உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வியாதியும் இயல்பும்

3

Posted on : Friday, April 19, 2013 | By : ஜெயராஜன் | In :

வன்முறை என்பது மனிதருக்கு வியாதி;ஆனால் விலங்குகளுக்கு அது அவற்றின் இயல்பு.
******
வன்முறை உள்ள மனம் சண்டையிடாமல் திருப்தி அடையாது.பிறரைத் துன்புறுத்துவதிலேயே மகிழ்ச்சி காணும்.அத்தகைய மனம் எப்போதும் நிரந்தர மகிழ்ச்சி அடைய முடியாது.
******
நம் உறவுகள் எல்லாம் உள்ளே விஷத் தன்மை கொண்டனவாய்,வெளியே இனிப்பு பூசப்பட்டவையாய் காணப்படுகின்றன.
******
இரக்கம் என்பது ஒரு வகை ஏமாற்றுதல்.பிறர் துயரத்தில் துயரமும்,பிறர் இன்பத்தில் மகிழ்ச்சியும் கொண்டாடுதல்தான் உண்மையான இரக்கம்.ஆனால் பிறர் துயர் கண்டு இரக்கம் கொள்ளும் நாம் பிறர் மகிழ்ச்சி கண்டு ஆனந்திப்பதில்லையே.
******
செல்வ வளமும்,அதன் அனுபவமும் இல்லாமல்  அச்செல்வத்தின் பயனற்ற தன்மையை யாரும் உணர முடியாது.
******
ஏழைக்குத் துறவு மனப்பான்மை வருவதில்லை.ஆனால் பணக்காரனுக்கோ தான் இதுவரை சேர்த்ததெல்லாம் வீண் என்பதும்,உண்மையில் இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை என்பதும் புரிகிறது.
******
இன்னொருவரைப்போல இருக்க நினைப்பது இன்னொருவர் பொருளை அபகரிப்பது போன்ற திருட்டுத் தன்மை கொண்டதாகும்.இன்னொரு வரைப்போல நடப்பது என்பதே ஒரு போலித்தனம்.
******
''ஒரு மனிதன் கோபப்படும்போது அவனைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.ஏன் என்றால் அத்தகைய மனிதன் பிறர் குற்றத்திற்காகத் தன்னையே தண்டித்துக் கொள்கிறான்.''என்கிறார் புத்தர்.
******
நெருப்பில் கை வைக்க அஞ்சும் மனிதன் கோபமாகிய நெருப்பில் மட்டும் தைரியமாகக் கை வைக்கிறானே!
******
கண்ணாடியில் கூட நாம் நாமாக இருக்க விரும்புவதில்லை.நம் கற்பனை போலவே நாமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.எனவே தான் கண்ணாடியின் முன் முழு அலங்காரத்துடன் நிற்கிறோம்.
******

இல்லை,இல்லை.

1

Posted on : Thursday, April 18, 2013 | By : ஜெயராஜன் | In :

ஈசலுக்கு வயிறு இல்லை.
தேளுக்குக் காதுகள் இல்லை.
மண் புழுக்களுக்குக் கண்கள் இல்லை.
ஈக்களுக்குப் பற்கள் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாய் இல்லை.
ஆண் கொசுக்கள் கடிப்பது இல்லை.
பூச்சிகள்,புழுக்கள் தூங்குவது இல்லை.
ஆமைக்குப் பற்கள் இல்லை.
முதலை,மீன் பாம்பின் விழிகளுக்கு இமைகள் இல்லை.
குளிர்ப்  பிரதேசத்தில் பல்லிகளே இல்லை.
குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை.
கிவி பறவை பறப்பதில்லை.
வௌவால் முட்டை இடுவதில்லை.
பறவைகளுக்கு சிறுநீர்ப் பை இல்லை.
******
ஏழு பிறப்பிலும் நான் உனக்கே மகனாகப் பிறக்கக் வேண்டும் என்று தாயிடம் சொல்வார்கள்.அந்த ஏழு பிறப்புக்கள் யாவை?
தேவர்,மனிதன்,விலங்கு,பறவை,ஊர்வன,நீர் வாழ்வன ,தாவரம்.
******
ஈரேழு உலகம் என்று சொல்கிறார்களே,அவை என்ன தெரியுமா?
மேல் உலகம்:
பூலோகம்,புவம்,சொர்க்கம்,மர ,தவம்.பிரமம்,சிவலோகம்.
கீழ் உலகம்:
அதலம் ,விதலம்,சுதலம்,நிதலம்,தராதலம்,பிசாதலம்,பாதாளம்.
******
நமக்கு 32 பற்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.அவற்றின் வேலை என்ன?
கடிப்பதற்கு -8 பற்கள்
கிழிப்பதற்கு-4  பற்கள்.
வெட்டுவதற்கு-8 பற்கள்.
அரைப்பதற்கு-12 பற்கள்.
******
******

காய்ந்த இலை

4

Posted on : Wednesday, April 17, 2013 | By : ஜெயராஜன் | In :

ஞானம் தேடி ஒரு பெண் சமண ஆசிரமம் ஒன்றில் சேர்ந்தாள்.அங்கு ஞானம் அடைவதற்கு முதல் படியாக''நீ உன்னையே உணர்வாயாக''என்றனர்.அது அவளுக்குப் பிடிபடவில்லை/அவளுக்கு எப்படி போதிப்பது என்று அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை.ஒருநாள் அவள் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தபோது காய்ந்த இலை ஒன்று மரத்திலிருந்து உதிர்வதைக் கண்டாள்.அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் திடீரென ஆடிப்பாட ஆரம்பித்தாள்.அவள் ஞானம் அடைந்து விட்டாள் .ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள்,''என்ன படித்தீர்கள்?எந்த சாத்திரம் கற்று நீங்கள் ஞானம் அடைந்தீர்கள்?அதை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.நீண்ட காலமாக நாங்களும் என்னென்னவோ படித்தும் ஞானம் அடைய முடியவில்லை. ஆனால் நீங்கள் குறுகிய காலத்தில் எதையும் படிக்காமலேயே ஞானம் அடைந்து விட்டீர்களே!''என்று கூறி ஆச்சரியப்பட்டனர்.அந்தப் பெண் சொன்னாள்,''எதையும் படித்து நான் கற்றுக் கொள்ளவில்லை.மரத்திலிருந்து காய்ந்த இலை ஒன்று விழுவதைக் கண்டேன்.என் ஆசை நிறைவேறி விட்டது,''மற்றவர்கள் சொன்னார்கள்,''நாங்களும்தான் மரத்திலிருந்து இலைகள் விழுவதைப் பார்க்கிறோம்.அது உன்னை மட்டும் எப்படி பாதித்தது?''அவள் சொன்னாள்,''ஒரு காய்ந்த இலை விழுவதைப் பார்த்ததும் என்னிலிருந்து ஏதோ கீழே விழுந்தது.இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நானும் இந்த இலையைப்போல விழுந்துவிடுவேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.பின் எதற்குப் பெருமை,கர்வம் எல்லாம்?காய்ந்த இலையைக் காற்று உதைத்து எல்லா திசைகளிலும் மாறி மாறி அடித்துச் செல்வதைக் கண்டேன்.நாளை அது சாம்பலாகிவிடும்.நானும் அந்த இலையைப் போன்றே அலைவேன்.இன்றிலிருந்து நான் இங்கில்லை.இதை அந்த காய்ந்த இலையிலிருந்து கற்றுக் கொண்டேன்.''

தெரியுமா?-4

1

Posted on : Tuesday, April 16, 2013 | By : ஜெயராஜன் | In :

எரிமலைகளில் இரண்டு வகைகள் உள்ளன.
பெசால்டின்:பூமிக்குக் கீழே ஐந்து கி.மீ.ஆழத்தில் நெருப்புக் குழம்பு ஆறு போல ஓடிக் கொண்டிருக்கும்.பூமிக்கு மேலே வராது.இவ்வகை ஆப்பிரிக்கக் காடுகளில் உண்டு.
அப்சிடியன்;பூமிக்குக் கீழே 12 கி.மீ.ஆழத்தில் இருக்கும்.இதுதான் எரிமலையாய் வெடித்து வெளியில் வரும்.
******
உணவுப் பொருட்களை நீண்ட நேரம் நன்றாக மென்று சாப்பிட்டால் அந்த உணவு மிக சுவையாய் இருப்பதேன்?
நீண்ட நேரம் மெல்லும்போது எச்சில் நிறைய சுரக்கும்.அதில் இருக்கும் அமிலேஸ் (amilase)என்ற சுரப்பியானது(enzyme) உணவில் உள்ள ஸ்டார்ச்சை உடைத்து சாதாரண சர்க்கரையாக மாற்றுகிறது.எனவே உணவு சுவையாய் இருக்கிறது.
******
வீட்டில் ஆப்பம்,கேக் இவை செய்யும்போது சோடா உப்பு போடுவார்கள்.ஏன் தெரியுமா?
சோடா உப்பு என்பது சோடியம் பைகார்பனேட் ஆகும்.அடுப்பில் சூடு படுத்தப்படும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்சைட் வெளிவருகிறது.இந்த வாயுவானது சிறு சிறு குமிழ்களாக அந்த மாவுக்கு இடையில் மாட்டிக் கொள்கிறது.மேலும் சூடாகையில் இந்த வாயுவானது விரிவாகி ஆப்பத்தையோ,கேக்கையோ இலேசானதாகவும் பஞ்சு போல மென்மையானதாகவும் ஆக்குகிறது.பூரி உப்புவது கூட இந்த கார்பன் டை ஆக்சைடினால் தான்.
******
தீக்கோழி(ostrich) இடும் முட்டைதான் பறவை முட்டைகளிலேயே மிகப் பெரியது.ஒரு முட்டையை 12 பேர் சாப்பிடலாம்.ஹம்மிங் பறவை (humming bird)இடும் முட்டைதான் மிகச் சிறியது.ஒரு முத்தின் அளவுதான் இருக்கும்.
******
பறக்கும்போது உறங்கும் பறவை கீகல்.
******
தக்காளியை முதலில் பயிர் செய்த நாடு அயர்லாந்து.
******

என்ன அதிசயம்?

2

Posted on : Monday, April 15, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் மூன்று எண்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அந்த மூன்று எண்களைக் கொண்டு ஒரு மூன்றிலக்க எண்ணை உருவாக்கிக் கொள்ளுங்கள்.இது'அ'
அந்த எண்ணை திருப்பி எழுதுங்கள்.இது 'ஆ'
'அ','ஆ' இவற்றுள் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.இது 'இ'.
'இ'யைத் திருப்பி எழுதுங்கள்.இந்த எண் 'ஈ'
இப்பொழுது 'இ'யையும்,'ஈ'யையும் கூட்டுங்கள்.
வரும் விடை 1089 தானே?இதில் என்ன விசேசம் என்று கேட்கிறீர்களா?ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் எந்த மூன்று எண்களைத் தேர்வு செய்து இவ்வாறு செய்தாலும்.விடை 1089 தான் வரும்.
உதாரணமாக,1,2,7 என்ற மூன்று எண்களைத் தேர்வு செய்து கொள்வோம்.
'அ'=127
'ஆ'=721
'அ'-'ஆ'=721-127=594
'இ'=594
'ஈ'=495
'இ'+'ஈ'=594+495=1089
ஏதாவது மூன்று எண்களைத் தேர்வு செய்து முயற்சி செய்து பாருங்கள்.

தெரியுமா-3

3

Posted on : Saturday, April 13, 2013 | By : ஜெயராஜன் | In :

இந்து மகா சமுத்திரத்தில் மிகப் பெரிய தீவு 'மடகாஸ்கர்'
******
மூக்குக் கண்ணாடி இத்தாலியில் தோன்றியது.
******
யூதர்களின் புனித நூல் 'தோரா'
******
கண்கள் இருந்தும் பார்வை இல்லாத பிராணி 'வௌவால் '
******
ஆப்பிளில் 'மாலிக் அமிலம்'அதிகம் உள்ளது.
******
பறவைகளுக்கு வியர்ப்பதில்லை.
******
உலகில் அதிக முட்டையிடும் உயிரினம்,'கரையான்'.
******
சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய மன்னர் ஷீபுவாங்டி.
******
'ஆன்டிசெப்டிக்'மருத்துவ சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர் 'லூயி பாஸ்டர்'
******
அதிகமான காட்டு வளத்தை 'பச்சைத்தங்கம்' என்று அழைப்பர்.
******
நெருப்புக் கோழியை'ஒட்டகப்பறவை'என்று குறிப்பிடுவார்கள்.
******
மயக்க மருந்தைக் கண்டு பிடித்தவர் சர் ஜேம்ஸ் சிம்சன்.
******
'கடல்களின் அரசி'என்று அழைக்கப்படும் நாடு ,'இங்கிலாந்து'
******
நாய்க்கு 42 பற்கள்.
******
ஆமைக்குப் பற்கள் கிடையாது.உறுதியான தாடைகள் தான் உண்டு.
******
சீனப் பெரும் சுவரின் நீளம் 3460 கி.மீ.
******
மாலத்தீவில் 1200 தீவுகள் உள்ளன.
******
உலகில் அதிக உபநதிகளைக் கொண்ட ஆறு 'அமேசான்'
******
மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டத்தை'கடலின் ஆபரணங்கள்'என்பர்.
******
பிரெஞ்சு கயானாவுக்கு'பேய்களின் தீவு'என்று பெயர்.
******

பெரிய தவறு

1

Posted on : Friday, April 12, 2013 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்கிற மிகப் பெரிய தவறு என்ன தெரியுமா?மகிழ்ச்சிக்குக் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்வது தான். வாழ்க்கையில் அனுபவித்து மகிழ்வதற்கு சிறியதும் பெரியதுமாக ஏகப்பட்ட விசயங்கள் இருக்கின்றன.துரதிருஷ்ட வசமாக இவற்றை உணராமல்,இவை இவை இப்படித்தான் இருக்க வேண்டும்,அப்போதுதான் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நமக்கு நாமே நம்மைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு உழன்று கொண்டிருக்கிறோம்.அவ்வப்போது ஆசையின் காரணமாக அந்த வட்டத்தை இன்னும் கொஞ்சம் பெரிது படுத்திக் கொண்டே போவதால் வாழ்க்கையில் திருப்தி,மகிழ்ச்சி ஆகியவை எட்டாக் கனி ஆகி விடுகின்றன.
******
''கோபம் என்பது சோகத்தின் ஒரு உருவம்.சோகம் என்பது கோபத்தின் மென்மையான வெளிப்பாடு.கோபம் என்பது சோகத்தின் ஒரு தீவிரமான வெளிப்பாடு,''என்கிறார்,மனவியல் அறிஞர் சிக்மன்ட் பிராய்ட்.சோகம் என்பது நிறைவேறாத ஆசை.இந்த சோகம் எப்போதும் அடங்கியே இருக்காது.சில சமயம் அது தீவிரமடைந்து கோபமாக வெளிவரும்.
******
மக்கள் பிரச்சனைகளை எப்படி தவறாக அணுகுகிறார்கள்?
*எதைப் பற்றியும் மிக அதீதமாகக் கற்பனை செய்து கொள்வது.
பிரச்சினைகளிலேயே மூழ்கி விடுவது.
அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பது.
*எதையுமே பெரிது படுத்தாத ஒரு அணுகுமுறை.
பிரச்சினையின் தன்மையை முழுமையாக உணராமல் இருப்பது.
*பிரச்சினையின் தன்மையை நன்கு அறிந்தும் அதற்கு உரிய முக்கியத்துவம் தராமல் அலட்சியப்படுத்துவது.
******

வெற்றிக்கு ஆசை

1

Posted on : Friday, April 12, 2013 | By : ஜெயராஜன் | In :

வெற்றியை எதற்காக விரும்புகிறீர்கள்?அது உற்சாகம் தரும் என்று தானே?கூடவே,வெற்றியை அடையத் தேர்ந்தெடுக்கும் பாதையும் உற்சாகமாக அமைந்து விட்டால்...வெற்றியின் உற்சாகத்தை வெற்றி அடையும் முன்னரே அனுபவிக்கலாம் அல்லவா!குறுக்கு வழிக்கு ஆசைப்பட்டு அதை ஏன் இழக்கப்  பார்க்கிறீர்கள்?வெற்றியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் குறுக்கு வழியில் வெற்றிக்கு ஆசைப்படுகிறார்கள்.
******
வாழ்க்கையை வெறும் கொடுக்கல் வாங்கலாக மட்டுமே பார்த்தால்,உங்கள் மனதை சாத்தான் வசம் ஒப்படைத்து விட்டீர்கள் என்று பொருள்.அப்புறம் உள்ளேயும் வெளியேயும் போராட்டம்தான்.நரகம்தான்.உங்களுக்கு மரியாதை என்பது நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான வியாபாரி என்பதில் அல்ல,நீங்கள் எந்த அளவுக்கு மனிதத் தன்மையுடன் நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான்.
******
உலகை நாம் தேவைகளின் அளவு கோலால் மட்டுமே அளந்து கொண்டிருக்கிறோம்.அந்த அளவும் பயன்பாடு என்ற ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முன் வைத்திருக்கிறது.எந்த ஒரு பொருளையும் நாம் எப்படிப் பயன் படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து மட்டும்தான் அது நமக்கு முக்கியமானதாகவோ,முக்கியமற்றதாகவோ இருக்கிறது.பயன்பாடற்ற யாவும் புறக்கணிக்கப் படவோ,அழிக்கப்படவோ வேண்டியது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.ஆனால் இயற்கையில் பயனுள்ளது,பயனற்றது என்று எதுவும் இல்லை.
******

எது மகிழ்ச்சி?

2

Posted on : Thursday, April 11, 2013 | By : ஜெயராஜன் | In :

அடுத்தவருக்கு வலியை ஏற்படுத்துவதுதான் மகிழ்ச்சி என்று குதர்க்கமாக யோசிக்கும் போது நம் வாழ்வின் நோக்கம் சிதைந்து போகும்.அது நம் உள்ளே உள்ள எதிரி.எதிரி வெளியில் இருந்தாலாவது அவரை சமாளிக்க வாய்ப்பிருக்கிறது.அவர் உங்களுக்குள் இருந்தே ஆட்டுவிக்க ஆரம்பித்து விட்டால் உங்களது வாழ்வு அதல பாதாளத்துக்கு இழுத்து செல்லப்படும். பிறகு,உங்களது மகிழ்ச்சியை அழிக்க வெளியிலிருந்து இன்னொரு எதிரி எதற்கு?நீங்களே போதும்.மாறாக உங்களது மகிழ்ச்சியை வெளிச் சூழல்களுக்குப் பணயம் வைக்காமல்,உள்ளே அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டால்,உங்கள் திறமை முழுமையாக வெளிவரும்.வெற்றிகள் உங்களைத் தேடிவரும்.மகிழ்ச்சி தானே வரும்.
******
ஒரு வெற்றியை எதிர்பார்க்கும்போதே,அது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் நிழல் போலத் தொடர்ந்து வரும்.எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும் அங்கே  ஏமாற்றத்துக்கும் இடம் இருக்கும். எங்கே ஏமாற்றம் இருக்கிறதோ,அங்கே  எரிச்சல் தானாகவே வேகத் தடையாகக் குறுக்கிடும்.காத்திருக்கப் பொறுமை இல்லாமல் கவனம் சிதறும்.
முடிவைப் பற்றிய சிந்தனை இல்லாமல், செய்வதை முழு விருப்பத்துடன் செய்து பாருங்கள்.வெற்றியை பற்றி எண்ணிக் கொண்டிராமல் முழு ஈடுபாட்டுடன் செயல் படுங்கள்.அப்போது தோல்வி பற்றிய பயம் வராது.பயம் இல்லாத இடத்தில் பதற்றம் இருக்காது.பதற்றம் இல்லாத இடத்தில் கவனம் சிதறாது.கவனம் சிதறாதபோது செயலிலே மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியுடன் செயல்படும்போது முழுத் திறமையும் வெளிப்படும்.அப்போது வெற்றி நிச்சயம்!
******

Phygmalion Effect

1

Posted on : Thursday, April 11, 2013 | By : ஜெயராஜன் | In :

''உன்னால் முடியும்,நீயே செய்து முடித்து விடுவாய்,செய்து விடு,''என்று ஒவ்வொரு முறையும் கூறும் தந்தையிடம் ,பிள்ளை தன்னிடம் காட்டப்படும் நம்பிக்கைக்கு ஏற்றார்போல நடந்து கொள்ளும்.இதனை ஸ்டெர்லிங் லிவிங்க்ஸ்டன் என்ற பேராசிரியர் Pygmalion Effect என்கிறார்.நாம் ஒருவரை எப்படி எதிர்பார்த்து நடத்துகிறோமோ அவருடைய செயல்பாடுகள் அப்படியே அமையும்.என்ன எதிர் பார்ப்போ அதை அப்படியே நிறைவேற்றுவதுதான் Self fulfilling Prophecy.
 கிரேக்க புராணத்தில் பிக்மேலியன் என்றொரு சிற்பி இருந்தானாம்.அவன் முழு ஈடுபாட்டுடன் ஒரு பெண் சிலை வடித்தானாம். அந்தப் பெண் சிலை உயிர் பெற்று வந்து தன்னை மணக்கும் என்று அவன் முழுமையாக நம்பினானாம்.அவனது எதிர்பார்ப்பு அப்படியே நடந்ததாம்.அதிலிருந்துதான் இந்த Pygmalion Effect என்பது நடைமுறைக்கு வந்தது.

கும்பல்

1

Posted on : Wednesday, April 10, 2013 | By : ஜெயராஜன் | In :

குருட்ஜீப் கூறுகிறார்,''நீ ஒரு தனி ஆள் அல்ல.நீ ஒரு கும்பல்தான்.'நான்'என்று கூறும்போது கூட அங்கு ஒரு 'நான்' இல்லை.பல 'நான்கள்'உனக்குள் இருக்கிறார்கள்.காலையில் ஒரு நான்.மதியம் ஒரு நான்.மாலையில் ஒரு நான்.இந்தக் குழப்பத்தை ஒரு போதும் நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை. ஏனெனில் அதை உணரும்படியான மையம் உன்னிடம் இருப்பதில்லை.''
கும்பலாக இல்லாமல் தனி நபராக இருக்கும்போது மட்டுமே அமைதி சாத்தியம்.நீங்கள் ஒரு கும்பல்.ஒரு கும்பலானது எந்தக் கணத்திலும் கலைந்து சிதறிவிட முடியும்.என்ன நேர்ந்தாலும் இருந்த இடத்திலேயே இருக்கிற ஒரு பாறையைப் போன்ற ஒன்று உங்களிடம் இல்லை.எனவே பாறையாக இல்லாமல் பலமான அடித்தளம் இல்லாமல் நீங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.அடித்தளமற்ற வீடு எப்போதும் அச்சத்தில்தான் இருக்கும்.லேசான காற்று கூட உங்களை அசைத்து அழித்து விட முடியும்.எனவேதான் உங்களை நீங்களே காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.இந்த ஓயாத தற்காப்பின் காரணமாகத்தான் உங்களால் அன்பு செய்ய முடியவில்லை.நட்பாக இருக்க முடிவதில்லை.நண்பர்கள் பலர் இருக்கலாம்.ஆனால் நட்பு இருப்பதில்லை.யோக ஒழுங்குகள் அனைத்தும் உங்களையே உங்கள் அதிகாரியாக ஆக்கும் பொருட்டான ஒரு முயற்சிதான்.

கொஞ்சும் சிரிப்பு

1

Posted on : Tuesday, April 09, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு போக்குவரத்துக் காவலரும் ஒரு பெண் நடத்துனரும் திருமணம் செய்தால் என்ன ஆகும்?
இருவரும் நடுவீதியில் நிற்பார்கள்.
******
டாக்டரின் மனைவி அவரிடம் சொன்னார்,''கிளம்புங்க,இப்ப நல்ல சகுனம் இருக்கு.''டாக்டர்  ஒன்றும் புரியாது என்னவென்று கேட்டார்.மனைவி சொன்னார்,''எதிரில் ஒருவர் இருமிக்கிட்டு வாரார் பாருங்க,''
******
மனைவி:உங்களைக் கட்டிக் கொண்டதற்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்.
கணவன்:அதுவும் சரிதான்.அதுவாவது உன்னை உதைத்திருக்கும்.
******
''அதோ வாராரு பாருங்க,அவர் சரியான கஞ்சன்,''
'எப்படி சொல்றீங்க?'
''அவர் சாப்பிடுறது மாதிரி கனவு கண்டால் கூட அடுத்த  வேளை சாப்பிட மாட்டார்.''
******
மனைவி கணவனிடம் சொன்னார்,''வரவர நீங்க சமைக்கிறது ஒண்ணு  கூட சரியில்லை.''கணவன்,''நான் நன்றாகத் தானே சமைக்கிறேன்,எதை வைத்து அப்படி சொல்கிறாய்?'என்று கேட்க மனைவி சொன்னார்,''லஞ்ச் சாப்பிடும்போது என் குழம்பையோ,காயையோ யாருமே எடுக்கிறது இல்லை.எனக்கு ஒரே அவமானமாக இருக்கு.''
******
போலீஸ்:ஏனம்மா,பட்டப் பகலில் உன் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை ஒரு பெண் தைரியமாகத் திருடிச் சென்றிருக்கிறாள்,நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
பெண்:சார்,அவள் உடுத்தியிருந்த சேலை மிக நன்றாக இருந்தது.அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்.
******
''எங்க மேனேஜர் வந்தப்ப மரம் மாதிரி நின்னுக்கிட்டிருந்தது தப்பாய்ப் போச்சு,''
'ஏன்,என்ன ஆச்சு?'
''மனுஷன்,அறுத்துத் தள்ளிட்டாரு.''
******
இயக்குனர்:யாரைக் கேட்டு உள்ளே வந்தே?
தயாரிப்பாளர்:என்ன சார்,என்னைப் பார்த்தா இப்படிக் கேட்கிறீர்கள்?
இயக்குனர்:நீங்கதானே,நம்ம படத்துக்கு நல்ல பெயர் வைக்கனும்னு சொன்னீங்க,இதுதான் நம்ம படத்தோட பெயர்.
******
''தலைவர் கடற்கரையில்தான் கூட்டத்தை நடத்தணும்னு பிடிவாதமாக இருக்கிறாரே,ஏன்?''
'அங்கேதான் கல்லே இருக்காதாம்.'
******
கடைக்காரர்:இந்தாங்க,நீங்க கேட்ட டீ
வந்தவர்,'கூடவே கடிப்பதற்கு ஏதாவது இருக்கா?
கடைக்காரர்:என் நாய்தான் இருக்கு.
******

பொன்மொழிகள்-43

1

Posted on : Friday, April 05, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒவ்வொருவரிடமும் உங்கள் காதைக் கொடுங்கள்;ஆனால்
ஒரு சிலரிடம் மட்டும் வாயைக் கொடுங்கள்.
******
விமரிசகன் என்பவன் ஓடுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நொண்டி.
******
பிறர் நம்மைப் புகழ்வது பூவைப் போன்றது.நாம் அதன் வாசனையை நுகரலாம்,அதை அப்படியே விழுங்கி விடக் கூடாது.
******
உன்னிடம் பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது.
பணம் உன்னிடம் இல்லாவிட்டால் உன்னை எவருக்குமே தெரியாது.
******
சுமை அதிகமாயிருக்கிறதே என்று நான் அழவில்லை .'ஆண்டவனே,முதுகை அகலமாக்கித்தா' என்றுதான் கேட்கிறேன்.
******
பல வாய்களை மூடுவதைவிட,இரு காதுகளை மூடுவது எளிது.
******
ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால் மட்டும் அவனுக்கு அறிவு வளர்ச்சி அடைந்து விட்டதாகப் பொருள் இல்லை.அவன் பதவியில் இருப்பதால்,'உனக்கு அறிவு வளர்ச்சி அடையவில்லை,''என்பதைத்தான் நாம் சொல்ல முடியாமல் போகிறது.
******
கொள்கைகளுக்காகச் சண்டை இடுவது, அவற்றைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும் எளிது.
******
காட்டின் அருகாமையில் வாழ்ந்தாலும் விறகை வீணாகச் செலவழிக்காதே
******
அசட்டுத்தனமான பெரும் தவறு எதுவுமே செய்யாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி காண முடியும் என்பதில்லை.அதே தவறை இரண்டாம் முறையும் செய்யாதிருந்தாலே போதும்,வெற்றி கிடைத்துவிடும்.
******
ஒரு மனிதன் தன மனைவிக்காகக் கார்க் கதவைத் திறக்கிறானா,புரிந்து கொள்ளுங்கள்;ஒன்று கார் புதிதாயிருக்கும்.அல்லது மனைவி புதிதாயிருப்பார்
******
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே,
உலகம் உன்னை விழுங்கி விடும்.அதற்காக,
முழுக்க முழுக்க எட்டிக் காயாக இருந்து விடாதே,
உலகம் உன்னை உமிழ்ந்துவிடும்.
******

வரம்

2

Posted on : Monday, April 01, 2013 | By : ஜெயராஜன் | In :

அறுபது வயதைக்கடந்த தம்பதிகள் அவர்கள்.கணவன் பெரிய பக்திமான்.அவர் பார்ப்பதற்கு இளமையாகவே இன்னும் இருக்கிறார்.அதனால் அவருக்கு ஆசைகளும் அதிகம்.அவர் மனைவியோ,உடல் சுருக்கம் விழுந்து பார்ப்பதற்கு மிக வயதான தோற்றத்துடன் காணப்படுகிறார்.ஒரு நாள் கணவன் பூஜை அறையில் தன்னை மறந்து கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார்.அப்போது கடவுள் அவர் முன் தோன்றி,''பக்தா,உன் பக்தியை மெச்சினோம்.உனக்கு என்ன வரம் வேண்டும்,கேள்,''என்றார்.அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன், ''கடவுளே,என் மனைவி என்னை விட ஒரு முப்பது வயதாவது இளமையாய் தோற்றம் அளிக்க வேண்டும்,''என்று கேட்டுக் கொண்டார். கடவுளும், ''இதோ,உன் ஆசை உடனே நிறைவேற்றப்படுகிறது,''என்று  கூறி மறைந்தார்.அடுத்த நிமிடம் கணவர் உடனே தனதுமனைவியை ஆவலுடன் நோக்கினார்.மனைவியின் தோற்றத்தில் எந்த மாறுதலும் காணப்படவில்லை.ஒன்றும் புரியாதவராய் தற்செயலாக  கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தவர் அலறி விட்டார்.ஆம்,இப்போது அவர் தொண்ணூறு வயதுக் கிழவன் போலக் காட்சி அளித்தார்.