உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சம்பிரதாயம்

3

Posted on : Wednesday, September 04, 2013 | By : ஜெயராஜன் | In :

மத போதகர் ஒருவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அவர் கடவுளை வணங்கும் முறை மற்றும் மத சம்பந்தமான சாஸ்திர சம்பிரதாயங்களில் கரை கண்டவர்.திடீரென கடலின் சீற்றம் காரணமாக கப்பல் சேதமடைந்து தெய்வாதீனமாக அவர் தப்பி ஒரு தீவினை அடைந்தார்.இவர் ஒரு மதபோதகர் என்பதனை அறிந்த அவ்வூர் மக்கள் மிகுந்த நட்பு பாராட்டினர்.அவரும் அங்கு மத போதகர் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.மக்களும் அங்கு அவ்வாறு யாரும் இல்லைஎன்றும் அவ்வூரில் மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும் அவர்கள் இறை பக்தி மிக்கவர்கள் என்றும் மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்றும் அவர்கள் சொல்வது படிதான் அங்கு வழிபாடுகள் நடக்கும் என்று கூறினார்.போதகரும் உடனே அவர்களைப் பார்க்க விரும்பியதால் அவர்களிடம் அவர் அழைத்து செல்லப்பட்டார்.மூன்று சகோதரர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர்.பொதுவான விசயங்கள் பேசி முடித்ததும் போதகர் அங்கு இறைவழிபாடு என்ன முறையில் நடக்கிறது என்று கேட்டார்.அந்த சகோதரர்கள் ,''நாங்கள்  எங்கள்  தொழிலில் முழு கவனமுடன் இருப்போம்.எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் ஆண்டவனுக்கு தினமும் சிறிது நேரம் சாதாரணமாக நன்றி சொல்வோம்.''என்றனர்.இவர்கள் அறியாமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய போதகர் அவர்களிடம் இறை வழிபாட்டு முறைகளை விளக்கினார்.அவர்களுக்கு சில பாடல்கள் புரியவில்லை என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டினர்.பல முறை சொல்லிக் கொடுத்தும்  அவர்களால் சரியாக உச்சரித்துப் பாடமுடியவில்லை.அதற்காக அவர்கள் வருத்தப்பட்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்கள்.இதற்கிடையில் ஒருநாள் ஒரு கப்பல் அங்கு வந்ததால் போதகரும் அவர்களிடம் தான் சொல்லிக் கொடுத்தவற்றைக் கடைப்பிடிக்க சொல்லி அறிவுறுத்தி விட்டு கப்பலில் ஏறினார்.கப்பல் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. .மக்கள் அனைவரையும் பார்த்துக் கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தார்,போதகர்.அப்போது அவர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.அந்த மூவரும் கடலில் வேகமாக நடந்தவாறு கப்பலை நோக்கிக் கத்தியபடி வந்து கொண்டிருந்தனர்.கப்பல் உடனே நிறுத்தப்பட்டது. மூச்சிறைக்க வந்த அவர்கள் போதகரிடம்,''ஐயா,நீங்கள் சொல்லிக் கொடுத்தது மறந்துவிட்டது.தயவு செய்து இன்னொரு முறை சொல்லிக் கொடுங்கள்,''என்றனர்.போதகர் சொன்னார்,''என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.உண்மையான பக்தி சம்பிரதாயங்களில் இல்லை என்று நீங்கள் எனக்கு உணர்த்திவிட்டீர்கள்.நீங்கள் உங்கள் வழக்கப்படியே இறைவனை வணங்குங்கள்.கடலிலே நடக்கக் கூடிய அளவுக்கு உங்களிடம் இறைவனின் கருணை உள்ளது .உங்கள் காலில் விழக்கூட நான் தகுதியற்றவன்,'' என்றார்.அவர் சொல்வது புரியாது அம்மூவரும் அவரிடம் விடைபெற்றனர்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

அருமை...!

ithu allavo uNmayaana iRai vaZhipaadu

மிக்க நன்றி,நண்பர்களே!

Post a Comment