அவர் அதிகம் படித்தவர்.அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம்.ஏராளமான நூல் நிலையங்கள் ஏறி இறங்கியிருக்கிறார்.ஏராளமான புத்தகங்கள் படித்துள்ளார்.ஒரு நாள் நூலகத்திலிருந்து வரும் வழியில் அவருடைய செருப்பு அறுந்து விட்டது.வழியில் இருந்த செருப்புத் தைப்பவன் ஒருவனிடம் கொடுக்க,அவன் சரி செய்ய ஒரு நாள் ஆகும் என்றான்.ஒரு நாள் முழுவதும் செருப்பின்றி எவ்வாறு நடப்பது என்று அவர் கேட்க,செருப்புத் தைப்பவன் வேறொருவருடைய செருப்பை ஒரு நாளைக்குத் தருவதாகக் கூறினான்.''மற்றவர் செருப்பை என் காலில் அணிவது எப்படி?''என்றார் அவர் கோபத்துடன்.
செருப்புத்தைப்பவன் சொன்னான்,''மற்றவர்களுடைய கருத்துக்களை எல்லாம் உங்கள் தலையில் சுமந்து கொண்டிருக்கும் நீங்கள்,மற்றவர்களுடைய செருப்பை உங்கள் காலில் அணியக் கூடாதா?''
இவர் முதல் முறையாக சுயமாக சிந்திக்கத் தொடங்குகிறார்.அந்தத் தொழிலாளியைப் பார்க்கிறார்...ஒரு புத்தகத்தைப் பார்ப்பது போல் அவன் கைகள் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தன.அவன் வார்த்தைகள் இவர் நெஞ்சைத் தைத்துக் கொண்டிருந்தன.தலைச்சுமை மெல்ல தரைக்கு வர ஆரம்பித்தது.
|
|
Post a Comment