உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மகிழ்ச்சி

1

Posted on : Thursday, February 28, 2013 | By : ஜெயராஜன் | In :

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாததால் தான் நாம் மகிழ்ச்சி இன்றி  இருக்கிறோம்.ஆனால் ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறது.பிறக்கும்போது ஒரு குழந்தை எந்தவித மனப் பதிவும் இன்றியே பிறக்கிறது.மகிழ்ச்சிக்கான ஆவல் மட்டுமே இருக்கிறது.ஆனால் அதைச் சாதிப்பது எவ்வாறு என்பது தெரியாது.வாழ்நாள் முழுவதும் அதற்காகவே போராடுவான்.ஆனால் மகிழ்ச்சியாயிருப்பது எப்படி என்று குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும் விதம் நமக்குத் தெரிவதில்லை. கோபம் இயற்கையானது.கோபப்படாதே என்று கூறுவதன் மூலம் அவனால் கோபத்தை ஒழித்து விட முடியாது.மாறாக அதை அடக்கி வைப்பதற்குத்தான் நாம் கற்றுக் கொடுக்கிறோம்.அடக்கி வைப்பது எதுவும் அவலத்திற்கே இட்டுச் செல்லும்.கோபப்படாமல் இருப்பது எப்படி என்று நாம் கற்றுக் கொடுப்பதில்லை.அவன் நம்மைப் பின்பற்றியே ஆக வேண்டியுள்ளது. கோபப்படாதே என்று சொன்னால்  அவன் புன்னகை புரிவான்.அந்த புன்னகையோ போலியானது.உள்ளுக்குள் அவன் குமுறிக் கொண்டிருப்பான். ஒரு குழந்தையை,வேசக்காரனாக,பாசாங்குக் காரனாக நாம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கை முழுவதும் அவன் பல முகமூடிகளை அணிய வேண்டியுள்ளது.பொய்மை ஒருநாளும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது.உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள சமுதாயம் ஒருபோதும் சொல்லித் தருவதில்லை.பற்றுக் கொள்வதே துன்பம். ஆரம்பத்திலிருந்தே அம்மாவை நேசி,அப்பாவை நேசி,என்று பற்றுக் கொள்ளுமாறு உபதேசிக்கப் படுகிறது.தாய் அன்பானவளாக இருந்தால் குழந்தை அவளிடம் பற்று வைக்காமல் அன்புடன் இருக்கும்.உறவு முறைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப் படுகின்றன.பற்று என்பது உறவுமுறை.அன்பு என்பதோ ஒரு மனநிலை.

கடித்து வாழலாம்.

1

Posted on : Wednesday, February 27, 2013 | By : ஜெயராஜன் | In :

''உங்களுக்கு அல்சராமே?''
'அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்குறீங்க!'
******
''குடி குடியைக் கெடுக்கும் என்று ஒரு படம் எடுத்தீங்களே ,என்ன ஆச்சு?''
'ஊத்திக்குச்சு.'
******
''திடீரென்று உங்கள் பையன் ஒன்றும் பேசாது ஊமை போல ஆகிவிட்டானே?''
'அவனுக்கு போன மாதம் தான் திருமணம் ஆயிற்று.'
******
''இன்னிக்கு பேங்க் விடுமுறை.இல்லையென்றால் பணம் கிடைத்திருக்கும்.''
'பேங்க் அக்கவுன்ட் வைத்திருக்கிறாயா?'
''இல்லை.என் நண்பர் பாங்கில் வேலை செய்கிறார்.அவரிடம் கடன் வாங்கியிருப்பேன்.''
******
''என்னப்பா,நம்ம தொகுதியில நல்லது ஒன்னும் நடக்கல என்று மக்கள் பேசிக் கொள்கிறார்களாமே,உண்மைதானா?''
''தொகுதியில ஒரு வாரமா நடந்துக்கிட்டிருக்கீங்கல்ல,அதை சொல்லியிருப்பாங்க.'
******
கணவன்:என்ன ராணி,இன்று நீயே சமையல் செய்து கொள்வதாக சொல்லி விட்டாயே.ஏன்,எனது சமையல் நன்றாக இல்லையா?
மனைவி:நீங்கள் பாட்டுக்கு நல்லா சமைச்சுப் போட்டு விடுகிறீர்கள்.வந்த விருந்தாளிகளும் உங்கள் சமையலை ஆஹா,ஓஹோ ன்னு பாராட்டிக்கிட்டே இங்கிருந்து போக மாட்டேன் என்கிறார்களே!
******
அம்மா:வாசல்ல என்னடா சத்தம்?
மகன்:பழைய பொருள் ஏதாவது இருக்கிறதா என்று ஒரு ஆள்  கேட்கிறார் அம்மா.
அம்மா:உங்கள் அப்பா வீட்டில் இல்லை என்று சொல்.
 ******
''என்னங்க.பல் ரொம்ப வலிக்குதுங்க.''
'அப்படி என்னத்தக் கடிச்சுத் தொலைச்ச?'
''உங்க அம்மாவைத்தான்.''
******
''ஆஸ்பத்திரிக்கு என் மனைவியைக் கூட்டிட்டுப் போகும்போது வாசலிலேயே பிரசவம் ஆயிடுச்சு.''
'அப்பா டோர் டெலிவரின்னு சொல்லு.'
******

ஆசை,தேவை.

1

Posted on : Tuesday, February 26, 2013 | By : ஜெயராஜன் | In :

ஆசை,தேவை இவை இரண்டும் எதிர் மறையானவை.தேவை,அப்போதைய அவசரத்துக்கு ஒன்றை விரும்பும்.அந்த நெருக்கடி தீர்ந்தவுடன் அப்பொருள் அவசியமில்லை என்று ஒதுக்கி விடும்.ஆனால் ஆசை தனக்குத் தேவை இல்லாத சம்பந்தமில்லாத பொருட்களையெல்லாம் கூட விரும்பும்.இயற்கை என்றும் தேவைகளின் அடிப்படையில் இயங்குகிறது.மனிதனோ ஆசைகளின் வழி செல்கிறான்.
******
மனிதன் வாழும் காலத்தில் எவை எவற்றையோ தேடி ஓடுகிறான்.ஆனால் அவனுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் அவன் எதை எதையெல்லாம் தேடி வைத்தானோ,அவற்றில் ஒன்று கூட தனக்கு உதவாது என்பதை உணர்கிறான்.இது நாள் வரை நாம்தான் அவற்றை சுமந்து கொண்டிருந்தோமே தவிர அவை தன்னை சுமக்கவில்லை என்பதை அறிகிறான்.ஆனால் அது காலம் கடந்த ஞானம்.
******
கடவுளிடம் காட்டும் பக்தி,மனிதனுக்கு மரணத்தின் மீதுள்ள அச்சத்தினால் தான்.'இறைவன் நம்மை மரணத்திலிருந்து காப்பான்,'என்ற நம்பிக்கைதான் மனித குலம்  பல பொருட்களை இறைவனுக்கு  காணிக்கையாக செலுத்தி வழிபடக் காரணம்.எல்லா மக்களும் சாவதற்கு அஞ்சுகிறார்கள்.மரணத்தைத் தவிர்க்க அவர்கள் செய்யும் முயற்சிகளால் அவர்கள் எப்போதும் வாழ்வதே இல்லை. 
******
மனதின் இச்சைகளை பலவந்தமாக அடக்கும்போது நீ மனதின் எதிரியாகி விடுகிறாய்.எதை நீ மறுக்கிறாயோ,அதையே மனம் நாட ஆரம்பித்து விடும்.பிடிவாதமாக மறுப்பதும் ஒருவித எதிர்மறை ஆசைதான்.மெல்ல மெல்ல அவற்றிலிருந்து விடுபடுவதுதான் மேலான நிலையாகும்.
******

தொடர்பு

0

Posted on : Friday, February 22, 2013 | By : ஜெயராஜன் | In :

சூபி ஞானி தாநூன், ஞானத் தேடலின் போது ஒரு முறை பாலைவனத்தினூடே  நெடுந்தூரம் பயணம் செய்து களைப்புற்றிருந்தார்.கிராமம் ஒன்றை அணுகியபோது ஒரு வீட்டின் கூரை மீது ஓலைகளை அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்த ஒரு பெண் அவரைப் பார்த்துப்  பைத்தியம்போல சிரித்தாள்.ஞானி காரணம் கேட்க,அவள் சொன்னாள்,''நீங்கள் இங்கு வரும்போது உமது கம்பளி மேலாடையைக் கண்டு ஒரு சூபி ஞானி வருகிறார் என்று நினைத்தேன்.பின் உமது முகத்தைக் கண்டவுடன் நீர் ஒரு குரு அல்ல,சீடன்தான் என்று நினைத்தேன்.அருகில் நெருங்கிய பின்தான் நீர் சீடன் கூட அல்ல,வெறுமனே ஞானம் தேடி அலைபவர் கூட இல்லை என்று எண்ணினேன்.ஞானத்தைத் தேடுகிறேன் என்ற எண்ணத்தில் பெருமிதம் கொள்ளும் ஒரு சவடால் பேர்வழி தான் நீங்கள் என்று தெரிந்து அதனால் சிரித்தேன்.''தனது அங்கிக்கும் தனது ஞானத்துக்கும் தொடர்பே இல்லை என்று உணர்ந்த ஞானி தாநூன் தனது அங்கியை அங்கேயே உதறி எறிந்தார்.

பொன்மொழிகள்-41

1

Posted on : Thursday, February 21, 2013 | By : ஜெயராஜன் | In :

வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு;
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.
********
விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால்
சிரமங்கள் இரு மடங்கு அதிகமாகும்.
******
முட்டாள்தனம் என்பது புத்தியில்லாமை அல்ல.;
புத்தியை உபயோகிக்காத நிலைதான்.
******
அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம்.
முட்டாள்கள் அதில் பாடம் கற்றுக் கொள்வதில்லை.
******
'முடியாது' என்பது சோம்பேறிகள் முணுமுணுக்கும் மந்திரம்.
******
ஒரு பெண்ணின் உண்மையான அன்புக்கு முன்னால்
எந்த ஆணும் குழந்தையாகி விடுகிறான்.
******
தைரியத்தைவிட ஆர்வம் வென்று விடுகிறது,அச்சங்களை.
******
யாராக இருக்க விரும்புகிறோம் என்பதைவிட
யாருக்காக இருக்க விரும்புகிறோம்
என்பதுதான் முக்கியம்.
******
தன்  மீது விழும் ஒவ்வொரு அடியும்
தன்னை சிற்பமாக ஆக்குகிறது
என்பது கல்லுக்குத் தெரியாது.
******
வெற்றிக்கும் தோல்விக்கும் அதிக வித்தியாசம் கிடையாது.
கடமையை செய்தால் வெற்றி!
கடமைக்காக செய்தால் தோல்வி.
******


தேறாது.

1

Posted on : Sunday, February 03, 2013 | By : ஜெயராஜன் | In :

கணவன் நாளுக்கு நாள் உடல் நலிந்து போவதைக் கண்ட மனைவி, அவனை ஒரு டாக்டரிடம் அழைத்து சென்றாள் .டாக்டர் நன்கு பரிசோதித்து விட்டு அந்த பெண்ணைத் தனியே அழைத்துச் சென்று சொன்னார்,''உன் கணவன் ரொம்பவும் பலமின்றி இருக்கிறார்.எனவே தினமும் நல்ல உணவுகளை சமைத்துக் கொடுங்கள்.அவரிடம் ரொம்ப அன்பாகப் பேசுங்கள்.உங்கள் பிரச்சினைகளை அவரிடம் சொல்லி முறையிடாதீர்கள்.அவர் உணர்ச்சி வசப்படும்படி ஏதும் பேசாதீர்கள்.நீங்கள் எந்நேரமும் தொலைக்காட்சிப் பெட்டி அருகேயே இருக்காமல் அவரை அடிக்கடி சென்று கவனியுங்கள்.'' டாக்டருக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பும்போது கணவன் கேட்டான்,''டாக்டர் உன்னைத் தனியே அழைத்து என்ன சொன்னார்?''மனைவி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொன்னாள்,''நீங்கள் தேறுவது மிகவும் கடினம் என்று சொன்னார்.''

அவசரம்

1

Posted on : Saturday, February 02, 2013 | By : ஜெயராஜன் | In :

வேலைக்குப் போகும் மனைவி,அன்று வீடு திரும்ப இரவில் தாமதமாகி விட்டது மெதுவாகக் கதவைத் திறந்து,கணவன் தூங்கிக் கொண்டிருந்தால், அவரைத் தொந்தரவு செய்யாது தானும் கட்டிலில் படுத்து உறங்கலாம் என்று எண்ணி,மெதுவாக படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.ஒரு அதிர்ச்சி!கட்டிலில்  போர்வையை முகம் வரை மூடி இரண்டு பேர் படுத்திருப்பது தேர்ந்தது.உடனே அவளுக்கு வந்ததே ஆத்திரம்.பக்கத்தில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து அந்த இருவரையும் பலமாக நான்கு அடி அடித்துவிட்டு,கோபமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.அப்போதுதான் அடுத்த அறையில் விளக்கு எறிவது தெரிந்தது.அங்கு சென்று பார்த்தால்,கணவன் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான்.அவளைப் பார்த்தவுடன் கணவன் சொன்னான்,''இன்று மாலை ஊரிலிருந்து உன் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள்.மிகக் களைப்பாய் தென்பட்டதால் நான்தான் அவர்களை நம் படுக்கை அறையில் ஓய்வு எடுக்க சொன்னேன்.நாம் இன்று ஒரு நாள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.''.

வருத்தம் ஏன்?

2

Posted on : Saturday, February 02, 2013 | By : ஜெயராஜன் | In :

நிலவு தேய்வதனால் கூட வானம் வருந்துவதில்லை.
பூக்கள் உதிர்வதனால் கூட கொடி காய்வதில்லை.
மனிதனே!
நீ மட்டும் ஏன் சிறு இழப்புக்கெல்லாம் வருத்தம் கொள்கிறாய்?
******
செத்துப்போன
வண்ணத்துப்பூச்சியை
சுமந்தபடி எறும்புகள்.
பிணத்தைச் சுமக்கும் கவலையுமில்லை.
விருந்தை சுமக்கும் கர்வமும் இல்லை அவைகளுக்குள்.
******
ஒரு கைத்தடி
பார்வை இழந்தவனுக்குக் கண்ணாக இருக்கிறது.
கால் இழந்தவனுக்கு பார்வையாக இருக்கிறது.
மனிதா,
நீ அந்தக் கைத்தடியை விடத் தாழ்ந்தவனா?
*****
                                 --ரசித்த புதுக் கவிதைகள்.