ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்பு மயமானவர். அவருக்கு எழுதப் படிக்க தெரியாது.அவருக்கு மிகுந்த புகழ் இருந்தது.கேசவசந்திரசென் என்பவர் அப்போது இந்தியாவிலே சிறந்த ஒரு அறிவாளியாக இருந்தார்.அவர் படிக்காத ராமகிரிஷ்ணருக்கு இருந்த புகழ் கண்டு பொறாமை கொண்டு அவரிடம் வாதம் செய்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்கக் கருதி அவர் இருக்கும் இடம் தேடி சென்றார்.எல்லோருமே ராமகிருஷ்ணர் தோல்வி அடைவது உறுதி என்று கருதினர்.பரமஹம்சரின் சீடர்களுக்கு பயம் வந்துவிட்டது.ஆனால் குருவோ சிரித்துக் கொண்டிருந்தார்.சென்,''கடவுள் இல்லை''என்பதற்கான வாதங்களை எடுத்துக் கூற ஆரம்பித்தார்.பின் அவர் ராமகிருஷ்ணரிடம்,''கடவுள் இருக்கிறாரா?''என்று கேட்டார்.அவரோ சென் சொல்ல விரும்புவதை எல்லாம் மொத்தமாக சொல்ல சொன்னார்.சென் வாதங்களை சொல்லிக் கொண்டே போக பரமஹம்சரோ வெகுவாக அதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.அவ்வப்போது 'பிரமாதம்,பிரமாதம்!சரியாகச் சொன்னீர்கள்!'என்று பாராட்டிக் கொண்டிருந்தார்.சென்னுக்கோ ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை.நீண்ட நேர உரைக்குப் பின் அவர் பரமஹம்சரிடம்,''இப்போது சொல்லுங்கள் கடவுள் இருக்கிறாரா,இல்லையா?''என்று கேட்டார்.எல்லோரும் பரமஹம்சர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..அவர் சொன்னார்,''நண்பரே!இதுவரை எனக்குக் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வந்தது.இன்று உங்கள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு அந்த சந்தேகம் முழுமையாகத் தீர்ந்து விட்டது. கடவுள் உறுதியாக இருக்கிறார்.என்று இப்போது நம்புகிறேன்.''எல்லோரும் புரியாமல் விழிக்க அவர் தொடர்ந்தார்,''கடவுள் இல்லாமல் ஒருவருக்கு எப்படி இவ்வளவு ஞானம் வரும்?எவ்வளவு தெளிவான பேச்சு!நான் ஒரு படிக்காத தற்குறி. ஏழை.என்னை மாதிரி சாதாரணமான ஆளைப் படைக்க கடவுள் தேவையில்லை.ஆனால் உங்களைப்போல ஞானம் படைத்தவர் கடவுள் இல்லாமல் எப்படி வர முடியும்?சாத்தியமே இல்லை.''கேசவர் உடனே தலை குனிந்து பரமஹம்சரின் பாதத்தில் விழுந்தார்.அவரின் எஞ்சிய காலத்தை ராமகிருஷ்ணரின் சீடராக கழித்தார்.
|
|
Post a Comment