உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொருத்தமானவர்

0

Posted on : Friday, March 19, 2010 | By : ஜெயராஜன் | In :

மதீனாவின் ஆட்சித் தலைவர் உமர் பாரூக்கிற்கு,பரிந்துரைக்கப்பட்ட  இருவருள் ஒருவரை கவர்னர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டிய பணி.இருவரையும் குறிப்பிட்ட நேரத்தில் தம்மை வந்து சந்திக்க அழைத்தார். முதல் நபர் குறித்த நேரத்தில் வந்தார்,முக மலர்ச்சியுடன் முகமன் கூறினார்.முகம் பொலிவுடன் இருந்தது.இனிமையாகப் பேசினார்.உடைகள் நேர்த்தியாக இருந்தன.இரண்டாம் நபர் சற்றுத் தாமதமாக அரக்கப் பரக்க வந்தார்.அவர் உடைகள் கலைந்திருந்தன.தூசி படிந்திருந்ததைத் தட்டி விட்டுக் கொண்டார்.தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டார்.உடைகள் எளிமையாக இருந்தன.தாமதத்திற்கான காரணத்தை அவர் விளக்கினார்,''வரும் வழியில் ஒரு மூதாட்டியின் கழுதையுடைய ஒரு கால் இரு பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தது.கிழவியால் அதை மீட்க இயலவில்லை.அவளை அந்த நிலையில் விட்டுவிட்டு வர மனமில்லை.எனவே சிரமப்பட்டு கழுதையை மீட்டுக் கொடுத்து விட்டு வந்ததில் தாமதமாகி விட்டது.''முதலாவதாக வந்தவர் சிரித்துக் கொண்டே கேட்டார்,'உங்களுக்கு எது முக்கியம்?கவர்னர் பதவியா?கழுதையின் காலா?' அப்போது உமரின் குழந்தைகள் ஓடி வந்து அவர் மடியில் விழுந்து விளையாடத் துவங்கின.இரண்டாவது நபர் வெட்கத்துடன் சொன்னார்,'என் வீட்டிலும் நான் சென்றவுடன் என் குழந்தைகளுடன் ஒரே கலாட்டா தான். எல்லோரும் என் மீது வந்து விழுவார்கள்.இப்போது கிளம்பும் போது கூட என் கடைசி மகள் என் அங்கியைப் பிடித்து இழுத்து,கூட வருவேன் என்றாள். அது தான் அங்கி கூடக் கசங்கி விட்டது.'முதல் நபர் இதனைக் கேட்டு வியப்படன்,  ''நான் ஒரு போதும்  இவ்வாறு நடப்பதில்லை.என் குழந்தைகள் என்னைப் பார்த்தவுடன் அடங்கிப்போவார்கள்.என் அருகில் வரவே அஞ்சுவார்கள்.''      உமர் சொன்னார்,''இறைவன் உன் இதயத்திலிருந்து கருணையை எடுத்து  விட்ட பிறகு நான் என்ன செய்ய முடியும்?ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்.படைப்புகள் மீது கருணை காட்டாதவர் மீது படைப்பாளன் கருணை காட்ட மாட்டான்.''
உமர் பின் புன்னகையுடன் தன் செயலாளரை அழைத்து இரண்டாவது நபருக்குப் பதவி நியமனக் கடிதம் அனுப்பச் சொல்லி உத்தரவிட்டார். முதல்  நபரோ வாயடைத்துப் போனார்.
உமர் சொன்னார்,''தூய்மையான அழகான ஆடைகள்,இனிய பேச்சு,பொலிவான தோற்றம் ஆகியவற்றால் மட்டும் தலைவராகிவிட   முடியாது.பெரும் பதவியை ஏற்பவர்கள் கருணை மிகுந்தவராக,மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்டவாராக இருக்க வேண்டும்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment