உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யார் அந்த இறைத்தூதர்?

2

Posted on : Friday, January 31, 2014 | By : ஜெயராஜன் | In :

குரு ஒருவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.கண் விழித்தபோது எதிரே ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைக் கண்டார்.வந்தவர்,''ஐயா,நான் ஒரு புகழ்பெற்ற மடாலயத்தலைவர்.அந்த மடத்தைப் பற்றி நீங்கள் கூடக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.எங்கள்  மடம் மிகப் பழமையானது எங்கள்  மடத்தைத் தேடி உலகம் முழுவதிலிருந்தும் பலர் வந்த வண்ணம் இருப்பார்.சமீப காலத்தில் இந்த எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது.இதற்குக் காரணம் எங்கள்  மடத்திலுள்ள பிக்குகளுக்கிடையே ஒற்றுமை கிடையாது.யார் பெரியவர் என்ற போட்டிதான் உள்ளது.இந்தப் பிரச்சினையிலிருந்து மடத்தை மீட்டுப் பழைய நிலைக்குக் கொண்டு வர என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கத்தான் உங்களிடம் வந்தேன்,''என்றார்.அவர் குரலில் தென்பட்ட வேதனையைக் கண்ட குரு  சொன்னார்,''இந்த நிலைமைக்கு அறியாமைதான் காரணம்,''வந்தவர்,''அறியாமையா?''என்று வியப்புடன் கேட்டார்.குரு சொன்னார்,''உங்கள் பிக்குகளுக்கிடையே ஒரு இறைத்தூதர் இருக்கிறார்.அவரை நீங்கள் அறியவில்லை.அதை அறிந்து கொண்டு செயல் பட்டால் உங்கள் மடம் பழைய நிலைக்கு வந்துவிடும்.''இப்படிச் சொல்லிவிட்டு குரு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.'நம்மிடையே யார் இறைத்தூதர்?''என்ற கேள்வி மனத்தைக் குடைய அவர் மடத்துக்கு வந்து பிக்குகள் அனைவரையும் அழைத்து விபரம் சொன்னார்.இதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.அவநம்பிக்கையுடனும்,அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தனர்.''யார் அந்த இறைத்தூதர்?''என்ற கேள்விதான் அங்கு ஒரே பேச்சு.யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில்,அவராக இருக்குமோ,இவராக இருக்குமோ என்று எண்ணி ஒவ்வொருவரும் அடுத்தவர்களிடம் மிக மரியாதையாகவும் பணிவுடனும்  நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.விளைவு?மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று.மடத்திற்கு வந்தவர்கள் அங்கு நிலவும் மகிழ்ச்சியான சூழ்நிலையை மற்றவர்களுக்கு சொல்ல,இப்போது மடம் முன்பு இருந்ததைக் காட்டிலும் சிறந்த பேருடன் சிறப்பாக விளங்கியது.அங்கே  ஆன்மீகமும் புகழும் போட்டிபோட்டு வளர்ந்தன.மடாலயத் தலைவர் இப்போது ஒன்றினைப் புரிந்து கொண்டார்.இறைத்தூதர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்துள்ளார்!

யசோதரை

3

Posted on : Thursday, January 30, 2014 | By : ஜெயராஜன் | In :

புத்தர் ஞானம் அடைந்தபின் பல ஊர்களுக்கும் சென்று வருகையில் ஒரு நாள் தனது சொந்த ஊரைக் கடந்து செல்ல வேண்டி வந்தது.நடு இரவில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்ததால் தன் மீது தனது மனைவி யசோதரை கோபமாய் இருப்பார் என்பதனை நினைவில் கொண்டு,தனது மனைவியை சந்திக்க சென்றார்.சந்தித்தபோது யசோதரை மிகுந்த கோபத்துடன்தான் இருந்தார்.அவர் புத்தரிடம் சொன்னார்,
''நீங்கள் இந்த உலகத்தைத் துறந்ததைப் பற்றி எனக்கு கோபம் இல்லை.அப்படி ஒரு விருப்பம் உங்களுக்கு இருப்பது தெரிந்திருந்தால் நான் அதற்குத் தடையாக இருந்திருக்க மாட்டேன்.ஆனால் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை.அதுதான்  எனக்கு வருத்தம்.ஒன்றும் கூறாமல் நட்ட நடு ராத்திரியில் நீங்கள் பிரிந்து சென்றது எனக்கு எவ்வளவு வேதனை அளித்தது தெரியுமா?நான் வீர குலத்துப்பெண்.தனது கணவன் போருக்கு சென்றால்,அவரை மாலை அணிவித்து வழியனுப்பும் குலத்தை சேர்ந்தவள்.அவ்வாறு அனுப்பும்போது கூட கண்ணீர் விட்டால் தனது கணவரின் வீரத்திற்கு இழுக்கு என்று எண்ணக் கூடியவள்.நீங்கள் தைரியமாக உலகத்தைத் துறக்கப் போவதாக என்னிடம் கூறி சென்றிருந்தால் நான் பெருமை அடைந்திருப்பேன்.என்னுடைய பெருமையையும்.அமைதியையும் குலைத்து விட்டீர்கள்.நீங்கள் என்னை முழுமையாக நேசித்திருந்தால் நானும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்தி அனுப்பியிருப்பேன்.எனவே என் கோபம் உங்கள் துறவரத்துக்கல்ல,என்னிடம் சொல்லாமல் போனதற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.''
புத்தர்,''நீ சொன்னது  சரிதான்.நான் அதற்காக மன்னிப்புக் கேட்கவே இப்போது வந்துள்ளேன்.என்னை மன்னித்துவிடு.முழுமையான அன்பு என்றால் என்ன என்பதை இப்போது அறிந்து இங்கு வந்திருக்கிறேன்.இவ்வளவு தாமதமாக இங்கு வந்ததற்குக் காரணம் ,உன் கோபம் படிப்படியாகக் குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் தான்.''
பின் யசோதரை தனது கணவராகிய புத்தரிடம் சிட்சை பெற்றுக் கொண்டார்.

ரூசோ

1

Posted on : Wednesday, January 29, 2014 | By : ஜெயராஜன் | In :

அரசியல் தத்துவ மேதை ரூசோவின் சில சிந்தனை சிதறல்கள் :
*ஒரு மனிதன் தன்னிச்சையாகக் காரியங்கள் செய்ய அனுமதிக்கப் படுகிற வரையில்தான் தர்ம நியாயமாக நடந்து கொள்வான்.
*மானிட சுபாவம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சுபாவம் இல்லை.அதேபோல எப்போதும் சமாதானமாக வாழும் சுபாவமும் இல்லை.
*விருப்பம் போலக் காரியங்கள் செய்வது அடிமைத்தனம்.தானே வகுத்துக் கொண்ட சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது சுதந்திரம்.
*சமூகமானது,உடல் பலத்தின் காரணமாக மனிதர்களிடையே உண்டாகிற சமத்துவமின்மைக்குப் பதிலாக ,ஒழுக்க ரீதியான,சட்ட ரீதியான ஒரு சமத்துவத்தை அளிக்கிறது.மனிதர்கள் உடல் பலத்திலும்,அறிவிலும் வித்தியாசப்பட்டவர்களாக இருந்தபோதும் சட்ட ரீதியாக சமத்துவம் உடையவர்களாக ஆக்குகிறது.
*ஒரு தேசத்தில் எவ்வளவுகெவ்வளவு சட்டங்கள் இயற்றப்படுவது குறைவாக இருக்கிறதோ,அவ்வளவுக்கவ்வளவு அத்தேசம் புகழ் பெறுகிறது.
*அரசு அதிகாரிகள் மக்களுடைய எஜமானர்கள் அல்ல.அவர்களுடைய காரியஸ்தர்கள்.அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள்.
*அரசுப்பணி என்பது ஒரு நபருக்குக் காட்டப்படுகிற சலுகை அல்ல.ஒரு நபருக்கு அளிக்கப்படும் பொறுப்பு.

முருகனின் பெருமை

1

Posted on : Monday, January 27, 2014 | By : ஜெயராஜன் | In :

முருகப் பெருமானை மனதில் வணங்கி எத்தனையோ புலவர்கள் எவ்வளவோ பாடல்களை மனம் உருகிப்  பாடியுள்ளனர்.காளமேகப் புலவர் வித்தியாசமாய் முருகனைப் பாடியிருக்கிறார் பாருங்கள்.

''அப்பன் இரந்துண்ணி  ஆத்தாள் மலைநீலி
ஒப்பறிய மாமன் உறிதிருடன் -சப்பைக்கால் 
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கிங்
கென்னும் பெருமை இவை.''

முருகனுக்கு என்னென்ன பெருமைகள் உள்ளன என்று பாருங்கள்!தந்தையோ பிச்சை எடுத்து உண்பவன்.தாயோ மலையில் வாழும் நீலி.தாய் மாமனோ உறியிலிருந்து வெண்ணையைத் திருடி உண்பவன்.அண்ணன் விநாயகனோ,சப்பைக்கால்களுடன் பெரிய வயிறையும் உடையவன்.
காளிமேகப் புலவரின் கிண்டலுக்கு முருகன் கூடத் தப்பவில்லை.

மரண தண்டனை

1

Posted on : Saturday, January 25, 2014 | By : ஜெயராஜன் | In :

மரண தண்டனை தரலாமா கூடாதா என்ற விவாதங்கள் உலகெங்கும் நடந்து வருகின்றன.பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தத்துவமேதை ரூசோ தனது'சமுதாய ஒப்பந்தம்' என்னும்  நூலில் இது குறித்து என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
''நாட்டின் நலனுக்காக ஒரு மனிதன் இறக்க வேண்டும் என்றால் அந்த மனிதன் இறக்க வேண்டியதுதான்.நாட்டின் நலனுக்காக,கேட்டபோது உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் மீதுதான் ,அவனுடைய உயிர்,இதுவரை,நாட்டினால் காப்பாற்றப்பட்டு வந்தது.ஒரு நாட்டின் பிரஜையாக அவன் எப்போது ஆகிறானோ,அப்பொழுதே அவனுடைய உயிர் அவனுக்கு சொந்தமில்லை.அவனது உயிர், நாட்டினால் அவனுக்கு அளிக்கப்பட நன்கொடையாகி விடுகிறது.
சமுதாய உரிமைகளை பாதிக்கக்கூடிய விதமாக எவன் ஒருவன் நடந்து கொள்கிறானோ,அவன் ஒரு குற்றவாளி.அவன் நாட்டிற்கு துரோகம் செய்தவன் ஆகிறான்.சமுதாயத்தின் சட்ட திட்டங்களை மீறி நடக்கிற அவன் அந்த சமுதாயத்தில் ஒரு உறுப்பினராய் இருக்க தகுதியற்றவன் ஆகிறான்.மற்றும் சமுதாயத்தின் மீது போர் தொடுத்தவன் ஆகிறான்.இப்படிப்பட்ட நிலையில் நாட்டின் நலனுக்கும்,அவனுடைய நலனுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.முரண்பாடு ஏற்பட்டுள்ள இரண்டில் ஒன்று அழிய வேண்டும்.ஒன்று அந்த நாடு அழிய வேண்டும்,அல்லது அவன் அழிய வேண்டும். ஒரு கொலை செய்தவனை அரசானது தூக்கு மேடை ஏற்றுகிறபோது அவனை தனது பிரஜை என்ற முறையில் செய்வதில்லை.அவனை நாட்டின் எதிரியாகக் கருதியே தூக்கு மேடை ஏற்றுகிறது.ஏனெனில்,எப்போது அவன் சமுதாயத்தின் உறுப்பினரான இன்னொருவனைக் கொலை செய்து விடுகிறானோ,அப்போதே அவன்,ஒரு பிரஜைக்குரிய தகுதியை  இழந்து விடுகிறான்.ஒரு தேச விரோதியை அந்த தேசத்தில் வைத்திருக்கலாமா?
ஒரு நாடானது சிதைவுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த நாட்டில் அதிகமான குற்றங்கள் நிலவுகின்றன.ரோமாபுரியில் குடியரசு முறை செழித்தோங்கி இருந்த காலத்தில் செனட் சபையோ,அதிகாரிகளோ,குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்ததே கிடையாது.அடிக்கடி மன்னிப்பு அளிப்பது குற்றங்களை அதிகப்படுத்தும்.''
பின் குறிப்பு:இது ஒரு கருத்துதான் இதை ஏற்க வேண்டும் என்பதில்லை.இது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அன்றைய சூழலில் ஏற்பட்ட கருத்தென்றும்  கொள்ளலாம்.

புரட்சி

1

Posted on : Friday, January 24, 2014 | By : ஜெயராஜன் | In :

சில எண்ணங்களும்,பொருளாதார நிலைமையும் சேர்ந்து புரட்சிகளை உண்டு பண்ணுகின்றன.அதிகார பதவியிலிருக்கும் சில முட்டாள்கள்,சில கிளர்ச்சிக்காரர்களே புரட்சிக்குக் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள்.இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் யார்?பொது மக்களுடைய அதிருப்தியிலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் தோன்றியவர்கள்.ஆனால் இந்தக் கிளர்ச்சிக்காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மட்டும் மக்கள் புரட்சிக்குக் கிளம்பி விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.மக்கள்,எப்போதும் தங்கள் சொந்த நலத்தினைக் கோரும் சுபாவம் உடையவர்கள்.தாங்கள் வைத்திருப்பது சொற்பம் என்றாலும் அதனை இழந்துவிட சம்மதிக்க மாட்டார்கள்.ஆனால் நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்து வாழ்க்கையே ஓர் சுமையாகி விடுகிறபோது தான் ஆபத்தை ஏற்றுக் கொள்ளக் கிளம்பி விடுகிறார்கள். கிளர்ச்சிக் காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.ஆனால் அடைய வேண்டிய லட்சியம் இன்னதென்று தெரியாத காரணத்தால் அநேக புரட்சிகள் தோல்வி அடைந்து போகின்றன.ஒழுங்கான எண்ணங்களும் பொருளாதார சீர் கேடுகளும் ஒன்று சேரும்போதுதான் உண்மையான புரட்சி ஏற்படும். இத்தகைய புரட்சி ஒரு சமுதாயத்தின் அரசியல்,பொருளாதாரம்,மதம் முதலிய எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி இந்த மாதிரியான உண்மைப் புரட்சி.
                                                             --ஜவஹர்லால் நேரு.

ஆப்பு

2

Posted on : Thursday, January 23, 2014 | By : ஜெயராஜன் | In :

இந்தப் பாட்டைக் கொஞ்சம் படிச்சிப் பாருங்களேன்!

''சாயங்காலம் கைபிடிச்சி
இரவில் சூடேற்றி
சாமத்தில் ஒண்ணு சேர்ந்து
காலையில் இரண்டையும் பிரிச்சிடுவோம்.''

என்னங்கண்ணா,இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் படிக்க சொல்றீங்களே என்று கேட்கிறீர்களா?அவசரப்படாதீர்கள்.இதன் பொருளை முதலில் படியுங்கள்.

சாயங்காலம் கைபிடிச்சி =மாலையில் மாட்டு மடியில் கை வைத்துப் பால் கறந்து,
இரவில் சூடேற்றி =இரவில் பாலை சுட வைத்து
சாமத்தில் ஒண்ணு சேர்ந்து  =சாமத்தில் புளித்த மோரோடு பாலை சேர்த்து
காலையில் இரண்டையும் பிரிச்சிடுவோம் =மறுநாள் காலையில் தயிராய் மத்தால் கடைந்து,மோர் தனியாக,வெண்ணெய் தனியாகப் பிரித்திடுவோம்.

என்ன சரிதானே!

தாசிக்கு அறிவுரை.

3

Posted on : Wednesday, January 22, 2014 | By : ஜெயராஜன் | In :

சுப்ரதீபக் கவிராயர் தனது' கூளப்பநாயக்கன் காதல்' என்ற நூலில் தாசி ஒருத்தி,தன்  மகளுக்கு அறிவுரை கூறுவது போன்று ஒரு நிகழ்ச்சி உள்ளது.அதில் தாசி தன் மகளைப் பார்த்துக் கூறுகிறாள்:
''மகளே...நீ அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவன் தேடி வந்தால்,'எனக்கு சுகமில்லை'என்று சொல்லி அனுப்பிவிடு.அவன் ஒரு பைசா கூடத் தரமாட்டான்.
யார் வந்தாலும் வந்தவுடன் விசாரி.அவன் தாத்தா பணக்காரன் என்றால்,நீ அவனை விட்டு விடாதே.அவனுக்கு அவன் தாத்தா பொருள் சேர்க்கப் பட்ட துன்பங்கள் தெரியாது.அள்ளி அள்ளிக் கொடுப்பான்.
தகப்பன் தேடி வைத்த சொத்தை அனுபவிப்பவன் வந்தால் அவனை ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடு.ஏனெனில் அவனுக்குத் தந்தை பட்ட துன்பங்கள் தெரியும்.
வந்தவன் தன உழைப்பால் பணக்காரன் ஆனவன் என்று தெரிந்தால்,அவனை வாசல் நடையில் கூட ஏற்றாதே.அவன் ஒவ்வொரு காசுக்கும் கணக்குப் பார்ப்பான்.அவனால் எந்தப் பயனும் இல்லை.''

சிட்டி,டவுன்.

1

Posted on : Tuesday, January 21, 2014 | By : ஜெயராஜன் | In :

ஆங்கிலத்தில் சிட்டி என்றும் டவுன் என்பதையும் தமிழில் நகரம் என்றே அழைக்கிறோம்.சமீப காலமாக சிட்டியை மாநகரம் அழைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.சிட்டிக்கும் டவுனுக்கும் என்ன வித்தியாசம்?ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள ஊர் சிட்டி என்றும் ஐந்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மக்கள் தொகையிருந்தால் அதை டவுன் என்றும்
கூறப்படுகிறது.சிட்டி,டவுன் என்பவை  இடங்களைத்தான் தற்போது குறிக்கின்றன..ஆனால் ஆரம்ப காலத்தில் கிரீசிலும் ரோமாபுரியிலும் சிட்டி என்ற சொல் வேறு அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.சிவிட்டாஸ் என்ற லத்தீன் மொழியின் வார்த்தையிலிருந்துதான் சிட்டி என்ற சொல் உருவானது.முற்காலத்தில் கிரீசிலும் ரோமாபுரியிலும் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் வாழ்ந்தன.இந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குப் பூரண சுதந்திரம் பெற்றிருந்தார்கள்.இப்படிப்பட்ட ஒரு மக்கள் சமுதாயமே சிட்டி என்று அழைக்கப்பட்டது.ஒவ்வொரு சிட்டியும் ஒவ்வொரு ராஜ்யமாக இருந்தது.
சிட்டி என்பதற்கு அரிஸ்டாட்டில் கூறும் விளக்கம்;
''கூடிய வரையில் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் இருக்கும் பொருட்டு மக்கள் பலர் .தங்கள் குடும்பத்தோடு பிற குடும்பத்தினருடன் ஒருவருக்கொருவர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் வசிப்பதற்குத்தான் சிட்டி என்று பெயர்.''சிட்டியின் நோக்கம் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்என்பதே.இதற்காகவே பல திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டன.

சமூகம்

3

Posted on : Monday, January 20, 2014 | By : ஜெயராஜன் | In :

தட்டெழுத்து பயின்றவனுக்கு அவனுடைய இயல்பான கையெழுத்து மறந்துவிடும்.கால்குலேட்டர் உபயோகிக்க ஆரம்பித்தால் அடிப்படைக் கணக்கே மறந்துவிடும்.படிக்காத கிராமத்தாரிடம் மென்மையான ஆழமான புத்திசாலித்தனம் இருக்கிறது.இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பெரிய தீங்கை ஏற்படுத்தியிருக்கிறது.உங்களை எப்போதும் அடிமைத் தனத்திலும்,பேராசையிலும்,திருப்தி அற்ற  நிலையிலும், போட்டியிடும் நிலையிலும்,அன்பற்றும்,எப்போதும் கோபத்துடனும், வெறுப்போடும், ,ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ  நினைக்கும் நிலையிலும் வைத்திருக்கவே சமூகம் ஆசைப்படுகிறது.உங்களுடைய அறிவுக் கூர்மை அழிக்கப்  படுகின்றது.அதிகம் படித்தவர்களால் இந்த உலகம் அபாயத்தில் இருக்கிறது.
******
நீங்கள் உங்களைச்சுற்றி சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள்.ஏன் இவ்வளவு பேர் சோர்வாகவும்,அலுப்பாகவும்,இன்னும் மீதி நாட்களை எப்படி ஓட்ட வேண்டும் என்று விரக்தியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?ஏன் இந்த மரங்களைப் போலப் புத்துணர்வுடன் வாழக் கூடாது?அவர்களுக்கு என்ன நேர்ந்தது?ஒவ்வொரு மனிதனும் வேறு ஒருவரைப் போலவே இருக்க விரும்புகிறான்.முயற்சிக்கிறான்.அதனால்தான் இவ்வளவு சோகம்,சோர்வு,துன்பம் எல்லாம்.
******
ஒரு புத்தி கூர்மையுள்ளவன் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் கவலைப்பட மாட்டான் அடுத்தவன் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட மாட்டான்.ஏன்,கடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.அவன் இங்கே,இந்த தருணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான்.அதைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது.கடவுள்,ஆத்மா,சொர்க்கம் எல்லாம் தானே அவனை வந்தடையும்.
******

பொன்மொழிகள்-47

4

Posted on : Saturday, January 18, 2014 | By : ஜெயராஜன் | In :

எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள்.
ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை.
******
ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர் தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன்,மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றாலும் குடும்பம் அதோ கதிதான்.
******
சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால்
ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்க முடியாது.
******
அவசியப்பட்டதை வாங்குவான் கணவன்.
ஆசைப்பட்டதை வாங்குவாள் மனைவி.
******
மனைவி சிரித்துக் கொண்டே பரிமாறினால் கணவனுக்கு தொந்தி விழும்.
சினந்து கொண்டு பரிமாறினால் வாழ்க்கையே விழும்.
******
வாயையும் பர்சையும் அடிக்கடி திறக்காதீர்கள்.-பெரிதும் திண்டாடுவீர்கள்.
******
'நான் பெரியவன்'என்று பெருமைப் பட்டுக் கொள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது விஷயம் இருக்கும்.
******
கொண்டவன் துணை உண்டானால்
கொடிய பாம்பும் புடலங்காய்.
******
உள்ளங்கை சிரங்கும் உள்ளூர் சம்பந்தமும் உபத்திரவம்.
******
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
******
ஒருவன் பேசுவது மற்றவனுக்கு விளங்காவிட்டால் அது தத்துவம்.
அவன் பேசுவது அவனுக்கே விளங்காவிட்டால் அது வேதாந்தம்.
******


ஏட்டிக்குப்போட்டி

1

Posted on : Friday, January 17, 2014 | By : ஜெயராஜன் | In :

நம் முன்னோர் இருக்கும் திக்கு நோக்கி (எந்தத் திக்கு என்பதுதான் தெரியவில்லை)இரண்டு கரங்களையும் கூப்பித் தண்டனிடுகிறேன் ஆகா,அவர்கள் நமக்கு செய்திருக்கும் நன்மைதான் என்ன!வருடம் 365 நாளில் ஏறக்குறைய 300 நாட்கள் நமக்கு விடுதலை அளித்திருந்தனர்.
இக்காலத்தில் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது.ஆனால் நம் முன்னோர் செய்து வைத்த ஏற்பாடு எவ்வளவு அழகானது பாருங்கள்!
மாதங்களில் மார்கழியும் புரட்டாசியும் கெட்டவை.ஒரு மாதத்தை எடுத்துக் கொண்டால் அமாவாசை ,பாட்டிமை,அஷ்டமி,நவமி,திதி இவை உதவா.பின்னர் பரணி,கார்த்திகை நட்சத்திரங்கள்; சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை.ஆகா,செவ்வாயோ,வெறு வாயோ என்று கேட்டதில்லையா?
பின்னர் மரணயோகம்,கரிநாள்,மாதம்,திதி நட்சத்திரம்,கிழமை, யோகம் எல்லாமே கூடிய நாள் ஒன்றிருந்தால்,அதில் ராகு காலம், தியாஜ்யம், பிரதோஷம் இந்த வேளைகளில் கூடா.இவ்வளவு விபத்துக்களையும் கடந்து ஒருவன் ஏதேனும் காரியம் செய்யப்போனால்,யாரேனும் ஒரு சிறு தும்மல் தும்மி விட்டால் போதும்,அன்று விடுமுறைதான்.
ஆகா,இவ்வளவும் பூரணமாக அமுலிலிருந்த அந்தப் பழைய காலம்......நினைத்தாலே நாவில் ஜாலம் கொட்டுகிறது.இப்போது வரவரக் கலியுகம் அல்லவா முற்றி வருகிறது?
                                           --  முதல் முதலாக கல்கி ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை.

சிவனும் ஜாதியும்

1

Posted on : Thursday, January 16, 2014 | By : ஜெயராஜன் | In :

சிவ பெருமானுக்கு இந்த ஜாதி பேதம் பார்ப்பதெல்லாம் பிடிக்காது.எப்படி என்று கேட்கிறீர்களா?அவருடைய நாயன்மார்களில்
திருக்குறிப்புத்தொண்டர்--வண்ணார்.
திருநாளைப்போவார் ------பறையனார்.
திருநீல கண்டர் --------------குயவனார்.
ஏனாதிநாயனார் -------------நாடார்.
திருஞான சம்பந்தர் ---------பிராமணர்.
திருநாவுக்கரசர் --------------வேளாளர்
கண்ணப்ப நாயனார்---------வேடர்.
சேரன் பெருமாள் நாயனார் -சத்திரியர்.
முனை அடுவார் நாயனார் --மறவர்.
அதிபத்த நாயனார் -------------பரதவர்.
காரைக்கால் அம்மையார்---செட்டியார்.

கிண்டல்

3

Posted on : Monday, January 13, 2014 | By : ஜெயராஜன் | In :

கிண்டலும் கேலியும் தமிழனுக்கு ஆகி வந்த கலை.ஒருவன் தற்கொலை செய்து கொள்ள விரும்பினானாம்.அதற்கு பல முயற்சிகள் செய்து பார்த்தும் பலன் ஏதும் இல்லை.அப்படி என்ன செய்தான் என்று கேட்கிறீர்களா?

 எள்ளுப்பொடி நல்லெண்ணெய் வச்சி 
இருபது தோசை தின்னு பார்த்தேன்.
அப்போதும் போகலியே
அரும்பாவி என்னுசிரு!

சிரட்டையிலே தண்ணி வச்சி 
சீவனை விட உள்ளே பாய்ஞ்சேன்.
அப்போதும் போகலியே
அரும்பாவி என்னுசிரு!

மோட்டுல கயித்தைப் போட்டு 
முத்தத்தில நின்னு பார்த்தேன்.
அப்போதும் போகலியே 
அரும்பாவி என்னுசிரு!

பஞ்சு மருகையிலே 
பல தடவை முட்டிப் பார்த்தேன்.
அப்போதும் போகலியே 
அரும்பாவி என்னுசிரு!.

அவன் முயற்சி வெற்றி பெற நாமும் வேண்டிக் கொள்வோம்.

வீண் பேச்சு

1

Posted on : Saturday, January 11, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தனது நண்பனிடம்,''இன்று காலையில் எனக்கும் என் மனைவிக்கும் ஒரே பிரச்சினை. நான் கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொன்னேன்.என் மனைவியோ சினிமாவுக்குத்தான் போக வேண்டும் என்று சொன்னாள்.''
'வீண் பேச்சு எதற்கு?சினிமா எப்படி இருந்தது என்று சொல்.'
******
கம்ப்யூட்டர் ஜாதகம் கணிக்கும் இடத்தில் ஒருவன் கேட்டான்,''கம்ப்யூட்டரே,நீ எவ்வளவு நாள் பழுதில்லாமல் இயங்குவாய்?''
''நீ நாளை மதியம் சாகப் போகிறாய்!நான் எவ்வளவு நாள் உழைத்தால் உனக்கென்ன?''என்று பதில் தந்தது கம்ப்யூட்டர்.
******
ஒரு பணக்காரருக்குக் காலில் முள் தைத்துவிட்டது.டாக்டரிடம் சென்று காண்பித்தார்.''உங்களுக்கு கண் ஆப்பரேசன் செய்யணும்,''என்றார் டாக்டர்.''காலிலேதானே முள் தைத்திருக்கிறது?கண்ணில் ஏன் ஆப்பரேசன் செய்யணும் என்று சொல்றீங்க?''என்று பணக்காரர் கேட்டார்.
''உங்களுக்குக் கண் ஒழுங்காய்த் தெரிந்திருந்தால் இப்படி முள்ளை ஏன் மிதிக்கிறீர்கள்?"'என்றார் டாக்டர்.
******
''எல்லா ஆண்களுக்கும் வேலை கொடுப்பது எப்படி?''என்று மன்னன் கேட்டான்.அமைச்சர் சொன்னார்,''ஆண்கள் எல்லோரையும் ஒரு தீவிலும்,பெண்களை எல்லாம் வேறு ஒரு தீவிலும் குடியேற்றுங்கள் எல்லா ஆண்களுக்கும் வேலை கொடுத்து விடலாம்.''
'புரியவில்லையே,'என்று மன்னன் சொல்ல அமைச்சர் தொடர்ந்தார்,''எல்லா ஆண்களும் மறு தீவுக்கு செல்ல படகு கட்ட ஆரம்பித்து விடுவார்கள்,மன்னா!''
******
''பசுவிலிருந்து,பால் வரும்,பாலிலிருந்து வெண்ணெய் வரும்,வெண்ணையில் இருந்து நெய் வரும்,நெய்யிலிருந்து என்ன வரும்?''
'தெரியலையே'
''வாசம் வரும்!''
******

அபு பென் ஆடம்

1

Posted on : Friday, January 10, 2014 | By : ஜெயராஜன் | In :

நள்ளிரவு நேரம்.வெள்ளை நிலவு.உள்ளே அபுபென் ஆடம் தூக்கத்தில் இருந்தான்.அவன் முகத்தில் அமைதி.அறைக்குள் ஏதோ சப்தம்.மெல்லக் கண் திறந்து பார்த்தான்.ஒரு அழகான தேவதை அவன் மேசையருகில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தது.அபு அருகில் சென்றான்.எதிரே விரித்து வைக்கப் பட்டிருந்தஒரு தங்கப் புத்தகத்தில் மயிலிறகு கொண்டு எழுதிக் கொண்டிருந்த தேவதை நிமிர்ந்து பார்த்தது.
''என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?''அபு கேட்டான்.
''யாரெல்லாம் இறைவனை நேசிக்கிறார்கள் என்று பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்,''என்றது தேவதை.
''அதில் என் பெயர் இருக்கிறதா?''என்று ஆவலுடன் கேட்டான் அபு.
ஒன்றும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கியது தேவதை.
அபு மனம் உடைந்து விடவில்லை.கம்பீரமாக தேவதையைப் பார்த்து சொன்னான்,''என்பெயரை சக மனிதர்களை நேசிப்பவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்.''
கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்து விட்டது தேவதை.மறுநாள் இரவு.மறுபடியும் வந்தது தேவதை.
''தனது அன்புக்குப் பாத்திரமானவர்களின் பெயர்கள் உள்ள பட்டியல் ஒன்றைக் கடவுள் என்னிடம் கொடுத்தார்.அதை நீ பார்க்கின்றாயா?''என்று கேட்டது.அபு ஒன்றும் பேசவில்லை.தேவதை அதுவாகப் பட்டியலைத் திறந்து காண்பித்தது.
அதில் முதலில் இருந்த பெயர்,'அபு பென் ஆடம்.'!
சக மனிதர்களை நேசிப்பவன் ஆண்டவனை நேசிப்பவனே!
                                         --மூலம்:ஒரு ஆங்கிலக் கவிதை.