உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கிண்டல்

0

Posted on : Friday, April 30, 2010 | By : ஜெயராஜன் | In :

நிக்கோலாஸ் என்பவன் 1825 ல் ரஷ்யாவில்  ஜார் மன்னனாக  அரியணை ஏறினான்.அவன் அரியணை ஏறியதும் நாடு முழுக்க,ஐரோப்பிய நாடுகளைப் போல நாகரீகம் கொண்டு வர வேண்டும் என்று கூறி ஒரு கூட்டம் புரட்சியில் ஈடுபட்டது.அந்தக் கூட்டத்தின் தலைவன் ரைலேஎவ் என்பவனை மன்னன் பிடித்து மரண தண்டனை வழங்கினான்.புரட்சியையும் அடக்கினான்.
ரைலேஎவ்  தூக்கு மேடை ஏறினான்.தூக்குக் கயிறு மாட்டப் பட்டது.விசையை அழுத்தும் போது திடீரெனக் கயிறு அறுந்து அவன் கீழே விழுந்தான். ரஷ்யாவில்  அந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை உண்டு.இது மாதிரி தூக்கில் இட முடியாத சூழ்நிலை  ஏற்பட்டால் அதைக் கடவுளின் ஆணை என்று கருதி குற்றவாளியை மன்னித்து விட வேண்டும். இதனால் தூக்கிலிருந்து தாம் தப்பி விட்டோம் என்பதை உணர்ந்த ரைலேஎவ்,''பாருங்கள்,,ரஷ்யாவில் ஒரு கயிறைக் கூட சரியாக செய்யத் தெரியவில்லை.ரஷ்யாவை ஆள்பவர்களுக்கு எதுவுமே தெரியாது.''என்று கேலியாகக் கூறினான்.ரைலேஎவைத்  தூக்கிலிடும் போது நடந்த நிகழ்ச்சியை காவலன் ஒருவன்  மன்னனிடம் போய்ச் சொன்னான்.மன்னனும் நடைமுறை கருதி ரைலேஎவை மன்னிக்கும் ஆணையை தயார் செய்யச் சொன்னான்.அப்போது தற்செயலாக,மன்னன்,காவலனிடம்,''ரைலேஎவ் இது பற்றி ஏதாவது பேசினானா ?''என்று கேட்டான். காவலன் அவன் பேசிய விபரத்தைச் சொல்ல மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே மன்னிப்பு ஆணையை கிழித்தெறிந்தான்.அவனை மீண்டும் தூக்கிலிட உத்தரவிட்டான். மறுநாள் ரைநேஎவ் தூக்கிலிடப்பட்டான்.இம்முறை கயிறு ஒன்றும் ஆகவில்லை
நம் வாயிலிருந்து வார்த்தைகள் ஒரு முறை வெளியே வந்து விட்டால் அவற்றைத் திரும்பப் பெற முடியாது.எனவே வார்த்தைகளைக் கவனத்துடன் கையாள வேண்டும்.குறிப்பாகக் கேலி,கிண்டல்  பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.கேலி செய்யும் போது ஏதோவொரு இன்பம் தோன்றும்.ஆனால் அது தற்காலிகமானது.ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது..

பட்டாம் பூச்சி

1

Posted on : Friday, April 30, 2010 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என  குருவிடம்  சீடன்  கேட்டான்.குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.வித விதமான பட்டம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.குரு சீடனை ஒரு பட்டாம் பூச்சியைப் பிடித்து வரச்சொன்னார்.எவ்வளவோ ஓடி முயன்றும் அவனால் ஒரு பட்டாம் பூச்சியைப் பிடிக்க முடிய வில்லை.''பரவாயில்லை,நாம் இந்தத்  தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்''எனக்கூறி குரு சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் தோட்டத்தின் அழகைக் கண் குளிரக் கண்டு களித்தனர்.சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கின.சீடன் துரத்திய பட்டாம் பூச்சி அவன் கைகளிலேயே இப்போது வந்து அமர்ந்தது.குரு சிரித்தார்.
''இது தான் வாழ்க்கை.மகிழ்ச்சியைத் தேடித் துரத்துவது வாழ்க்கை அல்ல. நாம் வாழ்வை அமைதியாக ரசிக்கும் போது மகிழ்ச்சி  தானே கிடைக்கும்,''என்றார் குரு.

நோயின் போது

0

Posted on : Thursday, April 29, 2010 | By : ஜெயராஜன் | In :

வேறு எப்போதையும் விட நோயுறும் போது தான் மனதில் அதிகக் கேள்விகள் பிறக்கின்றன.வீடு கற்றுத்தர மறந்ததை நோய்ப் படுக்கை கற்றுத் தந்து விடுகிறது.வாழ்வின் அருமையையும், யார் நமக்கு நெருக்கமானவர்கள்,யார் நம்மைப் பயன் படுத்திக் கொண்டவர்கள் என்பது நோயுறும்  போது தான் தெரியத் தொடங்குகிறது.உடல் குறித்த நமது கவனம் மிக அலட்சியமானது. இயல்பாக இருக்கும் போது உடலின் அற்புதம் நமக்குப் புரிவதேயில்லை.    வலியின் முன்னால் வயதோ,,பணமோ,பேரோ,புகழோ,எதுவும் நிற்பதில்லை. வலி மனிதனை உண்மைக்கு மிக நெருக்கம் ஆக்குகிறது.தன்னைப் பற்றி தான் கொண்டிருந்த அத்தனை பெருமிதங்களையும் ஒரே நிமிடத்தில் கரைத்து அழித்து விடுகிறது.நோய் ஒரு வகையில் நமது உடலை மட்டுமல்ல, ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது.
நோயின் போது, திடீரென உலகின் இயக்கத்திலிருந்து தான் துண்டிக்கப் பட்டது போலவும்,தன்னை அடியோடு உலகம் மறந்து போகும் என்பது போலவும் நோயாளி நினைக்கத் தொடங்குகிறான்.தான் படுக்கையில் இருக்கும் போது மற்றவர்கள் இயல்பாக  இருப்பது  குறித்து நோயாளிக்கு  ஆத்திரம் வருகிறது.தனக்காக மற்றவர்கள் வருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறான்.வாழ்க்கை தன்னைப் புரிய வைப்பதற்குசில  நிகழ்வுகளையும்,தருணங்களையும் ஏற்படுத்துகிறது.உடலில் தோன்றிய நோய் நீங்கக் கூடும்.ஆனால் நோய்மை ஏற்படுத்திய புரிதல் வாழ் நாள் முழுவதும் கூட இருக்கும்.
                                                              __எஸ்.ராமகிருஷ்ணன்.

சொல்லாதே

0

Posted on : Thursday, April 29, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு வெள்ளைக்காரப் பாதிரியார் கறுப்பர் இன மக்களிடையே நிறைய சேவைகள் செய்து வந்தார்.மக்கள் அவரை மரியாதையுடன் நடத்தினர்.ஒரு முறை கறுப்புப் பெண் ஒருத்திக்கு வெள்ளை நிறத்தில் குழந்தை பிறக்க, மக்கள் கொதிப்படைந்தனர்.பாதிரியார் அவர்களை சமாதானம் செய்ய,தலைவனை அழைத்து,ஒரு ஆட்டு மந்தையைக் காட்டினார்.''இதெல்லாம் படைப்பின் வினோதம்.அதோ பார்,அந்த ஆட்டு மந்தையில் அனைத்து ஆடுகளும் வெள்ளையாய் இருக்க  ஒரே ஒரு ஆடு மட்டும் கருப்பாக இருப்பது ஏன்?''தலைவன் தலை குனிந்து,'பாதர்,நீங்க சொல்லவில்லை என்றால்,நானும் சொல்லவில்லை' என்றான்.

திருட்டு

0

Posted on : Wednesday, April 28, 2010 | By : ஜெயராஜன் | In :

அண்ணன் தம்பி இருவர் மலையேற்றத்துக்குப் போன இடத்தில் ஒரு கூடாரம் அமைத்து இரவில் தங்கினர்.நள்ளிரவில் தம்பிக்கு விழிப்பு வந்தது.தன அண்ணனை எழுப்பி ,'மேலே வானத்தைப் பார்.என்ன தெரிகிறது?'என்று கேட்டான்.அண்ணன் சொன்னான்,''நட்சத்திரங்கள்''தம்பி சொன்னான்,'அப்படி அலட்சியமாகச் சொல்லக் கூடாது.ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே தென்படுகிறது என்ற நிலையை வைத்து இருளில் கூட நாம் திசையைத் தெரிந்து கொள்ளலாம்.'அண்ணன் சொன்னான்,''உனக்கு என்னென்னவோ  தெரிகிறது.எனக்குப் புரிந்தது ஒன்றே ஒன்று தான்.நட்சத்திரம் தெரிகிறது என்றால் நம் கூடாரத்தையே யாரோ திருடிக் கொண்டுபோய் விட்டார்கள் என்று அர்த்தம்.''

வெற்றி வாகை

0

Posted on : Wednesday, April 28, 2010 | By : ஜெயராஜன் | In :

'வெற்றி வாகை'சூடினார் என்று வெற்றி பெற்றவர்களைக் குறிப்பிடுகிறார்கள். வெற்றி என்றால் தெரியும்.வாகை என்றால் என்ன?சங்க காலத்தில் போர் புரியும் போது போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு மலர்களை அணிந்து கொள்வது வழக்கம்.இறுதி வெற்றி பெற்றவர் வாகை எனப்படும் மலரைச் சூட்டிக் கொள்வது வழக்கம்.இதற்குத்தான் 'வாகை சூடுதல் என்று பெயர்.
**********
கர்நாடக இசைக்கு அப்பெயர் எப்படி வந்தது?
கர்ணம் என்றால் காது.அடகம் என்றால் இனிமை.காதுக்கு இனிமையான இசை என்று பொருள்.
**********
எந்த முடிவை எடுப்பது சரியாக இருக்கும் என்ற குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட்
**********

கலங்கிய கண்கள்

0

Posted on : Tuesday, April 27, 2010 | By : ஜெயராஜன் | In :

1965  பாகிஸ்தான் யுத்தத்தில் பூபிந்தர் சிங் என்ற ராணுவ அதிகாரி அடிபட்டு  மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவரைப் பார்க்க வந்தார்.படுக்கையில் நகர முடியாமல் கிடந்த பூபிந்தரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.''தீரத்துக்கும் துணிச்சலுக்கும்  பெயர் பெற்ற பஞ்சாபியர் எதற்கும்  கலங்க மாட்டார்களே?அப்படிப்பட்ட உங்கள் கண்களில் நீரா!''என்று ஆச்சரியத்துடன் வினவினார் பிரதமர்.அப்போது பூபிந்தர் சிங் சொன்னார்,''நான் சாவுக்காகக் கலங்கவில்லை.நாட்டின் பிரதமர் வந்துள்ளாரே,அவரைப் பார்த்தவுடன் எழுந்து விறைத்து  நின்று கம்பீரமாக ஒரு  சல்யூட் செய்ய இயலவில்லையே என்று தான் எனக்கு வேதனையாக உள்ளது.''
இப்போது கலங்கியது எதற்கும் அஞ்சாத சாஸ்திரியின் கண்கள்!

விழும் போது

0

Posted on : Tuesday, April 27, 2010 | By : ஜெயராஜன் | In :

விடிகாலை சேவல் கூவியது.
'நான் எழும் போது இந்த சேவல் தான் எத்தனை அன்போடும் நட்போடும் என்னை வாழ்த்துகிறது?'_சூரியன் பூரித்துப் போனது.
மாலை நேரம்.சூரியன் மேற்கே அஸ்தமிக்கத் தொடங்கியது.
''நான் விழுந்து கொண்டிருக்கிறேனே!என்னைத் தாங்க யாரும் வரமாட்டார்களா?எழும் போது வாழ்த்துக் கூறிய சேவல் நண்பன்  கூட வரவில்லையே!''_ஏங்கியது சூரியன்.
''எழும் போது தாங்க வருபவன் எல்லாம்
விழும் போது தாங்க வருவதில்லை.''
சூரியன் உணர்ந்து சொல்லியது..

சன்மானம்

0

Posted on : Tuesday, April 27, 2010 | By : ஜெயராஜன் | In :

கருணையுள்ள மன்னர் ஒருவர் தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் வரும் தூரத்தைக் கணக்கிட்டு சன்மானம் கொடுத்து வந்தார்.அதிகப் பணம் பெற வேண்டும் என்ற ஆசையில் ஒருவன் மன்னரிடம் தான் வைகுண்டத்திலிருந்து வருவதாகக் கூறினான்.மன்னர் அவனுக்கு ஒரே ஒரு பொற்காசு மட்டும் கொடுத்தார்.வந்தவன் வருத்தத்துடன் ,'அய்யா,  வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?'எனக்கேட்டான்.
மன்னர் அமைதியாகச் சொன்னார்,''எனக்குத் தெரிந்து வைகுண்டம் கூப்பிடு தூரத்தில் தான் உள்ளது.கஜேந்திரன் என்ற யானை,தன காலை முதலை கடித்த போது,'ஆதிமூலமே,'என்று கூப்பிட்ட போது உடனே பெருமாள் வந்து விட்டார். அப்படியானால் வைகுண்டம் கூப்பிடு தூரத்தில் தானே இருக்க வேண்டும்?அவ்வளவு பக்கத்தில் இருந்து வந்த உனக்கு ஒரு பொற்காசு கொடுத்ததே அதிகம்.''

சிரிப்பவன்

0

Posted on : Monday, April 26, 2010 | By : ஜெயராஜன் | In :

தனக்குள் சிரிப்பவன் ஞானி .
தனக்குத்தானே  சிரிப்பவன்  பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.

மேலான வாழ்க்கை

0

Posted on : Monday, April 26, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நகரத்தின் மதில் பிளவு ஒன்றில் கொத்து மலர்கள் பூத்துக் குலுங்கின.பாதுகாப்பான இடத்தில் அவை அமைந்திருந்ததால் காற்று,புயல்,மழை, வெயில் இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை.
மதிலுக்கு அந்தப் பக்கம்,தரையில் ஒரு ரோஜாப் புதர் இருந்தது.ரோஜாக்களின்  அழகு,மதில்  மேல் இருந்த காட்டு மலர்களின் அழகை மங்க செய்து கொண்டிருந்தன.அவமானப்பட்ட அந்த மலர்கள் கடவுளிடம் ரோஜா மலர்களாக மாற்றும்படி வேண்டிக்கொண்டன.கடவுள் சொன்னார்,''ரோஜாவின் வாழ்க்கை சிரமமானது.புயலடித்தால் வேரோடு ஆடும்.மலர்ந்தால்,பறிக்க வருவார்கள்.இப்போது இருக்கும் பாதுகாப்பான நிலையை ஏன் இழக்க வேண்டும்?''
பக்கத்திலிருந்த வேறு காட்டு மலர்களும் ரோஜாவாகி இன்னல்களை அனுபவிக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டன.அனால் அம்மலர்கள் கடவுளிடம் ஒரு நாள் முழுவதுமாவது ரோஜாவாக மாற வேண்டிக்கொண்டன.
கடைசியில் கடவுள் சம்மதித்துவிட்டார்.மலர்கள் ரோஜாவாக மாறிவிட்டன. உடனே சோதனைகளும் சிக்கல்களும் ஆரம்பமாகிவிட்டன.புயலும் மழையும் அதன் வேர்களையே அசைத்தன.பின் வெயில் அதன் இதழ்களைக் காய வைத்து விட்டன.மழை அடித்து,அதை அடியோடு பெயர்த்துக் கீழே தள்ளி விட்டது.அவை எல்லையற்ற துன்பத்தை அனுபவித்தன.
காட்டு மலர்கள் சொல்லின,''நாங்கள் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.முன்பு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது?சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை பழக்கப் பட்டவையாய் இருந்தன.  நம்மால்சமாளிக்க  கூடியவை.இப்போது சிக்கலில் வம்பாக மாட்டிக் கொண்டீர்கள்.''

 மாறிய ரோஜா ஒன்று  சொன்னது,'நீங்கள் மடையர்கள்.பாதுகாப்பான சூழலில் மதில் மேல் காலம் பூராவும் உப்பு சப்பில்லாமல் வாழ்வதைக் காட்டிலும் ஆபத்தான சூழலில் ரோஜாவாய் வாழ்வது மேல்.நான் கதிரவனோடு உறவாடினேன்.விண்மீன்களுடன் பேசினேன்.என்   ஆன்மாவை நான் பெற்றேன்.பூரண நிறைவடைந்தேன்.நான் முழுதாக வாழ்ந்து விட்டேன்.இப்போது முழுதாக இறக்கப் போகிறேன்.ஆனால்,உங்கள் வாழ்வு,வாழும் மரணம் மட்டுமே.''
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை,மந்தமான,இருண்ட,செத்துப் போன வாழ்வைக் காட்டிலும் மேலானது.ஒளி மயமானது.
                                                                                          __ஓஷோ

மணி என்ன?

0

Posted on : Sunday, April 25, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு வெளி நாட்டுக்காரர் நம் ஊரைச் சுற்றிப்  பார்க்க வந்தார்.வயல் வழியே செல்கையில் வழியில் படுத்திருந்த கிராமவாசியிடம் ,'மணி என்ன?'என்று கேட்டார்.அவன் அருகில் இருந்த கழுதையின் வாலைத் தூக்கிப் பார்த்துவிட்டு  'மணி மூன்று 'என்றான்.பயணிக்கு ஒரே ஆச்சரியம்.திரும்பவும் அந்த வழியே வரும்போது அந்த கிராமவாசி சரியாகச் சொல்கிறானா என்பதை அறிய ஒரு கைக் கடிகாரத்துடன் வந்து,'மணி என்ன?'என்று கேட்டார்..அவனும் கழுதையின் வாலைத் தூக்கிப் பார்த்து,''மணி நான்கு''என்றான். அது சரியாகத் தான் இருந்தது.ஆச்சரியத்துடன் கிராமவாசியிடம்,''கழுதை வாலிலிருந்து  எப்படி சரியான  நேரத்தைக் கண்டுபிடிக்கிறாய்?''என்று கேட்டார்.''தூரத்தில் இருக்கும் மணிக்கூண்டை என் கழுதையின் வால் மறைத்துக் கொண்டிருந்தது.அதனால் வாலைத் தூக்கி மணிக் கூண்டைப் பார்த்து நேரம் சொன்னேன்.''என்றான் அவன்.

தூசி

0

Posted on : Sunday, April 25, 2010 | By : ஜெயராஜன் | In :

தூசியைக் கண்டால் நாம்அருவெறுப்பு அடைகின்றோம். அனால் நம் வாழ்விற்கு தூசியின் பங்கு முக்கியமானது.தூசிஇல்லாவிடில் மழை மேகங்கள் இல்லை.நம் உடலிலும் சட்டையிலும் காற்றின் ஈரம் படிந்து நாம் எப்போதும் நனைந்து கொண்டிருப்போம்.உலகில் பசுமையும் அழகும் குறைந்து எப்போதும் நசநசவென்று ஈரமாக இருக்கும்.மாலை நேரத்தில் பொன்னிறமான கதிரொளியை நாம் கண்டு ரசிக்க முடியாது.

பொன்மொழிகள் --7

0

Posted on : Sunday, April 25, 2010 | By : ஜெயராஜன் | In :

பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்;ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.
**********
பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.
**********
நியாயவான் மக்களின் இதயத்திற்கு அருகில் இருக்கிறான்;
இரக்கமுள்ளவன் கடவுளின் இதயத்திற்கு அருகில் இருக்கிறான்.
**********
வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்  மதிப்பைப் பெற முடியும்.
**********
இறைவன் சுமைகளைத் தந்தார்;ஆனால்
தோள்களையும் தந்தாரே.
**********
மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.
**********
அதிருப்தி களுக்கெல்லாம் பெயர் சுயநலமே.
**********
பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.
**********
பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.
**********
''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.
**********
துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;
நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.
**********
முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால்  உலகுக்குத் தெரிவதில்லை.
**********
தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால்  உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.
**********
ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.
பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.
**********
என்ன நேர்ந்திருந்தாலும் சரி;
எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.
**********

எதிர்மறை

0

Posted on : Saturday, April 24, 2010 | By : ஜெயராஜன் | In :

சுவர்க்கத்திற்குச் செல்லும் ஆனந்தம் எல்லாம்,நரகத்திற்கு அனுப்பப்பட்டவர்களின் துன்பங்களையும் வேதனையையும் பொறுத்து  அமைகின்றன.சுவர்க்கத்தில் உள்ளவர்களுக்கு நரகம் என்ற ஒன்று இல்லைஎன்று தெரிந்தால்,அவர்களது மகிழ்ச்சி சட்டெனக் காணாமல் போய் விடும்.அவர்கள் மிகுந்த வேதனை அடைந்து விடுவார்கள்.நரகம் இல்லையென்றால் அவர்கள் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமே!
நரகம் இல்லையென்றால் எல்லாக் குற்றவாளிகளும்,பாவிகளும் சுவர்க்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்?அப்புறம் மகான்கள் எங்கே போவது?ஒழுக்க வாதிகளின் மகிழ்ச்சி ,பாவிகளின் துன்பங்களையே சார்ந்திருக்கிறது. செல்வரின் மகிழ்ச்சி,உண்மையாகவே ஏழைகளின் துன்பத்திலிருந்து தான் முளைக்கிறது.அது பணத்தால் பிறப்பதல்ல.
நல்லவனின் மகிழ்ச்சி,வெறுக்கப்படும் பாவிகளால் உண்டாவது.அது நன்மையால் மட்டும் உண்டானதல்ல.எல்லோரும் நல்லவராகி விட்டால் மகானின் மகிமையும் ஒளியும் மறைந்து போகும்.அவர் சட்டென முக்கியத்துவம் இழந்து விடுவார்.ஒரு வேளை அவர்,பழைய பாவிகளை அழைத்து,தங்கள் பழைய தொழிலைச் செய்யும்படி வேண்டலாம்.
எல்லா ஒழுக்கங்களின் முக்கியத்துவமும் அவற்றின் எதிர்மறையால் உண்டாகின்றன.ஆனால் அவை அவற்றைச்  சார்ந்துள்ளன.முழுமையை ஏற்பவர்,நாம் தீமை என்று சொல்வது தீமையின் மறு எல்லை என்பதையும்,  நன்மை என்பது தீமையின் மறு கோடி என்பதையும் உணர்ந்து கொள்வர்.

யார் காசு?

0

Posted on : Saturday, April 24, 2010 | By : ஜெயராஜன் | In :

பிச்சைக்காரன் கேட்டான்,''ஏன் சாமி, முன்னாள் பத்து ரூபாய் பிச்சை போட்டுக் கொண்டிருந்தீர்கள்.அதன் பின் ஐந்து ரூபாய் பிச்சை போட்டீர்கள்.இன்று ஒரு  ரூபாய் போடுகிறீர்களே?அது ஏன்?''இளைஞன் சொன்னான்,'திருமணமாகும் முன் என் விருப்பத்திற்குச் செலவு செய்தேன்.அப்போது பத்து ரூபாய் போட்டேன்.திருமணம் ஆனவுடன் செலவு அதிகம் ஆனது.ஐந்து ரூபாய் போட்டேன்.நேற்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.குடும்பம் நடத்தப் பணம் வேண்டும் இல்லையா?அது தான் ஒரு ரூபாய் போடுகிறேன்.'பிச்சைக்காரன்  சொன்னான்,''ஏன் சாமி,என் காசை வைத்துக் குடும்பம் நடத்துகிறாயே,உனக்கு வெட்கமாக இல்லை?''

அபிப்பிராயம்

0

Posted on : Friday, April 23, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிறந்த ஓவியன்.அழகான  மனித ஓவியம் ஒன்றை வரைந்து வைத்திருந்தான்.வருவோர் போவோர் அனைவரும் அந்த ஓவியத்தை ரசித்துப் பார்த்துச் சென்றனர்.ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி அங்கு வந்து ஓவியத்தை கவனமுடன் பார்த்தான்.பின்னர் ஓவியனிடம் சென்று,''இதில் ஒரு குறை இருக்கிறது.அதை  நான் சொல்லலாமா?''என்று கேட்டான்.ஓவியர் சம்மதிக்கவே அவன் சொன்னான்,''தங்கள் ஓவியத்தில் இருக்கும் மனிதனின் செருப்பு சரியாக வரையப்பட வில்லை,''என்று கூறி அது எப்படி இருக்க வேண்டும் என்பதனை விளக்கி சொன்னான். ஓவியரும் அவன் சொல்லுவதை உன்னிப்பாகக் கவனித்து அந்த ஓவியத்தில் தேவையான மாற்றங்கள் செய்தான்.அடுத்து அந்தத் தொழிலாளி,''உங்கள் ஓவியத்தில் கண் இமைகள் சரியாக வரையப்படவில்லை,''என்றான். ஓவியர் அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் செருப்பு தைப்பதிலே  வல்லுநர்.அதனால் அது சம்பந்தமாக நீங்கள் சொன்ன மாற்றங்களை செய்தேன்.அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.''
உலகில் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே பேசினால் பிரச்சினைகள் ஏது?

தன்னம்பிக்கை

0

Posted on : Friday, April 23, 2010 | By : ஜெயராஜன் | In :

தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதன்.அவன் ஒரு தடவை சென்னையிலிருந்து விழுப்புரம் செல்ல ரயிலில்  ஏறினான்.ரயிலில் கூட்டம் அதிகம்.வண்டியில் ஏறி மேல் பெர்த்தில் படுத்துக் கொண்டான்.அவன் கீழ் சீட்டிலிருந்த மனிதனிடம்,''சார்,நான் விழுப்புரத்தில் இறங்கனும்.நான் தூங்கினா முழிக்கிறது சிரமம்.விழுப்புரம் வந்ததும் மறந்திடாமல் என்னை இறக்கி விடுங்க.''என்றான்.அவரும் ,'நான் தஞ்சாவூர் போகிறேன். விழுப்புரம்  வந்ததும் உங்களைத் தட்டி எழுப்புகிறேன்.நீங்க முழிச்சிக்க வில்லைன்னா என்ன பண்றது?'என்றார்.
அவன் சொன்னான்,''சார்,அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப் படாதீங்க. எழுப்பிப் பாருங்க.நான் முழிச்சிக்க வில்லைன்னா  எப்படியாவது என்னை உருட்டியாவது பிளாட்பாரத்தில் தள்ளி விடுங்க,''
அவரும் சரியென்று சொல்லிட்டார்.காலையில் ரயில் தஞ்சாவூரில் நின்றது.அவர் இறங்கி பிளாட்பாரத்தில் நின்ற போது திடீரென  அந்த ஆள்  வந்து இவர் கையைப் பிடித்தான்.விழுப்புரத்தில் இறங்க வேண்டியவன் தஞ்சாவூர் வந்து விட்டான்.அவனுக்கு ரொம்பக் கோபம்.''என்ன சார்,படிச்சுப் படிச்சுச் சொன்னேனே.விழுப்புரம் வந்ததும் என்னை உருட்டியாவது தள்ளி விடச் சொன்னேனே.இப்ப தஞ்சாவூருக்கு வந்து விட்டேனே.இந்நேரம் நான் தஞ்சாவூரில் அவசியம் இருக்க வேண்டுமே,''என்று புலம்பினான்.அந்த தஞ்சாவூர்க்காரர்.எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்ததும்  அவனுக்கு இன்னமும் கோபம்.''என்ன சார்,நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன்.நீங்க பாட்டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களே?''என்று கேட்டான்.அவர் சொன்னார்,'அதுக்கு இல்லைப்பா.தவறுதலா தஞ்சாவூருக்கு வந்த நீயே இவ்வளவு சத்தம் போடுறியே.....,தவறுதலா நான் ஒருத்தனை விழுப்புரத்திலே வெளியே உருட்டி விட்டேனே,அவன் இந்நேரம் எவ்வளவு சத்தம் போட்டுக்கிட்டிருப்பான்னு யோசிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன் ...'என்றாராம்.
                                                        __தென்கச்சி சுவாமிநாதன் 

திட்டி விட்டார்களா?

0

Posted on : Thursday, April 22, 2010 | By : ஜெயராஜன் | In :

எவரேனும் திட்டிவிட்டால் உடனே சோகமாகி விடுவதும்,எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டுவிட்டுச் சோம்பி விடுவதும், முடிந்தால் ஏகமாக அழுவதும்,இப்படி அநியாயமாகத் திட்டி விட்டார்களே என்று பொருமுவதும் நம்மில் பலரது இயல்பாய் இருந்து வருகிறது.ஒருவர் திட்டி விட்டால் அதைப் பற்றிக் கொஞ்ச நேரம் சிந்தித்து விட்டு அப்புறம் மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கற்றுக் கொள்வது அவசியம்.
ஒருவர் திட்டினால் நாம் தவறாக நடந்து  கொண்டோமா என நம்மை நாமே  மனசாட்சியின் துணையுடன் சிந்திக்க வேண்டும்.ஆம் என்றால் அவர் திட்டியது சரிதான் என நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அது உண்மை இல்லாத போதுநாம் ஏன் அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
முன்பின் தெரியாத ஒருவர் திட்டினால்நம் அருமை தெரியாதவர் என அதைப் புறக்கணிக்க வேண்டும்.மிக வேண்டியவர் திட்டினால் அதன் பின்னே மறைந்திருக்கும் அக்கறையைபெரிது படுத்திப் பார்க்க வேண்டும். தவிர திட்டிய பாணியையும்,திட்டப்பயன் படுத்திய வார்த்தைகளையும் பெரிது படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.
தன தாயைப் பற்றித் திட்டியவனை வெட்டி விட்டு எத்தனை பேர் சிறை செல்கிறார்கள்?தன தாயைப் பற்றி நன்கு அறிந்தவன் கொலை செய்யும் அளவுக்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்?
தெரிந்தவர்கள் திட்டினால் பதிலுக்கு மல்லுக்கு நிற்கக் கூடாது.நடந்த சம்பவத்தைப் பற்றி தண்டோரா போட்டு திட்டியவன் காதுக்கு வேறு விதமாகச் செய்தி போய் விடக் கூடாது.திட்டியவர் தணிந்து வருவார்.அப்போது நம் பக்கத்து நியாயம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
இந்த முறையைக் கையாண்டால் நம் மீது அவர்களுக்கு அன்பு வளர நாம் வழி வகுத்து விட்டோம் என்று பொருள்.
                                                                       --லேனா தமிழ்வாணன்

அதிசய எண்

0

Posted on : Wednesday, April 21, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு அதிசய எண்;12345679
ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத்தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை ஒன்பதால் பெருக்கி வரும் விடையை இந்த அதிசய எண்ணுடன் பெருக்குங்கள்.விடை நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணின் வரிசையாக இருக்கும்.
1x9x12345679=111111111
2x9x12345679=222222222
3x9x12345679=333333333
4x9x12345679=444444444
5x9x12345679=555555555
6x9x12345679=666666666
7x9x12345679=777777777
8x9x12345679=888888888
9x9x12345679=999999999

பொறுமையாக யோசி

0

Posted on : Wednesday, April 21, 2010 | By : ஜெயராஜன் | In :

மூத்தாள் மகனை இளையாள் வீட்டிற்குள் நுழைய விடாமல் செய்து கொண்டிருந்தாள்.பரிதாபப்பட்ட கணவனிடம் அவள் சொன்னாள்,''நான் ஒரு காரியம் சொல்வேன்.அதை அவன் செய்து விட்டால் என் பிள்ளை போல வைத்துக் கொள்வேன்.இல்லையெனில் வெளிய துரத்தி விடுவேன்.நம் வீட்டிலிருக்கும் ஆடுகளை சந்தைக்குக் கொண்டு போய் விற்க வேண்டும். ஆனால் நமக்கு உணவு வாங்குகிற அளவுக்கு மேல் பணம் வரக் கூடாது.வேறு எந்த செலவும் செய்யக் கூடாது.மீதிப் பணமும் இருக்கக் கூடாது.ஆடுகள் திரும்ப வர வேண்டும்.இது தான் நான் சொல்லும் வேலை.''
தகப்பனுக்குத் தலை சுற்றியது.இது மகனை ஒரேயடியாக விரட்டும் வழி என்று தோன்றியது.விற்ற ஆட்டை எப்படி வீட்டுக்குக் கொண்டு வருவது?இருக்கும் ஆடுகளை விற்றால் ஒரு மாத உணவுக்குப் பணம் கிடைக்குமே?மூவருடைய சாப்பாட்டுக்கு வரும் அளவிற்கு எப்படி விற்பது?
மகன் ஆடுகளைக் கூட்டிக் கொண்டு யோசித்துக் கொண்டே சந்தைக்குப் போனான்.திடீரென ஒரு யோசனை.அதன் படி செய்தான் வெற்றியும் கண்டான்! அப்படி என்ன செய்தான்?
ஆடுகளை ஓட்டிக்கொண்டு போய்,சந்தையில் அவற்றின் கம்பளியை  மட்டும் மூவரின் உணவுத் தேவைக்கு வரும் அளவிற்குக் கத்தரித்து அதை விற்று மூவருக்கு உணவு வாங்கிக் கொண்டு,கையில் பணம் ஏதும் மீதமில்லாமல் ஆடுகளையும் அழைத்துக் கொண்டு திரும்ப வந்தான்.
பொறுமையாக யோசித்தால் எந்த சோதனையையும் சந்திக்கலாம்!

புனிதம்

0

Posted on : Wednesday, April 21, 2010 | By : ஜெயராஜன் | In :

பெரும் புகழ் பெற்ற கபீர் தாசர் இஸ்லாம் மதத்தில் பிறந்தாலும் ஜாதி மத பேதங்களை மீறி மனித நேய தத்துவங்களை உலகுக்குச் சொன்னவர்.ஒரு முறை,சில பிராமணர்கள் கங்கை நதியின் புனிதமாக்கும் தன்மை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.ஒரு மரக் கோப்பையில் கங்கை நீரை நிரப்பி,'குடியுங்கள்,' என்று அவர்களிடம் நீட்டினார் கபீர்.பிற மதத்தைச் சேர்ந்த ஒருவர்தரும் கோப்பையைத் தொடுவதா என்று அவர்கள் தயங்கினர்.கபீர் பளிச்சென்று கேட்டார்,''என் கோப்பையை கங்கை நீர் புனிதமாக்காது என்றால் என் பாவங்களைக் கழுவி புனிதமாக்கும் என்று எப்படி நான் நம்புவது?''

வேஷ்டி

0

Posted on : Tuesday, April 20, 2010 | By : ஜெயராஜன் | In :

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி தமக்கு எந்தெந்த அரசர்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார்.மந்திரி,''வங்க அரசர் தங்கம் கட்டினார்;கலிங்க அரசர் நவமணிகள் கட்டினார்.''என்று வரிசையாக  சொல்லிக் கொண்டே போனார்.சக்கரவர்த்தி திடீரென,'சோழ அரசர் என்ன கட்டினார்?'என்று கேட்க,மந்திரியாக நடித்தவர் விழிக்க,வேலைக்காரராக நின்ற கலைவாணர்,''வேஷ்டி,வேஷ்டி,''என்று சொல்லிக் கொண்டு போக  அனைவரும் சிரித்தனர்.

அழுகை

0

Posted on : Tuesday, April 20, 2010 | By : ஜெயராஜன் | In :

மன்னர் கண்ணாடியில் தன அசிங்கமான தோற்றம் கண்டு சிறிது நேரம் அழுதார்.இதைக் கண்டு பின்னால் இருந்த முல்லாவும் அழத் தொடங்கினார். அரசர் அழுகையை நிறுத்திய பின்பும் முல்லா நிறுத்தவில்லை.''எனக்காக வருத்தப்பட்டு நானே கொஞ்ச நேரம் தானே அழுதேன்?நீ ஏன் விடாமல் அழுகிறாய் முல்லா?''என்று கேட்டார் அரசர்.'கண்ணாடியில் ஒரு நிமிடம் உங்கள் முகத்தைப் பார்த்ததற்கே அழுதீர்களே?நான் உங்களைக் காலம் பூராவும் பார்க்கிறேனே,அதற்காகத்தான் கொஞ்சம் அதிகமாக அழுகிறேன்.' என்றார் முல்லா.

பேசுதல்

0

Posted on : Tuesday, April 20, 2010 | By : ஜெயராஜன் | In :

தமிழில் பேசுதலைக் குறிக்க உள்ள வார்த்தைகள்;
பேசுதல்         =பொருள் கெடாமல் பேசுதல்
கூறுதல்        =கூறு படுத்திச் சொல்லுதல்
பகர்தல்         =அழகாகப் பேசுதல்
சொல்லுதல்=தரக் குறைவாகப் பேசுதல்
பொழிதல்     =இனிமையாகப் பேசுதல்
இயம்புதல்   =அழுத்தமாகப் பேசுதல்
அருளுதல்   =தவத்தில் சிறந்தோர் பேசுதல்
அறைதல்     =தொடர்பில்லாமல் பேசுதல்

சாப்பாடு

0

Posted on : Tuesday, April 20, 2010 | By : ஜெயராஜன் | In :

சாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்?
அருந்துதல்   =மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து)
உண்ணல      =பசி தீர உட் கொள்ளல்
உறிஞ்சல்     =வாயைக் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல் 
குடித்தல்       =சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்(கஞ்சி)
தின்னல்        =சுவைக்காக ஓரளவு தின்னுதல்(முறுக்கு)
துய்த்தல்       =சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்
பருகல்           =நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்
விழுங்கல்    =பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வலி உட்கொள்ளல் (மாத்திரை)

போய் விடும்

0

Posted on : Monday, April 19, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு அழகான தனிப் பாடல்;
தாயோடு   அறுசுவை   போகும்.
தந்தையோடு   கல்வி   போகும்
குழந்தைகளோடு  பெற்ற செல்வப் பெருமை  போகும்.
செல்வாக்கு   உற்றாரோடு   போகும்.
உடன் பிறந்தாரோடு   தோல்   வலிமை   போகும்.
பொன் தாலி அணிந்த மனைவியோடு எல்லாமே போய் விடும்.

ஷா அதி

0

Posted on : Monday, April 19, 2010 | By : ஜெயராஜன் | In :

பேராசைக்காரன் உலகம் முழுவதையும் பெற ஆசைப் படுகிறான்.திருப்தியுற்ற மனிதன் ஒரு ரொட்டித் துண்டிலே ஆறுதல் பெறுகிறான்.செல்வத்தைக் காட்டிலும் திருப்தியோடு கூடிய  வறுமை சிறந்தது.
**********
ஒருவன் இதயத்தைத் துன்புறுத்தும் செய்தியை நீ அறிந்திருந்தால் மௌனமாக இரு.மற்றவர்கள் அந்த செய்தியைத் தெரிவிக்கட்டும்.வசந்தத்தின் செய்தியை   குயில் தெரிவிக்கட்டும்.மற்றதை ஆந்தையிடம் விட்டுவிடு.
**********
சந்நியாசியைப் பார்த்து அரசன் கேட்டான்,''என்னிடம் வெகுமதி பெரும் நோக்குடன் என்றேனும் என்னை ஞாபகப் படுத்திப் பார்த்ததுண்டா?''  சந்நியாசி சொன்னார்,'ஞாபகம் உண்டு.எப்பொழுது என்றால்  நான் ஆண்டவனை மறந்தபோது.'
**********
வேதனையுடனே இருவர் இருந்தனர்.ஒருவன் செல்வம் இருந்தும் அனுபவிக்காதவன்;மற்றவன் அறிவு இருந்தும் பயன்படுத்தாதவன்.
**********
மரணமே,உனக்குக் கோடி வந்தனம்!
நீ யாருக்கு இரக்கம் காட்டினாலும் அவர்களின் துக்கம் அனைத்தும் ஓடி  விடுகிறது.சுக துக்கம்,மத மாச்சர்யம் இவற்றை  ஒரு நொடியில் ஒரேயடியாய் அழித்து விடுகிறாய்.உலகம் இதைத்தான் பெரும் பயணம் என்கிறது.
ஏ மரணமே,உனக்குக் கோடி வந்தனம்!
**********
பக்திமான் ஒருவர் கண்ட கனவில் அரசன் சொர்க்கத்திலும்,துறவி  நரகத்தில் இருப்பதாகவும் தெரிந்தது.முரண்பட்ட இந்நிலைக்கு அவர் பெரியவர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார்.
பெரியவர்  சொன்னார்,''துறவியிடம் காட்டிய அன்புக்குப் பரிசாக அரசனுக்கு சொர்க்கம் வழங்கப்பட்டது.அரசனிடம் கொண்டிருந்த தொடர்புக்குத் தண்டனையாக துறவிக்கு நரகம் தரப்பட்டது.''
**********
கோடைக்காலத்தில் பழுத்துக் குலுங்கும் மரம் குளிர் காலத்தில் ஒரு இலை கூட இல்லாமல் ஆகி விடுகிறது.இந்த உண்மையைத் தெரிந்து  கொள்ளாத ஊதாரி,தனக்கு ஒரு கஷ்டம் வரும் என்பதை மறந்து விடுகிறான்.
**********
துறவி ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டார்,''ஆண்டவனே,கொடியவர்கள் மீது கருணை வையுங்கள்.ஏனென்றால் நல்லவர்கள் மீது ஏற்கனவே கருணை காட்டி விட்டீர்கள்.நல்லவர்களாக அவர்களைப் படைத்ததே அந்தக்  கருணையால் தானே!''
**********

இறந்தவன்

0

Posted on : Sunday, April 18, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதன் தான் இறந்து விட்டதாகக் கருதினான்.அவனை ஒரு மனோவைத்தியரிடம் அழைத்துச்சென்றனர்.அவரும் அவன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதைப் பல வகையிலும் விளக்கினார்.ஆனால் அவன் ஏற்றுக்க கொள்வதாக இல்லை.தான் சொன்னதையே திரும்பச் சொன்னான்.இறுதி முயற்சியாக டாக்டர் அவனிடம் கேட்டார்,''இறந்தவனுக்கு  இரத்தம் வருமா?''அவன் சொன்னான்,'கண்டிப்பாக வராது.'டாக்டருக்கு நம்பிக்கை வந்து விட்டது.ஒரு ஊசியை எடுத்து அவன் விரலில் குத்தினார்.உடனே இரத்தம் கொப்பளித்து வந்தது.டாக்டர் பெருமிதத்துடன் அவனிடம்,'' பார்,உன் விரலிலிருந்து இரத்தம் வருகிறது.இப்போது என்ன சொல்கிறாய்?''அவன் சொன்னான்,''நீங்கள் ஒரு தலை சிறந்த மனோ வைத்தியர் என்று கேள்விப்பட்டேன்.அது  உண்மைதான் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.நான் சொன்னதைத்  தவறு என்று நிரூபித்து விட்டீர்கள்.நான் உங்களிடமிருந்து தெரிந்து கொண்டேன்,இறந்தவனுக்கும் இரத்தம் வரும் என்பதை.''டாக்டர் மயங்கி விழுந்து விட்டார்.

சாப்பாட்டு ராமன்

0

Posted on : Sunday, April 18, 2010 | By : ஜெயராஜன் | In :

மத போதகர் ஒருவர் மக்கள் மத வழியில் வாழ சிறப்பான போதனைகள் செய்து வந்தார்.ஒரு நாள் மிக அதிகமாகச் சாப்பிடுவதன் விளைவுகளை வைத்து ஒரு போதனை  நடத்தினார்.அவர் சொன்னார்,''மிகஅதிகமாக சாப்பிடும் சாப்பாட்டு ராமன்களுக்கு என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா?நரகத்தில் பெரிய கண்ணாடியிலான தூண் ஒன்று இருக்கிறது.அங்குள்ள பிசாசுகள் அத்தூணை பழுக்கச் சூடேற்றி வைத்திருப்பார்கள்.''இதைச் சொல்லிவிட்டு கூட்டத்தில் இருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டார்.சாப்பாட்டை விரும்புபவர்கள் முகத்தில் பீதி ஏற்பட்டதைக் கவனித்த அவர் திருப்தியுடன் தொடர்ந்தார்,''அந்த  கண்ணாடித் தூணில் ஒரு சிறு துளை இருக்கும்.சாப்பாட்டு ராமன்களை அந்த துளையின் ஒரு பக்கம் திணித்து மறு பக்கம் இழுப்பார்கள்.எவ்வளவு வேதனை இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.''பேச்சை முடித்து விட்டு தங்குமிடத்திற்குச் செல்லும் வழியில் ஒரு பணக்காரரைக்  கண்டார்.பணக்காரர்,''நான் உங்களுக்கு இன்று ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.ஆனால் இன்று உங்கள் பேச்சைக் கேட்டவுடன் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பதை உணர்ந்தேன்.எனவே அந்த விருந்தை .......''என்று பேசி முடிக்குமுன்னே,போதகர் சொன்னார்,''வேறொன்றும் பேச வேண்டாம்.நேரே உங்கள் வீட்டுக்குப்போய்  சாப்பிடுவோம்.''போதகர் பணக்காரர் வீட்டில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தார்.சாப்பிட்டு முடித்தபின் பணக்காரர் மெதுவாக,''ஐயா,நீங்கள் இன்று சாப்பாட்டு ராமன்களின் கதி பற்றி விவரமாகப் பேசினீர்களே.....''என்று இழுத்தார்.போதகர் வாயைத் துடைத்து விட்டு ஒரு பெரிய ஏப்பம் விட்டு விட்டுச் சொன்னார்,''ஆமாம்.நான் சொன்னது மாதிரி தான் நடக்கும்.ஆனால் பயப்பட வேண்டாம்.கோடிக்கணக்கான சாப்பாட்டு ராமன்களை அந்தத் துளை வழியாக இழுத்து இழுத்து,இப்போது ஒரு யானை கூட அதன் ஓரங்களைத்  தொடாமல் செல்லும் அளவுக்கு அந்த துளை பெரிதாகிவிட்டது.''

பெறுமானம்

0

Posted on : Saturday, April 17, 2010 | By : ஜெயராஜன் | In :

தன நாட்டையும் செல்வத்தையும் குறித்து மிகவும் கர்வம் கொண்டிருந்த ஒரு அரசன் ஒரு ஞானியைப் பார்க்க சென்றிருந்தார்.அவரைப் பற்றி நன்கு அறிந்த ஞானி அவரை வரவேற்றபின் பேச ஆரம்பித்தார்.
ஞானி ;நீங்கள் ஒரு பாலைவனத்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என எண்ணிக் கொள்ளுங்கள்.கடுமையான தாகம்.எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.தாகத்தால் நாவறட்சி.அப்போது ஒருவன் ஒரு அழுக்குப் பாத்திரத்தில் அழுக்குத் தண்ணீருடன் வந்து அதைக் கொடுக்க பாதி நாட்டைக்  கேட்டால் என்ன செய்வீர்கள்?
அரசன்; சந்தேகம் என்ன?தண்ணீரை வாங்கி பாதி நாட்டைக் கொடுப்பேன்.
ஞானி;  சரி,அந்த அழுக்கு தண்ணீரைக் குடித்ததால் வியாதி வந்து யாராலும் குணப்படுத்த முடியாத நிலையில்,யாராவது ஒருவர் அதைக் குணப்படுத்தும் மூலிகையைக் கொண்டு வந்து அதற்கு ஈடாக மீதி நாட்டையும் கேட்டால் கொடுப்பீர்களா?
அரசன்; கட்டாயம் மீதி நாட்டைக் கொடுத்து மூலிகையைவாங்குவேன்.
ஞானி;  அப்படியானால்,கேவலம் ஒரு பாத்திர அழுக்கு நீரும்,ஒரு  மூலிகைச் செடியுமே பெறுமானமுள்ள உங்கள் நாட்டைக் குறித்து  உங்களுக்கு ஏன் கர்வம்?
அரசன் வெட்கத்தினால் தலை கவிழ்ந்தார்.

ஓரெழுத்து வார்த்தை

0

Posted on : Saturday, April 17, 2010 | By : ஜெயராஜன் | In :

தமிழில் உள்ள ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும்;
அ =எட்டு             ஆ =பசு            ஈ =ஒரு பூச்சி             உ =சிவன்         ஊ =தசை
ஐ =ஐந்து               ஓ=மதகு நீர் தாங்கும் பலகை       கா =சோலை    கு =பூமி
கூ =பூமி               கை =கரம்      கோ =அரசன்           சா =இறப்பு
சே =அழிஞ்சில் மரம்                சோ =மதில்              தா =கொடு        
து =பறவை இறகு               தே =நாயகன்                 தை =ஒரு மாதம்
நா -நாக்கு           நௌ =மரக்கலம்              பா =பாட்டு               பூ =மலர்    
வை =வைக்கோல்         பே =மேகம்          பை =பாம்புப் படம்          மா =மாமரம்
மீ= ஆகாயம்       மூ =மூன்று            மை =அஞ்சனம்             யா =அகலம்  
வீ=பறவை           தீ =நெருப்பு            து= உணவு

நினைத்த எண் எது?

0

Posted on : Friday, April 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மூன்று இலக்க எண்ணை எழுதிக் கொள்ளுங்கள்.
அதனை தொடர்ந்து அதே எண்ணை மீண்டும் எழுதி ஆறு இலக்க எண்ணாக  ஆக்குங்கள்.
அதை ஏழு கொண்டு வகுங்கள்.
வந்த விடையை பதினொன்றால் வகுங்கள்.
கிடைத்த எண்ணை பதிமூன்றால் வகுங்கள்.
இப்போது கிடைத்த விடை நீங்கள் முதலில் நினைத்த எண்.சரிதானா?
உதாரணம்;
 மூன்று இலக்க எண்   =               369
மீண்டும் எழுதினால்   =               369369
ஏழு கொண்டு வகுத்தால்=         52767
பதினொன்றால் வகுத்தால் =   4797
பதிமூன்றால் வகுத்தால்      =   369

மரம்

0

Posted on : Friday, April 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பழைய பாடல்;
மரமது   மரத்தில்   ஏறி   மரமதை   தோளில்   சுமந்து
மரமது   மரத்தைக்   கண்டு  மரத்தினால்    மரத்தைக்   குத்தி
மரமது  வழியே  சென்று   வலைமனை   வரும்போது
மரமது   கண்ட   மாதர்  மரமோடு    மரம்  எடுத்தார்.

இதன் பொருள்;
மரமது மரத்தில் ஏறி =அரசன் (அரச மரம்) மரத்தினால் செய்த தேரில் ஏறி
மரமதைத் தோளில் சுமந்து =மூங்கில் மரத்தை வளைத்து செய்யப்பட வில்  அம்புகளை சுமந்து வேட்டைக்குப் போகிறான்.
மரமது மரத்தைக் கண்டு=அரசன் ஒரு வேங்கையை(வேங்கை மரம்)
பார்த்தான்.
மரத்தினால் மரத்தைக் குத்தி=மரப்பிடி கொண்ட ஈட்டியால் அவ்வேங்கையைக் குத்திக் கொன்றான்.
மரமது வழியே சென்று=காட்டு வழியே தொடர்ந்து சென்றான்.
வலைமனை வரும்போது=அரண்மனை திரும்பும் போது
 மரமது கண்ட மாதர்=அரசனை,அரசனின் தேரைப் பார்த்த மக்கள்
மரமோடு மரம் எடுத்தார்=ஆலத்தி(ஆல்,அத்தி)எடுத்தனர்.

ஒப்புமை

0

Posted on : Friday, April 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தஒப்புமைத் தத்துவம் புரிந்து கொள்வது கடினம்.ஒரு மாணவி ஐன்ஸ்டீனிடம் அதை அவளுக்கு விளக்குமாறு கேட்டாள்.''அது கடினமானது.உனக்குப் புரியாது.இப்போது உனக்கு அது தேவையும் இல்லை.'' என்றார்.அவளோ கேட்பதாக இல்லை.அவள் பிடிவாதம் கண்டு அவர் சொன்னார்,''நீஒரு அழகான பெண்.உன்னிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஐந்து நிமிடம் போல் தோன்றுகிறது.அதே சமயம் நான் ஒரு கணிதப் பேராசிரியரிடம் ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஒரு மணி நேரம் போல் தெரிகிறது.இது தான் ஒப்புமைத் தத்துவம்.''

மேகங்கள்

0

Posted on : Thursday, April 15, 2010 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவின் கோடீஸ்வரர் ஒருவர் மரணப் படுக்கையில் கிடந்த போது தன மகனை அருகில் அழைத்து சொன்னார்,''மகனே!என் வாழ்க்கையிலிருந்து  செல்வம் மகிழ்ச்சியைத் தராது என்பதை தெரிந்து கொண்டிருப்பாய்.என்று நினைக்கிறேன்.''
மகன் சொன்னான்,''அப்பா!நீங்கள் சொல்வது உண்மைதான்.ஆனால் உங்கள்  வாழ்விலிருந்து ஒன்று தெரிந்து கொண்டேன்.செல்வமிருந்தால்,உங்களுக்கு எந்த வகைத் துன்பம் வேண்டுமோ,அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.இது நல்ல விஷயமல்லவா?நீங்கள்மகிழ்ச்சியாய் இல்லை என்பது எனக்குத் தெரியும்.ஆனால் உங்களுக்குப் பிடித்த துன்பத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்.ஏழைக்கு இந்த வாய்ப்பு ஏது?அவனது துயரம் சூழ்நிலையால் அவன் மீது சுமத்தப் பட்டது.அதை அனுபவிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.பணக்காரனின் துன்பத்திற்கும் ஏழையின் துன்பத்திற்கும் இது தான் வேறுபாடு.ஏழை தனக்கென வாய்த்த மனைவியால் மட்டுமே துன்பப்பட  வேண்டி வரும்.ஆனால் பணக்காரன் எந்தப் பெண்ணால் துன்பம் வேண்டுமோ,அவளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதி பெற்று விடுகிறான்.இது ஒரு முக்கியமான,மகிழ்ச்சியான விஷயம் அல்லவா?''
ஆழமாக ஆராய்ந்து பார்த்தால்,இன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.எனக்கு இன்பம் தருவது உங்களுக்கு துன்பமாக இருக்கலாம்.ஒரு கோடி ரூபாய் என்னிடம் இருந்து அதில் ஒரு பாதியை உங்களிடம் நான் இழந்து விட்டால்,ஐம்பது லட்சம் இருந்தும் கூட எனக்கு துக்கமே உண்டாகிறது.ஒன்றுமே இல்லாதிருந்த உங்களுக்கு ஐம்பது லட்சம் கிடைத்தவுடன்,உங்களுக்கு மகிழ்ச்சியில் பைத்தியமே பிடித்து விடும். எப்படியோ நாமிருவரும் பொருளாதார ரீதியில் ஒரே நிலையில் தான் இருக்கிறோம்.ஒவ்வொருவர் கையிலும் ஐம்பது லட்சம்.நான் சுவரில் தலையை மோதிக் கொண்டு கதற நீங்கள் ஆனந்த வசப்பட்டு கொண்டாடி மகிழ்கிறீர்கள்.
ஆனால் நினைவில் வையுங்கள்!உங்கள் மகிழ்ச்சி நீடிக்காது.கிடைத்தது போய் விடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.அது போல என் துக்கமும்மெல்லக் கரைந்து போகும்.ஏனென்றால் இழந்தவன் அதைச் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான்.
வாழ்க்கை வழிகள் விசித்திரமானவை.என் மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சியாகாது.என் துயரமும் உங்கள் துயரம் ஆவதில்லை.இன்றைய என் மகிழ்ச்சி கூட எனது நாளைய மகிழ்ச்சியாவதில்லை.இன்றைய கணத்தின் மகிழ்ச்சி அடுத்து தொடரும் என்று சொல்ல வழியில்லை.இன்ப துன்பங்கள் வானில் நகரும் மேகங்களைப் போல.அவை வரும் போகும்.

மாக்கியவெல்லி

0

Posted on : Thursday, April 15, 2010 | By : ஜெயராஜன் | In :

இத்தாலியைச் சேர்ந்த சிந்தனையாளர் மாக்கியவெல்லி பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.எந்த ஆட்சியும்நிலை பெறக்கூடிய வழிவகைகள்  எவை எனச் சிந்தித்தவர்.குடியரசு,முடியரசு எதுவாயினும் அது மக்கள் நன்மை கருதும் அரசாக இருக்க வேண்டும் என்பது மாக்கியவெல்லியின் கொள்கை.முசோலினி,ஹிட்லர்,லெனின்,ஸ்டாலின் போன்ற பலரும் மாக்கியவெல்லியை பின்பற்றியவர்கள்.அவருடைய சிந்தனைகளில் சில முத்துக்கள்;
*ஆள்பவன் தேவைக்குத் தகுந்த மாதிரி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*ஒரு அரசன் நம்பிக்கை வைப்பதிலும் செயலாற்றுவதிலும் மிக எச்சரிக்கையாக  இருக்க வேண்டும். அதிகமாக நம்பிக்கை வைத்து ஏமாந்து போகவும் கூடாது:அதிக சந்தேகம் கொண்டு திறமையற்றவனாகவும் கூடாது.
*தங்களை அன்பு காட்டச் செய்கின்றவனுக்கு குற்றம் செய்வதைக் காட்டிலும்,அச்சமுறச் செய்பவனுக்கு குறைவாகவே குற்றம் இழைப்பது மனிதர் இயல்பு. ஏனெனில் அன்பு மனிதர்களின் சுய நலத்தில் எழுவது. நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள்.அது நின்று போனதும் அன்பும் அறுந்து போகும்.ஆனால் தண்டனை,பயத்தால் ஏற்படக் கூடியதால் எப்போதும் அவர்கள் உள்ளத்தை விட்டுப் போகாமலிருக்கும்.
*பிறருடைய சொத்துக்களை மட்டும் பறித்துக் கொள்ளக் கூடாது.தங்கள் தந்தை இறந்ததைக் கூட எளிதாக மக்கள் மறந்து விடுவர்.ஆனால் சொத்தை இழப்பதை மட்டும் பொறுத்துக்  கொள்ள மாட்டார்கள்.
*செழிப்பு இல்லாத நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலற்று சுறுசுறுப்பாகவும்  ஒற்றுமையாகவும் வறுமையைத் தவிர்க்கப் போராடும் குணமுள்ளவர்கள் ஆகவும்  இருப்பர் .வளமான நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலுடன் இருப்பர்.அங்கு உழைப்பைப் பெருக்க சட்டங்கள் மூலம் தான் கட்டாயப் படுத்த  வேண்டும்.
*ஒரு நாட்டில் குடியாட்சியை நிறுவியவர்கள் தலைமுறை இருக்கும் வரை  தான் அது ஒழுங்காக நடக்கும்.அதற்குப் பிறகு கட்டுப்பாடற்ற தன்மை  மிகுந்து பொது நலத்திற்கும் தனியார் நலத்திற்கும் கேடு விளைவிக்கும்  படியான நிலைமை ஏற்படும்.
*வதந்திக்கும் குற்றச்சாட்டிற்கும் பெரிய வேற்றுமை இருக்கிறது.வதந்தியை மெய்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.நேருக்கு நேர் பழி சுமத்த
வேண்டியதில்லை.எனவே வதந்தியை எளிதாக ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும்.குற்றச்சாட்டோ,பொறுப்பானவர்கள் முன்னிலையில் சான்றுகளுடன் தான் ஏற்றுக் கொள்ளப்படும்.பொதுவாக குற்றம் சாட்ட வழியில்லாத இடங்களில் தான் வதந்தி பெரும்பாலும் பரப்பப்படுகிறது.
*மனிதர்கள் போராடி தேவைகளைப் பெற்றபின் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள்.
*பெரும்பாலான மக்கள் தங்கள் கௌரவத்தைக் காட்டிலும்  தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள்.
*தங்கள் ராஜ்ஜியத்தை இழக்கக் கூடிய யாரும் அதைக் காப்பாற்றுவதற்காக  தங்கள் உறுதியை மீறி நன்றிகெட்ட தனமாகவும் குறை கூறத் தக்க நிலையிலும் நடந்து கொள்வார்கள்.அச்சமுற்ற நிலையிலுள்ள யாரும் நம்பிக்கைக்கு அருகதை அற்றவர்களாகவே இருப்பார்கள்.
*சூழ் நிலைக்கு ஆட்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விருப்பப்பட்டபடி நடத்த முடியாது.அவர்கள் நியாயமாகத் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள முயன்றாலும் அவர்கள் நம்பப்பட மாட்டார்கள்.அவர்கள் நிம்மதியாக வாழ மற்றவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் .
*மனிதர்கள் தங்கள் மனப்போங்கின் படியும் குணத்தின் படியும்  செயலாற்றுகிறார்கள்.ஆனால் இன்னொரு புறத்தில் காலமும் சூழ் நிலையும் மாறிக் கொண்டே இருக்கிறது.தன போக்கின் படி ஒருவன் ஆற்றுகின்ற செயல்கள் காலத்திற்கும் சூழ் நிலைக்கு பொருந்தி விடுகின்ற போது அந்த மனிதன் தன காரியத்தில் தான் எதிர் பார்க்கும் பலனை அடைகிறான்.பொருந்தாத போது அவன் தோல்வி அடைகிறான்.அதனால் தான் மனிதனுக்கு ஒரு நேரம் அதிர்ஷ்டமும் மற்றொரு நேரம் துரதிருஷ்டமும் உண்டாகின்றன.

 .

வழி பிறந்தது.

0

Posted on : Wednesday, April 14, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தான் கொடுத்த கடனை வாங்கப் பல முறை படையெடுத்தும் கடன்  வாங்கியவன் கொடுக்கவில்லை.ஒரு நாள்,இன்று எப்படியும் வசூலித்து விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவன் வீட்டிற்குச் சென்றான்.கடன் வாங்கியவன்அப்போது மிக மும்மரமாக வீட்டில்  மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தான்.இவன் கடன்  பற்றிக் கேட்டவுடன் அவன் சொன்னான்,''இன்று உன் கடனை அடைக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன்.இதோ பார்,மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்,பழங்கள் பழுத்ததும்  விற்று முதலில் உன் கடனை அடைத்து விடுவேன்.'' கடன் கொடுத்தவன் நொந்து போய் விரக்தியில் சிரித்தான்.கடன் வாங்கினவன் சொன்னான்,''அய்யா முகத்தில் சிரிப்பைப் பார்.பின்னே,சிரிக்க மாட்டாராஎன்ன?அவர் கடன் திரும்பக் கிடைக்கத்தான் வழி பிறந்து விட்டதே!''

ஒரே பதில்

0

Posted on : Wednesday, April 14, 2010 | By : ஜெயராஜன் | In :

வள்ளல் ஒருவர் புலவரிடம் வரிசையாக நான்கு கேள்விகள் கேட்டார். புலவர் நான்கு கேள்விகளுக்கும் பதிலாக  ஒரே வரியில்,'திருவேங்கடநாதா,'என்றார்.
அதன் விளக்கம்:
புலவரே,உம்மிடம் இல்லாததென்ன?        ----திரு (செல்வம்)
உம்மிடம் இருப்பதென்ன?                              ----வெம் கடன்
உம சொற்பான்மை என்ன?                             ----நா (நாக்கு)
செய் தொழில்யாது?                                           ----தா(தா,தா என்று வள்ளல்களை 
                                                                                          கேட்பது)

அதிசய சதுரம்

0

Posted on : Wednesday, April 14, 2010 | By : ஜெயராஜன் | In :

இது   ஒரு   அதிசய சதுரம்.இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ், குறுக்காக  எப்படிக் கூட்டினாலும் 264   வரும்.

          96   11   89   68
          88   69   91   16
          61   86   18   99
          19   98   66   81

அது மாத்திரமல்ல.இந்த சதுரத்தை அப்படியே தலைகீழாக மாற்றிப் பாருங்கள்.

           18   99   86   61
           66   81   98   19
           91   16   69   88
           89   68   11   96

இப்பொழுதும் இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ்,குறுக்காக கூட்டிப் பாருங்கள்.அதே விடை தான் வரும்.264

காரணம்

0

Posted on : Tuesday, April 13, 2010 | By : ஜெயராஜன் | In :

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான  கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.ஆனால்  அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.கரைக்கு வந்த அவன்  அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.அங்கு இருந்த ஒரு துறவி,''அய்யா,நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?''என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.துறவி சொன்னார்,''அய்யா,உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை.இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.
              ----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

குளிர்

0

Posted on : Tuesday, April 13, 2010 | By : ஜெயராஜன் | In :

இமயமலையில் ஒரு உயரமான இடத்தில் ஒரு ஆசிரமத்தில் ஒரு துறவி இருந்தார்.ஒரு சமயம் மலையேறும் குழுவில்  வந்தவர்கள் அவரிடம்.'சுவாமி, இங்குள்ள குளிரை எங்களாலேயே தாங்க முடியவில்லையே!தாங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?'என்று கேட்டனர்.''துளசியும் சுக்குக் கசாயமும் இருக்கும் போதுகுளிர் ஒன்றும் செய்யாது.சரி,நீங்கள் சுக்குக் கசாயம் சாப்பிடுகிறீர்களா?'' என்று கேட்டார்.'சாப்பிடுகிறோம்.'என்றனர் வந்தவர்கள்.''அப்படியா,இதோ பாரும்மா துளசி,இவர்களுக்கு சுக்குக் கசாயம் போட்டுக் கொண்டு வா,''என்றார் சாமியார்.

இயேசு-யூதாஸ்

0

Posted on : Monday, April 12, 2010 | By : ஜெயராஜன் | In :

யாராவது உங்களை அவமரியாதை செய்தால் நீங்கள் பலவீனமாக  உணர்கிறீர்கள்.தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள்.எப்படிப் பலி வாங்குவது என்று யோசிக்கத் தொடங்குகிறீர்கள்.அந்த மனிதன் உங்களைக் கைப் பற்றிவிட்டான். இப்போது நீங்கள் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.நாள் கணக்காக,இரவு பகலாக,பல மாதங்களாக,பல வருடங்களாகக் கூட இதை நினைத்துஉங்களால் தூங்க முடியாது.உங்களுக்குக் கெட்ட கனவுகள் வரும்.மக்கள் சிறிய விசயங்களுக்காக முழு வாழ்க்கையையும் வீணடிக்கிறார்கள்.மற்றவர்,அது தாய் தகப்பன்,நண்பர்,உறவினர் யாராக இருந்தாலும் உங்களை அவமரியாதை  செய்தால் அந்தக் காயம் வயதான பின்னரும் ஆறுவதில்லை.அந்தக் காயம் இன்னும் திறந்து புதிது போல்  இருக்கும்.யாராவது அதைத் தொட்டால் நீங்கள் வெடித்து விடுவீர்கள்.இந்தக் காயத்தை வளர விடாதீர்கள்.இது உங்களைக் காயப்படுத்தி விட  அனுமதிக்காதீர்கள்.24 மணி நேரம் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.யாராவது உங்களை அவமரியாதை செய்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.பதிலுக்கு ஒன்றும் செய்யாதீர்கள்.என்ன நிகழ்கின்றது என்று பாருங்கள்.நீங்கள் இதுவரை உணர்ந்தேயிராத சக்தி உங்கள் மீது பொழிவதை உணர்வீர்கள்.ஒரு முறை நீங்கள் அதை சுவைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுபடும்.பிறகு நீங்கள் இதுவரை செய்து கொண்டிருந்த முட்டாள் தனத்தைப் பார்த்து சிரிப்பீர்கள்.வருத்தங்கள்,எதிர்ப்புகள்,பழிகள் என்று உங்களை நீங்களே அழித்துக் கொண்டிருந்ததை நினைத்து சிரிப்பீர்கள்.
உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது.உங்களைத் தவிர வேறு யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது.நீங்கள் தான் இயேசு..நீங்கள் தான் யூதாஸ்.

தர்க்கம்

0

Posted on : Monday, April 12, 2010 | By : ஜெயராஜன் | In :

சீடன் தான் கண்ட பயங்கரமான கனவினை குருவிடம் விளக்கினான்,''நான்  காட்டு வழியே செல்லும் போது எதிரே நான் பார்த்திராத சிறு பிராணி ஒன்று வந்தது.அது என்னை நோக்கி நடந்து வந்தது.நான் பயந்து,அதை விரட்ட,ஒரு சிறு கல்லைத் தூக்கி அதன் மீது எறிந்தேன்.உடனே அது சிறிது பெரிய உருவமாகி என்னை நோக்கி வந்தது.நான் ஒரு பெரிய குச்சியை எடுத்து அதனை அடித்தேன்.சிறு பூனை போல இருந்த அது உடனே புலி போல் உருவெடுத்தது.ஓட முடியாத நான்,ஒரு பாறாங்கல்லை எடுத்து அதன் மேல்  எறிந்தேன்.அது யானையை விடப் பெரிய மிருகமாகி என்னை விழுங்க வந்தது. நான் வேகமாக ஓட,அது மலை போல் மாறி என்னை விரட்டியது.அப்போது தான் நான் பயத்தில் அலறி விழித்தேன்.இக்கனவின் பொருள்என்ன குருவே?''
குரு சிரித்தபடி சொன்னார்,''சிறு மிருகமாக இருந்து பெரியதாக மாறியதன் பெயர் தான் தர்க்கம்-விவாதம்.இறுதியில் மிகப் பெரியதாக உன்னை விழுங்க வந்தது அல்லவா?அது போலத்தான் விவாதமும்.சிறு விசயத்திற்காக யாரிடமாவது விவாதிக்கத் துவங்கி விட்டால்,அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய மலையாகி நம்மையே விழுங்கி விடும்.விரோதமே வளரும். எனவே யாரிடமும் எதைக் குறித்தும் விவாதம் செய்யாதே.''

கட்டணம்

0

Posted on : Monday, April 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் உடல் நிலை சரியில்லை என்று டாக்டரைப் பார்க்கச்  சென்றான்.டாக்டர் அவனைப் பரிசீலித்து விட்டு,''சரி,இப்போது நான் சொல்வதை தவறாமல் கடைப்பிடி.நீ ஒரு நாளைக்குப் பத்து மைல் ஓட வேண்டும்.காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும்.பீர்,கேக் சிகரெட் எதுவும் தொடக்கூடாது........,''இப்படி அவர் நீண்ட நேரம் அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போதே வந்தவன் எழுந்து கதவை நோக்கிச்  சென்றான்.''நில். என்னுடைய அறிவுரைக்கு நீ கட்டணம் எதுவும் கொடுக்காமல் செல்கிறாயே?'' என்று டாக்டர் கேட்டார்.அவன்,''ரொம்ப நன்றி டாக்டர்,ஆனால் நான் உங்கள் அறிவுரைகளை எடுத்துக் கொள்ளவே இல்லையே!''என்றான்.

வரலாறு

0

Posted on : Monday, April 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆங்கிலச் சரித்திர ஆசிரியர் எட்மன்ட் பர்க்,நாற்பது வருட கால முயற்சியில் உலக சரித்திரத்தை எழுதினார்.ஒரு நாள் அவர் வீட்டுக்குப் பின்புறம் பல சாட்சிகளுக்கு நடுவே பட்டப்பகலில் ஒரு கொலை நடந்தது.இவர் அதைக் கேள்விப்பட்டு,பின்னால் ஓடி அங்கிருந்த மக்களிடம் எப்படி ஒருவன் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றான் என்று அதிர்ச்சியுடன் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான் பதில்  சொன்னார்கள்.அவரால்  நம்பவே முடியவில்லை.ஏனெனில் எல்லோர் முன்னிலையிலும் அக்கொலை நடந்தது.ஆனால் அதைப் பற்றி எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்?இப்போது வாழ்க்கையில்  அவர் செய்த தவறு புரிந்தது.உடனே  வீட்டினுள் சென்று தன நாற்பது வருட உழைப்பைத்  தீயிட்டுக் கொளுத்தினார்.அந்த வரலாறு ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து எழுதப்பட்டது.அவர் நினைத்தார்,''இப்போது நடந்த சம்பவத்தைக் கண்ணால் பார்த்தவர்களேவெவ்வேறு மாதிரியாகச் சொல்லும் போது,புத்தரைப் பற்றியோ ஏசுவைப் பற்றியோ நான் சேகரித்த செய்திகள் எவ்வளவு சரியாக இருக்க முடியும்?பல ஆயிரக் கணக்கான வருடங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சிகள் இப்போது எழுதும் போது எப்படி துல்லியமாக இருக்க முடியும்?''

ரொம்ப நல்லது

0

Posted on : Monday, April 05, 2010 | By : ஜெயராஜன் | In :

மாக்கி என்பவள் தன பழைய சினேகிதி டோரவைக் காண மிக ஆவலுடன் வந்தாள்.
மாக்கி: ஹே டோரா,என்ன ஆச்சரியம்!உன்னைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!என்ன சமாச்சாரங்கள்?
டோரா: ஒன்றுமில்லை,உன்னைக் கடைசியாகப் பார்த்த பின் கல்யாணம் செய்து கொண்டேன்.
மாக்கி: கல்யாணம் ஆகி விட்டதா!ரொம்ப நல்ல செய்தி தான்!
டோரா: அப்படி ஒன்றும் பிரமாதமான வாழ்க்கை அமைய வில்லை.அவன் மிகவும் மோசமானவன்.
மாக்கி: என்ன மோசமானவனா?நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
டோரா: அப்படி ஒன்றும் மோசமில்லை.அவனிடம் நிறைய பணம் இருந்தது.
மாக்கி : பரவாயில்லையே,பணத்தோடு கணவனை அடைந்திருக்கிறாய் என்று சொல்.ரொம்ப நல்லது.
டோரா: அப்படி ஒன்றும் நல்லதாக இல்லை.அவன் ஒரு கஞ்சன்.
மாக்கி: பணம் இருந்தும் கஞ்சன் என்கிறாய்.வருத்தமாக இருக்கிறது.
டோரா: இது ஒன்றும் பெரிய வருத்தமில்லை.அவன் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறான்.
மாக்கி: சொந்தமாக வீடா!ரொம்ப நல்ல செய்தி தான்.
டோரா: அப்படி ஒன்றும் நல்ல செய்தி இல்லை.அந்த வீடு எரிந்து விட்டது.
மாக்கி: என்ன எரிந்து விட்டதா?கேட்கவே சங்கடமாக இருக்கிறதே?
டோரா: இதல் சங்கடப்பட ஒன்றும் இல்லை.அந்த வீடு எரிந்த போது என் கணவனும் உள்ளே இருந்தான்!

முத்தம்

0

Posted on : Sunday, April 04, 2010 | By : ஜெயராஜன் | In :

பலா மரத்தடியில் படுத்துக் கிடந்த ஒரு கரடியை வேட்டையாட எண்ணி ஒருவன் குறி பார்த்து சுட்டான்.ஆனால் குண்டு குறி தவறி பக்கத்து மரத்தில் பட்டது.கோபத்துடன் அவனைக் கொல்ல வந்த கரடிமனம் மாறி அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பியது.அடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் இதே மாதிரி நடந்தது.நான்காவது நாளும் குறி தவறிய போதுகரடி அமைதியாய் அவனருகில் வந்து,''நான் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுப்பது உனக்குப் பிடிச்சிருந்தா சொல்ல வேண்டியது தானே?அதுக்காக ஏன் குறி பார்த்து சுடுகிற மாதிரி நடிக்கிறே?''
********
ஒரு எறும்பும் ஒரு யானையும் காதலித்துக் கல்யாணம் முடித்துக் கொண்டன.அடுத்த நாள் காலை யானை செத்துக் கிடந்தது.எறும்பு அழுதவாறே சொன்னது,''அடப்பாவி,ஒரு நாள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக,என்வாழ் நாளெல்லாம் குழி தோண்ட வச்சிட்டியே,உன்னைப் புதைக்க.''

தங்க மனசு

0

Posted on : Sunday, April 04, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பணக்காரன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தான்.தூரத்தில் இரண்டு  ஆண்கள் புற்களைப் பறித்துத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் காரை நிறுத்தி அவர்களிடம் விபரம் கேட்க,அவர்களும் வறுமையினால் புல்லைச் சாப்பிடுவதாகக் கூறினர்.''சரி என்னோடு வீட்டுக்கு வாருங்கள்,''என இருவரையும் அவன்  அழைத்தான்.இருவரும் தன மனைவி,குழந்தைகளை விட்டுவிட்டு எப்படி வருவது என யோசிக்க,ஒரு நிமிடம் யோசித்துவிட்டு  அவர்களையும் வரச்சொல்லி அனைவரையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.''உங்களுக்குத் தங்கமான மனசு,''என அவர்கள் அனைவரும் வாயாரப் புகழ்ந்தார்கள்.''சந்தோசமா வாங்க,என் பங்களாவைச் சுற்றி மூன்று அடி உயரத்துக்கு நிறையப் புல் வளர்ந்திருக்கு.''
என்றான் அந்த தங்க மனசுக்காரன்.

பைத்தியம் இல்லை

0

Posted on : Sunday, April 04, 2010 | By : ஜெயராஜன் | In :

ஹிட்லர் ஒரு முறை ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வருவதாக  இருந்தது.ஹிட்லர் வரும் போது,'ஹிட்லர் வாழ்க,'என்று கூற அனைத்து பைத்தியங்களுக்கும் பயிற்சி கொடுக்கப் பட்டது.அதே போல் அவர் வந்த போது அங்கிருந்த அனைவரும்,'ஹிட்லர் வாழ்க,'என்று கத்தினர்.ஒரே ஒருவர் மட்டும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.ஹிட்லர் அவரிடம் சென்று,''நீ ஏன்ஹிட்லர்வாழ்க என்று ஏன் சொல்லவில்லை?''என்று கேட்டார்.அவர் அமைதியாகச் சொன்னார்,'நான் ஒன்றும் பைத்தியம் இல்லை.நான் ஒரு டாக்டர்.'

துயரம்

0

Posted on : Saturday, April 03, 2010 | By : ஜெயராஜன் | In :

கல்யாணத்திற்குப் பிறகு அவனை மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்கிறாள்ஒரு பெண்.ஆனால் துயரம் என்னவென்றால்  அவன் கடைசி வரை அவள் எண்ணப்படி மாறுவதே இல்லை.
கல்யாணத்திற்குப் பிறகு அவள் மாற மாட்டாள் என்ற நம்பிக்கையில் தான் ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.துயரம் என்னவெனில் அவள் தலை கீழாக மாறிவிடுகிறாள்.

ஏன்,எதற்கு?

0

Posted on : Saturday, April 03, 2010 | By : ஜெயராஜன் | In :

தாய் ஒட்டகத்திடம் குட்டி கேட்டது,''அம்மா,எதற்காக நம் கால்கள் நீளமாக இருக்கின்றன?''
தாய்: பாலைவன  மணலில் புதையாமல் நடப்பதற்காகத் தான்.
குட்டி: கண் இமை இவ்வளவு சிறிதாக நிறைய முடியுடன் இருக்கிறதே,அது ஏன்?
தாய்: மணல் புயல் வந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான்.
குட்டி: அது சரி,பின்புறம் ஏன் திமில் இருக்கிறது?
தாய்:அது தண்ணீர் சேமித்துக்கொள்ள.அப்படி இருந்தால்  தான் பாலைவனத்தில் எளிதாகப் பயணம் செய்ய முடியும்.
குட்டி:நாம் இருக்கும் மிருகக் காட்சியில் தான் பாலைவனமே  இல்லையே?  பிறகு இவை எல்லாம் நமக்கு எதற்கு அம்மா?

பிரார்த்தனை மொழி

0

Posted on : Saturday, April 03, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு துறவி குளத்தின் அருகே இருந்த மர நிழலில் அமர்ந்து தியானம் செய்து  கொண்டிருந்தார்.அப்போது அந்தக் குளத்திலிருந்த தவளைகள் சலசலவென  சப்தம் இட்டுக் கொண்டிருந்தன.துறவி தவளைகளிடம் ,''நான் இங்கு இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டிருப்பது உங்களுக்குத்  தெரியவில்லையா?''என்று கோபமாகக் கேட்டார்.'நாங்களும் எங்கள் மொழியில் பிரார்த்தனைதான் செய்து கொண்டிருக்கிறோம்.'என்றனவாம் தவளைகள்.

மீன் வலை

0

Posted on : Friday, April 02, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மன்னனிடம் இருந்த அறிவாளி சாகும்தருவாயில்,''எனக்குப் பதில் அடக்கமுடைய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.அடக்கம் தான் ஞானத்தின் அறிகுறி.''என்றார்.அரசனும்தூதர்களை அனுப்பி அடக்கமான ஒருவரை தேடிப் பிடிக்கக் கூறினான்.இதைக்  கேட்ட பணக்காரரான முல்லா,தீர்க்கமாக யோசித்து முடிவு செய்து,தூதர்கள் வரும் போதுமீன் வலையை சுமந்து கொண்டு ஆற்றிலிருந்து வந்து கொண்டிருந்தார்.தூதர்கள்  கேட்டார்கள்,'நீ பணக்காரனாய் இருந்தும் ஏன்இந்த மீன் வலையை சுமக்கிறாய்?'
முல்லா சொன்னார்,''மீன் பிடித்து தான் பணக்காரன் ஆனேன்.எனக்கு பல வசதிகளைக் கொடுத்த மூலத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில்  நான் எப்போதும் இந்த வலையை தோளில் சுமந்து செல்வது வழக்கம்.''
'பொதுவாக ஏழை பணக்காரன் ஆகி விட்டால்,அவன் தன இறந்த காலத்தை சுத்தமாக துடைத்து விடுவான்.எதோ பெரிய பிரபு குலத்தில் பிறந்தது போல்
ஒரு புதிய இறந்த காலத்தை உருவாக்கி விடுவான்.ஆனால் இந்த மனிதன்,முல்லா,நிகவும் அடக்கமாக இருக்கிறான்,'என்று தூதர்கள் அரசனிடம் கூறினர்.முல்லா ஞானியாகக் கருதப் பட்டு  வேலையில் அமர்த்தப்பட்டார்.
அவர் வேலையில் அமர்ந்த அன்றே வலையைத் தூக்கி எறிந்து விட்டார்.அவருக்காகப் பரிந்து பேசிய ஒருவன் கேட்டான்,'முல்லா,இப்போது உன் வலை எங்கே?'முல்லா சொன்னார்,''மீனை பிடித்தபின் வலையைத் தூக்கி எறிய வேண்டியது தானே?''

சந்தேகம்

0

Posted on : Friday, April 02, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது.எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையைவெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு,வேலைக்காரனிடம்,இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க,அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால்  தூக்கம் வராது என்றார்.அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர்,அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார்.அவனும்,'அரசே,நான்தூங்கவில்லை.வானில்இருக்கும்  நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார்.அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து  பார்த்த போதுவேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?''என்று கேட்டார். அவன் சொன்னான்,'அரசே,உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது  யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'

பொய்

0

Posted on : Thursday, April 01, 2010 | By : ஜெயராஜன் | In :

வேறு தேசத்தைச் சேர்ந்த வேறு மொழி பேசுகிற குற்றவாளிகளைப் பிடித்து வந்தவர்கள்,அவர்களின் குற்றங்களை விளக்கிச் சொல்லச் சொல்ல அரசன்  தண்டனை விதித்துக் கொண்டிருந்தான்.ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க,கைதி அவன் மொழியில் மன்னரை மோசமாகத் திட்டினான்.அவன் சொல்வது புரியாது அருகில் இருந்த அமைச்சரிடம் மன்னன் விளக்கம் கேட்க,மந்திரியும்,''அரசே,கோபத்தை அடக்கி பிறரை மன்னிப்பவர்க்கு சொர்க்கம் உண்டு என்கின்றான்,'என்றார்.அரசர் உடனே மனம் மாறி,தூக்குத் தண்டனையை மாற்றி மன்னித்து விட்டார்.பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு அமைச்சர் அரசர் காதில்,''அரசே!இந்த அமைச்சர் உங்களிடம் பொய் சொன்னார்.அந்தக் கைதி உண்மையிலேயே உங்களை மிகவும்   திட்டினான்.''என்றார்.அரசர் புன்னகையோடு அவரிடம் சொன்னார்,''நீங்கள் கூறிய உண்மையை விட அவர் கூறிய பொய் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.'' சமாதானத்தை உண்டாக்கும் பொய் சச்சரவுகள் உண்டாக்கும் மெய்யை
விட மேலானது.

பொன்மொழிகள் -6

0

Posted on : Thursday, April 01, 2010 | By : ஜெயராஜன் | In :

பேராசையைப் போக்க நினைத்தால் அதன் தாயாகிய
ஆடம்பர குணத்தை ஒழிக்க வேண்டும்.
******
வெறும் கைகள் என்பது மூடத்தனம்.
பத்து விரல்கள் என்பது மூலதனம்.
******
பிறரை முகஸ்துதி செய்பவன் அவன்
கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
******
நீங்கள்  கோபம்  கொண்டாலும்
பாவம் செய்யாதிருங்கள்.
******
கோபம் முட்டாள்தனத்தில் தொடங்கி
தவறுக்கு வருந்துவதில் போய் முடிகிறது.
******
யார் மீது அதிக அன்பும் நம்பிக்கையும் கொள்கிறோமோ,
அவர்களிடம் தான் அடிக்கடி சினமும் கொள்கிறோம்.
சினம் என்பது தலை கீழான அன்பு.
******
என்னிடம் உதவி பெற்றவன்,அதை மறந்தால்
அது அவன் குற்றம்.ஆனால்
நான் உதவி செய்யா விட்டால்
அது என் குற்றம்.
******
நம் தந்தை சொன்னதெல்லாம் சரிதான்
என்று நாம் உணருகின்ற காலத்தில்
'நீ சொல்வதெல்லாம் தவறு'
என்று சொல்ல நமக்கொரு மகன்
பிறந்து விடுகிறான்.
******
எங்கு யாரிடம் எந்தத் தவறைக் கண்டாலும்
அதை உன்னிடம் நீ திருத்திக்கொள்.
******
திறமை என்பது ஒருவனை உயரே கொண்டு போகும்.
நல்ல குணம் தான் அவனை கீழே விழாமல் பாது காக்கும்.
******
ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டு பிடிக்கிறாய்.
செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டு பிடிக்கிறாய்.
******
தோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே,
நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
******
சுமப்பதெல்லாம் பாரமுமில்லை;
பாரமாக நினைப்பவை சுமைகளுமில்லை.
******
கெட்ட தந்தை கூடத் தன மகன் கெட்டவனாக
இருக்க விரும்புவதில்லை.
******
சோம்பேறிகளின் நாக்கு சோம்பேறித்தனமாய் இருப்பதில்லை.
******