உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பேசத்தெரிந்து கொள்ளுங்கள்.

1

Posted on : Sunday, June 30, 2013 | By : ஜெயராஜன் | In :

உரையாடல் ஒரு கலை.இனிமையாகவும் சுவையாகவும் பிறரைக் கவரும் வண்ணம் உரையாடுவது ஒரு வித்தை.அந்தக் கலை கைவரச்சிலவழிகள் :
*உரையாடலின்போது உங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் உடல்நிலை, உங்கள் பிரச்சினைகள் ,தொந்தரவுகள் இவை பற்றிப் பேசாதீர்கள்.அதனால் எந்தப் பயனும் இல்லை.கேட்பவர்க்கும் போர்.
*நீங்களே பேச்சைக் குத்தகை எடுக்காதீர்கள்.நீங்கள் நகைச் சுவையாகப் பேசுபவராக இருக்கலாம்.ஆனால் உங்கள் பேச்சைக் கெட்டு முதலில் விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் கூட கொஞ்ச நேரத்தில் சலிப்படைவார்கள்.நாம் பேசக் கொஞ்சம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சல் படுவார்கள்.எனவே மற்றவர்களும் பேசுவதற்கு வசதியாக இடைவெளி கொடுங்கள்.
*குறுக்கே விழுந்து மறுக்காதீர்கள்.'நீங்கள் சொல்வது தப்பு,'என்று சொல்லும் போதே உரையாடல் செத்து விடுகிறது.அதைக் காட்டிலும் பேசுபவரின் பேச்சில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை உறுதிப் படுத்துங்கள்.
*திடீரென்று ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்திற்குத் தாவாதீர்கள்.அடுத்தவர் பேசும்போது அரை வினாடி நிறுத்தினால் உடனே நுழைந்து வேறு விசயத்தைப் பேச ஆரம்பிக்கக் கூடாது.
*எதிராளியின் பேச்சில் உண்மையான அக்கறை காட்டுங்கள்.அவர் உள்ளம் திறந்து பேச அது வழி வகுக்கும்.அவர் பேசும் விஷயத்தை விரிவு படுத்துங்கள்.உரையாடல் இனிமையாய் அமையும்.
*ஒரு விசயத்தைப் பற்றி ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேச்சு வேறெங்கோ சென்று விட்டால் நீங்கள் அதை மறவாது விட்டுப் போன விஷயத்தை ஞாபகப் படுத்துங்கள்.இது பண்பாடு மட்டும் அல்ல.அவருடைய பேச்சில் உண்மையான அக்கறை காட்டுவதாக அமையும்.
*எதையும் அடித்துப் பேசி முத்தாய்ப்பு வைக்காதீர்கள்.எதிராளிக்கு வேறு கருத்தும் இருக்கக் கூடும் என்பதற்கு இடம் கொடுத்துப் பேசுங்கள்.
*தாக்காதீர்கள்.கெட்ட விசயத்தைக் குறை சொல்லும்போது கூட குத்தலாகவோ அவதூறாகவோ பேசாதீர்கள்.கிண்டலாகப் பேசுவது உங்கள் மூளைக் கூர்மையைக் காட்டக் கூடும்.ஆனால் எதிராளிக்கு இருப்புக் கொள்ளாமல் போகும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

கோபம் கூடாது.

2

Posted on : Saturday, June 29, 2013 | By : ஜெயராஜன் | In :

கோபம்!எல்லோருக்கும் சுலபமாக வந்து விடுகிறது.எத்தனை பேரால் அதை அடக்க முடிகிறது?உங்கள் வளர்ச்சி நிச்சயம் கோபத்தில் இல்லை.கோபத்தை அடக்குவதில்தான் இருக்கிறது.அதற்கு என்ன வழி?
*இப்போது நாம் கோபமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் ,அதை ஒப்புக் கொண்டால் மட்டுமே அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது பற்றி யோசிக்க முடியும்.யோசித்தால் இந்தக் கோபம்  நாமே வரவழைத்துக் கொண்டது தான் என்பது புரியும்.
*கோபத்தின் போது பேசும் வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை என்பது  அமைதியாக இருக்கும்போதுதான் தெரியும்.எனவே சூடான பேச்சுக் கிளம்பும்போது அந்த இடத்தை விட்டு வெளியேறி சூடு ஆறியபின் திரும்ப வரலாம்.
*கோபத்திற்கு ஒரு இலக்கு வேண்டும்.எனவேதான் சம்பந்தம் இல்லாதவர்கள் மீது எரிந்து விழுகிறோம்.கோபம் வரும்போது யார் மீது கோபப்பட வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
*கோபத்தின் அடிப்படைக் காரணம் என்ன என்று கண்டு பிடியுங்கள். இல்லாவிடில் யார் மீதாவது குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பீர்கள்.காரணம் தெரியாமல் போகும்.அம்மாதிரி நேரங்களில் மனைவியிடமோ,நெருங்கிய நண்பனிடமோ மனம் விட்டுப் பேசுங்கள்.காரணம் தெரிய வரும்.
*அனுபவமே நல்ல ஆசான்.யார்யார் உங்களுக்கு கோபமூட்டுகிறார்கள் என்னென்ன இடத்தில் எந்தெந்த சந்தர்ப்பத்தில் கோபம் வருகிறது என்பதை அறிந்து அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம்.அதேபோல நீங்கள் என்ன பேசினால் அல்லது என்ன செய்தால் மற்றவர்களுக்குக் கோபம் வருகிறது என்பதை அறிந்து கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
*கோபம் வரும்போது உங்களை ஏதாவது ஒரு வேலையில் மூழ்கடித்துக் கொள்ளுங்கள்.நிதானம் திரும்பி விடும்.
*இன்று ரொம்பத் தலை போகிற விசயமாக தெரிவது கொஞ்ச நாள் கழித்து அப்படித் தெரியாது.அல்பமான விஷயமாகக் கூடத்தெரியும்.நாள் கடத்திப் பாருங்கள்.
*சில அக்கிரமங்களைக் காணும்போது கோபம் வருவது நியாயமே.ஆனால் வெறுமனே கோபப்படாமல் நாலு பேருடன் சேர்ந்து அந்த நிலைமைக்குப் பரிகாரம் ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்.
                          The guide to knowing yourself என்ற நூலிலிருந்து.

பொன்மொழிகள்-54

2

Posted on : Tuesday, June 25, 2013 | By : ஜெயராஜன் | In :

தனது தேசம் இழந்து போனதற்காகக் கவலைப்படும் மன்னனின் நிலைக்கும், தனது பொம்மை உடைந்ததற்காக வருத்தப்படும் குழந்தையின் நிலைக்கும் வேறுபாடு அதிகம் இல்லை.
******
ஒருவன் கடும் முயற்சியினால் உயர்ந்த மலையின் சிகரத்தை அடைந்து விடலாம்.ஆனால் அவன் அங்கேயே வாழ்ந்து விட முடியாது.
******
வெற்றிகரமாகப் பொய் சொல்ல வரம்பற்ற நினைவாற்றல் வேண்டும்.
******
கோபமான மனிதன் தனது வாயைத் திறந்து கண்களை மூடிக் கொள்கிறான்.
******
இளமை குறைகள் உடையது.
நடுத்தர வயது சிரமங்கள் உடையது.
முதுமை வருத்தங்கள் உடையது.
******
'தான் மிக முக்கியமானவன்'என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி,''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்துவிடும்?''
******
வாழ்க்கை முழுவதும் இன்பமா!
அதைக் காட்டிலும் நரகம் எதுவும் இருக்க முடியாது.
******
நெற்றியைக் காயப்படுத்திக் கொள்வதைவிட
முதுகை வளைத்துச் செல்வது நல்லது.
******
நரி நம்புகிறது,''எல்லோரும் என்னைப்போல கோழியைப் பிடித்துத் தின்கிறார்கள்,''என்று.
******
நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் என்னைவிட ஏதாவது ஒரு வகையில் சிறந்தவனாக உள்ளான்.
******
பணிதல் நல்ல பண்புதான்.அதில்  ஒரு வரம்பைக் கையாளவில்லை என்றால் நீ அடிமையாவதற்கு அஸ்திவாரம் போடப்படும்.
******
ஒரு வாக்குவாதத்தின் உச்சத்தில் யார் அடிதடியில் இறந்குகிறார்களோ,அவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்று பொருள்.
******

நாக்கைப் பிடுங்கிட்டு.....

1

Posted on : Thursday, June 20, 2013 | By : ஜெயராஜன் | In :

''உடனே போய் அவனை என்ன சேதின்னு கேட்கிறேன்.கேக்குற கேள்வியில அவன் நாக்கைப் பிடுங்கிட்டு சாகனும் அய்யா!''என்று நரம்பு புடைக்க சில பேர் புறப்படுவார்கள்.எல்லா நியாயங்களும் போட்டு உடைக்கப்பட வேண்டும் என்று அவசியம் இல்லை.எல்லா உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக்கப்பட வேண்டும்  என்று கட்டாயமில்லை.இப்படிக் கேட்டு விட்டார்களே என்று யாரும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகத் தயாராக இல்லை.அது மட்டுமல்ல.தங்கள் தவறுகளை உணரக்கூட பலபேர் முன் வருவதில்லை. குறிப்பாக எந்த ஒரு மனிதனும் எதிராளி கோபப்படும்போது தன்  தவறை ஏற்றுக் கொள்வது இல்லை.மாறாக அவர்களே உணரும்படி அவகாசம் தரப்படும்போது உண்மையை உணர முற்படுவார்கள்.
நமக்கு விசுவாசமாக இருக்க வேண்டியவர்கள் அனாவசியமாக நம்மைப் பற்றி அல்லது நம்மைச் சார்ந்தவர்களைப்பற்றி பேசிவிடும் போதோ ,நன்றி மறக்கும் செயல்களை செய்யும் போதோதான் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்கணும் என்று தோன்றுகிறது.'இவர்கள் கிடக்கிறார்கள்!நாம் நம் வேலையைப் பார்ப்போம்,''என்று பெருந்தன்மையான அணுகு முறையுடன் நடந்து கொள்வதுதான் இவர்களை மாற்ற ஒரே வழி.
''பெரிசா நியாயம் கேட்க வந்திட்டயே ,நீ சொல்வது என்ன நியாயம்?''என்று பாட்டில் பால் குடித்த காலத்திலிருந்து நடந்த சம்பவங்களை எடுத்து உதாரணம் காட்டி,மனசுக்குள் இருக்கிற வக்கிரங்களை எல்லாம் வாந்தியாக எடுக்க வேண்டாம்.இது நம்மைப் பற்றிய நல்ல எண்ணங்களை எல்லாம் விரட்டிவிடும்.
''உனக்கு நான் இவ்வளவு செய்தேனே!''என்று நாமே சொல்லிக் கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப் பட்டு விடக்கூடாது.''அவர் நமக்கு அவ்வளவு செய்தாரே!''என்று அவர்கள் உணரும்படியாக நடந்து கொள்வதே நமக்கு வெற்றி.நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற கேள்விகளால் இத்தகைய மனநிலையை உருவாக்குவது சாத்தியமில்லை.
நியாயங்களை நாம் உணர்த்த வேண்டும் என்பது அவசியம் இல்லை.காலம் உணர்த்தும்.அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.பதில் வார்த்தையே பேச இடமின்றி,நாம் கேட்கும் கேள்விகளால் எதிரியைத் திணற வைப்பதற்கு நம்மிடம் பலம் இருக்கலாம்.ஆனால் இது ஒரு குரூரமான சந்தோசம்.
வார்த்தைகளை விடும்போது பக்க விளைவுகளையும் பின் விளைவுகளையும் சிந்திக்க வேண்டும்.
இல்லாவிடில் வேகமாக எழுபவர்கள் சோகத்துடன் அமர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
                                                      --லேனா தமிழ்வாணன்.

கடவுளைப்பற்றி

3

Posted on : Wednesday, June 19, 2013 | By : ஜெயராஜன் | In :

புத்தரிடம்  ஒரு கற்றறிந்த பிராமணர் கடவுளைப்பற்றிக் கேட்டார்.புத்தர் பதில் ஏதும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார்.இதைப் பார்த்த அவர் சீடர் ஆனந்தனுக்கு ஏமாற்றம்.ஏனெனில் அந்த பிராமணருக்கு சீடர்களின் எண்ணிக்கை அதிகம்.அவர் மட்டும் பௌத்த மதத்திற்கு மாறி விட்டால் அவரைப் பின்பற்றி ஆயிரக் கணக்கானோர் பௌத்த மதத்திற்கு மாறி விடுவார்கள்.ஆனால் புத்தர் மௌனமாகவே இருந்தார்.சிறிது நேரம் கழித்து அந்த பிராமணர் புத்தரை வணங்கி நன்றி தெரிவித்து விட்டு போய் விட்டார்.அவர் போனபின் ஆனந்தன் புத்தரிடம் நல்ல ஒரு வாய்ப்பை இழந்து விட்டதாகக் கூறி வருத்தப்பட்டார்.புத்தர் சொன்னார்,''ஒரு நல்ல குதிரைக்கு சாட்டையின் நிழலே போதுமானது.அந்தக் குதிரையை சாட்டையினால் அடிக்க வேண்டியதில்லை.அவர் மன மாற்றம் அடைந்துவிட்டார்.''ஆனால் ஆனந்தனுக்கு இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை.ஆனால் மறுநாள் காலை அந்த பிராமணர் ஆயிரக்கணக்கான சீடர்களுடன் புத்தரிடம் வருவதைப் பார்த்த ஆனந்தனால் நம்ப முடியவில்லை.அவர் அன்று இரவு புத்தரிடம்,''இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது?நீங்கள் கண்களை மூடி மௌனமாக இருந்தது அவரை அவமதிப்பதுபோல நான் உணர்ந்தேன்.ஏனென்றால் அவர் முக்கியமான கேள்வி கேட்டு நீங்கள் சரியான பதில் சொல்ல மறுத்து விட்டீர்களே?''என்று கேட்டார்.புத்தர் சொன்னார்,''இந்த மௌனம் ஒரு சூட்சுமமான பதில்  ஆகும்.அது அவருக்குத் தெரியும்.கடவுளைப் பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது.நான் ஏதாவது சொல்லியிருந்தால் என் மீது நம்பிக்கை இல்லாது அவர் போயிருப்பார்.ஏனென்றால் நான் சொல்லும் கடவுள்,கடவுளே அல்ல என்பதையே காட்டியிருக்கும்.அதனால்தான் நான் என் கண்களை மூடிக் கொண்டு மௌனமாக இருந்தேன்.கண்களைத் திறந்திருந்தால் கூட கண்களின் மூலம் நான் எதுவோ சொல்ல வருகிறேன் என்று அவர் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும்.எனவே என் மௌனம்தான் சரியான பதில்.அதை அவரும் ஏற்றுக் கொண்டார்.''

நல்ல செய்தி

2

Posted on : Tuesday, June 18, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு சித்திரக் கலைஞன் தான் சிரமப்பட்டு வரைந்த இருபது படங்களை ஒரு பொருட்காட்சியில் விற்பனைக்கு வைத்தான்.மறுநாள் அவன் அங்கு வந்தபோது எல்லாப் படங்களும் விற்பனையாகியிருந்ததைப் பார்த்து வியந்து போனான்.அந்த காட்சி சாலையின் உரிமையாளரிடம் அது பற்றிக் கேட்டான்.அவர் சொன்னார்,''உனக்கு நல்ல செய்தி ஒன்றும் கெட்ட செய்தி ஒன்றும் வைத்துள்ளேன்,''என்றார்.ஆர்வத்துடன் அவன் விபரம் கேட்க அவர் சொன்னார்,''நல்ல செய்தியை முதலில் சொல்கிறேன்.நேற்று ஒருவர் வந்து உன்னுடைய படங்களை எல்லாம் பார்த்தார்.பின் என்னிடம் இந்தப் படங்களை வரைந்தவர் இறந்த பின் இப்படங்கள் நல்ல விலைக்குப் போகுமா என்று விசாரித்தார்.நானும் கண்டிப்பாக நல்ல விலைக்குப் போகும் என்றேன்.உடனே அவரே அத்தனை படங்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டார்,'' அவன்,''இது நல்ல செய்திதான்.சரி,கெட்ட செய்தி ஒன்று இருப்பதாகச் சொன்னீர்களே,அது என்ன?''என்று கேட்டான்.அவர் சொன்னார்,''அந்த ஆள் வேறு யாரும் இல்லை.உன்னுடைய டாக்டர்தான்.''

இன்பம் யாவுமே..

0

Posted on : Monday, June 17, 2013 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் இன்பமாகக இருக்கும்போது இதற்கு முன் துன்பமாக இருந்தீர்கள் என்பதை மறந்து விடுகிறீர்கள்.மீண்டும் துன்பம் தொடரும் என்பதை மறந்து விடுகிறீர்கள்.நீங்கள் துன்பமாக இருக்கும்போது முன்பு இன்பமாக இருந்ததை  மறந்து விடுகிறீர்கள்.இனி இன்பம் தொடரும் என்பதையும் மறந்து விடுகிறீர்கள்.
இன்பம் வரும்போது அதில் மறைந்துள்ள துன்பத்தைத் தேடுங்கள்.துன்பம் வரும்போது அதில் எங்கோ மறைந்திருக்கும் இன்பத்தைத் தேடுங்கள்.பிறகு உங்களுக்கு உண்மை நிலை புரியும்.இன்பமும் துன்பமும் வெவ்வேறு விசயங்கள் அல்ல.அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.வெளியே தெரியும் விசயத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து விடாதீர்கள்.
ஒருவன் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றி அதிகமாகச் சொல்ல முற்பட்டால் அவனுள் அதற்கு எதிரான விசயம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.அவன் அவனையே திருப்திப் படுத்திக் கொள்கிறான்,உங்களை அல்ல.
******
பிரார்த்தனை செய்வது கடவுளுக்கானது  அல்ல.பிரார்த்தனை உங்களுக்காகத்தான் இருக்கிறது.நீங்கள் பிரார்த்திக்கிரீர்கள்.இதன் மூலம் நீங்கள் மாற்றம் அடைகிறீர்கள்.உங்கள் பிரார்த்தனையை யாரும் கேட்பதில்லை.யாரும் அதைக் கெட்டு உதவப் போவதில்லை.ஆனால் அதன் மூலம் உங்கள் உள்ளம் மாற்றம் அடைகிறது.உங்கள் பிரார்த்தனை உண்மையாக இருக்குமேயானால்,நீங்கள் அதன்மூலம் நீங்கள் வித்தியாசம் ஆனவராக ஆகிறீர்கள்.உங்கள் உறுதிப்பாடு உங்கள் பிரார்த்தனை நிறைவேறக் காரணமாகிறது.
******

புதியவினை

2

Posted on : Sunday, June 16, 2013 | By : ஜெயராஜன் | In :

புத்தர் ஞானமடைந்தபின் அவர் உறவினர் தேவதத்தன் அவருக்கு விஷமிட முயற்சி செய்தான்.அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான். .ஆனால் எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.ஒருமுறை ஒரு மதம் பிடித்த யானையை புத்தரின் அருகில் ஏவி விட்டான்.ஆனால் அது புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,கண்களை மூடிக் கொண்டது.சிலர் புத்தரைக் கேட்டார்கள்,''தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான்.ஆனால் நீங்கள் அவனை ஒன்றும் செய்வதில்லை.ஏன்?அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்?''புத்தர் சொன்னார், ''என்னுடைய கடந்த காலச் செயல்களால்தான் இவை எல்லாம் நடக்கின்றன. கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன்.அந்த சங்கிலித் தொடரின் பிரதிபலிப்பாக அவன் இப்படி செய்து கொண்டிருக்கிறான்.இது அவனுடைய செயல் அல்ல.அதேபோல் கடந்த காலத்தில் இந்த யானைக்கு நான் ஏதேனும் உதவி செய்திருப்பேன். அப்படியில்லை என்றால் அது எப்படி இவ்வாறு சாந்தமாக என் அருகில் நிற்கும்?இப்போது நான் தேவதத்தன் செயல்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.அப்படி இல்லாமல் நான் பதிலுக்கு ஏதேனும் செய்தால் மீண்டும் ஒரு சங்கிலி உருவாகிவிடும்.என் கடந்த காலச் செயல்களுக்கு இப்போது தேவதத்தன் செய்யும் செயல்களோடு தேவதத்தனுடைய விசயங்கள் முடிந்து போகட்டும்.நான் இனி ஒரு புதிய சங்கிலியை,வினையை,கர்மத்தை எதிர்காலத்தில் உருவாக்கப் போவதில்லை.''

திருடன்

0

Posted on : Saturday, June 15, 2013 | By : ஜெயராஜன் | In :

பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம்.இதுதான் நமக்குள் இருக்கும் திருடன்.அந்தத் திருடனோடு நாம் சண்டை இட வேண்டியிருக்கிறது.திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.அடுத்த வீட்டில் திருடன் ஒருவன் அகப்பட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம்.ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான்.அவனைப் பிடித்துத் தண்டிக்க நினைக்கிறோம்.ஆனால் முடியவில்லை.வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம்.நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம்.திருடனைத் தண்டிக்க திருடனின் இருப்பு அவசியம்.புனித மனிதர் ஒருவரால் திருடனை அடிக்க முடியாது.ஆகவே திருடர்களே எப்போதும் திருடர்களைக் கண்டிப்பர்.குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குறை சொல்வார்கள்.காமவயப்பட்டவரே பாலுறவைக் கண்டித்துப் பேசுவர்.நமக்குள்ளே இருப்பதுதான் வெளியே வெளிப்படும். ''ஒருவன், 'திருடன்,திருடன்,விடாதே பிடி,'என்று கத்தினால், அவ்வாறு கத்துபவனை முதலில் பிடிக்க வேண்டும்'' என்று பேரறிஞர் ரஸ்ஸல் சொல்கிறார்.நம் மன நோய்களை நாம் பிறர் மீது சுமத்துகிறோம்.எனவே ஒருவரைப் பற்றிக் குறை  கூறும்போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.நமக்குள் ஏற்படும் போராட்டமே இன்னொருவர் மீது ஏற்றி உரைக்கப்படுகிறது.நமக்குள் முரண்பாடு தோன்றாதபோது,போராட்டம் இல்லாதபோது இன்னொருவர் மீது பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று விடுகிறது.மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும்போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது.ஆனந்த நடனமே அமையும்.மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் துவங்குகிறது.

ஒளி சென்றதெங்கே?

2

Posted on : Friday, June 14, 2013 | By : ஜெயராஜன் | In :

சூபி ஞானி ஒருவர் ஒரு மாலை வேளையில் ஒரு கிராமத்துப் பக்கம் சென்று கொண்டிருந்தார்.ஒரு குழந்தை எரிந்து கொண்டிருந்த கை விளக்கோடு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது.அந்த ஞானி குழந்தையை நிறுத்திக் கேட்டார்,''இந்த விளக்கின் ஒளி எங்கிருந்து வந்தது?நீதானே விளக்கேற்றினாய்?''குழந்தை பதில் அளித்தது,''நான்தான் விளக்கேற்றினேன்.ஆனால் ஒளி எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது.''பின் அந்தக் குழந்தை விளக்கைத் தனது வாயால் ஊதி அணைத்தது. அது ஞானியிடம்,''இப்போது உங்கள் முன்னர்தான் ஒளி மறைந்து விட்டது.இப்போது சொல்லுங்கள்,ஒளி எங்கே சென்றது?இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால்  நான் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.''என்று கேட்டது.திகைத்துப் போன ஞானி அக்குழந்தையின் காலில் விழுந்தார்.இனி யாரிடமும் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதில்லை என்று உறுதி அளித்தார்.அக்குழந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஒளி சென்ற இடம் தனக்குத் தெரியாது என்றார்.தான் பதில் அளிக்க முடியாத கேள்வியைப் பிறரிடம் கேட்பது முட்டாள்தனம் என்பதனை உணர்ந்தார்.பின் அவர் கூறினார்,''விளக்கை விடு.அதற்கு மேலாக எனக்கு ஒரு நல்ல பாடத்தை  சொல்லிக் கொடுத்திருக்கிறாய்.என் விளக்கில்(உடல்)ஒளி வருவது எங்கிருந்து என்று எனக்குத் தெரியாது.அது எங்கு மறையும் என்பதும் தெரியாது.என் விளக்கைப் பற்றி முதலில் நான் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.பின் இந்த மண் விளக்கின் ஒளியைத் தேடுகிறேன்.''

தெரியுமா-4

2

Posted on : Thursday, June 13, 2013 | By : ஜெயராஜன் | In :

கைலாய மலை தற்போது சீனாவில் உள்ளது.
******
காணி நிலம் என்பது 1.32 ஏக்கர்.
******
டென்மார்க்கின் தேசியக் கொடிதான் உலகில் மிகப் பெரியது.
******
டாக்காவில் எழு நூறுக்கும் ஏற்பட்ட மசூதிகள் உள்ளன.எனவே அதை 'மசூதிகளின் நகரம்' என்று அழைக்கின்றனர்.
******
இத்தாலியில் உள்ள சால்பரினோ என்ற இடத்தில் நடந்த போரின் கொடுமையைக் கண்டு மனித நேயமிக்க ஹென்றி டுனான்ட் என்பவரால் ஏற்படுத்தப் பட்டதுதான் செஞ்சிலுவை சங்கம் .
******
தமிழ் நாட்டின் முக்கிய சின்னங்கள்:
மரம்-பனைமரம்.
விலங்கு -வரையாடு.
மலர்-செங்காந்தள் மலர்.
பறவை-புறா.
******
தந்தையின் மீது பாசமும் தாயைப் போட்டியாளராக நினைத்து வெறுக்கும் மகளுக்கு உள்ள மனநோய்க்கு 'எலெக்ட்ரோ காம்ப்ளெக்ஸ் 'என்று பெயர்.
******
கழுத்து இல்லாத ஒரே உயிரினம்,''மீன்''
******
உலகின் மிகப் பெரிய மலை சிகரங்களைக் கொண்ட நாடு,நேபாளம்.
******
ஆசியாவின் குளிர்ச்சியான பாலைவனம்,கோபி பாலைவனம்.
******
முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது,'குதா ஹபீஸ்'என்று சொல்வர்.இதற்கு,'கடவுள் உம்மை பாதுகாப்பாராக'என்று பொருள்.
******
உலகின் மிகக் குறுகிய எல்லைக்கோடு ஸ்பெயின் நாட்டிற்கும் ஜிப்ரால்டருக்கும் இடையில் உள்ளது.
******

தந்திர மனது

2

Posted on : Wednesday, June 12, 2013 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் வான ஊர்தியில் செல்லும்போது அதன் ஓட்டுனர் எல்லாப் பொறுப்புக்களையும் தானே எடுத்துக் கொள்கிறார்.என்ற ஆறுதலுடன் தேநீர் குடித்துக் கொண்டு பக்கத்தில் இருப்பவருடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் மிகுந்த பாதுகாப்பில் இருப்பதாக உணர்கிறீர்கள். அதைப் போலத்தான் கடவுளையும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.''நீங்கள் எப்படி இருக்க ஆசைப் படுகிறீர்களோ  அப்படியே இருக்கலாம்.நீங்கள்நம்பும் கடவுள்தான் உண்மையான தகப்பனார்.அவருக்கு எல்லாம் தெரியும். அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு இலை கூடக் கீழே விழாது. எல்லாமே நன்மைக்குத்தான்.''இப்படிக் கருதிக் கொண்டிருப்பது எவ்வளவு சௌகர்யமானது?இந்த மனம் எவ்வளவு தந்திரமானது!இந்தக் 'கடவுள்' உங்கள் தந்திர மனதின் வேலைதான்.ஞானி சாரஹா,''நம்பிக்கை என்பது உண்மை இல்லை.உண்மை நம்பிக்கை ஆகாது.உண்மை என்பது நீங்களே அனுபவித்தல்தான்,''என்கிறார்.
சில சமயம் நீங்கள் உடலால் ஏமாற்றப் படுகிறீர்கள்.எப்படியோ முயற்சி செய்து உங்கள் உடலைவிட்டு நீங்கள் தாண்டிச் சென்றால் மனத்தால் மயக்கப்படுகிறீர்கள்.இது மிகவும் தந்திரமானது.மிக மோசமாக ஏமாற்றக் கூடியது.உங்களுடைய நம்பிக்கை இல்லாமலேயே உண்மை வேலை செய்யும்.நம்பிக்கையின் மூலம் பொய் தான் வேலை செய்யும்.இந்தப் பொய்மைக்கு உங்கள் நம்பிக்கை தேவைப் படுகிறது.

பொன்மொழிகள்-53

2

Posted on : Tuesday, June 11, 2013 | By : ஜெயராஜன் | In :

நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்வது என்பது ஒரு நல்ல குடையைப் போன்றது.ஆனால் அது நல்லதொரு கூரை இல்லை.
******
பணிவாக நடந்து கொள்வது,
மேலோரிடம் எனில்,அது கடமை.
சமமானவரிடம் என்றால் அது பண்பாடு.
கீழானவரிடம் என்றால் அது பெருந்தன்மை.
******
தொழிலில் மகிழ்ச்சி இருந்தால்
வேலையில் கச்சிதம்(perfection) தானே வரும்.
******
பிரச்சினைகள் என்பவை சிறு கற்கள் போன்றவை.
கண்ணின் அருகில் வைத்தால் நம்முடைய பார்வையை மறைத்துவிடும்.
தள்ளி வைத்துப் பார்த்தால் அவை எவ்வளவு சிறியவை என்பது புரியும்.
******
வெற்றி என்பது நிரந்தரம் அல்ல.தோல்வி என்பது இறுதியானது அல்ல.எனவே வெற்றி பெற்ற பின்னும் நம் பணியை நிறுத்தி விடக் கூடாது.தோல்வி அடைந்தாலும் முயற்சியைக் கைவிடக் கூடாது.
******
நம்மிடையே ஒரு தவறான கண்ணோட்டம்;
நாம் எப்போதுமே இன்றைக்கு விட நாளைக்கு நமக்கு அதிகமான நேரம் இருக்கிறது என்று நினைக்கிறோம்,நம்புகிறோம்.
******
கண்கள் இரண்டும் சேர்ந்தே இமைக்கின்றன;சேர்ந்தே பார்க்கின்றன.சேர்ந்தே அழுகின்றன.சேர்ந்தே தூங்குகின்றன.ஆனாலும் அவை ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வதில்லை.அதுதான் உண்மையான நட்பின் இலக்கணம்.
******
உலகின் மிகச்சிறிய சர்வாதிகாரமான வார்த்தை எது தெரியுமா?
'அதெல்லாம் எனக்குத் தெரியாது.'
******
மூன்றுவித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
*தன்னைப் பற்றிய பொறுப்பைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் யார் கையிலாவது தன்னை ஒப்படைக்கக் காத்திருப்பவர்கள்.இவர்கள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
*மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றி,தன்னை மட்டும் பார்த்துக் கொள்பவர்கள்.இவர்கள் மிருகத்தைப் போன்றவர்கள்.
*தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால் தாமாகவே அவர்களை அண்டி உதவி செய்பவர்கள்.இவர்கள்தான் மனிதர்கள்.
******

மனதின் சக்தி

1

Posted on : Monday, June 10, 2013 | By : ஜெயராஜன் | In :

எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை மனிதன் கற்றுக் கொண்டதாகத்  தெரியவில்லை.எதிர் காலத்தில் மகிழ்ச்சி நிரம்பிய அமோகமான வாழ்க்கை கிட்டப்போகிறது என்று பகல் கனவு காண்பதிலேயே நிகழ்காலத்தை சிறிதும் அனுபவிக்காமல் அனைவரும் தங்கள் வாழ்வைப் பாழ்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.இருப்பதைக் கொண்டு இந்த வினாடியை நன்கு அனுபவித்து வாழக் கற்றுக் கொள்பவன்தான் புத்திசாலி.
******
ஒவ்வொரு மனிதனும் தன மனதில் ஒரு செயற்கை எல்லைக் கோட்டை அமைத்துக் கொள்கிறான்.ஒவ்வொருவரும் அவரவர் நினைக்கும் அளவுக்குத்தான் வாழ்வில் முன்னுக்கு வர முடியும்.மனதில் எழும் எண்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும் எல்லைக் கோடுகளே இருக்கக் கூடாது.
******
உங்களுக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் நேரமில்லை என்றால் நீங்கள் கட்டாயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள் என்று பொருள்.
******
பணம் நிறைந்த பகட்டான வாழ்க்கை கிடைத்தால்தான் வாழ்வை நன்றாக அனுபவிக்க முடியும் என்று அனைவரும் தவறாக நினைத்து அதை அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வாழ்வை நரகமாக்கிக் கொண்டு அல்லல் படுகிறார்கள்.ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கையை வாழ விரும்புபவன் அதற்காகக் கொடுக்க வேண்டிய விலை மகிழ்ச்சி,ஆரோக்கியம்,மன நிம்மதி போன்றவைதான்.
******
உலகில் அனைவரும் பணக்காரராக வேண்டும் என்று எண்ணி செயல்படுகிறார்கள்.ஒவ்வொருவரும் அதிகாரம் மிக்க பதவியை அடைய ஆசைப்படுகிறார்கள்.போர் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள் இவையே.பெரிய பதவியை அடையவும்,பணம் சேர்க்கவும்,அடைந்த பதவியையும் சேர்த்த பணத்தையும் காப்பாற்ற ஏற்படும் ஒரு போராட்டமாக நம் வாழ்க்கை அமைந்து விடுகிறது.
******