் யாருமே இல்லை.''என்றார்.

தனித்தன்மை

0

Posted on : Friday, August 26, 2011 | By : ஜெயராஜன் | In :

இரண்டு விதமான உயர்வு மனப்பான்மைகள் உள்ளன.ஒன்றில் நீங்கள் உங்கள் தாழ்வு மனப்பான்மையை மூடி மறைக்கிறீர்கள்.நீங்கள் ஒரு முகமூடியைப் பயன்படுத்துகிறீர்கள்.முகமூடிக்குப் பின்னே தாழ்வு மனப்பான்மை உள்ளது.இந்த உயர்வு மனப்பான்மை மேலோட்டமானது. ஆழத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதால் இது உண்மையான உயர்வு மனோபாவம் கிடையாது.தாழ்வு மனோபாவம் இல்லாமையே இன்னொரு உயர்வு மனப்பான்மை ஆகும்.நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்காத வரை எப்படித் தாழ்வானவராக இருக்க முடியும்?இவ்வுலகில் நீங்கள் மட்டும் இருந்தால் உங்களை நீங்கள் யாருடன் ஒப்பிட முடியும்?எப்படி நீங்கள் தாழ்ந்தவராக இருக்க முடியும்?தனியே இருக்கும்போது நீங்கள் உயர்ந்தவரும் அல்ல'தாழ்ந்தவரும் அல்ல.இதுதான் ஆன்மாவின் உயர்ந்த தன்மை.அது யாருடனும் ஒப்பிடுவதில்லை.நீங்கள் உங்களை யாருடனும் எதற்கும் ஒப்பிட வேண்டாம்.நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்.நீங்கள்  சிறப்பானவர்.

0

Posted on : Thursday, August 25, 2011 | By : ஜெயராஜன் | In :

மூன்று நண்பர்கள் ஒரு உணவகத்துக்கு சென்று மூன்று காபி கேட்டதும் மூன்று பேர் முன்னரும் காபி வைக்கப்பட்டது.அப்போது கூட்டமாக அங்கு திரிந்து கொண்டிருந்த ஈக்களில் மூன்று மூன்று பேரின் காபியிலும் விழுந்தது.ஒருவன் வெறுத்துப்போய் தன கிளாசைத் தள்ளி வைத்தான்.அடுத்தவன் ஈயை வெளியே எடுத்தான் தூக்கி எறிந்தான் காபியைக் குடித்தான்.மூன்றாமவன் ஈயை வெளியே எடுத்தான்.அந்த ஈயை கிளாசுக்குல்லேயே உதறினான்.அவன் ஈயைப் பார்த்து சொன்னான்,''நீ குடித்ததைத் துப்பிவிடு என் காபியில் உனக்குப் பங்கு தர முடியாது.''

மூன்று கால்கள்

0

Posted on : Thursday, August 25, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தன நண்பரின் வீட்டிற்குச் சென்றார்.அங்கு ஒரு பன்றி வளர்க்கப்படுவதைக் கண்டார்.உடனே நண்பர் அப்பன்றியின் குணாதிசயங்களைப் பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தார்,''ஒரு முறை வீட்டில் ஒரு பகுதியில் தீப்பிடித்து விட்டது உடனே இந்த பன்றி அலாரம் அடித்து எல்லோரும் வந்து பெரும் சேதத்தைத் தவிர்க்க முடிந்தது.இன்னொரு முறை தொட்டியில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த என் பையனைக் காப்பாற்றியது.ஒரு முறை வந்த திருடனைக் கடித்ததில் அவன் ஓடியே விட்டான்.''வந்தவர்,''கேட்கவே மிக மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.அது சரி அது ஏன் மூன்று கால்களுடன் இருக்கிறது?''என்று கேட்டார்.நண்பர் சொன்னார்,''என்னதான் இருந்தாலும் ஒரு பன்றியை முழுதாக ஒரே நாளில் சாப்பிட முடியாதல்லவா?''

நீங்கள் யார்?

0

Posted on : Wednesday, August 24, 2011 | By : ஜெயராஜன் | In :

போரில் இறந்த தனது மகன் அபிமன்யுவை நினைத்து ஏங்கினான் அர்ஜுனன். அவனை சொர்க்கத்திலாவது போய் நேரடியாக சந்தித்தால்தான் மனக் கவலை தீருமெனக் கண்ணனிடம் புலம்ப கண்ணனும் அர்ஜுனனை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றான்.அப்போது அங்கு அபிமன்யு மகிழ்வுடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தான்.மனம் மகிழ்ந்து அர்ஜுனன் அவனிடம் செல்ல,அபிமன்யுவோ,''நீங்கள் யார்/?''என வினவினான். அதிர்ச்சியடைந்தவனாக அர்ஜுனன் கண்ணனை நோக்கினான்.கண்ணன் அமைதியாக சொன்னான்,''அர்ஜுனா,அபிமன்யு பூலோகத்தில் உன்னுடன் வாழ வேண்டிய காலம் வரை வாழ்ந்தான்.அக்கடமை முடிந்ததும் உனக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தம் முடிந்து விடுகிறது.எனவே அவனுக்கு உன்னை இப்போது தெரியாது.''

அச்சம்

0

Posted on : Wednesday, August 24, 2011 | By : ஜெயராஜன் | In :

அந்நிய நாட்டின் மீது இருமுறை போர் தொடுத்து வெற்றி கண்ட ஒரு மன்னன்,தோற்றவன் எந்த நேரமும் பழி வாங்கலாம் என்ற அச்சத்தில் இருந்தான்.ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடப்போனான்.துறவி ஒருவரை சந்தித்தான்.துறவியிடம் தன பிரச்சினை குறித்து சிறிது நேரம் பேசி விட்டு, ''உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?''எனக் கேட்டான்.''என்னுடைய அடிமையின் அடிமை நீ.நீ எனக்கு எப்படி உதவ முடியும்?''என்று கேட்டார் துறவி.வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு,''எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''என்று கேட்டான்.துறவி சொன்னார்,''என்னிடம் ஒரு அடிமை இருக்கிறான்.அவன் உனக்கு எஜமானன்,''மன்னனும்,''உங்களிடம் அடிமையாயிருப்பது யார்?''எனக் கேட்டான்.''அச்சம் ''என்றார் துறவி.தலை குனிந்தான் மன்னன்.பதவியில் இருப்பவர்கள் பயத்துக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.அந்த அச்சத்தின் காரணமாகவே பதவியையும் விடாமல்  பற்றிக் கொள்கிறார்கள்.

தர்மம்

0

Posted on : Tuesday, August 23, 2011 | By : ஜெயராஜன் | In :

பதிமூன்று ஆண்டு காலம் வனவாசம் என்று காட்டில் பொறுமையாக இருந்த தர்மரைப் பார்த்து பாஞ்சாலி துளைத்தெடுத்தாள்,''பதிமூன்று ஆண்டுகள் காத்திராமல் இடையில் நீர் போய் ஏன் துரியோதனனைக் கொல்லக் கூடாது? சத்தியம்,பொறுமை என்று தர்மத்தைக் கட்டி அழுகிறீரே,நீர் காப்பாற்றும் தர்மம் உம்மைக் காப்பாற்றவில்லையே?காட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டதே?''தர்மர் அமைதியாகச் சொன்னார்,''பெண்ணே,தர்மம் என்னைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் நான் தர்மத்தைக் காப்பாற்றவில்லை.  அப்படிச் செய்தால் அது வியாபாரம்.நான் தர்ம வியாபாரி அல்ல.தர்மத்தைக் காப்பது என் பிறவிக்கடன்.தர்மங்கள் என்னைக் காத்தாலும்,காக்காது போனாலும் அவற்றைக் காப்பது என் கடமை.அதிலிருந்து நான் நழுவவே முடியாது.''

குயில்

0

Posted on : Tuesday, August 23, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு குரு தினசரி காலையில் தன சீடர்களுக்கு போதனை செய்வதுண்டு.ஒரு நாள் காலை வழக்கம்போல தன போதனையை ஆரம்பித்தார்.அப்போது அங்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளையில் ஒரு குயில் வந்து அமர்ந்து கூவத் துவங்கியது.அந்த ரம்மியமான காலைப் பொழுதினிலே அந்தக் குயில் பாடியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.அனைவரும் அதன் இனிமையில் லயித்து விட்டனர்.சிறிது நேரம் பாடியபின் குயில் பறந்து சென்று விட்டது.குரு அப்போது சொன்னார்,''இன்றைய போதனை முடிந்துவிட்டது.''

ஊசியும் நூலும்

1

Posted on : Monday, August 22, 2011 | By : ஜெயராஜன் | In :

பார்வதியும் பரமசிவனும் வான வீதியில் சென்று கொண்டிருக்கையில் ஒரு வனத்தில் ஞானி ஒருவர் தன கிழிந்த ஆடையை ஊசி நூல் கொண்டு தைத்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.அவருக்கு ஏதேனும் வரம் கொடுக்க வேண்டும் என்று பார்வதி பரமசிவனை வேண்ட இருவரும் அவர் முன் நின்றனர். ஞானியும் அவர்களை வணங்கி அவர்கள் பசியாற தன்னிடமிருந்த காய்கனிகளைக் கொடுத்து அவர்கள் உன்ன ஆரம்பித்தவுடன் தொடர்ந்து உடைகளைத் தைக்க ஆரம்பித்தார்.உணவு உண்டு சிறிது நேரம் ஆகியும் ஞானி அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.பரமசிவன் உடனே அவரிடம் என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார்.சிவன் பார்வதியைத் தரிசித்ததைவிட பெரிய வரம் ஏதுமில்லை என்று ஞானி சொன்னார்.பார்வதி மீண்டும் வற்புறுத்த ஞானி சொன்னார்,''ஊசியின் பின்னே நூல் தொடர்ந்து செல்ல வரம் தாருங்கள்,''பார்வதி ஏமாற்றத்துடன் ,''அதுதான் ஊசியின் பின்னே நூல் வந்து கொண்டுதானே இருக்கிறது,''என்றார்.ஞானி சொன்னார்,''நியமங்களை சரியாக செய்து வந்தால்,கடவுளின் அருள் பின்னால் தானே வந்து கொண்டு தானே இருக்கும்.''

ஞானம்

0

Posted on : Monday, August 22, 2011 | By : ஜெயராஜன் | In :

ஞானம் பெற விரும்பிய ஒருவன் இறைவனிடம் சென்று ஞானம் பெற வழி  கேட்டான்.இறைவன் சொன்னார்,''அப்பா,இப்போது வெயில் மிக அதிகமாக இருப்பதால் தாகம் எடுக்கிறது எனக்கு முதலில் நீ கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,''அவனும் ஓடிச் சென்று முதலில் தென்பட்ட வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அழகிய இளம்பெண் கதவைத் திறந்தாள்.அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு அந்தப்பெண் மீது காதல் பிறந்தது.அந்தப் பெண்ணும்  சம்மதிக்கவே அவளைத் திருமணம் செய்து கொண்டு நான்கு பிள்ளைகளையும் பெற்றான்.ஒரு நாள் கடுமையான மழை பெய்தது.எங்கு பார்த்தாலும் தண்ணீர்.வீடுகள் அடித்து செல்லப்பட்டன.அவனும் தன மனைவியையும் குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு சென்றான் அப்படியிருந்தும் அவர்களைத் தண்ணீர் இழுத்துச் சென்று விட்டது.அடுத்து அவனையும் தண்ணீர் இழுத்தபோது,''கடவுளே,என்னைக் காப்பாற்று,''என்று கத்தினான்.அப்போது இறைவன் அவனிடம் கேட்டார்,''அப்பா,தாகத்துக்கு தண்ணீர் கேட்டேனே,என்ன ஆயிற்று?''

தேர்வு

0

Posted on : Sunday, August 21, 2011 | By : ஜெயராஜன் | In :

வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது.தந்தை தன நெருங்கிய நண்பரை அழைத்து தன மகனுக்குத் தான் ஒதுக்கிய அறையைக் காட்டி தான் அவன் எந்தத் துறைக்கு ஏற்றவன் என்பதைத் தேர்வு செய்யப்போவதாகக் கூறினார்.மேஜை மீது நான்கு பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டி,''என் பையன் பணத்தை எடுத்துக் கொண்டால் வியாபாரத் துறைக்கு ஏற்றவன்.பைபிளை எடுத்துக் கொண்டால் மத சேவைக்கு ஏற்றவன்.மது புட்டியை எடுத்துக்  கொண்டால் உதவாக்கரையாவான். துப்பாக்கியை எடுத்துக்  கொண்டால் அவன் கொள்ளைக்காரனாவான்.'' என்றார். அந்த அறைக்குள் வந்த மகன் என்ன செய்யப் போகிறான் என்பதை ஆவலுடன் இருவரும் மறைவிலிருந்து கவனித்தார்கள்.பையன் அறைக்குள் நுழைந்து இருக்கும்பொருட்களை நோட்டம் விட்டான்.மதுப் புட்டியைத் திறந்து வாயில் ஊற்றிக் கொண்டான்.பின் பணத்தை எடுத்துப்  பையில் போட்டுக் கொண்டான்.ஒரு கையில்  பைபிளையும் இன்னொரு கையில் துப்பாக்கியையும் எடுத்துக்  கொண்டான்.தந்தை உற்சாகத்தில் கத்தினார்,''என் மகன் மந்திரியாகப் போகிறான்.''
                                                                          ---குஷ்வந்த்சிங்

ஆபத்து இல்லா இடம்

0

Posted on : Sunday, August 21, 2011 | By : ஜெயராஜன் | In :

டெல்லியில் விலங்கு பூங்காவிலிருந்து இரண்டு புலிகள் வெளியே ஓடி விட்டன.ஆறு மாதங்களுக்குப்பின் அவை இரண்டும் பூங்காவிற்கே திரும்ப வந்தன.அப்போது ஒரு புலி இளைத்திருந்தது.ஒரு புலி நன்கு கொழுத்திருந்தது.இளைத்த புலி சொன்னது,''நான் தெரியாமல் ராஜஸ்தான் பக்கம் போய்விட்டேன்.அங்கு சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. தப்பித்தவறி ஏதாவது விலங்குகள் கிடைத்தாலும் அவையும் பஞ்சத்தில் சதை இல்லாமல் இருந்தன.இந்தப் பூங்காவிலாவது வேளா வேளைக்கு உணவு கிடைக்கும்.அதனால் திரும்பி வந்துவிட்டேன்.''கொளுத்த புலி தன கதையை சொன்னது,''முதலில் எனக்கு அதிர்ஷ்டம் தான்.நான் டெல்லி செக்ரடேரியட்டிற்குள் நுழைந்து விட்டேன்.ஒவ்வொரு நாள் மாலையும் வேலை முடிந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியே வரும்போது ஒரு ஆளைப் பிடித்துக் கொண்டு போய்விடுவேன்.ஆறு மாதமும் இவ்வாறு செய்து வந்தேன்.யாரும் என்னைக் கவனிக்க வில்லை.நேற்று ஒரு தவறு செய்து விட்டேன்.எல்லோருக்கும் தேநீர்,காபி கொண்டு வந்து கொடுக்கும் ஆளை அடித்துத் தின்று விட்டேன்.அப்போதுதான் எல்லோருக்கும் தெரிய வந்து என்னை விரட்டத் தொடங்கி விட்டார்கள்.ரத்த வெறி பிடித்த அவர்களிடம் அகப்படுவதை விட இந்த பூங்கா ஆபத்தில்லாத இடம் என்று ஓடி வந்து விட்டேன்.''
                                                                   குஷ்வந்த்சிங் ஜோக்ஸ்

பொருள் விளக்கம்

2

Posted on : Saturday, August 20, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் உபயோகப்படுத்தும் பல வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை.எனவே அதன் பொருள் நமக்குத் தெரியாமலேயே அவற்றை உபயோகிக்கிறோம்.உதாரணமாக சில வார்த்தைகள் அதன் பொருளுடன்;
வேணுகோபாலன்: வேணு என்றால் மூங்கில்.கோ என்றால் பசு.பாலன் என்றால் சிறுவன்.அதாவது மூங்கிலால் ஆன புல்லாங்குழல் ஊதி பசுக்களை கவர்ந்த சிறுவன் என்று பொருள்.
தாமோதரன்: தாம்பு என்றால் கயிறு.உதரன் என்றால் வயிற்றைக் கொண்டவன்.அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன். யசோதா கண்ணனைக் கயிறு கொண்டு கட்டிய கதை தெரியுமே!
நவநீதம்: நவம் என்றால் புதியது;நீதம் என்றால்  எடுக்கப்பட்டது..  காலையில் பசும்பாலில் உறை குற்றி மாலையிலேயே  தயிரைக் கடைந்து எடுக்கிற வெண்ணை தான் நவநீதம்.
நாராயணன்: நாரம் என்றால் தண்ணீர்.அயனம் என்றால் மிதப்பது.தண்ணீரில் மிதப்பவன்.நாராயணன் பாற்கடலில் பள்ளி கொண்டவர் அல்லவா?
அனுமான்: துண்டிக்கப்பட்ட முக வாய் உடையவன்.ஒரு முறை இந்திரன் வஜ்ராயுதத்தால் தாக்கியதால் முகம் துண்டிக்கப்பட்டது.
சரஸ்வதி: சரஸ் என்றால் பொய்கை.வதி என்றால் வசிப்பவள்.மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள்.
பாகுபலி: பாகு என்றால் தோள்கள்:உருக்கு போன்ற தோள்கள் படைத்தவன்.
காஞ்சி: கா என்றால் பிரம்மா:அஞ்சித என்றால் வழிபட்ட.பிரம்மா வழிபட்ட இடம் என்று பொருள்.

கலகல

0

Posted on : Saturday, August 20, 2011 | By : ஜெயராஜன் | In :

வீட்டுக்கு வந்த நண்பன் சொன்னான்,''அடேய் நண்பா!உன் மனைவி ஒரு அழகிய சித்திரம் போல இருக்கிறாள்.''கணவன் சொன்னான்,''நீ சொல்வது சரிதான் நானும் கூட அவளைத் தொங்கவிடலாம் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.''
**********
சர்கஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் அழுது கொண்டிருந்தான்.காரணம் கேட்டபோது அங்கு இருந்த யானை இறந்து விட்டதாகக் கூறினான்.''யானை மீது உனக்கு அவ்வளவு பாசமா?''என்று கேட்டபோது அவன் சொன்னான்,''இல்லை,அதைப் புதைப்பதற்கான குழியை நான்தான்  வெட்ட வேண்டும் என்று முதலாளி சொல்லி விட்டார்.''
**********
''நேற்று உணவு விடுதியில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டது,''என்று ராம் சொல்ல கோபால் என்னவென்று கேட்டான்.ராம் சொன்னான்,''என் காதலியை அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்கு நேற்று மாலை சென்றேன்.சாப்பிடும்போது அவள் உணவில் ஒரு பூச்சி கிடந்தது.உடனே அவள் சர்வரைப் பார்த்து,'இந்தப் பூச்சியைத் தூக்கி வெளியே எறியுங்கள்,' என்றாள்.உடனே சர்வர் என்னைத்தூக்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்துவிட்டான்.''
**********
கலா தன தோழியிடம் சொன்னாள்,''புதிதாக வந்திருக்கும் சேலை ஒன்றை என் கணவரிடம் சொல்லி வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.அவரை  மகிழ்ச்சி கொள்ளச் செய்ய அன்று அவருக்குப் பிடித்த உணவு வகைகளைத் தயாரித்தேன்.அவர் சாப்பிட்டபின்,அவரிடம்,''இம்மாதிரி உணவு சமைத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?'என்று கேட்டேன்.அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?''தோழி ஆர்வமுடன் என்ன சொன்னார் என்று கேட்க கலா சொன்னாள்,''உனக்கு விரைவிலேயே என் பெயரில் போட்டிருக்கும் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்கிறார்.''
***********
அம்மா கேட்டார்,''மகனே,இன்று தேர்வில் எத்தனை மார்க் வாங்கினாய்?'' மகன் சொன்னான்,''அம்மா,இன்று நான் நூறு மார்க் வாங்கியுள்ளேன்.''அம்மாவுக்கு ஆச்சரியம்.மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக் கொடுத்தவாறே அவனுடைய விடைத்தாள்களை  வாங்கிப் பார்த்தார்.அவன் ஐந்து பாடங்களில் மொத்தம் நூறு மார்க் வாங்கியிருந்தான்.
**********

இன்றைய தினம்

0

Posted on : Friday, August 19, 2011 | By : ஜெயராஜன் | In :

இன்றைய தினத்தையே நோக்குங்கள்.
    ஏனென்றால் அதுதான் வாழ்வின் ஜீவன்.
நேற்று என்பது வெறும் கனவாக இருந்தது.
    நாளை என்பதோ ஒரு மனத் தோற்றம்தான்.
இன்றைய தினத்தை நன்றாக வாழ்ந்தால்
    நேற்றைய தினம் ஒரு அற்புதமான கனவு.
நாளைய தினம் நம்பிக்கை நிறைந்த
    மனத்தோற்றமாகவும் மாறும்.ஆதலால்
இன்றைய தினத்தை நன்றாக நோக்குங்கள்.
    அது நம் விடியற்காலை வணக்கமாகட்டும்.
                                    --காளிதாசர்.

முட்டை

0

Posted on : Friday, August 19, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு முட்டையை வெளியிலிருந்து உடைத்தால் ஒரு உயிர் அழிக்கப்படுகிறது அதே சமயம் அந்த முட்டை உள்ளிருந்து உடைக்கப்பட்டால் ஒரு உயிர் வெளி வருகிறது.
******
''இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்றால் இத்தனை கோவில்கள் எதற்கு?''என்று ஒருவன் கேட்டான். ஆன்மீகவாதி  ஒருவர் சொன்னார்,''நம்மைச் சுற்றி முழுமையாகக் காற்று இருக்கிறது ஆனால் அதை உணர்வதற்கு நமக்கு காற்றாடி தேவைப்படுகிறதே!''
******
நாட்டின் தற்கொலை நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றின் பின்னணி,செய்த தவறுகளுக்காக இருக்காது.அவை சம்பந்தப்பட்ட அர்த்தமற்ற அதீத கற்பனைகளும் அவை விளைவிக்கும் துன்பங்களுமாகத்தான் இருக்கும்.
******
ஒரு செயலை செயலுக்காக செயலில் ஒன்றிச் செய்தலே கர்மயோகம்.அந்தச் செயலின் விளைவை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே ஒரு கர்ம யோகியின் வாழ்க்கை முறை.தன்னைவிட செயலே முக்கியம் என்கிற மனோநிலை ஒரு கர்மயோகியின் வாழ்க்கை நெறி.
******

எளிமையே வலிமை

0

Posted on : Friday, August 19, 2011 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் சில எளிய விஷயங்கள் தான் நம் வலிமைக்குக் காரணமாக இருக்கின்றன.அவற்றை அலட்சியப்படுத்துவதாலேயே நமக்குப் பல நோய்கள் வருகின்றன.
நாம் உணவு உண்டபின் செய்யக்கூடாத சில எளிய விஷயங்கள்;
*உணவு உண்ட உடன் சிகரெட் குடிக்கக்கூடாது.உணவு சாப்பிட்டவுடன் குடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிகரெட் குடிப்பதற்கு சமம்.இதனால் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் ஆகும்.
*உணவு உண்டவுடன் பழங்கள் சாப்பிடக்கூடாது.சாப்பிட்டால் வயிறு ஊதும்.எனவே ஓரிரு  மணி நேரம் உணவுக்கு முன்னரோ பின்னரோ சாப்பிடலாம்.
*உடனே தேநீர் அருந்தக்கூடாது.அதில் அமிலம் அதிகம் இருப்பதால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன்  சத்துக்கள் இறுகி ஜீரணம் கடினமாகும்.
*சாப்பிடும்போது பெல்ட் அணிந்திருந்தால் முடித்தவுடன் அதைக் கழட்டக் கூடாது .குடல் பிரச்சினைகள் வரும்.
*சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது.குளிக்கும்போது உடல் முழுவதும் அதிக இரத்தம் பாயும்.எனவே வயிற்றுக்கு வரும் இரத்தத்தின் அளவு குறையும்.எனவே ஜீரணம் பாதிக்கப்படும்.
*சாப்பிட்டவுடன் நடக்கக் கூடாது சிலர் சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடப்பதைப் பழக்கமாக வைத்துள்ளனர்.அது உணவிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதைப் பாதிக்கிறது.
*உணவை உண்டவுடன் தூங்கக்கூடாது.ஜீரணம் ஆவது கடினமாகும் வாயுத் தொல்லைகள் உருவாகும்.

பஞ்ச பாண்டவர்கள்

1

Posted on : Wednesday, August 03, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெரியவருக்கு ஐந்து பிள்ளைகள்.பஞ்ச பாண்டவர்கள்போல அவர்கள் வாழ வேண்டும் என நினைத்து அவர்கள் பெயரையே வைத்தார்.ஆண்டுகள்  பல கழித்து பையன்களைப் பற்றி நண்பர் ஒருவர் கேட்டபோது பெரியவர் சொன்னார்,''பேருக்குத் தகுந்த மாதிரியாவே இருக்காங்க,''என்றார் பெரியவர். நண்பர்,''அப்படியா,மிக்க மகிழ்ச்சி,''என்றார்.பெரியவர்,''மகிழ்ச்சி அடைய என்ன இருக்கு.பஞ்ச பாண்டவர்களைப்போலவே இவர்களும் சொத்து முழுவதையும்  சூதாட்டத்திலே விட்டுட்டாங்க.இவர்களைக் காப்பாற்ற கண்ணன்தான் வரவேண்டும்.''என்றார்.

பொன்மொழிகள்-20

0

Posted on : Wednesday, August 03, 2011 | By : ஜெயராஜன் | In :

தான் கூவுவதைக் கேட்பதற்காகத்தான் சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால் அதுதான் அகந்தை.
**********
அற்பப் பொருளுக்கும் மதிப்பு உண்டு.சிறு ஊசிதான் தையற்காரருக்கு உணவு அளிக்கிறது.
**********
பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்.
தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
**********
ஆண்களின் மனம் பளிங்காக இருக்கிறது.
பெண்களின் மனம் மெழுகாக இருக்கிறது.
**********
எது தேவை?
தீர்மானிக்க மனம்.
வழி வகுக்க அறிவு.
செய்து முடிக்கக் கை.
**********
ஆரோக்கியம் அற்புதமானது என்பதை
நோயுற்றுக் கிடக்கும்போதுதான் உணருகிறோம்.
**********
நாம் நல்ல வசதியுடன் இருக்கும்போது நண்பர்கள் நம்மைப்பற்றித் தெரிந்து கொள்கிறார்கள்.
நம்மிடம் வசதி குறையும்போதுதான் நாம் நம் நண்பர்களைப்பற்றித் தெரிந்து கொள்கிறோம்.
**********
ஒருவன் எப்போதும் வீரனாய் இருக்க முடியாது.ஆனால்
ஒருவன் எப்போதும் மனிதனாய் இருக்க முடியும்.
**********
ஒரு மனிதனின் இயல்பை அறிய வேண்டுமானால் அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப்  பாருங்கள்.
**********
குற்றம் என்னும் புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
**********

உருப்படாதவன்

0

Posted on : Tuesday, August 02, 2011 | By : ஜெயராஜன் | In :

நண்பர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்டனர்.ஒருவர் தான் நன்றாய் இருப்பதாகக் கூறிவிட்டு அடுத்தவரிடம் அவரைப்பற்றிக் கேட்க அவர் சொன்னார்,''எனக்கு நான்கு பையன்கள்.ஒருவன் டாக்டர்,அடுத்தவன் எஞ்சினியர்,இன்னொருவன் வக்கீல்.நான்காவது பையன்தான் உருப்படாமல் போய்விட்டான்.எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை.அவன் இப்போது பார்பராக இருக்கிறான்.''நண்பர் கேட்டார்,''அப்படிப்பட்ட பையனை வீட்டை விட்டுத் துரத்த வேண்டியதுதானே.''அவர் பதில் சொன்னார்,''அவனைத் துரத்திவிட்டு நாங்கள் என்ன செய்வது?அவன் ஒருவன் தானே எங்கள் வீட்டில் சம்பாதிப்பது.''
**********
பேருந்தில் ஒரே கூட்டம்.நிற்கக்கூட இடமில்லை.ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் கண்ணை இறுக மூடிக் கொண்டிருந்தான்.அருகில் இருந்த நண்பன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''எனக்கு இளகிய மனது.வயதானவர்கள் எல்லாம் நின்று கொண்டிருப்பதை கண் கொண்டு பார்க்க எனக்கு சகிக்கவில்லை.''
**********
''பாவம் ரவி,அவன் மிகுந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன்.''
'ஏன்,அவனைத்தான் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருக்கிறார்களே!'
''அதனால்தான் அவர்கள் ஏழைகளாய் ஆகிவிட்டனர்.''
**********
''என்ன உன் மனைவியைக் கடத்தி விட்டார்களா?கொஞ்சம் கூடப் பதட்டம் இல்லாமல் சாதாரணமாக சொல்கிறீர்களே?''
'அவள் அறுவையை யாராலும் ஒரு நாளைக்கு மேல் தாங்க முடியாது.''
**********

கெளரவமானவர்

0

Posted on : Tuesday, August 02, 2011 | By : ஜெயராஜன் | In :

பொது இடத்தில் தன்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதற்காக ஒருவன் மீது ஒரு பெண் வழக்கு தொடர்ந்தாள்.என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தினான் என்று கூறுமாறு வக்கீல் கேட்டார்.அந்தப்பெண் சொன்னாள்,''ரொம்ப அசிங்கமான வார்த்தைகள் அவை.கண்ணியமான எவரும்  அதைக் கேட்க விரும்ப மாட்டார்கள்,''வக்கீல் சொன்னார்,''அப்படியானால் நீதிபதி அருகில் சென்று அவருக்கு மட்டும் கேட்கும்படியாக சொல்லுங்கள்.''
**********
பேருந்தில் ஏறிய  நடுத்தர வயதைக் கடந்த ஒரு பெண் டிக்கெட் வாங்காமல் இருந்ததைக் கண்ட நடத்துனர் கோபத்துடன்,''யே கிழவி,ஏன் டிக்கெட் எடுக்கவில்லை?''என்று கேட்டார்.அந்தப்பெண்  கோபத்துடன்,''முதலில் மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்.கிழவி என்று ஏன் சொன்னாய்? வேண்டுமானால் அக்கா என்று சொல்,''என்று சொல்லியவாறு டிக்கெட்டுக்குரிய பணத்தைக் கொடுத்தாள்.பேருந்தில் இருந்த பயணிகள் அப்பெண்ணின் பேச்சைக் கேட்டு ரசித்தார்கள்..அடுத்த நிறுத்தத்தில் வாட்டசாட்டமான ஒரு சாது ஏறினார்.அவர் உட்கார இடம் கிடைக்குமா என்று தேடினார்.நடத்துனர் சொன்னார்,''மைத்துனரே,அதோ அக்கா பக்கத்தில் இருக்கை காலியாயிருக்கிறதே,அங்கு போய் உட்காருங்கள்''இப்போது பயணிகள் கொல்லென்று சிரித்தனர்.
**********

எதிரி

0

Posted on : Monday, August 01, 2011 | By : ஜெயராஜன் | In :

மூடி வைத்த கண்ணாடி சீசாவுக்குள் அடைக்கப்பட்ட ஆவி கொதிக்கத் தொடங்கினால் சீசா வெடித்து விடும்.உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கும் பகை உணர்வு எதிரியைத் தாக்காது,உன் உடலைத்தான் தாக்கும்.பிறருக்குப் பகைவன் என்று நினைத்துக் கொண்டவன் தனக்குத்தானே எதிரியாகிறான்.
                                                                                --கண்ணதாசன்

என்ன பொருத்தம்!

0

Posted on : Monday, August 01, 2011 | By : ஜெயராஜன் | In :

 கணவன் மனைவி ஜோடியைப் பார்த்து 'என்ன பொருத்தம்!'என்று சொல்ல வேண்டுமா?சில டிப்ஸ்:
*கணவன் மனைவி இருவருக்குள்ளும் இரகசியம் என்பதே இல்லாமல் இருப்பதே உத்தமம்.சின்ன சின்ன விஷயமானாலும் மறைக்க வேண்டாம்.
*எந்தப் பிரச்சினை ஆனாலும் மற்றவரைக் கட்டாயப் படுத்தி சாதிக்க வேண்டாம்.மற்றவருக்கு முடியவில்லையா,விருப்பம் இல்லையா,விட்டு விடுங்கள்.
*எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதைத் தவிருங்கள்.மற்றவர் சொல்வதை மனப் பூர்வமாக  நம்புங்கள்.
*ஒரு தலைவலி ,ஜுரம் என்றால் கூட அலட்சியப்படுத்தாமல் சில நிமிடம் அருகில் அமர்ந்து இதமாகப் பேசுங்கள்.
*மற்றவர்கள்  எதிரில் விட்டுக் கொடுக்காமல் பேசப் பழகுங்கள்.மட்டம் தட்டாதீர்கள்.அப்படித் தப்பித்தவறி ஒரு சிரிப்புக்காகச் சொன்னாலும் முகம் சுளிக்காமல் புன்னகையுடன்,ஸ்போர்டிவாக ஏற்கப் பழகுங்கள்.
*ஒருவொருக்கொருவர் விருப்பு வெறுப்பு அறிந்து நடந்து கொள்ளுங்கள்..மற்றவரின் எண்ணங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு கூடுமானவரை அதன்படி நடக்க முயலுங்கள்.
*ஒருவர் மூடுக்குத் தகுந்தாற்போல அடுத்தவர் நடந்து கொள்ளுங்கள்.ஒருவர் கோபத்துடன் கத்தினால் அடுத்தவர் மௌனம் சாதியுங்கள்.
*'தேங்க்ஸ்','சாரி'போன்ற சொற்களை வீட்டிலும் உபயோகிக்கலாம்.அது அன்பை வளர்த்து வாழ்வின் பல் சுமைகளைக் குறைக்கும்.