உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பின்வாங்குவது தவறா?

2

Posted on : Friday, November 22, 2013 | By : ஜெயராஜன் | In :

பல விசயங்களில்  நாம் ஆர்வமாக ஈடுபடுகின்றோம்.கொஞ்ச தூரம் போனதும்தான்,''ஐயோ! வசமாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே!ஜகா வாங்க வேண்டியதுதானா?''என்கிற கலவர நினைப்பு வரும்.ஆனால் சுற்றியிருப்பவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நினைப்பும் சேர்ந்தே வரும்.இவை நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்தி விட்டுப் போகும்.அதாவது,'என்ன ஆனாலும் சரி,ஒரு கை பார்த்து விடுவது,''என்று இறங்கி,முகத்தைப் பெயர்த்துக் கொள்வார்கள்.இது புத்திசாலிக்கு அழகல்ல.எவ்வளவோ விசயங்களை ஆர்வக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம்,அப்போது பிரச்சினை பூதாகரமாகத் தெரிவதில்லை.இறங்க இறங்கத்தான் ஆழம் மட்டுப் படுகிறது.சுட்டுப் பொசுங்கிய பின்தான்  சூடு புலப்படுகிறது.இது பின் வாங்க வேண்டிய தருணம்!அதற்காக எந்த விசயத்தில் தடங்கல் வந்தாலும் உடனே உதறி விட்டு ஓடி விட வேண்டும் என்று பொருள் அல்ல.கடைசி வரை போராட வேண்டியது தான்.ஆனால் நம்பிக்கை ஒளி கொஞ்சம் கூடத் தெரியாத பிரச்னை எண்ணும் மலை முகட்டில்,போலியான கௌரவத்திற்காகவும்,யார் என்ன நினைப்பார்களோ என்ற அர்த்தமற்ற வாதத்திற்காகவும் நடந்து,நடந்து அதல பாதாளத்தில் விழுந்து விடக் கூடாது.சொல்லியும் கேளாமல் சுயமாயும் புரியாமல்,'எனக்கு நானே குழி தோண்டிக் கொள்கிறேன்,''என்ற வரட்டுத் தனத்திற்கு நாம் ஒரு போதும் விலை போய் விடக் கூடாது.இடையில் பின் வாங்குவது அவமானம் எனத் தயங்குபவர்கள் முழுப் பாதையும் கடந்தபின் வாங்கப் போவது அதை விடப் பெரிய அவமானம் என்பதை உணர வேண்டும்.பாதித் தவறை செய்து திருத்திக் கொண்டவனை மன்னிக்க உலகம் தயாராக இருக்கிறது.ஆனால் முழுத் தவறை செய்து விட்டால் சாமான்யமாய் மறக்காது;மன்னிக்கவும் செய்யாது.
நிச்சயமாகத் தவறு என்று தெரிந்து விட்டால் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பின் வாங்குவதில் தவறேயில்லை!

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

நன்று ஐயா...

நன்றி ஐயா...

Post a Comment