உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எது கனவு?

0

Posted on : Thursday, March 25, 2010 | By : ஜெயராஜன் | In :

ஜென் ஞானி சுவாங் ட்சு ஒரு நாள் காலை எழுந்ததும் தனக்கு ஒரு சந்தேகத்தால் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அதைத் தீர்த்து வைக்க உதவுமாறும் தன சீடர்களைக்  கேட்டுக் கொண்டார்.சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் அப்பாற்பட்ட குருவுக்கே  பிரச்சினையா என்று அவர் சொல்லப் போவதை ஆவலுடன் கேட்கத் தயாராயினர்.
குரு சொன்னார்,''சந்தேகம் மிக சிக்கலானது.நேற்று ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பட்டாம் பூச்சியாய் மலருக்கு மலர் தாவித் தேன் அருந்திக்   கொண்டிருந்தேன்.''சீடர்களுக்கு திகைப்பு.கனவு எல்லோரும் தானே காண்கிறோம்,இதில் என்ன பிரச்சினை?குரு தொடர்ந்தார்,'' பிரச்சினை அதோடு முடியவில்லை.இன்று காலை கண் விழித்ததும் சுவாங் ட்சு ஆக மாறிவிட்டேன்.விவகாரம் என்னவென்றால்,இப்போது அந்த பட்டாம் பூச்சி  தான் சுவாங் ட்சு ஆகக்  கனவு காண்கிறதா என்பது தான்.ஒரு மனிதன் பட்டாம் பூச்சியாகக் கனவு காண முடியுமென்றால்,பட்டாம் பூச்சியும் மனிதனாகக் கனவு காண முடியுமல்லவா?இப்போது எனக்கு உண்மை நிலை தெரிந்தாக வேண்டும்.நான் சுவாங் ட்சுவா,இல்லை பட்டாம் பூச்சியா?''
சீடர்கள்,''இதற்கு பதில் சொல்ல எங்களுக்கு சக்தி இல்லை.இதுவரை நாங்கள் தூக்கத்தில் காண்பது கனவென்றும்,விழிப்பில் காண்பது நனவென்றும் தான் கருதி வந்தோம்.இப்போது நீங்கள் எங்களைக் குழப்பி விட்டீர்கள்.''என்றனர்.
குரு சொன்னார்,''நீங்கள் கனவு காணும் போது,பகலில் பார்த்ததை எல்லாம் மறந்து விடுகிறீர்கள்.பகலின் நிகழ்ச்சிகளின்போது கனவை மறந்து விடுகிறீர்கள்.பகலில் கனவில் கண்டது கொஞ்சமாவது நினைவுக்கு வரும். ஆனால்,கனவில்,பகலில் கண்டது எதுவுமே  நினைவிற்கு வருவதில்லை.  நினைவு தான் முடிவு எடுக்கும் முக்கிய  அம்சம் என்றால் பகலின் கனவுகளை விட இரவின் கனவுகளே மிகவும் உண்மையாக இருக்கின்றன. ஒருவன்எப்போதும் உறங்கிக் கொண்டே இருந்தால்,தான் காணும் கனவு உண்மை அல்ல என்று எப்படி அறிய முடியும்?ஒவ்வொரு கனவும் காணும் போது உண்மையாகத்தான் தெரிகிறது.''
மரணத் தருவாயில்,ஒருவன் தன கடந்த கால வாழ்வைத் திரும்பப் பார்த்தால்.அது கனவைப் போலத்தான் தோன்றும்.வாழ்ந்தோமா.கனவு காண்கிறோமா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment