ஒரு மன்னன்,யாருமே துணையில்லாத ஒரு சூழ்நிலையில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால் செயல் படும் விதம் குறித்து, தன் மந்திரிகளிடம் கேட்டார்.அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதில் அவருக்கு திருப்திகரமாக இல்லை.எனவே ஒரு ஞானியை அணுகிக் கேட்டதில்.அவர் ஒரு சிறு காகிதத்தில் குறிப்பு எழுதிக் கொடுத்து,''இதை இப்போது படிக்கக் கூடாது.உன் மோதிரத்தில் மடித்து வைத்திருந்து அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது எடுத்துப் படி.''என்றார்.
சில மாதங்களில் பக்கத்து நாட்டு அரசன் படை எடுத்து வந்தான். இந்த மன்னன் தோல்வியுற்றதுடன் தனியாக ஓடித் தப்பித்தான்.ஓடி ஓடிக் கடைசியில் ஒரு மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான்.தன் நிலை குறித்து வருந்திய அரசன்,ஞானி சொன்னது ஞாபகம்வந்து மோதிரத்திற்குள் இருந்த குறிப்பை எடுத்துப் படித்தான்.அதில்,''இந்த நிலை யும் மாறலாம்,'' என்று இருந்தது.உடனே அவனுக்கு உற்சாகம் தோன்றியது.பின்னர் நாட்டுக்குள் வந்து தன் படைகளை மீண்டும் திரட்டி,பக்கத்து நாட்டு மன்னனுடன் போரிட்டு வெற்றியடைந்து மீண்டும் தன் நாட்டிற்கு மன்னன் ஆனான்.
மீண்டும் மன்னன் ஆன அவனுக்கு சில மாதங்களில் தான் மிகவும் சிறந்தவன்,யாராலும் அசைக்க முடியாதவன் என்ற ஆணவம் வரலாயிற்று. அப்போது ஒரு நாள் தற்செயலாக மோதிரத்தினுள் வைத்திருந்த குறிப்பு தவறிக் கீழே விழுந்தது.அதை எடுத்த மன்னன் மீண்டும் படித்தான்,''இந்த நிலையும் மாறலாம்.''மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.அவன் ஆணவம் அப்போதே அழிந்தது.
|
|
Post a Comment