உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

என்ன கொடுமைடா ,சாமி!

0

Posted on : Tuesday, January 31, 2012 | By : ஜெயராஜன் | In :

பள்ளி இறுதித் தேர்வில் முதன்மையாக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுபவர்கள் பொறியாளர்களாகவோ,மருத்துவர்களாகவோ ஆகிறார்கள்.
இரண்டாம் நிலையில் மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்ச்சி அடைந்து ,M.B.A. படித்து மேலாளர்கள் பதவி பெற்று முதல் தரத்தில் தேறியவர்களுக்கு மேல் அதிகாரிகளாக வருகிறார்கள்.
மூன்றாம் நிலையில் தேர்ச்சி அடைபவர்கள் அரசியலில் நுழைந்து அமைச்சர்களாக ஆகி முதல் இரண்டு நிலைகளில் தேறியவர்களை தங்கள்  அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்கிறார்கள்.
படிப்பே ஏறாமல் தேர்வில் தோல்வி அடைபவர்கள் ரவுடிகள்,,தாதாக்கள் ஆகி மேலே உள்ள மூன்று தரப்பினரையும் நடுநடுங்க வைக்கின்றனர்.
பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவர்கள் பெரிய சுவாமிகளாகவும்,குருக்களாகவும் ஆகிறார்கள்.எல்லாத் தரப்பினரும் அவர்கள் சொல்லும் வழியில் செல்கிறார்கள்.

பொன்மொழிகள்--25

0

Posted on : Friday, January 27, 2012 | By : ஜெயராஜன் | In :

மக்கள் ஒரு அற்பனைச் சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம்.
ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதற்குப் பெயர் ஜனநாயகம்.
**********
கெட்ட பழக்கம் முதலில் யாத்ரிகனைப்போல வரும்.
பிறகு விருந்தாளியாகி,இறுதியில் அதுவே முதலாளி ஆகிவிடும்.
**********
முள்,கரண்டி,கத்தி ஆகியவற்றின் துணை கொண்டு உண்பது,மொழி பெயர்ப்பாளரை துணைக்கு வைத்துக் கொண்டு காதலிப்பதற்கு  ஒப்பாகும்.
**********
எந்தப் பொருளையும் மலிவாக வாங்கக் கூடிய நேரம் போன வருடம்.
**********
இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தி அடைவது சரிதான்.
ஆனால் இருக்கிற திறமை போதுமென்று நினைப்பது சரியல்ல.
**********
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு எப்போதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள்.
**********
இன்றைய என் பசிக்கு உணவு அளிக்காது பிறகு சொர்க்கத்தைக் கொடுக்கும் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
**********
மிதவாதி என்பவன் யார்?உட்கார்ந்து யோசிப்பவன்.என்ன,உட்காருவது கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
**********
உடனடியாகச் சீர்திருத்த வேண்டியது எது?அடுத்த வீட்டுக்காரனின் குணம்.
**********
சீட்டுக்கட்டை சரியாகக் கலைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம்,நம் கைக்கு நல்ல சீட்டு கிடைக்கும் வரை.
**********
நீ சொல்வது சரிதான் என்று ஒருவர் என்னிடம் சொன்னால் உடனே அது சரியில்லையோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.
**********
ஒரு ஆளையோ,ஒரு தேசத்தையோ,ஒரு கொள்கையையோ வெறுக்க வேண்டும்.அதில்தான் ரொம்பப்பெருக்கு சந்தோசம்.
**********

கிணற்றுத்தவளை

0

Posted on : Sunday, January 22, 2012 | By : ஜெயராஜன் | In :

கிணற்றில் இருக்கிற தவளை எப்படித் தன் வாழ் நாள் முழுவதையும் அந்தக் கிணற்றிலேயே கழித்து விடுகிறதோ அதைப்போல பல மனிதர்கள் தங்கள் வாழ் நாள் முழுமையையுமே ஒரு சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு முடித்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறார்கள்.அவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கலாம்.வெளியே செல்லத் தேவையில்லாமல் இருக்கலாம்.ஆனால் அவர்கள் இருக்கிற உலகத்தைக் காட்டிலும் இனிமையானதாக வேறொரு உலகம் இருக்க முடியாது என்று நினைக்கிறார்களே,அந்த எண்ணம் தான் தவறானது.
கடலில் இருந்து வந்த தவளை கிணற்றுத் தவளைக்கு கடலைப் பற்றி விளக்கிச் சொல்ல முடியாது.காரணம்,விவரங்களுக்கு அப்பாற்பட்டதாகக் கடல் வியாபித்து நிற்கிறது.எனவே அந்தக் கடலிலேயே வாழ்ந்தாலும் கடலைப்பற்றி  அந்தக் கடல் தவளைக்கு முழுவதும் தெரியாததில் வியப்பில்லை.ஏனென்றால் அதன் பயணம் குறுகியதாகத்தான் இருக்க முடியும்.நிச்சயம் கிணற்றைக் காட்டிலும் கடல் பெரியது என்கின்ற ஒன்று மட்டும் தெரியும்.இதுபோலவே ஒரு மாபெரும் மகானுடன் வாழ்கின்ற பலர்  அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதுண்டு.
கிணற்றில் இருக்கும் தவளையை எவ்வளவு வற்புறுத்தினாலும் அது கடலுக்கு வர சம்மதிக்காது.ஏனெனில் கிணற்றில் அலை இல்லை;புயல் இல்லை;ஆபத்துக்கள் இல்லை.
பல நேரங்களில் உண்மை நம் கண் முன்னே போகும்போது நாம் கண்களை இறுக மூடிக் கொள்கிறோம்.உண்மையைச் சந்திப்பது என்பது நமக்குப் பயத்தைத் தருகிறது.அதன் பிரம்மாண்டத்தின் முன் நாம் காணாமல் போய்விடுவோம் என்கின்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.
கிணற்றுத் தவளையாக இருப்பதில் கூடத் தவறில்லை.யார் கிணற்றில் இருந்து கொண்டு கிணற்றைக் கடல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ,,அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட முடியுமே தவிர பரிகாரம் செய்ய முடியாது
              ------வெ.இறையன்பு எழுதிய உள்ளொளிப்பயணம் என்ற நூலிலிருந்து.

எதற்கு மதிப்பு?

0

Posted on : Friday, January 13, 2012 | By : ஜெயராஜன் | In :

அக்பர் ஒரு நாள் அரசவையில்,''எதற்கு மதிப்பு அதிகம்?உண்மையான பொருளுக்கா,போலியான பொருளுக்கா?''என்று கேட்டார்.வழக்கம்போல எல்லோரும் உண்மையான பொருளுக்கே மதிப்பு அதிகம் என்று சொல்ல பீர்பால் மட்டும் போலிக்குதான் மதிப்பு அதிகம் என்று வாதிட்டார்.அரசர் அதை நிரூபிக்கச் சொல்ல பீர்பாலும் சிறிது அவகாசம் கேட்டார்.மறுநாள் பீர்பால் ஒரு தச்சனை அழைத்து,''உன் திறமை கொண்டு உண்மையான காய்,கனி,மலர்கள் போலத் தோற்றமளிக்கும் பொருட்களை நீ செய்ய வேண்டும்,''என்று சொல்ல அவனும் ஒரு வாரத்தில் செய்து கொண்டு வந்தான்.அவனை அப்பொருட்களுடன் அரண்மனைக்கு வந்து அரசரிடம் காட்ட வேண்டும் என்றும் அரசர் சன்மானம் என்ன வேண்டும் என்று கேட்டால் ஆயிரம் பொன் வேண்டும் என்று கேட்க வேண்டும் என்றும் சொன்னார்.அவனும் மறுநாள் அதேபோல அரண்மனைக்கு வந்து அரசரிடம்  தான் செய்த பொருட்களை காண்பிக்க அரசர் அவை மிக அழகாக, உண்மையான பொருட்களிலிருந்து எந்த மாறுபாடும்  கண்டு பிடிக்க முடியாததைக் கண்டு மிகவும் பாராட்டினார்.மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று கேட்க அவனும் ஆயிரம் பொன் வேண்டும் என்று சொல்ல அரசரும் அதைக் கொடுக்க ஆணையிட்டார்.அவன் மகிழ்வுடன் பீர்பாலுக்கு நன்றி சொல்லிச்சென்றான். மறுநாள் பீர்பாலின் ஆலோசனைப்படி ஒரு வியாபாரி அப்போதுதான் தோட்டத்திலிருந்து பறித்த காய்கள்,கனிகள்,மலர்களைக் கொண்டு வந்தான்.அரசர் எந்த வித சிரத்தையும் இல்லாமல் அவற்றைப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக நூறு பொன் கொடுக்க ஆணையிட்டார்.அப்போது பீர்பால் அரசரிடம் அவர் எவ்வாறு அசலை விட போலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைச் சுட்டிக்காட்ட அரசரும் பீர்பலை பாராட்டினார்.

நடுநிலை

0

Posted on : Thursday, January 12, 2012 | By : ஜெயராஜன் | In :

மிக மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அரசன் ஒருவன் திடீரென ஒருநாள் புத்தரிடம் வந்து,''நான் எல்லாவற்றையும் துறந்து உங்கள் சீடனாக விரும்புகிறேன்,''என்றார்.அங்கிருந்த அனைவருக்கும் வியப்பு.இவரால் இங்கு வசதிக் குறைவுடன் வாழ இயலுமா என்பதுதான் அவர்களின் சந்தேகம்.ஆனால் புத்தர் அவரை அங்கு சேர அனுமதித்தார்.பெரிய ஆச்சரியம் அங்கு நடந்தது.அரசன் மிக எளிமையாக வாழ ஆரம்பித்தான்.எளிய உணவு உண்டு,தரையில் படுத்து,இட்ட பணிகளை முடித்தான்.ஒரு ஆண்டில் மிகவும் இளைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி விட்டான்.சீடர் ஒருவர் அந்த அரசன் பற்றிய புத்தரின் கருத்தைக் கேட்டார்.புத்தர் சொன்னார்,''அவர் அரசன் ஆக இருக்கும்போது தன்னைக் காட்டிலும் சிறந்த அரசன் இருக்கக் கூடாது என்று நினைத்தார்.பின் யாரோ துறவறம் நல்லது என்று கூறக் கேட்டு இங்கு வந்து தன்னைவிடச் சிறந்த துறவி யாரும் இருக்கக் கூடாது என்ற நினைப்பில் செயல் படுகிறார்.அவர் இடம் மாறியிருக்கிறாரே ஒழிய அவருடைய இயல்பு மாறவில்லை.''பின் அவர் அந்த முன்னாள் அரசனை அழைத்து,''வீணையில் தந்தி அதிகமாக முறுக்கப் பட்டிருந்தால் என்ன ஆகும்?''என்று கேட்டார்.அரசனும்,''வீணையின் தந்திகள் அறுந்து போகும்'' என்றார்.அடுத்து புத்தர்,''வீணையின் நரம்புகளைத் தளர்த்தினால் என்ன ஆகும்?''என்று கேட்டார். அரசனும்,''இசைக்க முடியாது,''என்றார்.புத்தர்,''நீயும் ஒரு வீணைதான்.மிகவும் ஆடம்பரமாகவும் இருக்க வேண்டாம்.உன்னை மிகவும் வருத்திக் கொள்ளவும் வேண்டாம்.நடுநிலையில் இருந்தால் போதும்,''என்றார்.அரசன் யோசிக்க ஆரம்பித்தான்.

எந்தக் கணவன்?

0

Posted on : Tuesday, January 10, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண் தன் கணவன் மீது உயிரையே வைத்திருந்தாள்.திடீரென ஒரு நாள் அவன் இறந்து விட அவளால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவள் ஞானி ஜே.கே.அவர்களிடம் சென்று தன் கணவனுக்கு உயிர் மீண்டும் அளிக்க வேண்டினாள்.பிறந்த ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும்,அவர்களை உயிர்ப்பிக்க வழி ஏதும் இல்லை என்று அவர் அந்தப் பெண்ணிடம் தெளிவாகச் சொன்ன போதிலும் அவள் மீண்டும் தான் சொன்னதையே கூறிக் கொண்டிருந்தாள்.ஜே.கே.அவளிடம் கேட்டார்,''சரி,உனக்கு எந்தக் கணவனை உயிர்ப்பித்துத் தர வேண்டும்?''கணவன் இறந்த அதிர்ச்சியை விட இந்தக் கேள்வி அவளுக்கு அதிக அதிர்ச்சியைத் தந்தது.அவளுக்குக் கோபமும் வந்தது.ஜே.கே.அவளிடம் அமைதியாகச் சொன்னார்,''அம்மா,நான் கேட்டதை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.உன்னைத் திருமணம் செய்து கொள்ளுமுன் இருந்தானே அவனையா,திருமணம் செய்து கொண்டபின் இருந்தானே அவனையா,இளைஞனாக இருந்தானே அவனையா,முதியவன் ஆனானே அவனையா,ஆரோக்கியத்துடன் இருந்தானே அவனையா,நோய் வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தானே,அவனையா,யாரை உயிர் பிழைக்க வைக்க வேண்டும்?சொல்,''அந்தப் பெண்ணுக்கு ஏதோ புரிவது போலத் தெரிந்தது.ஜே.கே.மீண்டும் சொன்னார்,''இளைஞனாய் இருந்த அவன் எப்படி முதியவன் ஆனானோ,உடல் நலத்துடன் இருந்தவன்,எப்படி நோய் வாய்ப்பட்டானோ,அதுபோல இறந்ததும் ஒரு இயற்கையான செயல்.எனவே நீ கவலையை மறந்து வீட்டிற்குச் செல்.''

சொந்தம்.

0

Posted on : Saturday, January 07, 2012 | By : ஜெயராஜன் | In :

சோமு தன் பசுவை மேய்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒருவன் அழகாகப்  பாடிக் கொண்டு வந்தான்.அந்த பாட்டின் இனிமை சோமுவைக் கவர்ந்தது.எனவே அவன் வந்தவனிடம்  சென்று,''அய்யா,எனக்கு இந்தப் பாட்டை ராகத்துடன் சொல்லிக் கொடுக்க முடியுமா?''என்று கேட்டான்.அவன் ,''அதற்கு என்ன சன்மானம் கொடுப்பாய்?''என்று கேட்க,சோமுவும் அவன் தன்னிடம் இருக்குமெதைக் கேட்டாலும் தருவதாகச் சொன்னான்.அவனும் பசுவைக் கொடுத்தால் பாடலை சொல்லித் தருவதாகக் கூறினான்.அந்தப் பாட்டின் மீது இருந்த லயிப்பின் காரணமாக சோமு உடனே அதற்கு ஒத்துக் கொண்டான்.அவனும் பாடலை சொல்லிக் கொடுக்க சோமுவும் அதை விரும்பி கற்றுக் கொண்டான்.பின் தன் பசுவை அவனிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் அந்தப் பாட்டை பாடிக் கொண்டே தன் வீடு நோக்கி சென்றான். போகும் வழியில் ஒரு ஆற்றைக் கடந்ததும் ஒரு மரத்தடியில் சிறிது இளைப்பாறினான்.அப்போது அவன் இதுவரை பாடிக் கொண்டிருந்த பாடலை யாரோ பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.பாடலை அவனுக்கு சொல்லிக் கொடுத்தவன்தான் பாடிக் கொண்டிருந்தான்.உடனே கோபத்துடனவனிடம்,''இதோ பாருங்கள்,இந்தப் பாடலை நீங்கள் சொல்லிக் கொடுக்குமுன் பாடல் உங்களிடம் இருந்தது.பசு என்னிடம் இருந்தது.இப்போது என்னிடம் பசு இல்லை.பாடல் மட்டும்தான் இருக்கிறது.ஆனால் உங்களிடம் பசுவும் இருக்கிறது. பாடலும் உங்களிடம் இருக்கிறது.இது என்ன நியாயம்?''என்று கேட்டான்.இதற்கு பதில் சொல்லத்தெரியாத அந்த மனிதன் சிரித்துக் கொண்டே பசுவை சோமுவிடமே கொடுத்து விட்டுச் சென்றான்.

சற்றே பொறும் பிள்ளாய்!

0

Posted on : Thursday, January 05, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கணவன் கடவுளிடம் வேண்டினான்,''நாள் முழுவது நான் கடுமையாக உழைக்கிறேன்.என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள்.போதாக் குறைக்கு என்னிடம் வேறு குற்றம் காண்கிறாள்.எனவே என்னை பெண்ணாக்கி என் மனைவியை ஆணாக்கிவிடு.அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும்.''கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும் மாற்றிவிட்டார்.மனைவி ஆணானவுடன் வேலைக்கு சென்றாள்.பெண்ணான கணவன் காலை எழுந்து வீடு வாசல் சுத்தம் செய்து,அடுப்படி வேலைகளை முடித்து பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு,கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து சமையல் முடித்து,இப்படியாக இரவு நெடு நேரம் வரை வேலை இருந்தது .மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாகக் கடவுளிடம் ,''ஐயோ கடவுளே!பெண்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருப்பதை உணராது இருந்து விட்டேனே!என்னால் இந்த பொறுப்புகளை சுமக்க முடியாது.தயவு செய்து என்னை மறுபடியும் ஆணாக்கி,என் மனைவியைப் பெண்ணாக்கிவிடு,''என்று அழுது வேண்டினான்.கடவுள் சொன்னார்,''உன் வேண்டுகோளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு நீ நாற்பது வாரங்கள் காத்திருக்க வேண்டும்''.அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க,கடவுள் சொன்னார்,''இப்போது நீ கருவுற்றிருக்கிறாய்.''