உடல் ஆரோக்கியத்திற்கு கனவு அவசியம்.மனிதன் தூங்கும் எட்டு மணி நேரத்தில் முதல் மூன்று மணி நேரம் ஆழ்ந்த தூக்கம்(deep sleep).அடுத்த இரண்டு மணி நேரம் கனவுத்தூக்கம்(dream sleep).இந்த சமயத்தில் கண் இமை மூடியிருந்தாலும் கண்கள் ஆடத்தொடங்கும்.அந்த சமயத்தில் அந்த மனிதனை எழுப்பிக் கேட்டால்,கனவு கண்டு கொண்டிருந்ததாகச் சொல்வான்.இந்த நிலைக்கு Rapid eye movement(REM) என்று பெயர்.மீண்டும் தொண்ணூறு நிமிடம் ஆழ்ந்த தூக்கம்.அதற்குப் பிறகு தொண்ணூறு நிமிடம் கனவுத்தூக்கம்.இதற்குப் பிறகு மனிதன் விழித்துக் கொள்வான்.இந்த நியதி மாறினால் மனிதனுக்கு ஏதோ வியாதி என்று பொருள். எல்லாக் கனவுகளும் நினைவுக்கு வரும் என்று சொல்ல முடியாது.முதல் கட்ட கனவுத் தூக்கத்தில் வரும் கனவுகள் பெரும்பாலும் ஞாபகத்துக்கு வராது.இரண்டாவது கட்ட கனவுத்தூக்கத்தில் வரும் கனவுகள் சில நினைவுக்கு வரலாம்.மொத்தத்தில் 80% கனவுகள் நினைவில் வருவதே இல்லை.
மன நிலை பாதிக்கப்படும்போது இந்தத் தூக்க முறையும் பாதிக்கப் படுகிறது.ஆழ்ந்த தூக்கம் குறைந்து கனவுத் தூக்க நேரம் அதிகமானாலும்,'தூக்கம் கெட்டுப்போச்சு,ஒரே கனவு,'என்பார்கள்.தூக்கம் வரவில்லைஎன்று தூக்க மாத்திரை சாப்பிட்டால் தூக்கத்தின் இயற்கை நியதி கெட்டுப் போகிறது.இதனால் நாளடைவில் மூளையின் செயல் திறன் குறைகிறது.சோம்பேறித்தனம்,சிடுசிடுப்பு,உழைப்பில் ஆர்வமின்மை உண்டாகின்றன.
கனவுத்தூக்கத்தில் மூளையிலிருந்து சில கழிவுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன.அதனால் மூளை தடையின்றி இயங்குவது சாத்தியமாகிறது.இந்தத் தூக்கத்தில் மூளை தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்கிறது.
மனிதன் அன்றாட வாழ்வில் பல அனுபவங்களைப் பெறுகிறான்.அவை மூளையில் பதிவாகின்றன.கோபம்,பொறாமை,பேராசை போன்ற கெட்ட குணங்கள் அந்த அனுபவங்களின் மூலம் விளையலாம்.ஆனால் சூழ்நிலை காரணமாக மனதில் இவ்வுணர்வுகள் அமுக்கப்படுகின்றன.இரண்டு நிலை கனவுத் தூக்கத்திலும் இந்த உணர்வுகள் மாறுபட்ட உருவத்தில் கனவாக வெளிவரும் சாத்தியக் கூறுகள் உள்ளன.அதனால் தான் மனிதன் மூளை கலங்காமல்(sane) இருக்கிறான்.உணர்வுகளுக்கு வடிகாலாகக் கனவுகள் விளங்குகின்றன.நாம் உண்ணும் உணவுக்கும் கனவுக்கும் தொடர்பு உண்டு. உண்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாவிட்டால் கனவுத்தூக்கம் கெட்டுவிடும்.
--நரம்பியல் மேதை டாக்டர்.பி.ராமமூர்த்தி.
|
|
Post a Comment