இத்தாலியைச் சேர்ந்த சிந்தனையாளர் மாக்கியவெல்லி பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.எந்த ஆட்சியும்நிலை பெறக்கூடிய வழிவகைகள் எவை எனச் சிந்தித்தவர்.குடியரசு,முடியரசு எதுவாயினும் அது மக்கள் நன்மை கருதும் அரசாக இருக்க வேண்டும் என்பது மாக்கியவெல்லியின் கொள்கை.முசோலினி,ஹிட்லர்,லெனின்,ஸ்டாலின் போன்ற பலரும் மாக்கியவெல்லியை பின்பற்றியவர்கள்.அவருடைய சிந்தனைகளில் சில முத்துக்கள்;
*ஆள்பவன் தேவைக்குத் தகுந்த மாதிரி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*ஒரு அரசன் நம்பிக்கை வைப்பதிலும் செயலாற்றுவதிலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமாக நம்பிக்கை வைத்து ஏமாந்து போகவும் கூடாது:அதிக சந்தேகம் கொண்டு திறமையற்றவனாகவும் கூடாது.
*தங்களை அன்பு காட்டச் செய்கின்றவனுக்கு குற்றம் செய்வதைக் காட்டிலும்,அச்சமுறச் செய்பவனுக்கு குறைவாகவே குற்றம் இழைப்பது மனிதர் இயல்பு. ஏனெனில் அன்பு மனிதர்களின் சுய நலத்தில் எழுவது. நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள்.அது நின்று போனதும் அன்பும் அறுந்து போகும்.ஆனால் தண்டனை,பயத்தால் ஏற்படக் கூடியதால் எப்போதும் அவர்கள் உள்ளத்தை விட்டுப் போகாமலிருக்கும்.
*பிறருடைய சொத்துக்களை மட்டும் பறித்துக் கொள்ளக் கூடாது.தங்கள் தந்தை இறந்ததைக் கூட எளிதாக மக்கள் மறந்து விடுவர்.ஆனால் சொத்தை இழப்பதை மட்டும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
*செழிப்பு இல்லாத நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலற்று சுறுசுறுப்பாகவும் ஒற்றுமையாகவும் வறுமையைத் தவிர்க்கப் போராடும் குணமுள்ளவர்கள் ஆகவும் இருப்பர் .வளமான நாட்டில் வாழ்பவர்கள் சோம்பலுடன் இருப்பர்.அங்கு உழைப்பைப் பெருக்க சட்டங்கள் மூலம் தான் கட்டாயப் படுத்த வேண்டும்.
*ஒரு நாட்டில் குடியாட்சியை நிறுவியவர்கள் தலைமுறை இருக்கும் வரை தான் அது ஒழுங்காக நடக்கும்.அதற்குப் பிறகு கட்டுப்பாடற்ற தன்மை மிகுந்து பொது நலத்திற்கும் தனியார் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் படியான நிலைமை ஏற்படும்.
*வதந்திக்கும் குற்றச்சாட்டிற்கும் பெரிய வேற்றுமை இருக்கிறது.வதந்தியை மெய்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.நேருக்கு நேர் பழி சுமத்த
வேண்டியதில்லை.எனவே வதந்தியை எளிதாக ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும்.குற்றச்சாட்டோ,பொறுப்பானவர்கள் முன்னிலையில் சான்றுகளுடன் தான் ஏற்றுக் கொள்ளப்படும்.பொதுவாக குற்றம் சாட்ட வழியில்லாத இடங்களில் தான் வதந்தி பெரும்பாலும் பரப்பப்படுகிறது.
*மனிதர்கள் போராடி தேவைகளைப் பெற்றபின் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள்.
*பெரும்பாலான மக்கள் தங்கள் கௌரவத்தைக் காட்டிலும் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள்.
*தங்கள் ராஜ்ஜியத்தை இழக்கக் கூடிய யாரும் அதைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உறுதியை மீறி நன்றிகெட்ட தனமாகவும் குறை கூறத் தக்க நிலையிலும் நடந்து கொள்வார்கள்.அச்சமுற்ற நிலையிலுள்ள யாரும் நம்பிக்கைக்கு அருகதை அற்றவர்களாகவே இருப்பார்கள்.
*சூழ் நிலைக்கு ஆட்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விருப்பப்பட்டபடி நடத்த முடியாது.அவர்கள் நியாயமாகத் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள முயன்றாலும் அவர்கள் நம்பப்பட மாட்டார்கள்.அவர்கள் நிம்மதியாக வாழ மற்றவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் .
*மனிதர்கள் தங்கள் மனப்போங்கின் படியும் குணத்தின் படியும் செயலாற்றுகிறார்கள்.ஆனால் இன்னொரு புறத்தில் காலமும் சூழ் நிலையும் மாறிக் கொண்டே இருக்கிறது.தன போக்கின் படி ஒருவன் ஆற்றுகின்ற செயல்கள் காலத்திற்கும் சூழ் நிலைக்கு பொருந்தி விடுகின்ற போது அந்த மனிதன் தன காரியத்தில் தான் எதிர் பார்க்கும் பலனை அடைகிறான்.பொருந்தாத போது அவன் தோல்வி அடைகிறான்.அதனால் தான் மனிதனுக்கு ஒரு நேரம் அதிர்ஷ்டமும் மற்றொரு நேரம் துரதிருஷ்டமும் உண்டாகின்றன.
.
|
|
Post a Comment