உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தவமாய் தவமிருந்து....

1

Posted on : Tuesday, December 31, 2013 | By : ஜெயராஜன் | In :

முனிவர் ஒருவர் காட்டில் கடவுளை வேண்டி நீண்ட நாட்கள் தனது உடலை வருத்தி தவமிருந்தார்.கடவுளும் அவரது வேண்டுதலுக்கு இரங்கி நேரில் தோன்றினார்.''பக்தா,உன் பக்தியை மெச்சினேன்.உனக்கு என்ன வரம் வேண்டும்?''என்று கேட்டார்.முனிவரும்  மிக்க மகிழ்வுடன்,''இறைவா,நான் நீரில் நடக்க வேண்டும்:நெருப்பு பட்டு என் உடல் அழியாதிருக்க வேண்டும்,'' என்று கேட்டார்.இறைவனும் அவர் வேண்டிய வரத்தை அளித்து விட்டு மறைந்தார்.முனிவருக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.தனது வரத்தை சோதித்துப் பார்க்க எண்ணி ஆற்றிற்கு  சென்று நீரின் மீது காலை வைத்தார்.அவர் கால் நீருக்குள் இறங்கவில்லை.அவருக்கு நீரில் நடப்பது மிக எளிதாக இருந்தது. எல்லோரும் அவரை ஆச்சரியத்துடன் வணங்கினர்.மறுநாள் காலை அவர் குளித்துவிட்டு வழக்கமான பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட எண்ணி ஆற்றிற்கு சென்றார்.குளிப்பதற்கு ஆற்றினுள் இறங்கினார்.அந்தோ பரிதாபம்!அவரால் நீரில் நடக்கத்தான் முடிந்ததே ஒழிய அவரால் நீரில் இறங்கிக் குளிக்க முடியவில்லை.குளிக்காமல் பூஜையில் ஈடுபட முடியாது.அவருக்குப் பயம் வந்து விட்டது.குளிக்காததாலும் அதனால் பூஜைகள் செய்ய இயலாததாலும் தான் இதுவரை அடைந்திருந்த சக்திகள் அனைத்தையும் இழக்க நேரிடுமே என்ற அச்சத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.அவரது பிணத்தை எடுத்துச் சென்று அதற்குக்கொள்ளி வைக்க முயற்சிக்கையில் அந்த உடலில் தீப்பற்றவில்லை.அதனால் செய்வதறியாது அவரது உடலை அப்படியே விட்டு சென்றனர்.அவரது உடல் காக்கைக்கும் கழுகுக்கும் இரையானது.
நாம் ஆசைப்படுவதெல்லாம் நமக்கு தேவையானதாய் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை.

கொல்லு அவனை....

2

Posted on : Monday, December 30, 2013 | By : ஜெயராஜன் | In :

ரோமாபுரியில் சீசர் வஞ்சகர்களால் கொல்லப்பட்டார்.எங்கு பார்த்தாலும் ஒரே கலவரம்.சீசர் கொலைக்கு உடந்தையானவர்கள் என்று யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்கள் தாக்கப்பட்டனர்.சீசரின் ஆதரவாளர்கள் கும்பல் கும்பலாய் வெறியோடு அலைந்தனர்.அப்போது நிலைமையின் தீவிரம் தெரியாது,சின்னா என்பவன் தனக்குள் ஏதோ ஒரு பாட்டைப் பாடிக் கொண்டு அந்தப் பக்கம் போனான்.கும்பலில் ஒருவன் கத்தினான்,''அதோ போகிறானே சின்னா,அவன் எதிரிகளின் ஆள்.அவனைக் கொல்லுங்கள்,''உடனே கும்பல் அவனை சூழ்ந்து கொண்டது.எல்லோரும் அவனைத் தாக்க முற்படுகையில் சின்னா சப்தம் போட்டு,''ஐயோ,நான்,நீங்கள் நினைக்கும் சின்னா அல்ல.நான் கவிஞன் சின்னா..''என்றான்.அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது,''மோசமான கவிதைகள் எழுதி எல்லோரையும் கொல்லும் அந்த சின்னாவா நீ?நண்பர்களே,இவன் கவிதைக்காகவே இவனைக் கொல்லலாம்.கொல்லுங்கடா இந்த சின்னாவை.''

அழகும் கொடூரமும்

0

Posted on : Thursday, December 26, 2013 | By : ஜெயராஜன் | In :

ஓவியர் ஒருவர்,உலகிலேயே மனிதருள்  ஒரு அழகான முகத்தையும் ,ஒரு கொடூரமான முகத்தையும் வரையவேண்டும் என்று ஆவல் கொண்டார்.முதலில் அழகான முகம் வரைவதற்காக அலைந்து தேட ஆரம்பித்தார்.நீண்ட நாட்கள் ஆகியும் அவர் எதிர் பார்த்த மனிதன் அகப்படவே இல்லை.திடீரென  அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.அழகான முகம் உடையவர்கள் குழந்தைகள்தானே!எனவே குழந்தைகளுள் அழகிய முகம் தேடினார்.கடும் உழைப்பிற்குப் பின் அவர் எதிர் பார்த்தபடி ஒரு அழகான ஐந்து வயது சிறுவனைக் கண்டார்.மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அவர் அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று அக்குழந்தையை தத்ரூபமாக வரைந்து முடித்தார்.பின்,கொடூர முகத்தையும் வரைந்து,இரண்டு படங்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று எண்ணினார்.கொடூர முகத்தை எங்கு தேடலாம் என்று யோசித்த அவருக்கு ,சிறைச் சாலைகள் தான் அதற்குத் தகுந்த இடம் என்று தோன்றியது.அங்குதானே கொடுஞ்செயல் புரிந்தவர்கள் இருப்பார்கள்!ஆனால் இந்த வேலையும் நினைத்த அளவுக்கு எளிதானதாக இல்லை.அவர் மனதில் கருக் கொண்டிருந்த பாதகன் அவர் கண்ணில் படவில்லை.ஆண்டுகள் பல ஆகின.அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு சிறையில் அவர் எதிர் பார்த்த கொடூரமான முகம் தெரிந்தது.அவருடைய களைப்பு மறைந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது.சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அக்கொடியோனை வரைய ஆரம்பித்தார்.வரையும்போது அவனுடைய ஒத்துழைப்புக்கிடைக்க அவனுடன் பேச்சுக் கொடுத்தார்.அவன் ஊர்,பேர்,பெற்றோர் பற்றிய விபரங்கள் கேட்டு, அவன் சொன்னபோது, அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.ஏன்?அவன் வேறு யாருமில்லை.அழகான முகம் என்று எச்சிறுவனின் படத்தை வரைந்தாரோ,அதே சிறுவன், இன்று காலத்தின் கோலத்தில் மிகப் பெரிய குற்றவாளியாகக் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழகும் கொடூரமும் குடி கொண்டுள்ளன.அவன் சூழ்நிலைகள்தான்  அவற்றில் ஒன்றை மிகைப்படுத்தியோ,குறைத்தோ காட்டுகிறது.

அன்னை தெரசா

0

Posted on : Tuesday, December 24, 2013 | By : ஜெயராஜன் | In :

அன்னை தெரசாவிடம் பத்திரிக்கை நிருபர் ஒருவர் பேட்டி காண அனுமதி கிடைத்து சென்று இருந்தார்.குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னரே சென்று விட்டதால் உடனே அன்னையைப் பார்க்க முடியவில்லை.அந்த நிருபர் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்.அன்னை வருவதற்குள் ஒரு சிகரெட் புகைத்துவிடலாம் என்று எண்ணி அங்கேயே ஒரு ஓரமாக நின்று புகைக்க ஆரம்பித்தார்.அவர் புகைத்து முடிக்குமுன்னரே அன்னை அவரைக் கடந்து அவரது அறைக்கு சென்று விட்டார்.அவர் அழைக்கப்பட்ட போது,அன்னை என்ன கேட்பாரோ என்ற அச்சத்தில் அவர் உள்ளே சென்றார்.ஆனால் அன்னை எப்போதும்போல சாந்தமான முக பாவத்துடன் அவரை வரவேற்றுவிட்டு புகை பிடிக்கும் பழக்கம் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கிறது என்று கேட்க அவரும் பத்து வருடங்கள் என்று பதில் உரைத்தார். ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்க அவரும் பத்து ரூபாய் ஆகும் என்று சொன்னார்.அந்தத் தொகையை சேவைக்குக் கொடுத்தால் எவ்வளவோ பேருக்கு உபயோகமாயிருக்குமே என்று அன்னை சொல்ல நிருபர்,''அது மிகச்சிறிய தொகை ஆயிற்றே,அதை வைத்து என்ன சேவை செய்ய முடியும்?''என்று கேட்டார்.அன்னை சொன்னார்,''தனிப்பட்ட முறையில் சேவை செய்பவர்களுக்குப் பணம் தேவையில்லை.ஆனால் சேவைக்கு ஒவ்வொரு பைசாவும் முக்கியமானது.நான் முதலில்  பத்து ரூபாயில்தான் எனது சேவையை ஆரம்பித்தேன்.சாலையில் கிடந்த ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல உபயோகப்பட்டது,''அதன்பின் அந்த நிருபரிடம்,'இனி புகை பிடிப்பதில்லை'என்றும்,'அதனால் மிச்சப் படுத்தப் படும் பணத்தை போது சேவைக்குக் கொடுப்பேன்.'என்று உறுதிமொழி பெற்றுக் கொண்டுதான் அன்னை அவருக்குப் பேட்டி கொடுத்தார்.

அனுபவம்

2

Posted on : Monday, December 23, 2013 | By : ஜெயராஜன் | In :

முல்லா தனது மனைவியிடம் சொன்னார்,''நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்திருக்கிறேன்.மூலதனம் மட்டும் ஒரு கோடி ரூபாய்.''மனைவி கேட்டார்,'அப்படியானால் நீங்கள் பாதிப் பணம் போட வேண்டியிருக்குமே,அவ்வளவு பணத்திற்கு எங்கே போவீர்கள்?'' முல்லா சொன்னார்,''நண்பன் மூலதனம் முழுவதையும் போடுவான்.என் அனுபவம் தொழில் நடத்த உதவும்.என் அனுபவம் தான் என் பங்கு மூலதனம்,'' முல்லாவின் மனைவிக்கு  ஒரே மகிழ்ச்சி.'லாபத்தில் இருவருக்கும் சம பங்கா?''என்று ஒரு சந்தேகத்தினைக் கேட்டாள்.முல்லா சொன்னார்,''அப்படி ஒப்பந்தம் எதுவும் போடவில்லை.ஆனால் இரண்டு வருடம் கழித்து  மூலதனம் என்னிடம் இருக்கும்.அனுபவம் நண்பனிடம் இருக்கும்.''
******
முல்லாவின் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்து விட்டது. இன்சூரன்ஸ் நிறுவத்தினர் வந்து எல்லாவற்றையும் ஆய்வு செய்துவிட்டு முல்லாவிடம் சொன்னார்கள்,''தொழிற்சாலை முழுமையாக எரிந்து விட்டது.இதற்கு ஈடாகப் பணமாய்க் கொடுக்காமல் எங்கள் நிறுவனமே புதிதாகத் தொழிற்சாலையைக் கட்டிக் கொடுத்துவிடும்.''இதைக் கேட்டதும் முல்லாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.' 'அவர் கேட்டார்,''இதுதான் உங்கள் கொள்கையா?''ஆம் என்று அதிகாரிகள் கூற முல்லா சொன்னார்,''அப்படியானால் என் மனைவியின் பெயரில் நான் போட்ட இன்சூரன்ஸ் பாலிசியை நிறுத்தி விடுகிறேன்.''
******

ஆறிலும் சாவு....

2

Posted on : Saturday, December 21, 2013 | By : ஜெயராஜன் | In :

பழமொழிகள் நிறையப் படித்திருக்கிறோம்;கேட்டிருக்கிறோம்.அவற்றின் அர்த்தமும் தெரிந்திருக்கிறோம் .ஆனால் சிலவற்றிற்கு வித்தியாசமான விளக்கங்களும் கொடுக்கப் படுகின்றன.சான்றாக இதோ சில:
''ஆறிலும் சாவு,நூறிலும் சாவு ''என்று ஒரு முதுமொழி உண்டு.மனிதன் ஆறு வயதிலும் சாகலாம்,நூறு வயதிலும் சாகலாம் .இது எல்லோருக்கும் தெரிந்தது.இப்பழமொழி எப்படி வந்தது?
பாண்டவர்களின் தாய் குந்தி,கர்ணனும் தனது மகன்தான் என்பதை அறிந்து அவனிடம் சென்று,அவனைப் பாண்டவர்களுடன் சேர்ந்து விடச் சொல்லி வற்புறுத்துகிறாள்.அப்போது கர்ணன் குந்தியிடம்,''அம்மா,நான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவது ஆளாய் இருந்தாலும்,நூறு கெளரவர்களுடனே இருந்தாலும் எனக்கு சாவு நிச்சயம்.அதனால் நான் உண்ட சோற்றிற்காக நன்றி உணர்வுடன் கெளரவர்களுடனேயே இறுதிவரை இருந்து  விடுகிறேனே,''என்றான்.இந்த நிகழ்வே இப்பழமொழி உண்டானதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
''பந்திக்கு முந்து,படைக்குப்பிந்து''.இப்பழமொழிக்கு இரு விளக்கங்கள் தரப்படுகின்றன.
 அ.பந்தியில் பரிமாறுபவர் முதலில் சாப்பிட வேண்டுமாம்.அப்படியானால்தான்  அவர்களுக்கு உணவில் உப்பு,காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தெரியும்.சரி செய்தபின் மற்றவருக்குப் பரிமாற வேண்டும்.
ஆ.பந்தியில் பரிமாறும்போது வலது கை முன்னால்  வரும்.அதே சமயம் படையில் வேல் கொண்டு எறியும்போது வலது கை பின்னால் வந்து ,வலுவாய் வேலைப் பாய்ச்சும்.
''ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.''
இதற்கான விளக்கம்:
மனைவியானவள் ஊரார் பெற்ற பிள்ளை. கருவுற்றிருக்கும் காலத்தில்அவளை ஊட்டி வளர்த்தால் கருவிலிருக்கும் தனது குழந்தை தானே நன்றாக வளரும்.அவனுக்கு என்ன தெரியும்?

1

Posted on : Thursday, December 19, 2013 | By : ஜெயராஜன் | In :

நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வந்த நண்பன் சோமுவை வரவேற்று அவருடன் பேசிக் கொண்டிருந்தார் ராமு .அப்போது சிறுவனான அவருடைய இளைய மகன் அங்கு வந்து சோமுவின் மடியில் உட்கார்ந்து குதிக்க ஆரம்பித்தான்.''மாமாவைத் தொந்தரவு செய்யக்கூடாது''என்று மகனை கண்டித்தார் ராமு.சோமு,''அவன் சிறுவன்தானே!அவனுக்கு என்ன தெரியும்? அவன் பாட்டிற்கு உட்கார்ந்திருக்கட்டும்.''என்றார்.சிறிது நேரம் கழித்து சிறுவன் அவர் மீது விளையாட்டு சாமான்களைத் தூக்கி எறிந்தான்.அப்போதும் அவனை ராமு கண்டித்தார்.சோமு,''பாவம் அவனுக்கு என்ன தெரியும்?அவன் விளையாடட்டும்,''என்றார்.பின் சிறுவன் சோமுவின் தோளில் ஏறிக்கொண்டு அவர் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தான்.அவருக்கு கடுமையான வலி.ராமு சிறுவனை அடிக்கப் போனார்.தடுத்த சோமு,''சிறுவனுக்கு என்ன தெரியும்?விட்டுவிடு,''என்றார்.ராமுவும்,'ஐந்து நிமிடம் பொறு.உனக்கு காபி போட்டு எடுத்து வருகிறேன்,'என்று சொல்லி உள்ளே சென்றார்.அவர் கண் மறைந்ததும் சோமு நாக்கைத் துருத்திக்கொண்டு சிறுவனை முதுகில் இரண்டு போட்டு காதைப் பிடித்துத் திருகினார்.சிறுவன் அழ ஆரம்பித்து விட்டான்.'என்ன,என்ன,'என்று கேட்டுக் கொண்டே ராமு வந்தார்.சோமுவும் சிரித்துக் கொண்டே,''அவனுக்கு என்ன தெரியும்,சிறுவன்தானே,அழுதுவிட்டுப் போகட்டும்,''என்றார்.

நாதஸ்வரம்

1

Posted on : Wednesday, December 18, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு நாதஸ்வரக் கச்சேரி யார் செய்வது என்ற பிரச்சினை ஏற்பட்டது.ஒரு சாரார் உள்ளூர் வித்வானைப் போட வேண்டும் என்று சொல்ல வேறு சிலர் வெளியூர்க்காரர் ஒருவரை  இந்த வருடம் கச்சேரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.இறுதியில் திருவிழாவிற்கு முன் இருவருக்கும் ஒரு போட்டி வைப்பது என்றும் யார் சிறப்பாக வாசிக்கிறார்களோ அவருக்கே  திருவிழாவில் வாய்ப்பு கொடுப்பது என்று முடிவாகியது.உள்ளூர்க்காரர் நாதஸ்வரம் வாசிப்பதில் சுமார் ரகம்தான்.வெளியூர்க்காரரோ ஒரு விற்பன்னர்.எனவே உள்ளூர்க்காரருக்கு நடுக்கம் ஏற்பட்டது.போட்டியில் தோல்வியுற்றால் பின்னர் அவர் எங்குமே வாசிக்க முடியாது என்ற  நிலை ஏற்படும்.முக வாட்டத்துடன் காணப்பட்ட அவரிடம் அவரது மகன் பார்த்துக் காரணம் கேட்டான்.விசயத்தைத் தெரிந்து கொண்ட சிறுவன் தந்தையிடம்,''நீங்கள் கவலைப் படாமல் போட்டியில் வாசியுங்கள்.மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்,''என்றான் .அவருக்கோ ஒன்றும் புரியவில்லை.எனினும் அவன் சொன்னபடி போட்டியில் முதலில் அவர் வாசித்தார்.பின் வெளியூர்க்காரர் வாசிக்க ஆரம்பித்தார்.இப்போது
உள்ளூர்க்கரரின் மகன் அவர் நேர் எதிரில் உட்கார்ந்து கொண்டு,புளித்த ஒரு மாங்காயை வாயில் வைத்துக் கடித்து சப்புக் கொட்ட ஆரம்பித்தான்.வாசிக்க ஆரம்பித்தவருக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது.அந்தப் புளித்த வாடைக்கு எச்சில் அத்கமாக ஊற, வாசிக்க முடியாமல் திணறினார்.ஸ்...என்ற சப்தம் மட்டுமே வந்தது.முடிவினை சொல்லவும் வேண்டுமோ?.
இக்கட்டான சூழ்நிலைகளில் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் பிரச்சினைதான்.

நீயும் உன் ரூபாயும்..

3

Posted on : Tuesday, December 17, 2013 | By : ஜெயராஜன் | In :

திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பிக் கிடந்தான்.வெறுத்துப்போன அவன் தந்தை  கோபமாக ஒரு நாள்,''இன்றிலிருந்து தினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால்தான் உனக்கு சாப்பாடு,''என்றார்.இளைஞன் நொந்து போய்விட்டான்.என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.தாயிடம் புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ வெளியில் போய்வா.நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன்.நீ அதை அப்பாவிடம் கொடுத்துவிடு'' என்று சொல்ல அவனும் சம்மதித்தான்.அன்று நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்தபோது அவர் அதை வாங்கி,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார்.இளைஞன் அமைதியாக இருந்தான்.சில நாட்கள் இப்படியே போயிற்று.ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப் பணமில்லை.சில நாட்கள் கடன் வாங்கிக் கொடுத்தாள் .ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் தந்தை ,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறி விட்டெறிந்து கொண்டிருந்தார்.இப்போது தாய்க்கு கடன் யாரும் கொடுக்கத் தயாராயில்லை.மேலும் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.தாய் வேறு வழியில்லாது,''மகனே,இனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.இனி நீ போய் ஏதாவது வேலை செய்து பணம் கொண்டு வருவதைத்தவிர வேறு வழியில்லை.உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாக இருக்கிறார்.நான் என்ன செய்ய முடியும்?என்று கூறி கை விரித்து விட்டார்.இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய் சம்பாதித்து விட்டான்.அன்று பெருமையாகத் தந்தையிடம் ரூபாயைக் கொடுத்தான்.அன்றும் வழக்கம் போலத் தந்தை,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறித் தூக்கி எறிந்தார்.இளைஞனுக்கு வந்ததே கோபம்!''அவனவன் மூட்டை தூக்கி கல்  சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் இப்படித் தூக்கி எறிகிறீர்களே,என்ன நியாயம்?''என்று கேட்டான்.தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்த பணத்தை எடுத்து,அதை முத்தமிட்டு தனது பைக்குள் வைத்துக்கொண்டு,''இது என் மகன் உழைப்பில் வந்த பணம்,இனி அவனைப்பற்றி எனக்குக் கவலை இல்லை''என்று கூறி மகிழ்ச்சியுடன் வெளியே சென்றார்.

பத்ருஹரி

2

Posted on : Monday, December 16, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு முனிவருக்கு மாம்பழம்  கிடைத்தது.அந்த மாம்பழம் சாப்பிட்டவர்கள் நீண்ட  நாட்கள் வாழ்வர்.முனிவர் அம்மாம்பழத்தை தான் சாப்பிடுவதை விட மக்களுக்கு நல்லது செய்யும் மன்னன் பத்ருஹரி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி மன்னனிடம் கொடுத்தார்.மன்னனோ,அதைத் தான் சாப்பிடுவதை விட தன்  மீது உயிரையே வைத்திருக்கும் மனைவி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி அவளிடம் கொடுத்தான்.அவளோ மாம்பழத்தைத் தான் உண்ணாது தன்  ஆசை நாயகனான நொண்டியும் கூனனுமான குதிரைக்காரனிடம் கொடுத்தாள்.அவனோ,அவன் மனைவி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கருதி அதை மனைவியிடம் கொடுத்தான்.அந்தப் பெண் மிக நல்ல பெண்.அவள், தான் நீண்ட காலம் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்,இந்த நாட்டை ஆளும் மன்னன் சாப்பிட்டால் மக்கள் அனைவருக்கும் நல்லது என்று கருதி மாம்பழத்தை அதன் சிறப்பை விளக்கி மன்னனிடம் கொடுத்தாள்.மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.பழம் எப்படித் தன்  கைக்கே திரும்ப வந்தது என்று விசாரித்தான்.அடுத்த நாள் அவன் கூறாமல் சன்யாசம் பூண்டான்.
காதல் ஒரு சில நியாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.முறையற்ற உணர்வுகளைக் காதல் என்று நினைத்தால் சீரழிவுதான்.

நாலு கோடி

2

Posted on : Sunday, December 15, 2013 | By : ஜெயராஜன் | In :

மன்னன் ஒருவன் தனது அவையில் இருந்த அனைத்து புலவர்களையும் வரவழைத்து,''நான் நாற்பது நாள் தருகிறேன்,அதற்குள் நீங்கள்  எல்லோரும் சேர்ந்து நாலு கோடி பாடல்கள் இயற்ற வேண்டும்.முடித்தால்  பரிசு, இல்லையேல் தண்டனை,''என்றான்.புலவர்கள் எவ்வளவோ முயன்றும் ஒரு லட்சம் பாடல்கள் கூட இயற்ற முடியவில்லை.இன்னும் ஒருநாள்தான் இருந்தது.என்ன செய்வதென்று புரியாதிருந்தபோது ஔவையார் அங்கு வந்தார்.விசயத்தைக் கேள்விப்பட்ட அவர்,''இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,நான் பார்த்துக் கொள்கிறேன்,''என்று கூறிவிட்டு படுக்க சென்று விட்டார்.
மறுநாள் புலவர்கள் அவையில் கூடினர்.மன்னர் வந்ததும் ஔவையார் தானே நாலு கோடி பாடல் பாடப் போவதாகக் கூறிவிட்டு வரும் பாடலைப் பாடினார்.

''மதியாதார் தலைவாசல் மதித்தொரு  கால்சென்று மிதியாமை  கோடியுறும்.
உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை 
கோடியுறு ம் 
கோடி கொடுத்தும்  குடிப் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடியுறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நா கோடாமை கோடியுறும்,''

இதுதான் நாலு கோடிப்  பாடல்'' என்று ஔவையார் சொன்னபோது அதை மறுக்க முடியாத மன்னன் வாக்களித்தபடி ஒளவைக்குப் பரிசுகள் கொடுத்து மரியாதை செலுத்தினான்.நத்தைக்கூடு

1

Posted on : Saturday, December 14, 2013 | By : ஜெயராஜன் | In :

இளம் காக்கை ஒன்றிற்கு ஒரு நத்தைக்கூடு கிடைத்தது.ஆனால் அதை உடைத்து சாப்பிடத் தெரியவில்லை.அருகிலிருந்த ஒரு வயதான காக்கையிடம் நத்தைக்கூடை உடைப்பது எப்படி என்று கேட்டது.அக்காக்கையும் சற்று உயரே பறந்து சென்று அங்கிருந்து நத்தைக்கூடை அருகில் இருக்கும் பாறை மீது போட்டால் அது உடைந்து விடும் என்று ஆலோசனை சொன்னது. இளம் காக்கையும் அவ்வாறே செய்தது.ஆனால் கீழே திரும்பி வருமுன்னே முதிய காக்கை உடைந்த கூட்டிலிருந்து வெளி வந்த நத்தையை சாப்பிட்டு விட்டது.இது நியாயமா என்று இளம் காக்கை கேட்க முதிய காக்கை சொன்னது,''நீ என்னிடம் கூட்டை உடைக்க மட்டும் தானே ஆலோசனை கேட்டாய்.அதை சொல்லி விட்டேனே!''என்றது.
இக்கட்டான சூழ்நிலையில் போகிற போக்கில் யாரிடமாவது ஆலோசன கேட்கக் கூடாது.
******
திருமணம் முடிந்தது.மாமனார் மருமகளிடம் சொன்னார்,''அம்மா,என் பையனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு.அவனுக்கு வாய் கொஞ்சம் நீளம்.''மருமகள் சொன்னாள்,''பரவாயில்லை மாமா,எனக்கு கை கொஞ்சம் நீளம்.''
******
ஒரு பெண் சொன்னாள்,''என் கணவன் குடித்து விட்டு வந்தால் என்னைத் தூங்கவே விட மாட்டார்,''அடுத்தவள் சொன்னாள்,''பரவாயில்லையே,என் கணவன் குடித்துவிட்டு வந்தால் எங்கள்  தெருவில் யாரையும் தூங்க விட மாட்டார்.''
******
''என் மனைவி என்னைக்  கஷ்டப்படுத்திய போதெல்லாம் பல்லைக் கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன்.இனிமேல் அது முடியாது,''என்றார் ஒருவர்.நண்பர் கேட்டார்,''உங்களுக்கு அவ்வளவு தைரியம் வந்திருச்சா?''அவர் சொன்னார்,''அட நீங்க வேற,என் பல்லெல்லாம் உதிர்ந்து போச்சு.அதைச் சொல்ல வந்தா.....''
******

பஸ் டிக்கெட்

1

Posted on : Friday, December 13, 2013 | By : ஜெயராஜன் | In :

நடத்துனர் பின் பகுதியிலிருந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.ஒரு பயணி,''என் மனைவி முன் புறம் இருக்கிறாள்.அவள் எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துவிடுவாள்,''என்றார்.நடத்துனருக்குக் கோபம் வந்துவிட்டது.''உன் திருமணத்திற்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்தாயா?நான் உன் திருமணத்திற்கு வந்தேனா,உன் மனைவி யார் என்று எனக்கு அடையாளம் தெரிய?''என்று எரிச்சலுடன் கேட்டார்.பயணி மிக அமைதியாகப் பதில் சொன்னார்,''சார்,கோபப்படாதீங்க.என் மனைவியைக் கண்டு பிடிப்பது ரொம்ப சுலபம்.அவள் இப்பேருந்தில் ஏறி இரண்டு நிமிடம் ஆகி விட்டது.உறுதியாக இவ்வளவு நேரத்தில் பக்கத்தில் யாருடனாவது சண்டை போட ஆரம்பித்திருப்பாள்.நீங்கள் முன்னால்  போகும்போது எந்தப் பெண் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாளோ,அவளே என் மனைவியாக இருப்பாள்.''நடத்துனர் தலையில் அடித்துக் கொண்டார்.
******
மனைவி ஒரு பவுடர் டப்பாவினை இருபது ரூபாய் கொடுத்து வாங்கி வந்தார்.விபரம் அறிந்த கணவன்,தான் அறிவாளி என்பதை அவளிடம் காட்ட,''முட்டாக்கழுதை,அவன் இருபது ரூபாய் சொன்னால்  அப்படியே கொடுத்து விடுவதா?நானாக இருந்தால் அவனிடம் பேசியே பத்து ரூபாய்க்கு வாங்கியிருப்பேன்,''என்றான்.மனைவி சொன்னாள்,''அப்படிப் பேசி வாங்கணும் என்றால்.....நான் சிரிச்சுப் பேசியே இலவசமாக வாங்கியிருப்பேனே!''கணவன் வாயைத் திறக்கவில்லை.
******
ஒருத்தி தன் தோழியிடம் சொன்னாள்,''என் கணவர் என்பது பவுன் நகை சேர்த்திருக்கார்.வங்கியில் பத்து லட்சம் சேர்த்திருக்கிறார்.உன் கணவர் என்ன சேர்த்திருக்கிறார்?''தோழி சொன்னாள்,''என் கணவர் திருச்சியில் தீபாவை சேர்த்திருக்கிறார்.மதுரையில் மாலாவை சேர்த்திருக்கிறார்.''
******

சீட்டாட்டம்.

1

Posted on : Thursday, December 12, 2013 | By : ஜெயராஜன் | In :

சீட்டாட்டம் எப்படி வந்தது என்று தெரியுமா?
ஒரு முறை பிரெஞ்ச் மன்னன் ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.ஒரு விசயத்தில் கவனம் செலுத்தாமல் பிரமை பிடித்து பல விசயங்களை உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான்.ஒருஅமைச்சர் இந்த நேரம்தான் ராஜா (கிங்),ராணி(க்வின்),மந்திரி(ஜேக்)இவர்களைப் படமாக்கி மன்னனின் கவனத்தை ஒரே விசயத்தில் கவனம் செலுத்தச் செய்யும் விளையாட்டான சீட்டாட்டத்தைக் கண்டு பிடித்தார்.மன்னன் விளையாடினான்.தொடர்ந்து விளையாடினான்.மன்னனின் பைத்தியம் தெளிந்து விட்டது.
ஆனால் இன்று சீட்டாட்டம் பலரைப் பைத்தியம் ஆக்கி விட்டது.
 அதில் உள்ள டைமண்ட் வைரத்தையும்,ஹார்ட் இருதயத்தையும்,ஸ்பேட் மண்வெட்டியையும்,கிளாவர் பிரண்டைத் தண்டு இலையையும் குறிக்கும்.
''சீட்டாடினால் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள வைரம் போன்ற பொருட்களை இழப்பான்.இதனால் மனம் நொந்து இதயம் வெடித்து சாவான்.அவனை மண் வெட்டியால் குழி தோண்டிப் புதைக்க நேரிடும்.குழி மீது பிரண்டை செடி வளர்ந்து வரும்.''என்று இந்த சீட்டுக் கட்டு சொல்லாமல் சொல்கிறது.
******
குடையை ஆங்கிலத்தில் UMBRELLA என்று சொல்வார்கள்.இது ஒரு இத்தாலிய வார்த்தை ஆகும்.UMBRA என்பது நிழலையும் YELLOW என்பது மஞ்சளையும் குறிக்கும்.மஞ்சள் துணி தரும் நிழல் என்று பொருள்.
******
பாகு என்றால் இனிப்பு என்று பொருள்.அல்  என்றால் அற்றுப் போகச் செய்தல் என்று பொருள்.பாகு+அல் +காய்=பாகற்காய். அதாவது இனிப்பை இல்லாமல் செய்யும் காய்தான் பாகற்காய்.
******
கருவுற்ற காலத்தில் கருப்பை குளிர்ந்து விடாமல் தேவையான வெப்பம் பெற முன் காலத்தில் கறிவேப்பிலை சாப்பிடுவார்கள்.கரு+வெப்ப+இலை=கருவெப்ப இலை.இதுதான் நாளடைவில் கறிவேப்பிலை என்றாயிற்று.
******

இன்னும் கொஞ்சம் வை.

3

Posted on : Wednesday, December 11, 2013 | By : ஜெயராஜன் | In :

நீண்ட நாள் கழித்து நண்பன் ஒருவன் எதிர் பாராத விதமாக வீட்டிற்கு வந்து விட்டான்.வீட்டுக்காரன் மனைவியிடம் தன் நண்பனுக்கு உணவளிக்க சொன்னான்.நண்பர்கள் இருவரும் மேஜையில் சாப்பிட அமர்ந்தனர். நண்பனுக்கு நல்ல பசி.குறிப்பறிந்த வீட்டுக்காரன் 'இன்னும் கொஞ்சம் வை,'என்று இரண்டு தடவை சொல்லி விட்டான்.சாப்பாடு தீரும் நிலை.அடுத்த முறை 'இன்னும் கொஞ்சம் வை' என்று கணவன் சொன்னபோது,நிலையை விளக்க அவன் காலை ஒரு மிதி மிதித்தாள்.அப்படி இருந்தும் மறுபடியும்  கணவன்,'இன்னும் கொஞ்சம் வை,'என்றான்.இம்முறை சற்று ஓங்கி மிதித்துவிட்டு மீதி இருந்த சாதத்தை எல்லாம் நண்பனுக்கு வைத்து விட்டாள்.ஒரு வழியாக சாப்பிட்டு முடித்த நண்பன் உடனே கிளம்புவதாக சொன்னான்.வீட்டுக்காரன்,''இரவில் இவ்வளவு நேரம் ஆகி விட்டது.எனவே இங்கு தங்கி காலை செல்லலாமே?''என்று கேட்டான்.நண்பனோ முக்கிய வேலை இருப்பதாக சொல்லி விடை பெற்று சென்று விட்டான்.அவன் தலை மறைந்ததும் மனைவி கணவனிடம் கோபத்துடன்,''சாதம் கொஞ்சம்தான் மீதி இருக்கிறது என்று உங்கள் காலை மிதித்து சைகை செய்தும் நீங்கள் விடாப்பிடியாக,'இன்னும் கொஞ்சம் வை'என்று சொல்கிறீர்களே,உங்களுக்கு அறிவு இருக்கிறதா?''என்று கேட்டாள்.கணவன் பதட்டத்துடன்,''அய்யையோ,நீ என் காலை மிதிக்கவில்லையே!அப்படியானால்....ஓ,அதுதான் அவன் அவ்வளவு வேகமாக ஓடி விட்டானா!''என்றான்.

யாருக்குப் பெண்?

0

Posted on : Tuesday, December 10, 2013 | By : ஜெயராஜன் | In :

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் கொடிய விலங்குகளின் தொல்லை அதிகம் இருந்ததால்,புலி வேட்டையில் வெற்றி பெற்றவனுக்கே பெண் கொடுத்தார்கள்.
காடும் காடு சார்ந்த முல்லை  நிலத்தில் ஒரு பெண் பிறந்ததுமே ஒரு காளையினை வளர்க்கத் துவங்கி விடுவார்கள்.பெண் பருவமடைந்ததும் காளையை அடக்குபவனுக்கே பெண்ணைக் கொடுத்தார்கள்.
வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் இளவட்டக்கல் தூக்கியவனுக்கே பெண்.
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் நீந்துபவனுக்கு மரியாதை இருந்தது.நீச்சல் வீரனுக்கும்,படகுப் போட்டியில் வெல்பவனுக்குமே பெண் கிடைப்பாள்.
காலம் செல்லச் செல்ல வீரர்களுக்கு இருந்த மரியாதை  ஆயதங்களைக் கையாளக்கூடிய திறமை சாலிகளுக்குக் கிடைத்தது.
இப்போது பணம் படித்தவர்களுக்கே முதல் மரியாதை.
வரும் காலத்தில் உடல் நலன் அடிப்படையிலேயே திருமணம் நடக்கும்.

சிரிப்பே சிறப்பு

0

Posted on : Tuesday, December 10, 2013 | By : ஜெயராஜன் | In :

திருமணம் ஆகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவியிடம் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப் போவதாக சொன்னான்.மனைவி சொன்னாள்,''அப்படியா மிக்க மகிழ்ச்சி,நல்ல மாப்பிள்ளையாய்ப் பாருங்க,''
******
சீர்திருத்தவாதியின் நண்பன் அவரிடம் சொன்னான்,''அண்ணே.நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன்.ஒரு விதவைக்கு மறுவாழ்வு கொடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.''அவர் சொன்னார்''அப்படியா,ரொம்ப மகிழ்ச்சி.சரி,எப்போது செய்யப் போகிறாய்?''நண்பன் சொன்னான்,''அது நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்பதைப் பொறுத்தது.''
******
கணவன் மனைவியிடம் சொன்னான்,''நமக்குக் கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகியும் நீ அன்றைக்குப் பார்த்த மாதிரியே இருக்கிறாயே!''மனைவி சொன்னாள்,''அப்படியா...கல்யாணத்தன்று உடுத்திய சேலையைத் தானே இன்று வரை உடுத்திக் கொண்டிருக்கிறேன்.வேறு சேலை உடுத்தினால்தானே வேறு மாதிரி இருப்பேன்?''
******
நண்பன் கேட்டான்,''வீட்டில் நீ யார் பக்கம்?''இவன் சொன்னான்,''காலையில் தாயின் பக்கம்.இரவினில் மனைவி பக்கம்.பகலில் தெருப்பக்கம்.''
******
'',நண்பரே!உங்கள் பெண்ணுக்கு போன வாரம் திருமணமாமே!என்னிடம் நீங்கள் சொல்லவேயில்லையே!''
''என்னிடமே நேற்றுதானே அவள் சொன்னாள்,''
******
ஒரு பூனை சாராயப் பானைக்குள் விழுந்து விட்டது அதனால் வெளியில் வர முடியவில்லை.அங்கு வந்த எலியிடம் அது சொன்னது,''ஒரு கயிறை  மட்டும்  எடுத்து ஒரு முனையை என்னிடம் கொடுத்துவிட்டு மறுமுனையை நீ கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் நான் வெளியே வந்துவிடுவேன்.வெளியே வந்ததும்  உன்னை சத்தியமாகக் கொல்ல மாட்டேன்,''எலியும் சரியென்று சொல்லி அவ்வாறே செய்தது .வெளியே வந்த பூனை உடனே எலியை விரட்டியது.கொடுத்த வாக்கை மீறலாமா என்று எலி கேட்டபோது பூனை சொன்னது,''குடி வெறியில் நான் ஆயிரம் சத்தியம் செய்திருப்பேன்.அதை நீ நம்பலாமா?''
******

போர்க்கப்பல்

1

Posted on : Monday, December 09, 2013 | By : ஜெயராஜன் | In :

கடற் படையில் உபயோகப் படுத்தப்படும் கப்பல்கள் பல வகைப்படும்.அவை;
ரோந்துக் கப்பல்.(CRUISER)
1.நாசகாரி (DESTROYER)
2.விமானம் தாங்கிக் கப்பல்.(AIRCRAFT CARRIER.)
3.நீர் மூழ்கிக் கப்பல்.(SUBMARINE)
4.கண்ணிவெடிப் படகு.(TORPEDO BOAT)
5.கொடிக்கப்பல் அல்லது தளபதிக் கப்பல் (FLAG SHIP)
6.கட்டளைக் கப்பல்.(COMMAND SHIP)
7.ஓர் அடுக்கு பீரங்கிக் கப்பல்.(CORVETTE)
8.வேவுக்கப்பல்.(PATROL VESSEL)
9.கண்ணிவெடி வைக்கும் கப்பல்.(MINE LAYER)
10.துணைக் கப்பல் அல்லது ஊழியக் கப்பல்.(TENDER)
11.கண்ணிவெடி ஒழிப்புக் கப்பல்.(MINE SWEEPER)
12.பீரங்கிப் படகு.(GUN BOAT)
13.படை வீரர்களை இறக்கும் கப்பல்.(LANDING SHIP)
14.கப்பலை இழுத்து செல்லும் இழுவைக் கப்பல்.(TUG)
15.காவல் கப்பல்.(GUARD SHIP)
******
அமெரிக்காவை சேர்ந்த நீல்  ஆர்ம் ஸ்ட்ராங் மற்றும் இருவர் முதல் முதலில் நிலவுக்கு சென்ற போது அங்கு நினைவுக் கல்  நாட்டினர்.அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இது தான்.
''HERE MEN FROM THE PLANET EARTH FIRST SET FOOT UPON THE MOON.JULY 1969A.D.WE CAME TO PEACE FOR ALL MANKIND.''
******

மரத்தின் பயன்.

1

Posted on : Sunday, December 08, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு விஞ்ஞானி மரத்தின் சேவையை பணத்தின் அடிப்படையில் கணக்கிட்டிருக்கிறார்.அதன்படி ஐம்பது ஆண்டுகள் வரை வாழும் ஒரு சாதாரண மரம் தனது ஆயுத காலத்தில் 18 லட்சம் ரூபாய் பெறுமான சேவை செய்கிறது.
1.ஒவ்வொரு ஆண்டும் அம்மரம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ50000/-
2.புரதப் பொருளாக மாற்றும் சேவை ரூ.20000/-
3.ஒரு மரம் காற்றை சுத்திகரிக்கும் செயலை நாம் செய்தால் அதற்கு ஆகும் செலவு  ரூ.5,00,000/-
4.மரம் வெட்டப்பட்டால் அங்கு அதே அளவு மண் வளத்தைப் பாதுகாக்க 50ஆண்டுகளில் நமக்கு ஆகும் செலவு ரூ.3,00,000/-
5.மரத்தின் நிழலிலும்,பாதுகாப்பிலும் தங்கும் பறவைகள்,விலங்குகள் முதலியவற்றிற்கு மரம் செய்யும் சேவையை நாம்செய்தால்  அதற்கு ஆகும் செலவு ரூ.3,00,000/-
ஒரு மரம் வெட்டுமுன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.
******
தபால் துறை செயல் படத் துவங்கிய புதிதில் தபால்களைக் குதிரை வீரர்கள் எடுத்து சென்றனர்.ஒரு இடத்தில் அவர்கள் உணவருந்தி இளைப்பாறிய பிறகு குதிரைகளை மாற்றிக் கொண்டு செல்வார்கள்.அந்த இடத்திற்கு 'போஸ்ட்'என்று பெயர்.நாளடைவில் அந்தப் பெயரே கடிதங்களுக்கு வந்துவிட்டது.
******

வார்த்தை ஜாலம்

1

Posted on : Saturday, December 07, 2013 | By : ஜெயராஜன் | In :

ஆங்கிலத்தில்,ஒரே மாதிரி உச்சரிப்பில் முடியும் வார்த்தைகளின் தொகுப்பு நிறைய உள்ளன.அவற்றில்ஒன்றைப் பார்க்கலாம்.
QUADROON  -வெள்ளையருக்கும்,நீக்ரோவிற்கும் பிறந்த குழந்தை.
LAGOON        -கடலோடு இணைந்த ஆழமற்ற ஏரி
GAMBROON --லினென் துணி.
GOSSOON    --ஐரிஸ் மொழியில் சிறுவனைக் குறிக்கும் சொல்.
POLTROON  --முழுக்கோழை
LAMPOON   --ஒருவனை கடுமையாக,வழக்கமாகப் பரிகசித்துக் கூறும் வர்ணனை .
SPITTOON   --எச்சில் துப்பப் பயன்படும் பாத்திரம்.
DOUBLOON--ஸ்பானிய நாணயம்.
COCOON    --புழு வண்ணத்துப் பூச்சியாக மாறும் காலத்தில் வாழும் கூடு.
PONTOON  --அடி பாகம் தட்டையாக உள்ள படகு.
TYPHOON  --கடும் புயல் காற்று.
MAROON   வான வேடிக்கை.


கோடீஸ்வரன்

2

Posted on : Tuesday, December 03, 2013 | By : ஜெயராஜன் | In :

முல்லாவின் நண்பர் ஒருவர் கேட்டார்,''நீங்கள் தூங்கி எழுந்ததும்,நீங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகி விட்டீர்கள் என்று தகவல் வந்தால் என்ன செய்வீர்கள்?''ஒருவர் சொன்னார்,''நான்பெரிய பங்களாவை விலை பேசுவேன்,''என்றார்.இன்னொருவர்,''இந்தப் பணத்தைக்கொண்டு எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று விபரம் சேகரிப்பேன்.'' முல்லா சொன்னார்,''நான் மறுபடியும் தூங்கப் போவேன்,'' கேள்வி கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை.முல்லா விளக்கினார்,''நான் மறுபடியும் தூங்கி எழுந்தால் இன்னொரு கோடி கிடைக்கவாய்ப்பு இருக்கிறது அல்லவா?''
******
முல்லா கோபத்துடன் ஒரு பெரியவரைப் பார்த்து,''நீ நரகத்துக்குப்  போ,''என்று கத்தினார்.அருகில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஏனெனில் அந்தப் பெரியவர் அவ்வளவு நல்லவர்.உடனே எல்லோருமொன்று கூடி முல்லா அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.முல்லாவும் வேறு வழியின்றி போகவே பெரியவரைப் பார்த்து சொன்னார்,''நீங்கள் நரகத்துக்குப் போக வேண்டாம்.''
******
முல்லா மனநலம் குன்றியவர்களுக்கான மருத்துவ மனையில்  சேர்க்கப் பட்டிருந்தார்.சில நாள் கழித்து அவரைப் பார்க்க வந்த நண்பர் சொன்னார்,''நான் டாக்டரிடம் பேசினேன்.நீங்கள் குணமாகி வருவதாகவும்,விரைவில் வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் சொன்னார்,''முல்லா கோபத்துடன் சொன்னார்,''இவ்வளவு வசதியான இடத்தைவிட்டுவிட்டு,பேய்  போலக் கத்தும் என் மனைவி இருக்கும் வீட்டிற்குத் திரும்பச் செல்ல எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?"'
******