உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நான் இங்கே...

2

Posted on : Monday, March 31, 2014 | By : ஜெயராஜன் | In :

ஏழை பக்தன் ஒருவன் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதி சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டான்.அதற்காக தனது வருவாயில் மிகச்சிறிய பகுதியை   சேமித்து வைத்தான்.ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் திருப்பதி சென்றான்.கையில் குறைந்த அளவே பணம் இருந்ததால், பேருந்தில் மலைக்கு செல்லஇயலாது,நடந்து மலைமீது கோவிலை அடைந்தான். பசியினால் மிகுந்த களைப்புடன் இருந்தான்.இருந்தாலும் கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தர்ம தரிசனத்திற்கான வரிசையில் நின்றான். வரிசை மெதுவாக நகர்ந்தது.அதே சமயம் பணம் படைத்தவர்களும்,அதிகாரம் படைத்தவர்களும்,தனி வழியில் விரைவாக சென்று ஆண்டவனை மகிழ்ச்சியுடன் தரிசித்துக் கொண்டிருந்தனர்.தான் நின்று கொண்டிருந்த நீண்ட வரிசையைப் பார்த்து எப்போது ஆண்டவனை தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமோ என்ற கவலையுடன் இருந்தான்.நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. அவனை அறியாமல் மிகுந்த களைப்பினால் வரிசையிலேயே படுத்து தூங்கி விட்டான்.அப்போது அவன் கனவில் கடவுள் வந்தார்.அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு கோபம் வந்து விட்டது. அவன், ''கடவுளே!எத்தனை நாளாக சிரமப்பட்டு உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன் .இங்கு வந்தால் உன்னை தரிசிக்க எவ்வளவு சிரமங்கள்?என்ன இருந்தாலும் நீயும் பணக்காரர்களைத் தானே ஆதரிக்கிறாய்!அதோ பார்,அவர்கள் எல்லாம் எவ்வளவு விரைவில் உன்னை மகிழ்ச்சியுடன் வணங்கி செல்கிறார்கள்? பசியுடன் காத்திருக்கும் என் நிலையைப் பார்'' என்றான்.கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார்,'' அடே,பைத்தியக்காரா,அவர்கள் எல்லாம் கல்லை வணங்கிச் செல்கிறார்கள்.இதோ,நான் உன்னுடன் தானே பேசிக் கொண்டிருக்கிறேன்!''

தேவை என்ன?

1

Posted on : Saturday, March 29, 2014 | By : ஜெயராஜன் | In :

இந்தியாவை வென்ற அலெக்சாண்டர் தன் குருவின்ஆணைப்படிஞானி ஒருவரைப் பார்க்க வந்தார்."'யார்"என்று ஞானி கேட்க ''இந்தியா  முழுவதையும் வென்று  வந்த அலெக்சாண்டர் ,''என்றார்.ஞானி சிரித்துக் கொண்டே தனது மான் தோலை அவரிடம் கொடுத்து அமர சொன்னார்.மான் தோலை விரித்து  அமர்ந்த அவரை,''எழுந்திரு,''என்றார் ஞானி.அவர் எழுந்தவுடன் மான் தோல் மீண்டும் சுருண்டு கொண்டது.ஞானி,''பார்த்தாயா?நீ விரித்து அமர்ந்தாய்.நீ எழுந்தவுடன் அது சுருண்டு கொண்டது.நீ படையுடன் வந்தாய்.நாடுகள் உனக்குப் பணிந்தன.நீ இங்கிருந்து போனதும் அவை பழையபடி நிமிர்ந்து விடும்.''என்றார்.அலெக்சாண்டர் ஞானியைப் புதிராகப் பார்த்தார்.ஞானி அன்புடன் கூறினார்,''அலெக்சாண்டர்,நதி பிரவாகமாகப் பெருகி ஓடும்.ஆனால் அதில் உனக்குத் தேவை ஒரு சிறிய அளவுதான்.கை நிறைய அள்ளிக்குடி.அதில் தவறில்லை.ஆனால் ஒட்டு மொத்த நதியும் உனது என்று சொந்தம் கொண்டாடாதே.பாத்திரம் நிறைய நீரை ஊற்றலாம்.நிரம்பிய பின்னும் ஊற்றிக் கொண்டிருந்தால்  நீர் வீணே கீழே வழிந்துதான் ஓடும். களஞ்சியம் முழுவதும் நெல் இருந்தாலும் நீ உண்ணப்போவது ஒரு பிடி தான். அரண்மனை முழுவதும் ஆடைகள் இருப்பினும் நீ அணியப் போவது ஒரு ஆடையைத்தான்.உலகம் முழுவதும் உன் வசம் இருந்தாலும் கடைசியில் நீ உறங்கப் போவது ஆறடியில்தான்.உன் கஜானா முழுவதும் தங்கம் நிரம்பி இருந்தாலும் அது உனைக் காப்பதில்லை.நீதான் அதைக் காக்கின்றாய்.''

அடக்குதல்

1

Posted on : Friday, March 28, 2014 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் உங்கள் பேராசையை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைய முடியும்.அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சரியாகப் புரிந்து கொள்ளாத போதுதான் துறவு எண்ணம் வருகிறது.
சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.சிலர் பணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஒருவன் அதைக் கண்டு அஞ்சுகிறான்.ஒருவன் பேராசை கொள்கிறான்.இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப் படுகிறார்கள்.மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்கவும். அதைப்போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும்.இரண்டுமே எலிப்பொறி போலத்தான்.மிக்க ஈடுபாடும் அடக்குதலும்  இயந்திரத்தனமானது.
நீங்கள் பேராசை,பாலுணர்வு,கோபம்,பொறாமை....இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள்.உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது.அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது.மாறாக நீங்கள் அதை அடக்கினாலும்,இயந்திரத்தனமாக மிகவும்  ஈடுபட்டாலும்,முடிவு ஒன்றுதான்.
முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள்.பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள்.எதையும் தவிர்க்காதீர்கள்.அவற்றின் தேவைகளில் ஆழமாக செல்லுங்கள்.அன்புடன் கூர்ந்து கவனியுங்கள்.உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள்.அப்போதுதான் ஒரு நாள்  அவற்றைக் கடந்து செல்ல முடியும்.

பொன்மொழிகள்-49

2

Posted on : Tuesday, March 25, 2014 | By : ஜெயராஜன் | In :

ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான்.
******
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
******
பணம் என்ற ஒன்று நுழையாத வரை
எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன.
******
மனிதனின் அத்தனை கோர முகங்களையும்
அறிந்த உயிரற்ற பொருள்-பணம்.
******
குழந்தை பிறந்த முதல் ஆண்டு,அது பேசவும்,நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த ஓர் ஆண்டு அது ஒரே இடத்தில் இருக்கவும்,வாயைப் பொத்தவும் கத்துகிறோம்.
******
நாம் யாராலோ நிராகரிக்கப் படும்போதுதான்,நம்மால் நிராகரிக்கப்பட்டவரின் வலியை உணர முடிகிறது.
******
அனுபவம் ஒரு ஜன்னல்;அதன் மூலம் தெருவைப் பார்க்கலாம்.ஜன்னலே தெருவாகி விடக்கூடாது.
******
பொதுக் காரியங்களில் நாம் சில சமயம் நம் அறிவை மட்டுமல்ல,பகுத்தறிவையும் இழக்கத்  தயாராகி விடுகிறோம்.
******
நம்பிக்கையின் கை உடையும்போது
சந்தேகம் காலூன்றத் தொடங்குகிறது.
******
இயல்பாய் ஏற்படும் மாற்றம்,சுகம்.
வலிய ஏற்படுத்திக் கொள்ளும்  மாற்றம்,சுமை.
******

அடுத்தவர் கருத்து.

1

Posted on : Monday, March 24, 2014 | By : ஜெயராஜன் | In :

நான் ஏன் அடுத்தவரது கருத்துக்களைக் கண்டு பயப்படுகிறேன்?
ஏன் என்றால் நீங்கள் நீங்களாக இல்லை.நீங்கள் மற்றவர்களது அபிப்பிராயங்களைத் தாங்கும் தூணாக இருக்கிறீர்கள்.நீங்கள்,மற்றவரது அபிப்பிராயத்தைத் தவிர வேறு இல்லை.நீங்கள்  அழகானவர் என்று  மற்றவர் சொன்னால் ,நீங்கள் அழகாக இருப்பதாக நினைக்கிறீர்கள்.அவலட்சணமாக இருப்பதாகப் பிறர் சொன்னால்,அப்படி இருப்பதாகவே கருதுகிறீர்கள். இவ்வாறு மற்றவர் கூறும் அபிப்பிராயங்களை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஒருவர் நீங்கள் அழகானவர்  என்று சொல்ல,அடுத்தவர் நீங்கள் அருவருப்பானவர் என்று சொன்னால் ,நீங்கள் பின்னவர் சொன்னதை மறக்க நினைக்கிறீர்கள்.ஆனால் அதை உங்களால் மறக்க முடியாது.இரண்டு கருத்துக்களும் உங்கள் உள்ளேதான் ஆழமாக இருக்கும்.இப்போது நீங்கள் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள்.அதாவது,நீங்கள் பல பொருட்களின் கலவையாக இருக்கிறீர்கள்.நீங்கள் உங்கள் ஆன்மாவை அடையவில்லை.உங்களுக்கென்று எந்த தனித் தன்மையும் இல்லை.நீங்கள் வெறும் அடுத்தவரது குப்பைதான்.ஆகவே நீங்கள் எப்போதும் பயத்தில் இருக்கிறீர்கள்.ஏனெனில் அடுத்தவரது கருத்துக்கள் மாறினால்,நீங்களும் மாற வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.நீங்கள் அடுத்தவரின் பிடியில் இருக்கிறீர்கள்.
முதலில் தைரியமாக உங்களை சார்ந்து இருங்கள்.அப்போது உங்களைத்தவிர வேறு யாரும் நல்லவனாகவோ,கெட்டவனாகவோ மாற்ற இயலாது.பொய்யான பிறர் அபிப்பிராயத்துக்கும்,நீங்கள் கனவுலகில் சஞ்சரிப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது.ஒருவன் உங்களைப் புகழும்போது,அவன் சக்தி மிக்கவனாகத் தெரிகிறான்.அவனுடைய புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்,நீங்கள்தான் அவனுக்கு இரையானவன்.இப்போது அவன் உங்களைத் தனது பிடியில் வைத்துக் கொள்ளலாம்.அவன் உங்கள் குருவாகவும்,நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள்.

நம்பிக்கை

1

Posted on : Saturday, March 22, 2014 | By : ஜெயராஜன் | In :

துறவி ஒருவர் தினமும் யாருக்காவது உணவு அளித்துவிட்டுத்தான் உணவு அருந்துவார்.ஒருநாள் யாருமே வரவில்லை.சற்று தூரம் நடந்து சென்று வந்தால், யாராவது தென்படுவார்கள் என்று கருதி  நடந்தார்.அப்போது ஒருவர் எதிர்ப்படவே அவரை சாப்பிட அழைத்து வந்தார்.உணவு அருந்தும் முன் அவர்  பிரார்த்தனையில் அமர்ந்தார்.வந்தவர் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவர் ஏன் பிரார்த்தனை செய்யவில்லை என்று கேட்டபோது அவர் ,''நான் தீவிர நாத்திகன். எனக்கு இந்த மாதிரி மூடத்தனங்களில் நம்பிக்கை இல்லை,'' என்றார்.துறவிக்குக் கோபம் வந்துவிட்டது.''உனக்கு உணவு அளிக்க முடியாது.வெளியே போ'' என்றார்.வந்தவர் ,''நானாக ஒன்றும் உணவு கேட்டு வரவில்லை.நீங்களே அழைத்து வந்துவிட்டு இப்போது வெளியே போகச் சொல்கிறீர்கள்.ஆனால் உணவுக்காக என் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.''என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.துறவியும் உணவு உண்ணாது பாதி  மயக்கத்தில் படுத்து உறங்கினார்.அப்போது கனவில் இறைவன் வந்தார்.அவர் ,''அவன் என் மீது நம்பிக்கை இல்லாதவன்.ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவனுக்கு நான் விடாது உணவு அளித்து வந்தேன்.ஒரே ஒரு நாள் உன்னிடம் அனுப்பியதில்,நீ அவனை பட்டினியாய் 
அனுப்பி விட்டாயே? இப்போது நான் அவனுக்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.
அலறி அடித்துக் கொண்டு எழுந்த துறவி வேகமாக சென்று அந்த நாத்திகனை சாப்பிட அழைத்தார்.திடீர் மாற்றத்திற்கு அவன் காரணம் கேட்டபோது துறவி சொன்னார்,''ஒரு ஆத்திகன் கடவுள் இருக்கிறார் என்று சொல்லத் தைரியம் தேவையில்லை.ஆனால் ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்லத்தான் மிகுந்த மன உறுதியும் வைராக்கியமும் தேவை.எனவே நீங்கள் என்னை விட உயர்ந்தவர்.உங்களுக்கு உணவு அளிப்பது எனக்கு பெருமை தரும் செயலாகும்.''

ஏடாகூடம்

2

Posted on : Friday, March 21, 2014 | By : ஜெயராஜன் | In :

புகழ்பெற்ற ஜென் குரு  ஒருவரைத் திரளாக மக்கள் வந்து தரிசித்து அவர் கருத்துக்களைக் கேட்பது வழக்கம்.அவர் இருந்த ஊரில் ஒரு இசைக் கலைஞன் இருந்தான்.மிகத் திறமைசாலி.அதே சமயம் அவனிடம் எல்லாவித கெட்ட பழக்கங்களும் இருந்தன.குருவிடம் வந்த ஒருவர் அந்தக் கலைஞனைப்   பற்றி மிகக் கேவலமாகப் பேசினார். உடனே குரு,''அவன் சிறப்பாக இசை வாசிப்பானே!நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே!'' என்று புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.உடனே அங்கிருந்த இன்னொருவர், ''ஆமாம்,அவன் இசைக்க ஆரம்பித்தால் அந்தக் கடவுளே வந்த மாதிரி இருக்கும்.சங்கீதமே அவனுக்கு அடிமையாக இருக்குமே,''என்று குருவின் கருத்தை ஒத்துப்  பேசினார்.அப்போது குரு,''''அப்படியா,அவன் ஒரு ஏமாற்றுக்காரன் ஆயிற்றே!அவனை யாரும் நம்ப முடியாதே,''என்றார்.குறை சொன்னவர்,புகழ்ந்தவர் இருவருக்கும் குழப்பம்.குரு இப்படி ஏடாகூடமாகப் பேசுகிறாரே,அவனைப் பற்றி அவர் உண்மையில் என்னதான் நினைக்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பி அவரையே கேட்டனர்.
குரு சொன்னார்,''நான் அவனைப் புகழவும் இல்லை,இகழவும் இல்லை.எந்த மனிதனையும் எடை போட நாம் யார்?ஒருவனை நல்லவன் என்றோ,தீயவன் என்றோ கூற உங்களிடமோ,என்னிடமோ என்ன அளவுகோல் உள்ளது? எதையும் ஒப்புக் கொள்வதோ,மறுப்பதோ என் வேலை அல்ல.அவன் நல்லவனும் இல்லை,கெட்டவனும் இல்லை.அவன் அவனாகவே இருக்கிறான்.அவன் அவனே!அவன் செயலை அவன் செய்கிறான்.உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்,''

பயன்

2

Posted on : Thursday, March 20, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு குறிப்பிட்டநோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்கள் அந்த நோக்கம் நிறைவேறிய பின் பயன் அற்றவை ஆகி விடுகின்றன. முட்டையின் ஓடு கடினமானது.உள்ளிருக்கும் மஞ்சள் கருவையும்,வெண் கருவையும் அது பாதுகாக்கிறது.உள்ளே குஞ்சு வளர்ச்சி அடைந்த உடன் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றது.அதன் பின் அந்த ஓட்டினால் எந்தப் பயனும் இல்லை.ஏனெனில் ஓட்டின் நோக்கம் நிறைவேறிவிட்டது.ஒரு செடியில் விதை முளைத்து வரும்போது முளையின் இரு புறமும் பருப்புகள் இருக்கும்.செடி வளரத் தேவையான சத்துக்கள் அம்முளையில் அடங்கியிருக்கிறது.செடி வளர வளர பருப்புகள் இற்றுப்போய் விடும்.அதன் பயன் முடிந்துவிட்டது.
சூரியனும் சந்திரனும் ஒளியை வீசி உலகுக்கே பயன் தருகின்றன.ஆனால் அவை எந்த நோக்கத்துடனும் செயல் படுவதில்லை.அதனாலேயே அவை நிலைத்து நிற்கின்றன.நோக்கம் எதுவும் இல்லாத உண்மையான நட்பு எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்கும்.தாய் குழந்தையின் மீது செலுத்தும் அன்பிற்கு நோக்கம் எதுவும் கிடையாது.அதனால்தான் உயிருள்ளவரை அந்த அன்பு நிலைத்திருக்கிறது.கடவுள் எந்த நோக்கத்துடன் உலகைப் படைத்தார்.ஒரு நோக்கமும் கிடையாது.அது ஒரு விளையாட்டு.அதனால் தான் அதனை லீலை என்கிறார்கள்.
ஞானிகளுக்கு வாழ்வே ஒரு விளையாட்டு.அவர்கள் எந்த நோக்கமும் கொள்வதில்லை.எந்த வித பயனும் எதிர்பார்ப்பதில்லை.

பலி

1

Posted on : Wednesday, March 19, 2014 | By : ஜெயராஜன் | In :

குயவன் ஒருவன் மண் பாண்டங்கள் செய்து கொண்டிருந்தான்.அவன் வீட்டு வாசலில் ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது.அந்த வழியே துறவி ஒருவர் வந்தார்.துறவியை வணங்கி அந்தக் குயவன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.பின் அவர் விடை பெறும்போது குயவன் சொன்னான், ''ஐயா,தயவு செய்து இரண்டு நாட்கள் இங்கே தங்கிச் செல்லுங்கள்.இங்கு நாளை எங்கள்  குல  தெய்வத்தினை வணங்குகிறோம்.விழா சிறப்பாக இருக்கும்.விழாவில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் ஆட்டினை பலி  கொடுத்து பூஜை செய்யப் போகிறோம்.''துறவி சற்றும் எதிர்பாராத நிலையில்.குயவனின் பானை ஒன்றினை எடுத்து ஓங்கித் தரையில் அடித்து உடைத்தார்.பானை துண்டு துண்டாகச் சிதறியது.குயவன் அதிர்ச்சி அடைந்தான்.அவனால் பேசக் கூட முடியவில்லை.துறவிக்குப் பைத்தியம்பிடித்திருக்குமோ என்று அஞ்சினான். துறவி அவனைப் பார்த்து,''இந்த உடைந்த துண்டுகளை எடுத்துக் கொள்.அவை எல்லாம் உனக்குத்தான்.''என்றார்.குயவன்,''என் பானையை உடைத்து எனக்கே தருகிறீர்களா?''என்று ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கு துறவி,''கடவுள் படைத்த ஒரு உயிரைப் பலியிட்டு கடவுளுக்கே கொடுக்கப் போகிறேன் என்கிறாயே! அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றால்.இந்த உடைந்த துண்டுகளை நீ ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது?''என்று கேட்டார்.குயவன் பேச வழியின்றி வாயடைத்து நின்றான்.

கோழியா,முட்டையா?

1

Posted on : Tuesday, March 18, 2014 | By : ஜெயராஜன் | In :

''கோழி முதலில் வந்ததா,முட்டை முதலில் வந்ததா?''
'கோழிதான் முதலில்வந்தது.'
''எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?''
'முட்டையிலிருந்து கோழியும் வரலாம்,சேவலும் வரலாம்.ஆனால் கோழியிலிருந்து முட்டை மட்டும் தானே வரும்!'
******
வயதான கணவன் மனைவி ஒரு உணவு விடுதிக்கு வந்தனர்.அவர்கள் உட்கார்ந்த இடத்திற்கு அருகில் வாலிபர் ஒருவர் இருந்தார்.பேச்சு வாக்கில் அந்த தம்பதியினர் சொன்னார்கள்,''நாங்கள் எது செய்தாலும் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம்.'' பின் ஒரு தோசைக்கு கணவர் ஆர்டர் செய்தார்.அதை அவர் மட்டுமே சாப்பிட,அந்தப்பெண் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர் மன வருத்தத்துடன்,''நான் வேண்டுமானால் அம்மாவுக்கு ஒரு தோசை ஆர்டர் செய்யட்டுமா?''என்று கேட்க அந்தப் பெண் அவசரமாக மறுத்தார்.''நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்களே?"'என்று கேட்க அந்தப் பெண் சொன்னார்,''வேறு ஒன்றுமில்லை.பல் செட்டையும் நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்வோம். அதற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.''
******
இளைஞன் ஒருவன் திருமணம்  செய்து கொள்ளாது,தனது வருமானத்தை எல்லாம் மது,மாது,சிகரெட் என்று செலவழித்துக் கொண்டிருந்தான்.நண்பன் ஒருவன் சொன்னான்,''நீ திருமணம் செய்து கொள்.வயதான காலத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கவாவது ஒரு ஆள் வேண்டுமே!''இளைஞனும் அது சரி எனத் தோன்றவே திருமணம் செய்து கொண்டான்.வயதான காலத்தில் மரணப் படுக்கையில் அவன் தன் நண்பனிடம் சொன்னான்.நீ சொன்னாய் என்று திருமணம் செய்தேன்.மங்கைக்கு செலவழித்ததை என் மனைவிக்கு செலவு செய்தேன்.மதுவுக்கு செலவழித்ததை குழந்தை வளர செலவு செய்தேன்.சிகரெட் செலவை அவர்கள் நலத்துக்கு செலவளித்தேன்.'' நண்பன்,''அதனால் என்ன எல்லோரும் நன்றாகத்தானே இருக்கிறீர்கள்?''என்று கேட்க அவன் சொன்னான்,''எல்லாம் சரி,எனக்கு  இப்போது தாகம் எடுக்கவில்லையே!''
******

சொற்கள்

1

Posted on : Saturday, March 15, 2014 | By : ஜெயராஜன் | In :

சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை.அவைதான் உணர்ச்சிகளை உருவாக்குகின்றன.நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத் தொடங்குகிறோம்.அதைச் சொல்லி விட்டதாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம்.பெரும்பாலான பகைகளும் சினங்களும் சொல்லை விட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.'ஆன்மா குடியிருக்கும் வீட்டில் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை தான்'என்று நாக்கை சுக்ர ஸ்மிரிதி வகுக்கிறது.நாக்கு நம் நலன்களைப் பேணத் தெரியாத பேதை.
சொற்களை அடுத்து எழுத்து.ஓலை  எத்தனை மிதமாக எழுதப் பட்டிருந்தாலும் அது மாறாதது என்பதாலேயே ஒரு உறுதியைக் கொண்டிருக்கிறது.அதை வாசிப்பவர் தன் கற்பனையை அதில் ஏற்றிக்கொள்ள இடமிருக்கிறது.வாசிப்பவரின் மனமே அந்த சொற்களுக்குப் பொருள் அளிக்கிறது.எழுதுபவரின் மனம் அல்ல.ஒருவர் வன் குரலில் வாசித்துக் காட்டி அறைகூவலாக ஒலிக்கச் செய்ய முடியும்.
ஆகவே எந்தவிதமான மறுப்பையும் மறுதலிப்பையும்,உணர்ச்சிகரமாக அதில் ஈடுபடாத ஒருவர் வழியாக மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று நூல்கள் வகுக்கின்றன.கேட்பவரின் முகத்தையும்,சூழ்நிலையையும் கணித்து அவன் செய்தியை சொல்ல வேண்டும்.கேட்பவன் உருவாக்கும் எதிர் வினைகளுக்கேற்ப தணிந்தும்,நயந்தும்,தேவை என்றால் மிஞ்சியும் தன் செய்தியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.அதன் பின்னர் அச்செய்தியை உறுதிப்படுத்த ஓலையை அளிக்கலாம்.
                     --ஜெயமோகன் எழுதிவரும் 'வெண் முரசு 'என்னும்  நூலிலிருந்து.

ஞானி அமைச்சர்

2

Posted on : Thursday, March 13, 2014 | By : ஜெயராஜன் | In :

சீன தத்துவ ஞானி லா வோ த்சுவினால் கவரப்பட்ட அந்த நாட்டு மன்னன் அவரை அமைச்சரவையில் மகாமந்திரியாக நியமித்தால் தனது நாடு சிறப்படையும் என்று கருதினான்.அருகில் இருந்த ஒரு அமைச்சர், ''மன்னா,ஞானிகளை வணங்கலாம்.அன்றாட வாழ்க்கையில் அவர்களை இணைத்துக் கொள்வது சரியாக வராது,''என்றார்.அதைப் பொருட்படுத்தாத மன்னன் ஞானியிடன் சென்று தலைமை அமைச்சர் பொறுப்பேற்குமாறு வேண்டினான்.ஞானி சொன்னார்,''ஆட்சி பற்றிய உனது கண்ணோட்டம் வேறு,எனது கருத்துக்கள் வேறு.அதனால் உன் முடிவு சரி வராது,'' என்றார். மன்னன் மீண்டும் வலியுறுத்தவே ஞானியும் தலைமை அமைச்சராகப் பொறுபேற்றார்.முதல் நாளே ஒரு வழக்கு விசாரணைக்கு ஞானியிடம் வந்தது.திருடன் ஒருவன் அவ்வூரில் புகழ்பெற்ற ஒரு பணக்காரனின் வீட்டில் திருடும் போது கையும் களவுமாகப் பிடிபட்டு விசாரணைக்கு நிறுத்தப் பட்டிருந்தான்.விசாரணையில் திருடனும் தான் செய்த திருட்டை ஒப்புக் கொண்டான்.ஞானி,''திருடியவனுக்கும்,திருட்டுக் கொடுத்தவனுக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை ''என்று தீர்ப்பளித்தார்.மன்னர் உட்பட அனைவரும் இத்தீர்ப்பு கேட்டு திடுக்கிட்டனர்.தான் செய்த தவறு என்ன என்று பணக்காரன் கேட்டதற்கு,''அவன் வறுமை காரணமாகத் திருடினான்.மற்றவர்களின் உழைப்பைத் திருடி,திறமை,சாமர்த்தியம் என்ற பெயரில் பணத்தைக் குவித்து அவனைத் திருடும் படி நீ தூண்டினாய்..நியாயமாய் உனக்கு அதிகதனடனை கொடுத்திருக்க வேண்டும்,''என்றார் ஞானி.தண்டனை பெற்றவன் மன்னரை சந்தித்து,''மன்னா,இவனை அமைச்சராய் வைத்திருக்காதீர்கள்.இன்று எனக்கு ஏற்பட்ட நிலை,நாளை உங்களுக்கும் ஏற்படலாம்.உங்கள் கஜானாவில் உள்ள சொத்துக்கள் ஏழைகளிடம் சுரண்டப்பட்டது என்று கூறு உங்களையும் சிறையில் அடைக்கலாம்.''என்றான்.குழப்பம் அடைந்த மன்னன் ஞானியிடமிருந்த பதவியை பறித்தான்.
குற்றம் நடைபெறக் காரணமான சூழ்நிலைகளை மாற்ற நடவடிக்கை எடுக்காமல் தண்டனைகள் அளிப்பதன் மூலம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியாது. மேலும் தந்திரமான குற்றவாளிகள் உருவாகும் சூழ்நிலை தான்  ஏற்படும்.

பொன்மொழிகள்-48

1

Posted on : Monday, March 10, 2014 | By : ஜெயராஜன் | In :

மகிழ்ச்சி என்பது பிரச்சினை ஏதும் இல்லாத நிலை அல்ல.
அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் திறமைதான்.
******
வாழ்க்கையில் பயப்பட வேண்டிய விஷயம் ஏதுமில்லை.
புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் தான் இருக்கின்றன.
******
முதல் முயற்சியில் தோல்வி அடையும் போது பயப்படாதே.
வெற்றிகரமான கணிதமே பூஜ்யத்தில்தான் ஆரம்பிக்கிறது.
******
உணர்வு என்பது ஒரு சித்திரம்-அதைக் கெடுத்து விடாதே.
முகம் ஒரு புத்தகம்.-அதைப் படி.
வாழ்க்கை விலை மதிப்பில்லாதது.-அதை இழந்து விடாதே.
நட்பு என்பதுஒரு கண்ணாடி.-அதை உடைத்து விடாதே.
******
கோவிலுக்குப் போவதால் மட்டும் ஒருவன் ஆன்மீகவாதி ஆகி விட முடியாது.
ஒர்க்சாப்பிற்குப் போவதால் மட்டும் ஒருவன் மெக்கானிக்காக முடியுமா?
******
 கண்ணீர் சொறிவதற்காகக் கண்கள்  படைக்கப் படவில்லை.
அச்சப்படுவதற்காக இதயம் படைக்கப் படவில்லை.
சோர்வு கொள்ளாதே,எப்போதும் உற்சாகத்துடன் இரு.
கண்ணீர் சிந்துபவர்முகத்தில் புன்னகை வரவழைக்க உன்னால்தான் முடியும்.
******
கடின உழைப்பு என்பது படிக்கட்டுகள்.
அதிர்ஷ்டம் என்பது லிப்ட் .
லிப்ட் சில சமயங்களில் வேலை செய்யாமல் போகலாம்.
ஆனால் படிக்கட்டு நீ மேலே செல்ல எப்போதும் உதவும்.
******
வன்முறை துளியுமில்லா மனிதனின் அண்மை மிருகங்களைக்கூட ஆனந்தம் அடையச்  செய்யும்.
******
பழிச் சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம்.
******
உலகின் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்.
******

என்ன செய்ய?

1

Posted on : Saturday, March 08, 2014 | By : ஜெயராஜன் | In :

பிறர் ஒவ்வொருவரும்,'இதைச் செய்கிறார்கள்,அதைச் செய்கிறார்கள்,இதை சாதிக்கிறார்கள்',நீ மட்டும் எப்படி நின்று விடுவது?போய்க்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது.இன்னும் அதிக தூரம்,அதிக வேகத்தில்,இன்னும் அதிக கம்பீரத்தோடு,இன்னும் அதிக எழுச்சியோடு என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.ஆனால் எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் தெரியவில்லை.எது சேரும் இடம் என்பது மட்டும் தெரிவதில்லை.எதை சாதிக்க வேண்டும்?பணமா,கௌரவமா?அப்படித்தான் அவை நிறைய வந்தாலும் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்?
பெரிய வீட்டை வாங்கி வாழலாம்.நீதானே வாழப்போவது?வீடல்லவே!சிறிய வீட்டில் நிம்மதி இல்லை என்றால் பெரிய வீட்டில் அதிகமாக நிம்மதியை  இழக்கப் போகிறாய்.உன்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்றால் பணம்,புகழை வைத்து என்ன செய்யப் போகிறாய்?உலகம் முழுக்கத் தெரிந்தவன் ஆகலாம்.அதனால் ஆகப் போவதென்ன?உன்னுடைய உள்ளிருட்டு அப்படியேதான் இருக்கப் போகிறது.
******
மற்றவர்களை நேசியுங்கள்;மதியுங்கள்.மற்றவர்களை விட மேலானவராகவோ,உயர்ந்தவராகவோ ஆக முயலாதீர்கள்.மற்றவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
******

தெரியுமா-7

0

Posted on : Friday, March 07, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆணுக்குஉடலின் மற்ற பாகங்களில் வளர்வதைக்காட்டிலும் முகத்தில் வேகமாக முடி வளர்கிறது.
******
கையில் நடு விரலில் நகம்,மற்ற விரல்களைக் காட்டிலும் வேகமாக வளர்கிறது.
******
நம் தலையில் வளரும் முடியின் சராசரி வயது மூன்றிலிருந்து ஏழு வருடம்.
******
கை நகங்கள்,கால் நகங்களைவிட நான்கு பங்கு வேகத்துடன் வளர்கின்றன.
******
பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண் இமைகளைக் கொட்டுகிறார்கள்.
******
பெண்களை விட ஆண்களுக்குத்தான் விக்கல் அதிகம் வருகிறது.
******
உங்கள் ஆயுள் முழுவதும் உங்கள் வாயில் ஊறும் உமிழ் நீரானது இரண்டு நீச்சல் குளத்தை நிரப்பக் கூடியதாகும்.
******
பிறக்கும் குழந்தைகளுக்கு நிறங்களைப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அவர்களுக்கு கருப்பும் வெள்ளையும் தான்  தெரியும்.(நிறக்குருடு)
******
ஒரு மனிதனால் இருபது நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடியும்.ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் நீர் அருந்தாமல் இருக்க முடியாது.
******

மாடு மாதிரி

1

Posted on : Thursday, March 06, 2014 | By : ஜெயராஜன் | In :

மனைவி டாக்டரிடம் சொன்னாள்,''டாக்டர்,நீங்கள் என் கணவன் உடல் இளைக்க ,அவரை பச்சைக் காய்கறிகள் சாப்பிடச் சொன்னீர்கள்.எங்கள்  வீட்டுத் தோட்டத்திலேயே எல்லாக் காய்கறிகளும் விளைவதால்,நான் சமைத்துக் கொடுத்தேன்.அவருக்கு அது பிடிக்கவில்லை.தோட்டத்தில் பச்சைக் காய்கறிகளை ,மாடு மாதிரி நான் மேய்ந்து கொள்கிறேன் என்று சொன்னார்.அன்றிலிருந்து தினமும் மூன்று வேளையும் அவரே தோட்டத்திற்கு சென்று காய்கறிகளை சாப்பிடுகிறார்.எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது ,''டாக்டர்,''அதனால் என்னம்மா, நல்லது தானே,இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்..அவள் சொன்னாள்,''தினமும் இரவில் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டதை அசை போடுகிறாரே,டாக்டர்.''
******
ஆசிரியர்  வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.அப்போது பியூன் வந்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகக் கூறினார்.தான் இல்லாதபோது மாணவர்கள் அமைதியாக இருக்க,அவர்களைப் பார்த்து,''நான் வரும் வரை ஆங்கிலப் புத்தகத்தில் பதினைந்தாம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.வந்ததும் கேட்பேன்,யாராவது படிக்காமல் இருந்தால்,அடி உண்டு,''என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றார்.சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்து ,அவர் சொன்ன பாடத்தைப் படித்தானா என்று கேட்க எல்லோரும் படித்ததாக சொன்னார்கள்.பின் ஆசிரியர்,''உண்மையிலேயே யாராவது நான் சொன்னதைப் படித்திருந்தால் அந்த பாடம் இருக்கும் பக்கத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்ட வேண்டும்,''என்றார்.உடனே மாணவர்கள் அனைவரும் பரபரவென்று புத்தகத்தைத் திருப்பினார்கள். அந்தோ!
அப்புத்தகத்தில் மொத்தமே பதினான்கு பாடங்கள் தான் இருந்தன.
******
கணவன் மீது கோபம் கொண்ட மனைவி,''நீங்கள் நன்றாக இருக்க மாட்டீர்கள்.கொஞ்சம் கொஞ்சமாக வேதனை அனுபவித்து சாவீர்கள்,''என்று கத்தினாள்.வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த கணவன் கேட்டான்,''அப்போ,என்னை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்கிறாயா?''
******

முன் வைத்த காலை...

6

Posted on : Tuesday, March 04, 2014 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்காக இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார் கொலம்பஸ்.பல நாட்கள் ஆகியும் கரை எதுவும் தென்படவில்லை.இருபது நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இருபது நாட்களுக்குத்தன உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பசிடம்,''இப்போது திரும்பினால்,பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி விடலாம்.கடலில் வீணாக உயிர்விட வேண்டாம்,''என்றனர்.ஆனால் கொலம்பஸ் முன் வைத்த காலைப் பின் வைக்கத் தயாராயில்லை.தமது பாதை முன்னோக்கியே தவிர பின்னோக்கி அல்ல என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.ஆனால் கொலம்பஸின் பேச்சைக் கேட்டால்  கடலில் தான் எல்லோருக்கும் சமாதி என்று கூறி மாலுமிகள் கொலம்பசுக்கு எதிராகத் திரும்பினர்.கப்பலின் பொறுப்பை அவர்கள் ஏற்கத் தீர்மானம் செய்து விட்டார்கள்.அப்போது கொலம்பஸ் ஒரு முக்கியமான முடிவெடுத்தார். மனதுக்குள் சிறு கணக்கு ஒன்று போட்டார்.அவர் மாலுமிகளிடம் சொன்னார்,''நண்பர்களே,உங்கள் கவலை எனக்குப் புரிகிறது.இருபது பேருக்கு இருபது நாட்களுக்குத் தேவையான உணவு இருக்கிறது.ஒருவர் குறைந்தால்  கூடுதலாக ஒரு நாளைக்கு உணவு இருக்கும்.எனவே இன்னும் ஒரு நாள் கப்பலை முன்னோக்கி செலுத்துங்கள்.அதற்குள் கரை தென்படாவிட்டால் என்னைக்  கொன்று விட்டுத் திரும்புங்கள்.அப்போது உங்களுக்கு ஊர் போய் சேரும்வரை உணவு சரியாக இருக்கும்,''என்றார்.கொலம்பஸ் இவ்வாறு சொன்னதும் மற்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி.ஒன்றும் சொல்லாது கப்பலை முன்னோக்கி செலுத்தினர்.அடுத்த சில மணி நேரங்களிலேய கரை தென்பட்டதும் எல்லோரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
இன்றும் கொலம்பஸின் பெயர் உலகில் நிலைத்திருப்பதற்கு கொலம்பஸ் சிக்கலான தருணத்தில் எடுத்த சரியான முடிவுதான் காரணம்.