நாம் ஒருவருடன் உட்கார்ந்து ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கும்.அத்தகைய நேரத்தில் நுழைவார்கள் சில கரடி மனிதர்கள்.மரியாதைக்காக நாம் அவர்களை விசாரிப்போம்.அவ்வளவுதான்.ஒரு பெரிய செய்தி மூட்டையை அவிழ்த்து விட்டு நாம் பேசிக் கொண்டிருந்த தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் நம்மை எங்கோ கொண்டு விட்டு விடுவார்கள்.நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தில் வரக்கூடிய ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு தங்கள் அனுபவங்களைப் பேச ஆரம்பித்து அபூர்வமாகச் சந்தித்த இரு நண்பர்களின் பொன்னான நேரத்தை வீணடித்து அவர்கள் வந்த பிரச்சினைக்கு முடிவெடுக்க முடியாமலேயே செல்ல வைத்து விடுவார்கள்.கரடி மனிதர்கள் வந்த விஷயத்தையும் சொல்லாமல் அதிக நேரத்தையும் வீணாக்குவார்கள். நமக்கே நம் பிரச்சினை குழப்பிக் கொண்டிருக்கும்போது புரியாத்தனமாக தங்கள் பிரச்சினையை விலாவாரியாக எடுத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.ஒரு வேலையும் செய்ய விடமாட்டார்கள்.
சில சமயம் நம்மையும் அறியாமல் நாமே கரடி மனிதர்கள் ஆகி விடுவதுண்டு.நாம் கரடி மனிதர்களா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
*நாம் நுழைந்ததும் சம்பந்தப்பட்ட இருவர் பேச்சும் கப்பென்று துண்டிக்கப்பட்டால் நாம் கரடி மனிதர்கள்.
**நாம் நுழைந்ததும் அவர்கள் பேச்சை மாற்றினால் நாம் கரடி மனிதர்கள். என்பது அவர்களின் எண்ணம்.
***நம்மிடம் எந்தப் பேச்சையும் வளர்க்காமல் அவர்கள் பாட்டிற்குப் பேசிக் கொண்டிருந்தாலும் நாம் கரடி மனிதர்கள்.
சரி,நாம் கரடி மனிதர்கள் என்று பேர் வாங்காதிருக்க என்ன வழி?
*''நீங்கள் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருக்கும்போது நான் நுழைந்து கெடுத்து விட்டேன் என்று நினைக்கிறேன்,''என்று சொல்லிவிட்டு பேச்சை தொடங்க வேண்டும்.
**தங்கள் தவிப்பை அடியோடு புறக்கணித்துவிட்டு நம்முடன் உரையாடுவதில் ஆர்வம் காட்டாவிட்டால் உடனே அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.
***அவர்கள் கேட்டாலொழிய நம் மூட்டைகளை அவிழ்க்காமல் அவர்கள் பேசும் தலைப்பை ஒட்டியே நாம் பேச வேண்டும்.அதையும் அவர்கள் விரும்பும் வகையில் பேச வேண்டும்.
இப்படிச் செய்தால் நாம் கரடிகள் அல்ல;சூரப்புலிகள்.
--லேனா தமிழ்வாணன்
|
|
Post a Comment