உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கிணற்றுத்தவளை

0

Posted on : Sunday, January 22, 2012 | By : ஜெயராஜன் | In :

கிணற்றில் இருக்கிற தவளை எப்படித் தன் வாழ் நாள் முழுவதையும் அந்தக் கிணற்றிலேயே கழித்து விடுகிறதோ அதைப்போல பல மனிதர்கள் தங்கள் வாழ் நாள் முழுமையையுமே ஒரு சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு முடித்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறார்கள்.அவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கலாம்.வெளியே செல்லத் தேவையில்லாமல் இருக்கலாம்.ஆனால் அவர்கள் இருக்கிற உலகத்தைக் காட்டிலும் இனிமையானதாக வேறொரு உலகம் இருக்க முடியாது என்று நினைக்கிறார்களே,அந்த எண்ணம் தான் தவறானது.
கடலில் இருந்து வந்த தவளை கிணற்றுத் தவளைக்கு கடலைப் பற்றி விளக்கிச் சொல்ல முடியாது.காரணம்,விவரங்களுக்கு அப்பாற்பட்டதாகக் கடல் வியாபித்து நிற்கிறது.எனவே அந்தக் கடலிலேயே வாழ்ந்தாலும் கடலைப்பற்றி  அந்தக் கடல் தவளைக்கு முழுவதும் தெரியாததில் வியப்பில்லை.ஏனென்றால் அதன் பயணம் குறுகியதாகத்தான் இருக்க முடியும்.நிச்சயம் கிணற்றைக் காட்டிலும் கடல் பெரியது என்கின்ற ஒன்று மட்டும் தெரியும்.இதுபோலவே ஒரு மாபெரும் மகானுடன் வாழ்கின்ற பலர்  அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதுண்டு.
கிணற்றில் இருக்கும் தவளையை எவ்வளவு வற்புறுத்தினாலும் அது கடலுக்கு வர சம்மதிக்காது.ஏனெனில் கிணற்றில் அலை இல்லை;புயல் இல்லை;ஆபத்துக்கள் இல்லை.
பல நேரங்களில் உண்மை நம் கண் முன்னே போகும்போது நாம் கண்களை இறுக மூடிக் கொள்கிறோம்.உண்மையைச் சந்திப்பது என்பது நமக்குப் பயத்தைத் தருகிறது.அதன் பிரம்மாண்டத்தின் முன் நாம் காணாமல் போய்விடுவோம் என்கின்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.
கிணற்றுத் தவளையாக இருப்பதில் கூடத் தவறில்லை.யார் கிணற்றில் இருந்து கொண்டு கிணற்றைக் கடல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ,,அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட முடியுமே தவிர பரிகாரம் செய்ய முடியாது
              ------வெ.இறையன்பு எழுதிய உள்ளொளிப்பயணம் என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment