உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பரிசு

1

Posted on : Wednesday, January 30, 2013 | By : ஜெயராஜன் | In :

சுல்தான் ஒருவர் ,ஒரு ஞானியிடம் கவரப்பட்டு அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்து தரிசித்து வந்தார்.ஞானியின் போதனைகள் அவருக்கு மிகவும் பிடித்தது.எனவே அலுவல் பல இருந்தும் ஞானியிடம் அதிக நேரம் செலவழிப்பதை விரும்பினார்.அவரிடம் திரண்ட சொத்துக்கள் இருந்தன. எனவே அவர் ஞானியிடம்,''நீங்கள் எது செய்யச் சொன்னாலும் நான் செய்யக் காத்திருக்கிறேன்.உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள், ''என்றார். ஞானி,''ஆம்,உன்னிடம் எனக்கு ஆக வேண்டியது ஒன்றிருக்கிறது. அதை மறுக்காமல் செய்வாயா?''என்று கேட்டார்.சுல்தானும் ஆவலுடன் என்னவென்று கேட்க,''நீ மீண்டும் இங்கு வராதிருக்க வேண்டும்,''என்று ஞானி சொன்னார்.சுல்தானுக்கு அதிர்ச்சி,திகைப்பு,ஏமாற்றம்,வருத்தம் எல்லாம் ஒரு சேர ஏற்பட்டது.சுல்தான் மிகுத்த பணிவுடன்,''தங்களுக்கு மனம் வருந்தும்படி நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?அப்படி ஏதாவது செய்தாலும் அதற்கு இது பெருந்தண்டனை அல்லவா?நீங்கள் என்னை மன்னிக்கக் கூடாதா?''என்று புலம்பினான்.ஞானி சொன்னார்,''அப்பா,இதில் உன் தவறு ஏதும் இல்லை.தவறு என் சீடர்களிடம்தான்.இதுவரை அவர்கள் கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்தார்கள்,பாடினார்கள்,ஆடினார்கள்.அவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதிருந்தது.இப்போது நீ எதுவேண்டுமானாலும் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் மனம் ,உன்னை எப்படிப் பாராட்டி,கவர்ந்து உன்னிடம் பரிசுகள் வாங்கலாம் என்று அலை மோத ஆரம்பித்து விட்டது.உன்னை எதிர்கொள்ளும் அளவுக்கு என் சீடர்களிடம் ஆன்மீக பலம் இல்லை.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமையான கதை! நன்றி!

Post a Comment