உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

என்னைத் தெரிந்து கொள்ள

0

Posted on : Tuesday, July 31, 2012 | By : ஜெயராஜன் | In :

ஞானி நாகார்ஜுனா தினமும் பிச்சை எடுத்து உணவருந்துவது வழக்கம்.அவர் மீது பக்தி கொண்டிருந்த அந்நாட்டு அரசி அவருக்கு தங்கத்தாலான ஒரு  பிச்சைப் பாத்திரத்தை வழங்கினார்.அதன்பின் அதிலேயே அவர் பிச்சை வாங்கி வந்தார்.ஒருநாள் ஒரு திருடன் பாத்திரத்தைப் பார்த்துவிட்டான்.அதை எப்படிடும் திருடி விடுவது என்று எண்ணி அவரைப் பின் தொடர்ந்தான். நாகார்ஜுனாவும் அன்று இரவு ஒரு மடத்தில் தங்கி சாப்பிட்டார்.திருடனைப் பார்த்த அவர் அவனுடைய எண்ணம் அறிந்து அப்பாத்திரத்தை அவன் இருந்த பக்கம் எறிந்தார்.திருடனால் இதை நம்ப முடியவில்லை.அவர் அவனை தன் பக்கம் வரவழைக்கவே இப்படி செய்தார்.அதேபோல அவனும் அவரிடம் வந்து தங்கப் பாத்திரத்தை அவரிடம் திரும்பக் கொடுத்தான்.அதற்கு அவர் அதை அவனுக்கு ஏற்கனவே பரிசாக அளித்து விட்டதாகக் கூறினார்.திருடன் நம்ப முடியாமல்,''இதனுடைய விலை என்ன தெரியுமா?;;என்று கேட்டான்.அதற்கு அவர் சொன்னார்,''நான் என்னை அறிந்து வைத்திருப்பதால் வேறு எதுவும் எனக்கு விலை உயர்ந்த பொருளாகத் தெரியவில்லை,''உடனே திருடன்,''நான் என்னை எப்படித் தெரிந்து கொள்வது?''என்று கேட்டான்..அதற்கு  அவர்,''திருடும்போது சுய உணர்வோடு ,எச்சரிக்கையோடு,கவனத்தோடு இரு,''
என்றார்.அதன்பின் திருடன் இரண்டு முறை திருட முயற்சி செய்தான்.ஆனால் அவன் ஞானி சொன்னதுபோல சுய உணர்வோடு இருந்தபோது செல்வம் எதையும் திருட அவனுக்கு விருப்பம் வரவில்லை.கடைசியாக வெறுங்கையோடு நாகார்ஜுனாவிடம் வந்தான்.அவருடைய சீடனான்.

பொய்

0

Posted on : Tuesday, July 31, 2012 | By : ஜெயராஜன் | In :

நம் அனைவருக்கும் கற்பனைத்திறன் இருக்கிறது என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டு, பொய் சொல்வதுதான்.
பொய் சொல்பவன் தன கற்பனையைப் பயன் படுத்தத் துவங்குகிறான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் மனம் கற்பனையான நிகழ்வை உருவாக்குகிறது.பொய்யின் வெற்றியே அதன் உடனடித் தன்மைதான். பொய்யின் விதைகளாக இருப்பவை சொற்களே.
ஒத்திகை பார்த்து சொல்லப்படும் பொய்கள் பெரும்பாலும் இளித்து விடுகின்றன.உண்மை வெளியாகப் பல காலம் தேவைப்படுகிறது.பொய் எப்போதும் நம் நாக்கின் நுனியில் காத்துக் கொண்டிருக்கிறது.உலகில் அதிகம் பயன் படுத்தப்படும் பொருள் பொய்.இதில் மொழி, தேசம், உயர்ந்தவர், தாழ்ந்தவர்,வயது என்ற பேதம் இல்லை.
பொய் என்பது ஒரு ருசி.அது இளம் வயதில் நமக்கு அறிமுகமாகிறது. பொய்யை மெய்யில்இருந்து  வேறு படுத்திப் பார்க்க முடியாத வயது என்பதால் பொய்யை அப்படியே நம்பி விடுகிறோம்.அது பொய் என்ற விபரம் தெரிந்ததும்,நாமும் அசை ஆசையாய் பொய்களை உருவாக்கத் துவங்குகிறோம்.
நாம் வளர வளர பொய்களும் நம்மோடு வளர்கின்றன.பொய்யை உண்டாக்கவும்,உபயோகிக்கவும் தெரிந்தவுடன் அதன் பெயரை திறமை, சாதுரியம்,தொழில் தர்மம் என்று பொலிவுடன் கூறுகிறோம்.
பொய் சொல்லத் தயங்காத நாம் மற்றவர்களால் பொய் சொல்லி ஏமாற்றப்படும்போது மட்டும் ஏன் கோபப்படுகிறோம்?
எல்லாப் பொய்களும் ஒரு தற்காலிகமான மகிழ்வையும் தப்பித்தலையும் ஏற்படுத்துகிறது.பொய் என்ற ஒன்று இல்லாதிருந்தால் வாழ்வு சுவாரஸ்யம்  இன்றிப் போகுமோ?
அற்பப் பொய்கள் கண்டு பிடிக்கப் படுகின்றன.வரலாறு பதிவில் உள்ள பொய்கள்,மதத்தின் பேரால் சொல்லப்பட்ட பொய்கள்,வணிக நிறுவனங்கள் சொல்லும் பொய்கள்,அரசு சொலும் பொய்கள் யாவும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அங்கீகரிக்கப் படுகின்றன.பொய்யைத் தவிர்ப்பது இயலாது.ஆனால் பொய் சொல்ல வேண்டிய வாய்ப்புகளை குறைப்பது நம் கையில்தான் இருக்கிறது.பொய்யைப் பொய் என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் வேண்டும்.
                                                 --எஸ்.ராமகிருஷ்ணன்..

கண்டுபிடி .

0

Posted on : Tuesday, July 31, 2012 | By : ஜெயராஜன் | In :

1.இலியட்,ஓடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களை எழுதிய ஹோமர் பார்வை இழந்தவர்.ஒரு நாள் மீனவச் சிறுவன் ஒருவன் அவரை வழிமறித்து ஒரு புதிருக்கு விடை கேட்டான்.அப்புதிர்,''பிடித்து விட்டால் வெளியே விட்டு விடுகிறோம்.பிடிபடாவிட்டால் எடுத்துச் செல்கிறோம்.அது என்ன?'' திருதிருவென விழித்தார் ஹோமர்.நீங்களாவது விடை சொல்லுங்களேன்!
******
2.ஒரு கூடையில் பத்து மாம்பழங்கள் இருந்தன.நாங்கள் பத்துபேர் ஆளுக்கொரு மாம்பழம் எடுத்துக் கொண்டோம்.பின்பும் கூடையில் ஒரு மாம்பழம் இருந்தது.எப்படி?
******
விடைகள்:
1.தலைமுடியில் வாழும் பேன் .
2.ஒரு நபர் மாம்பழத்தைக் கூடையுடன் எடுத்துக் கொண்டார்.

வணங்குவது எப்படி?

0

Posted on : Monday, July 30, 2012 | By : ஜெயராஜன் | In :

கைகளைக் குவித்து தலைக்கு மேல் உயர்த்தி மும்மூர்த்திகளை வணங்க வேண்டும்.
தலைமேல் கைகளைக் குவித்துப் பிற தெய்வங்களை வணங்க வேண்டும்.
நெற்றிக்கு நேராகக் கைகளைக் கூப்பியபடி அறிவு புகட்டிய ஆசானை வணங்க வேண்டும்.
வாய்க்கு நேராகக் கரங்களைக் கூப்பியவாறு தந்தை, அறவோர், அமைச்சர், அரசர் ஆகியோரை வணங்க வேண்டும். 
குவித்த கைகளை வயிற்றில் வைத்து பெற்ற தாயை வணங்க வேண்டும்.
தாய்.தந்தை,குரு,தெய்வம் ஆகியோரை மட்டுமே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கலாம்.

எதிர்பார்ப்பது தவறா?

0

Posted on : Monday, July 30, 2012 | By : ஜெயராஜன் | In :

மன்னன் ஒருவன் முனிவரிடம்,கேட்டான்,''கீதையிலே,'கடமையை செய்,பலனை எதிர்பாராதே,'என்று கூறப்பட்டுள்ளது.நல்ல முறையில் ஆட்சி செய்ய வேண்டியது என் கடமை.அதனை மக்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது தவறா?''முனிவர் அதற்கு,''உன் கேள்விக்கு பதில் சொல்ல நீ ஒரு வாரம் என் ஆசிரமத்தில் சாப்பிட வேண்டும்,''என்றார்.மன்னனும் அவ்வாறே அங்கு சாப்பிட்டு வந்தான்.சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது.அதை ரசித்து அவன் சாப்பிட்டான்.ஒரு வாரம் முடிந்தவுடன் முனிவர் கேட்டார்,''இங்கு சாப்பாடு எப்படி இருந்தது?''மன்னன் சொன்னான்,''நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது.இதை சமைத்த சமையல்காரரை என் அரண்மனைக்கு அழைத்துச் சென்று தலைமை சமையல்காரராக நியமிக்கப் போகிறேன்,''முனிவர் சொன்னார்,''சுவையாக சமைக்க வேண்டியது ஒரு சமையல்காரரின் கடமை.இந்த சமையல்காரன் தன் கடமையை செய்தான்.இப்போது அவனுக்கு அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது.கடமையை சரியாக செய்தவனுக்கு அதற்கான பலன் கண்டிப்பாக தேடி வரும்.''
ஆசையின் அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பு.ஆசைக்கு அளவில்லை.பலனை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டால் நம்மால் அந்த செயலில் நிச்சயம் வெற்றி பெற இயலாது.சரியாக செய்தால் அதற்கான பலன் நமக்குக் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

நிலையானது

0

Posted on : Sunday, July 29, 2012 | By : ஜெயராஜன் | In :

எப்போது ஒரு மனிதனுக்கு 'நிச்சயமான இறப்பு'பற்றிய உணர்வு பிரக்ஞையாக   மேலே எழும்புகிறதோ,அப்போது அவனுக்கு பிறர் மேல் ஏற்படும் பாச உணர்வு குறைகிறது.வேறு விதமாகச் சொன்னால்,நம்முடைய இறப்பின் மறதியே பாசப் பிணைப்புக்குக் காரணமாகிறது.நாம் எப்போது யார் மீதாவது அன்பு செலுத்துகிறோமோ,அப்போது நாம் தொடர்ந்து இறப்பை மறக்கவே முயல்கிறோம்.ஆகவேதான் அன்பு நிலையானது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.நாம் ஆழ்ந்த அன்பு செலுத்துவோர் அனைவரும்  இறக்க மாட்டார்கள் என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறோம்.
******
அடுத்தவரிடம் உள்ள நம்முடைய ஈடுபாடு,அடுத்தவரிடமிருந்து எதிர்பார்ப்பு, அடுத்தவரிடமிருந்து மகிழ்ச்சி ஆகியவை வரும் என்ற நம்பிக்கைகள்தான்  நம்முடைய மகிழ்ச்சியற்ற தன்மைக்குக் காரணங்கள்.ஆகும்.நீங்கள் எந்த விதத்திலும் மகிழ்ச்சியை வெளியில் இருந்து அடையவில்லை.ஆனால் அந்த நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.அந்த நம்பிக்கை உங்களை விட்டு விலகும்போது நீங்கள் விரக்தி அடைகிறீர்கள்.
******
முதன் முதலில் நம்மை நாமே சார்ந்து எதிர் கொள்ளும்போது மகிழ்ச்சிக்கு மாறாகத் துக்கமே ஏற்படுகிறது.விரக்தி மேலிடுகிறது.ஆனால் நம் முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்,மெல்ல மெல்ல ஆனந்தம் நம்மிடையே மலருகிறது.அதற்கு மாறாக அடுத்தவரை முதலில் நீங்கள் சார்ந்து நின்றால்
ஆரம்பத்தில்  மகிழ்ச்சி தோன்றலாம்.ஆனால் முடிவில் நீங்கள் துக்கத்தைத்தான் சந்திக்க வேண்டி வரும்.
*******

விட்டல்

0

Posted on : Sunday, July 29, 2012 | By : ஜெயராஜன் | In :

மகாராஷ்ட்ராவில் பகவான் கிருஷ்ணனின் பெயர் விட்டல்.விட்டல் என்றால் 'சும்மா உட்கார்'என்று பொருள்.அந்தப் பெயர் வந்த கதை:
ஒரு கிருஷ்ண பக்தரின் தாயார் இறக்கும் தருவாயில் இருந்தார்.அந்த பக்தர் தாயின் கால்களை அமுக்கிக் கொண்டிருந்தார்.கிருஷ்ணர்,தன் பக்தன்  இப்படி உண்ணாமல் உறங்காமல் தாய்க்குப் பணிவிடை செய்வதைப் பார்த்து அவனுக்கு உதவி செய்ய எண்ணி ,அவன் பின்னால் வந்து நின்றார். அவருடைய  காலடி ஓசை கேட்டு பக்தன் திரும்பவில்லை.தன் கவனம் முழுவதையும் தாயாரின் பணிவிடையிலேயே செலுத்தியதால் யார் வந்திருக்கிறார்கள் என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.பின் கிருஷ்ணர், ''நான் உனக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன்,''என்றார்.''என் தாய்க்குப் பணிவிடை செய்ய என்னாலேயே முடியும்,''என்றார் பக்தன்.இப்போதும் அவர் திரும்பி கிருஷ்ணனைப் பார்க்கவில்லை.ஆனால் தன் அருகில் இருந்த கல்லை எடுத்துப் பின்னால் தள்ளி,''என் வேலை முடியும் வரை, தயவுசெய்து, அந்தக் கல்லில் அமரவும்.''என்று அவரைப் பார்க்காமலே சொன்னார்.இவ்வாறு பக்தர் சொன்னதன் பேரில் கிருஷ்ணரும் அதில் அமர்ந்திருந்ததால் அவருக்கு  விட்டல் என்ற பெயர் ஏற்பட்டது.
பக்தனின் ஈடுபாடு ஒரு தியானம் என்றால் கடவுளே அதற்கு இடையூறாக இருக்க முடியாது.

தாவோ என்றால் என்ன?

0

Posted on : Saturday, July 28, 2012 | By : ஜெயராஜன் | In :

ஞானி யாகூ சான் ,தன சீடர்களுக்கு உற்சாகமாக போதனைகள் செய்து கொண்டிருக்கும்போது அவரைப் பார்க்க அந்தப் பகுதியின் கவர்னர் வந்தார்.யாகூசானின் உதவியாளர் அவருக்கு அறையைக் காண்பித்தார்.அப்போது யாகூசான் ஒரு சூத்திரத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார்.யாகூசான் கவர்னர் வந்ததைப் பார்க்கவில்லை.அவர் கவனம் முழுவதும் படிப்பில் இருந்தது.கவர்னர்  இயல்பிலேயே கோபக்காரர்.அவர் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு திரும்பத் தயாரானார்.அப்போது அவர் அதிருப்தியைத் தெரிவிக்க எண்ணி,''உங்கள் முகத்தைப் பார்ப்பதைவிட  உங்கள் பெயரே சிறந்தது என்று நினைக்கிறேன்.'' என்றார்.அப்போதுதான் அவரைக் கவனித்த யாகூசான்,''உங்களுடைய கண்களைத் தாழ்த்தி காதுகளுக்கு ஏன் நீங்கள் மதிப்புக் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.கவர்னர் தன் இரு கைகளையும் ஒன்று சேர்த்து,வணக்கமாகக் குனிந்து,''தாவோ என்றால் என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.யாகூசான் உடனே தன் கைகளை மேலும் கீழும் அசைத்துக் காட்டி,''புரிந்து கொண்டீர்களா?''என்றார்.கவர்னருக்குப் புரியவில்லை. யாகூசான் பிறகு சப்தமாக,''மேகங்கள் ஆகாயத்தில் இருக்கின்றன.நீர் கிணற்றில் இருக்கிறது.''என்றார்.கவர்னருக்கு இப்போது புரிந்துவிட்டது.அவர் மிகவும் மகிழ்வுடன்,மன நிறைவு பெற்று யாகூசானை குனிந்து வணங்கி கீழ்க்கண்ட பாடலை யாகூசானுக்கு அன்பளிப்பாக அளித்தார்.
''முயன்று பெற்ற அனைத்தின் தோற்றமும் நாரையினது போன்றதே.
ஆயிரம் பைன் மரங்களுக்கிடையே இரண்டு கம்பங்கள் வழியாகக் கேட்க வந்தேன்.
தாவோ பற்றி உதவாக்கரை வாதம் இல்லை.
மேகங்கள் ஆகாயத்தில்,தண்ணீர் கிணற்றில்.''

கைக்கடிகாரம்

0

Posted on : Saturday, July 28, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் புகை வண்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்தான்.அப்போது அவன் அருகே ஏதோ ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவன் இரண்டு பெரிய பெட்டிகளை சுமக்க முடியாமல் சுமந்து வந்து நின்றான்.நின்றவன் வந்தவனிடம்,''இப்போது நேரம் என்ன?என்று கேட்டான்.உடனே அவன் ஒரு கைக் கடிகாரத்தை.பையிலிருந்து எடுத்து ஒரு பொத்தானை அமுக்கினான்.உடனே அக்கடிகாரத்தில் நேரம் தெரிந்ததோடு ஒரு இனிமையான குரலில் நேரமும் சொல்லப்பட்டது.நின்றவன் அதிசயத்துடன் அந்தக் கடிகாரத்தைப் பார்க்க,வந்தவன்,''அது மட்டுமல்ல.இந்தக் கடிகாரத்தில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன.''என்று கூறியவாறு இன்னொரு பொத்தானை அமுக்கினான்.உடனே ஒரு சிறிய தொலைகாட்சி திரையில் யாரோ செய்தி வசித்துக் கொண்டிருந்தான்.பின் இன்னொரு பொத்தானை அமுக்க இனிமையான இசை ஒலித்தது.பிரமித்துப் போய் அந்தக் கடிகாரத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று எண்ணி அதன் விலையைக் கேட்டான்.அதன் விலை ஐந்து ஆயிரம் ரூபாய் என்றதும் மறு பேச்சு பேசாமல் அந்தக் கடிகாரத்தை வாங்கிக் கையில் கட்டி கொண்டு கிளம்பினான்.சிறிது தூரம் சென்றவுடன்,பிரதிநிதி அவனைக் கூப்பிட்டு,''இந்த கடிகாரத்திற்குரிய பேட்டரிகளை வாங்காமல் செல்கிறீர்களே?''என்று கேட்டவுடன்,''அமாம்,,மறந்து விட்டேன்.எங்கே,பேட்டரிகளைக் கொடுங்கள்,'' என்று கேட்டவுடன் அவன் தான் கொண்டு வந்த இரண்டு பெரிய பெட்டிகளைக் காண்பித்து,''இதனுள்தான் பேட்டரிகள் உள்ளன.எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்றவுடன் கடிகாரத்தை வாங்கியவன் மயங்கி விழுந்தான்.

புதியதை தேர்ந்தெடு.

0

Posted on : Friday, July 27, 2012 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் ,மெல்ல மெல்ல அது பழக்கமாகி நிலை பெற்று விடுகிறது.அது நிலை பெற்ற பிறகு உங்களால் மாற முடிவதில்லை. மாறினால்,புதிதாகக் கற்க வேண்டும்,புதுப் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும்.இப்போது உள்ள நிலையில் பிரச்சினை எதுவும் இல்லை:எப்போது எந்த மாதிரியான பிரச்சினை வரும்,அதற்கு விடை என்ன என்பது நமக்கு நன்கு தெரியும்.ஒரு பாதுகாப்புக்குள் பத்திரமாக இருப்பதுபோல இது இருக்கிறது. பழைய முறைகளில் வாழ்வது கதகதப்பானது.ஆனால் சுதந்திரப்பூ அங்கு மலராது.புதிய வானமும் திறக்காது.எதுவும் அசையாத புதைகுழி போலக் கிடக்க வேண்டியதுதான்.
புதியது அச்சம் தரக் கூடியது என்றாலும் புதியதையே தேர்ந்தெடு.உன் அச்சங்களை விடு.உன் சின்னச் சின்ன சௌகரியங்களை விட்டுத் தள்ளு.இவற்றை விலையாகக் கொடுத்துத்தான் நீ பெரிய மகிழ்வையும் எல்லையற்ற பரவசத்திற்கான வாய்ப்புகளையும் பெற முடியும்.ஆரம்பத்தில் கொஞ்சம் இழப்பு ஏற்படும்.ஆனால் முடிவில் நீ நஷ்டம் அடைய மாட்டாய்.
எருமைகளைப் பாருங்கள்.பல லட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிமாணத்தில் அவை எப்போதாவது,இப்போது புசிக்கும் புல்லைத்தவிர வேறு  எதையாவது புசித்திருக்குமா?ஒரு எருமை புத்தராக முடியாது.இந்தக் காரணத்தினால்தான் விலங்குகள் மனிதனைவிடத் தாழ்ந்து இருக்கன்றன. மனிதனோ புதியவை தேடுபவனாக இருக்கிறான்.புதுமை நமது பகை அல்ல என்பதை ஒரு முறை கற்றுக் கொண்டால் அச்சம் பறந்தோடிவிடும்.

அதிசயம்

0

Posted on : Friday, July 27, 2012 | By : ஜெயராஜன் | In :

அண்ணல் நபி அவர்கள் ஒரு ஆபத்தில் சிக்கி இருந்தார்.அவருடைய எதிரிகள் இரவோடிரவாக அவரைக் கொலை செய்ய எடுத்த முடிவு தெரிய வந்தது.உடனே அவர் நண்பர் அபுபக்கருடன் இருந்த இடத்தை விட்டு வெளியே சென்றார்.அபுபக்கருக்கு மிகுந்த பயம்.ஆனால் நபி அவர்கள் அமைதியாக இருந்தார்.வழியில் ஒரு குகையைக் கண்ட அவர்கள் ஒளிந்து கொள்ள அது ஏற்ற இடம் என்று கருதி அதற்குள் சென்று ஒளிந்து கொண்டனர். சிறிது நேரத்தில் எதிரிகள் அந்தப் பக்கம் வந்து சேர்ந்தனர்.அவர்கள் சப்தம் கேட்டவுடன் அபுபக்கர் ,''நான் இருவர்தான் இருக்கிறோம்.அவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.நாம் என்ன செய்ய முடியும்,''என்று புலம்ப ஆரம்பித்தார்.நபி அவர்கள்.''நாம் மூன்று பேர் இருக்கிறோம்.இறைவன் நம்முடன் இருக்கிறார்.அவர் இருக்கும்போது நமக்கு என்ன பயம்?''என்று ஆறுதலாய்க் கூறினார்.அப்போது ஒரு அதிசயம் நடந்தது.குகையின் வாயிலில் சிலந்தி ஒன்று கூடு கட்ட ஆரம்பித்து வெகு விரைவில் முடித்து விட்டது.
எதிரிகளின் தலைவன் குகைக்குள் சென்று அவர்களைத் தேடுமாறு ஆணையிட்டான்.இருவர் உள்ளே நுழையப் போகும்போது அத்தலைவன் சிலந்தியின் கூடைக் கண்டு,''உள்ளே போய் நேரத்தை வீணாக்க வேண்டாம்.இதோ,சிலந்தி கூடு கட்டி உள்ளது.இதை சேதப்படுத்தாமல் யாரும் உள்ளே போயிருக்க முடியாது.''அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். முகம்மது காப்பாற்றப்பட்டார்.

தன்னம்பிக்கை வளர!

3

Posted on : Thursday, July 26, 2012 | By : ஜெயராஜன் | In :

தன்னம்பிக்கை வளர
1.மன உறுதியுடனும் உடல் உறுதியுடனும் இருங்கள்.
2.எல்லாம் நன்மைக்கே என்று எதையும் நேர் முகமாகவே (positive)  எண்ணுங்கள்.
3.ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல் படுங்கள்.
4.செய்யும் செயலைப் புதுமையான முறையில் செய்யுங்கள்.
5.பயனுள்ள எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டிருங்கள்.
6.பிரச்சினைகளை எதிர் நோக்கும்போது அமைதியாகவும் தெளிவாகவும் மனதை வைத்திருங்கள்.
7.பிறருடன் கலந்து பேசி அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.இதனால் அவர்களது அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.
8.வாழ்க்கையை உன்னதமான ஒன்றாகவும் உங்களை அதில் ஒரு பகுதியாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.
9.முடிந்தவரை உங்கள் குறைகள் மற்றவர்களுக்குத் தெரியுமுன் சரி செய்ய முயலுங்கள்.
10.பிறரைக் கவருங்கள்:புரிய வையுங்கள்:ஏற்றுக் கொள்ளச் செய்யுங்கள்.

கடவுள் இல்லாத இடம்.

0

Posted on : Thursday, July 26, 2012 | By : ஜெயராஜன் | In :

அண்ணல் நபிகள் தன் நண்பர் அபுபக்கருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது  வேகமாக வந்த ஒரு மனிதன் அண்ணலைப் பார்த்து கோபத்துடன் திட்ட ஆரம்பித்தான்.நபிநாயகம் அமைதியாக இருந்தார்.அபுபக்கரும் சிறிது நேரம் அமைதி காத்தார்.வந்தவன் அளவுக்கு அதிகமாகப் பேச,அபுபக்கர் வெகுண்டெழுந்தார்.உடனே அவ்விடத்தைவிட்டு நபிகள் எழுந்து வெளியே சென்று விட்டார்.சிறிது நேரம் கழித்து வந்த மனிதன் திட்டிக் கொண்டே வெளியே சென்று விட்டான்.பின்னர் அபுபக்கர் நபிகளைப் பார்த்தபோது மிகவும் வருத்தப்பட்டு,''அந்த சூழ்நிலையில் என்னை ஆதரிக்காது வெளியே சென்று விட்டீர்களே?''என்று கேட்டார்.அண்ணல் சொன்னார்,''முதலில் நீ அமைதியாக இருந்தபோது,நீ கடவுளிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று நினைத்தேன்.கடவுளும் அங்கு வந்திருந்ததை உணர்ந்தேன்.ஆனால் சிறிது நேரத்தில் நீ கோபப்பட்டே.அப்போது உனக்குக் கடவுளின் உதவி தேவையில்லை என்றும்  பிரச்சினையை நீயே தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டாய் என்பதனையும் உணர்ந்தேன்.அப்போது கடவுளும் வெளியே சென்று விட்டார். கடவுள் இல்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை? அதனால்தான் நானும் வெளியே சென்று விட்டேன்.''

மனதின் நிலை.

2

Posted on : Tuesday, July 24, 2012 | By : ஜெயராஜன் | In :

மனதினால் செய்ய முடியாத விஷயம் நடுநிலையில் இருப்பதாகும்.ஒரு துருவத்திலிருந்து எதிர் துருவத்திற்கு செல்வது மனதின் இயல்பாகும்.நீங்கள் நடு நிலையில் இருந்தால் மனது மறைந்துவிடும்.இது கடிகாரத்தில் உள்ள ஊசலைப் போன்றது.ஊசல் நடு நிலையில் நின்று விட்டால் கடிகாரம் நின்று விடுகிறது.நடு நிலையில் நிற்பதே தியானம்.
இந்த மனம் அதிக தூரத்தில் உள்ளதையே நாடுகிறது.அருகாமை உங்களுக்கு சலிப்பைத் தருகிறது.தூரத்தில் உள்ளது நம்பிக்கை தருகிறது.கனவைத் தருகிறது.மிகவும் வசீகரமாக இருக்கிறது.நீங்கள் அந்தக் கோடிக்குப் போய்விட்டால் ,நீங்கள் புறப்பட்ட இடம் மீண்டும் அழகாகக் காட்சி அளிக்கிறது.
மனம் முரண்பாடுகள் நிறைந்தது.மனம் முழுமையாக இருக்க முடியாது. யாரையாவது நீங்கள் நேசிக்கும்போது உங்கள் வெறுப்புத் தன்மையை அடக்கி வைக்கிறீர்கள்.நேசித்தல் முழுமையாக இல்லை.உங்கள் வெறுப்பு எந்நேரமும் வெளிப்படலாம்.நீங்கள் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள்.எல்லா உறவுகளும் விருப்பும் வெறுப்பும் உடையவை.
மனம் உங்களுக்கு எதிரானதற்கே செல்ல வற்புறுத்தும்.எதிரானதற்குச் செல்லாதீர்கள்.மையத்தில் நின்று இந்த மனம் செய்யும் ஏமாற்று வேலையைக் கவனியுங்கள்.இந்த மனம் உங்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது.

புள்ளியியல்

0

Posted on : Tuesday, July 24, 2012 | By : ஜெயராஜன் | In :

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் போர் விமானங்கள் மாஸ்கோ நகரத்தின் மீது அடிக்கடி குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தன.போர் விமானங்கள் வரும் சப்தம் கேட்டவுடன் மக்கள் எல்லோரும் அருகில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு ஓடிப் பதுங்கிக் கொள்வர்.ஒரே ஒருவர் மட்டும் இருப்பிடத்தை  விட்டு அசைவதில்லை.அவர்தான் ஒரு புள்ளியியல் துறை (statistics)பேராசிரியர்.''உங்களுக்கு அவ்வளவு தைரியமா?''என்று மக்கள் கேட்டனர்.அவர் சொன்னார்,''மாஸ்கோவில் ஏழு மில்லியன் மக்கள் இருக்கிறார்கள்.அந்த ஏழு மில்லியன் மக்களில் ஒருவரான என்மீது குண்டு விழும் வாய்ப்பு மிகக் குறைவு.இது புள்ளியியலின் தத்துவம்.(theory of probability)''ஒரு நாள் போர் விமானங்கள் வந்தபோது அதிசயமாக எல்லோருக்கும் முன் அவர் வேகமாக ஓடி வந்து ஒளிந்து கொண்டார்.மக்கள் அவரிடம்,''என்ன பயந்துவிட்டீர்களா? என்ன ஆயிற்று உங்கள் தத்துவம்?''என்று கிண்டலாய்க் கேட்டனர்.அப்போது கூட அவர் விட்டுக் கொடுக்காமல் சொன்னார்,''இல்லை,இந்த குண்டுகள்  புள்ளியியல் தத்துவத்தைப் பின் பற்றுவதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.நேற்று மாஸ்கோவில் ஏழு மில்லியன் மக்களும் ஒரு யானையும் இருந்தார்கள்.ஆனால் நேற்று இரவு நடந்த விமானத் தாக்குதலில் அந்த ஒரே ஒரு யானை இறந்துவிட்டது.மக்கள் யாரும் இறக்கவில்லை.''

உடனே வாங்க!

0

Posted on : Monday, July 23, 2012 | By : ஜெயராஜன் | In :

டாக்டருக்கு நடு ராத்திரியில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.பேசியவர் மிகவும் பதட்டத்தோடு சொன்னார்,''டாக்டர்,என் மனைவி வயிற்று வலியால் ரொம்பவும் துடிக்கிறாள்.நான், இது குடல் புண் நோயாய்த்தான் (appendicities) இருக்கும் என நினைக்கிறேன்.எனவே உடனே வாங்க,டாக்டர்,''டாக்டருக்கு இவர் ஏற்கனவே நன்கு தெரிந்தவர்தான். மேலும் அவர் குடும்பத்தில் அனைவருக்கும் சிகிச்சை செய்துள்ளார்.எனவே அவர்,''நான் உடனே புறப்பட்டு வருகிறேன்.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.ஏனெனில் நான் உங்கள் மனைவிக்கு குடல் புண் சம்பந்தமான அறுவை சிகிச்சை ஏற்கனவே செய்து எடுத்து விட்டேன்,'' என்றார்.இந்த ஆள் சொன்னார்,''ஐயோ டாக்டர், இப்போது எனக்கு வேறு ஒருத்தி அல்லவா மனைவியாய் இருக்கிறாள்.''
******
நீதிபதி:(குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்து)உன்னை எங்கோ பார்த்திருக்கிறேனே!
குற்றம் சாட்டப்பட்டவர்:நீங்கள் சொல்வது சரிதான் அய்யா,நான் உங்கள் மனைவிக்கு வயலின் சொல்லிக் கொடுத்தேன்.
நீதிபதி:அவனா நீ, சரி இந்த வழக்கில் உனக்கு இருபது ஆண்டு சிறை தண்டனை.
******
மனைவி:என்னிடம் நிறையப் பணம் இருக்கிறது என்பதற்காகத்தானே என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?
கணவன்:இல்லை அன்பே,என்னிடம் பணம் இல்லை என்பதனால்தான் உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன்.
******
புத்தகக் கடையில் ஒருவர்.கடைக்காரரிடம்,''என் பெண்ணுக்கு பயணம் போகும்போது படிக்க நல்ல புத்தகம் ஒன்று கொடுங்கள்.ஆனால் அதில் அரசியல்,சமூகப் பிரச்சினைகள்.பாலியல்,வன்முறை போன்றவை எதுவும் இருக்கக் கூடாது.''என்று கேட்டார்.கடைக்காரர் உடனே ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார்.வந்தவர்,''என்ன சார்,ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்?''என்று கேட்க,கடைக்காரர் சொன்னார்,''நீங்கள் கேட்டபடி இந்த ஒரு புத்தகம் தான் உள்ளது.''
******

நண்பர்கள் கிடைக்க

0

Posted on : Monday, July 23, 2012 | By : ஜெயராஜன் | In :

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?
1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.
2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.
3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.
4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.
5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.
6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.
7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.
8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.
9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.
10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.

உயில்

0

Posted on : Saturday, July 21, 2012 | By : ஜெயராஜன் | In :

நூறு வயதான பெண்மணி ஒருவர் இறந்துவிட்டார்.உறவினர்கள் கூடி விட்டனர்.அவர் எழுதி வைத்திருந்த உயில் எடுத்து வாசிக்கப்பட்டது.அந்தப் பெண்ணின் படுக்கை அறையில் இருந்த பெரிய மரப்பெட்டி அதுவரை அவரைக் கவனித்து வந்த டாக்டருக்கு உரித்தாகும் என்று அந்த அம்மையார் உயிலில் குறிப்பிட்டிருந்தார்.டாக்டருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டரும் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்.எல்லோர் முன்னிலையிலும் பெட்டி திறக்கப்பட்டது.பெட்டிக்குள்  .......
இத்தனை  ஆண்டுகளாக  டாக்டர்  அந்தப் பெண்ணுக்கு  எழுதிக்  கொடுத்த  அத்தனை  மருந்துச்  சீட்டுகளும்  வாங்கப்பட்ட மருந்து மாத்திரைகளும் முழுமையாக பத்திரமாக இருந்தன.

அவநம்பிக்கை

0

Posted on : Saturday, July 21, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெரிய வியாபாரி.வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து பெரும் லாபம் சம்பாதிப்பவர் அவர் அவ்வப்போது வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வதுண்டு.ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.அந்த ஆள் பார்ப்பதற்கே படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார்.பெரிய மீசை.தலை வழுக்கையுடன் ஒற்றைக் கண்ணனாய் இருந்தார்.ஆள் மிக பலசாலியாகவும்  உடலில் ஆங்காங்கே காயம் பட்ட வடுக்களுடனும் இருந்தார்.வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் தெரியவில்லை.''பெட்டகக் காப்பாளர் சொன்னார்,''பரவாயில்லை,கொடுங்கள்.நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.ஆனால் ஒன்று.உங்கள் அறைக்கு வந்திருப்பவரும் சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''
நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.ஏற்றுக் கொள்வதுமில்லை.

நிம்மதியும் மகிழ்ச்சியும்

0

Posted on : Friday, July 20, 2012 | By : ஜெயராஜன் | In :

காட்டில் முனிவர் ஒருவர் இருந்தார்.அவரது புகழறிந்த மன்னன் காட்டுக்குச் சென்று அங்கு ஒரு குடிசையில் காலணி கூட இல்லாத முனிவரைப் பார்த்து அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இரு காலணிகளைக் கொடுத்தார். முனிவர் சிரித்தார்.
முனிவர்:அரசே,இக்காலணி அழகாக உள்ளது.இதைப் பார்க்கும் யாருக்கும் திருடத் தோன்றும் எனவே இதைப் பாதுகாக்க ஒரு காவலாளி வேண்டுமே.
அரசன்:நான் ஒரு காவலாளியை நியமிக்கிறேன்.
முனிவர்:இந்த அழகான காலணியை அணிந்து கொண்டு நடந்து சென்றால் எல்லோரும் சிரிப்பார்களே! எனவே நான் செல்ல ஒரு குதிரை வேண்டும்.
அரசன்:ஒரு குதிரையையும்,அதைப் பாதுகாக்க ஒருவனையும் நியமிக்கிறேன்.
முனிவர்:இந்தக் குடிசையில் குதிரையையும் பாதுகாவலனையும் தங்க வைக்க முடியாதே!
அரசன்:ஒரு அழகிய பங்களா கட்டித் தருகிறேன்.
முனிவர்:பங்களாவில் வாழ்ந்தால் எனக்குப் பணிவிடை செய்ய ஒரு பெண் வேண்டுமே!
அரசன்:ஒரு பெண்ணையும் நியமிக்கிறேன்.
முனிவர்:பின்னர் எனக்குக் குழந்தைகள் பிறக்குமே!
அரசன்:உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேலையாட்களை நியமிக்கிறேன். 
முனிவர்:குழந்தைகள் பிறந்தால் அவர்கள் மீது அன்பு வைப்பேன்.அவர்களில் யாராவது இறந்தால் யார் அழுவார்கள்?
அரசன்:வேறு யார் அழுவார்கள்?நீங்கள் தான் அழ வேண்டும்.
முனிவர்:அரசே,பார்த்தீர்களா?உங்களிடம் காலணி வாங்கினால் இறுதியில் அழத்தான் வேண்டும் என்பதை நீங்களே இப்போது ஒத்துக் கொண்டீர்கள்.இப்போது இந்தக் காட்டில் நான் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.குழந்தைகளுக்காக அழவோ.பொறுப்புகளைச் சுமக்கவோ நான் தயாராக இல்லை.
அரசனும் புரிந்து கொண்டு அரண்மனை திரும்பினான்.
வாழ்வில் நமக்குப் பல ஆசைகள்.அடுத்தவர் போல வசதியாக இல்லையே என்ற ஏக்கம்.அப்பொருள் நம்மிடம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நினைப்பு.ஆனால் எந்தப் பொருளும் கடைசியில் துன்பத்தையே தரும்.நாம் தேடும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்காது.  

அன்பின் வலிமை.

1

Posted on : Friday, July 20, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு குழந்தை ஒரு நாளைக்கு நானூறு முறை சிரிக்கிறது.பத்து வயதுக்கு மேல் ஒருவன் பதினேழு முறைதான் சிரிக்கிறான்.வயது வந்தவர்கள் சிரிப்பது மிகக் குறைவு.ஏன்,நீங்கள் சிரித்தால்உங்கள் சொத்து எதுவும் கொள்ளை போய்விடுமா?சிரிப்பதால் எதை இழக்கிறீர்கள்?நீங்கள் சிரிக்கும்போது அடுத்தவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.நாம் இன்னும் அதிகம் சிரிக்க வேண்டும்.தினசரி காலை எழுந்தவுடன் கண்ணாடியில் உங்கள் உருவத்தைப் பார்த்து ஒரு பெரிய புன்சிரிப்பினைக் காட்டுங்களேன்.
உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களே தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்.சில ஆயிரம் பேர்தான் குற்றங்களை இழைக்கிறார்கள். ஆனால் இவர்களால் முழு உலகமும் பாதிக்கப்படுகிறது. இந்த விதி இதற்கு எதிர்மறையானதுக்கு ஒத்து வராதா?குறைந்த அளவு மோசமானவர்களால் உலகம் பாதிப்படையுமானால் குறைந்த சிலரின் அன்பு இவ்வுலகை மகிழ்ச்சிக்கு மாற்றிச் செல்லாதா?நம்மில் சிலர்,சில ஆயிரம் பேர் ஏன் மிக்க அன்புடன் இந்த உலகின் மீது அக்கறை கொண்டு முழுமையான மகிழ்ச்சியை கொண்டு வரக் கூடாது?
                                                                ---ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

அறிந்து கொள்வீர்.

0

Posted on : Thursday, July 19, 2012 | By : ஜெயராஜன் | In :

விடுதலைக்குப் பிறகு வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்பின் விலை 3.5அணா.21.11.47ல் வெளியிடப்பட்ட இதில்,'ஜெய்ஹிந்த்'என்று பொறிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப்பட்டது,1.7.1852ல்.விலை அரை அணா.
******
கண் இமைகள்,வியர்வைத் துளிகள் கண்ணுக்குள் விழாமல் காக்கின்றன.
******
'வைரஸ்'என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் 'விஷம்'என்று பொருள்.
******
துருக்கி நாட்டின் தலை நகரான இஸ்தான்புல்லில்தான் உலகிலேய அதிகமான மசூதிகள் உள்ளன.அவற்றின் எண்ணிக்கை 444.
******
'ஆல்காக்கள்'என்ற சிவப்பு நிற கடல் தாவரம் அதிக அளவில் உள்ளதால்தான் செங்கடல் சிவப்பாகத் தெரிகிறது.
******
நமது பூமி சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கிரகம்.விண்ணிலிருந்து பார்த்தால் பூமி நீல நிறத்தில் தெரியும்.யுரேனஸ் கிரகம் நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும்.
******
செவ்வாய் கிரகத்துக்கு என்று தனியாக ஒரு சந்திரன் உண்டு.அது தினமும் இருமுறை தோன்றும்.அதன் பெயர் டைமோஸ்.
******
இந்தியாவில் முதல் முதலாக பஞ்சாயத்துத் தேர்தல் நடந்த ஆண்டு--1926
******
சிலி நாட்டிலுள்ள கலாமா என்ற இடத்தில் இதுவரை மழை ஒரு துளி கூட விழுந்ததில்லை.உலகிலேயே மிக வறண்ட பகுதி இதுதான்.
******
கி.மு.700 ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட தட்சசீலப் பல்கலைக் கழகம் தான் உலகிலேயே முதலில்  உருவான பல்கலைக் கழகம்.இங்கே பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்தார்கள்.சுமார் அறுபது துறைகள் இதில் இயங்கின.
(******

பொன்மொழிகள்-30

0

Posted on : Thursday, July 19, 2012 | By : ஜெயராஜன் | In :

செல்வம் பல நண்பர்களைக் கொண்டு வருகிறது.
துன்பம் அவர்கள் எத்தகையவர்கள் என்று காட்டுகிறது.
******
குற்றத்தை சாமர்த்தியத்தால் அழிக்க முடியாது.
அனுதாபத்தால் அழித்து விடலாம்.
******
பந்தயம் கட்டும் பழக்கம்,
பேராசையின் குழந்தை;பெரிய இடரின் தந்தை.
******
அதிக ஊக்கமும் குறைந்த வேலையும் உடையவர்களே,
சண்டைக்காரர்களாக இருக்கிறார்கள்.
******
உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்.
தன்னை அறிந்தவன் ஆணவம்  கொள்ள மாட்டான்.
******
'அதிர்ஷ்டம்'தராததை 'திருப்தி'யால் பெறலாம்.
******
நீதியைவிட நியாயமாக நடந்து கொள்வதற்குப் பெயர் அன்பு.
******
மனிதர்கள் சில சமயம் உண்மை மீது இடறி விழுவதுண்டு.
ஆனால் பெரும்பாலானோர் எழுந்து நின்று ஏதும்
நடவாதது போல அவசரமாகப் போய்விடுகிறார்கள்.
******
உங்களது கௌரவம் உங்கள் நாக்கு நுனியில் உள்ளது.
******
விரோதம் என்பது மறைந்திருக்கும் வியாதி.
******
மன நிறைவு என்பது இயற்கையான செல்வம்;
ஆடம்பரம் என்பது வலிந்து தேடும் வறுமை.
******
ஒரு தீமையை ஊட்டி வளர்ப்பது
இரண்டு குற்றக் குழந்தைகளை உற்பத்தி செய்யும்.
******
அலங்காரம் செய்வதனால் அகங்காரம் வளரும்;
ஆடம்பரம் செய்வதனால் ஆணவம் ஓங்கும்.
எளிமையின் மூலமே எதையும் வெல்லும் மனத்திண்மை வளரும்.
******
எச்சரிக்கை உணர்வு ஒருபோதும் தவறுக்கு துணை நிற்பதில்லை.
******

ஏன் அழ வேண்டும்?

0

Posted on : Wednesday, July 18, 2012 | By : ஜெயராஜன் | In :

ஞானி சுவான்சுவின் மனைவி இறந்துவிட்டார்.அவருடைய நண்பர் ஹு சு துக்கம் விசாரிக்க வந்தார்.அப்போது சுவான்சு மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடிக் கொண்டிருந்தார்.ஒரு பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தாளம் வேறு!ஹு சுவுக்கு இக்காட்சியைப் பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது.''என்ன அவமானம்?என்ன இருந்தாலும் அவள் உன் மனைவி.வாழ்நாள் முழுவதும் உனக்காக வாழ்ந்தவள்..உனக்கு அழுகை வரவில்லைஎன்றால் அது ரொம்பக் கேவலமாகத் தெரிகிறது.நீ பாட்டுக்கு ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறாயே.இது உனக்கே நன்றாக இருக்கிறதா?''என்று சுவான்சுவைப் பார்த்துக் கேட்டார். சுவான்சு சிரித்துக் கொண்டே சொன்னார்,''என் அன்பிற்குரிய மனைவி இறந்தவுடன் எனக்கு மிகுந்த துக்கம் ஏற்பட்டது.விழிகளில் கண்ணீர் கரை புரண்டு வந்தது.ஆனால் உடனே எனக்கு ஒரு உண்மை ஞாபகம் வந்தது.இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணம் அடைவது தவிர்க்க இயலாதது.இது இயற்கையின் மகத்தான நியதி.என் பாச மனைவி தற்போது இந்த வாழ்விலிருந்து ஓய்வெடுத்துத் தூங்குகிறாள்.அவள்
என் வருகைக்காக அமைதியாகக் காத்திருக்கிறாள். நான் ஏன் கதறிக்கொண்டும் அழுது கொண்டும் ஆர்ப்பாட்டம் செய்தும் அவள் அமைதியை கெடுக்க வேண்டும்?நான் அப்படி செய்தால் எனக்கு இயற்கையின் உன்னத நியதிகள் எதுவும் தெரியாது என்று பொருள்.''

புனிதன்

0

Posted on : Wednesday, July 18, 2012 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் தங்களை அறிவாளிகள் போல உணர்ந்து கொள்ள வைக்கும் கேள்விகளைக் கேட்கிறார்கள்.அவர்கள் பதில் பெறுவதற்காக கேள்விகள் கேட்பதில்லை.மாறாகத் தமது அறிவைக் காட்டிக் கொள்ளவே கேட்கிறார்கள்.ஒரு அறிவார்ந்த கேள்வியைக் கேட்கும்போது நீங்கள் பிரமாதமாக உணருவீர்கள்.
யாருமே மனந்திறந்து தான் யாரெனக் காட்டிக் கொள்ளத் தயாராயில்லை. ஏனெனில் பல நூற்றாண்டுகளாக விஷயங்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றை மறைத்தாக வேண்டும்.யாருமே தாம் வெறுத்து ஒதுக்கப்படுவதை விரும்புவதில்லை.மேலும் புகழ்ந்துரைக்கப்பட விசயங்களும் உள்ளன.இவற்றை நீங்கள் காட்டிக் கொண்டாக வேண்டும். இவை உங்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பது பற்றிக் கவலையில்லை.
சமுதாயம் புகழ்ந்துரைக்கும் விஷயங்கள் உங்களிடம் இல்லையென்றால் இருப்பதுபோல் பாவனை செய்கிறீர்கள்.இந்த பாவனை செய்பவர் சில சமயங்களில் உண்மையான நபரைவிட உண்மையாகத் தோற்றமளிப்பது  சாத்தியமே.ஏனெனில் நிஜ மனிதர் ஒத்திகை பார்ப்பதில்லை.பாவனை செய்பவரோ ,செய்து பழகுகிறார்.தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக் கொள்கிறார்.உள்ளே அவர்கள் எதிர்மறையான மனிதர்களே.கிரிமினல் குற்றவாளிகள் புனிதர்கள் ஆகிறார்கள் .நீங்கள் புனிதர்களிடம் எதிர்பார்க்கும் மதிப்பீடுகளை,ஒழுக்கங்களைப் பயிற்சி செய்தால் போதும்.உங்களுக்குள் ஓர் ஆயிரக்கணக்கான குற்றம் சார்ந்த குணாதிசயங்களை நீங்கள் கொண்டிருப்பது பற்றி யாருக்குக் கவலை?மக்கள் உங்கள் முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.யாரும் உள்ளுக்குள்ளே ஆழத்தில் குதிப்பதில்லை.
புனிதனாக இருப்பது போல நடிக்கும் ஒருவனால் அதை விரும்பி ரசிக்க முடியாது.ஏனெனில் அவனது இயல்பு அதற்கு எதிராக இருக்கும்.அவன் தன்னுள்ளே ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பான்.எனவே அவனால் மற்றவர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதைப் பார்க்க முடியாது.அவன் எப்போதும் சோகமாகவே இருப்பான்.

பந்தயம்

0

Posted on : Tuesday, July 17, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தாய் தன் பிள்ளையிடம் சொன்னாள்,''ஒரு பந்தயம்,...ஒரு நாள் முழுவதும் உன் இரண்டு கையாலேயும் வாயை பொத்திக் கொண்டு பேசாமல் இருந்தால் உனக்கு நூறு ரூபாய் பரிசு தருவேன்.''
மகன் சொன்னான்,''அட போம்மா,எப்ப பார்த்தாலும் அப்பா ஜெயிக்கிற மாதிரியே பந்தயம் போடுறீங்க.''
******
ஒருவர் மிகப் பெருமையாக சொன்னார்,''நான் சின்னப் பையனாக இருந்தபோது எங்க அப்பா என்னை கன்னுக்குட்டின்னுதான் கூப்பிடுவார்.''
நண்பர் கேட்டார் ,'இப்போ எப்படிக் கூப்பிடுகிறார்?''
''எருமை மாடுன்னு கூப்பிடுகிறார்.''
******
சங்கீத வித்வான் நண்பரிடம் புலம்பினார்,''தொழில் முன்ன மாதிரியில்ல. ரொம்ப வித்தியாசமாய் போய்க்கிட்டிருக்கு.''நண்பர் கேட்டார்,'கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.'வித்வான் சொன்னார்,''முன்னெல்லாம் நான் பாடினால் ரசிகர்கள் தான் எழுந்து போவார்கள்.இப்போது பக்க வாத்தியக்காரனே எழுந்து போய் விடுகிறான்.''
******
''எதுக்கு சேலையில முடிச்சுப் போட்டிருக்கீங்க?''என்று ஒரு பெண்ணை அவர் தோழி கேட்டார்.அந்தப்பெண் சொன்னார்,''கடிதத்தை மறக்காமல் தபால் பெட்டியில்  போட்டு விட வேண்டும் என்று என் கணவர் சொல்லி அனுப்பினார்.ஞாபகத்துக்காக முடிச்சுப் போட்டு வைத்தேன்..''
தோழி கேட்டார்,'சரி,கடிதத்தை தபால் பெட்டியில் போட்டு விட்டீர்களா?'
அந்தப்பெண் சொன்னார்,''அதெப்படி முடியும்.என் கணவர் தான் கடிதத்தையே என்னிடம் கொடுக்க மறந்து விட்டாரே!''
******
                                                ---தென்கச்சி சுவாமிநாதன்.

துணைக்கு ஆள்

2

Posted on : Tuesday, July 17, 2012 | By : ஜெயராஜன் | In :

''வீட்டிலே என் மனைவி எப்போதும் தகராறு செய்கிறாள்.நிம்மதியே இல்லை,''என்று ஒருவன் நண்பனிடம் புலம்பினான்.நண்பன் சொன்னான்,''அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திட்டினால் அடுத்தவள் வீட்டிற்கு போய்விடுவேன்.எனக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.''இவனும் இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று நினைத்து இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான்.இதை அறிந்த முதல் மனைவி அவனை வீட்டை விட்டு துரத்தி விட்டாள்.உடனே இரண்டாவது மனைவியிடம் சென்றான்.ஏற்கனவே திருமணம் ஆனதை சொல்லாமல் இவளைக் கல்யாணம் செய்து கொண்டது தெரிந்து இவளும் அவனை வீட்டிற்குள் விடவில்லை.அவன் இப்போது நடுத்தெருவில்.புலம்பியபடியே அவன் கோவிலுக்குப் போய் அங்கு ஒரு ஓரமாகப் படுத்தான்.அப்போது பக்கத்தில் ஒருவன் புலம்பிக் கொண்டிருந்தான்.அவனை உற்றுப் பார்த்த போதுதான் அவன் இவனுடைய நண்பன்தான் என்று தெரிந்தது.''என்னடா,நிம்மதியா இருந்த நீயும் இங்கே இருக்காயே?''என்று கேட்க அவன் சொன்னான்,''என்னையும் இரண்டு பேரும் வெளியே அனுப்பி விட்டனர்,''என்றான்.''பின் ஏன் எனக்கு அந்த ஆலோசனை சொன்னாய்?''என்று இவன் கேட்க அவன் சொன்னான்,''நான் அடிக்கடி பிரச்சினை காரணமாக இங்குதான் வந்து படுத்திருப்பேன்.எனக்கு தனியாகப் படுத்திருக்க பயமாக இருப்பதால் துணைக்கு ஆள் தேடினேன்.அப்போதுதான் நீ அகப்பட்டாய்.''

எடுக்கவோ,கோர்க்கவோ?

0

Posted on : Monday, July 16, 2012 | By : ஜெயராஜன் | In :

மகா பாரதத்தில் கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும்   சொக்கட்டான்   ஆடிக் கொண்டிருந்தபோது,துரியோதனன் வரவே பானுமதி எழ,தான் தோற்கப்போகிறோம் என்று பயந்து அவள் எழுகிறாள் என்றெண்ணி கர்ணன் அவள் மேகலையைப் பிடித்திழுக்க முத்தெல்லாம் தரையில் சிதற ,துரியோதனன்,''எடுக்கவோ,கோர்க்கவோ?''என்று கேட்ட கதை அனைவருக்கும் தெரியும்.இந்தக் கேள்வியில்தான் ஒரு சந்தேகம்.துரியோதனன் கர்ணனிடம் இருந்த நட்பின் காரணமாக சிதறிய முத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து பின் அதைக் கோர்த்து ஆபரணமாக்கும் வேலையை அரண்மனையில் இருந்த யாரிடமாவது  கொடுத்திருக்கலாம் அல்லவா?வெறுமே ,''எடுக்கவா?''என்ற கேள்வியோடு முடித்திருக்கலாமே?கூடுதலாக ஏன் ''கோர்க்கவா?''என்று கேட்டான்.இந்த சந்தேகம்  நிறையப் பேருக்கு வந்தது.அப்போது அங்கு வந்த சகாதேவனிடம் நடந்ததைக் கூறி விளக்கம் கேட்டனர்.சகாதேவன் சொன்னது:
''ஒருவனுக்கு பயம் அதிகம் வந்து விட்டால் அவன் கை,கால் நடுங்கும்.அதேபோல ஆத்திரப்படுபவனுக்கும் கை கால் நடுங்கும்,உதறும். இந்த சம்பவத்தில் துரியோதனன் தவறாக எண்ணிவிடுவானே என்ற பயத்தில் கர்ணனுக்கும்,பானுமதிக்கும் கை,கால் நடுங்குது.துரியோதனனுக்கு ஆத்திரம் ஏற்பட்டிருந்தால் அவனது கை,காலும் நடுங்கியிருக்க வேண்டும்.ஆனால் அவன் நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தான்.என்ன காரணம்?அவன் தன் மனைவியையும்,நண்பனையும் சந்தேகப் படவில்லை.முத்துக்களைக் கோர்க்க கை நடுங்கக் கூடாது.அவனுக்கு ஆத்திரம் இல்லை.நம்பிக்கை இருக்கிறது.அவன் கை நடுங்கவில்லை.எனவே அவனால் முத்துக்களை எடுக்கவும் முடியும்;கோர்க்கவும் முடியும்.அதனால்தான் அவன்   'கோர்க்கவோ' என்ற கேள்வியையும் சேர்த்துக் கேட்டிருக்கிறான்.''
                                                 --தென்கச்சி சுவாமிநாதன் .

பிறர் சொல்

0

Posted on : Monday, July 16, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு காட்டில் ஒரு காகம் இருந்தது.அதன் அலகு சற்று வளைந்திருந்தது. அதனால் அந்தக் காக்கைக்குத் தான் அழகில்லை என்ற எண்ணம் இருந்தது.பிற காக்கைகள் தன்னைக் கேலியாகப் பேசுவதுபோல அதற்கு தோன்றியது.எந்தக் காக்கையுடனும் அது பழகுவதில்லை.ஒரு நாள் புதிதாக ஒரு காக்கை அப்பகுதிக்கு வந்தது.அதன் அலகும் வளைந்துதான் இருந்தது.ஆனால் அக்காக்கை மிக மகிழ்ச்சியாக பறந்து திரிந்தது.இந்த காக்கை மட்டும் எப்படி இவ்வளவு அசிங்கமாக இருந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்தக் காக்கையிடம் சென்றது.அப்போதுதான் தெரிந்தது அந்தக் காக்கைக்கு காது கேட்காது என்பது. அப்போது இந்தக் காக்கைக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.அதன்பின் இந்தக் காக்கையிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டது.இப்போது எந்தக் காக்கையைப் பற்றியும் அது கவலைப் படுவதில்லை.எல்லோரிடமும் அது நன்றாகப் பேச ஆரம்பித்தது.சில நாட்களில் அந்தப் பகுதிக்குத் தலைவராகி விட்டது.
ஒரு நாள் அந்த காக்கைக் கூட்டத்தின் பெருந்தலைவரான காக்கையிடம் அது பேச ஒரு வாய்ப்பு கிட்டியது.அப்போது பெருந்தலைவர் கேட்டது,''நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,நீ முன்பெல்லாம் கோழையாய் யாருடனும் பழகாமல் இருந்தாயாமே?இப்போது எப்படி இங்கு புகழ் பெற்றாய்?''இந்த காகம் பதில் சொன்னது,''நான் மற்றவர்கள் பேசும் கேலிக்கு செவிடாய் இருக்கப் பழகிக் கொண்டேன்.அடுத்தவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கேலி அவதூறுகளுக்கு நாம் செவி சாய்த்தாலொழிய அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை.பிறர் சொல்லுக்கு பயப்படுவதை உதறித் தள்ளி விட்டேன்.இப்போது எனக்கு எப்போதும் உற்சாகம் தான்.''என்றது பெரிய காக்கையும் அதைப் பாராட்டியது.அப்போதுதான் இக்காக்கை கவனித்தது,.பெரிய காக்கையின் அலகு தன் அழகை விட மோசமாக வளைந்திருந்தது.

இலவசம்

1

Posted on : Sunday, July 15, 2012 | By : ஜெயராஜன் | In :

புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்.உடனே அமைச்சர்,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார். தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம்.இந்தக் காரின் விலை ஒரு ரூபாய். ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார்.உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,''என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து, ''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.''என்றாரே பார்க்கலாம்!. தொழில் அதிபரே அசந்து விட்டார்.அரசியல்வாதியா,கொக்கா?

மனது மாறும்.

0

Posted on : Sunday, July 15, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு முனிவரிடம் வேதம் கற்க ஒரு அரசன் வந்தான்.யாரும் அங்கு மதிக்கவில்லையென அவனுக்குக் கோபம்.குருகுலத்தில் ஆசிரியர்,மாணவர் என்ற பாகுபாடு தவிர வேறு எதுவும் கிடையாது.அரசனும் இங்கே மாணவனே என்று முனிவர் எடுத்துரைத்தார்.''நீங்கள் சொல்வதைக் கேட்பதால் இவர்கள் மனம் மாறிவிடுமா?''என்று மன்னன் கேட்டான்.மாறும் என்று முனிவர் சொல்ல அதை நிரூபிக்க வேண்டும் என்றான் மன்னன்.''இந்த அரசன் ஒரு அடி முட்டாள்.படித்தவர்களை மதிக்கத் தெரியாதவன்.கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்,''என்று மற்ற மாணவர்களைப் பார்த்து முனிவர் சொல்ல மாணவர்கள் செய்வதறியாது நின்றனர்.ஆனால் அரசனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.வாளை உருவிக்கொண்டு முனிவரை நோக்கிப் பாய்ந்தான்.''உன்னை யாரும் எதுவும் செய்து விடவில்லையே!பிறகு ஏன் இந்தக் கோபம்?''என்று அமைதியாக கேட்டார் முனிவர்.''அப்படி வேறு ஆசை உள்ளதா?நீங்கள் பேசிய வார்த்தைகள் போதாதா?''என்று கத்தினான் அரசன்.      அப்படியானால் நான் சொன்ன வார்த்தைகள் உங்கள் மனதில் உள்ள உணர்ச்சிகளை மாற்றிவிட்டன.அதேபோல மாணவர்கள் மனதிலும் மாற்றிவிடும் என்று பயந்தீர்கள்.எனவே நான் கூறுவதைக் கேட்கும் மனது மாறும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?''என்று அமைதியாகக் கேட்டார் முனிவர்.தவறை உணர்ந்தான் அரசன்.

மாபாவி.

0

Posted on : Saturday, July 14, 2012 | By : ஜெயராஜன் | In :

நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்.ஒரு முறை அவர் மதுரையில் கோவலன் கண்ணகி நாடகம் போட்டார்.நாடகத்தில் கண்ணகி கோவலனைப் பார்த்துப் பாடுகிறார்:
''மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு, மன்னா   இன்று போகாதீர்.''
நாடகம் பார்க்க வந்திருந்தோர் கூச்சலிட ஆரம்பித்தனர்,''நம் ஊருக்கு வந்து நம் ஊரையே பழித்துப் பாடுவதா?''என்பதே அவர்களது ஆதங்கம்.சுவாமிகள்  உடனே மேடைக்கு வந்து முதலில் எல்லோரையும் அமைதிப்படுத்தி விட்டு பின் பேசினார்,''என்னுடைய பாடலை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.'மா' என்றால் திருமகள் என்று பொருள்.'பா'என்றால் கலைமகள் என்று பொருள்.'வி'என்றால் மலைமகள்.மாபாவியோர் என்றால் திருமகளும்,கலைமகளும்,மலைமகளும் ஆகிய மூவரும் என்று பொருள். இந்த மூன்று பெரும் வாழ்கின்ற பெருமையுடைய மதுரையில் நான் அணிந்து கொள்ளும் இந்த சாதாரண சிலம்பை யார் வாங்குவார்கள் என்ற எண்ணத்துடன் கண்ணகி பாடுவதாக நான் எழுதியுள்ளேன்.மதுரையைப் பழிக்கும்எண்ணம் கொஞ்சம் கூட எனக்குக் கிடையாது.,''இதைக் கேட்ட எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்களாம்.

புள்ளிவிபரம்.

0

Posted on : Saturday, July 14, 2012 | By : ஜெயராஜன் | In :

சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபோது ஒரு சமயம் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுக்களை அடுக்கின.மேலும் அவற்றிற்கு மறுநாளே பதில் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.அலுவலகம் வந்த சர்ச்சில் அனைத்து துறை உயர் அதிகாரிகளையும் வரவழைத்து எதிர்க் கட்சியினரின் கேள்விகளுக்கு தக்கபடி பதிலுரைக்க தேவையான அனைத்துப் புள்ளி விபரங்களையும் தருமாறு கேட்டார்.அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லை.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தயங்கியபடி இருந்தனர்.சர்ச்சில் காரணம் கேட்க தலைமைச் செயலர் சொன்னார்,''ஐயா,எப்படிப் பார்த்தாலும் இந்தப் புள்ளி விபரங்கள் சேகரிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்,''சர்ச்சில் முகத்தில் ஒரு மலர்ச்சி.தலைமைச் செயலர் சொன்னதை மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்திக் கொண்டார்.பின்னர் அதிகாரிகளிடம் ஒன்றும் சொல்லாமல்,''நீங்கள் போகலாம்,''என்று சொன்னார்.அதிகாரிகள் கலக்கத்துடன் ஒன்றும் புரியாமல் அங்கிருந்து நகன்றனர்.மறு நாள் பாராளுமன்றத்தில் சர்ச்சில் ஏகப்பட்ட புள்ளி விபரங்களைக் கூறி எதிர்க் கட்சியினரின் வாயை அடைத்து விட்டார்.தலைமை செயலர் பின்னர் அவரிடம் அதிசயத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டார்,''நேற்று நாங்கள் யாரும் எந்தப் புள்ளி விபரமும் தரவில்லையே!உங்களால் எப்படி இவ்வளவு புள்ளி விபரங்களை எடுக்க முடிந்தது?''சர்ச்சில் சிரித்துக் கொண்டே சொன்னார்,''நீங்கள் தான் அவற்றை எடுக்க இரண்டு வருடம் ஆகும் என்றீர்களே!அதனால் நான் என் விருப்பத்திற்கேற்றார்போல புள்ளி விபரங்களை எடுத்து அடுக்கினேன்.அவை சரியா என்று தெரிந்து கொள்ளவே எதிர்க் கட்சியினருக்கு பல ஆண்டு ஆகுமே!உங்களுக்கே தெரியாதது அவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியும்?''.

தக்கத்திம்

0

Posted on : Friday, July 13, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாட்டுப் புறப் பாடல்.எவ்வளவு அழகாக புனையப் பட்டிருக்கிறது என்று பாருங்கள்.முதலில் அந்தப் பாடலின் சூழல்:
வீட்டுப் பூனை பக்கத்துக் காட்டிலிருந்த ஒரு நரியிடம் நட்புக் கொண்டது.வீட்டில் பூனைக்குக் கிடைக்கும் வசதிகளை கேட்டு அறிந்த பூனைக்கு எப்படியும் அந்த வீட்டுக்கு வர ஆசை.பூனை நரியை வீட்டில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியும் நரியின் தொடர்ந்த வற்புறுத்தலால் வீட்டுக்கு யாரும் இல்லாத நேரம் பார்த்துக் கூட்டி வந்தது.கீழே அதை ஒளித்து வைக்க இடம் இல்லாததால் மொட்டை மாடியில் ஒரு ஓரத்தில் அமர வைத்தது.பின் பூனை மகிழ்ச்சியில் 'மியாவ்,மியாவ்,'என்று கத்தியது.உடனே தன் மகிழ்ச்சியைக் காட்டிட நரியும் ஊளை இட்டது.உடனே அங்கு எல்லோரும் ஓடி வந்து நரியை விரட்டி அடித்தனர்.காட்டிற்கு காயங்களுடன் வந்த நரியை,மற்ற நரிகள் நடந்ததை விசாரித்து அறிந்து இந்தப் பாடலைப் பாடின:
''கூடாதவங்களிடம்  கூடவா சொன்னோம்?''
     'கூடினால் என்ன?'
''கூடங்கள் மாடங்கள் ஏறவா சொன்னோம்?''
     'ஏறினால் என்ன?'
''நாதங்கள் கீதங்கள் பாடவா சொன்னோம்?''
     'பாடினால் என்ன?'
''பாடினதாலே தாளங்கள் மேளங்கள் 
தக்கத்திம்மென விழுந்தனவே!'' 
நீதி:எதைச் செய்தாலும் யோசித்துச் செய்ய வேண்டும்.

பூகம்பம்.

0

Posted on : Friday, July 13, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதருக்கு ஐந்து வயதில் ஒரு பையன் இருந்தான்.அவன் மிகப் பெரிய குறும்பன் அவன் செய்யும் சேட்டைகளுக்கு அளவேயில்லை.ஆனாலும் ஒரே பையன் என்பதால் பெரியவருக்கு அவன் மீது மிகுந்த அன்பு.அந்த ஊரில் பூகம்பம் சில நாட்களுக்குள்  வரும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வந்தது.உடனே பெரியவர் பையனை அழைத்துக் கொண்டுபோய் வெகு தூரத்தில் இருந்த தன் நண்பனிடம் கொண்டு போய் சேர்த்து,''பூகம்பப் பிரச்சினை முடியும் வரை ஒரு பத்து நாட்களுக்கு என் மகன் உன் பாதுகாப்பில் இருக்கட்டும்,''என்று கேட்டுக் கொண்டான்.நண்பனும்,''இந்த உதவி கூட செய்ய மாட்டேனா?''என்று சொல்லியவாறே அநதப் பையனைத் தன் அருகில் வைத்துக் கொண்டார் .பெரியவரும் ஊர் வந்து சேர்ந்தார்.மறுநாளே நண்பரிடமிருந்து பையனைத் திரும்ப அழைத்துப் போகுமாறு தந்தி வந்தது.தொலைபேசியில் நண்பரைத் தொடர்பு கொண்டபோது அவர் அலறிக்கொண்டே சொன்னார்,''நண்பா,உங்கள் ஊருக்கு வரும் பூகம்பத்தைக் கூட இங்கு அனுப்பிவிடு,பரவாயில்லை.ஆனால் உன் மகனை உடனே அழைத்துச்செல்.''

நாயும் துறவியும்

0

Posted on : Thursday, July 12, 2012 | By : ஜெயராஜன் | In :

நாய்களின் சில குணங்கள் துறவிகளின் குணங்களை ஒத்திருக்கிறது:
நாய்கள் எப்போதும் பசித்திருக்கும்.
நாய்கள் எப்போதும் விழித்திருக்கும்.(சிறிது நேரம்தான் தூங்கும்.)
அதற்கென தனி இடம் கிடையாது.
இறந்தால் அதற்கென்று ஒன்றும் கிடையாது.
எஜமான் அடித்தாலும் அவரை விட்டு விலகாது.
பூமியில் தாழ்ந்த இடத்தில்தான் இருக்கும்.
இன்னொருவர் அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டால் வேறு இடம் பார்த்துக் கொள்ளும்.
கடுமையாய் விரட்டினாலும்,பகைமை  பாராட்டாது,நட்புடன் வாலாட்டி வரும்.
ஒரு இடத்தை விட்டுக் கிளம்பினால் அந்த இடத்தைத் திரும்பிப் பார்க்காது.
    இவ்வளவு அருமையான குணங்கள்  உள்ள நாயை நாம்,''அடச்சீ நாயே!'' என்று ஏளனம் செய்கிறோம்.

கைங்கர்யம்

0

Posted on : Thursday, July 12, 2012 | By : ஜெயராஜன் | In :

திருப்பதியில் பெருமாளுக்கு பூக்கட்டும் திருப்பணி செய்தவர் அனந்தாழ்வார்.அனந்தன் என்றால் பாம்பைக் குறிக்கும்.ஆதிசேடன் பெயர் தாங்கிய அடியவரே அனந்தாழ்வார்.ஒரு நாள் பூக்களைத் தொடுக்கும்போது பாம்பு ஒன்று அவர் விரலைத் தீண்டியது.அனால் அவர் பதறாது தன் பணியினைத் தொடர்ந்தார்.பூமாலை கட்டி பெருமாள் தோளில் சாத்தப்போனார்.பெருமாள் பதறினார்,''அனந்தா,பாம்பு உன்னைக் கடித்துள்ளது.''நிதானமாக அனந்தாழ்வார் சொன்னார்,''ஸ்வாமி,கடித்த பாம்புக்கு விஷம் அதிகம் என்றால் கைங்கர்யம் அங்கே.கடியுண்ட பாம்புக்கு(இந்த அனந்தருக்கு)விஷம் அதிகமானால் கைங்கர்யம் இங்கே.இதில் எனக்கு என்ன கவலை?''

என்ன செய்ய?

0

Posted on : Wednesday, July 11, 2012 | By : ஜெயராஜன் | In :

விழுங்க விரும்பினால்
    கோபத்தையும் துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.
கொடுக்க விரும்பினால்
    பிறருக்குப் பயன்படுவதைக் கொடுங்கள்.
உடுக்க விரும்பினால்
    உயர்வையும்,உண்மையையும் உடுத்துங்கள்.
வாங்க விரும்பினால்
    பெரியவர்களின் ஆசியை வாங்குங்கள்.
அடிக்க விரும்பினால்
    மன இச்சையை  அடித்து வீழ்த்துங்கள்.
களைய விரும்பினால் 
    துர் பழக்கங்களைக் களைந்து விடுங்கள். 

ஞானகுரு.

0

Posted on : Wednesday, July 11, 2012 | By : ஜெயராஜன் | In :

ஞானி ஒருவர் தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய்தான் எனக் கூறி அதை விளக்கினார்:
ஒரு நாள் குளக்கரை அருகே அமர்ந்திருந்தேன்.ஒரு நாய் தாகத்துடன் நீர் அருந்த வந்தது.வேகமாய் நீர் குடிக்கச் சென்ற நாய் குரைத்துக் கொண்டே சட்டெனப் பின் வாங்கியது.சிறிது நேரம் இவ்வாறே திரும்பத் திரும்பசெய்து கொண்டிருந்த நாய்,தாகம் அதிகரித்தவுடன் துணிச்சலுடன் தண்ணீரில் வாய் வைத்துக் குடிக்க ஆரம்பித்தது.அப்போதுதான் அது உணர்ந்தது,இதுவரை தண்ணீரில் தெரிந்தது தன் பிம்பம்தான் என.அதுவரை நாய் தயங்கியதற்குக் காரணம் அதன் உருவமே.இதனால் ஞானத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கும் விளக்கம் கிடைத்தது.நான் ஞானம் அடையத் தடையாய் இருப்பது,'நான்'தான் என்பதை உணர்ந்தேன்.அந்த 'நான்'என்ற அகந்தையை ஒழித்தபோது ஞானியாகி விட்டேன்.

விடுகதைகள்-3

0

Posted on : Tuesday, July 10, 2012 | By : ஜெயராஜன் | In :

1.செத்தவன் சந்தைக்குப் போகிறான்.-அது என்ன?
******
2.ஒருவனுக்குள் ஒளிந்திருப்பவர் நால்வர்.-அது என்ன?
******
3.குண்டுப் பாப்பா குழியில விழுந்திட்டா.
குச்சிப் பாப்பா அவளை எடுத்துப் போடுறா.-அது என்ன?
******
4.ஒரு பொட்டியில ரெண்டு தைலம் .-அது என்ன?
******
5.வண்ணான் வெளுக்காத வெள்ளை இல்லை;
கொசவன் செய்யாத சட்டி இல்லை;
கிணத்தில் இல்லாத தண்ணியில்லை.=அது என்ன?
******
6.கீழயும் மேலயும் கல்லுக்  கோட்டை.
நடுவில் இருப்பவன் செல்லப் பிள்ளை.-அது என்ன?
******
7.கத்தாழ வேலிக்குள்ளிருக்கு கருஞ்சுருட்ட பாம்பு.
வந்தவை போனவைகளுக்கெல்லாம் வழி சொல்லுது.-அது என்ன?
 ******
8.அண்ணன்தம்பி  அஞ்சு பேரு.
அஞ்சு பேருக்கும் ஒரே வீடு.-அது என்ன?
******
9.காத வழி போனாலும் 
கை கடுக்காச்சுமை.அது என்ன?
******
10.தத்தக்கா பித்தக்கா நாலு காலு;
தானே நடக்கையிலே ரெண்டு காலு;
உச்சி வெளுக்கையில மூணு காலு.
ஊர விட்டுப் போகையில பத்துக் காலு.  அது என்ன?
******
விடைகள்;
1.கருவாடு. 2. பால்,தயிர்,மோர்,வெண்ணை.  3.பணியாரம்.  4.முட்டை.   5.தேங்காய்.   6. நாக்கு.   7.நாக்கு.  8. ஐந்து விரல்கள்,உள்ளங்கை.  9.குழந்தை.   10.குழந்தைப் பருவத்தில் கை இரண்டு,கால் இரண்டும் காலாய் உபயோகப்படுவதால் நான்கு கால்கள்;தானே நடக்கும்போது இரண்டு கால்கள் மட்டும் உபயோகப் படுகின்றன.தலை நரைத்தவுடன் ஊன்று கோல் உதவியுடன் நடப்பதால் மூன்று கால்கள்.இறந்தவுடன் தூக்கிச் செல்பவர் நான்கு பேரின் கால்கள் எட்டு.இறந்தவரின் கால்கள் இரண்டு.ஆக மொத்தம் பத்து.
 

என்ன விலை அழகே!

0

Posted on : Monday, July 09, 2012 | By : ஜெயராஜன் | In :

டாக்டர்  வீட்டின் கதவை ஒருவர் தட்டினார்.ஒரு ஆறு வயது சிறுமி கதவைத் திறந்தாள்.பார்த்தாலே அவள் டாக்டரின் பெண் என்பது தெரிந்தது.''டாக்டர் வீட்டில் இருக்கிறாரா?''என்று வந்தவர் கேட்டார். சிறுமியும், ''இல்லை, அய்யா,அவர் ஒரு அப்பெண்டிசிடிஸ் ஆப்பரேசன் செய்ய ஒரு மருத்துவ மனைக்கு போயிருக்கிறார்.'' என்றாள்.வந்தவருக்கு ஆச்சரியம்.அவர் கேட்டார்,''ஒரு சிறுமிக்கு இந்த மாதிரி கடினமான வார்த்தைகள் சொல்வது மிகக் கடினம் ஆயிற்றே.நீ மிகவும் சரியாக உச்சரிக்கிறாயே!அது சரி,உனக்கு அதைப் பற்றி என்ன தெரியும்?''அந்த சிறுமி தலையை வேகமாக ஆட்டி,''ஓ,எனக்கு அது பற்றி நன்றாகத் தெரியுமே! அதற்கு இருபதாயிரம் ரூபாய் செலவாகும்.அனிஸ்தீசியாவுக்குத்  தனி யாக பீஸ் வசூலிப்பார்கள்.''

அறுவை திலகம்

0

Posted on : Saturday, July 07, 2012 | By : ஜெயராஜன் | In :

''என்ன அவருக்கு தலையில் நிறைய காயம்?''
முடி கொட்டிடுச்சி.
******
சாம்பார் தங்கமாக மாற என்ன செய்ய வேண்டும்?
''24காரட் போட வேண்டும்.''
******
மணி இரண்டாகுது..இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு.
''எதுக்கு?''
மூன்று மணி ஆகத்தான்..
******
தொப்பை விழாம இருக்க என்ன செய்யணும்?
''விழாம பிடிச்சிக்கனும்.''
******
காவிரி ஆறு எதில் ஆரம்பிக்கிறது?
''ஏன்,'கா'வில்தான்.''
******
ஔவையார் ஹோட்டலுக்குப் போனால் சர்வர் அவரிடம் என்ன கேட்பார்?
''ஒளவையே!சுட்ட இட்லி வேணுமா,சுடாத இட்லி வேணுமா?''
******
ஒருவனிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அவன் முதல் மாட்டிற்கு பத்து மணிக்கும்  இரண்டாவது மாட்டுக்கு பன்னிரண்டு மணிக்கும் தீனி போட்டான்.எந்த மாடு முன்னால் சாணி போடும்?
''எந்த மாடும் முன்னால் சாணி போடாது;பின்னால் தான் போடும்.''
******
ஐநூறு ரூபாய் நோட்டில் ஏன் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார்?
''அழுது கொண்டிருந்தால் நோட்டு நனைந்து விடுமே!'' 
******
மேஜை ஆணா,பெண்ணா என்று எப்படி கண்டு பிடிப்பது?
டிராயர் இருந்தால் ஆண்;இல்லாவிட்டால் பெண்.
******
அந்த ஆள் முழிக்கிறது கூட மரியாதையாய் செய்வாரா?அது எப்படி?
'திரு,திரு,'ன்னு தான் முழிப்பார்.
******
ஒரு திருடன் வங்கியில் திருடப் போனான்.சப்தம் கேட்டு ஆட்கள் வந்து விரட்டிச் சென்றார்கள்.சிறிது தூரம் சென்று பார்த்தால் அவன் குளித்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவன் உடலில் ஒரு காயமும் இல்லை.அது எப்படி?
 அவன் திருடப் போனது இரத்த வங்கி.
******
 

விடுகதைகள்-2

0

Posted on : Saturday, July 07, 2012 | By : ஜெயராஜன் | In :

1.ஒரு கரண்டி மாவில் ஊரெல்லாம் தோசை-அது என்ன?
******
2.தங்கை விளக்கு காட்ட,அண்ணன் மத்தளம் கொட்ட,
அம்மா தண்ணீர் தெளிக்க,அது என்ன?
******
3.அடுக்கடுக்கா இருந்தாலும் ,பிரிச்ச பிறகு
அடுக்க முடியாது-அது என்ன?
******
4.தாடிக்காரன்,மீசைக்காரன்;
கோவிலுக்குப் போனா வெள்ளைக்காரன்-அது என்ன?
******
5.சின்ன இடையல்ல ;ஆனாலும்
அன்ன நடை-அது என்ன?
********
6.இருட்டுப் புதையிலே,இடி விழுந்த பாறையிலே,
நான் வச்ச கட்டுச்சோறு நனையாம இருக்குது-அது என்ன?
******
7.காடு பெருங்காடு,அடர்ந்த ஒசத்தியான காடு;
அந்தக் காட்டிலே அடக்க ஆளில்லாம
நினைச்சபடி விளையாடறா வீராயி
பெத்த புள்ள-அது என்ன?
******
8.பச்சை வீட்டிற்கு சிவப்பு வாசல் -அது என்ன?
******
9.சின்னப் பையன்னு சின்னப் பொண்ணு சேர்ந்து கட்டின வீடு;அதைச் சிக்கெடுத்துக் கொடுத்த பேருக்கு
சென்னப்பட்டினம் தாரேன்-அது என்ன?
******
10.அன்னு கூடி அன்னு
 அழியும் பட்டணம்-அது என்ன?
******
விடைகள்:
1.நிலா   2.மின்னல்,இடி,மழை.  3.வெள்ளைப்பூண்டு   4.தேங்காய்.    5.ஆமை    6.தேன்கூடு.    7.பேன்.   8.கிளி   9.குருவிக்கூடு.   10.சந்தை.            
                  -        முனைவர் தி பெரியசாமி எழுதிய 'விடுகதை இலக்கியம்'என்னும் நூலிலிருந்து.

கரும்பாக இரு

0

Posted on : Friday, July 06, 2012 | By : ஜெயராஜன் | In :

தன் மகன் சோம்பேறியாகவும்,பொறுப்பு இல்லாதவனாகவும்  இருப்பதைக் கண்ட ஒரு தந்தை அவனை அவ்வூரில் உள்ள பெரியவரிடம் அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை கூறுமாறு வேண்டினார்.பெரியவரும் சிறுவனிடம்,''கரும்பாக இரு''என்றார்.பின் அதன் பொருளையும் பொறுமையாக விளக்கிச் சொன்னார்.சிறுவன் மறுநாள் எல்லோரிடமும் அன்பாகப் பேசினான்.கடுஞ்சொல் தவிர்த்தான்.அவனுடைய இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த தந்தை ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவனை அப்பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.அவனும் மகிழ்ச்சியுடன் அவரைப் போய்ப் பார்க்க அவர்,''எறும்பாக இரு,''என்றார்.அதன் பொருள் தெரிந்து கொண்ட அவன் சுறுசுறுப்பாக செயல் பட ஆரம்பித்தான்.சோம்பேறியாக இருந்த அவன் சுறு சுறுப்பானதும் அவனுக்கு பள்ளியிலும்,நண்பர்களிடமும்,உறவினர்களிடமும் நல்ல பெயர் வந்தது.எல்லோரும் அவனை பாராட்டவும் அவனுக்கு சிறிது தலைக் கனம் ஏற்பட்டது.மீண்டும் அவன் தந்தை பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னபோது அது தேவையில்லை என மறுத்தான். பின் அவர் வற்புறுத்தலுக்காக அவன் பெரியவரிடம் சென்றான்.அவன் முகத்தில் தோன்றிய கர்வ குறிப்பினைக் கண்ட பெரியவர் இம்முறை,''துரும்பாக இரு,''என்றார்.அதன் பொருள் அறிந்த சிறுவன் தன தவறை உணர்ந்து செயல்பட்டு நல்ல பெயர் எடுத்தான்.

நேரான செயல்

0

Posted on : Friday, July 06, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார்.அவர் மனைவி ஒரு அடங்காப்பிடாரி.அவ்வூருக்கு ஒரு முறை ஔவையார் வந்தார்.ஊரில் பலரும் அவரை தங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி வேண்டினர்.அங்கிருந்த செல்வந்தரும் விருந்துக்கு அழைத்தார்.ஔவையாரும் அவர் வீட்டுக்கு விருந்துக்கு வர சம்மதம் தெரிவித்து விட்டு அன்று மதியம் செல்வந்தர் வீட்டுக்கு சென்று வாசல் திண்ணையில் அமர்ந்தார்.அப்போது செல்வந்தர் தன் மனைவியின் முகத்தைத் தடவிக்கொடுத்து  பின் கூந்தலில் மெதுவாகப் பேன் பார்த்துக் கொண்டே அவள் மனம் குளிரச் செய்துவிட்டு   ஔவையாரை விருந்துக்கு அழைத்த விபரத்தை சொன்னார்.அவர் மனைவிக்கு வந்ததே கோபம்.வீட்டில் கிடந்த முறத்தை எடுத்துக் கொண்டு அவரை அடித்து ஓட ஓட விரட்டினாள்.பயந்து அவர் வெளியே ஓடிவர அங்கு ஔவையார் அமர்ந்திருப்பதைக் கண்டார்.அவன் நிலையைப் பார்த்து ஔவையார் பாடினார்:
சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு 
கொண்டாளைப் பெண்டு என்று கொண்டாயே-தொண்டா 
செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம் 
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.
இப்படிப்பட்டவளை மனைவியாகக் கொண்ட,அடியார்களின் மிதியடிக்கும் கூட ஒப்பாகாத உன் செல்வம் என்ன செல்வம்?அதை நெருப்பில் வீசி எறிவதே நேரான செயல். 
வீட்டின் உள்ளே நடந்த நிகழ்ச்சிகளையும் ஒரு பாட்டாக ஔவையார் பாடினார்.
இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி 
விருந்து வந்ததென்று விளம்ப -வருந்திமிக 
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால் 
சாடினாள் ஓடோடத்தான்.. 

விடுகதைகள்

0

Posted on : Thursday, July 05, 2012 | By : ஜெயராஜன் | In :

1.கடித்தால் கடிபடாது.
பிடித்தால் பிடிபடாது.அது என்ன?
******
2.முள்ளு முள்ளாய் இருக்கும்,பலாக்காயுமல்ல ;
உள்ளே பழுத்திருக்கும்,பாகற்காயுமல்ல;
உருக்கினால் நெய் வடியும்,வெண்ணெயும்  அல்ல.அது என்ன?
******
3.இரவெல்லாம் பூங்காடு;
பகலெல்லாம் வெறுங்காடு.அது என்ன?
******
4.அட்டைக்கு ஆயிரம் கண்கள்;
முட்டைக்கு மூன்று கண்கள்;
அயோத்தி ராமனுக்கு ஒரே கண்.அது என்ன?
******
5.மஞ்சக் குருவி ஊஞ்சலாடுது.அது என்ன?
******
6.ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்.அது என்ன?
******
7.உடம்பில்லாதவன் ஊரெல்லாம் போவான்.அது என்ன?
******
8.தங்க மாம்பழம்.
திங்க முடியல்லே.அது என்ன?
******
9.பிச்சிப்பூ சிதறிக் கிடக்கு.பொறுக்க நாதியில்லே;  
ராசா மகா கோபிச்சுக்கிட்டுப் போறா,அழைக்க நாதியில்லே;
சமுக்காளம் கிழிஞ்சு கிடக்கு,தைக்க நாதியில்லே.அது என்ன?
******
10.கணக்கிலாப் பிள்ளைகளை கழுத்தைச் சுற்றி 
சுமக்கும் தாய்,அது எந்தத் தாய்?
******
விடைகள்:
1.தண்ணீர்.  2.ஆமணக்கு.  3.வானம்.   4.சல்லடை,முட்டை,ஊசி.   5.எலுமிச்சம்பழம்   6.மூக்கு.   7.காற்று,புகை.  8.நெருப்பு.  9.நட்சத்திரங்கள்,நிலா,வானம்.   10.தென்னை   
 

சந்திப்போமா?

0

Posted on : Thursday, July 05, 2012 | By : ஜெயராஜன் | In :

காதலர் இருவர்,பிறர் அறியாமல் சந்திக்க விரும்புகின்றனர்.காதலன் ஏற்றம் இறைப்பவன்.கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும் காதலியிடம் அவளைச் சந்திக்க அவள் வீட்டுக்கு எப்போது வரலாம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.அதை புரிந்து கொண்ட அவள் பிறருக்குப் புரியாத வகையில் புதிரான ஒரு பாடல் மூலம் பதில் சொல்லுகிறாள்.
கிணத்துத் தண்ணீர் தீர வேண்டும்.
பட்ட மரம் பொருந்த வேண்டும்.
பட்டணமெல்லாம் சாக வேண்டும்.
அப்போது நீ வா.
இதன் பொருளை அவன் புரிந்து தன் மகிழ்ச்சியை அவளிடம் வெளிப்படுத்தினான்.உங்களுக்குப் புரிகிறதா?அதன் விளக்கம்:
கிணற்றுத் தண்ணீர் வற்றுதல் என்றால் விளக்கில் எண்ணெய் தீர்தல் என்று பொருள். பட்டமரம் பொருந்துதல் என்றால் வீட்டுக் கதவுகளை மூடுதல் என்று பொருள்.பட்டணம் சாதல் என்றால் ஊரிலுள்ள மக்கள் தூங்குதல் என்று பொருள்.
அதாவது வீட்டில் ஏற்றி வைத்த விளக்கில் எண்ணெய் தீர்ந்து அணைந்தவுடன்,பட்ட மரத்தில் செய்த கதவுகளை அடைத்தபின்,ஊரிலுள்ள மக்கள் எல்லாம் தூங்கியவுடன்  நீ வரலாம்.

எது அழகு?

0

Posted on : Wednesday, July 04, 2012 | By : ஜெயராஜன் | In :

அக்பர் ஒரு முறை,அவருடைய நாட்டிலேயே அழகு மிகுந்த ஒரு மனிதனைப் பார்க்க விரும்பினார்.அப்படிப்பட்ட மனிதனைக் கண்டு பிடிப்பவருக்க தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறினார்.அரசவையில் இருந்த பலரும் பல பேரை  கூட்டி வந்தனர்.ஆனால் மன்னருக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள் பீர்பால் ஒரு பிச்சைக் காரனையும் அவனுடைய மகனையும் அழைத்து வந்தார்.அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருந்தனர்.அக்பருக்குக் கோபம் வந்து விட்டது.பீர்பால் தண்ணி அவமதித்து விட்டதாகக் கருதினார்.அவர் முகக் குறிப்பினைக் கண்ட பீர்பால் அமைதியாகச் சொன்னார்,''இந்தத் தந்தை உலகிலேயே தன் மகன் தான் மிகுந்த அழகுள்ளவன் என்று கருதுகிறார்.ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைதான் உலகில் அழகு  என்று கருதுகின்றனர்.இதை யாரேனும் மறுக்க முடியுமா?''

இரண்டு கேள்வி,ஒரு பதில்.

0

Posted on : Wednesday, July 04, 2012 | By : ஜெயராஜன் | In :

வெந்த கறி மணப்பதேன்?
வீரர் படை முறிவதேன்?
              ---பெருங்காயத்தால்.
கண்ணப்பன் திருந்தியதேன்?
கந்தன் படுத்துக் கிடப்பதேன்?
             ---கால் கட்டு போட்டதால்.
படம் அழகாய்த் தெரிவதேன்?
பண்டம் விலை குறைவதேன்?
             ----சட்டம் போட்டதால்.
குமரன் அடி வாங்குவதேன்?
குப்பியைத் தூக்கி எறிவதேன்?
             ----காலியானதால்.

பிரச்சினை இல்லை

0

Posted on : Tuesday, July 03, 2012 | By : ஜெயராஜன் | In :

மூன்று வயதான அமெரிக்கப் பெண்மணிகள் வயதானதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.முதல் பெண்மணி ,''ஒவ்வொரு முறை நான் ரெப்ரிஜிரேட்டர் அருகே இருக்கும் போதெல்லாம் நான் ஏதேனும் உள்ளே வைக்க வந்தேனா, ஏதாவது பொருளை எடுக்க வந்தேனா என்ற சந்தேகம் எனக்கு வந்து விடுகிறது.''என்றார்.இரண்டாவது பெண்மணி ,''நான் மாடிப்படி அருகில் நிற்கும்போதெல்லாம் நான் மேலே ஏற வேண்டுமா,கீழே இறங்கி வந்தேனா என்ற சந்தேகம் வந்து விடுகிறது.'' என்றார்.உடனே மூன்றாவது பெண்மணி,''நல்ல வேளை,எனக்கு இந்தப் பிரச்சினைகள்  எதுவும் இல்லை.நான் அதிர்ஷ்டக்காரி,''என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த பலகையில் தட்டினார்.(அதிர்ஷ்டமான விசயங்களைச் சொல்லும்போது மரத்தைத் தட்டும் பழக்கம் அங்கு உண்டு.)பலகையைத் தட்டிய சப்தம் கேட்டவுடன் அப்பெண்மணி ,''யார் அது கதவைத் தட்டுவது?''என்று கேட்டுக் கொண்டே  தன் நாற்காலியில் இருந்து எழுந்தார்.

விளம்பரம்

0

Posted on : Tuesday, July 03, 2012 | By : ஜெயராஜன் | In :

நேர்மையான கடவுள் பக்தி மிக்க வியாபாரி ஒருவர் இறந்து விட்டார்.அவர் மேலுலகம் சென்றதும் தேவர் ஒருவர் வந்து அவரை அழைத்துக் கொண்டு சொர்க்கம்,நரகம் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார்.பின் அவர் வியாபாரியிடம் சொன்னார்,''பூமியில் நல்ல காரியங்கள் பல புரிந்திருப்பதால் உங்களுக்கு இங்கு எங்கு தங்கிக் கொள்ளலாம் என்பதை  முடிவு செய்து சொன்னால் அங்கு நீங்கள் தங்க அனுமதி அளிக்கப்படும்.ஆனால் ஒரு தடவை முடிவு செய்து விட்டால் அதை மாற்ற முடியாது.'' .சொர்க்கத்தில் பக்திப் பாடல்கள் பாடுவதும் ஆடுவதுமாக இருந்தது.எல்லோரும் அமைதியாக எளிமையாக இருந்தனர்.நரகத்தில் ஒரே ஆட்டம் பாட்டம்.எங்கு பார்த்தாலும் அழகிய பெண்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.குடிக்கோ பஞ்சமில்லை. வியாபாரி யோசித்தார்.''பூமியில் வாழ்நாள் முழுவதும் பஜனை, கோவில், குளம் என்று இருந்து விட்டேன்.இங்கு சொர்க்கத்திலும் அதேதான் இருக்கிறது.இங்கு நரகத்திலோ சகல இன்பங்களும் இருக்கின்றன.பூமியில் தவறவிட்டதை இங்கு அனுபவிக்கலாமே என்று நினைத்து தான் நரகத்திலேயே தங்கிக் கொள்ள விரும்புவதாக சொன்னார். பின் அவர் நரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இப்போது நரகம் முழுவதும் வித்தியாசமாக இருந்தது.எங்கு பார்த்தாலும் அழுகைக் குரல். கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகள்.பயந்துபோன வியாபாரி தன்னை அழைத்து வந்தவரிடம்,''நான் முதலில் பார்த்த நரகம் எங்கே?''என்று கேட்டார். அதற்கு அந்த தேவர் சொன்னார்,''சமீப காலமாக நரகத்திற்கு அதிகம் பேர் வரவில்லை.எனவே நரகத்தின் விளம்பரத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகள்தான் முதலில் உங்களுக்குக் காட்டப்பட்டது.ஆனால் இதுதான் நரகம்.''

ஒரு உதவி

0

Posted on : Monday, July 02, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு குடிகாரன் ஒரு நாள் இரவு நன்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.அவன் தனியாக வாழ்ந்து வந்தான்.அதனால் வெளியே செல்லும்போது கதவைப் பூட்டிவிட்டுச் செல்வான்.அன்றும் வீட்டை நெருங்கியதும் சாவியை எடுத்து கதவைத் திறக்க முயற்சி செய்தான்.ஆனால் சாவியை சரியாக பூட்டு துவாரத்தில் அவனால் பொறுத்த முடியவில்லை.சரியான போதையில் இருந்ததால் அவனுக்கு நிதானம் இல்லாதிருந்ததால் பல முறை முயன்றும் அவனால் சாவியை துவாரத்தில் பொறுத்த இயலவில்லை.இதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் அவன் மீது அனுதாபப்பட்டு அவனிடம் வந்து,''சாவியைக் கொடுங்கள்.நான் திறந்து தருகிறேன்.''என்றார்.குடிகாரன் சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு,''பூட்டை நானே திறந்து கொள்கிறேன்.ஆனால் எனக்கு நீங்கள் ஒரே ஒரு உதவி செய்தால் போதும்.தயவுசெய்து வீட்டை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.நான் பூட்டைத் திறக்க முயலும்போதெல்லாம் இந்த வீடு தான் கடிகாரத்தின் பெண்டுலம் மாதிரி ஆடித் தொலைக்கிறது,''என்றானே பார்க்கலாம்!அவர் ஏன்தான் அங்கு வந்தோமோ என்று என்ன ஆரம்பித்துவிட்டார்.

எளிய வழி

0

Posted on : Monday, July 02, 2012 | By : ஜெயராஜன் | In :

100 க்குள் 5 ல் முடியும் ஒரு எண்ணின் வர்க்கத்தைக் கண்டு பிடிக்க ஒரு எளிய வழி.:
உதாரணமாக 75 ன் வர்க்கத்தைக் கண்டு பிடிப்போம்.இந்த எண்ணின் முதல் எண்ணை எடுத்து அதாவது 7  ,அதனை அதனுடன் ஒன்று கூட்டி வரும் எண்ணால்  அதாவது  8 ஆல்  பெருக்கிக் கொள்ள வேண்டும்.ஆக 7x(7+1)=7x8=56.
இந்த எண்ணை எழுதிக் கொண்டு அதனருகில்  25ஐ சேர்த்தால் விடை கிடைக்கும்.அதாவது 5625
இன்னொரு உதாரணம்: 35என்ற எண்ணின் வர்க்கம் காண்போம்.
முதல்  எண்=3
அதனுடன்  ஒன்று  கூட்ட  வருவது =4
இரண்டையும்  பெருக்க  =3x4=12
இந்த  என்னுடன்  25 சேர்த்து  எழுத =1225
35x35=1225.

பெங்களூரு

0

Posted on : Sunday, July 01, 2012 | By : ஜெயராஜன் | In :

விஜய நகரப் பேரரசின் ராஜாவான வீர பல்லாலி வேட்டையாடப் போனபோது  அடர்ந்த காடாய் இருந்த ஒரு பகுதியில் அகப்பட்டுக் கொண்டார்.வழி தெரியாது பசியில் துடித்தபோது ஒரு வயதான பெண்மணி வேக வைத்த பீன்ஸ் கொடுத்து பசியைப் போக்கினாள்.மகிழ்ந்த ராஜா அந்தக் காட்டிற்கு வைத்த பெயர் பெண்டாகாலூறு.(வேக வைத்த பீன்ஸ் ஊர்)அப்புறம் வந்த ஆங்கிலேயர்கள் அதை உச்சரிக்கத் தெரியாது பெங்களூர் என்று ஆக்கினார்கள்.இப்போது அது பெங்களூரு ஆகியுள்ளது.
********
'கர்ணம்'என்றால் சமஸ்கிருதத்தில் காது என்று அர்த்தம்.எழுதப்படாமல் ஒருவர் சொல்லி ஒருவர் என்று செவி வழியாக வந்த கதைகள் தான் கர்ண பரம்பரைக் கதைகள்.கேட்பதற்கு கொடூரமாக இருப்பது கர்ண கடூரம்.காதில் குண்டலத்தோடு பிறந்தவன் கர்ணன்.
********
'?'எப்படி வந்தது?'Questio' என்றால் கேள்வி என்று பொருள்.கேள்வி வாக்கியம் என்பதைத் தெளிவாக்க 'Questio' என்ற வார்த்தையின் முதல் மற்றும் கடைசி எழுத்தான q,o வை வாக்கியத்தின் இறுதியில் குறித்து வந்தனர்.நாளடைவில்  'q' வைத் திருப்பிப் போட்டு '௦'வை புள்ளியாக்கி விட்டனர்.இப்படித்தான் '?'உருவாயிற்று.
********
a.b.c,d என்ற ஆங்கில அகர வரிசையை 'alphabet' என்று சொல்கிறோம்.இந்த வார்த்தை எப்படி வந்தது?கிரேக்க மொழியில் முதல் எழுத்து alpha ,. ,இரண்டாவது எழுத்து beta. .இந்த இரண்டும் சேர்ந்துதான் 'alphabet' என்ற வார்த்தை உருவாயிற்று.இதேபோல்தான் தமிழில் 'அ'வை முதலாகக் கொண்டு வரும் அகராதியை 'அகர முதலி ' என்று சொல்கிறோம்.
********