உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நடிப்பு,வேஷம்

0

Posted on : Monday, March 12, 2012 | By : ஜெயராஜன் | In :

தமிழ் சூழலில் மட்டும்தான் ஒருவனைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்வதன் மூலம் ஆனந்தம் அடைபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.ஒருவனது இயலாமையை,பலவீனங்களை,சரிவுகளை சொல்லிக் காட்டி அதனால் அவன் வேதனை அடையும்போது பார்த்து ரசிக்கும் குதூகல மனநிலை பலருக்கும் பிடித்திருக்கிறது.சொல்லப்போனால் அதைப் பகிர்ந்து கொள்ளவும்,பதிவு செய்வதிலும் காட்டும் அக்கறையிருக்கிறதே அது மிகவும் முனைப்பானது. இதற்காகச் சிலர் கைப்பணம் செலவு செய்து பயணம் செய்வதில் துவங்கி,மின்னஞ்சல்,செல்போன்,சிறுவெளியீடு,இணைய தளம் என்று ஓடியாடி வேலை செய்கிறார்கள்.
ஒருவனைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்வதற்கு முதல் வேலை,அவனை அருகில் உட்கார வைத்துவிட்டு அவனோடு பேசாமல்,அருகில் கிடக்கும் பழைய வார இதழ் ஒன்றினைப் புரட்டிக் கொண்டிருந்தால் போதும்.அவன் குற்ற உணர்வு கொள்ளத் துவங்கி விடுவான்.
மேலும் அவனை அவமதிக்க வேண்டும் என்றால்,இன்னொரு ஆளைப் பற்றிப் பேச ஆரம்பிக்க வேண்டும்.தன்னைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் இருக்கிறானே என்ற குற்ற உணர்வு தானே பொங்கத் துவங்கி விடும்.இத்தோடு நீங்கள் புதிதாக வாங்கிய சட்டை,யாருக்கோ கிடைத்த பரிசுகள்,விருதுகளுள்.உலகத்  திரைப்படங்கள்,அயல் நாட்டு மது விருந்து என்று பேசிக் கொண்டிருந்தால் போதும்.அவன் தாள முடியாத குற்ற உணர்ச்சியின் மிகுதியில் தன்னை ஒரு அற்பப் புழுப்போல உணர்வான்.அல்லது எதிராளியை ஒரு மலேரியாக் கொசு என்று நினைத்துக் கொண்டு அடித்துக் கொல்ல வேண்டுமென ஆத்திரம் அடையத் துவங்குவான்.அதன் பிறகு அவனது வேலை,அந்த ஆளுக்கு எதிராகத் தனது இடைவிடாத அவதூறுகள்,வெறுப்பை பரவவிடுவதுதான்.தனது இயலாமையை ஒத்துக் கொள்ளவும்,தனது அறியாமையை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதிலும் தான் எவ்வளவு,நடிப்பு,வெளி வேஷங்கள்?
              ---- எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'கலிலியோ மண்டியிடவில்லை' 'என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment