உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தற்கொலை

2

Posted on : Friday, September 28, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்,''அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு பயமாக இருக்கிறது.''அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்,''தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய் இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,''என்றார்.
********
செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.அவன் சொன்னான்,''அய்யா,இந்த செருப்பை என் முதலாளி எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.''அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர் இவ்வாறு தீர்ப்பு கூறினார்,''செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.''
********
ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டான்.தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ''தம்பி,நலமாக இருக்கிறாயா?''என்று கேட்டுவிட்டு,''ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது மாதிரி தெரியவில்லையே!''என்று அன்புடன் கேட்டான்.தம்பி சற்றே வருத்தத்துடன்,''நீ தான் நான் அடிக்கடி முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் சேட்டை ஒளித்து  வைத்து விட்டாயே!''என்றானே பார்க்கலாம்!
********

பழம் புளிக்குதே!

1

Posted on : Thursday, September 27, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தோட்டக்காரர் தன தோட்டத்தைப் பராமரிக்க ஒரு வயதான சாமியாரை நியமித்திருந்தார்.அவரும் கடுமையாய் உழைத்து அந்தத் தோட்டத்தை நன்றாகக் கவனித்துக் கொண்டார்.ஒரு நாள் தோட்டத்தின் உரிமையாளர் அங்கு வந்தபோது சாமியாரிடம்,மாமரத்திலிருந்து நான்கு மாம்பழங்களைப் பறித்து வரச் சொன்னார்.சாமியாரும் அவ்வாறே செய்தார்.மாம்பழத்தை ஆவலுடன் ருசி பார்த்த அவரின் முகம் அஷ்ட கோணலாகியது.அவர் சாமியாரிடம்,''என்னங்க பழம் ,இப்படிப் புளிக்குதே!''என்று கேட்டார்.சாமியார் அமைதியாக சொன்னார்,''நீங்கள் சம்பளம் கொடுத்து என்னை இங்கு நீங்கள் அமர்த்தியிருப்பது தோட்டத்தை நன்கு பராமரிப்பதற்கே.இந்த தோட்டத்தில் விளையும் காய் கனிகளை சாப்பிடுவதற்கு அல்ல.நான் எதையும் பறித்து சாப்பிடுவதில்லை.உங்கள் அனுமதியில்லாமல் எதையும் உண்ண  மாட்டேன்.அதனால் இந்தப் பழம் இனிக்குமா,புளிக்குமா என்பது எனக்குத் தெரியாது.''

கவலை இல்லை

1

Posted on : Thursday, September 27, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது.ஓநாய்  அதை சாப்பிட எத்தனிக்கையில் தன்னை விட்டு விடுமாறு அணில் மன்றாடியது.அப்போது ஓநாய் ,''நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்,''என்றது. அணிலும்,''உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்?''என்று கேட்கவே ஓநாயும்  பிடியைத் தளர்த்தியது.உடனே மரத்தில் தாவி ஏறிய அணில்,''இப்போது உன் கேள்வியைக் கேள்,''என்றது.ஓநாய் கேட்டது,''உன்னை விட நான் பலசாலி.ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே!இது எப்படி சாத்தியம்?''அணில் சொன்னது,''நீ எப்போதும் கொடுமையான செயல்களையே செய்கிறாய்.அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.ஆனால் நான்  எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை.மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை  மட்டுமே சாப்பிடுகிறேன்..அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.''

ஜோதிடம்

1

Posted on : Wednesday, September 26, 2012 | By : ஜெயராஜன் | In :

புகழ் பெற்ற ஜோதிடர் ஒருவர் இருந்தார்.அவர் சொல்வது அப்படியே  பலிக்கும் என்று அந்த ஊர் மக்கள் நம்பினார்கள்.அதே ஊரில்  இருந்த  ஒரு பணக்காரக் கஞ்சன் செலவு செய்யாமல் அவரிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டான்.ஒரு திருமண  வீட்டிற்கு சென்ற கஞ்சன் அங்கு ஜோதிடரும் வந்திருப்பதை அறிந்து அவர் பக்கத்தில் அமர்ந்தான்.மெதுவாக ஜோதிடம் பற்றி பொதுவாகப் பேசிவிட்டு தனது பிரச்சினைகள் பற்றி சொன்னான்.ஜோதிடரும் ஜாதகத்தைப் பார்த்தால்தான் தீர்வு சொல்ல முடியும் என்று சொல்ல இதற்காகவே காத்திருந்த கஞ்சன் தனது ஜாதகத்தை எடுத்து அவரிடம் நீட்டினான்.இடம் காலம் பாராது ஜாதகத்தைப் பார்க்கச் சொல்லுகிறாரே என்ற வருத்தம் இருந்த போதிலும் ஜாதகத்தைப் பார்த்து சில விளக்கங்களையும் தீர்வுகளையும் ஜோதிடர் சொன்னார்.அதற்குள் விருந்துக்கு அழைப்பு வரவே இருவரும் எழுந்தார்கள்.ஜோதிடர் பணம் கேட்டு விடுவாரோ  என்று நினைத்து,கஞ்சன் சொன்னான்,''அய்யா,நான் உங்கள் வீட்டிற்கு வந்து ஜோதிடம் கேட்கவில்லை.இங்கு விருந்துக்கு  வந்த இடத்தில் நீங்கள் ஜோதிடம் சொன்னதால் இது தொழில் முறை ஆகாது. எனவே இதற்கு நான் பணம் கொடுக்க வேண்டியதில்லை,''என்றான்.ஜோதிடரும் மெதுவாக,''என் வீட்டிற்கு வந்து தொழில் முறையில் ஜோதிடம் கேட்பவர்களுக்கு மட்டுமே நான் சொல்வது பலிக்கும்.மற்ற இடத்தில் நான் சொல்வது பலிக்காது.''இஞ்சி தின்ற குரங்கு போல கஞ்சன் செய்வதறியாது நின்றான்.

ஜாதி என்ன?

1

Posted on : Wednesday, September 26, 2012 | By : ஜெயராஜன் | In :

கேரளாவில் ஸ்ரீ நாராயணகுரு என்றொரு மகான் இருந்தார்.அவர் ஒருநாள் தோட்டத்தில் வரப்பு வழியாக  நடந்து கொண்டிருந்தார்.அப்போது எதிரில் நம்பூதிரி ஒருவர் வந்தார்.நம்பூதிரி கேரளத்தில் ஒரு உயர்ந்த ஜாதியினர்.அவர்கள் வந்தால் எதிரில் வருபவர்கள் வழி விட வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத சட்டம்.ஆனால் நாராயணகுரு வழிவிட்டு ஒதுங்கி நிற்கவில்லை.அவர் யாரென்று அறியாத நம்பூதிரி அவர் வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று எதிர்  பார்த்தார்.அவர் அவ்வாறு செய்யாது போகவே அவரைப் பார்த்து,''நீர் என்ன ஜாதி?''என்று கேட்டார்.குரு அவர்கள்,''என்னைப் பார்த்தால் என்ன ஜாதி என்று உமக்குத் தோன்றுகிறது?''என்று கேட்டார்.உடனே நம்பூதிரி,''ஒருவரைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியுமா ஜாதியை?''என்று பதில் கேள்வி போட்டார்.நாராயணகுருவும் உடனே,''பார்த்துத் தெரியாத ஒரு விசயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமா?''என்று எதிர் கேள்வி  கேட்க,இவர் ஒரு மகானாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து அவருக்கு வழிவிட்டு நம்பூதிரி ஒதுங்கி நின்றார்.

தாமதம்

1

Posted on : Tuesday, September 25, 2012 | By : ஜெயராஜன் | In :

முகலாய மன்னர் அவுரங்கசீப் இஸ்லாம் மதத்தில் மிகுந்த பற்றுடையவர்.எவ்வளவு வேலைகளிருந்தாலும் தொழுகை நேரத்தில் தவறாமல் தொழ வந்திடுவார்.ஒரு நாள் தொழுகை நேரத்தில் அனைவரும் கூடி விட்டனர்.ஆனால் அன்று என்ன காரணத்தாலோ மன்னர் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை.எனவே அந்த மசூதியின் இமாம் தொழுகையை ஆரம்பிக்காது சற்று தாமதித்தார்.அப்போது மன்னரும் வந்து விட்டார்.தொழுகை ஆரம்பம் ஆகி விட்டது.மன்னர் அமைதியாக அதில் கலந்து கொண்டார்.முடிந்ததும் அரண்மனை திரும்பினார்.உடனடியாக அந்த  இமாமை பதவியிலிருந்து தூக்கி எறிந்தார்.அமைச்சர் கேட்டார்,''ஒழுக்கத்தில் சிறந்த அந்த இமாமின் பதவியை ஏன் பறித்தீர்கள்?''மன்னர் சொன்னார்,''நான் இந்தப் பூவுலகில் ஒரு சிறு நிலப் பகுதியை சிறிது காலம் ஆளப் போகிறவன்.எனக்காக இந்தப் பேரண்டத்தை நிரந்தரமாக ஆளும் இறைவனுக்கான தொழுகையை அவர் தாமதப் படுத்தி விட்டாரே.அதை எப்படி ஏற்றுக் கொள்வது?''

சோதனை

1

Posted on : Tuesday, September 25, 2012 | By : ஜெயராஜன் | In :

வடக்கே காசி,ஹரித்துவார் என்று ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார் ஒரு சாமியார்.ஊர் எல்லையிலேயே அவரை வரவேற்றனர் அவருடைய சீடர்கள்.ஊரில் ஏதாவது விசேசம் உண்டா என்று சாமியார் கேட்டார்.ஒரு சீடன் அழுது  கொண்டே சொன்னான்,''குருவே,நேற்று பெய்த கடும் மழையில்  என் வீடு இடிவிழுந்து விட்டது,''சாமியார் அவனிடம், ''இதெல்லாம் சென்ற பிறவியில் நீ செய்த பாவங்களுக்கான தண்டனை. மனதை தேற்றிக்கொள்.''என்றார்.அவன் மீண்டும் அழுது  கொண்டே சொன்னான்,''குருவே,மழையில்  தங்கள் ஆசிரமும் முழுமையாக சேதம் அடைந்து விட்டது.''அதிர்ச்சியடைந்த குரு,பின் சுதாரித்துக் கொண்டு,''என்ன செய்வது,இறைவன் நல்ல பக்தர்களை சில சமயம் இப்படி சோதிப்பதுண்டு.''என்றார்.

பந்தயம்.

1

Posted on : Monday, September 24, 2012 | By : ஜெயராஜன் | In :

செல்வந்தரான  இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெரியவர் இறந்து விட்டார்.அவருக்கு இரண்டு பையன்கள். அவருடைய உயில் எடுத்து படிக்கப்பட்டது.உயிலில் அவர்,''என்னுடைய இரண்டு மகன்களும் நான் இறந்தபின் தங்கள் ஒட்டகங்களில் ஏறி மெக்கா செல்ல வேண்டும்.யாருடைய ஒட்டகம் மெக்காவுக்குக் கடைசியாகச் செல்கிறதோ,அவருக்கே எனது சொத்துக்கள் அனைத்தும் உரித்தாகும்,''என்று வித்தியாசமாக எழுதியிருந்தார்.மகன்கள் இருவரும் தங்கள் ஒட்டகங்களில் ஏறி மெக்கா நோக்கி சென்றனர்.எவ்வளவு மெதுவாகப் போக முடியுமோ அவ்வளவு மெதுவாகப் போனார்கள்.அப்படியும் மெக்கா எல்லைக்கு வந்து விட்டார்கள்.இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மெக்கா எல்லையை சுற்றி சுற்றி வந்தனர்.அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் இவர்களின் நிலையைக் கண்டு காரணம் கேட்டார்.அவர்கள் பந்தய விபரத்தை சொல்லி இதற்கு முடிவு தெரியாமல் இருப்பதாகச் சொன்னார்கள் .கடைசியாகச் செல்பவர்தான் வெற்றி பெறுவார் என்றால் ஒருவரும் மெக்காவிற்குப் போக மாட்டார்களே!பெரியவர் யோசித்தார்.பின் அவர்களைப் பார்த்து,''நீங்களிருவரும் உங்கள் ஒட்டகங்களை மாற்றிக் கொள்ளுங்கள்,'' என்று யோசனை சொன்னார்.அவர்களுக்கு உடனே பொறி தட்டியது இருவரும் தங்கள் ஒட்டகங்களை மாற்றிக் கொண்டு மெக்காவை நோக்கிப் பறக்க ஆரம்பித்தனர்.

குதிரையின் வேகம்

0

Posted on : Monday, September 24, 2012 | By : ஜெயராஜன் | In :

மன்னர் ஒருவரை புகழ்ந்து பாடி பரிசு பெறச் சென்றார் ஒரு தமிழ்ப் புலவர்.மன்னரும் அவரது பாடலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து,குதிரை லாயப் பொறுப்பாளரை அழைத்து,புலவருக்குஒரு குதிரையை பரிசாகக் கொடுத்து அனுப்பச் சொன்னார்.அந்த பொறுப்பாளருக்கு, நல்ல குதிரை எதையும் புலவருக்குக் கொடுக்க மனதில்லை.எனவே அவர் புலவருக்கு இருப்பதிலேயே வயதானதும்.தொத்தலுமான  ஒரு குதிரையை தேர்ந்தெடுத்து புலவரிடம் கொடுத்தார்.மறுநாளும் மன்னரைக் காண புலவர் அரண்மனைக்கு வந்தார்.ஆனால் அவர் நடந்தே வந்தார்.மன்னர் புலவரைப் பார்த்து,''ஏன் நடந்து வருகிறீர்கள்?குதிரையில் வந்திருக்கலாமே?''என்று கேட்டார்.புலவர்,''மன்னா,நீங்கள் பரிசாகக் கொடுத்த குதிரை சாதாரணக் குதிரை அல்ல.மிக வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை.வந்த ஒரே நாளில் மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்குப்  பறந்து விட்டது என்றால் அதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,'' என்றார்.ஆம்,குதிரை வந்த ஒரே நாளில் இறந்து விட்டதைத் தான் புலவர் அவருக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டார்.நடந்ததை அறிந்த மன்னர் வருந்தி அவருக்கு வேறு பரிசுகள் கொடுத்து அனுப்பினார்.

எனக்கு தெரியாது.

0

Posted on : Sunday, September 23, 2012 | By : ஜெயராஜன் | In :

மிகச்சிறந்த தமிழ் அறிஞரான மறைமலை அடிகள் ஆரம்ப காலத்தில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார்.அவருக்கு நேர்முகத் தேர்வு நடந்தது.தேர்வில் தமிழ் இலக்கணத்தில் பல கேள்விகள் கேட்கப்பட்டன.எல்லாவற்றிற்கும் உடனுக்குடன் பதில்களை அவர் கூறினார்.தேர்வுக் குழுவிலிருந்த அனைவருக்கும் திருப்தி.இருந்தாலும் ஒருவர் இறுதியாக ஒரு கேள்வி கேட்க விரும்பினார்.அவர் அடிகளாரிடம்,குற்றியலுகரத்திற்கு  இரு உதாரணங்கள் சொல்லுமாறு கேட்டார்.அவரும் உடனே,''எனக்கு தெரியாது,''என்றார்.கேள்வி கேட்டவர்,''கடினமான கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்த உங்களால் இந்த சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையா?''என்று கேட்டார்.அடிகளார்,''சரியான பதிலைத்தானே நான் சொன்னேன்,''என்று சொல்ல கேட்டவர் விழிக்க,அருகிலிருந்த இன்னொருவர்,''சரிதானே அய்யா,எனக்கு என்ற வார்த்தையும்,தெரியாது என்ற வார்த்தையும் குற்றியலுகரம்தானே,''என்றார்.அனைவரும் சிரித்துவிட்டனர்.

வாடகை

1

Posted on : Sunday, September 23, 2012 | By : ஜெயராஜன் | In :

சைக்கிள் வாடகைக்கு விடும் கடைக்கு ஒருவன் வந்து ஒரு சைக்கிள் வாடகைக்கு ஒரு நாள் முழுக்க வேண்டும் என்று கேட்டான்.வந்தவனை கடைக்காரர் பார்த்தார்.அவனை அவர் இதற்குமுன் பார்த்ததே இல்லை.எனவே அவன் ஊருக்குப் புதுசா என்று கேட்க அவனும் ஆமாம் என்றான். ''ஏனப்பா,முன்னேபின்னே தெரியாத உன்னை நம்பி ஒரு சைக்கிளை ஒரு நாள் வாடகைக்கு எப்படி விட முடியும்?''என்று கேட்க அவன்,''அய்யா,எனக்கு அவசரமாய் ஒரு இடத்திற்குப் போக வேண்டியிருக்கிறது.என்னை நீங்கள் நம்பலாம்,''என்றான்.சைக்கிள் கடைக்காரர் சிறிது நேரம் யோசித்துவிட்டு,''சரி, சைக்கிளை நான் தருகிறேன்.ஆனால் நீ சைக்கிளின் விலைக்கு உண்டான பணத்தைக் கட்டி எடுத்துப்போ.நாளைக்கு சைக்கிளைத் திரும்பக் கொடுக்கும்போது உன் பணத்தை வாங்கிக் கொள்,''என்றார்.அவனும் சரியென்று கூறி அவர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துச் சென்றான்.மறுநாள் சைக்கிளைத் திரும்ப ஒப்படைத்ததும் கடைக்காரர் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்.அவனும் கிளம்பினான்.கடைக்காரர்,
 என்னப்பா, வாடகை கொடுக்காமல் போகிறாயே?''என்று கேட்டார்.அவன் சொன்னான்,''நேற்று நான் சைக்கிளை உங்களிடம் விலைக்கு வாங்கினேன்.எனவே சைக்கிள் என்னுடையதாகி விட்டது.இன்று  சைக்கிளை உங்களுக்கு விற்று விட்டேன்.இப்போது சைக்கிள் உங்களுடையது. என்  சைக்கிளை நான் உபயோகப் படுத்தியதற்கு வாடகை எதற்குக் கொடுக்க வேண்டும்?''கடைக்காரர் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

அரசாங்கம்

1

Posted on : Friday, September 21, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கூத்தாடி தன்  கழுதை,குரங்கு,நாய் இவற்றுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தான்.அந்த ஊரில் ஒரு விசேசமான கோவில் இருப்பதாகவும் அங்கு வேண்டிக் கொண்டது அப்படியே நடக்கும் என்று சொன்னார்கள் கூத்தாடியும் தன்  பரிவாரத்துடன் அக்கோவிலுக்கு சென்றான்.கழுதை,குரங்கு,நாய் மூன்றும் கடவுளிடம்  தங்களுக்கு பிடித்ததை வேண்டிக்கொண்டன.கூத்தாடி,''நீங்கள் எல்லாம் என்ன என்ன வேண்டிக் கொண்டீர்கள் என்பதை என்னிடம் சொல்லுங்கள்.நான் அதில்லாமல் வேறேதேனும் வேண்டிக் கொள்கிறேன்.'' என்றான். கழுதை,''என்னை இந்த நாட்டின் அதிபதியாக்க  வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்,''என்றது.குரங்கு ,''என்னை தலைமை அமைச்சராக ஆக்க  வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன் ''என்றது.நாயோ,''என்னை தலைமை மத குருவாக ஆக்க வேண்டும்,என்றுதான்  கேட்டேன்,'' என்றது.  கூத்தாடி கடவுளிடம் மன்றாடினான்,''ஆண்டவனே,என் கண்ணைக் குருடாக்கிவிடு.இவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூத்தை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது.''

எவ்வளவு நிலம்?

0

Posted on : Friday, September 21, 2012 | By : ஜெயராஜன் | In :

உவமைக் கவிஞர் சுரதாவைப் பார்க்க உயரம் குறைவான ஒருவர் வந்தார்.அவர் சுரதாவிடம்,''நீங்கள் ஒரு பாடலில் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா,ஆறடி நிலமே  சொந்தமடா 'என்று சொல்லியிருக்கிறீர்கள். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ,'சட்டப்படி பார்த்தா எட்டடிதான் சொந்தம்'என்று எழுதியுள்ளார்.எது சரி?''என்று கேட்டார்.அதற்கு சுரதா சொன்னார்,''பட்டுக்கோட்டையார் நன்கு வளர்ந்தவர்.எனவே அவருக்கு எட்டடி தேவைப்பட்டது.நான் சராசரியான ஆள்.எனவே எனக்கு ஆறடி போதும்.உன்னைப்போன்ற குள்ளமான ஆட்களுக்கு மூன்றடியே போதும்.''கேட்டவர் உட்பட சுற்றியிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.

நரகம்

1

Posted on : Thursday, September 20, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு குரு தனது சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, பாவம் செய்பவர்களை நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் எப்படிப் போட்டு வாட்டுவர் என்பது பற்றி விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.பின் அவர்களிடம்,''நீங்கள்  சொர்க்கம் போக விரும்புகிறீர்களா,நரகம் போக விரும்புகிறீர்களா?''என்று கேட்டார்.சீடர்கள்,''குருவே,நீங்கள் எங்கே செல்ல விரும்புவீர்கள்?''என்று கேட்டனர்.குரு மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்,'' நான் சிறு வயதில் நிறைய தவறுகள் செய்துள்ளேன்.எனவே நான் நரகம்தான் செல்வேன்,''உடனே சீடர்கள் அனைவரும் ஒரே குரலாய்,''அப்படியானால் நாங்களும் நரகம் தான் வர விரும்புகிறோம்.'' என்றனர்.குரு திகைத்துப் போனார்.கண்களில் நீர் மல்க.''என்மீது உங்களுக்கு அவ்வளவு பக்தியா?''என்று கேட்டார்.சீடர்கள் சொன்னார்கள்,''நரகத்தில் உங்களை எண்ணெய்க் கொப்பரையில் எப்படி போட்டு வாட்டுவார்கள் என்று நாங்கள் பார்க்க வேண்டாமா?''

புலியின் வீரம்

0

Posted on : Thursday, September 20, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு அரசியல்வாதி ஊரில் கோவில் கட்டுகிறேன் என்று நன்கொடை புத்தகத்துடன் அலைந்து கொண்டிருந்தார்.அவரைப் பார்த்து எல்லோரும் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர்.ஒரு நாள் அவர் நன்கொடை புத்தகத்தை எடுத்துக் கொண்டு அடுத்த ஊருக்கு காட்டு வழியே சென்றார்.வழியிலே ஒரு வேடனை அவர் சந்தித்தார்.காட்டிலே ஏதாவது மிருகம் வந்தால் என்ன செய்வது என்று எண்ணி அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.சென்ற வழியில் திடீரென  ஒரு புலி வந்தது. இருவரையும் நோக்கி அது ஆவேசமாகப் பாய்ந்தது.வேடன்  வில்லை எடுத்து அதன் மீது அம்பை எய்தான்.புலி அதைக் கண்டு கொஞ்சம் கூட அஞ்சவில்லை.ஆவேசமாகப் பாய்ந்தது.அரசியல்வாதிக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டது.செய்வது அறியாது கையிலிருந்த நன்கொடை புத்தகத்தை புலியின் மீது வீசினார். உடனே புலி அவசரமாக பின்னோக்கி ஓடியது. இதை  முழுவதும்   பார்த்துக் கொண்டிருந்த புலியின் குட்டி அதனிடம் கேட்டது, ''வேடனைப் பார்த்து அஞ்சாத நீ ஏன் திடீரெனத்  திரும்பி ஓடி வந்தாய்?''அந்தப் புலி சொன்னது,''அந்த வேடன் வீரமுடையவன்.அவனிடம் தாராளமாக சண்டை போடலாம்.ஆனால் அருகிலிருந்த அரசியல்வாதி  நன்கொடைப் புத்தகத்தை எறிந்தானே,அதற்குக் கொடுக்க பணம் நம்மிடம் எங்கே இருக்கிறது? அதனால்தான் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்று ஓடி வந்துவிட்டேன்.''

சாலையைக் கடக்க

2

Posted on : Sunday, September 09, 2012 | By : ஜெயராஜன் | In :

வாகனப் போக்குவரத்து மிக அதிகம் உள்ள சாலை அது.ஒரு மனிதர் அச்  சாலையைக் கடக்க நீண்ட நேரம் முயற்சி செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவரால் கடக்க முடியவில்லை.அப்போது சாலையின் எதிர்ப் பக்கம் முல்லா நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். முல்லா அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான்.இங்கிருந்தபடியே அவர் முல்லாவிடம்,''இந்த சாலையை எப்படிக் கடந்து அந்தப் பக்கம் சென்றீர்கள்?''என்று சப்தம் போட்டு வினவினார்.முல்லாவும் அதே போல சப்தத்துடன் சொன்னார்,''நான் இந்த சாலையைக் கடந்து வரவில்லை.பிறந்ததிலிருந்த நான் இந்தப் பக்கம்தான் உள்ளேன்.''

என்ன கொடுமையடா சாமி !

1

Posted on : Sunday, September 09, 2012 | By : ஜெயராஜன் | In :

மிகவும் பேர்பெற்ற ஒரு மதத் தலைவர் மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தார்.அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும்  ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர்.மதத் தலைவர்  அவர்களிடம் பேச விரும்பினார். அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர்.அவரும்  பேச ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர்  பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய இமைகள் கூட அசையவில்லை.மதத் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.மன நல மருத்துவ மனை என்பதால் மதத் தலைவர் எதையும் எதிர் பார்க்கவில்லை.ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார்.பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.மதத் தலைவரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார். பின்னர் வார்டனிடம் அந்த ஆள் என்ன சொன்னார் என்று வினவ வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார்,'''என்ன கொடுமையடா சாமி,இவனெல்லாம் வெளியே இருக்கிறான்,நான் உள்ளே இருக்கிறேன்.'என்கிறான் அய்யா,''

பொறாமை

2

Posted on : Saturday, September 08, 2012 | By : ஜெயராஜன் | In :

பொறாமை என்பது என்ன?அது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தலேயாகும்.நம்மை அடுத்தவர்களுடன் ஒப்பிடத்தான் நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம்.ஒப்பிடுவது ஒரு முட்டாள் தனமான செயல்.ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.ஒப்பிட முடியாதவர்கள்.நீ எப்போதும் நீதான்.உன்னைப்போல யாரும் இல்லை.நீயும் யாரையும் போல இருக்கத் தேவையில்லை.கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார் .நகல்களை அல்ல.
பக்கத்து வீட்டைப் பார்த்தால் மிகப் பெரிய விஷயங்கள் நடப்பது போல நமக்குத் தெரியும்.புல்  பச்சையாகத் தெரியும்.நமது வீட்டு ரோஜாவை விட அடுத்த வீட்டு ரோஜா அழகாகத்  தெரியும்.உன்னைத் தவிர மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும்.இதே கதைதான் மற்றவர்களுக்கும்.அவர்களும் தங்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.அவர்களுக்கு உன் வீட்டுப் புல்  பச்சையாய்த் தெரியும்.அவர்கள் நீ நல்ல மனைவியை அடைந்ததாக நினைக்கலாம்.நீயோ அவளைப் பார்த்து சலித்துப் போயிருப்பாய்.
ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட்டு நரகத்தை உருவாக்கி விடுகிறோம்.கீழ்த்தரமானவர்கள் ஆகி  விடுகிறோம்.எல்லோரும் துன்பப்பட்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.எல்லோரும் எல்லாவற்றையும் இழந்தால் நல்லது என்று நினைக்கிறோம்.எல்லோரும் வெற்றி பெற்றால் நமக்கு கசக்கிறது.
நீ உனது உள்  பக்கத்தை அறிவாய்.ஆனால் அடுத்தவர்களின் வெளிப் பக்கத்தை மட்டுமே அறிவாய்.அதுதான் பொறாமையை உருவாக்குகிறது. யாரும் உன்னுடைய உட்புறத்தில் எப்படிப்பட்டவன் என்பதை அறிவதில்லை.நீ உனது உட்புறத்தில் வெறுமையை,மதிப்பில்லாத தன்மையை உணர்கிறாய் .அதேபோல்தான் மற்றவர்களும்.வெளியில் பார்த்தால் சிரித்த முகத்துடன் இருப்பார்கள்.ஆனால் அவர்களது சிரிப்பு போலியாக இருக்கும்.ஆனால் அது போலியானது என்று உன்னால் எப்படி கண்டு கொள்ள முடியும்/.ஒரு வேளை , அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி இருக்கலாம்.ஆனால் நீ வெளியில் மட்டும் சிரிப்பது போலியானது என்பதை நிச்சயமாக உணர்வாய்.ஏனெனில் உனது உள்ளத்தில் நீ மகிழ்ச்சியுடன் இல்லை.எல்லோரும் வெளித்தோற்றத்தை அழகாக,பகட்டாக ஆனால் எமாற்றிபவையாகக் கொண்டுள்ளனர்.

பகிர்வு

1

Posted on : Friday, September 07, 2012 | By : ஜெயராஜன் | In :

பேராசிரியர் ஒருவர் ஜென் ஞானியிடம் கேட்டார்,''பல மணி நேரம் உங்களிடம் பேசி விட்டுச் சென்றாலும்,சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றாலும் என் மனம் அமைதியாகி விடுகிறது.ஆனால்,வீட்டிற்குப் போனதும் மீண்டு துக்கம் என்னைத் தொற்றிக் கொள்கிறதே,ஏன்?அதே சமயம் நீங்கள் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறீர்களே,அது எப்படி?''சிரித்தபடி ஜென் ஞானி சொன்னார்,''நான் உங்களுடன் என்னுடைய ஆனந்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.நீங்கள் எப்போதும் என்னோடு உங்கள் துக்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறீர்கள்.அதுதான் காரணம்.''

சிரிப்பு வருதா ?

0

Posted on : Friday, September 07, 2012 | By : ஜெயராஜன் | In :

''நான் எழுதிய கதையைப் படித்தாயா?''
'படித்தேன்.ஜீரணிக்கவே முடியவில்லை.'
''உன்னைப் படிக்கத்தானே சொன்னேன்.சாப்பிடவா சொன்னேன்?''
********
''என்ன கடைக்காரரே,வாழைப்பழம் ஒரு சீப்பு வாங்கினால் ஒரு சீப்பு இலவசம் என்று சொல்லிவிட்டு ,இப்படிப் பண்ணிப் புட்டீங்களே?''
'அப்படி என்ன பண்ணிவிட்டேன்?'
''இலவசமா தலை வாருகிற சீப்பைக் கொடுத்துவிட்டீர்களே!''
********
''அரிசி விலை என்ன?''
'கிலோ நாற்பது ரூபாய்.'
''கொஞ்சம் குறைச்சுப் போடக் கூடாதா?''
'ஏற்கனவே எங்கள் கடையில் வாங்கினால் ஒரு கிலோவுக்கு 900கிராம்தான் இருக்கு என்கிறார்கள்.இதைவிட குறைக்க எனக்கு மனசில்லீங்க.'
********
கணவனை இழந்த பெண் ஒருத்தி தன கணவனின் ஆவியுடன் பேசினாள் .
''ஏங்க ,எப்படி இருக்கீங்க?''
'மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன்.'
''பூமியில் என்னோடு இருந்ததை விடவா?''
'ஆம்,அதைவிட மகிழ்ச்சியாக இருக்கிறேன்.'
''அப்படியா,இப்போது நீங்கள் இருக்கும் சொர்க்கத்தில் அவ்வளவு வசதிகள் இருக்கின்றனவா?''
'சொர்க்கமா?நான் நரகத்தில் அல்லவா இருக்கிறேன்?'
********
பொது இடம் ஒன்றில் நான்கு சிறுவர்கள் கத்தி கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள்.அருகில் இருந்த பெரியவர் அவர்களைக் கண்டித்தார்.உடனே அச்சிறுவர்களின் தாயார் கோபத்துடன்,''அவர்கள் என் பிள்ளைகள்.அவர்கள் அப்படித்தான் விளையாடுவார்கள்.அதை கேட்க நீங்கள் யார்?''என்று சீறினாள்.உடனே பெரியவர் சொன்னார்,''எதுக்காக இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?அவர்கள் உங்கள் பிள்ளைகளாக இருக்கலாம்.ஆனால் நான் உங்கள் கணவர் இல்லையே!''
********

செருப்பு தேயுமே!

3

Posted on : Thursday, September 06, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் கஞ்சனாக இருந்தான்.அவன் மகனோ அவனை  விடக் கஞ்சனாக வளர்ந்தான்.ஒரு நாள் மகன் வெளியே ஒரு வேலையாக செல்ல வேண்டியிருந்தது.தந்தையிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று பார்த்தால் அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.எனவே தந்தையை தொந்தரவு செய்யாது வெளியே சென்றான்.இரண்டு கி.மீ.தூரம் நடந்து சென்றபின்,வீட்டில் விளக்கை அணைத்தோமா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.அது எரிந்து கொண்டிருந்தால்  வீண் செலவாகுமே என்று கருதிய அவன் வீட்டிற்கு திரும்ப நடந்தான்.வீட்டிற்கு வந்தபோது வெளியே நின்றிருந்த அவன் தந்தை விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்.பின் தந்தை ,''நீ சரியாகக் கவனிக்காமல் சென்றதால் இப்போது இரண்டு கி,மீ.தூரம் திரும்ப வந்திருக்கிறாய்.இதனால் உன் செருப்பு அதிகப் படியாகத் தேய்ந்திருக்குமே ,இது நமக்கு கட்டுப்படியாகுமா?''என்று கேட்டார்,பையன் உடனே ,''நான் ஒன்றும் முட்டாள் இல்லை,''என்று சொல்லியவாறு கக்கத்தில் இருந்த செருப்பை எடுத்துக் காட்டினான்.தகப்பன் சொன்னான்,''அந்த மட்டுக்கும் பரவாயில்லை.இப்போது நீ ஏற்கனவே சென்ற  தூரம் வரை செருப்பு போடாமலே போ.''

கணக்கு தீர்ந்தது.

2

Posted on : Thursday, September 06, 2012 | By : ஜெயராஜன் | In :

புத்தரைப் பார்க்க வந்த ஒருவன் திடீரென அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். புத்தரும் முகத்தைத் துடைத்தவாறு,''அப்பனே,வேறு என்ன சொல்ல விரும்புகிறாய்?''என அமைதியாகக் கேட்டார்.அவனுடைய அவமாரியாதைக்கு  எதிர் செயல் ஏதும் இல்லாது அவர் முகம் அமைதியாக இருப்பதைக் கண்ட அவனுக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது.அவன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி விட்டான்.அன்றிரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை அவன் கொடுத்த அவமரியாதை அவனுக்கே திரும்ப வந்து விட்டதாய்  அவன் உணர்ந்தான்.நடந்ததை  அவனால் நம்ப முடியவில்லை.நீண்ட யோசனைக்குப் பின் தன்  தவறை அவன் உணர்ந்தான்.மறு நாள் அவன் நேரே புத்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.புத்தர் சொன்னார்,''அதைப் பற்றி கவலைப் படாதே.இதற்கு முன் எப்போதோ உனக்கு ஏதோ தீங்கு நான் இழைத்திருக்க வேண்டும்.இப்போது அந்தக் கணக்கு சரி செய்யப்பட்டு விட்டது.அதனால் நீ செய்ததற்குப் பதிலாக  ஏதும் செய்யப் போவதில்லை. நான் ஏதேனும் பதிலுக்கு செய்தால் நம் கணக்கு முடியாது தொடர்ந்து கொண்டே போகும்.நான் கணக்கை முடித்து விட்டேன்.''

படி அளப்பான்.

1

Posted on : Wednesday, September 05, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லா மிகவும் கவலையுடன் இருந்தார்.அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் காரணம் கேட்டார்.முல்லா சொன்னார்,''மழை சரியாகப் பெய்யவில்லை.விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கிறது.என்ன செய்வதென்றே தெரியவில்லை.''பெரியவர்,''கவலைப்படாதே , முல்லா.இறைவன் மிகப் பெரியவன்.வானத்தில் பறக்கும் பறவைகளுக்கெல்லாம் படி அளக்கும் அவன் நம்மை விட்டு விடுவானா ?'' என்று ஆறுதல் சொன்னார்.முல்லா கடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்,''நன்றாக அளப்பார்!ஏற்கனவே விளைச்சல் குறைவு என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.இதில் இருக்கும் தானியங்களையும் அவர் பறவைகளுக்கு அளந்து விட்டால் நான் என்ன செய்வது?''

பென்சிலும் ரப்பரும்

1

Posted on : Wednesday, September 05, 2012 | By : ஜெயராஜன் | In :

பென்சில்:என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்:எதற்காக மன்னிப்பு?
பென்சில்:நான் தவறு செய்யும்  போதெல்லாம் நீ சரி செய்கிறாய்.ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய்.என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்:நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே.எனக்குத் தெரியும்,நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன்.அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும்.ஆனால் எனக்காக நீ வருத்தப்படுவது எனக்குக் கவலை தருகிறது.

இங்கு ரப்பர் என்பது பெற்றோர்.பென்சில் என்பது அவர்களது பிள்ளைகள். பிள்ளைகள் தவறு செய்யும் போதெல்லாம் அதை அவர்கள் சரி செய்கிறார்கள்.நாளடைவில் அவர்கள் தேய்ந்து போகிறார்கள்.ஆனால் பிள்ளைகளை சரி செய்வதை மகிழ்வுடனே செய்கிறார்கள்.தங்களுக்குப் பதிலாக தன்  பிள்ளைகளுக்கு கணவனோ மனைவியோ வந்து விடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.ஆனால் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்காகப் பிள்ளைகள்  வருத்தப் படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

பூவைக்கொடு

0

Posted on : Tuesday, September 04, 2012 | By : ஜெயராஜன் | In :

ஜப்பானில் யாருக்காவது கோபம் ஏற்பட்டால்,அவர் கோபமில்லாத செயல் ஒன்றை செய்தாக வேண்டும்.அப்போது இதுவரை கோபத்திற்கு சென்று கொண்டிருந்த ஆற்றலானது இப்போது கோபமின்மைக்கு  செல்கிறது.ஒருவர் மீது உங்களுக்குக் கோபம் வந்து அவரை அறைய வேண்டும் என்று தோன்றினால்,அவருக்கு ஒரு பூவைக் கொடுத்து,என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்.அறைய விரும்பினீர்கள்-அது கோபம்.பூவைக் கொடுத்தீர்கள்.அது கோபமில்லாத செயல்.அறைவதற்காக பயன்பட இருந்த ஆற்றல் பூக்கொடுக்கப் பயன்படுகிறது.ஆற்றல் நடு நிலைமையானது.ஏதாவது ஒன்று செய்யாவிடில் நீங்கள் அடக்கி வைக்கிறீர்கள் என்று பொருள்.அடக்கி வைப்பதே நஞ்சு.ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.ஆனால் நேர் எதிரானதைச் செய்யுங்கள்.இது புதிய தளை அல்ல.பழைய தளையை நீக்கவே இது.பழையது மறைந்ததும் முடிச்சுக்கள் மறைந்ததும் அதன்பின் எதையும் செய்ய நீங்கள் கவலைப் படவேண்டியதில்லை.பின் நீங்கள் தன்  இயல்பாக இயங்க முடியும்.

மரம் ஏறி

2

Posted on : Tuesday, September 04, 2012 | By : ஜெயராஜன் | In :

மரம் ஏறுவதில் கில்லாடியான ஒருவர் ஒரு பையனுக்கு மரம் ஏற சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.மர  உச்சிக்குப் போய் சில கிளைகளை வெட்டச் சொல்லி அவனுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.பையனும் அவ்வாறே செய்யும்போது அவன் மிகுந்த ஆபத்தில் இருப்பதை உணர்ந்து பதைப்புடன் காணப்பட்டான்.அப்போது அவர் வாயே திறக்கவில்லை.வெட்டி முடித்தவுடன் அவன் கீழே இறங்கி வரும்போது,''பார்த்து கவனமாக இறங்கு,''என்றார்.இதையெல்லாம் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் அவரிடம்,''அவன் உச்சிக் கிளையில் ஆபத்தான சூழலில் இருக்கும்போது  நீங்கள் ஒரு ஆலோசனையும் சொல்லவில்லை. இப்போது அவன் நினைத்தால் மரத்திலிருந்து  குதித்து விடலாம்.இப்போது கவனமாக இருக்கச் சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள்.இது நியாயமா?''என்று கேட்டார்.அவர் சொன்னார்,''நீங்கள் கேட்பது நியாயமான கேள்விதான்.அவன் அவ்வளவு உயரத்தில் இருக்கும்போது,கிளைகள் முறிந்து கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அவன் மிகக் கவனமாக இருந்தான் எனவே நான் அப்போது அவன் கவனத்தைக் கலைக்க விரும்பவில்லை.ஆனால் அவன் குறைந்த உயரத்திற்கு இறங்கியவுடன்,அவன் தன வேலை முடிந்து விட்டது என்ற எண்ணத்துடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.எனவே நான் அவனை எச்சரிக்க வேண்டியதாயிற்று.எந்த வேளையிலும் மிகவும் இலகுவான   நிலையிலேயே மக்கள் அதிகம் தவறு செய்கிறார்கள்,''

மேடை பயம்

1

Posted on : Monday, September 03, 2012 | By : ஜெயராஜன் | In :

இங்கிலாந்தின் பிரதமராய் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சிறந்த பேச்சாளர்.ஒரு முறை ஒருவர்,''மேடையில் இவ்வளவு சரளமாகப் பேசுகிறீர்களே, மேடை பயம் கொஞ்சம் கூட இல்லாமல் இருப்பது எப்படி?''என்று கேட்டார்.சர்ச்சில் சொன்னார்,''நான் பேசும்போது என் முன்னால்   அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்வேன்.அதனால் பயம் ஏற்படுவது இல்லை.''இதே கேள்வி ஒரு முறை ஜென் மாஸ்டர் ரின்சாயிடம் கேட்கப்பட்டது.ஏனெனில் அவரும் தங்கு தடையின்றிப் பேசக் கூடியவர்.அவர் சொன்னார்''என் முன்னால்  அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நான்தான் அங்கு உட்கார்ந்திருப்பதாக எண்ணிக் கொள்வேன்.இந்த மக்களெல்லாம் நான்தான் என்று என்னும்போது எந்த வித பயமும் ஏற்படுவதில்லை.நான்தான் பேச்சாளர்,நான்தான் கேட்பவர்.அதனால் பயமில்லை,''
இதுதான் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் உள்ள கலாச்சார வித்தியாசம்.அடுத்தவரை முட்டாளாக நினைப்பதற்கும்,தானாகவே பாவிப்பதற்கும் எவ்வளவு மனதளவில் வித்தியாசம்!

மூன்று முறை

1

Posted on : Sunday, September 02, 2012 | By : ஜெயராஜன் | In :

எப்போதும் தேவையானவை எல்லாம் உன் மனதிற்கு எதிரானவை.எனவே மனமானது எந்த ஒரு உண்மையையும் உன்னுள் நுழைய அனுமதிக்கப் பயப்படுகிறது.அது அந்த உண்மையைத் தட்டிக் கழிக்க ஆயிரத்தொரு காரணங்களைக் கண்டு பிடிக்கிறது.ஏனெனில் உண்மை உனது மனத்தைக் கலைத்துவிடும்.அதனால் மனதிற்கு ஆதரவானதை மட்டுமே அது அனுமதிக்கிறது.மேலும் மனமே ஒரு குப்பை.அதனால் அது குப்பையைத்தான் சேகரிக்கும்.அதையும் மகிழ்வோடு சேகரிக்கும்.
புத்தர் எதையும் மூன்று முறை கூறுவது வழக்கம் .காரணம் கேட்டபோது அவர் சொன்னார்''முதல் முறை நீங்கள் கேட்பதே கிடையாது.இரண்டாம் முறை ஏதாவது ஒரு பகுதியைத்தான் கேட்பீர்கள்.மூன்றாம் முறைதான் நான் கூறுவதை சரியாகக் கேட்கிறீர்கள் முதல் முறை சொல்லும்போது நீங்கள் உட்கருத்தை உணர முடியாது.இரண்டாம் முறை,உணர்ந்தாலும் சரியான முறையில் கருத்தை உணர மாட்டீர்கள்.மூன்றாம் முறை நான் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை  சரியாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.''
ஏதாவது ஒன்று தேவையற்றது என்று நீ கண்டு கொண்ட கணமே அதன் மீது உன் கவனத்தை செலுத்தாதே.அதை விட்டு விலகிச் சென்றுவிடு.பொய்யைப் பொய்  என்று கண்டு கொள்வதே மெய்யை மெய் என்று கண்டு கொள்வதற்கான ஆரம்பம்.

பொன்மொழிகள்-31

0

Posted on : Sunday, September 02, 2012 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் திட்டமிடத் தவறுகிறபோது
தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்று பொருள்.
********
தவறுகள் வருந்துவதற்காக அல்ல,திருந்துவதற்காக.
********
உழுகிற மாடு பரதேசம் போனாலும் அங்கும் ஒருவன் கட்டி உழுவான்.
.********
உங்கள் காலணிகள் சரியாகப் பொருந்தும்போது நீங்கள்  அதை மறந்து விடுகிறீர்கள்.
********
அடுத்தவர்கள் சொல்லித் தெரிவது அறிவு.
தானே அனுபவித்து அறிவது ஞானம்.
********
அடிக்கிற ஆளுக்கு சிறிதளவு பலம் போதும்.அடி வாங்குகிறவனுக்குத்தான் பெரும்பலம் வேண்டும்.அடிக்கிற சிற்றுளி பலமானதா,அடி வாங்குகிற பாறை பலமானதா?
********
உன் எண்ணங்கள் குறித்து எச்சரிக்கையாய் இரு.
அவை எந்த வினாடியும் வார்த்தைகளாக வெளி வரக் கூடும்.
********
இளமை தவறான பலவற்றை நம்புகிறது.
முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது.
********
பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்துப் பின் பரீட்சை  வைக்கிறார்கள்.
ஆனால் வாழ்வில்   பல பரீட்சைகளில்  இருந்துதான் பாடம் கற்கிறோம்.
********
புத்திமதி,
அறிவாளிக்குத் தேவையற்றது:
முட்டாளுக்குப் பயனற்றது.
********
இப்படிச் சொல்வதா,அப்படிச் சொல்வதா எனச் சந்தேகம் வந்தால்
உண்மையைச் சொல்லி விடுவதே மேல்.
********


கழுதை என்ன பேசியது?

1

Posted on : Saturday, September 01, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு மதகுரு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.சிறிது நேரத்தில் கூட்டத்தில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர்.அதைப் பார்க்க அவருக்கு வருத்தமாயிருந்தது.அதைக் கூடப் பொறுத்துக் கொண்டார்.சிலர் விட்ட  குறட்டை சப்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது.அது அவருடைய சொற்பொழிவுக்கு இடைஞ்சலாக இருந்தது .உடனே அவர் சம்பந்தம் இல்லாமல் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.அவர்,''ஒரு நாள் நான் ஒரு பாலைவனத்தில் சென்று கொண்டிருந்தேன்.அங்கே யாரும் இல்லை.நானும் எனக்குத் துணையாகக் கழுதை  மட்டுமே அங்கு இருந்தோம்.திடீரெனக் கழுதை என்னுடன் பேச ஆரம்பித்தது.''என்று சொன்னவுடன் எல்லோரும் விழித்துக் கொண்டனர்.ஒருவர் கூட இப்போது தூங்கவில்லை.அப்போது அவர் கதையை அந்த  நிலையிலேயே விட்டு விட்டு தன் முதல் சொற்பொழிவைத் தொடர ஆரம்பித்தார்.உடனே சிலர் மிகுந்த ஆவலுடன் எழுந்து''அந்தக் கழுதை உங்களிடம் என்ன பேசியது?''என்று கேட்டனர்.உடனே அவர் சற்று கோபத்துடன்''நான் என்ன கூறுகிறேன் என்பதில் உங்களில் யாருக்கும் ஆர்வம் இல்லை.ஆனால் கழுதை என்ன பேசியது என்பதை அறிய மட்டும் தூக்கத்தைக்கூட விட்டுவிட்டு ஆர்வத்துடன் கேட்கிறீர்களே, உங்களுக்கே இது நியாயமாய் இருக்கிறதா?''என்று கேட்டார். எல்லோரும் தலை கவிழ்ந்தனர்
மனம் தேவையற்றதைத்தான் யோசிக்கும்:நேசிக்கும்.வம்பு பேசத்தான் அது எப்போதும் பசியோடிருக்கும்.ஒன்றுக்கும்  உபயோகமில்லாத விஷயத்தை மிகக் கவனத்துடன் கேட்கும்

சிந்தனை செய் மனமே!

1

Posted on : Saturday, September 01, 2012 | By : ஜெயராஜன் | In :

கடவுளிடம் முணு  முணுவென்று  பேசி அவரை அறுப்பதை நிறுத்துங்கள். பிரார்த்தனை உணர்வுடன் இருங்கள்.அவன் சொல்வதைக் கவனியுங்கள். அதுதான் தியானம்.
********
மற்றவர்களின் விமரிசனத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் வாழ்க்கையே நாசமாகிவிடும்.யாருக்கும் யாரையும் குறை சொல்லத் தகுதியில்லை..முழு மனிதனாக மாற நீங்கள் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ, அப்படித்தான் அவர்களும் இருக்கிறார்கள்.
********
நம்மில் பலர் நாம் செய்துள்ள தவறை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் வேதனையைத் தவிர்க்க வேண்டி பிறர் மீது பழி சுமத்துகிறோம்.
********
முன்பெல்லாம் மனிதர்களை நேசித்தார்கள்.
       பொருட்களைப் பயன் படுத்தினார்கள்.
இப்பொழுது.....
பொருட்களை நேசிக்கிறார்கள்.
       மனிதர்களைப் பயன் படுத்துகிறார்கள்.
********
 சிலரிடம் நிறைய இருந்தும் இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறார்கள். என்னிடம் குறைவாக இருந்தும் அந்த ஏக்கம் இல்லை.நிறைய இருந்தும் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன்.அவர்களிடம் ஒன்றும் இல்லை என்னிடம் நிறைய இருக்கிறது.அவர்கள் வாழ்வதில்லை.நான் வாழ்ந்து வருகிறேன்.
********