உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

டீன் ஏஜ் பிரச்சினை

0

Posted on : Friday, September 16, 2011 | By : ஜெயராஜன் | In :

டீன் ஏஜ் என்பது கனவுகள் மலரும் பருவம்.பெற்றோருக்கோ சிம்ம சொப்பனமான காலம்.டீன் ஏஜ் சுதந்திரத்தை நாடும் பருவம்.அதே சமயம் எதிர் காலம் பற்றிய உறுதியான நம்பிக்கை தோன்றாத பருவம்.இப்பருவத்தில் எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தும் விதமாகப் பேசினால் அவர்களுக்கு எதிர் மறையான சிந்தனைகள்தான் வளரும்.அவர்களிடம்,'உன் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி,'என்ற ரீதியில் பேச வேண்டும்.குத்தலாகப் பேசாது அன்பை முழுமையாக வெளிப்படுத்துங்கள் .இப்பருவத்தின் உணர்ச்சி ,சிந்தனை , தேவை  மூன்றும் வித்தியாசமானது தான்.இவ்வளவு காலமாக இந்த மூன்றிலும் பெற்றோரின் பிம்பமாக இருந்த குழந்தைகள்,சுதந்திர இளைஞர்களாகவும் ,யுவதிகளாகவும் மலர ஆரம்பிக்கிறார்கள்.செலவுக்குப் பெற்றோரை சார்ந்தும்,முடிவுகள் எடுக்க மட்டும் அவர்களைச் சாராமல் இருக்க நேருகிறது.இந்த முரண்பாடு மன சஞ்சலங்களை தோற்றுவிக்கிறது. பெற்றோர் இக்கட்டத்தில் கட்டுப்பாடுகளை  அதிகரிக்க விரும்புகின்றனர் .''நான் தானே இவ்வளவு துன்பப்பட்டு வளர்த்தேன்,நான் சொல்வதைக் கேட்கக் கூடாதா?''என்று அப்பாவும் அம்மாவும் நினைக்க ஆரம்பிக்கின்றனர்.அன்பு எல்லைகளைக் கடந்து ஆக்கிரமிப்பாக மாறுகிறது. போராட்டங்களும் வாக்குவாதங்களும் வலுவான மனக் காயங்களை ஏற்படுத்தி பல சமயங்களில் நிரந்தரமான வடுக்ககளை விட்டுச் செல்கின்றன.வாக்குவாதங்களை உணர்ச்சி வசப்பட்டு வளர்க்காமல் அறிவு பூர்வமாக அணுகி அணை போடுவது மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு. தனிமையை நாடுவதும் ,மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உடுத்திக் கொள்வதும் இந்தப் பருவத்திற்கே உரிய குணங்கள்.இதைப் பார்க்கும் பெற்றோருக்குக் கவலையும் கோபமும் வந்தாலும் பொறுமை காக்க வேண்டும் .கிண்டல் ,கேலி,குத்தல் வார்த்தைகள் அவர்களுக்கு வேதனையாகி தொடர்ந்து வேறுபட்டே நிற்கச் செய்யும்.மாற்றங்களைக் கவனித்தாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்ற கருத்தை கோபத்தைக் காட்டாது சொல்லுங்கள் .அவர்களுடைய தனிப்பட்ட ரசனைகளை உணர்வுகளைப் புரிந்து மதிப்பதாகக் காட்டிக் கொள்ளுங்கள்.அவர்களுக்கு உங்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.பெற்றோரைப் பொறுத்தவரை தங்கள் பிடிகளைத் தளர்த்த வேண்டிய காலம் இது.உங்கள் குழந்தையை தனி மனிதனாக ஏற்றுக் கொள்ளுங்கள்.அதற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
*அவர்களின் எதிர்காலக் கனவுகளை நீங்கள் நிர்ணயிக்காதீர்கள் ..அவர்களுடைய கனவுகளைப் புரிந்து யோசனைகள்  சொல்லுங்கள்.
*அன்பைப் பொழியுங்கள்.
*உணர்ச்சிகளை மறைக்காமல் மிதமாக வெளிப் படுத்துங்கள்.
*உணர்ச்சி வசப்பட்டுக் கடும் வார்த்தைகளை வீசாதீர்கள்.
*நட்போடு எடுத்துச் சொல்லுங்கள்.
*முடிவுகளைத் திணிக்காதீர்கள்.
*உங்கள் குழந்தைகளை அவர்களின் குறை நிறைகளுடன்  முழுமையாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.

உமக்குள் இல்லையா?

0

Posted on : Thursday, September 15, 2011 | By : ஜெயராஜன் | In :

சிலர் தமது பல்வலி,வயிற்று வலிகளையும்,வியாபார இழப்புகளையும், சண்டை சச்சரவு,பழிவாங்கல்களையும்,உறக்கமற்ற இரவுகளையும் -புதைப்பதற்கான ஒரு குழியாகவே கடவுளைக் கருதியிருக்கிறார்கள். மற்றவர்கள் கடவுளைத் தங்கள் செல்வங்களின் கருவூலமாக கருதுகிறார்கள்.மற்றும் சிலர் கடவுளை ஒரு கணக்குப் பிள்ளையாகக் கருதுகிறார்கள்.கடவுளுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள்.இருந்தாலும்,அவர் அதைத் தனியே செய்து கொள்வார்.யாரும் நினைவு படுத்த வேண்டியதில்லை என்பதை சிலரே அறிவர்.கதிரவனின் உதயம்,மறைவு நேரங்களை நீங்கள் கடவுளுக்கு நினைவூட்டுகிறீர்களா, என்ன? இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் எண்ணற்ற பொருட்களை நிரப்ப அவருக்கு நினைவூட்ட வேண்டுமா,என்ன? உங்களது அற்பத் தேவைகளுக்காக  உங்கள் பலவீனமான சுயத்தை அவர் மீது ஏன் சுமத்துகிறீர்கள்?மண்டியிட்டு,இரு கரங்களை நீட்டி,மற்றவர் மனதில் என்ன இருக்குமோ என்று தவிப்பதைவிட்டு,கிடைத்த பரிசுகளைப் பெற்றுக் கொண்டு ஆரவாரமின்றி நீங்கள் ஏன் உங்கள் காரியங்களை செய்து கொண்டே இருக்கக் கூடாது?உங்கள் ஆணவங்களையும், ஆசைகளையும் புகழ்களையும்,குற்றச்சாட்டுகளையும் ஒன்று திரட்டி அவர் காதில் இரைச்சலுடன் ஓலமிட்டால்,கடவுள் எங்கே இருப்பார்?அவர் உமக்குள் இல்லையா?உங்கள் எண்ணற்ற கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவரிடம் கொண்டு போகாதீர்கள்.உங்களுக்காகக் கதவு திறந்துவிடும்படி அவரிடம் மன்றாடாதீர்கள்.அதன் திறவுகோலை முன்பே அவர் உங்களிடம்தான் கொடுத்துள்ளார்.
                     --'மிகெய்ல் நைமி'எழுதிய ''மிர்தாதின்  புத்தகம்''என்ற நூலிலிருந்து.

அறிவுத்திறன்

0

Posted on : Wednesday, September 14, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு குழந்தை ஆறு வயதிற்குள் அதன் மூளையில் ஏராளமான விசயங்களைப் பதிவு செய்து கொள்ளும் ஆற்றல் கொண்டது.நமது மூளையில் 125 ட்ரில்லியன் விஷயத் துளிகளை பதிவு செய்யக்கூடிய திறன் உள்ளது.ஒரு ஆராய்ச்சி, உண்பதை விட,விளையாட்டைவிடக் கற்பதை குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது.குழந்தைக்கு இள வயதில் உயர்ந்த கல்வி அறிவை,வேகமாகவும் எளிதாகவும் மகிழ்ச்சியான முறையில் அளிக்க முடியும்.படிப்புத் திறன்   ,கணிதத் திறன் ,விஷய ஞானம் ஆகியவற்றை ஒரு வயதுக்  குழந்தையின் மூளையில் பதிய வைப்பது சுலபம்.எப்படி?குழந்தை இந்தத் திறமைகளை நிகழ்ச்சிகள் மூலம் பெறுகிறது.ஆனால் அந்த நிகழ்ச்சிகள் கீழ்க்கண்ட இயல்புடையதாய் இருக்க வேண்டும்.
*அவை உண்மை நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும்.நமது கருத்தாக இருக்கக் கூடாது.(facts not opinions)
*அவை மிகச் சரியானதாக இருக்க வேண்டும்.(precise)
*குறிப்பிட்ட விசயமாக இருக்க வேண்டும்.(specific)
*குறிப்பிட்ட பெயருடையதாக சந்தேகமின்றி இருக்க வேண்டும்.(unambiguous)
*புதிய விசயமாகப் பார்ப்பதற்கு பெரிய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.
*உரத்த குரலில் உச்சரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக குழந்தைக்கு காந்தியின் படத்தை காண்பித்துப் புரிய வைக்க வேண்டும் என்று எடுத்தக் கொள்வோம்.
*காந்தியின் படம் பெரிய அளவில் இருக்க வேண்டும்.
*அவர் பெயரைத் தெளிவாக உரத்த குரலில் படத்தைக் குழந்தை பார்க்கும்போது உச்சரிக்க வேண்டும்.
*படத்தில் காந்தி தவிர யாரும் இருக்கக் கூடாது.
*படம் தெளிவாக இருக்க வேண்டும்.
*பெயருடன் வேறு சொற்கள் சேர்க்கக் கூடாது.காந்தி என்றுதான் சொல்ல வேண்டுமே அல்லாது மகாத்மா காந்தி என்று சொல்லக்கூடாது .

வானர சேனை

0

Posted on : Saturday, September 10, 2011 | By : ஜெயராஜன் | In :

வால்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி;
இராவணன் தன இரு ஒற்றர்களுடன் தன்னுடைய அரண்மனையின் உச்சியிலுள்ள மாடியில் ஏறி பகைவர்களின் சைன்யத்தை பார்வை இட்டார்.அந்த ஒற்றன் வானர சேனையின் முக்கியமானவர்களைப் பற்றி விவரித்துவிட்டு வானர சேனையின் எண்ணிக்கையை கூறுகிறான்.
நூறு ஆயிரம் கொண்டது ஒரு லட்சம்.
நூறு லட்சங்கள் கொண்டது ஒரு கோடி.
லட்சம் கோடிகள் கொண்டது ஒரு சங்கம்.
லட்சம் சங்கங்கள் கொண்டது ஒரு பிருந்தம்.
லட்சம் பிருந்தங்கள் கொண்டது ஒரு பத்மம்.
லட்சம் பத்மங்கள் கொண்டது ஒரு மகாபத்மம்.
லட்சம் மகாபத்மங்கள் கொண்டது ஒரு கர்வம்.
லட்சம் கர்வங்கள் கொண்டது ஒரு மகாகர்வம்.
லட்சம் மகாகர்வங்கள் கொண்டது ஒரு சமுத்திரம்.
லட்சம் சமுத்திரங்கள் கொண்டது ஒரு ஓகம்.
லட்சம் ஓகம் கொண்டது ஒரு மகா ஓகம்.
வானர சேனைகள் நூறு கோடி மகா ஓகம் கொண்டதாக இருப்பதாக ஒற்றன் கூறுகிறான்.அதாவது வானர சேனையில் இருந்தவர்களின் எண்ணிக்கை ஒன்று போட்டு அதன்பின் 61 பூஜ்யங்கள் போட்டால் வரும் எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறுகிறான்.
இவ்வளவு வானரங்கள் நிற்கவாவது பூமியில் இடம் இருக்குமா?இதைக் கற்றறிந்தோர் யாராவது தெளிவு படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

சோம்பல்

0

Posted on : Saturday, September 10, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லா நசிருதீன் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் கூட காலையில் விரைவில் எழுந்தது இல்லை.அவனது தந்தை எவ்வளவோ முயற்சி செய்தும் அவனை விரைவில் படுக்கையிலிருந்து எழ வைக்க முடியவில்லை.ஒருநாள் வழக்கம்போல அவர் அதிகாலை எழுந்து வெளியே சென்றார்.அப்போது ஒரு பறவை தரையில் கிடந்த புழுவைத் தூக்கி சென்றது.பறவை அதிகாலையில் எழுந்ததால்தானே காலை இளம் குளிரில் வெளி வந்த புழுவைப் பிடிக்க முடிந்தது என்று எண்ணினார்.பின்னர் அவர் சாலையில் ஒரு துணிப்பை கிடப்பதைப் பார்த்து அதை எடுத்து அதில்  பொற்காசுகள் இருப்பதைக் கண்டார்.சிறிது நேரம் காத்திருந்தும் ஒருவரும் தேடி வராததால் அதிகாலையில் எழுந்ததற்குக் கிடைத்த பரிசு என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நசிருதீனிடம் சொல்லி விரைந்து எழ வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தலாம் என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.தந்தை எழுப்பியும் நசிருதீன்  எழவில்லை.அவன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து ஊற்றினார்.அப்போதும் அவன் அரைத் தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்தான்.தந்தை தான் கண்ட இரு நிகழ்வுகளையும் சொல்லி மகனின்  பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தார்.நசிருதீன் சொன்னான்,''என்ன அப்பா,உங்களுக்கு விபரமே தெரியவில்லை.அந்தப்புழு அப்பறவை எழுமுன் எழுந்ததால்தானே அது பறவைக்கு இரையாக நேர்ந்தது. அதேபோல் எவனோ ஒருவன் உங்களுக்குமுன் எழுந்து சென்றதால்தானே தன பொற்காசுகளைத் தொலைத்துவிட்டு இப்போது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்?எனவே சீக்கிரம் எழுவது ஆபத்துதான்,''என்று சொல்லிக் கொண்டே மீண்டும் படுக்கையில் படுத்துக் கொண்டான்.தந்தை அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

நம் விருப்பம்.

1

Posted on : Thursday, September 08, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் பொய்யை விரும்புகிறோம்.எதையும் நேரிடையாக உள்ளபடி பேசுவதைவிட கொஞ்சம் நம் சரக்கை  சேர்த்து சொல்கிறோம்.ஏன்?ஜென் ஞானி சொல்கிறார்:
''மற்றவரைவிட அதிகம் தெரிந்திருப்பவன் நான் என்று இலைமறை காய்மறையாகக் காண்பித்துக் கொள்ள நினைக்கும் மனத்துடிப்பே காரணம்.''
ஆழ்ந்து பார்த்தால புரியும்.ஒவ்வொரு முறை பொய் சொல்லும்போதும் நமது அகங்காரம் திருப்தி அடைகிறது மனம் புஷ்டியாகிறது.இது ஆரோக்கியக் கேடு அல்ல;ஆனந்தக்கேடு.மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனிக்கலையாக திரித்துப் பேசுதல் உருவாகியுள்ளது.இதை நாம் மற்றவர்களுக்கும் மற்றவர்கள் நமக்கும் செய்து கொண்டேயிருக்கிறோம்.

பொன்மொழிகள்-21

0

Posted on : Thursday, September 08, 2011 | By : ஜெயராஜன் | In :

எந்தப் பிரச்சினையையும் கடக்கும்போதுதான் வலிக்கும்.பின்னர் நினைக்கும்போது அது ஒரு சுகமான தழும்பு.
**********
வெற்றி,தோல்வி இரண்டுமே விளையாட்டின் முடிவுகள்தான்.நமக்குத் தேவை விளையாட்டின் முடிவுகள் அல்ல.விளையாடும்போது கிடைக்கும் அகமகிழ்வும் பரபரப்பும்தான்.வெற்றி தரும் கரவொலி மைதானத்தில் தங்கி விடுவதில்லை.அது ஒரு நிமிட நேர மகிழ்ச்சி.
**********
தொட்டால் சிணுங்கி இலை கூட நாம் விரலால் தொட்டால்தான் சுருங்கிக் கொள்கிறது.ஆனால் ஒன்றைப் பற்றி மோசமாக நினைத்தாலே போதும்.உடனே மனம் சுருங்கி விடுகிறது.மனிதன் தான் இன்னும் புரிந்து கொள்ள முடியாத தாவரம்.
**********
பயம் என்பது என்ன?  தைரியக் குறைவுதான்.
பயத்திலிருந்து வெளியேறுவது எப்படி?பயத்தை தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள்.
எது புகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட நிறைகள்.
எது இகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட குறைகள்.
யார் வாலிபர்? மாறாத குதூகலத்தோடு இருப்பவர் வயதில் கிழவர் கூட வாலிபர்தான்.
யார் கிழவர்? குதூகலமில்லாதவர் வாலிபராயிருந்தாலும் கிழவர்தான்.
**********
ஒரு ஆப்பிளுக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கலாம்.ஒரு விதைக்குள் எத்தனை ஆப்பிள்கள் இருக்கின்றன என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
**********
உலகம் முழுவதும் மனிதர்கள் பல மொழிகளில் பேசுகிறார்கள்.ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.
**********
பலர் வெற்றியைக் கனவு காண்கிறார்கள்.ஆனால்
சிலர் அதற்காக உழைக்கக் கிளம்பி விடுகிறார்கள்.
**********
எல்லோரிடமும் அழகு இருக்கிறது.ஆனால்
எல்லோராலும் அதைப் பார்க்க முடிவதில்லை.
**********
உங்கள் மனமே நீங்கள் விரும்பியபடி இயங்காதபோது மற்றவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்ப இயங்கவில்லை என்று கோபம் கொள்வது என்ன நியாயம்?
**********
எப்போதும் நம் எதிர்பார்ப்புக்கு ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள்.உங்களையும் இதே காரணத்துக்காக முட்டாளாகப் பார்க்க நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
**********
ஒவ்வொரு பாலைவனத்திலும் ஒரு சிறிய பசுமையான  சோலையாவது இருக்கிறது.ஆனால் எல்லா ஒட்டகத்தாலும் அதைக் கண்டு பிடிக்க முடிவதில்லை.
**********


தடை

0

Posted on : Wednesday, September 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஓவியரான ஒரு ஜென் குரு தன சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும்  சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.ஆர்வத்துடன்  குருவிடம் அது எப்படி சாத்த்யமாயிற்று என்று கேட்க குரு சொன்னார்,''பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது.நீ அருகில் இருக்கிறாய் என்ற உறுத்தல்தான் ஓவியத்தைக் கெடுத்தது.நீ வெளியே சென்றதும் எனக்கு தடை நீங்கியது.ஓவியமும் ஒழுங்காக உருவானது.சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்..குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை  வராது.குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும்.''

நீயே அறிவாய்.

0

Posted on : Wednesday, September 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் குரு ஒருவர் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று கொண்டு ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மூன்று  பிக்குகள் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஜென் வழியைப் பின்பற்றுபவர்கள் அல்ல.எனினும் ஜென் குருவை அடையாளம் கண்டு அவர் அருகில் வந்து நின்றார்கள்.அவர்களில் ஒருவர் ஜென் குருவிடம்,''ஜென் ஆறு எவ்வளவு ஆழம்?''என்று கேலியாகக் கேட்டார்.கண் இமைக்கும் நேரத்திற்குள் குரு கேள்வி கேட்டவரைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டு சொன்னார்,''நீயே அளந்துபார்,''

தாமதம் ஏன்?

0

Posted on : Tuesday, September 06, 2011 | By : ஜெயராஜன் | In :

''தினசரி வேலைக்கு தாமதமாக வருகிறாயே?''என்று முதலாளி கோபமாக முல்லாவைக் கேட்டார்.முல்லா சொன்னார்,''அதற்கு நீங்கள் தான் காரணம்'' முதலாளி ஆச்சரியத்துடன் அவரை நோக்க,முல்லா பணிவுடன் சொன்னார்,    ''நீங்கள் தான் என்னை நேரம் காலம் பார்க்காது வேலை பார்க்கக் கற்றுக் கொடுத்தீர்கள்?அதனால் இப்பொழுதெல்லாம் நான் கையில் கடிகாரம் கட்டுவது இல்லை.''
**********
புதிதாக வேலைக்கு வந்த முல்லாவிடம் முதலாளி கேட்டார்,''உனக்கு ஏற்கனவே ஐந்து வருட அனுபவம் இருக்கிறதாக நேர்முகத் தேர்வில் சொன்னாயே!ஆனால் நீ ஏற்கனவே வேலை பார்த்ததற்கான அறிகுறியே தெரியவில்லையே?''அதற்கு முல்லா சொன்னார்,''நீங்கள் தானே விளம்பரத்தில் கற்பனை வளம் மிக்கஒருவர் வேலைக்கு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்?''
**********

குடை ராட்டினம்

0

Posted on : Tuesday, September 06, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தன இரண்டு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு பொருட்காட்சிக்கு சென்றார்.அங்கு ஒரு குடைராட்டினம் இருந்தது.அவருடைய நண்பர், முல்லா குடை ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.அவருக்கு ஆச்சரியம்.இந்த வயதில் அவர் இப்படி உல்லாசமாக சுற்றுகிறாரே !சிறிது நேரத்தில் அவருக்கு திகைப்பே ஏற்பட்டுவிட்டது.ராட்டினம் நின்றவுடன் முல்லா கீழே இறங்கினார்.வேகமாய்ப்  போய் மறுபடியும் ஒரு டிக்கெட் எடுத்தார் மீண்டும் ராட்டினத்தில் ஏறி உட்கார்ந்தார்.இதுபோல திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தார்.கடைசியில் அவர் இறங்கி வந்தபோது  நண்பர் கேட்டார்,''முல்லா,ராட்டினத்தில் சுற்றுவதென்றால் உங்களுக்கு அவ்வளவு விருப்பமா?''அதற்கு முல்லா சொன்னார்,'ஐயோ.எனக்கு ராட்டினமே சுத்தமாகப் பிடிக்காது.அதில் ஏறினாலே தலை சுற்றும்.'' நண்பர் கேட்டார்,''அப்படியானால் ஏன் மீண்டும் மீண்டும் ராட்டினத்தில் சுற்றினீர்?'' முல்லா சொன்னார்,''அதை ஏன் கேட்கிறீர்கள்?இந்த ராட்டினத்துக்காரன் எனக்கு பணம் கடன் தர வேண்டியிருக்கிறது.பல முறை கேட்டும் தரவில்லை.ராட்டினத்தில் சுற்றியாவது கடனை வசூலித்ததாக இருக்கட்டும் என்று தான் சுற்றினேன்.''

குரு வணக்கம்

0

Posted on : Monday, September 05, 2011 | By : ஜெயராஜன் | In :

அக்பர் அவையில் புகழ் பெற்ற பாடகர் தான்சேன்.அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த பழங்களை சாலையில் செல்பவர்கள் பறித்தது போக அவர்களுக்கு பயன் கிடைக்காத நிலை இருந்தது.தோட்டத்திற்கு காவலாக இருக்கும்படி தான்சேனை அவன் தந்தை அனுப்பினார்.சிறுவனாக இருந்தபோதும் தான்சேன் ஒரு  யுக்தி செய்தான்.அவன் தோட்டத்தில் செடி மறைவில் ஒளிந்து கொண்டு ஆண் புலியைப் போல உறுமினான்.அக்குரல் தத்ரூபமாக இருந்ததால் தோட்டத்தில் புலி இருக்கிறது என்று பயந்து நாளடைவில் யாருமே அந்தப்பக்கம் வருவதே இல்லை.ஒரு நாள் இரண்டு சாதுக்கள் அவ்வழியே வந்தனர்.அவர்களைக் கண்ட தான்சேன் புலியைப் போல உறுமினான்.ஒரு சாது ஓடிவிட்டார்.ஹரிதாஸ் எனும் சாது மட்டும் தைரியமாகத் தோட்டத்திற்குள் நுழைந்து பார்த்தார்.தான்சேன் செடி மறைவில் இருப்பதைக் கண்டார்.அவருக்கு தான்சேன் திறமையில் அபாரப் பற்று ஏற்பட்டது.எனவே தனக்குத் தெரிந்த இசைக்கலையை அவனுக்கு அன்று முதல் புகட்ட ஆரம்பித்தார்.அவன் ஒப்பற்ற இசை மேதை ஆகி விட்டான்.ஒரு கதையாய்ப் போய்விட்ட பிறகும் கூட தான்சேன் பாட ஆரம்பிக்கும்போது புலியைப்போல உறுமாமல் துவங்குவது இல்லை.அந்த உறுமலே தான்சேனின் குரு வணக்கம்.
                       ந.பிச்சமூர்த்தி கதைகள் எனும் நூலிலிருந்து.

சிரஞ்சீவி

0

Posted on : Monday, September 05, 2011 | By : ஜெயராஜன் | In :

சந்தையில் ஒருவன் மருந்து விற்றுக் கொண்டிருந்தான்.முல்லா அவன் உதவியாளராக இருந்தார்.வியாபாரி சப்தம் போட்டுக் கூவினான்,''இந்த மருந்து  சாதாரண மருந்து அல்ல.இது சிரஞ்சீவி மருந்தாகும்.இதை சாப்பிடுபவர்கள் நீண்ட காலம் வாழலாம்.''கூட்டம் கூடியது.அவர்களுக்கு வியாபாரியின் கூற்றில் நம்பிக்கை ஏற்படவில்லை.அதைக் கவனித்த வியாபாரி,''உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?என்னைப் பாருங்கள்.நான் தினமும் இதை சாப்பிட்டு வருகிறேன்.எனக்கு இப்போது வயது முன்னூறு.'' யாருக்கும் இன்னும் நம்பிக்கை வரவில்லை.ஒருவன் அருகிலிருந்த முல்லாவிடம் கேட்டான்,''ஏனப்பா,இவர் சொல்வது உண்மையா?'' முல்லாவின் நிலை தர்ம சங்கடம் ஆனது.இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சொன்னார்,''எனக்கு அவர் வயது சரியாகத் தெரியாது.ஏனென்றால்  நான் அவரிடம் இருநூறு ஆண்டுகளாகத்தான் பணி புரிகிறேன்.''

மனத்தின் குணம்

1

Posted on : Sunday, September 04, 2011 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு புகழ்பெற்ற கவிஞர்.நிறைய கவிதைகள் புனைந்துள்ளார்.நிலாக் கவிதைகள் அவருடைய சிறந்த படைப்பு .நிலவைப் பல வகையில் வர்ணித்து எழுதிய கவிதைகள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன.
அவர் ஒருநாள் தன நண்பர்களுடன் ஒரு காட்டிற்கு பொழுது போக்க சென்றார்.காட்டில் அவருக்கு வழி தவறிவிட்டது.தேடிப்பர்ர்த்தும் நண்பர்களைக் காண முடியவில்லை.காட்டில் மனம் போன  போக்கில் அவர் நடந்தார்.அவருக்கு மிகுந்த களைப்பு ஆகி விட்டது.கடுமையாய் பசியும் எடுக்க ஆரம்பித்தது.சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை.அதற்குள் இரவும் வந்துவிட்டது.அவர் ஒரு மரத்தில்  ஏறி சாய்ந்து கொண்டார்.அப்போது ஆகாயத்தில் பூரண நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது.வழக்கமாக நிலவைப் பார்த்தவுடன் அவருக்கு ஏற்படும் பிரமிப்பு இன்று அவருக்கு ஏற்படவில்லை.வயிறறுப் பசி ஒன்றுதான் அவர் நினைவில் இருந்தது.வேறு வழியில்லாமல் மீண்டும் அவர் நிலவைப் பார்த்தபோது அந்த நிலவு அவருக்கு ஒரு ரொட்டித் துண்டுபோலக் காட்சி அளித்தது.அதை நினைத்தவுடன் அவருக்கு சிரிப்பு வந்தது.நிலவு பற்றி  அழகிய பல கருத்துக்களை எழுதிய தனக்கு இன்று நிலவு ஒரு ரொட்டித் துண்டு போலத் தோன்றுகிறதே என்று நினைத்தார்.ஆம்,பசி வந்தவனுக்குக் காணும் பொருள் யாவும் உணவுப் பொருளாய்க் காட்சி அளிப்பதில் வியப்பேதுமில்லையே!
உண்மையில் எந்தப் பொருளையும் நாம் அதன் உண்மைத் தன்மையில் பார்ப்பதில்லை.நம் மனம் அதை எப்படி உருவகிக்கிறதோ அப்படித்தான் பார்க்கிறோம்.மனதின் விந்தை இது.

இறந்தவன்

0

Posted on : Saturday, September 03, 2011 | By : ஜெயராஜன் | In :

மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து  வரப்பட்டான்.அவன் பிரச்சினை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார்,''அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான்.எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான்.என்ன சொல்லி சமாதானப் படுத்தினாலும்  அதை ஏற்க மறுக்கிறான்.அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம்.''மருத்துவரும்,''இது ஒன்றும் பெரிய விசயமில்லை அவனை எளிதில்  நான் சரி செய்து விடுவேன்,''என்றார்.பின் அவர் அவனிடம்திருபி கேட்டார்,''இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து  இரத்தம் வருமா?''அவன் சொன்னான்,'வராது,'மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது.அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மருத்துவர்,''பார்த்தாயா,உன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது.எனவே நீ இறக்கவில்லை.புரிகிறதா?''என்று கேட்டார்.அவன் மிக அமைதியாக சொன்னான்,''இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன்.இப்போதுதான் தெரிந்து கொண்டேன்,இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்.''மருத்துவர் மயங்கி விட்டார்.

தூதன்

0

Posted on : Saturday, September 03, 2011 | By : ஜெயராஜன் | In :

''கடவுளின் தூதன் நான்''என்று கூறிக் கொண்டிருந்த ஒருவனை கலீப் ஓமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.அவன் ஓமரிடம் சொன்னான்,''நபிகள் நாயகம் தூதராக வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன.அதற்குள் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.எனவே புதிய செய்திகளுடன் என்னைத் தூதராக  இறைவன்  அனுப்பி இருக்கிறார்.''ஓமருக்கு கோபம் வந்துவிட்டது.அவர் தன ஆட்களிடம் அவனை உடைகளின்றி ஒரு தூணில் கட்டி வைத்து உதைக்கச் சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து அவனை வந்து பார்ப்பதாகக் கூறிச் சென்றார்.அதேபோல் அவர் வந்தபோது அவன் உடலெங்கும் ரத்தக் காயங்களுடன் பலமின்றி காணப்பட்டான்.ஓமர் அவனிடம்,''இப்போது என்ன சொல்கிறாய்?''என்று கேட்டார்.அவன் சிரித்துக் கொண்டே,''நான் கடவுளிடமிருந்து வரும்போது அவர்,'என்னுடைய தூதர்கள் அனைவரும் இதுவரை துன்புறுத்தப்  பட்டிருக்கிறார்கள் .அதுபோல நீயும் துன்புறுவாய் அதைக் கண்டு அஞ்சிவிடாதே,'என்று கூறினார்.நீங்கள் அதை உறுதி செய்துள்ளீர்கள்.''என்று கூறினான்.அப்போது பக்கத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த கைதி ஒருவன் கோபத்துடன்,''அவன் சொல்வதை நம்பாதீர்கள்.நபிகளுக்குப் பிறகு நான் எந்த தூதுவரையும் அனுப்பவில்லை.'' என்று கத்தினான்.

சிரித்தால் தப்பில்லை

0

Posted on : Friday, September 02, 2011 | By : ஜெயராஜன் | In :

தந்தை கேட்டார்,''மகனே ,தேர்வில் என்ன மதிப்பெண் பெற்றுள்ளாய்?''மகன் சொன்னான்,''நூறு மார்க் அப்பா,''தந்தைக்கு மகிழ்ச்சி.''எந்தப் பாடத்தில் நூறு மார்க் எடுத்துள்ளாய்?''மகன் சொன்னான்,''ஐந்து பாடத்திலும் சேர்த்து.''
**********
''நேற்று இரவு நான் இல்லாதபோது என் வீட்டிற்கு ஒரு திருடன் வந்துவிட்டான்.என் மனைவி அவனை அடித்து நொறுக்கி விட்டாள். அவன் அலறி அடித்து ஓடி விட்டான்.''என்றான் ஒருவன் தன நண்பனிடம்.நண்பன் சொன்னான்,''பரவாயில்லை..உன் மனைவி தைரியம் மிக்கவர் போலும்,''  அவன் நண்பனின் காதருகே வந்து மெதுவாக சொன்னான்,''அப்படி இல்லை.அவள் பயந்தவள்தான்.ஆனால் இருட்டில் நான்தான் தாமதமாக வந்துள்ளேன் என்று நினைத்து விட்டாள்.''
**********
இரவு நேரத்தில் சற்று மங்கலான வெளிச்சத்தில் ஒருவன் சென்று கொண்டிருந்தபோது எதிரே இரண்டு குண்டர்கள் வருவதைப் பார்த்தவுடன் அவனுக்கு சற்று பயம் ஏற்பட்டது.அதில் ஒருவன் அவனிடம்,'சார்,ஒரு ஒருரூபாய் நாணயம் இருக்குமா?''என்று கேட்டான்.தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகுதே என்று எண்ணி ஆறுதலுடன், அதைக் கொடுத்தபோது அதை அவன்  சுண்டிவிட்டான்.''எதற்காக சுண்டுகிறீர்கள்?"என்று கேட்க அந்த குண்டன் சொன்னான்,''எங்கள் இருவரில் யார் உன் கடிகாரத்தை எடுத்துக் கொள்வது,பர்சை யார் எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்வதற்காகத்தான்.''
**********
''இன்று நடந்த பார்ட்டியில் சோமுவின் மனைவியை ஏன் முத்தம் இட்டீர்கள்?''என்று கணவனிடம் மனைவி கோபமாகக் கேட்டாள்.கணவன் சொன்னான்,''அவள் உன் தோழி உமாவிடம் உன்னைப் பற்றித் தவறாகப் பேசிக் கொண்டிருந்தாள்.அவள் வாயை அடைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை.''
***********
ஒரு புரோகிதர் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்து அதை அப்புறப்படுத்தக் கேட்டுக் கொண்டார்.அதற்கு அந்த ஆள் குறும்பாக,''புரோகிதரே,இறந்த அந்த கழுதைக்கு இறுதிச் சடங்குகளை முதலில் முடியுங்கள்,''என்றார்.புரோகிதரும்,''அதற்கென்ன,பேஷாகச் செய்து விடுகிறேன்.இருந்தாலும் அந்தக் கழுதையோட உறவினர்களுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா?அதுதான் உங்களிடம் சொன்னேன்.''என்றார்.
**********

நண்பன் அல்லவா!

0

Posted on : Friday, September 02, 2011 | By : ஜெயராஜன் | In :

தையல் கடை வைத்திருக்கும் தன நண்பனிடம் ஒருவன் தன சட்டையைத் தைத்துக் கொடுக்கச் சொல்லி வந்தான்.தையல் கடைக்காரன் சொன்னான்,      ''நான் எல்லோரிடமும் ஒரு சட்டை தைக்க இருநூறு ரூபாய் வாங்குகிறேன்.ஆனால் நீ என் நண்பன் அல்லவா?அதனால் நூற்றி ஐம்பது ரூபாய் கொடு போதும்,''.நண்பன் சொன்னான்,''நான் வழக்கமாக என் சட்டையைத் தைப்பதற்கு எழுபது ரூபாய் தான்  கொடுப்பேன்.ஆனால் நீ என் நண்பன் அல்லவா?அதனால் நான் நூறு ரூபாய் தருகிறேன்,''வேறு வழியின்றி தையற்காரனும் சம்மதித்தான்.
**********
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக அவன் மனைவி நீதி மன்றத்தில் சாட்சி கூற வந்தாள்.அந்தப் பெண் விபசாரத்தைத் தொழிலாகக் கொண்டவள்.அவள் சாட்சியத்தில் கொலை நடந்ததாகக் கூறப்படும் அன்று இரவு தன கணவர் தன்னுடன் வீட்டில் இருந்ததாகக் கூறினாள்.கொலை  நடந்த இடமோ விபச்சார விடுதி.அரசுத் தரப்பில் ஆஜரான முன்னணி வக்கீல் அந்தப் பெண்ணிடம்,,''அன்று இரவு தொழில் செய்யும் இடத்துக்கு நீ போகவில்லையோ?''என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு அவள்,''நான் பகலில்தான் என் தொழிலை
செய்வேன்,''என்றாள்.அதற்கு வக்கீல்,''அது எப்படி?உன் வாடிக்கையாளர்கள் இரவில்தானே வருவார்கள்?''என்று சீண்டினார்.அதற்கு அந்தப் பெண் நிதானமாகப் பதில் கூறினாள்,''திருடர்களும் பொறுக்கிகளும்தான் இரவில் போவார்கள்.உங்களைப்போல கௌரவமானவர்கள் பகலில்தான் வருவார்கள்.''
**********

சுயநலம்

0

Posted on : Thursday, September 01, 2011 | By : ஜெயராஜன் | In :

உலகம் மனிதனின் உள்ளத்திலுள்ள இரக்கத்தினால் நடப்பதில்லை.அது அவனுடைய வலிமையினால் நடக்கிறது.மனிதன் வெறும் அன்பினால் வாழ்வதில்லை.அவன் மற்றவர்களைத் தோல்வியுறச் செய்து வாழ்கிறான். மனிதன் இவ்வுலகில் பாடுபடுவதெல்லாம் சுயநலத்துக்காகத்தான்.தியாகம் பற்றிய கதைகள் கோவிலுக்குப் பொருத்தமானவை.ஆனால் வாழ்க்கை என்பது கோவில் அல்ல;போர்க்களம்.
மரம் செடி கொடிகளின் வேர் பக்கத்திலுள்ள ஈரத்தை நாடிச் செல்வதுபோல  மனிதரும் தனது சுய நலத்துக்காகப் பிறரை ஆதாரமாகக் கொள்கின்றனர். இதைத்தான் உலகம் அன்பு,நட்பு,காதல் என்று கூறுகிறது.ஆனால் இது ஒவ்வொருவரும் தம்மிடமே கொள்ளும் அன்புதான்.ஒரு புறம் ஈரம் வற்றிவிட்டால் மரங்களும் வாடி விடுவதில்லை.அவற்றின் வேர்கள் வேறொரு புறத்தில் எங்கே ஈரம் என்று தேடுகிறது.அருகில் இருந்தாலும் சரி,தொலைவில் இருந்தாலும் சரி,அந்த ஈரத்தைத் தேடிக் கண்டு பிடித்து பசுமையாக இருக்கின்றன.
**********
எதுவும் தொலைவிலிருந்து பார்க்கப் பயங்கரமாகத் தோன்றுகிறது. உண்மையில் அது அச்சம் தருவதல்ல.சாவும் அப்படித்தான்.
**********
வாழ்க்கை எப்போதும் குறை உள்ளதாகத்தான் இருக்கிறது.அப்படி அது இருப்பதில்தான் அதன் இனிமை நிரம்பியிருக்கிறது.
**********
   மனிதன் தன்னை அறியாமலேயே தன்னைச் சுற்றியே வளைய  வருகிறான்.பல ஊர்களை நீர்மயமாக்கி நெடுந்தூரம் பிரளயமாகப் பரவும் பெரு வெள்ளத்தைக் காட்டிலும் தன கண்ணில் வடியும் கண்ணீர்தான் அவனுக்கு அதிக முக்கியமாகத் தோன்றுகிறது.
**********
                                            --யயாதி என்ற நூலில் விஷ்ணு சகாராம் காண்டேகர்.

நிந்தனை

1

Posted on : Thursday, September 01, 2011 | By : ஜெயராஜன் | In :

உன்னை நிந்திப்பவர்கள் உன்னைச் சரியாகப் புரிந்து கொலவில்லை என்றுதான் பொருள்.உன்னைப் புரிந்து கொண்டவர்கள் உன்னை நிந்திப்பதில்லை.உன் நண்பர்களும் உன் பகைவர்களும் உன்னைப்பற்றி என்ன எண்ணுவார்களோ,அதுதான் நீ என்று எண்ணினால் உன்னால் உன்னையே அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.ஒவ்வொருவரும் தன வழியைத் தானேதான் காண வேண்டும்.புத்தரின் வழி புத்தருக்கு மட்டுமே. பெரியோர்களைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் அந்த நேரத்தில் தங்கள் மன உளைச்சலுக்கு அதன் மூலம் வடிகால் தேடுவார்களே தவிர அதிலே உண்மையான நாட்டம் இல்லாதவர்கள்தான்.
                                                            --சூபி ஞானி மரூப்