உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பக்குவம்

0

Posted on : Wednesday, September 03, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது,உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும்போது வருத்தம் இருந்தாலும்,அது தர்மத்தை ஒட்டி அமையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.இந்த அனுசரிப்புதான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.அவர் காயப்படுத்துவதும் இல்லை.தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை. காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும்தான் காயப்படுகிறார்கள்.மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்.

கடவுள் கல்லா?

1

Posted on : Monday, September 01, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் தந்தை பெரியார் அவர்களைப் பார்க்க குழுவாய் சிலர் வந்திருந்தனர்.அவர்கள் பெரியாரிடம்,''ஐயா,நாங்கள் எல்லாம் தங்களது சுய மரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.தாங்கள் இந்த சமூகத்துக்கு செய்யும் தொண்டு  மிக சிறப்பானது.ஆனாலும் எங்களுக்கு உங்கள் மீது சிறு வருத்தமும் உண்டு.நாங்கள் அனுதினமும் வணங்கும் ஆண்டவன் சிலைகளை நீங்கள் வெறும் கல்  என்கிறீர்கள்.அப்படி சொல்வதை மட்டும் நீங்கள் நிறுத்தினால் நாங்கள் மிக மகிழ்வடைவோம்,'' என்றார்கள். பெரியார், ''கல்லை கல்  என்று சொல்லாமல் வேறு எப்படி  அய்யா சொல்வார்கள்?''என்று கேட்டவர்,''சரி நீங்கள் என் பின்னால் வாருங்கள்,''என்றார்.அவர் எங்கே செல்கிறார் என்பதை ஆவலுடன் கவனித்த அவர்கள்,அவர் ஒரு கோவிலுக்குள் செல்வதைக் கண்டதும் மிக வியப்புக்குள்ளானார்கள் .பெரியார் நேரே கடவுளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த பூசாரியிடம் சென்றார்.அவரிடம், பெரியார் கேட்டார்,''ஐயா,இந்த சாமி சிலை பொன்னால் ஆனதா,இல்லை ஐம்பொன்னால் ஆனதா?''அர்ச்சகர் சொன்னார்,''இல்லை ஐயா,இது கல்தான்,''உடனே பெரியார் வந்திருந்தவர்களிடம் திரும்பி சொன்னார்,''ஐயா,பூசாரி சொன்னதைக் கேட்டுக் கிட்டீங்களா?அவரே இது கல்தான் என்று சொல்லிவிட்டார்.இப்போதாவது நான் சொன்னது உண்மை என்று நம்புகிறீர்களா?''வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.