உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நாக்கைப் பிடுங்கிட்டு.....

1

Posted on : Thursday, June 20, 2013 | By : ஜெயராஜன் | In :

''உடனே போய் அவனை என்ன சேதின்னு கேட்கிறேன்.கேக்குற கேள்வியில அவன் நாக்கைப் பிடுங்கிட்டு சாகனும் அய்யா!''என்று நரம்பு புடைக்க சில பேர் புறப்படுவார்கள்.எல்லா நியாயங்களும் போட்டு உடைக்கப்பட வேண்டும் என்று அவசியம் இல்லை.எல்லா உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக்கப்பட வேண்டும்  என்று கட்டாயமில்லை.இப்படிக் கேட்டு விட்டார்களே என்று யாரும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகத் தயாராக இல்லை.அது மட்டுமல்ல.தங்கள் தவறுகளை உணரக்கூட பலபேர் முன் வருவதில்லை. குறிப்பாக எந்த ஒரு மனிதனும் எதிராளி கோபப்படும்போது தன்  தவறை ஏற்றுக் கொள்வது இல்லை.மாறாக அவர்களே உணரும்படி அவகாசம் தரப்படும்போது உண்மையை உணர முற்படுவார்கள்.
நமக்கு விசுவாசமாக இருக்க வேண்டியவர்கள் அனாவசியமாக நம்மைப் பற்றி அல்லது நம்மைச் சார்ந்தவர்களைப்பற்றி பேசிவிடும் போதோ ,நன்றி மறக்கும் செயல்களை செய்யும் போதோதான் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்கணும் என்று தோன்றுகிறது.'இவர்கள் கிடக்கிறார்கள்!நாம் நம் வேலையைப் பார்ப்போம்,''என்று பெருந்தன்மையான அணுகு முறையுடன் நடந்து கொள்வதுதான் இவர்களை மாற்ற ஒரே வழி.
''பெரிசா நியாயம் கேட்க வந்திட்டயே ,நீ சொல்வது என்ன நியாயம்?''என்று பாட்டில் பால் குடித்த காலத்திலிருந்து நடந்த சம்பவங்களை எடுத்து உதாரணம் காட்டி,மனசுக்குள் இருக்கிற வக்கிரங்களை எல்லாம் வாந்தியாக எடுக்க வேண்டாம்.இது நம்மைப் பற்றிய நல்ல எண்ணங்களை எல்லாம் விரட்டிவிடும்.
''உனக்கு நான் இவ்வளவு செய்தேனே!''என்று நாமே சொல்லிக் கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப் பட்டு விடக்கூடாது.''அவர் நமக்கு அவ்வளவு செய்தாரே!''என்று அவர்கள் உணரும்படியாக நடந்து கொள்வதே நமக்கு வெற்றி.நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற கேள்விகளால் இத்தகைய மனநிலையை உருவாக்குவது சாத்தியமில்லை.
நியாயங்களை நாம் உணர்த்த வேண்டும் என்பது அவசியம் இல்லை.காலம் உணர்த்தும்.அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.பதில் வார்த்தையே பேச இடமின்றி,நாம் கேட்கும் கேள்விகளால் எதிரியைத் திணற வைப்பதற்கு நம்மிடம் பலம் இருக்கலாம்.ஆனால் இது ஒரு குரூரமான சந்தோசம்.
வார்த்தைகளை விடும்போது பக்க விளைவுகளையும் பின் விளைவுகளையும் சிந்திக்க வேண்டும்.
இல்லாவிடில் வேகமாக எழுபவர்கள் சோகத்துடன் அமர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
                                                      --லேனா தமிழ்வாணன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமை ஐயா... நன்றி...

Post a Comment