உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிப்பு வருது

0

Posted on : Saturday, January 30, 2010 | By : ஜெயராஜன் | In :

''என்னங்க,நூல் புடவை எடுத்துத் தந்துட்டு பட்டுப் புடவையின்னு சொல்றீங்களே?''
'பின்னே சும்மாவா?..இது அடிபட்டு,மிதிபட்டு,லோல்பட்டு,கடன்பட்டு வாங்கின புடவை ஆச்சே!'
***********
''உன் பேர் என்னப்பா?பேங்க்ல வாங்கின கடனை அடைச்சிட்டயா?''
'அடைக்கலசாமி.'
**********
''உங்கள் ஆபீசில் ஒரு மடையன் இருக்கிறான்.''
'எங்கள் ஆபீசில் இருபது பேர் இருக்கிறோம்.யாரை நீங்க சொல்றீங்க?'
**********
''உன்னைப் பார்த்தால் கோபால் ஞாபகம் வருது.''
'நான் ஒன்றும் கோபால் மாதிரி இல்லையே?'
''இல்லை,அவனும் எனக்கு நூறு ரூபாய் பாக்கி தரனும்.''
**********
''செருப்புப் போட்டாலும் முள் குத்தும்.அது எப்போ?''
'மீன் சாப்பிடும் போது.'
***********
''நான் பார்த்து எந்தக் கழுதை கழுத்தில் தாலியைக் கட்டச் சொன்னாலும்,உடனே என் பையன் கட்டிடுவான்.''
'உங்களுக்கு என்ன போச்சு?நாளைக்கு உதை வாங்கப் போவது அவன் தானே?'
*********
தங்களது ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாட ஒரு தாத்தாவும் பாட்டியும் ஒரு ஹோட்டலுக்குப் போனார்கள்.மேஜையில் அமர்ந்ததும் தாத்தா கேட்டார்,''இன்னொரு பாதாம் அல்வா சாப்பிடுகிறாயா?''
பாட்டி:இப்போது தானே உள்ளே நுழைந்தோம்?இன்னொரு பாதாம் அல்வா என்கிறீர்களே ?
தாத்தா: மறந்திட்டாயா?கல்யாணமான புதிதில் நாம் இருவரும் பாதாம் அல்வா சாப்பிட்டோமே?
*******
''ஒவ்வொரு சனிக்கிழமையும், என் மனைவியைப் பார்க்க மதுரைக்குப் போய்விடுவேன்.''
'அப்போ உங்க மனைவி, சனி எப்போடா வரும்னு நினைச்சுக்கிட்டே இருப்பாங்களோ?'
*******
கணவன்:நான் வாங்கிக் கொடுத்த புதுச் சட்டை நல்லாயிருக்கா?
மனைவி:உங்களை மாதிரியே இருக்கு.
கணவன்:என்னை மாதிரியா?எப்படி?
மனைவி:லூசா இருக்கு.
*********
''உங்க பையன்களோட பேர் என்னாங்க?''
மூத்தவன் பிரத்யுமணன்.அடுத்தவன் விஷ்வக்சேனன்.மூன்றாமவன் பேர் ஜாங்கிரி.
''அதென்னங்க ஜாங்கிரின்னு பேரு?''
'என் மனைவிதான்,முதல் இரண்டு பேரும் வாயில் '.நுழையவில்லை.மூன்றாவது பையனுக்காவது வாயில் நுழையிற மாதிரி பேர் வைக்கச் சொன்னாள்.அதனால தான் வாயில நுழையிற மாதிரி பேர் வச்சேன்.'

கண்டியுங்கள்

0

Posted on : Friday, January 29, 2010 | By : ஜெயராஜன் | In :

செயலைக் கண்டியுங்கள்,நபரை அல்ல.
விரும்பத்தகாத் செயல்களைப் பிறர் செய்யும் போதுநமக்கு கோபம் வருகிறது.சிலர் பண்பு கருதி,நபரைக் கருதி,சூழ்நிலை கருதி கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.சிலரால் இது முடிவதில்லை.காச் மூச் என்று கத்துகிறார்கள்.
''டேய்,உனக்கு அறிவிருக்குதா?''என்று கேட்பதை விட,'ஒரு புத்திசாலி செய்யக் கூடிய காரியமா இது?'என்று கேட்டுப் பாருங்கள்.நல்ல பலனிருக்கும்.செயல் தான் கண்டிக்கப் படவேண்டும்.நபர்கள் அல்ல.இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.
*நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.
*நாம் அப்படிப் பேசியிருக்க வேண்டாமே என்று நாம் பின்னால் வருத்தப் பட வேண்டிய சூழ் நிலை வராது.
*கோபத்திற்கு ஆளானவர்கள் நம் மீது வருத்தமோ,கோபமோ கொள்வதை விட்டு விட்டு,தங்கள் தவறைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மூன்று பொன் மொழிகள்

0

Posted on : Friday, January 29, 2010 | By : ஜெயராஜன் | In :

அழகிய பறவை ஒன்றை விலைக்கு வாங்கி அதைக் கூண்டில் வைத்து ஒரு வியாபாரி வளர்த்தான்.ஒரு நாள் அப்பறவை அவனிடம்,தன்னை விடுதலை செய்தால், வாழ்வை வளமாக்கும் மூன்று பொன்மொழிகள் சொல்வதாக கூறியதன் பேரில் வியாபாரி அதை விடுவிக்க ஒப்புக் கொண்டான்.வியாபாரியின் கையிலிருந்து ஒரு பொன்மொழியையும் அவன் வீட்டுக் கூரையில் அமர்ந்து இரண்டாவது பொன்மொழியையும் தோட்டத்தில் உள்ள மரக் கிளையில் அமர்ந்து மூன்றாவது பொன்மொழியையும் கூறுவதாகப் பறவை கூறியது.
வியாபாரி அதன் படி கிளியை விடுவித்து தன கையில் வைத்துக் கொண்டான்.பறவை''உன் வாழ்வில் எதையாவது இழக்க நேர்ந்தால்,அது உன் உயிருக்கு சமமானதாக இருந்தாலும் அதைப் பற்றி வருந்தாதே.''என்றது.
திருப்தியுற்ற வியாபாரி பறவையைக் கையிலிருந்து விட அது கூரையில் அமர்ந்து சொன்னது,''ஆதாரமில்லாத எந்த ஒன்றையும்,உன்னுடைய கண்களைக் கொண்டு நீயே பார்க்காத வரை நம்பி விடாதே.''
அடுத்து வியாபாரி பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உயர்ந்த மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கூறியது,''முட்டாள் வியாபாரியே,என் வயிற்றில் இரண்டு விலை உயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.என்னைக் கொன்று என் வயிற்றிலிருந்து அவற்றை எடுத்திருக்கலாம்.''
இதைக் கேட்டவுடன் வியாபாரி ஆத்திரம் கொண்டான்.வருந்தினான்.ஆனாலும் பிடிக்க முடியாதே என்ற கவலையுடன் மூன்றாவது பொன் மொழியையாவது கூறும்படி பறவையிடம் சொன்னான்.பறவை நகைத்துக் கொண்டே,''என்னப்பா,நான் சொன்ன முதல் முதல் இரண்டு பொன் மொழிகளே உனக்கு புரியாத போது,மூன்றாவது எதற்கு?''என்று கேட்டது.'என்ன சொன்னாய்?எனக்கா புரியவில்லை?'என்று கோபமுடன் கேட்டான் வியாபாரி.
''ஆமாம்,இழந்து போனதற்காக வருந்தாதே என்றேன்.நீயோ இரண்டு ரத்தினக் கற்களுக்காக எரிச்சல் படுகிறாய்.கண்ணால் காணாததை நம்பாதே என்றேன்,நீயோ என் வயிற்றில் இரண்டு ரத்தினங்கள் இருப்பதாகக் கூறியதை நம்பினாய்.முட்டாளே!என் வயிற்றில் இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தால் என்னால் உயிரோடு இருக்க முடியுமா?''என்று கூறிப் பறந்து சென்றது அப்பறவை.

விசித்திரம்

0

Posted on : Thursday, January 28, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவரைப் பிடிக்காமல் போனால்,அவர் கையில் வெறும் பேனாவைப் பிடித்திருக்கும் விதம் கூட எரிச்சலைத்தரும்.ஆனால் அதே நபர்,உங்களுக்கு மிகவும் பிடித்தவராயிருந்தால்,அவர் முழுத்தட்டையும் சாப்பாடுடன் உங்கள் மடியில் கொட்டினால் கூட அதைப் பெரிதாக நினைக்க மாட்டீர்கள்.
இந்த மனம் தான் எத்தனை விசித்திரமானது?

சிரிப்போம்

0

Posted on : Thursday, January 28, 2010 | By : ஜெயராஜன் | In :

''கோழியின் வயதை எப்படிக் கண்டு பிடிப்பாய்?''
'பல்லாலதான்.'
''கோழிக்குத்தான் பல்லே இல்லையே?''
'எனக்கு இருக்குதே!'
************
''உங்க வீடு எங்கப்பா இருக்கு?''
'அரச மரத்துக்கு எதிரில் ,சார்.'
''அரச மரம் எங்கே இருக்கு?''
'எங்க வீட்டுக்கு எதிரில்,சார்.'
''சரி,உங்க வீடும் அரச மரமும் எங்கே இருக்கு?''
'எதிரும் புதிருமா இருக்கு,சார்.'
*************
''தொப்பி என்ன விலைங்க?''
'ஐம்பது ரூபாய்.'
''அடேயப்பா,செருப்பே வாங்கி விடலாம் போலிருக்கே!''
'வாங்கலாம்,ஆனால் செருப்பைத் தலையில் வைத்தால் பார்ப்பவர்கள் சிரிப்பார்களே!'
**************
நடத்துனர்:ஏனய்யா,டிக்கெட் வாங்கலியா?
பயணி:என் பெஞ்சாதிதான் வெளியே எதுவும் வாங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கா.
***********
''யானை படுத்தால் குதிரை மட்டம்,ஸ்கூட்டர் படுத்தால்..?''
'ஆபீஸ் மட்டம்'
**********
வேட்டைக்காரர்:ஸ்காட்லாந்தில் இருந்த போது நான் நிறைய சிங்கங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறேன்.
நண்பர்:ஸ்காட்லாந்தில் சிங்கமே கிடையாது என்று புத்தகத்தில் படித்திருக்கிறேனே?
வேட்டைக்காரர்:எப்படி இருக்கும்?எல்லாத்தையும் தான் நான் சுட்டுத் தள்ளிட்டேனே!
***********
''புது வீட்டுக்கு வாசல் கால் வைக்கப் போகிறேன்.அவசியம் வரணும்.''
'அட,இதுக்கெல்லாம் நான் எதுக்குங்க?'
''அது என்ன அப்படிச் சொல்லிட்டீங்க?ஒண்டி ஆளா அதை என்னால எடுத்து வைக்க முடியுமா,என்ன?''
************
''தோட்டத்துல காய் கறிச் செடியெல்லாம் போட்டீங்களே,என்னெல்லாம் வந்தது?''
'ஆடு வந்தது,மாடு வந்தது,எலி வந்தது,சண்டை வந்தது,அவ்வளவுதான்'
************
''என் மனைவி எப்போ சொன்னாலும்,எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செய்து தருவா!''
'உப்புமாவில வண்டும் புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன்,சலிக்காமதான் செஞ்சிருப்பங்கன்னு.'
***********
''நல்லதா இரண்டு வாழைப் பழம் கொடுங்களேன்!''
(வாழைப்பழத்தைக் கையில் வாங்கியதும்,அது காய் போல் இருக்கிறதா என்று அழுத்திப் பார்த்து விட்டு)
''ஏங்க,சாப்பிடுற மாதிரி கொடுங்களேன்,''
கடைக்காரர் அவரிடமிருந்து வாங்கி முழுசாய்த் தோலை உரித்து அவரிடம்
நீட்ட,.....வந்தவர் திகைக்கிறார்.
***************

அவதூறு

0

Posted on : Wednesday, January 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தன நண்பனைப் பற்றி ஒரு செய்தியை பலரிடம் பரப்பிவிட்டார்.பின்னர் தான் அது தவறான செய்தி,அவதூறு என்பதைப் புரிந்து கொண்டு வருந்தினார்.அவர் நபிகள் நாயகம் அவர்களிடம் சென்று தன தவறைக் கூறி பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா எனக் கேட்டார்.நபிகள் பத்து கோழி இறகுகளை அவர் கையில் கொடுத்து,அன்று இரவு பத்து வீட்டுக் கதவுகளில் சொருகி வைத்து விட்டு மீண்டும் காலை அவற்றை எடுத்துக்கொண்டு தன்னிடம் வரச்சொன்னார்.மறுநாள் காலை அவர் வெறுங்கையுடன் வந்தார்.விபரம் கேட்க,கோழிச் சிறகுகள் காற்றோடு பறந்து போய் விட்டதாகவும்,அவற்றை எடுத்து வர வழி இல்லை எனவும் கூறினார்.நபிகள் அப்போது சொன்னார்,''நீ பரப்பிய அவதூறு இக்கோழி சிறகுகள் போல்தான்.பரவிய அவற்றை ஒன்றும் செய்ய இயலாது.இனியேனும் இம்மாதிரித் தவறுகளைச் செய்யாதே.''

சிரிப்பு வெடிகள்

1

Posted on : Tuesday, January 26, 2010 | By : ஜெயராஜன் | In :

கணவன்:அன்பே,உனக்காக தாஜ்மஹால் எழுப்பவா,கோவில் எழுப்பவா?
மனைவி:நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுப்புங்கள்.ஆனால் தூங்கும் போது மட்டும் எழுப்பாதீங்க.
**********
இரண்டு தந்தைமார்கள் தங்களுக்கள் பேசிக்கொண்டார்கள்.
ஒருவர்:என் மகன் கடிதம் எழுதினால் கடிதத்தைப் படிக்க எப்போதும் அகராதியைத் தேடித் போக வேண்டியிருக்கிறது.
மற்றவர்:உங்கள் மகனாவது பரவாயில்லை.என் மகன் கடிதம் எழுதினால் நான் வங்கியை அல்லவா தேடிப் போக வேண்டியிருக்கிறது!
************
தமிழறிஞர் ஒருவர் படிப்பறிவில்லாத முதியவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அறிஞர்:என்ன வியாபாரம் செய்றீங்க?
முதியவர்:வாயப்பயம்.
அறிஞர்:எந்த ஊர்?
முதியவர்:கெயக்கே.
அறிஞர்:ஏன் இந்த வயதில் இப்படி வெயிலில் அலைகிறீர்கள்?
முதியவர்:எதோ பொயப்பு.
அறிஞர்:தமிழை இப்படியா பேசுவது?
முதியவர்:என்ன செய்ய?பயக்கமாப் போச்சு.
அறிஞர்:(கோபத்துடன்)போய்யா கெயவா.
************
''அடடா,உனக்கு அல்வா வாங்கிட்டு வர மறந்துட்டேன்,கமலா''
'சரி,அதனாலென்ன?'
''எங்க அம்மா ஒரு சதிகாரி,மோசக்காரி,கூனி.....''
'இப்ப உங்க அம்மாவை ஏன் திட்டுறீங்க?'
''அவங்களைத் திட்டினா உனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குமே!''
************
டாக்டர்:கவலைப்படாதீங்க,நீங்க நிச்சயமாய் அறுபது வயது வரை உயிரோடு இருப்பீங்க.
நோயாளி:ஐயோ டாக்டர்,எனக்கு ஏற்கனவே அறுபது வயது ஆகிடுச்சி.
**************
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
**********

சிரிக்கலாமா?

0

Posted on : Monday, January 25, 2010 | By : ஜெயராஜன் | In :

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே,எதற்கு?
இப்ப மருந்து கொட்டிடுச்சி.
**********
''மேனேஜர் என் ஸ்கூட்டரை இரவல் கேட்டார்.நான் இல்லேன்னு சொன்னதும் சீட்டைக் கிழிச்சுட்டார்.''
'ஐயையோ,அப்புறம்?'
''அப்புறம் என்ன?புது சீட் வாங்கிப்போட்டு ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.''
***********
''ஒரு பெரிய பிஸ்தா ஐஸ் கிரீம் கொண்டு வா.''
'ஆறு துண்டுகளாக்கிக் கொண்டு வரவா,அல்லது எட்டு துண்டாக்கட்டுமா?'
''எட்டு துண்டா?என்னால சாப்பிட முடியாதப்பா.ஆறு துண்டாகவே வெட்டிக் கொண்டு வா.''
*************
ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம் கேட்டது.அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து நாய் அமைதியானது.
மாணவன் ஒருவன் சொன்னான்,''ஐயா,நாய் நிறுத்தி விட்டது.நீங்கள் ஆரம்பியுங்கள்.''
***********
போர்க்களத்தில் கை இழந்த ஒருவன் கத்தினான்,'ஐயோ,கை போச்சே,கை போச்சே.'அருகில் கிடந்த ஒருவன் எரிச்சலுடன் சொன்னான்,''யோவ்,சும்மா இருய்யா!அங்கே தலை போனவன் எல்லாம் சும்மா இருக்கான்.நீ கை போனதுக்குக் கத்துகிறாயே.''
************
''ஹலோ, 224326 தானே?''
'யாருய்யா அது டெலிபோன்ல வாய்ப்பாடெல்லாம் சொல்றது?'
***********
''உங்கள் ஆபீசில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?''
'பாதிப்பேர்தான்.'
************
வண்டியிலே என்னப்பா வேலை?
உங்க பேட்டரிக்கு புது கார் மாத்தணும் ,சார்.
************
''ரொம்ப கோபமா இருக்கீங்க,ஒரு டீ சாப்பிடுங்க முதலில்.''
'அதெல்லாம் வேண்டாம்,முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு.'
''ரொம்ப சூடா இருக்கீங்க , கூலா ஏதாவது சாப்பிடுங்க.''
;;சரி,சரிகொடு.''
'இந்தாப்பா,அந்த டீயை ஜில்லுன்னு ஆத்திக்கொடு.'
************
லண்டன் விமானக் கம்பெனி ஒன்றின் விளம்பரம்:
''இப்போது போகலாம்,பிறகு பணம் கொடுக்கலாம்.''
அருகில் சவப்பெட்டி தயாரிக்கும் கம்பெனியின் விளம்பரம்:
இப்போது பணம் கொடுக்கலாம்.எப்போது வேண்டுமானாலும் போகலாம்.
***********
''சார்,என்ன வேலை போட்டுக் கொடுத்தாலும்கண்ணை மூடிக்கிட்டு செய்வேன் சார் .''
'சரிப்படாதுபோ,இங்கே நைட் வாச்மேன் வேலை தான் காலியிருக்கு.'
**********
புள்ளியியல் பேராசிரியர் ஒருவர் பிறப்பு இறப்பு விகிதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.பேசும்போது அவர் சொன்னார்,''நான் ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் ஒருவர் இறக்கிறார்.''
'எங்கள் கம்பெனியின் டூத் பேஸ்டை உபயோகித்துப் பாருங்களேன்.'என்றார் கூட்டத்திலிருந்து ஒருவர்.
*********

பொழுது போக்கு

0

Posted on : Sunday, January 24, 2010 | By : ஜெயராஜன் | In :

பொழுது போக்கு என்பது எப்படியோ உன்னை இழுத்து வைத்துக் கொண்டிருக்க ஒரு வழி தான்.எல்லாப் பொழுது போக்குகளும் உன்னிடமிருந்தே நீ தப்பித்துக் கொள்ள செய்யும் முயற்சிகள்தான்.எனக்கு என்னிடமே ஆனந்தம் பெற முடிகிறது.தனியே இருப்பதும் சும்மா இருப்பதும் பெரிய ஆனந்தம்.ஒரு முறை அதை அனுபவித்து விட்டால் பொழுது போக்கு என்ற முட்டாள்தனம் தேவையில்லை.பொழுதுபோக்கு என்பது வேலைக்கு வேறு பெயர்தானே.உண்மையான வேலையென்று ஏதும் இல்லாத போது,இப்படிப் போலி வேளைகளில் பொழுதைப் போக்குகிறாய்.ஓய்வெடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பாய்.சம்பளம் இல்லை என்ற காரணத்தால் சீட்டாட்டமும் செஸ் விளையாட்டும் வேலை இல்லை என்றாகி விடுமா?பொழுது போக்குகளை விட்டு சந்தர்ப்பங்களைத்தேடிப் பார்.செய்வதற்கு ஏதும் இல்லாத போது உன்னோடே இருந்து பார்.அதை விட்டு வெளியே வராமல் இருந்து பார்.

சொந்த விஷயம்

0

Posted on : Sunday, January 24, 2010 | By : ஜெயராஜன் | In :

எனக்கு ரோஜாப்பூ தான் பிடிக்குமென்றால்,நீ''இல்லை,இல்லை,மல்லிகைப்பூ தான் உனக்குப் பிடித்திருக்க வேண்டும்,''என்று சொல்வதில்லை.என் விருப்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறாய்.உனக்கு மல்லிகைப்பூ தான் பிடிக்குமென்றால் அதுவும் சரிதான்.இதல் வாக்குவாதம் ஏது?சச்சரவு ஏது?நாமிருவரும் சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.புத்தியைத் தீட்டி உரசிக் கொள்ள வேண்டியதில்லை.எனக்கு ரோஜா பிடிக்குமென்பதாலேயே,உனக்கு மல்லிகை பிடிக்கும் என்பது பற்றி நான் எந்த வருத்தமும் பட வேண்டிய அவசியமில்லை.விரும்புவதும் விரும்பாததும் சொந்த விஷயங்கள்.ஒருவருக்கு கீதை பிடித்தால்,மற்றொருவருக்கு பைபிளும் இன்னொருவருக்கு குரானும் பிடித்துப் போகலாம்.சரிதான்.இதில் எந்தக் குற்றமோ குறையோ இல்லை.நமது விருப்பங்களை நமக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம்.பிறரை வற்புறுத்தக்கூடாது.

சிரிப்பு

0

Posted on : Saturday, January 23, 2010 | By : ஜெயராஜன் | In :

''எட்டாம் வகுப்பு கணக்கு புத்தகம் என்ன விலை?''
'பத்து ரூபாய்.'
''கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.''
'அதெல்லாம் ஸ்கூல்லதான் சொல்லிக் கொடுப்பாங்க.இங்க இல்லை.'

************
ஒருவன்:நீ எப்போதும் திக்குவாயா?
மற்றவன்:இல்லை,பேசும்போது மட்டும் தான்.

*************

ஒருவன்:நான் இந்த அளவுக்கு சம்பாதிப்பதற்குக் காரணம் என் மனைவி தான்.
மற்றவன்:அவர் தரும் ஊக்கமா?
முதல்வன்:இல்லை,அவள் செலவழிக்கும் செலவு.

**************

மகனுக்கு உடல் நலம் இல்லை என்று பார்க்க வந்தார் தந்தை.அவனுடைய அறையினுள் நுழைய முற்படும்போது ஒரு பெண் வெளியே வந்தாள்.
மகன் சொன்னான்,''அப்பா,காய்ச்சல் போய் விட்டது.''
அப்பா சொன்னார்,'ஆம்,நான் உள்ளே வரும் பொது அது வெளியே போனதைப் பார்த்தேன்.'

**************

ஒரு இளவரசன் பருமனாக இருந்தான்.அவன் உடல் இளைக்க ஒரு குதிரை கொண்டு வரப்பட்டது.இளவரசன் தினம் குதிரை ஏற்றம் பழகினான்.ஒரு மாதத்தில்......குதிரை இளைத்து விட்டது.

**************

''ரேஷன் கடையில என்ன போடுறாங்க?''
'சப்தம் போடுறாங்க.'

*************

ராமு:டேய்,ஒரு பாட்டுப் பாடுடா!
சோமு:சினிமாப் பாட்டா,தனிப் பாட்டா?
ராமு:சினிமா பாட்டுப் பாடேன்.
சோமு:காதல் பாட்டா,தத்துவப் பாட்டா?
ராமு:காதல் பாட்டு.
சோமு:சோலோவா,டூயட்டா?
ராமு:சோலோ.
சோமு:பழைய பாட்டா,புதுப் பாட்டா?
ராமு:உன்னைப் போய்ப் பாடச் சொன்னேனே,என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்.
சோமு:என் செருப்பாலா,உன் செருப்பாலா?

*************

நண்பர்:நீங்கள் காந்தியடிகளை விட ஒரு படி மேல்.
அரசியல்வாதி:ஹி,ஹி ,எப்படிச் சொல்கிறீர்கள்?
நண்பர்:காந்தி நூல் நூற்கத்தான் சொன்னார்.நீங்கள் கயிறாகவே திரிக்கிறீர்களே!

*************

ஹோஜா என்பவன் ஒரு புத்திசாலியை முட்டாளாக்க நினைத்தான்.அவரிடம் கேட்டான்,''முட்டாள்கள் சொல்லக்கூடிய இரண்டு வார்த்தைகள் என்ன,தெரியுமா?''புத்திசாலி,'எனக்குத்தெரியாது,'என்றார்.''சரியான பதிலைச் சொல்லி விட்டர்கள்,''என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் ஹோஜா.

************

சாலையில் நடந்து கொண்டிருந்த ஒருவர் மீது ஸ்கூட்டர் ஒன்று மோதி விட்டது.
ஒருவர்:பார்த்து ஸ்கூட்டரை ஓட்டக் கூடாதா?
ஸ்கூட்டர்காரர்:நீர் தான் பார்த்து நடக்கணும்.நான் பத்து வருடமா ஸ்கூட்டர் ஓட்டுறேனாக்கும்.
ஒருவர்:சாரி ஜென்டில்மேன்,நான் நாற்பது வருடமா நடக்கிறேன்.நீர் தான் பார்த்து ஓட்டனும்.

**************

டானிக் தயாரிக்கும் கம்பெனியைப் பாராட்டி ஒரு பெண் கடிதம் எழுதினாள்,
''உங்களது தயாரிப்பு பிரமாதம்.முன்பெல்லாம் என்னால் என் குழந்தையைக் கூட அடிக்க முடியாது.இப்போது என் கணவரையே அடிக்கக் கூடிய அளவுக்கு பலம் கூடியுள்ளது.''

***************

நான் அறியவில்லை

0

Posted on : Friday, January 22, 2010 | By : ஜெயராஜன் | In :

'எனக்குத் தெரியும்'என நீங்கள் சொல்லும் கணத்திலேயே நீங்கள் ஒரு மூடப்பட்ட வட்டமாக இருக்கிறீர்கள்.அதன் பின் கதவு திறப்பதில்லை.ஆனால் எனக்குத் தெரியாது எனச் சொல்லும் போது அதன் பொருள்,நீங்கள் கற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறீர்கள் என்பதாகும்.'நான் அறிந்திருப்பது எதுவாயினும் அது அற்பமானதே,வெறும் குப்பையே!'என்ற உணர்வு நம்மிடையே இடைவிடாமல் இருக்க வேண்டியிருக்கிறது.புத்தரைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது அல்ல அறிவு.நீங்களே ஒரு புத்தராகும் போது அதுதான் அறிவு.'நான் அறியவில்லை'என்னும் அறிவே உங்களுக்கு உதவப் போகும் அறிவு.இது உங்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும்.அகங்காரம் மறையும்.அறிவே அகங்காரத்தின் தீனி.

வழிவிடு

0

Posted on : Friday, January 22, 2010 | By : ஜெயராஜன் | In :

பெர்னாட்ஷா ஒற்றையடிப் பாதையில் போய்க் கொண்டிருந்தார்.எதிரே வந்தவன் இவரைப் பார்த்து ஒதுங்கி நின்றான்.
ஷா அவனருகில் வந்து சொன்னார்,''நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை.''
அவன் மிக மரியாதையாகச் சொன்னான்,'நான் வழி விடுவதுண்டு.'

சாப்பாடு

0

Posted on : Friday, January 22, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பருமனான பேராசிரியர் ஒரு சிறிய டிபன் பாக்ஸில் சாதம் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த மாணவர்கள் தங்களுக்குள் சிரித்துப் பேசிக் கொண்டார்கள்.'உருவத்திற்கும் சாப்பாட்டிற்கும் கொஞ்சம் கூடச் சம்பந்தம் இல்லையே!'பேராசிரியர் காதில் இது விழுந்தது.அவர் அம்மாணவர்கள் காது படச் சொன்னார்,''தம்பிகளா,இதில் ஊறுகாய் தான் இருக்கிறது.சாப்பாடு பின்னே வருகிறது!''

கழுதை வண்டி

0

Posted on : Thursday, January 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆங்கில மேதை லாயிட் ஜார்ஜ் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது,கூட்டத்தில் ஒருவன்,''உங்கள் தாத்தா கழுதை வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவர் என்கின்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?''எனக் கேலியாகக் கேட்டான்.
லாயிட் ஜார்ஜ் டக்கென்று சொன்னார்,''தெரியும்.தாத்தா ஓட்டியவண்டி கூட வீட்டில் தான் இருக்கிறது.ஆனால் அதில் பூட்டியிருந்த கழுதை தான் காணாமல் போயிருந்தது.அது இப்போது தான் இங்கே இருப்பது தெரிகிறது.''

கல்வி அறிவு

0

Posted on : Thursday, January 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்,விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன்.பசி மேலீட்டால் ரயில்வே சிற்றுண்டிக்கடைக்கு சென்று உண்ண என்ன இருக்கிரதுஎனக் கேட்டவுடன் வேலையாள் அவரிடம் விலைப் பட்டியலைக் கொடுத்தான்.அப்போது கண்ணாடி அவரிடம் இல்லாதலால்,''நீயே படித்துச் சொல்லேன்,''என்றார்.வேலையாள் சொன்னான்,''அய்யா,நானும் உங்களைப் போல் எழுத்தறிவில்லாதவன் தான்.''

நாசூக்கு

0

Posted on : Thursday, January 21, 2010 | By : ஜெயராஜன் | In :

நாசூக்கு என்றால் என்ன?
நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக நாம் நினைக்கிறோம் என்பதனையும்,பிறரைப் பற்றி எவ்வளவு மட்டமாக நாம் நினைக்கிறோம் என்பதனையும் வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்வது.
--மார்க் ட்வைன்

சுற்றிப் பார்க்க

0

Posted on : Thursday, January 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவர்:இந்த ஊரில் சுற்றிப் பார்க்க என்னங்க இருக்கு?
மற்றவர்:குடை ராட்டினம்.

போகும் வழி

0

Posted on : Thursday, January 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் கையை ஒரு திசையில் நீட்டியபடி,''இப்படியே மதுரைக்கு போகலாமா?''என்று கேட்டான்.
அடுத்தவன் சொன்னான்,'இப்படியே கையை நீட்டிக்கொண்டும் போகலாம்,மடக்கிக் கொண்டும் போகலாம்.'

அஞ்சு நிமிஷம்

0

Posted on : Thursday, January 21, 2010 | By : ஜெயராஜன் | In :

கணவன்:இன்னுமா சமையல் ஆகலே?நான் ஓட்டலுக்கு போறேன்.
மனைவி:ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ.
கணவன்:அதுக்குள்ளே ஆகிடுமா?
மனைவி:இல்லே,நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்.

தகுதியற்றவர்

0

Posted on : Tuesday, January 19, 2010 | By : ஜெயராஜன் | In :

மனித சமுதாயத்தில் எல்லோருக்கும் எதிராக,எல்லா இடங்களிலும் செய்து வரப்படும் குற்றங்களில் ஒன்று:நீங்கள் தொடர்ந்து,தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டு,பக்குவப்படுத்தப்பட்டு இருகிறீர்கள்.ஒரு முறை நீங்கள் தகுதியற்றவர் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால்,நீங்கள் இயற்கையாகவே மூடிக் கொள்கிறீர்கள்.உங்களுக்கு சிறகுகள் உள்ளன.நீங்கள் சும்மா சிறகை விரித்தால் போதும்,முழு வானமும் உங்களுடையதாகிவிடும்.எல்லா விண் மீன்களுடனும் அது உங்களுக்கு சொந்தமாகும் என்பதை உங்களால் நம்ப முடிவதில்லை.இந்த 'தகுதியற்றவர்கள்' என்பது ஒரு வெறும் கருத்து மட்டுமே.நீங்கள் அந்தக் கருத்தில் மதி மயங்கியிருக்கிறீர்கள்.யாருமே தகுதியற்றவர்கள் இல்லை.உயிர் வாழ்தல் தகுதியற்றவர்களை உருவாக்குவதில்லை.

சங்கடம்

0

Posted on : Tuesday, January 19, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆபிரஹாம் லிங்கன் ஜனாதிபதி பதவி ஏற்று முதல் உரையாற்றிய தினம்.அவர் ஒரு ஏழை செருப்புத் தைப்பவரின் மகன்.எனவே பணக்காரர்கள்,உயர் குலத்தோர் மிகவும் எரிச்சலடைந்தனர்;கோபப்பட்டனர்;ஆத்திரமுற்றனர்.அவர் பேச எழுந்த போதுஒரு பணக்காரர் எழுந்து நின்றார்.''மிஸ்டர் ஜனாதிபதி,பேசத்தொடங்குமுன் ஒன்றை நினைவூட்டுகறேன்.உங்கள் தந்தை என் குடும்பத்தினருக்கு செருப்புத் தைத்தவர்.ஜனாதிபதி ஆகி விட்டதால் பூரிப்பு அடையாதீர்கள்.நான் அணிந்த காலணிகளும் உங்கள் தந்தை தைத்தவையே.நீங்கள் ஒரு செருப்பு தைப்பவரின் மகன் என்பதை மறவாதீர்கள்.''
எங்கும் அமைதி நிலவியது.லிங்கன் மனம் வருந்துவார் என அனைவரும் எண்ணினர்.ஆனால் லிங்கன் சங்கடப்படவில்லை.மாறாக,அவர் சபை முழுவதையும் சங்கடப்படுத்திவிட்டார்.அவர் கூறினார்,''நல்லது.என் தந்தையைப் பற்றி நினைவு படுத்தியதற்கு நன்றி.அவர் ஒரு அருமையான செருப்பு தைப்பவர்.நான் அவரளவு அருமையான ஜனாதிபதியில்லை.அவர் தைத்துத் தந்த காலணிகளை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்.அதில் ஏதேனும் கோளாறு இருப்பின் என் அப்பா இறந்துவிட்டாரே என வருந்தாமல் என்னிடம் கொண்டு வாருங்கள்.நான் ஒரு கத்துக் குட்டி தான்.ஆனால் நான் அவற்றைச் சரி செய்து தர முடியும்.''

விடாமுயற்சி

0

Posted on : Sunday, January 17, 2010 | By : ஜெயராஜன் | In :

கடலோரம்.
அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி.
குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள்.
முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
''உனக்கு என்ன தெரிகிறது?''
'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.'
அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.'
குரு சொன்னார்,
''சில நேரங்களில் அலைகளாய் இரு;
சில நேரங்களில் கரையாய் இரு.''

இலக்கு

0

Posted on : Wednesday, January 13, 2010 | By : ஜெயராஜன் | In :

பாறைச்சுவர் ஒன்றை நிர்மாணிப்பது இடுப்பொடியும் வேலை.தங்கள் வாழ்க்கை முழுவதும் சிலர் பாறைச்சுவர்களை எழுப்பிக் கொண்டிருப்பார்கள்.அவர்கள் மரணம் அடையும் பொது மைல் கணக்காக சுவர் நீண்டிருக்கும்.இந்த மனிதர்கள் எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதற்கு மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கும்.ஒரு சுவர் அமைக்கும் வேலையை முடித்து விட்டார்கள் என்பதை விட அவர்கள் பெரிதாக ஒன்றை சாதித்துள்ளார்கள்.அது தான் 'இலக்கு' என்பது.
---டாக்டர் அப்துல் கலாம்

உபயோகம்

0

Posted on : Wednesday, January 13, 2010 | By : ஜெயராஜன் | In :

சைக்கிள் விற்க விரும்பிய ஒருவர் ஒரு குடியானவரைப் பார்த்து,''இந்த சைக்கிளை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்களேன்,''என்றார்.'ஒரு பசுவாக இருந்தால் எனக்கு உபயோகப்படும்,'என்று கூறி வாங்க மறுத்தார் குடியானவர்.
''ஆனால் பசு மீது நீ பிரயாணம் செய்தால் பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்களே?''என்று சைக்கிள்காரர் கூற,குடியானவர் சொன்னார்,'சைக்கிளில் பால் கறந்தால் மிகப் பெரிய பைத்தியம் என்றல்லவா சொல்வார்கள்!'

ஏமாற்றுக்காரன்

0

Posted on : Wednesday, January 13, 2010 | By : ஜெயராஜன் | In :

பைத்தியம் பிடித்த ஒருவன் ஒரு மின் கம்பத்தைச் சுற்றிக்கொண்டே,''ஆண்டவனே,எனக்கு பத்து ரூபாய் கொடு,''என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.அவ்வழியே போன ஒருவர் அவன் மீது இரக்கப்பட்டு ஐந்து ரூபாய் கொடுத்துச் சென்றார்.மறுநாள் மீண்டும் அவர் அப்பாதை வழியாக வரும்போது அந்தப் பைத்தியக்காரன் முன்போலவே,''ஆண்டவனே,எனக்குப் பத்து ரூபாய் கொடு,''என்று சொல்லிக் கொண்டிருந்தான்.இவரைப் பார்த்தவுடன் அவன் உரக்க,''ஆண்டவனே,இம்முறை நீயே நேரடியாக பத்து ரூபாய் கொண்டு வந்து கொடு.நேற்று நீ பத்து ரூபாய் கொடுத்து அனுப்பிய ஆள் ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு ஐந்து ரூபாய் தான் என்னிடம் கொடுத்தான்.மகா திருடன்.''என்று கூவினான்.இதனால் தான் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று முன்னோர் கூறியுள்ளனர்.

பேச்சுக்கலை

1

Posted on : Wednesday, January 13, 2010 | By : ஜெயராஜன் | In :

பிறர் மனம் புண்படாமல் பேசுவது ஒரு கலை.
நண்பரின் வீட்டிற்கு ஒருவர் சென்ற போதுஅவருக்கு ஒரு தட்டில் ஜிலேபி வைத்தார் நண்பரின் மனைவி.ஜிலேபியை இரண்டாக விண்ட போது அதில் நூல் போல் வந்தது.சிரமப்பட்டு அதை சாப்பிட்டு விட்டார்.நண்பர் கேட்டார்.''ஜிலேபி எப்படி இருந்தது?''இவர் சொன்னார்,'மிக நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் தாமதமாக வந்து விட்டேன்.'
நண்பர் மனைவியிடம் வாழைப்பழம் கொண்டு வந்து கொடுக்கச் சொல்ல அவரும் தட்டில் கொண்டு வந்து வைத்தார்.அது சற்றுக் காயாக இருந்தது.இதையும் சிரமப்பட்டு சாப்பிட்டார் வந்தவர்.நண்பர் கேட்டார்,''வாழைப்பழம் நன்றாக இருந்ததா?''வந்தவர் சொன்னார்,'நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் முன்னால் வந்து விட்டேன்.'

பாவம்

0

Posted on : Monday, January 11, 2010 | By : ஜெயராஜன் | In :

''டாக்டர்,என் கணவர் தூக்கத்தில் சிரிக்கிறார்.''
'விடுங்கம்மா,பாவம்.தூக்கத்திலாவது சிரித்து விட்டுப் போகட்டும்.'

பேச்சு

0

Posted on : Monday, January 11, 2010 | By : ஜெயராஜன் | In :

மனைவி (கணவனிடம்):ஏங்க....நீங்க இன்னிக்கு பேசப்போற கூட்டத்துக்கு நான் வரட்டுமா?
கணவன்:வீட்டிலேயே என் பேச்சைக் கேட்க மாட்டாயே...கூட்டத்தில வந்தா கேட்கப்போறே?

வித்தியாசம்

0

Posted on : Monday, January 11, 2010 | By : ஜெயராஜன் | In :

காட்டு வழியே சென்று கொண்டிருந்த வழிப் போக்கன் ஒருவன்,கறுப்பு வெள்ளை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததை கவனித்து அந்த ஆடுகளை மேய்ப்பவனிடம் கேட்டான்,''தம்பி,இந்த ஆடுகள் ஒரு நாளைக்கு எவ்வளவு புல் தின்னும்?''
ஆடு மேய்ப்பவன்:வெள்ளை ஆடுகளா,கறுப்பு ஆடுகளா?
வ.போ.;வெள்ளை ஆடுகள்
ஆ.மே; ஒரு கூடை புல் தின்னும்.
வ.போ.;அப்படியானால் கறுப்பு ஆடுகள் எவ்வளவு தின்னும்?
ஆ.மே.;அவையும் ஒரு கூடை புல் தின்னும்.
வ.போ.;ஒரு ஆடு எவ்வளவு கம்பளி தரும்?
ஆ.மே.;வெள்ளை ஆடுகளா,கறுப்பு ஆடுகளா?
வ.போ.;வெள்ளை ஆடுகள்.
ஆ.மே.;அவை வருஷம் ஒன்றுக்கு மூன்று கிலோ கம்பளி தரும்.
வ.போ.;அப்படியானால்,கறுப்பு ஆடுகள்....?
ஆ.மே.;அவையும் மூன்று கிலோ கம்பளி தரும்.
வ.போ.;(எரிச்சலுடன்)ஏன் இப்படி கறுப்பு ஆடுகளையும் வெள்ளை ஆடுகளையும் இனம் பிரித்துக் கூறுகிறாய்?
ஆ.மே.;ஏனெனில் வெள்ளை ஆடுகள் எங்கள் அப்பாவுக்குச் சொந்தமானவை.
வ.போ.;அப்படியானால் கறுப்பு ஆடுகள்....?
ஆ.மே.;அவையும் எங்க அப்பாவுக்குச் சொந்தமானவை தான்.
அதற்கு மேல் கேள்வி கேட்க வழிப்போக்கனுக்குப் பைத்தியமா பிடித்திருக்கு?

வழுக்கை

0

Posted on : Sunday, January 10, 2010 | By : ஜெயராஜன் | In :

''தென்னை மரத்துக்கும் மனிதனுக்கும் நேர் விரோதம்.எப்படி?''என்று திரு.கி.வா.ஜகன்னாதனிடம்நண்பர் வினவினார்.
''தென்னை மரத்தில் காய்க்கும் தேங்காயில் இளமையில் வழுக்கை இருக்கும்.மனிதனுக்கு முதுமையில் தான் வழுக்கை வரும்.''என்று அழகாகப் பதில் சொன்னார் கி.வா.ஜ.

முத்து எங்கே?

0

Posted on : Sunday, January 10, 2010 | By : ஜெயராஜன் | In :

நதிக்கரையில் இருந்த ஞானியைப் பார்க்க பெரிய கூட்டம்.பெரிய பணக்காரர் ஒருவர் பொறுமையின்றிக் காத்திருந்து தன முறை வந்த போது,தான் பணக்காரன் என்பதை உணர்த்த இரண்டு விலை உயர்ந்த முத்துக்களைக் கொடுத்தார்.ஞானி அதை வாங்கிப் பார்த்து விட்டு அதில் ஒன்றை நதியில் நழுவ விட்டார்.முத்து நதியில் விழுந்து விட்டது.பணக்காரர் அதிர்ச்சியடைந்து முத்தைத் தேட ஆரம்பித்தார்.கிடைக்கவில்லை.ஞானியிடம் வந்தார்.''அந்த முத்து எங்கே விழுந்தது என்று காட்டுங்கள்.''என்று அவரிடம் கேட்டார்.ஞானி இன்னொரு முத்தையும் நதிக்குள் வீசி,''இந்த முத்து விழுந்த இடத்தில் தான் முதல் முத்தும் விழுந்தது.''என்று மிக அமைதியாகக் கூறி விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

சத்து

0

Posted on : Saturday, January 09, 2010 | By : ஜெயராஜன் | In :

''சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே,என்ன ஆச்சு?''
'இப்போ என் சொத்து குறைந்து போச்சு.'

எச்சரிக்கை

0

Posted on : Saturday, January 09, 2010 | By : ஜெயராஜன் | In :

மது பானக் கடையில் குடித்துக் கொண்டிருந்த ஒருவன் பாத் ரூம் செல்ல எழுந்த போது தனது விஸ்கியை யாரேனும் குடித்து விடக்கூடாது என்பதற்காக ஒரு துண்டு காகிதத்தில் ,''இதில் நான் எச்சில் துப்பியிருக்கிறேன்.''என்று எழுதி வைத்து விட்டுச் சென்றான்.சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த போது அதே காகிதத்தில் வேறு ஒருவன் எழுதி வைத்திருந்தான்,''நானுந்தான்.''என்று.

தலைச்சுமை

0

Posted on : Thursday, January 07, 2010 | By : ஜெயராஜன் | In :

அவர் அதிகம் படித்தவர்.அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம்.ஏராளமான நூல் நிலையங்கள் ஏறி இறங்கியிருக்கிறார்.ஏராளமான புத்தகங்கள் படித்துள்ளார்.ஒரு நாள் நூலகத்திலிருந்து வரும் வழியில் அவருடைய செருப்பு அறுந்து விட்டது.வழியில் இருந்த செருப்புத் தைப்பவன் ஒருவனிடம் கொடுக்க,அவன் சரி செய்ய ஒரு நாள் ஆகும் என்றான்.ஒரு நாள் முழுவதும் செருப்பின்றி எவ்வாறு நடப்பது என்று அவர் கேட்க,செருப்புத் தைப்பவன் வேறொருவருடைய செருப்பை ஒரு நாளைக்குத் தருவதாகக் கூறினான்.''மற்றவர் செருப்பை என் காலில் அணிவது எப்படி?''என்றார் அவர் கோபத்துடன்.
செருப்புத்தைப்பவன் சொன்னான்,''மற்றவர்களுடைய கருத்துக்களை எல்லாம் உங்கள் தலையில் சுமந்து கொண்டிருக்கும் நீங்கள்,மற்றவர்களுடைய செருப்பை உங்கள் காலில் அணியக் கூடாதா?''
இவர் முதல் முறையாக சுயமாக சிந்திக்கத் தொடங்குகிறார்.அந்தத் தொழிலாளியைப் பார்க்கிறார்...ஒரு புத்தகத்தைப் பார்ப்பது போல் அவன் கைகள் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தன.அவன் வார்த்தைகள் இவர் நெஞ்சைத் தைத்துக் கொண்டிருந்தன.தலைச்சுமை மெல்ல தரைக்கு வர ஆரம்பித்தது.

கேலி

0

Posted on : Wednesday, January 06, 2010 | By : ஜெயராஜன் | In :

அவனை எல்லோரும் கேலி செய்தார்கள்.என்ன செயல் செய்தாலும் கேலிக்குள்ளாகி மனம் வருந்தினான்.ஒரு முனிவரை அணுகி இதற்கு வழிகேட்டான்.முனிவர் ஒரு எண்ணெய்நிரம்பிய கிண்ணத்தை அவன் கையில் கொடுத்து ஒரு சொட்டும் சிந்தாது ஊரைச் சுற்றி வரச் சொன்னார்.அவனும் சிரத்தையோடு அதைச் செய்தான்.அப்போதும் ஊரார் கேலி செய்தனர்.அவன் ஊர் சுற்றி வந்து எண்ணெய் கிண்ணத்தை முனிவரிடம் கொடுத்தான்."இன்று உன்னை யாரும் கேலி செய்ய வில்லையா?"என்று முனிவர் கேட்டார்.'கேலி செய்தார்கள்.ஆனால் எண்ணெய் சிந்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் அவர்கள் பேசியது என் காதில் விழவில்லை.'என்றான் அவன்.
"உன்னுடைய கவனம் எல்லாம் நீ செய்யும் செயலில் இருந்ததால் மற்றவர்கள் பேசியது உன் காதில் விழவில்லை.அத்துடன் செய்த காரியத்திலும் வெற்றி அடைந்திருக்கிறாய்.அப்படி இருக்கும் போதுநீ எதற்காக மற்றவர்கள் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து உன் காரியத்தை அரைகுறையாகச் செய்ய வேண்டும்?எனவே,பிறர் பேசுவதையெல்லாம் பொருட்படுத்தாது வாழ்க்கையில் முன்னேறத் தேவையான காரியங்களை முழு கவனத்தோடு செய்.அப்போது உன்னை யாரும் கேலி செய்ய மாட்டார்கள்."என்றார் முனிவர்.
அவன் தெளிவுடன் விடை பெற்றான்.

எப்போது படுப்பது?

0

Posted on : Wednesday, January 06, 2010 | By : ஜெயராஜன் | In :

"எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டவுடன் படுத்துவிடுவோம். உங்கள் வீட்டில் எப்படி?"
'கையைக் கழுவி விட்டுத்தான் படுப்போம்.'

காலை மிதித்தால்

0

Posted on : Wednesday, January 06, 2010 | By : ஜெயராஜன் | In :

இரண்டு பேர் பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்தனர்.
ஒருவர்:ஏங்க,நீங்க அரசியல்வாதியா?
மற்றவர்:இல்லீங்க..
முதல்வர்:நீங்க ஏதேனும் பதவியில் இருக்கிறீர்களா?
மற்றவர்:இல்லையே...
முதல்வர்:நீங்க பெரிய பணக்காரரா?
மற்றவர்:இல்லை...
முதல்வர்:ஏண்டா,என் காலை மிதிச்சிக்கிட்டிருக்கே?முதல்ல காலை எடுடா!

அனுமதி

0

Posted on : Tuesday, January 05, 2010 | By : ஜெயராஜன் | In :

"டாக்டர்,கொஞ்ச நாளா என் கணவருக்குத் தூக்கத்திலே பேசுற வியாதி இருக்கு.''
'பகலில பேசுறதுக்கு அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்த வியாதி சரியாகி விடும்.'

மூன்று சல்லடைகள்

0

Posted on : Tuesday, January 05, 2010 | By : ஜெயராஜன் | In :

"அய்யா,"என்று அழைக்கும் குரல் கேட்டது.தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் தலை நிமிர்ந்தார்."ஒரு செய்தி சொல்ல வந்தேன்,"என்று எதையோ சொல்ல முயன்றான் வந்தவன்.
"அவசரப்படாதே,நண்பனே!அந்தச் செய்தியை மூன்று சல்லடைகளில் சலித்துப் பார்த்தாயா?"
அவனுக்குப் புரியவில்லை."மூன்று சல்லடைகளா?"
"முதல் சல்லடை உண்மை அல்லாததைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்த செய்தி உண்மையானதுதானா?"
'அது எனக்குத் தெரியாது.மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.அவ்வளவுதான்'
"இரண்டாவது சல்லடை கெட்டசெய்திகளைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்தது நல்ல செய்தியா?"
'இல்லை அய்யா,'
"மூன்றாவது சல்லடை மற்றவர்களுக்குத் துன்பம் தரும் செய்திகளைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்தது மற்றவர்களுக்கு நன்மை தரக் கூடிய செய்தியா?"
'இல்லை'
"நீ என்னிடம் சொல்ல வந்த செய்தி உண்மையானது அல்ல;நல்ல செய்தியும் அல்ல;அதனால் யாருக்கும் நன்மையோ மகிழ்ச்சியோ ஏற்படப்போவதில்லை.
அப்படித்தானே?"
'ஆமாம்'
"அருமை நண்பனே!அப்படிப்பட்ட செய்தியைப் பற்றி நாம் பேசி ஏன்நமது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டும்?"
வந்தவன் வாயை மூடிக் கொண்டான்.

சேதம்

0

Posted on : Tuesday, January 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு யானை தோட்டத்தில் நுழைந்தால் அது உண்பதை விட சேதமாவதேஅதிகமாக இருக்கும்.தேனீ தேன்எடுப்பது மட்டும் வித்தியாசமானது.அது தேனை எடுப்பதால் பூவிற்கு எந்த சேதமும் மாற்றமும் ஏற்படுவதில்லை.ஒரு பூவைப் பார்த்து அதில் தேனீ தேன் எடுத்ததா இல்லையா என்பதை அறிய முடியாது.

வணக்கங்கள்

0

Posted on : Tuesday, January 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆசிரியர் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்.பள்ளியில் சேர வந்த ஒரு மாணவன்,"ஐம்பது ரூபாய்களையும் நூறு வணக்கங்களையும் சமர்ப்பிக்கின்றேன்."என எழுதிய அட்டையைக் கொடுத்தான்.ஆசிரியர் அந்த அட்டையில்,"ரூபாயில் ஐம்பதைக் கூட்டி,வணக்கத்தில் ஐம்பதைக் குறைத்துக் கொள்ளவும்."என எழுதி மாணவனிடம் கொடுத்தார்.

கண்ணாடி தரும் பாடம்

1

Posted on : Tuesday, January 05, 2010 | By : ஜெயராஜன் | In :

1நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கரையோ பட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது.அந்தக் கரையைக் கண்ணாடி கூட்டிக் காட்டுவதும் இல்லை;
குறைத்துக் காட்டுவதும் இல்லை.உள்ளது உள்ளபடி காட்டுகிறது.
அதே போல் உன் சகோதரனிடம்,நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ,அந்த அளவுக்குத்தான் சுட்டிக் காட்ட வேண்டும்.எதையும் மிகையாகவோ,ஜோடித்தோ,துரும்பைத் தூனாக்கவோ,மலையை கடுகாகவோ ஆக்கக்கூடாது.
2கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் அது உன் குறையைக் காட்டுகிறது.நீ அகன்று விட்டால் கண்ணாடி மவுனமாகிவிடும்.
அதேபோல்,மற்றவர்களின் குறைகளை அவர்களிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும்.அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.
3ஒருவருடைய குறையைக் கண்ணாடி காட்டுவதால் அதன் மீது யாரும் கோபமோ எரிச்சலோ படுவதில்லை.
அதேபோல்,நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமானால் திருத்திக் கொள்ள வேண்டும்.
கருத்து: முகம்மது நபிகள்

கோபத்துக்கு உகந்தது

0

Posted on : Monday, January 04, 2010 | By : ஜெயராஜன் | In :

எனது கோபங்களுக்கு நிறைய நியாயங்கள் உண்டு.உலகில் எந்தக் கொடுமைக்குத்தான் நியாயமில்லை?அந்த நியாயங்கள் யாருக்கு வேண்டும்?
அன்பு செய்யவும்,சகித்துக் கொள்ளவும்,சாந்தத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவாத நியாயங்களால் என்ன பயன்?
என் உள்ளே கோபம் உருவாவது குறித்து எனக்குக் கவலை இல்லை.கோபம் என்ற உணர்வு இல்லாவிடில் நான் பேடியாகிவிடுவேன்.கோபமே கொள்ளாதிருக்க இந்த உலகம் அவ்வளவு யோக்கியமாக இல்லை.எனது கோபமே என்னிடம் உள்ள நல்ல குணம்.ஆனால் அதை சேமித்து வைக்காமல் விரயமாக்குவது தான் எனக்கு சம்மதமில்லை.நான் கோபமே கொள்ளாத அளவுக்கு மழுங்கிப் போவதில் எனக்கு விருப்பம் இல்லை.எனது கோபம் என்னையே வென்றுவிடுகிற அளவுக்கு நான் பலமில்லாதவன் ஆகி விடுவதுதான் எனக்கு வருத்தம் தருகிறது.
எனது கோபங்களுக்கான நியாயங்களை நான் மறுக்கப் போவதில்லை.என்னைக் கோபத்துக்கு ஆளாக்குகின்ற சூழ்நிலைகளிலிருந்தும் நான் தப்பித்துக் கொள்ளவும் போவதில்லை.கோபத்தின் பொது எனது நாவிலிருந்து வெளிப்படுகின்ற சொற்கள் பிறரைச் சுடுகின்ற வெம்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.அப்போது நான் பேசுகின்ற வார்த்தையெல்லாம் ஒரு பைத்தியக் காரனின் பிதற்றல் போல் தெரிகிறது.
எனவே கோபங்களை இனி நான் சேமித்து வைக்கப் போகின்றேன்.கோபம் வரும்போது நான் மவுனமாகி விடப்போகிறேன்.செயலற்று இருந்து விடப் போகிறேன்.கோபத்துக்கு உகந்தது மவுனமே.
--ஜெயகாந்தன்.

ஒப்பீடு

0

Posted on : Monday, January 04, 2010 | By : ஜெயராஜன் | In :

காக்கையும் கருப்புதான்;குயிலும் கருப்பு தான்.இவற்றுக்குள் என்ன வித்தியாசம்?
வசந்த காலம் வந்து விட்டாலும்,காக்கை காக்கை தான்!குயிலும் குயில் தான்!
கருப்பாக இருப்பதால் காக்கையும் குயிலும் ஒன்று போல் தோன்றலாம்.
ஆனால் வசந்த காலத்தில்
பாடும் குயிலின் குரலோடு,கத்தும் காக்கையின் குரலை ஒப்பிட்டுப் பார்க்க நினைவும் தோன்றுமா?
அமரகோஷத் என்னும் சம்ஷ்க்ருத செய்யுளின் கருத்து.

உற்சாகம்

0

Posted on : Monday, January 04, 2010 | By : ஜெயராஜன் | In :

மரத்தில் ஆங்காங்கே இலைகள் துளிர்க்கும் போது,"வசந்தம் எவ்வளவு அழகாக இருக்கிறது!"என்று சிலாகித்துக் கொள்ள வேண்டும்.
கிளைகளில் இலைகள் அடர்ந்து பொன்னிறக் கனிகள் ஊஞ்சலாடும் போது,
"மாரிக்காலம் எவ்வளவு நேர்த்தியானது!"என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
கோடையில் இலைகள் எல்லாம் உதிர்ந்து மரம் மொட்டையாக இருக்கும் போது அதன் வழியே வானத்தைப் பார்த்து,"ஆகா,இந்த நட்சத்திரக் கூட்டங்கள் எவ்வளவு அற்புதமாகக் காட்சியளிக்கின்றன!"என்று ரசிக்க வேண்டும்.
எப்போதும் வாழ்வின் பிரகாசமான பகுதிகளைப் பார்த்து உற்சாகம் பெற வேண்டும்.